Pages

Friday, November 01, 2019

பட்டுப்பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம் - கோணங்கி


Posted on 1-November-2019 for Konanki's birth day

பெரியவீட்டின் உள்ளேயும் வெளியேயும் திருணைகளாகக் கட்டிவைத்தார் தாத்தா. ஜாங்கோவின் திருணை சின்னதாக இருக்கும். வானவெளியுடன் இணைக்கப்பட்டிருக்கும். நெல் குதிர் வைக்கப்பட்ட மேலத்திருணையில் பாட்டி இருந்தாள். தாத்தா எப்போதும் வெளித்திருணையில் படுத்துக் கொள்வார். கருப்பு நாய் புளூடோவுக்கு எல்லா திருணைகளும் சொந்தமானது. பாட்டியின் திருணையே விரிவாக உள் கூடமெல்லாம் பரவியிருந்தது. இரண்டு தூண்களும் அவளது மரப் பெட்டியும் அங்குள்ளன. ஜாங்கோ அடிக்கடி திறந்து பார்க்கும் கருப்பு மரப்பெட்டி. ஜாங்கோ அதனுள்ளே ஒளிந்து கொள்வான். புளூடோவிடம் மரப்பெட்டி வாய் திறந்து பேசும். மேலஜன்னல் அருகில்தான் புறையில் அந்தத் தகரவிளக்கு எரிந்து கொண்டிருந்தது. வீட்டின் சுவர்களிலெல்லாம் புறையிருந்தும் அங்கு வைக்கப் பட்ட தகரவிளக்குகளைப் பாட்டி தான் அப்புறப்படுத்தினாள். எண்ணெய்க்கு விதித்த கேடா..... அவற்றை ஊதி மச்க வீட்டுக்குள் பத்திரப்படுத்தி விட்டாள். அந்த விளக்குகளிடம் ஜாங்கோவுக்கு இருந்த ஈடுபாட்டைப் பாட்டி அறிந்திருந்தாலும் வேறுவழியே இல்லை. வெள்ளாமை விளைச்சல் இல்லாத பஞ்சகாலத்தில் விளக்குச் செலவுக்கு எங்கே போவது. குறித்த நேரத்திற்கு மேல் விளக்கைச் சுருக்கி மினுக்கவிட்டே எரியவிடுகிறாள் பாட்டி. தாத்தாவுக்கு கண் பார்வை குறைந்த பிறகு பகல் கூட பட்டுப்பூச்சிகள்  மங்கலாகி விட்டது. மங்கிய படலம் உறங்கும் போல் ஆட்கள் அசைவது தெரியும். மூன்றாம் ஜாமம் இன்னார்தான்
என்று உடனே தெரிந்து கொள்வார். ஜாங்கோவின் குதிகால்கள் ஓரிடத்தில் நிற்பதில்லை. அவனைக் குதிப்பின் மூலமே கண்டு கொள்வார் தாத்தா. கூடுதலான ஒளி ஊரில் யார் வீட்டிலும் ஏற்றப்பட வில்லை .

குதிர்களில் கிடந்த பழைய தானியங்களை குத்திப்போட்டு சோறாக்கினார்கள். வேறு தானியங்களும் இல்லை. சொங்குச் சோளத்தை புடையில் வறுத்துப் பிள்ளைகளுக்கு பண்டம் தயாரிக்கிற வீட்டைச் சுற்றி சிறுவர்கள் பலரும் திருணையில் ஒட்டிக்கொண்டு நின்றார்கள். சிறு அளவாவது கொடுக்க அவர்களுக்கு மனமிருந்தது. பிள்ளைகள் முகம் குறாவி கண்கள் பசியுடன் உலர்ந்தன. தின்பண்டம் ஏகமாய் விற்ற சீனிநாயக்கர் கடையில் கருப்பட்டி தேயிலை பீடி வெத்திலை பாக்கு என்று வியாபாரம் சுருங்கி விட்டது
வீட்டிலிருந்த அநேக காலியிடங்களை நிரப்ப ஜாங்கோவின் விளையாட்டுகளால் மட்டுமே முடிந்தது. புளூடோ இல்லாமல் ஜாங்கோவுக்கு விளையாட்டுமில்லை. ஏனோ திருணையில் முன் கால்களை நீட்டி அதில் முகத்தை வைத்து படுத்திருந்தது. ஊரை விட்டே போனவர்கள் வீடு இடிந்த பின் தான் வெளியேறி இருக்க வேண்டும். இடிந்த வீடுகளில் கதவுகள்தான் மிஞ்சும். அவற்றை குறைந்தவிலைக்கே தாத்தாவிடம் விற்றுச் சென்றார்கள். அவர்கள் ஊர்திரும்பி தாத்தாவிடம் கதவுகளைக் கேட்கும்போது திரும்பக் கொடுப்பதாகவே தாத்தா சொன்னார். திரும்பித்திரும்பி பார்த்த படி குழந்தைகள் வெளியேறிப் போயின. அந்தக் கதவுகளில் அவர்கள் விட்டுச்சென்ற அடையாளங்கள் அவர்கள் கூடவே சென்று கொண்டிருந்தது. அவர்களது கதவுகளைக் கொண்டே தாத்தா தான் இந்தப் பெரிய வீட்டை உண்டாக்கியது. முன்பு இருந்த கூரையைப் பிரித்துவிட்டு ஓடுகளை உண்டாக்கினார். அந்தக் கொண்டிக்கதவுகளைச் சுண்டுவிரல் கொண்டே திறத்து விடலாம். பழஞ்சாவிகளைப் பேய்கள் எடுத்துச் சென்று விட்டன. சில வீடுகள் பூட்டிக் கிடந்தன. கண்ணளவு சாவித் துவாரங்களிடையே எட்டிப் பார்த்தான் ஜாங்கோ . யாரும் அங்கு இல்லாதபோதும் உள்ளே'யிருந்த வெளிச்சத்தில் அந்த வீட்டுக் குழந்தைகள் விட்டுச்சென்ற பொம்மைகள் கிடந்தன. ஜாங்கோவைக் கண்டு பொம்மைகள் தலையசைத்தன. அவர்கள் எங்கே போனார்கள் என்றான். பொம்மைகள் கைவிரித்தன. தேம்பித்தேம்பி அழுதன. அழுவாதே அழுவாதே என்கூட வாரியா... 