Pages

Tuesday, April 03, 2018

வழி - சுந்தர ராமசாமி :: கொல்லிப்பாவை சிற்றிதழ்

வழி

சுந்தர ராமசாமி


வழி தொலைந்து விட்டது. சந்தேகமே இல்லை. அலைக்கழிப்பின் ஏதோ ஒரு கணத்தில் எனக்குத் தெரியாமலே கூட இழந்து போன வழி மீண்டிருக்கக் கூடும் என இனி கற்பனை செய்து கொள்ள சாத்தியம் இல்லை. துஷ்ட மிருகங்களின் உறைவிடமான இந்தக் காட்டில் மிக மோசமாக சிக்கிக்கொண்டு விட்டேன், சதை மடிந்து பிதுங்கும் இடுப்புக்களும் தொடைகளும் கொண்ட அம்மண ஸ்தூலிகளான மரங்கள் பீதியைக் கிளறுகின்றன. திமிறில் பட்டைகள் வெடித்து பூமிக்குள் வாய்வேர்கள் பரப்பி வானத்தை முட்டப் பாயும் மரங்களின் திடகாத்திரமும் வீச்சும் என்னை அச்சுறுத்திற்று. அவற்றின் அடர்த்தியும். நெரிசலும் சூரிய ஒளியை சில்லறை நாணயங்களாக மாற்றி நெடுகிலும் விசிறியிருக்கின்றன, அவ்வளவு பெரிய வெளிச்சத்தை அந்தகாரமாக மாற்றும் அவற்றின் கூட்டாட்சி என்னைக் கதி கலங்க அடித்தது. இனி என்ன என்று சிந்திக்க முயன்றேன், குழம்பி மறிந்த மனம் யோசனையின் பாஷையை உதறித்தள்ளிவிட்டு சுருக்சுருக்கென்று குத்திக்கொண்டிருக்கிறது பிணம் போல் நான் விழுந்து கிடக்க துஷ்ட மிருகங்களும் துஷ்டப் பறவைகளும், என்னை கொத்திக் கிழிக்கின்றன இந்தக் காட்சி ஒன்று தான் மீண்டும் மீண்டும் என் மனதில் வந்து போயிற்று.

அப்போதும் மிஞ்சியிருந்த ஒரே ஆசுவாசம் தூரத் தொலைவிலிருந்து கேட்டுக் கொண் டிருந்த அருவியின் ஓசைதான்.

உண்மையில் இப்போது அது வெறும் ஓசை அல்ல. புற உலகத்துக்கும் எனக்குமான ஒரே இழை. நான் தக்க வைத்துக் கொள்ளத் துடிக்கும் நம்பிக்கையின் குறியீடு. என் உயிர் அணுக்கள் முழுவதையும் என் செவியில் குவித்து அந்த ஓசையின் திசை வாயை கிரகிக்க முயன்றேன். 'அந்த திசை நிச்சயப்பட்டு விட்டால் இப்போது கூட எனக்கு விமோசனத்துக்கு வழியுண்டு, அந்த ஓசை மீது அடி வைத்துச் சென்று நான் அருவிகளுக்கெல்லாம் அரசியான அந்தத் தலை அருவியை அடைந்து விடலாம். காலம் காலமாகக் கொண்டிருக்கும் மனித உறவில் இணக்கமும் துவட்சியும் கூடியுள்ள அந்த அருவியைத் தேடி ஜீவன்கள் வரத்தான் செய்யும். ஒரு சமயம் நான் அதிக நேரம் அங்கு காத்திருக்க நேரலாம்.

அந்த அருவியின் ஓசையில் இப்போது ஒரு சுருதி மாற்றம் நிகழ்வதுபோல் உணர்ந்தேன். அருவியின் ஓசைபோலவே கேட்டுக் கொண்டிருந்த அந்த ஓசை இப்போது கொடிய மிருகங்கள் புணர்ச்சியின் பரவசத் தணிவில் எழுப்பும் உறுமல்களின் அவரோ கணம் போல் தேய்ந்து கொண்டு வந்தது. விட்டு விட்டு இப்படிக் கேட்கும்படி துஷ்ட மிருகங்கள் தொடர்புணர்ச்சியில் வரிசைப் பட்டு நிற்குமா என்ன? ஓசை கேட்பது போல் தோன்றுவது கூட பிரமையோ என்னவோ. ஒரு நூலிழை உறவேனும் புற உலகத்தோடு மிஞ்ச வேண்டும் என்று அரற்றும் மனதின் கற்பனையோ என்னவோ,

மிகப் பெரிய தவறு செய்து விட்டேன். குளித்து முடித்ததும் நானும் மற்றவர்களைப் போல் மலையிறங்கிச் சென்றிருக்க வேண்டும்.' நான் தலை துவட்டிக் கொண்டிருந்தபோது அந்த வயசாளியும் அந்த இளைஞனும் -அவன் அவருடைய பேரனாக இருக்கக் கூடும் என்னையே பார்த்துக்கொண்டு நின்றார்கள். உண்மையில் அது பார்வையல்ல; அழைப்பு. எவ்வளவு அழகான வயசாளி! ஒடுங்கிய உடல்வாகும் சீராக நரைத்த தலையும் இடுப்புக்குறுகலும் தசை நார்களின் தொய்வாள. இறுக்கமும் என் மனதை ஆட்கொண்டன. அவர்களுடன் இறங்கியிருந்தால் நானும் இதற்குள் ஊர் போய்ச் சேர்ந்திருப்பேன். உண்மையில் அந்த வயசாளியுடன் ஆகர்ஷண கலப்புக் கொள்ள விரும்பி அவரைப் பின் தொடர நான் படப்டவென்று உடலைத் துடைத்துக்கொண்டிருந்த போதுதான், துர திருஷ்டம் என்று சொல்ல வேண்டும், அந்த விசித்திர உறுமல் என் காதில் விழுந்தது. தப்பட்டையின் உறுமலில் வீணையின் மேல் ஸ்தாயி மீட்டலை கோர்த்து இழுத்தது போல் அதன் விசித்திரம் என் மனதை, ஆட்கொண்டது. கொடிய விலங்குகளின் புணர்ச்சிகள் மனதில் காட்சி ரூபம் கொள்ள என் முகம் ஆவலில் விரிந்து, அருவியின் பின்பக்கம் நான் நகர்ந்தபோது, நான் முன் பின் அறி யாத அந்த வயசாளி, 'வேண்டாம் ஐயா' என்றார். அந்தக் குரலும் அதில் தோய்ந்திருந்த வேண்டுதலும் அன்பும் இப்போதும் என் மனதில் ஒலித்துக்கொண்டிருந்தது. அந்தக் குரலைத் தாண்டி நான் சென்ற நிமிஷத்தில்தான் பிசகு நிகழ்ந்தது. அதன் பின்என் அடிச்சுவடுகள் எல்லாம் சிக்கலாகி இப்போது குரங்குகள் விளையாடிய நூல் கண்டு மாதிரி சிடுக்காகி விட்டது.

