தூஸாவின் மதுக்கோப்பையில் இந்தக் குறிப்பு வருகிறது
'ஸீரோ டிகிரி'யை முன்வைத்து
ஸீரோ டிகிரி நாவலை ஒரு பக்கம் வெகுஜன இதழ்களும் சுஜாதாவும் மலம் என்று திட்டிக் கொண்டிருந்த போது, ஃப்ரெஞ்ச் அமைப்பியல்வாதத்தை முறையாகப் பயின்ற எனது நண்பர்கள் அந்த நாவல் பற்றி வாயே திறக்கவில்லை. அது மட்டுமல்லாமல் ஆர். முத்துக்குமார் ஸீரோ டிகிரியை போலித் தத்துவ விசாரணை என்று விமர்சித்து காலச்சுவடு இதழில் ஒரு நீண்ட விமர்சனத்தை எழுதினார். அதற்குப் பதிலாக அதே இதழில் நான் எழுதிய விளக்கம் இது:
எனது நாவலைச் சூழ்ந்திருக்கும் புதிர்களை நானே விடுவிப்பதென்பது சற்று துரதிர்ஷ்டவசமானதுதான். இருந்தாலும் வேறு வழியில்லாமல் முத்துக்குமாருக்கு சில பால பாடங்கள்…
ரொனால்ட் சுகேனிக், வில்லியம் பர்ரோஸ், டொனால்ட் பார்த்தெல்மே போன்ற அமெரிக்க எழுத்தாளர்கள்; ஆலன் ராப்-க்ரியே, ஜார்ஜ் பெரக் போன்ற ஃபிரெஞ்ச் எழுத்தாளர்கள்; ஐரிஷ் எழுத்தாளரான ஃப்ளான் ஓ ப்ரையன்; கூப எழுத்தாளரான காப்ரேரா இன்ஃபாந்த்தே போன்ற படைப்பாளிகளோடு கூட, ரேமண்ட் ஃபெடர்மன், வில்லியம் காஸ் போன்றவர்களின் கட்டுரைகள் - இவைகளில் ஆழ்ந்த வாசிப்பும் ஈடுபாடும் இல்லாவிட்டால் 'ஸீரோ டிகிரி'யின் புதிர்ப்பாதைகளில் நுழைவது கடினம்.
பார்த்தெல்மேயின் Fragments
சுகேனிக்கின் self-reflexivity தன்மை கொண்ட surfiction
பின் நவீனத்துவத்தின் சில பல அம்சங்கள்: அதாவது, பின்நவீனத்துவ எழுத்தில் விவரணைகள் கிடையாது; உருவாக்கங்களும் கலைத்துப் போடுதலுமே உண்டு - உருவாகி உருவாகி மேகக் கூட்டங்களைப் போல் கலைந்து கலைந்து போகும் எழுத்து - 'நிரந்தரமான பிரஜைகள் இல்லாத ஒரு பெரிய நகரத்தைப் போல..' - அந்த உருவாக்கத்தின் இடையே பிரதியின் குறுக்கீடுகள் - எழுத்தை எழுத்தால் எழுதிக் கொண்டிருக்கிறது எழுத்து –
Suppression of text
Parafiction
Suspension of text
தங்கக் கோபுரங்களை விட்டு இறங்கி குப்பைத் தொட்டிகளையும் சாக்கடைகளையும் மலக்கிடங்குகளையும் சென்று கிளறும் Literature of trash
நாவலின் மையம், கரு, கதாபாத்திர உருவாக்கம், சரியான வருணனை, இலக்கிய நுட்பம் எல்லாவற்றையும் காலாவதியாக்கிவிட்ட Literature of Exhaustion
Leslie Fiedler அறிவித்த ’படைப்பாளியின் மரணம்’ கோட்பாடு
மேற்குறிப்பிட்ட இத்தனையும்தான் ஸீரோ டிகிரி என்ற நாவலின் அடியோட்டம் என்று சொல்லலாம். என்றாலும் அந்த நாவலை Historiographic metafiction என்று வகைப்படுத்துவதே பொருத்தமாக இருக்கும். வரலாற்றின் fictionalityயைச் சொல்வது என்பதே இதன் பொருள். வரலாற்றையே fiction-ஆகப் பார்க்கும் ஸீரோ டிகிரி நவீனத்துவ நாவல் அல்ல. அது ஒரு பின்நவீனத்துவ நாவல். பின் நவீனத்துவம் டி. ராஜேந்தர்களையும், ராம நாராயணன்களையும் Kitsch என்று எள்ளி நகையாடுவதில்லை. மாறாக, அது வெகுஜன கலாச்சாரத்தைத் தனது ஆய்வுகளுக்காக மிகுந்த அக்கறையோடு கவனிக்கிறது; விளையாட்டு, வெகுஜன சினிமா, சமையல், அலங்காரம், அரசியல் பேச்சு, கார்ட்டூன், வழிபாடுகள், கோஷங்கள், ஜாதித் தலைவர்களின் பேச்சு, விளம்பரம், டீவி சீரியல்கள் என்று சகலவிதமான வெகுஜன கலாச்சார வடிவங்களையும் தனது பிரதிகளில் ஆய்வு செய்கிறது. அவ்வகைப் பிரதிகளில் ஒன்றுதான் ஸீரோ டிகிரி.
