Pages

Saturday, November 16, 2019

ஸரஸாவின் பொம்மை - சி.சு.செல்லப்பா :::: முகவுரை - ந. சிதம்பர சுப்ரமண்யன்

ஸரஸாவின் பொம்மை 
முப்பதுகளையும் நாற்பதுகளையும் சிறுகதைகளின் காலம் என்று சொல்லலாம். எல்லாப் பத்திரிகைகளும் போட்டி வைத்து சிறுகதைகளைப் பிரசுரித்தன. அந்தக் காலகட்டத்தில் சிறுகதை எழுத ஆரம்பித்தவர்தான் சி.சு.செல்லப்பா. அவரின் இந்தச் சிறுகதைகளை ஒருசேரப் படிக்கும்போது செல்லப்பா பல துறைகளிலும் சாதனை செய்திருக்கிறார் என்று தெரிகிறது. 1940களின் வாழ்க்கை குறித்த செறிவான இலக்கிய சாட்சியமாக இக்கதைகள் விளங்குகின்றன என்பதில் சந்தேகமே இல்லை.
சி.சு. செல்லப்பாவின் சிறுகதைகள் மொத்தமும் ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கின் எழுத்து பிரசுரம் மூலம் தொகுப்பாக வந்துள்ளது. இதை ஒவ்வொரு தமிழரும் வாங்க வேண்டியது இந்தத் தொன்மையான மொழியைப் பேச வாய்த்திருக்கும் நம் அனைவருடைய கடமை. சி.சு. செல்லப்பா உயிரோடு இருந்தவரை அவரை சரியாகப் படிக்காமல், அவரோடு வெட்டிச் சண்டை போட்டிருக்கிறேன். அவர் இறந்த பிறகுதான் அவரைப் படித்து அவன் என் அப்பன் என்பதைப் புரிந்து கொண்டேன். பழகுவதற்கு இனிமையற்ற ஆள். க.நா.சு.தான் பழக இனிமையான ஆள். ஆனால் சி.சு. செல்லப்பாதான் நவீன இலக்கியத்தின் பிதாமகர். அவருடைய எழுத்து பத்திரிகை இல்லாவிட்டால் (தம்பிங்களா, பத்திரிக்கை என்று எழுதாதீர்கள்) இன்று நவீன இலக்கியமே இல்லை. பாரதி ஆரம்பித்ததை நீர் ஊற்றி ஏர் போட்டுப் பயிர் பண்ணினவர் செல்லப்பா. ஏதோ ப்ரமோஷனுக்காக இதை நான் எழுதவில்லை. நீங்கள் படிக்கிறீர்களோ இல்லையோ செல்லப்பாவின் சிறுகதைத் தொகுதி உங்கள் இல்லத்தில் இருந்தால் அங்கே தமிழ் வீற்றிருக்கிறது என்று பொருள். ஏன் படிக்கிறீர்களோ இல்லையோ என்று சொன்னேன் என்றால், உங்கள் வாழ்நாளில் ஏதோ ஒரு சமயத்திலாவது அவருடைய ஒரு கதை உங்கள் உள்ளே செல்லும்.
செல்லப்பாவின் சரசாவின் பொம்மை என்ற கதை உலகின் அதியற்புதமான கதை. மௌனி கதைகள் மொத்தத்தையும் அந்த ஒரு கதை வீழ்த்தி விடும். முதலில் ஏதோ அது ஒரு குழந்தைக் கதை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அல்ல. அது ஒரு Freudian கதை. படித்துப் பாருங்கள். மேலும், தமிழின் முதல் தலித் கதையை எழுதியவர் பாரதி. அதற்கு அடுத்த தலித் கதையை எழுதியவர் செல்லப்பா. அதுவும் இந்தத் தொகுப்பில் உள்ளது.
நண்பர்கள் இந்தப் பதிவை முடிந்த வரை அதிக அளவில் ஷேர் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.
புத்தகம் வாங்குவதற்கு இணைப்பு:
வழக்கம்போலக் கலாசாலை விட்டதும், ஸரஸாவைப் பார்த்துவிட்டுப் போவதற்காக மாமா வீட்டிற்குள் நுழைந்தேன். அப்பொழுது மாமி சமையலறைக்கு அடுத்தாற்போல் ஒரு வெள்ளிக் கும்பாவில் சாதம் பிசைந்து கொண்டிருந்தாள். ஆனால் யாருக்காக அதைப் பிசைந்து கொண் டிருந்தாளோ அந்த நபர் மட்டும் அருகே காணப்படவில்லை. ''ஸரஸா ! சாப்பிடவறயா, இல்லையா? அப்புறம் நான் சாதத்தை வெள்ளைக்குப் போட்டுடுவேன் தெரியுமோ? பேசாமே வந்துடு' என்று கோபக்குரலில் அம்மாமி கூறிக்கொண்டிருந்தது மட்டும் என் காதில் விழுந்தது. 

