Pages

Wednesday, August 01, 2018

பொய்த்தேவு - க நா. சுப்ரமண்யும் ::: ஆய்வு by சி சு செல்ப்பா :: எழுத்து 85 - 1966

http___www.tamildigitallibrary.in_admin_assets_periodicals_TVA_PRL_0000812_எழுத்து_1966_08-85


நான் இங்கு ஆய்வுக்கு எடுத்துக்கொண்டிருப்பது க நா. சுப்ரமண்யும் எழுதி இருக்கும் 'பொய்த்தேவு' என்கிற தமிழ் நாவல், அவரது நாவல்கள் புத்தகமாக வந்திருப்பவை பன்னிரெண்டு, மூன்று நான்கு நாவல்கள் கைப்பிரதிகளாக இருக்கின்றன என்று நினைக்கிறேன் அவர் ஒரு சிறந்த சிறுகதாசிரியர், விமர்சகரும்கூட. அவரது நாவல்களில் இது தலைசிறந்தது என்று கருதுவதால் அதை எடுத்துக் கொண்டிருக்கிறேன். தமிழ் நாட்டின் தஞ்சை ஜில்லா கிராமத்தின், வாழ்வுத் தரம் மட்டுமின்றி வாழ்வு முறையே கடைக்கீழ்த் தரமான ஒரு தெருவாசிகளிடையே ஊர்ப் பிரபலம் பெற்ற ஒரு போக்கிரிக்கும் அடங்காப் பிடாரி பெண்பிள்ளைக்கும் பிறந்த சோமு, சோம்சுந்தர முதலியார் ஆகி வாழ்ந்து சோமுப்பண்டார மாக முடிந்ததுவரை உள்ள ஒரு கால நீட்சி அடங்கிய வாழ்க்கை சரித்திரம் கொண்டது தான் 'பொய்த்தேவு'. நாவலின் பல்வேறு விசேஷத் தன்மைகளையும் ஆராயுமுன் நாவலின் கதையம் சத்தை சுருக்கமாக தெரிந்துகொண்டு விடுவது உபயோகமானது.

சாத்தனூர் ஒரு மாதிரிக்காட்டான (டிபிகல்) தமிழ் நாட்டு கிராமம். சகல ஜாதியார்களும் ஜாதிக்கேற்ற தொழில்களுடன், தொழில்களுக்கேற்ற மனப்போக்கு, குணம், பண்பு வாய்ந்து ஜாதிவாரியாகக்கூட தெருக்கள் உருவாகி, அவரவர் தனி அக்கறை, கூட்டு அக்கறைகளுக்கு ஏற்ப தங்கள் நிறைகுறைகளோடு ஊரை சிறப்பாக்கியும் குறைப்படுத்தியும் கூடி வாழ்ந்து வரும் ஒரு 'ஸெகுலர்' கிராமம், மேட்டுத் தெருவுக்கும் அங்கே இடம் உண்டு. வாழ்க்கைத் தரத்தில் அடிமட்டத்தில் உள்ள அந்த தெருவார்கள், தங்களைவிட உயர்ந்த மற்ற தெருவார்களுக்கு ஏவல் செய்து பிழைப்பது, குடிப்பது, திருடுவது, மிரட்டுவது, தடியடிக்காரியங்கள் செய்வது இப்படியாக தங்கள் பிழைப்பை நடத்திவருபவர்கள். அங்கே ஒரு பத்திரகாளித் தாய் வள்ளியம்மை, போக்கிரித் தகப்பன் கறுப்பன் ரத்தம் தனக்குள் ஓட, விதைக்கேற்ற சுரையாக தன் இஷ்டப்படி சாத்தனூர் வீதிகளில் திரிந்து அலைகிறான் தந்தையை இழந்து, தாயின் வளர்ப்பில், அந்த சிறு வயதிலேயே அந்த ஊர் எல்லைக்குள் சோமுவுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் அறிவின் எல்லைகளைத் தொடத் தூண்டுகின்றன. கனவுகள், ஆசைகள், லட்சியங்கள் என்று இன்னும் உருப்பெறாத லட்சியங்கள் பல அவன் உள்ளத்தில் துளிர்த்துவிட்டன. இதுக்கெல்லாம் மேலாக பணம் என்கிற தெய்வம் அவனை அந்த வயதிலிருந்தே ஆட்கொண்டுவிட்டது-அதன் சக்தியை அப்போதே ஊகித்துவிட்டான். அவன் முதல் ஆசையான சாயவேட்டி ஆசை பென்ஷனர் ரங்காராவ் வீட்டில் வேலைக்கு சேர்ந்ததிலிருந்து நிறைவேறி அது முதல் மேலே மேலே ஆசைகளுக்கும் கனவுகளுக்கும் இடம் கொடுக்கிறது. தாராள புத்தியிலும் தரும் சிந்தனையிலும் ஊறிப்போன ரங்காராவ் குடும்பத்துக்கு வந்த ஒரு கொள்ளை ஆபத்தை முன் யோசனையாலும், தைரியத்தாலும் தன் பதினோராவது வயதிலேயே தடுத்து அவர்களுக்கு செய்த உதவியின் விளைவாக அந்த குடும்பத்திலேயே ஒருவனாகி விட்டான். இந்த வாய்ப்பு அவனுடைய சிறு வயது கனவு கள் ஆசைகளை எல்லாம் பூர்த்தி செய்துவிட, இவை மறைந்த இடத்திலே ஆயிரம் ஆசைகள் தழைத்துவிட்டன, எழுதப் படிக்க ஆசைப்பட்டு, நாலு வருஷம் கற்று, போதும் என்று நிறுத்திக் கொண்ட சோமு, தன்னை போஷித்த ரங்காராவ் தம்பதிகள் இறக்கவும், அவர்கள் மகள் கங்காபாய் அவள் கணவன் சாம்பமூர்த்திராவ் ஆதரவில் தன் புதிய ஆசைகளுடன் வளர்கிறான், சோமுவின் தாயும் இறந்துவிட, இருபது வயதான சோமுவுக்கு சந்தர்ப்பம் பாலுணர்வுக்கும் வழிசெய்து விடுகிறது. மணமாகி ஒரு குழந்தைக்குத் தாயான, அவனைவிட மூன்று நான்கு வயது மூத்த பாப்பாத்திக்கும் சோமுவுக்கும் ஏற்படுகிற முறைபிசகான உறவு, மேட்டுத் தெருவில் பிறந்த சோமு அந்த தெருவுக்கே உரிய குணாதிசயங்களுக்கு ஏதோ ஓரளவு விதிவிலக்காக இருந்தாலும் அவனும் மேட்டுத் தெருக்காரன் என்பதை சுட்டிக்காட்டியது. இது முதல் பணத்தாசை போல பெண்ணாசையும் சோமுவின் வாழ்க்கையில் ஆட்சி செலுத்த ஆரம்பித்தது.

அவனது இந்த விபரீதப் போக்கை கண்ட சாம்பமூர்த்திராவ் அவனுக்கு ஒரு பெண்ணை மணம் செய்து வைத்தும் சோமு மீனாட்சியையும் மதிக்காமல் தன் வழியே போய்க் கொண்டிருந்தான். குடிவேறு சேர்கிறது. ஒரு குழந்தையை தந்துவிட்டு மீனாட்சி ஒன்பது வருஷத்தில் இறந்து விட குழந்தை நடராஜனுக்கு ஆதரவாக பாப்பாத்தியை சோமு வீட்டோடு சேர்த்துக்கொண்டு விட கணவனும் மனைவியுமாக வாழத் தொடங்கு கிறார்கள். 'கருப்பன் மகனா' இப்படி நல்ல பெயர் எடுத்தான் அன்று என்று அதிசயித்த ஊர்வாய் கள் 'கருப்பன் மகன்தானே, பின் வேறெப்படி" என்று உதட்டைப் பிதுக்கின, இந்த நிலைமைக்கு வந்துவிட்ட சோமுவை மீட்க எண்ணி, நன்றி உணர்ச்சியால் கடமை நினைவு கொண்டிருந்த சாம்பமூர்த்திராவ் தம்பதிகள் தாங்களே முதல் போட்டு சோமுவுக்கு மளிகைக்கடை வைத்துக் கொடுக்கிறார்கள்.

மளிகைக் கடை திறக்கப்பட்டதிலிருந்து சோமு புது மனிதன் ஆகிவிட்டான். வியாபாரமும் சம்பாதிப்புமே அவன் ஓரே லட்சியமாகிவிட் டன. சோமு சில வருஷங்களில் சோமசுந்தர முதலியாராக, ஊர்ப்பிரமுகர்களில் ஒருவராக ஆனது ஊருக்கே வியப்பு. 'சோமு சாதாரண ஆசாமி இல்லை' என்று பேச்சு, இனி, ஊருக்கு ரயில்வே ஸ்டேஷன் ஏற்பட அவர் முயற்சி எடுத்துக் கொண்டதிலிருந்து அவரது ஊர்ப்பொது வாழ்வு ஆரம்பமாகிறது. சோமசுந்தர முதலியாருக்கு அதிர்ஷ்டமா, சாமர்த்தியமா? தொட்டது துலங்கியது. கும்பகோணத்தில் ஒரு கடை, பாங்கியில் கணக்கு, இங்கிலீஷ் எழுதப்படிக்க கற்றுக்கொண்டது, வெளிநாட்டில் பணம் சம்பாதித்து ஊர் திரும்பிய அக்கரைப் பிள்ளையைப் பார்த்து நாகரிகம் கற்றுக்கொண்டது கூட்டாக பஸ் சர்வீஸ் அதைவிட்டு இன்ஷூரன்ஸ் ஏஜண்ட், கார் வாங்கிதானே ஓட்டியது. இப்படி முன்னேற் றம். பணம் அவரைத் தேடி வந்தது. இதுவரை யிலும் சாத்தனூர் மேட்டுத்தெரு வீட்டு நினைப்பு மாறாது இருந்தவருக்கு கும்பகோணத்துக்கு வீடு கட்டி குடிப்போகும் நினைப்பு எழுகிறது. சாத்தனூரில் நிலம் வாங்கிவிட்டால் தன் அடிமைத் தனத்தை நிலைநிறுத்திக்கொள்ள ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தில், நிலத்தைவிட பணமே சிறந்தது என்று அவர் முடிவுகட்டி இருந்ததில், அவர் ஒரு சாத்தனூர் மிராசுதார் ஆக விரும்ப வில்லை; ஆனாலும் மேட்டுத்தெரு வீட்டையும் விட விரும்பவில்லை சகோதர வியாபாரி ஒருவர் தூண்டிவிட்ட நகர வாழ்வு ஆசையும் உள்ளூர
அதே சமயம் புகைகிறது .

