Pages

Monday, November 18, 2019

யானையின் சாவு - சார்வாகன்


யானையின் சாவு - சார்வாகன்

ரங்கநாதனுக்குக் கோபமும் எரிச்சலும் அத்துமீறிக் கொண்டு வந்தது. குழந்தையின் முதுகில் அங்கேயே ஓர் அறை வைக்கக் கையை ஓங்கி விட்டான். ஒருவரையொருவர் இடிச்சு மோதிக்கொண்டு வேர்வை நெடியும் தூசியும் பல்வேறு அழுகல் கறிகாய் வாசனைகளும் நிறைந்த நட்டநடு கடைத்தெருவில் செல்லுலாயிடு பிளாஸ்டிக் பொம்மைகளைப் பரப்பி வைத்திருந்த அந்தக் கிழவனை விட்டு நகர மாட்டேன் என்று சத்யாக்கிரகம் செய்து கொண்டிருந்த குழந்தையின் கையை ஆத்திரத்துடன் அமுக்கிப் பிடித்தான். அகத்திலே உடைப்பெடுத்துவரும் கோபத்தினால் கண்களைச் சுருக்கி 'புஸ் புஸ்' ஸென்று மூச்சு விட்டுக்கொண்டு "நீ வரயா இல்லை நான் ஒன்னை இங்கியே விட்டுட்டு போடட்டுமா?" என்று சீறினான். குழந்தை அவனை நிமிர்ந்து பார்த்தது. தும்பியின் சிறகைப் போலிருந்த அதன் கண்கள் பளபளத்தன. ஈனக் குரலில் எனக்கு யானை வேணும்பா என்று கெஞ்சியது.

அவன் காஞ்சிபுரம் கோவிலில் குழந்தைக்கு யானை காட்டினதிலேயிருந்து இரவும் பகலும் இதே பல்லவிதான். 'எனக்கு யானை வேணும்... எனக்கு வேணும்ப்பா.' தன் பொருளாதார நிலையில் யானையைக் கட்டித் தீனி போட்டு மாளாது என்று குழந்தையைப் புரிந்துகொள்ள வைக்க அவனுக்கு ரெண்டு வாரங்கள் ஆச்சு. நாலு நாளாய்த்தான் யானையை மறந்திருந்தான். இப்போ மறுபடி பிடிச்சுக் கொண்டது.

நடைபாதையோரத்தில் வியாபாரம் செய்யும் கிழவனை வெறுப்போடு பார்த்துவிட்டு, “இங்கே யானை இல்லை, வா வீட்டுக்குப் போகலாம்" என்று குழந்தையின் கையை இழுத்தான். "அதோ இருக்கே" - குழந்தை கையை நீட்டி ஒரு மூலையைக் காண்பித்தது. அது காட்டிய இடத்தில் நிசமாகவே ஒரு யானை இருந்தது. கிளிப்பச்சை நிறத்தில் உடம்பு, முதுகில் தங்க வர்ணத்தில் வேலைப்பாடுகளும், ரோஸ் நிற வாயும், நல்ல எலுமிச்சை மஞ்சளில் தந்தமும் கொண்டு தும்பிக்கையின் ரோஸ் நிறமான பின்பாகம் தெரியத் தூக்கி சலாம் போடும் நிலையில் நின்று கொண்டிருந்தது அந்த யானை. அத்தனை குப்பை சாமான்களுக்கிடையேயும் அதைக் கண்டுபிடித்துவிட்ட குழந்தையின் கண் கூர்மையை மனசில் சபித்துக் கொண்டே அதை வாங்கி விடலாம் என்று ஜேபியில் கைவிட்டான். மறுபடியும் அவன் பார்வை அந்த யானைமேல் பாய்ந்தது. அழகுணர்ச்சி மிக்க அவனுக்கு - அழகுணர்ச்சி தன்னிடம் நிறைய இருக்கிறது என்று பெருமைப்பட்டுக் கொண்டிருந்த அவனுக்கு அந்தப் பிளாஸ்டிக் யானை துதிக்கையைத் தூக்கி ரோஸ் வாயைக் காட்டி அவனை ஏளனம் செய்வது போலிருந்தது. யானைக் குலத்தையே, ஐராவதம் முதல் வரதர்கோவில் யானைவரை இதுவரை உலகத்தில் இருந்த, இனிமேல் இருக்கப் போகிற அத்தனை யானைகளையும், அதோடு தன்னையும் பரிகாசம் செய்வது போலிருந்த அந்தப் பச்சை யானை மேல் அவனுக்குத் திடீரென்று அளவுக்கு மிஞ்சின கோபமும் ஆத்திரமும் பொங்கிக் கொண்டு வந்தது.

