தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Saturday, January 28, 2012


ஆற்றாமை-கு.ப.ரா

கு.ப.ரா (1943)




உட்காரேண்டி! போகலாம். என்ன அவசரம்’ என்று சாவித்திரி புரண்டு படுத்துக்கொண்டு சொன்னாள்.

‘இல்லை. அவர் வருகிற நேரமாகிவிட்டது. போய் காபிக்கு ஜலம் போட்டால் சரியாயிருக்கும்!’ என்று எழுந்து நின்றாள் கமலா.




‘ஆமாம், காபி போடுவதற்கு எத்தனை நாழியாகும்? வந்த பிறகு கூடப் போகலாம். உட்கார். எனக்குப் பொழுதே போகவில்லை.’



அப்பொழுது ‘கமலா’ என்று கூப்பிட்டுக்கொண்டே ராகவன் வந்துவிட்டான்.

‘பார்த்தாயா. வந்துவிட்டார்!’ என்று சொல்லிவிட்டு கமலா தன் அறைபக்கம் ஓடினாள்.

சாவித்திரி படுத்தபடியே தலைநிமிர்ந்து பார்த்தாள்; ராகவன் மனைவியைப் பார்த்து சிரித்துக்கொண்டே உள்ளே நுழைந்தான். கமலா, ‘அதற்குள் நாழியாகிவிட்டதா?’ என்று கேட்டுக்கொண்டே பின்னால் போனாள்.

அறை சற்று தூரத்திலிருந்தபோதிலும் கொஞ்சம் சாதாரணமாகப் பேசினால் காதில் விழாத தூரத்தில் இல்லை. இளம் தம்பதிகளுக்கு அக்கம் பக்கம் ஞாபகம் சில சமயங்களில் இருக்கிறதே இல்லையல்லவா?

‘போங்கள்; இதென்ன விளையாட்டு. யாராவது வரப் போகிறார்கள்!’ என்று கமலா மகிழ்ச்சியுடன் சொன்னது அரை குறையாக சாவித்திரி காதில் பட்டது. அந்த அறையில் பொங்கிய இன்பம் ஏறிய காற்று சாவித்திரியிடம் வந்தபொழுது அவள் மூச்சு திணறிற்று. வேதனை உள்ளத்தையும், உடலையும் ஏதோ செய்ய, பெருமூச்சு விட்டுக்கொண்டு குப்புறப்படுத்துக்கொண்டாள்.

சாவித்திரியின் புருஷன் வடக்கே எங்கோ மிலிடரி சர்வீஸில் இருந்தான். சாஸ்திரத்துக்காக சாந்தி முகூர்த்தம் நடந்த மூன்று நாள் இருந்துட்டு அவசர அவசரமாகப் போய்விட்டான். வருஷம் இரண்டாயிற்று. கடிதங்கள் வந்தன. ஆள் வரக்காணோம்.

சாந்திமுகூர்த்தம் ஆகாமல் வைத்திருந்தால் நாலுபேர் ஏதாவது சொல்லுவார்கள் அல்லவா? அதற்காக சம்பந்திகள் இருவரும் சேர்ந்து முகூர்த்தத்தை நடத்திவிட்டார்கள். பிறகு பெண்ணை விட்டுவிட்டுப் பையன் எவ்வளவுக் காலம் இருந்தாலும் பாதகமில்லை. நாலு பேர் பிறகு வாயைத் திறக்கமாட்டார்கள்.

ஆனால், அந்தச் சாந்திமுகூர்த்தம் சாவித்திரிக்கு யமனாகத்தான் பட்டது. உள்ளத்தை அவள் ஒருவிதமாக முன்போலவே அடக்கி ஒடுக்கிவிட்டாள். உடல்தான் ஒடுங்க மறுத்தது. ஒடுங்கின உள்ளத்தையும் தூண்டிவிட்டது. அந்த மூன்று நாள் அனுபவித்த ஸ்பரிச சுகத்தை அதனால் மறக்க முடியவில்லை. வாய்விட்டு அலறிற்று.

சாவித்திரி நல்ல சரீரக்கட்டு படைத்த யுவதி. இளமைச் செருக்கு அவள் உடலில் மதாரித்து நின்றது. அதன் இடைவிடாத வேட்கையை அவளால் சகிக்கமுடியவில்லை.

‘இந்த கமலாவுக்கு எவ்வளவு கொழுப்பு! அகமுடையான் அருகில் இருந்தால் இப்படியெல்லாமா குதிக்கச் சொல்லும்? என்னிடம் வந்து என்ன பீத்திக்கொள்வது வேண்டியிருக்கிறது? நான் கிடக்கிறேன் வாழாவெட்டி போல. என்னிடம் வந்து என்ன கும்மாளம்! இல்லை. வேண்டுமென்றுதான். நான் பார்த்து வேதனைப்பட வேண்டும் என்றுதான் இப்படியெல்லாம் செய்கிறாள் போலிருக்கிறது! சதா இவள் அகமுடையான் சொன்னது என்ன பிரதாபம்! இவள்தான் அகமுடையானைப் படைத்தவளோ?... ஏன் தலைகீழா நிற்கமாட்டாள். உடனொத்தவள் நான் தனியாகக் கிடந்து சாவதைப் பார்த்து நாம் இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறோமே என்று அவளுக்குப் பெருமை! நான் நொந்துகிடக்கிறேன், நொந்துபோயிருப்பேன் என்று கொஞ்சமாவது அவளுக்குத் தோன்றினால் _ எப்படித் தோன்றும்? பட்டால் அல்லவா தெரியும் அவளுக்கு.’

சாவித்திரி பொருமிக்கொண்டே படுத்திருந்தாள்.

‘ஏண்டி, ஏந்து குழாய் ஜலம் எடுத்துக்கொண்டு வந்து வைக்கப்படாதோ, இந்தா காபி!’ என்று அவள் தாயார் வந்தாள்.

‘எல்லாம் ஆகட்டும். அதற்குத்தானே பெத்தே என்னை. செய்கிறேன். போ!’

‘இதோ இருக்கு காபி. நான் அந்த தெருவுக்குப் போயிட்டு வரேன். ராத்திரிக்கு வரமுடியாதோ என்னவோ...’ ‘நீ வந்து இங்கே என்ன செய்யப்போறே. உங்கண்ணா ஆத்துலேயே இருந்துட்டுவா!’

‘ராத்திரி ஜாக்கிரதையா கதவைத் தாப்பா போட்டுண்டு...’

‘ஆகட்டும், ஆகட்டும் போ!’

அவள் தாயார் நார்மடிப் புடவையைச் சரிபடுத்திக்கொண்டு விபூதி இட்டுக்கொண்டு அந்தத் தெருவுக்குப் புறப்பட்டுப் போனாள். சாவித்திரியின் பக்கத்திலிருந்த காபியின் சூடு ஆறிவிட்டது. சாவித்திரியின் உள்ளத்திலிருந்த சூடு ஆறவில்லை.

புருஷன் ஆபீஸ் போனதும் கமலா வந்தாள். ‘அம்மாமி காபி சாப்பிடல்லயா?’

சாவித்திரி அவளை அசூயையுடன் பார்த்துக்கொண்டு ‘ஆறிப் போய்விட்டது, சாப்பிடவில்லை!’ என்றாள்.

‘நான் தரட்டுமா? அவருக்குச் சாயந்திரத்திற்குப் பிளாஸ்கில் போட்டு வைத்திருக்கிறேன். தரேனே, பிறகு போட்டால் போச்சு!’

‘வேண்டாம், எனக்கு வேண்டியிருக்கவில்லை. நெஞ்சைக் கரிக்கிறது.’