இந்த சமயம் தாராள மனப்பான்மைக்கும், தர்மத்துக்கும் பலியாகி சாம்பமூர்த்தி ராவ் சொத்தும் போய் மனைவியை இழந்து, மன உளைச்சலால் தடுமாறி தஞ்சாவூரில் நெறி தவறி அலையக்கண்ட சோமசுந்தர முதலியார் தன்னை ராயரோடு ஒப்பிட்டுக்கொள்கையில், அப்போதைக்கு வழுக்கி விழுந்தாலும் சேமித்து வைத் திருந்த ஆத்மபலம் ராயருக்கு எப்படியும் கை கொடுக்கும், அவரை காப்பாற்றும் என்று முடிவு கட்டி, தான் இன்னமும் பூரண மனிதராக ஆக முடியவில்லையே என்று நினைக்கிறார். ராயரின் குறைகளை தான் பின்பற்ற முடிந்தது. அவரது நிறைகளை தான் கடைப்பிடிக்க முடியவில்லை. ராயரை சந்தித்த இடத்தில் ஆத்ம பலம் முதலியாருக்கு இல்லாத நிலையில் பதினைந்து வருஷ இடைவெளிக்குப் பிறகு அந்த வயதிலும் பெண் மயக்கத்தில் விழுகிறார். தான் உறவு கொண்டி ரூந்த தாசி பாலாம்பாளை முதலியாருக்கு அறி முகப்படுத்திய ராயரின் ஆத்மா சீக்கிரமே சுய ஒளிபெற்று அவர் பாண்டுரங்க பக்தியில் தன்னை மறக்கப்போய்விட அவர் காட்டிய குழியில் விழுந்துவிடுகிறார் முதலியார். பணமும் பெண்ணும் பிசாசாக ஆட்ட முதலியார் மேலே மேலே புடியேறுகிறார். தன் காரியத்தை சாதித்துக் கொள்ள எதையும் செய்யத் தயாராக இருந்த ரங்காச்சாரியார் அவர் மனைவி கோமளவல்லி உறவு அவரை இன்னும் கீழே தள்ளுகிறது. குடி, சிகரெட் சேர்கிறது தொடர்ந்து அவரது வாழ்வில் அடுத்த கட்ட ஆரம்பம்-கதரில் ஸ்ட் உடை, வியாபாரிகள் மளிகை லிமிடெட் ஸ்தாபன மானேஜிங் டைரக்டர் பதவி, நிறைய சம்பளம், கும்பகோணத்தில் வீடு கட்டுதல், இதற்கிடையே தன் மகன் நடராஜன் உதவாக்கரையாக வளர்வது அவருக்கு தைக்கிறது,
இந்த சமயம் பாப்பாத்தி அம்மாள் இறந்து விட, சாம்பமூர்த்தி ராயரும் பண்டரிபுரம் போய் விடவே, பாப்பாத்தி மரணத்தால் மேட்டுத் தெருவுடன் தன்னை பிணைத்த முக்கிய தளை அறுந்து விட்டதாக எண்ணிய முதலியார் ராயர் போய் விட்டதுடன் சாத்தனூரருடன் தன்னைப் பிணைத்த கடைசித் தளையும் அறுந்துவிட்டதாக உணர் கிறார். மேட்டுத் தெருவிலிருந்து தனக்கு விடுதலை கிடைத்துவிட்டது ' இந்த சமயம் தான் கும்ப கோணம் வீடு பூர்த்தியாதி கிருகப்ரவேசம். முதலியார் கும்பகோண வாசி ஆகிறார். அவரது பக்கத்து பங்களாவிலே தாசி பாலம்பாள் சகோதரிகளுக்கு தனி பங்களா. பணமும் பெண்கள்மாக முதலியாரின் கும்பகோண வாழ்விடையே ஒரு தகவல் கிடைக்கிறது அவருக்கு . சாம்ப மூர்த்திரார் பண்டரிபுரம் போனதுமே பண்டரி நாதன் காலடியிலேயே உயிரை விட்டதாக கிடைத்த செய்தி - எதிர்பாராது வந்த செய்தி மனதை கலக்குகிறது.

இருந்தாலும் பணத் தெய்வம் அவருடைய சக்திகளை எல்லாம் ஒரு முகமாக இயக்கிக்கொண் டிருந்தது. பலனை நல்ல அறுவடை செய்து கொண்டே வந்தார். சாத்தனூரிலே சிறு வயதிலே நின்று நிதானித்து சிந்திக்க முடிந்த சோமசுந்தர முதலியாருக்கு இப்போதுதான் நின்று சிந்திக்க அவகாசம் கிடைத்தது. ஆசையும் கனவுகளும் லட்சியங்களும் அன்று ஓடின இதயத் திலே இப்போது ராக்ஷஸ ரூபம்கொண்டு சிந்தனைகள் மோதின. சாம்பமூர்த்திராயர் மரணம் முதல் அடி . அடுத்து அவர் மகன் நடராஜன் போக்கு. தகப்பனைப்போல பிள்ளை என்று ஊரார்
பேச்சு அவர் வரைக்கும் எட்டிவிட்டது: மேட்டுத் தெருவிலிருந்து வெகுதூரம் தான் வந்துவிட்டா லும் தன் வரையில் அவை அழியாமல் நிலைத்து விட்ட உண்மைகள் என்பதை அவர் உணர அவர் மகன் காரியங்கள் செய்துகொண்டிருந் தான். தான் எங்கு ஓடினாலும் தன் பழய இடத்திலிருந்து விடுதலை கிடைக்காது போல் பட் டது அவருக்கு. மனதில் ஓய்ச்சல் ஏற்படுகிறது. உடம்பிலும் தளர்ச்சியை உணருகிறார். தன் தோல்வி அவருக்கு படுகிறது ஆனால் சம்பாத்ய வேகம் மட்டும் குறையவில்லை கிரோஸின் ஏஜன்ஸி, பின் பெட்ரோல் ஏஜன்ஸி, சபாவோடு உறவு பிறகு மேலே மேலே திட்டங்கள் போட்டு வருகையில் யுத்தம் வந்துவிட, சம்பாத்ய வேகம் துரிதப்பட்டது. அந்த வேகத்திலே அரிசிக்கட்டுப் பாட்டு விதியை அவர் மீறிவிட்டதாக வழக்கு தொடரப்பட்டதும் தான் அவருக்கு மறுபடியும் நின்று சிந்திக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. தான் உறவு கொண்டிருந்த பெண்களுடன் தன் மகனே உறவு கொண்டிருந்ததை நேரிலேயே பார்த்து விட்டபோது அவருக்கு கண் இருட்டுகிறது; கண்ணும் திறக்கிறது. தன் சொத்தில் பெரும் பகுதியை சாத்தனூர் கோயிலுக்கு எழுதிவைத்து விட்டு மீதியை எப்படி எப்படியோ விநியோகித்து உயில் எழுதிவைத்து விட்டு தனக்கு அளிக்கப் பட்ட ஏழுமாத சிறை தண்டனையை அனுபவிக்கத் தயாராகிறார். அனுபவித்துவிட்டு வெளி வந்ததும் தான் தான் மேட்டுத் தெருவிலிருந்து விடுதலை பெற்ற உணர்ச்சி ஏற்படுகிறது அவருக்கு. சிறு வயதில் கேட்ட சாத்தனூர் கோவில் மணி காதுகளில் ஒலிப்பது போல் இருந்தது. தோளில் இருந்த துண்டும் அனாவச்யம் என்று எறிந்துவிட்டு இடுப்பில் நாலுமுழ கதர் வேஷ்டியுடனும் வயசால் துவண்ட உடலுடனும் உள்ளத்தில் கனிந் திருந்த சிந்தனைகளுடனும் கிழக்கு நோக்கி அதாவது தன் கிராமமான சாத்தனூருக்கு எதிர் திசையில் நடந்து சென்றார். கொஞ்ச நாள் கழித்து சோமு சுந்தர முதலியார், சோமுப் பண்டாரமாக சாலையோரத்தில் செத்துக் கிடந்தார். அவர் செத்துக் கிடந்த ஊரின் பெயரும் சாத்தனூர்தான், ஆனால் சோமு பிறந்த சாத்தனூர் இல்லை. எதிர் திசையில் உள்ள வேறு ஒரு சாத்தனூர். 'அந்த சாத்தனூரிலும் ஒரு மேட்டுத்தெரு இருந்தது' என்று கதை முடிகிறது.

இது தான் 'பொய்த்தேவு கதை. இந்த நாவலை நான் ஆராய முற்பட்டதில் இரண்டு காரணங்கள் இருக்கின்றன. தமிழில் முதல் நாவல் சென்ற நூற்றாண்டில் தோன்றினது முதல் இன்று பத்திரிகைகளில் தொடராக வரும் நாவல்கள் வரை வெளி வந்துள்ளவைகளிலிருந்து இந்த நாவல் தனித்து நிற்கிறது. அடுத்து இது தமிழ் நாவலுக்கு தன் பங்கை கணிசமாகவே செலுத்தி யிருக்கிறது என்பது. 1946ல் புத்தகமாக வந்த இந்த நாவல் இரண்டு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது. ஆசிரியரின் இரண்டாவது நாவல்.

