Pages

Sunday, May 12, 2019

அனுபவம் வெளிப்பாடு நவீன ஓவியம் :: கலைவெளிப் பயணங்கள் : ---வெங்கட்சாமிநாதன்

அனுபவம் வெளிப்பாடு நவீன ஓவியம் :: கலைவெளிப் பயணங்கள் : ---வெங்கட்சாமிநாதன் 
முன்னுரை

 ஒருவனுடைய முகச்சாயலை அப்படியே படம் பிடித்தாற்போல் கொண்டு வருவது எல்லோருக்கும் கைவந்த கலையல்ல. கார்ட்டுன் மாலிக்கு அது ஒரு இயற்கை வரம். வர்ண ஓவியங்களிலும், சிலையிலும் தத்ரூபமாக வடிப்பவர்கள் உண்டு. 'சுத்த கலைஞர்கள்' என்று தங்களைச் சொல்லிக்கொள்கிற சில ஆத்மாக்கள் இதைப் பார்த்துக் கேலி செய்வதுண்டு. 'அது கலையில்லை; புகைப்படத்தை ரொம்ப சாதாரணமான வித்தை' என்று அவர்கள் சொல்லி ஒதுக்குகிறார்கள். ஆனால் இப்படி ஒதுக்குகிற கலைஞர்களில் பெரும்பாலோருக்கு ஒரு முகத்தின் முக்கியமான சாயலையும் குணத்தையும் வடிக்கும் ஆற்றல் சித்தியாகவில்லை என்பது நமக்கு எளிதில் புரிந்துவிடும். அந்தத் தோல்வியை மறைப்பதற்காக, அவர்கள் 'அது கலையில்லை ' என்று மரத்தின் மீது ஏறி உட்கார்ந்து பேசுவது வழக்கம்.

ராமனையும் கிருஷ்ணனையும் நாம் பார்க்காத முகங்களையும் ' குணங்களை' மட்டும் காட்டி வரையலாம். ஆனால் பார்த்துப் பழகிய ஒரு முகத்தின் சாயலைக் கொண்டுவர முடியாமல், கைவந்தவர்களைக் 'கீழ்த்தரக் கலைஞர்கள்' என்று சொல்வது விதண்டாவாதம். மகாத்மா காந்தியை நாம் நேரிலும் திரைப்படத்திலும் பார்த்திருக்கிறோம். ஆனால் அவரைச் சிலையில் வடிப்பதாகச் சொல்லி, அவருடைய அப்பாவையும், தாத்தாவையும் போல வடிக்கிற முதல்தரக் கலைஞர்கள் சிலர் நம் நாட்டில் இருக்கிறார்கள். 'சாயல் வரவில்லையே' என்றால் நம்மைக் கோபித்துக்கொண்டு உதட்டோரமாக முறுவலிக்கிறார்கள்.

அந்த ஜப்பான்காரன் காகிதத்தைக் கத்தரித்து முப்பது விநாடிக்குள் தத்ரூபமாக முகச்சாயலைக் கொண்டு வரும் வித்தையைப் பார்த்ததும் இது ஞாபகம் வருகிறது. அவன் உயர்ந்த கலைஞன் அல்ல. ஒண்ணேகால் ரூபாய்க் கலைஞன்தான். சாதாரணத் தாளைக்கொண்டு நம்மைப் போல அரை நிமிடத்தில் நிழற்படம் கத்தரிப்பவன்தான். அப்பியாசமும் பண்பாடும் இல்லாமல் கையில் வந்ததைக் கிறுக்கி 'எக்ஸிபிஷன்' வைத்து கழுத்தை அறுக்கிற 'நவீனக் கலைஞன்' இல்லை ... (ப. 81-83)

ஒரு பெரிய ஹாலில் நூற்றுக்கணக்கில் வர்ண ஓவியங்கள் மாட்டியிருந்தன. விசாரித்ததில் ரேடியோ ஸ்தாபனத்தில் வேலை செய்யும் அதிகாரிகளும் ஊழியர்களும் தீட்டிய ஓவியக் கண்காட்சி என்று சொன்னார்கள். அதையும் போய்ப் பார்த்தோம். ஜப்பானின் ஓவிய மரபுகள் அத்தனையையும் அங்கே காண முடிந்தது. அத்தோடு, 'மகானுபாவன் பிகாஸோவின் ஏகலைவர்களும் கலைவழித் தோன்றல்களும் தீட்டிய பயங்கரங்களும் புதிர்களும் இடம்பெற்றிருந்தன.' (ப. 142)
('உதய சூரியன்' - தி. ஜானகிராமன்.)

இம்மாதிரியான அபிப்ராயங்களை ஒரு சாதாரண மனிதன் சொல்லியிருந்தால் நான் கவலைப் பட்டிருக்கப் போவதில்லை . சாதாரண மனிதர்கள் சந்தர்ப்பங்கள் எழும்போதெல்லாம் சொல்லும் அபிப்ராயங்கள்தாம் இவை என்பது நாம் கேட்டுக் கேட்டுச் சலித்த அனுபவம் சொல்கிறது.
 ஒரு சாதாரண மனிதனோ அல்லது வேறு துறைகளில் ஒரு சாதனை காட்டிய ஜானகிராமன் போன்றவர்களோ என்ன சொல்கிறார்களோ அவ்வபிப்ராயங்களைப் பொருத்துத்தான் ஓவியத்துறை பாதிக்கப்பட இருக்கிறது என்ற நோக்கிலும் நான் கவலைப்பட வில்லை .
என் கவலைகள் இரண்டு வகைப்பட்டவை. ஏதும் அறியாத சாதாரண மனிதனும் சரி, விஷயம் தெரிந்திருக்க வேண்டிய ஜானகிராமன் போன்றவர்களும் சரி, தாம் அறிந்திராத - சம்பந்தப்படாத, தம்மைத் தகுதிப் படுத்திக் கொள்ளாத விஷயங்களைப் பற்றியெல்லாம் அபிப்ராயம் சொல்ல தமக்குத் தகுதி கிடைத்திருப்பதாக நினைத்து விடுவதுதான். எந்தத் துறையானாலும் சரி முதலில் அதனுள் நுழைய, பின் அதுபற்றித் தெரிந்துகொள்ள, பின் அபிப்ராயம் கூறத் தகுதி வேண்டும், தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற ஒரு ஆரம்பப் பாடம்கூட, சாதாரண மனிதனும் சரி, வேறு துறைப் பிரமுகர்களும் சரி, கற்றுக் கொள்ளவே இல்லை .
எனது இரண்டாவது கவலை; இந்த அபிப்ராயங்களை ஜானகிராமன் பல இடங்களில் திரும்பத் திரும்பக் கூறி வருகிறார். டெல்லியில் நடக்கும் கணையாழி வாசகர் அரங்கில் பலமுறை இவ்வபிப் ராயங்களைக் கூறியிருக்கிறார்.
'இந்த மகானுபாவன் பிகாஸோ இருக்கிறானே, அவனுடைய Guernicaவில் ஏதேதோ பிரமாதமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். நமக்கு அதில் ஒன்றும் தெரிவதில்லை . இவர்களுக்கும் அதில் ஏதும் தெரிவதில்லை. தெரியாவிட்டாலும் எதையெதையோ கண்டு விட்டதாகச் சொல்லும் snobsதான் அதிகம்', என்றெல்லாம் ஜானகிராமன் அபிப்ராயங்கள் வெளியிட்டிருக்கிறார். எனக்கு மிகவும் ஆச்சர்யமும் வருத்தமும் அளிக்கும் விஷயம், இலக்கியத்தில் நல்ல சிறப்பான சாதனை காட்டியுள்ள ஒரு கலைஞனுக்கு, சங்கீதம் போன்ற ஒரு அரூபக்கலையில் ஈடுபாடு உள்ள ஒரு ரசிகருக்கு, குறிப்பாக சங்கீதத்தில் அவர் ஒப்புக்கொள்ளும் ஒரு வளர்ச்சியை, ஒரு கலை நோக்கை, ஒரு பார்வையை, சாதனைப் படைப்புகளை எதிர்காணும் ஆற்றலை, மனச்சாய்வை, ஏன் ஓவியத்திலும் சிற்பத்திலும் காண மறுக்கிறார்? அவர் கலை உள்ளத்தை அவை பாதிக்காதது எவ்வாறு என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. ஒரு ஆழ்ந்த கலை உள்ளம் இத்தகைய பட்டை போட்ட பார்வை கொண்டதாக இருக்க முடியாது என்பது என்வெகுகால நம்பிக்கை. இது ஜானகிராமனைப் பற்றிய விவாதம் இல்லை .
நம்மவர்களிடையே உள்ள பார்வைக் குறுகலையே இது காட்டுகிறது. இதற்குக் காரணம் நம்மிடையே நம் நாட்டில் சங்கீதம் நாட்டியம் ஆகிய இரண்டு கலைகளுக்குத்தான் ஒரு மரபும் பாரம்பரியமும் உள்ளது. ஆகவே இவ்விரண்டு துறைகளில் மாத்திரம் கலை எது, வெகுஜன கவர்ச்சி எது என்று நாம் சுலபமாக தரம் பிரித்துவிடுகிறோம். இரண்டையும் குழப்பிக் கொள்வதில்லை. ஏனெனில் இவ்விரண்டிற்கும் ஒவ்வொரு காலத்திலும், பயிற்சி பெற்ற, ரசிக மனம் படைத்த ஒரு சிறுபான்மையோரின் ஆதரவு காலம் காலமாக நமக்கு இருந்து வருகிறது. ஓவியம் சிற்பம் ஆகிய வேறு எத்துறைக்கும் இத்தகைய பயிற்சி பெற்ற சிறுபான்மையோரின் ஆதரவு கிடையாது. ஏனெனில் தொடர்ந்த பாரம்பரியம் கிடையாது.
இரண்டாவதாக மிகப்பெரிய ஒரு களங்கம், நம்மிடையே நமக்கு ஒரு சிந்தனை மரபு, ஒரு அறிவார்ந்த பாரம்பரியம் என்றுமே இருந்ததில்லை இதனால் எது பற்றியும் நாம் திறந்த மனத்துடன் . ஆராயவோ எதிர்கொள்ளவோ இயலாது போய் விடுகிறது.
மூன்றாவதாக ஒரு அடிப்படையான விஷயம்; இது என்னுடைய வெகுநாளைய நம்பிக்கை. இப்போதைய முடிவும்கூட. பல்வேறு கலைத் துறைகளாகவும், பல்வேறு சிந்தனைத் துறைகளாகவும் நாம் பிரிப்பன எல்லாம் ஒரு ஆழ்ந்த அடித்தளத்தில் ஒன்றானவை. ஒரே லட்சியத்தை நோக்கிச் செல்பவை. ஒரே ஒரு, நமக்குத் தெரியாத, பேருண்மையின் முன்னிருக்கும் திரையை அதிருக்கும் இடங்களில் எல்லாம் அகற்றி அவ்வுண்மையுடன் நம்மை எதிர்கொள்ள வைப்பவை. இலக்கியமும், தத்துவமும், பல்வேறு விஞ்ஞானப் பிரிவுகளும், பல்வேறு கலைகளும், சிந்தனைத் துறை களும் எல்லாமே அந்த அறியாப் பேருண்மையைக் காணும் பயணங்கள். உதாரணமாக, நாம் இருப்பது ஓர் இருட்டு அறை. இத்துறைகளெல்லாம் அவ்விருட்டறையிலிருந்து வெளியுலகை நமக்குக் காட்டும் பல்வேறு நிலைகளிலுள்ள ஜன்னல்கள். இந்த எல்லா ஜன்னல்களையும் திறந்து நாம் பெறக்கூடிய காட்சிதான் அவ்வெளியுலகத்தின் ஒரு சாத்தியமாகக் கூடிய அளவுக்கு முழு மொத்தமான அறிவை நமக்குத் தரும். இத்துறைகளெல்லாம் ஒரு ஆழ்ந்த அடிப்படையில் ஒன்றானவை. ஆதலால்தான் ஏதோ பார்வைக்கு இப்போதைய நம் அறிவின் அளவிற்குச் சம்பந்தமற்றுத் தோன்றும் ஒரு துறையில் பெற்ற அறிவு, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பல மற்ற துறைகளையும் பாதிக்கிறது. எந்த ஒரு துறையிலும் மற்ற துறைகளின் பரிச்சயமற்று ஏதும் தனித்துத் தெரிந்து கொள்வது என்பது இயலாததாகிறது. எனவே நாம் எந்த ஒரு துறையிலும் அதனளவில் மட்டும் நம் ஈடுபாட்டைச் சிறைப்படுத்துவோமானால், அந்த அறியாப் பேருண்மையைப் பற்றிய நம் அறிவு, நம் ஈடுபாட்டின், துறைகளின், குறுகலைப் பொறுத்து, பின்னப்பட்டதாகவே இருக்கும். இன்னும் ஒன்று: எந்த ஒரு துறையிலும் ஒருவனுக்கு உள்ள ஈடுபாடு : உண்மையானதாயின், மற்ற ஒரு துறையின் சாதனையை அவன் எதிர்கொள்ள நேரிட்டால், அந்த எதிர்கொள்ளலில் அவன் தன் துறையில் உள்ள தன் ஈடுபாட்டின் ஆழம், பரிமாணம் விரிவதை உணர வேண்டும். அவ்வாறில்லாது, தான் எதிர்கொள்ளும் வேற்றுத் துறைச் சாதனை, தன் துறை ஈடுபாட்டுக்குச் சம்பந்தம் இல்லாதது என்று நினைப்பானானால்,அவன் துறையில் அவனுக்குள்ள ஈடுபாடுகூட பொய்யானது என்று எனக்குத் தோன்றுகிறது.
இதுபற்றியெல்லாம் விரிவாகச் சொல்லவேண்டும். இப்போதைக்கு, எனக்கு இதுபற்றியெல்லாம் தெரிய சாத்தியமாகியுள்ளவரை, -- என்று எனக்குத் திட்டம் உண்டு. அத்திட்டத்தின் பரவலான முதல்படி இது.
இதில் 'அனுபவமும் வெளிப்பாடும்' என்பது பற்றியே சொல்லியுள்ளேன். அதுவும் ஒரு சில துறைகளைப்பற்றி மட்டுமே; அதிலும் மிகவும் sketchy ஆகத்தான். இந்த sketchinessக்குக் காரணம்: இந்தக் கட்டுரை எழுத இருந்த தூண்டுதல், ஒரு குறிப்பிட்ட தேதியில் படிக்க நேர்ந்த நிர்ப்பந்தத்தால் கிடைத்த நேரம், இவை வகுத்த வரையறைதான் காரணம். இவை பற்றி இன்னும் விரிவாகச் சொல்லவேண்டும். அனுபவமும் வெளிப்பாடும் என்ற அளவிலேயேகூட சினிமா, நாடகம், சிற்பம், தத்துவம் ஆக இன்னும் பல துறைகளைப் பற்றிச் சொல்ல வேண்டும்.
பின்னும், இவ்வெளிப்பாடுகள் (1) எவ்வாறு சிந்தனைத் துறைகளாக ஒருபுறமும், கலை இலக்கியத் துறைகளாக மறுபுறமும் பிரிகின்றன; (ii) பல்வேறு சிந்தனைத் துறைகள் ஒவ்வொன்றும், அவற்றின் படிப்படியான கால வளர்ச்சியில் ஒன்றை ஒன்று எவ்வாறு பாதித்துள்ளன, வளப்படுத்தியுள்ளன; (iii) இப்பாதிப்புகளின் நியாயம், காரணம் என்ன; (iv) இவற்றின் அடிப்படை ஒற்றுமை என்ன; (v) இப்பல்வேறு துறைகளின் ஒருமித்த தொகுப்பான அறிவு, எவ்வாறு இவை நமக்குப் பரிச்சயமாக்கும், நம்மை எதிர்கொள்ள வைக்கும், அறியா உண்மை பற்றிய அறிவை விஸ்தரிக்கின்றது, என்பன பற்றி யெல்லாம் இத்துறைகள் ஒவ்வொன்றின் ஆரம்ப காலத்திலிருந்து இன்றுவரை சொல்லப்பட வேண்டும். இதற்கெல்லாம் நான் காலத்தையும் சந்தர்ப்பங் களையும் எதிர்நோக்க வேண்டும். 

I can't describe her beauty in words. But I can play it on a Violin, '

இது எங்கோ படித்த ஞாபகம். யார் சொன்னது என்றும் ஞாபகம் இல்லை. அது இப்போது நமக்கு அவசியமும் இல்லை. ஆனால், தான் சொல்வது என்ன என்று அர்த்தம் அறிந்து சொன்னவனின் வார்த்தைகள் தாம் இவை என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. சம்பிரதாயமான நமது நினைவுப் பழக்கங்களைத் தகர்க்கின்றன இவ்வார்த்தைகள், வயலின் சப்தங்களை எழுப்ப உதவும் ஒரு வாத்யம். ஆனால் எழுப்ப நினைத்ததாக இவ்வார்த்தைகளிலிருந்து நமக்குப் படுவதோ ஒரு பெண்ணின் அழகு. அதாவது உடற்கூற்று ஒழுங்கு. இவ்வாக்கில், இருவேறு உறவற்ற அனுபவங்கள் இவ்வார்த்தைகளில் பிணைக்கப்படுவதாகத் தோன்றுகிறது. பார்க்கலாம்:

பெண்ணின் அழகு, வார்த்தைகளில், கவிதையில் வர்ணிக்கப்படுவது நமக்குப் பழக்கமான ஒன்று. பழக்கமான ஒன்று என்றேன். சாத்தியமான ஒன்று என்றோ நியாயமான ஒன்று என்றோ நான் சொல்லவில்லை . அழகு என்பது காட்சி அனுபவம் (visual experience). வார்த்தை என்பது கேள்வி அனுபவம் (auditory experiernce) இவ்வேறுபட்ட அனுபவங்கள் வெற்றிகரமாக ஒன்றிணைவதாக நாம் யோசனையின்றி ஒப்புக்கொள்வதும், மனம் அங்கீகரிப்பதும், வெறும் பழக்கத்தின் காரணமாக ஏற்படும் விளைவுகள். உண்மையில், நமது அநேக நம்பிக்கைகளில், தீர்மானங்களில், முடிவுகளில், நாம் வெறும் அடிமைகள்; பழக்கத்தின் அடிமைகள். பழக்கம் சிந்தனையின் இடத்தைப் பறித்துக்கொண்டுள்ளது.
வார்த்தைகள் வெறும் குறியீடுகள் (symbols). நாமாக, நம் செளகர்யத்திற்காக, நாம் ஏற்றுக்கொண்டிருக்கும் குறியீடுகள். இந்த சப்தம் என்ற சுயவரையறுப்பு தாம் வார்த்தைகள். ஆனால் சிந்தனைகளோ அனுபங்களோ அல்லது இவற்றின் நிகழ் அரங்கமாக இருக்கும் நாமோ, கணத்திற்குக் கணம் மாறிக் கொண்டிருக்கிறோம். 'நான்' என்ற உணர்வு என்னுள் பிறந்த கணத்திலிருந்து இக்கணம்வரை நிகழ்ந்த எல்லா அனுபவங்களின் சிந்தனைகளின் தொகுப்பு. இந்த 'நான்' ஆகிக்கொண்டிருக்கும், எனவே மாறிக்கொண்டிருக்கும் ஒரு உணர்வுத்தொகுப்பு. நேற்றுப் பார்த்த உங்களை, ஏன் கடந்த கணம் பார்த்த உங்களை , இக்கணம் நான் பார்க்கவில்லை. நானும் மாறியிருக்கிறேன். நீங்களும் மாறியிருக்கிறீர்கள். ஆனால் நம்மைக் குறிக்க நாம் ஒருவருக் கொருவர் வழங்கிக் கொள்ளும் குறியீடுகள் (அதாவது நம் பெயர்கள்) மாறாதவை.

உங்களில் ஒருவரைப் பற்றிய என் சிந்தனையோடு உங்கள் பெயரை இன்னொருவரிடம் நான் வழங்கும்போது உங்களைப் பற்றிய என் சிந்தனையிலிருந்து, உங்களைப் பற்றிய கேட்பவரது சிந்தனை மாறுபடுகிறது. இம்மாறுபாடு இப்போதைக்கு மட்டுமல்ல, இன்றோடு மட்டுமல்ல, நம் சிலரோடு மட்டுமல்ல, எத்தனை பேருடைய அனுபவங்களில் நான் நுழைகின்றேனோ, அவ்வளவு வேறுபட்ட தனித்தனி சாமிநாதன்கள்; உங்கள் ஒவ்வொருவருக்கென்று ஒவ்வொரு சாமிநாதன்; எ
னக்கென ஒன்று, என் மனைவிக்கென ஒன்று; என்னுடைய நினைப்பிலேயேகூட போன கணத்திற்கென ஒன்று; இக்கணத்திற்கென ஒன்று; இனிவரும் கணம் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு சாமிநாதன். ஆனால் சப்தக் குறியீடான 'சாமிநாதன்' என்ற பெயரோ நான் பிறந்த கணத்திலிருந்து மற்றவர் ஞாபகத்திலிருந்து நான் மறையும் வரை, உங்களுக்கும் எனக்கும் எல்லோருக்கும் ஒன்றுதான்; 'சாமிநாதன்'. 

இவ்வேறுபாடு சிந்தனை உணர்வைப் பொறுத்தது மட்டுமல்ல. காட்சி அனுபவமும் இவ்வாறாக வேறுபடுகிறது. 'நான்' என்ற பிரக்ஞை உணர்வு இடவிஸ்தாரத்தில் ஒரு புள்ளி, நான் பிறந்த கணமே உடன் தோன்றிவிட்ட புள்ளி இது. பிரக்ஞை உணர்வுள்ள ஜீவன் ஒவ்வொன்றும், இடவிஸ்தாரத்தில் தோன்றிவிட்ட ஒவ்வொரு தனித்த புள்ளியாகும். இப்புள்ளியிலிருந்துதான் உலகம் பிரக்ஞையில் உணரப்படுகிறது. ஆகவே எவ்வளவு பிரக்ஞை உணரும் புள்ளிகள் உண்டோ அவ்வளவு வேறுபட்ட உலகங்களும் இருக்கின்றன.