ஆனால், இதையும் தாண்டி மானுட வாழ்வு, பிரபஞ்சத் தோற்றம், உயிர்களின் வாதை, சிருஷ்டியின் உள்ளீடாக உறைந்திருக்கும் வன்முறை, பேரழிவு என்பதையெல்லாம் கவிதையியல் சார்ந்த agonyயோடு பதிவு செய்கிறது ஸீரோ டிகிரி. நாவல் நெடுகிலும் - குறிப்பாக, கவிதைப் பக்கங்களில் - இதைக் காண முடியும். இதெல்லாம் ஒருவருக்கு போலி தத்துவ விசாரணை என்று தோன்றினால் நிஜ தத்துவ விசாரணையை அவர் தன்னளவில் தானே மேற்கொள்ள வேண்டியதுதான்! வேறு வழியில்லை!
தத்துவத்தை இலக்கியத்தில் அடையாளம் காண ஒருவருக்கு அடிப்படையில் இலக்கியம் தெரிந்தாக வேண்டும். இல்லாவிட்டால் இது ஒரு farce ஆகவும் கிறுக்கலாகவும்தான் தோன்றும். இலக்கியத்தோடு கூட, அதற்குள் உள்ள பிரிவுகளையும், நவீனத்துவம் - பின்நவீனத்துவம் இரண்டுக்குமான வித்தியாசங்களையும் கூட ஒருவர் கற்க வேண்டும்.
பல ஆண்டுகளுக்கு முன்பே ஆலன் ராப்-க்ரியே, Nathalie Sarraute போன்றவர்களால் விவாதிக்கப்பட்டு முடிந்துபோனவைகளைக் குறித்து எந்த அறிவும் இல்லாமல் என் மீது வசை பாடியிருக்கிறார் முத்துக்குமார். கதாபாத்திர உருவாக்க ஒழுங்குக்கு வேண்டுமானால் ஒருவர் Flaubert-ஐப் படிக்கலாம். அதற்கு மேல் தாண்டினால் இப்படித்தான் சிரமம் வரும்! மேலும், கதாபாத்திர உருவாக்க ஒழுங்கு என்பதெல்லாம் நுகர்வு கலாச்சாரத்தோடு தொடர்புடையது. இனிமேலும், பிரதி என்பது நுகர்பொருள் அல்ல. வாசகி தனது பிரதியைத் தானே உருவாக்கிக்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட வெளிகள்… அர்த்தங்களைத் தலைகீழாய்ப் புரட்டிப் போட்டு (subversion) அர்த்தமின்மையை (சூன்யம்) உருவாக்கும் வார்த்தைக் கூட்டங்கள்... Fragments... மொழிக்குள் சிறையுண்டு கிடக்கும் கதாபாத்திரங்களை விடுதலை செய்து களியாட்டம் போடும் ஒரு carnival… இது எல்லாம்தான் 'ஸீரோ டிகிரி'யில் நிகழ்கிறது.