நான் கூடத்திற்கு வரவும், என் காலடிச் சப்தம் கேட்கவே, அம்மாமி என் பக்கம் திரும்பி , "வாடாப்பா, சமய சஞ்சீவி ! உனக்கு நூறு வயசு ; இந்த இரண்டு வாய்ச் சோறு உன் அம்மங்காள் சாப்பிடறத்துக்குள்ளே என் பிராணனை வாங்கிடறாளப்பா. இனிமே என்னாலே இவளோடே பிராணனைக் கொடுத்துக்க முடியாது. இன்னும் 5, 6 வருஷங் கழித்து நீ இவளைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு , உனக்குப் புண்ணியம் உண்டு, இப்போதே கல்யாணம் பண்ணிக் கூட்டிண்டு போயிடு. உபத்திரவம் விட்டு துன்னாவது இருக்கும்" என்று கோபம் ஒரு புறமும், பரிகாசம் ஒரு புறமும் ததும்பும் முகத்தோற்றத்துடனே , சரேலென்று எழுந்து தோட்டப் பக்கம் கையலம்பி வரச் சென்றாள். போகும் பொழுதே உரத்த குரலில், ''ஸரஸா ! இதோ கூடத்திலே உன் அத்தான் வந்திருக்கான் பார் - இந்த அழகியைப் பார்க்கிறதுக்கு - அழுகுணியை!'' என்று சொல்லிக் கொண்டே சென்றாள். 

நான் இதையெல்லாம் கேட்டுக்கொண்டே, வந்த சிறுநகைப்பையும் அடக்கியபடியே சமையலறையை நோக்கிச் சென்றேன். ஸரஸாவின் கோபத்திற்கு ஆளாவதற்குத் தாங்கள் செய்த குற்றம் இன்னதென்று அறியாமல், சிதறி உருண்டோடிக்கொண்டிருக்கும் பாத்திரங்களையும், கைகளில் கிழிபட்டுக் கொண் டிருக்கும் பழைய காலண்டரையும், அவள் வாய் முணு முணுப்பையும், கண்களில் நீர் மல்கி இருந்ததையும் பார்த்த உடனே மாமி அங்கலாய்த்துக்கொண்டதில் ஒரு சிறிதும் தப்பி தமில்லையே என்று என் மனத்திற் பட்டது. 

"ஸரஸா! என்ன இது? இப்படி இன்னிக்கு அசடு மாதிரி; பார்த்தியா, ஐய ஐயே... இங்கே வா" என்று மிருதுவாக அழைத்தேன். நான் வந்திருப்பதாக அம்மாமி கூறியதும், நான், ''ஸரஸா!'' என்று அழைத்ததுமாகிய இரண்டும் ஏககாலத்தில் ஸரஸாவின் காதுகளில் ஒலிக்கவே, சரேலென்று சுருட்டி மடக்கி எழுந்து, 'கௌனி'ன் ஓரத்தால் கன்னங்களில் வழிந் தோடிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, மெதுவாக அடி மேல் அடியெடுத்து வைத்து என்னை நோக்கி வந்தாள். அழுகையும் கோபமும் வீம்பும் பறந்து போன இடம் தெரியவில்லை. 

ஸரஸாவின் பொம்மை ஸாஸாவை அப்படியே அணைத்துக்கொண்டு அவள் கண்ணீரைத் துடைத்துத் தேற்றி, பிரிந்து கலைந்திருந்த தலையைக் கோதி, "ஸரஸா ! சாப்பிடறதுக்கு இப்படியா முரண்டு பண்ணுவா? அட அசடே ! ....... உட்கார்ந்து சாப்பிடு ! சமத்தோல்லியோ?" என்று சமாதானப் படுத்திக் கும்பாவிற்கு நேராக உட்கார வைத்தேன். இதற்குள் கூடத்திற்குத் திரும்பி வந்த அம்மாமி, ''ஆமடாப்பா, உன் அம்மங்கா அசடு இல்லாமே 

ரொம்பச் சமத்தோ இல்லியோ? கோயில்லே வச்சுத் தான் கும்பிடணும். ஐய! கட்டினவன் கடைத்தேறிப் போவான்!'' எனக் கூறிக்கொண்டே ஜாடையாக ஸரஸாவைக் கோபங்கொள்வது போன்ற பாவனை யாகப் பார்த்தாள். 

"போ அம்மா ! நான் அசடுன்னா இருக்கட்டும். போ'' என்றாள் ஸரஸா , பதிலுக்கு விட்டுக் கொடுக்காமல் . 

"இதாவது வேண்டாமோ? குறைச்சல் இல்லை!'' என்று உதட்டைப் பிதுக்கிக்கொண்டு அம்மாமி அப்புறம் போய்விட்டாள் 

சாந்த குண ஸரஸா சாப்பிட ஆரம்பித்தாள். ஆனால் ஒரு வாய்க்கு நாலு பருக்கைக்கு மேல் எடுக்கவே இல்லை. அதிலும் பாதி திரும்பக் கும்பாவிற்கு வந்து விடும். இந்த லக்ஷணத்தில் ஒரு வாய்க்கும், மற்றொரு வாய்க்கும் இடையே எத்தனை கேள்விகள் ! என்ன பேச்சு ! ஒன்றுக்கொன்று சம்பந்தம் சிறிதாவது இருக்க வேண்டுமே? குழந்தைகள் பேச்செல்லாமே அப்படித் தானே! 

''அம்மாமி! உங்களுக்கெல்லாம் ஸரஸாவை அழ விடத்தான் தெரியும். சமாதானப்படுத்தவே தெரி யாது'' என்றேன். 

"நீ ஒருத்தன் - அருமை அத்தான் இருக்கயே. போராதோ?'' என்றாள், அம்மாமி சிரித்துக்கொண்டு ; "அதற்குத்தான் அவளை நீயே கல்யாணம் பண்ணிண்டுடுன்னு சொல்றது . ஏண்டி ஸாஸா , இந்த அத்தானையே கல்யாணம் பண்ணிண்டுடறியா?" என்றாள். 

''ஸரஸா , என்னைக் கல்யாணம் பண்ணிண்டு டறியா?" என்று நானும் சிரித்துக்கொண்டே ஸரஸாவைப் பார்த்துக் கேட்டேன். 

