Pages

Sunday, April 08, 2018

சங்கேதங்களும் குறியீடுகளும் - விளாடிமிர் நபக்கவ் :: ஜெயமோகனுக்கு ஒரு எதிர்வினை


Kaala Subramaniam shared a post.

7 hrs · 


Kaala Subramaniam

23 April 2016 · 

இன்று விளடீமர் நபக்கவ் பிறந்தநாள்

சில முறை அச்சில் வெளிவந்த ஒரு கதையை மீண்டும் பதிவிடுகிறேன். கா.சு.


சங்கேதங்களும் குறியீடுகளும்

விளடீமர் நபக்கவ்


இந்தப் பல வருடங்களில், நான்காவது தடவையாக. குணப்படுத்தவே முடியாதபடிக்குச் சீர்குலைந்துவிட்ட சித்தத்தையுடைய இளைஞனுக்கு . பிறந்த நாள் பரிசாக எதைத் தருவது என்ற பிரச்சனையை அவர்கள் எதிர்கொண்டார்கள். அவனுக்கென்று தனி விருப்பமெதுவும் கிடையாது. மனிதனால் படைக்கப்பட்ட எல்லாப் பொருள்களும், எந்தப் பிரயோஜனமுமற்ற இந்தக் குணரூப உலகின் அனைத்து வசதிகளும் அவனுக்குத் தீமையின் தேனடைகளாகவே தோன்றின. அவற்றில் குரோதத்துடன் அலைபாய்ந்து ரீங்கரிப்பவை, அவனால் மட்டுமே அறியக்கூடிய விதத்தில் இருந்தன. அவனைப் புண்படுத்தக்கூடிய பலவிதப் பொருட்களையும் தவிர்த்துவிட்டு (கூர்முனைகளுள்ள எப்பொருளும் அவனுக்கு ஒருவித மனத்தடையை ஏற்படுத்தியது எனலாம்) மனத்தொந்தரவு தராத மதுரமானதும் அற்பமானதுமான ஒன்றையே அவனது பெற்றோர்கள் தேர்ந்தெடுத்தனர்; பத்துச் சிறிய ஜாடிகளில் பத்துவிதப் பழப்பாகுகள் அடங்கிய ஒரு கூடை.


அவர்களுக்குத் திருமணம் நடந்து நீண்ட நெடுங்காலத்துக்குப் பிறகே அவன் பிறந்தான். ஓர் இருபது ஆண்டுகள், காலகதியில் நழுவிவிடவே, இப்போது அவர்களுக்கு நல்ல வயோதிகம். எப்படியென்றாலும், அவளது மங்கி நரைத்த கூந்தல் களைத்துப்போய் கலைந்து கிடந்தது. அவள் மலிவான கருப்பு உடைகளையே அணிந்தாள். அவளுடைய வயதிலுள்ள மற்ற பெண்களைப் போல் (தன் முகம் முழுக்க வெளிர் சிவப்பும் வெளுத்த இந்திர நீலமும் கொண்ட வண்ணப் பூச்சைப் பூசிக்கொண்டு, தனது தொப்பியில் ஓடைக்கரைப் பூங்கொத்துக்களைச் சூடி இருக்கிற, அவர்களது அண்டை விட்டுக்காரி திருமதி ஸோல் போல)இல்லாமல், வசந்தகால தினங்களின் குறைகாணும் வெளிச்சத்துக்கு, அவள் தனது பூச்சற்ற வெளுத்த முகத்தைக் காட்டிக்கொண்டு நின்றாள். பழைய கிராமத்தில் மிக வெற்றிகரமான, நல்ல வியாபாரியாக விளங்கிய அவளது கணவர், இப்போது முற்றிலும் தனது சகோதரனை . சுமார் நாற்பது வயது நிறைந்து சரியான ஒரு அமெரிக்கனாக மாறி, நிலைபெற்றுவிட் ஜசக்கை. நம்பியிருக்க வேண்டிய கட்டாயம்.


இவனை அவர்கள் அரிதாகவே போய்ப் பார்ப்பார்கள். இவனுக்கு “இளவரசன்” என்ற பட்டத்தையும் சூட்டியிருந்தார்கள்.


அந்த வெள்ளிக்கிழமை, எல்லாமே தவறாகப் போயிற்று. பாதாளரயில், தன் உயிர்மின்சாரத்தை, இரு ஸ்டேஷன்களுக்கு இடையில் இழந்துபோய் நின்று விட்டது. ஒரு கால்மணி நேரத்துக்கு, தமது கடமை தவறாத இதயத்துடிப்பையும் செய்தித்தாள்களின் சரசரப்பையும் தவிர, கேட்பதற்கு வேறு ஒன்றுமில்லாமல் போயிற்று. அடுத்து, அவர்கள் ஏறிப் பயணித்த பஸ், காலகாலத்துக்கும் காத்திருக்கச் செய்வதாய் ஊர்ந்தது. அது வந்து சேர்ந்தபோது, வாயாடித்தனம் நிறைந்த உயர்நிலைப் பள்ளிக்குழந்தைகளால் நிறைந்து போயிருந்தது. சானடோரியத்துக்கு, இட்டுச் செல்லும் பழுப்பு நிறப் பாதையில் அவர்கள் நடந்தபோது, மழை பலமாகப் பெய்யத் தொடங்கியிருந்தது. வழக்கமாக, கால்களை முடக்கிப் படுத்துக்கொண்டிருக்கும் அறையில் அவன் (அவனது பரிதாபகர முகம் பருக்கள் நிறைந்து ஒழுங்காகச் சவரம் செய்யாமல் சலிப்பும் குழப்பமும் நிறைந்ததாயிருக்கும்) இல்லை. அங்கே அவர்கள் மறுபடியும் காத்திருந்தனர். அவர்களுக்குத் தெரிந்த . அவர்களைப் பொருட்படுத்தாத ஒரு நர்ஸ், கடைசியாகத் தோன்றினாள். இப்போது அவன் நல்ல நிலையில் இருக்கிறான். ஆனால், அவர்கள் அவனைப் பார்ப்பது இடையூறாக இருக்கலாம் என்றாள். அந்த இடம், பற்றாக்குறையான ஆட்களுடன் படுகேவலமான நிலையில் இருந்தது. அங்கே எந்தவொரு பொருளும் கைதவறிப் போய்விடவோ, எதுவும் எளிதாகக் குழப்பப்படவோ நேரலாம். எனவே, அதன் அலுவலகத்தில் தங்களது பரிசுப்பொருளை வைத்துவிட்டுச் செல்லக்கூடாது என்றும், அடுத்த தடவை வரும்போது அதை அவனுக்குத் திரும்பக் கொண்டு வருவது என்றும் முடிவெடுத்தனர்.