’எழுத்து என்பது சாரு நிவேதிதாவுக்குக் குப்பைத் தொட்டி' என்கிறார் முத்துக்குமார். ஆனால் அந்த இடம்தான் சிலரது வாழ்விடமாக இருக்கிறது. அந்த இடத்தில்தான் நமக்கு 'உபயோகமற்ற' குழந்தைகளையும் வீசியெறிகிறோம். அப்படி வீசியெறியப்பட்டவர்களுள் ஒருவன்தான் முனியாண்டி. அவன் இந்த சமூகத்தின் மேல் செய்யும் குப்பை அபிஷேகம்தான் ஸீரோ டிகிரி என்று நான் உணர்வுபூர்வமாக படைப்புலக மனோபாவத்துடன் எழுதலாம். ஆனால் இப்படிப்பட்ட உணர்வுலகம் முத்துக்குமாருக்கு அந்நியமானது.
ஏனென்றால் அவந்திகாவின் கதையே அவருக்கு சிரிப்பை வரவழைக்கக் கூடியதாக இருக்கிறது! இது யாருடைய பிரச்சினை? ஹிட்லரின் நாஜி வதைக்கூடங்களின் ஆவணப் படங்களைப் பார்த்துக் கூட உவகையுடன் ஒரு ஜனசமூகமே சிரித்தது வரலாறு. வூடி ஆலனின் நகைச்சுவையும் கிண்டலும் முத்துக்குமாருக்கு அழுகையை வரவழைக்கலாம்! எத்தியோப்பியக் குழந்தைகளின் கண்களில் தெரியும் துக்கம் இவருக்கு கிச்சுகிச்சு மூட்டுவதாகக் கூட இருக்கலாம்!
மேலும், 'தமிழர்களுக்கு நவீன வாழ்க்கையின் சிக்கல்களே மேற்கத்திய நூல்கள் ஏற்படுத்திய சிக்கல்கள்தான்' என்கிறார் முத்துக்குமார்! கரிச்சான் குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம், லா.ச.ரா., அசோகமித்திரன், வண்ணநிலவன் போன்றவர்கள் தமது படைப்புகளில் முன் வைத்துள்ள மானுடச் சிக்கல்கள் எத்தகையவை என முத்துக்குமார் அறிவாரா? இவையெல்லாம் மேற்கத்திய நூல்கள் ஏற்படுத்திய சிக்கல்கள்தானா? தமிழின் மிக முக்கியமான சிறுகதைகளுள் ஒன்றான 'நீர்மை'யில் (ந. முத்துசாமி) வெளிப்படுவது எவ்வகையான சிக்கல்? உலகிலுள்ள மனித ஜீவன்களில், மிகக் கொடூரமாக ஒடுக்கப்பட்ட பிரிவுகளில் பிராமணப் பெண்ணின் உடலும் ஒன்று. இதுதான் 'நீர்மை'யில் வெளிப்படுவது. இப்படி ஒடுக்குதலுக்குள்ளான மற்றொரு பிராமணப் பெண்தான் அவந்திகா.
தமிழர்கள் சந்தித்த பிரச்சினைகள் எல்லாம் வெறும் கணவன் - மனைவி மோதல், சொத்துத் தகராறுகள்தான் என்கிறார் முத்துக்குமார்! இது தமிழர்கள் மீது மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனிதகுலத்தின் மீதே வைக்கப்படும் அவதூறு... இதற்கு நான் பதில் சொல்ல வேண்டாம்.
”சாரு நிவேதிதா பாலியல் சுதந்திரம் பேசுகிறார் எனப் பறைசாற்றப்பட்டு வந்திருக்கிறார்.” முத்துக்குமாரின் இந்தக் குற்றச்சாட்டு பொய். வெறும் வதந்திகளை அடிப்படையாகக் கொண்டு ஒருவர் இலக்கிய விமர்சனம் செய்யலாகாது. நான் பேசுவது 'பாலியல் சுதந்திரம்' என்று சொல்வது இதுவரைத்திய எனது இலக்கியச் செயல்பாடுகளைக் கொச்சைப்படுத்துவதாகும். பெரும்பத்திரிகைகளில் என்னை 'ஆபாச எழுத்தாளர்' என்று முத்திரை குத்துவதற்கும் இதற்கும் அதிக வித்தியாசம் இல்லை .