ஒரு சில எட்டுக்களில் புணர்ச்சியின் காட்சி சொரூபம் கிடைத்து விடும் என்று கிளுகிளுப்பின் எச்சிலை மனது நக்கியது எவ்வளவு தவறு என்பது இப்போது தெரிகிறது. நெருங்க நெருங்க அழுத்தம் பெற வேண்டிய ஓசை, விதியின் என்ன விசித்திரமோ, தேய்ந்து கொண்டே போயிற்று. இதோ இதோ என்று நான் விரைந்து கொண்டிருந்தேன். எண்ணற்ற கொடிய மிருகங்களின் காம சொரூபங்களும் ஆக்ரோஷங்களும், தன்னிலிருந்து தன்னைப் போன்ற மற்றொன்றைப் பயிரேற்ற அவை கொள்ளும் ஆவேசங் களும் மனக்கண்களில் விரிய மூச்சிரைக்க காலோசை எழுப்பாமல் ஓடினேன். மிகப் பெரிய மரங்கள் மீது நொடியிடையில் தாவி ஏறி விடுவதில் நான் கொண்டிருந்த சாதுரியம் மிருகங்கள் மேல் எனக்கு இருந்த பயத்தை மட்டுப்படுத்தியிருந்தது கூட ஒரு துரதிருஷ்டம் என்றாகி விட்டது இப்போது.

மலையின் புதர் மண்டிக் கிடந்த சரிவுகளை சூரிய ஒளி கடுமையாகத் தாக்கிக் கொண்டிருந்தது. ஒரு மரத்தில் ஏறி தொலைநோக்கி வழியாகப் பார்த்தேன், வயசாளி அவருடைய அற்புதமான உடற்கட்டை காற்றுக்கு ஏந்த விட்டு கரங்களை மட்டும் லாவண்யமாக அசைத்தபடி இறங்கிக்கொண்டிருந்தார் தலை குனிந்திருக்க வெண் சடை காதோரம் 'சாடிக்கிடந்தது. என்ன அற்புதமான முதுகு. புகைப்படக் கருவி கைவசம் இருந்துங்கூட. படம் பிடித்துக்கொள்ளத் தவறி விட்டேன். மிகப் பெரிய இழப்புத்தான். அதுபோன்ற மனிதப் பதிவுகள், மன அழகுகள் உடலில் பிரதிபலிக்கும் பாங்குகள் மிக அபூர்வம், இனி மீண்டும் அவரைச் சந்திக்கக் கூடும் என்று நம்புவதற்கோ எனக்கு எவ்வித நியாயமும் இல்லை.

சிறிய பள்ளத்தாக்குப் போல ஒரு பிரதேசம் எதிர்பட்டது. அதன் அடி ஆழத்தில் புல் வெளிப்பரப்பு. அங்கு இருள் கரும்பாசி போல் அப்பிக் கிடந்தது. அந்தப் புல்வெளியைக் கூர்ந்து கவனித்தேன். தவித்து இடந்தேடி உடல் உரசி காமம் முகர்ந்து வரும் விலங்கினங்கள் வாய்ப்பாகக் கருதும் இடம் அது. தங்கள் உடலேறி விரையும் தென்ற லுக்குக் கொள்ளும் இங்கித பவ்வியம் தவிர செயற்கைக் குலைவுகள் எதுவுமே புல்வெளியில் தென்படவில்லை. அப்போது தொலைநோக்கியில் வந்த வழியை-அவ்வாறு நான் நினைத்து கொண்டிருந்ததை மீண்டும் பார்த்தேன்.

மலைச் சரிவு தெரியவில்லை. புதரும் ஒற்றைய' டிப்பாதையும் வயசாளியின் அழகிய முதுகும்

சூரிய ஒளியின் பளிச்சென்ற தாக்குதலும்'மறைந்து விட்டன. புதர் கூடத் தெரியவில்லை. நான் வெகுதூரம் உள்ளே வந்து விட்டேன் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை . -

அப்போதும் அந்த ஓசைகேட்டுக் கொண் டிருந்தது.

மேட்டுப் பாங்கிலிருந்து சமவெளிக்கு வந்து விட்டேன். கானகத்தின் யோனி நெருங்கிக் கொண்டிருந்தது. மரங்கள், மேலும் தடித்துப் பெருத்திருந்தன. எனக்கு வழி பிசகி விட்டது. ஆனால் நிச்சயமாக அதிகப் பிசகு ஏற்பட்டு விடவில்லை. என்று அப்போதும் நம்பினேன். மிகுந்த விழிப்புக் கொண்டுவிட்டால் முன்னெடுத்து வைத்த அடிச்சுவடுகளை இப்போதும் பின்னெடுத்து வைத்து விடலாம். இப்போதேனும் விழித்து கொண்டது இயற்கையின் கருணை. மேலும் என் அடிச்சுவடுகளை அதிகப்படுத்திக் கொண்டிருந்தால் பிசகில் முடிச்சுக்கள் ஏறி விமோசனம் என்பதே அற்றுப் போயிருக்கும். இப்போது மன மூட்டங்களை சுத்தமாகக் கலைத்து நிதானத்துக்கும் தெளிவுக்கும் வந்தாக வேண்டும், சிந்தனைகள் தெளிவடையாமல் செயல்பாடு ஒரு நாளும் தெளிவடையப் போவதில்லை. இனி மீண்டும் என் மார்க்கம் குழப்பம் அடையலாம். ஆனால் இப்போதைய என் அடிச்சுவடுகள் தெளிவாக இருக்க வேண்டும், மரத்தின் ஒரு வசதியான கிளைப் பிரிவில் கால் நீட்டிச் சாய்ந்து கொண்டேன். மறு பரிசீலனையில் ஆழ்ந்தேன்.

ளேயும் சம்பித்தேன் பொ மகாண்டுபோவில் சுருக்ஓவ்வொரு மனதில்

அன்று - விடிந்த பொழுதை மனதில் பிரிக்க ஆரம்பித்தேன்; ஒவ்வொரு நிகழ்வு களையும் மனதில் சுருக்கெழுத்தில் எழுதிக் கொண்டுபோனேன். என் தயாரிப்புக்களிலோ மதிப்பீடுகளிலோ சொல்லும்படி விடுதல்கள் எதுவும் இருந்ததாக எனக்குப் படவில்லை. என் ஆயத்தங்களும் சரியாகவே இருந்தன. லங்கோடு கட்டி, காக்கி அரை நிஜாரும் காக்கி அரைச் சட்டையும் அணிந்திருந்தேன். முதுகில் இணைக்கப்பட்ட பை. அதில் காமரா, தொலைநோக்கி, துண்டுகள், ரொட்டி, சிறிது நொறுக்குத் தீனி, கத்தி, வலுவான நூல் கயிறு, ஒரு ஜோடி காலணிகள் எல்லாம் இருந்தன. என் கவிதைச் சொத்தின் பைண்ட் வால்யூமையும் நினைவாக எடுத்து வைத்துக் கொண்டிருந்தேன். கடைசியாக விடைபெற கானகங்களில் மட்டுமே எஞ்சியிருக்கும் பேர மைதியில் பல தடவை வாய்உரக்க கவிதை படித்திருந்த எனக்கு அதன் ருசிகள் ரத்த நாளங்களில் ஏறியிருந்தன, அருவியில் வெகு ஆனந்தமாகக் குளித்தேன். அதுவரையிலும் எல்லாம் சரிதான். உறுமலைப் பற்றிய என் கற்பனைகளால் ஆகர்ஷிக்கப்பட்டு உள்ளேபுகுந்தது கூட பிசகு என்று சொல்ல முடி யாது. கவிதையும் இயற்கையும் தவிர வேறொன்றும் இல்லாத நான், சிறுவயதிலி ருந்தே காடுகளையும் மிருகங்களையும் பறவை களையும் கனவு கண்டு வரும் நான், அபூர்வமாக வாய்க்கும் கொடிய மிருகங்களின் புணர்ச்சிக்கும் சாட்சி கொள்ள வந்தது தவறு என்று சொல்ல முடியாது.