‘இன்னிக்கி சினிமாவுக்குப் போவோமான்னேன், நாளைக்கு ஆகட்டும்னார். நீங்களும் வர்ரேளா அம்மாமி?’

‘நன்னாயிருக்கு, நீங்க இரண்டுபேரும் தமாஷா போகிறபோது நான் நடுவில்...’

‘போங்க அம்மாமி!’ என்று சந்தோஷத்துடன் கூறினாள் கமலா. சாவித்திரிக்குக் கமலாவின் பூரிப்பு விஷமாக இருந்தது.

‘என்ன அம்மாமி, உடம்பு ஒரு மாதிரி இருக்கேளே?’

‘எனக்கென்ன கேடு, ஒன்றுமில்லை.’

‘கருகிய மொட்டு’ என்று ஒÊரு நாவல் கொண்டு வந்திருக்கிறார். படிக்கலாமா?’ என்று சொல்லி, கமலா எழுந்துபோய் புத்தகத்துடன் வந்து உட்கார்ந்தாள்.

மேல் அட்டையில் சித்திரம் ஒன்று. அதை கமலா வெட்கத்துடனும் சிரிப்புடனும் சாவித்திரிக்குக் காட்டினாள்.

ஒருவன் நாற்காலியில் உட்கார்ந்து ஆழ்ந்து யோசனையிலிருக்கிறான். கையிலிருந்த புத்தகம் கீழே விழுந்து கிடக்கிறது. பின்னால் மனைவி வந்து புன்னகையுடன் நிற்கிறாள். அவனுக்குத் தெரியாமல்.

‘இதற்கு என்ன அர்த்தம் அம்மாமி?’ என்று கமலா கேட்டாள்.

‘புருஷன் ஏதோ கவலைப்பட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கிறான். தருணம் தெரியாமல் அசட்டுமனைவி சிரித்துக்கொண்டு வந்து நிற்கிறாள்போல் இருக்கிறது.’

கமலாவின் புன்னகை மறைந்துவிட்டது.

‘அப்படியா இருக்கும்?’

‘வேறென்ன இருக்கப்போகிறது?’ என்று சாவித்திரி சிரித்துக்கொண்டே குரூரமாகச் சொன்னாள்.

‘இருக்காது, அம்மாமி!’

‘பின் எப்படி இருக்கும்?’

‘வந்து, வந்து புருஷன் அவளை, நினைத்துக்கொண்டே படிக்கிறான். மெய்மறதியில் புத்தகம் கீழே விழுகிறது. அவள் வெகு நேரம் வரவில்லை. கடைசியில்...’

‘அதுதான் இருக்கவே இருக்கே!’

‘படிக்கலாமா?’

‘படியேன்.’

கமலா படித்தாள் வெகுநேரம். சாவித்திரி காதில் எவ்வளவு விழுந்ததோ?

‘ஐயோ, நாழியாகிவிட்டதே! படித்துக்கொண்டே இருந்துவிட்டேன். போகிறேன்!’ என்று கமலா மாலை ஐந்து மணிக்கு எழுந்து தன் வீட்டிற்குப் போனாள்.

சாவித்திரி எழுந்திருக்கவில்லை. வீடு கூட்டுகிறவள் வந்தாள். ‘நான் கூட்டிக்கொள்கிறேன் போ!’

பூக்காரி வந்தாள்.

‘இன்னிக்கிப் பூ வாண்டாம்!’

இருட்டிவிட்டது. இருட்டி வெகுநேரம் ஆகிவிட்டது. ராகவனும் கமலாவும் கொட்டம் அடித்தது அவளுக்குச் சகிக்கவே இல்லை. வீட்டில் அயலார் இருப்பதுகூட அவர்களுக்கு நினைவில்லையா? ஆத்திரத்துடன் எழுந்து மின்சாரவிளக்கைப் போட்டுவிட்டு மறுபடியும் படுத்துக்கொண்டாள்.

‘இலை போட்டுவிட்டேனே வாருங்களேன்!’ என்றால் கமலா.

‘அதற்குள்ளா... இப்பவே சாப்பிட்டுவிட்டு...’

‘எனக்குத் தூக்கம் வருகிறது.’

‘தூக்கம் வருகிறதா!’ என்று ராகவன் சிரித்தான். சாவித்திரி காதில் எல்லாம் விழுந்தது.

கமலா இலையை வாசலில் கொண்டு போட்டுவிட்டு கம்பிக் கதவையும், ரேழிக் கதவையும் தாழ்ப்பாளிட்டுக்கொண்டு திரும்பினவள் எதிர்த்த உள்ளில் சாவித்திரி மயங்கி மயங்கிப் படுத்துக்கொண்டிருந்ததைப் பார்த்து, ‘அம்மாமி, சாப்பிட்டாச்சா?’ என்றாள்.

‘ஆச்சு!’

கமலா உள்ளே போய்த் தாளிட்டுக் கொண்டாள்.

கலியாணக்கூடம் போட்ட வீடு. இரண்டு பக்கங்களிலும் குடி. இரண்டு பக்கக்கூடத்து உள்ளுகளுக்கும், ரேழியிலும் கதவுகள்.

இரவு எட்டே மணிதான் இருக்கும். ஊர் ஓசைகூட அடங்கவில்லை. கமலாவின் பக்கத்தில் ஓசை அடங்கிவிட்டது. சாவித்திரிதான் எழுந்திருக்கவே இல்லை.

‘ராகவன்!’ என்று வாசலில் மெதுவான குரல் கேட்டது.

முதலில் சாவித்திரி வாயை மூடிக்கொண்டு இருந்துவிட்டாள். பிறகு Êஏதோ நினைத்துக்கொண்டு எழுந்து மெதுவாக ரேழிக்கதவைத் திறந்துகொண்டு திண்ணையண்டை போனாள்.

வாசலில் ராகவன் வயதுள்ள வாலிபன் ஒருவன் நின்று கொண்டிருந்தான்.

‘ராகவன் இருக்கிறாரா?’

‘இருக்கார்!’ என்று சாவித்திரி கம்பிக் கதவைத் திறந்துவிட்டு உள்ளே திரும்பினாள்.

வாலிபன் ரேழிக்கு வந்து தயங்கினான்.

சாவித்திரி சற்று மெதுவான குரலில் ‘அந்த ரேழிக்கதவைத் தட்டுங்கள்!’ என்றாள் ஜாடையுடன்.

வாலிபன் திரும்பவும் தயங்கினான்.

‘வெறுமனே தட்டுங்கள், திறப்பார்!’ என்றாள். ஒருவிதமான குரூர ஆனந்தத்துடன் சொல்லிவிட்டுத் தன் அறைக்குள் போய் உட்கார்ந்து கொண்டு, ஆவலுடன் நடைபெற போவதை எதிர்பார்த்தாள்.

வாலிபன் ‘ராகவன்’ என்று கதவைத் தட்டினான்.

சிறிது நேரங்கழித்து ‘யார்?’ என்ற உறுமல் கேட்டது.

‘நான்தான்!’

‘நான்தான் என்றால்?’ என்று சீறிக்கொண்டு ராகவன் கதவைத் திறந்துகொண்டு உள்ளே இருந்தபடியே எட்டிப்பார்த்தான்.

‘நான்தான் சீனு, மதுரை.’

‘ஓ, வாருங்கள்!’ என்று ராகவன் பலதரப்பட்ட உள்ளக்கலவரத்தில் கதவைத் திறந்தபடியே விட்டுவிட்டு ரேழியில் நுழைந்து சீனுவை வாசலுக்கு அழைத்துக்கொண்டு போனான்.