எனது எழுத்தின் அடியோட்டமாக இருப்பது பெண்ணியம். வரலாறு, அரசு, மொழி, கலாச்சாரம் அனைத்தும் ஆண் மையப் பார்வையால் கட்டமைக்கப்பட்டது என்பதால் இது எல்லாவற்றையும் பெண் மையப் பார்வைக்கு உட்படுத்துவதே எனது எழுத்து. இந்த அர்த்தத்தில் ஸீரோ டிகிரி நாவலையே நான் feminine text என்று சொல்லுவேன்.
பெண்களை முத்துக்குமார் சொல்வது போல் நான் ஒற்றைப் படிமத்தில் இணைக்கவில்லை. பல்வேறு விதமான பெண்மைகளையே பதிவு செய்திருக்கிறேன். முதல் அத்தியாயத்திலேயே பல்வேறுபட்ட வித்தியாசமான பெண் உடல்களை, பெண் உலகங்களை, பெண் கதைகளைத் தொகுத்திருக்கிறேன். ஒவ்வொரு 'செய்து கொண்டிருக்கலாமு'ம் ஒவ்வொரு கதை. பெண்களுடனான உறவு அருவருப்பானது என்றும் நான் சொல்லவில்லை. மாறாக, ஆண்களுடனான உறவே அருவருப்பானது என்கிறாள் நாவலின் வரும் ஒரு கதாபாத்திரமான ஷிரீன்.
இது பின்நவீனத்துவ காலம். இந்தக் காலம் ஒற்றைப் பிரதிக்கு எதிரான பன்முக வாசிப்பைக் கோரி நிற்கிறது. அதுபோல, ஒரு சமூகத்தின் வாசிப்பு என்பதும் பன்முகப் பிரதிகளையே எதிர்நோக்கி நிற்கிறது. 'தற்போது தமிழ்நாட்டில் ஜெனே போஸ்டர்கள் மேல் போர்ஹேஸ் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன' என்று வருத்தப்படுகிறார் முத்துக்குமார். இதை என்ன கோவில்பட்டி பஸ் ஸ்டாண்ட் சுவரிலா ஒட்டுகிறார்கள்? ஜெனே, போர்ஹேஸ் என்று ஒற்றைத் தலைவர்களை கோரி நிற்பது பின்நவீனத்துவ சமூகம் அல்ல. பின்நவீனத்துவ சமூகத்தில் - பின் நவீனத்துவ அறிவில் - ஜெனேவுக்கும் இடமுண்டு; போர்ஹேஸுக்கும் இடமுண்டு; ஜார்ஜ் பெரெக்குக்கும் இடமுண்டு.
இறுதியாக - ஸீரோ டிகிரி பற்றிய சில குறிப்புகளை தர முயற்சிக்கிறேன் - சூர்யா என்ற ஸ்கீஸோஃப்ரீனிக் எழுத்தாளனைச் சுற்றி தமிழ்நாடு, இந்தியா மற்றும் மூன்றாம் உலக நாடுகளின் அரசியல் கலாச்சார நிகழ்வுகள் இந்நாவலில் சிதறலாகப் பின்னப்பட்டுள்ளன. மனித வர்க்கத்தின் எல்லாவித வாதைகளுக்கும் தன்னையே மையமாகக் காணும் சூர்யா, பலவித நான்களாகப் பிரிந்து இந்த நாவலைத் தொகுப்பதன் மூலம் ஒருவகையில் சிதைந்து போன தன்னையே தொகுத்துக்கொள்கிறான்.
சிறைக்கூடங்கள், வதை முகாம்கள், சரித்திர கால போர்க்களங்கள், விபச்சார விடுதிகள், குடும்பம், ருவாந்தாவின் நிலப் பகுதி, இமயமலைப் பனிச்சிகர வெளிகள் என வெவ்வேறு தளங்களில் நிகழும் கதையானது, குரூரம் x சுகம் என்ற எதிரெதிர் துருவங்களுக்கிடையே விவரிக்கப்படுகிறது. மேலோட்டமான வாசிப்பில், சுவாரசியமான, குரூரமான செய்திகளின் தொகுப்பாகவும், நிர்வாணப் பாலுறவுக் கதைகளாகவும் பின்னப்பட்டிருக்கும் ஸீரோ டிகிரி சூர்யாவை சூன்யத்தை தர்சிக்க வைக்கிறது. அந்த சூன்ய தர்சனத்தில் சூர்யாவிடம் மீந்து நிற்பது அவனுடைய மகளும், அவளுக்கான கவிதைகளுமே!