ஸரஸா குனிந்த தலை நிமிராமலே, "நான் உன்னைத் தான் கல்யாணம் பண்ணிக்குவேன் போ; வேறே ஒத்தரையும் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன் போ' என்று கொஞ்சும் மழலைக் குரலில் பதில் கூறினாள். 

"ரொம்பச் சரியாய்ப் போயிடுத்தே ! அம்மாமி, மாப்பிள்ளை தேடவேண்டிய கவலை இன்னமே உங்களுக்கு வேண்டாம். ஒரு நிமிஷத்திலே சம்பாதித்தாகி விட்டது" என்று சொல்லிச் சிரித்தேன். 

"பின்னே என்ன போ!'' என்று நிர்விசாரமாகக் கூறிய அம்மாமி தணிவான குரலில், "வயசு வித்தியாசம் ரொம்பக் கொஞ்சந்தான்'' என்று சொல்லிச் சிரித்தாள். எனக்கு வயது இருபத்திரண்டுக்குமேல் ! ஸரஸாவுக்கோ இன்னும் ஆறு நிரம்பிய பாடில்லை : அவள் என்னைத் தான் கல்யாணம் செய்து கொள்ளுவேன் என்று மூர்க்கமாகக் கூறினால் சிரிப்பு வராமல் என்ன செய்யும்? இருந்தாலும் அதை ஸாஸாவிடம் சொல்லமுடியுமா? 

ஸரஸா விரைவில் சாப்பிடுவதாகக் காணோம். எனக்கோ அறைக்குப் போக நேரமாகிக்கொண்டிருந்தது. "சரி , அம்மாமி. நான் போய்விட்டு நாளைக்கு வருகிறேன்'' என்று சொல்லி எழுந்து புறப்படத் தயாரானேன். அரைகுறையாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஸரஸாவும் கூட எழுந்துவிட்டாள். நான் திடுக்கிட்டு , "ஸரஸா , நீ சாப்பிடு. நான் 'ரூமுக்குப் போயிட்டு அப்புறம் வறேன்" என்று உட்காரச் சொன்னேன். அதையெல்லாம் அவள் காதுகளில் போட்டுக்கொள்ளவில்லை. 'நீ இப்போ போகக் கூடாது. இங்கேதான் இருக்கணும் போ" என்று சிணுங்க ஆரம்பித்தாள். இன்னும் ஓர் ஆவர்த்தத்திற்கு அவள் அடிபோடுகிறாள் என்பதை ஊகித்த அம்மாமி, "அப்பா, இருந்தது இருந்தே; அவள் சாப்பிட்டு எழுந்திருக்கிறவரைக்கும் இருந்துட்டுப் போயிடு. உனக்குப் புண்ணியம் உண்டு" என்று வேண்டிக் கொண்டாள். வேறு வழி ஒன்றும் இல்லாமையால், "ஸரஸா, போகல்லே; சட்டுனு சாப்பிடு" என்று சொல்லி உட்கார்ந்தேன். 

ஸரஸா சாப்பிட்டான பின்பு, மறு நாள் கட்டாயம் சீக்கிரம் வந்து விடுகிறேன் என அவளுக்கு வாக்குக் கொடுத்துவிட்டு, அறைக்குத் திரும்புவதற்குள் தப்பித் தால் போதுமென்றாகிவிட்டது. 

அன்றுவரை குழந்தை ஸரஸா என் கண்ணிற்கும் மனத்திற்கும், இதரக் குழந்தைகள் போலவே தான் தோற்றினாள். ஆறு வயது நிரம்பப் பெறாத ஸரஸாவின் உருண்ட முகமும், உப்பிய கன்னங்களும், நெற்றியும், எடுப்பான மூக்கும், சூக்ஷமப் பார்வை பொலியும் ஸரஸாவின் பொம்மை கண்களும், தோள்களிலும் நெற்றியிலும் விழுந்து புரண்டு கொண் டிருக்கும் கரிய சுருண்ட மயிரும், கொன்னிப் பேசும் மழலைச் சொற்களும் அன்று முதல் அதுவரை எனக்குக் கொடுத்திராத ஒருவகை இன்பத்தை அளித்துப் பரவசப்படுத்திவிட்டன. அவளது மோஹனப் பேச்சும், சுந்தர வடிவமும், மனோஹர நடத்தையும் என்னை அப்படியே கவ்வி விட்டன. என் மனம் பூரணமாக அவளிடத்தில் சென்று லயித்துவிட்டது. 

ஊரில் இருக்கும்வரை நாள் தவறாது நான் ஸரஸாவைப் போய்ப் பார்த்து வருவதுண்டு. அநேக ஸமயங்களில் அவளது முரணும், பிடிவாதமும் முன் வந்து வீட்டில் இருப்பவருக்கு வெகு சிரமத்தைக் கொடுத்து விடும். ஆனால் அதற்கெல்லாம் ஒரே மருந்து என்னிடம் இருந்தது . அவசியமானபோதெல்லாம் அதைக்கொண்டு ஒரு விநாடியில் அவளைப் பழைய ஸரஸ்ாவாக ஆக்கி விடுவேன். "ஸரஸா , நீ இப்படி முரண்டு பண்ணினால் அப்புறம் நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க .......'' என்று இழுத்து முடிப் பதற்குள், ''ஆட்டும், ஆட்டும். இனிமே இல்லை" என்று பலத்துக் கூவித் தன்னைத் தேற்றிக்கொண்டு கட்டின கன்றாகி விடுவாள். இந்த மருந்தினால், நான் வீட்டிற்கு வராத சமயங்களிலும் குணம் ஏற்படுகிறது என்பதையும் அம்மாமியிடமிருந்து தெரிந்து கொண்டேன். 

