Pages

Thursday, May 22, 2014

காதல் சாலை - மௌனி

காதல் சாலை - மௌனி

மௌனிஅன்றைய தினம்

அன்று காலை அவன் மனங்கெட்டுத் திரிந்தான்.

அன்று நடுப்பகல் மேகமூட்டுக்கொண்டு இருண்டு இருந்தது. ஆலமரத்தடியில் சிறிது அவன் படுத்து அயர்ந்தான். தன்னெதிரில் அவள்  தொங்கிக்கொண்டு தன்னை அழைப்பதைக்கண்டு மருண்டு எழுந்தான். எதிரில் ஆலமர விழுதுகள் தொங்குவதைப்பார்த்தான். அதைப்பிடித்திழுத்து ஒன்றை வீசி ஆட்டிவிட்டு வழி நடந்தான்.

மாலையில் மேற்கு வானம் மிகுந்த பிரகாசம் அடைந்திருந்தது. சூரியன் மறைந்தான். தன்னை அறியாது நடந்தான். காதல் காதல்,  எங்கும் காதல்தான், இவன் மனம் உடைந்தது. யோஜனைகள் அற்றன. காலடியினின்றும் மிக வெறுப்புற்றது போன்று பாதை நழுவி நகர்ந்தது. உயிரற்று நடந்தவன் நிற்பதைத்தான் கண்டான். முன்னே தோன்றியது முன் போன்றே இருந்தது. பின் கடந்த வழி விடாமல் சுற்றி இவனைச்சூழ்ந்தது. வேகமாக நடக்கலுற்றான். உடம்பு ஒரு தரம் மிகக் குலுங்கியது. வண்டிச்சோடு, தோன்றுவதினின்று உதறமுடியாது போன்று வெகு ஆழமாகப்பாதையில் பதிந்திருக்கக் கண்டான்.

பொழுது போயிற்று. கடந்த காலம் கதைத் தோற்றம் கொண்டது. நிகழ்வது நிச்சயம் கொள்ளவில்லை. “பிறகு - பிறகு - ?” ஒன்றுமில்லை. பழையபடியேதான் திரும்பத் தோற்றம்.

அவ்வகை அவன் வாழ்ந்தவிதம் எவ்வளவு காலம் - ? உயிர் கொண்டா இறந்தா?  ஒரு கணமா அநந்த காலமா ?

இரவு

இரவு கண்டது. உலகை இருள் மூடியது. அன்றிரவு அவனுக்கு சதா இரவாகவே முடிந்தது.

முந்தின தினம்

தன் ஊரைவிட்டு இவன் சாலைவழியே நடந்து வந்தான். வழியில் சிறிது நேரம் களைப்பாற உட்கார்ந்தான். ஒரு கூடைக்காரி, கூடையை கீழே இறக்கி வைத்து சிறிது தூரத்தில் உட்கார்ந்தாள். ஒரு சிறு பறவை, பக்கத்து வரப்பின் மீது பறந்து வந்து உட்கார்ந்தது. கூடைக்காரி தன் முந்தானையால் முகத்தைத் துடைத்துக்கொண்டாள். முந்தாணியை உதறி மேலே போட்டுக்கொண்டாள். சிறிது நேரம் சென்று நின்றுகொண்டு, அருகாமையைச் சுற்றிச் சுற்றி திரும்பிப்பார்த்தாள். இவன் இருப்பதை அறிந்தவள் அவனை அருகில் அழைத்தாள். அவனைப் பார்த்து, “ ஐயா , இந்தக் கூடையைச் சிறிது தூக்கிவிடுங்கள் ” என்றாள்.

இவன் “ என்ன எதை ?” என்றான்.

“ இதை ஐயா ” என்று இரண்டு கைகளையம் விரித்து நீட்டிக் கீழே இருந்த கூடையைக் காட்டினாள். “வெகு பளுவாக இருக்குமே ? உன் கழுத்தை அமுக்குமே ? உன்னால் தாங்க முடியுமா - ஏன் தூக்கிக்கொண்டு - ” என்றான்.