பிரதிகூலங்களுக்கு எதிராக அனுகூலங்களை யோசிக்க ஆரம்பித்தேன். இப்போதும் வந்த திசை பற்றி - ஒரு நிச்சயமின்மை ஊடுரு வியிருந்தாலும் முற்றாக மறந்து போய் விட வில்லை என்றுதான் தோன்றிற்று. அருவியின் ஓசையை பிரமை என்றே வைத்துக்கொள்வோம், வந்த திசை பிரமை அல்ல. வந்த திசை பிரமை அல்ல என்றால் திரும்பும் திசையும் பிரமையாக இருக்க வேண்டும் என்பது இல்லை. இந்தக் கானகம், இந்த அம்மண மரங்கள் பிரமைகள் அல்ல. இப்போதும் கைக்கடியாரம் ஓடிக்கொண்டிருப்பது பிரமை அல்ல. அது எக்காரணம் கொண்டேனும் முடங்கி, இடங்களோடும் திசைகளோடுமான என் உறவு பரிதவித்திருப்பதுபோல், காலத்துக்கும் எனக்குமான உறவும் பரிதவித்து விடும் என்ற கிலியை ஏற்படுத்துகிறது என்ருலும், இப்போதும் அது ஓடிக்கொண்டி ருக்கிறது என்பதோ, நான் அதற்கு அதிகாலையில் சாவி கொடுத்தேன். என்பதோ பிரமை அல்ல. இப்போதுதான் சுள் வெயில் ஆரம்பித்திருக்கிறது. இருள் சூழ்ந்து வர இன்னும் வெகுநேரம் இருக்கிறது. இங்கேயே நான் சிறிது உணவருந்தி சிறிது ஓய்வும் எடுத்துக்கொள்ள போதிய அவகாசம் இருக்கிறது. என் பொறிகள் வெகு துல்லியமாக இயங்குகின்றன. சிறிதும் சந்தேகம் இல்லை. கற்பனைக்கும் யதார்த்தத்திற்குமான வேற்றுமையை பகுத்துணரும் ஆற்றல் என்னிடம் இப்போதும் மிகக் கூர்மையாக தொழில் பட்டுக்கொண்டிருக்கிறது. அருவிகளுக்கெல் லாம் அரசியான அந்த தலை அருவியை நான் சென்றடைந்து விடுவேன். மனித உறவுகளில் இணக்கப்பட்டு துவட்சி ஏறிக்கிடக்கும் அந்த அருவி முகங்களை ஆகர்ஷித்துக்கொண் டுதான் இருக்கும்.

இவ்வளவு அனுகூலங்களுக்கும் எதிரான பிரதிகூலம் அந்த 'பிராந்தியங்களில் எண்ணற்ற அருவிகளில் இருக்கின்றன என்பது தான். இன்னும் இணங்க மறுக்கும் காட்டருவிகள் அவை. மனித உறவின் துவட்சி கூடாதவை அவை, ஒவ்வொரு அருவிக்கும் அது அதற்கான இடமும் பின்னணியும் உயரமும் பருமனும் முக லாவண்யங்களும் அவற்றிற்கே உரித்தான ஜொலிப்புக்களும் மனித மனங்களை வசீகரிக்கும் தொடைகளும் இருக்கின்றன என்பது உண்மைதான் என்றாலும்,ஒரே பிராந்தியத்திற்குள் அவை சதா சாடிக் குதித்துக் கொண்டிருக்கும்போது. ஒன்றின் முக விலாசம் மற்றொன்றில் கூடிக்கலந்து அவற்றிற்கே உரித்தான அடையாளங்களை அவை இழந்து போய் நிற்பதுபோன்ற பிர மையை அவை அளிக்கக்கூடும் என்பதுதான் வெகு பிரதிகூலமாக இருக்கிறது,

வந்த திசையில் அதாவது வந்த திசை என்று நான் அனுமானித்துக்கொண்ட திசையில் அரை நாழிகை சீராக ஓடினால் தலை அருவிக் குரிய பிராந்தியத்தை நான் சென்றடைந்து விடுவேன். தலை அருவியைப் போலவே மனித உறவுக்கு இணக்கம் கொள்ளும் குரங்குகள் ஒன்றிரண்டேனும் அதற்கு முன்பு தென்பட்டு விடும். மனிதன் தங்கி, இளைப்பாறி, உணவு சமைத்து உண்ணும் இடங்களை சுற்றி குரங்குகள் வளைவது இயற்கைதானே? நான் எனது சகல பலங்களையும் மனதில் திரட்டிக்கொண்டேன். உடல் பலம் எனக்குக் குறைவாக இல்லை என்பதும் மனச்சோர்வினால் தான் உடல் தொய்கிறது என்பதும் எனக்கு நன்றாகத் தெரிந்தது. நம்பிக்கையை கை விட்டால் என் சகலபலங்களும் தொய்ந்து விடும். நான் சீராக ஓடத் தொடங்கினேன் சப்த ஜாலங்கள் ஏற்றப்பட்டிருந்த, எனது மனதுக்கு வெகு உவப்பான ஒரு கவிதையை அழுத்தமாக உச்சரித்துக் கொண்டே ஓடினேன். பின்னிரவின் இருளில் நம்பிக்கைகள் முற்றாக விலகிக் சிதறிப்போகும் மனம் விடியலின் வெளிச்சத்தில் மீண்டும் திரள்வது என் நினைவுக்கு வந்தது. அப்படித்தான் எப்போதும் நிகழ்ந்திருக்கிறது. இருளின் திட்பம் கூடும்போது அதில் ஒளி ஊடுருவி ஏறும் இருளும் ஒளியும் இருளேர் ஒளியோ அல்லாத ஒன்றின் இரு பக்கங்கள் தான், மிகுந்த எக்களிப்புக்கொண்டேன். ஆத்ம நம்பிக்கையை ஒரு போதும், உடல் இரு கூறாகப் பிளந்தாலும் கைவிட மாட்டேன் என்று கத்திக்கொண்டே ஓடினேன்.