இதைப் படிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்குமுன் நான் படித்த, தமிழில் இலக்கியத்தரமானது என்று குறிப்பிடத்தக்க நாவல்கள் அதிகமாகச் சொன்னாலும் ஐந்தாறுக்குமேல் இல்லை. தமிழில் சிறுகதை சிறந்த வளம்பெற்றிருக்கிற அளவுக்கு, நாவல் துறையில் இன்றுவரைகூட ஓரு பத்துப் பன்னிரெண்டுக்கு மேல் சுட்டிக்காட்டுவதுக்கு நாவல்கள் இல்லை என்பதும் கூட. எனவே தமிழ் நாவல் துறையில் இதுக்கு உரிய இடத்தை கணிப் பது சிரமமான காரியமாக இல்லை. இந்த நாவலுக்கு முன், சென்ற நூற்றாண்டின் இறுதியில் எழுதப்பட்ட கமலாம்பாள் சரித்திரம் (பி. ஆர். ராஜம் அய்யர்) பத்மாவதி சரித்திரம் (அ. மாதவையா), முருகன் ஒரு உழவன், தேசபக்தன் கந்தன் (கே. எஸ். வெங்கடரமணி- முதலில் இங்கிலீஷில் எழுதப்பட்டவை) சுந்தரி (வ. ரா), மண்ணாசை (சங்கரராம் முதலில் இங்கிலீஷில் எழுதப்பட்டது) நாகம்மா ஆர். ஷண்முக சுந்தரம்) ஆகியவைதான் அன்று பேசிக்கொள்ளப்பட்ட நாவல்கள் இவைகளுக்கெல்லாம் முந்தின பிரதாப முதலியார் சரித்திரம் (அ. வேதநாயகம் பிள்ளை) தான் தமிழ் நாவல் இலக்கியத்துக்கு வழி அமைத்தது என்றாலும் அது ஒரு கிரானிகிளாக இருந்துவிட்டதாலும் இலக்கியத்தரமான நாவல் என்று சொல்வதற்கு உரிய அம்சங்கள் இல்லாததாலும், நான் இந்த பட்டியலில் சேர்க்கவில்லை.

வேதாந்தியான பி. ஆர். ராஜம் அய்யர் தன் நாவலுக்கு, 'இவ்வுலகில் உழன்று தவிக்கும் ஒரு அமைதியற்ற ஆத்மா பல கஷ்டங்களை அனுப்வித்து கடைசியாக நிர்மலமான ஒரு இன்ப நிலை அடைந்ததை விவரிப்பதே இந்த நவீனத்தின் முக்கிய நோக்கம்' என்று குறிக்கோள் வகுத்துக் கொண்டார். மாதவையாவோ 'இதன் உட்கி களைப்பற்றி உள்ளத்தில் ஊன்றி நினைத்துப் பார்த்து முடிவான தீர்மானங்களை செய்வது நமது ஜன சமுதாய முன்னேற்றத்திற்கு இன்றியமையாததாகும். இவ்வழக்கங்களைப் பற்றி ஆழ்ந்து ஆலோசனை செய்வாராயின் என் சிரமத் துக்கு போதிய கைமாறு ஆகும்' என்று சீர்திருத்த நோக்கு கொண்டிருந்தார். இவர்களுக்குப் பின் கே. எஸ். வெங்கடரமணி சமுதாய நோக்கு கொண்டு தேச விடுதலை, பொருளாதார சுபிட்சம் இவைகளை விஷயமாகக் கொண்டு எழுதினார், அநேகமாக அதே பார்வையில் தான் சங்கரராம் நாவலும், வ. ரா. வின் சுந்தரி விதவை பிரச்னையை எடுத்துக்கொண்டு சீர்திருத்த நோக்கு காட்டிய நாவல். இந்த நாவல்கள் பெரும்பாலும் தங்கள் உத்தேசங்களை அப்பட்டமாகக் கொண்டு, அப்பட்டமாகவே சித்தரிக்கப்பட்டவையும் கூட. ஆனால் இவைகளின் உத்தேசம் எப்படி எப்படியோ இருந்தாலும் இலக்கியத் தரமானவை என்று சொல்லும்படியாக வடிவ அமைதி கலைத் தன்மை, வெளியீட்டுத் திறன் காட்டுபவையே, தமிழ் நாவலுக்கு அஸ்திவாரம் போட்டவை. இந்த நாவல்களைப் பற்றி மொத்தமாகச் சொல் லத் தோன்றுவது இதுதான். குடும்ப, சமூக, சமுதாய பிரச்னைகளே இவைகளுக்கு அடிப்படையாக இருந்திருக்கிறது. தத்துவ, சீர்திருத்த, பொருளாதார உத்தேசங்களே அடிநாதமாக இருந்திருக்கிறது. வெளியே இருந்துவரும் அழுத்தங்களால் பாதிக்கப்பட்டு அந்த தூல நிகழ்ச்சிகளால் கட்டுப்படுத்தப்பட்டு அதனால் தங்கள் செய்கைகளை உருவாக்கிச் செல்லும் போக்கை இவைகளில் காணலாம், இன்னொன்று, இவை களின் விஷய உள்ளடக்கம் ஒரு பிறை வடிவு வாழ்க்கையை சித்தரிப்பவையே, முழு வட்ட வடிவமான வாழ்க்கை சித்தரிப்பு என்று சொல்ல முடியாது. வீச்சு (range) மட்டுப்படுத்திக் கொள்ளப்பட்ட நாவல்கள்,
ஆனால் 'பொய்த்தேவு' முழு வட்டவடிவமான சித்தரிப்பு நாவல். மேலே குறிப்பிட்ட நாவல்களைவிட கூடுதலான உத்தேசம் கொண்டிருப்பதை எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் விஷயத்திலிருந்தும் அடக்கப்பட்டிருக்கும் பொருளிலிருந்தும் நாம் பார்க்க முடியாது. தான் இன்னும் 'பூரண மனிதனாக ஆக முடியவில்லையே' என்று மற்றொருவருடன் தன்னை ஒப்பிட்டு தன் மீது குறைப்பட்டுக் கொள்ளும் சோமு முதலியார் பாத்திரத்தை ஒரு பூரணமான மனிதனாகவே நமக்கு சித்தரித்துக் காட்டி இருக்கிறார் நாவலாசிரியர். சோமு முதலியார் ஒரு காவிய கதாநாயகன்; பொய்த்தேவு ஒரு காவிய நாவல். இதை படித்து முடிகிறபோது ஒரு ராமாயணத்தையோ சிலப்பதிகாரத்தையோ படித்து முடித்த திருப்தி ஏற்படுகிறது. காரணம் அதில் காணப்படுகிற நிறைவுதான். பிறப்பு முதல் இறப்பு வரையில் ஒரு கதாபாத்திரத்தின் வாழ்க்கை மேடு பள்ளங்களுடன் சித்தரிக்கப்படுகிறது என்பதால் மட்டும் இல்லை. ஒரு முழு வாழ்வின் மனப்போக்கை, புறமும் அகமும் அவ்வப்போதய சூழ்நிலை பகைப் புலத்துக்கு ஏற்ப பாதிக்கப்பட்டு ஏற்படுகிற மோதல்கள் விளைவிக்கிற அறிவு, காட்டுகிற மனப் பாங்கு இவைகளையும் இவை விளைவாக ஒரு உச்ச கட்ட வாழ்வில் அந்த பாத்திரம் முற்றுப்பெறுகிறதையும் நாம் உணர்கிறோம். கதாநாயகனுக்குள்ளே ஓடிய அசுர கணங்கள், ஆனால் அவன் தெய்வ கணங்கள் என்று முடிவுகட்டி இருந்தவை, அவனை வீழ்த்துகிறபோது ஒரு பெரிய வீழ்ச்சியை பார்க்கிறோம். அதே சமயம் அவன் வீழ்ந்த விநாடியே அவன் எழுந்துவிட்டதையும் பார்க்கிறோம், அரிசிக் கட்டுப்பாடை மீறி சிறைசென்றதும், தன் மகன் தன்னை மிஞ்சிவிட்டதும் அவருக்கு லோகாயதமான வீழ்ச்சி; கோவிலுக்கு சொத்து முழு வதையும் எழுதிவைத்துவிட்டு சோமுப் பண்டாரமாக ஆனது அவருக்கு ஆன்மீக எழுச்சி.
ஆனால் சோமு முதலியார் ஒரு சோக கதாநாயகன் இல்லை; தன் குறைபாடுகளால் தன் விதியை நிர்ணயித்துக் கொண்டவரும் இல்லை. அவர் பிறந்தபோது அவருக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை. குறைகளோடு தான் அவர் வாழ்வே ஆரம்பம். அந்த குறைகளே குணமானவை என்று எடுத்துக்கொண்டு விட்டது தானே சோமுவின் வாழ்வுப் பார்வை . க. நா. சு. வே  நாவலில்  சொல்லி இருப்பதுபோல் 'சோமு முதலியார் தாந்தோன்றி; வேரில்லாத மரம். அது அற்புத மாக எப்படியோ தழைத்து கிளைத்து பழுத்து பலன்  தந்துகொண்டிருந்தது.' எனவே சோமு வின் வாழ்வு கிடைத்த வரைக்கும் தனக்கு அப்போதைக்கு லாபம் என்று கருதிய வாழ்வு மொத்தக் கரைக்கு கடைசியில் பார்க்கப்படுகிற போதுதான் லாபமா நஷ்டமா என்பது அவருக்கு படுகிறது. ஆக, சோமுப் பண்டாரமாக அவர் சாலையில் அறுபது வயது சமயத்தில் செத்துக் கிடந்தது சோகமான முடிவு இல்லை. சிறையை விட்டு வந்ததும் தன் மேல் துண்டையும் எறிந்து விட்டு நடக்கிறபோது சோமு முதலியார் நிறைவான வாழ்வுப் பாத்திரமாக ஆகிவிட்டார். புயல் வாழ்வு ஓய்ந்து அமைதி பெற்ற ஒரு முற்றுப் பெற்ற நிலை அப்போதே அவருக்கு ஏற்பட்டு விடுகிறது அதுக்குப் பிறகு அவர் சாவு வெறும் ஸ்தூலமான மறைவுதான்.