காலச்சுவடு
ஏப்ரல் - ஜூன் 1999
***********************************************************************
http://www.padippakam.com/document/kalachuvadu/kalachuvadu_024.pdf
ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா ::
வெளியீடு : கிரணம்
63-பி, திரு.வி.க. தெரு, போஸ்டல் ஆடிட் காலனி சின்மயா நகர், சாலிகிராமம்
சென்னை 600 098 . பக்.240 ; விலை ரூ. 100 (1998)
மதிப்புரை ஆர். முத்துக்குமார்
சாரு நிவேதிதாவின் விக்டோரிய சநாதனம்
சாரு நிவேதிதாவின் விக்டோரிய சநாதனம்
ஓம் எனும் சொல் நான்தான் ..... ஆண்களின்
ஆண்மையும் நான்தான்.
(பகவத்கீதை – சுவாமி நிகிலானந்தா)
'எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும்' முதலாக தற்போது 'ஸீரோ டிகிரி' வரை சாரு நிவேதிதா பாலியல் சுதந்திரம் பேசுகிறார் என பறைசாற்றப்பட்டு வந்திருக்கிறார். இதைத் துவக்கிவைத்தவர் பிரேம், உதாரணமாக அவர் எழுதிய சுயப் பிரஸ்தாப் ஆசிரிய வழிபாட்டு முன்னுரையைச் சொல்லலாம். ('எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும்' சாரு நிவேதிதா, கிரணம் வெளியீடு, 1989) ஹென்ரி மில்லரைப் பற்றி கார்ல் ஷபீரோ எழுதிய விமரிசனத்தில் "He is screamingly funny, without Imaking fun of sex" என்றார். சரியான வருணனைகள், கவித்துவத்தின் உச்சம் இவற்றைக் கொண்டதாயும் பாலியல் குறித்த எந்தவித இழிநகைப்புக்கும் இடமில்லாததாகவும் அவருடைய எழுத்து உள்ளது என்று புகழ்ந்தார். ஆனால் சாரு, ஹென்ரி மில்லரின் எந்தவிதமான கறார் நோக்கங்களுக்காகவும் எழுதுபவர் அல்ல. எழுத்து என்பது சாரு நிவேதிதாவிற்கு அவர் பிரகடனப்படுத்தும் அல்லது இழிவுபடுத்தும் 'கண்ட்' போலவே மிகப் பெரிய குப்பைத் தொட்டிதான். குப்பைத் தொட்டியில் நாம் வீணாகப்போவதையும் உபயோகமற்றவைகளையும் கொட்டுகிறோம். அதுபோலவே சாருவும் வீணானதையும் உபயோகமற்றதையும் வாசக சுதந்திரத்தின்மேல் குப்பர்பிஷேகம் செய்கிறார். அவரது கருத்துப்படி, பாலியல் - பெண்களுடனான உறவு எல்லாம் பூஜ்யம் டிகிரிதான் - சூனியம் தான், அருவருப்புதான், வாசகன் இவைகளே சலிப்புத் தனா மையுடன் அணுகவேண்டும் என்ற குட்டி பகவத்கீதை உப தேசம் வேறு. ஆனாலும் அவருக்கே பாலியல் என்பது அருவருப்பான விஷயமாகத்தான் இருக்கிறது. இந்தக் கருத்து விக்டோரியா காலத்து சுத்த சாந்நித்ய சநாதனம் என்பது இவருக்குப் பிடிபடவேயில்லை .