சரித்திரத்தின் உன்னதங்கள் என் நினைவுக்கு வந்தன. உன்னத ஆளுமைகள் எவ்வ ளவு கடுமையான சோதனைகளுக்கு ஆட்பட்டு உள்ளன. அந்த ஆளுமைகளின் ஆத்ம பலத்தை நினைக்கும் போது உடல் புல்லரித்தது என்னென்ன சோதனைகள், என்னென்ன சாதனைகள்! ஓட்டைத் தோணியில் அவை முதுகெலும்பை உருவி துடுப்புப் பிடித்திருக் கின்றன. நெருப்பில் செடிகளாக முளைத்து மொக்கு விட்டிருக்கின்றன. காலம் ஒரு குட்டி சோதனையைத் தந்து என்னை பரீட்சிக்கிறது என்னை தோற்கடிக்க முடியாது' என்று கத்தி னேன். அந்த கத்தல் சகல மரங்களுக்கும் கேட்டது. அந்த அம்மண ஸ்தூலிகள் எனக்கு உதவாமல் இருக்கலாம். ஆனால் காய்த்து உலுப்பும் ஆவேசத்தை நோக்கியே அவை சகல இயக்கங்களையும் முடுக்கிக்கொண்டு போகின்றன. சக்தியின் திராவகமான அவற் றிற்கே ஒரு குறிக்கோள் இருக்கும்போது மூளையின் திட்பமான எனக்கு அதைவிட மகத்தான குறிக்கோள் இருந்துதான் ஆக வேண் டும். மிக உரக்க அந்தக் கவிதை அடிகளை கத்திக்கொண்டே ஓடினேன். என் உடலில் தசை நார்கள் சீராக இயங்குவது சந்தோ ஷத்தைத் தந்தது. மிகுந்த வலுவுடன் இருக்கிறேன், அடிச்சுவடுகளின் இடைவெளியை எந்த நுட்ப இயந்திரம் அளந்தாலும் ஒரே சீராக அவை இருப்பதைக் குறித்து விட்டு வியப்பில் ஸ்தம்பித்து விடும். அவ்வளவு ஒத்திசைவோடு இயங்குகிறது உடல். இரு கன்னங்கள் வழியாக ஒழுகும் வேர்வையும் காக்கிச்சட்டை பாசிப் பச்சையாகி விட்டதும் மிகுந்த சந்தோஷத்தைத்தந்தன. இன்னும் சில நொடிகளில் நான் தலை அருவியை அடைந்து விடுவேன். மகத்தான குறிக்கோளுக்காகப் படைக்கப்பட்டிருக்கும் நான் இந்த கானகத்தில் விழுந்து கிடந்து துஷ்டைகளின் கொத்தலுக்கும் பிடுங்கலுக்கும் ஆளானேன் என்றால் இயற்கை தன் அவலத்தை நிருபித்துக்கொள்கிறது என்றுதான் அர்த்தம். சகல ஜீவன்களும் சகல அணுக்களும் துகள்களும் அவை அவற்றுக்கான யோசனை கொண்டிருக்கும் போது அவற்றின் பகுதியான தவிர்க்க முடியாத பகுதியான எனக்கு மட்டும், என் ஜீவனுக்கு மட்டும் யோசனை என்று ஒன்று இல்லாமல் இருக்க முடியுமா? எனக்குத் தெரியாமல் என்னிடம் உறைந்து கிடக்கும் ஆற்றலின் யோசனை என்ன?

வெகு நேரம் ஓடி விட்டேன். நான் எதிர்பார்த்த காரியங்கள் கூடி வரவில்லை, என் உடல் துவண்டு விட்டது. ஒரு எல்லை வரையிலும் நான் என் உடல் மீது ஏற்றும் கற்பனைச் சக்தியை அது ஏற்றுக்கொள்ளும். என் னுடன் கூடி முயங்க அது துடிக்கும். என்னை நிறைவேற்ற அது பரபரக்கும். ஆனால் அதன் இயல்பை நான் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் என் பாட்டுக்கு கற்பனையை ஏற்றிக் கொண்டு போனால் தன் துவட்சியை அது பகிரங்கப்படுத்திக்கொண்டுவிடும். இப்போது நான் என் உடலை சமாதானப்படுத்த வேண்டியிருக்கிறது. மரக்கிளைகளில் தூங்கும் பயிற்சியைப் பெற்றிருந்த நான் ஏற்ற மரத்தின் ஏற்ற கிளை ஒன்றில் மிக வசதியாக ஓய் வெடுத்துக் கொள்ள முடியும். அங்கிருந்து பார்த்த போது நாற்திசையும் காடுகள் தாம் . நான் ஓடிய திசை தலை அருவி இருந்த திசை அல்ல என்று தோன்றிவிட்டது. இப்போது அருவியின் ஓசையும் முற்றாகக் கேட்கவில்லை என்பது நிச்சயமானதும் பீதி மனதைக் கவ்விற்று. வேறுபட்ட திசைகளிலோ அல்லது நேர் எதிரான திசைகளிலோ ஓடிக் கொண்டிருந்திருக்கிறேன் போலிருக்கிறது.இனி தலை அருவியைச் சென்றடைவது சாத்தியம் இல்லை. அது அதன் ஓசையுடன் என்னை கைவிட்டு விட்டது. ஆனால் காடு, அது எவ்வளவு பெரிய காடு என்றாலும் சரி, ஒரு இடத் தில் முடிந்துதானே ஆக வேண்டும் என்று யோசித்தேன். அதன் அடிவயிற்றிலிருந்து அதன் பாதங்களைச் சென்றடைவது எப்படி என்பதுதான் இப்போது பிரச்சனை. எந்த திசையில் அதன் பாதங்களைச் சென்றடைவதற்கான இடைவெளி ஆகக்குறைவாக இருக்கும் என்பதுதான் இப்போது பிரச்சனை. மரங்களின் திட்பத்தையும் அடர்த்தியையும் பார்க்கும்போது வனாந்திரத்தின் கருப்பப் பைக்குள் இருக்கிறேன் என்று தோன்றிற்றே தவிர அங்கங்களில் நகர்ந்திருக்கிறேன் என்று. தோன்றவேயில்லை.

கும்ன் திட்பத்திரத்தின் கன்றிற்றே என்று, கும்போது ” என்று கேக்கிறேன்

இருக்கிறது வனாந்தி அடர்த்திரச்சனை. தோனங்களில் என்றும் கருப்பு, யும் பார்

இத்தனைக்கும் இந்தக் காட்டுப் பகுதியைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். இந்தப் பிராந்தியத்தின் இயற்கை, மரங்கள், மிருகங்கள், அருவிகள், நீரோடைகள் இவை பற்றி நிறையப் படித்திருக்கிறேன். இரவு வேட்டையாடும் - கரடிகள் இங்கு அதிகம், ஆந்தைகள் அதிகம் நீரோடைகளில் வரும் காற்றின் குளிர்ச்சியை சுவாசித்துக் கொண்டு புல்வெளிகளின் இருட் பகுதிகளில் உஷ்ண மிருகங்கள் மூச்சிரைத்துக்கொண்டு கிடக்கும் இந்தக் காட்டுப் பகுதியைப் பற்றி நான் படித்தபோது இங்கு உறையும் மரங்கள் பற்றியும், மிருகங்கள் பற்றியும், பறவைகள் பற்றியும், மொத்த அடர்த்திகள் பற்றியும், பள்ளத்தாக்குகள் பற்றியும், நீரோடைகள் பற்றியும் என் மனதில் எவ்வளளோ சித்திரங்கள் எழுந்திருந்தன, இயற்கையை நேசித்து வாழும் அந்த மகோன்னத ஆசிரியர்கள் எழுதிய குறிப்புகள் சூட்சுமமானவை, நுட்பம் கூடியவை. மிகை அற்றவை, இருப்பினும் அவற்றைப் படித்தபோது 'எனக்கு ஏற்பட்ட அனுபவத்திற்கும் இப்போது எனக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அனுபவத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. புத்தகத்தில் ஆதாரங்களை நேரடியாக மறுக்காமலே இவை ஒவ்வொன்றும் வேறு விதமாக இருக்கின்றன. நாற்புறமும் சுற்றிப் பார்த்தேன். மரங்கள்! மரங்கள்! மரங்கள்! இவற்றை விட்டால் பறவைகளின் மெல்லிய ஓசைகள். அந்தப் பேரமைதியோடு அவை கொள்ளும் உறவுகள் மிகுந்த எக்களிப்பை ஏற்படுத்துகின்றன. மரங்கள் விட்டெறிந்திருந்த வானத்தின் துண்டு துணுக்குகள், கொடிய மிருகங்கள் ஒன்றைக் கூட நான் இன்னும் கண்ணால் பார்க்கவில்லை. அவை வெகு அருகில் இருக்கும்போதுகூட தன் இருப்பை காட்டிக்கொள்ளும் தன்மை இல்லாதவை. அவை காடுகளின் இருட் சூட்சுமங்களில் சதா 'கரைந்து கொண்டிருப்பவை. அவற்றின் மணங்கள் எனக்குத் தெரியும். மணங்களை வகை பிரித்து இனம்குறித்துக் கொள்ளவும் எனக்குத் தெரியும். - பறவைகளின் மணங்கள் தவிர மிருகங்களின் மணங்களை நான் உணர்ந்திருக்கவில்லை. நீரோடைகள் எதிர்படும்போது நான் மிகக் கவனமாக இருக்க வேண்டும். துஷ்ட மிருகங்கள் அங்கு. தாகம் தீர்த்துக்கொள்ளவரும். ஆனால் - ஒரு நீரோடை- கூட எதிர்படவில்லை. எண்ணற்ற அருவிகளின் குழந்தைகளான இந்த நீரோடைகள்' பாய்ந்தோடி ஊர் நோக்கி இறங்கும் சரிவுகள் வெகு தொலைவில் இருக் கின்றன என்று பட்டது.