நாளாக நாளாக எங்கள் இருவரிடையேயும் அன்பும், பாசமும், நட்பும் வளர்ந்து கொண்டே வந்தன. ஸரஸாவைக் காணாவிட்டால் எனக்குப் பொழுதே போகாது. ஸரஸாவுக்கும் அப்படியே, என்னைக் கண்டு விட்டால் இதர வேலைகள் எல்லாம் அவளுக்கு அலக்ஷிய மாகப் போய்விடும். போட்டது போட்ட வாக்கில் தான். குடும்பத்திலேயே எங்கள் நட்பைக் கண்டு வியப்புறாதவர் களும் பொறாமைப்படாதவர்களும் இல்லை. 

அதே வருஷம் எனக்கு மணம் நடை பெற்றது. அந்தச் சமயம் நிகழ்ந்த சம்பவங்களும் காட்சிகளும் இன்னும் என் மனக்கண் முன் அப்படியே தோன்றிப் பிரதிபிம்பிக்கின்றன. நான் மணப் பலகையில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். அருகே என் புது மனைவி உட்கார்ந்திருந்தாள். அவளை அதற்கு முன் நான் பார்த்ததே இல்லை. எனது அப்போதைய எண்ணங்களும் நினைவுகளும் அவளைப்பற்றியனவாகவே இருந்தன. 

திடீரென்று என் அருகில் ஒரு சிறுகுரல் சிணுங்கி அழும் சப்தம் கேட்கவே, தலை நிமிர்ந்து பார்த்தேன். அம்மாமி இடுப்பில் ஸாஸாவுடன் எனக்குச் சமீபமாக நின்று கொண் டிருந்தாள். ஸரஸாவின் கண்களிலிருந்து நீர் வழிந்துகொண் டிருந்தது. 

"அம்மாமி , ஏன் ஸரஸா இப்படி அழுகிறாள்?'' என்று ஸரஸாவின் பக்கம் கையை நீட்டியவண்ணம் சிறிது பதற்றத்துடன் கேட்டேன். 

''எதுக்கு அழுவாள்? நீ தான் அவளையே நேரிலே கேளேன்' என்று அம்மாமி சிரித்துக்கொண்டே கூறினாள். அருகில் இருந்தவர்கள் எல்லோரும் சிரித்தார்கள். 

அம்மாமி ஸரஸாவைக் கீழே இறக்கி விட்டாள். ஸரஸாவை என் அருகே அழைத்துக்கொண்டு, 

ஸரஸாவின் பொம்மை "ஸரஸா, எதுக்கு அழறே? உனக்கு என்ன வேணும் ?" என்று கேட்டேன். 

விம்மல் - விக்கல் - தேம்பு தல்- அழுகை. வேறு பதிலே இல்லை. அம்மாமியின் முகத்தைப் பார்த்தேன். 

"இன்னும் ஒருதரம் கேளேன் நீதான்" என்றாள் அம்மாமி மறுபடியும். பொறுமையை இழந்து விடாமல் மறுபடியும் கேட்டேன். கொஞ்சங் கொஞ்சமாக ரொம்ப மந்தஸ்தாயியிலேயே பதில் வந்தது. காதோடு காது வைத்துத்தான் கேட்க வேண்டியிருந்தது. 

''நான் - உன்னைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன் போ'' என்று இழுத்து இழுத்து விக்கல் விம்மல்களுக்கு இடையே சொல்லிவிட்டு , ஸரஸா கண்ணைக் கசக்கிக்கொண்டு தேம்பினாள். அவள் அதைச் சொல்லி முடிக்கும் வரை சிரிப்பை அடக்கிக்கொண்டிருந்த நாங்கள் எல்லோரும், சொல்லி முடிக்கவும் கொல்லென்று வாய்விட்டுச் சிரித்துவிட்டோம். நான் மட்டும் சட்டென்று சிரிப்பை அடக்கிக்கொண்டு, "இதுக்குத் தானா பிரமாதம்? நான் உன்னைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். அழாதே, அழாதே' என்று தேறுதல் மொழிகள் பல கூறி என் மடியில் உட்கார வைத்துக்கொண்டேன். ஸரஸாவின் அழுகை நின்று விட்டது. அவள் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடியது. கூடி இருந்தவர் செய்யும் கேலியையெல்லாம் அவள் சிறிதும் பொருட்படுத்தவே இல்லை. பேதைக் குழந்தை ! கல்யாணம் என்றால் இன்னதென்று தெரியாத குழந்தை ! தான் விரும்பிய அத்தானைக் கல்யாணம் செய்து கொண்டுவிட்டோம் என்ற ஆனந்த சாகரத்திலே மூழ்கிக் கிடந்தாள். 

கல்யாணம் ஐந்து தினங்களிலும் ஸரஸா என்னை விட்டு அப்புறம் இப்புறம் நகரவே இல்லை. மணப் பலகையில் என் புது மனைவியுடன் நான் உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுதெல்லாம், அவளும் அருகில் உட்கார்ந்து கொண்டிருப்பாள் - நலங்கு, ஊஞ்சல், எப்பொழுதும். எல்லோருக்கும் இது வெறும் வேடிக் கையாக மட்டும் இல்லாமல் மிகுந்த மகிழ்ச்சியையும் அளித்தது. என் மனைவிக்கு நலங்கு இடும் பொழுது அவளுக்கும் இடவேண்டும். இல்லாவிட்டால் அவளுக்கு வந்துவிடும் கோபம்! 