ஒரு வினாடி சீனுவின் கண்களில் ஒரு காட்சி தென்பட்டது. மின்சார விளக்கு எரிந்துகொண்டிருந்தது. வாசற்படிக்கு எதிரே கமலா ஆடை நெகிழ்ந்த நிலையில் படுத்திருந்தவள் ராகவன் உடம்பு கதவு திறந்த இடத்திலிருந்து விலகினதும் சடாரென்று எழுந்து கட்டிலை விட்டுக்குதித்து சுவரோரம் ஓடினாள்.

சாவித்திரி இன்னும் கொஞ்சம் நன்றாகப் பார்த்தாள். கமலா தலையில் கட்டுப்பூ தொங்கிக்கொண்டிருந்தது. அறையிலிருந்து மல்லிகை வாசனையும் ஊதுவத்தி வாசனையும் கம்மென்று வெளியேறின.

அந்தரங்கம் திறந்துகிடந்தது போன்ற அந்த அறையை அதற்கு மேல் அவளால் பார்க்கமுடியவில்லை. ஏகாந்தம் ஆடையற்று நின்றது போன்ற அந்த ஒளி அவள் கண்களுக்குக் கூச்சத்தைக் கொடுத்தது. சத்தப்படாமல் அறைக்கதவைச் சாத்திக்கொண்டாள்.

திடீரென்று ஒரு வருத்தமும், பச்சாதாபமும் தோன்றி அவளைத் தாக்கின.

‘என்ன காரியம் செய்தேன்!’ என்ன பாவம் செய்தோ, யாரைப் பிரித்துவைத்தோ இப்பொழுது இப்படித் தனியாகக் கிடந்து தவிக்கிறேன். ஐயோ...’

அளவற்ற ஆவலில் ஒன்றையொன்று கவ்விக்கொண்டு கலந்த இரண்டு உள்ளங்கள் ஒரு கணத்தில் சிதறி தூரத்தில் விழுந்தன. கமலா கண்ணீர் பெருகாத தோஷமாக, மகாகோபத்துடன் ஆடையைச் சீர்திருத்திக்கொண்டு விளக்கை அணைத்துவிட்டுப் படுக்கையில் படுத்தாள்.

சீனுவை அனுப்பிவிட்டு ராகவன் உள்ளே வந்தான்.

மெதுவாகக் கட்டிலில் ஏறிக் கமலாவைத் தொட்டான். கமலா அவன் கையைப் பிடுங்கி உதறி எறிந்தாள்.

‘இன்னொரு கதவையும் நன்றாகத் திறந்து விடுகிறதுதானே!’

‘ஓ, ஞாபகமில்லை கமலா!’

‘ஞாபகம் ஏன் இருக்கும்?’

‘சின்ன விஷயத்துக்கு ஏன் பிரமாதப் படுத்துகிறாய்?’

‘சின்ன விஷயமா? என் மானம் போய்விட்டது.’

ராகவனுக்கு அதுவும் இதுவுமாக எரிச்சல் கிளம்பிற்று.

‘எவ்வளவு போய்விட்டது?’ என்று சீறினான்.

‘போதும் வாயை மூடுங்கள். அண்டை அயல் இருக்கிறது!’ என்று அவளும் சீறினாள்.

சாவித்திரியின் காதில் இதுவும் விழுந்தது. குப்புறப்படுத்துக்கொண்டு விம்மி விம்மி அழுதாள்.

‘பாவியை என்ன செய்தால் என்ன?’ என்று புலம்பினாள்.

கமலா மூக்கைச் சிந்தும் சத்தம் கேட்டது.

‘திருப்திதானா பேயே!’ என்று சாவித்திரி தன்னைத் தானே உரக்கக் கேட்டுக்கொண்டாள்.

திரை - கு.ப.ரா

  Ramprasath 

http://naanmowni.blogspot.in/2009/12/blog-post_2253.htmlHariharan 

கு.ப.ரா
தான் வந்து இரண்டு நாட்களாகியும் ராஜம் தன்னிடம் பேசக்கூட மாடிக்கு வராதது அவனுக்கு மிகவும் வியப்பாக இருந்தது. தான் ஒரு விதமாகவும் பிசகு செய்ததாக அவனுக்குத் தெரியவில்லை. ஆகையால் அவள் கோபித்துக் கொண்டிருப்பாள் என்பதற்கும் இடமில்லை. அதுவுமின்றித் திருமண மான பிறகு, முதல் முதலாக அப்பொழுதுதான் அவளைப் பார்க்க வந்திருந்தான். அதற்கு முன் நேரில் கண்டு பேசினதே இல்லை. ஆகையால் எந்தக் காரணத்தைக் கொண்டும் அவள் அதற்குள் கோபித்துக் கொள்ள முடியாது.

modern-art-10

ஒருவருக்கொருவர் இடைவிடாமல் கடிதங்கள் எழுதிக்கொண்டார்கள். அவற்றில் அவ்வளவு ஆர்வத்துடனும் உணர்வுடனும் எழுதிவிட்டு, நேரில் வந்தபோது ஏன் அவள் அப்படி இருந்தாள் என்பதுதான் அவனுக்குப் புரியவில்லை. தின்பண்டம், பலகாரம், காப்பி எல்லாம் மாமியார் கொண்டுவந்து வைத்தாள். தாம்பூலம் மடித்து வந்தது, அதை யார் மடித்தார்கள்?

மாடி அறையில் அவன் தனியாக எவ்வளவு நேரந்தான் அவளை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பது? பகலெல்லாம் எதிர்பார்த்தான்; இரகசியமாக வருவாளோ என்று இரவில்கூட வெகுநேரம் விழித்துக் கொண்டு படுக்கையில் கிடந்தான்.

கடிதத்தில் வெகு துணிச்சலாக எழுதிவிட்டாள். நேரில் கண்டவுடனே வெட்கம் மேலிட்டு விட்டது போல் இருக்கிறது! ஒருவேளை அப்படி அசடுபோல் கடிதத்தில் எழுதி விட்டோமே என்று பயந்தே தன்னிடம் வராமல் இருந்தாளோ என்று எண்ணினான்.

என்ன சமாதானம் செய்து கொண்டாலும் அவள், அவ்வளவு அருகில், தன்னிடம் வராமல் இருந்ததன் காரணம் அவனுக்கு விளங்கவே இல்லை.

இரண்டாவது நாள் இரவு எட்டு மணி. தொலைவில் கோவிலிருந்து திருவிழாக் கொட்டு முழக்குச் சத்தம் கேட்டது. தெருவில் பெண்கள் கும்பல் கும்பலாகக் கோவிலுக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். சாளரம் வழியாக உள்ளே விழுந்த வெண் நிலவு அவனது இருதயத்தை வலைபோட்டு வெளியே இழுப்பதுபோல இருந்தது. வெளியுலகத்து இன்பம் அவனை 'வா, வா' என்று அழைத்தது. ஆனால் அப்பொழுது அவனுக்கு அதெல்லாம் காதில் ஏறவில்லை. அந்த அழகு அவன் கண்களில் படவில்லை. அவன் உள்ளம் முழுவதும் ராஜத்தின் மேல் இருந்தது. அவள் எழுதின கடிதங்களின் வாக்கியங்களும் அவளுடைய முகமும் கண்களுமே அவன் முன் நின்றன.