இந்த புள்ளி என்பது மிக மூலாதாரமான ஒன்று. இதிலிருந்து தான், இந்தப் புள்ளி வகிக்கும் இடத்தைப் பொறுத்துத்தான், நம் உணர்ச்சிகள் காட்சி அனுபவங்கள் எழுகின்றன மாறுபடுகின்றன. 
இந்தச் சிறு அறைக்குள் அடைபட்டுக் கிடக்கும் நாம், நம் பரஸ்பர பரிவர்த்தனையைப் பொருத்தவரையில், பிரம்மாண்டமான பிரபஞ்சத்தில் பல மில்லியன் ஒளி வருடங்கள் (light years) தூர இடைவெளியில் சுழன்றுழலும் வெவ்வேறு கிரஹங்கள்.

நாம், நம் ஒவ்வொருவரைப்பற்றியும், ஏதும் நிச்சயமாக உண்மை ஸ்வரூபத்தில் தெரிந்து கொள்வதில்லை. முடிவதில்லை. நம் பரிமாறல்கள் எல்லாம் குறியீடுகள். 'நாம்' கூட வேறு ஒரு உண்மை நாமின் குறியீடுகள். நம் பரஸ்பர அறிவு வெறும் அனுமானங்கள் தாம் (approximations that are pragmatic.)

இவ்வளவும் நான் சொல்வதற்குக் காரணம், வார்த்தைகள் என்பன அர்த்தங்கள் அல்ல, அவை அனுமானத்திற்கு உதவும் குறியீடுகள் தாம் என்பதை வலியுறுத்தத்தான்.
இதற்கு அடுத்த படி, கேள்விக் குறியிட்டு நம் முன் நிற்கிறது. இன்னதைச் சொல்ல இன்ன குறியீடு என்பது செயல்முறை செளகர்யங்களுக்காக பழக்கதோஷத்தினால் நாம் சட்டமாக ஏற்றுக்கொண்டிருப்பதுதான். நாம் பழக்கப்படுத்தப்பட்டிருக்கி றோமே தவிர, நாம் சிந்தனையற்று ஏற்றுக்கொண்டிருக்கிறோமே தவிர, ஏதும் ஒரு சிந்தனையோட்டத்திற்கோ, அனுபவத்திற்கோ இந்தக் குறியீடுதான் என்று ஏதும் வரையறை, சட்டம் கிடையாது. அனுபவங்களின், சிந்தனையின், பொருட்களின் உள்ளிருந்து பிறந்தன அல்ல, அவற்றைக் குறிக்க நாம் அவற்றுடன் துணைப்படுத்தும் குறியீடுகள். சிந்தனை அல்லது அனுபவம் இவற்றின் இயல்பிலோ அல்லது குறியீட்டின் இயல்பிலோ உள்ளார்ந்த இன்றியமையாமையினால் பிறந்தனவல்ல இவ்வரையறைகளும் சட்டங்களும். பழக்கம்தான் காரணம்; பழக்கம்தான், சட்டமாக, வரையரையாக மாறியிருக்கிறது. நாமெல்லோரும் பழக்கத்திற்கடிமைகளாதலால், நாளடைவில் இப்பழக்கங்களே நாமாக மாறிவிட்டதால், இச்சட்டங்களின் இறுக்கத்தைத் தகர்க்க, புதுமுறைக் குறியீடுகள் காண மேதை தேவைப்படுகிறது. அடுத்தது, அப்புதுமுறைக் குறியீடுகளை உணர்ந்து அங்கீகரிக்க, மேதையும், அறிவு சார்ந்த வீரமும் தேவைப்படுகின்றன.

நமது சிந்தனை வெளியீட்டிற்கும், அனுபவ வெளியீட்டிற்கும் நாம் தேடிக்கொள்ளும் குறியீடுகள், நம் மன இயல்பைப் பொருத்தன. நம் பார்வையை, அனுபவத்தைப் பொருத்தன. நான் சற்று முன்னால் சொன்னேன்: நாம் ஒவ்வொருவரும் தனித்து சஞ்சரிக்கும் வெவ்வேறு கிரஹங்கள் என்று; இதற்கேற்ப, நம் அனுபவங்கள், நம் உலகங்கள் மாறுபடுகின்றன என்று. என் உலகத்தில் நீங்கள் எல்லாம் அங்கங்கள். நீங்கள் என்றால் என் பார்வையில் படும் நீங்கள் மட்டும்தான். உங்கள் உலகம் அதில் சேர்ந்ததல்ல. அதே போல உங்கள் ஒவ்வொருவர் உலகத்திலும் உங்கள் பார்வையில் படும் நான் ஒரு அங்கம் ; ஒரு அணு; என் உலகம் அதில் சேர்ந்ததல்ல. ஆனால் பிறந்து அலறிய கணத்திலிருந்து என் வாழ்வு, என்னையும் என் உலகத்தையும் அறியும் தேட்டை (search) ஆகத்தான் எனக்குத் தோன்றுகிறது. என்னையும் என் உலகத்தையும் அறியும் தேட்டையில், உங்களையும் உங்கள் உலகத்தையும் பற்றிய என் அனுமானங்களும் சேர்ந்ததுதான். இல்லையெனில் என்னையோ என் உலகத்தையோ என்று நான் சொல்லும்பொழுது இரு வேறுபட்ட பொருள்களை அர்த்தங்களை நான் குறிக்க வில்லை. இவ்விரண்டு வேறுபட்ட வார்த்தைகளும் ஒரே பொருளின், ஒரே அர்த்தத்தின், இருவேறு ரூபங்கள், காட்சிகள். நான் அவ்வாறு ஆக்கிக்கொண்டிருக்கிறேன். செயல்முறை செளகர்யங்களுக்காக, சிந்தனா ரூப ஆரம்பத்தில் ஒன்றேயான ஒன்றை, நடைமுறை செளகரியங்களுக்காக, பகுத்து வைத்துக் கொண்டுள்ள ஒரு காரியார்த்த ஏற்பாடுதான்.

எனவே என் அனுபவங்களோ உலகமோ நான் உங்களுடன் கொள்ளும் பரிவர்த்தனைக்கு அளிக்கும் குறியீடுகளும், அல்லது அக்குறியீடுகள் என்ன அர்த்தத்தை வெளியிடுகின்றன என்று நீங்கள் அனுமானிக்கிறீர்களோ அந்த அர்த்தங்களும், அனுமானங்கள்தாம். இவையெல்லாம் உங்கள் உலக அர்த்தங்களுக்கு உங்கள் அனுபவங்களுக்கு ஒத்திசையாதவை. சில விஷயங்களில் ஒத்திசை வதாகவும் சில விஷயங்களில் ஒத்திசைவதில்லை என்றும் நீங்கள் நினைப்பது உங்கள் பழக்கத்தின் தவறு. உண்மை என்னவோ அவை என்றுமே ஒத்திசைவதில்லை.

இந்த ஒத்திசையாமை பல படிநிலைகளில் (at varying levels) பல வேறுபடும் உக்கிரங்களில் (in varying intensities) நிகழ்கிறது, உங்கள் நடைமுறை செளகர்யங்களுக்குக் குந்தகம் இல்லாது ஒரு சிறிதளவே வேறுபடும் ஒத்திசையாமையே, குறியீடு தன்னுள் கொண்டதனால், இவ்வனுமான வேறுபாட்டை நீங்கள் பார்க்க மறுக்கிறீர்கள்; அல்லது உங்களுக்குப் பார்க்கத் தோன்றுவதில்லை. ஆனால் இவ்வனுமானங்களின் வேறுபாடு என்னும் இடைவெளி அதிகரிக்குமானால், வேற்றுமையின் உக்கிரம் நம் நடைமுறை செளகரியங்களை வெகுவாக மீறுமானால், அப்பொழுதுதான் ஒத்திசையாமை ஒவ்வொரு குறியீட்டுப் பரிவர்த்தனையிலும், சிறிய பெரிய அளவில் நிகழும். இந்த சிறிய பெரிய எனப்படும் அளவு விவகாரம், குறியீட்டிலோ, ஒத்திசையாமையிலோ உள்ளார்ந்த தல்ல. நம் நடைமுறை செளகர்யங்களின் சார்பாகப் பிறந்தது.

இவ்வாறு நான் abstract ஆகவே சொல்லிக்கொண்டுபோகும் பொழுது, என் கருத்துக்களைத் தெளிவாகச் சொல்கிறேனா என்ற சந்தேகம் எனக்குத் தோன்றுகிறது. என் முன் அமர்ந்திருக்கும் உங்களில் ஒருவர் என் பார்வையில் படுவதற்கும், அவரைப்பற்றி நான் அறிவதற்கும் , அவர் பெயர் எனக்களிக்கும் அர்த்தத்திற்கும், பக்கத்தில் அமர்ந்திருக்கும் ஒருவர் கொள்ளும் பார்வை, அறிவு பெறும் அர்த்தம் இவற்றிற்கும் இடையே நிறைய வேறுபாடு உண்டு. ஆனால் இவ்வேறுபாடுகள் அவ்வளவு தெளிவாக நம் நடைமுறை காரியங்களில் குறுக்கிடுவதில்லை. இதனால் அர்த்தங்களில் வேறுபாடுகள் இல்லை என்றாவதில்லை.
மாறாக ஒரு அனுபவத்தை எடுத்துக் கொள்ளுங்கள். கண்ணுக்கெட்டிய தூரம்வரை, நாலாபுறமும் நிச்சலனமாக நிசப்தமாகப் பரந்து கிடக்கும் வெட்டவெளி. என்னைத் தவிர வேறு ஜீவனின் அசைவு இல்லை. அவ்வெட்டவெளியின் பரந்த மெளனம், சவ நிச்சலனம், பயங்கர ராக்ஷஸத்தனம் கொண்டதாகத் தோன்றுகிறது. மனத்தின் பீதியில், மெளனத்தின் ராக்ஷஸத்தனம் அகோர இரைச்சல் இடுவதாக, மல்லாந்து படுத்துக்கிடக்கும் மோனவெளி எக்கணமும் எழுந்து நின்று, கைகள் பரப்பி என்னை விழுங்க ஆயத்தம் கொண்டது போன்ற பயம் எழுகிறது. அடிவானத்தின் தூரத்தில், தொடு வானம் பார்வையை மறைக்கும் இடத்திலிருந்து ஒரு எருமையின் கதறல் எழும்பி அலையோடி மறைகிறது. ஒருமுறை மோனத்தைக் கிழித்து மறைந்த எருமையின் அக்கதறல் மௌனத்தை மடித்துவிடவில்லை. மௌனத்திற்கு ஒரு புது ஸ்வரூபம், ஒரு புது அர்த்தம் கொடுத்ததாகத் தோன்றுகிறது. ராக்ஷஸமாகப் பரந்து கிடந்து, எழுந்து நின்று என்னை பீதியடையச் செய்த மோனம் இப்போது சாத்வீகமாக படுத்துறங்கும் குழந்தையாக மல்லாந்து கிடக்கிறது. இப்போது அதனிடம் எனக்குப் பயமில்லை .

இது கவித்துவ கற்பனை அல்ல: அனுபவம். வேறு ஒருவர் அவ்வெளியில் இத்தடவை விளைச்சல் எப்படி, மாவுக்கு எத்தனை கலம் காணும், 15ஆ 18ஆ என்று கணக்குப்போட்டிருக்கலாம். இங்கு நம் அனுபவங்கள் ஒத்திசைவதில்லை. என் அனுபவம் உங்களுக்கு உண்மையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், பிடித்திருந்தது என வைத்துக்கொள்ளுங்கள். பின், இது கற்பனை, கவித்துவம் என்று பெயரிட்டு நான் வேறு எங்கேயிருந்தோ இறக்குமதி செய்தது போல் ஒதுக்கிவிடுவீர்கள். பிடிக்கவில்லை என்றாலோ, புரியவில்லை என்றாலோ, என் தேகநிலை, மனநிலை பற்றி உங்களுக்குள் கேள்வி எழுப்பிக்கொண்டு ஒதுங்கி விடுவீர்கள். இங்குதான் சிக்கல்கள் பல எழுகின்றன. நம்மில் அநேகருக்கு, நெல் விளைச்சலின் கலக்கணக்கு அனுபவம் எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை எனக்கு எருமையின் கதறல், மோனத்தின் பயங்கரத்தை சாத்வீகமாக்கியதும். இன்னும் ஒரு உண்மை ; உங்கள் கலக் கணக்கு மதிப்பீடு தவறு என்று பின்னால் நீங்களே ஒப்புக்கொள்ளவேண்டி வரலாம். என் அனுபவம் தவறவில்லை . அது உண்மை .

இத்தகைய கணங்கள் என்னை இப்போதைய 'நான்' ஆக ஆக்கியிருக்கின்றன. இந்த 'நான்' தான், நான் அறிந்த உலகம். உலகின் உறவில்தான் நான் என்னைக் காண்கிறேன். என்னுடைய 'நான்' -ல் தான் உலகத்தைக் காண்கிறேன். நான் இதை உணர்கிறேன். ஆனால் உங்களுக்குத் தெளிவாகச் சொல்ல முடிகிறதோ என்று எனக்குச் சந்தேகம். தெளிவிற்காக இதன் அர்த்தத்தைச் சிறிது நீர்த்து சிறிது மாற்றி சிறிது சுளுவாக்கி The world is an extension of this 'T' இவ்வுலகம் என் 'நான்' இன் விஸ்தரிப்பு என்று சொல்லலாம். நான் உங்களோடு பேசுகிறேன். பழகுகிறேன், வெளியே செல்கிறேன், படிக்கிறேன், சங்கீதம் கேட்கிறேன், எவ்வளவோ என்னென்ன வெல்லாமோ, எல்லாம் என் வாழ்க்கையை, என்னை, இந்த 'நான்' -ஐ ஆக்கியிருக்கின்றன. அவ்வளவும் நான் என்னையும் என் உலகத்தையும் அறியும் முயற்சிகள். அதேசமயத்தில் அவை உங்களையும் உங்கள் உலகத்தையும் அறியும் முயற்சிகள். உங்களுக்கும்கூட, என்னையும் என் உலகத்தையும் தெரிவிக்கும் முயற்சிகள். நான் உணவு உண்ணும் காரியத்திலிருந்து, படிப்பதை வேறாகப் பிரிப்பதில்லை. ஒரு குழந்தையைக் கட்டியணைத்துக் கொஞ்சும் நிலையிலிருந்து சங்கீதத்தை அனுபவிக்கும் காரியத்தை வேறாகக் காண்பதில்லை. என் வீட்டு மாடியில் தனித்திருந்து எட்டி  நீண்டு செல்லும் மோனத்தில் என்னை ஆழ்த்திக் கொள்வதிலிருந்து அகிரா குரஸ்வாவின் படம் பார்ப்பதை வேறாக நினைப்பதில்லை. ஏ.ராமச்சந்திரனின் சித்திரங்களைக் காணும் அனுபவத்திலிருந்து இலக்கியம் படிக்கும் அனுபவத்தை வேறாகக் காண்பதில்லை. பிரக்டின் நாடகத்தைப் பார்க்கும் அனுபவத்திலிருந்து ராம் லீலா மைதானத்தில் ராவணன் எரிக்கப்படுவதை வேறாகக் காண்பதில்லை. ரஸ்ஸல் படிப்பதோ, ஜே. கிருஷ்ணமூர்த்தி பிரசங்கம் கேட்பதோ, ஸெக்கோஸ்லாவேக்கிய பொம்மலாட்டம் பார்ப்பதிலிருந்து வேறுபட்டதாக நான் நினைப்பதில்லை. வேதாந்தம் சத்யநாராயணாவின் குச்சிபுடி நாட்டியம் பார்ப்பதி லிருந்து அலென் கின்ஸ்பர்க்கின் கவிதைகளைப் படிப்பது வேறாக எனக்குத் தோன்றுவதில்லை. இவையெல்லாம் ஒன்றுடன் ஒன்று உறவு கொண்டவை. ஒரு ஆழ்ந்த அடித்தளத்தில். வெளித் தோற்றத்தில்தான் இவை வேறுபட்டவை. நான் அவ்வாறு நினைக்கவில்லை . இலக்கியம், தத்துவம், சங்கீதம், நாடகம், ஓவியம், நம் அன்றாட வாழ்க்கை எல்லாமே, அவற்றின் உக்கிர அனுபவத்தில் ஒன்றானவை. எப்படி என் உலகம் என் 'நான்'னின் விஸ்தரிப்பு என்றேனோ அப்படியே இவையெல்லாம் என்னின், உலகத்தின், என் உலகத்தின் அங்கங்களான, அணுக்களான உங்களின், பின் மறுபடியும் உங்களின் விஸ்தரிப்பாக இருக்கும் உங்கள் உலகத்தின், உங்கள் உலகத்தின் அணுவாக இருக்கும் உங்களின், என்னின் வெளிச்சாயல்கள், வெளிப்பாடுகள். இவற்றில் எல்லாம் நான், என்னையும் உங்களையும் காண்கிறேன். இவையெல்லாம் நீங்கள் நினைப்பது போல வாழ்க்கையின் அலங்காரங்கள் அல்ல. சிறப்புக்கள் அல்ல. பண்பாட்டுச் சின்னங்கள் அல்ல. இவைதான் வாழ்க்கை. என் வாழ்க்கை. உங்கள் வாழ்க்கை . நான். என் உலகம். பின் நீங்களும் கூட. இவை யெல்லாம் வார்த்தைக் குவியல்கள் அல்ல. வெறும் விவரங்களின் பட்டியலாக உங்களில் ஒரு சிலர் இவற்றையெல்லாம் கேட்டு வரலாம். அப்படியாயின் மறுபடியும் இங்கு குறியீடுகளாக நிற்கும் நம்மின், பல அர்த்தங்களின் வேறுபாட்டையும், நம் அனுபவங் களின் ஒத்திசையாமையையுமே இது குறிக்கும். என்னளவில் இவை என் உணர்வின், என் உண்மையின் வெளிப்பாடுகள். வெறும் விவரங்களாகவோ வார்த்தைகளாகவோ நீங்கள் கேட்பீர்களானால் நீங்கள் எனக்கோ உங்களுக்கோ கூடத்தான் நியாயம் செய்தவர்களாக மாட்டீர்கள்.

நீங்கள் செக்காவின் ஒரு சிறுகதை படித்திருக்கலாம். ஒரு குதிரை வண்டிக்கார கிழவன், அவன் குதிரை, பின் அந்திம வாழ்வின் ஆதாரமாக இருக்கும் ஒரு சிறுவன். இம்மூவரும் ஒரு தனி உலகம் ஒருவரை ஒருவர் அண்டி வாழ்பவர்கள். ஒருநாள் அச்சிறுவன் இறந்து விடுகிறான். சிறுவனை இழந்த சோகம் கிழவனை அழுத்து வதைக்கிறது. தன்னுடைய துக்கத்தை இழப்பை யாரிடமாவது அவன் சொல்லி அழவேண்டும். தன் சகாக்கள் எதிர்ப்படுகிறவர் ஒவ்வொருவரிடமாக அவன் தன் துக்கத்தைப் பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறான். தன் வண்டியில் சவாரி செய்யும் பிரயாணிகளிடமும் தன் துக்கத்தைச் சொல்லி அழ முயற்சிக்கிறான். ஆனால் அவரவர்களுக்கு அவரவர் வேலைகளில் வாழ்க்கை நிர்ப்பந்தங்களில் அக்கறை. அவர்களில் யாருக்கும் கிழவனின் சோகத்தைப் பகிர்ந்து கொள்வதற்கோ, ஏன் காது கொடுத்துக் கேட்பதற்கோகூட நேரமில்லை, மனமில்லை. வெளியிடும் வகையற்று உள்ளத்தில் குமுறிப் பொங்கும் துக்கத்தைக் கடைசியில் அவன் தன் குதிரையிடம் சொல்லி அழுகிறான்.

என்ன கற்பனை! என்ன கற்பனை!! என்று நீங்கள் வியக்கலாம். உங்களில் சிலர் கண்ணீர் விடலாம். பிரமாதமான சிறுகதை என்று பாராட்டலாம். இவையெல்லாம் பல படிகள். ஆனால் இவ்வளவுதானா? இது வெறும் இலக்கியமா? இதைப் படித்தீர்களே உல்லாச வேளையைக் கழிக்கவா? செகாவ்தான் எழுதினானே, பத்திரிக்கை சன்மானம் பெற்று வீட்டு வாடகை கொடுப்பதற்கா?