இப்படியாகக் கல்யாணம் வெகு குதூகலமாக நடந்த பின்பு, அவரவர்கள் தத்தம் ஊர்களுக்குத் திரும்பி விட்டார்கள். ஸரஸாவுக்குச் சாக்குப் போக்குச் சொல்லிப் பெற்றோருடன் அவளை அனுப்பி வைப்ப தற்குள் நான் பட்ட பாடு போதுமென்று ஆகிவிட்டது. குழந்தை உள்ளத்தில் பதிந்துபோன அன்புருவத்தை அழித்துவிடுவது முடியக்கூடிய காரியமல்ல என்பது அப்பொழுது தான் நிதர்சனமாயிற்று. 

மேற்கூறிய சம்பவங்கள் நிகழ்ந்ததற்கப்பால் ஐந்தாறு வருஷங்கள் கழிந்து போய்விட்டன. ஐந்தாறு வருஷங்கள் மனித வாழ்க்கையிலே சாதாரணமான அளவுக்காலம் அல்ல. அதற்குள்ளாகவே, மலைக்கும் மடுவுக்கும் உள்ள எத்தனையோ பெருத்த மாறுதல் களும் நிகழ்ச்சிகளும் ஏற்பட்டு நிலைமையைத் தலை கீழாய்ப் புரட்டி விடுகின்றன. சற்றேனும் எதிர்பாராத சம்பவங்களைக் காலம் நம் முன் கொணர்ந்து நடத்திக் காண்பித்துச் சென்று விடுகிறது. ஸரஸ்ாவைப் பொறுத்த மட்டில் முன்போல், "அத்தான், உன்னைத்  தான் கல்யாணம் செய்து கொள்வேன்' என்று முரணும் குழந்தை ஸரஸ்ாவாக இல்லை. கல்யாணத்தைப்பற்றிய விவரம் முழுதும் அறிந்த ஸரஸாவாகி விட்டாள். 

இந்த மாறுதலை அவள் ஒரே நாளில் திடீரென்று அடைந்து விடவில்லை. சிறிது சிறிதாக இடையே கழிந்து போன ஆறுவருஷங்களில் ! அத்தானுக்கு மணமாகி விட்டபடியால், 'அவனைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன்' என்பது வெறும் கேலிப் பேச்சேயன்றிச் சாத்தியமாகக் கூடியதல்ல வென்றும், பிறர் நகைத்துப் பரிகசிக்க இடமே யொழிய வேறொன்றும் இல்லை யென்றும் அறிந்து கொண்டாள். நான் ஸ்ரஸாவைச் சந்திக்கும்போதெல்லாம் , " ஸரஸா , என்னைக் கல்யாணம் செய்து கொள்கிறாயா?'' என்று கேட்டால், ''போ, அத்தான் , கேலி பண்ணிண்டு!'' என்று வலிப்புக் காட்டி விட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டு போய்விடுவாள். 

என்னைப்போலவே, அவளும் முன் பின் பார்த்திராத ஒருவனுடன் தன் வாழ்க்கையைப் பிணைத்துக் கொள்ள விரைந்து கொண் டிருந்தாள் ! 

இந்த இடைக்காலத்தில் என் வாழ்க்கையிலும் அசாதாரணமான மாறுதல்கள் ஏற்படவில்லை. என் மனைவி வீட்டிற்கு வந்து விட்டாள். நான் இப்போது ஒரு கிருஹஸ்தன். இந்த ஆறு வருஷத்திலே எங்களுக்கு ஆணும் பெண்ணுமாக இரண்டு குழந்தைகள். குடும்பச் சக்கரம் ரொம்ப ஒய்யாரமாகச் சுழன்று கொண்டிருந்தது. 

அடுத்த வருஷம் ஸரஸாவுக்குக் கல்யாணம் நடந்தது. பக்கத்து ஜில்லாவிலிருந்து வந்து சேர்ந்தான் அவளுக்குக் கணவன். அப்போது நான் குடும்பச்சுமையைத் தூக்கிக்கொண்டு ஸரஸாவிடமிருந்து நெடுந் தூரத்தில் வேறு ஊரில் இருந்தேன். அவள் கல்யாணத்திற்குக் குடும்பத்துடன் போய் விட்டு வந்தேன். 

அதற்கு அடுத்த தடவை நான் ஸரஸாவைப் பார்க்க நேர்ந்தபொழுது அவள் பழைய ஸரஸாவாக இல்லை. முற்றும் மாறிப் போயிருந்தாள். உருவத்திலும் தேக வளர்ச்சியிலும் மட்டுமல்ல; மனவளர்ச்சியில் தான் அதிகமாக முன்னெல்லாம் என்னோடு கை தொட்டு விளையாடினவள் இந்தத் தடவை என் முன் நின்று ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. நான் வலிய வழிமறித்து ஏதாவது கேட்டாலும் ஒன்றிரண்டு வார்த்தைகளில் சுருக்கமாகப் பதில் சொல்லிவிட்டுத் தப்பித்துக்கொண்டு ஓடி விடப் பார்ப்பாள். அவளுடைய இந்த நடத்தை எனக்கு ஒருமாதிரி விநோதமாகத்தான் இருந்தது. 

முன்னெல்லாம் , "உன்னைத்தான், அத்தான், நான் கல்யாணம் பண்ணிக்குவேன்" என்று முரணின ஸரஸாவா இவள் என்று எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அவள் மனத்திலும் உருவத்திலும் காலச் சக்கரம் உண்டாக்கி விட்ட மாறுதலைக் கண்டு அதிசயப் பட்டேன். 