இந்த நாவலுக்கு விஷயமாக, பொருளாக எடுத்துக்கொள்ளப்பட்டது ஒருலோகாயத வெறி வாழ்வு வாழ்ந்து ஆன்மீக வாழ்விலே முடிந்த ஒரு ஆத்மாவின் யாத்திரை ஆகும். 'கமலாம் பாள் சரித்திரம்' ஆசிரியர் பி. ஆர். ராஜம் அய்யர். தன் உத்தேசத்தை தெரிவிக்கையில், 'உலகத்திலே உழன்று தவிக்கும் ஒரு அமைதியற்ற ஆத்மா கஷ்டங்களை அனுபவித்து நிர்மலமான இன்ப நிலையை அடைந்ததை விவரிப்பதே இந்த நவீனத்தின் நோக்கம்' என்கிறார், ஆனால் 'பொய்த்தேவு'வின் நோக்கம் வேறுவிதமானது. 'பேதமையில் பிறந்த ஆத்மா உண்மையான இன்பம் எது என்பதை அறியும் சக்தி இல்லாமல், ஏதெதையோ மதித்து பின் சென்று உலகத்து குறுக்கோட்ட சுழல்களில் சிக்கி, தடுமாறி அநேகமாக கோடிவரை தடம் தவறிச்சென்றுவிட்டு, மெய்யுணர்த்தல் வருகிறபோது மேலே எதுவும் செய்யத் தோன்றாத நிலையில் ஓய்ந்து ஸ்தம்பித்துப் போய்விடுகிற, விரக்தி நிலையை அடைய ஏற்படுகிற ஒரு அனுபவத்தையே இந்த நாவல் விவரிக்கிறது. 'அடிப்படையான சில வாழ்க்கைத் தத்துவங்களை எடுத்துச் சொல்ல இன்றைய மனிதனான சோமுவின் வாழ்க்கைச் சரிதம் எனக்குப் பெரிதும் உதவிற்று' என்கிறார் க. நா. சு. உண்மை, அடிப்படை வாழ்க்கைத் தத்துவங்களை தன் நரம்புகளில் உணராததால் ஒரு எதிர் மறையான  வாழ்வையே லட்சியமாகக் கொண்டு வாஸ்தவமான வாழ்வு வாழ முடியாமல் போய் விட்டது சோமசுந்தர முதலியாருக்கு.
தாமஸ் ஹார்டி தன் 'டெஸ்' நாவல் முக வுரையில்,
As flies to wanton boys are we to the Gods. They kill us for their sport.'
என்று தன் நாவலுக்கு ஒரு அர்த்த ம் (signifcance) கொடுக்கும் ஷேக்ஸ்பியர் வரிகளை மேற் கோள் கொண்டது போல க. நா. சுப்ர_
மண்யம் தன் 'பொய்த்தேவு' முகவுரையில்,
"
'அத்தேவர் தேவரவர் தேவர் என்றிங்ஙண்
பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற
பூதலத்தே
கற்களை

என்கிற, தமிழ் ஞானி மாணிக்கவாசகரின் 'திருவாசகம்' வரிகளை மேற்கோள் காட்டி இருக்கிறார், அவருடைய நாவலுக்கு தலைப்பே அதில் வரும் 'பொய்த்தேவு' என்கிற சொல் தான். அவர் சொல்கிறார் :
'இன்று மனிதனுக்குத் தெய்வம் ஓர் இன்றி யமையாத சாதனமாகிவிட்டது. நாத்தழும்பேற நாத்திகம் பேசுகிறவனுக்குங்கூட, ஒரு கோணத்திலிருந்து பார்க்கும்போது, தெய்வம் அவசியமாகத் தான் தோன்றுகிறது. மனிதனுக்கு ஒரு தெய்வம் திருப்தி அளிப்பதில்லை. பல தெய்வங்கள் தேவையாக இருக்கின்றன. ஒவ்வொரு விநாடிக்கும் ஒரு தெய்வம் தேவையாக இருக்கிறது என்று சொல்வதும் மிகை ஆகாது. இந்த விநாடியின் ஒரே தெய்வம் அடுத்த விநாடி பொய்த்துவிடுகிறது; பொய்த்தேவாக ஆகிவிடுகிறது.'
இதில் குறிப்பிட்டிருக்கிற மாதிரி அப்போதைக்கு அப்போதுத ேஏற்ப பொய்த்தெய்வங்களை சிருஷ்டித்கொண்டு வந்த வாழ்வுதான் சோமசுந்தர முதலியார் வாழ்வு. அவரே சொல்கிறார் :
'எனக்கென்னவோ கும்பிடணும் அர்ச்சனை செய்யணும்னா நாம்ப எல்லோரும் நம்ம பணப் பெட்டிக்கும் பாங்கிப் புஸ்தகத்துக்கும்தான் அதெல்லாம் செய்யலாமே தவிர கோவிலுக்குப் போகக் கூடாதுன்னு தோணுது. உலகத்திலே வேறே எது ஸார் தெய்வம்? பணம் என்கிற ஒன்று தான் தெய்வம் - கண்ணாலே காண்ற தெய்வம்: வேறு தெய்வம் உண்டென்று சொல்கிறவர்கள் பொய் சொல்கிறார்கள். அசடர்கள், பைத்தியக் காரர்கள், உண்மைத் தெய்வத்தை மறைப்பதற் காக பொய்த் தெய்வங்களை உண்டாக்கி பூசை வேறு செய்யத் தொடங்கிவிடுகிறார்கள்.''