அன்றிராவாவது கட்டாயம் ராஜம் தன்னிடம் வருவாள் என்று எண்ணினான். நடுப்பகல் வேடிக்கையாக மைத்துனனைப் பார்த்து, "உன் அக்கா இந்த ஊரில்தானே இருக்கிறாள்?" என்று கேட்டான். அதைக் கேட்டுக் கொண்டிருந்த மாமியார்கூடக் கொஞ்சம் பதறிப் போய் ஏதோ குசுகுசுவென்று யாருடனோ பேசினாள். யாருடனோ என்ன, 'அவளுடன்' தான். ஆகையால் தன்னுடைய மனநிலையை ஒருவாறு அவர்கள் அறிந்திருந்ததால் அன்றிரவு கட்டாயம் வருவாள் என்றே எதிர் பார்த்தான். முதல் நாளிரவு பாவம், வெகுநேரம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சிரமத்தால் தன்னை அறியாமல் தூங்கிப் போய்விட்டான். மறுநாள் காலையில் அவனுக்குக் கோபமும் துக்கமும் வந்து, காப்பி வேண்டாம் என்று சொல்லி விடலாமா என்றுகூட எண்ணினான்.

கீழே வீணை மீட்டும் சத்தம் கேட்டதும் சற்று நேரத்திற்கெல்லாம் சங்கராபரணத்தில் "தாரி சூசுசுன்னதி நீது ப்ரியா" என்ற ஜாவளியை யாரோ பாடிக்கொண்டே வாசித்தார்கள். வேறு யார்? அவள்தான்!

"உன் காதலி உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள், உன் வழி நோக்கிக் கொண்டிருக்கிறாள்" என்று பொருள்படத் தொடங்கிய அந்தப்பாட்டு, படுக்கையறையின் அலங்காரத்தைக் கவர்ச்சி கரமாகச் சித்தரித்தது. இசையும் பாட்டுமாகக் கலந்து அவனது உள்ளத்தை உருக்கின.

"ஆகா! நல்ல ரசிகையாக அல்லவா இருக்கிறாள் ராஜம்! ஏன் இருக்க மாட்டாள் அவளுடைய கடிதங்களே அவ்வளவு கதையாக இருந்தனவே! என்ன வாசிப்பு, என்ன சாரீரம். இதற்கு மேற்பட்ட இன்பம் கிடையா... ஆனால் இதோடு அவளுடைய வாய் வார்த்தை ஒன்றை, என் முன்பு, என் ku.ba.ra பக்கத்தில், நான் கேட்டால்... இன்பத்தின் மின்னொளியைப் பாய்ச்சும் அவளுடைய கைபட்டதும் எழும்பும் இனிமை என்னுள் பாய்ந்தால் என்ன பேறு பெறுவேன்! ராஜம் வேண்டுமென்றுதான் இப்படி ஏக்கத் தீயிட்டு என் உள்ளத்தை வாட்டுகிறாளோ? எதற்காக இந்தச் சோதனை? என் கடிதங்களில் காணவில்லையா அவள், என் உள்ளத்தின் வேட்கையை? பெண்ணின் கொடுமை உன்னிடங்கூடத்தான் இருக்கிறது. உன் இங்கிதமும், புத்தியும், தேர்ச்சியும், ஈரமும் எங்கே? உன் கடிதங்களிலேயே நின்றுவிட்டனவே அவை! இல்லை, இது சரியன்று. ராஜம் உடனே வீணையைக் கீழே வைத்துவிட்டு என்னிடம் வா! அந்த வீணை எதற்கு உனக்கு? என் இருதய வீணையை மீட்டி வாசி, சுருதி கலைந்து கிடக்கிறேன் நான். குழைவற்றிருக்கிறேன். உன் இழைக்கும் விரல்களால், என்னைச் சுருதி கூட்டிச் சரி செய்து, உன் விரல் விந்தையால், விண்ணொலி கொள்ளச் செய்" என்று உணர்ச்சி மேலிட்டவனாய்த் தனக்குள்ளேயே பிதற்றிக் கொண்டிருந்தான் அவன்.

"உன் காதலி வழி நோக்கிக் கொண்டு கத்திருக்கிறாள்" என்ற பல்லவி திரும்பத் திரும்ப ஓர் ஏக்கக் குரலாக வந்து அவன் காதில் தாக்கிற்று. அவனுக்கு அங்கே இருக்க முடியவில்லை. எழுந்து கீழே இறங்கிப் போனான்.

முற்றத்திலிருந்த மாடிப்படியின் உச்சியில் நின்று கொண்டு கூடத்தைப் பார்த்தான். அங்கே கையில் வீணையுடன் உட்கார்ந்திந்தாள்! ராஜம் அல்ல! அவளுடைய தமக்கையாகத்தான் இருக்க வேண்டும். ஆமாம் அவள் பிறந்த வீட்டில் இருப்பதாகத்தான் சொன்னார்கள். அவள் ஒரு வருஷத்திற்கு முன்பு கணவனை இழந்தவள், பாவம்! அவள் கதை ஒரு சோக நாடகம். எல்லோரும் கதை கதையாகச் சொன்னார்கள். நிரம்பக் கெட்டிக்காரி: அழகு என்றால் அப்படி; கணவன் ஒரு குடிகாரன்; ஈரல் வீங்கி இறந்தான். குடும்பம் என்று அவள் நடத்தி அறியாள்.

அவளா வீணை வாசித்தது! ஏன் அப்படி வாசித்தாள்? வீட்டில் மற்ற எல்லோரும் எங்கே? கோவிலுக்குத்தான் போயிருக்க வேண்டும் - ராஜம் கூட! ஒருவரும் வீட்டில் இல்லாதபொழுது, ஏன் இவள், அவன் கேட்கும்படி வீணையை எடுத்து வைத்துக் கொண்டு இப்படி உருக வேண்டும்?

திடீரென்று அவன் உலுக்கி விழுந்தான். ஒரு வேளை கடிதங்களெல்லாம் இவள் எழுதினவைதாமோ? ராஜத்தின் பெயரை வைத்து இவள்தான் அப்படி உள்ளத்தைக் கொள்ளை கொண்ட முறையில் எழுதினாளோ? ஆமாம், அப்படித்தான் இருக்க வேண்டும்! இல்லாவிட்டால் அவ்வளவு எழுதினவள் இப்போது அருகில்கூட வராமல் இருப்பாளா?

மடமடவென்று அவன் மாடிப்படி இறங்கினான். வீணையும் கையுமாக உட்கார்ந்திருந்த சரசுவதி சட்டென்று வீணையைக் கீழே வைத்துவிட்டு எழுந்திருந்தாள், உள்ளே போய் மறைந்து கொள்ள. அதற்குள் அவன் அவள் அருகில் வந்துவிட்டான். ஒன்றும் செய்யாமல் அப்படியே திகைத்து நின்றாள் சரசுவதி.

கூடத்து மின்சார விளக்கின் வெளிச்சத்தில் அவளது உருவம் நன்றாகத் தெரிந்தது. அவளது உடம்பும் உடையும் ஒரே வெள்ளையாக இருந்தன. தலைமயிரை அசிரத்தையாக முடிந்திருந்தாள். நெற்றியில் குங்குமம் இல்லாததால் அவளது முகம் காலை நேரத்துச் சந்திரன் போல வெளுத்த சோபையற்று இருந்தது. ஆனால் சிறிது நேரத்துக்கு முன்பு வாசித்த பாட்டால் ஏற்பட்ட உணர்ச்சிப் பெருக்கில் அதில் இருந்த சோகம் கொஞ்சம் மறைந்து சற்றே ஒளிர்ந்தது.

"நீதானா கடிதங்கள் எழுதினது?" என்று அவன் உடனே கேட்டான்.

"இல்லை, - அவள்தான் எழுதினாள் - அதாவது" என்று ஒன்றும் மேலே சொல்ல முடியாமல் திகைத்தாள் சரசுவதி.

"உண்மையைச் சொல்லிவிடு!"

"அதாவது அவள் சொன்னாள் - நான் எழுதினேன்" என்று அவள் இழுத்தாள்.