தனது கணவர் தனது குடையை விரிக்கும் வரை காத்திருந்து பின் அவரது கரத்தைப் பற்றிக்கொண்டாள். மனங்குலையும்போது அவர் ஒருவிதமாகச் செருமிக்கொள்வதைப் போல் இப்போதும் தொடர்ந்து செருமிக்கொண்டிருந்தார். வீதியில் அடுத்த பக்கத்திலுள்ள பஸ் நிறுத்த நிழல்குடையை அவர்கள் அடைந்ததும், அவர் தமது குடையை மடக்கினார். சில அடிகளுக்கு அப்பால், ஆடி அசைந்து சொட்டிக்கொண்டிருந்த மரத்தின் கீழ், இறகு முளைக்காத சிறுபறவையொன்று, பாதி உயிர் போன நிலையில், சகதியில் பரிதாபகரமாகத் துடித்துப் புரண்டுகொண்டிருந்தது.


பாதாள ரயில் நிலையத்துக்குச் சென்ற நீண்ட பயணத்தின் போது, அவளும் அவள் கணவரும் ஒரு வார்த்தையும் பேசிக்கொள்ளவில்லை. அவரது வயோதிகக் கரங்கள் (வீங்கிய நரம்புடன், பழுப்புப் புள்ளிகள் நிறைந்த தோல்) அவள் பார்வையில் படும்போதெல்லாம், குடையின் கைப்பிடியை அவை இறுக்கி முறுக்கிக்கொண்டிருப்பதைக் கவனித்தாள். கண்ணீர் முட்டும் உணர்வு அவளுக்கு ஏற்பட்டது. வேறு விஷயங்களில் மனதை ஈடுபடுத்த அவள் சுற்றுமுற்றும் பார்க்க முயன்றபோது, ஒருவித மெல்லிய அதிர்ச்சியை அடைந்தாள். காத்திருந்த பயணிகளில் ஒரு பெண், உணர்ச்சி வேகமும் விநோதமும் கலந்தவளாய், கருத்தகூந்தலோடும் கிண்டிக் கிளறும் சிவந்த கால் நகங்களோடும், ஒரு வயதான பெண்ணின் தோளில் சாய்ந்து விசும்பிக்கொண்டிப்பதைப் பார்த்தாள். யாரை ஞாபக மூட்டுகிறாள் அப்பெண்? அவள் ரெபக்கா போரிஸோவ்னாவை ஒத்திருந்தாள் . அவள் மகள், பல ஆண்டுகளுக்கு முன், மின்ஸ்க்கில் சோலோவீசிக் ஒருத்தனை மணம் செய்திருந்தாள்.


சென்ற முறை, அவர்களது மகன், தனது வாழ்கை முடித்துக்கொள்ள முயன்றபோது, அவனுடைய தற்கொலை உத்திமுறையானது - டாக்டரின் வார்த்தையில் சொன்னால்- கண்டுபிடிப்பின் ஒரு மாஸ்டர் பீஸாக இருந்தது. பறப்பதற்கு அவன் கற்றுக்கொள்கிறான் என்று பொறாமையுள்ள பக்கத்து நோயாளி நினைக்காமலிருந்து, தடுக்காமலிருந்திருந்தால், அவன் வெற்றி பெற்றிருக்கக் கூடும். தனது உலகிலிருந்து தப்பிக்க, ஒரு துளையை உருவாக்கிக் கிழித்துக்கொண்டு வெளியேற நினைத்ததுதான், அவன் உண்மையில் விரும்பியது.