'மாட்டேம்மாட்டேம்.. போ' என்றன பொம்மைகள். அந்தவீட்டின் கதவுகளில் கிறுக்கப்பட்ட சித்தரிப்புகள் யாவும் பொம்மைகளுக்குத் தெரிந்திருக்கும். அவர்கள் கதவில் நின்று விளையாடிய போது வரையப்பட்ட மாட்டுவண்டி கடக்கடக் லொடக்... கென்று சக்கரங்கள் சுழன்று கொண்டிருந்தன. அந்த வண்டியில் ஏறிக்கொண்டவர்கள் யார்யாரெல்லாம் என்று ஜாங்கோ பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்குத் தெரியாத முகங்கள் போலிருந்தவர்கள் தெரிந்த முகங்களாகவே தோன்றினார்கள். புளூடோவும் அவர்களைப் பார்த்தது. வா வா நாமும் ஏறிக் கொள்ளலாம். வா புளூடோ வா... என்றான். பொம்மைகள் தனியாகப் பூட்டப்பட்ட வீட்டுக்குள் நடமாடிக் கொண்டிருந்தன. ஜன்னல் வழியாக ஜாங்கோவை எட்டிப் பார்த்தன. ஜாங்கோ புளூடோவுடன் ஓடிக் கொண்டிருந்தான் தெருவில். அவனிடமுள்ள பெரிய நூல்பந்தைக் கவ்வியபடி ஓடியது புளூடோ அவன் பொம்மைகளுக்கு அம்மா பின்னிய தையலும் இணைப்பும் இல்லாத சட்டைகளை கருப்பு நூல் பந்தினால் உண்டாக்கினாள். அம்மாவும் அப்பாவும் நகரத்திற்குள் மறைந்து போனார்கள். அவனுக்கான பொம்மைகளுடன் கருப்பு நூல்பந்தை பாட்டியிடம் கொடுத்துச் சென்றாள். அந்த நூலிலிருந்து சிறிதளவுகூட யாரும் இரவல் வாங்கி விட முடியாது. அறுந்துவிடாத நூல்பந்தை அம்மா விட்டுச் சென்றபடியே வைத்திருந்தான். அம்மா திரும்பி வந்து கேட்கும் போது அவளுக்குக்கூட முழுசாகக் கொடுக்க முடியாத நூல்பந்தை தானே வைத்துக் கொண்டிருப்பான். நூல்பந்தை மார்புடன் அணைத்தபடி திருணையில் மல்லாந்து கிடப்பான். 

ஜாங்கோவின் திருணையிலிருந்து பார்த்தால் வானவெளியில் மிதக்கும் பறவைக் கூட்டங்களின் அலாதியான அசைவுகள்... க்வாக்... என கடந்துவிடும் சாகுருவிகள்.... கரைந்தபடியே உருமாறிக் கொண்டிருக்கும் மேகங்கள்.... வெதுவெதுப்பான காலையொளி அவனை விரல் நீட்டித் தொடும். டவுசர் சட்டை எதுவுமில்லாத அம்மணராஜாவாய் அவன் உறங்கும்சாயல் பாட்டியின் கண்ணில் நிற்கிறது. ஓடுகளால் ஆன நீளத்தெருவில் பெரிய உருவத்துடன் நடமாடும் அவன் பாட்டி யானையைப்போல் அசைந்து அசைந்து வெகு நேரம் செல்ல வேண்டிய திருந்தது. வீட்டு வேலைகளில் ஈடுபட்டபடியே பூனைக் கண்களால் அவனை எட்டிப் பார்த்தாள். பாட்டியின் பெரிய உருவத்துடன் இணைக்கப்பட்டவன் போல் அவள் நடமாட்டங்களின் மெல்லிய ஓசையிலும் ஜாங்கோ திரும்பினான். பழங்காலமாகவே இருந்து வரும் பாட்டியின் செதில் செதிலான சுருக்குவிழுந்த கைவிரல்கள் அவனைத் தொடும்  போதெல்லாம் தொட்டால் சுருங்கியைப்போல் சுருண்டு கொள்வான் உறக்கத்தில். உவர் மண் வீசும் பாட்டியின் சேலையுடன் சுருட்டிக் கொண்டு பாம்பு சுற்றிக்கொண்ட உடலைப்போல் திருணையில் படுத்துக்கிடப்பான். பாட்டியின் சேலையே கற்பனைத் தாவரமாகி அவனைச் சுற்றிக்கொண்டது. பாட்டியின் உடம்பு வாசத்துடன் சேர்ந்தே அவன் மோப்ப உணர்வுகள் நரம்புகள் கிளைத்திருக்கும். பாட்டி சொன்ன கதைகளும் சேதிகளும் அவன் அப்பா அம்மாவைக் கொண்டுபோய்விட்ட அண்டரண்டாப் பட்சி யைப் பற்றியதாகவே இருந்தது. ஒரு நாள் வந்து அவனையும் அது அம்மா அப்பாவிடம் கொண்டு போய்விடும் என்று பாட்டி சொன்னாள். முந்திக்காலத்தில் இருந்த திடசரீரங்களையுடைய சுற்றத்தார்களும் தெருக்காரர்களும் எப்போதும் பழைய வீடுகளுக்குள் நடமாடித் திரிவதாகப் பாட்டி முணுமுணுத்தாள். அவள் ஜீவனில் உறங்கும் வேதாளத்தின் கதைகள் ஜாங்கோவின் உலகத்தில் புதிய விந்தைகளை உருவாக்கியது. ஜாங்கோவின் சின்னத் திருணையை பூசிமுடித்தவர் தாத்தாதான். அவரது கனவுகளையும் பேரனுக்காகவே திருணையில் பதித்து வைத்தார். அவன் இடுப்பை கிள்ளி இடும்பு செய்தார் தாத்தா. அவன் மேலும் சுருங்கியபடி பாட்டியின் சேலைக்குள் சுருண்டு கொண்டான். குஞ்சான் விரைக்க நெளித்த படி எழுந்து திருணையில் இருந்தபடியே ஒன்னுக்கு இருந்து கொண்டே சுற்றும்முற்றும் புளூடோவைத் தேடினான். பாட்டி அம்மியில் அரைத்து அப்பிவைத்த தொவையலை கோழிகொத்திக் கொண்டிருந்தது. வட்டக்கண்களால் இவனை ஏறிட்டுப் பார்த்து விட்டு தொண்டைக்குள் சிக்கிய தொவையலை விழுங்கிவிட்டு மேலும் ஒருவிள்ளல் கவ்வி வாயை மூடிக்கொண்டு ஒயிலாக நடந்து அவனைக் கடந்து உள் கூட்டத்தின் வழியாக தெருவில் பாய்ந்து கும்மாளமாய் கத்தி சண்டைக்கு அழைத்தது. ஜாங்கோ இன்னும் அரைத்தூக்கத்தில் பாட்டியைத் தேடினான். அவன் தாத்தா மாடுகளை குளிப்பாட்டி துண்டுவைத்துத் துவட்டியபடி செல்லம் கொஞ்சி னார். மாடுகளுக்குத் தீவனம் வற்றிக்கொண்டே வந்தது. தாத்தாவின் தழுதழுத்த கொஞ்சலில் மாடுகள் உணர்ந்திருக்க வேண்டும். படப்படியில் கூளம் தீர்ந்து விட்டது, இனி தாத்தா கூளத்திற்கு எங்கே போவார். மாடுகள் ஜாங்கோவை திரும்பிப் பார்த்தன.