உலகப் பரப்பில் எந்த இடத்தில் என் பாதம் ஒட்டிக் கொண்டிருக்கிறது என்பது தெரியாதது ஒரு பெரும் அவஸ்தை , இந்தக் காட்டின் பெரிய வரைபடமும் அதில் என் பாதங்களின் புள்ளிகளும் தெரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அப்போது கூட காட்டின் வரைபடம் மட்டும் இருந்து பயன் ஒன்றும் இல்லை, ஊரோடு சேர்ந்த வரைபடம் வேண்டும். ஊருக்கும் காட்டுக்குமான உறவு இருந்தால் தான் விமோசனத்துக்கான மார்க்கங்களை உருவ முடியும். திட்டவட்டமாக உணராமல் கற்பனை செய்துகொண்டிருப்பதில் ஒரு பயனும் இல்லை. வேரூன்றி நிற்கும் போது கற்பனையின் பூக்களும் தளிர்களும் ரம்மியமாக இருக்க, வேரற்ற நிலையில் அவையே அசிங்கங்கள் ஆகி விடுகின்றன, தேங்காய் திருகியில் வைத்து என் மூளையைத் திருகுவது ' போல் ஆகிவிடுகிறது. என் யோசனைகளை தரையிறக்க முயன்றேன். எனக்கு இப்போது வேண்டியவை மிகக் குறைவான யோசனைகளே. நடைமுறைச் சாத்தியமான சின்ன யோசனைகளே . நான் விடுதலை அடைய வேண்டும் , தவறிய வழிகள் எனக்கு மீண்டும் கைகூடி வர வேண்டும் .

வெயில் உச்சி கண்டு விட்டது. சூரியன் அதன் வழியில் அதன் வினாடியில் அது. மறைந்து விடும். மரத்தின் மீது அமர்ந்து ரொட்டியைத் தின்ன ஆரம்பித்தேன். சோர்வும் பசியும் இருந்துங்கூட ரொட்டி வாயில் அரைந்து அரைந்து வந்தது. உணவைக் காலி செய்யலாமா என்ற கேள்வி எழுந்ததும் பின் மண்டையில் அடித்ததுபோல் இருந்தது. நான் இங்கு மாட்டிக்கொண்டு விட்டேன் என்றால், இந்த உணவை வைத்துத்தான் நான் சமாளிக்க வேண்டும். புட்டியிலிருந்து நீரைக் குடித்தேன். தண்ணீர் தீர்ந்தாலும் ஓடைகள் நிச்சயம் எதிர்ப்படும் - அந்த நீர் பருக ஏற்றதல்ல என்றும் அவை ஊரை அடைந்ததும் பருக ஏற்றதாகி விடுகிறது என்றும் படித்த ஞாபகம். இதுபோன்ற சிறு விஷயங்களுக்காக இப்போது அலட்டிக் கொண்டிருக்க முடியாது. சரியான வழியில் முன்னேறுவதற்கான உபாயங்களை நான் இப்போது கண்டு பிடித்தாக வேண்டும்.5

அம்புபோல் வானத்தை நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்த ஒரு மரத்தில் ஏறினேன்.. சூரியன் உச்சியில் நின்றதால் அதன் திசையை அனுமானிக்க முடியவில்லை. ஆனால் காலத்தைகை நழுவ விட எனக்கு அவகாசம் இல்லை. சூரியன் மிகுந்த வேகத்துடன் பாய்ந்து கொண்டிருக்கிறது. - அதன் சீரான ஓட்டம் ஈவிரக்கம் அற்றது.

தொலைநோக்கி வழியாக கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன். அடி வானத்தை முழுசாக ஒரு சுற்று என் பார்வையால் அவள் தானித்தேன். தூரத் தொலைவில் புல்வெளி தெரிவதுபோல் இருந்தது. அந்தப் புல்வெளியைச் சென்றடைந்து விட்டேன் என்றால் நம் பிக்கை தரும் இடத்திற்குப் போய் விட்டேன் என்று அர்த்தம். அப்போது இருள் படர்ந்தாலும் அதிக ஆபத்தின்றி அங்கு இருக்க முடியும். அந்தப் புல்வெளியின் மறுபக்கம் என்ன என்று அனுமானிக்க முடியவில்லை. அநேகமாக அங்கு ஓர் ஊர் இருக்கக்கூடும். அந்தப் புல்வெளியைச் சென்றடைந்து மேயும் கன்று காலிகளைப் பார்த்து விட்டால் போதும். வயிற்றில் பால் வார்த்ததுபோல் ஆகி விடும், கன்று காலிகளின் வாலோரத்தில் எப்போதும் மனித முகங்கள் தட்டுப்படும். அந்தப் புல் வெளியைக் கூர்ந்து கவனித்தபோது அதன் செழிப்பும் உயரமும் அடர்த்தியும் பச்சைப். பசேல் என்ற அதன் புத்துணர்வும், மனித உறவில் கூடும் கசங்கள் அற்ற தன்மையும், வானத்தின் தரிசனத்துக்கு மட்டுமே அவை தங்களை அர்பணித்துக்கொண்டிருப்பவை போல் பட்டது. அந்தப் புல்வெளியின் மறு பக்கம் மிக மோசமான சரிவாகக் கூட இருக்கலாம். மாடுகளை அங்கு அழைத்து வர முடியாமல் இருக்கலாம். அப்போது கூட ஆடுகள் வர சாத்தியம் இருக்கிறது. காடுகளின் மிக மோசமான பகுதிகளில் அல்லது அவ்வாறு நான் நினைத்துக்கொண்டிருந்தவற்றில் ஆடு மேய்த்துக்கொண்டிருக்கும் சிறுமிகளைச் சந்தித்திருக்கிறேன். சற்றும் எதிர்பாராத நிமிஷத்தில் கூடிய அந்த முகங்கள், மீண்டும் கூடி விட்டால் போதும். தப் பித்துக்கொண்டு விடுவேன்.