அவனது மனக் கற்பித முறைகள் . ஒரு விஞ்ஞான மாத இதழில், மிக விரிவான ஒரு கட்டுரைக்கு விஷயமாகி இருந்தது. ஆனால், இதற்கு முன்பே, அவளும் அவள் கணவரும் இது பற்றித் தங்களுக்குள் புதிரிட்டு வியப்பதை விட்டு விட்டிருந்தனர். ஹெர்மன் பிரிங், அதை ‘ரெஃபரென்ஸியல் மேனியா‘ என்றழைத்தனர். வெகு அபூர்வமான இந்த மாதிரி கேஸ்களில் நோயாளி, தன்னைச் சுற்றி நடக்கும் எல்லா நிகழ்வுகளையும் தனது ஆளுமைக்கும் இருப்புக்குமான விளக்கக்குறிப்புகளாகக் கற்பித்துக்கொள்கிறான். நிஜ மனிதர்களைத் தனது சதியிலிருந்து அவன் விலக்கியே வைத்திருக்கிறான். ஏனெனில், மற்றவர்களை விட அதிபுத்திசாலியாகத் தன்னை அவன் கருதிக்கொள்வதுதான். அவன் எங்கு சென்றாலும், அதீதமான இயற்கை நிகழ்வுகள் அவனை நிழலிடுகின்றன. நட்சத்திர வானில் மேகங்கள், தமக்குள் மெதுவாகச் சங்கேதங்களைப் பரிமாறிக்கொள்கின்றன. அவனைப் பொருத்தவரை, அவை மிக விசித்திரமான விரிவான தகவல்களைக் கொண்டவை. இரவின் வீழ்ச்சியில், அவனது உள்ளார்ந்த நினைவுகள், திட்டமிட்ட அகர வரிசைப்படி, இருட்டினுள் சைகை செய்யும் மரங்களினால் சர்ச்சிக்கப்படுகின்றன. குமிழிகள், புள்ளிக்கறைகள், சூரியக் கரும்புள்ளிகள் போன்றவை, அவனால் மட்டுமே இடைமறித்துப் பெற்கூடிய, சில பயங்கரச் செய்திகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வடிவ மாதிரியாக இருக்கின்றன. எல்லாமே சங்கேத பாஷை, எல்லாவற்றிலும் அவன் தான் மையம். கண்ணாடித் தளங்கள், அசைவற்ற நீர்நிலைகள் போன்றவை, ஒற்றர்களாக, பற்றற்ற பார்வையாளர்களாக இருக்கின்றன. கடை ஜன்னல்களில் இருக்கும் கோட்டுகள் போன்றவை. பாரபட்சமற்ற சாட்சிகள்; இதயமற்று விசாரணையற்று தண்டிப்பவர்கள். மற்றவை (ஓடும் நீர், புயல்) மறுபடியும், பைத்திய நிலைக்குத் தள்ளப்பட்ட ஹிஸ்டீரியாக்கள்; அவனைப் பற்றி மோசமான எண்ணமுடையவர்கள், அவனது நடத்தைகளுக்குப் பூதாகரமான, தவறான காரணங்களைக் கற்பிப்பவர்கள், அவன் எப்போதுமே கவனமாய் இருந்தாக வேண்டும். ஒவ்வொரு நிமிடமும் ஜாக்கிரதையுடன், ஏறியிறங்கும் லேசான அலைகளுக்கு ஏற்ப, விஷயங்களை விடுவித்துக் கொண்டே, அதற்குத் தக, தன் வாழ்வைச் சரிப்படுத்திக்கொள்ள வேண்டும். அவன் உட்சுவாசிக்கும் இந்தக் காற்றும்கூட, அட்டவணையிடப்பட்டுப் பூர்த்தி செய்யப்படுகிறது. அவனது உடனடிச் சுற்றுப்புறங்களின் தன்மையைப் பொறுத்து, அவனது விருப்பங்கள் தட்டி எழுப்பப்படுகின்றன. என்றாலும், அதுமட்டுமேயல்ல தொலைவில் பிரவகிக்கும் காட்டுத்தன அவதூறுகள், கனபரிமாணத்திலும் வாசாலகத்திலும் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன. அவனது ரத்தத்தின் மிகச் சிறிய ஜீவ அணுக்களின் நிழலுருவச் சாயைகள், பல லட்சம் மடங்கு பெருக்கிக் காட்டப்பட்டு, விரிந்த நிலவெளி எங்கும் இடம் மாறியபடியே வேகமாகப் பறக்கின்றன. மேலும், தொலை தூரத்தில் பெரும் மலைத்தொடர்கள் சகிக்க முடியாதபடி இறுகி, உயர்ந்து, கருங்கற்களாகத் தொகுப்படைகின்றன. அவனது இருப்பின் அநாதியான உண்மையை, புலம்பிக்கொண்டிருக்கின்றன ஃபிர் மரங்கள்.


பாதாளரயில் நிலையத்திலிருந்து (முழக்கமும் அசுத்தக் காற்றும் நிறைந்திருந்தது அது)அவர்கள் வெளிப்பட்ட போது, பகலின் பின்னுக்கு இழுபடும் வெளிச்சம், வீதிவிளக்குகளுடன் கலந்துவிட்டது. இரவு உணவுக்காகக் கொஞ்சம் மீன் வாங்க விரும்பிய அவள், பழப்பாகு ஜாடிக்கூடையை அவரிடம் கைமாற்றிவிட்டு, வீட்டுக்குப் போகும்படி, அவரைக் கேட்டுக் கொண்டாள். அவர், மூன்றாம் தளம் வரை மேலே வந்த பின்புதான், அன்று அதிகாலையிலேயே அவளிடம் சாவிகளைக் கொடுத்தது நினைவுக்கு வந்தது.


மௌனமாகப் படிகளில் அமர்ந்தார். சுமார் பத்து நிமிடங்களுக்குப் பின் அவள் வந்தபோது, மௌனமாக எழுதிக்கொண்டிருந்தார். க்ஷீணித்த புன்முறுவலுடன், தனது பைத்தியக்காரத்தனத்தை உதறுபவள் போல் தலையை ஆட்டிக்கொண்டு அவள் வர, பலத்த பிரயாசையுடன் மேல் மாடிக்குச் சென்றார்கள். இரு அறைகள் கொண்ட அவர்களது பிளாட்டுக்குள் நுழைந்ததும், உடனே கண்ணாடிக்கு முன் சென்றார் அவர். கட்டைவிரல்களினால் வாயில் ஓரங்களைச் சிரமப்பட்டு அகல விரித்து, அருவருப்பும் முகமூடித்தனமும் கலந்த இளிப்புடன், தமது உபயோகமற்ற அசௌகரியமான பல்தகட்டை நீக்கினார். அதோடு சேர்ந்து கோரைப்பல் தாரையாக எச்சில் இணைந்து வந்ததைத் துடைத்தார்.