அடுப்பிலிருக்கும் பாட்டியின் உருவம். ஊது குழலின் சத்தம். அடுப்படிக்கு ஓடி பாட்டியின் மடியில் சுருண்டுகொண்டான். அடுப்பில் கொதிக்கும் சிறிதளவேயான குருணை. புடையில் ஏதோ வறுத்துக் கொண்டிருந்தாள். கதகதப்பான அடுப்புக்கங்கில் பலவித உருவங்கள் தீயுடன் அசைந்து மாறிக் கொண்டிருந்தன. நெல்களஞ்சியத்தில் போன வருஷமே கொட்டி வைத்த நெல் முழுவதும் தீர்ந்துவிட்டது. விதை நெல்கூட மிஞ்சவில்லை. பெரிய வீட்டுக் குதிரில் தானியம் தடவலாகிவிட்டால் அங்குவந்து குடியேறும் இருட்டு யாராலும் துடைக்க முடியாததாக இருக்கும். வேலிமுள்விறகு நின்று எரிவதை தீயில் கனியும் முள்ளின் கூர்மைகளை, அவை சாம்பலாகி ஓடிவதைப் பார்த்துக் கொண்டே கனவு காண்பான் ஜாங்கோ. தலைக்கு ஊத்தணும் ராசாவுக்கு ... கண்ணு பொங்கிப்போச்சு.... என்று நல்லெண்ணெய் தேய்த்து விடுவாள் பாட்டி. அம்மியில் அரப்பு அரைப்பது வரை ஒவ்வொன்றாய்ப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, அரப்பும் வெந்நீரும் தயாரானதும் ஓடி மறைவான் ஜாங்கோ. தெருவில் ஆட்கள் இருந்த வீடுகளுக்குள் ஜாங்கோவைத் தேடுவார்கள் தாத்தாவும் பாட்டியும். என் பேரன் வந்தானாம்மா.... எண்ண தேய்ச்சு குளிக்க இப்படி மொரண்டு செய்றானே... என்று தெருவெங்கும் புலம்புவாள் பாட்டி. ஒளிந்திருக்கும் கள்ளன் உடனே வரமாட்டான். எண்ணெய் தேய்த்த உடம்புடன், புளூடோவைக் கூட்டிக் கொண்டு காட்டுமரங்களுக்குள் ஒளிந்து மறைவான். பலரும் தேடுவர். ஒவ்வொரு முறையும் புளூடோதான் காட்டிக் கொடுக்கும். பலரும் சேர்ந்து ஜாங்கோவை பாட்டியிடம் தூக்கிச்செல்வார்கள். தலைமுடியைப் பிடித்து அரப்பை - அரக்கி நீராட்டுவாள் பாட்டி. நீர்குணகுணப்பில் அழுவான் ஜாங்கோ . அவனுக்கு தாத்தாதான் துவட்டிவிட்டு, தங்கத்துப் பட்டியை ஜாங்கோவின் கழுத்தில் சுற்றிவிடுவார். அதன் குஞ்சங்கள் தரைவரை தொட்டுக் கொண்டிருக்கும். ஜாங்கோ நடப்ப தில்லை. பறப்பான். பறந்து நடப்பான். மாரியங்கோவில் பொந்துகளில் மறைந்திருக்கும் தவிட்டுப் பறவைகளுக்குத் தெரியும் ஜாங்கோவை. கோவிலுக்குள் தூணோடு தூணாக செதுக்கப்பட்ட சிற்பங்கள் நிலைபெயர்ந்து நடமாட, பேசும் பதுமை போல் அவற்றிடையே ஜாங்கோ நிற்பான். கோயில் உத்திரங்களில் தலை கீழாகத் தொங்கும் பழந்தின்னி வௌவால்களுடன் சேர்ந்தே வனங்களுக்குப் பறத்து செல்வான். காட்டின் முரட்டு மரங்களில் ஏறும் கால் முளைத்து, உச்சிக்கு ஏறி இலைகளுக்குள் பதுங்கி காட்டின் பயமறியாது திரிந்தான் ஜாங்கோ.