சோமு முதலியாருக்கு கோவில் தெய்வங்கள் பொய்; பணம் அதை ஒட்டிய இன்பங்கள் நிஜம். சாத்தனூர் கோவில் மணியின் நாதம் சோமு சிறு வயதிலே காதில் ஒலித்தது மனதில் பதிந்திருந்தாலும், அவனுக்கு கிட்டின கோவில் கர்ப்பக்கிரகத் தின் மூல விக்ரகத்தின் உருவம் அவன் கண்களில் பதியவில்லை; அன்றய நிலையில் அவனுக்கு கிட் டாத தெய்வமான ஒரு தம்பிடியின் உருவம் தான் பதிந்து இருந்தது. உண்டியல் பெட்டிக்குள் சல் சலக்கும் நாணயங்களின் ஒலிதான் அவன் காதில் ஓலித்துக் கொண்டிருக்க வேண்டும். எனவே 'மேமன் வழிபாடுக்காரரான அவருக்கு எது பொய், எது நிஜம் என்று தன் வாழ்வின் கடைக்கோடி யில் திடீர் விழிப்பாக வருகிறது. கோவில் தெய்வங்கள் தான் நிஜம் என்று அவர் முடிவுக்கு வந்தாரோ இல்லையோ தெரியாது (அவர் தன் சொத்தை கோயிலுக்கு எழுதிவைத்ததிலிருந்து நாம் அனுமானித்துக் கொள்ளலாம் தான் இது வரை வழிபட்டவைகள் பொய்த் தெய்வங்கள் என்பது அந்திம ஞானோதயமாக அவருக்கு ஏற் பட்டது. ஆனாலும் என்ன? வாழ்வு அவரை மறு விளும்புக்கு கொண்டுபோய்விட்ட பிறகு அவர் எதுக்கும் திரும்ப முடியாது. ஆகவே சோமுப் பண் டாரமாகவே அவர் சாகிறார். சாகுமுன் அவர் இன்னொரு பண்டாரத்திடம் சொல்கிறார் :
'தெய்வங்கள் முப்பத்து முக்கோடி மட்டு மில்லே, முப்பத்து முக்கோடி முப்பத்து முக் கோடியா எத்தனையோ முப்பத்து முக்கோடி தெய்வம் இருக்கு. உலகம் பொறந்த நாள் முதல் இன்னிவரையில் எவ்வளவு விநாடி உண்டோ அவ்வளவு தெய்வமும் உண்டு. இனி இருக்கப்போகிற விநாடிக்கும் விநாடிக்கொரு தெய்வம் உண்டு.' - கேட்டுக் கொண்டிருந்த பண்டாரத்துக்கு இது புரியாவிட்டாலும் விவரம் தெரிய வந்த நாள் முதலான சோமசுந்தர முதலியாரின் வாழ்க் கையை விநாடிக் கணக்கான அளவு வளர்ச்சியுடன் நாம் தொடர்ந்து பார்த்து வந்ததிலிருந்து நமக்குப் புரிகிறது, வாழ்க்கையில் ஒவ்வொரு சுண மும் மனிதனுக்குப் புதுசு. அவன் ஆசைகளும், கனவுகளும் லட்சியங்களும் விநாடிக்கு விநாடி பிறக்கின்றன, மாறுகின்றன, மறைகின்றன. எனவே மனிதனின் ஆசைகளுக்கும், கனவுகளுக் கும் லட்சியங்களுக்கும் உருவே பெறாத பல சிந்த னைகளுக்கு தெய்வங்கள் என்று பெயர் தருவதே சரியான விஷயம்' என்று ஆசிரியரே இன்றய மனித மன நிலை பற்றி ஐரானிகலாக குறிப்பிட்டிருக் கிற மாதிரி, தன் ஆசைகள், கனவுகள், லட்சியங் கள் உருவே பெறாத சிந்தனைகளையே அவ்வப் போதைய தெய்வங்களாக வழிபட்டவர் சோமு முதலியார். நிலையான, என்றைக்குமான ஒரு தெய்வம் எது என்று அவரால் நிதானிக்க முடிய வில்லை. ஏன், இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையும் இல்லை அவருக்கு. அவருக்கு மட்டும் என்ன. இன்றய எந்த மனிதனுக்கும்தான்.
பொருளைப் பற்றி பேசிய பிறகு இந்த பொருள் எப்படி நாவலாக ஒழுங்குபடுத்தப் பட்டிருக்கிறது என்பது பார்க்கவேண்டியது. ஒவ் வொரு கலைஞனும் தனிச் சிறப்பான சுவை கொண்டவன்; சுவை ஊட்டுபவன், இந்த சுவை ஆட்டுவது, பொருள், அது சம்பந்தப்பட்ட அர்த்த ம், மதிப்பு (Valut) இவைகளை ஆசிரியர் கொடுப்பது அது சம்பந்தப்பட்ட உருவம், அழகு, உத்திகளால் ஒழுங்குபடுத்துவது மூலம், இலக் கிய உருவங்களுக்கு மதிப்பு பொருளால் மட்டும் கிடைத்துவிடாது. அமைப்பால்தான் முதன்மை யாக கிடைத்தாக வேண்டும். அமைப்புதான் ஒரு இலக்கிய உருவத்தை இனம் காணச் செய்கிறது; தரம் பிரிக்கவும் சாத்யமாக்குகிறது. மேலே சொன்ன பொருளைக் கொண்ட எழுத்து நாவலாக இல்லாமல் ஒரு வாழ்க்கை வரலாறாக இருக்கலாம், இலக்கியத் தரமாக இல்லாமலும் இருக்கலாம். ஆசிரியர் தத்துவம் பேசிவிட்டுப் போய்விடலாம். நாவலாகவும் இலக்கியத் தரமானதாகவும் இருக்க வேண்டுமே.
இந்த நாவலை உருவாக்குவதில் க. நா. சுப்ர மண்யம் மரபான கதை சொல்லும் வழியைத் தான் கடைப்பிடித்திருக்கிறார். அவருக்கு முந்தின நாவலாசிரியர்களில் குறிப்பிடத்தக்கவர்களான ராஜம் அய்யர், மாதவையாபோல் ஒரு நிகழ் நிலை (situation)யை எடுத்துக்கொண்டு அதி லிருந்து கதைக்களம் அமைத்தது போல் செய்யா மல் வேதநாயகம் பிள்ளை மாதிரி பூர்வோத்திரத் தில் ஆரம்பிக்கிறார், வேதநாயகம் பிள்ளை தன் நாவலை 'நான்' என்கிற சுயசரிதபாணியில் அமைக்க, க நா, சு, 'அவன்' என்கிற சரித்திர பாணியில் அமைத்திருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் க. நா. சு. தாவியகர்த்தாக்களான கம்பன் பாணியில் ஆரம்பித்திருக்கிறார் என்றுகூட சொல்லத் தோன்றுகிறது. ஸ்தலபுராணம், அவ தாரம் என்ற பூர்வோத்திர ஆரம்பமாக கதை
________________
ஆரம்பிக்கிறார், பழய காவியங்களின் ஆரம்பம் போல், மேட்டுத் தெரு , அவதாரம், சாத்தனூர் எல்லைகள், காவேரிக் கரையிலிருந்து, போன்ற அத்யாயங்களுடன் ஆரம்பமாகி ஊர்வளம், வர்ணனை, மக்கள் வாழ்வு. குடும்பம், வம்சம், நதி மகிமை, இதெல்லாம் விவரமாகச் சொல்லி, கதா நாயகன் வளர் பருவங்களையும் காட்டி, அவன் பால்ய லீலைகளையும் வர்ணித்து சோமுவை உரு வாக்குகிறார் இந்த இடத்தில் நான் ஒன்று சொல்லவேண்டும். மற்ற நாவல்களில் இடம், தர்ப்போக்கு, தெரு வாழ்வு, ஊர் அமைப்பு. இயற்கை வளம், மக்கள் நிலை இதெல்லாம் ஒரு பகைப்புலம் ஏற்படுத்துவதற்கான அளவுக்கு, (Setting , தேவைக்கு வேண்டிய அளவுதான் கையா ளப்பட்டிருக்கும். 'பொய்த்தேவு நாவலில் வரும் சரி, தெருவும் சரி, நதியின் ஓட்டமும் சரி, ஊர் எல்லைகளும் சரி, தெரு மனிதர்களும் சரி, ஊர் மக்களும் சரி சித்தரிக்கப்பட்ட விதம் சோமு அந்த மண்ணுக்கு உரியவன் என்கிறதை நாம் உணர வைக்க. அவைதான் சோமுவை உருவாக்கி இருக் கின்றன, ஆக்கிக் கொண்டிருக்கின்றன என்று பட வைக்க, தக்கபடி வர்ணிக்கப்பட்டு வெறும் ஸ்தூலத் தகவல்களாக இல்லாமல் குணம் கொண்டவைகளாக, சோம் ைவ பாதிக் கிற அம்சங்களாக அவைகளைப் பார்க்கிறோம். அவர் சாத்தனூர் காவேரி ஆற்றின் ஒரு முழு வரு ஷத்திய போக்கையும் பல தோற்றங்களையும் வர்ணித்திருப்பதை படிக்கிறபோது, அது சோமு வின் முழு வாழ்வுப் போக்கையே, சுட்டிக்காட்டும் குறியீடாகப் படுகிறது. சோமுவின் வாழ்வு விநாடிகள் போலத்தான் காவேரி வாழ்வின் விநாடிகளும் அவ்வப்போது புதுசு புதுசாக மேடு பள்ளங்களோடு முடிவு நோக்கி ஓடிக்கொண் டிருப்பதாக உணர்வு ஏற்படுகிறது.
ராமாயணத்துக்கு ராமன் ஒருவன்தான்; சிலப்பதிகாரத்துக்கு கண்ணகி ஒருவள் தான் என்று கொள்வோமானால், பொய்த்தேவுக்கு சோமசுந்தர முதலியார் ஒருவர்தான். முன் இரண்டிலுமாவது வேறு ஒன்றிருவரை சுட்டிக் காட்ட முடியுமோ என்னவோ, சோமுவைத் தவிர வேறு யாருமில்லை 'பொய்த்தேவு வில். எனவே சோமுவை, சோமசுந்தர முதலியாரை, வேர் இல் லாத மரம் தழைத்து கிளைத்துப்போவதையே பின் அது உலர்ந்து பட்டமரமாவதையே உரு வாக்குவதையே தன் ஒரே குறிக்கோளாகக் கொண்ட ஆசிரியர் அதுக்கு வேண்டிய தகவல்களை வேண்டிய விதமாக நுட்பமாக பொறுக்கி எடுத்து கதை உருவாக்குவதில் மிக ஜாக்கிரதையாக கையாண்டு வெற்றி பெற்றிருப்பது குறிப்பிட்ட மற்ற சில நாவலாசிரியர்களுக்கு கிட்டாத வெற்றி.
நாவலின் சொல்வழியும் மரபான கதை சொல்வழியாக மூன்றாம் மனிதப் பார்வையாகவே கதை சொல்லி (narrator) போக்கிலே அமைந். திருக்கிறது. க. நா. சு. 'அவன்' வழியைப் பின் , பற்றினாலும் நாவலை படித்து முடித்ததும் சோமு முதலியார் என்கிற 'நான்' பார்வையை உணர * முடிகிறது. ஆசிரிய வாக்கு சோமு நினைப்பை தொடர்ந்து போவதாகவே இருக்கிறது. ஆசிரியர் நிகழ்ச்சிகளைவிட சிந்தனைகளை வைத்தே கதையை பின்பற்றுவதால் இது சிறப்பாக சாத்யமாகி இருக்கிறது . இந்தவிதமான வழி கையாளலால் நாவலில் சம்பாஷணைகளே மிகக் குறைவு, சோமு என்கிற சோமசுந்தர முதலியார் என்கிற சோமுப் பண்டாரம் மொத்தம் இந்த நாவல் முழுக்க வாய்விட்டுப் பேசியது எவ்வளவு என்று பார்க்கப்போனால், அவர் குரலை நான் கேட்டதாகவே படவில்லை நாவலை படித்து முடிக்கிற போது. அவ்வளவு குறைவான பேச்சு, அவர் உருவம் தெரிகிறது, அவர் நினைப்புத் தெரிகிறது, ஏன் அவர் வாழ்வே தெரிகிறது. இருந்தும் குறைந்தபட்சம் பேசி அதிகபட்சம் ஒரு பெர்ஸனாலிட்டியாக உருவாகி இருக்கிறார். வேறு எந்த தமிழ் நாவலிலும் இவ்வளவு குறைந்த பேச்சை நான் படித்ததில்லை இதுவரையில்.

இந்த நாவல் அமைப்பு முறையில் இன்னொரு புதுமையும்கூட, 'எபிஸோட்' என்கிறோமே கதைக்கான சிறு சிறு நிகழ்ச்சிகள் அங்கங்கே நிலைக் களன் ஏற்படுத்தப்பட்டு கதைவளர உதவும் காட்சி சித்தரிப்பு, ஒரு இடத்தில், அதாவது சிறு வன் சோமு கொள்ளையரைப் பிடித்துக்கொடுத்த சமயம் தவிர வேறு எங்கும் கையாளப்படவில்லை. அனக்டோட் என்கிறோமே கதா சம்பவங்கள் ஆசிரியரால் கூறப்பட்டு கதை ஏற்றலுக்கு சோமு - சோமு முதலியாரை உருவாக்குவதற்கு பயன்படுவதற்குமேல் காட்சி எழுப்பப்படவில்லை . இந்த நாவலில் வரும் தகவல்களை, அதாவது ஐம்பது அறுபது வயதுக் கால வாழ்நாள் சம்பவங்களை இந்த நாவலில் கண்டுள்ள தகவலின்படி) எபிஸோடிகலாக எழுதினால் ஆயிரக்கணக்கான பக்கங்கள் தேவைப்படும், சோமு பண்டாரம் சொன்ன மாதிரி விநாடிகளுக்கு முக்யத்வம் கொடுத்துவிட் டால் இந்த நாவல் முன் பாரதமே சின்னதாகி விடும். எனவே ஆசிரியர் நூதனமான. சிறந்த உத்தி மூலம், கதா சம்பவ நிகழ்ச்சித் தொடர் தகவலை நமக்கு கொடுக்க வழிகடைப்பிடித்திருக் கிறார். சோமுவின் பிறப்பு முதல் பதினோறு வயது வரை சோமுவின் வளர் கதையை விவரமாக சொல்லி வந்தவர் 157ம் பக்கத்தில் 'இடைவேளை என்ற ஒரு பகுதி ஏற்படுத்தி சோமுவின் முப்பது வருஷ வாழ்க்கையை 25 பக்கங்களில் கடந்துவிடு கிறார். அதாவது சோமு ரங்காராவ் வீட்டில் வேலைக்கு சேர்ந்தது முதல் நாற்பத்தியோராவது வயதில் மளிகைக்கடை சோமசுந்தர முதலியாராக, ஊர்ப்பிரமுகராக ஆகும் வரையில் உள்ள ஒரு காலகட்டம் :காலப் வேகத்தில் கடக்கப்படும் கிறது. எந்த கதைப் போக்கிலும் கால இடை வெளி விட்டுத்தான் கதை நிகழ்ச்சி தொடரும். 'இரவு தூங்கப் போனான்' என்று முடித்துவிட்டு 'மறுநாள் எழுந்ததும்...' என்ற ஆரம்பத்திலும் இந்த இடைவெளி இருக்கத்தானே செய்கிறது. எனவே கால அளவை இடைவெளி அவகாசத்தை வைத்து கதை நிகழ்ச்சி இல்லை. அறுந்த விநாடிகளுக்கு இடையேயும் அறாத பொருளின், கருத்துப் போக்கின் தன்மையை கொடுத்து, விட்டுத் தெரியாதிருக்கச் செய்து கதையின் ஒருமைப்பாட்டை சாதித்துக் காட்டுவதில் தான் கலைஞன் திறமை இருக்கிறது. நாவலில் இரண்டு கட்டங்களில் இந்த இடைவெளி உத்தியைக் கொண்டு மிக அதிகமான இடைவெளி இருந்தும் கதாநாயகனின் வாழ்வோட்டத்திலே இடைவெளி இருப்பதாக நமக்கு படாமல் செய்து, இடைவெளியிடையேயும் விநாடிக்கு விநாடி நாம் கதாநாயகனை தொடர்ந்தே வந்திருப்பதாக நமக்குப் பிரமை எழச் செய்யும் மாயத்தை விளைவித்திருக்கிறார். சிந்தனையும், குறிப்புரையும், தகவலுமாக இழைந்து, கலப்படமாக இல்லாமல் கலைவையாக சித்தரித்திருப்பது ஒரு நல்ல சாதனை, நாவலுக்கு அதன் உருவத்துக்கு ஒரு நிறைவும் முழுமையும் தொனி ஏற்றி இருக்கிறது இந்த உத்தி.

