தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Tuesday, August 23, 2011

டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்-ஜி. நாகராஜன், பச்சக் குதிரை - ஜி. நாகராஜன்

டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்-ஜி. நாகராஜன்
வலையேற்றியது: "அழியாச் சுடர்கள்" ராம் | நேரம்: 10:28 PM | வகை: கதைகள், ஜி. நாகராஜன்

gnagaran


போலீஸ் ரெய்டு இருக்கலாம் என்று நம்பகமான தகவல் வந்திருந்ததால், கதவைத் திறந்து வைத்துக்கொண்டு வீட்டு வாசலில் நிற்க வேண்டாம் என்றுவிட்டான் அத்தான். 'ஓரு மாதத்துக்கு முன் வீட்டைவிட்டு ஓடிவிட்ட கமலாவைப் பற்றி ஒரு செய்தியும் ,ல்லை. ஓணத்துக்குப் பிறந்த ஊர் போயிருந்த சரசா ,ன்னும் திரும்பி வரவில்லை. வெளிக் கதவை அடைத்துவிட்டு ரேழியை அடுத்திருந்த அறையில் குழல் விளக்கொளியில் மெத்தைக் கட்டிலின் மீது தனியே உட்கார்ந்திருந்த தேவயானைக்கு அலுப்புத் தட்டிற்று.
adhimoolamdrawing-page-56--
ஏதோ நினைவு வந்தவளாய் ரேழியிலிருந்து படிக்கட்டுகளின் வழியே ஏறி மாடியறைக்குச் சென்று விளக்கைப் போட்டாள். அங்கு கீழறையைக் காட்டிலும் சற்று அதிகமான வசதிகள் ,ருந்தன. பலவகை அந்நிய நாட்டுப் படங்கள் சுவரை அலங்கரித்தன. அறையில் மிகப் பெரிய செட்டிநாட்டுக் கட்டில் ஒன்றும். அதன் மீது 'டபில்' மெத்தை ஒன்றும் சுவரோரமாக ,ருந்தன. 'நைட் புக்கிங்'குக்கு மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்த அவ்வறை சென்ற ஒரு மாத காலமாக மனித நடமாட்டம் அற்றுக் கிடந்தது. கமலாவுக்குத்தான் 'நைட் புக்கிங்' ராசி அதிகம். தேவயானை கட்டிலின் மீது ,ருந்த மெத்தையை ,லேசாகத் திருப்பி, அதன் அடியிலிருந்து ஒரு நீளமான அரை இஞ்சு மணிக்கயிற்றை எடுத்தாள். அவள் ஊரிலிருந்து வரும்போது அவளது தாயார் அவளது படுக்கையைக் கட்டுவதற்குப் பயன்படுத்திய கயிறு அது. அறையின் நடுவில் நின்றுகொண்டு, கயிற்றின் உறுதியைச் சோதிப்பது போல அதைப் பலவிடங்களில் இழுத்துவிட்டுக்கொண்டே, மேலே அறையின் நெற்றுக் கண்ணைப் பார்த்தாள். உத்திரத்தில் ஒரு இரும்பு வளையம் தொங்கிக்கொண்டிருந்தது. அது கட்டிலின் விளிம்புக்கு நேர் மேலே சற்று விலகி அமைந்திருந்தது. கட்டிலின் மீது நின்றுகொண்டு, கயிற்றைக் கொண்டு வளையத்தை எட்ட முடியுமா? நடுவில் இருந்த மெர்க்குரி விளக்கின் மேற்பாதி, ஒரு வளைந்த தகட்டினால் மறைக்கப்பட்டிருந்ததால், வளையம் தெளிவாகக் கண்களுக்குக்குப் படவில்லை. சற்று அவசரமாகக் கீழே சென்று துணி உலர்த்தப் பயன்படும் நீளமான மூங்கிற் கழியொன்றை எடுத்து வந்தாள். கட்டிலின் மீது நின்றுகொண்டு, கழியின் ஒரு நுனியில் கயிற்றைச் செலுத்த முடியுமா என்று பார்த்தாள். கீழே கதவு தட்டும் சத்தம் கேட்டது. கழியையும் கயிற்றையும் கட்டிலில் போட்டுவிட்டு, கீழே ஓடினாள். வெளிக் கதவைத் திறக்குமுன் சற்றுத் தயங்கினாள். கதவை யாரும் தட்டவில்லை என்பதுபோல் பட்டது. அடுத்த பூங்காவனத்து வீட்டின் கதவு திறக்கும் சத்தம் மட்டுமே கேட்டது. கதவிடுக்கின் வழியே யாரும் நின்றுகொண்டிருந்தனரா என்று பார்த்தாள். யாரும் நின்றுகொண்டிருந்ததாகப் படவில்லை. தேவயானை மாடிப்படியறைக்கு வந்தாள்.

மீண்டும் கழியைக் கொண்டு கயிற்றை வளையத்தின் உள்ளே செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டாள். தோள்பட்டைகளில் நோவு எடுத்தது. முகத்தில் வியர்வை அரும்பி, நெற்றி வியர்வை ஜவ்வாதுப் பொட்டைக் கரைத்து வழிந்தது. தேவயானைக்கு ஒரு யோசனை வந்தது. அவசர அவசரமாகக் கழியையும் கயிற்றையும் தரையில் போட்டுவிட்டுக் கீழே ஓடிவந்தாள். புழக்கடையில் ஒரு சன்னலருகே கிடந்த அரையடி நீளமான துருப்பிடித்த ஆணியொன்றைக் கண்டுபிடித்தாள். அதை எடுத்துக்கொண்டு மாடியறைக்கு வந்தாள். ஆணியின் நடுவில் கயிற்றின் ஒரு நுனியை இறுகக் கட்டினாள். அவள் இழுத்த இழுப்பில் கயிறு கையை அறுத்துவிட்டது. வலி பொறுக்காமல் கையில் எச்சிலைத் துப்பிவிட்டு, அதன் மீது ஊதிக்கொண்டாள். கட்டிலின் மீது நின்றுகொண்டு கழியின் உதவியால் ஆணியை இரும்பு வளையத்துக்குள் செலுத்த முயன்றாள். ஆணி கழி நுனியில் ஸ்திரமாக அமையாமல் பொத்துப் பொத்தென்று கீழே விழுந்தது. ஒரு நிமிஷம் இளைப்பாறிவிட்டு, கை நடுக்கத்தையும் சரிபடுத்திக்கொண்டாள். பிறகு ஆணியை இரும்பு வளையத்துக்குள் செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டாள். ஆணியின் ஒரு பாதி வளையத்துக்குள் நுழைந்தாலும், மறு பாதி நுழைவதைக் கயிற்றின் முடிச்சு தடை செய்தது. கயிற்றின் கனமும் ஆணி வளையத்துக்குள் செல்வதைத் தடுத்தது. கயிறு நீளமான கயிறு. அவ்வளவு நீளம் கூடாதென்று தேவயானைக்குப் பட்டது. கயிற்றைப் போதுமான அளவுக்கு வெட்டக் கத்தி எங்கு கிடைக்கும் என்று யோசித்தாள். வீட்டில் கத்தி ஒன்றும் கிடையாது. பிளேடு? அதுவும் இல்லை. தேவயானைக்கு அடுப்பங்கரை அரிவாள்மனை நினைவுக்கு வந்தது. குதித்துத் கீழே சென்று அரிவாள்மணையை எடுத்து வந்தாள். கட்டிலின் விளிம்பில் நின்றுகொண்டு, தன் கழுத்துக்கும் இரும்பு வளையத்துக்கும் உள்ள இடைவெளியையும், சுறுக்கு விட வேண்டிய நீளத்தையும் உத்தேசமாகக் கயிற்றைத் துண்டிக்க வேண்டும் என்று தீர்மானித்தாள். நல்ல வேளையாக அரிவாள்மணை சற்றுப் பதமாகவே இருந்ததால் , கயிற்றை நறுக்குவதில் சிரமம் இல்லை. மற்றொரு யோசனையும் தேவயானைக்கு வந்தது. அரிவாள்மணையைக் கொண்டே கழியின் ஒரு நுனியை சிறிதளவுக்கு இரண்டாக வகுத்துக்கொண்டாள். இப்போது கயிற்று நுனியைக் கழிநுனியில் இருந்த பிளவில் கவ்வவைத்துக் கயிறு கீழே நழுவாதவாறு கழியை உயர்த்த முடிந்தது. இவ்வாறு ஆணியை வளையத்துக்குள் செலுத்தி, ஆணி வளையத்தைக் குறுக்காக அழுத்திக்கொண்டிருக்க, கயிறு நேர்ச்செங்குத்தாகத் தொங்குமாறு செய்தாள். கட்டிலின் விளிம்பில் நின்றுகொண்டு கயிற்றின் நுனிப்புறம் தலை செல்லுமளவுக்கு ஒரு வளையம் செய்து சுறுக்கு முடிச்சுப் போடப் பார்த்தாள் தேவயானை. சுறுக்கு முடிச்சும் சரியாக விழவில்லை. அவளுக்கு இதிலெல்லாம் அனுபவம் போதாது. இரண்டு மூன்று தோல்விகளுக்குப் பிறகு, ஒருவாறாக முடிச்சு சரியாக விழுந்தது. அப்போது கீழ்க் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. தேவயானை சற்றுத் தயங்கினாள். கீழே கதவைத் தட்டும் சத்தம் பலப்பட்டது. 'இப்போது இதுக்கு என்ன அவசரம்?' என்று நினைத்தவள் போல், தேவயானை கீழே ஓடிச்சென்று, சேலை முந்தானையால் முகத்தை ஒற்றிவிட்டு ஆடைகளையும் சரி செய்தவாறே வெளிக் கதவைத் திறந்தாள்.

அத்தானும் வேறொருவரும் வெளியே அறை வெளிச்சத்தில் நின்று கொண்டிருந்தனர்.

''கதவெத் தெறக்க இந்நேரமா?'' என்றான் அத்தான்.

''மேலே இருந்தேன்'' என்றாள் தேவயானை.

''கதவை அடைச்சிட்டு, லைட்டை அணைச்சிட்டு இருன்னா, ஒன்னே யாரு மேலே போகச் சொன்னது?'' என்றுகொண்டே அத்தான் நுழையவும், கூட இருந்தவரும் உள்ளே நுழைந்தார்.

''உம், லைட்டைப் போடு'' என்றுவிட்டு அத்தான் வெளிக்கதவை அடைத்தான். ரேழி விளக்கைப் போட்டாள் தேவயானை. அத்தான கூட வந்திருந்தவர் நன்றாக வளர்ந்து இருந்தார். அரைகுறை பாகவதர் கிராப்போடு, டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்திருந்தார். வழக்கமாக வருபவர்களைப் போல் அவளையே உற்று நோக்காது ரேழியையும், ரேழியை ஒட்டியிருந்த அறையையும் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்தார். ''சரிதானேங்க?'' என்றான் அத்தான், அவரைப் பார்த்து.

ரேழியை அடுத்திருந்த அறையினுள் நுழைந்து, குழல் விளக்கொளியில் அறையின் சுவர்களை மேலும் கீழும் பார்த்துவிட்டு, ''பரவாயில்லை, எல்லாம் சுத்தமாகவே வச்சிருக்கீங்க'' என்றார் அவர்.

''இங்கே எல்லாம் சுத்தமாகத்தான் இருக்கும்'' என்றான் அத்தான் கள்ளச் சிரிப்போடு. ''அப்ப நா வர்றேன்.''

''பணம்?'' என்றார் வந்தவர்.

''எல்லாம் டாக்டர்கிட்டே வாங்கிக்கறேன்'' என்றுகொண்டே வெளியேறினான் அத்தான்.

வெளிக் கதவைச் சாத்தித் தள்ளிவிட்டு, ரேழி விளக்கையும் அணைத்துவிட்டு, வந்தவரிடத்து, ''வாங்க'' என்று கூறிக்கொண்டே ரேழியை அடுத்திருந்த அறையின் குழல் விளக்கின் பிரகாசத்தில் பிரவேசித்தாள் தேவயானை. அவள் நேராகச் சென்று கட்டிலில் அமர்ந்தாள். அவர் தயங்கியவாறு அருகில் வந்து நின்றார்.

''இப்படி உட்காருங்க'' என்றாள் அவள்.

''இல்லே, அந்த ரேழி ஓரத்துலே ஒரு நாற்காலி இருக்கே, அதை எடுத்திட்டு வா'' என்றார் அவர். அவள் சிரித்தாள்.

''எப்போதுமே சாய்வு நாற்காலியில் சுகமாய் படுத்துத்தான் எனக்குப் பழக்கம்'' என்று அவர் விளக்கினார்.

பலர் அந்தச் சாய்வான பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு தேவ¨யானையைக் கொஞ்சியதுண்டு. எனவே உடன் எழுந்து பிரம்பு நாற்காலியை எடுத்து வந்து கட்டிலின் அருகே அதைப் போட்டாள். அவர் சாய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டார்; அவள் மீண்டும் கட்டிலில் உட்கார்ந்துகொண்டாள். இருவரும் ஒருவரையொருவர் நோக்கிக் கொண்டனர்.

''நீ அழகா இருக்கே'' என்றார் அவர். அவள் சிரித்தாள்.

''கொஞ்சம் சேலையை வெலெக்கிக்க'' என்றார் அவர். அவள் மீண்டும் சிரித்தாள். ''உம், வேடிக்கைக்குச் சொல்லலே; ஒன் மார்ப முழுசும் மறைக்காதபடி சேலய கொஞ்சம் வெலெக்கிப் போட்டுக்க.''

அவள் அவ்வாறே செய்தாள்.

''கொஞ்சம் நிமிர்ந்து உட்காரு.''

அவள் மீண்டும் சிரித்தாள்.

''கொஞ்சம் நிமிர்ந்து உட்காரேன்'' என்று கொஞ்சுவது போல் அவர் சொன்னார்.
''நீங்க என்ன போட்டாப் படம் பிடிக்கப் போறீங்களா?'' என்று அவள் சிரித்தாள்.
''ஆமா, அப்படித்தான் வச்சிக்கயேன்'' என்றார் அவர்.

அவளும் அவளது சேலையையும், முடியையும் ஒரு சைத்ரீகனுக்கு முன் உட்கார்ந்து சரி செய்துகொள்வதுபோல் சரி செய்துகொண்டாள். சற்று நேரம் அவளைப் பார்த்து ரசித்துவிட்டு, ஏதோ குறை கண்டவராய், ''உட்கார்ந்திருந்தா சரியாப்படலயே; கொஞ்சம் படுத்துக்க'' என்றார் அவர்.

''நீங்க உட்கார்ந்துதானே இருக்கீங்க, வெறுமனே'' என்றாள் அவள் சிரிக்காமல்.
''நான் இங்கே உக்காந்து இருந்திட்டுப் போகத்தானே வந்திருக்கேன்'' என்றார் அவர். அவள் சிரித்துக்கொண்டே படுத்துக்கொண்டாள். ஒரு கையை மடித்து அதைக் கொண்டு தலையைத் தாங்கி அவரை நோக்கிச் சிரித்தவாறே அவள் படுத்துக்கொண்டாள். அவர் அவளைப் பார்த்துக் கொண்டு இருந்தார்.

''உங்களுக்கு ஆசை இல்லையா?'' என்றாள் அவள்.

''நிறைய இருக்கு.''

''அப்ப?''

''அதனாலேதான் ஒன்னைப் பார்த்துகிட்டே இருக்கேன்.''

''பாத்துகிட்டே இருந்தாப் போதுமா?'' அவள் சிரித்தாள்.

''தொட்டுப் பார்க்கலாம்.''

''நீங்க தொட்டுப் பாக்கலயே.''

''தொட்டா நீ சும்மா இருக்கணுமே!'' என்றார்.

அவள் சிரித்தாள். ''நான் ஒண்ணும் சேட்டை செய்யமாட்டேன்; நீங்க சும்மா தொட்டுப் பாருங்க.''

வெளிக்கதவு தட்டும் சத்தம் கேட்டது. அவள் எழுந்திருக்க முடியாது போல் தவித்தாள். அவர் நிதானமாக எழுந்து கதவைத் திறந்தார். கதவைத் தட்டியது அத்தான்தான். அத்தான் அவரை எதுவும் கேட்குமுன் அவர் பையிலிருந்து எதையோ எடுத்து அத்தானிடம் கொடுக்க வந்தார்.

''இல்லே வச்சிக்கோங்க, எல்லாம் டாக்டர்கிட்டேருந்து வாங்கிக்கறேன். டாக்டர் கடைக்கு வந்திட்டாரு; நீங்க வர்லயான்ட்டு கேட்டாரு'' என்றான் அத்தான்.

''இப்ப வந்திடறேன்ட்டு சொல்லுங்க'' என்றார் அவர்.

அத்தான் வெளியேறுகிறான்; அவர் கதவை அடைத்துத் தாளிடுகிறார்.

''கொடுமை'' என்றுகொண்டே அவர் நாற்காலியில் சாய்கிறார்.

''எது?'' என்றாள் அவள், கட்டிலிலிருந்து எழுந்து அவர் அருகே நின்றுகொண்டு.
''இந்த நேரக் கணக்குதான்'' என்று அவர் சொல்லவும் அவள் அவரைக் கட்டியணைக்க முயன்றபடியே, அவரது இரு கன்னங்களிலும்டஇ இறுதியாக அவசரமாக அவர் உதடுகளிலும் முத்துகிறாள்.

''சரி, நீ போய்ப் படுத்துக்க'' என்கிறார் அவர்.

''நீங்க என்ன செய்யறீங்க?'' என்று கேட்டுக்கொண்டே அவள் மெத்தையில் சாய்கிறாள்.

''இங்கே இருக்கேன்'' என்கிறார் அவர்.

''அதெக் கேக்கலே; என்ன தொளில் செய்யறீங்க?''

''பெறந்து, வளந்து, சாவற தொளில்தான் செய்யறேன்.''

அவள் கட்டிலிலிருந்து எழுந்து அவரை கட்டியணைக்க முயலுகிறாள். அவரோ நாற்காலியில் சாய்ந்தவராகவே கிடக்கிறார். தோல்வியுற்றவளாய் அவள் கட்டில் மெத்தைக்குச் சென்று அதன் மீது விழுகிறாள்.

''எனக்குத் தண்ணி தவிக்குது'' என்கிறாள் தேவயானை.

அவர் எழுந்து, ரேழி விளக்கைப் போட்டு, மூலையிலிருந்த பானையிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து அவளுக்குக் கொடுக்கிறார். படுத்தபடியே அவள் தண்ணீரைப் பருகும்போது, அதில் ஒரு பகுதி வாய்க்குள் நுழையாது அவளது மார்பகத்தை நனைக்கிறது.

நின்றுகொண்டிருக்கும் அவர், ''சென்று வருகிறேன்'' என்கிறார்.

''அடுத்த வாட்டி எப்ப வருவீங்க'' என்றுவிட்டு அவர் பையிலிருந்து ஒரு ஐந்து ரூபாய்த் தாளை அவளிடத்து நீட்டுகிறார். அவள் அதை வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டு, தலையணைக்கு அடியில் அதை வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டு, தலையணைக்கு அடியில் வைக்கிறாள். அவர் கதவைத் திறந்துகொண்டு வெளியே செல்கிறார்.