“ அதற்காகத்தான் ஐயா - உங்களை. ”

“ யார் எங்களையா ? புருஷர்களையா ? கூடைக்காரி ; சரி சரி, என்ன செய்யச் சொல்லுகிறாய் ? ” என்றான்.

“ கூடையைத் தூக்கிவிடுங்கள் ” என்றாள் அவள். கூடையை அவள் தலையில் ஏற்றிவிட்டான். அவள் முகத்தை அருகிலிருந்து பார்த்தான். அவள் தன் இரு கைகளையும் மேலே முழுதும் நீட்டிக் கூடையின் விளிம்பைப் பிடித்துக் கொண்டாள். அவள் கழுத்து சிறிது சிறுத்துப் பெருத்ததை அவன் கண்டான். மார்பும் சுமையைத் தாங்கி கெட்டியானதைக் கண்டான். அவள் முகத்தில் வசீகரமும் நன்றி அளிக்கும் புன்னகையும் தோன்றின. இவன் மிகுந்த வருத்தங்கொண்டான். அவன் நின்ற இடத்தைவிட்டு அகலவில்லை. ஒதுங்கி அவனைத் தாண்டி அவள் சென்றாள்.

சிறிது சென்று, அவன் திரும்பிப் பார்த்தான். ரவிக்கை இல்லாது திறந்த அவள் முதுகைக் கண்டான். திடீரென்று வரப்பில் உட்கார்ந்திருந்த அப்பறவை நடுவே பறந்து எதிர்ப்புறத்து மரக்கிளையில் மறைந்து. இவனுக்குத் தன்னைஅறியாது சிரிப்பு வந்தது ; சிரித்து விட்டான். அந்தப் பறவை “ சீ சீ ” என்று கூவிக்கொண்டே பறந்துவிட்டது.

கொஞ்சம் மேலே நடந்து திரும்பினாள் கூடைக்காரி. சாலைத் திருப்பத்தில் மறைந்து விட்டாள். பக்கத்து ஓடை மதகுக் கட்டையில் உட்கார்ந்தான். மறுபடியும் கூடைக்காரி, தன் பளுவை இறக்க வருவதை எதிர்பார்த்தவன் போன்றிருந்தான். ஆனால் எதிரில் எதிர் மதகுக் கட்டை, வலது புறமும் இடது புறமும், சாலையும், பாழ் அடைந்த அச்சாவடியும் சமீபகாலத்தில் இடிந்தது போன்று முற்றும் பாழ் தோற்றம் கொடுக்கவில்லை.

அலுப்புற்று எழுந்து, நடந்து அவன் பக்கத்து ஊரை அடைந்தான். கீழ்க் கோடியிலிருந்து மேற்கே அவ்வூர்த்தெரு வழியாக மெதுவாக நடந்துகொண்டே போனான். அவன் முன் குறுகிய அவன் நிழல் போய்க்கொண்டிருந்தது.

பின்னிலிருந்து அவ்வக்கிரகாரத்து நாய் குரைத்தது. அவன் திரும்பிப் பார்த்தான். அவ்வூர்ப் பெண்கள் சிலர் இடுப்பில் குடத்துடன் ஜலம் மொள்ள, கோயிற் கிணத்தடிக்குச் சென்று கொண்டிருப்பதைக் கண்டான். “ஏன்? எங்கே ?” என்பது போல் நாய் குரைத்தது.

“ சீ சீ நாயே, நான் அவளைப் பார்க்க - தேட - போகிறேன். ”

குரைப்பு. “ ஏன் ? எங்கே ? ”

“ சீ சீ நாயே ! ஏன் என்கிறாயே - என் காதலி அல்லவா - என் காதல் இருப்பிடம் அல்லவா - எங்கே? தெரிந்தால் ஏன் போகிறேன். ”

“ ஏன் - ? எங்கே ? ”

“ சீ சீ ! நாயே அப்பெண்கள் ஜலமெடுக்க, கிணற்றுக்குப் போவதுபோலவா ? காதல் இதுமாதிரி அல்ல - ”

மறுபடியும் குரைப்பு.