செகாவ், அவனையும் அவன் உலகத்தையும் இங்கு எனக்குச் சொல்கிறான். அவனிடமிருந்து இதைக் கேட்கும் நான், என்னையும், என் உலகத்தையும், அறிகிறேன். இது அடிப்படையான உண்மை . பத்திரிகை, வாசகன், சன்மானம், இலக்கியம், சிறுகதை என்பதெல்லாம் இவ்வடிப்படை உண்மையின் முன் அர்த்த மற்றவை. இக்கதை அனுபவம் தான் 'நான்' மற்றும் என் வாழ்க்கை . 
தெய்வத்தின் முன் நின்று கைகூப்பி நமஸ்கரித்து வணங்கு கிறீர்களே கதறியழுகிறீர்களே அங்கு செகாவ் கதை அனுபவத்தை நான் காண்கிறேன். 'மலர்மஞ்சம்' நாவலில் பாலி கதவடைத்து தனித்து நாட்டிய சாதகம் செய்கிறாளே அங்கும் செகாவ் கதையைக் காண்கிறேன். தள்ளாத கிழவயதில் தன்னை ஆசிரமத்தில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று கேட்ட ஒரு முதுகிழவியிடம் 'தாயே, உன் பேரக்குழந்தையிடம் உனக்குள்ள அன்பே பிரார்த்தனை, தவம். அக்குழந்தையைப் பூஜித்து வா. காளியை பூஜை செய்தவளாவாய்', என்று ராமகிருஷ்ணர் சொன்னபோது, அவர் சொன்னது செகாவ் கதை. ஆண்டாள் பாசுரங்கள், ஆழ்வார்களின் பிரபந்தங்கள் எல்லாமே செகாவ் கதைதான். 'கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்', 'சாகிற காலத்தில் சங்கரா! சங்கரா!' என்னும் நம் நிந்தைகள் கேலிகள் எல்லாம் செகாவ் கதைகள். அப்பா கண்களால் விழித்து மிரட்டும் போது சமையலறைக்கு ஓடி குழந்தை தாயைக் கட்டியணைத்துக் கொள்கிறதே அங்கு நடப்பதும் செகாவ் கதை. சந்தியா வந்தனம் செய்ய ஆற்றங்கரைக்குப் போகும் அவசரத்தில் வில்லையும் அம்பையும் விட்டெறிந்த ராமன், ஆசிரமத்திற்குத் திரும்பியபொழுது, ஒரு தவளையின் மீது அம்பு தைத்திருந்ததைத் கண்டான். 'ராமா, மனிதர்கள் என்னைத் துன்புறுத்தினால் உன்னிடம் முறையிட்டுக்கொள்வேன். நீயே என்னைத் துன்புறுத்தினால் யாரிடம் முறையிட்டுக்கொள்வேன்' என்று அத்தவளை ராமனை நோக்கிக் கதறியதாம். வால்மீகியில் செகாவ் கதை நடக்கிறது. ஹைகோர்ட்டில் உங்கள் கேஸ் தோல்வியடைந்துவிட்டால் சுப்ரீம் கோர்ட்டுக்குப் போகிறீர்களே அங்கு நடப்பது செகாவ் கதை. சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் ஜயிக்கவேண்டும் என்று திருப்பதி வெங்கிடா ஜலபதிக்காக பணம் முடிகிறீர்களே மஞ்சள் துணியில், அது நீங்கள் படிக்கும் செகாவ் கதை. இடையிடையே ரயில் என்ஜின் புகையைக் கக்கித் தன்னைச் சுத்தம் செய்து கொள்கிறதே அது செகாவ் கதை படித்த புகைவண்டி. எங்கு நீங்கள் இலக்கியத்தையும், வாழ்க்கை யையும், பக்தியையும், மனவியலையும் தெய்வீகத்தையும், சட்ட விதிகளையும், வெறும் கதையையும், உங்கள் மூட நம்பிக்கையையும் பிரிக்கிறீர்கள்? எங்கு பிரிக்க முடியும்? இவையெல்லாம் தனித்தனி என்கிறீர்களே. உங்கள் அனுபவம் எவ்வளவு உக்கிரம் கொண்டது? உங்கள் வாழ்க்கை எவ்வளவு அர்த்தம் கொண்டது? நீங்கள் உங்களையோ என்னையோ, உங்களது எனது உலகங்களையோ, எங்கு புரிந்து கொண்டீர்கள்? குறியீடுகள் நீங்கள் பெறும் பொழுது, அக்குறியீடுகள் எவ்வளவு அர்த்தம் வாய்ந்தவை?

என் உலகம் ஏன் இப்படி இருக்கிறது? நான் ஏன் இவ்வாறெல்லாம் உணர்கிறேன்? ஏன் என் உலகமும் நானும் இப்படி உங்களுக்கு விசித்திரமானதாக, உங்கள் அனுபவத்துடன் ஒத்திசையாததாக இருக்கிறது? என்றெல்லாம் கேள்விகள் எழலாம். அதற்கு நான் பதில் சொல்லமுடியாது, பதில்கள் ஏதுமில்லை என்ற காரணத்தால். இந்த 
கேள்விகள் எல்லாம் அபத்தங்கள். எத்தனை அனுபவிக்கும் ஜீவன்கள் உண்டோ அத்தனை அனுபவங்கள், அத்தனை பார்வைகள், அத்தனை உலகங்கள், அத்தனை 'நான்-கள்' அத்தனை நீங்கள் என்றாகிவிட்டபொழுது உங்களிடமிருந்து வேறுபட்டவன் நான் என்று நீங்கள் கருதுவதோ, நீங்கள் என்னிடமிருந்து வேறுபட்டவர்கள் என்று நான் கருதுவதோ, இவையெல்லாம் கேள்விக்குரிய விஷயங்களாக, ஏன் என்று ஆராயக்கூடிய பொருள்களாக நீங்களோ நானோ நினைப்பது, அவ்வாறான கேள்விகள் நினைப்புகள் எல்லாம் தன்னுடைய 'நான்' -க்கு தன்னுடைய உலகத்திற்கு ஏதோ தெய்வ சாந்நித்யம் உண்டென்று நினைக்கும் அகங்காரம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. அறியாமை விளைவிக்கும் மூர்க்கத்தனமான கர்வம் என்றும் எனக்குத் தோன்றுகிறது. என்னை நான் அறிந்து கொள்ளும் முறை, என் உலகத்தை நான் அறிந்து கொள்ளும் முறை, உங்களையும் உங்கள் உலகத்தையும் அறிந்து கொள்வதில் தான் இருக்கிறது. இம்முயற்சி என்னையோ என் உலகத்தையோ பற்றிய அறிவிற்கு வளம் சேர்ப்பதாகவோ செழுமை உண்டாக்குவதாகவோ நான் நினைக்கவில்லை . மாறாக, நானும், என் உலகமும், உங்களையும் உங்கள் உலகங்களையும் அறிவதில்தான் இருக்கிறது.

இந்த என் உலகம் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் கட்டளையிட முடியாது. நீங்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவோ, வேண்டவோ முடியாது. நான் அதை நிச்சயிப்பவனில்லை. அது அமைந்த விதத்தில் அதை ஏற்றுக்கொள்ளும் நிர்ப்பந்தத்தில் நான் இருக்கிறேன். என் உலகத்தைப் புரிந்து கொள்ள முயற்சிப்பது போல அம்முயற்சியில் உங்களையும் புரிந்துகொள்ள நான் முயற்சிப்பது போல, நீங்களும் என்னையும் என் உலகத்தையும் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். நாமெல்லாம் அச்சுவெல்லங்களாக ஆக்கப்படவில்லை. அவ்வாறாக ஆக்கப்பட்டிருப்பதாக நினைக்கும் அல்லது ஆக்க நினைக்கும் அரசியல் சித்தாந்தங்கள், 'மக்கள் மக்கள்!' என கோஷமிடும் demogogues, பத்திரிகைகள், ஸ்தாபனங்கள், அரசாங்கங்கள், 'ஜனநாயக கொள்கைகள் நம்மிடையே உண்டு. இவையெல்லாம் நம்மிடையே ஒரு பவித்ர ஸ்தானத்தைப் பெற்று விட்டன. நாம் அச்சுவெல்லங்களாக வாழ்வதில் பெருமை அடைகிறோம். அது நமக்குப் பல செளகரியங்களைக் கொடுப்பதால். போகட்டும். நான் சொல்லவந்த விஷயத்தின் இழை 
 அறுகிறது. என் உலகம்; நான் எப்படி இருக்கவேண்டும் என்று நீங்கள் நிர்ப்பந்திக்க முடியாது என்று சொன்னேன்.

என் உலகத்தில் அதில் நான் கண்ட உங்களின், உங்களிடமிருந்து அறிந்த உங்கள் உலகத்தின், அர்த்தங்களின், அனுபவத்தின், வாழ்க்கையின் பல பரிமாணங்களைப்பற்றிச் சொல்லவேண்டும். இப்பரிமாணங்களைப் பற்றியும், குணங்களைப்பற்றியும் கூட, நீங்களோ, நானோ ஏதும் கட்டளையிட உரிமை நமக்கு இல்லை. பரந்த வெளியின் மோனத்தில், அதன் ராக்ஷஸத்தில் நான் சிக்குண்டதும், செக்காவின் குதிரை வண்டிக்காரக் கிழவன் குதிரையிடம் அழுது தன் சோகத்தைத் தீர்த்துக்கொண்டதும் ஒரு பரிமாணம். உணர்வுகளில், மன எழுச்சிகளில் ஒரு பரிமாணம்.

ஒரு நாள் என் காரியாலயத்தின் மாடியில் அதன் பால்கனியில் நின்றுகொண்டிருந்தேன். நல்ல பலத்த மழை பெய்து ஓய்ந்திருந்தது. சாலையில் இருமருங்கிலும் சிறுசிறு வாய்க்கால்களாக மழை நீர் ஓடிக்கொண்டிருந்தது. அங்கங்கே மழைக்காக கடைகளின் சார்ப்புகளில் ஒதுங்கியிருந்தவர்கள் வெளிக்கிளம்பிக் கொண்டி ருந்தனர். மடிந்த மழையின் சாரலும் சிறிது சிறிதாக மறைந்தது. மாலை தங்கவெயிலின் குளிப்பில் எல்லாமே, கடைகள், சிறுவாய்க்கால்கள், வீட்டுச் சுவர்கள், வெற்றுவெளி, எல்லாமே தங்கத்தில் குளித்து, அருவியின் பக்கத்தில் நீர் சொட்டச் சொட்ட நின்றுகொண்டிருக்கும், இன்னும் புடவை மாற்றிக் கொள்ளாத பெண்ணாக எனக்குத் தோன்றிற்று. பால்கனியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த எனக்கு கீழிருக்கும் பூமி, குளித்துக்கொண்டே செல்லும் மனிதக்கூட்டங்கள், தங்கமாக ஜொலிக்கும் வானவெளி எல்லாவற்றிலும் நான் ஒரு காட்சியை, கண்டு கொண்டிருக்க வில்லை. நான் கேட்டு அனுபவித்துக்கொண்டிருந்தேன். சூரியனின் பொன் கிரணங்கள் தந்தியாக மீட்டும் ஓர் இசை வானவெளியில் நிரம்பி வழிந்து வாய்க்கால்களாக ஓடுவதை நான் கேட்டுக்கொண்டி ருந்தேன். அந்த சங்கீதத்தின் சப்த உரு, அதன் இழை ஓட்டம் எனக்குத் தெரியும். ஆனால் அது என்ன ராகம், அது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் தாளம் என்ன, கர்நாடக சங்கீதமா, ஹிந்துஸ்தானியா அல்லது பீதோவனின் ஏதாவது தொருஸிம்ஃபனியா, என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. எனக்கு அக்கறை இல்லை. அவசியம் இல்லை. ஏனெனில் என் அனுபவத்திற்கும் இக்கேள்வி களுக்கும் உறவு இல்லை . ஆனால் அது சங்கீதம்தான்.

இந்த சங்கீதத்தின் சப்தரூபம் உங்களுக்கு இனம் காண முடியாததாக இருக்கலாம். உங்களுக்குப் பழக்கமான உருவில்தான் இருக்கவேண்டும் என்று என்ன நிர்ப்பந்தம்? உங்களுக்கு பழக்கமான சப்த உரு உங்கள் பக்கத்தில் இருப்பவர்க்குப் பழக்கமற்றதாக இருக்கலாம். உங்களுக்குப் பழக்கமான சப்த உரு தான் சங்கீதம் என்று ஏதும் தெய்வ சாந்நித்யம் உண்டா? ஏற்பட்டு, சம்பிரதாயமாக ஆகிவிட்ட உங்கள் கர்நாடக இசையைப் போன்று ஒரு அமைப்பு ஆகிவிட்ட சங்கீதமுறைகள் எவ்வளவு என்று உங்களுக்குத் தெரியுமா? தெரியாது. இன்றுவரை உள்ள அமைப்புகளின் எண்ணிக்கையோடு சங்கீத உலகம் தன்னை வரையறை செய்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் சட்டம் விதிக்க முடியுமா? 'இன்றுவரை உள்ள' என்று நீங்கள் சட்டம் விதிக்கும்போது, 'இன்று நீங்கள் வாழ்வதின் காரணமாக இன்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் நிர்ப்பந்தம் காரணமாக' என்பதை நான் உணர்கிறேன். உங்களுடைய இன்றைய வாழ்வின் சந்தர்ப்பத்தை தெய்வ சாந்நித்யமாகக் கொண்டு, காலத்தையும், உங்களைத் தவிர்த்த உலகத்தையும், உங்கள் குறைபாட்டுச் சிறைக்குள் அடைக்கும் உங்கள் அகங்காரம் எவ்வளவு மூர்க்கத்தனமானது என்பது உங்களுக்குத் தெரியவில்லை. மேலும் எந்த சங்கீதமும் இன்று உள்ள அமைப்புகளில் ஏதோ ஒன்றின் பிறப்பாகத்தான் இருக்கவேண்டும் என்று ஏதும் தெய்வ சாந்நித்யம் உண்டா? அப்படியானால் உங்கள் கர்நாடக சங்கீதமும் மற்றும் உலக சங்கீத முறைகள் அனைத்தும் ஏதோ ஒரு ஆதிபிறப்பான முறையின் பிறப்புகள்தானா?

உங்களுக்குத் தெரியாததாகவே இருக்கட்டும். பழக்கமில்லாததாகவே இருக்கட்டும். எந்த சங்கீத முறையின் சார்பும் இல்லாத தாகவே இருக்கட்டும். இது சங்கீதம் தான். இதையும் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இதன் அர்த்தத்தையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்குப் பழக்கமான கர்நாடக சங்கீத எல்லைக்கோடுகளையும் மறந்துவிட்டு. நான் உங்களுக்கு அறிவிக்கும் உலகத்தையும் என் அனுபவத்தையும் அந்த அனுபவத்தின் வெளிப்பாடாக உங்களுடன் பரிவர்த்தனை கொள்ளும் கருவியாக, குறியீடாக, நான் அளிக்கும் அதன் சங்கீத உருவத்தையும் நீங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஏனெனில் இதில் நான் உங்கள் நிர்பந்தத்திற்கு இணைய செய்யக்கூடியது ஏதும் இல்லை . என் அனுபவம், நான் கண்ட உலகம், அனுபவத்தின் போது நான் உணர்ந்த 'நான்', நான் இப்போது அளிக்கிறேனே இந்த சங்கீத ரூபமாகத்தான் எனக்குக் கிடைத்தது. அதையே நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் நிர்பந்தத்திற்குப் பணிவதோ, உங்களுக்குப் புரியுமாறு செய்யும் முயற்சிகளோ, எனக்கும் என் உலகத்திற்கும் என் அனுபவத்திற்கும் உண்மையல்லாத ஒன்றை என் பரிவர்த்தனையில் பிறப்பித்துவிடும். எனவே என் உலகத்தைப் பற்றி நான் அளிப்பதுதான் விதி. அதுதான் என் பாஷை. அதுதான் நான். உங்களுக்கு இப்போது உடன் புரியாது இருந்தால் கேட்டுக்கொள்ளுங்கள். அதுதான் நீங்களும்கூட.

இது புதிய விஷயமில்லை . நான் எதேச்சதிகாரம் செலுத்துவதாக நீங்கள் எண்ணக்கூடாது. நீங்கள் பல விஷயங்களில், புரிந்துகொண்டு உங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ளும் முறையிலேயே தான் இங்கும், உங்களுக்கும் எனக்கும் இச்சுதந்திரத்தை வழங்கிக் கொள்ளக் கேட்கிறேன். புரியவில்லை என்று சொல்லாதீர்கள். நீங்கள் பொய்யர்கள் ஆவீர்கள்.

சரி 'யுகியோயி' என்ற சப்த உருவை நீங்கள் எதிர்கொள்கிறீர்கள். உங்களுக்குப் புரிவதில்லை. அண்டை அயலாரிடம் கேட்கிறீர்கள், தெரிவதில்லை. 'சொல்லின் செல்வர்களைக் கேட்கிறீர்கள், தெரிவதில்லை . அகராதியை புரட்டுகிறீர்கள், தெரிவதில்லை . உங்கள் முயற்சியைக் கைவிடாவிட்டால் ஒருநாள் ஒரு ஐப்பானியன் உங்களுக்குச் சொல்வான், அது ஒரு ஓவியமுறை என்று. மாதிரிச் சித்திரம் ஒன்றையும் உங்களுக்குக் காட்டுவான். இது என்ன சித்திரம் இது? பாலு பிரதர்ஸ் போடுகிற கண்கவர் ஓவியங்கள் போல் இல்லையே. கொண்டையா ராஜுவின் அமரப்படைப்புகள் போல இல்லையே. யுகியோயியா? இது என்ன சப்த ரூபம்! எங்கள் தேனிலும் இனிய தமிழ் போல் இல்லையே! என்று நீங்கள் கேட்பதில்லை. ஒருவேளை நான் தவறு செய்கிறேன் என்று நினைக்கிறேன். சிலர் கேட்கிறார்கள் போலும். அவர்களை அலட்சியம் செய்துவிடுங்கள். அவர்கள் அறியாதவர்கள். மற்றவர்களும் அவர்கள் உலகங்களும் எப்படி இருக்க வேண்டும் என்று கட்டளையிடுபவர்கள். ஆனால் நீங்கள் அவ்வாறெல்லாம் கேட்பதில்லை. ஜப்பானிய சித்திர முறையையும் ஒப்புக் கொள்கிறீர்கள். அச்சித்திரமுறையைக் குறிப்பிட அவர்கள் தரும் சப்த ரூபத்தையும் ஒப்புக் கொள்கிறீர்கள்
அதுபோல, என் அனுபவத்தையும் ஒப்புக்கொள்ளுங்கள். அதை உங்களுக்கு வெளிப்படுத்த, நான் அனுபவித்தவாறு, கண்டவாறு 
அதன் இயல்பாக நான் புரிந்தவாறு நான் உங்களுக்குச் சொல்ல நான் நிர்பந்திக்கப்பட்டு அளிக்கும் சங்கீத ரூபத்தையும் ஏற்றுக் கொள்ளுங்கள். அந்த அனுபவத்திற்கு இதுதான் ரூபம். இதுதான் பரிவர்த்தனைக் குறியீடு என்பதையும் புரிந்து ஏற்றுக்கொள்ளுங்கள். என் அனுபவம் ஒரு அமைப்பின் பாற்பட்டதல்ல. ஆகவே என் குறியீடு வெளியீட்டு ரூபமும் ஒரு அமைப்பின் பாற்பட்டதாக முடியாது. ஒரு அமைப்பு சொல்வதையே எனக்குத் திருப்பிச் சொல்பவர்களிடம், நான் என்னைப் பற்றியோ அவர்களைப் பற்றியோ, எங்கள் இருவர் உலகங்களைப் பற்றியோ, நான் ஏதும் அறிய முடிவதில்லை. அமைப்பிற்கு அப்பால் செல்பவர்களிடம் தான், அவற்றை மீறுபவர்களிடம் தான், எனக்கு ஏதும் பரிவர்த்தனை இருக்கமுடியும். அவர்கள் உலகத்தால்தான் நானும் என் உலகமும் ஆக்கப்படுகிறோம்.

இன்னொரு சம்பவத்தைப்பற்றிச் சொல்லுமுன், உங்களிடம் ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும். இது, நான் சொல்பவற்றைப் பற்றி சில தெளிவுகளை அளிக்கும். எனக்கு எந்த சங்கீத அமைப்பு பற்றியும் எதுவும் தெரியாது. கர்நாடக சங்கீதமும் சரி, ஹிந்துஸ்தானி சங்கீமும் சரி, எது பற்றியும் எதுவும் தெரியாது. ஆனால் சங்கீதத்தில் எனக்கு ஒரு கவர்ச்சி. என் விதத்தில். என் அனுபவமுறையில் ஒரு ஈடுபாடு உண்டு. என் அனுபவத்தில் நான் இவற்றை அமைப்பாக பிரிப்பது கிடையாது. இந்தப் பின்னணியில் ஒரு சம்பவம்.

என் நண்பர் ஒருவர் வீட்டில் சில மேல் நாட்டு இசைத் தட்டுக்கள் கேட்டுக்கொண்டிருந்தேன். கூட, மூன்றாவதாக ஒரு நண்பரும் உடன் இருந்தார். ட்சைக்கோவ்ஸ்கியின் (Tchaikovesky) ஸிம்ஃபனி ஒன்று என்று நினைக்கிறேன், கேட்டுக்கொண்டிருந்த பொழுது (டெல்லியில் தான்) - மூன்றாம் நண்பர் சொன்னார்: 'it is showing somewhere' என்றார். எங்களுக்கு உடன்பாடான ஒரு ஆச்சரியம். என் மனதில் அப்பொழுது திரையோடிக் கொண்டிருந்தது, Brothers Karamazov படத்தில் ஒரு காட்சி: பனி மூடிக்கிடக்கும் வெளிய" குழந்தைகள் பனி உருண்டைகளை ஒருவர் மேல் ஒருவர் எறிந்து விளையாடிக் கொண்டிருக்கின்றனர். சில வளர்ந்த சிறுவர் சிறுமியர் Skating விளையாடிக்கொண்டிருக்கின்றனர். எனக்குப் படம் பார்?? பழைய அனுபவங்களின் நினைவு. It is snowing Somewhere' என்று சொன்ன நண்பருக்கு கிழக்கு ஜெர்மனியில் சில வருடங்கள் கழித்த அனுபவம். தன் ஆச்சரியத்தை வெளியிட்ட மூன்றாம் நண்பருக்கும் அதே அனுபவம். டெல்லியில், ஜூன் மாத வெயிலின் தகிப்பில் ட்சைக்கோவ்ஸ்கியின் ஸிம்ஃபனி கேட்டுக்கொண்டிருந்த எங்களுக்கு, கோடையின் சூட்டை சமமாக அறை முழுவதும் பாரபட்சம் இல்லாது பங்கிட்டுக்கொண்டிருந்த எங்களுக்கு ரஷ்யாவின் பனிக்காலக் குளிர் அந்த ஸிம்ஃபனியிலிருந்து பெருகிக்கொண்டிருந்தது. இன்று அதைப் பற்றிச் சொல்லும்போது எனக்கு அது ட்சைக்கோவ்ஸ்கிதானா என்பது சந்தேகம்தான். ஷாஸ்டகோவிச்சாகவும் இருக்கலாம். Prokofiev ஆகவும் இருக்கலாம். என் அனுபவத்திற்கு, இது, இந்த விவரம் அவசிய மற்றது எனத் தோன்றுகிறது. மேல்நாட்டுச் சங்கீதம் தெரிந்த ஒருவருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். அல்லது அவர் அந்த இசையின் கலை நுணுக்கங்களில் (technicalities of expression) ஆழ்ந்தும் இருக்கலாம்.