நாவலின் முதல் பகுதியில் வாசுகி 'செய்துகொண்டிருக்கலாம்' என்று ஆரம்பித்து வரும் பகுதிகளில், பெண்களின் இயற்கையான விஷயங்களான குப்புறப் படுத்துக்கொள்வது, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி போன்றவை மிகக் கேலியாகவும் அருவருப்புத் தன்மையுடனும் சித்திரிக்கப்பட்டுள்ளன. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், பெண்களை ஒட்டுமொத்தமாக்கி, சூட்சுமமாக்குகிறார். பல்வேறு வித்தியாசமான பிரத்தியேக அடையாளம் உள்ள பெண்கள் ஒரே படிமத்தில் இணைக்கிறார். உதாரணம் :" , தொண்ணூறு தையல் மிஷின்களின் ஒசைக்கிடையே அமர்ந்தபடி, பாதத்தின் துரித அசைவுகளுக்கேற்ப தொடையுடன் தொடை உரசி பெரு முச்சு விட்டுக் கொண்டிருக்கலாம் ..." " , . நீலப்படத்திற்காக ... ஆணுறுப்பு உள் தொண்டைக்குள் இறங்கி சுவாசக் குழாயை அடைத்து, மிருக சப்தங்களை எழுப்பிக்கொண்டிருக்கலாம்". மேற்சொன்ன இந்த இரு சந்தர்ப்பங்களில் இருவேறு முதலாளித்துவ உழைப்புப் பிரிவினைகள், ஒன்றுபடுத்தப்படு கின்றன. வாசுகி என்ற ஒற்றைச் சொல்லில் உழைப்புப் பிரிவினை மற்றும் அடையாள வித்தியாசங்களை அடைக்க முயல்கிறார் சாரு.
சாரு நிவேதிதாவுக்கு பூஜ்யம் - சூனியத்தின் குறியீடு. சிருஷ்டி - சூனியம் அல்லது மாயை, இந்தப் போலித் தத்துவ சமன்பாடுகளுக்கு இணைமாறான வடைசுட்டு விற்கும் பெண்ணிற்கும் பாத்திர ஓட்டை அடைக்கும் ஆண் வியாபாரிக்கும் இடையிலான உரையாடல்:
அவன்: என்னா இது ஒன்னோட சாமான்ல இவ்ளோ பெரிய பொத்தல்
அவள் : இவ்ளோ பெரிய பொத்தலை அடைக்கும் சாமான் உங்கிட்ட இல்லியா? மேற்கண்ட உரையாடலில் ஏன் பாத்திர ஓட்டை அடைப்பவன் ஆண்? வடைசுட்டு விற்பவள் பெண்? பெண்குறி ஆண்குறியில்தான் திருப்தி அடையும் என்ற லிங்க ஆட்சி பெண்ணியவாதிகளின் கவனத்திற்குரியது. மேலும் சில்லறை வியாபாரம் செய்யும் அடித்தட்டு மக்களின் பாலியல் மொழி கொச்சைப் படுத்தப்படுவது நிறப்பிரிகையின் கவனத்திற்குரியது. நாவலில் இதுபோன்ற சந்தர்ப்பங்கள் ஏராளமாக இருக்கின்றன.