அவனுக்கு மிகுந்த ஆத்திரம் உண்டாயிற்று. பொறுக்காமல், அந்த நாயைத் துரத்தினபோது, நாய் சிரித்துக்கொண்டே “ சரி - சரி ” என்று சந்தேகத்துடன் ஆமோதித்துக் குரைத்துக்கொண்டே ஓடிவிட்டது.

ஜலத்திற்குப் போகும் பெண்களைப் பார்த்தான். அதில் ஒருத்தி கறுப்பு. அவள் இடுப்பில் பித்தளைக் குடம், முகத்தில் மிகுந்த வசீகரம். அப்பெண் குனிந்து குதிகாலில் தண்டின குயவானை இழுத்துவிட்டுக் கொண்டாள். எல்லாப் பெண்களும் எதையோ பேசிக்கொண்டு போனார்கள். புரியாத பேச்சுச் சத்தத்திலும் தனிப்பட்டு ஒரு சிரிப்பு சத்தம் கேட்டது. சிரிப்பவளை இவன் பார்த்தான். அவன் முகத் தோற்றமே இவன் மனதில் பதியவில்லை. ஆனால் அவள் சிரிப்பதைத்தான் இவன் கண்டான். பார்த்துக்கொண்டு இருக்கும்போதே எல்லோரும் கோவிலினுள் சென்று மறைந்துவிட்டனர். திரும்பி அவன் அப்பெண்ணுடைய சிரிப்பை எண்ணிக்கொண்டு, அந்த ஊரைக் கடந்து சென்றான்.

அவ்வூரை விட்டதும் அவன் அறுவடையான வயல்கள் வழியாகப் போனான். சிறுசிறு மேகங்கள், உருவை மாற்றிக்கொண்டு கிழக்கு நோக்கி ஊர்ந்து சென்றுகொண்டிருந்தன. சிறு வெண்மை மேகம் ஓன்று சூரியனை மெதுவாக கடக்கும்போது, வயல் வழியாக நிழல் பாய்ந்தோடியது. அறுவடையான வயல்களில் ஒற்றையடிப்பாதை இன்னும் சரியாக ஏற்படவில்லை. நடுநடுவே ஒன்றிரண்டு கெட்டியான கட்டைத்தான் இவன் காலால் மிதிக்கப்பட்ட போது குத்தியது. வயலைவிட்டு அதன் வரப்போடு சிறித் தூரம் சென்றான். நன்கு காயாமல் இருக்கும் வரப்பில், சில சில இடங்களில் இவன் குதிகால் அமுங்கும். “ அப்படியே பாதாளம் வரையில் நான் அமுங்கிப்போனால் -  எனக்கு பளு ஜாஸ்தி - பளு இல்லாவிடில் இப்படி அமுங்குவேனா - ”

சில சில இடத்தில் வரப்பில் விதைத்த துவரை வெட்டப்படாமல் இருந்தது. இருபக்கமும் தன்னைவிட உயர்ந்து வளர்ந்து இருக்கும், செடிகளின் இடையே சென்றான். நடுநடுவே இவன் திடுக்கிடும்படி தத்துக்கிளி உயர எழும்பும். திடீரென்று மறுபடியும் மறைந்துவிடும். இப்படியே இவன் ஒரு களத்து மேட்டிற்குச் சென்றான். நடுவில், கதிரடிக்கும் சிறு இடத்தைத் தவிர மற்ற இடத்தில் ஒரே செடி, புல் பூண்டுகள் மண்டி கிடந்தன. சிறு புல் நீல புஷ்பங்கள், மிகுந்து ஒரு இடத்தில் பூத்திருந்தன. அவ்விடம், கண் குளிர்ந்த ஒரே நீலத்தால், சலவை செய்தது போன்றிருந்தது.