அன்று சாப்பாடு முடிந்த பிறகு வீட்டுக் கூடத்தில் எல்லாரும் உட்கார்ந்து பேசிக்கொண் டிருந்தோம். அம்மாமி இருந்தாள். ஸாஸாவும் கூட இருந்தாள். 

"அம்மாமி ! ஏது, ஸரஸா நான் கூப்பிட்டால் கூடப் பேசமாட்டேன் என்கிறாள் ! யாரோ முன்பின் பார்த்திராத ஒருவனை விரட்டுவதுபோல விரட்டு கிறாளே" என்றேன் விளையாட்டாக .  

"ஆமாம்; உன்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போறாளோ இல்லையோ? அதனால் தான் வெட்கப் படறாள்'' என்று கணீரெனச் சொல்லிச் சிரித்தாள் அம்மாமி. கூட இருந்தவர்களும் கொல்லென்று சிரித்தார்கள். 

ஸரஸாவுக்கு இந்தக் கேலி தாங்க முடியவில்லை. சரேலென்று எழுந்து நின்று, என்னையும் மாமியையும் ஒரு தடவை வெருட்டிப் பார்த்து, உதட்டைச் சொடுக்கி வலிப்புக் காட்டி விட்டு உள்ளே ஓடிப்போய்விட்டாள். 

அப்பொழுது தான் என் மனத்தில் ஒளி பிறந்தது என்றே சொல்ல வேண்டும். குழந்தை ஸரஸாவுக்கும் இந்த ஸரஸாவுக்கும் எவ்வித ஸம்பந்தமும் இல்லை. ஆனால் குழந்தை ஸரஸாவுக்கும் எனக்கும் இடையில் இருந்த உறவை உணர்ந்தவுடன் தான் என் மனத்தில் திடுக்கென்றது. அவ்வளவு வருஷங்களாக நான் ஸரஸாவின் ஒரு விளையாட்டுப் பொம்மையாகவே இருந்திருக்கிறேன்! அப்படித்தான் அவள் கருதி என்னிடம் நடந்து வந்திருக்கிறாள். எத்தனையோ பொம்மைகள் இல்லையா : யானை, குதிரை, வண்டி முதலியவை? அவற்றோடு நானும் ஒரு பொம்மை ; ஆம்படையான் பொம்மை ! 

குழந்தை ஸரஸாவின் பொம்மையாக இருந்ததில் எனக்குப் பரம திருப்திதான். ஆனால் அதைப்பற்றி நினைக்கும் போது என் அந்தரங்கத்தில் கொஞ்சம் ஏமாற்றம் கலந்த ஓர் உணர்ச்சி எழாமல் இருப்பதில்லை.

முகவுரை - ந. சிதம்பர சுப்ரமண்யன் 

"ஒரு பிராமணன் ஒரு வீட்டில் பிச்சை கேட்டான். அந்த வீட்டு ஸ்திரீ அவனுக்கு அன்னம் இட்டாள். அதைத் தொன்னையில் வாங்கிக்கொண்டு ஒரு மரத்தடியில் வைத்துவிட்டுக் குளிக்கப் போனான். அப்பொழுது மரத்தின் மேலிருந்த கருடன், ஒரு நாகத்தைப் பிடித்துக் கொத்திக் கொண்டிருந்தது. நாகம் வலி பொறுக்க முடியாமல் விஷத்தைக் கக்க, அது பிராமணன் அன்னத்தில் விழ, குளித்து வந்த பிராமணன் அதைச் சாப்பிட , அவன் உயிர் துறந்தான். இந்தப் பாவம் யாரைச் சாரும்?' என்று வேதாளம் விக்ரமாதித்தனைக் கேட்டது. 

தத்துவ ஞானியான வேதாளம் விக்ரமாதித்தனை இருபத்து நாலு கேள்விகளே கேட்டது. ஆனால். வாழ்க்கை இப்படிப் போடும் விடுகதைகள் அனந்தம். லக்ஷக்கணக்கான புதிர்களுக்கு விக்ரமாதித்தனைப் போலப் பதில் சொல்ல முயலுகிறது கலை. மயக்கம் தரும் மாயைகளைப் பிளந்து கொண்டு உண்மையைத் தேடிக் கொண்டு செல்கிறான் கலைஞனும் கவிஞனும். நிரந்தரமான பிரச்னைகள், நிரந்தரமான போராட்டங்கள். இவைகளை ஊடுருவிப் பார்ப்பதுவே இலக்கியம். மகாபாரதமாயினும் சரி, சிறுகதையாயினும் சரி, இவைகளை விஸ்தரிக்கும் பொழுது உயர்ந்த இலக்கியம் ஆகிவிடுகிறது. மேலெழுந்த வாரியாகப் பார்க்காமல் சமூகம், தேசம், பாஷை, மதம் இவைகளைக் கடந்து மனித ஹ்ருதயத்தின் ஆழத்தைக் கண்டு, அந்த அனுபவத்தை பிறருக்கும் பங்கிட்டுக் கொடுப்பதே ஆசிரியன் வேலை. மின்னல் போல விநாடிக்கு விநாடி தோன்றி மறையும் அனுபவங்களை நிரந்தரமாக்குகிறது கலை. 

பிறப்பும் இறப்பும் வாழ்க்கையின் எல்லைக் கோடுகளாக இருக்கின்றன. விருப்பு வெறுப்புக்களும், ஆசாபாசங்களும் மனித உள்ளத்தில் புயலடித்துக்கொண்டிருக்கின்றன. இதற்குட்பட்ட வாழ்க்கையில் முக்குளித்து வரும் மனிதன் கதையை, ஆதிகாலந்தொட்டு எழுதிவந்திருக்கிறார்கள் அறிஞர்கள். ஆனால், மனிதன் கதை முடிவில்லாததொரு பழங்கதை. இந்தப் பழங்கதையைப் புது முறையில் சொல்லுவதே ஆசிரியன் திறனைக் காட்டுகிறது. 