முனியாண்டியின் பாலியல் லீலைகள் கவனமாக படர்கையில் உரையாடப்படுவதால் அந்தப் பகுதிகள் எல்லாமே சாரு நிவேதிதாவின் சுயபாலியல் ஒடுக்கத் தப்பித்தல், மத்தியதர வர்க்கப் பெண்களின் மேல் அவருக்கிருக்கும் ஏக்கம், பாலியல் வக்திர அராஜகமாக உருவெடுக்கிறது. பெரும்பாலும் பெண்களின் உறுப்பு பண்டமாகவே அணுகப்படுகிறது. சக எழுத்தாளர்கள் பணம் பண்ணும்போது சாரு நிவேதிதா செக்ஸ் பண்ணுகிறார். தன் ஆண்மையை, பெண்குறியை வஞ்சகமாகப் பிடுங்குவதன் மூலமாக நிலைநாட்டுகிறார். மேலும் பாலியல் செயல்பாட்டின் பல்வேறு நிலைகளை விளக்கும் சாரு, சுக்கிலத்தம்பம் குறித்த தேவையைக் குறிப்பிடுகிறார். சுக்கிலம் என்பது பணம் (காலம் அல்லது சக்தி). அது போற்றிப் பாது காக்கப்பட வேண்டிய பொக்கிஷம். இது போன்ற மலிவான கருத்துகளை ஸ்டீபன் மார்க்ஸ் என்ற விமரிசகர், 'தி அதர் விக்டோரியன்ஸ்' என்ற நூலில் கீழ்க்கண்டவாறு சாடுகிறார் :
விக்டோரியா காலத்து ஆண்கள், அல்லது அவர்களுள் சிலர், உச்சநிலையைச் செலவழித்தல்' என்ற அர்த்தம் கொண்ட கொச்சைச் சொல்லால் குறிப்பிடுவர். 'செலவழித்தல்' என்பதில் ஒரு பொருளாதாரப் பாதுகாப்பற்ற தன்மையும், குறைந்த பாத்தியதையும் அடங்கியிருக்கின்றன. இங்கே, 'விந்து" என்பது பணம், அல்லது காலம் அல்லது சக்தி என்று குறித்து, முதலாளித்துவ சிக்கன மனப்பான்மையைப் பிரதிபலிப்பதாகி, சேமித்து தவக்கப்பட வேண்டியது என்று அர்த்தங்களைக் கொண்டிருக்கிறது." (கேட் மில்லட்டின் "செக்ஷவல் பாலிடிக்ஸ்' ப.417) விக்டோரியர்களுக்குச் சமமாக இங்கே பார்ப்பனர்களைக் குறிப்பதுண்டு, சாரு நிவேதிதாவின் புரட்சிப்பாலியல் சுதந்திரம், பாவம் கடைசியில் விக்டோரிய - பார்ப்பன - சநாதனம்தானா?
தி. ஜானகிராமனின் கதைகளில் வரும் பாலியல் உறவுகளில் பெண்களின் ஆகிருதி உயர்த்தப்பட்டு, ஆண் அதற்குச் சமமில்லாதவன் என்ற கற்பனாவாதத்திலும், இதுபோன்ற பெண் பாலியல் மீதான விக்டோரிய - பார்ப்பன வெறுப்பு உண்டு. புதுமைப்பித்தன் 'காஞ்சனை'யில், பெண் பைசாசமாக எதிர் கொள்ளப்படுவதில், இத்தகைய வெறுப்பு உண்டு. ஆனால் அந்தப் பாத்திரங்களில், ஆண் மனோவியலுக்கான தூல உட் குறிப்புகளைக் காணலாம். ஜி. நாகராஜன் வாழ்ந்த அசாதாரணமான வாழ்க்கையிலும் கூட, அவரது எழுத்துகளில் இத்த கையதான பாலியல் வெறுப்பு கிடையாது. இந்த விஷயத்தில், சாருவை ஜெயமோகனுடன் ஒப்பிடலாம், சாருவின் மத்தியதர பெண்கள் மீதான ஏக்கம் மற்றும் வெறுப்பு, ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவலின் சில பகுதிகளில் வரும் பாலியல் வக்கிரங்களின் வர்க்க ஜாதியடிப்படைகளை நீக்கிவிட்டால் அதற்குச் சமமாக வரும். இருவருக்கும் உள்ள கருத்து மாறு பாடு சாத்தியமானதே.
சாருவின் எழுத்தில் வெறும் பாலியல் மட்டும்தானா இருக்கிறது ? வேறு பகுதிகளே கிடையாதா? எனச் சீறும் ரசிகப் பெருமக்களுக்காக சில விஷயங்களைக் குறிப்பிட விரும்பு கிறேன். நாவலில் வரும் பல்வேறு பெயர்கள் சிறுபத்திரிகைக் குழுக்குறி சார்ந்த விஷயங்கள். அவந்திகாவின் கதையைப் படித்தபிறகு, 'நெஞ்சைப் பிழிய வைக்கும் சோகம்' வராமல் சிரிப்புத்தான் வருகிறது. "நெஞ்சைப் பிழியவைக்கும் சோகம்" ராமநாராயணன் மற்றும் டி. ராஜேந்தர் படங்களில் பெண்களை இயல்பாகச் சித்தரிக்க இயலாமையையும் அடிமைத்தனத்தையும் ஒத்தது. 'கிட்ச்' (Kitsch) என்ற உத்தியைச் சார்ந்ததாகும் இது. கிட்ச் அழகியல் மதிப்பீடுகள் அற்றது; மனித அறிவுசார் மதிப்பீடுகள் அற்றது; மந்தை உணர்வுகளுக்குத் தீனிபோடும் 'செண்டிமெண்டல்" மிகைப்படுத்தல்கள் எனலாம். ஒருபோதும் இவை இலக்கியமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதில்லை. சாருவுக்கு இலக்கியம் என்ற வார்த்தையே பாவகரமானதுதான்,
ஏனெனில் சிறுபத்திரிகைகள் மட்டும்தான் இதையெல்லாம் கட்டி மாரடித்துக்கொண்டிருக்கின்றன!