இரவு மூன்று மணிக்கு அத்தான் வீட்டுக்கு வந்தான். அவரைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்று அவளுக்கு ஆவல். ஆனால் வாடிக்கைக்காரர் யாரிடத்தும் அவள் விசேட ஆர்வம் காட்டுவது அத்தானுக்குப் பிடிக்காது. எனவே அவள் எடுத்த எடுப்பிலேயே, ''அவர் எனக்கு அஞ்சு ரூவா கொடுத்தார்'' என்றாள்.

''யாரவன்?'' என்றான் அத்தான்.

''அதான் நீங்க மொதல்லே கூட்டியாந்தீங்களே, அவருதான்.''

''மொதல்லே யாரக் கூட்டியாந்தேன்? நான் இன்னிக்கு ஒருவாட்டி தானே வந்தேன்?''

''அதான், ஏளு ஏளரை மணிக்குக் கூட்டியாந்தீங்களே, அவரே நெனப்பில்லையா?''

''ஏளு, ஏளரை மணிக்கா? நான் சுப்பு வீட்லேந்து கிளம்பும்போதே ஒம்பது மணி ஆயிருக்குமே!''

'',ன்னிக்கு சுப்பு வீட்டுக்குப் போயிருந்தீங்களா?''

''ஆமாம், இருபது ரூபா வரைக்கும் கெலிப்பு. இன்னைக்கு ஒன்பது மணிவரைக்கும் தெருவுலே தலைகாட்ட வேண்டாம்னுட்டு ஏட்டையா சொல்லியிருந்தாரு. நானும் ஒம்பது வரைக்கும் சுப்பு வீட்டோடவே இருந்திட்டேன்.''

''அப்ப, அந்த டெர்லின் சட்டைக்காரரே நீங்க கூட்டியாரலையா? அவர் கூட ஒரு டாக்டர் வந்தாராமே; நீங்க கூட டாக்குட்டரே வேறே வீட்டுக்குக் கூட்டிப் போனீங்களே?''

''டாக்டரா? அவர் யாரு டாக்குட்டரு? ஒனக்கு என்ன புத்தி தடுமாறிடுச்சா, இல்லே கதவெத் தெறந்து போட்டுக்கிட்டு கனவு கண்டிட்டிருந்தயா?''

''இல்லயே, கதவ அடச்சிட்டு மேலேதான் இருந்தேன். நீங்க கதவைத் தட்டினப்பதான் கீளே வந்தேன்.''

அத்தான் முழித்தான். அவள் தொடர்ந்தாள்.

''கொஞ்சம் நீளமா முடி வச்சிருந்தார். நீலநெற டெர்லின் சட்டையும் எட்டு மொள வேட்டியும் கட்டிருந்தாரு. ஆனா என்னெத் தொட்டுக்கக் கூட இல்லே'' என்றுவிட்டு தேவயானை சிரித்தாள்.

''தேவு, சும்மா உளறாதே. நான் தெருவுக்கு வரும்போதெ மணி ஒம்பதுக்கு மேலே ஆயிரிச்சே. அந்த சாயபுப் பையனே மட்டுந்தானே இன்னைக்கு நா கூட்டியாந்ததே. அதுக்கு முன்னாடி யாரெக் கூட்டியாந்தேன்?''

''நா உளர்றேனா, நீங்க உளர்றீங்களா?'' என்றுகொண்டே, தான் அவரிடமிருந்து வாங்கிய ஐந்து ரூபாயை அத்தானிடம் காட்ட தலையணையைத் திருப்பினாள் தேவயானை. தலையணைக்கு அடியே எதுவும் காணப்படவில்லை. தேவயானைக்கு மெய் சிலிர்த்தது. பதட்டத்தில் தலையணையை முழுமையாகப் புரட்டினாள். எதுவும் காணோம். மெத்தைக்கு அடியிலும், பிறகு தலையணை உறைக்குள்ளும் தேடினாள். ஒன்றும் காணவில்லை. தலையணை உறையின் இரு முனைகளைப் பிடித்துக்கொண்டு தலையணையைத் தலைகீழாகக் கவிழ்த்தாள். தலையணை தலையில் விழுந்தது. உறையினுள் தேடினாள். தரையில் தேடினாள். ஐந்து ரூபாயைக் காணோம். அத்தான் முழித்தான்.

''எங்கே போயிருக்கும்; இங்கேதான் எங்காவது இருக்கணும்'' என்றாள் தேவயானை நம்பிக்கையோடு.

''எது?'' என்றான் அத்தான்.

''அந்த டெர்லின் சட்டைக்காரர் கொடுத்த அஞ்சு ரூபாதான்.''

''நீ என்ன கனவு ஏதாச்சும் கண்டாயா?'' என்றுகொண்டே அத்தான் சிரித்தான்.

''நீங்கதான் வெறிச்சீலே எல்லாத்தையும் மறந்திடுவீங்க'' என்றாள் தேவயானை, இன்னும் காணாமற் போன ஐந்து ரூபாயைத் தேடியவாறே.

''ஒருவேளை மேலே மாடியிலே இருக்கும்'' என்றுகொண்டே, தேவயானை வேகமாகப் படிகளேறி மாடிறயறைக்குச் சென்றாள். அவள் அணைக்காது விட்டுப்போன மெர்க்குரி விளக்கு ஒளியில், அவள் பிரயாசைப்பட்டு இரும்பு வளையத்திலிருந்து தொங்கவிட்ட கயிறும், அதன் கீழ் நுனியை அலங்கரித்த வட்டமும் அவளைத் திகைக்க வைத்தன.
-கவனம் - மே-1981 (மீள் பிரசுரம்)
flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

பச்சக் குதிரை - ஜி. நாகராஜன்

ராஜுவுக்கு துக்கம் பீறிட்டு வந்தது; சாகலாம் போலிருந்தது. 

'பெரிய சண்டியரு! இவர் எதைக் கேட்டாலும் கொடுத்துடணும்; இல்லாட்டி மாட்ட வைப்பாராம், மாட்ட!' 

ராஜுவுக்கு கோபமெல்லாம் செல்லத்துரை மீது. 

'எருமைமாடு மாதிரி இருந்துக்கிட்டு இவன் எதுக்கு நாலாம் கிளாசிலே இருக்கணும்? அன்னைக்கு  மாணிக்கம் வாத்தியார்கூட, 'டே தடியா! அய்யாகிட்டச் சொல்லி, ஏதாச்சும் கடைலே கிடைலே வைக்கச் சொல்லு' என்கலே! இந்த மாணிக்கம் வாத்தியான்! அவன் ஒரு மண்டைக் கனம், மாணிக்கம், கீணிக்கம், சாணிக்கம், பூணிக்கம்...' 

மாணிக்கம் வாத்தியார் திருகிய காதை ராஜு இலேசாகத் தொட்டுக் கொண்டான். இட்லியைத் தொட்ட மாதிரி இருந்தது. 'இன்னைக்கு தின்ன என்னவோ?... இருட்டிடுச்சு... ஒருமிக்க சோத்தைத் தின்னுட்டு படுத்துர வேண்டியதுதான். ஐயோ, காதெ யாரும் பாக்காம இருக்கணுமே; ராஜு மீண்டும் காதைத் தொட்டுக் கொண்டான். துக்கம் நெஞ்சை அடைத்தது. 'அம்மா பாத்தா 'ஓ'ன்னு அலறிடுவா. ஊர்லே இல்லே, நல்லவேளை. அப்பா வரதுக்குள்ளே தூங்கிடணும்... போடா, ராஜு போ, உனக்குத் தூக்கம் வேறயா கெட்டிருக்கு.. காலையிலேயே போலீசுகாரன் வரும்போதல்ல தெரியும்' 

இந்த வீட்டிலே ராஜு என்கிற செட்டிமார் பையன் ஒருத்தன் இருக்கானா? அய்யய்யோ, போலீசுக்காரன் வந்திட்டானே! மூஞ்சியைப் பாரு, குரங்குமாதிரி. ஆமாம் இந்த வீடுதான். என்ன விஷயம் என்று கேட்டுக்கொண்டு வாசலில் நிற்கிறார் அப்பா. ராஜு கதவருகே ஒளிந்து கொண்டு நிற்கிறான். 'அந்தப் பையனே டேஷனுக்கு கூட்டிப் போகணும். யாரோ ஒரு பையன் கையை ஒடிச்சிட்டான்' என்கிறான் போலீஸ்காரன். 'எங்க வீட்டு ராஜுவா? அவன் அப்படியெல்லாம் கையை ஒடிக்க மாட்டானே! பாவம், ரொம்ப சாது' என்கிறார் அப்பா. போலீஸ்காரன் விட்டால் தானே! 'ஒடிக்கமாட்டானா? அவுங்க மாணிக்கம் வாத்தியாரே பார்த்தாராம். இவன்தான் ஒடிச்சானாம். பச்சக்குதிரை விளையாடுறப்போ, குனிஞ்சிருந்த உங்க ராஜுதான் அந்த சோமுவைக் காலை வாரிவிட்டுக் கையை ஒடிசிருக்கான். செல்லத்துரைங்கிற பையன் கூடச் சொன்னான். 

'பொய்யப் பாரு பொய்யை! நான் ஒன்ணும் காலை வாரிவிடலேப்பா... அந்தச் செல்லத் துரைக்கு பென்சில் தரலையாம், பொய் சொல்றான். மாணிக்கம் வாத்தியாரும் கூடச் சேர்ந்துக்கிட்டாரு' என்று கத்திக்கொண்டு ராஜு அப்பாவின் முன் வருகிறான். 'திருட்டுப்பயலே, நீதானா?' என்று கூறிக்கொண்டு போலீஸ்காரன் ராஜுவை எட்டிப் பிடிக்கிறான். ராஜு ஓடுகிறான். போலீஸ்காரன் விரட்டுகிறான். அப்பா போலீஸ்காரனைக் தடுக்கப் பார்க்கிறார். அப்பா கைமீது போலீஸ்காரன் ஒரு போடு போடுகிறான். ராஜுவைத் தரதரவென்று இழுக்கிறான். அப்பா பின்னால் ஓடிவருகிறார். 'பத்து வயசுக் குழந்தை அய்யா, அவனை விட்டிடுங்க. நான் வேணா அந்தக் கையொடிஞ்ச பையனுக்கு நிறையப் பணம் தரேன். அவனை விட்டிடுங்க அய்யா!' என்று கெஞ்சுகிறார் அப்பா. போலீஸ்காரனுக்கு நெஞ்சு கல். 'கையை ஒடிச்சிருக்கான். பத்து வயசுக் குழந்தையாம்' என்று இரைகிறான். பல்லைக் கடித்துக் கொண்டு ராஜுவை இழுத்துச் செல்கிறான். 'இந்த ஒரு தரம் விட்டிடுங்கையா, இனிமே ஒடிக்கமாட்டேன். யார் கையையும் ஒடிக்கமாட்டேன்'' என்று அழுகிறான் ராஜு... 

ராஜுவின் கண்களிலிருந்து பொலபொல வென்று கண்ணீர் வடிந்தது. வாய் உலர்ந்தது, வாயைத் திறக்க முடியவில்லை. நாக்கு வாயோடு ஒட்டிக்கொண்டது. தொண்டையில் ஏதோ உருண்டை மாதிரி நின்றது. 'நான் காலை வாரிவிடலேப்பா. எல்லாம் இந்த செல்லத் துரையாலே, எத்தனை பொய் சொல்றான்! அவன் சொல்றதை வச்சிக்கிட்டு இந்த மாணிக்கம் வாத்தியார் போலீசிலே பிடிச்சுத் தருவாராம், அப்பா.' 

பாவம் அந்தச் சோமு! அவன் கையொடிஞ்சு போச்சு. 'கையொடிஞ்சிருச்சே! வீட்டிலே கொன்னுப்புடுவாங்களே'ன்னு கத்தினான். 'சோமு, சோமு எம்மேலே கோவப்படாதே. நான் ஒண்ணும் உன்னைக் காலை வரிவிடலே, நீ கையை வச்சு முதுகிலே அழுத்தினபோது இலேசாகக் குனிஞ்சேன், சோமு.' சோமுவை பியூன் ஹென்றி தூக்கினபோதுதான் எப்படி அலறினான் அவன்! அய்யோ பாவம், 'நான் வேணும்னு ஒண்ணும் செய்யலே சோமு, என்னை மட்டும் சும்மா விட்டாங்களா? இங்கே யாரு. இங்கே பார். தலைலே மங்கு மங்குன்னு குட்டினாரு. என் கன்னத்தைப் பாரு. பளீர் பளீர்ன்னு அடிச்சிருக்காரு. எல்லோரும் எம்மேலே விழுந்து என்னைக் கீழே தள்ளி மிதிச்சாங்க சோமு. என்னைப் போலீசிலே வேறே பிடிச்சித் தரப்போறாங்களாம் சோமு. அந்தச் செல்லத்துரை சொல்றான். 

'சோமுவைத்தான் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிட்டாங்களே! பாவம், இனிமே என்ன செய்வான்? பள்ளிக்கூடத்துக்கு வரமுடியாது. கையொடிஞ்சவனைக் கடையிலே வச்சிக்க மாட்டாங்க. பாவம் சோமு நொண்டிப் பிச்சைக்காரனா ஆக வேண்டியதுதான். 'அய்யா சாமி! கொஞ்சம் தர்மம் போடுங்களேன். அந்த செட்டிப்பய ராஜு என் கையை ஒடிச்சிட்டானே' இந்த அப்பா ஒண்ணு. அவனுக்கு ஏதாச்சியும் தாங்களேன்னா, 'அவன் கையொடிஞ்சா நாம் என்ன செய்யறது?'ன்னுடுவார். 'இல்லேப்பா நான்தான் பாவம் அவன் கையை ஒடிச்சேன். 'நீதான் ஒடிச்சயா! போ, அவனோடே நீயும் போ..'
 ராஜு நந்தவனத்துக்கு வந்தான். தொட்டியிலிருந்த தண்ணீரைக் கொண்டு முகத்தைக் கழுவினான். அங்கு சீப்பு, கண்ணாடி வைத்திருந்தார்கள். தலையைச் சீவிக் கொண்டான். சட்டையையும், டிராயரையும் சரிப்படுத்திக் கொண்டான். கழுவிய முகத்தில் கண்ணீர் மீண்டும் முத்துப் போல் உருண்டு விழுந்தது. துடைத்துக்கொண்டான். வீடு சேர்ந்ததும் யாருடனும் பேசவில்லை. வேலைக்காரி சோறு போட்டாள். சாப்பிட்டான். நேராகக் கட்டிலுக்குச் சென்று குப்புற விழுந்தான். அலைக்கழிந்த மனம் அமைதியை நாடியது. 

இரண்டு மணி வெயில் மண்டையைப் பிளந்தது. ராஜுவும் அவர்களும் வேலாங்குளம் கண்மாயை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அவர்களில் வேலுச்சாமி ஒருவன். தர்மராஜன் ஒருவன். மூன்றாவது யாரோ.. ராஜுவுக்கே தெரியாது. நிழலுக்காக, ரோட்டிலே நடக்காது ரோட்டோரமாக இருந்த மேட்டிலே நடந்து சென்றனர். ஒவ்வொருவராக சட்டையைக் கழற்றி முண்டாசாகக் கட்டிக்கொண்டனர். சற்று தூரத்தில் இருந்த தண்டவாளத்தின் மீது புகைவண்டி ஒன்று சென்றது. வண்டியைக் கண்டதும் அவர்கள் நின்று அதைப் பார்த்து கூச்சலிட ஆரம்பித்தனர். கண்டபடித் திட்டினர். ரெயிலில் போகிறவர்களை, வேலுச்சாமி மடித்துக் கட்டியிருந்த வேட்டியைத் தூக்கி வண்டியைப் பார்த்து கூத்தாடினான். ராஜுவுக்கு கூச்சலிடவும் கூத்தாடவும் மனமில்லை. 'இதெல்லாம் என்ன?' என்று உள்ளூர அலுத்துக் கொண்டான். 

கண்மாயில் ஏக கலாட்டா. நாலு பேரும் தண்ணீரிலே குதியாட்டம் போட்டனர். வேலுச்சாமி மட்டும் ஒரு கோவணம் கட்டியிருந்தான். மற்றவர்கள் பிறந்த மேனியில் இருந்தனர். நாலு பேர்களுக்கும் கையும் காலும் வெளிறிப்போய் கனத்துவிட்டது. கண்கள் சிவந்து நீரைக் கக்கின. தலையில் கல்லைக் கட்டி அழுத்துவது போலிருந்தது. போதாதற்கு வயிறு நிறைய தண்ணீர். ஒவ்வொருவராக வேலுச்சாமியைத் தவிர மற்ற மூவரும் கரைக்கு வந்து சேர்ந்தனர். அரைகுறை நீச்சலடித்து சுற்றி வந்தான் வேலுசாமி. அவ்வப்போது கால்களையோ கைகளையோ தரையில் ஊன்றிக் கொண்டான. சுற்றிச் சுற்றி வந்தவன் சற்று விலகிச் சென்றுவிட்டான். கால்கள் தரையை எட்டவில்லை. ஆழத்துக்குப் போய்விட்டான். தத்தளித்துத் தத்தளித்துத் தலையை மேலே தூக்கினான். உரக்கச் சத்தமிட முயன்றான். தண்ணீர் அலை அலையாக வாய்க்குள் புகுந்தது. ஒரே உளறல் மட்டும் கேட்டது. தரையிலிருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு 'திக்'கென்றது. தர்மராஜன் நிலைகுலையாது நின்றான். ஒருவன் 'அய்யோ அப்பா' என்று கத்திக் கொண்டு ஓட்டமெடுத்தான். ராஜு மட்டும் சரசரவென்று தண்ணீருக்குள் நடந்தான். வேலுச்சாமியை எட்டிப் பிடித்தான். இருவரும் தண்ணீரில் மல்லுக்கட்டினர். அவன் இவனை இழுத்தான். இவன் அவனை இழுத்தான். ராஜுவுக்கு மூச்சு முட்டியது. 

பாவம் ராஜு செத்துவிட்டான். ராஜுவின் வீட்டு முன்பு கூட்டம். மாணிக்கம் வாத்தியார்கூட வந்திருந்தார். 'நல்ல பையன், ரொம்ப சாது' என்று அனுதாபப்பட்டார். 'அந்த வேலுச்சாமிக்காகத் தான் ராஜு செத்துப் போனானாம்' என்றார் யாரோ ஒருவர். எல்லாரும் ஆமோதிக்கும் பாவனையில் தலையை அசைத்துவிட்டு ராஜுவின் சாவுக்காக வருந்தினர். அந்தக் கூட்டத்திலே நின்று கொண்டிருந்த ராஜுவும் வருத்தத்தோடு தலையை அசைத்தான். 