நொடிகளுக்குள் மிக மோசமாக மனம் தளர்ந்து போனேன். அந்த மரத்தின் உச்சாணிக் கிளையில் நின்று கொண்டு வனாந்திரம் முழுக்கக் கேட்கும்படி என் முழு சக்தியையும் தொண்டையில் திரட்டி, யாராவது என்னை காப்பாத்துங்க ஐயா' என்று கத்தினேன். தெரியாத்தனமா வந்து மாட்டிக்கிட்டேன் ஐயா' என்று எனக்கு நானே புலம்ப ஆரம்பித்தேன், என் அலறல்கள் எதிரொலித்த போது அவற்றின் சுருதி குலைந்து கீழ் ஸ்தாபியில் கேலி ' கலப்பதுபோல் பட்டது. யாரோ என் அவஸ்தையை கேலி செய்வதுபோல்இருந்தது. மீண்டும் யாராவது வந்து காப்பாத்துங்க ஐயா' என்று முன்னை விடவும் உரக்கக் கத்தினேன். யாராவது, யாராவது என்று எனக்கு நானே முணுமுணுத்துக் கொண்டேன். யாரும் அங்கு வந்து சேருவு தற்கான சாத்தியமே இருப்பதுபோல் படவில்லை. எனக்குச் சாதகமாக நான் கற்பனை செய்து கொள்வதுபோலவே இருந்தது. அதை விடவும் அருவருக்கத் தகுந்த சீக்கு மற்றொன்றில்லை. கற்பனைகளால் பிரத்தியட்சத்தை மாற்ற முடியுமா? பிரத்தியட்சம் எனக்குப் பாதகமாகவும் இல்லை; சாதகமாகவும் இல்லை. ஒரு உறவை ஏற்படுத்திக்கொள்ளும் வகையில் நான் அதை எனக்குச் சாதகமாகத் திருப்பிக் கொள்கிறேன். இப்போது மோசமான உறவு ஒன்றை யதார்த்தத்துடன் ஏற்படுத்திக்கொண்டு விட்டேன். மிக மோசமாக இப்போது நான் கற்பனையில் தப்பித்து என்ன பயன்? நான் கற்பனையில் தப்பித்துக் கொண்டிருந்தாலும் சூரியன் அடங்கத் தான் அடங்கும். சூரியன் அடங்கியபின் அந்த காரத்தை அழைக்க வேண்டியிருக்குமா? இருளில் வேட்டையாடும் ஜீவராசிகள் அதன் பின் ஓய்ந்திருக்குமா? அவற்றின் பார்வையும் இதர பொறிகளும், அவற்றின் சக்திகளும் தந்திரங்களும், அவற்றின் உடல் வலுக்களும் அந்தகாரத்தின் சக்தியை உறிஞ்சி திடம் பெற்றவை. எந்த இருள் என்னை முடக்குகிறதோ அதே இருள் அவற்றின் பொறிகளில் ஜீவ சக்தியைப் பெய்கிறது. என்ன விந்தை! அவை என்னைக் குதறும்; உணவுக்காக வாழ்பவை அவை. எனக்குச் சாதகமான கற்பனைகள் என்னை ஒரு நாளும் காப்பற்றப் போவ தில்லை. பிரத்தியட்சத்தை தெரிந்து கொண்டு நான் இயங்க வேண்டும், நான் மிக பயங்கரமான ஆவேசத்தை என் உடலில் ஏற்றிக் கொண்டேன். எனக்கு இப்போது வழியும் தெரியவில்லை. திசையும் தெரியவில்லை. யோசிக்கவும் கணக்குப் போடவும் அவசியமான தகவல்கள் எனக்கு கை நழுவி விட்டன. ஆதார ஞானங்களைக் கூட என் பொறிகளுக்கு அளிக்க முடியாத நிலையில் என் மூளை என்ன செய்ய முடியும்? மூளையால், மூளையை இயங்க வைக்கும் ஒரு சொட்டு எண்ணெயைக் கூட உருவாக்க முடியாது.

நாற்புறமும் மரங்கள் சூழ்ந்ததில், அந்த அம்மண . ஸ்தூலிகள் உருவாக்கிய அந்தகாரத்தில், என் - சகல அறிவுகளும் பொய்த்து விட்டன. நான் இதுகாறும் கற்றவற்றிற்கும் அறிந்தவற்றிற்கும் ஆராய்ந்தவற்றிற்கும் பகுத்துண்டு வாழ்ந்த அனுபவங்களுக்கும் எந்தப் பொருளும் இல்லாமல் ஆகி விட்டது. சகல அறிவுகளும் சதி செய்து விட் டன. நான் மரத்திலிருந்து உடல் சிராய்த்துக் கொள்ளும் அவசரத்தில் இறங்கி தலை தெறிக்க ஓட ஆரம்பித்தேன். உணர்வின்மரங்களுக்குடத்தில் இது சென்று !

உன்னதத்தை நோக்கித்தான் இனி என்னால் செல்ல முடியும். அந்த உணர்வு உன்னதம் கொள்ள மறுத்தால், ஊருக்கு அழைத்துச் செல்வதற்குப் பதில் அது என்னை காட்டின் கருப்பப்பைக்குள் அழைத்துச் சென்றால், மரங்களுக்குப் பின் புல்லும் சருகும் கூடிக் கிடக்கும் இடத்தில் இருளின் செறிவில் துஷ்ட மிருகங்களின் வாயில் சென்று நான் விழ நேரலாம். 'எப்படி வேண்டுமென்றாலும் முடி யட்டும்' என்று நான் கத்திக்கொண்டே ஓடினேன். இனிமேல் என்னால் யோசிக்க முடியாது. யோசித்து யோசித்து என் மூளை நரம்புகள் புண்ணாகி விட்டன. இப்போது எனக்கு வழி தெரியாமல் போனாலும் போகட்டும்; யோசிக்கும் அவஸ்தையிலிருந்து விடுதலை கிடைத்தாலே போதும்.

நான் அழிவை நோக்கித்தான் ஓடிக் கொண்டிருக்கிறேன். கட்டிக்காத்து, பூவேலைகள் செய்து தங்க ரேக்குகளும் இழைத்த என் வாழ்க்கைத் திட்டங்கள் இன்றோடு அழியப் போகின்றன. என் நட்பையும் சுற்றத்தையும் ஏமாற்றி விட்டு ஒரு எச்சரிக்கைக் கூட அவர்களுக்குத் தராமல் நான் மரணத்தை நோக்கி ஓடிக்கொண்டி ருக்கிறேன். பெரும் அபத்தத்தை நோக்கி ஓடுகிறேன். மரணம் கூடப் பெரிதல்ல. இந்த அபத்தச்சாவுதான் அசிங்கமானது. மரணம் அழகானது. வரும் நிச்சயமும் எப்போது எனத் தெரியாத அழகும் கொண்டது. உண்மையில் மரணத்துடன் இன்முகம் கொள்ள அர்த்தபூர்வமான ஆயத்தங்களைத்தான் நான் உருவாக்கிக் கொண்டு வந்தேன். அந்த ஆயத்தங்களில் அர்த்தம் கூடி விட்டது என்றால், அர்த்தம் கூடிவிட்ட தான மன நிறைவு எனக்கு ஏற்பட்டு விட்ட தென்றால் அப்போது மரணம் மரணம் அல்ல; அது விடைபெறுதல்தான் . பணி முடிந்து சக ஜீவனுக்கு இடம் தந்து விடைபெறும் இங்கிதம் அது. இப்போது நான் விடைபெற்றுக் கொள்ளப் போவதில்லை. செத்துச் சவமாகிக் கொடிய மிருகங்கள் கடித்துக் கிழிக்க, இங்கு விழுந்து கிடக்கப் போகிறேன். மரணத்தைக் கொல்ல முற்பட்ட நான் இப்போது சாவால் அழிக்கப்படப்போகிறேன்.