ஒன்னாம் வகுப்பில் பேர் சேர்த்த அன்றே சிலேட் புஸ்தகம் கொடுத்து விட்டார்கள் அவனிடம். வீட்டுக்கு ஓடிவந்து, திருணையில் கிடந்த பாட்டி மீது குபீரென்று தாவி, கட்டிக்கொண்டு அழுதான். எனக்கு சிலேட் புஸ்தகம் குடுத்துட்டாளே... டீச்சர்... என்று அழுதான். ' இப்படி பிள்ளையும் உண்டுமா? எல்லோரும் ஜாங்கோவைப் பார்த்து சிரித்தார்கள். பள்ளிக்கூடம் போமாட்டேன் போ மாட்டேன் ...போ.... என்று சிலேட்டைத் தூக்கி எறிந்தான்; மறுநாள் ஜாங்கோவைத் தோளில் தூக்கியபடி தாத்தாதான் சிலேட் புஸ்தகத்துடன் பள்ளிகூடம் போனார். என் கண் மங்கிய காலத்தில் பேரன் படிக்க மாட்டேங்கிறானே என்று சொல்லி டீச்சரிடம் ' அடிக்காதீங்கம்மா என் பேரனை'... என்றார் தாத்தா. தோளிலிருந்து இறக்கி டீச்சரிடம் ஒப்படைத்து விட்டு டீச்சரைப் பார்த்து கண் தாத்தா. டீச்சர் அவனுக்கு கலர் சாப்பீசும் கலர்குச்சியும் கொடுத்தாள். எல்லோருக்கும் உன் பேர் சொல்லு என்றாள். நான், ஜாங்கோ ... என்றான். எல்லாக் கண்களும் இமை விரித்தன. பொம்மைக்கன்னங்களும் செம்பட்டை முடியும் கண்டு உச்சுக் கொட்டினார்கள். பின்முடி வணங்காமல் நட்டுக் குத்தலாய் நின்றது. அதைப் பிடித்து டீச்சர் அவனை இருக்கையில் உட்கார வைத்தாள். கரும்பலகையில் சித்திரங்கள் தோன்றின. எழுத்துகள் தோன்றின. சிலேட்டில் எச்சி தொட்டு எழுதினார்கள். தலைகள் குனிந்து குச்சிகள் கிச்கீச்சென்று சிலேட்டில் ஒலித்தன. தாத்தாக் குதிரை வாசலில் காத்திருந்தது. மணி அடித்ததும் பைக் கூடுகளுடன் பறந்தனர். ஜாங்கோவை தோளில் சுமந்து சென்றார் தாத்தா. அப்புறம் தானாகவே கால்கள் பள்ளிக்குப் போகப் பழகி விட்டன. பழக்கத்தால் ஏற்பட்ட துரதிர்ஷ்டத்தினால் பள்ளி சென்றார்கள் எல்லோரும். ஓட்டு வீடுகளும் கூரை வீடுகளுமான சந்து சந்தான குகைவீதிகள் இருந்தன. பள்ளி செல்லும் பாதையே விநோதமானது. தெருத் திருப்பத்தில் தீப்பெட்டி கொளுத்தி விளையாடினான் ஜாங்கோ. கருப்புத் தலையும் வெள்ளை உடம்பும் கொண்ட மெழுகுத் தீக்குச்சிகளை ஒவ்வொன்றாகத் தீப்பெட்டிக் குள்ளிருத்து எடுத்தான். தீக்குச்சியின் வெள்ளை உடம்பை விரித்துப் பறந்து செல்லும் வெள்ளை இளவரசிகளாக மாற்றினான். கருப்புத் தலைகள் கொண்ட வெள்ளை இளவரசிகள் அவனோடு பள்ளிக்குச் சென்றார்கள்.

மணியடித்ததும் பள்ளிக்கூடத் தெருவைத் தாண்டி சுவரோரங்களில் அமர்ந்து தீப்பெட்டியைத் திறத்து ஒவ்வொரு குச்சியாக எடுத்து வெள்ளை இளவரசிகளாக மாற்றும் ஜாங்கோவின் மேஜிக்ஷோ . - தெருவழியே பல உருவங்கள் அசைந்தன. ரொம்ப வயதை அடைந்தவர்கள் அவனைப் பார்த்து ' யாரு ராசாயிது?' என்றார்கள். நான் ஜாங்கோ .... என்றான். பெரியவர்கள் உருவத்தின் முன் நின்று அவர்களுக்குள் தலையைச் சாய்த்து பார்வையை நிலைத்திருப்பான். அவர்கள் யாருமே பள்ளிக்கூடம் போனதில்லை என்றார்கள். வேறு எங்கோ உள்ள கயிற்றினால் இணைக்கப்பட்டதுபோல் நடந்து சென்றார்கள். மூன்று தெருக்களை வளைந்து வளைந்து தாண்டினால் அந்த மஞ்சள் காரை வீடு பூட்டியிருப்பது தெரியும். அது வெகுகாலமாகவே பூட்டப்பட்டு இருந்தது. இன்று அவன் பள்ளி செல்லும் போது மஞ்சள் வீட்டின் கதவு திறந்து கிடப்பதைப் பார்த்து உள்ளே வரான்டாவின் ஓரம் ஏறும் படிக்கட்டுகள் வழியாக அவன் கால்கள் நடந்தன. படிகள் பழமையாகி கருப்பு படிந்திருந்தன. சில காகங்கள் மொட்டைமாடி மீது கூடியிருந்தன. ஜாங்கோவைப் பார்த்ததும் உடனே பதுங்கி வேறொரு பக்கம் மறைந்தன. மொட்டைமாடியில் கைபிடிச்சுவரின் நிழல் தனியாக இருந்தது அந்த நிழலுடன் சேர்ந்து சாய்ந்து கொண்டான் ஜாங்கோ. யாரும் தேடிவர முடியாத கருப்படைந்த மொட்டைமாடியில் சிலேட்டுக் குச்சியால் மனம் போன போக்கில் படம் வரைந்தான். அதனுடன் பேசிக்கொண்டே கடல் அலைகளைக் கோடுகளாக வளைத்து வரைந்தான். அங்கு கிடந்த ஒரு செத்த மீன் எலும்புக் கூட்டில் சிற்றெறும்புகள் கூட்டமாக மீனின் எலும்புக்கூட்டை கரைத்துக்கொண்டிருந்தன. மீன் எலும்புக்கூட்டை வரைந்த கடலலைகளின் கோடுகளில் நீந்தவிட்டான். விடுபட்ட எறும்புகள் திரும்பி வந்து எலும்புக்கூட்டை அடைந்து