'தம்பி எழுந்திரு. உங்க பெரியய்யா, மகன் வந்திருக்காரு' என்று வேலைக்காரி கூறியதும் ராஜு எழுந்து உட்கார்ந்தான். 'செத்ததெல்லாம் கனவுதான்! உம் அந்த சோமுக்கு கையொடிஞ்சதும் கனவாயிருக்கக்கூடாதா?'' ராஜு வெளியே நடந்து வந்தான். பெரியப்பா மகன் நடராசன் இரண்டு சகாக்களோடு நின்று கொண்டிருந்தான். 'என்ன தம்பி, செல்லத்துரை நேத்து சேட்டை பண்ணினானாமே? உடனே எங்கிட்டே ஏன் சொல்லலே? பெரிய சண்டியருன்னு நினைச்சிட்டிருக்காம்போலே, இன்னைக்கில்லே அவனுக்கு தெரியப் போவுது!'' என்று நடராஜன் ஆரம்பித்தான். 'இல்லே, அண்ணே, நான் சோமு கையை ஒடிச்சிட்டேங்கிறாங்க' என்று ராஜு இழுத்தான். ''கையொடியரவரு ஏன் விளையாட வந்தாராம்'' என்று கேட்டுவிட்டு, நடராஜன், ''தம்பி, நீ தின்னுட்டு வா... இன்னைக்குப் பள்ளிக்கூடத்திலே வச்சு சாத்தற சாத்திலே, அவரு சண்டியத்தனமெல்லாம் பறக்கணும், ஆமா' என்று கூறிக்கொண்டே ராஜுவிடம் விடை பெற்றுக்கொண்டு, சகாக்களின் தோள்களில் கைகளை வைத்தவாறே நகர்ந்தான் நடராஜன். ராஜு துள்ளிக் குதித்து வீட்டுக்குள் ஓடினான். 

"கையொடியரவரு ஏன் பச்சக்குதிரை தாண்டணுமாம்?" என்று சொல்லிக்கொண்டே பல்லை விளக்கினான். உடனே நேராக அடுப்பங்கரைக்குள் நுழைந்தான். ''தம்பி வெந்நீர் ஊத்திவச்சிருக்கேன். குளிச்சிட்டு வந்திரு. இல்லாட்டி ஐயா கோவிப்பாரு'' என்றாள் வேலைக்காரி. ''குளிக்கவும் மாட்டேன்; ஒண்ணும் மாட்டேன், நான் ஒடனே போகணும். இப்ப இட்லியை வைக்கிறயா, இல்லையா?'' என்று அதட்டினான் ராஜு. 

''உன் அதட்டலும் மிரட்டலும் இங்கே வச்சுக்காதே; மருவாதையாய் போய்க் குளி'' என்று கண்டிப்புடன் பேசினாள் வேலைக்காரி. 

''என்னை யாருன்னு நினைச்சே! இங்கே பார், நான் இன்ஸ்பெக்டராக்கும்'' என்று சொல்லிக்கொண்டே கையிலிருந்த தோல் பெல்ட்டால் வேலைக்காரிக்கு ஓங்கி ஒரு அடி கொடுத்தான் ராஜு. 

********
சரஸ்வதி (மலர் 6 இதழ் 6)  25-5-1959


Tuesday, August 09, 2011

கொஞ்சதூரம் – மெளனி

http://thoguppukal.wordpress.com/

http://thoguppukal.in


கொஞ்சதூரம் – மெளனி
POSTED BY SSINGAMANI ⋅ NOVEMBER 7, 2010 ⋅

அன்று காலையில் எழுந்தது முதல், அவன் மனது சரியாக இல்லை. கிராமத்தில் தன் தனி வீட்டில் கடந்த ஆறு மாதமாக அவன் நடத்திய வாழ்க்கையில், அவன் மூளைக்கு ஒன்றுமே சாரமாகப்படவில்லை. படித்து முடிந்து, நகரத்தினின்றும் ஊர் சேர்ந்து அங்கேயே இருந்தான். நான்கு மாதத்திற்கு முன்பு, கடைசியாகத், தன் கல்லூரி சிநேகிதி மிஸ். ரோஜாவிற்கு எழுதின கடிதந்தான் அவனுடைய பழைய வாழ்க்கை நினைவின் அறிகுறி போன்றது.



எழுந்தவன் வாயில் திண்ணையில் நின்றுகொண்டு பார்த்தான். கீழிறங்கித் தெருவில் நடந்து சென்று, சிறிது தூரத்தில் அவ்வூர் எல்லையில் ஓடும் வாய்க்கால் கரையில் நின்றுகொண்டு கிழக்கே வெகுதூரம் வரையில் பார்த்தான். அடிவானத்தில் சிறு சிறு மேகங்கள் வெண்மையாகத் திட்டுகள் போன்று அசைவற்று இருந்தன. கண்ணுக்கெட்டிய வரையில், தனித்தனி மரங்கள் தனிப்பட்டே தோன்றின. சிறிய குடிசைகள், அங்குமிங்கும் மரங்களிடையே தெரிந்தன. இரண்டொரு ஆடுமாடுகள் செய்வதறியாது, காலந்தவறி மேய்வது போன்று மேய்ந்து கொண்டிருந்தன. அவன் காலடியின் கீழ், அச்சிறு வாய்க்காலில், தெளிவாக, அடிமணல் தெரிய ஜலம் அரித்தோடிக்கொண்டிருந்தது. ஜலத்தின் மீது உலர்ந்த இலைகள் மிதந்து சிறு சூழலில் சுழன்று, மேலும் கீழுமாக அழுத்தலாக, மெதுவாக, ஜல ஓட்டத்தில் இழுக்கப்பட்டுப் போய்க்கொண்டிருந்தன.

எல்லாம் ஒரே இடத்தில் ஒரே மாதிரியாகத்தான் இருந்தது. பழையபடியே தான் இவனுக்குத் தோன்றியது. ஆனால், ஆவலாக, இருந்த இடத்தில் காண நினைத்தது, ‘அங்கு இல்லை, எங்கும் காணவில்லை’ என்று எண்ணியது போன்று சலிப்புற்று வீட்டிற்குத் திரும்பி வந்தான். கதவை அடைத்து உட்சென்று சாப்பிட்டான்.

மத்தியானம் சுமார் ஒரு மணி இருக்கும்போது இவன் வீட்டை விட்டுக் கிளம்பினான். தெருக்கோடியில் உள்ள சிவன் கோயிலையும் அவ்வூர் வாய்க்காலையும் கடந்தான். வாய்க்காலைக் கடந்தவன் சிறிது நின்றான். பின்புறமாகத் திரும்பிப் பார்த்தான். அச் சிறிய கிராமமும், பிரகாசமான சூரிய வெளிச்சத்தில் தெளிவுற்ற பார்வையைக் கொடுக்கவில்லை. இடிந்த மதிற் சுவரின் இடையே கோவில் பிராகாரத்தில் உள்ள புஷ்பச் செடிகள் தெரிந்தன. வாழ்க்கைத் திரையில் தீட்டப்பட்ட சித்திர உருக் காட்சியையே இவன் மனதில் கொண்டான். சில சில புஷ்பங்கள் கொய்யப்படாமலே ஒரு பசுமைத் தோற்றத்தின் நடு நடுவே இருந்தன. மெய் மறந்த பகட்டுடன், சிறு திட்டு வர்ணப் பூச்சிகளை அத்திரையில் தீட்டினது போன்றுதான் அப் புஷ்பங்கள் பசுமையில் பதிந்திருந்தன. வாய்க்காலில் துணி துவைக்கும் பாறாங்கல்லில் ஒரு சிறு குருவி உட்கார்ந்திருந்தது. அதுவும் திடீரென்று பறந்து அச் செடியில் ”ஏன் – எங்கே -” என்று கத்திக்கொண்டு மறைந்துவிட்டது. ”கொஞ்ச தூரம்-” என்று அப்போதுதான் எண்ணியவன் போன்று தனியே தன் வழி நடக்கலுற்றான்.

மிக உஷ்ணமாகப் பிற்பகல், உலகமே அநேக சப்தங்களிலும், இரைச்சலிலும், நிசப்தத் தோற்றத்தைக் கொண்டது. வெப்பத்தைத் தாங்காது ஆலமரத்தடியில் மாடுகள் தங்கி இருந்தன. கண்களை மூடியவண்ணம் படுத்திருந்தன சில, கண்கள் மூடியே அசை போட்டுக்கொண்டு, அலுப்பில் சமாதானமின்றி, அலைவது போன்று அங்குமிங்கும் நிழலில், சில ஊர்ந்தன. நடு நடுவே, திடீரென்று வானம் கிழிய, ஒன்றிரண்டு மாடுகள் அலறிய சப்தமும், நிசப்தத்தில் மறைந்து போயிற்று. மேலே, மரக்கிளைகளில் பக்ஷிகள், ஆரவாரித்தன. உலக அலுப்பே, குழறி முனகுவது போன்று, அவை இடைவிடாது சிறிது நேரம் கத்தின. அவைகளின் இரைச்சல் திடீரென்று நிற்கும்போது, இடையிடையே சீர் இல்லாமல் பொத்தென்று கீழே விழும் முதிர்ந்த ஆலம் பழங்களின் சப்தம். எவ்வித உலக சப்தமும் பிரபஞ்ச பயங்கர நிசப்தத்தைத்தான் உணர்த்தியது. இவன் போய்க்கொண்டே இருந்தான். கண்ணுக்கெட்டிய தூரத்தில் கானல் சலனத் தோற்றம். வெகு தூரத்திலிருந்து ”ஹோ-ஹொ-ஹொ-ஹொய்-” என்று கேட்டது, மானிடக் குரல். பின்னிருந்து இடைப் பையன்களின் அர்த்தமற்ற கானம். எங்கும் நிசப்தம்தான். அமைதி. இவனுக்கு, மனத்திற்கு இசையாத சாந்தம்.

உலகம் அலுப்பு மயம், களைப்பு மயம். இவன் நடந்துகொண்டுதான் இருந்தான். சூரியன் அன்று வெகு உக்கிரம். ஒருவகை மனப்பளுவும் வருத்தமும் இவன் மனத்தில் குடிகொண்டன. உலகமும் அவற்றைத்தான் தோற்றுவித்தது. முதல் நாள் இரவிலிருந்து கொண்ட மன இருள், இரவில் இருளில் சிறிது ஆறுதல் கொண்டது போன்று இவனை அவ்வளவு துன்புறுத்தவில்லை. பகல் ஒளியிலும் மனத்திருள் மறையாதது இவனால் சகிக்க முடியவில்லை. பொறுக்க முடியவில்லை. உலக இரைச்சலும் பயங்கரத் தனித் தோற்றத்தையே கொடுத்தது. வீட்டினுள் இருக்க முடியாமல், போவதின் பயன் தெரியாமல் வெளி நடந்தவன் இவன்.

இவன் நடந்துகொண்டே சென்றான். சிறிது நேரத்திற்கு முன்பு, வெகு தூரத்தில் கண்ட ஒரு தனி மரம். இவனுக்கு எல்லையைக் கொடுத்தது போன்று; அதனிடம் வந்ததும் அதன் கீழ் சிறிது உட்கார்ந்தான். கையில் கொண்டுவந்த ஒரு குப்பியிலிருந்ததைக் கொஞ்சம் குடித்தான். மேலே கிளையில் உட்கார்ந்திருந்த ஒரு காகம், இவனைச் சந்தேகமாய்த் தலை சாய்த்துப் பார்த்தது. உடனே அது மிக விகாரமாகக் கத்திக்கொண்டு பறந்துவிட்டது. இவன் தலைப்பளு கொஞ்சம் குறையலுற்றது. முகத்தில் இரத்தமேறியது. உலகத்தின் பேரிரைச்சலும் காதில் சப்தித்தது. மிகுந்த உற்சாகம் கொண்டான். நடக்க ஆரம்பித்தான். பின்னிருந்து சந்தேகமான ”எங்கே – எங்கு” கேள்விகள்.
இல்லை இல்லை, கொஞ்ச தூரம், இருட்டுமளவும்” என்று முனகிக்கொண்டே நடந்தான். சூரியன் மேற்கே கீழடி போக வாரம்பித்தான். மெதுவாகச் சிறிது கீழ் சென்றதும், இவன் நிழல் வெகுவாக முன் நீண்டது. காற்று மெல்லென வீச ஆரம்பித்தது. இரண்டொருவர் ஆடு மாடுகளை வீட்டுக்கு ஓட்டிக்கொண்டு போயினர். பக்ஷிகள் பகல் வேலை முடிவையும், இரவு ஓய்வு சந்தோஷத்தையும் பாடித் தெரிவித்தன. மரக்கிளையில் இருந்த பக்ஷிக்குக் கும்பலில் சில அங்குமிங்கும் பறந்து திரும்பி வந்து உட்கார்ந்தன. வேலையினால் அலுப்பு, களைப்பு, வேலை முடியும் எண்ணம், ஓய்வில் சந்தோஷம்.

தனிப்பட்ட, கடைசி ஆடும் இடையனால் திரும்ப வீடு ஓட்டிச் செல்லப்பட்டது. அலுப்பு மிகுதியில் காரணமற்றே, இடையன், அதை நையப் புடைத்து நடத்திக்கொண்டு போனான்.

சிறிது சென்று, இவன் நின்றுகொண்ட மறுமுறை குப்பியை வீசி எறிந்தான். பக்கத்துச் சப்பாத்திப் புதரில் அது விழுந்தது. இரண்டொரு வண்ணாத்திப் பூச்சிகளும், ஈசல்களும், மேலே பறந்தன. அவன் நடக்க ஆரம்பித்தான். அவன் சாலையை அடைந்தான். அவன் முகம் மிகச் சிவந்தது. தலை வெகுவாகச் சுழன்றது. மனத்தில் அர்த்தமில்லாத ஆனந்தம் தோன்றி மறைந்தது. அந்தி மங்கல் வெளிச்சமும் மங்கலுற்றது.

கடைசிக் காகமும் பயந்து, தான் தனிப்பட்டதை உணர்ந்து, கரைந்துகொண்டே பறந்து விட்டது. முதல் நக்ஷத்திரம், சிறு ஒளியொன்று தென்பட்டது. கடைசியாகத் தன் இருப்பை நிரூபிப்பது போல இருள் கொஞ்சம் கொஞ்சமாக உலகை மீட்ட ஆரம்பித்தது. அன்று பகலும், பயமின்றி நேரேவும் இரவிற்காக ஒதுங்கி, மிக வருத்தமாக வழிவிட்டுச் சென்றது.

மரங்களிடையே சலசலப்புச் சப்தம் நின்றது – வருத்தமாகத்தான் – ஜன சஞ்சாரம் குறைந்துவிட்டது. பக்கத்துப் பாழடைந்த மண்டபத்திலிருந்து ஆந்தை ஒன்று அலறியது. எதிரொலித்தும் குறைவுபட்டும், அதன் அலறல் நிசப்தமாகாது போன்று, வெகு தூரத்திலிருந்து, மற்றொன்று பிரதி தொனித்தது. எங்கும் வாய்விட்டு அலறும் வருத்தம் சூழ்ந்தது.

அவன் போய்க்கொண்டுதான் இருந்தான். ஆனால் அவன் நடையில் நிதானம் இல்லை. அவன் தள்ளாட ஆரம்பித்தான். சிறிது நிற்பான். திரும்பிப் பார்ப்பான். நடப்பான் சாலை வழியாகவே. அலுப்பு, களைப்பு வருத்தம் அவனால் தாங்க முடியவில்லை. தலையோ சுழன்று சுழன்று தனியே போவதாகத் தோன்றியது.

கொஞ்சம் முன்னால் ஐந்நூறு பேர் போய்க் கொண்டிருப்பதை இவன் இருட்டில் கண்டான். நின்று நின்றும், நடந்துகொண்டும் அர்த்தமற்றுக் கத்திக்கொண்டும் அவர்கள் போனார்கள். பின்னால் இவன் திரும்பிப் பார்த்தான். இரண்டு பிரகாசமான கண்கள் இவனைப் பார்ப்பதாகத் தோன்றியது.

இரவு நன்கு இருண்டது. நக்ஷத்திரங்களில் சிறு ஒளியும் பிரகாசமடைந்து தோன்றியது. இவன் நடந்தான். அவர்களைக் கடந்தபோது, இவன் மிகத் தள்ளாட ஆரம்பித்தான். ஒரு தரம் நிதானிக்க முயன்றும் பயனின்றிக் கீழே விழுந்தான். அவர்கள் இவனைச் சூழ்ந்துகொண்டனர். சாலை ஓரத்தில் இவனைக் கொண்டு கிடத்தினர். நிமிர்த்தி உட்கார வைத்துப் பிடித்துக் கொண்டனர். இவன் கண்கள் சுழன்று சுழன்று, ஒரு பெரிய ஜனக்கூட்டத்தைத்தான் கண்டன. ஏதோ உளறினான். சிறிது சென்று ”அ, ஆ அப்படி இல்லை. இப்படித்தான் போக வேண்டும். அது வந்த வழி, வர வழி, ரோஜா?” என்றவன் கைகளைத் தூக்கி ஏதோ காட்ட முயன்றவன் முடியாமல் கீழே விட்டான். வாய்விட்டு அசட்டு, அலக்ஷிய சிரிப்புச் சிரித்தான். எதை முடியாதென்று உணர்ந்தானோ! அவன் கண்கள் மூடின.

சுற்றி நிற்பவர்களின் மூளையும் சுழன்று கொண்டிருந்தது. ஆனால் அது அவர்களுடைய பழக்கமான சுழலல். அவனை அவர்கள் தெரிந்துகொண்டனர். ”அவ்வூர் அக்கிரகாரத்தில் இருக்கும், பட்டினம் ஐயா அவன்.” அவனைச் சூழ்ந்து நின்று ஒன்றும் புரியாமல் திகைத்தனர். பின்னிருந்து ஒரு வெளிச்சம் தெரிந்தது. சிறிது சென்று மோட்டார் சப்தமும் கேட்டது. அந்த மோட்டார் இவர்களை மெதுவாகக் கடக்கும்போது, அதன் உள்ளிருந்தும ”என்ன?” என்ற கேள்வி வந்தது.

”ஜயா நிதானம் தவறி இருக்காரு” என்று எல்லாருடைய ஒருமித்த குரல் கிளம்பியது. மோட்டார் சென்றுவிட்டது. சிறிது தூரம் வரையில் இவர்கள் பார்வையையும் கூட இழுத்துக்கொண்டுதான் சென்றது. இவர்கள் திரும்பியதும் ”ஐயாவுக்கு மூச்சுப் பேச்சில்லை” என்றான் ஒருவன்.

ஊருக்குள் ஒரு கார் வந்து நின்றது, அந்நேரத்தில் ஏன், என்று அவ்வூரார்களுக்குப் புரியவில்லை. அவ்வூரார் ஒருவனை விசாரித்து இவன் வீட்டடியில் நிறுத்தப்பட்டது. வீடு பூட்டப்பட்டுக் கிடந்தது. அவ்வூர் பெரிய வீட்டுக்கு, வந்தவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். ரோஜா, கருப்பு உடை அணிந்து மிக அழகாகவிருந்தாள். அவளோடு வந்தவன் ஒழுங்காக ஆடை உடுத்தி உன்னதமாகத் தோன்றினான்.

”அந்த வீட்டுக்காரர் எங்கே?” என்றாள் ரோஜா.

”வெளியில் போயிருக்கலாம் – மத்தியானம் முதல் காணவில்லை. எங்கேயாவது பிரயாணம் போயிருக்கலாம் -” என்றார் அப் பெரிய வீட்டுக்காரர்.

”உங்களுக்குத் தெரியாதா?”

”அவனுக்கே, இப்போது அவன் செய்கிறது தெரிகிறதில்லை.”