அவள் சாப்பாட்டுக்கு மேஜையைத் தயார் செய்துகொண்டிருந்த போது, தனது ருஷ்ய மொழிச் செய்தித்தாளைப் படித்துக்கொண்டிருந்தார். பின்பும் படித்தபடியே, பல் தேவையில்லாத, நொய்மையான ஆகாரப் பொருட்களைத் தின்றார். அவரது மனோநிலை பற்றி அவளுக்குத் தெரியும் என்பதால், அவள் ஏதும் பேசவில்லை. அவர் படுக்கைக்குச் சென்ற பின்பும், அவள் தனது அழுக்கடைந்த சீட்டுக்கட்டோடும், பழைய ஆல்பங்களோடும், புழங்கும் அறையிலேயே தனித்திருந்தாள். நேரான நடைவழிக்கு அப்பால், இருட்டில், சில நசுங்கிய சாம்பல் கேன்களில் பட்டு எதிரொலிக்க மழை பெய்யும் இடத்தில், ஜன்னல்கள் மங்கிய வெளிச்சம் கொண்டு தெரிந்தன. அதிலொன்றில், கருநிறக் கால்சட்டையணிந்த மனிதரொருவர், சீர்குலைந்த படுக்கையில் வெற்றுத் தோள்பட்டைகளை உயர்த்திக்கொண்டு, மல்லாந்து படுத்திருப்பது தெரிந்தது. ஜன்னல் மறைப்பை கீழே இழுத்து மூடினாள். புகைப்படங்களைப் பரிசோதித்தாள். ஆல்பத்தின் ஒரு மடிப்பிலிருந்து லிப்ஸிக்கில் அவர்களிடமிருந்த ஜெர்மன் தாதியும், அவளுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த கொழுத்த முகமுடையவனும் வெளிவிழுந்தனர். மின்ஸ்க், புரட்சி, லிப்ஸிக், பெர்லின், லிப்ஸிக், படத்தில் சரியாகப் பதியாத முகப்பை உடைய சரிவான வீடு. பார்க்கில், இறுக்கமும் கூச்சமும் கொண்டு, சுளித்த முன்நெற்றியுடன் அந்நியர் யாரையும் பார்க்க மாட்டாத, ஆசையுடன் நெருங்கிவரும் அணில் பார்வையுடன் அவன்; நாலு ஆண்டுகள் பழக, சித்தி ரோஸா, தடபுடல் நிறைந்த மெலிந்த, அகல விரிந்த கண்களுள்ள வயதான பெண். மனிதக்கரங்களும் கால்களும் கொண்ட அற்புதப் பறவைகளை அவன் வரைந்ததும், வளர்ந்த மனிதனைப் போல் தூக்கமின்மை நோயில் பாதிக்கப்பட்டு உழன்றதுமான காலம். அவனது சித்திமகன் . தற்போது புகழ்பெற்ற செஸ் விளையாட்டுக்காரன். மீண்டும் அவன் எட்டு வயதில் . அப்போதே, புரிந்துகொள்ள முடியாதவனாய், நடைவழியிலுள்ள சுவர்க் காகிதத்துக்கும் பயப்படுபவனாய், மலைப்பாங்கில் பாறைகளோடு உள்ள குடியானவர் நிலப்பகுதியும் இலையற்ற மரத்தின் கிளையிலிருந்து தொங்கும் பழைய வண்டிச்சக்கரமுமாகத் தோன்றும் புத்தகப் படத்துக்குக்கூடப் பயப்படுபவனாய் விளங்கியவன். பத்து வயதில் அவன். அது அவர்கள் ஐரோப்பாவை விட்டு வெளியேறிய வருடம். அவமானம், பரிதாபம், வெட்ககரமான துன்பங்கள், அழுக்கும் விஷமமும் பின்தங்கிய மனப்பாங்குமுள்ள குழந்தைகளோடு அவன் இருந்த அந்த விசேஷமான பள்ளிக்கூடம். அதன் பிறகு அவன் வாழ்வில் ஒரு வசந்த காலம். நிமோனியாவுக்குப் பிறகு, ஒரு நீண்ட வியாதியிலுருந்து மீண்ட காலத்தோடு இணைந்த தருணம்; அது அவனது அந்தச் சின்னப்பயங்களுடன், சராசரி மனங்களுக்கு முற்றிலும் எட்ட முடியாதபடி அவனை ஆளாக்கிவிட்டது. இதை, அசாதாரணத் திறமைகளைப் பெற்ற குழந்தையை, தர்க்கரீதியில் பின்னிப் பிணைந்த மாயையின் அடர்ந்த சிக்கல்கள் சேர்ந்து கடினப்படுத்திவிட்ட விசித்திர நிலை என்று அவனது பெற்றோர் பிடிவாதமாக எண்ணி வந்தனர்.

இதையும் இதற்கு மேம்பட்ட பலதையும் அவள் ஏற்றுக்கொண்டாள் . ஒவ்வொரு சந்தோசமாக இழந்து வருவதே வாழ்க்கை என்று ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறதுதானே. அவருடைய விஷயத்தில், சந்தோசங்கள் கூட அல்ல, வெறும் முன்னேற்றச் சாத்தியப்பாடுகள், காரணத்தோடோ, காரணமற்றோ அவளும் அவள் கணவனும் பொறுத்துக்கொண்ட அந்த வலியின் முடிவற்ற அலையோட்டங்களை அவள் நினைத்துக்கொண்டாள். கற்பனைக்கெட்டாத விதங்களில் அவளது பையனைத் துன்புறுத்தும் கண்ணுக்குப் புலனாகாத பூதங்கள்; கணக்கிட முடியாத அளவில் இந்த உலகம் பெற்றுள்ள மென்மை, அந்த மென்மையின் தலைவிதி . ஒன்று, இது நசுக்கப்பட்டோ வீணாக்கப்பட்டோ இருக்கும் அல்லது பைத்தியத்துள் உருமாற்றப்பட்டு விளங்கும். துடைக்கப்படாத மூலை முடுக்களில், தங்களுக்குள் பாடி முனகும் ஆதரவற்ற குழந்தைகள், விவசாயியிடமிருந்து ஒளித்துவிட முடியாத அழகான விதைகள், பூதாகரமான இருட்டைப்போல், அவனது குரங்கு போன்ற தோற்றம் கூனி வளைந்து தோன்றி, தனது தடத்தில் கசங்கிய மலர்களை விட்டுச் சென்றதை, கையறு நிலையில் கவனித்திருத்தல்.


நடுநிசிக்கு மேலானபோது, அவளது கணவர் முனகுவது புழங்கும் அறைக்குக் கேட்டது. பின்பு அவர் தடுமாறிக்கொண்டே உள்ளே வந்தார். தனது இரவு உடைக்கு மேல் பழைய ஓவர்கோட் அணிந்திருந்தார் . மென்நீலக் குளியறை ஆடையைவிட, அஸ்ட்ரகன் ஆட்டு ரோமத்தாலான காலரோடு கூடிய இதைத்தான், அவர் மிகவும் விரும்பித் தேர்ந்தெடுத்து அணிவார்.


“எனக்குத் தூங்க முடியவில்லை” என்று சத்தம் போட்டார்.