"நிஜமாக!"

"அவள் உள்ளம் சொல்லிற்று, நான் பார்த்து எழுதினேன்."

"எப்படித் தெரியும்?"

"எப்படியா -" என்று கேட்டுச் சற்றுத் தயங்கினாள் சரசுவதி.

பிறகு திடீரென்று அவள், "எப்படியா? நான் நினைத்தது போலத்தானே அவள் நினைத்திருக்க வேண்டும்? ஆகையால் அப்படியே எழுதிவிட்டேன்" எனச்சொல்லிவிட்டு, சொல்லக்கூடாததைச் சொல்லிவிட்டது போலவும் கதிகலங்கினவள் போலவும் நாலு புறமும் பார்த்தாள்.

"மாப்பிள்ளை! நீங்கள் இங்கே நிற்கக்கூடாது. மாடிக்குப் போய்விடுங்கள். அவர்கள் வந்து விடுவார்கள். குடி முழுகிப்போகும்" என்று கெஞ்சினாள் பிறகு.

அவன் தீர்மானமாக அங்கே நின்றான்.
"என்னை ஏன் கூப்பிட்டாய்?" என்று ஏக்கப் பார்வையுடன் கேட்டான்.

"கூப்பிட்டேனா! ஐயோ! இல்லையே! தெரியாமல் செய்திருந்தால் மன்னியுங்கள் - இல்லை - கூப்பிடவில்லை. பிசகு!" என்று சரசுவதி நிலை தவறினவள் போல் பதற்றத்துடன் பேசினாள்.

"ராஜத்தின் மூலமாக -" என்று அவன் ஆரம்பித்தான்.

"இல்லை - வேண்டாம் - எல்லாம் மறந்துவிடுங்கள் தவறு"

"எப்படி மறப்பது சரசுவதி? மறக்கும்படியாகவா எழுதியிருந்தாய் நீ?"

"மன்னியுங்கள்; பிசகு செய்துவிட்டேன் இப்படி ஆகுமென்று தெரியாது!"

"நான் கட்டை என்று எண்ணினாயா?"

"தப்பிதம், தப்பிதம்!" என்று வெறி பிடித்தவளைப் போல சொன்னாள்.

"தப்பிதம் இல்லை; சரசுவதி, உண்மையை எழுதினாய், அல்லவா?"

அவள் குற்றவாளியைப்போல் நடுநடுங்கினாள், உணர்ச்சி மேலிட்டு அழலானாள்.

"சரசுவதி! பயப்படாதே, அம்மா! நீ ஒன்றும் குற்றம் செய்யவில்லை. உண்மையாகவே கட்டைபோல இருந்த என்னைச் செப்பனிட்டு வாத்தியமாக்கி விட்டாய்!"

"இல்லை, இல்லை. அப்படிச் சொல்லாதேயுங்கள்! ராஜந்தான்! நீங்கள் அவள் சொத்து. அவள்தான் உங்களை உருக்க உரிமை பெற்றவள். அவள் எழுதியதாகவே எண்ணுங்கள்."

"இந்தப்பாட்டு -"

"அவள் பாடியதுதான். தேர்ச்சி இருந்தால், அறிந்திருந்தால், அவளே இப்படிப் பாடியிருப்பாள்."

"பாடியிருப்பாள்! - தேர்ச்சியிருந்தால்தானே? சரசுவதி, தைரியமாக நீதான் அவற்றை எழுதினது சொல்லேன், என்ன பிசகு?"

"ஐயோ, கூடாது."

"ஏன்?"

"நான் - நான் - எனக்குக் கை ஏது எழுத? எனக்கு வாய் ஏது - பாட? அவள்தான் என் கை, அவள் தான் என் வாய். அவள் மூலந்தான் எனக்கு வாழ்க்கை. அவள் மூலந்தான் என் உயிர்."

"இன்னும் வேறொன்றும் இல்லையா?" என்று அவன் இளகிக் கொண்டான்.

"உண்டு - அதையும் சொல்ல வேண்டுமா என் வாய் திறந்து?" என்று சரசுவதி ஒருவிதமான அமைதியுடனும் ஏக்கத்துடனும் தன்னையே மறந்து கேட்டுவிட்டாள்.

கோவிலுக்குப் போயிருந்தவர்கள் திரும்பி வந்து வாசற் கதவைத் தட்டினார்கள்.

அவன் மாடிக்குப் போனான். அவள் உள்ளே போனாள்.

இருவருக்கும் நடுவில் மறுபடியும் திரை வந்து கூடிற்று.

ஆனால் திரை என்ன அறியும்?

"ராஜம்! மாடிக்குப் போ!" என்றாள் சரசுவதி, சற்று நேரம் கழித்து.

********
நன்றி:   விட்டல் ராவ் தொகுத்த 'சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்' என்ற தொகுப்பிலிருந்து. வெளியீடு: கலைஞன் பதிப்பகம், 10, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017

தில்லைவெளி - நகுலன்


தில்லைவெளி - நகுலன்



அவன் அதே தெருவில்தான் இருந்தான். அவரும். அவன் பென்ஷன் பெற்ற பிறகு தனது 60 ஆவது வயதில் தொடங்கி (இப்பொழுது அவன் 68 ஆவது வயதிலும்) தான் செய்து கொண்டிருந்த வேலையை ஒரு ட்யூட்டோரியல் காலேஜில் தொடர்ந்து செய்து கொண்டிருந்தான். 9 .30 ல் இருந்து 12 .30 வரை வேலை. பிறகு காலம் அவன் கையில். அது ஒரு சௌகரியமான ஏற்பாடாகவே அவனுக்குத் தோன்றியது. நடுவில் செல்லப்பா எழுதிய "வெள்ளை" என்ற கதை அவனுக்கு அடிக்கடி ஞாபகம் வரும். போலவே "வாழ்க்கையில் காதல்" என்ற கதையில் அவர் படைப்புத் தொழில் குறித்து சிருஷ்டி பரமாக எழுதியது. அவன் பிரக்ஞையில் அடிக்கடி தோன்றி மறைந்து தோன்றி மறைந்த வண்ணம் இருந்துகொண்டே இருந்தது. இதெல்லாம் இருந்தும் நடுவில் நடுவில் வாழ்க்கைக் கசப்பை மறக்கப் பிராந்திக் கசப்பும் வேண்டித்தான் இருந்தது. எல்லாமே அப்படித்தான். ஆனால் இதையெல்லாம் பின்தள்ளி அவர் உருவம் விசுவரூபமாக அவன் மனதில் என்றுமே உருக்கொண்டு உருக்கொண்டு அவனைக் கவனித்துக் கொண்டே இருந்தது.


இப்பொழுதெல்லாம் அவன் வேலை செய்யும் ஸ்தாபனத்தில் திரும்பி வரும்பொழுது அவர் வீட்டைப் பார்த்துகொண்டு வருவான். வீடு காலியாகப் பூட்டப்பட்டிருந்தது. உள்ளில் சுவர்கள் பச்சை வண்ணம். நடுஅறையில் ஒரு சாய்வு நாற்காலி. வருபவர்களுக்கு ஒரு ஸெட்டி. எதிரில் ஒரு டி.வி. மனைவியை இழந்த பிறகு அவரும் தனிமையை உணர்ந்திருக்கவேண்டும். அவன் மனம் இதே தடத்தில் சென்று கொண்டிருந்தது. இன்று அவர் வீட்டில் சாய்வு நாற்காலி, ஸெட்டி, டி.வி. கார் இல்லை. ஏன், அவரே இல்லை. இல்லை? அவ்வீடு என்றுமே திகம்பரமாகத் தில்லை வெளியாக இருந்தது.