”இரண்டு மூன்று மாதமாக அவன் ஏதோ ஒரு மாதிரியாக இருக்கிறான்” என்றார் அப் பெரிய வீட்டுக்காரர்.

”ஒரு மாதிரியாக! ஏன்?” என்று மெதுவாகக் கேட்டாள் ரோஜா. தன்னைத் தானே கேட்டுக் கொள்வதுபோல்தான் இருந்தது. ”ஏனோ” என்று அவள் திகைக்கச் சொன்னார் வீட்டுக்காரர். ரோஜாவைப் பார்த்து அவளுடன் வந்தவர் ”நாம் இப்போது என்ன செய்வது” என்று கேட்டார்.

”சிறிது இருந்து பார்க்கலாம்” என்றாள்.

”பிறகு?”

”பிறகு” என்றாள் ரோஜா.

சிறிது மெளனமாயிருந்து,

”என் பிரியமான ரோஜா, நீ செய்வது பிடிக்கவில்லை. பள்ளித் தோழன்தான். சிநேகிதத்திற்கும் ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு எல்லை உண்டு. என்னவோ, எனக்கு இப்போது உன் காரியமும், அதனால் அவனையும் பிடிக்கவில்லை” என்றான் ரோஜாவுடன் வந்தவன்.

”ஆமாம். எவ்வகைக்கும் ஒவ்வொரு சமயத்தில் எல்லையுண்டு. சரிதான். ஆனால் சில இல்லை – இல்லை அவன் எனக்கு எழுதிய கடிதத்தை உன்னிடம் காட்டினேனோ? அவனுக்கு என் மணம் நடந்தது தெரியாது. தெரிந்து இருக்கலாம். அவனை விட என் கலியாணத்தில் ஆனந்தமடைகிறவர் வேறு ஒருவருமே இல்லை. ‘உன்னை நான் என் கிராமத்தில் காண நினைக்கிறேன்’ என்று எழுதினது சாதாரண மேற்போக்கு உணர்ச்சியினால் அல்ல.”

”சரி, அவன் இங்கேதான் இருக்கிறானா? ஏன் இங்கே இருக்கிறான்? வேலைக்குப் போகவில்லையா?”

”இனிமேல் போகலாம்” என்றாள் ரோஜா.

இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போது அவன் வீடு திறக்கப்பட்டது. அவனைத் தூக்கிக் கொண்டு வந்தவர்கள் உள்ளே கொண்டு போய் அவனைக் கிடத்தினர். இவ்விருவரும் அவன் வீட்டிற்குச் சென்றனர்.

பிரகாசமில்லாத வெளிச்சத்தில் அவனை, மூடின கண்களோடு, பார்த்தாள் ரோஜா. அவள் இது மாதிரி அவனைப் பார்த்தது இதுதான் முதல் தரம். புது மாதிரியே அவன் தோன்றினான். ஒவ்வொரு தடவையும் இவளுக்கு ஒவ்வொரு மாதிரியாகவும் புது மாதிரியாகவும் தோன்றுவான். ஒரே மாதிரியாகத் தோன்றினால் அல்லவோ ஒருக்கால் அவனிடம் ஒருவகை எண்ணம் கொள்ள முடிந்திருக்கும்.

இவ்வகையிலே அவனைப் பார்த்தது, இதுதான் முதல் தரம். முதல் தரத்தின் புதுவகையும், ஒரு மாதிரியாகத்தான் அவளுக்குத் தோன்றியது.

அவன் இருதயம் சிறிது துடித்துக்கொண்டிருந்தது. அவன் வாயினின்றும் மது வாசனை மிக வீசியது. ரோஜா அருகில் நின்றிருந்த அவ்வூர் வாசி ஒருவரைப் பார்த்து ”இவர் குடிப்பதுண்டா” என்று கேட்டாள். ”இவனாவது குடிப்பதாவது! நான் நேருக்கு நேராகக் கண்டாலும், நம்ப மாட்டேன்” என்றார் அவர். ரோஜா கண் மூடிப் படுத்திருந்த தன் சிநேகிதனைச் சிறிது நேரம் பார்த்துக் கொண்டு மெளமனாக நின்றாள்.

”தெரிந்தது. நான் பாராவிட்டாலும் நம்புகிறேன். ஆம், வேறு வழி உனக்கு இல்லை போலும், நண்பா; உன்னை நான் வேறு விதத்திலன்றோ பார்ப்பதாக எண்ணி வந்தேன். ஏன், இப்படிப் பார்ப்பதும் எனக்கு ஆச்சரியமாக இல்லை, அதிசயமாக இல்லை. ஆனால் தாங்க முடியாத வருத்தமாக இருக்கிறதே நண்¡? ஏன் இவ்வகையானாய் என்று எனக்குத் தெரிந்தால், ஏன்-ஏன் இப்படி” என்று மிக உணர்ச்சி பெற்றுச் சொன்ன வார்த்தை திடீரென்று வெளிப்பட்டு நின்றது போன்று நின்றன. அவள் கணவன், அவன் முகத்தையே பார்த்து நின்றிருந்தான். மூடின கண்களோடு இருப்பினும், அவன் அகத் தோற்றம் உன்னதமாகவே தோன்றியது.

ரோஜா தன் கணவனைப் பார்த்தாள். அவனால் இவளை நேரே நோக்க முடியவில்லை. குனிந்தவாறே நின்றிருந்தாள்.

‘அவனைத் திறந்த கண்களோடு பார்க்கக்கூடாது. அவன் பேசும் போதும் முடியாது. ஏன், அவன் ஒருவருக்கும் எட்டாத தூரத்தின், அதிசயம், ஆனந்தம், பயம், அவனையன்றோ, அவனுக்கு எட்டாதது எது? எப்படித் தோன்றுகிறது என்று கேட்க வேண்டும்” என்று தன் கணவனைப் பார்த்துச் சொன்னாள் ரோஜா.

ரோஜா அவன் முகத்தை ஈரத்துணி கொண்டு துடைத்தாள். அவன் கண்கள் சிறிது திறந்தன. எதிரில் இருப்பது நன்றாக விளங்கவில்லை. எட்டியவைகள் கலங்கிய தோற்றம் கொடுத்தன. மனசில் ஒரு பெரிய பளு. தலை சுழலல்.

இந்நிலையில், தன் முன்னால் ஒரு கருப்புத் தோற்றம். கொஞ்சம் கொஞ்சமாக அவன் எண்ணங்கள் கூடலாயின, வேறு வகையில் நிச்சயம் கொள்ளும் முன்பே. ரோஜா தன் எதிரில் நிற்பதை உணர்ந்தான். நம்ப முடியாமல் இருக்கவில்லை. அவன் முதலில் பேசின பேச்சுகள், முணுமுணுப்பில் கேட்காமலே போயின. பிறகு ‘ரோஜா நீதானே. நீ கருப்பில் எவ்வளவு அழகாக உருக்கொள்ளுகிறாய். ஆனால், எதில் நீ நன்றாக இருக்கமாட்டாய்! அதோ அவர்” என்றான்.

”அவர் என் கணவர். என் கலியாணத்தைப் பற்றி உனக்குத் தெரிவிக்கவில்லை” என்றாள் ரோஜா.

”ஏன்-?”

”ஏன்-ஏன் இப்படி இருக்கிறாய்?”

”எனக்குத் தெரியும் ரோஜா-” வார்த்தைகள் சிறிது தடைப்பட்டு மறுபடியும் அவன் பேச ஆரம்பித்தான். ”ரோஜா -” என்று ஆரம்பித்து முடித்துவிட்டான். கண்களை மூடிக் கொண்டான். சிறிது சென்று திறந்தவை இருவரையும் பார்த்தன. ஆனந்தம் அடைந்து பிரகாசமாகத் தோன்றின. திரும்ப மூடிக் கொண்டன.

இன்பமான இளம் வெய்யிலும், உடனே அது மேக மறைப்புண்டு, சிறு மழைத்துளிகளும் போன்று, அவன் மூடிய கண்களினின்றும் கண்ணீர் சொட்ட ஆரம்பித்தது. மறுதரம் மேக மறைப்பு நீங்கி மழைத் துளிகளிலும் வெய்யிலைக் காண நிற்கும் சிறுவர்களே போன்று, இவ்விருவரும் அவன் கண் திறப்பை ஆவலோடு நோக்கி நின்றிருந்தனர். அவன் கண்கள் திறக்கவில்லை. ஆகாயத்தில் வெகு தூரத்தில், இராப் பறக்கும் பறவைக் கூட்டத்திலிருந்து ”கோக்-கோக் கோக்-” என்ற சப்தம் கேட்டது. அவன் விழிப்பில்லாத தூக்கம் ஆரம்பித்தது.

தன் முழு ஒளி பெற்ற கண்களோடு, ரோஜா தன் கணவனைப் பார்த்தாள், அவன் கண்கள் சிறிது ஈரமுற்று இருப்பதைக் கண்டாள். ஆனால், ரோஜா முகத்தில் மிகுந்த சோபை குடிகொண்டிருந்தது அப்போது.

இருவரும் அவ் வீட்டை விட்டு வெளியேறினர். அவ்வூரிலேயே அவ்விரவைக் கழித்தனர். சிறிது இருட்டு இருக்கும்போதே ஊரை விட்டகன்றனர். அந்த ஊர் வாய்க்காலைத் தாண்டுமட்டும் இருவரும் பேசவில்லை. மோட்டார் வாய்க்காலைத் தாண்டும் போது முதல் காகம் கத்தியது. அவ்வூர் பள்ளத்தெருச் சேவலும் கூவியது. கிழக்கு வெளுக்கலுற்றது. அவ்வோடையைத் தாண்டியதும் ரோஜா போய்க் கொண்டிருந்த காரிலிருந்து திரும்பி அவ்வூரை நோக்கினாள். களங்கமில்லாமல் நிசப்தமாக ஓடிய அவ்வோடை நீர் கலங்கித் தத்தளித்துச் சேறால் கலக்கப்பட்டிருந்தது. அவ்வூர் கோயில் மங்கல வெளிச்சத்தில் மறைவு நீங்கி வெளிக்கோட்டுருவம் கொள்ள ஆரம்பித்தது.

எதிரில் மரங்கள் வெளிச்சத் திரையின் முன்பு, கருப்புருவம் கொண்டு தெளிவாயின. வெளிச்சம் கண்ட வெகு தூரத்தை உன்னிப்பாய்க் கவனித்தால் அன்று மிகச் சோதிகொண்டது போன்ற காலைச் சூரியன் உதயமாவதைக் காணக் கண் கூசியது. மேலே அண்ணாந்து பார்க்கும்போதும் ஒரே வெளிச்சத் தோற்றமேயன்றி தனித் தோற்றம் ஒன்றும் காணக் கூடவில்லை. போகப்போக ”ஏதோ” காணப்படும் என்பது போன்ற உணர்ச்சியுடன் ரோஜா சாந்தமானாள். ஆனால், போவதின் எல்லையை மதிக்க முடியாதது கண்டு திகைத்துப் பெருமூச்செறிவது போன்று ஒருதரம் அவள் மார்பு விம்மி நின்றது.

”அவன்தானே, நீஅடிக்கடி சொல்லும் -” என்றான் மோட்டாரை ஓட்டிக்கொண்டிருந்த அவள் கணவன். பதிலில்லை.

”ஆமாம், நாம் ஊருக்குத்தானே” என்றாள் ரோஜா.

(‘அழியாச்சுடர்’ கதைத் தொகுதியிலிருந்து: ஸ்டார் பிரசுரம், சென்னை)



உறவு, பந்தம், பாசம்… – மெளனி


POSTED BY SSINGAMANI ⋅ JUNE 23, 2010 ⋅ COMMENTS OFF


இரவு முழுதும் கொண்ட பிரயாண அலுப்பிலும், அசதியிலும்கூட, ரயில் தன்னூர் நிலையத்தைக் காலையில் அடைந்தபோது, இவன் மனது ஒரு குதூகலம் கொண்டது. ஆனால் இறங்கியதும் ரயிலடியைப் பார்வைக் கொண்டபோது, மனது, குதூகலம் அதிர்ச்சியென மாறலாயிற்று. ஊர் தவறி இறங்கியதென எண்ண முடியாதபடி எதிரே தன்னூர்ப் பெயர்ப்பலகை தன்னை வெறித்து நிற்பதைக் கண்டான். சமீபத்தில் பெரிய அளவில் நிர்மாணித்துக் கட்டப்பட்டிருந்ததால், தான் முன்பு பார்த்ததான எண்ணமே கொள்ள முடியாது தோன்றியதை ஜடமென வெகு நேரம் அவன் கண்டு நிற்கவில்லை. புறக்காட்சியில் மனது ஒருமையில் அனுபவம் கொள்ள, அனுமானம் கொண்டு, திகைப்பு நீங்கச் சிறிதுநேரம் ஆகியது போலும்.


கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகவே, ஊரை விட்டகன்றவன்; வெளியூர் வாசம் செய்து, வசதியில் திரும்பியவன். வசீகரமெனத் தோன்றிய, தன்னூர்ப் பாலிய கால வாழ்க்கையை நினைத்து, தன்னுடைய பிற்கால வாழ்க்கையையும் அங்கே கழிக்கத் திரும்பியவன். வீட்டை அடையும் வழிநெடுக ஒரு புதிய ஊர்ப்பிரவேசம் எனத்தான் அடிக்கடி தோன்ற இருந்தது. பழைய இடங்களில் புது வீடுகள் தோற்றமும், அங்காங்கே வெற்றிடங்களில் சிறுசிறு குடிசைகளும், மேலும் ஒரு பெரிய சினிமாக் கொட்டகை, அநேக ஹோட்டல்கள், எல்லாம் முன்பே இவனுக்கு அறிமுகமானதென, மெளனமாக வரவேற்க நின்றிருந்தன போலும்…தன் வீட்டை அடைந்தான். வீட்டின் முன் அறை ஒன்றை மட்டும் தன் உபயோகத்திற்கென வைத்திருந்து, ஏனைய பாகங்களை வாடகைக்கு விட்டிருந்தான்.


வெகு நாட்களாகப் பூட்டப்பட்டிருந்த அறையைச் சுத்தம் செய்வித்து, குடியிருக்க வசதி செய்து, காலைக் காரியங்களை முடித்துக் கொண்டிருக்கும்போது, இவன் வருகையை அறிந்த இரண்டு நண்பர்கள் இவனைப் பார்க்க வந்தனர். திண்ணையில் அவர்களோடு அமர்ந்து கொண்டு தெருவையும் கவனித்தபடிப் பேசிக்கொண்டிருந்தான். தான் இல்லாத கால, ஊர் நடப்புகள் என அநேக விஷயங்களை அவர்கள் சொல்லியும் இவன் கேட்டும் தெரிந்து கொண்டான். தன் தெருவே மாறியிருப்பதையும், ஜன நடமாட்டம் பெருகி இருப்பதையும் கண்டு கொண்டிருந்தான். மனது ஏதோ ஒருவகையில் சஞ்சலம் அடைந்து கொண்டிருந்தது. இரண்டொரு நாள் வாழ்க்கையில், பழக்கத்தில், எல்லாம் சரியாகி விடும் என்ற நினைப்பில் பேசிக்கொண்டிருந்தான். முக்கியமாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயங்களை மறந்தும், ஏதேதோ அது இதை விசாரித்துக் கொண்டிருந்தான். ஒரு நண்பனைப் பார்த்து, ‘…அந்தக் கிழவி செளக்கியமாக இருக்கிறாளா ? ‘ என்று கேட்டபோது அவர்கள் சிரிக்கலாயினர். எதிரே தெருவில் இருபது வயது மதிக்கத்தக்க ஒரு பெண், இடுப்பில் ஒரு குழந்தையுடன் சென்று கொண்டிருந்தாள். கையைப் பிடித்து நடத்தி அழைத்துப்போன மற்றொரு குழந்தையுடன், தன் வயிற்றிலும் ஒரு சிசுவைச் சுமந்தாளென ஒரு பூரண கர்ப்பிணி என அவள் தோன்றினாள்.


‘…அதோ போகிறாள் பார் நீ கேட்ட கிழவி… ‘ என்று இவன் நண்பன் மேலும் சிரித்தான். இவன் திடுக்கிட்டு என்னவென்றதற்கு ‘நீ கேட்ட பாட்டியின் பேத்தி அவள் இறக்கும்போது இவள் பிறக்கவில்லை என நினைக்கிறேன்… ‘ என்றான். மேலும் ‘நீ ஊரைவிட்டுச் சென்று எவ்வளவு நாளாகிறது, ஏதோ மறந்து போனதுபோல விசாரிக்கிறாயே. வந்த அசதி போலும் ‘ என்று சொன்னான். பிறகு வந்து பார்ப்பதாக அவர்கள் விடைபெற்றுச் சென்றனர்.


சாப்பிட்டு, களைப்பு தீர உறங்கி, இவன் எழும்போது, மாலை நான்கு மணிக்கு மேலாகிவிட்டது. காபி சாப்பிட்டு வெளியே சென்று சுற்றி வரலாமென வீட்டை விட்டுப் புறப்பட்டான். கடைவீதியாகச் சென்று மற்றுமொரு வீதியையும் கடந்து மேற்குச் சந்நிதியை அடையலாம். அதையும் கடந்து கோயில் குறுக்காக ரயிலடியை அடைந்து, சிறிது உட்கார்ந்து, வீடு �

��ிரும்பினால், சாப்பிட்டுப் படுக்க நேரம் ஆகிவிடும் என்று எண்ணிக் கிளம்பினான். கடைவீதிக் கூட்டத்தைச் சாவதானமாக நடந்து கடந்துவிட்டான். மற்றொரு வீதியைக் கடக்கும்போது ஜன நடமாட்டம் குறைந்து விட்டது தெரிந்தது. இவன் மனதில் பழைய கால ஞாபகங்கள் சிறிது சிறிதாகத் தோன்றலாயின. சந்நிதித் தெருவை அடைந்து, ஒரு வீட்டைக் கடக்கும் போது, இவன் மனதில் ஒரு பரபரப்புக் கண்டது. அவ்வீட்டிற்கு இவன் அநேகதரம் தன்னுடைய மிக நெருங்கிய நண்பனுடன் சென்று இருக்கிறான். அவனை ஊரில் சந்திக்கும் ஆர்வமும், அவனோடு சேர்ந்து இப்போது வாழ்க்கை கொள்ளலாம் என்ற எண்ணமும்தான் இவன் ஊர் திரும்ப ஒருவிதக் காரணம். காலையில் அவனைக் காணாததும், ஏனையோரிடம் அவனைப்பற்றி விசாரிக்காததும், வெகு உணர்ச்சியில் தன் தவறென இவனுக்குத் தோன்றியது…


அவ்வூர்க் கோவில் மிகப்பெரியது. சரித்திரப் பிரசித்தி பெற்றது. மகோன்னத தசையில் ஆண்ட சோழ மன்னன் ஒருவனால், வெகு காலம் முன்பு கட்டப்பட்டது.