போயக்கொண்டிருக்கும் போது ஒரு நெரிஞ்சி முள் இவன் காலில் தைக்கக் கீழே உட்கார்ந்தான். உள்ளங்காலைக் கையால் தடவிக்கொண்டே, இவன் சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டிருந்தான், முள் இல்லை ; ஆனால் வலி மட்டும் இருந்ததை இவன் உணர்ந்தான். தனக்கு முன்னால் போடப்பட்டிருந்த பெரிய வைக்கோல்போர், பழுப்பாக வைக்கோல் மாதிரியே தோன்றவில்லை. நன்கு காயாமல் பசுமை கலந்த பழுப்பிலேயே, உயர்ந்து, ஏதோ தோற்றம் கொண்டது. தூரத்தில் இருந்த வேலிக்கால் காட்டாமணக்குச் செடியின் மீது ஒரு குருவி வாலை ஆட்டிக்கொண்டு கத்தியது. அது கத்திக்கொண்டே இறக்கும்  போன்று தோன்றியது.

“ சீ சீ ! அவள் போய்விட்டாள் - ” என்றது அக்குருவி. “ யார் ? எங்கே ? ” என்றான் இவன். மிக வெட்கமுற்றுப் பயந்தோடிவிட்டது அக்குருவி, “ குருவியே உனக்கு புத்தியில்லை, ஏன் கத்திக் கத்திச் சாகிறாய் ? - ” என்று வெற்றுக் காட்டாமணக்குச் செடியைப் பார்த்துச் சொன்னான்.

திடீரென்று எழுந்து நடக்கலுற்றான். சிறிது சென்றவுடன் மற்றொரு முள் குத்த இவன் கீழே உட்கார்ந்தான். முள்ளிப் பிடுங்கி எறிந்தான். பக்கத்தில் ஒரு எருக்கஞ்செடி முளைத்திருந்தது. அதன் மலராத மொட்டுக்களை நசுக்கினான். அப்போது உண்டான சிறு சப்தத்தில் கொஞ்சம் ஆனந்தம் அடைந்தான்.

அவள் ஞாபகம் வந்தது ! “ காதலி எங்கே - ஏன் நான் காதல் மணந்தானே புரிந்துகொண்டேன் ? அவளும் என்னைக் காதலித்தாளே ! எங்கே அவள் ? - அவள் எருக்க மொட்டில்தான் இருக்கிறாள். நசுக்கினால் வெளிவருவாள் ” மறுபடியும் மிஞ்சின மொட்டுகளை நசுக்கினான். மொட்டுகள் இல்லை. சப்தமும் இல்லை. அவளையும் காணோம். கோபம் கொண்டான். செடியின் இலைகளைப் பிடித்து வெடுக்கென்று பிடுங்கினான். கைநிறையக் கசங்கின. இலைகள் வந்தன. ஓங்கிக் கீழே அடித்தான். போக எண்ணி எழுந்தான். காட்டாமணக்குச் செடியின் மீது மறுபடியும் அக்குருவி இருந்து கத்தியது. “ சீ சீ அவள் போய்விட்டாள் - ” குனிந்து ஒரு சிறு கல்லை எடுத்து வீசி எறிந்தான். அது பறந்துவிட்டது. இவன் நடந்து போனான்.

சிறிய நகரம் ஒன்றைச் சேர்ந்தான் இவன். சாயங்காலவேளையும் ஆயிற்று.. இவன் அவ்வூர்க் கடைத்தெருவின் வழியாகச் சென்றான். பண்டங்கள் வாங்குபவர்களைக் கண்டான். “ காதல் - காதல் ஏன் இங்கு இருக்க முடியாது ? ” என்று பார்த்துக்கொண்டே, ஒரு முச்சந்தி வந்ததும் நின்றான். காணமுடியாததை “ அதோ - அதோ ” என்பது போலச்  சற்றும் முற்றும் தேடிப்பார்த்தான். தன் பின்னால் ஒருவன் நிற்பதைக் கண்டான். அவன் மீசை சற்றுப்பெரிது ; கிராப் தலை சிறிது கோணல் நெற்றிச் சந்தனப் பொட்டு மிகப் பெரியது. எல்லாம் கலந்து அவன் தோற்றம் இவன் மனத்தில் நன்றாகப் பதிந்தது.

“ ஐயா - மிக உயர்ந்த அழகு - சிறு வயது ;  நீங்கள் சாதாரணமாக வாருங்கள். மயங்கியே விடுவீர்கள் - காதல் மயக்கம் ஐயா - ரொம்ப அழகு ஐயா - ” என்றான் அவன்.