அவரைப் பற்றியே மனம் சுற்றிச் சுற்றி வந்தது. ஒரு நாள் அவனை வழக்கம் போல் கைதட்டிக் கூப்பிட்டார். போனான். கேட்டார். "உனக்கு எவ்வளல்வு பென்ஷன்?" சொன்னான். மறுபடியும் கேட்டார். "என்ன சொல்கிறாய்? இவ்வளவுதானா? D .A . உண்டென்பது தெரியாதா? ". அவன் ஒன்றும் சொல்லவில்லை. சொன்னார். "உன்னை எனக்குத் தெரியும். நீ ஒரு சண்டைக் கோழியாக மாறவேண்டும் என்று நான் சொல்லவில்லை. அரசாங்கத்திற்கு இதைப்பற்றி எழுதினால் கிடைக்கும். எழுது. சும்மா இருந்து விடாதே". அவன் தலையை அசைத்து விட்டு திரும்பி விட்டான். அடுத்த நாள் தன் கைத்தடியை தாங்கிக்கொண்டு அவன் அறை ஜன்னல் முன்வந்து நின்றார். கேட்டார். "எழுதினாயா?". அவன் பேசவில்லை. மறுபடியும் சொன்னார். "நீ இவ்வாறு இருந்தால் போதாது. என்னுடன் வா" என்றார். அவன் போனான். கடிதத்தை எழுதச் சொன்னார். எழுதினான். அவரே ஒரு போஸ்ட் கவரைக் கொடுத்துத் தபால் பெட்டியில் போடச் சொன்னார். போட்டான். இரண்டு வாரம் கழித்து மறுபடியும் கைத்தடியைத் தாங்கிக்கொண்டு அவன் அறை ஜன்னல் முன் நின்றார். அவன் அவரை உள்ளே வரச் சொல்லி நாற்காலியில் உட்காரச் சொன்னான். உட்கார்ந்தார். கேட்டார். "பதில் வந்ததா?". "சாதகமாகவே வந்திருக்கிறது. சம்பந்தப்பட்ட இலகாவிற்குப் பழைய பாக்கியுடன் D .A . கொடுக்க உத்தரவு சென்றுவிட்டது". மறுபடியும் கேட்டார். "அங்கு சென்று விசாரித்தாயா?". அவன் பேசவில்லை. அவர் பேசினார். "நீ இப்படி இருந்தால் போதாது. குறிப்பிட்ட இலகாவிற்குச் சென்று விசாரி" என்று சொல்லி விட்டுச் சென்றார். அதை அவன் செய்த பிறகுதான் அவனுக்கு அந்த அனுகூலம் கிடைத்தது. அவர் சொன்ன வேறு ஒரு விஷயமும் அவனுக்கு ஞாபகம் வந்தது. "இதோ பார். உனக்கு ஒன்றும் தெரியாது. இந்த உலகம் ஒரு மாதிரியானது. எந்த விஷயத்திலும் கடைசி வரை ஊர்ஜிதமாக இருந்து நாம்தான் எல்லாவற்றையும் செய்யவேண்டும். உணர்ச்சிகளுக்கு இடம் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் இந்த உலகம் ஒரு மாதிரியானது".


அவரை அவன் முற்றிலும் புரிந்து கொண்டு விட்டான் என்று சொல்ல முடியாது. அவர் ஒரு உயர்ந்த உத்தியோகத்திலிருந்து பென்ஷன் பெற்றுத் தனியாகத்தான் வீட்டில் இருந்தார். அவருக்குச் சொந்த மக்கள் இருந்தார்கள் என்றாலும், அடிக்கடி அவனிடம் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல், நம்பிக்கையுடன் சமயோசிதமாகச் சிந்திக்க நீ என்னைப் பழக்கிக் கொள்ளவேண்டும் என்பார்.


இன்னும் அவன் வழக்கம்போல் வீடு திரும்புகையில் அந்த காலி வீட்டைப் பார்த்துக் கொண்டுதான் வந்தான். இது இப்பொழுதெல்லாம் ஒரு அர்த்தம் நிறைந்த பழக்கமாகி விட்டது. மறுபடியும், மறுபடியும் அவர் நினைவு அவனைச் சூழ்ந்தது. உடல் இடம் கொடுத்த வரையில் அவர் வீட்டிலிருந்து சற்றே தொலைவிலிருந்த கோவிலுக்கு அங்கு சேர்கிற வரை "ஹரே கிருஷ்ணா. கிருஷ்ண ஹரே "என்று ஓங்கிய குரலில் சப்தித்துக் கொண்டே போவார். அதே மாதிரி அவர் வீடு திரும்புகையில், வீடு எட்டும்வரை இதைச் செய்வார். ஒரு முறை அவன் அவரிடம் கேட்கவும் செய்தான். "ஏன் இவ்வாறு தெருவெல்லாம் கேட்க கிருஷ்ண கோஷம் செய்துகொண்டு போகிறீர்கள் ?"சொன்னார், "உனக்கு ஒன்றும் தெரியாது. பல முறைகளில் இந்தப் பழக்கத்தால் அனுபவபூர்வமாக எனக்குப் பல அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன. நீ சாது என்றாலும் நீயும் இந்த தலைமுறையைச் சார்ந்தவனாதலால் இதெல்லாம் உனக்குப் புரியாது" என்றார். அவனும் அவரை முழுவதும் புரிந்துகொண்டான் என்று சொல்லமுடியாது. ஒரு முறை அவன் வீட்டில் யாருமில்லை. அன்று வீட்டு வேலைக்காரி வரவில்லை. (அவருக்கு அவன் தனியானவன் என்றதால் ஒருவித அனுதாபம் இருந்தது) அவன் வீட்டின் முன் தளத்தில் இருந்தான். சாப்பிடும் இடத்திலிருந்து ஒரு ஓசை கேட்டது. சென்று பார்த்தான் தரையில் ஒரு நீண்ட சாரைப் பாம்பு அவனைக் கண்டதும் ஓடிவிட்டது. இருநாட்கள் அந்தப் பக்கம் அவன் போகாமலே இருந்தான். மூன்றாவது நாள் அவரிடம் சென்றான். சொன்னான். சொன்னார், "ஒரு ஐந்து ரூபாய் கொடு, நான் வழக்கம்போல் கோவிலில் ஒரு நாக பூஜை செய்கிறேன்" என்றார். அவன் அவரைப் பார்த்தான். அவர் அவனைப் பார்த்துச் சொன்னார். "நான் உண்மையாக நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன். கேட்கிறாயா?" என்றார். அவன் தலையை அசைத்தான். "எங்கள் பூர்வீகத்தில் ஒரு கிழவர் இருந்தார். ஒரு வகையில் சித்திகள் பெற்றவர். பாம்புக் கடியால் மரித்தவரை உயிர் பிழைப்பிக்க வல்லவர். இது அவர் குருவிடமிருந்து படித்தது. ஆனால் அந்தக் குரு அவர் அதைப் பிரயோகித்தால் அவர் மரணம் அடைவார் என்றும் சொல்லியிருந்தார். பிறகு அவர் நெருங்கிய உறவில் ஒரு இளைஞன் பாம்புக்கடியால் இறந்து விட்டான். அவன் பெற்றோர்கள் அவன் சடலத்தை அவர் முன்கிடத்தி அவனுக்கு உயிர்ப் பிச்சை அளிக்குமாறு கெஞ்சினார்கள். அவர் சிறிது நேரம் பேசாமலிருந்து விட்டு ஒரு பிடி அரிசியைக் கொண்டுவரச் சொல்லி அதைத் தரையில் வாரி இறைத்தார். உடன் ஒரு பட்டாளம் எறும்புகள் அங்கிருந்து சென்று திரும்பி வர கடித்த பாம்பும் வந்தது . எறும்புகள் சுற்றி வளைத்த அப்பாம்பு தன் தலையை தரையில் அடித்துக் கொண்டு செத்தது. அந்த இளைஞனும் தூக்கத்தில்லிருந்து எழுந்தவன் மாதிரி உயிர் பெற்றான்." இதைச் சொல்லிவிட்டு அவர் சிறிது நேரம் பேசாமல் இருந்து விட்டுப் பின், "ஒரு வாரம் கழித்து அந்தக் கிழவரும் இறந்தார்". அவன் பேசாமல் இருந்தான்.