இந்த நாவலின் பொருளை ஒழுங்குபடுத்துவதில் க. நா சு., உணர்ச்சி அறிவு சமபந்தமாக காட்டி இருக்கும் நோக்கு பற்றியும் கொஞ்சம் சொல்லவேண்டி இருக்கிறது. ஒரு நாவலுக்கு பிளாட் என்பது வெறும் கதை மட்டும் இல்லை. கதை நிகழ்ச்சிகளை ஒரு விசேஷ பயன் விளைவிக்கும்படியாக ஒழுங்குபட அமைத்தலும் தேவையானது. அதுமட்டுமில்லை, பலவித காரணங்கள் மனவெழுச்சிகள் மதிப்புகள் இவைகளால் கிளர்த் தப்பட்ட உணர்ச்சிகளையும் ஒழுங்குபடுத்துதலும் சேரும். இந்த உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்துதல் ஒரு படைப்பாளி வெகு ஜாக்ரதையாக செய்ய வேண்டிய காரியம். சென்டிமென்டாலிடி தொனி விழச்செய்து விடக்கூடாது. எமோஷனாலிஸம் வழியச் செய்துவிடக்கூடாது. அதே சமயம் போதிய உணர்ச்சி வெளியீடு ஏறாமல் சப்பையாகவும் போய்விடவும் கூடாது. 'Catharsis' என்கிற அரிஸ்டாடில் இலக்கியத்தத்துவம் நமக்குத் தெரியும். உணர்ச்சியை சுத்தப்படுத்திக் கொடுக்க வேண்டும் படைப்பாளி. க.நா.சுப்ரமண்யம்.

க நா. சுப்ரமண்யம், படைப்புக்கு உணர்ச்சி மூலப்பொருள்களில் ஒன்று, அதுக்கு உரிய இடம் உண்டு என்பதை ஒப்புக் கொள்பவர்தான் அவரது 'பொய்த்தேவு' கதாநாயகன் உணர்ச்சியால் ஆனவன் தான். ஆனால் க, நா சு, 'எமோஷனல் ஸ்டாஸிஸ்' என்பதில் நம்பிக்கை கொண்டவர். உணர்ச்சி படைப்பிலே தராசு முனையில் நிறுக்கப்படவேண்டிய பொருள்: மயிரிழை பிச்சினாலும் சென்டிமெண்டாலிட்டியில் கொண்டு முடிகிறது. இது கலைப் படைப்பின் தன்மையை பாழடித்து விடுகிறது. மேலும் உணர்ச்சி நெறி ஏறிய நிலையில் ஒரு பொருளின் உண்மை அர்த்தம் வெளித் தெரிவதில்லை. அங்கே அறிவு செயல்படாமல் ஸ்தம்பித்துவிடுகிறது. ஆகவே உணர்ச்சி சமனப்பட்டுவிட்ட பிறகுதான் தெளிவான சிந்தனைக்கு இடம் ஏற்படுகிறது. ஆகவே அறிவுப் பார்வையாக படைப்பை உருவாக்குதிலேதான் படைப்பு சிலாக்யமான அர்த்த முக்யத்வம் பெறுகிறது என்று கருதுபவர். எனவே எங்கே சோமு முதலியார் சென்டிமெண்டல் மனிதனாக மாறிவிடப் போகிறானோ, தன் எழுத்து சென்டிமெண்டலாக ஆகிவிடப் போகிறதோ, என்ற முன் எச்சரிக்கையில் அவர் மற்ற நாவலாசிரியர்களைப் போல உணர்ச்சி பூர்வமான நிலையிலிருந்து படைப்புப் பார்வை கொள்வதைவிட்டு அறிவு பூர்வமான நிலை எடுத்துக் கொண்டு நாவல் பொருளை முறைப்படுத்தி இருக்கிறார்.
பணம், பெண் ஆகிய இரண்டு பாதிப்புகள் முதலியாரை ஆட்டிவந்திருக்கிற நிலைமையில் நாவல் பூராவிலும் ஒரு இடத்திலும் உணர்ச்சி நிலை தொனிக்கும் ஒரு கட்டத்தைப் பார்க்க முடியவில்லை. நிலை வர்ணிக்கப்படவும் இல்லை, 'கன்னிகழியாத பருவ' சோமுவுக்கு பால் உணர்ச்சி தோன்றிய கட்டத்தில்கூட மனநிலையோ, உறவுக் காட்சியோ எழவில்லை என்றால்? அவர்கள் சந்திப்பை தன் குறிப்புரை ஆக சில வரிகளில் கூறி நகர்ந்துவிடுகிறார். மேட்டுத் தெரு. காவேரிக்கரை போன்ற இட வர்ணனைகளை நல்ல கற்பனையுடன் பக்கக் கணக்கில் அழகாக வர்ணிக்கத்தெரிந்த க.நா.சு ஒரு பாராகூட மனநிலை வர்ணனைக்கு முற்படவில்லை. காரணம் அவருக்கு உணர்ச்சி மனநிலை வெளியீடு முக்கியம் இல்லை, அதன் பாதிப்புதான் முக்கியம். ஆரம்பம் முதல் நாவல் நெடுக, நிகழ்ச்சிகள், உறவுகள், ஆசைகள், ஏக்கங்கள், லட்சியங்கள், மோதல்கள், சந்தர்ப்பங்கள், வாய்ப்புகள், இவைகளின் விளைவாக சோமு முதலியார் எப்படி பாதிக்கப்பட்டு செயல் படுகிறார் என்பதையே குறிக்கோளாகக்கொண்டு, சோமு வளர்வதை வாழ்வதை நம் முன் நடத்திக் கொண்டு செல்கிறார். சோமுவை எந்த உணர்ச்சி நிலையிலும், நிற்கிற ஒரு உணர்ச்சி புருஷனாக பார்க்க முடிவதில்லை. உணர்ச்சி நிலையில் நின்று ஒரு போராட்டத்துக்குப் பின் அப்போதைக்கு ஒரு தீர்மானமான முடிவுக்கு வந்து செயல்படுகிற நிதான புருஷனாகத்தான் பார்க்கிறோம். சோமு முதலியாரின் மனம் முதலில் தெரிந்து அவர் செயலைப் பின் தொடரவில்லை நாம், சோமுவின் செயலை முதலில் தெரிந்து மனதைப் பின்நோக்கித் துளாவி அறிந்து கொள்கிறோம்.
இதை ஒட்டி இன்னொரு விஷயம், உணர்ச் சியைவிட அறிவுக்கு, மன எழுச்சியை விட சிந்தனைக்குத்தான் மனிதன் குணப்பண்பில் இடம் இருக்கவேண்டும் என்கிற ஒரு அடிப்படைத்தத்துவத்தை கொண்டவர் க. நா. சு. அவரே சொல்லி இருக்கிறார்: ' அடிப்படையான சில வாழ்க்கைத் தத்துவங்களை எடுத்துச் சொல்ல இன்றய மனிதனான சோமுவின், வாழ்க்கை எனக்குப் பெரிதும் உதவிற்று' என்று. எனவேதான் ஒரு 'இன்டலக்சுவல்' நிலை எடுத்துக்கொண்டு படைப்பையும் பார்க்க அவருக்குத் தோன்றியிருக்கிறது. முழு நாவலையும் சிந்தனைகளாகவே மாற்றி அமைத்திருப்பதைப் பார்க்கிறோம்; க. நா. சு, வின் சிந்தனைகளை பார்க்கிறோம், சோமு முதலியாரை கைப்பாவையாக வைத்து. இடைவேளை உத்தி இந்த சிந்தனைப் போக்கு வழி கதை நகர்த்தலை இன்னும் தீவிரப்படுத்துவதுக்குத் தான் பயன் படுத்தப்பட்டிருக்கிறது.