நான் எதற்காக இதையெல்லாம் சொல்கிறேன். சப்த ரூபத்தின் பிரவாஹத்திற்கு, காட்சி ரூப நிலைகளும் அர்த்தங்கள் ஆகக்கூடும். மாறாக, காட்சி ரூபத்தின் நிலைகளுக்கு சப்த ரூபத்தின் பிரவாஹம் குறியீடாக, அனுபவ வெளியீட்டு பாஷையாகக்கூடும் என்பதைக் குறிப்பிடத்தான்.

இனி நான் ஆரம்பித்த இடத்திற்குத் திரும்பலாம் என்று நினைக்கிறேன். I can't describe her beauty in words. But I can play it on a violin.'

நான் பார்த்த அழகி எனக்கு அளித்த அனுபவம் சங்கீதமாக இருந்தால், அவள் அழகு எனக்கு இசை ரூபமாக வந்தடைந்தால், நான் உங்களுக்கு அந்த அழகை சித்திரமாக தீட்டிக்காட்ட முடியாது. கவிதையாகப் பொழிய, யாப்பு என்ற புறாக்கூண்டில் எந்தகூடு சரியாக இருக்கும் அவள் அழகை அடக்க என்று தேடிக் கொண்டிருக்க முடியாது. நான் அவள் அழகைப் பார்க்கவில்லை; கேட்டேன். என் அனுபவம் அத்தகையது. அவ்வாறு நான் வெளியிடும்பொழுது அந்த இசை ரூபம் ஒரு பழக்கப்பட்ட அமைப்பின் இனம் காணத்தகும் துணுக்காக இல்லாமல் இருக்கலாம். அந்த இசை ரூபத்தின் தகுதியை (validity) ஜவிய நியாயத்தை (raison d'etre) நீங்கள் வேறு எங்கோ தேடி அலையக்கூடாது. அவற்றை அப்பெண்ணின் அழகை அனுபவித்தவனிடமும், அவ்வழகியிடமும், அந்த இசை ரூபத்திடமும்தான் காணவேண்டும். இந்த இசை ரூபத்திலிருந்து, அந்த அழகின் காட்டி ரூபத்தை நீங்கள் பெறமுடியாவிட்டால், உங்களுக்கு அந்த இரு புரியாவிட்டால் நீங்கள் உங்களையேதான் வெறுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் பேசும் பாஷை வேறு. இசைக்கலைஞனின் பாஷை வேறு. கலைஞன் அவன் பாஷையில்தான் பேசுவான். நீங்கள் அதைக் கற்றுக்கொள்ளவேண்டும். உங்களுக்கு ஸ்வாஹிலி பாஷை தெரியுமா? தெரியாது. இதற்கு யாரை நொந்து கொள்வீர்கள்?
ஆமாம், நீங்கள் என்னவோ புரியவில்லை புரியவில்லை என்று எதைப் பற்றியெல்லாமோ, எது எதற்கெல்லாமோ சொல்கிறீர்களே சரி வைத்துக்கொள்ளுங்கள், வார்த்தைகளில் இதை ஒருவன் இம்மாதிரியான சப்த ரூபமாகக் கண்டவன் சொல்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அல்லது பரிவர்த்தனை செய்து கொள்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள் அப்பொழுது அது உங்களுக்குப் புரிந்துதான் ஆகும் என்று ஏதும் நிச்சயம் உள்ளதா என்ன ?

ஒரு பெண்ணின் அழகு தரும் அனுபவத்திற்கும், இசைரூபமாக அது வெளியிடப்படுவதற்கும் எவ்வளவு உறவு அல்லது உறவு இல்லாமை இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களோ, அவ்வளவு உறவும் உறவில்லாமையும், வார்த்தை ரூபம், சித்திரக்காட்சி ரூபம், இன்னும் எத்தனை ரூபங்கள் உண்டோ அவ்வளவுக்கும் உண்டு. இந்த உறவும் உறவின்மையும், உங்கள் பயிற்சி, பயிற்சி இன்மை புரிந்து கொள்ளும் தகுதி, பழக்கம் இவற்றால் நிர்ணயிக்கப்படுவன அல்ல. ஒரு அனுபவத்தின் மூலம் (origin), அனுபவிப்பவன் பெற்ற அனுபவ ரூபம் இவற்றைப் பொறுத்தது,

அனுபவம் காட்சி ரூபமாக ஓவியம் தீட்டப்படுவதற்குப் பின்னர் வருகிறேன். இப்போது மொழி ரூபத்தைப்பற்றிப் பேசுவோம். ஜானகிராமனின் மலர் மஞ்சம் என்ற நாவலில் இரண்டு காட்சிகள்: ஜானகிராமன் உங்களுக்கு எல்லாம் புரிகிறவர்தான். தமிழ் உங்களும் கெல்லாம் தெரிந்த பாஷைதான். அப்படித்தானா? எனக்குச் சந்தேகம் தான். உங்களில் பலர் புரிந்துகொண்டதாக நினைத்துக் கொண+ ருக்கிறீர்கள். பார்க்கலாம்.

தஞ்சாவூர் பிரஹதீஸ்வரர் ஆலயப் பிரகாரத்தில் பாலி, ராமையா செல்லம், தங்கராஜு எல்லோரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிக்கிறார்கள். பாலி, பிறந்த க்ஷணமே தங்கராஜுவுக்கு வாக்களிக்கப் பட்டவள், அந்த வாக்கின் ஞாபகத்திலேயே வளர்க்கப்பட்டவள் அந்த வாக்கின் நிறைவேற்றத்தைக் காணும் நாளை எதிர்பார்த்தே கிழவனாகிவிட்ட ராமையா, பாலி என்று தனக்குக் கிடைக்கப் போகிறாள் என்று நாட்களை எண்ணும் தங்கராஜு. ஆனால் பாலிக்கு ராஜாவிடம் ஈடுபாடு. தனக்கு என்று ஒரு வாழ்க்கை , ஒரு இச்சை , மனம் உண்டு என்று எண்ணிப் பார்க்காதவாறு ஏதோ மாடு விற்பது போல ஒரு கரண்டி கடுகு அடுத்த வீட்டுக்காரிக்குக் கொடுப்பது போல, தான் பிறந்த க்ஷணம் தன்னை தங்கராஜுவுக்கு அர்ப்பணித்து விட்ட தந்தை ராமையாவிடம் பாலிக்கு ஒரு ஆற்றாமை. லட்சியத்திற்கும் வாக்கைக் காப்பாற்றும் நிர்ப்பந்தத் திற்கும், தன் ஒரே மகளின் இஷ்டத்திற்கு மாறாக நடந்துவிட்ட சந்தர்ப்பங்களின் சதிக்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருக்கும் ராமையா. தன்னைத் தாறுமாறாகப் பேசினான் என்பதற்காகவே வையன்னாவைக் கொலை செய்துவிட்டு வந்து நிற்கும் தங்கராஜு. அவனையா பாலி ஏமாற்றப் போகிறாள்? எட்டி அண்ணாந்து பார்த்த பாலியின் கண்களில் தஞ்சை கோபுரத்தின் உச்சியில் காக்கைகள் இரண்டு உட்கார்ந்திருப்பது படுகிறது. பாலி நினைக்கிறாள்; 'இரண்டு காக்கைகள் உட்காரத்தானா இவ்வளவு பெரிய வானளாவிய கோபுரத்தை நிர்மாணித்தான் ஒருவன்? ' இவ்வளவு தான் 'அப்பா நீங்கள் சொல்றது சரின்னு தோன்றதுப்பா' என்கிறாள் பாலி. "இது எத்தனை பேருக்குப் புரியும்? புரிகிறது?''

வார்த்தைகள்தான். தெரிந்த மொழிதான். ஆனால் இந்த இடத்தில் ஒரு Quantum jump நிகழ்ந்திருப்பது தெரியாமலேயே, உணராமலேயே, இங்கு ஒரு பாய்ச்சல் நடந்திருப்பதைப் புரிந்து கொள்ளாமலேயே, இந்த இடத்தில் மொழி தன் அரியாசனத்தி லிருந்து கீழிறங்கிவிட்டது என்பதை உணராமலேயே, கதையாகப் படித்து புரிந்துவிட்டதாக எண்ணி கதைச் சுருக்கத்தை அடுத்தவருக்கு ஒரு கர்வத்துடன் பெருமிதப் புன்னகையுடன் சொல்லும் வாசகர்கள் அநேகர் உங்களில் உண்டு. காக்கைகளின் இருப்பிடமாக கோபுரம் மாறிவிட்ட இழிநிலை வரை உங்களை அழைத்துச் செல்வது மொழி, சப்தரூபம். பின் ஒரு இடைவெளி. அந்த இடைவெளியை சப்தரூபம் நிரப்பவில்லை . பின் 'சரிப்பா, நீங்கள் சொல்றதுதான் சரின்னு படறது' என்று தொடரும் இடம் சப்தரூபம் பெறுகிறது. இடைப்பட்ட, இட்டு நிரப்பப்படாத இடைவெளி, எந்த ரூபமும் பெறாத ஒரு .Flash , மொழி இங்குதான் சிம்மாசனத்தை விட்டு இறங்கிவிடுகிறது. ஏனெனில், அனுபவத்தில், அதன் மூலஸ்தானத்தில், ஜானகிராமன் பெற்ற அனுபவத்தில் பாலியின் மனத்தில் நிகழ்ந்தது. சப்தரூபத்தில் அல்ல. இன்ன ரூபம் என்று வரையறை செய்ய முடியாத ஒரு ரூபமற்ற ரூபத்தில், Intuition என்று வைத்துக் கொள்ளுங்கள். Flash என்று வைத்துக்கொள்ளுங்கள், ஏதோ ஒன்று. உற்பத்தி ஸ்தானத்திலேயே அதற்குத் திட்டவட்டமான ரூபம் கிடையாது. அது ஒரு இடைவெளி. மொழியிலும் அதற்கு குறியீட்டு உருவம் கிடையாது. எனவே இங்கும் ஒரு இடைவெளி. இந்த ரூபமற்ற ரூபம், Intuition அல்லது Flash, உங்கள் பாஷையாக, உங்கள் அனுபவமாக, உங்கள் உலகமாக இல்லாவிட்டால், பாஷா ரூபத்தில் இட்டு நிரப்பப்படாது. ரூபமற்ற பாஷையால் நிரப்பப்பட்டிருக்கும் இவ்வெளியீட்டையும் நீங்கள் புரிந்து கொண்டிருக்க முடியாது.

இன்னும் ஒன்று. பாலி தன் வீட்டுக் கூடத்தின் தூணின் மேல் சாய்ந்து கொண்டு, ராமையா ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறாள். அவளுக்குத் தோன்றுகிறது! 'இந்த தூணுக்கு என்ன அர்த்தம்? ராமையா ஆடிக்கொண்டிருக்கும் இந்த ஊஞ்சலுக்கு, ஏன் ராமையாவுக்குத்தான் என்ன அர்த்தம்? இந்த தாழ்வாரத்திற்கு, அகப்பைக்கு, புழுக்கும் வெயிலுக்கு நின்று கொண்டிருக்கும் எனக்கு, இதற்கெல்லாம் என்ன அர்த்தம்?' என்று நினைக்கிறாள்.

ஜானகிராமனின் ஒரு சிறுகதையில், தன் மனம் ஈடுபட்டிருக்கும் ஒருத்தி வீட்டிற்குப் போகிறான் ஒருவன். அவன் போனபொழுது அவள் வீணை வாசித்துக் கொண்டிருக்கிறாள். அவள் வீணை வாசிப்பைக் கேட்டுக்கொண்டே, அங்கேயே அவள் வாசிப்பைத் தடுக்காமல் உட்கார்ந்து விடுகிறான். சிறிது நேரத்தில் அவள் வீணை வாசிப்பில் லயித்த அவனுக்கு அந்த சங்கீதத்தின் முன் தான், அவள் வாசிக்கும் வீணை, அவள், அந்த அறை, அங்கிருக்கும் நாற்காலி, சாமான்கள் உத்திரம் எதற்குமே அர்த்தமில்லாது போய்விட்டதாக வியர்த்தமாக, வீணாக இவையெல்லாம் எதற்கோ இங்கு நின்று கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.

இதெல்லாம் சரி. அப்படித் தோன்றுவதாக நீங்கள் படித்து விட்டீர்கள். எழுதப்பட்ட வார்த்தைகளுக்கு அகராதி அர்த்தம் உங்களுக்குத் தெரியும். ஆனால் அந்த உலகத்தின் அர்த்தம், அந்த அனுபவத்தின் அர்த்தம், அந்த அர்த்தமற்றுவிட்டதன் அர்த்தம் உங்களுக்குத் தெரியுமா? புரிந்ததா? எப்படி? இந்த அர்த்தம் எங்கு மொழி ரூபம் பெற்றிருக்கிறது? இல்லையே. உங்களுக்குப் புரிந்ததென்றால், அதற்குக் காரணம் ஒரு அனுபவம் இங்கு சப்த ரூபக்குறீயீடாக அளிக்கப்பட்டதால் அல்ல. ஏனெனில் அந்த அர்த்தமற்ற அர்த்தம் அதன் மூலஸ்தானத்தில் எந்த ரூபமும் பெறாதது. இந்த அர்த்தமற்ற அர்த்தம். உங்கள் அனுபவத்தில், சங்கீத ரூபக் குறியீட்டில் நீங்கள் பெற்றிருந்தால்தான், அந்த ரூபமற்ற ரூபத்தின் பாஷை தன் ரூபத்தின், தன் குறியீட்டு பாஷையில் வெளியிட முடியாது தோல்வியுற்று அடுத்த படிக்குத் தாண்டி பாய்ந்துவிட்ட இடைவெளியையும் நீங்கள் புரிந்துகொண்டிருக்க முடியும். நீங்கள் புரிந்து கொண்டது பாஷையால் அல்ல. ஏனெனில் மூலஸ்தானத்தில் அதன் ரூபம் ஒரு ரூபமற்ற ரூபம் - Intuition, a meditative flash.

பதினைந்து வருடங்களுக்கு மேலாக இருக்கும். நான் படித்த ஒரு கவிதையின் ஞாபகம். Goethe என்று நினைக்கிறேன். எனக்குச் சரியாக ஞாபகம் இல்லை. இங்கு தெரிந்தவர்கள் சொல்லக்கூடும் நிர்மலமான ஆகாயத்தை வெறித்துப்பார்த்துக் கொண்டிருக்கிறான் கவிஞன். ஆங்காங்கு சில மேகங்கள். தன்னை மறந்து அவ்வெளியின் வெறுமையில் ஆழ்ந்திருந்த கவிஞனின் பார்வையில், சற்று நேரத்திற்கு முன் அடிவானத்தில் ஒரு சிறு நாரைக்கூட்டம் குறுக்காகப் பறந்து வருவது தெரிகிறது. சில வினாடிகளில் அப்பறவைகள் வெண்புள்ளிகளாக பார்வையில் லிருந்து மறைந்து விடுகின்றன. கவிஞனின் கண்களில் நீர் வழிகிறது. அழுத்தி வதைக்கும் ஒரு சோக உணர்வு அவன் மனத்தைப் பிழிகிறது. அவ்வெற்று வெளியில் சிறிது நேரம் கண்ட ஜீவத் தோற்றத்தில் சலனத்தில் மறைவில் கணங்களின், நாட்களின், மாதங்களின் தன் குழந்தைகளின், சுற்றத்தின், உலகத்தின், பிரபஞ்சத்தின், தோற்றம் சலனம் மறைவு இவற்றைக் கண்டுவிட்டான் அவன். சோகம், சோகத்தின் குறியீட்டை, உபமானத்தைக் கண்ட சோகமல்ல. அவன் அறிந்த, சுற்றியிருந்த எல்லாவற்றின் தோற்றம், சலனம், மறைவு இவற்றின் நிதர்சனத்தை உணர்ந்து அனுபவித்த சோகம்.

இது இக்கவிதை உங்கள் ஓய்வு நேரப் படிப்பிற்காக உங்கள் கவிதாரசனைக்காக M.A. Literature பட்டம் வாங்குவதற்காக, சாஹித்ய அகாடமி பரிசு வாங்குவதற்காக, நான் இங்கு உங்களிடம் கட்டுரை படிப்பதற்காக எழுதப்பட்டதல்ல; அனுபவித்ததல்ல. இவையெல்லாம் எழுதப்பட்ட பின் அனுபவித்தபின் சம்பந்தமே இல்லாது உறவே இல்லாது பின்னர் நிகழும் நிகழ்ச்சிகள்.  உங்களைப்பற்றி அவனுக்குக் கவலை இல்லை. எந்தப் பறவை பறப்பதைக் கண்டு, உலகம் மறைவதாக உணர்ந்து, என்று நீங்கள் கண்ணீர்விட்டீர்கள்? படிப்பதற்குப் பிரமாதமாக இருப்பதாகச் சொல்லாதீர்கள். அது கவிஞனின் உலகத்திற்கும் கவிஞனுக்கும் செய்யும் துரோகம்.

உங்களுக்குப் புரிகிறதா? புரிகிறது என்றால் கவிஞனின் உலகத்தை நீங்கள் உணர்கிறீர்களா? அவன் சோகத்தை நீங்கள் பகிர்ந்து கொள்கிறீர்களா? இல்லையெனில், வார்த்தைகளால், மொழியால் எதையும் செய்துவிட முடியும், சொல்லிவிடமுடியும் என்று சொல்லாதீர்கள். உங்களுக்கு மொழி என்ற சாதனம் புரியும் கைவரப்பெற்றது என்று சொல்லாதீர்கள். வேஷம் வேண்டாம், அசட்டு கெளரவங்கள் வேண்டாம்.

இதுதான் அடிப்படை, அனுபவங்கள் ஒத்திசைய வேண்டும். மொழியால், எந்தப் பழக்கமான குறியீட்டாலும்கூட, அனுபவங்கள் ஒத்திசையாவிட்டால் எதையும் நீங்கள் புரிந்து கொள்ளமுடியாது. உணரமுடியாது. இந்த அனுபவ ஒத்திசைவை இருக்குமேயானால் அடுத்து நான் சொல்லப் போவதை புருவம் சுளிக்காமல் உணர்வீர்கள்.

ஜப்பானிய யுகியோயி கலைஞர்களைப் பற்றி ஒரு விமர்சனம்: 'அவன் ஒரு புல்லிதழைத்தான் ஆராய்கிறான். அப்புல்லிதழின் ஆராய்விலேயே, மரங்களையும், செடிகளையும் எண்ணிறந்த பூக்களையும், மிருகங்களையும், மனிதர்களையும், உலகத்தையும் அவனால் வரைந்துவிட முடிகிறது. வாழ்நாள் முழுவதும் அப்புல்லிதழை ஆராய்வதிலேயே செலவழிந்துவிடுகிறது. ஏனெனில் வாழ்க்கை மிகக் குறுகியது.'

இதை நீங்கள் உணர முடிகிறதா? இதன் அர்த்தம் உங்கள் நரம்புநாடிகளில் துடிக்கிறதா? இதை நான் சொல்லவில்லை யுகியோயி கலைஞன் எவனுமோ, டாக்டர் ஸஸக்கியோ சொல்லவில்லை . சொன்னது 1890-ல் தன் 37 வயதில் தன்னிலேயே தான் சுருண்டு ஆத்மீக தீவாந்திர தீக்ஷையில் வாழ்ந்து மறைந்த டச்சு சைத்ரீகனான வான்கோ சொன்னது. தன் சகோதரன் தியோவுக்கு எழுதிய கடிதத்தில் இக்குறிப்பு காணப்படுகிறது.

அணுவில் அண்டத்தைக் காண்பது பற்றி நம் தத்துவங்கள், தத்துவாச்சாரியர்கள் உங்களுக்குச் சொல்லும்போது தலையாட்டி 
விட்டு வருவீர்கள். இத்தத்துவத்தைக் கேளாத, தலையை ஆட்டாத ஜெர்மானிய கவிஞனும் ஜப்பானிய யுகியோயி கலைஞனும், டச்சு சைத்ரீகனும் அணுவில் அண்டத்தைக் கண்டார்கள். கேட்டு தலையாட்டிய ஆனால் நீங்கள் காணாத ஒன்றை. சிவாஜி என்றதும் ரீகல் தியேட்டர் முன் ஞாயிறு காலை ஆறு மணிக்கு நிற்கிறீர்களே நடுக்கும் குளிரைப் பொருட்படுத்தாது. சிவாஜி என்ற வார்த்தை அர்த்தப்படும் அளவிற்கு, புல்லிதழின் காட்சி, யுகியோயி கலைஞனுக்கும் வான்கோவுக்கும் உலக ஜீவனின் காட்சியாயிற்று. அர்த்தம், அனுபவம் முன் நின்றது. பறக்கும் நாரைகள் பிரபஞ்ச சலனத்தை ஜெர்மன் கவிக்கு அர்த்தப்படுத்தியது. உங்களுக்குப் புரியவில்லை என்று சொல்லாதீர்கள்.