அவர் மறுபடியும் சொன்னார். "இதிலெல்லாம் உனக்கு நம்பிக்கை வராது. ஆனால் எனக்கு அப்படியில்லை." இதைப் போலவே அவரிடமிருந்து உலக வாழ்வைப்பற்றி, அதீத அனுபவங்களைப் பற்றி அவன் பலவற்றைத் தெரிந்துகொண்டான்.ஒரு நாள் மாலை அவரைப் பார்க்க வேண்டும்போல் தோன்றவே அங்கு சென்றான். ஒரு சிலர் இருந்தார்கள் மௌனபூர்வமாக.

கேட்டான் "அவர் இருக்கிறாரா?"


"நேற்று மாலை உங்கள் சிநேகிதர் அவர் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது திடீரென்று காலமாகி விட்டார்."


அவன் திரும்பி விட்டான். இப்பொழுதும் அவன் அத் தெரு வழியில் போகும் பொழுதெல்லாம் அந்த வீட்டைப் பார்த்துக்கொண்டுதான் சென்றான். ஆனால் அதைக் காலி வீடு என்று அவனால் நம்பமுடியவில்லை.

தட்டச்சு உதவி: ரமேஷ் கல்யாண்
http://aamadavan.wordpress.com/2013/07/05/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA/.நகுலன் என்றொரு இலக்கியப் புதிர்-ஆ மாதவன்
05
வெள்ளி
ஜூலை 2013
Posted by பாலா.ஆர் in Uncategorized ≈ பின்னூட்டமொன்றை இடுக
நினைவோடை

    இம்மாதம் 18_ஆம் தேதி இரவு பதினோரு மணியளவில், நகுலன் எனும், அற்புத, அதிசய, அபூர்வ, குண நலம் கொண்ட தமிழ் எழுத்தாளன். திருவனந்தபுரத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார். 85 வயதில்_இடையே ஏறத்தாழ ஒரு பத்தாண்டு காலம். அவர் இந்த நிஜ உலகில் இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். திட நினைவில்லாத தடுமாற்ற உணர்வு நிலை. ‘‘நீங்கள் தானே மாதவன்? நான் நாஞ்சில் நாடனுடன்தான் பேசிக் கொண்டிருந்ததாக நினைத்தேன்… சுந்தரராமசாமி இப்பொழுதெல்லாம் வருவதே இல்லை… பார்த்து நாளாயிற்று…’’ இப்படியாக

கவிதா சண்முக சுப்பையா, நீல.பத்மநாபன், இருவரும் இங்கே அவருக்கு நெருக்கமான நட்பு வட்டாரத்திலுள்ளவர்கள். இதில் அவருக்கு நெருக்கமான சுப்பையா காலமாகிவிட்டார். மரணம் பற்றி, திருமணம் பற்றி, இல்லறம் பற்றி, தாயன்பு பற்றி, சகோதர பந்தங்கள் பற்றியெல்லாம், அதீதமான_அழுத்தமான, அற்புதமான தத்துவ தீர்மானங்களை வகுத்திருந்தார், இந்த பிரம்மசாரி!

தமிழில் கவிதைகள் எழுதினார். ஆங்கிலத்திலும் அந்த அளவில் வீச்சோடு தீட்சணமாக கவிதை நூற்கள் படைத்த இவர், கதைகளிலும் நாவல்களிலும்தான் பெரும்பான்மை பெற்றிருந்தார் எனலாம். க.நா.சு., கு.ப.ராஷகோபாலன், ந. முத்துசாமி என்றெல்லாம் பழகிய வட்டமும், சுந்தர ராமசாமி, நாஞ்சில் நாடன் என்றிவ்வாறு நட்பு தொடர்பும் பெற்றிருந்தாலும் யாரையும் முன் மாதிரியாகவோ, ஏற்றி வைத்து ஒப்புக் காட்டவோ செய்யாத பண்பு நலம் நகுலனுடையது!

Image

‘நினைவுப்பாதை’ தொட்டு ஆறேழு முழு நாவல்களும், ‘கோட்ஸ்டாண்டு கவிதைகள்’ என்ற வேறு நான்கு கவிதைத் தொகுதிகளுமாக தமிழுக்கு படையல் தந்துள்ள நகுலன், தமிழின் பெரும்பான்மை வாசகர்கள் அறியாத தத்துவமுறுக்கின் பிரம்மஞானி. பெரிய எழுத்துச் சிற்பிகளின் தலைமை பீடக்காரர். தேர்ந்த விமர்சகர் ஆங்கிலத்திலும் தமிழிலுமாக நுட்பமான வாசிப்புச் செறிவு கொண்டவர். நான் எனது ‘கிருஷ்ணப்பருந்து’ நாவலை முன்னுரைக்காக அவர் முன் வைத்தபோது_ எழுதிய நானே அறியாத ஒருவித நீரோட்ட உணர்வைச் சுட்டிக் காட்டி எனது பலத்தையும் பலவீனத்தையும் பகுத்துக் காட்டி… ‘அஹ்ஹா…’ என்று, அவருக்கே உரித்தான அந்த ‘மாஸ்டர் பீஸ்’ சிரிப்பைக் காணிக்கை ஆக்கினார்.

கதைகள் வடித்திடும் அவரது விதேக விசித்திரங்களில், சுசீலா, நவீனன், கேசவமாதவன், எஸ்.நாயர் போன்ற ‘கோட்டுப் பாத்திரங்கள்’ அதிகமாக உலவினர். அனேகமாக, அவரது படைப்புகள், சுய சிந்தனைகளின் திரட்சிப் பாதை வழியாகவே பயணம் செய்தன. இந்த வறட்சி, ‘பைங்கிளி’ கதை பழகிய தமிழ் வாசகனுக்கு எட்டாத, புரியாத அறியாமையாகப்பட்டது.