'மலிவான நகைச்சுவை' farce) கவலையற்ற சிரிப்பை வர வழைக்கும். இது அவந்திகாவைப் படிப்பதனால் மட்டுமல்ல, நாவல் முழுவதிலுமே நமக்குக் கிடைக்கிறது. அது சாரு கதையை, பாத்திரத்தைக் கையாளும் விதத்தினால் ஏற்படும் சிரிப்பு - சாருவின் இலக்கிய "நுட்பம்' சம்பந்தப்பட்ட சிரிப்பு.
'நான் - லீனியர்' எழுத்துமுறை என்பது தமிழில் ஒரு சௌகரியம்தான். ஒருங்கிணைப்பு சாத்தியமற்ற, கையாலாகாதான். மேற்கில் அவ்வாறு கிடையாது. பிரக்ஞைக்குட்பட்ட வாழ்க்கையின் நேர்க்கோட்டுத்தன்மை, முதலாம் உலகப் போருக்குப் பின் பெரிய அளவில் கேள்விக்குட்படுத்தப்பட்டது, அப்பொழுது டாடாயிசம் உருவாகி செயலாற்றும் தன்மையை எடுத்துக்காட்டுவதற்கு ஓர் உத்தியாக கலைத்துப்போடுதலைக் கையாண்டது. ஆழ்மனப்போக்குகள் ஒருபோதும் பிரக்ஞைக்குட்பட்ட நேர்கோட்டுத் தன்மையுடன் செயல்படுவதில்லை. ஆகவே டாடாயிசம், சர்ரியலிசம் சார்ந்த எழுத்துகள், நேர் கோடற்ற இலக்கிய எழுத்துமுறையை உருவாக்கின. இருபதாம் நூற்றாண்டின் சுரண்டலுக்கான போர்முறை, தமிழர்கள் தம் வாழ்வில் எதிர்கொள்ளாதது. இங்கே, மிஞ்சிப் போனால் கணவன் - மனைவி மோதல் (நளினி - சூர்யா தாம்பத்தியம் போல்), சொத்துத் தகராறுகள், அதனால் கொலை, இவ்வளவு தான். இதற்கெல்லாம் நான் - லீனியர் முறையைப் பயன்படுத்த முடியுமா? தமிழ் விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு நவீன வாழ்க்கையின் சிக்கல்களே மேற்கத்திய நூல்கள் ஏற்படுத்திய சிக்கல்கள்தான். நம் வாழ்வின் பிரத்தியேகமான சிக்கல்களை அதன் சாராம்சத்துடன் அணுகும் அல்லது எதிர்கொள்ளும் சுயதரிசனம் அவசியம். இதற்கு மோஸ்தர் விசிலடிச்சான் குஞ்சுகளாக இல்லாமல், விமரிசனப் பிரக்ஞையுடன் கூடிய வாசகதளம் பரவலாக்கப்படவேண்டும், தற்போது ஜெனே போஸ்டர்கள் மேல் போர்ஹே போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. இவைகளின் அவசியம் குறித்த விமரிசன பூர்வமான பிரக்ஞையுடன் இவைகள் வரவேற்கப்படவோ அல்லது நிராகரிக்கப் படவோ வேண்டும் என்பதுதான் நம் விருப்பம்,
ஆர். முத்துக்குமார்