"சீ இது வாணாம் அசிங்கம், யானை எங்கியாவது பச்சையாவா இருக்கும்? நான் உனக்கு நல்ல கருப்பு யானை வாங்கித் தாரேன், இப்போ வீட்டுக்குப் போலாம் வா" என்று மறுபடியும் குழந்தையை இழுத்தான். குழந்தை நிமிர்ந்து கண்களை அகல விரித்துக் கொண்டு அவனைப் பார்த்தது. "நெஜம்மா? "நெஜம்மாத்தான், நீயே பாரு!" அவன் வாக்குக் கொடுத்தபின் இருவரும் வீட்டைப் பார்க்க நடந்தனர்.

அவன் யானையை மறந்தாலும் அவனை மறக்கவிடவில்லை அந்தக் குழந்தை, "எங்கே யானை, எங்கே யானை, வாங்கித் தரேன்னியே" என்று அவனை அரிச்சு எடுத்துவிட்டது. " இந்த ஊர்லே நல்லதாக் காணும், நான் வெளியூர் போய் வரப்போ வாங்கி வரேன், ப்ராமிஸ் என்று சத்தியம் செய்தபின் அதன் துளைச்சல் நின்றது.

சொன்ன வாக்கை அவன் நிறைவேற்றியும் விட்டான். அது மர யானை. அப்படியொண்ணும் பிரமாதக் கலாசிருஷ்டியாக பிரமிப்பூட்டும் வகையில் இல்லாது போனாலும் கருப்பாக, கிட்டத்தட்ட கருப்பாக இருந்தது. தும்பிக்கை இருந்தது. வெள்ளைத் தந்தமும் இருந்தது, ரோஸ் வாய் இல்லை. யானைக் குலத்தையும் அவனையும் ஏளனம் செய்யவில்லை ,

அதை வாங்கி வந்தது முதல் வேறொரு விபரீதம். குழந்தை எப்போ பார்த்தாலும் யானையோடேதான். சாப்பிடும்போது அதுக்கும் சோறு வைக்க வேணும். அது தூங்கினப்புறந்தான் குழந்தை தூங்க முடியும். அந்த யானையின் விருப்பு வெறுப்புகளும் பிடிவாதமும் கோபமும் விளையாட்டும் அந்த வீட்டின் நடைமுறை வாழ்க்கையையே உலுக்கிவிட்டது.

அவனுக்கென்னமோ இது விபரீதமாகத்தான் பட்டது. என்னதான் குழந்தையென்றாலும் ஆறு வயசாச்சே. அந்தப் பொம்மை யானை ஓர் உயிருள்ள யானை மாதிரி, அதுவும் செல்லம் கொடுத்து கெட்டுப் போன ஒரு குழந்தை யானை மாதிரி வீட்டில் லூட்டியடிப்பது அவனுக்குச் சரியானதாகப் படவில்லை. "அது பொம்மை, மரம்; கல்கண்டு சாப்பிடாது, ஹார்லிக்ஸ் குடிக்காது, வேர்க்கடலையும் கரும்பும் கேட்காது" என்று ஒண்ணுக்குப் பத்துத் தரமாகச் சொல்லிப் பார்த்தான். "இது யானைதான். பொம்மையில்லை" என்று ஒரு நாள் பூராவும் குழந்தை அழுது ஆர்ப்பாட்டம் செய்தது. மறுநாள் குழந்தையும் யானையும் அவனோடு பேசவில்லை.