செத்தமீனை அரித்தபடி கடல் நீரில் இழுத்துச் செல்கின்றன. சுழிகளும் சுழிப்புமான கருங்கடலில் கெத்துக் கெத்தென்ற அலைகள் மீது ஆயிரமாயிரம் மனிதர்கள் திமிங்கலத்தின் எலும்புக்கூட்டை இழுத்துச் செல்வது தெரிந்தது. மீன்கண்கள் இரண்டும் துவாரமாகித் திறந்துகிடந்தன. அதன் கண்கள் பறிக்கப்பட்டுவிட்டன. அதன் வழியே சாரை சாரை யாக எறும்புகள் வெளியேறிச் செல்கின்றன. அவை கடலின் கரைகளைக் கடந்து காரை பிளந்த மொட்டைமாடியைக் கடந்து வெளியில் எங்கோ போய்க்கொண்டிருந்தன. இறந்த மீனின் பிளவு பட்ட வாய்வழியாக வேறு சில எறும்புகள் வெளிப்பட்டு ஜாங்கோவை நோக்கி வந்து சேர்ந்தன. அவனிடம் சொல்ல நினைத்ததைச் சொல்லிவிட்டு கடல்கோடுகளைக் கடந்து நீந்திச் சென்றன. வேற்றுக்கிரகத்தில் இருந்து வந்த பறவைகள் சில அவன் வரைந்த கடலருகில் கால்வைத்து அமர்ந்தன. தொலை தூரத்தில் இருந்து வந்த களைப்பினால் அலகு திறந்து மூச்சுவிட்டுக் கொண்டிருந்தன. அவற்றின் கால் நகங்கள் தரையில் பதிந்தன. கருப்பு அலகுகளால் கொத்திக் கொத்தித் துவாரமிடப்பட்ட மேலும் பல மீன்கள் செத்துக்கிடந்தன. மீனின் கனவுகளையும்  நூறு அலகுகள் கொண்ட பறவை ஒன்று கொத்திக்கொத்தி குத்துக்குத்தான துவாரங்களின் இம்சையில் அம்மீன்கள் செத்த பிறகும் துடித்துக் கொண்டிருந்தன. இறந்த மீனின் எலும்புக்கூடுகளைத் தன் நடுங்கும் கரங்களால் எடுத்தெடுத்து கருங்கடலில் நீந்தவிட்டான். எல்லா மீன்களின் எலும்புக்கூடுகளையும் போரிடும் அலைகள் மீது எறும்புகள் இழுத்துச் செல்கின்றன. வேற்றுக் கிரகத்துப் பறவைகள் கடல்மேல் பறந்து பறந்து கருஞ்சிறகுகளை மூடி எலும்புக்கூடுகளை மறைத்தன. ஜாங்கோ .... ஜாங்கோ ... என்று கூவிப்பறந்தன. ஜாங்கோ டவுசர்பையிலிருந்த கருப்பு நூல் பந்து பத்திரமாய் இருக்கிறதா என்று தொட்டுப் பார்த்துக் கொண் டான். அதையறிந்து பறவைகள் உற்சாகம் அடைந்து ஜாங்கோ ஜாங்கோ ..... என்னிடம் கொடு ஜாங்கோ ..... என்னிடம் கொடு, என்னிடம் கொடு என்று ஒவ்வொரு பறவையாக ஜாங்கோ அருகில் பறந்து பறந்து கேட்டன. கொடுக்க மாட்டேன். கொடுக்க மாட் டேன் ..... என்று கைகளால் அவற்றை விரட்டினான். உயரத்தில் மேலெழுந்து வட்டமிட்டுக் கொண்டிருந்தன பறவைகள். செத்த மீன்கள் எல்லாம் அலைக் கோடுகளில் துடுப்புகளை அசைத்து நீந்தி வருகின்றன. மீன்களுக்கு அவைகள் கேட்காமலே நூல்பந்தைக் கொடுக்க நினைத்தான். மீன்களுக்கு உயிருண்டானதுபோல் ஆயிரம் எறும்புகள் இழுத்துச்செல்கின்றன. எறும்பின் கால்கள் பட்டே அவற்றின் எலும்புகளும் கரைகின்றன. ஆனாலும் கொஞ்சம் கொஞ்சமான நகர்வில் தான் அணு அணுவாக அவன் செத்துக்கொண்டிருந்தான். செத்த மீன்கள் நீந்தி வருகின்றன. இருண்ட நீருக்குள் ஓடி ஒளிந்து கொண்ட அவன் காதுகளில் செல்லம் கொஞ்சிப் பேசின மீன்குஞ்சுகள். ''ஜாங்கோ... என் ஜாங்கோ ... என்றன.

கடலின் அலைக்கோடுகளின் மீது ஜாங்கோ முழு நூல்பந்தையுமே மீன்களுக்காக சமர்ப்பணம் செய்தான். உயரத்தில் பறந்து கொண்டிருந்த பறவை ஒன்று நூல்பந்தை அபகரித்துச் செல்லும் வேகத்தில் கடந்து போயிற்று. அதை எடுத்து மறைத்துக் கொண்டான் ஜாங்கோ. ஏமாற்றத்தில் பெருமூச்சுடன் உயர எழுந்து சென்ற பறவை மீனின் எலும்புக்கூட்டைச் சுமந்தபடி மிதந்து கொண்டிருந்தது. அதிசயமான மீன்களுக்காக நூல்பந்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அறுத்து ஒவ்வொரு மீனையும் கட்டி விட்டான் ஜாங்கோ. உடனே நூல்பந்தை டவுசர் பையில் மறைத்தான். அந்த அரக்கு மாளிகைக்குள் சென்றுவிட்ட வேற்றுக் கிரகத்துப் பறவையைத் தேடி மொட்டைமாடியில் பதித்த கண்ணாடி வில்லையை அகற்றினான். உள்ளே வட்டமான துவாரம் சென்றது. எட்டிப்பார்த்தான். உள்ளே மஞ்சள் இளவரசி விளையாடிக் கொண்டிருந்தாள். சூரிய ஒளியைக் கண்ணாடி கொண்டு அசைத்து அவளுக்கு முதல்பரிசாக ஒளியின் மூலம் தன் இதயத்தை நீட்டித்தொட்டான். பிஞ்சு போன்ற அவள் மஞ்சள் உடல் மீது அவ்வொளிபட்டு நடு நடுங்கினாள். வட்டமான துவாரத்தின் வழியாக ஜாங்கோவின் முகம் தெரிந்தது. தன்கையில் இருந்த பிடிலை நெஞ்சுடன் அணைத்தபடி மேலே