Pages

Saturday, May 10, 2014

கொல்லிப்பாவை 1 - நகுலன்

கொல்லிப்பாவை 1 - நகுலன்

திரௌபதி அவள்
வந்து போகும் அருச்சுனன் நான்
வில்லெடுத்துக் கணைபூட்டி
நாண் வளைத்துக் குறிவீழ்த்திச்
சௌரியம் காட்டிச் சமர் செய்து
காதல் பெற்றான் ஒருவன்.
ஆனால்
வந்து போகும் அருச்சுனன் நான்
நாக்கடித்து
வாய்ப்பறை கொட்டி
வேதாந்த கயிறு திரித்து
அவள் உருகக் கண்டு
உள்ளம் குலைந்து
உரம் வேண்டி
வந்து போகும் அருச்சுனன் நான்.

.

திரௌபதி அவள்;
நெற்றித் திலகமும்
நெறிமிக்க வாழ்வும்
கைத்திறனும் கலைப்பொலிவும்
மிக விளங்க,
நேர் நோக்கும் நிமிர்நடையும்
பொலிவூட்டக்
கல்வி கற்றுத் தொழில் புரிந்து
காரியத் திறனும் கருத்துறுதியும்
பூண்ட
இந்நங்கை நல்லாள் அருச்சுனன் தன்
அவ நம்பிக்கை உருவறிவாளா ?
அன்று
சுற்றத்தார் முகம் நோக்கி
களம் தனில் கை சோர்ந்தான்.
அதன் முன்னர்
விதிமுன் தலை வணங்கி
உருமாறி பேடியானான் அவன்.
என்றாலும்
கண்ணன் கை கொடுக்க
உள்நின்ற சௌகரியம் எடுத்துதவ
முன்னோக்கித் தருக்குடன் திரிந்தான் அவன்.
.

திரௌபதி அவள் ;
தூய்மையின் ஊற்று.
பலர் கண்டும் உருவ அமைதி பெற்று
பேடியெனச் செயலிழந்து
தன்னைக் கண்டு மயங்கித் திரிவோனை
“வாழ்க்கைப் பாடி வீடு சென்று
வாகை சூடி வா
காத்திருப்பேன்” என
மௌனத்தில் ஞானம் பேசி
முறுவல் பூத்துக் கற்பின் வைரப்படை
தாங்கி நிற்கும் கொல்லிப் பாவை அவள்.

.

திரௌபதி அவள்
வந்து போகும் அருச்சுனன் நான்.

 - எழுத்து, ஏப்ரல் 1961.