உடலில் தசைநார்கள் தாறுமாறாக இழுத்துக்கொள்ள ஆரம்பித்தன. நான் துவள் ஆரம்பித்தேன். கவலையும் குழப்பமும் பயமும் என் சக்தியை உறிஞ்சுகின்றன. கால் குதிரைச்சதைகள் ஓய்வுக்காகக் கெஞ்சின. என் பாதங்களுக்கும் பூமிக்குமான உறவு புகை மூட்டமாகி விட்டது. களைப்புற்ற உடலைத் தாங்கத் தெரியாமல் நான் எந்த நிமிஷத்திலும் சரியலாம். அப்படிச் சரிந்து விட்டால் மீண்டும் நிலைகொள்வதற்கு அவசியமான சக்தியைக் என் உடலிலிருந்து திரட்ட முடியாது. என் நடை தள்ளாட்டமாகி விட்டது.திடுக்கிட்டு நின்றேன். கண்முன் பூமி இரண்டாகப் பிளர்ந்து கிடக்கிறது. ஒரு ராக்ஷஸ மாதுளையைப் பிளர்ந்து வைத்தது போலிருக்கிறது. அந்தப் பிளர்ப்பின் உள் நாக்கும் தொண்டையும் செக்கச் செவேல் என்று சிவந்திருந்தன.

மூர்ச்சை தெளிந்தபோது கண் முன் காட் சிகள் கரும்புச் சல்லாவால் போர்த்தப்பட்டிருந்ததுபோல் இருந்தது. வலியைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. குரலெடுத்து கத்த ஆரம்பித்தேன், எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் அழ ஆரம்பித்தேன். அலங்கோலமாக இந்தக் குழிக்குள் விழுந்து கிடக்கிறேன்' உடல் முழுவதும் மிக மோசமான காயங்கள். சட்டையும் நிஜாரும் முற்றாகக் கிழிந்து விட் டன. தோள்பை எங்கு தெறித்தது என்பதே தெரியவில்லை. கன்னங்களிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. கால்களிலும் தொடைகளிலும் தெரிந்த மோசமான சிராய்ப்புக்களை பார்க்க சகிக்கவில்லை, உடல் பூராவும் செம்மண் அப்பிக்கொண்டிருந்தது. கிழிந்த சட்டையையும் நிஜாரையும் அவிழ்த்து உடல் மண்ணை தட்டிக்கொண்டேன். குழியின் ஊடே மண் சுவரைப் பற்றிக் கொண்டே சிறிது தூரம் செல்ல பிளர்ப்பின் வாய்நெருங்கி பெரிய கற்களின் குவியல் அங்கு தென்பட்டது. அவற்றின் மேல் ஊர்ந்து வெளியே வந்தேன்.

என் கண்கள் என்னை ஏமாற்றி விட்டன. இப்போது பிளர்ப்பின் வாய்கலம் தெரிவது போல் அப்போது தெரியாமல் போய்விட்டது . ' ஓடி வந்து தாண்டி விடலாம் என்று நினைத்தது பைத்தியக்காரத்தனமாகப் போய் விட்டது. உண்மையில் நான் இதற்குள் இறந்து போயிருக்கலாம். இந்த மட்டோடு பிழைத்தது. பெரும் அதிருஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். கால் ஜோடுகள் இல்லாமல் என்னால் அடியெடுத்து வைக்க முடிய வில்லை ,

அதளபாதாளத்தில் ஆழ்ந்து போகும் போது எப்போதும் கூடும் அந்தத் தெளிவு , இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை என்றாகும் போது மனம் கொள்ளும் விழிப்பு. என்னிடம் கூடுவதை உணர்ந்தேன். இவ்வளவு மோசமான நிலையிலும் காலம் என் கையில் ஓடிக் கொண்டிருக்கிறது. கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த தொலைநோக்கியை நான் இழந்து விடவில்லை. இதை விட மோசமான பள்ளங்களை நான் லகுவாகத் தாண்டியிருப் பவன் தான். அப்போதெல்லாம் அந்தப் பள்ளங்களை என்னால் நிதானிக்க முடிந்தது. இப்போது என் கண்களில் புகுந்திருந்தஇருள், அந்தப் பள்ளத்தின் வாயகலத்தைக் காட்டுவதுபோல் காட்டி, உண்மையில் காட்டாமல் ஏமாற்றி விட்டது. இப்போது மிகக் கொடுமையான வலியிலும் ஆக இழிவிலும் ஒரு தெளிவு கூடி வருகிறது. மரணத்தை நெருங்கி விட்டேன் என்ற தெளிவு தான் அது இனி தப்பித்தலுக்கான அவஸ்தை அவசியம் இல்லை. இனி மரணத்தை தவிர்க்க முடியாத இயற்கையாக, கற்பாந்த காலமாய் உறுதிப் படுத்தியிருக்கும் அதன் மகத்தான வருகையை ஏற்றுக்கொண்டு விடுவதுதான் விவேகம். கூரான கற்கள் என் பாதங்களைப் பதம் பார்த்து காயங்களில் ரத்தம் கசிகிறது. ஒவ்வொரு அசைவிலும் மரண வலி. அப்போதும் மரண சாந்நித்தியத்தைக் கருதி நிதானமாகவே போய்க் கொண்டிருந்தேன். அடிச் சுவடுகளின் இடைவெளி மிகக் குறைந்து விட்டது. மரணத்தின் மெல்லிய மின்சாரம், புணர்ச்சியின் உச்சம் போன்ற அந்த மின்சாரம், நரம்புகளில் பரவுவது போல் இருந்தது. ஒரு சந்தோஷ அரற்றல் வாயில் வெளிப்பட ஆரம்பித்தது. சிறிதும் கூச்சமோ வெட்கமோ இன்றி, உள் வருத்தத்தின் பூக்கள் வார்த்தையாக வாயில் மலர்ந்தன. குளிர்ந்த நீர் கிடைத்தால் நாவறட்சியைத் தீர்த்துக்கொள்ளலாம், தலை சுற்றிக்கொண்டு வர ஒரு மரத்தில் சாய்ந்தேன். இனி நடப்பது சாத்தியம் இல்லை, இதுதான் கடைசி இளைப்பாறல், இங்கு வந்து முடியும் என்பது இன்று காலை கூட தெரிந்திருக்கவில்லை, இனி கத்துவதோ பேசுவதோ அழுவதோ என்றும் சாத்தியமில்லை. சகல பொறிகளிலும் பேரமைதி கூடுகிறது.