“ஏன்? எதனால் தூங்க முடியவில்லை? மிகவும் களைத்துப் போயிருந்தீர்களே?” என்று கேட்டாள். 

“நான் செத்துக்கொண்டிருப்பதால், என்னால் தூங்க முடியவில்லை” என்று சொன்னவாறு, மஞ்சள் போன்ற இருக்கையில் சாய்ந்து படுத்தார்

“வயிற்றுக் கோளாறா? டாக்டர் சோலோவை அழைக்கட்டுமா?“

“டாக்டர் வேண்டாம். டாக்டர் வேண்டாம்” என்று முனகிய அவர், “டாக்டர்கள் நாசமாய்ப் போகட்டும். அங்கிருந்து அவனை நாம் உடனே வெளியே கொண்டுவர வேண்டும். இல்லாவிட்டால் நாம்தான் பொறுப்பாளிகளாவோம். பொறுப்பாளிகள்” என்று திரும்பத் திரும்பச் சொன்னார். இரு பாதங்களும் தரையில் பட தன்னைச் சுருட்டிக்கொண்டு எழுந்து, உட்கார்ந்த நிலையில் தனது முஷ்டியால் முன்நெற்றியை அடித்துக்கொண்டார். 

“நல்லது, நாளை காலையில் அவனை வீட்டுக்குக் கொண்டு வந்துவிடுவோம்.”

“கொஞ்சம் டீ இருந்தால் நன்றாயிருக்கும்” என்று சொன்ன அவள் கணவர், பாத்ரூமுக்குத் திரும்பவும் சென்றார். 

அவள் கஷ்டப்பட்டுக் குனிந்து திரும்பவும் எடுக்கையில், சில சீட்டுகள், ஓரிரு போட்டோக்கள், இருக்கையிலிருந்து தரைக்கு நழுவின; ஹாட்டின் நேவ், ஸ்பேடின் ஒன்பது, 

ஸ்பேடின் எஸ் மற்றும் எல்ஸாவும் அவளது அருவருப்பான சொகுசுக்காரனும்.


அவர் உற்சாகத்தோடு திரும்பி, உரத்த குரலில் சொல்லிக்கொண்டார்.

“நான் எல்லாவற்றையும் திட்டமிட்டுவிட்டேன். நாம் அவனுக்குப் படுக்கையறையைக் கொடுத்துவிடுவோம். நம் இருவரில் ஒருவர் மாறி மாறி, பாதி இரவை அவனருகில் கழிப்போம். மற்றொருவர் இந்தமஞ்சத்தில் படுப்போம். வாரத்தில் இரண்டு தடவையாவது டாக்டரை வந்து அவனைப் பார்க்கச் செய்வோம். இளவரசன் என்ன சொல்வான் என்பது பிரச்சினையே இல்லை; எப்படியும் அவன் அதிகம் ஒன்றும் சொல்லமாட்டான். “ஏனென்றால் இது மேலும் படுசிக்கனமாகிவிடுகிறதல்லவா?”

டெலிபோன் ஒலித்தது. அவர்களது டெலிபோன் ஒலிப்பதற்கு இது வேளையற்ற வேளை. அவரது இடது செருப்பு கழன்றுபோய் விழ, தன் குதியிலும் விரல் நுனிகளிலும் அறையின் மத்தியில் நின்றுகொண்டு, குழந்தைத்தனமாக பல்லற்ற வாயை அகலத்திறந்தபடி, செருப்புக்காகத் துழாவினார் அவர். அவரைவிட அவளுக்கு ஆங்கிலம் அதிகம் தெரியும் என்பதால் வழக்கம்போல் அவள்தான் எடுத்துக் கேட்டாள்.


“சார்லியிடம் நான் பேச முடியுமா?”ஒரு பெண்ணின் கம்மலான சின்னக்குரல் கேட்டது. 

“எந்த நம்பர் உங்களுக்கு வேணும்? இல்லை, இது சரியான நம்பர் இல்லை.”

ரிசீவரை மெதுவாகத் தொங்கவிட்ட அவளது கரம், தனது வயதாகிச் சோர்ந்த இதயத்துக்குச் சென்றது. “இது என்னைப் பயமுறுத்திவிட்டது” என்றாள்.

அவர் சட்டெனப் புன்னகைத்துவிட்டு, உடனே தனது கிளர்ச்சி கொண்ட தனிமொழியைத் தொடர்ந்தார்.


விடிந்ததும் போய் அவனைக் கூட்டிக்கொண்டு வருவார்கள். கத்திகள் பூட்டிய இழுப்பறைக்குள் பாதுகாக்கப்பட வேண்டும். அவன் தனது மோசமான நிலையில் கூட, மற்றவர்களுக்கு எந்தப் பயத்தையும் விளைவித்ததில்லை.


டெலிபோன் இரண்டாவது தடவையாக ஒலித்தது. அதே அவசரமான, தொனியற்ற இளங்குரல் சார்லியைக் கேட்டது.


“நீங்கள் தவறான நம்பர் வைத்திருக்கிறீர்கள். நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதைச் சொல்லுகிறேன் . ஜீ«££வுக்குப் பதிலாக 0 என்ற எழுத்தைச் சுழற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.”


எதிர்பாராத நடுஇரவு டீ பார்ட்டியில் அவர்கள் அமர்ந்தனர். பிறந்தநாள் பரிசு மேஜை மேல் வீற்றிருந்தது. அவர் சத்தமாக உறிஞ்சிக் குடித்தார். முகம் சிவந்துவிட்டது. அவ்வப்போது சர்க்கரையை நன்றாகக் கரையச் செய்ய, கிளாசை உயர்த்தி வட்டமாய்ச் சுழற்றினார். அவரது வழுக்கைத் தலையின் பக்கவாட்டிலிருந்து பெரிய மச்சம் இருக்கும் அந்த இடம் நரம்பு புடைத்து எடுப்பாகத் தெரிந்தது. அன்று காலையில் அவர் ஷேவ் செய்திருந்தாலும், அவரது முகவாயில் வெள்ளி முளைகள் தெரிந்தன. அவள் இன்னொரு கிளாஸ் டீயை ஊற்றியபோது அவர் தமது கண்ணாடியை அணிந்துகொண்டு மஞ்சள், பச்சை சிவப்பில் பிரகாசிக்கும் சிறு ஜாடிகளை, சந்தோசத்தோடு மறுபடியும் பரிசீலிக்கலானார். அவரது தடுமாறும் ஈர உதடுகள், அவற்றின் லேபல்களை உச்சரித்துப் பார்த்தன. அப்ரிக்காட், திராட்சை, பீச் பிளம், குன்ஸ்... அவர் காட்டு ஆப்பிளை உச்சரிக்க முயன்று கொண்டிருந்தபோது, மறுபடியும் டெலிபோன் மணி அடித்தது.