ஒரு காலத்தில் அவ்வூரே அந்தக் கோவிலைப் பொருத்து நிர்மாணம் ஆனது. ஆனால் இப்போது அகலமான தேரோடும் வீதிகளையும், சந்நிதிகளையும், தெற்கே ஒதுப்புறமாகப் பாழ்படும் ஒரு அமைதியில் விட்டு, தற்போதைய நகரமென்பது வடக்கே வெகுதூரம் வியாபகம் கொண்டிருந்தது. மேற்கு வீதிக்கப்பால் மேற்கே நெடுந்தூரம் அத்துவான வெளியென, தொடுவானம் வரையில் கண்டவெளி வீதியை மறைக்க ஒன்றுமில்லை. மேற்கே சூரியன் மறைய இருந்தான். மறையும் சூரிய ஒளி சந்நிதித் தெரு முழுதும் படர்ந்து கோபுரவாயிலையும் கடந்து கொடிமரம் வரையில் சென்று தெரிந்தது. மாலையில் கோவிலுக்குச் செல்லுபவர்கள் நிழல்கள், அவர்களை முந்திக் கொண்டு கர்ப்பக் கிருஹ இருளில் மறைந்து ஒன்றாவது, ஒரு உன்னதக் காட்சியென மனதில் கொள்ள இருக்கும்.


மேற்கு கோபுரத்தைத் தாண்டி உட்சென்றவன், பக்கத்தில் இருந்த ஒரு சிறு மண்டபத்தில் உட்கார்ந்தான். ஒருபுறம் கோபுரமும், மறுபுறம் ஈசுவர சந்நிதியும் தெரியும். முன்னும் பின்னும், இடிந்துகொண்டிருக்கும் பிரும்மாண்ட மதில்சுவர்களின் பாழ்படும் தோற்றம். கர்ப்பக்கிருஹம் இப்போதே இருள் கொண்டுவிட்டது. சர விளக்குகள் ஏற்றப்பட்டுத் தெரிந்தன. அந்த ஆழ்ந்த மெளன இருள் ஒளி அமைதியில் அருஉரு என எட்டிய லிங்கம் சோபையில் புலனாகித் தெரிந்தது. மதில்சுவர் இடிபாட்டிற்கிடையில் முளைத்து இருக்கும் புற்பூண்டுகளை, காலம் தவறி மேய்ந்து கொண்டிருந்தன, இரண்டொரு ஆடுமாடுகள்; மற்றும் சில, மூடிய கண்களுடன் அசைபோட்டுப் படுத்துக் கிடந்தன. ஒரு அமானுஷ்ய மயான வெளி அமைதி, அறிவிற்கப்பால் உணரும் வகை, ஒரு சங்கேத மெளனப் புதிரென, புறக்காட்சித் தோற்றம் கொடுத்தது.


எதிரே, ஒளிபடர்ந்த தரையில் நீண்டு வளர்ந்து வரும் நிழல்கள், ஒன்றுகூடிப் பிரிந்து சலிக்கும் ஒரு விநோதக் காட்சியில், உட்கார்ந்திருந்த இவன் லயித்திருந்தான் போலும். யாரோ சிலர் கோவிலுள் நுழைகிறார்கள் போலும். நான்கைந்து பெண்கள் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவள், சிறிது தூரத்திலிருந்தே இவனைக் கவனித்து வந்ததில், இவனைத் தெரிந்து கொண்டவள் போன்று, இவனைக் கடக்கும்போது, பார்த்து, ஒரு புன்சிரிப்பில் நின்றாள். இவன் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என்பதை உடன் உணர்ந்து, நடந்து, ஏனையோருடன் கூடிக் கோவிலுக்குள் சென்றாள். அவள் தோற்றம், வசீகரம், புன்னகை எல்லாம் கொஞ்சம் தாமதித்தே இவன் மனது கண்டது போன்று அவளைத் தெரிந்துகொள்ள, அவள் போவதையே கவனித்திருந்தான். அவள் ஒரு தரம் திரும்பி இவனைப் பார்த்தாள். மாலை ஒளி அவள் முகத்தில் விழ அவள் வெகு வசீகரமாகத் தோன்றினாள். அவளை யாரென இவன் தெரிந்துகொள்ள முடியவில்லை. கோவிலுள் சென்று அவர்கள் மறைந்�

��ு விட்டனர். ஞாபகம் காண, மறதியைத் தேடுவதில் ஜடமென இவன் அவ்விடத்திலேயே வீற்றிருந்தான். எவ்வளவு நேரமென்பது இவனுக்கு நிதானம் இல்லை. உலகு இருள் கொண்டுவிட்டது. உள்ளே சரவிளக்குகள் வெகு சோபையில் பிரகாசித்துக் கொண்டிருந்தன. திடாரென மணி ஓசை அதிரக் கேட்டது. கோயில் மாலை பூஜை ஆரம்பமாகியது……


அவர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தனர். எல்லோருமே நாற்பது வயதைக் கடந்தவர்கள். இவனைக் கடக்கும்போது, அவள் இவனுக்கு வெகு சமீபமாக வந்து நின்று ‘…..யோஜனைகள் இன்னும் முடியவில்லையா…கோவிலுள்ளாவது வந்து இருக்கலாமே….. ‘ என்று சிரித்துக் கொண்டே கேட்டாள். இவனுக்கு அவளைத் தெரியவில்லை. மேலும் அவனுக்கு சஞ்சலம் கொடுக்காவகைக்கு எண்ணியவள் போன்று ‘….ஏன் தனியாக ? உங்கள் நண்பர் கூட வரவில்லையா ? ‘ என்றதும், மனதில் ஒரு ஒளி பாய்ந்ததென அவள் யாரெனக் கண்டு கொண்டான். ‘…என்ன கெளரி. உன் மாதிரித் தோன்றியும் நீயென நினைத்துப் பெண்களோடு பேச முடிகிறதா ?…… ‘ என்று சொன்னவன், ஏனையவர்கள் எட்டிக் காத்து நின்று இருப்பதைப் பார்த்து, எழுந்து அவளுடன் நடக்கலானான். ‘…..அங்கே அந்த வீட்டிலேதானே….நான் இன்று காலையில்தான் வந்தேன்….சாப்பிட்டு இரவு வருகிறேன். உன்னிடம் சில விஷயங்கள் பேசித் தெரிந்து கொள்ளவேண்டும்……. ‘ என்றவன் கோபுர வாயிலைத் தாண்டி அவர்களைப் பிரிந்து சென்றான். அவன் பேச்சுகளுக்குக் கெளரி பதில் பேசவில்லை. இருவரும் தத்தம் பழைய வாழ்க்கைச் சிந்தனைகளில் சென்று கொண்டிருந்தனர்.


இவன் வீட்டிற்குப் போகும் வழியில் இரண்டொரு சிநேகிதர்களைச் சந்தித்தான், வெகு அவசரத்திலும்–காலையில் மறந்தது எனத் தோன்றியதை– தன்னுடைய பாலிய நண்பனைப் பற்றி விஜாரித்தான். அவர்கள் சொன்னது இவனுக்கு ஆச்சரியம் கொடுக்க இருந்தது. சில வருஷங்களுக்கு முன்னால் அவன் சொத்துக்களை எல்லாம் விற்றுவிட்டு ஊரை விட்டுப்போய் விட்டதாயும் எக்காரணம் என ஒருவருக்கும் தெரியாதெனவும் அவர்கள் சொன்னார்கள்.


சாப்பிட்டு, சீக்கிரமாகவே கெளரி வீட்டிற்குச் செல்லுவதில் தன் மனது ஆர்வம் கொள்ளுகிறது என்பதை, இவன் கண்டுகொள்ளாமலில்லை. பழைய நினைவுகள் வசீகர மெனப்படுவதிலும், சோகமும் கலந்ததென இவனுக்குத் தோன்றியது. ஊரை விட்டோடிய தன் நண்பனுடன் வெகுகாலம் ஒன்றென வாழ்ந்தவள் கெளரி. எவ்வளவோ நாட்கள் அவனுடன் கூடிக் கொண்டு இவன், அவள் வீட்டிற்குப் போய்ப் பேசியிருக்கிறான். அவனை இப்போது பார்க்க முடியாதது வெகுவாக வருத்தமெனத் தோன்றுகிறது.


இவன் கெளரி இருந்த மேல சந்நிதித் தெருவை அடையும்போது, ஊர் அரவம் அடங்கி, அரை இருளில் தெருவே ஒரு தூக்கத்தில் ஆழ்ந்ததெனத் தோற்றம் கொடுத்தது. ஒரு காலத்தில் அத்தெரு முழுவதும் தேவதாஸிகள் இருந்தனர். வழி வழியாக வாழ்ந்து வந்த ஒவ்வொரு குடும்பப் பிரபல தாஸிகள், அவர்களின் இசை நாட்டிய கலைத் தேர்ச்சி, பழைய பெரிய மனிதர்களுடைய ஈடுபாடு…..என அநேக ஞாபகங்களைக் கொண்ட தெரு அது. ஒரு வசீகரம் பாழ்பட்டுக் கொண்டிருக்கும் காட்சியை அது இப்போது அளித்துக் கொண்டிருந்தது. யார் யார் இப்போது அங்கு வசிக்கிறார்கள் என்பதற்கில்லை. பழைய வீடுகள் நடுநடுவே பெரிய புது வீடுகளும் இருந்தன. திடுக்கிட எங்கிருந்தோ கேட்ட ஒரு நாயின் குரைப்பு, இவனைக் கடந்து ஓடிக் கொண்டிருந்தது. ஒரு சுவான லக்ஷியம் எட்டிய இருளிலும் உருவாகியது போலும்……


கெளரி, தன் வீட்டுச் சிறு திண்ணைத் தூணில் சாய்ந்து நின்றிருந்தாள். பாலிய கால தன் வாழ்க்கை நினைவுகளை எதிர் மாடத்தில் தெரிந்த விளக்கொளியில் கண்டு நின்றாள் போலும். அவள் நிழல் பாதிக்குமேல் பக்கவாட்டில் கீழ் குறட்டுச் சுவரில் ஆடிக் கொண்டிருந்தது. வீட்டு வாயிலை அடைந்தவன் அவள் நிழலைத்தான் முதலில் கண்டான்போல�

�ம். ஒரு பயங்கரம், இனிமையைத் தூண்டி இழுக்கும் பிரமையை அடைந்தான். இவனை, இவன் வந்ததை, கெளரி கவனிக்கவில்லை. ‘….என்ன கெளரி….. ‘ ‘ என்ற சப்தம் கேட்டு இவனைப் பார்த்தாள். எதிரே தீபத்தின் சுடரொளியில் தன் நிருத்தியம் கலைவுபட்டதென, ஒரு இனிய கனவு கலைய இந்த நினைவா என்பதில் இவள் மனம் வருத்தமடைந்து….. ‘உள்ளே போகலாம் ‘ எனச் சொல்லி இவன் தொடர அவள் உட்சென்றாள். கூடத்தில் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. இவனை உட்காரச் சொல்லி அவளும் சிறிது தூரத்தில் உட்கார்ந்துகொண்டாள். வாயிற் கதவு திறந்தபடியே இருந்தது. சாத்தவில்லை. வாயிற் புரைக்கை விளக்கையும் உள்ளே எடுத்து வரவில்லை.


தன் நண்பனுடன், இவன் அநேகந்தரம் இந்த வீட்டிற்கு வந்து இருக்கிறான். கடந்த காலம் பிளவு கொண்டது எனத் தோன்றாவகைக்கு, நேற்றுக்கூடத்தான் இங்கு வந்ததான எண்ணம் கொடுக்கும் வகைக்கு, அவ்வீடு பழைய நிலைமையிலேயே தோன்ற இருந்தது. ஒரு வகையில், காலையிலிருந்து தன் மனம் கொண்ட சஞ்சலம் சிறிது குறைந்ததென இவனுக்கு தோன்றியது.


அநேக குடும்ப நினைவு ஞாபகங்களுக்கு வசீகரம் கொடுக்க நின்ற இந்த வீட்டில்தான் கெளரி, வழி வழியாக வந்த ஒரு கெளரவ தாஸி குடும்பத்தில் பிறந்து வளர்ந்து வந்தவள். தன் வழிக்குப் பின் வாரிசு இல்லாது தன் குடும்பமும் தன்னுடன் முடிவு பெறாது இருக்க, அதன் லக்ஷியத்தின் சாசுவதத்தை இப்போது வாழ்வில் கடைப்பிடிக்கிறாள் போலும். பெண்மையின் சக்தி தோன்ற, அவள், பார்ப்பவர்களுக்கு ஒரு இனிமை, கவர்ச்சி, ஒரு பயங்கரம் தோன்ற இருப்பவள் போல ஒருவரிடமும் ஒட்டாது, வெகு சகஜமாக யாரிடமும் பழகுபவள். சிற்சில சமயங்களில் அவள் நடையுடை பாவனைகளிலும் பேச்சிலும், ஒரு நிச்சயம் தோன்றா பிரமிப்புத் தெரிய இருக்கும்.


உட்கார்ந்து கொண்டவன் சிறிதுநேர மெளனத்திற்குப்பின் ‘…..இன்று காலையில்தான் வந்தேன்…. உன்னைக் கோவிலில் சந்தித்த பிறகு சிறிது நேரம் சென்று கேள்விப்பட்டேன்….. ‘ என்றான். அவள் குறுக்கிட்டு ‘…..என்ன….. ‘ என்றாள். ‘…..உன் சிநேகிதன்….. நம் நண்பன் ஊரை விட்டுப் போனதை உன்னை விட்டு. ‘ எனச்சொல்ல அவளும் சிரிக்கலானாள். ‘…….இல்லை நீங்கள் அதற்கு முன்பே ஊரைவிட்டுப் போய் விட்டார்கள்… ‘ அவள் பேசியது சிரிப்பது இவனுக்கு ஒரு வகையில் திருப்தி அளிப்பதாக இருந்தும் ஏன் என்பது புரியவில்லை.


இவன் ‘….உன்னைக் கேட்கலாம் என வந்தேன்… உன்னைவிட்டு ஊரைவிட்டுப்போன காரணம் ? வெகு வருத்தமாகத் தோன்றுகிறது. சொத்தை எல்லாம் விற்று ஊரை விட்டுப்போனது…. ‘ இவன் பேசுவது இவனுக்கே பொருத்தம் காணாது தட்டுத் தடுமாறியது போன்று இருந்தது. இவன் உதவிக்கென கெளரி பேச்சை ஆரம்பித்தாள். ‘…..எனக்கும் காரணம் தெரியவில்லை. அதைத் தெரிந்து கொள்ள நீங்கள் வந்த காரணமும் தெரியவில்லை…..எதை, எப்படி நான் சொல்லமுடிகிறது ?….. ‘ ‘ என்று சொல்லி அவள் வருத்தத்தை, இவன் தன் சிரிப்பில் கலந்து கொண்டாள். தன் வீட்டை ஒரு தரம் மெளனமாகச் சுற்றிப் பார்த்துவிட்டு இவனையும் பார்த்தாள். அவள் அலக்ஷிய பாவத்தை இவனால் ஏற்கமுடியாது. ‘என்ன இருந்தாலும்–தாஸி ‘ என இவன் மனம் எண்ணியது.


சிரித்துக்கொண்டே மேலும் கெளரி பேசலானாள். ‘பழைய கதையை, கனவெனக் கண்ணெதிரில் மடிவதைக் கண்டும், அதில் ஒரு வசீகரம் உங்களுக்குக் காணமுடிகிறது. நடந்தது எல்லாம் கண்முன் அர்த்தம் மாறி இசைவு கொள்ள முடியவில்லை ? நடப்பில் என்ன முழுமை காண இருக்கிறது ? நடந்ததின் சாயையும் நடக்கப்போவதின் நிச்சயமின்மையும் கலந்து புதிராகப்படவில்லையா ? ‘


‘என்ன கெளரி உன் வேதாந்தம், வேடிக்கையாக இருக்கிறதே…. ‘ என்றான்.


‘ஆமாம், நான் ஒரு தாஸிதானே….ஒரு பெண் தானே உங்களுக்கெல்லாம்…. ‘ என்றவள், ‘நீங்கள் சாய்ந்து கொண்டிருக்கும் தூணைக் கேட்டுப் பாருங்க�

�் சொல்லும்…உங்கள் நண்பர் போன காரணம்… ‘ இவன் நண்பன் இந்தத் தூணடியில்தான் உட்கார்ந்து பேசுவது இவனுக்கு ஞாபகம் வந்தது.


கொஞ்சம் கொஞ்சமாக அவள் முகமடையும் வசீகரம், அவள் வயதைக் குறைத்துக் கொண்டிருந்தது. அவள் பேச்சுகளும் பாவமும், பாலியக் குறுகுறுப்பை அளிப்பதாக இருந்தன.


‘உங்கள் நண்பரைப் பற்றித் தெரிந்துகொள்ள நீங்கள் இப்போது என்னிடம் வந்து கேட்பதில் உங்களைக்கண்டு கொள்ள முடியாதா ? காரணம், நம்பிக்கை கொடுக்காவிடின் என்ன பிரயோஜனம்……அவர் சொத்து சுதந்தரம் எல்லாம் விட்டுப் போய்விட்டார். ஏன், என்னையும் உங்களையும் கூட விட்டுவிட்டுச் சிலர் க்ஷேத்திராடனம் போய் இருக்கிறார் என்று சொல்லவில்லை ? அல்லது எங்கேயோ தாங்கள் க்ஷேத்திராடனத்தின்போது, அவரை, அவரைப் போன்ற ஒருவரைச் சாமியாராகக் கண்டு பேசுமுன் மறைந்த மர்ம மகிமையைக் கூறவில்லையா ? சில நாட்களில் நீங்கள் கேள்விப்படலாம்….அல்லது ஜீவன் முக்தனெனத் தோன்ற, தாடி வளர்த்துக் கொண்டு தமுக்குடன் எட்டிய அடிவானத்தையும், யாராவது தன்னுடன் பேச வருகிறார்களா என்ற ஆசையில் திருட்டுப் பின்னோட்டம் விட்டுக் கொண்டு, கடற்கரையில் அவரைக் கண்டதாகச் சொல்லவில்லையா ? கைகட்டி வாய்புதைத்து வரும் கதாசிரியர்களுக்கு ஞானோபதேசம் செய்ய–பூர்வாசிரமம்–கருகிய காதல்–சாதல் இவைகளைக்–கதாநாயகனாகத் தன்னைக் காணத் தமுக்கடிக்கவில்லை ? அப்படியாக நீங்கள் அவரைப் பார்த்துத் தெரிந்து கொண்டால் நானும் ஒரு வகையில் கதாநாயகியாயிருப்பேன் அல்லவா….. ? அவருக்குச் சாமி பூதத்தில் நம்பிக்கை இல்லை. நான் எப்போவாவது அவரைத் திடுக்கிடச் சாமி என்று அழைப்பது உண்டு. ரொம்பப் படித்த அறிவாளிதான். கூப்பிட்ட தோஷம் அவரே சாமியாராக ஓடிவிட்டார் போலும்…. ‘ என்னெதிரில் ஆக முடியவில்லையே என்ற வெட்கம் கொண்டு, நான் பார்க்க முடியாது, சாமியாராகத்தான் ஓடியிருக்க வேண்டும்…. ‘ எனச்சொல்லி ‘……நான் சொல்லுவது சரிதானே……. ‘ என்று சிரித்தாள்.