பறந்து மறைந்த பறவைகளின் சலனத்தில், மறைவில் பிரபஞ்ச சலனத்ததையும் மறைவையும் கண்டதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். புல்லிதழை ஆராயும் யுகியோயி கலைஞனையும் நினைவில் கொள்ளுங்கள். அந்த மனத்தை, அனுபவத்தை நம் தத்துவங்களில் மட்டுமல்ல, ஒரு அணுவின் அமைப்பில் solar system -த்தைக் காணும் Modern physics இல் மட்டுமல்ல ஒவ்வொன்றிலும் நீங்கள் காணலாம். இதை பல ரூபங்களில் பலநிற வேறுபாடுகளில் காணலாம். Oscar Wide ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார். 'ஒரு குழந்தை அழுவதைப் பார்க்கும் போது உலகமும் அழுவது போல எனக்குத் தோன்றுகிறது. '

Edward Munch என்னும் Norwegian artist இன் CRY என்றொரு ஓவியம். பார்த்திருக்கிறீர்களோ தெரியுமோ என்னவோ. ஒரு பாலம். பாதை போன்ற ஒன்று, பின்னால் நீர்ப்பரப்பு இருண்டு சூழ்ந்த மேகங்கள். பாலத்தின் பாதையின் மீதே ஓர் உருவம் : இந்தச் சித்திரத்தைப் பார்த்தால் நீங்கள் நினைக்கலாம். 'இதைவிட நன்றாக நம்ம ஆனந்தவிகடன் கோபுலுக்கு வரைய வரும், பாலு பிரதர்ஸ் கொண்டையா ராஜு எவ்வளவோ தேர்ந்த கலைஞர்கள்' என்று நீங்கள் நினைப்பீர்கள். இந்த ஆளுக்கு ஒழுங்காகப் படம் போடவே தெரியவில்லை என்று தீர்மானித்து விடுவீர்கள். நீங்கள் வேண்டுவது எட்வர்ட் மூங்க்கின் உலகமல்ல. அவனுடைய அனுபவமல்ல. நீங்கள் வேண்டுவது மாறாக ஒரு Box Camera. Edward Munch ஒரு அமெச்சூர் போட்டோகிராபர் அல்ல. பாலுபிரதர்ஸம், கோபுலுவும், கொண்டையா ராஜுவும் செய்யும் வேலையை இந்த வேலையாள் ஒரு Box Cameraவால் பல நூறு மடங்கு நேர்த்தியாகச் செய்து விடுவான் அந்த வேலையில், படைப்பில் அனுபவம் இல்லை. இதை அறிவதன் மூலம் நான் எட்வர்ட் மூங்க்கையோ, என்னையோ, என் உலகத்தையோ காண்பதில்லை . உங்களையும் உலகத்தையும், நீங்கள் காண்பதில்லை.

எட்வர்ட் மூங்க்கின் பாஷை வேறு. அவன் உலகம் வேறு. அவன் பாஷை, அவன் கையாளும் நிறங்களில் அவன் Brush stokesல் இருக்கிறது. அந்த பாஷை உங்களுக்கு அந்நியமான பாஷை . அது அந்நியமானதால் அம்மாதிரி ஒரு பாஷை இல்லை. அநுபவமே இல்லை, உலகமே இல்லை, ஆதலால் எட்வர்ட் மூங்க் இல்லை என்று ஆகிவிடாது.

அவன் பாஷையைப் புரிந்துகொள்வதில் எதுவும் கஷ்டமில்லை. உங்களுடைய தீர்மானமான, கண்பட்டை போடப்பட்ட குதிரைப் பார்வைகளை, பழக்கத்தினால் யந்திரமாக எதிர்பார்ப்பவற்றை, முன் தீர்மானங்களை, நீங்கள் மறக்கவேண்டும். உங்களுக்குத் தெரிந்ததையே, உங்களுக்குப் பழக்கமானதையே, உங்களுக்குப் புரிவதையே எங்கும் பார்க்கவேண்டும், எல்லோரும் சொல்ல வேண்டும் என்பதில் உங்களுக்கு எவ்வளவு திருப்தி ! உங்களை நீங்களே கண்ணாடியில் பார்த்துக்கொண்டு உங்கள் அழகை ரசிப்பதில், உங்கள் பெருமைகளில் மயங்குவதில், உங்களுக்குத்தான் எவ்வளவு ஆனந்தம்! அப்படிப் பார்த்துக்கொள்வதால் இன்னொருவரைச் சந்தித்ததாகாது என்பது ஏன் உங்களுக்குத் தெரிவதில்லை? தெரிவதில்லை என்ற அறியாமை ஒருபுறம். உங்களைத் தவிர வேறு யாரும் இல்லை , இருக்க முடியாது, இருந்தாலும் அந்த அந்நியனின் இருப்பை அங்கீகரிக்க மாட்டேன் என்ற அகங்காரம் அது. தனக்குப் புரியாததை, தனக்கு அந்நியமானதை, தன் கிரஹிப்பிற்கு மீறியதைக் கண்டுவிட்ட தன் தாழ்வுமனப்பான்மை , உங்களுடைய innate inferiority, அந்த அந்நியத்தை மறுக்கச் செய்கிறது. உலகமே உங்களைத் திரும்பக் காட்டும் கண்ணாடியாக, உங்களுக்குப் புரிந்த உங்கள் சொற்களையே திரும்பச் சொல்லும் கிளிப்பிள்ளையாக இருந்து விட்டால் (இருந்துவிடவேண்டும் என்று விரும்புகிறீர்கள். நிர்ப்பந்திக்கிறீர்கள். கட்டளையிடுகிறீர்கள்.) பின் உங்கள் இருண்ட சாம்ராஜ்யத்தில் நீங்கள்தான் சக்கரவர்த்தி.

உங்கள் தாழ்வுமனப்பான்மையை மறந்துவிடுங்கள். ஒரு கலைஞனின் முன், அவன் உலகத்தின் முன், நிற்கும்பொழுது, உங்களுக்குத் தெரியாத ஒன்றை, அவன் சொல்ல இருக்கிறான். அவன் உலகம் உங்கள் உலகத்திலிருந்து மாறுபட்டது என்ற நினைப்போடு அவனை, அவன் உலகத்தை அணுகவேண்டும். அகவே அவன் படைப்பின் முன் கால்களை மண்டியிட்டு, அவனைத் தலை நிமிர்ந்து பாருங்கள்.

அனுபவத்திற்கு சப்தக் குறியீடுகளுடன் எவ்வளவு உறவோ, உறவில்லாமையோ கொண்டதோ, அவ்வளவு உறவும், உறவில்லாமையும் மற்ற குறியீடுகளுக்கும், வெளியீட்டு சாதனங்களுக்கும் உண்டு. Oscar wilde தன் அனுபவத்தை வார்த்தைகளில் சொன்னது நியாயம்தான் என்றால், எட்வர்ட் மூங்க் அத்தகைய தன் அனுபவத்தை நிறங்களாலும் தன் Brush strokesகளாலும் சொல்வதும் நியாயம்தான். இதற்கும், சப்தங்களுக்கு உள்ள அளவு உறவும் உறவில்லாமையும் உண்டு. சப்தத்திற்கு மாத்திரம் அனுபவத்துடன் உறவு உண்டு என்று அங்கீகரித்துவிட்டு, நிறங்களுக்கு, Brush strokesகளுக்கு, சங்கீதத்திற்கு அனுபவங் களுடன் உறவு இல்லை என்று சொல்வது சரியில்லை. உங்களிடம் அறிவார்த்த நேர்மையோ கலையுணர்வு நேர்மையோ உள்ளதா இல்லையா என்பதை இவைகளுக்கெல்லாம் நீங்கள் அளிக்கும் சம் அங்கீகாரத்தைப் பொறுத்துத் தீர்மானிக்க வேண்டும்.

இரண்டாவது வாதம்: குழந்தையின் அழுகையை துக்கத்தை உலகத்தின் துக்கமாக ஆஸ்கார் ஒயில்ட் காணும்போது அவனுடைய அனுபவத்திற்கு (an experience and response that is very much personal) எவ்வளவு தகுதி (Validity) உண்டோ அவ்வளவு எட்வர்ட் மூங்க்கிற்கும் உண்டு.

எட்வர்ட் மூங்க்கின் சித்திரத்தில் நீங்கள் பெரிதாக நினைக்கும் 'தத்ரூபம் கிடையாது. நீங்கள் கூட வரைந்து விடலாம் என்று நீங்கள் நினைப்பீர்கள். மகாராஜபுரம் விஸ்வநாதய்யர் பாட்டைக் கேட்டு "இது என்ன பாட்டு? இது மாதிரி ஊளையிட எனக்குத் தெரியாதா என்ன?' என நான் நினைத்தால் என்னை எவ்வளவு பெரிய புத்திசாலி என்று நீங்கள் நினைப்பீர்களோ, அவ்வளவு பெரிய புத்திசாலியாகத் தான் தத்ரூபத்தை சித்திரத்தின் ஆதியும் அந்தமுமாக நினைக்கும் கட்டளையிடும் உங்களையும் நான் நினைப்பேன். தத்ரூபம் தான் உரைகல் என்றால், சங்கீதமே இராது; வெறும் பேச்சுத்தான், நம் பேச்சின் பதிவுகள் தாம் கலையாகிவிடும் என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்ப்பதில்லை. இம்மாதிரியான அறிவார்ந்த கலையுணர்வின் நேர்மையின்மைக்குப் பின்னர் வருகிறோம் இப்போதைக்கு எட்வர்ட் மூங்க்கில் இல்லாத தத்ரூபத்திற்காக நீங்கள் முகம் களிக்கக்கூடாது என்றேன். எட்வர்ட் மூங்க் கண்ட உலகம், உங்களுக்குச் சொல்ல விரும்பும் உலகம் , 'கவி ஒருவனுக்கு..... இல்லையெனில் ஜகத்தினை அழிந்திடுவோம், என்ற பாரதி, உலகம் தனிமனிதனிடம் அவன் சுகத்தில், சோகத்தில் ஜகத்தின் சோகத்தை சுகத்தைக் கண்ட உலகம். பாரதிகூட அந்தத் தனிமனிதன் வெங்கட்ராமனா, சாமிநாதனா என்ற பெயர், ஊர், விலாசம் எதுவும் கொடுக்கவில்லை . எட்வர்ட் மூங்க்கின் Cry என்ற சித்திரத்தில் அழும் ஜீவனை நீங்கள் கண்டால்போதும் அது ஆணா, பெண்ணா, குழந்தையா, கிழவனா என்றுகூட நீங்கள் காண முடியாது, அவசியமில்லை என்ற காரணத்தால். அந்த அழும் ஜீவன் மிகக்குறைந்தபட்சக் கோடுகளால் (அவை கோடுகளும் அல்ல பட்டையான தீட்டல்கள். இந்தத் தீட்டல், அழும் உருவத்தை (அழும்பொழுது உங்கள் உதடுகள், முகம், புருவங்கள், கோணிச் செல்கின்றனவே, அதுபோல, அக்கோணல்களின் தொடர், கோணி உங்கள் உதடு துடிப்பது போல் உடலே துடிக்கும் தோற்றம் கொள்கிறதே, அது போல) ஒரே சீரான பட்டைத் தீட்டல்களால் அச்சித்திரம் முழுதும் வரையப்பட்டுள்ளது. இந்த அழும் சதைக் கூட்டத்தின் தொடராக, அந்த ஜீவனைச் சுற்றியுள்ள காட்சிகள் யாவும் அந்த ஜீவனின் அழுகையைத் தாமும் பகிர்ந்து எதிரொலித்து அழுதது போல் தோற்றம் கொள்கின்றன. ஏனெனில் அவையும் இதே பட்டையான தீட்டல்களால் தான் சித்தரிக்கப்பட்டுள்ளன. வெறும் கற்பனை அல்ல. உண்மை இது மனிதாபிமானத்தைப் பொறுத்தது இது. உங்கள் அளவுகடந்த அனுபவம், உங்கள் அன்பிற்கு ஆளான ஜீவனைத் திடீரென இழந்துவிட்டால் உலகமே வெறிச்சென்று ஆகிவிட்டதை, ராமலீலா மைதான பெருந்திரள் கூட, உங்களுடன் உறவற்ற, அன்பற்ற, உயிரற்ற வெறும் நிழல் கூட்டமாக ஆகிவிடுவதை நீங்கள் உணர்ந்திருக்கலாம்.

உங்கள் பிரத்யேக, இருட்டறை மனச்சாய்வுகளை அறியாமையை ஒதுக்கி வைத்துவிட்டு, அடுத்தவனின் உலகு எத்தகையது என்று அறியும் நோக்கோடு எதிர்கொள்ள வேண்டும். உங்கள் பாட்டியின் நீட்டிய கால்களின்மேல் தலைவைத்து 'ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு ராஜா இருந்தானாம். அவனுக்கு ......' என்று கதை கேட்டுவிட்டு, 'ஜானகிராமனோ க. நா. சுப்பிரமணியமோ ஏன், இந்த மாதிரி கதை
எழுதவில்லை , இவர்களுக்கு என்ன தெரியும்?' என்று நீங்கள் வினா எழுப்புவதில்லை .

இந்த தத்ரூபம் என்ற பார்வை, என்றுமே எந்த நாட்டிலுமே வருந்ததில்லை . இடையில் சமீபகாலத்தில் ஏற்பட்ட சீரழிவு இது.
நம்முடைய Prudery, false puritanism, ஏதோ ஒன்றை , இல்லாத ஒன்றை நம் பண்பாடு என்று சொல்லி நாம் போடும் கூச்சல்கள். நம் பேச்சுகள், நடவடிக்கைகள் எல்லாம் நம்முடைய சமீபத்திய சீர்கேட்டின் அறிகுறியாவது போல் இந்த தத்ரூப சித்தாந்தம் சமீபத்தியது. சீரழிவின் அறிகுறி. நாம் ஆராய்ந்து பார்த்தால் தத்ரூபம் என்ற ஒன்று எதிலுமே இல்லை என்பது தெரியும். தத்ரூபம் என்பது மிகவும் மேலெழுந்தவாரியான, ஆழமற்ற ஒன்று. இது உண்மையில் நாம் நடைமுறை செளகரியங்களுக்காக நாம் உண்டாக்கிக் கொண்டுள்ள ஒரு Convenient artificiality. தத்ரூபம் என்றால் எதன் தத்ரூபம்? உணரும், பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றும் தனித்தனி ரூபம் தோற்றம் கொள்கிறது என்னும்போது...ம் ஒவ்வொருவர் என்று எதைச் சொல்வது? தத்ரூபம் என்று நீங்கள் வேண்டும் பொழுது, 'என்னைச் சிரமப்படுத்தாதே' என்று வேண்டுகிறீர்கள். ஒரு உணர்வுள்ள மனிதனுக்கு தத்ரூபம் என்ற ஒன்று இல்லவேயில்லை. அவன் காணும் ரூபம்தான் உண்டு. நீங்கள் ஆழச் செல்லமுடியாதவாறு, உக்கிரமாக உணர முடியாதவாறு, மேலாகவே நின்றுவிட்டுக் காண்கிறீர்களே, உங்களைப் போன்றவர்களுடன் அவர்களும் நீங்களும் அன்றாட நடைமுறை செளகர்யங்களுக்காக அவரவர் மேல்வாரியான ரூபத் தோற்றத்திற்கு, அனுபவத்திற்கு ஒரு சமரசம் செய்துகொண்டு இந்த ரூபத்திற்கெல்லாம் ஒரு அச்சை (type) நிர்ணயித்து வைத்துக் கொண்டிருகிறீர்கள். அந்த ரூபத்தை, அனுபவத்தை தெய்வ சாந்நித்யமாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அந்த ரூபம் அனுபவம், ஆழ்ந்த உணர்வுள்ள ஒருவனின் ரூபத்துடன், அனுபவத்துடன் ஒத்திசையாவிட்டால் அதில் தத்ரூபம் இல்லையென
அவனுடைய உலகத்தை நிராகரித்து விடுகிறீர்கள்.

இதெல்லாம் ஏதோ புதிதாக ஏற்பட்டவை என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் கலாச்சாரத்திற்கு, பண்பாட்டிற்கு அப்பாற்பட்டது, எனவே வெறுத்து ஒதுக்கத்தக்கது, நிராகரிக்கத் தக்கது ' என நிச்சயித்துவிடுகிறீர்கள். சரி, அந்த உங்கள் கலை, பண்பாடுதான் என்ன? அதில் தத்ரூபம் எங்கிருக்கிறது என்று பார்க்கலாமா?


எதிலிருந்து ஆரம்பிக்கலாம்? மதுரை நாயக்கர் காலச் சிற்பங்கள். எடுத்துக்கொள்ளலாமா? அல்லது ராஜராஜனின் கங்கைகொண் சோழபுரச் சிற்பங்களை எடுத்துக் கொள்ளலாமா? அல்லது பல்லவ. கால கைலாசநாதர் கோயில் சிற்பங்களையா! அல்லது கல்யாண சாளுக்கியர்களின் ஹொய்சால சிற்பங்களையா? அல்லது கிருஷ்ண தேவராயர் காலத்து ஹம்பி சிற்பங்களையா? அல்லது சாளுக்கியர் கால நாகார்ஜுனகொண்டா சிற்பங்களையா? அல்லது சாளுக்கிய-குப்த ஒன்றியைவைக் காணும் கொணாரக் சிற்பங்களிலா அல்லது எல்லோரச் சிற்பங்களிலா? அல்லது கிரேக்கர் பாதிப்பு பெற்ற காந்தார சிற்பங்களையா? அல்லது பாலர்களின் நலாந்தா சிற்பங்களையா? இவற்றில் எதில், எந்த சிற்பமுறைகளில், எந்த சிற்பங்களில் தத்ரூபத்தைக் காண்கிறீர்கள்? அல்லது எந்த ஒவிய தத்ரூபத்தைக் காண்பதில்லை? சித்தன்ன வாசல்? அஜந்தா? குகை ஓவியங்களில்? அல்லது தஞ்சாவூர் கிருஷ்ணன் படத்தில்? எதில் தத்ரூபம் காண்கிறீர்கள்? இவையெல்லாம் distorted imagesதான் என்பது ஏன் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லை ராமஸ்வாமி கோயில் சிற்பங்களில் அங்க அழகுகள் எவ்வளவு தான்? கும்பகோணம் கவர்ச்சி ததும்ப இருந்தாலும் அதுவும் சிற்பியின் மனத்தில் கற்பனை செய்யப்பட்ட லக்ஷிய மனித ரூபத்திற்கேற்ப, வலிய மாற்றியமைக்கப்பட்ட மனித சித்திரங்கள், இயற்கையானவை அல்ல என்பதையும், நீங்கள் கொண்டுள்ள தத்ரூப image இல்லை என்பதையும் ஏன் மறந்து விடுகிறீர்கள்? சாஸ்தா கோயில் வாசலில் மீசையும் அரிவாளுமாக நிற்கும், பூதாகார உருவத்தைப் பாருங்கள். அங்கிருக்கும் குதிரை யானைகளைப் பாருங்கள். புராதன தொல்பொருள் ஆராய்ச்சியாளர் தோண்டியெடுக்கும் terracota clay figures-ஐப் பாருங்கள். மொகஞ்சதாரோ, ஹரப்பா முத்திரைகளைப் பாருங்கள். பங்கூரா குதிரைகளைப் பாருங்கள். உங்கள் தத்ரூப் வேண்டுதலுக்கு அடிபணியும் ஒரு கலைப்படைப்பை எனக்கு எங்கிருந்தாவது காட்டுங்கள். உங்களுக்குக் கிடைக்கும் என்று கூடத் தோன்றுகிறது. எங்கே? நானே சொல்லிவிடுகிறேன். சென்னைக் கடற்கரையில் (Maidenform brazzierre) அணிந்து நிற்கும் கண்ணகியைக் காட்டுவீர்கள். ஆனால் நான் கேட்டது ஒரு கலைப்படைப்பை. உங்கள் மன விகாரங்களை அல்ல.

நம் சித்திரங்களிலேயே நீங்கள் பார்க்கலாம் அஜந்தா, சிகிரிய சித்தன்னவாசல் உருவங்கள்distort செய்யப்பட்டவை. நீங்கள் அறிந்? ரூபத்தில் வருவது என்பது எதையுமே சொல்லாததாக, கலைஞன் த
 பார்வையைச் சொல்லாததாக ஆகிவிடும். சாகித்யத்தின் மொழி ரூபமேடு பள்ளங்களைப் பிசிறுகளை தொங்கும் உதிரிகளை, குழைத்து, தன் இசை ரூப அச்சில் சங்கீதக்காரன் பதித்து விடிவது போல், நமது உடற்கூறுகளின் பிசிறுகளை, தொங்கும் திரிகளை எல்லாவற்றையும் அவனது லட்சிய ரூபத்தின் அச்சுக்கு இசைய இழைத்து விடுகிறான் அக்குகை ஓவியன். இவையெல்லாம் தசை நார்களோ, எலும்புகளோ, கடின பிசிறான ஓரங்களோ, எதுவுமே இல்லாத streamlined figures அங்கங்கள், கண்கள், தலை அலங்காரங்கள், மேகப்பின்னணிகள், சுற்றிருக்கும் உருவங்கள் எல்லாமே ஒரு மொத்த இசை ரூபத்தின் பல்வேறு இழைகள்.

நம் தஞ்சாவூர் சித்திரங்களைக் காண்பீர்களானால் கண்ணனின் முன், ஏதோ ஒரு தெய்வத்தின் முன் கைகூப்பி நிற்கும் பக்தர்கள், அது கோபிகா ஸ்திரீகளாக இருந்தாலும் சரி, அர்ச்சகப் பெருமான் ஆக இருந்தாலும், யசோதையாக இருந்தாலும் சரி அல்லது தெய்வத்தின் இரு பத்தினிகளாக இருந்தாலும் சரி, அவை எல்லாமான கூட்டமான புகைப்பட பதிவாக இராது. தெய்வம் நீங்கலாக மற்ற எல்லாம் ஏதோ பிள்ளையார் காலடியில் தலை நீட்டிப் பார்க்கும் மூஞ்சூறுகளாக, சிறுச்சிறு உருவங்களாகத் தீட்டப்பட்டிருக்கும். தத்ரூபமா இது? நமது சிறுமை, சிற்றுருவத்தால் சொல்லப்பட்டிருக்கிறது. இங்கு மட்டுமல்ல, எங்கேயும்தான்.