சோமு சோமு முதலியார் ஆகி சோமுப் பண் டாரமாக ஓய்கிறபோது தன் ஐந்தாவது வயதிலே இருந்து தனக்குள் விநாடிக்கு விநாடி சிந்தித்து சிந்தித்து ஓய்ந்த சிந்தனையாளனது வாழ்க்கை முடிவை பார்க்கிறோம். பண்டாரத்திடம் அவர் சொன்ன முத்தாய்ப்பான கருத்துக்கு இந்த ஐம்பதுக்கு மேற்பட்ட வருஷத்து சிந்தனையோட்டம்

தானே ஆதாரம். அவர் தனக்கு சிந்திக்க அவகாசமே இருக்கக்கூடாது என்று ஒன்றன் பின் ஒன்றாக அவர் புதுப்புது முயற்சிகளில் ஈடுபட்டிருக்கலாம். பணம் பண்ணுகிற வேகத்திலே மற்றதையெல்லாம் மறக்க ஆசைப்பட்டிருக்கலாம். ஆனால் அது வெற்றிபெறவில்லை. வெற்றி பெறவும் முடியாது. பணம் பண்ணுகிற வேகம் அவருக்கு ஏற்பட்டதே அவர் சிந்தித்ததின் விளைவு தானே, அவர் எதை எல்லாமோ மறக்க ஆசைப்பட்டதே எத்தனையோவிதமான சிந்தனைகள் செய்து குழம்பின நிலையில் தானே. 'இருபத்தி நான்கு மணி நேரமும் அவருக்கு தன்னைப் பற்றிய நினைவே தான். ஒரு நிமிஷம் கூட சிந்தனையில் அவருடன் போட்டியிட ஆள் கிடையாது' என்று நாவலில் வருகிறபடி, சிந்தித்து சிந்தித்து ஓய்ந்த மனிதன் தான் சோமு முதலியார், ஆனால் சிந்தனைப் போக்கிலே ஒரு குறை. அவருக்கு தன் சித்தனைப் போக்கை விநாடிக்கு விநாடிக்கு மாற்றிக்கொள்ளவும் அதுக்கு ஏற்ப செயல்படவும் முடிந்தது. ஆனால் தான் ஏன், எதற்காக இதை செய்கிறோம் என்பது மட்டும் தெளிவாக ஒரு நாளும் இருந்ததில்லை காட்டு வெள்ளத்திலே அலைக்கப்பட்ட போக்கான சிந்தனையே தவிர, அனைக்கட்டுகளால் தேக்கிக் கட்டுக்குட்பட்டு வரும் வாய்க்கால் நீரோட்டப் போக்கான சிந் தனையாக இல்லை.

அவரது சிந்தனைப் போக்கிலே அடிப்படையான கோளாறு அதிலே தார்மீக அடிப்படை இல்லாததுதான். மேட்டுத் தெருக்காரனான அவருக்கு அது ரத்தத்தில் மரமாக ஓடவில்லை. தார்மீக அடிப்படை இருந்துவிட்டால் மட்டும் மனிதன் நேர்மையாக சிந்திக்கிறானா என்று கேட்கத் தோன்றும். அதுவும் நடப்பதில்லை தான். இருந்தாலும் அது கொஞ்சம் முறைப்படுத்தி இருக்கும் ஒரு அளவுக்கு சோமசுந்தர முதலியார் விஷயத்தில் இன்னொரு காரணமும் சொல்லலாம் கோளாறுக்கு சந்தர்ப்பத்தால், வாய்ப்பால் சிந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது அவருக்கு. அப்படி சிந்திக்க ஏற்பட்டபோது அடிப்படை மதிப்புகள் சம்பந்தமாக அஸ்திவாரம் இல்லாத நிலையில் தன் சிறு வயது வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்கள் தன்னை பாதித்தவைகளை, பாதித்த விதத்தை கொண்டு அவை சம்பந்தப்பட்ட மதிப்புகளை மெய் என முடிவுகட்டி அதன் வழியிலேயே, பலத்திலேயே வாழ்க்கையை நிறைவானதாக, திருப்திகரமானதாக ஆக்கிக்கொள்ள முனைந்து எதைத் தின்றால் 'பித்தம் தெளியும்' என்ற ஆசையாக, லட்சியமாக அவ்வப்போது எதிர்ப்படுகிற விநாடிக்கு விநாடி வாய்ப்புகளை எல்லாம் யோசியாமல் பயன்படுத்தி முன்னேறுகிறார். அத்தகைய முன்னேற்றம் அர்த்தமற்றது, நிறைவானது இல்லை என்பது முடிவில் தான் படுகிறது. இது புரியாமல், தான் செய்கிற காரியங்களுக்கும் காரணம் புரியாமல் சிந்தித்தும், செயல்பட்டும் வந்த புரிந்து சிந்திக்க முடியாத ஒருவரை நாம் புரிந்துகொள்ளும்படியாக நேர்த்தியாக சித்தரித்து அமைப்பான நாவல் எழுதப்பட்டிருப்பது

இனி வாழ்க்கைக்கு இது நேர்மையான யதார்த்த உறவு கொண்டிருப்பதை பார்க்கலாம். கலைக்கும் வாழ்க்கைக்கும் உள்ள உறவுபற்றி பொனாமி டொப்ரி எழுதியுள்ள சில வாக்கியங்கள் என் வழிக்கு அனுசரணையாக இருப்பவை. அவர் சொல்கிறார்.
“ஒரு கலைப் படைப்பு, ஒரு ஒழுங்கில்லாமல் எழுதப்படுகிற நாவலும் கூட- நடப்பு வாழ்க்கையேதான் என்பதில்லை என்று எல்லோரும் ஒப்புக்கொள்கிறார்கள், வாழ்க்கை மாதிரி ஒன்று அது. வாழ்க்கையிலிருந்து அதை வேறானதாக காட்டுவது அதனுடைய அமைப்பு மோஸ்தர்தான் (பாட்டர்ண்', 'வாழ்க்கை அது மாதிரி இருக்கு ' அல்லது மனிதர்கள் அது மாதிரி இருக்கிறார்கள்' என்று சொல்லத் தோன்றுகிற அளவுக்கு சங்கேதத்தினால் தெரிவிக்கிற வழியாகத்தான் இந்த மோஸ்தர் குறி காட்டுகிறது. ஒரு நல்ல படைப்பு வாழ்க்கையிலிருந்து வெட்டுப்பட்டு இருப்பது. அதில் வரும் பாத்திரங்கள் நமது காலத்தில் வாழவில்லை. தங்களுக்கே உரிய ஒரு காலத்தில் வாழ்கிறார்கள். நம்மதைவிட அவர்களுக்கு இட விஸ்தாரமும் குறைவு. அவர்கள் ஸ்தூலமாக தோன்றினாலும் கூட ஏதோ காற்றுரூபமான தொட முடியாதவர்களாகவே அவர்கள் இருப்பதாகப் படுகிறது நமக்கு.'

முழுக்க இதை நான் ஏற்றுக்கொள்கிறேன். பொய்த்தேவு நாவலுக்கும் வாழ்க்கைக்கும் உள்ள. யதார்த்த உறவு இந்த அடிப்படையில்தான் இருக்கமுடியும். கதையும் சரி, கதாபாத்திரமும் சரி குறியீடுகள் தானே. சோமு முதலியார் ஒரு குறியீடு' பொய்த்தேவு குறிப்புணர்த்தும் நாவல். ''சோமு முதலியார் மாதிரி இருப்பவர்கள்', 'பொய்த்தேவு'வில் நடப்பது மாதிரி நடந்தது என்ற அளவுக்குத்தான் வாழ்க்கைக்கு உண்மையானது பற்றி சுட்டிக்காட்ட முடியும். சச்ரூபம் சோமு முதலியாரையோ பொய்த்தேவு நாவல் சம்பவத் தொடரையோ அப்படியே வாழ்க்கையில் பார்க்கமுடியாது, சம்பவிக்கக்கூடிய தன்மை, இயலும் தன்மை இந்த இரண்டையும் கொண்டு ஒரு கலைப்படைப்பை வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்கமுடியும். அந்த பொருத்தத்தினாலே ஏகதேச ஒற்றுமையோ, அதே போன்றதோற் றமோ காணமுடிகிற அளவுக்குத்தான் உறவு வாழ்க்கைக்கும் கலைக்கும்.

க. நா. சு, வே. சொல்கிறார்; 'சோமு முதலியாரைப் போன்றவர்களே தங்கள் தெய்வங்களாக உள்ளவர்களும் நம்மிடையே இல்லாமல் இல்லை' என்று சோமு முதலியார் ஒரு தெய்வம், அவரைப் போன்றோரை, தெய்வங்களாக வழிபடுபவர்கள் என்று பிரித்திருப்பதிலிருந்து சோமு முதலியாரை அவர் பக்தர்களைவிட பெரியவராக ஒரு குறியீடாக கருதி இருக்கிறார் ஆசிரியர். இந்த அளவுக்கு பொய்த்தேவு வாழ்க்கையின் உண்மை நிலைக்கு பொருந்த அதுக்கு இனிய, ஒட்டி உள்ள ஒரு நிலவரத்தை அடக்கி இருப்பதாகச் சொல்லலாம். சோமு முதலியாரின் செய்கைளும் நினைப்புகளும் வெகு யதார்த்தமாக சித்தரிக்கப்பட்டு அதோ 'சோமு முதலியார் என்று இனம் காண முடிகிற அளவுக்கு ஒரு முழுமையான யதார்த்த தொனி நாவலில் ஏறி இருக்கிறது. இவ்வளவு மனித வாழ்க்கைக்கு உள்ளடங்கின, பிசிர்விடாத சகஜத்தன்மையான குணங்களை இயல்பாகப்பட சித்திரிக்கிற நாவல்கள் தமிழில் விரல்விட்டு எண் ணக் கூடியவைகள் தான். அந்த சிலதிலும் இது சிறந்த ஸ்தானம் வகிக்கிறது.