திடீரென்று நாய் குரைக்கும் சத்தம் கனவில் கேட்பது போல் தோன்றிற்று. என்னை அறியாமல் மரக்கிளையைப் பற்றிக் கொண்டு எழுந்தேன். கூர்ந்து கவனித்தேன் ஆழக் கிணற்றுக்குள்ளிலிருந்து நாய் குரைப்பதுபோல் கேட்கிறது. உடலில் ஒரு பெரும் ஆவேசம் புகுந்து கொள்ள மரக்கிளையில் பற்றி ஏறினேன். அவ்வளவு நிர்க்கதியான நிலையிலும் எப்படி உச்சி வரையிலும் தொற்றி ஏறினேன் என்பது தெரியவில்லை. நம்பிக் கையின் ஆவிபோல் சக்தி வாய்ந்தது எதுவும் இல்லை. சற்று இளைப்பாறினால் மீண்டும் நடந்துபோக முடியும் என்று தோன்றிற்று. ஒரு மரத்தின் மீது ஓய்வெடுத்துக் கொள்ளலாம். இதற்கு முன் பலரும் இதுபோன்ற இக்கட்டுக்களில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய விதவிதமான அனுபவங்களை நான் படித்திருக்கிறேன். அந்த இக்கட்டிலிருந்து அநேகர் வெளியே வந்திருக்கிறார்கள். மிக மோசமான ஆபத்து அருகணையும்போது, ஆபத்தின் கோரத்தில் கூடவே ஒரு புன்னகையும் நெளியும். காடு அந்தகாரத்தின் அடர்த்தி கொண்டிருந்தாலும் - ஆபத்துக்களின் களி நிலம் என்றாலும் ஊர்களைவிட அவை மோசமானவை என்றுசொல்ல முடியாது. அறிய அறிய மிருகங்களும் பறவைகளும் நியதிகளும் ஒழுக்கங்களும் நேர்மையும் கொண்டவையாக மாறும்போது, அறிய அறிய மனிதர்கள் அறிய முடியாத சிக்கல்களைக் கொண்டிருக்கிறார்கள் என்று தான் படுகிறது, மிருகங்களுக்கு வழிவிட்டு மனிதன் காடுகளிலும் வாழத் தெரிந்து கொள்ளும்போது கூட, மனிதர்களுக்கு வழி விட்டு ஊர்களில் எப்படி வாழ்வது என்பது மனிதனுக்குத் தெரியவில்லை. இனி முக்கிய மான விஷயம் நான் மூர்ச்சையாகி விடக் கூடாது என்பதுதான். மூர்ச்சையாகி விட்டால் உயிர் இருக்கும்போதே அபோதம் இறங்கி விடுகிறது. அப்போது காப்பாற்றிக் கொள்ளவோ, கற்றுக்கொள்ளவோ, கவனங்கள் கொள்ளவோ, யாத்திரையைத் தொடரவோ சாத்தியம் இல்லாமல் போய் விடும் . சிராய்ப்புக்களில் வழிந்த வியர்வையின் எரிச்சல் கூட என் விழிப்புக்களை ஊக்குவித்தது . சகல கஷ்டங்களையும் நான் போஷாக்காக மாற்றிக்கொள்ள ஆரம்பித்தேன், என் உள் மனதில் எரிந்து கொண்டிருக்கும் ஜூவாலை அணையாமல் இருந்தால் உணவற்ற நிலையிலும் உடல் வலியிலும் ரணங்களிலும் நான் நடந்து கொண்டுதான் இருப்பேன். மீண்டும் நாய்க்குரைப்பு கேட்டது. நான் வாழ்ந்தாக வேண்டும், நான் என் வாழ்க்கையை யாருக் காகவும் இழக்க முடியாது.

ஐந்து விட்டதே சூரியன்”டே இருந்தோ

மரத்தின் உச்சியிலிருந்து தொலைநோக்கியால் பார்த்துக் கொண்டே இருந்தேன். செக்கச் சிவந்த சூரியன் அடிவானத்துக்கு வந்து விட்டது, 'அவற்றிலிருந்து கிரணங்கள் நேர் கோடாய் என்னை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. அந்த ஒளியினூடே எனக்கு நகரத் தெம்பிருந்தால் வெகு தொலைவுக்கு அந்த கிரணங்கள் என்னை எடுத்துச் செல்லும். காட்டின் புறத்தோற்றம் கட்டுக் குலைந்ததுபோல் இருந்தது, மரங்கள் சகஜம் கொண்டிருந்தன. தொலைநோக்கியின் ஊடே அடிவானத்தின் ஒரு புள்ளியிலிருந்து ஒரு நூலிழை விடாமல் சுற்றி வர பார்த்துக் கொண்டே வந்தேன். கோபுரத்தின் உச்சி என்று சந்தேகப்படத்தக்க ஒரு கரும்புள்ளி

அடி வானத்தில் தெரிந்தது. ஒளியை ஊடுருவி அங்கு படர்ந்து கொண்டிருந்த புழுதியில், காட்சி தெளிவுபடவில்லை. அந்தத் திசையில் நாள் சென்றால் நம்பிக்கைக்குரிய அறிகுறிகள் மேலும் புலப்படும் என்று நிச்சயமாகத் தோன்றிற்று. மெல்லிய மின்சாரம்உடல் முழுவதும் ஒரு ஆவேசம்போல் பரவியது. மீண்டும் விரைந்து நடக்கத் தொடங்கினேன். சீராக நடந்தேன். எனது காயங்களும் எனது - சிராய்ப்புக்களும் உடல் உபாதைகளும் வலிகளும் என்னை ஹிம்சைப்படுத்தினாலும் என் ஆதார சுருதியைச் சார்ந்தவை அல்ல அவை என்று கற்பனை செய்து கொண்டு அவற்றால் முடங்கி விட மறுத்து விரைந்து கொண்டிருந்தேன். ஒரு சிறு குன்று எதிர்பட்டது. அந்தக் குன்றைத்தாண்டி இறங்கும்போது கோபுரத்தின் கலசமும் அந்தக் கலசத்தின் பின் சில கோடுகளும் தென்படுவதுபோல் தோன்றின. நாய்க்குரைப்பு சற்று வலுப்பது போல் தோன்றிற்று. மிகுந்த ஆவேசத்துடன் ஓடினால் இன்னும் சிறிது நேரத்தில் நான் ஊர் 'வாயிலை அடைந்து விடலாம். அவ்வளவு மோசமான நிலையிலும் பலம் எங்கிருந்துதான் ஊற்றெடுத்து வருகிறது என்பது தெரியவில்லை. வேக மாக ஓடத் தொடங்கினேன், “ நான் தோற்க மாட்டேன்' என்று கத்திக்கொண்டே ஓடினேன், சமவெளியிலிருந்து சரிவுக்கு வந்து விட்டேன் என்று தோன்றிற்று. கற்கள் பதம் பார்த்ததில் அடிப்பாதங்கள் பல இடங்களில் மோசமாகக் கிழிந்து அவற்றில் மண் புதைந்தது. எவற்றையும் பொருட்படுத்தாமல் நான் ஓடிக்கொண்டிருக்கிறேன். மீண்டும் தொலை நோக்கியால் பார்த்தேன், மங்கி வரும் ஒளியில் இரு கரிய உருவங்கள் தெரிந்தன, பச்சைச் சேலை கட்டியபடி ஒரு பெண் போய்க் கொண்டிருந்தாள். அவள் தலை மீது ஒரு பித்தளைப் பாத்திரம். பளபளவென்று அதில் சூரிய ரச்மிகள் பட்டுத் தெறித்தன. அவள் பின்னால் ஒரு ஆண். அவனுடைய தோள்களில், கழுத்தின் இருபுறமும் கால்களைப் போட்டபடி, அவன் தலையைப் பிடித்துக் கொண்டு, ஒரு குழந்தை சவாரி செய்கிறது. கண்களிலிருந்து தொலை நோக்கியை எடுக்கா மல், ஐயா என்னைக் காப்பாத்துங்க ஐயா என்று மிகப் பயங்கரமாகக் கத்தினேன். என் சத்தம் அவர்களைச் சென்றடையவில்லை. தொலை நோக்கியை எடுத்தபோது அவர்களை எந்த வட்டத்தில் பார்த்தேன் என்பதைக்கூட என்னால் அனுமானிக்க முடியாதபடி புகை மூட்டமாய் இருந்தது. காட்சிக்குள் விழுந்த வானவெளியின் பரப்பு அவ்வளவு அதிகமாக இருந்தது. ஆனால் அவர்கள் சென்று கொண் டிருந்த திசை எனக்குத் தெரிந்து விட்டது, அந்தத் திசையில் சாய்வாக கோணமெடுத்து ஓட ஆரம்பித்தேன். நான் ஓடி இறங்குவதற்கும் அந்த இடத்தில் அவர்கள் வந்து சேருவ தற்கும் சரியாக இருக்கும் என்று நம்பினேன்.