ஐரோப்பிய ஓவியம், சிற்பம் இவற்றை ஆதிகாலத்திலிருந்து எடுத்துக்கொள்ளுங்கள். கிரேக்க சிற்பங்கள் எவையும் தத்ரூபமானவை அல்ல. அவையெல்லாம் idealized distortions. அவர்களுக்கென ஒரு தனி Conception of beauty இருந்தது. ஐரோப்பிய ஓவிய ஆரம்பங்களை எடுத்துக்கொள்ளுங்கள், கியோட்டோவின் சுவர் சித்திரங்கள்: அச்சித்திரங்களில் உள்ள மனித உருவங்கள் புகைப்பட யதார்த்தரீதியாக மனித உருவங்கள் என இனங்கண்டு சொல்லப்படத்தக்க மனித உருவங்கள் தாம். ஆனால் அது இரண்டாம் பட்சம். அதுவல்ல கியோட்டோவின் சாதனையும் முயற்சியும். அவ்வுருவங்களைச் சுற்றியிருக்கும் கட்டிடம், இன்னும் மற்ற பொருட்களின் ரூபசமனம் (harmony of orms) தான் கியோட்டோ மனதில் கொண்டது. மனித ரூபங்கள் "மனித' என்ற அடைமொழி அற்ற ரூபங்களாக, வெற்று ரூபங்களாக, சுற்றுப்புற ரூபங்களுடன் ஒத்திசைத்து சமனப்படும் ஒத்திசைத்து சமன்படும் ரூபங்களாக architectonics எனச் சொல்லப்படும் : சமனமாக, கட்டமைப்பாக, கியோட்டோவின் மனதில் பல சித்திரமாக தீட்டப்பட்டுள்ளது. Raphel-ன் School of Athen சுவர்ச் சித்திரத்தைப் பார்த்தீர்களானால் இந்த architectonics ) கருத்து அதிகம் விஸ்தரிக்கப்பட்டிருப்பதைப் பார்க்க இச்சித்திரம் வெறும் Group Photo இல்லை . இங்கு , உருவங்களும் வெறும் forms தான். அங்கு நீண்டு உயர்ந்திருக்க தூண்களைப் போல, மாடிப்படிகளைப் போல, மனித உருவங்கள்.. வெறும் உருவங்கள் (forms). இச்சித்திரம் மனிதர்கள், தாண்ட மாடிப்படிகள், கட்டிடம் எல்லாம் சேர்ந்த ஒரு architectonic arrange ment. எங்கோ உட்கார்ந்திருக்கும் உருவம் எழுந்து நின்றுவிட்டாலோ அல்லது இடதுபுறம் இருக்கும் மாடிப்படி வலதுபுறம் மாறிவிட்டாலோ இந்த architectonics பாதிக்கப்பட்டுவிடும். இதைப் புரிந்துகொள்ள இது மாதிரி forms என்றும் architectonies என்றும் கேள்வி எழுப்புகிறவர்கள் புரிந்து கொள்ள, அவர்கள் சங்கீதம் தெரிந்தவர்களாக இருந்தால் எந்த ஒரு ராகத்தினாவது இசை அமைப்பை மாற்றி, ஸ்வர ஒழுங்கை மாற்றி அவற்றின் ஒழுங்கு தவறி பாடச்சொல்லுங்கள். இரண்டாவது சோதனை, அவ்வாறு பாடும் பொழுது, சங்கீதமும் தெரியாதவனை அவ்வொழுங்கு மாற்றத்தைக்க கண்டறியச் சொல்லுங்கள்.

இதை எதற்காகச் சொல்கின்றேன் என்றால், abstract forms ஐப் பற்றிப் பின்னால் நான் பேசவேண்டிவரும். இது என்ன abstract forms இழவு என்று சலிப்பீர்கள். சங்கீதம் தெரியாதவன் இதென்ன இழவு ஷட்ஜமும், நிஷாதமும் என்று சலிப்பது போல. சங்கீதம் தெரிந்தவனுக்கு, இந்த ரூபங்கள், இழைகள் புரிவது போல, கலைரசிகனுக்கும் இந்த architectonics, abstract formal relationships புரியும்.

ராஃபேல் உங்களுக்குப் புரிகிறதாக நினைக்கும் சித்திரங்களில், மனித உருவங்களின் உருவத்தை மனித உருவங்களாக நினைக்காமல் வெறும் உருவங்களாகவே எண்ணி தன் ஓவிய முறையை ஸ்தாபித்தான். உங்களுக்கு உருவம் (forms) என்பது (identity of thing familiar) தெரிந்த பழக்கமான உருவத் வெளியை, ஒப்புநோக்கல் ஆகும். ஆனால் ராஃபேலுக்கு உருவங்கள், அவை எதனுடையதாக இருந்தபோதிலும், எதனுடைய உருவங்கள் என்ற காரணத்தால் உருவங்கள் என்ற தகுதி பெறவில்லை. உருவங்கள் என்ற காரணத்தாலேயே உருவங்களாகவே தகுதி பெற்றனவாகின்றன. இவவுருவங்களில் நீங்கள் தெரிந்து வைத்துக் காண்டிருக்கும் உருவங்களின் குணங்கள் சில உள்ளன என்பதும் தலால் நீங்கள் ஒப்புநோக்கி இனம் காண்கிறீர்கள் என்பதும், ஏனுடைய கலை நோக்கிற்கு, ஓவிய முறைக்கு சம்பந்தமில்லாதவை. அவன் தன் நினைப்பில் கொள்ளாதவை. இப்போதைக்கு இந்த குறிப்போடு நிறுத்திக்கொள்கிறேன். இதன் தர்க்க ரீதியான பின்விளைவுகளை, வளர்ச்சிகளை, cubism, abstract art ஆகியவற்றில் பின்னர் பார்க்கலாம்
.
உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம் ஏன் இப்படி என்று? உங்கள் தெரிவிற்காக (information), தெளிவிற்காகச் சொல்கிறேன், கியாத்தோ, பியரேடெல்லா, ஃப்ரான்ஸெஸ்கா, ராஃபேல் எல்லோரும் வெறும் கோடு கிழிக்கத் தெரிந்தவர்கள் அல்ல; உயர் கணிதம், மனித உடற்கூறு போன்ற பலதுறைகளில் வல்லுநர்கள். எவ்வளவு துறைகளில் உங்களுக்கு பரிச்சயம் அறிவு, ஞானம் (இந்தப் படிகளின் வரிசையில், ஏற்றத்தில்) இருக்கின்றனவோ அவ்வளவிற்கு உங்கள் உலகம் ஆழமானது, விரிவானது. உக்கிரம் நிறைந்தது. இவைபற்றியெல்லாம் அறிவது விவரங்களின் பட்டியல் என்றோ, பல்கலைக்கழகப் பட்டங்களின் எண்ணிக்கைப் பெருக்கம் என்றோ நினைத்தீர்களானால், உங்களுக்காக நான் பரிதாபப் படுகிறேன.

இவையெல்லாம் அறியாப் பேருண்மையை நோக்கிச் செல்லும் தேட்டையின் உக்கிர அனுபவத்தை ஆழமாக்குகிறன்றன. அத்தேட்டையின் பரிமாணங்களை விஸ்தரிக்கின்றன. இத்தேட்டையில் ஈடுபட்டிருப்பவர்களையோ; இத்தேட்டையையோ, அத்தேட்டை விட்டுச்செல்லும் சுவடுகளையோ, சாதனைகளையோ பற்றித் தீர்ப்புச் சொல்லும் தகுதி உங்களுக்கு இல்லை. ஏனெனில் உங்களுக்குப் பழக்கமானவை, சித்திரத்தில் கோபுலு இழுக்கும் கோடுகள். இலக்கியம் உங்களுகளுக்குக் கதை சொல்லும், கேட்கும் ஈடுபாடு. பி. சுசீலாவின் சங்கீதத்தில் நீங்கள் மெய்மறந்து போகிறீர்கள்... எனது முன் கூறிய தேட்டையைப் பற்றி உங்கள் வாய்திறக்கு முன் அதற்கு.... முதலில் நீங்கள் உங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். உங்களுக்கு கலை உணர்வு சித்திக்க வேண்டும். இவை எல்லாம் கைவர முதலில் உங்களுக்கு அடக்கம் வேண்டும். இல்லையெனில் நீங்கள் வெறும்,  NO BODY. இந்த ஓவியர்களெல்லாம் ஏதோ சிறப்பாக 'தொண்டு (ஒரு அர்த்தமில்லாத அபத்தமான வார்த்தை இது) செய்திருப்பது நமக்குப் பழக்கமாயிருக்கிறதே அதை மாத்திரம் சொல்வது உண்மையாகாது. தமது அனுபவத்தின் ஆழத்தை, எல்லைகளை தமது அறிவின் எல்லைகளை ஓவியத் துறைக்கும் அப்பால் சென்று விஸ்தரித்திருக்கிறார்கள்.

ரெம்ப்ராண்டை எடுத்துக்கொள்வோமே. ரெம்ப்ராண்ட் வாழ்ந்த காலம் பதினேழாம் நூற்றாண்டு. இதற்கு முன்னால் சிறிது பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த E1 Grecoவைப் பற்றிச் சொல்ல வேண்டும் El Grecoவின் View of the city of Toledo என்ற சித்திரத்தை ஒரு உதாரணமாக எடுத்துக்கொள்வோம். E1 Greco ஸ்பானிய மனிதர். ஸ்பெயின் உங்களுக்குத் தெரியும். மத்திய தரைக்கடல் பகுதியைச் சேர்ந்தது. சூரிய வெளிச்சத்திற்கும் குறைவில்லை. ஆனால் E1 Greco வேண்டுமென்ற டொலெடோ நகரத்தை, இடியும் மழையும் கருமேகங்களும் சூழ்ந்த ஒரு நகரமாக, இருளும் கோரமும் பயங்கரமும் சூழ்ந்த நகரமாக ஆக்கியிருக்கிறான். சிறு சிறு குன்றுகள், நகரம் சூழ்ந்துள்ள காடுகள் எல்லாம் இந்தப் பார்வைக்கு ஏற்ப, அவை உள்ள இடத்திலிருந்து இடம்பெயர்த்து மாற்றப்பட்டுள்ளது. மேலும் ஓவியம் பூராவும் dark greyish greenஇல் தீட்டப்பட்டுள்ளது. ஏன்? பிக்காஸோவின் கோர்னிகா (Guernica)வைப் போல இது E1 Greco-வின் Protest. அடுத்தடுத்து ரோமானியர்களால், மூர்களால், யூதர்களால் இப்படியாக அடுத்தடுத்து பலர் படையெடுப்பு, ஆதிக்கம், இவற்றிற்காளான ஸ்பெயின் அதன் மத்தியில் இருக்கும் என்றும், சூரிய ஒளியில் ஸ்பஷ்டமாகத் துவங்கும், எழில் குலுங்கும் ஒரு Swinging Cityயான டொலெடோ, எல் கிரேகோவுக்கு அழிவின், நாசத்தின் சின்னமாக சித்திரமாகத் தோன்றுகிறது. இந்தச் சித்திரம் an aerial view from a helicopter- ஒ அல்லது Spanish Tourist Information Serviceன் துண்டு பிரசுரசுவரொட்டியோ அல்ல. ஒரு தனிமனிதன் தன் மனச்சாட்சியின் உந்துதலில் வெளியிடும் மறுப்பு: ஒரு நகரத்தின் குணசித்திர விளக்கம் அவலமாகிவிட்ட ஒரு சரித்திர நிலையை நாடகப் பாங்கில் வெளிக்கொணரல். இந்த interpretation (விளக்கம்) dramatizatio" (நாடகப்படுத்துதல்) இவற்றை அடுத்துவரும் ரெம்ப்ராண்டில் பார்க்கும்போது ஒரு புதிய பரிணாமத்தைப் ( a new evolutio") பெறுகிறது. ரெம்ப்ராண்டில் மனித உருவங்கள் முக்கியமில்லை. விவரங்களையெல்லாம் நிழல்களில் மறைத்துவிடுகிறான். ரெம்ப்ராண்ட் முயன்றது ஒரு குணச்சித்திரத்தின் ஆழ்ந்த ஆராய்வு, அதன்  விளக்கம். ஒரு காட்சியின் உள்ளார்ந்த நாடகப் பண்பின் வெளிப்பாடு. இந்த குறிக்கோள்களுக்கு எவையெல்லாம் தேவையில்லையோ அவற்றையெல்லாம் ஒதுக்கிவிடுவான். எஞ்சிய முகபாவங்கள் மாத்திரம், தீட்டப்பட்ட மனித ரூபங்களிடையே ஒரு இறுக்கமான இயக்கம், தொனியாக குறிப்புணர்த்தப்பட்ட அகவய பாகங்களில் ஒரு இறுக்கமான பக்கம் விவரங்களில் ஆழ்ந்து போகாமல் எந்த இடம், எந்த பாவம், - அங்க சலனம் அவனது குறிக்கோளான நாடகப்படுத்துதலுக்கும் குணச்சித்திர விளக்கத்திற்கும் தேவைப்படுகிறதோ அவை மட்டும் பிரகாசமாக ஒளி பெற்று அவற்றிற்கிசைவான நிறங்களில் தோற்றமளிக்கும். மற்றவை இருளில் மறைந்துவிடும். இது தத்ரூபம் அல்ல. Distortion of reality. இயற்கையின் மாற்றம். இயற்கை வெட்டப்பட்டு, மேலானவை தேர்ந்தெடுக்கப்பட்டு தையல் வேலை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தேர்வில், தையல் வேலையில் நாம் நேரில் காணும்போது பார்க்கும் பல பொருட்கள், சித்திரத்தில் ஒதுக்கப்படுகின்றன. வெட்டப்பட்டுவிடுகின்றன. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட தீட்டப்பட்ட பொருட்களும், இயற்கையில் உள்ளதற்கு மாறாக, ஆனால் ரெம்ப்ராண்டின் பார்வைக்கு இசைவாக, அதீதமாக அளிக்கப்படுகின்றன. (over presented) நாடகப்படுத்தப்பட்டுள்ளன. உக்கிரப்படுத்தப்பட்டுள்ளன.

இது நடந்தது பதினேழாம் நூற்றாண்டில், ஹாலண்டில். ஆனால் இன்றைக்கும்கூட, இந்த 1969 நவம்பரில், நமது நாடகங்களில்கூட, சினிமா ஸ்டூடியோக்களில் ஒளிப்பதிவுகளை நிர்ணயிப்பவன், (குமாரி கமலா தன் நாட்டியத்தை ஆரம்பிக்குமுன் தன் குருவின் முன் சென்று முதலில் வணங்குவது போல) ரெம்ப்ராண்டை மனதில் நினைத்துக்கொண்டு, 'குரு வணக்கம்' சொல்லிவிட்டுத்தான் விளக்குகளின் பக்கம் போகவேண்டும். அது அவன், தன் குருவுக்குச் செலுத்தும் மரியாதை.

ததரூபம், தத்ரூபம் என்று கோஷமிடுகிறீர்களே, அந்தத் தத்ரூபம் " ஒன்று இருப்பதாகவே வைத்துக்கொள்வோம் இப்போதைக்கு. இது எப்படி உங்களுக்குத் தெரிய வந்தது? ஒளியில், சூரிய ஒளியில் 2-பொருட்களை  எப்படிக் காண்கிறீர்கள் சூரிய ஒளியில்தானே எதையும்  பார்க்கிறீர்கள். பல நிறங்களிலபகுதிகளாக அல்லவா?
நிறப்பட்டைகளாக, நிறத் துணுக்குகளாக, அல்லவா? ஆனா அனுபவம் மூன்று பரிமாணங்கள் கொண்டதாயிற்றே என்ற அது எப்படி தெரியவந்தது? இரண்டு பரிமாணங்களில், அகன்று செல்லும் மூன்றாவது பரிமாணம் முன்னதிலும் பார்க்க மங்கலாக இருண்ட நிறமாக இருப்பதால்தானே. ஆகவே அ. நிறம்தானே? ஆகவே எல்லாமே பல்வேறுபட்ட நிறங்களின் தொகுப்புதான். பல வேறுபட்ட நிறப்பட்டைகளின் தொடர்ச்சி நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் 'வேங்கையின் மைந்தனை சற்றுக் கீழே வைத்துவிட்டு கொஞ்சம் ஆழ்ந்து பாருங்கள். உங்கள் செளகர்யத்திற்கு, டெல்லியின் பனிக்கால காலை நேரத்தில் அல்லது மாலை நேரத்தில் அல்லது எப்போதாவது மழை பெய். ஓய்ந்து, சூர்ய ஒளிக்கதிர்கள் திரும்பக் காணும் நேரத்தில் பாருங்கள். நிமிஷத்திற்கு நிமிஷம் நிறம் மாறுவதைக் காணலாம். கவர்ச்சியற்ற. சலிப்புத் தரும் தோற்றம் கொண்ட கற்பனை வரட்சியில் விளைந்த கோரங்களான இந்த அரசாங்க வீடுகள் எல்லாம் திடீரென ஒரு தேவ உலகமாக மாறியிருப்பதைக் காணலாம். இதற்கு மேல் இன்னும் ஒன்று: Law of Optics. நீங்கள் காணும் பொருட்கள் நீங்கள் காணும் அவற்றின் நிலை, சூரிய ஒளிக் கதிர்கள் உங்கள் கண்களின் retinaவைத் தாக்குவதைப் பொறுத்தது. பின்னும் அவை உங்கள் மனப் பிம்பத்தில் பதினாறில் ஒரு செகண்ட் அதிகம் நேரம் தங்குகின்றன. ஆகவே நீங்கள் ஏதோ நினைக்கிறீர்களே உங்கள் காட்சி அனுபவத்தின் நிரந்தரம் என்று. அது உண்மையில் நிலை பெற்ற காட்சிகளின் தொடர்ச்சி (a series of stills, Stills made up of fleeting impressions) சினிமாவின் ஓட்டத்தை போல இதுவும் ஒரு பிரமை; ஒன்றையொன்று தொடரும் தனித்தனி காட்சிப் பதிவுகளை இடைவிடாத பிரவாஹம் என்று நினைக்கிறோம். பின்னும் இந்தக் காட்சிப் பதிவுகளோ வெறும் நிற விஸ்தாரங்கள்(colour areas) வெறும் நிறப்பட்டைத் தொகுதிகள் (a collection of patches of colours).

Delaunay (டிலானே) என்ற பிரெஞ்சு சைத்ரீகனைப் பற்றிச் சொல்லும்போது Apollinaire (அபோலினேர்) சொல்கிறான். 'I love the art of today because I love light above all else; For man, who invented fire, loves light above all else.

Law of Optics புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டு வெகுவாகச் சர்ச்சிக்கப்பட்ட காலத்தில் அபோலினேர் போன்ற இலக்கியகர்த்தாக்களும் Delaunay(டெலானே) Renoir (ரென்வார்), s(டெகாஸ்), Manet (மானே) போன்ற ஓவியர்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டார்கள். இந்தக் கண்டுபிடிப்பால். சூரிய ஒளியில் ஒரு வைக்கோற் போரின் நிற மாற்றங்களைத் தொடர்ந்து 16-17 சித்திரங்கள் இடைவிடாது வரைந்து தீர்த்தானாம் ரென்வார். இவர்களுக்கு பொருட்களும் மனித உருவங்களும், பொருட்களும் அல்ல மனித உருவங்களும் அல்ல; வெறும் நிற விஸ்தாரங்கள். தோன்றி மறையும் மனப் பதிவுகள். அவர்கள் வரையும் பார்வைக் கோணங்கள், மனிதர்களின் நடமாட்ட நிலைகள் எல்லாம் புதியனவாக இருக்கும். இது பெரும் புரட்சி. என் பார்வையில் எனக்கு வலது கோடி மூலையில் இருக்கும் நண்பர் என் நேர்பார்வையில் எக்கோணத்தில் பதிவாகிறாரோ அம்மனப்பதிவை சித்திரமாக வரைவது, சம்பிரதாயம் இல்லை. நேரான பார்வைதான் சம்பிரதாயம். நாடக மேடை உடைமாற்று அறையில், நாட்டிய வகுப்புகளில் அசம்பாவிதமான உடை உடுத்தி நிற்கும் நிலையில் அல்லது கால் தூக்கி நிற்கும் நிலையில் ஒரு கண்காட்சிப் பதிவு சித்திரமாகத் தீட்டப்படுவது சம்பிரதாயமல்ல. ஆனால் இவற்றையெல்லாம் மனப்பதிவுகளாக ஓவியர்கள் செய்தார்கள். மேலும் நம் காட்சி அனுபவத்தில் திட்டவட்டமான கோட்பாடுகள் கிடையாது. வெறும் நிற விஸ்தாரங்கள்தான். நம் அனுபவத்தில் எதுவும் பகுக்கப்பட்ட கோடு கிழித்து பிரிக்கப்பட்ட பகுதிகள் கிடையாது. அதேபோல் இவர்களின் சித்திரங்களில் ஆரம்பம் முடிவு தெரியாதவாறு நிறங்கள் ஒன்றினை ஒன்று கலந்து இணைந்தவையாக இருக்கும். ஒரு கண நேரத்தில் நம் மனதில் தோன்றி மறையும் மனப்பதிவுக் காட்சிகளில் விவர நுணுக்கங்கள் இராது. அதுபோல இச்சித்திரங்களிலும் விவர நுணுக்கங்கள் இராது. எல்லாமே வழித்து மங்கலாக்கப்பட்டவையாக இருக்கும்.

ரென்வாரின் 'குளிக்கும் பெண்' என்ற ஓவியத்தில் நாம் காண்பது
 அது ரென்வாரின் ஒரு நிர்வாணப் பெண்ணை மட்டுமல்ல; உத்தேசமும் இல்லை; குளிப்பவளின் ஆப்பிள் சிவப்பு நிறத்தையும், சூரிய ஓளியில் அவள் உடலின் மேல் பொட்டுப் பொட்டாக ஒளிரும் நீர்ச் சொட்டுகளையும், தங்க நிறத்தில் பளீரிடும் அவள் உரோமங்களின் பளபளப்பையும்தான், ரென்வார் சித்திரம் தீட்டியது.

அச்சித்திரத்தில் வெறும் நிர்வாணப் பெண்ணை நீங்கள் பார்த்தால், ரென்வாரின் சாதனையை, முயற்சியை, உத்தேசத்தை காணத்தவறியவர்களாவீர்கள். இச்சித்திரம் தீட்ட .உபயோகித்த மாடல் பெண்ணிலிருந்து சித்திரத்தில் காணும் பெண் எத்தனையோ விவரங்களில் மாறியிருக்கலாம். தத்ரூப மாற்றியிருக்கலாம். தத்ரூபமாக இல்லாதிருக்கலாம், அதைப் பற்றியெல்லாம் ரென்வாருக்குக் கவலை இல்லை.