இந்த நாவல் நமது மரபுக்கு வளம் ஏற்றுகிற நாவலும்கூட. மேல்நாட்டு செல்வாக்கால் நமது , சிந்தனைப் போக்கு திசை திருப்பப்பட்டு, தற் கால உலக நிலை பாதிப்பால் அதுவும் குழப்பப் பட்டு பழய ஆணிவேர் மதிப்புகள் கலகலத்து விட்ட நிலை; புதிய மதிப்புகள் எதுவும் பால் பிடிக் காத பயிர்நிலை. பிற மனித வாழ்வு உணர்வுகளை, அவரவர் சூழ்நிலை பாதிப்பு சிந்தனைகளை எல்லாம் நாம் படித்துவிட்டு, நமது வாழ்விலே அத்தகைய அநுபவம் ஏற்படாத நிலையில், வாய்ப்பும் இல்லாத நிலையில் நமது சிந்தனைகளை மேலே சொன்னவர்களது வழியிலே தொடரவிட்டுக்கொண்டு, இலக்கியத்திலும் அந்தவிதமான சிந்தனைகளுக்கு இடம் கொடுத்துக் கொண்டிருக்கிற இந்த நாட்களில் 'பொய்த்தேவு' ஒரு எச்சரிக்கையாக இருக்கிறது நமக்கு. சோமு முதலியார் ஒரு எக்ஸிடென்ஷியலிஸ்ட்டோ என்று கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன். இல்லை. எக்ஸிஸ்டென்ஷியல்ட் என்பவன், மரபானதும் உலகப் பொதுவானதுமான அடிப்படை மதிப்புகளை எல்லாம் மறுத்து ஒவ்வொரு கணமும் தன்படியே வாழ்ந்து மனிதன் தனக்கென மதிப்புகளை தானே உண்டாக்கிக் கொள்ள வேண்டும் என்று கருதுபவன்.

சோமு முதலியார் அப்படி அடிப்படைகளை தெரிந்து பழய மதிப்புகளை மறுத்து, புது மதிப்புகளை ஏற்றுக் கொண்டவர் இல்லை. அவர் பொய் மதிப்புகளை மதித்துக் கொண்டாரே தவிர தான் விரும்பும் நேரான வாழ்வுக்கான வழி என்று தீர்க்கமாக சிந்தித்து சத்தான மதிப்புகளை கொள்ளவில்லையே. தன் செய்கை மூலமும் காட்டிக் கொள்ளவில்லையே மதிப்புகள் உண்டு என்பதையே அறியாதவர் அவர் என்றே சொல்லலாம். வாய்ப்பால் எது முதலில் பட்டதோ அதுதான் சரி என்று ஏற்றுக்கொண்டுவிட்டார், ஒப்பிட்டுப் பார்த்து இல்லை. வெறும் லோகயதவாதி அவர், நான் ஏற்கெனவே சொன்னதுபோல, லோகாயதத்தின் வீழ்ச்சியை, ஆன்மீக மதிப்பை வலியுறுத்துகிறது 'பொய்த்தேவு'. நாவலில் இடைவேளையில் வருகிறது :

“வாழ்க்கையிலே சிந்திக்க வேண்டியவற்றை எல்லாம் சிந்தித்து, கூடுமான வரையில் முடிவு கட்டிவிட்டு பிறகு வாழ ஆரம்பிப்பவனே கெட்டிக்காரன், பழைய காலத்து குருகுல வாழ்க்கைக்கு இதுதான் அர்த்தம் போலும். வாழ்க்கை வழிகள் குருகுலத்தைவிட்டு வெளியேறுமுன் திடமாகிவிட வேண்டும். இந்த வழி போகலாமா, அந்த வழி போகலாமா என்று வழிநெடுகிலும் யோசித்துக் கொண்டே போகிறவன் எங்குமே போய்ச் சேர மாட்டான் என்பது நிச்சயம்.'

சோமு முதலியாருக்கு சிறுவயதில், குருகுல வாசம் கிட்டாதது இருக்கட்டும், வாழ்வே உருவாகவில்லையே. தானாக தட்டுத் தடுமாறி இது தான் வாழ்க்கை போலிருக்கிறது என்று மற்றவர்களின் வெளித் தோற்றத்தை வைத்து முடிவு கட்டி, தான் போகிற திசையைப் பற்றிய நிச்சயம் இல்லாமல் விநாடி விநாடியாக வழி மாறி வாழ்ந்து எதிர்பாராத அதிர்ச்சியில் முடிந்த வாழ்வைத்தானே பார்க்கிறோம் அவரிடம், பொய்த் தேவு நமது ஆன்மீக அடிப்படைகளை வலியுறுத்தி நமது தத்துவ மரபுக்கு வளம் ஏற்றுகிற நாவல்,

எனக்குத் தெரிந்தவரை இது சுயமான நாவல். உத்திவகையில், எழுதுகிற முறையில் மேல்நாட்டு செல்வாக்கும் இதில் காணமுடியலாம். அதன் விஷயம் உள்ளடக்கம் அர்த்தம் நம்முடையது தான். அதேபோல தமிழ் நாவல் இலக்கியத்தில் இது சிறந்து நிற்பது தான். இந்திய நாவல் இலக்கியத்தில் இதன் இடத்தைப்பற்றி எனக்கு நிதானிக்க இயலவில்லை. இந்திய மொழி நாவல்களைப் பற்றி ஓரளவுக்காவது படிக்க வாய்ப்பு நமக்கு கிட்டாதவரையில் முடிவு சொல்ல முடியாது. மொழியைக் கடந்து விரிவான இலக்கியப் பரிச்சயம் நமக்கு ஏற்படும் வாய்ப்புக்கு இன்னும் எவ்வளவு நாளாகுமோ? சர்வதேச நாவல் வரிசையில் வைத்து படி அளக்க நான் முற்பட வில்லை. சாத்யமில்லாத காரியம். நாட்டுக்கு நாடு நாவல் மரபு வேறு. அளவுகோல்களும் வேறாக இருக்கின்றன. பொது அளவுகோல் முடியாது : பொய்த்தேவு இலக்கியத் தரமான தலைசிறந்த தமிழ் நாவல், பல உலக இலக்கிய சிறந்த நாவல்களை படிக்கிறபோது ஏற்படுகிற அநுபவம், திருப்தி கிடைக்கிறது என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

இவ்வளவுக்கும் பிறகு நான் 'பொய்த்தேவு'வை உங்கள் முன் எடுத்துவைக்கிறேனா என்பது எனக்கு சந்தேகம்தான். இதுக்குமேல் நீங்களே அதைப் படித்துப் பார்த்து உங்கள் முடிவுகளை செய்துகொள்வது உங்கள் பொறுப்பு. டி. எஸ், இலியட்டின் வரிகளுடன் முடிக்க விரும்புகிறேன். ''ஒரு நூல் இலக்கியத் தரமானதா என்பதை இலக்கிய அளவுகோல்கள் கொண்டு பார்க்க வேண்டும். சிறந்த இலக்கியமா என்பதை மற்ற அளவுகோல்களைக் கொண்டு மதிப்பிடவேண்டும் ",

பொய்த்தேவு இந்த இரண்டு பரீட்சைகளி லும் தேறிவிட்ட நாவல்.
*************************

பகைத் தொழில்
சி சு. செ.
*கிழிபடுபோர், கொலை, தண்டம்
பின்னியே கிடக்கும் அரசியலதனில் ' 
கொலைவழி உதறி அறவழியாலே 
சுதிகாண வழிவகை காட்டிக் கிழக்கே 
பகைத்தொழில் மறக்கவைத்த முதல்வன் 
ஒத்துழையாமையான் காலமும் போச்சு; 
அழிசெய் நியூகிளியர் ஆயுதம் 
ஓங்கியே சீறிடும் 'ரட்சகர் கையில் 
அருள்வழி சிதற மறவழி பற்றி 
கதிகலங்கச் சதிவகைகள் செய்து 
கொடுந்தொழில் பரவச் செய்யும் மேற்கே 
ஒத்துப்போகார் காலமும் ஆச்சு! 
என்று நாம் கணித்திருக்கும் வேளை 
அண்டை நட்பும் சகவாழ்வும் கானல் நீராச்சு;
வரம் கொடுத்த தலைமேலே கைவைக்க எல்லையில் 
முழுவடிவைத் தின்ன வந்த பிறைவடிவோன் 
, :பாய் :பாய் குளிரப்பேசி பழமை பாசம் பேசி 
பசப்பி விளிம்பில் இமயப்பாய் சுருட்ட வந்தோன், 
சுயாட்சிக்குத் தந்த ஆதரவு மறந்து நடுக்கடலில் நின்று 
ஊளையிடும் நம்பெயர் பாதிகொண்ட உதிரித்தீவோன், 
முக்கூட்டாய் சேர்ந்து பகைத் தொழில் வளர்க்க 
புறப்பட்ட கதையே இன்றய நிஜமாச்சு. 
உழக்கிலே கிழக்கு மேற்கா? 
கிழக்கிலும் மேற்கு, மேற்கிலும் கிழக்கு 
பகைத் தொழிலுக்கா காலம் ?
****************************

இரண்டு கவிதைகள்
ஈரம் - எஸ். வைதீஸ்வரன்
நானும் ஒரு பாரி, 
நாகரீகப் பாரி - 
மானும், மயிலும், மல்லிகைக் கொடியும், 
தேரும், புரவியும், திருவும் ஆக்கவில்லை, 
நானும் ஒரு பாரி. 

காற்று தொலைந்து, கனல் திருகும் வேளை,
மூச்சு திணறி, மூக்குப் புனலாகக் 
காற்றோ....... காற்றே யென்று 
கைகளை நீட்டினேன். மின்விசிறி யோட்ட, 
அண்ணாந்த  
கண்கள் நிறுத்தியது வெடுக்கென்று.

எட்டாத ஓட்டருகில் 
வேரின்றிப் படர்ந்த கொடி; 
எஃகிறகில் தூளிகட்டிப் 
படபடத்தது சிலந்திப்பூச்சி. 

ரத்தத்தை எச்சிலாக்கி,
எச்சிலை எழிலாக்கி, 
இரைக்கேங்கும் மெல்லியலைப் 
பாழாக்க மறுத்தது மனம். 
புழுக்கம் மெய்விதிர்க்க,
மல்சட்சை மழையாக 
இரக்கம், இரக்கம் என்று 
இதயத்தில் நனைந்து நின்றேன் 
நானும் ஒரு பாரி!
ஏன்?...

கருப்பு வீதி
பகல்கள் இருண்டால் 
முகில்கள் கொட்டும். 
இரவோ, கறுத்தால் 
நிலவின் குற்றம். 

விளக்கில் சிரித்த 
வீதிகள் தேம்பினால் 
யார் செய்த குற்றம்?- வெறிப் 
போர் பெற்றதோ, பூதம்?
________________