அவள் பேசுவது ஒரு சமயம் வேடிக்கையாகவும், பின்பு பரிகாசமாகவும் இவனுக்குத் தோன்றியது. மேலும் அப்போதைக்குப் புரியாது பின்பு புரியவிருக்க ஏதோ உளதாகியதாகவும் பட்டது. ஆதிநாளிலிருந்து தனக்கு அவளைப்பற்றித் தெரிந்த விதம், எப்படி என எண்ண முடியவில்லை. அவளை அவன் நேராகப் பார்க்காது, அடிக்கடி வீட்டைச் சுற்றிப் பார்வை கொண்டிருந்தான். ஆங்காங்கே ஒளிபடராத இருள்மூலை முடுக்குகளில் பழைய நினைவுகள் ஒன்று கூடிப் புரிந்து கொள்ள முடியாவகையில், சதி ஆலோஜனை செய்து கொண்டிருந்தன போலும். முற்றத்தில் ஒரு முல்லைக்கொடி, பகலில் சூரிய வெப்பம் காட்டாது, பந்தலின் மேலே படர்ந்து இருந்தது. இந்த இரவில், பார்வையில்படாது, மலர்ந்த மலர்களினின்றும் பிரிந்து வரும் மணம் வீடு நிரம்பக் கணிசம் கொள்ளுகிறது. வானின்று நுகர ஊர்ந்துவரும், ஒரு கனிவு இவன் மனதில் படுவது என இது இல்லை.


பேசிய பிறகு ஏன் பேசினோம் என்ற மனக்குறை ஏற்படுவது எல்லோருக்கும் உண்டு. ஆனால் கெளரிக்கு அது மாதிரி தோன்றவே முடியாது. அவள் பேசியது அவள் பேசினதாகவே தோன்றாது சப்தம் கொள்ளுகிறது. பேசும்போது அவள் சரீர ஒரு சிறு நெளிப்பில், தான் பேசியதையே தன்னின்றும் எப்படி உதறிவிடுகிறாள் ? தான் பேசியதைத் தானே கேட்பவள் போன்று இருக்கிறது அவள் முகபாவம். எவ்வகையில், காரியத்தில், எவ்விதப் பொறுப்பையும் சுமக்காமல் உதறி, அவளால் வாழ்க்கை காணமுடிகிறது ?


‘……அல்லது தன்னை விட்டுப் போன தன் மனைவியை தேடிக்காண ஓடியிருப்பாரோ என்னவோ, யாருக்குத் தெரியும் ? ‘ என்று அவள் சொல்லி முடித்தது இவனை யோஜனையினின்றும் கலைத்துத் திடுக்கிட வைத்தது. அவள் அறியாமையை நினைக்க, ஒருபுறம் வேடிக்கையாகவும் இருந்தது. தன்னைப் ப

ோலவே தன் நண்பனும் கலியாணம் ஆகாதவனென்பது இவளுக்குத் தெரியவில்லை போலும் ‘


திறந்து இருந்த வாயிற்படியைத் தாண்டி, வெகு சமீபம் வரை வந்தவளை இவன் கவனிக்கவில்லை. ‘….பேச்சுச் சத்தம் கேட்டுப் பார்க்க வந்தேனக்கா ‘ என்று சிரித்துக்கொண்டே, ஒருவள் வெகு நிதானமாக வந்து கூடத்தில் ஒரு பக்கமாக உட்கார்ந்து கொண்டாள். அவளைத் தொடர்ந்து வந்த ஒரு சிறுவனைப் பார்த்துக் கெளரி, ‘தம்பி, ஐயாவுக்குக் காபி, வெற்றிலைபாக்கு, வாங்கி வா….. ‘ என்றவளை ஒன்று வேண்டாமென இவன் தடுத்தும் சோடாவாவது வாங்கி வரச் சொன்னாள். மேலும் இவன் பணம் எடுத்துக்கொடுப்பதைத் தடுத்து ‘…..என்ன ஐயா செய்வது ? அவமானப்படுத்தவா ? விருந்தாளியாக வந்தவரின் அபேக்ஷைகளை நாங்கள் திருப்தி செய்யவேண்டாமா….என்ன அனசூயா நான் சொல்லுவது ‘ என்று வந்தவளைப் பார்த்துக் கேட்டாள். ‘ஆமாம்…..இவர் நம்ப சாஸ்திரபுராணம் படித்ததில்லையோ என்னவோ….. ‘ என்று ஒரு அசட்டுச் சிரிப்புத் தோன்றச் சொன்னாள்.


அன்று இரவு இவன், அவர்களுடன் பேசிவிட்டு வீடு திரும்பும்போது இரவு வெகுநேரம் ஆகிவிட்டது……


மறுநாள் காலையிலிருந்தே இவனுக்குக் கெளரி வீடு செல்லும் ஆவல் தோன்ற ஆரம்பித்தது…..அன்று மாலை சீக்கிரமாகவே அவள் வீட்டிற்குச் சென்றான். நேராக உள் சென்றவன், இரண்டொரு பெண்களுடன் அவள் பேசிக்கொண்டிருந்ததைக் கவனித்தான். இவனையும் கூப்பிட்டு உட்காரச் சொன்னாள். நேற்றுக் கோவிலில் பார்த்தவர்கள் எனவும், அவர்களும் தாஸிகளெனவும் கண்டு கொண்டான். சிறிது நேரம் ஊர் உலகம் பேச்சுகளெனப் பேசினர்.


கெளரி இவனைப் பார்த்துக் கேட்டாள். ‘நேற்றுத்தானே வந்தது…..மனைவி குழந்தைகளையும் அழைத்துக் கொண்டுதானே….. ‘ அவள் வசீகரம் மிகக் கடுமையாக இவனைத் தாக்கியது. மனது ஒரு வகையில் குதூகலம் கொண்டது…….


‘நீ நினைப்பது எல்லாம் இப்படித் தவறாக இருக்கிறதே ‘ நானும், அவனும் கல்யாணமே செய்து கொள்ளாதவர்கள்–என்னைப் பற்றித் தெரியாதது இருக்கட்டும். அவனைப்பற்றிக்கூட அவ்வளவு பழகியும் உனக்குத் தெரியாதது சிரிப்பாகத்தான் இருக்கிறது…… ‘ என்று நெருங்கிப் பேசும் வகையில் கூறினான். ஏனையோரின் ஒருமித்த சிரிப்பில், இவள் கலந்து கொள்ளவில்லை. அதன் எதிரொலி என சிறிது சென்று இவள் முகத்தில் புன்சிரிப்புத் தோன்ற, அதிலும் ஒரு கடுமை தொனித்தது போலும். ஆண்களின் தன்மை ஒருவரிடமும் ஒருவிதத்திலும் சரியெனப்படவில்லை. ஆண் பெண் பாகுபாட்டை, உலகே தவறாகக் கண்டு கொண்டிருக்கிறது. உறவு, பந்தம், பாசம், எல்லாமே வியர்த்தமாகத் தோன்றும் வகைக்கு, தர்மமும், சீர்குலைந்து, ஒத்துப் போவதாகக் காண்கின்றனர் போலும். இவள் மனம், யாரை எதற்காக நொந்து கொள்ளுவது என்பது புரியாது தவித்தது.


‘…..எவ்வளவு தவறு. தெரிந்து கொள்ளாதது எவ்வளவு சரியாகவும் இருக்கிறது…. ‘ என்று ஆரம்பித்த கெளரியைத் தடுத்து…… . ‘சரி தவறு எல்லாம் தவறாகவே உனக்கு ஒன்றுதான்…. ‘ என்றான். எல்லோரும் சிரித்தனர். கெளரியின் சிரிப்பு, மேலும் தன்னைப் பற்றிய அவர்கள் எண்ணம் என்னவென்பதும் புரியவில்லை. மேலே யோசிக்க முடியாது கெளரியைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு பைத்தியக்காரச் சதியில் சிக்கித் தவிப்பதான லேசான ஒரு எண்ணம். தன்னை விடுவித்துக் கொள்ள கெளரியை விட்டு வெளிச் செல்லுவதும் மனதுக்குப் பிடித்தமாக இல்லை.


‘…ஐயா… ‘ என்று இவனைக் கூப்பிட்டு அவள் பேச ஆரம்பித்தது ஒரு ஆறுதலாக இருந்தது… ‘ஐயா நான் ஒரு பெண்–அதுவும் ஒரு தாஸிப் பெண். தாஸிகளைப் பற்றி உங்களுக்குத் தெரிந்து இருந்தாலும் பெண்களையும் பற்றித் தெரியுமோ… ? நீங்கள் கல்யாணம் ஆகாதவர்கள். செய்து கொள்ளாதது ஒரு வகையில் சரி. யாரோ, ஒருவன் மனைவி என, யாரோ ஒருவன் மனைவி என உங்களிடம் கற்பிழந்துகொண்டு நிற்�

� முடியாத வகைக்கு… ‘ என்று சொல்லிச் சிறிது பேச்சை நிறுத்தினது, இவனுக்குத் திடுக்கிட இருந்தது. சிறிது கோபத்தில் ‘என்ன…என்ன சொல்லுகிறாய்–தனக்குப் புரியாது, பிறருக்கும் புரியாத வகைக்கு… ‘ என்றான் இவன். இவன் பேசுவதையே கவனிக்காதவள் போன்று, ‘நாங்கள் பெண்கள்–அதுவும் தாஸிப் பெண்கள். ஒருவிதத்தில் கல்யாணமானவர்கள், மனைவிகள் எனவும் கொள்ளமுடியும். கல்யாணமான ஒருவள், மறதியில் தன் கணவனை எங்கேயோவிட்டு, எங்கும் தேடுவதான பாவனையை என் மனது அடிக்கடி கொள்ளுகிறது ஐயா. ஆண்களால் கலியாணமின்றி வாழமுடியும். பெண்களால் முடிகிறதில்லை. இந்து தர்மம் அப்படித்தானே…. கன்னியென வாழவும் கூடாது…. முடியாது. குமரிக் கன்னியும் ஒருவனை அடைய ஏங்கி, சாசுவதத்தில்தானே, கன்னியெனவாகிறாள்….. மனைவி எனக் கணவனிடம் வாழ்க்கைப்படுவதி, தன் மனத் தூய்மையை, அவனால் எப்போதும் இழக்காமல் இருக்க முடியும் என்று எந்த மனைவியால் நம்பமுடியும் ? தன் புனிதம் தன் கணவனால் பறிபோக, கற்பிழந்தவளாகத் தன்னை அவள் அப்போது கருதமுடியாதா ? ஒருக்கால் உங்களைப் போன்றவர்களால் அவ்வகையில், கணவனாக முடியும் போலும்…. ஆனால் கல்யாணம் செய்துகொள்ளாமல் நிற்கிறீர்களே….. பெண்ணைப் படைத்த ‘அவன் ‘ பெண்மையையும் மறக்கவில்லை….. ‘ என்று சொல்லியவள் ‘என்ன அனசூயா நான் சொல்லுவது ‘ என்று அவள் அசட்டு ஆமோதிப்பைப் பெற நினைத்து அவனைப் பார்த்து சிரித்தாள். ‘உங்கள் நண்பரை அவசியம் கண்டு கொள்ளுங்கள்….. அவர் புரிந்துகொண்டவர் ஒருவள் ‘நாழிகை ஆகவில்லையா அக்கா ‘ ‘ என்று கேட்டாள். ‘ஆமாம் ‘ என்றவள் இவனைப் பார்த்து ‘நீங்களும் வாருங்கள் கோவிலுக்கு….நாழிகை ஆகிவிட்டது ‘ என்றாள் கெளரி.


மாலை சூரியன் மறைய இருக்கிறான். சந்நிதித் தெரு முழுவதும் சூரிய ஒளி பரவி இருந்தது. கோபுரம் தாண்டியும், கொடி மரம் வரையிலும்கூட இவனும் அவர்களுடன் கூடச் சென்றான். முன் நீண்டு சென்ற நிழல்கள் சலித்து ஒன்றைச் சென்று கலந்தும் விலகியும் தெரு வழியே சென்று கொண்டிருந்தன. முன் சென்ற அவர்கள் உட்சென்று மறையும் வரையில் பார்த்து நின்று இருந்தான். அப்பால் கர்ப்பக்கிருஹ சரவிளக்குகள் ஏற்றப்பட்டுத் தெரிந்தன. …உட்சென்று மறைந்தவர்களை இவனால் பார்க்கமுடியவில்லை….. விளக்குகள் கலைந்து, மறைந்து, தெரிந்து கொண்டிருந்தன.



அத்துவான வெளி – மெளனி



POSTED BY SSINGAMANI ⋅ NOVEMBER 7, 2010 ⋅ COMMENTS OFF



தன் வீட்டிலே சும்மாத் தலையோடு வாசல் நடந்துகொண்டு சுகமாக வாழலாம் என எண்ணியவனுக்கு எதிரே வாசலில் பெரிய மரமொன்று பார்வைகொள்ள நிற்கிறது. வாயிற்பக்கம் எப்போதாவது வந்து நின்று போவோர் வருவோர்களைச் சும்மா நின்று கவனிப்புக் கொள்வதில், இந்த மரத்தையும் பார்வையில் பட்டுப்போகுமளவிற்கு வெறித்து நோக்குவது உண்டு. எந்த யுகத்திலிருந்து இது இப்படிக்கு இங்கே ஸ்தலவிருக்ஷமென நிற்கிறது என்பது புரியவில்லை.



ஆனந்தமாக அது ஆகாயத்திற்கும் பூமிக்குமாக வளர்ந்து எட்டுத் திக்கையும் நோக்கிப் படர்ந்ததென இருப்பது எதற்காகவென்றும் தெரியவில்லை. தன் வீடு ஒரு திக்கை நோக்கி நிற்பது சரியெனப் புரிந்தாலும் இந்த மரம் எந்தப் பக்கம் பார்த்து நிற்பது என்ற சம்சயம் யோஜனையினால் விடுபட முடியாது இவன் திகைப்பது உண்டு. அந்தமரம் ஒருபோதும் நிசப்தம் கொள்ளாது. எந்நேரமும் பக்ஷிஜாலங்களின் கூக்குரலைக் கொடுத்துக்கொண்டிருப்பது வினோதமாகப்படும். சிற்சில சமயம் ஊரை நாசம்செய்ய வானரங்களும் குடும்ப சகிதம் அதில் குடியேறி, வால்பிடிப்பில் தலைகீழாகத் தொங்கி கிரீச்சிட்டு கத்தி ஆடி அட்டகாசம் செய்யும். அது எச்சாதி மரமென்பதும் தெரியாது. காலையில் மரத்தடியில், மலர்கள் பாய் விரித்தாற்போல் வீதியில் சிதறிக் கிடந்து காட்சியளிக்கும்போது, வாசனை நெடியெனக் காற்றடித்த வாக்கில் உலகில் பரவிக்கொண்டிருக்கும். கும்பல் கும்பலாகப் பிள்ளைகள் அதைப் பொறுக்க வருவதையும் இவன் கவனிப்பது உண்டு.


பின்னிருந்து ‘என்ன சார் ஸௌக்கியமா? பார்த்து ரொம்ப நாளாச்சு’ என்ற குரல் கேட்டதென திரும்பினான். அந்த அந்திவேளையில், தன் நிழல்கூட இவனுக்குத் தெரிய நியாயமில்லை – கண்டு கூப்பிட்டதென நினைக்க. எனினும் சுற்றிச்சுற்றி யாரென இவன் காண அவனும் சுற்றியதுபோன்று ஒருவர் முகம் ஒருவர் பார்க்க இவன் எதிரில் வந்தவன், ‘என்ன ஸார், உங்களைப் பார்ப்போமென்று வந்தால் இப்படி ஊரையெல்லாம் சுற்றுகிறீர்களே’ என்று சிரித்துச் சொல்லிக்கொண்டே ஒருவன் இவன் எதிரில் நிற்பதை உணர்ந்தான். எதிரில் கண்டதும் இவன் மேலே கடந்து போகலானான். அவன் இவனுக்கு மரியாதையாக ஒதுங்கிப் போகிற வழி விட்டு இவனைத் தொடரலானான். அவனை யாரெனப் புரியாததிலும், இப்போது பார்த்ததில் எப்போதோ பார்த்து மறந்ததென எண்னமும் இவனுக்குத் தோன்ற இருந்தது. மேலும் தனக்கு யாரையும் தெரிந்தும் தெரியாததுபோலவும் இருக்க முடியும் என்ற எண்ணமும் இவனுக்குத் தோன்ற இருந்தது. மேலும் தனக்கு யாரையும் தெரிந்தும் தெரியாததுபோலவும் இருக்க முடியும் என்ற எண்ணமும் கொள்ள யோஜனையில் அவன் புரியாவிட்டாலும் சிறிது அவனோடு பேசுவதில் கண்டுகொள்ளமுடியுமெனவும், அவசியமானால் தெரியவில்லை என நம்பவைத்துத்தான் தன் வழியே போகவும் முடியுமென நினைத்து இவனும் ‘ஆமாம் ஸார் . ! ரொம்ப நாளாச்சுப் பார்த்து…’ என்றான்.


‘தெரியாதவர்களும் தெரிந்தவர்களென ஏமாற்றுவது உண்டு ஸார்…நான் அப்படிஇல்லை. நிச்சயமாக உங்களுக்குத் தெரியும்…எனக்குத் தெரியாதவர்களே ஊர் உலகில் இல்லை ஸார்’ என்றது ஒரு விபரீத நியாயமாகப் பட்டது.


‘ஆமாம் ஸார் அப்படி நினைப்பது தவறு’ என்றான் இவன்.


‘இப்போது நீங்களா பேசுகிறீர்கள்-நான்தானே-உங்களைப் பிடித்து நான் பேசாதுபோனால் நீங்கள் தெரிந்தும் தெரியாதது மாதிரித்தானே போவீர்கள்…’ என்று உடம்பை நெளித்துக்கொண்டு கெஞ்சும் பாவனையில் பேசிவந்தது இவனுக்குப் பார்க்க பரிதாபமாக இருந்தது. நிச்சயமாக அவனைத் தெரிய ஞாபகம் கொள்ள நினைத்தான். அவன் அசடுமாதிரி அடிக்கடி சிரித்தது மேலும் இவனுக்கு யோஜனைகள் கொடுத்தன, அவனை யாரெனத் தெரிந்துகொள்ள முடியாதபோது, அவன் சிரிப்பிலிருந்தாவது ஞாபகம் வருகிறதா எனக் கவனித்தவனுக்கு, தன்னுடைய சிநேகிதன் ஒருவன் ஞாபகம் வந்தது. அதுவும் தவறென உணர, அந்நண்பன் எப்போதோ செத்து சுடுகாடடைந்ததும்கூட ஞாபகம் இருந்தது. அவனே இல்லாது அவன் சிரிப்புமட்டும் உலகில் இருந்தால், அவனென இவனை இப்போது எப்படிக் கொள்ள முடியும் என்பதும் புரியவில்லை.


‘ஆமாம்-’ என்றான் இவன். ‘நாலுபேரைத் தெரிந்து பிடித்துவிட்டால் எப்படி ஸார் உங்களைப்போல மறக்க முடிகிறதா…’ என்றான் அவன்.


‘இப்போதெல்லாம் நான் வெளிக் கிளம்புவதில்லை… அதனால்தான்…’ என்று தன் குற்றமுணர்ந்த பேச்சென இவன் பேசினான்.


‘நானும் அப்படித்தான் நினைத்தேன். இந்த ஊர் உலகைச் சுற்றும் நம் கண்ணில் ஸார் படவில்லையே என்று…’ என்றான் அவன்.


