Pages

Friday, October 11, 2019

கவிதை ஜோர்ஜ் லூயி போர்ஹெ - தமிழில் - பால் பிரகாஷ்

கவிதை - ஜோர்ஜ் லூயி போர்ஹெ 
கல்குதிரை - மார்க்வெஸ் சிறப்பிதழ் :: தமிழில் - பால் பிரகாஷ்.
நிச்சயமின்மை 
அபாயம் தோல்வி இவற்றை கையூட்டாகத் தரத்தான் நினைக்கிறேன். 
சிதைந்து விட்ட தெருக்கள் 
வன்மமான அஸ்தமனம் 
சரிந்துபோன நகர ஓரத்தின் ரீலாஸ்ஸையும் 
மூதாதையர் இறந்தவர்கள் உயிருள்ளவர் 
பளிங்குச்சிலைகள் போற்றும் ஆவிகள் 
ரவை இரண்டு துளைத்த மூச்சுக்குழலுடன் சிப்பாய்களால் மாட்டுத்தோலில் 
சுற்றப்பட்டு ப்யூனஸ் அயர்ஸ் நகர எல்லையில் தாடியுடன் சுமக்கப்பட்ட 
தந்தையின் தந்தை 
பெருநாடு நோக்கி முன்னூறு சிப்பாய்களுடன் இருபத்திநாலு வயதில் 
யுத்தத்துக்குச் சென்ற தாயின் தாத்தா 
மறைந்த குதிரைகள் மேல் இன்று அசையும் ஆவிகள் 
புத்தகங்களின் அடியில் பதுங்கிய முத்துக்கள் 
வாழ்க்கையில் பொதிந்த ஆண்மை, குணரூபம் 
யார் மீதும் பற்றுக்கொள்ளாத தோல்விகளும் துயரமும் 
தீண்டாத வார்த்தைகளைத் தாண்டிய கனவின் வசீகரத்தில் 
ஆட்கொள்ளப்படாத தடங்கல்கள் அத்தனையிலிருந்தும் காப்பாற்றி 
வைத்துள்ள என் இதயத்தின் மையம் 
உன் பிறப்பின் வருஷங்களுக்கு முன்பான அஸ்தமனத்தில் கிடைத்த மஞ்சள் 
ரோஜாவின் நினைவு 
உன் குறித்த விளக்கம், தத்துவம் 
உனக்கே அதிசயமான அழுத்தம் கொண்ட உனது உண்மைகள் 
என் தனிமைவாசம், ஆன்ம இருள், இதயத்தின் பசி 
எதை அர்ப்பணித்துத் தக்க வைப்பேன் உன்னை 

தமிழில் - பால் பிரகாஷ்.

No comments:

Post a Comment