அவனுக்கு மனது ரொம்பவும் கஷ்டமாகப் போய்விட்டது. மூணாவது நாள் அவன் குழந்தையைக் கூப்பிட்டு "இது நெஜ யானைதான், நான்தான் இதுக்கு முன்னாலே சரியாப் பாக்கலை என்று மன்னிப்புக் கேட்கும் முறையில்
சொன்னவுடன், பார்க்க வேணுமே குழந்தையின் உற்சாகத்தை! "பாத்தியா நான் சொன்னா தெரியலியே, தும்பிக்கை இருக்கு, தந்தம் இருக்கு, காதைப் பாரு மொறமாட்டம், கருப்பு உடம்பு; இதைப் போயி ஆனை இல்லையின்னா? - ஆனைக்கி ஓம் மேலே ரொம்ப ஆசையாம், எப்படித் தடவிக் குடுக்க வரது பார்த்தியா?" என்று அடுக்கிக் கொண்டே போனது.

அன்று முதல் அந்த யானைக்கு ரெண்டு விளையாட்டுத் தோழர். குழந்தையும் ரங்கநாதனும் அதைக் குளிப்பாட்டுவார்கள். அதற்குச் சோறு போடுவார்கள். அதோடு காட்டில் வேட்டைக்குப் போவார்கள். காயம் பட்டால் கட்டுக் கட்டி விடுவார்கள். கோபம் வந்து அடிப்பார்கள். சோறு போடாமல் தண்டனை கொடுப்பார்கள். செய்த தப்புக்கு அது வருந்தி கெஞ்சி மன்னிப்புக் கேட்க வரும்போது அதற்குப் புத்தி சொல்வார்கள். அதுக்குக் கோபம் வரும்போது அதன் கையில் அகப்படாது ஒளிந்து கொள்வார்கள். அது சுமுகமாய் இருக்கும் போது சர்க்கஸ் வித்தைகள் கற்றுக் கொடுப்பார்கள். இப்படியாக எல்லாம் இருவரும் சேர்ந்தே செய்து வந்ததன் பலனாக ரங்கநாதனுக்கு அந்த யானை ரொம்ப ரொம்பப் பழக்கமாகிவிட்டது. அதனுடைய மனநிலைகள், விருப்பு வெறுப்புகள் எல்லாம் அவனுக்கு அத்துப்படியாகிவிட்டன. சில சமயம் குழந்தை இல்லாதபோதுகூட அந்த யானை அவனோடு விளையாட வரும் அல்லது முரண்டிக்கொண்டு நிற்கும்.

மறுபடி அவன் வேலை நிமித்தமாக வெளியூர் போக வேண்டியிருந்தது. திரும்பி வரும் போது வழிநெடுக அவனுக்குக் குழந்தை யானை ஞாபகம்தான். புது விளையாட்டு ஒன்றைக்கூட கற்பனை செய்து வைத்திருந்தான். யானையை மீன் பிடிக்க வைக்கவேணும். சேற்றிலிருந்து அசரை மீனை அது தும்பிக்கையால் துழாவித் துழாவி எடுத்துக் கொடுக்க வேணும். பிறகு அது பெரிய மடுக் கரையில் உட்கார்ந்தபடி தூண்டிலுக்குப் பதில் தும்பிக்கையில் புழுவை வைத்துப் பிடிக்கவேணும்.... இன்னும் எத்தனையோ.

ரயில்வே ஸ்டேஷனிலிருந்து வீடுபோய்ச் சேர்ந்தபோது குழந்தையையும் காணோம், யானையையும் காணோம். வெளியே எங்கோ விளையாடப் போயிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டான். சாயங்காலம் அவன் வெளியே போய்விட்டு வந்தபோது நேரம் அதிகம் ஆய்விட்டிருந்தது. குழந்தையும் தூங்கப் போய்விட்டிருந்தது. புது விளையாட்டை நாளைக்குக் கற்றுக் கொடுக்கலாம் என்று ஆறுதல் சொல்லிக் கொண்டான்!