விளடீமர் நபக்கவ், அமெரிக்கா.


பின்நவீனத்துவத் தலைமுறையின் ஆதர்சனங்கள் போர்ஹே, நபக்கவ். போர்ஹே சிறுகதையிலும், நபக்கவ் நாவல்களிலும் சாதனை படைத்தவர்கள்.


1899இல் பீட்டர்ஸ்பர்க்கில் பிறந்தவர் நபக்கவ். 1919 போல்ஷ்விக் புரட்சிக் காலத்தில், அவரது குடும்பம் ஜெர்மனிக்குத் தப்பித்துச் சென்றது. டிரினிட்டி கல்லுரியில் பிரஞ்சு , ருஷ்ய இலக்கியம் கற்ற நபக்கவ். பெர்லினிலும் பாரிசிலும் வசித்தார். பாரிசிலிருந்தபோது என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கினார். 1940இல் அமெரிக்காவுக்கு வந்தார். கல்லூரிகளில் இலக்கியம் போதித்தார். லொலீதா (1955) நாவலின் மகத்தான வெற்றிக்குப் பின் முழுநேர எழுத்தாளரானார். ஸ்விட்சர்லாந்தில் வாழ்ந்து 1977இல் அங்கேயே மறைந்தார்.


இருபதாம் நூற்றாண்டின் மகத்தான வசன நடையாளர் நபக்கவ். ஷேக்ஸ்பியர், ஜாய்ஸுக்குப்பின் ஆங்கிலத்தைச் சிறப்பாகக் கையாண்டவராகப் புகழப்பட்டவர். 17 நாவல்கள் (ருஷ்யனிலும் ஆங்கிலத்திலும்) 5 சிறுகதைத் தொகுதிகள் மற்றும் நாடகம், திரைநாடகம், சுயசரிதை, விமர்சனத் தொகுதிகள், மொழிபெயர்ப்புகள் என்று ஏராளமாகப் படைத்துள்ளார் நபக்கவ். அவரது லொலீதா, பேல் ஃபயர், அடா போன்ற நாவல்கள் பின்நவீனத்துவ எழுத்துக்களுக்கு ஆதர்சனங்கள்.


(‘சிர்கா‘ 1924. ருஷ்ய மொழியில் இருந்து ஆங்கிலத்தில், திமித்ரி நபொகோவ்.)


குறிப்பு :

கனவு சார்ந்த மறுகரை வாழ்க்கையை ஒரு போர்ப் பின்னணியில் சொல்ல வருகிறார். விவரணைகள் பெரும்பாலானவை தமிழில் எடுபடா அளவிலேயே இருந்தன என்றாலும் முடிந்தவரை கொண்டுவர முயற்சி செய்தேன். இன்றைய தமிழ் புனைகதை எழுத்தில், ஒரு காற்புள்ளி அரைப்புள்ளிக்குக் கூட மொத்தக் கதையில் தொடர்புடன் கவனக் குவிப்புடன் எழுத வேண்டி யிருக்கிறது. யாரை வர்ணித்தாலும் உடைகளை வர்ணிப்பது அங்கத்திய வர்ணனை. காதல் வயப்பட்டவன், சாப்பிடப் போகையில் பஜாரில் வேசிகள் நடமாட்டத்தை பார்க்கிறதாக எல்லாம் விவரங்கள்.


லயம் இதழ், சங்கேதங்களும் குறியீடுகளும் (தமிழாக்கக் கதைகளின் தொகுப்பு), பிரபஞ்சகானம் (தொகுப்பு-தளவாய் சுந்தரம்) ஆகியவற்றில் பிரசுரமானது.


Signs and Symbols - நபக்கவ்

1899ல் பீட்டர்ஸ்பர்க்கில் பிறந்தவர் நபக்கவ். 1919 போல்ஷ்விக் புரட்சிக் காலத்தில் அவரது குடும்பம் ஜெர்மனிக்குத் தப்பித்து சென்றது. டிரினிட்டி கல்லூரியில் பிரஞ்சு, ருஷ்ய இலக்கியம் கற்ற நபக்கவ், பெர்லினிலும் பாரிசிலும் வசித்தார். பாரிசிலிருந்தபோது Sirin என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கினார். 1940ல் அமெரிக்காவுக்கு வந்தார். கல்லூரிகளில் இலக்கியம் போதித்தார். 'லோலீதா' (1955) நாவலின் மகத்தான வெற்றிக்குப் பின் முழுநேர எழுத்தாளரானார். ஸ்விட்சர்லாந்தில் வாழ்ந்து 1977ல் அங்கேயே மறைந்தார்.

அவரது முக்கியமான சிறுகதை Signs and Symbols. இதை நான் தமிழாக்கம் செய்திருக்கிறேன். இந்தக் கதையை கால சுப்ரமணியம் தன்னுடைய லயம் இதழில் 1995ல் மொழியாக்கம் செய்திருந்தார். பின்னர் அது புத்தகமாகவும் வெளிவந்தது. நான் அவருடைய மொழிபெயர்ப்பையே guideஆகக் கொண்டு இம்மொழிபெயர்ப்பைச் செய்திருக்கிறேன். சந்தேகம் ஏற்படும் இடங்களில் அவருடைய மொழிபெயர்ப்பையே refer செய்தேன். இதுதான் நான் முதல்முறையாகச் செய்யும் மொழிபெயர்ப்பு முயற்சி. எப்படி இருக்கிறது என நீங்கள்தான் சொல்ல வேண்டும்!