அண்ணாந்து பார்த்தாள். யாரது? நான் ஜாங்கோ... என் நாயின் பெயர் புளூடோ. எனக்கு பள்ளிக்கூடமே பிடிக்காது. இதோ என் நூல்பந்து என்றான். இதோ என் பிடில் ... என்றாள் இளவரசி. உனக்கு வேண்டுமா..... இது உனக்கு வேண்டுமா... எனக்கு வேண்டாம்..... எனக்கும் வேண்டாம் அங்கே வந்த வேற்றுக் கிரகத்துப் பறவைகள் எங்கே? அவளுடன் சில பூனைகள் விளை யாடிக் கொண்டிருந்தன. ஓ! பறவைகளா... பறவைகள் எல்லாமே வேற்றுக்கிரகத்தில் வாழ்பவைதான். பறவைகள் ஓரிடத்தில் நிற்காதே... என்றாள். என்னோடு புளூடோ இருக்கிறது, நீயும் வருகிறாயா? வர முடியாது. இங்கிருந்து தப்பமுடியாதே. அரக்கன் விடமாட்டான். யார் அந்த அரக்கன் ... என் அப்பா.... இளவரசி விசும்பிவிசும்பி அழுதாள். நினைத்து நினைத்து அழ வேண்டாம் என்றான். பூனைகளும் அழுதன. ஜாங்கோ நூல் பந்திலிருந்து கொஞ்சம் எடுத்து அவளுக்கும் பூனைகளுக்கும் பரிசளித்தான். அவள் அந்த நூலைத் தன்பிடிலில் இணைத்து தன் உடல் நரம்புகளில் ஒன்றாக்கி விரல்கள் மூலம் பிடிலை அதிர வைத்தாள். மெல்லமெல்ல பிடிலின் நரம்புகள் அதிர்ந்து பூனைகளின் அலாதியான கண்களின் ஒளிபொருந்திய ஆழங்களில் உள்ளே உள்ளே சென்றது. தொலைவில் சுவரின் சிறு துவாரத்தின் வழியாக, அவளை எட்டுவதற்கு இருந்த அந்த சிறு துவாரத்தில் ஊடுபுகுந்து, அவளைத் தொட்டுவிட நினைத்தான். சுவர் மேலும் வலுவாக இருந்தது. சுவரில் முகத்தைத் திருப்பி ஜாங்கோ தேம்பித் தேம்பி அழுதான். தன் அம்மாவின் நினைவு வந்து நூல்பந்தை நெஞ்சுடன் அணைத்தபடி மொட்டை மாடியில் உருண்டு புரண்டு அழுது கொண்டிருந்தான் ஜாங்கோ. அவன் காதருகில் வந்த மீன் குஞ்சுகள் அழாதே ஜாங்கோ அழாதே என்று கெஞ்சின. அவன் அழுவதை அவள் பார்த்துவிடாமல் இருக்க ஜாங்கோ கண்ணாடித் துண்டினால் அந்தத் துவாரத்தை மூடிவிட்டுப் படிக் கட்டு வழியாகக் கீழிறங்கித் தெருவில் நடந்தான்.

இருட்டிப்போயிருந்தது எங்கும். நிசப்தமான தெருவழியே காற்று ஊளையிட்டபடி வீசிக்கொண்டிருந்தது. தொலைவில் இருந்த பனை மரங்களின் சரசரப்பு ஒலி பெரிய இழப்பின் காரணமாய் ஊரையே சூழ்ந்து கொண்டிருந்தது. தெருவில் அவனைக் கண்ட புளூடோ சிணுங்கியது. அரிக்கேன் லாந்தரும் தடியுமாக அவன் தாத்தா வரும் ஓசை. தாத்தாவின் நிழல் சுவர் முழுவதும்பட்டு அசைந்தது. நிழல் பேசியது: "ஜாங்கோ .... எங்கே போயிட்டே ... என் ராசா... உன் பாட்டி காட்டுக்கு உன்னத்தேடிப் போயிருக்கா... வாவா... என்றார். 

தாத்தாவின் கைத்தடியைப் பிடித்துக் கொண்டு முன் செல்கிறான் ஜாங்கோ, லாந்தர் ஒளியில் முகத்தை நீட்டியவாறு புளூடோ பின்தொடர்ந்து சென்றது. தெருவில் இருந்த ஒவ்வொரு வீட்டிலும் மினுக்மினுக்கென்று தகரவிளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. எல்லா உருவங்களும் காட்டின் உருவங்களாய் சிறு ஒளிக்கீற்றின் அசைவில் தென்பட்டன. விளக்குகளின் ஒளிரேகையில் உள்ள கோடுகளால் பேசுவதற்கு ஏதுமில்லாத ஆழத்திலிருந்தது இரவு. காற்றின் ஒவ்வொரு அசைவும் ரேகைகளை மாற்றி விடும். அதில் தோன்றும் விந்தைகளைக் கண்டு குழந்தைகள் கண்கள் விரிந்தன. பெரியவர்களுக்கு விளக்கின் அநேக ஒளிரேகைகள் மங்கிப்போயிருந்தன. அதன் ஆழம் தீர்க்க முடியாத துயரங்களுடன் இருண்டிருந்தது. அந்தச் சிறுவிளக்கின்றி நகரவே முடியாமலிருந்தது. ஜாங்கோவுக்கும் புளூடோவுக்கும் விளக்கிலிருத்து வெளிப்பட்ட குறைந்த அளவான வெளிச்சமே போதுமானதாக இருந்தது. விளக்கின் ஒவ்வொரு ஒளியிழையிலும் பின்னப்பட்ட மெல்லிய ஆடையுடன் அவன் கண்ட மஞ்சள் இளவரசி தோன்றினாள். ஊர் வெறுமையாகிக்கொண்டே வந்தபோதும் தகரவிளக்கின் ரேகைகளில் மஞ்சள் இளவரசி பெரிய வீடு முழுவதும் அசைந்தசைந்து பிடிலை நீட்டுகிறாள். அதை அவன் இருகைகளாலும் வாங்க மறுக்கிறான். வீட்டில் பதிந்த புறைகளில் அவனுக்கு இஷ்டமான பழைய தகர விளக்குகள் எண்ணெய்யின்றியே எரிந்து கருத்த தடங்கள் சுவரெங்கும் பதிந்துவிட்டது. இன்னும் அவை ஏற்றப்பட வில்லை. அதனாலோ என்னவோ வீட்டில் குடிகொண்ட இருட்டு வெறுமையாகிக் கிடந்த அனேக காலி இடங்களில் புகுந்துகொண்டது. ஏனோ, புறையில் படிந்த