மறுநாள் காலை ரங்கநாதன் குழந்தையைப் பார்த்தவுடன் அவன் கேட்ட முதல் கேள்வி 'யானை எங்கே? தான். ஏனென்றால் அதன் கையில் யானையைக் காணோம். அது எங்கயோ என்று அசுவாரசியமாக பதில் சொன்னது குழந்தை. அவனுக்கு ஒண்ணும் புரியவில்லை. ஏமாற்றமும் கோபமுமாக வந்தன.

"காணாம போக்கிட்டியா, இல்லே காட்டுக்கு ஓடிப்போயிடுச்சா?" என்று கேட்டான். அவன் காதுக்கு அது சாதாரணக் கேள்வி போல் தொனிக்கவில்லை. அதட்டலா? அழுகையா?

“ஊகும், இங்கேதான் எங்கியாவது கெடக்கும்” என்று சொல்லிக் கொண்டே குழந்தை பல் தேய்க்கப் போய்விட்டது.

"ஏய், புது யானை வெளையாட்டு கண்டு பிடிச்சிருக்கிறேன், மீன் பிடிக்கிற வெளையாட்டு” என்று சொன்னபடியே ரங்கநாதன் குழந்தையைப் பின்தொடர்ந்தான்.

மூலையில் அழுக்குத் துணிகளிடையே யானை கேட்பாரற்றுக் கிடந்ததைக் கண்டான்.

“ஐயோ பாவம், ஒடம்பு சரியில்லை போலிருக்கே, காச்சல் வந்துட்டுதோ, ஆஸ்பத்திரிக்குப் போலாமா, மருந்து குடுக்கலாமா? ஏய், இதோ இங்கே இருக்கு பாரு யானை” எனப் பரிவுடன் சொல்லிக் கொண்டே யானையை எடுக்கக் குனிந்தவன் குழந்தையின் பதிலைக் கேட்டுச் சடேரென்று நிமிர்ந்தான்.

“நீ என்னப்பா, அதுக்கு ஒண்ணும் வராது. அது என்ன நெஜ யானையா? பொம்மைக்குப் போயி காச்சலும் பேதியும் வருமா" என்று சொல்லிவிட்டுக் குழந்தை அலமாரியைத் திறந்து, "அப்பா, நீ இதைப் பாத்தியா, நெஜ டயரு போட்டிருக்கே, எப்பிடி ஓடுது பாக்கறியா", என்று சொன்னபடியே சிவப்பு நிறமான, குட்டி டயர் போட்ட தகரக் கார் ஒன்றை எடுத்து வெற்றிகரமாக அவனுக்குக் காண்பித்து, "நான் தரமாட்டேன், எதிர் வீட்டம்மா எனக்குத்தானே குடுத்தாங்க" என்று பெருமை பேசியது குழந்தை,

அவனுக்கு ஒண்ணும் புரியவில்லை, குழந்தையைப் பார்த்தான். குறும்புச் சிரிப்போடு பின்னம்புறம் ஒளிக்க முயன்று கொண்டிருந்த அதன் கையிலிருந்து கார் எட்டிப் பார்த்து, பளபளவென்று மின்னும் பல்லைக் காட்டி இவனை ஏமாளி செய்து கொண்டிருந்தது.

தலையைத் திருப்பிக் கீழே பார்த்தான், செத்துப்போன யானையின் சடலம், “நான் வெறும் மரம், யானையில்லை” என்று முனகிவிட்டு மறுபடியும் செத்துப்போச்சு. அவனுக்கு ஒண்ணும் புரியவில்லை.

“என்னப்பா சொல்றே?" என்று காரைத் தரையில் தேய்த்துக் கொண்டே கேட்டது குழந்தை,

அவனுக்கு ஒண்ணும் புரியவில்லை.