சங்கேதங்களும் குறியீடுகளும் - விளாடிமிர் நபக்கவ்

I

மனநிலை குன்றிய இளைஞனுக்கு பிறந்த நாள் பரிசாக என்ன தருவது என்ற பிரச்சனை இந்த நான்கு வருடங்களில் நான்காவது முறையாக அவர்களுக்கு வந்திருக்கிறது. அவனுக்குத் தனிப்பட்ட விருப்பங்கள் எதுவும் கிடையாது. மனிதனால் உருவாக்கப்பட்ட அனைத்தும் அவனால் மட்டுமே உணரக்கூடிய தீமையாகவோ அல்லது அவனது சூட்சும உலகத்தில் எந்த அர்த்தமுமற்ற சொகுசகளாகவோ தோன்றின. அவனைப் பயமுறுத்தக்கூடிய அல்லது அவனைக் காயப்படுத்தக்கூடிய பொருட்களை நீக்கிவிட்டு (உதாரணத்திற்கு கூர்மையான எல்லாப் பொருட்களும் விலக்கப்பட்டவை), அவன் பெற்றோர்கள் சுவையானதும் எளிமையானதுமான ஒன்றைத் தேர்ந்தெடுத்தார்கள் : பத்து சிறிய ஜாடிகளில் பத்து பழப்பாகுகள் கொண்ட கூடை.

அவன் பிறக்கும்போது அவர்களுக்குத் திருமணமாகிப் பல வருடங்கள் ஆகியிருந்தன. அதற்குப் பிறகும் பல வருடங்கள் கடந்து போனதில் அவர்களுக்கு மிகுந்த வயதாகிவிட்டது. அவளது நரைத்த கூந்தல் கலைந்துகிடக்கிறது. மலிவான கறுப்பு நிற ஆடைகளை அணிந்திருந்தாள். அவள் வயதையொத்த மற்ற பெண்களை (உதாரணத்திற்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் - முகம் முழுக்க பிங்க் சாயம் பூசிக் கொண்டும், தொப்பியில் ஓடைப் பூங்கொத்துகளைச் சூடிக் கொண்டிருக்கும் திருமதி ஸோல்) போலில்லாமல் வசந்த காலத்தின் குறைந்த வெளிச்சத்திற்கு தன்னுடைய பூச்சுகளற்ற வெளுத்த முகத்தை அளித்தாள். அவளுடைய கணவர் - பழைய கிராமத்தில் ஓரளவு வெற்றிகரமான வியாபாரி - இப்போது பச்சை அமெரிக்கனான 40 வயதுடைய தன்னுடைய சகோதரன் ஐஸக்கைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தது. அவர்கள் அவனை அரிதாகவே பார்க்க முடிந்தது. அவனுக்கு ‘இளவரசன்’ என்ற பட்டப்பெயரை வைத்திருந்தார்கள்.

அந்த வெள்ளிக் கிழமை எல்லாமே தவறாய்ப் போயிற்று. மின்சாரம் தடைப்பட்டு பாதாள ரயில் இரண்டு நிலையங்களுக்கிடையில் நிற்கவேண்டியதாகிவிட்டது. கால் மணிநேரத்திற்கு இதயத் துடிப்புகளையும் தினசரிகளின் சடசடப்பையும் தவிர வேறொன்றும் கேட்கவில்லை. அவர்கள் அடுத்து ஏறிச் செல்ல வேண்டிய பேருந்து வெகுநேரம் காத்திருக்கச் செய்தது. அது வந்த போது தொண தொணவென்று பேசிக் கொண்டிருக்கும் உயர் நிலைப் பள்ளிச் சிறுவர்கள் பேருந்தை அடைத்திருந்தனர். சானிடோரியத்திற்குச் செல்லும் பழுப்பு நிறப்பாதையில் அவர்கள் நடந்து கொண்டிருந்தபோது கடுமையான மழை பெய்தது. அங்கே அவர்கள் மறுபடியும் காத்திருந்தனர். வழக்கமாக இருக்கும் அறையில் அவன் இல்லை (அவனுடைய சோகமான முகம் சவரம் செய்யப்படாமல், பருக்களுடன், ஊதிப்போய், குழப்பங்களுடன் இருக்கும்). அவர்களுக்குத் தெரிந்த ஆனால் பொருட்படுத்தாத தாதி ஒருத்தி ஒருவழியாகக் கடைசியில் வந்தாள். அவன் மறுபடியும் தற்கொலைக்கு முயன்றதை பிரகாசமாக விவரித்தாள். இப்போது அவன் நன்றாக இருந்தாலும் அவனைப் பார்ப்பது இடைஞ்சலாக இருக்கலாம் என்றாள். அந்த அலுவலகம் கடுமையான ஆள் பற்றாக்குறையுடன் இருந்தது. அங்கே பொருட்கள் தவறிவிட வாய்ப்பிருப்பதால், தாங்கள் கொண்டுவந்த பரிசை அங்கே அலுவலகத்தில் வைக்காமல் அடுத்த முறை வரும்போது மறுபடி எடுத்து வர முடிவு செய்தனர்.

அவள் தன் கணவர் குடையை விரிக்கக் காத்திருந்து, பிறகு அவர் கைகளைப் பற்றிக் கொண்டாள். மனது சரியில்லாதபோது ஒருவிதமாக தன் தொண்டையை செருமும் பழக்கமுடைய அவர் இப்போதும் அப்படியே செருமிக் கொண்டிருந்தார். தெருவின் எதிர் சாரியிலுள்ள பஸ் நிறுத்தத்தை அடைந்ததும் தன் குடையை மூடினார். சில அடிக்களுக்கு அப்பால், ஆடி அசைந்து கொட்டிக் கொண்டிருந்த மரத்தின் அடியில், சேற்றில், சிறகற்ற சிறிய பறவையொன்று, பாதி உயிர் போய், பரிதாபமாக துடித்துக் கொண்டிருந்தது.