இவன் “ எங்கே -  ? எங்கே -  ? போவோம் - ? ” என்றான். அவனோடு கூடச் சென்றான். ஒரு சந்தில், சிறிய மட்டமான வீட்டிற்குள் இருவரும் சென்றனர். உள்ளே, மங்கலாக தீபம் ஒன்று, இருக்கும் ஏழ்மையைப் பார்க்க வெட்கமும், வருத்தமும் அடைவது போன்று எழுந்தும் விழுந்தும் அழுதுகொண்டு எரிந்தது.

கூடத்தில் ஒரு பெண் இருப்பதை இவன் கண்டான். அவள் உட்கார்ந்திருந்தாள். எழுந்து நின்றாள். கோணலாகத் தலையை வாரிக் கொண்டிருந்தாள். புது வறுமையையும், சேர்த்துக் கட்டிக் கொண்டது போல் அவள் முகம் தோன்றியது.

“இவள்தான் கிருஷ்ணவேணி, வெகு அழகு ஸார், எல்லோரும் அப்படித்தான் எண்ணுகிறார்கள் - நீங்களும் கட்டாயம் சொல்லப்போகிறீர்கள் ஸார் - ” என்றான் அவன்.

“ இங்கே - ஆம் அதைத்தானே நான் தேடி அலைகிறேன் - ”

“ சரி ஐயா - இருங்கோ - நான் இதோ வரேன் - ” என்று சொல்லிவிட்டு அவன் வெளியே போய் விட்டான்.

இவனுக்கு காதல் வந்தது ! “ எப்படி - ? எங்கே - ? எதுபோல - ? ”  இவனுக்கு ஒன்றும் புரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகவா - இல்லை. மிகுந்து திடீரென்று  வாய் பிளக்கவா ?  தெரியவில்லை. ஆனால் சமுத்திரக்கரையில் ஒழுங்கு உடைதரித்த வாலிபர்களுக்கு, நாகரிக ஒய்யார நடை மாதர்களைக் கண்டால் வருவது போலவா ? அவ்வகை இல்லை. அது மாதிரி யிருந்தால் இவனுக்குத் தெரிந்து இருக்குமே !

“ காதல் - எங்கே வந்ததா ? கண்டேனா - ”

“ ஆம். காதலை நேருக்கு நேராக ” தீபச் சுடர் சிறிது தூண்டிவிடப்பட்டது. கோபமாகக் கடைசியில் எல்லாவற்றையும் பார்ப்பது போன்றேதான், நிமிர்ந்து ஜ்வலித்து.

அவன்  பேசவில்லை. உட்காரவில்லை, தீபத்திற்கும் சுவற்றுக்கும் நடுவே இவனுக்கு நேராக இல்லாமல் நின்று கொண்டிருந்தாள். அவள் நிழல் பாதி கூடத்திலும், இடுப்பிற்கு மேல் எதிர்ச் சுவரிலும் விழுந்து சிறிது சிறிது ஆடிக் கொண்டிருந்தது. அது சுவர் முழுவதும் வியாபித்துத் தலை உச்சி மேடுவரை போய் மறைந்து, பயங்கரத்தோற்றத்தைத் கொடுத்தது. அவள் அத் தீபச் சுடரைப் பார்த்து நின்றிருந்தாள்.

அன்றிரவு, இவன், அங்கு தங்கினான், அவள் இரவெல்லாம் தூங்கவில்லை. அவன் பக்கத்திலே, கண்ணயராமல், விழித்துப்படுத்திருந்தாள். இவன் நடுநடுவே சிறிது விழித்துக்கொண்டான். இரண்டொருதரம் பிதற்றுவது போல் பேசினான்.

“ நாய் சொல்லியது சீ - சீ - அவள் போய்விட்டாள். - ஓடி விட்டாள். காதல் ஏன் ? எங்கே ?  சீ - சீ - நாயே காதல் எங்கேயா - ? இருட்டிவிட்டது. காண முடியாதோவென்று பயந்தேன் - ஆனால் இருட்டிலும் அகப்படுமோ காதல் - ? எங்கே ? ஏன் ? ” என்றெல்லாம் பிதற்றினான். அவன் பிதற்றலில் தனக்கு எதாவது புரிகிறதா வென்று அவள் நடுநடுவே சிறிது கவனித்தாள். ஒன்றும் புரியவில்லை, அவனையும் தெரியவில்லை.