கரித்தடங்களில் முன்னாட்களில் இருந்த அதிசயம் திரும்பவும் வந்து இருட்டைத் துடைத்துக் கொண்டிருந்தது. பாட்டி திருணை முழுவதும் படுத்துக்கிடக்கிறாள். ஊரிலேயே இதற்கு முன்பும் அவ்வளவு பெரிய உருவத்துடன் மனிதர்கள் இருந்தார்களா! விளக்கு வெளிச்சத்தில் பாட்டியின் உருவம் மேலும் பன்மடங்கு பெரிதாகிறது. அவன் கையிலிருந்த நூல்பந்தை ஓடிப்போய் பாட்டியிடம் கொடுத்துவிட விரும்பினான். அசைவற்றுக்கிடக்கும் பாட்டி மீது யார்யாரே தோன்றி வெளியே அசைந்து தெருவில் மறைந்து கொண்டிருந்தார்கள். ஆனால் அவனுக்காக மட்டுமே அவள் கண்களில் பார்வை மெல்ல மெல்ல இறந்து கொண்டிருக்க வேண்டும். அவன் உடனடியாக நூல் பந்தை பாட்டியிடம் கொடுக்கும் தருணத்தில் வெளித் திருணையில் படுத்திருக்கும் தாத்தா இருக்கிறாரே. பாட்டியிடம் மட்டும் கொடுத்துவிட்டால் தாத்தாவுக்கு எதுவும் தரமுடியாதே. நூல்பந்தை பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக பகிர்ந்து தந்து அவர்களை சின்ன தாக்க முடியாதே. அவர்களிடம் நூல்பந்து இல்லாவிட்டாலும் அவர்களின் பழமையான உருவம் எல்லா நியதிகளையும் கடந்து அவ்வூரின் தான் தோன்றியான முரட்டு மரங்களைப்போல் பூமியைப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். அம்மரங்களின் அசைவுகளில் வெளியுடன் இலைகள் சப்தமெழுப்புவதில் தான் இருப்பே சாத்தியமாகிறது. புறையிலிருந்த தகரவிளக்கில் பின்னலான ரேகைகள் உருமாற்றமடைந்து மஞ்சள் இளவரசி தோன்றி மறைந்தாள். காற்றின் அடுத்த அசைவில் அவளது பிடில் மட்டும் தோன்றியது. ஜாங்கோவின் இமைகள் திறந்து விரிந்தன. வா ஜாங்கோ வா இதோ உனக்கான பிடில் ..... எடுத்துக்கொள் ஜாங்கோ ... பட்டுப் பூச்சிகள் இலைகளுக்குள் உறங்கும் இரண்டாம் ஜாமத்தில் என் அப்பா பட்டு நூலினால் என்னைச் சிறைக்குள் தள்ளியபடியே இருக்கிறார். அந்த அரக்கன் கனவிலும் பட்டு நூலை நூற்றபடியே என்னைச் சுற்றி சிறையெழுப்பியபடியே இருக்கிறான் . ஜாங்கோ . வாவா ஜாங்கோ வா பட்டுப்பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமத்தில் என்னை நீ விடுவிப்பாயா... வெறுமையும் இருளுமான நூலினால் ஊர் முழுதும் பின்னிக்கொண்டிருக்கும் கருப்பு நிறப் பட்டுப்பூச்சிகள் இருளைக் கக்கிக்கக்கி தெருவெல்லாம் சுற்றப்பட்டுவிட்டது நூலினால். எல்லோரும் பட்டு நூலினால் கட்டப்பட்டு இருளுடன் இணைக்கப்பட்டுவிட்டார்கள். கயிறுகள் அனைத்தும் உயரங்களால் இணைக்கப்பட்டு அரக்கன் கையில் கொடுக்கப்பட்டுவிட்டது. பெரியோர்கள் எல்லோருமே உறங்கியபடியே சிறுவர்களைச் சுற்றி சுற்றி பட்டினால் நூற்றுக்கொண்டிருக்கிறார்கள். குழந்தைகள் உடலிலிருந்து வந்துகொண்டே இருக்கும் மிக மெல்லிய பட்டு இழைகளால் உயிர் முழுவதையும் அர்ப்பணித்து விட்டார்கள். 

அவர்கள் பிடியிலிருந்து யாரும் வெளியேற முடியாது. எல்லாமே இயற்கையின் நியதிகளாக்கப்பட்டுவிட்டன. இரவுகள் தான் எல்லாவற்றிற்கும் காரணம். கரிய நிறப் பனித்துளிகள் உருவாகும் பின் இரவுகளில் பட்டுப்பூச்சிகளாய் மாறிவிட்ட பெரியவர்கள், சதாவும் ஆடை நெய்தபடியே இருக்கிறார்கள், வீட்டுக்குள் வெறுமையான தறிகள் சலம்புகின்றன. தையலும் இணைப்புமில் லாத கண்ணுக்குத் தெரியாத அதிசய ஆடையை எங்கே வைத்திருக் கிறாய் ஜாங்கோ. என் அம்மா பிறந்தது முதல் நெய்துகொண்டிருந்த ஆடைகளை யெல்லாம் என் பொம்மைகளுக்கே அணிவித்தாள். அவை யாவும் நெல்குதிரின் அடியாழங்களில் எஞ்சியிருக்கும் ஒரு சில நெல்மணிகளோடு மறைத்து வைக்கப்பட்டுள்ளன. எனக்காக அவள் பின்னிக் கொடுத்த அந்தக் கருப்பு நிற ஆடையைத் தெருவில் கிடந்த புளூடோவுக்கு பரிசளித்தேன். வாலறுந்த புளூடோவின் அழுகையின் நீட்சியை அதன் துல்லியத்தை தாங்க முடியாது அதை என் தாத்தாதான் வீட்டிற்கு கொண்டுவந்தார். அது நடந்து வந்த ரத்தம் பட்ட தடங்களில் அதன் அறுந்த வாலை எடுத்தேன். என் முதுகுடன் இணைத்துத் தைத்துக்கொண்டேன். யாருக்கும் தெரியாமல் அதை மறைத்து வைத்தேன். என் அம்மா வருவதுவரை இந்த நூல்பந்தையாவது நான் அவளுக்காகப் பாதுகாக்க வேண்டும். 