பாதாள ரயில் நிலையத்திற்கான நீண்ட பயணத்தில் அவர்கள் பேசிக் கொள்ளவேயில்லை. குடையைப் பிடித்திருந்த - வீங்கிய நரம்புகளும் பழுப்பு நிறப் புள்ளிகளும் உடைய - அவரது வயதான கரத்தைப் பார்க்குப்போதெல்லாம் அவளுக்கு அழுகை முட்டியது. மனதை மாற்ற சுற்று முற்றும் பார்த்தபோது லேசான அதிர்ச்சி அடைந்தாள். கருத்த கூந்தலோடும் அழுக்கான சிகப்பு கால் நகப் பூச்சுகளுடன் ஒருத்தி வயதான பெண்மணியின் மீது சாய்ந்து அழுது கொண்டிருப்பதைப் பார்த்து இவளுக்கு பரிதாபமும் ஆச்சரியமும் ஏற்பட்டது. அவள் யாரைப் போலிருந்தாள்? அவள் ரெபக்கா போரிஸோவானை நினைவூட்டினாள். அவளுடைய மகள் மின்ஸ்கில் சோலோவிசிக் ஒருவனை பல வருடங்களுக்கு முன் மணந்திருந்தாள்.

சென்ற முறை அவன் தற்கொலைக்கு முயற்சித்த போது - டாக்டரின் வார்த்தைகளில் சொன்னால் - அவனது உத்தி ஆகப் பெரிய கண்டுபிடிப்பாக இருந்தது. அவன் பறக்க முயற்சிக்கிறான் என்று பொறாமை கொண்டு பக்கத்து நோயாளி தடுக்காமலிருந்திருந்தால் அவன் முயற்சியில் ஜெயித்திருக்கக்கூடும். உண்மையில் தன்னுடைய உலகத்திலிருந்து ஒரு ஓட்டையைப் போட்டு அதன்மூலம் தப்பிவிட அவன் நினைத்திருந்தான்.

அவனது மனக் கற்பித முறைமைகள் ஒரு அறிவியல் மாத இதழில் விரிவான கட்டுரைக்கான விஷயமாகியிருந்தது. ஆனால் அதற்கு வெகு காலம் முன்பே அவளும் அவள் கணவரும் அந்தப் புதிருக்கு விடை கண்டுபிடித்திருந்தனர். ஹெர்மன் பிரிங்க் அதை Referential Mania என்றார். இம்மாதிரி அரிதான கேஸ்களில் நோயாளி தன்னைச் சுற்றி நிகழும் அனைத்தும் தன்னுடைய ஆளுமையும் இருப்பையும் மறைமுகமாகக் குறிப்பதாக நினைத்துக் கொள்கிறான். தன்னை மற்றவர்களை விட புத்திசாலியாகக் கருதிக் கொள்வதால் மற்ற நிஜ மனிதர்களை இந்தச் சதியிலிருந்து விலக்கிவிடுவான். அவன் எங்கு சென்றாலும் அதீதமான இயற்கை அவனை நிழல்போல் பின் தொடருகிறது. வெறித்த வானில் மேகங்கள், சிறிய சங்கேதங்களால், அவனைப் பற்றிய மிக விரிவான தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன. அவனுடைய மனதின் அடியாழத்தில் இருக்கும் நினைவுகள், அகர வரிசைக்கிரமமாக, இரவு நேரத்தில் சைகை செய்யும் மரங்களால் விவாதிக்கப்படுகின்றன. குமிழ்களும், கறைகளும், ஒளிப்புள்ளிகளும் அவன் இடைமறித்தாக வேண்டிய பயங்கரச் செய்திகளை, வடிவ மாதிரிகளைக் கொண்டிருக்கின்றன. எல்லாமே சங்கேத மொழி. எல்லாவற்றிலும் அவனே மையம். கண்ணாடி தளங்கள், அசைவற்ற குளங்கள் போன்ற ஒற்றர்கள் பற்றற்ற பார்வையாளர்களாக இருக்கின்றன. மற்றவை - கடை ஜன்னலில் இருக்கும் கோட்டுகள் போன்றவை - பாரபட்சமான சாட்சிகள், மனதளவில் இரக்கமற்று கொலைசெய்யத் துடிப்பவை. மறுபடியும் மற்றவை (ஓடும் நீர், புயல் போன்றவை) பைத்தியங்கள் என்று சொல்லக்கூடிய அளவுக்கு வெறிகொண்டவை. அவனைப் பற்றித் தவறான எண்ணம் கொண்டவை, அவனது செயல்களுக்கு புனைவான அதீத அர்த்தம் சொல்பவை. அவன் எப்போதும் கவனமாக இருந்தாக வேண்டும். அவனது வாழ்வில் ஒவ்வொரு கணமும் சங்கேதங்களை விடுவித்துக் கொண்டேயிருக்க வேண்டும். அவன் சுவாசிக்கும் இந்தக் காற்றும் அட்டவணைப்படுத்தப்பட்டு கோப்பிடப்பட்டது. அவனது தூண்டக்கூடிய ஆர்வம் அவனைச் சுற்றியிருப்பவைமீது மட்டுமே இருக்குமானால் - உண்மையில் அப்படியில்லை! - தூரம் அதிகரிக்க அவனைப் பற்றிய மோசமான அவதூறுகளும் எண்ணிகையிலும் சத்தத்திலும் அதிகரிக்கின்றன. அவனது ரத்த அணுக்களின் நிழலுருவங்கள், பல லட்சம் முறை பெரிதாக்கப்பட்டு, பரந்த வெளியெங்கும் இடம்மாறியபடி பறந்து கொண்டிருக்கின்றன. இன்னும் தொலைவில், நெடிதுயர்ந்த மலைகள் கிரானைட் கற்களாக இறுகியிருக்க, அவனது இருப்பின் மாற்ற முடியாத உண்மையைப் ஃபிர் மரங்கள் புலம்பிக் கொண்டிருக்கின்றன.

(தொடரும்)

இதன் ஆங்கிலப் பிரதியை இங்கே வாசிக்கலாம் :

http://www.angelynngrant.com/nabokov.html