இது law of optics - லிருந்து பெற்ற அறிவு, ஓவியத்தைப் பாதித்திருக்கிறது. காட்சியைப் பற்றிய அறிவு, காட்சியைப் பற்றிய சாதனையை, கலையை பாதிப்பது இயல்புதான். அவசியம்தான். இந்த அறிவு, ஓவியனின் தீர்க்கப் பார்வையில், அவனுடைய உலகத்தைப் பற்றிய தேட்டையில் Reality-யின் மெய்ப்பொருளில் உண்மையில் ஆழ்ந்த ஆராய்வாக மாறிவிட்டதை, Seurat (ஸுரா) என்ற மற்றொரு பிரெஞ்சு ஓவியனின் படைப்புகளில் காணலாம். ரென்வார், டெகாஸ் ஆகிய மனப்பதிவு ஓவியர்களிலிருந்து வளர்ந்து ஸுராவின் முறை, இவற்றிற்கு அடுத்த, இவற்றை மீறிய அடுத்த படி. சாதாரணமாகப் பார்க்கும்பொழுது ஸ்ராவின் ஓவியங்கள் நீங்கள் என்றும் காணும், காட்சிகளின் சுளுவாக்கப்பட்ட (simplified reproductions) சாதாரண சித்திரங்கள் எனத் தோன்றும். சற்று கிட்ட நெருங்கிப் பார்த்தால் ஓவியம் முழுதுமே கோடுகளால் அல்ல, Brush strokes -களால் அல்ல, மாறாக வெறும் புள்ளிகளால் ஆனவையாகத் தெரியும். அதில் வழித்து பூசப்பட்ட பகுதிகள், நிறநிழல்கள்கூட ஏதுவும் கிடையாது. எல்லாம் வெறும் புள்ளிகள். அடுத்தடுத்து நெருக்கமாக வைக்கப்பட்டுள்ள வெறும் புள்ளிகள். அடுத்தடுத்து பல்வேறு நிறங்களில் வைக்கப்பட்டுள்ள இப்புள்ளிகளே, இப்புள்ளிகளின் நிற வேறுபாடுகளே சிறிது தூரத்தில் உங்களுக்கு நிழல்களாக, ஒளிக்கதிர்களாக, மூன்றாம் பரிமாண ஆழமாக, பல வேறுபடும் ஒளிப்பதிவுகளாகத் தென்படும். Chemistry of paint- இல் இது பெரும் கண்டுபிடிப்பு.

நிழல்களுக்கு இதுவரை உபயோகிக்கப்பட்ட நிறம் ஒரு Muddy brown or black. ஆனால் இது தவறானது. சம்பிரதாயமான விதியாக மாறிவிட்டால், அர்த்தமில்லாததும் கூட. உறைந்த பனியின் நிழல் நீலமாக வெளிர் நீலமாக இருக்கும். இம்மாதிரியாக சிகப்புக்குப் பக்கத்தில் பச்சை, நீலத்திற்குப் பக்கத்தில் ஆரஞ்சு, மஞ்சளுக்குப் பக்கத்தில் வயிலட், அவற்றின் நிழலாகத் தோன்றும். இது மட்டுமல்ல ஒரு நிறம், இதற்குப் பக்கத்தில் இதன் நிழலாகத் தீட்டப்பட்ட மற்ற நிறம் இரண்டும் இச்சேர்க்கையில் மிகப் பிரகாசமடைகின்றன, ஆழ்ந்த உக்கிரம் அடைகின்றன. darkcolour - ஐ கy brown - ஐயும் போல் மந்தமாக இருப்பதில்லை .

ஒவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டபொழுது இவை தூற்றப்பட்டன கேலி செய்யப்பட்டன. இது எப்போதும் நிகழ்வதுதான், ரெம்ப்ராண்ட்டுக்கும் எல் கிரேகோவுக்கும் நிகழ்ந்ததுதான். ஆனால் அந்தக் கேலியை ஸுரா பொருட்படுத்த வில்லை . அவர் அளித்த பதில்: 'The laughter of fools is as the crakling of thorns under a flower pot'.

ஒரு கலைஞனின் அனுபவம் உங்களுக்கு, உங்கள் அறியாமைக்கு கேலிப்பொருளாக இருக்கலாம். ஒரு gimmick ஆகத் தோன்றலாம். அவனுடைய கலை நேர்மைக்கும், அனுபவ உண்மைக்கும் ஒரு சான்று கூற விரும்புகிறேன். உங்கள் கேலி அவனுக்கு எவ்வளவு நியாயம் செய்கிறது என்று பாருங்கள். சூரிய ஒளியும் நிற வேறுபாடுகளுமே மனப்பதிவுக் காட்சி (Impressionists) ஓவியர்களுக்கு குறிக்கோள். தீட்டப்பட்ட உருவத்தைப் பற்றிய அக்கறை இல்லை என்று சொன்னேன். மோனே (Monet) என்னும் மனப்பதிவுக் காட்சி ஓவியன் சாகக்கிடக்கும் தன் மனைவியின் அருகில் இரவு பூராவும் விழித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறான். 'After an all night vigil Monet knelt beside his wife's body and against his will he noted the changing colours of Camille's (his wife's) beautiful face, as the light grew stronger and the death pallor the gray and blue tonalities, the waxy yellow-deepened; Struck with horror by his obsession with visual experience 'even in the midst of personal tragedy' he realized that he was a prisoner of the fascination of light and colour

சரி, இந்த Obsession மனவியாதியோ , இது எவ்வளவு தூரம் சரி என்று நீங்கள் புருவம் சுளிக்கலாம். பத்திரிகைகளில் வரும் போட்டோ reproductions - ஐப் பார்த்திருப்பீர்களானால் அவை வெறும் புள்ளிகளாலேயே ஆனவையாகக் காண்பீர்கள். புள்ளிகளாலேயே தன் சித்திரங்களைத் தீட்டிய ஸுரா பற்றிச் சொன்னேன். அவன் off tone process கண்டுபிடிப்பிற்கு முன் பிறந்தவன். அதுமட்டுமல்ல. இந்த principleஇல் தான்Radio photo, Pour reproductions, இப்போதுதான் கலர் டெலிவிஷன் எல்லாம் ன்னும் இந்தியாவில் டெலிவிஷனே சாத்தியமாகியிருக்கின்றன. இன்னும் இந்தியாவில் டெல் பரவவில்லை. டெலிவிஷன் உள்ள மேல்நாடுகளில் எல்லாம் இன்னும் எத்தனையோ தொழில் நுணுக்கத்தில் முன்னேறியுள்ள நாடுகளில்கூட இன்னும் கலர் டெலிவிஷன் வரவில்லை. ஸுரா பிறந்தது 1859இல், படித்தது 17 வயது வரையில். பின் இரண்டு வருடங்கள் கலைப்பள்ளியில் பயிற்சி. 19ஆம் வயதில் அவன் படிப்பெல்லாம் முடிந்தது, அதாவது 1878இல். தன் 32ஆம் வயதில் இறக்கும்வரை சித்திரங்கள் தீட்டுவதில் காலம் கழித்தவன். 100 வருடங்களுக்கு முன் 32 வயது வரை வாழ்ந்த, படிப்பு அதிகம் இல்லாத ஒரு இளம் ஓவியன். இன்னும் சாத்தியமாகாத கலர் டெலிவிஷனின் principle-ஐ தன் சித்திர பாணியில் கண்டுவிட்டான். ஸுராவின் ஓவியங்களைப் பார்த்து, இதில் என்ன பிரமாதமாக இருக்கிறது என்று சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை; தகுதி இல்லை என்று நினைக்கிறேன்.

ஸுராவின் ஓவியத்தில் நீங்கள் பார்த்து ('ரசிப்பது' என்று சொல்லக் கூடாது) வெறுமனே பார்த்து ஓஹோ, இது நதிக்கரையில் Picnic செய்பவர்களின் படம் போலிருக்கிறது என்று தலையாட்டி விட்டு அடுத்த சித்திரத்திற்கு நகர்ந்துவிட்டீர்களானால் நீங்கள் ஓவியத்தை ரசித்தவர்களாக மாட்டீர்கள். ஏதோ உங்களுக்கு பழக்கமான புரிந்து கொள்ளும் உருவங்கள் அங்கு தென்பட்டு விட்டதால், ரசிக்கும் தகுதியை நீங்கள் பெற்றவர்களாக மாட்டீர்கள். ஒரு நிகழ்ச்சியைப்பற்றிச் சொன்னால் உங்களுக்குத் தெளிவாகப் புரியும் என்று நினைக்கிறான்.

டாக்டர் முல்க்ராஜ் ஆனந்த் தன் மனைவியையும், மச்சினனையும் ஒரு பரத நாட்டிய நிகழ்ச்சிக்கு அழைத்துச் சொன்றிருந்தாராம். நிகழ்ச்சி அலாரிப்புடன் ஆரம்பித்தது. அலாரிப்பு முடிந்ததும் டாக்டர் முல்க்ராஜின் மனைவி கேட்டாராம். 'என்னவோ பிரமாதமாகப் புகழ்ந்து என்னை அழைத்து வந்தீர்களே. என்னத்தைக் கண்டு அப்படிப் புகழ்கிறீர்கள்? என்னால் இதை ரசிக்க முடியவில்லையே?' என்றாராம். இதைக் கேட்டுக்கொண்டிருந்த முல்க்ராஜின் மச்சினன் 'என்னக்கா! என்னவோ சொல்கிறாயே? எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது இதைப் பார்க்க!' என்றானாம். ''உனக்கு என்னடா புரிந்தது? எதைக் கண்டு உனக்கு ஆனந்தம் வந்தது? எனக்கு போர் அடிக்கிறதே'' என்றாராம் டாக்டர் முல்க்ராஜின் மனைவி. இதற்கு அந்த மச்சின ரசிகப்பெருமான் சொன்ன பதில் 'அந்தப் பெண் எவ்வளவு அழகாகக் கண் அடிக்கிறாள்! எனக்கு ரொம்ப ஆனந்தமாக இருக்கிறது' என்றானாம்.

நம்மில் அநேகர் பரதநாட்டியத்தை ரசிப்பது இவ்வாறுதான்.  நாம் முல்க்ராஜின்  மனைவியைப்போல கேள்வி எழுப்புவதில்லை. ஏனெனில்  நம்மை முற்றிலும் விரோதிக்காதவாறு, நாம் நம் அளவில் ரசிப்பதற்கு, பரதநாட்டியக் கலைக்கு சம்பந்தமே இல்லாத குணங்களை அம்சங்களைக் கண்டு ரசிப்பதற்கு, பரதநாட்டியம் ஆடுபவர்களிடம் நமக்குப் பல கிடைக்கின்றன. டாக்டர் முல்க்ராஜின் மச்சினனுக்குக் கிடைத்தது போல. இதே போல் இன்றைய ஓவிய சிற்ப முறைகளை இலக்கிய முறைகளை எதிர்த்துக் *கண்டனம் செய்யும் பலர், அஜந்தா ஓவியங்களையோ, எல்லோரா, கைலாச நாதர் கோயில், பேலூர், ஸ்ரீரங்கம் சிற்பங்களையோ, நமது பழைய இலக்கியங்களையோ, எதிர்க்கவில்லை, கண்டனம் செய்யவில்லை என்றால், அதற்குக் காரணம் அவற்றிலும் கூட அவற்றின் ஆதார தூண்டுதல் உணர்வுகளுக்கு (Basic motivations) மாறான, விரோதமான அம்சங்களை இவைகளில் தங்கள் ரசனைக்கேற்ப இவர்கள் காண்பதால்தான்.
இது ரசனை அல்ல. அனுபவம் அல்ல. பரிவர்த்தனை அல்ல. கலைஞனின் உலகத்தையோ, கலைஞனையோ, உங்களையோ புரிந்து கொள்வது ஆகாது. உங்களையே நீங்கள் காண்பதாகும். செக்கு மாட்டைப் போல ஒரு குறுகிய வட்டத்திலேயே திரும்பச் திரும்பச் சுழல்வதாகும். செக்கு மாட்டின் சுழலலை பிரயாணம் (Exploration) என்று ஒப்புக் கொண்டால் உங்கள் பார்வையையும் ரசனை என்று நான் ஒப்புக்கொள்வேன். கண்ணாடியில் உங்களையே நீங்கள் பார்த்துக்கொள்வது, உலகத்தை எதிர்கொள்வதாகும் என்று சொன்னால், உங்கள் விருப்பங்களையே, நீங்கள் எதிர்கொள்ளும் வேறான ஒன்றிலும் காணும் உங்கள் மனோபாவத்தையும் ரசனை என்று நான் ஒப்புக்கொள்வேன்.

அடிப்படையான ஒரு உண்மை. பரிவர்த்தனை என்பது வேறு ஒன்றைப் பெறுவதுதான். சந்திப்பு என்பது இரண்டாமவனை எதிர்கொள்வது தான். Exploration என்பது இதுவரை காணாத அறியாத பாதையில் செல்வதுதான். இதற்கெல்லாம் ஒரு முக்கிய உந்துதல், அந்த வேறான ஒன்று என்ன? அந்நியமான ஒன்று என்ன? என்பதை அறிந்து அதை அந்நியமற்றதாக ஆக்குதலை, வேற்றுமை அற்ற ஒன்றாக ஆக்குதல் ஆகும். இதற்கு Receptivity என்ற ஒன்று உங்களுக்குத்  தேவை. ஒருவன் என்ன சொல்ல முயற்சிக்கிறான், என்ன சாதிக்க முயற்சிக்கிறான் என்பதை அறியும் தேட்டை உணர்வு வேண்டும். உங்களுக்கு வேண்டிய ஒன்று, உங்களுக்குப் பழக்கமாக ஒன்று, உங்களுக்குப் புரிந்த ஒன்றுதான் அதிலும் இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பது அறியாமை. அது இருண்ட வாழ்வு. நான் மிக நாகரீகமாகச் சொல்கிறேன். அப்படி எதிர்பார்ப்பது Philistinism அல்லது Obscenity என்று சொல்ல வேண்டும், என்னைத் கோபிப்பதில் பிரயோஜனம் இல்லை.

1953, 1954இல் நடந்தது இது. பத்து நாட்கள், (நம் நவராத்திரிக்கு ) பிறகு ஐந்து நாட்கள் தள்ளி 15ஆம் நாள் லஷ்மி பூஜை கொண்டாடுவது வங்காளிகள் வழக்கம். பெளர்ணமி தினத்தன்று வரும் எனது வங்க நண்பன் என்னையும் இன்னும் சிலரையும் மைத்ரி சங்கம் கொண்டாட இருந்த லஷ்மி பூஜைக்கு அழைத்தான். எங்களின் ஒருவன் ஸர்தார். அவன் வர மறுத்துவிட்டான். காரணம்? அவன் சொன்னான்: லஷ்மியை நான் நோக்கும் விதமே வேறு. அது இயற்கையானது. இயல்பானது. எதிர்மறையானதல்ல. லஷ்மி தொழப்பட வேண்டியவள் அல்ல: படுக்கைக்கு எடுத்து செல்லப்பட வேண்டியவள். உங்களது தொழும் காரியம் வீணான காரியம். லஷ்மியையும் வீணடிக்கும் காரியம். அவன் இதைச் சொன்னது பஞ்சாபியில். பஞ்சாபியிலேயே திரும்பச் சொன்னால் அதை அவ்வளவாக நீங்கள் ரசிக்க மாட்டீர்கள்.

ஓவியத்தில், இலக்கியத்தில், சங்கீதத்தில், சிற்பத்தில் இன்ன தான் நீங்கள் காண விரும்புகிறீர்கள் என்று கலைஞனுக்கு கட்டளையிடுவதோ, உங்களுக்கு நீங்கள் கண்பட்டை இடுவதோ, நியாயம் என்றால் அந்த ஸர்தார் லஷ்மியிடம் கொண்டுள்ள அவன் மனோபாவமும் முற்றிலும் நியாயமானதும் சரியானதும் ஆகும்.

மனித உருவங்கள் பின்னொதுங்கி ஒரு காட்சியின் நாடக அம்சம், ஒரு மனிதனின் குணச்சித்திர விளக்கம், முன்னிற்பதைப் பற்றிச் சொன்னேன். மனித உருவங்களின் தத்ரூபம் பின்னொதுக்கப்பட்டு ஒளி வேறுபாடுகளாக, நிறப்பகுதிகளாக, காட்சிகள் முன்னிறுத்தப் பட்டதைப் பற்றிச் சொன்னேன். மனித உருவ தத்ரூபம் பின்னொதுக்கப்பட்டு, தீட்டுபவனின் மனப்பதிவுகள், உள்ளத்து உணர்ச்சிகள், காணும் காட்சியின் ஆத்மா, அர்த்தம், முன்னிறுத்தப்பட்டதை பற்றிச் சொன்னேன். மனித உருவங்கள் மனிதர்களாக அல்லாமல் வெறும் உருவங்களாக ஆக்கப்பட்டு மற்ற உருவங்களுடன் அவற்றின் ரூப் உறவுகளில் அல்லது ரூப இயக்கத்தில் ஒரு ஒத்திசைவு சமனம் அல்லது இறுக்கம் இவையெல்லாம் முன்னிற்பதைப் பற்றிச் சொன்னேன்.  இவற்றிலெல்லாம் மனித உருவங்கள், தத்ரூபங்கள் 6 பின்னொதுக்கப்பட்டன  தவிர, அறவே நீக்கப்படவில்லை.அவை முக்கியமல்ல எனில், அவற்றைப் பின்னொதுக்குவானேன்? அறவே நீக்கிவிடலாமே என்று சில சைத்ரீகர்களுக்குத் தோன்றியது.

சில குழப்பங்களைத் தவிர்க்கும். உண்மை ரசிகன் யார் என்பதைச் சலித்தெடுக்கும். பரதநாட்டியத்தில் நீங்கள் ரசிப்பது நாட்டியத்தைத்தான் என்றால், அதை நீங்கள் பால் சரஸ்வதியிடமும்
வேண்டும். காண்கிறீர்களோ? கொடிகளின் அசைவில், மரக்கிளைகளின் வளைவில், தண்டுகளின் முடிச்சுகளில், பிரம்மாண்டமான மரங்களின் வேர் அமைப்புகளில் நாட்டியத்தைக் காணவேண்டும். காண்கிறீர்களோ? பத்மினி நாட்டியம் ஆடுவது, சர்தார்களுக்கும் முல்க்ராஜின் மச்சினர்களுக்கும் வழி வகுக்கிறது; ரசிகர்களாக்குகிறது.

எனவே பின்னொதுக்குவதைவிட அறவே நீக்கிவிடுவது தர்க்க ரீதியான அடுத்தபடி என்று சில சைத்ரீகர்களுக்குத் தோன்றியது. பின்னொதுக்குவது அநாவசிய வேலை என்றும் தோன்றியது.

இப்படி நான் சொல்லும்போது நான் கலாச்சாரத் துரோகம், பண்பாட்டுத் துரோகம் என்று ஏதும் செய்துவிட்டதாக நீங்கள் நினைக்கக்கூடாது. உங்களுக்குத் தெரியாத, நீங்கள் ஒப்புக் கொள்ளாத, நம் மண்ணிற்குப் புறம்பான, எதையும் நான் சொல்லிவிடவில்லை. இதெல்லாம் நீங்கள் மொழியில், நாட்டியத்தில், சங்கீதத்தில் எல்லாம் செய்திருக்கிற காரியம்தான். இதை எடுத்துச்சொன்னால் உங்களுக்கு கோபம் வருகிறது.

மொழியில், மரம், ஆடு, மாடு, வீடு, கட்டில் என்று ஆரம்பித்து, தத்துவம் நிர்க்குணம் மோனம் என்று மொழி அரூபமாக மாறி பின் அந்த அரூபங்கள் தரும் அனுபவத்தில் மொழியும் அழிந்துபடுவது
போலத்தான். ஆனால் அரூபக்கலை உங்களுக்குப் புரியாது.

நாட்டியத்தில், நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? குழந்தையின் தத்தும்  நடையை, யானையின் தன்பல அறிவிப்பை, குதிரையின் நேர்நோக்கும் கம்பீரத்தை, நாகத்தின் துவளும் ஆட்டத்தை, மானின் பாய்ச்சலை, அன்னத்தின் ஒய்யாரத்தை, பெருக்கெடுத்து ஓடும் நதியின் வழுக்கி நகரும் தளுதளுப்பை, பாவையின் பவ்யத்தை இவ்வாறான சலனங்களில் தோய்ந்த நீங்கள், இச்சலனங்களே பாஷையாக இச்சலனங்களின் வெளிப்பாடாக ஒரு நாட்டிய மொழியைக் கண்டுபிடித்தீர்கள். ஆனால் போகப் போக இம்மொழி. இப்புது பாஷை தானே தன்னுள் அடங்கும் ஒரு முழு பாஷையாக மாறும் யத்தனத்தில், தன் வளர்ச்சியில் இவ்வேறுபட்ட பல சலன இழைகளை, புள்ளிகளை இணைக்கும் புதிய கோடுகளை (இயற்கைச் சலனங்களில் உறவு காணமுடியாத இழைகள். கோடுகள் அவை) தானாகவே உண்டாக்கிக்கொண்டது. இவை தம் இயக்கத்தில் தாமாகவே பிறந்தவை. தம்மிலேயே தம் நியாயத்தைக் காண்பவை. பின் என்ன ஆயிற்று? தில்லானா எங்கிருந்து வந்தது? சுத்த நாட்டியம், நிருத்தம் எங்கிருந்து வந்தது? உங்களுக்குத் தெரியாததா தில்லானா? ஆனால் அரூபக்கலை உங்களுக்கு வேண்டாம். உங்களுக்குப் புரியாது.