பேசிப் பிடித்தது உதறமுடியாது பேசப்பேச பீடிக்கிறதே என இவன் எண்ணலானான். சிறிது பேச்சை நிறுத்தி மௌனமானான்.


உங்களைப் பார்க்க நேர்ந்தது ஏதோ யதேச்சையாக நேர்ந்தது என்று நீங்கள் நினைக்கலாம். உங்களைப் பார்க்கமுடியும் என்ற நம்பிக்கையில் நான் உங்களைப் பிடித்தது எதேச்சையில் இல்லை ஸார். மனுஷாலை நான் சினேகம் கொண்டாடாமல் என்னால் இருக்க முடியாது, உங்களைப்போல என்ன இப்படிப் பேசாது நீங்கள்…’ என்றான் அவன்.


‘ஒரு சிநேகிதர் வீட்டிற்கு…’ என்று ஒரு அறைகுறை முணுமுணுப்பெனக் காற்றிலும் கரையும் போக்கிற்குச் சொல்ல விருந்ததையும் அவன் கேட்டு, ‘என்ன ஸார் உங்கள் சிநேகிதர் என் சிநேகிதர் அல்லவா, போவோம்…’ என்று சொல்லிக்கொண்டே தொடரலானான். பத்து தப்படிக்குள் இவ்வளவு கூச்சலும் முணுமுணுப்புமென்றால் குரைகாலமும் தன்னால் எப்படி வாழ்க்கையைச் சகித்துக்கொள்ள முடியுமென்பதில் மனது விடுபடமுடியாத ஒரு பயம் குடிகொள்ள இருந்தது. எதிரே தோன்ற முடியாவிட்டாலும் அடிமடியில் புகுந்து பேசுவது போன்றிருந்தது பேச்சுக்கள். நினைக்க நினைக்க மனது பீதி அடைந்தது. அவனை மறந்துவிட முடியுமென்பதற்கில்லை. மறக்க வேண்டியதை அடிக்கடி ஞாபகப்படுத்திக்கொண்டு இருக்க வேண்டியிருப்பதால் மறப்பதை ஞாபகமெனத்தானே கொள்ள முடிகிறது. அவனைப்பற்றி யோஜிப்பதில் யாரெனத் தெரியவில்லை எனக் கொள்ளுவது தனது முக்கிய காரியமென எல்லாவற்றையும் யோஜிக்கலானான். தெரியவில்லையெனக் கொள்வதிலும், தனக்குத் தெரியாத ஒரு பெரிய மனிதனாக அவன் ஏன் இருக்கமுடியாது. இந்த ஜன்மத்தில் இருக்காமலிருந்தாலும் போன அல்லது எந்தப் பிறவியிலாவது இருக்கலாம். தனக்கு முன்காலத்தில் அநேக பிரமுகர்களின் சம்பந்தம் உண்டு என்பதை எண்ணும்போதும் தெரியாத மறதி எனக்கொண்டு தவறெனவும் கொள்ளமுடியாது, சிரிக்கவும் சிரித்துக்கொண்டிருந்தான். இவனை அவசியம் யாரெனக் கண்டுகொள்ளவேண்டியிருப்பது யோஜனைகளின் அவசியத்தையும், சிக்கல்களையும் தோற்றுவித்தன. அவனை விட்டகல ஒரு யோஜனையும் புரியவில்லை. எதிரே ஒரு கோவில் தெரிய இருந்தது. ஒருவகைக்கு ஆறுதலாகவும் போக்கிடமெனவும் தோன்ற அதையே ஆதாரமென நினைத்து நடந்ததில், அதுவும் எதிரே சமீபமாக வந்து நின்றது.


ஊர்த் தெருவில் நின்ற ஒவ்வொரு வீடாக இவனுக்குக் காட்டி, வசிக்கும் அந்த அந்த மனிதர்களை, தனக்குத் தெரியாதவர்கலை, காணப்போவதாகச் சொல்லி, அவனிடமிருந்து தப்பிக்க வழியாக இவனுக்குச் சொல்லி, அவனிடமிருந்து தப்பிக்க வழியாக இவனுக்குச் சொல்ல முடியவில்லை. ஒருக்கால் மறந்து அவனுக்கு அவன் வீட்டையே காட்ட, அது அவன் வீடாக இருந்து அவன் சிரித்தால் தான் வெட்கமடைய முடியாதா என்ற எண்ணத்திலும் யோஜனையைக் கைவிட இருக்கிரது. நிச்சயமாக அவனைத் தெரிந்து அந்த வீட்டுக்காரன் இல்லை என்பதை தீர்மானித்தால் அல்லது எந்த வீட்டுக்காரனாகவும் இவனெனக் கொள்ளமுடிகிறது. இப்படிக்கான விஷயங்களினின்று விடுபடக் கோவில் மகத்துவம் அதிகமாகிக்கொண்டிருந்தது.


கோவில் சென்று சுற்றுவதில் அவனுக்கு வீடு திரும்ப ஆவல்கொண்டு தன்னைவிட்டுச் செல்லலாம் என்ற உத்தேசத்தை வெகு ஜாக்கிரதையாக அவனுக்குப் புரியாது காட்ட எண்ணி ‘பார்க்க வேண்டியவர் ஒருக்கால் கோவிலில் இருக்கலாம்…அங்கேயே பார்க்க முடியலாம்…’ என முணுமுணுத்துக் கொண்டே கோவிலையடைந்தான். அசட்டு மனிதனென அவமதிப்புக் கொள்ளமுடியவில்லை. அப்படி அவன் நினைவில் தானும் கலந்து தெரிவதால் தனக்கும் அவமானம் தோன்ற இருக்கும். கோவிலில் அவனை அலைக்கடிக்கும் அளவிற்குத் தாமதம் செய்ய உத்தேசித்து, யதோக்தமான தரிசன உத்தேசத்துடன், அர்ச்சனைக்கான பழம் தேங்காய் பாக்கு முதலியன வாங்கிப்போனான் இவன். ஒன்றை மறக்க அதை ஞாபகத்தில் கவனமாக வைத்துக்கொண்டு இருக்கவேண்டியிருப்பதில், எப்படி மறக்க முடிகிறது. இந்த வகையில் சாமியென்ன பூதம் என்ன எல்லாம் ஒரே விதத்தில்தான் சஞ்சலம் கொடுக்க இருக்கின்றன மனிதர்களுக்கு.


தொடருபவனைச் சரிக்கட்ட, கோவில் தரிசனம் செய்துவிட்டு அவரையும் இருந்தால் பார்த்து அழைத்துவருவதாகவும் இவன் சுகமாக இங்கு இருப்பதில் தான் திரும்புகாலில் அவனைச் சேருவதாகவும் சொல்ல நினைத்தவனைத் தடுத்து ‘என்ன ஒற்றுமை போங்கோ ஸார் மனது. நானே சொல்ல விருந்ததை நீங்கள் செய்து காட்ட’ எனச் சொன்னான், தனக்குப் புரிந்ததை. இல்லை, மன ஒற்றுமை அது இது என்பதிலும், இரு உடல் ஒரு எண்ணமோஒ அல்லது ஒரு உடல் இரு எண்ணமோ ஆக ஒன்றிலும் நம்பிக்கை இல்லை என்பதை-காதலைப்பற்றித் தன் எண்ணமும் அநுபவமும் நினைவுக்குவர இவன் உடம்பு கூசிக்குறுகியது வருத்தமாகவும் இருந்தது. கையில் இருந்த சாமான்களை அவன் பிடுங்கியதுகூட இவனுக்குத் தெரியவில்லை. ‘நான் இருக்கும்போது உங்களுக்கு இந்தச் சிரமம் வேண்டாம் ஸார்’ என்று கூவிக்கொண்டே சோழனைப் பிடித்தவனையும் மிஞ்சித் தொடரலானான். தன்னையும் தூக்கிக்கொண்டு அவன் தொலைந்தால், அவனோடு போவதில் தன் பொறுப்பு என்ற தொல்லையின்றியாவது வாழலாமெனவும் நடக்குமெனத் தோன்றவில்லை. இப்படி ஏதாவது எதேச்சையில் புண்ணியம் வருமென்றாலும் அதைத் தூக்கிக்கொண்டு போகத்தன் தொடருகிறான் போலும்.


இரவு அந்நேரம் கோவிலில் கூட்டமே இல்லை. அர்ச்சகரும், கவனிப்பை யார் மேல் கொள்வது என்று புரியாமல் பார்த்து விழித்துக் கொண்டிருந்தார். அவனோ மேல் துண்டை இடுப்பில் சுற்றிக்கொண்டு கைகட்டி கண்மூடி நின்று கொண்டு, தேவாரம் திருவாசகப் பதிகங்களை இரைந்து அழுது கொண்டிருந்தான். அப்படி கேட்கவே அவனுக்கு நாராசமாக ஒலித்தது. அவனைப் பார்ப்பதும்கூட. ஒன்றிற்கும் ஒன்றும் செய்யமுடியாது. அர்ச்சனை முடியும். எங்கேயாவது ஓடி மறைய முடியாதா என்று எண்ணி நின்றான். அர்ச்சனை முடிந்தது. பிரசாதங்களையும் அவனே ஏற்றுக்கொண்டு திரும்புகாலில், யார் யாரைப் பீடிக்க இந்த உலகம் இப்படிச் சீரழிந்து கொண்டிருக்கிறது என்ற புனருத்தாரண விசனத்தில் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருந்தான். வெளியே வந்ததும் யார் யாரைத் தொடருகிறது என்பது இல்லாமல் போய்க்கொண்டிருந்தனர். எதிரில் மரம் கண்முன் நிற்க இவன் எங்கேயோ அந்தரத்தில் பறந்து அதன் மேல் உட்காரவோ ஆடவோ முடியாது சுற்றுவது போல இருந்தது மனதிற்கு குஷி கொடுக்க இருந்தது. தனக்கு மட்டும் அவன் தெரிகிறான் என்றும் அவன் தன்னை கண்டுகொள்லமுடியாது எங்கேயாவது சுற்றிக்கொண்டிருக்கும் அவனைத் தான் தெரிந்து கொண்டு ‘என்ன ஸார் ஸௌக்கியமா?’ என்று திடுக்கிடக் கூப்பிடவேண்டுமெனத் தோன்ற தன்க்குத்தானே இவன் சிரித்துக்கொண்டான்.


அவனோடு சுற்றி நான்கு வீதிப் பிரதக்ஷினமும் முடிந்துவிட்டது. மற்றொரு சந்தையும் அவன் கடந்துவிட்டான். அவன் பேசாது மௌனமாகப் போவதும் மனதிற்குப் பிடிக்கவில்லை. தான் இப்படி அவனுக்குத் தோன்றா வகையில் அந்தர்த்தியானமாகியதை அவன் தெரிந்துகொண்டே பேசாது இருந்தால் தன் மதிப்பு எவ்வளவு குறைபடுகிறது என்று எண்ணியவனுக்கு இப்படியே எவ்வளவு காலம் வாழமுடியுமென்பது புரியவில்லை. வெட்கப்படும் வகைக்கு அவனோடு சல்லாபம் கொள்ளவும் தன்னைத் தயாராக்கிக்கொண்டான்.


இரவு நிசி நேரம் தாண்டிவிட்டது. சினிமாப் பார்த்தவர்களும் திருப்தியுடன் வீடடைந்துவிட்டனர். இவனுக்கு வீடடைய வழியில்லை. அவன் வீடு இவனுக்குத் தெரியாது. அவன் வீட்டை நோக்கிப் போகிறான் என எண்ணவும் அவனைக் கண்காணித்து அவனுடன் சுற்றுவதிலேயே திருஷ்டியாக இருந்தான். சும்மா எங்கே எங்கேயோ கண் காணாது படுத்துத் தூங்கியிருந்த நாய்களெல்லாம் தங்கள் இருப்பு மகத்துவத்தைப் பிரபலப்படுத்தக் குரைக்கவும் ஊளையுடவும் ஆரம்பித்தன. நாய்களுக்கும் தெரிவது தனக்குப் புரியவில்லையே என்ற விசனத்தில்கூட சில சமயம் இவன் ஆழ வேண்டியிருந்தது.


முன்பு அவனைப் பார்த்தவுடன் தெரியவில்லை என்பது தெரிந்தவுடன் ‘யார் நீ-’ எனத் தைரியத்தில் அதட்டியோ அல்லது நைஸாகக் குழைந்தோ கேட்டிருக்கலாம். அவனும் என்ன பதில் சொல்லுவது எனப் புரியாது தத்தளிப்பதைத் தெரிந்து கொண்டிருக்கலாம். அதையெல்லாம் இவ்வளவு காலம் கடந்து நினைப்பதில் என்ன பயன் என்றும் இப்படி எப்படிச் சும்மா ஊர் உலகைச் சுற்றுவதில் சுகமடைய முடிகிறது என்றும் எண்ணலானான். ஒருவர் ஒருவர் நிழலென மாறி மாறி பற்றிப் போய்க் கொண்டிருந்தனர்.


தன் நிழலென அவனைப் பார்த்தபோது, மனதில் திடீரென ஒரு யோஜனை தோன்றியது. தான் நினைக்கும்போது நினைத்த காரியம் கைகூடி விளையுமானால், எவ்வளவு சுலபமாக அவனை ஏமாற்றித் தான் விடுபட்டு, வாழமுடியும். இறகு முளைக்கத் தான் பக்ஷிஜாலங்களுடன் கூடி அந்த மரத்தில் கத்திக்கொண்டு இருக்கலாம் என நினைத்துத் துள்ளி நடக்கலானான். என்ன வேடிக்கையென அவன் கூவக் கேட்டுக் கொஞ்சம் நிதானமடைந்தான். அவனாகவே தானும் ஆகிக்கொண்டிருப்பதில்தான் அவன் நிழல் தொடருவதினின்றும் விடுபடமுடியும் என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்தது…


எட்டிய வெளியில் ஒரு விளக்கொளி தெரிந்தது. உலகமே எரியத் தோன்றுவதும் எட்டி இப்படிச் சிறு விளக்கெனத் தோற்றம் கொடுத்து இருக்கலாம். ஒரு லக்ஷியக் குறிப்பாகக் கண்டதில் எப்படிப் போகிறோம் என்ற உணர்வே இவனிடமிருந்து அகன்றுவிட்டது. அதையே குறியெனக்கொண்டு ஒரு பைத்தியக்கார நிதானத்தில் போய்க்கொண்டிருந்தான். நெருங்க நெருங்க அது ஒரு மயானம் என்பதும் பிரேதம் எரியும் ஒளிதான் வீசியது எனவும் புரியலாயிற்று. தன் முன் தான், தன் நண்பன் சென்று கொண்டிருப்பதைப் பார்த்துத் திரும்ப வழியும் இருளில் மறைந்துவிட்டது என்பதையும் திரும்பாமலே இவனுக்குத் தெரிய இருந்தது. பொறுப்பற்றுத் தத்தம் தவறுகளுக்குத் தாம் என்பதின்றித் தோன்ற மயானமும் ஒளிக்கொள்ள வெகு பிரகாசமாகக் கண்கூச நன்கு அழகாகப் பிரேதம் எரிந்துகொண்டிருந்தது இவனுக்கு ஒரு வகையில் திருப்தி அளித்துத் தோன்றியது. மேலும் பூரண திருப்திக்கு, என்று தானும் அதாகி மேலும் ஒளி கொடுக்க எரிய வேண்டுமெனவும், அல்லது தான் தவிர எல்லாம் ஒளி கொடுக்க வேண்டுமெனவும், அல்லது தான் தவிர எல்லாம் ஒளி கொடுக்க எரியவேண்டுமென்ற இருவகை யோஜனையில் ஒருமை காண நின்றுவிட்டான். உயிர் நினைவும் மயான நினைவும் ஒன்றுகூடிப் பயம் காணச் சிறிது நேரம் ஆகியது. பக்கத்தில் துணையிருப்பதை எண்ணி அவனை வெகு பிரியமாகப் பார்த்தான். அவன் அங்கு இருப்பதையோ இல்லாததையோகூட கவனிக்கவில்லை.


ஒரே இருள் அத்துவான வெளி. எங்கிருந்தும் பலப்பல பக்ஷிக் குரல்கள் கேட்டுக்கொண்டிருந்தன. வானரங்களும் மேலும் பூனைகளும் ஏன் நாய் நரியும்கூட ஆகாயத்திலிருந்தௌ பூமியைநோக்கிச் சப்தித்ததும் கேட்டது…..ஒரு பெரிய மரம் எங்கிருந்து பிரும்மாண்டமாக இந்த சப்தத்தில் இங்கு எதிரே வளர்ந்து நிற்க நேர்ந்தது என்பது தெரியவில்லை. அடிமரம் பார்வைகொள்ளும் போதே பெரிதாகிக் கொண்டிருந்தது. நடுவில் யானையெனப் பெரிய பொந்து ஒன்று தெரிந்தது. ஒரு பெரிய யானை மீது ஏறிக்கொண்டு தலையிலும் பெரிய ஒரு முண்டாக கட்டிக்கொண்டு தட்டுப்படாமல் அந்தத் துவாரத்தில் வழியாகப் பாதாளம்வரையில் ஊர்வலம் செல்லலாமெனத் தோன்றியது. கிளைகள், இலைகள் ஒன்றுமில்லையென, ஒரு கரிய கவிந்த வானம் மேகமெனத் தலையில் பரந்து தெரிய, மொத்தமாக ஒரு பெரிய குடை விரித்ததெனத் தோன்ற இருந்தது. வேறு ஒரு விதமாகவும் அது மரமில்லை என அங்கே அப்படி நின்றிருக்கமுட்யாது என்றும் தோன்றவிருப்பதே அது மரமெனத் தோன்றப்போதுமான அத்தாக்ஷியாக இருந்து நிச்சயமாக மரமெனவே இருந்தது. முதலில் எல்லாம் வேடிக்கையாகத்தான் இருக்கமுடியும். மயானம், பிணம் எரிதல், எதிரே ஒரு பெரிய மரம், எல்லாம் தெரிய ஒரு அத்துவானவெளி……ஆனால் யோஜிக்க யோஜிக்கவோ……அல்லது பார்க்கப் பார்க்கவோ இதற்கென அதுவும் அதற்கென இதுவுமாக ஒன்றை ஒன்று நிழலெனக் காட்டிக் கொடுக்க இருந்தது. எல்லாம் வேடிக்கை எனவும் ஒன்றிலும் ஒன்றுமில்லை எனவும் இந்த மயானப் பிரேத ஒளியில் தோன்றவும் தோன்றலாயின. மயான ஒளி இருந்தும் அதைப் பொருட்படுத்தாது பயத்தில் கண்கள் தாமாகவே தீக்ஷண்யம் அடைந்தன. பயமடைந்து கால்கள் பூமியில் புதைவு கொண்டன. தலைதெரிய தான் மறைந்தே எல்லாவற்றையும் பார்ப்ப தான உணர்வு கொண்டான்……கொழுந்துவிட்டெரியும் ஜ்வாலையைச் சுற்றி சிறு சிறு கருப்புத்திட்டுகளெனத் தோன்றியவை கூத்தாடிச் சுற்றி சுற்றி கும்மாளம் போட்டுக் குதிப்பதைப் பார்த்தான். இவைகள் சில்லறைப் பிசாசுகள் என்பது நிச்சயமாகியது. அவைகளின் தலை மேலே கருமையாகப் பறவைக் கூட்டங்கள், கரையாமலும் காகமெனத் தோன்றச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தன. பக்கத்தில் நின்ர அப்பெரிய மரமும் கரைந்து கத்திக்கொண்டு ஆடியது. இந்தக் குட்டிப் பிசாசுகள் எல்லாமுமே தலைகளில் பூச்சூட்டிக் கொண்டிருந்தது தோன்ற நக்ஷத்திரமென மினுக்கும் ஒளிப் பூச்சிச் சுட்டுகளை ஒன்று சேர்த்துக் குல்லாயாகத் தரித்திருந்தன. இவைகளின் ஆட்டத்தைவிட ஒளி கொடுக்க எரியும் பிரேதமும் சேர்ந்து ஆடியதுபோல அவைகளின் நிழலாட்டம் வெகு விநோதமாகத் தெரிந்தது. களைத்ததெனச் சில அடிக்கடி சோர்வு கொண்டு திடீரென கீழே விழுந்து கொண்டு பன்றிகல்லென மேயவும் ஆரம்பித்தன. கண்ட கண்ட நிழல்களைத் தின்று திருப்தியில் உறுவிச் சிரித்தது பயங்கரம் கொடுத்தது. துணையென இப்போது அவனை வேண்டிப் பக்கத்தில் இருப்பதை நினைத்துக்கொண்டு எதிரே பார்த்தான். அவைகளுக்குத் தலைமை தாங்கி அவனும் வெகு குஷியில் குதித்துக் களைக்கும்போது தலையை மட்டும் ஆட்டிக்கொண்டு தாளம் போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் நாதியற்ற பயத்தை இவன் மனது கடுமையாகக் கொள்ள ஆரம்பித்தது. நிழலைப் பறிகொடுத்து நின்ற பிசாசுகள் திடீரென எகிறிக்குதித்து மரத்தின் மேல் போய் மறைந்தன. மறுபடியும் தொடர, நிழலை அடையவேண்டி இரவிலும் நிழல் கொடுக்க நின்றிருக்கும் மரத்திடை மறைந்தது போலும். மரம் சலசலத்து இலைகளும் இரைந்துபேசியது போலும். மொக்குகள் உதிரக் கீழே விழுமுன் பூவாக மாறிக்கொண்டிருப்பதையும் இவன் கவனித்தான். இந்த மரத்திலிருந்து எப்படி விதவிதமானத் தனித்த சப்தங்கள் வரவிருக்கின்றன என்பதைக் கவனிக்கும்போது அநேக பூனைகளும் கு�

��ங்குகளும் மற்றவைகளும் வாலைக் கிளைகளில் சிக்கவைத்துக்கொண்டு தலைகீழாகத் தொங்கி ஆடிக்கொண்டு தவிப்பதைப் பார்க்கமுடிந்தது. வால் விடுபட்டோ அல்லது இழக்கப்பட்டோ மரத்தை விட்டோட பயம் கொண்டு வெகு வேகமாக ஆடியவைகல் ஒன்றை ஒன்று சில சில சமயம் இடித்துக் கட்டிக் கொண்டு சல்லாபித்து சண்டையிட்டு அழுவதும்கூட தெரியக்கேட்டது வாலிழந்து விடுபட்டவைகள் கீழே விழுந்து குட்டிப் பிசாசுகளான மீண்டும் நிழலோடு குதித்து ஆடலாயின.


தன் நண்பனுக்குக் களைப்பு. தூங்குமளவிற்கு உண்டாகிவிட்டது. திடீரென மறைந்தவனை இவன் பக்கத்தில் கண்டான். கீழேயும் விழுந்து புரண்டான். சிறிது ஏமாந்து பார்த்துக்கொண்டிருந்ததில் தன்நிழலை அவன் தின்றுவிட்டது நினைவுவரவே……பீதி. மனதிற்கு ஒரே பீதி. பைத்தியமெனச் சிரிப்பு தன் முகத்தில் கண்டதும் மேலும் பீதி அடைந்தான். உடல் கொண்டிருப்பதும் ஒரு அநாதி வழக்க தோஷத்தின் வாழ்க்கை எனவும் மிக அலுப்புக்கொண்டு விழித்தான்.


காலையில் வீட்டு வாசலில் மரம் நின்றிருந்தது-ஆகாயத்திற்கும் பூமிக்குமாக எட்டு திக்கும் பரவி-எந்நேரமும் சப்தம் கொண்டு வாவென்றழைக்கும் தோற்றத்துடன்-சிறுவர்கள் மலர்களைப் பொறுக்கிக்கொண்டிருந்தனர். வீட்டுக்காரர் இன்னும் எழுந்து வீட்டு வாயிலில் நின்று தங்களைப் பார்க்கவில்லை என்பது தெரிந்து மேலே பார்க்காது மேலும் மலர்களை பொறுக்கிச் சென்றனர் சிறுவர்கள்.

சுந்தரி – மெளனி


POSTED BY SSINGAMANI ⋅ JUNE 23, 2010 ⋅



கோடை மிகக் கடுமையாகக் கண்டுவிட்டது. எழுதுவதற்கு ஆரம்பிக்கும் எவ்வித முயற்சியும் எள்ளளவும் பயனாகாததைப்பற்றி யோசித்தேன். அதற்கு இருவகைக் காரணம் வெகு யுக்தியாகக் கண்டுவிட்டேன். மூளை, மூளையாக இல்லாது, வயல்களைப்போல் கட்டி தட்டிப் போயிருக்கலாம். அல்லது பேனாவின் மசி உறைந்து, எழுத ஓடாதிருக்கலாம். என் எழுதுகோலை எடுத்து இரண்டுதரம் வேகமாக உதறியதில், பேனாவைப்பற்றிய தகராறை ஒருவகையில் தீர்த்துவிட்டேன். ஆனால் என் தலையை உதறிக்கொண்டால், பரிதாபம் ‘ சிரமங்கொண்டு பன்றிக்கு வாரிவிட்டது போல் படியவைத்த எனது அழகான கிராப் தலைமயிர் சிலிர்த்து நிற்குமே என்ற ஒரு பயம் அடைந்தேன். எனினும், அப்படி இப்படி எழுத ஆரம்பித்துவிட்டேன். இப்போதுதான் எழுதுவதன் முட்டாள் தனத்தையும் கஷ்டத்தையும் உணர ஆரம்பிக்கிறேன்.


கடுங்கோடையானதினால் கொஞ்சம் இளகிய என் மூளை நன்றாக உருக்கம்கொண்டு அபார அற்புதக் கற்பனைகளை ஏராளமாகக் கொட்டுகிறது. உருகி வழியும் கற்பனைகளைத் தாறுமாறாக ஓட்டம்கொள்ளாமல் தடை செய்வதில்தான் என் முழுப் பிரயாசையும் செலுத்தவேண்டியிருக்கிறது. எனினும் அநேகர் இப்பிரயாசையில்லாமலே எழுதுவதாக எனக்குப்படுவது, அவர்களிடம் எனக்குப் பொறாமை உண்டாகக் காரணமாகிறது.


நிற்க, நடந்ததைப்பற்றி எழுதுவது என்றாலோ–அது நவீனத்திற்கு அழகன்று என்பதினால்–அது என் மனத்திற்கு இப்போது பிடிக்கவில்லை. நடக்கப்போவதை எழுதினால், அது பவிஷ்யத் புராணமாகிவிடும் என்பதனால், அதுவும் அவ்வளவு நாஸ்உக்கு இல்லை. நடக்கிறதைப்பற்றியே நான் ஒரு கை பார்க்கிறேன்.


கலியில் எது வேண்டுமானாலும் நடக்க முடியும் என்று பண்டைக்காலத்திலேயே எழுதியிருப்பதாக எனக்குக் கேள்வி உண்டு. பழைய காலத்தில் எழுதியிருந்தாலும், எழுதியிருப்பதாகக் கேள்விப்பட்டாலும், அதில் எனக்கு நல்ல நம்பிக்கை. இக் கலியில் எதுவும் நடக்க முடியுமென்றால், நான் எழுதுவதில் எனக்குக் கொஞ்சங்கூட ஆச்சரியமில்லை. மற்றும் இவ்வகைச் சிந்தனைப்போக்கில் நான் ஒரு விநோதம் கண்டேன். நடக்கிறதை எழுத வேண்டுமானால், உண்மையில் நடக்கிறதையே எழுத வேண்டுமென்பதில்லை. ஏனெனில், இக் கலியில் எதுவும் நடக்க முடியும் என்று சொல்லியிருப்பதன் நிமித்தம், ஏன் எழுதினதெல்லாம் நடக்கிறதாக இருக்கக்கூடாது ? இந்த எண்ணமே என் மனத்திற்குத் தோன்றியதை எழுதத் தைரியமாக மாறுகிறது. ஒருக்கால் நான் எழுதியதுதான் நடக்கிறதாக ஏன் இருக்கக்கூடாது ?


‘பன்னிக் குட்டிக்குப் பதினாறு ‘ என்ற ஒரு பழைய மொழி உண்டு. பன்றிக்குட்டிக்கல்ல–பன்றிபோன்ற குட்டிக்கு, என்று ஒரு தமிழ்ப் பெரியார் அதன் பொருளை எனக்கு விளக்கியிருக்கிறார். பழைய மொழி அவ்வாறாயின், புதுக்காலத்தில், நாகரிகத்தில் தட்டுத் தடையின்றி மேலே போய்க்கொண்டிருக்கும் நமது பெண்மணிகள் விஷயத்தில், அதே மொழி புது மொழியாக எவ்வளவு தூரம் பொருத்தம் கொள்ளுகிறது ‘ மற்றும் பன்றிக் குட்டிக்கே இப்படி என்றால், சுந்தரி மாதிரியான குட்டிக்குப் பதினாறு வயது வந்தால்– ?


சுந்தரி அவளுடைய பதினாறாவது வயதில் ‘மிஸ் சுந்தரியாகப் ‘ பட்டணத்தில் படித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய பதினோராவது வயதில் ஒற்றைத் தலைவலி, இரண்டு கண்களுக்கும் கண்ணாடி போட்டுவிட்டுப் போய்விட்டது. மூக்குக் கண்ணாடியும், சப்பை மூக்கானால், அடிக்கடி நழுவிக் கடிவாளம்போன்று வாய்க்கு இறங்கும் என்பதில்லாது, அவளுடைய கிளி மூக்கின் பேரில் ‘ஜம் ‘மென்று பொருந்தி, அழகுக்கு அழகு செய்து கொண்டிருந்தது. அந்தக் கண்ணாடியுடன் அடிக்கடி அவள் மாலை நேரங்களில், காற்று வாங்கக் கடற்கரையில் உலாவுவது உண்டு.


மதுசூதனன் (இவனுக்கு விபரம் தெரிந்தபின்பே நாகரிகமான பழைய பெயரை

இவன் தகப்பனார் வைத்தார் போலும்) அப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். இவனை இவன் தோழர்கள் பெயரை குறைத்துப் பிரியமாக ‘மது ‘வென அழைப்பது வழக்கம். இவனும் மாலை வேளையில் ஆரோக்கியத்திற்காக கடற்காற்று வாங்க போவான். இப்படியாக நடந்துவருங்கால், ஒரு நாள் இவ்விருவரும் ஒருவரையொருவர் பார்க்க நேர்ந்தது. சுந்தரி பத்துப் பெண்களின் நடுவில் ஒருவளாக இருந்தும், மதுவின் கண்களிலிருந்து உண்டான காதல் சுந்தரியின் மீதுதான் பார்வையாக விழுந்தது.


‘அவளுக்கு–ம் ? ‘ என்பதை அவன் யோசித்துக் கொண்டு தன் அறையை அடைந்தான். நிச்சயமாக அம்மங்கை, இரவில் தன் மீது விழுந்த காதலில் தவித்து, தன் விடுதி மேன்மாடியில், வேதனையில் உலாவுவாள் என்று எண்ணிக் கொண்டே, தன் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தான். மறுநாள்— இப்படியே இருவரும் சந்தித்ததிலிருந்து, இருவருக்கும் பரஸ்பரம் ‘லவ் ‘ விழுந்துவிட்டது.


சுந்தரி கெட்டிக்காரி. நவீன நாவல் கதாநாயகன் ஒருவன், திடாரென ஒருநாள் குறுக்காக வந்து தன்னைக் காதலிப்பான் என்று அவள் எண்ணியிருக்கலாம். மதுவே தன்னுடைய கடற்கரையில் உலவும் முழு ‘டிரஸ்ஸில் ‘ அவளுக்கு ஏன் அப்படியான காதல் நாயகனாகத் தோன்றியிருக்ககூடாது ? மூன்று முழு உடுப்புக்களை முப்பது விதமாக அலங்கரித்து, நங்கையர் முன்னே முந்நூறுதரம் குறுக்காக அவனுக்கு நடக்க தெரியும்.


இருவர் காதலும், சிறிது காலத்திற்குப் பிறகு கலியாணமாக முடிந்தது.


மதுவின் படிப்பு முடிந்தவுடன், அவனுக்கு வேலையும் கிடைத்து விட்டது.


அவனுக்கு முப்பது ரூபாய்ச் சம்பளமானாலும், முதலில் இரண்டு வருஷத்திற்கு ஒரு தரம் ஒரு ரூபாயாக அது ஐம்பது ரூபாயாகும். பிறகு அந்த மாதச் சம்பளம் வருஷத்திற்கு ஒரு விழுக்காடு சேர்ந்து நூறு ரூபாய் ஆகும். மற்றும் நமது மதுவுக்கு ஜாம்பவான் வயது இருந்து, அவனுடைய வேலைக்கும் ‘ரிடையரிங் ‘ காலமும் இல்லாது போனால், அவன் சம்பளம் படிப்படியாய் உயர்ந்து கொண்டே மாதம் ஆயிரம் ரூபாயாகவும் ஆகிவிடக்கூடும் ‘


வேலையானதும் இருவரும் சேர்ந்தே குடித்தனம் செய்தார்கள். அப்போது அவர்கள் என்னவெல்லாமோ மனத்தில் எண்ணியிருந்திருக்கலாம். ‘ஐ.ஸி.எஸ். ‘ ஆத்துக்காரராகத் தனக்கு அகப்படவில்லையே என சுந்தரி ஏங்கியிருக்கலாம். என்னவோ சுந்தரியைத்தான் முதலில் கண்டது மாதிரி வாழ்க்கை இப்போது அவ்வளவு வசீகரமாக இல்லையே என்று ஏக்கமுற்றிருக்கலாம். எனக்கு அதெல்லாம் நிச்சயமாகத் தெரியாது. மற்றும் இவ்விஷயத்தில் என் மனக் கற்பனைகளுக்கு இடம் கொடுக்க எனக்கு இஷ்டமில்லை.


ஆனால், மாலையில் இருவரும் சேர்ந்து ஜோராக வெளியில் ‘வாக்கிங் ‘ போகும்போது எல்லோரும் பார்த்திருக்க முடியும். அவர்கள் அப்போது பேசுவதைக் கவனித்தால், ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு ஒன்றும் புலப்படாது, தெரிந்த சிலருக்கும் புரியாதுதான். அக்காட்சி இயற்கை அளிக்கக்கூடிய எதையும்விட மிகவும் கண் உறுத்தும் காட்சியாகத்தான் தோன்றும்.


அடிக்கடி மதுவுக்கு ஊருக்கூர் வேலை மாற்றம் உண்டு.


எங்கேயாவது, ரயிலடியில், காலில் சிலிப்பரும், மூக்கில் கண்ணாடியும், தலையில் கட்டுக் கனகாம்பரக் பூக்கொத்து நழுவி விழத் தொங்கும் தோரணையிலும், கையில் ஒரு வெள்ளிக் கூஜாவுடனும், ஒரு சுந்தரியையும் அவள் பக்கத்தில் பெட்டியுடன் ஒரு கரப்பான்மீசை ஆணும் நிற்க நீங்கள் கண்டால், நமது தம்பதிகள்தான் வேலை மாற்றப்பட்டு, வேறு ஊருக்குப் போக ரயிலுக்கு காத்திருக்கிறார்கள் என ஊகித்துக் கொள்ளுங்கள்.


ஒரு தரம் நான் அவர்களைத் தஞ்சாவூர் ‘ஜங்ஷ ‘னில் பார்த்தேன். அந்த ரயிலுக்கு நல்ல கூட்டம் காத்திருந்தது. எட்டி நின்ற ஆயிரம் ஆடவர்களும், மது கடற்கரையில் காதல் விழ எப்படிச் �

சுந்தரியை முதலில் பார்த்தானோ, அதே பார்வையில், பார்த்து நின்றார்கள். மதுவோ வெனில் அந்த நாகரிக நங்கை தன்னுடைய மனைவி என்பதில் அநேகர் ஐயங்கொள்ளுகிறார்கள் என்பதை அறிந்தவனே போலவும், மற்றும் அதைப் பிறருக்குப் புரியும்படி காட்டுவதில் ஆவல் கொண்டவனே போலவும், அவள் அருகில் வந்து, அடிக்கடி, ‘மை டார்லிங் ‘ போட்டுப் பேசிக்கொண்டிருந்தான். சுந்தரி, சுருங்கிய முகத்துடன், சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்ததுடன் அடிக்கடி அண்ணாந்து கொட்டாவி விட்டுக்கொண்டும், தலையை கையால் அலட்சியமாகக் கோதிக்கொண்டும் இருந்தாள்.


காதல் பூர்த்தி கலியாணம், கலியாணப் பூர்த்தி விவாகரத்து என்று எவ்வளவோ வெகு அழகான கற்பனைகளுக்கும் நான் இப்போது உடன்படத் தயாராக இல்லை.


ஒரு சந்தேகம் யாருக்கும் தோன்றலாம்….எவ்வளவு தடையிருந்தாலும் இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தால்… என்ற எண்ணம் எழலாம். ஆமாம் அது அப்பாவைக் கொண்டால், கட்டை குட்டையாக, கறுப்பாக இருக்கும். இருந்தாலும் கரப்பான் மீசையோடும், கிராப்புடனும் முதலில் இருக்காது என்பது நிச்சயம். அம்மாவைக் கொண்டாலோ, ஏன், அதன் அழகிலிருந்து நீங்கள் பார்த்தவுடனே ஊகித்துக் கொண்டுவிடலாமே ‘ மற்றும் அது யாரைக் கொண்டாலும், முதலிலாவது ‘நாகரிக ‘ மற்று, தமிழில்தான் பேச ஆரம்பிக்கும் என்று நான் எண்ணுகிறேன்.




தற்காப்பு மணி: மௌனியின் கதைகளுக்கு இப்போது எவரிடம் காப்புரிமை இருக்கிறதென்று தெரியாது; விற்பனையின் மூலம் மௌனி பெறுவதைவிட இதுபோன்றவற்றின்மூலம் மேலும் சில வாசகர்களைப் பெறக்கூடுமென்ற நம்பிக்கையில் இதை இடுகிறேன்; ஆட்சேபங்களிருப்பின் பின்னூட்டமிடவும், கதையை நீக்கிவிடுகிறேன். இங்கே வந்தபோது கொண்டுவந்த வெகு சில புத்தகங்களுள் ஒன்று.