வேக வேகமாக இருள் வீசியது காற்று. தொலைவில் உள்ள பனை மரங்கள் கூத்தாடுகின்றன. அவற்றின் மீது பேய்கள் அமர்ந்துவிட்டன. மரங்களில் இருந்த பறவைகள் யாவும் சிதறியோடுகின்றன. எங்கும் நிலைகொள்ள முடியாத பறவைகள் என்ன செய்யும். இந்த புயலில் எங்கு போகும். பயமாக இருக்கிறது ஜாங்கோ. விளக்கு அணைந்து எல்லாம் அறுபட்டு எங்கும் இருள். அவன் திருணையில் படுத்திருக்கிறான். அவனது நூல்பந்தை நெஞ்சுடன் அணைத்திருக்கிறான். தூணோடு புளூடோ சிணுங்குகிறது. இருளில் கண்கள் மினுங்க அவனைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. ஜாங்கோ அருகில் மஞ்சள் இளவரசி. அவன் கைகளுடன் கைகள் சேர்த்து உறங்குகிறாள். பட்டுப்பூச்சிகள் உறங்கும் இரண்டாம் ஜாமத்தில் அவர்கள் இருவரும் உடலில் புதைந்து உறங்குகிறார்கள். இருவர் கைகளும் தூக்கத்தில் இணைந்தே நகர்கின்றன. அவனை விட்டுத் தப்பிச் சென்ற நூல்பந்து அவர்களைச் சுற்றிச் சுற்றி கனவைப் பின்னுகிறது. யாரும் அதைப் பார்க்காதபோது நூலின் விதவிதமான  சித்தரிப்புகள் விந்தையான உருவங்களாகத் தோன்றின. உருமாறும் நிழல் கோடுகளாய் நூல் இயங்குகிறது. திரும்பவும் தானே தன்னைச் சுற்றிக்கொண்டு நூல்பந்தாகி தனியே அலாதியாகக் கிடக்கிறது. புளூடோ அதை யார் கண்ணிலும் பட்டுவிடாமல் கவ்விக்கொண்டது; ஜாங்கோ விழிப்படைந்தபோது பக்கத்தில் யாருமில்லை. பட்டுப்பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமத்தில் குளிர் தடுக்கத்துடன் காற்றில் வரும் பிடிலின் இசை. அவனும் புளூடோவும் பின்கட்டுக் கதவைத் திறந்து தெருவுக்குப் போகிறார்கள். நிசப்தமும் குளிரும் படிந்த தெருவில் நடந்து போகிறார்கள். அந்தப் பிடிலின் துக்கத்தில் விழிப்படைந்த அப்பொம்மைகள் ஒவ்வொரு காலியாகக் கிடந்த வீடுகளின் ஜன்னல் திறந்து வெளிப்பட்டன. எல்லா பொம்மைகளையும் கூட்டிச் செல்கிறான் ஜாங்கோ. பிடில் அதோ அதோ... பொம்மைகளை அணைத்தபடி தெருவில் வளைந்து வளைந்து நடக்கிறார்கள். காரை வீட்டின் படியில் ஏறினார்கள். ஜாங்கோ இருண்டிருந்த படிகள் மீது தீப்பெட்டியை உரசினான். தீக்குச்சி வெளிச்சத்தில் சுவரில் எழும்பிய நிழல் ஜாங்கோ ஜாங்கோ ... போகாதே... போகாதே..... குச்சி அணைந்ததும் அந்த நிழல் மறைந்தது. அடுத்த குச்சியை மெதுவாக, துல்லியமாக உரசினான். மீண்டும் சுவரில் எழுந்த நிழல் தடதடவென்று ஆடியது. போகாதே போகாதே... அந்தக் குச்சியும் அணைந்தது. பூதம் மறைந்தது. ஒவ்வொரு குச்சியிலும் ஒரு பூதம் வந்து அவனுக்குப் பின்னால் இருந்த சுவரில் எழுந்து பொம்மைகளைத் திருட முயன்றது. உடனே தீக்குச்சியை ஊதியணைத்தான். பொம்மைகள் கூச்சலிட்டன. மொட்டைமாடி. திட்டுத் திட்டான மேகங்களுக்கிடையில் நிலா தாண்டித் தாண்டி ஓடிவருகிறது. இரு ஜாங்கோ இரு... நானும் வந்துவிடுகிறேன்.... என்றது நிலா. அவர்களின் ஆதி நிலா தன் முழு ஒளியையும் மஞ்சள் காரை வீட்டின் மொட்டைமாடி மீது வீசியது. வேற்றுக் கிரகத்துப் பறவை கள் அதிக உற்சாகமடைந்து தக்க தருணத்தில் தங்கள் நீண்ட நீண்ட கோர அலகுகளை நீட்டி எங்கிருந்தோ பறந்து வந்தன. அவை உயரத்தில் பறந்து பறந்து பொம்மைகளைத் தூக்குவதற்கு சரிந்துவந்தன. பட்டுப்பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமத்திற்குள் எல்லோரும் வந்துவிட்டார்கள். போ ஜாங்கோ போ... என்றது நிலா. மூடிய கண்ணாடியை அகற்றி துவாரம் வழியாக எட்டிப் பார்த்தான். பொம்மைகளும் எட்டிப் பார்த்தன. துவாரம் வழியாக நிலா கீழே சென்று அங்கிருந்த தொட்டியின் சலனமில்லாத  தண்ணீரில் தன்முழு அழகையும் காட்டி நீந்தியது. காற்று மெல்லிய அலைகளை எழுப்பியது. அங்கு யாருமே இல்லை. தண்ணீரின் அடியில் பிடில் மட்டும் அதிர்ந்து கொண்டிருந்தது. எங்குமே பார்த்திராத ஓர் அபூர்வமான தங்கமீன் நீந்திக் கொண்'டிருந்தது. தண்ணீர் பட்டுவிரிப்பாய் மந்திரம் போல் வசீகரித்தது. அவளைக் காணவில்லை. பட்டுப்பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமத்தில் அந்த மஞ்சள் இளவரசி தன்ஆகிருதி மாறி மீனானாள், மீன்களின் கதை உலகம் மஞ்சள் உலகமாக மாறியது. 
ஏமாற்றத்துடன் அவர்கள் வீடுதிரும்பிப் போயிருக்க வேண்டும். பொம்மைகளும் காலி வீடுகளுக்குத் திரும்பி எப்போதுமே தனிமையில் உலவிக்கொண்டிருக்க வேண்டும். பின்னாளில் ஜாங்கோ மஞ்சள் இளவரசியைத் தேடி எங்கெல்லாமோ அலைந்து திரிவதாகக் கதைகள் சொல்லப்பட்டன. எல்லாவற்றிலிருந்தும் தப்பி விடுவதற்கு அவன் அம்மா கொடுத்த நூல்பந்து தன் புதிர்த் தன்மை வாய்ந்த பின்னல்களால் வாழ்வின் எல்லா விதிகளிலிருந்தும் அவனைத் தப்பவிட்டிருக்கும்.