சங்கீதத்தில் என்ன செய்திருக்கிறீர்கள்? மர இலைகளில் சலசலப்பு, பட்சிகளின் கூவல், டண்ணென ரீங்கரித்து மெதுவாக ஓயும் வெண்கல தாம்பாளம், கோயில் மணியின் சாரைப் பாய்ச்சல், கிளுகிளுத்து நகைத்து ஒயும் மதகு நீர், கர்ஜிக்கும் சமுத்திர அலைகள், உங்கள் குழந்தையின், பெண்ணின் கேவல், குழைதல், கொஞ்சல், இசுகிசுப்பு, காதல் பேச்சு இவற்றிளெல்லாம் கண்ட பேச்சு தொனியின் சப்தங்களின் நீட்சி, இழைவு, தொய்வு, பாய்ச்சல், இவையெல்லாம் உங்களுக்கு ஒரு புதிய சப்த லோகத்தை சப்த அனுபவத்தைக் காட்டிக்கொடுத்தன. அந்த சப்தங்களினால் எல்லாம் நீங்கள் ஒரு ஒழுங்கு, இசைவு, ஒரு சீரான ஓட்டம், உயர்வு இறக்கம் காலும் முயற்சியில் இறங்கியபொழுது சங்கீதம் பிறந்தது குடியரசு தினத்தின் பொழுது நாட்டுப்புற இசை நிகழ்ச்சி தடைபெறும். போய்க் கேளுங்கள். நாட்டுப்புற நடனம் நிகழ்ச்சியும் நடைபெறும். போய்ப் பாருங்கள், இயல்பான பேச்சுக்கும் தடைக்கும் ஆதிகுடிகளின் பாட்டுக்கும், நாட்டியத்துக்கும் எவ்வளவு நெருங்கிய ஒற்றுமை என்பது தெரியவரும், அவைதான் நாட்டியத்திற்கும் சங்கீதத்திற்கும் ஆரம்பங்கள். ஆனால் இப்படி ஆரம்பித்த சங்கீதம், நாளடைவில் ஒரு வளர்ச்சியில், ஒரு அமைப்பாக மாறியதும் இயற்கையிலிருந்து பெற்ற சப்த இழைகள் தம் உடன் சேர்க்கையில், ஒட்டுறவில், தாமே ஒரு ஒழுங்கை இவ்வொழுங்கின் விதிகளை நிர்ணயித்துக்கொண்டன. அவ்வித எனக்கும் அவை பிறந்த இயற்கையின் சப்த ஆதாரங்களுக்கும் சம்பந்தமில்லை. இயற்கை சப்த அனுபவங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய சப்த லோகத்தை சங்கீதம் சிருஷ்டித்துக் கொண்டிருக்கிறது.

இயற்கை ஒலியிலிருந்து, இழைகளின் தொகுப்பு, பின்னர் அவற்றின் ஆதார நிலைகளிலிருந்து பிரிந்து இழைகளைத் தொகுக்க என தனி சப்தம்- சாஹித்யம், எல்லாம் தலைகீழாக மாறியிருக்கிறது இங்கு. மொழி, பேச்சு பெற்ற சப்த இழை தனித்து இயங்க ஆரம்பித்து சங்கீதமாகி, பேச்சின் இயற்கை சப்தலோகத்தைத் துண்டித்துக் கொண்டது. ஆனால் திரும்ப, இப்போது, இந்த சப்த இழைகளுக்காக, இதன் ஆதிக்கத்தில் இதன் ஒழுங்குக்கு இசைவாக, திரும்பவும் பாஷை -சாஹித்யம், கீர்த்தனை என்று சொல்கிறீர்களே அது. பின் என்ன செய்தீர்கள்? சப்த இழைகளுக்காகத்தானே சாஹித்யம்? அதன் ஆதாரத்திலேதானே இது? பின் எதற்கு இது? சப்த இழைகளே போதும் என்று சாஹித்யத்தையும் உதறிவிட்டீர்கள். இதையெல்லாம் செய்யும் நீங்கள், அரூபக்கலையான இதென்ன இழவு? நம் மண்ணிற்கு ஏற்குமா என்கிறீர்கள்.

மொழி, சங்கீதம், நாட்டியம் எல்லாமே வளர்த்த கடா மாரில் பாய்கிறது என்பார்களே அந்த ரகத்தை சேர்ந்தவை. ஏறி வந்த ஏணியை உதறித் தள்ளும் குணம் கொண்டவை. இப்போது சங்கீதம் ஒரு தனி உலகமாக, இயற்கைக்கும், தத்ரூபத்திற்கும் சம்பந்தமே இல்லாத ஒரு தனி சப்தலோகமாக மாறியிருக்கிறது.

ஒன்று, இரண்டு, மூன்று, நாலும் நாலும் எட்டு என்று விரல்களை எண்ணி, வியாபாரம் செய்த கத்தரிக்காய்களை எண்ணிப் பிறந்த கணிதம் என்ற துறை இந்த உலக சம்பந்தமே இல்லாத Pure mathematics ஆக வளரவில்லையா? இந்த உலகம் என்னும்போது, நமது நடைமுறை சமீபத்தில் வாழ்க்கை உறவுகள் இவற்றைச் சொல்கிறேன். தத்ரூபம் எங்கே இதில் என்று கேள்வி கேட்டு, Pure mathematics -ஐ நம் கலாச்சாரத்திற்கும் அந்நியமானது என்று ஒதுக்கி விடலாமா? உங்கள் பதில் தேவை.

ஒரு Maxim. ஒரு Dictum. George Santayana-வினது. 'Every thing ideal has a natural basis and everything natural has an ideal development'.

உருவங்களை, உங்களுக்குத் தெரிந்த பழக்கமான பொருட்களாக ம் காணாமல் உருவங்களாகவே கண்டது; உங்களுக்குப் புதிதாக ஏதோ செய்யக்கூடாத ஒன்றை ஏதோ மகானுபாவர்கள் செய்வது, நீங்கள் நினைக்கக்கூடாது. ஏனெனில், மற்றவற்றை உங், மண்ணில் செய்யும் மகானுபாவர்களாக நீங்கள் இருக்கிறீர்கள்; வேளை நீங்கள் செய்வதெல்லாம் பவித்ரமான காரியம் மற்றவர் செய்தால் அது துரோகம் என்றோ 'கழுத்தை அறுக்கிற' விவகார என்றோ நினைப்புள்ளவர்களா நீங்கள்? 'நீயாரடி இல்லேன்ன சொல்லறதுக்கு? உனக்கென்னடி அதிகாரம் இந்த வீட்டிலே' என்றும் பிச்சைக்காரனைத் திரும்ப அழைத்து 'இல்லை' என்று சொல்லி அனுப்பிய மாமியார்களா நீங்கள்?

உருவங்கள் - வெறும் உருவங்கள் - என்பதற்கு அடுத்தபடியாக எல்லா உருவங்களுக்கும் ஒரு ஆதாரமான Geometrical design இருப்பதை Paul Cezanne (பால் செஸான்) கண்டார். அவர் சொன்னார். 'Everything in nature is shaped after the cylinder, the sphere and the cone'. 'See in nature, the cylinder, the sphere and the cone, putting everything in proper perspective so that each side of an object or plane is directed toward a central point'.

'செஸானின் சித்திரங்கள் எல்லாவற்றிலும் எந்தப் பொருளைப் பற்றியனவாக அவை இருந்தாலும், அந்த subject புறமொதுக்கப் பட்டு, அப்பொருட்கள் essential forms ஆக மாத்திரம் வடிக்கப்பட்டிருக்கும். பின்னர் அந்த உருவங்கள் எல்லாம் திரும்ப ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும். இந்த re-arrangement, இங்கு முன்னமேயே சொல்லப்பட்ட architectonics-க்காக குளிப்பவர்கள்' என்ற ஒரு சித்திரத்தில் குளித்துக் கரையில் அமர்ந்திருக்கும், சாய்ந்து படுத்திருக்கும் பெண்கள், சுற்றிக் கரையிலிருக்கும் மரங்கள் ஒன்றையொன்று சார்ந்து சமன் செய்து ஒரு architectural orderல் கோதிக் சர்ச்சின் (Gothic church) arcadeஐப் போல அமைந்திருக்கும். அது ரூப ஒத்திசைவு ஒழுங்கு பெற்றது. ஆனால், செஸான் தன்னுடைய சித்திரங்களிளெல்லாம் தான் தனக்கென வகுத்துக் கொண்ட அளவு சாதித்ததில்லை . அதை மற்றவர்களான Braque (ப்ராக்) Piccasso, Juan Gris, Vilaminck போன்றவர்கள் நிறைவேற்றினார்கள். ப்ராக்கின் சித்திரங்களில் பலவாறான உருவங்கள் தமக்குள் ஒன்றையொன்று சார்ந்து, இணைந்து, முறுக்கி, விசேஷித்துக்கொண்டு, தம்முள் சுழன்று ஒன்றையொன்று தழுவி, இப்படி பலவாறான இயக்கங்களில் ஈடுபட்டிருப்பதைப் பார்க்கலாம்.

ஓர் உதாரணம் , நினைக்கிறேன். எடுத்துக்கொண்டு காரணம் சங்கீதத்திலிருந்து கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். ஒரு சாஹித்யத்தின் 'கீர்த்தனையின் ஒரு phraseஐ எடுத்துகொண்டு அதை விட்டு ஒதுங்கி அதன் ராக ரூபத்திற்கு அந்த ரூபத்தின் பல இழைகளில் சஞ்சரித்து பின் நான் phrase -க்குத் திரும்ப வந்து, பின்னர் மறுபடியும் வேறு ஒரு phrase-ன் ராக ரூபத்திற்குச் சென்று பின்னால் அதன் பல என்ன இழைகளில் புதிது புதிதாக தன் கற்பனைகளை சப்தத்தில் சிருஷ்டிக்கிறானே சங்கீதக் கலைஞன் அதுபோன்று பொருட்களின் ஆதார உருவத்தில் ஓவியனும் செய்கிறான் என்று சொல்லவேண்டும்.

சாஹித்யத்தின் phrase

இவர்கள் எல்லாம் ஏதோ கதைக்குப் படம் வரைகிறவர்கள் - சினிமா பேனர் தயாரிப்பவர்கள் அல்ல. சொக்கலால் பீடி காலண்டருக்கு சித்திரம் வரைபவர்கள் அல்ல. இவர்கள் எல்லாம் அக்காலங்களில் தம் ஒவ்வொருவருடைய முயற்சி சாதனை, பிரச்னைகளைப் பற்றியெல்லாம் ஒன்றுகூடி சர்ச்சித்து விவாதித்தவர்கள். அவர்கள் ஆழ்ந்த சிந்தனையாளர்கள். நமது எழுத்தாளர்களோ, எத்துறையிலும் உள்ள கலைஞர்களோ இவ்வாறு ஆழ்ந்த சிந்தனையாளர்கள் என்று குறிப்பிடத் தகுதியற்றவர்கள். போகட்டும்.

ஆதார உருவங்களுக்கு இன்னொரு உதாரணம். உருவங்கள் இனம்காணும் பொருட்களாக அல்ல, வெறும் உருவங்களாக; கத்தரிக்காய் பார்த்திருக்கிறீர்கள், மலர்களைப் பார்த்திருக்கிறீர்கள். புல்லிதழை பார்த்திருக்கிறீர்கள். ஒருவன் இவற்றை தத்ரூபமாக வரைகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதை வெகுவாக நீங்கள் ரசிக்கிறீர்கள். ஏன்? நீங்கள் பார்த்த புல்லிதழ், மலர் இவற்றை நீங்கள் இங்கு மறுபடியும் காண்கிறீர்கள். அதன் அழகு உங்களை பரவசப்படுத்துகிறது. வேறு எங்கோ பார்த்த ஒன்றை இங்கு மறுபடியும் பார்க்கிறீர்கள். சரி, மலர் எதன் தத்ரூபம்? புல்லிதழ் எதன் உருபம்? நீங்கள் எதன் தத்ரூபம்? நீங்கள் இயற்கையில் காணும் துவுமே எதன் தத்ரூபம்? ஜீவனாம்சம் லஷ்மி எதன் தத்ரூபம்? இங்கு நீங்கள் உருவத்தின் அழகை அதன் ஒழுங்கை, இசைவை ரசிக்கும் பொழுது, அது எதன் தத்ரூபம் என்ற ஒப்பு நோக்கு ஆராய்ச்சியில் இறங்குவதில்லை . நீங்கள் ரசிக்கும் அழகுக்கு இம்மாதிரியான இலக்கணம் வகுப்பதில்லை . ஒரு உருவம், அதன் 'இயல்பாக அமைந்த, அதன் ஆதிரூபமாக, முதல்   எதிலிருந்தும் தத்ரூபமாக களைபிடுங்கப்படாமலேயே,  ரசிக்க முடிகிறது. Ben Nicholson-ஓ Mondrian - ஓ நிறங் உருவங்களிலும், ஒரு புதிய உருவை அளிக்கும் பொழுது மாத்திரம் ஏன் இது எதன் தத்ரூபம் என்று விமர்சிக்க வருகிறீர் புல்லிதழும், காட்டுப் பூவின் உருவமும், நிறமும், பத்மினி . essential form - ம் ஒரு புதிய உருவமாக, நிறச் சேர்க்கையாக உங்களுக்கு அனுபவமாக அளிக்கும்பொழுது அரூப ஓவியங்களின் மாத்திரம் ஏன் அந்த அழகுணர்ச்சி உங்களுக்கு வற்றிப் போய்விடுகிறது? வீடு, மாளிகை, கோபுரம், சுவர்கள், வானம் மேகங்கள் இவையெல்லாம் எதன் தத்ரூபம்? கோபுரம் ஒரு அரூப.. சிற்பம், வீடு ஒரு அரூப சிற்பம், மலர் ஒரு organic abstract sculpture கத்தரிக்காய் ஒரு organic abstract sculpture. Gina Lolo brigida ஒரு organic, mobile, abstract sculpture. நமது விமர்சனங்களில், பார்வைகளில், மதிப்புகளில்தான் எவ்வளவு முரண்பாடுகள், நாம்தான் எவ்வளவு பெரிய வேஷதாரிகள்? வேஷதாரிகள் அல்லவென்றால் அகங்காரம் கொண்ட மூர்க்கர்கள் நாம். அகங்காரத்தால் நம் அறியாமையை மறைப்பவர்கள்.

பின்குறிப்பு:
கடைசியாக பிக்காஸோவின் கோர்னிகா பிரஸ்தாபிக்கப்பட்டதால் அதைப்பற்றி ஒரு சில வார்த்தைகள்.
ஸ்பெயினில் ஒரு கிராமம். ஸ்பெயின் உள்நாட்டு சண்டையின் போது, நாஜி படைகளால் பயங்கரமாக குண்டுக்கிரையாக்கப்பட்டு, சின்னா பின்னப்படுத்தப்பட்ட ஒரு கிராமம். கிராமத்தின் உருவே தெரியாதவாறு அது அழிக்கப்பட்டது. கசாப்புக் கடையில் ஆடுகள் வெட்டப் பட்டு, வெறும் மாமிசமாகக் குவிக்கப்படுவதைப்போல கிராமத் தெருக்களில் மாமிசத்துண்டுகளாகச் சிதறிக் கிடந்தனர், கிராமத்து மக்கள். இந்த அலங்கோலம், இந்த அகோரக் காட்சிதான் கோர்னிகா. குண்டுக்கிரையான வீடுகளைப் பார்த்திருக்கிறீர்களா? குறுகிய மலைப் பாதையிலிருந்து சரிந்து விழுந்த பஸ்களைப் பார்த்திருக் கிறீர்களா? அல்லது கசாப்புக் கடை மாமிசக் குவியல் களை
 பார்த்திருக்கிறீர்களா? அவை என்ன உருவில் உங்களுக்கு காட்சி தருகின்றன? இதேபோல, கோர்னிகாவில் உருவங்கள் சிதைக்கப்பட்டிருக்கின்றன. அழிக்கப் பட்டிருக்கின்றன. துண்டங்களாக்கப்பட்டிருக்கின்றன. சிக்கப்பட்ட, சிதைக்கப்பட்ட, துண்டங்கள் சவ உருவமாகத் தோன்றக்கூடாது. அழிவின் பயங்கரம் கண்டங்களில் வெளிவர வேண்டும். ஆகவே 'கோர்னிகா'  ஓவியத்தில் நீங்கள் பார்க்கும் உருவங்கள், சிதிலமடைந்து சிதைக்கப்பட்டவை. கோணல்களாக்கப்பட்டவை. பின் ஓர் ஒழுங்கில், ஒழுங்குபடுத்தப்பட்டவை. ஆம், அங்கும் ஓர் ஒழுங்கு உண்டுதான்.
பிக்காஸோவைப் பற்றி ஜெர்ட்ருட் ஸ்டைன் எழுதியுள்ள பிக்காஸோ என்ற புத்தகத்திலிருந்து பின்வரும் குறிப்பு. பிக்காஸோவின் தனிப்பார்வை, அனுபவம், அணுகல் முறை இவைபற்றிச் சொல்கிறது.
பிக்காஸோ பார்த்த பொருட்களுக்கு ஒரு யதார்த்தம் இருந்தது. அந்த யதார்த்தப் பார்வை அனுபவத்தில் படும் யதார்த்தம் இல்லை. அது பொருட்களில் உறைந்துள்ள யதார்த்தம். ஒரு விஷயத்தை யாரும் மறக்கக்கூடாது. இந்த 20 ஆம் நூற்றாண்டின் யதார்த்த அனுபவம் 19ஆம் நூற்றாண்டின் யதார்த்த அனுபவமில்லை. நிச்சயமாக இல்லை. ஓவியத்தில் இதை உணர்ந்தவர் பிக்காஸோ ஒருவர்தான். அவர் ஒருவரேதான். மாத்தீஸ் போன்ற ஒவியர்களும், 20 ஆம் நூற்றாண்டைத் தம் கண்களால் பார்த்தவர்கள்தாம். ஆனால் அவர்கள் கண்டது 19ஆம் நூற்றாண்டின் யதார்த்த அனுபவத்தை. பிக்காஸோ ஒருவர்தான் 20 ஆம் நூற்றாண்டைத் தன் கண்களால் பார்த்தவர். அதன் யதார்த்த அனுபவத்தை உணர்ந்தவர். இதன் விளைவாக அவரது போராட்டம் பயங்கரமாகியது. அவருக்கும் சரி, மற்றவர்களுக்கும் சரி, ஏனெனில் இதில் அவருக்கு உதவியது எதுவுமில்லை . இறந்த காலமும் சரி,
. அவர் தன்னந் நிகழ்காலமும் சரி அவருக்கு உதவவில்லை தனியாகவே போராட வேண்டியதாயிற்று.
''மோட்டார் கார் இன்றைய முன்னேற்றத்தின் எல்லை. அது மிக வேகமாக விரைகிறது. ஆனால் ஒரு கார், உள்ளிருந்து தெரியக் காணும் நிலத்தோற்றம்; மிருகம் இழுத்துச்செல்லும் ஒரு சாதாரண வண்டியினுள்ளிருந்து அல்லது புகைவண்டியினுள்ளிருந்து, அல்லது நடக் செல்லும்போது தெரியக்காணும் நிலத்தோற்றத்திலிருந்து வேறுபட்டதல்ல. ஆனால் ஆகாய விமானத்திலிருந்து பார்த்தால் தெரியும் நிலத்தோற்றம் முற்றிலும் வேறானது. ஆகவே 20 ஆம் நூற்றாண்டும் 19 ஆம் நுற்றாண்டும் ஒன்றேயானவை அல்ல. ஒரு சுவாரஸ்யமான விஷயம். பிக்காஸோ ஆகாய விமானத்திலிருந்து நிலத் தோற்றத்தைப் பார்த்தவரில்லை. 20 ஆம் நூற்றாண்டில் தாம் வாழும் காரணத்தாலேயே இந்நூற்றாண்டின் பூமி 19ஆம் நூற்றாண்டினது அல்ல என்பதை அறிந்தார். அவ்வாறு உருவாக்கவும் செய்தார். தவிர்க்க இயலாதவாறு, அதை வேறுபட்டதாக உருவாக்கினார். அவர் உருவாக்கியது இன்று உலகம் முழுவதும் காணக் கிடக்கிறது. நான் அமெரிக்காவில் இருந்த போது, அநேகமாக எல்லா சந்தர்ப்பங்களிலும், ஆகாய விமானத்தில்தான் பிரயாணம் செய்தேன். கீழ்நோக்கி நிலத்தைப் பார்த்தபோது, எந்த ஓவியனும் ஆகாய விமானத்தில் பயணம் செய்திராத ஒரு காலத்தில் க்யூபிஸம் தந்த கோடுகளை நான் பார்த்தேன். ஒன்றோடு ஒன்று சேர்ந்து, இணைந்து, பிரிந்து ஒன்றையொன்று அழித்து, வளரும் பிக்காஸோவின் கோடுகளையெல்லாம் நான் அந்நிலத் தோற்றத்தில் கண்டேன். வெகுசுளுவாக ப்ராக் தந்த தீர்வுகளை யெல்லாம், தன்னிச்சையாக அலைந்து திரியும் மாஸோ - னின் கோடுகளையெல்லாம் நான் பார்த்தேன். ஒரு விஷயத்தை நான் திரும்ப நன்றாகவே தெரிந்து கொண்டேன். ஒரு சிருஷ்டி கர்த்தா என்னும் நிகழ்ஜீவி தன் நிகழ்ஜீவிதம் என்றால் என்னவென்று அவனுக்குத் தெரியும் - நிகழ்காலத்தில் வாழ்பவர்கள் நிகழ்ஜீவிதம் என்றால் என்னவென்று அறியாதபோது, அவன் நிகழ்ஜீவிதனாக இருக்கிறான். இதுவரை யாரும் பார்த்திராத வகையில் இப்பூமியைக் காணும் நூற்றாண்டு, 20ஆம் நூற்றாண்டு. இதுவரை அதுக்கில்லாதிருந்த ஒருசிறப்பை இன்று பல நூற்றாண்டில்  இன்று பூமி பெற்றுள்ளது. இந்த இருபதாம் நூற்றாண்டில் ஒவ்வொன்றும் தன்னை அழித்துக் நாள்கிறது. எதுவும் நீடித்துத் தொடர்வதில்லை. இந்த 20ஆம் நூற்றாண்டிற்கு ஒரு சிறப்பு உண்டு. பிக்காஸோ
20 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இதுகாறும் நம் பார்த்திராத ஒரு பூமியின் விசித்திர குணத்தை, கொறும் இவ்வகையில் தனக்கு நேர்ந்திராத வகையில் அமிவுபெற்று வரும் பொருட்களின் விசித்திர குணத்தை, கொஸோ பெற்றுள்ளார். எனவே பிக்காஸோவிடமும் அவருடைய சிறப்பு இருக்கிறது.'' 
           -ஜெர்ட்ரூட் ஸ்டைன் (1938)

(தில்லி தமிழ் எழுத்தாளர் சங்க பேச்சு -1970 ஞானரதம் இதழ்கள் 1-6, 1970)