ஸ்ரீ செல்லப்பா எப்படி வாழ்க்கையின் வினோதங்களைப் பார்த்திருக்கிறார்? வாழ்வின் பலவித சூக்ஷமங்களுக்கு எவ்வித அர்த்தங்களைக் கண்டு பிடித்திருக்கிறார் ? பழமையான மனிதன் கதையில் என்ன புதுமையை அவர் கண்டார்? 

வாழ்க்கையில் அவர் கண்ட் பல்வேறு அனுபவங்களும், அவர் கண்ட புதுமைகளுமே, 'ஸரஸாவின் பொம்மை' யாக உருப்பெற்றிருக்கின்றன. 

சோகத்தையும் அதன் சோபையையும் கண்டு அனுபவிக்க ரஸனை வேண்டும்; துன்பத்தின் பல்வேறு சாயைகளிலும் இருக்கும் ஒருமையைக் கண்டு கொள்ள அன்பு பரந்த கவியுள்ளம் வேண்டும். ஸ்ரீ செல்லப்பாவிடம் குருவிக் குஞ்சு முதற்கொண்டு நொண்டிக் குழந்தை வரையில் சகல ஜீவராசிகளையும் பற்றிக்கொள்ளும் பரந்த அன்பு இருக்கிறது. வாழ்க்கையிலிருந்து தப்ப முடியாதபடி, விதியின் விளையாட்டுக்களினால் ஏற்படும் துன்பங்களைக் கண்டு வேதனைப்படும் உள்ளக்கனிவு இருக்கிறது. வாழ்க்கையின் சில விபரீதங்களை எட்டி நின்று பார்க்கும் பற்றின்மை - இருக்கிறது. இக்குணங்கள் ஆசிரியனின் எழுத்தை உயர்ந்ததாகச் செய்கின்றன. பொதுவாக எல்லாக் கதைகளிலும், கதாபாத்திரங்களின் மனம் போகிற போக்கை நுட்பமாகப் பின் தொடர்ந்து சென்றிருக்கிறார். சம்பாஷணைகள் இயற்கையாகவும் பொருத்தமாகவும் இருக்கின்றன. சுற்றுணர்ச்சி நன்கு அமைந்திருக்கிறது. கதாபாத்திரங்களும் தெளிவான உருவம் பெற்றிருக்கிறார்கள். 

ஸரஸாவைப் பொம்மையாக வைத்து விளையாடி வந்தான் அவன். ஆனால், அவன் தான் ஸரஸாவின் பொம்மையாக இருந்தான். அந்த உண்மை தெரிந்த போது ஏற்பட்ட திகைப்பும் திருப்தியும் ஏமாற்றமும் 'ஸரஸாவின் பொம்மையில் வெகு அழகாகச் செதுக்கப் பெற்றிருக்கின்றன.

குழந்தை ராதா , சந்திரனுக்கு இறந்துபோன தங்கையின் ஞாபகார்த்தமாக இருக்கிறாள். ராதாவோ தனக்குக் கிடைத்திருக்கும் புதிய தாயாரைக்  காட்டிப் பெருமை கொள்கிறாள். விளையாட்டுக் குழந்தைக்கு மாமாவின் மனத்தில் எழும் துன்ப அலைகளைப் பற்றி ஒன்றும் தெரியாது. இப்படியே தாயிடமிருந்து பிரிந்து வந்திருக்கும் 'குருவிக்குஞ்சின் க்ஷேமத்திற்குத் தவிக்கும் நெஞ்சம் ; புக்ககத்திற்குத் தங்கையைக் கொண்டுவிடப்போகும் பொழுது அண்ணனுக்கு ஏற்படும் மனநிலை; தான் நொண்டியாக. இருந்தாலும் மாயக் கண்ணனைப் போலப் பல ரூபங்கள் பெற்று எல்லாக் குழந்தைகள் விளையாட்டிலும் ஈடுபட்டுக் கலந்து கொள்ளும் 'நொண்டிக் குழந்தை', உறவினர்கள் அழுதுவிட்டுத் திரும்பிப் போக மறுநாள் சாம்பலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்போகும், மயானம் காக்கும் இருஜீவன்களிடமிருந்து வரும் ஆனந்த கீதத்தின் மூலம் புலப் படும் வாழ்க்கை 'யின் விசித்திரம் ; சிறியதொரு சிறையிலிருந்து வெளிப்பட்டாலும் பெரியதொரு சிறை 'மூடியிருந்தது' என்று ஏங்கும் உள்ளம் முதலிய உள்ள நெகிழ்ச்சிகள், சந்தர்ப்பங்கள் போன்றவைகளை ரஸம் குன்றாமல் அழகாகச் சித்திரித்திருக்கிறார். 

'நான்' என்று சொல்லி வருகிற கதைகளில் இவர் விசேஷமான வெற்றி பெற்றிருக்கிறார். சிறுகதை ஒரு ரஸத்துணுக்கு. அதை எவ்வளவு தீவிரமாகவும், எவ்வளவு சக்தியுள்ளதாகவும் எழுத முடிகிறதோ அதில்தான் வெற்றி இருக்கிறது. சொந்த அனுபவங்களைப்போல், நேருக்கு நேராகச் சொல்வதில் ஆசிரியருக்கும் வாசகருக்கும் உறவு நெருக்கமாக ஏற்படுகிறது; மனத்தை விண்டு காட்ட முடிகிறது. அவ்விதம் எழுதுவதில் ஒருவித நேர்மை ஏற்படுகிறது. சிறுகதைக்கு நேர்மையும் (honesty), அந்தரங்க சுத்தியுந் (sincerity) தான் அவசியம். 