விடியுமுன் மறுபடி ஒருதரம் பிதற்றினான். “ அந்தக் குருவி - ‘ஓடிவிட்டாள் ’ என்றது. யார் - ? அது வெட்கம் கொண்டு பறந்து விட்டது. ஓடினால் வெட்கமா ?
காதல் - ? ஏன் -  ?  எங்கே -  ?  அவள் எங்கே - அவள் ஓடி விட்டாளா ? இல்லை, நான்தான் ஓடுகிறேன். ஏன் - எதற்கு - காதலா - சீ - சீ இல்லை - அவள் - ராஜீவி - ”  அவன் முடித்துவிட்டான். அவளும் கேட்டாள். விடிந்ததும் இவன் எழுந்தான். அவளும் எழுந்தாள்.  அவனும் வந்தான். அவனும் இவனும் பேசிக் கொண்டிருந்தார்கள். அவள் உள்ளே போய் விட்டாள். வெளிவந்து, தாம்புக் கயிற்றை எடுத்துக்கொண்டு, பின்பக்கம் சென்றாள். சிறிது சென்று, திரும்பி வந்து, குடத்தையும் எடுத்துச் சென்றாள், கொல்லை கிணற்றடிக்கு. இவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அவள் வரவில்லை. வருவது போலும் இல்லை. அவன் கொல்லைப் பக்கம் போனான். இவனும் தொடர்ந்து சென்றான். அவளையும் இவர்கள் பார்த்தனர். குடம், அவள் கால் கீழ் சற்று எட்டி உதைக்கப்பட்டு உருண்டிருந்த கயிறு மேலிருந்து தொங்கியது. இவள் கயிற்றிலிருந்து தொங்கிக் கொண்டிருந்தாள். அவள் முகம் மேல்நோக்கி இருந்தது. கண்கள் மூடியிருந்தன, அவள் ஆத்மா முக்தி அடைந்தது. இவன் மனதில் - கால்களும் தேகமும், மெதுவாக ஊஞ்சல் ஆடின. அவள் முகத்தை இவன் பார்த்தான். “ காதலை - ? ” அவளை மறுபடியும் பார்த்தான். அவள் ஆத்மாவை எண்ணினான்.முக்தி அடைந்ததை உணர்ந்தான். போன இரவு நிகழ்ச்சிகளை நினைத்தான். பத்து மாதம் முன்னால் நிகழ்ந்தவைகளை நினைப்பூட்டிக் கொண்டான். ராஜீவியை முதல்தரம் தான் முத்தம் கொடுத்த போது அவள் முகத்தோற்றத்தை (மனதில்) கண்டான். தேவர் போன்று தரையில் தீண்டாது ஆடிக்கொண்டு நிற்பவளுடைய முகத்தை உற்று நோக்கினான். “ காதல் ?  ராஜீவியா - இவள் ? - காதல் - இவள் - ” வெளியே விரைந்து ஓடினான்.

ஓடி ஓடி அவ்வூரை விட்டகன்றான். அவன் வழிநடந்தான். “ காதல் - ? எங்கே - எப்படி - ” என்றான். உணர்ந்தானா ?  “ அதோ அங்கே - ” என்று ஆகாயத்தை இருகைகளையும் விரித்து நீட்டிக் காட்டினான். விரல்களைக் கெட்டியாக மூடி அசைத்துப் பயமுறுத்தானான். பொழுது நன்றாக விடிந்துவிட்டது. அன்று பொழுதும் போயிற்று. இரவும் வந்தது ; ஆனால் அவனுக்கு மறுபடியும் பொழுது புலரவில்லை.

நேருக்கு நேரே காதலைக் கண்டதே போலும் - கண்டதன் கதி போலும் - காண்பவரின் கதி போலும் -

- மணிக்கொடி, 1936.
தட்டச்சு : ரா ரா கு