இக் கதைகளில், சம்பவங்கள் அதிகம் இல்லை. ஒன்றுக்கொன்று பொருந்தாத சம்பவக் குவியல்களில் பிறக்கும் கதைகள் அல்ல இவை. ஒரு சிறு ஞாபகம் எழுப்பும் சிந்தனை அலைகள், ஒரு நொடிப் பொழுதில் உதயமாகும் எண்ணம் போன்றவைகள் தாம் இவர் கதைகள் கட்டி எழுப்புவதற்கேற்பட்ட அஸ்திவாரங்கள். சிறுகதைக்கு ஏற்பட்ட விஷயங்களும் இத்தன்மை கொண்டனவாகத்தான் இருக்க வேண்டும். சிறிதைப் பெரிதாக்குவதும், நிமிஷத்தை நித்தியமாக்குவதுந் தான் சிறுகதையின் வேலை. 

சிறுகதைக்கு முக்கியமாக வேண்டியது பாவம். பாவசித்திரம் நன்கு அமைந்திருப்பதே கதையின் சிறப்புக்கு அடிப்படை. குண சித்திரங்களுக்குச் சிறுகதைகளில் அதிகமான வேலை இல்லை. பல்வேறு சந்தர்ப்பங்களில் ஏற்படும் குணவேறுபாடுகளைத் தீட்ட முயலும் போது சிறுகதையின் அளவை மீறி நாவலாகிவிடுகிறது. செல்லப்பா அறிமுகப்படுத்தும் சில குணசித்திரங்களும் நன்கு தீட்டப்பட்டிருக்கின்றன. கள் நாற்றத்தோடு கம்பீரமாக வரும் வீரன் குண்டான், அழுக்கேறிய பாவாடையுடன் தோன்றிக் குண்டான் வீரத்திற்குத் தன் காதலை அர்ப்பணம் செய்யும் காபூலிக்காரி, கஜப் போக்கிரி மகுடித்தேவன் போன்றவர்களையும் நமக்குக் காட்டுகிறார். 

குழந்தைகளின் போக்கு மிகவும் கவர்ச்சி நிறைந்தது. இனிமையும், அழகும் கலந்த கல்மிஷமற்ற அவர்கள் ஹ்ருதயம் ஆசிரியர் மனத்தைக் கொள்ளை கொண்டிருக்கிறது. குழந்தைகளின் மனோ தத்துவத்தையும், குழந்தைகளினால் பெரியவர்களுக்கு ஏற்படும் மனோபாவங்களையும் சில கதைகள் ஆராய்கின்றன. 

வாழ்க்கை நமக்குப் போதிக்கும் நீதிகள் அனேகம். சிந்தித்துப் பார்க்கச் சிந்தனை மட்டும் இருந்தால், நாம்  அறிந்து கொள்ள வேண்டிய படிப்பினைகள் ஏராளம். 'வாழ்க்கையில் கண்ட விசித்திரம் மூளையைத் தூண்டுகிறது. இப்பொழுது தோன்றுகிறது : "காதலுக்கும் சாதலுக்கும், இயற்கை ஒரு விதமான பாரபக்ஷமும் காட்டுவதில்லை. அதன் அணைப்பிலதான் காதல் பிறக்கிறது. நிலவும், தென்றலும், மணமும் குளுமையும் காதல் போதையைச் சிருஷ்டிக்கின்றன. சாவுக்கும் இயற்கைதான் தாய். மூச்சு நிற்றலும், காற்றுப் போக்கின் சக்தியின் ஓய்வும், சாதல் மயக்கத்தைச் சிருஷ்டிக்கின்றன. இந்தத் தென்னந்தோப்பில், காதல் கூவும் பக்ஷி ; எதிர் மேட்டிலே சாதல் ஓலமிடுகிறது. எல்லாம் இயற்கையின் பகைப் புலத்திலே. ஆனால், சாவின் எதிரில் காதலை நினைக்கவே முடியவில்லை"  என்கிறார். 

நடை இலக்கியத்தின் மூச்சு. அந்த அந்தக் கதைகளுக்கேற்ற நடையை இவர் கையாண்டிருக்கிறார் 

ஆனால் சில கதைகளில், மேல் நாட்டு மோஸ்தரில் சொற்றொடர்களும், பாணிகளும் வந்து விழுந்திருக்கின்றன. மேல் நாட்டு இலக்கியத்திலே ஊறி வந்திருக்கிற தற்காலத் தமிழ் எழுத்தாளர்களிடம் பெரும்பாலும் இந்தக் குறை இருந்துதான் தீரும். ஆனால், இம்மாதிரி நடைகளெல்லாம், அனேக எண்ணங்களை வெளியிட முடியாமல் ஊமையாயிருக்கிற தமிழன் வாயைத் திறக்க ஹேதுவாயிருக்கலாம். எல்லாம் போகப் போகத்தான் தெரியும். 

ஸரஸாவிற்குப் பொம்மை தேவை. மனிதனுக்கு இலக்கியம் தேவை. அந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு முயலும் எந்த முயற்சியையும் உலகம் வரவேற்க வேண்டும். 

காரைக்குடி, 30- 6-42 

ந. சிதம்பர சுப்ரமண்யன்