இனி அவரது விசித்திரமான கதைத் தலைப்போடு (ஒரு ராத்தல் இறைச்சி.) ஆரம்பமாகும் ஒரு கதையின் துவக்கம், அவரது உண்மை உலகைக் காட்டுவதாக, தத்ரூபமாக அமைந்திருப்பதைப் பார்ப்போம்: ‘‘என் பெயர் நவீனன். சென்ற 25 வருஷங்களாக எழுதி வருகிறேன். நான் எழுதியது ஒன்றாவது பிரசுரமாகவில்லை. அப்படிச் சொல்வதுகூட பிசகு. சுமார் 15 கதை, குறுநாவல், கவிதை, பிரசுரமாகியிருக்கும். இவற்றில் 13_க்கு ஒரு வித சன்மானமும் கிடைக்கவில்லை. 14_ஆவது கதைக்கு வந்த செக்கை கமிஷன் கழித்து கையில் கிடைத்தது 4ரூ.25.பைசா… நான் ஒரு பெண்ணைக் காதலித்தேன். அவர் பெயர் சுசீலா. அவளுக்குக் கல்யாணம் நடந்தது. இப்பொழுது அவள் என் தாயார். இதை நினைக்கும் பொழுதெல்லாம் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

இருந்தாலும் கல்யாணம் நடைபெறுவதும் குழந்தை பெறுவதும் சர்வசாதாரண நிகழ்ச்சிகள் என்பதும் எனக்குத் தெரியாததில்லை… நான் கடந்த ஐந்து வருஷமாக ஒரு நாய் வளர்த்து வந்தேன். அது ஒரு நாட்டு நாய். மங்கின செங்கல் வர்ணம். வளையாத காதுகள், குள்ளமும் இல்லை உயரமுமில்லை. நல்ல முரட்டுத் தேகம். அதற்கு நான் ராஜி என்று பெயர் வைத்திருந்தேன். அதற்கு இப்பொழுது வயோதிகம் தட்டி விட்டது. இருந்தாலும், அது என்னிடம் அன்பாக இருந்தது. சில நாட்கள் நான் அதனுடன் பேசுவேன்…’’ …நகுலனின் ஒட்டுமொத்தமான _ அவரே குறிப்பிடுவது போல பத்துப் பதினைந்து படைப்புகளின் உள்படிமான உணர்த்தல்களுக்கு எடுத்துக் காட்டு …. இவை. நகுலன், உரக்க மந்திர உச்சாடனம் செய்யாத வால்மீகம் மூடி வளர்ந்த தத்துவஞானி. வாய்வீரம் பேசாத வாள் வீச்சுக்காரன். மணம் உள்பொதிந்த விடிகாலையின் பாதிவிரிந்த மலர். அவரது அந்தரங்கமே அவரது கவிதைகள், கதைகள், நிஜவாழ்வின் ஈரவிறகுகள் போன்ற குமைவுகளை படிமங்களாகக் கொண்டு அவர் இலக்கியம் படைத்தார்.

‘இன்னார் போல் அவர்…’ என்று எடுத்துக் காட்டிட முடியாத அந்தத் தத்துவப் பேழை. இங்கே 85 ஆவது வயதின் தொடக்கத்தில் திருவனந்தபுரத்து மலையாள மயானத்தில் அடங்கிப் போய் விட்டது. வருங்கால அறிவு உலகம் நகுலனின் உத்வேக உணர்வுகளை மனதிலேற்றிக் கொண்டால், தமிழ் இலக்கிய உலகம் விழிப்பில் பார்வைத் தெளிவு கொள்ளும் என்பது உண்மை!

நன்றி : தீராநதி

பதிவேற்றியவர்: பாலா.ஆர்





Thursday, January 05, 2012

மௌனியின் உலகு-வெங்கட் சாமினாதன்


மௌனி 
        - பிரமிள் 

முன் ஒருநாள் நீர் தேடி 
புத்தகப் பாலையின் முள் எழுத்தில்
வழிபிடித்து நடந்தான் அவன்.
தூரத்தே தத்தளித்த 
தரிசனத் திசை தவ்றி
முள்முள்ளாய்த தைத்தன
தத்துவ நெருஞ்சிகள் .  

பின் ஒரு நாள் தோள்க்கழியில் 
தொங்கிய முன்பின் 
பதநீர் க் குடங்களிடை 
தாகம் தாகம் என தவித்து 
எதிரே தத்தளித்ததை
தொடர்ந்தான் அவன்.
கைக்கெட்டி எட்டாமல் 
அதே தொலை தூரத்தில் 
அவனுடன் நகர்ந்தன இருபுறக் குடங்கள் 

என்றோ ஒருநாள் ,
விஷமமாய் அல்லது அகஸ்மாத்தாய் 
அவன் கைப் பேனாவின் பூனை நகம்
நிலவை பிராண்டியது .
முள் கிழித்த முகத்தில் 
பதநீர் இனிப்புடன் 
உதிரம்கசிய 
அவன் கண்டது என்ன?
அதிசயமாய் எதிரே ஒரு
வெண்தாள் வெளியில்
ஆழ ஓடியது இருள் .
அகாதமா ? ஓரளவுக்கு ஆமாம்

இருளின் எல்லையில் 
எதோ ஒன்றன் 
தொலைத் தூர தத்தளிப்பு .
அவன் மறைந்ததும் 
மறையாமல் அவனுக்காய் 
காத்திருக்கும் அது அவன் தேடிய நீரல்ல -
இடையறாத அவனது தாகம் 
தாகத்துக்குதவாத தாரகையின் பாதரசம் .
புகையற்று   தீயின் நிறமற்று
அழிவற்ற  சுடராய் 
எரியும் தவம்.      





மௌனியின் உலகு-வெங்கட் சாமினாதன்
வலையேற்றியது: RAMPRASATH HARIHARAN | நேரம்: 10:12 PM | வகை: கட்டுரை, மௌனி, வெங்கட் சாமினாதன்


வெங்கட் சாமினாதன்

எழுதும் முனைப்போ ஆர்வமோ இல்லாத இந்த எழுத்து மேதை மௌனியைப் பற்றி என்ன சொல்ல? அவர் ஒன்றும் எழுதிக் குவிப்பவர் இல்லை. அவர் முதலில் எழுத ரம்பித்ததே, இதில் ஏதாவது உருப்படியாக செய்யமுடியுமா என்று பார்க்கத்தான். பின்னர் அவ்வப்போது எழுதியது நண்பர்களும் மற்ற எழுத்தாளர்களும் தொடர்ந்த வற்புறுத்தலின் காரணமாகத்தான்.



மௌனியைத் தமிழகத்துக்குத் திரும்ப நினைவூட்டிய மறைந்தே போன அவர் இடத்தைத் திரும்ப புனர்ஜீவித்த க.நா. சுப்ரமண்யம் 1959-ல் மௌனியின் கதைகளைச் சேகரித்து அவர் கதைகளின் தொகுப்பு ஒன்றை புத்தகமாக வெளியிட முயன்றபோது, அது எத்தகைய சாகச வேட்டையாக முன் நிற்கும் என்பதை நினைத்துப் பார்த்திருக்கமாட்டார். கடைசியில் ஒரு பதினைந்து கதைகளை அவர் தேடிப்பிடித்து வெளியிடுவதில் வெற்றி பெற்றார். மௌனி என்ற பெயரில் ஒரு மனிதர் எழுத்தாளர் உண்மையில் இந்த உலகில் இருக்கிறார் என்று நிரூபிக்க, மௌனியை ல்வாயில் நடந்த எழுத்தாளர் மகாநாட்டிற்கு அழைத்துவந்து முன் நிறுத்தினார். பின் வந்த வருடங்களில் மௌனியின் கதைகளைப் புகழ்ந்து பாராட்டும் விமர்சனங்கள் குவியத் தொடங்கின. அதே அளவிலும் எண்ணிக்கையிலும் அவரது எழுத்தைக் குறிந்த கண்டனங்களும் தான்.

தமிழின் சிறுகதை முன்னோடிகள் இரண்டு முனைகளில் போராடியதாகத் தோன்றுகிறது. ஒன்று மொழி சம்பந்தப்பட்ட போராட்டம். இரண்டு, சிறுகதை என்ற இலக்கிய வடிவத்தைக் கையாளுவதில். அவர்களில் புதுமைப் பித்தன் மாத்திரமே எவ்வித சிரமமுமின்றி வெற்றிகண்ட ஒரு மேதையாகவிருந்தார். என்னமோ அவர் பாட்டிலைத் திறக்கவேண்டியது உடனே அடைத்துக் கிடந்த பூதம் அவர் கட்டளையை நிறைவேற்றுவது போலத்தான் மொழியும் வடிவமும் அவருக்கு பணிந்தன. மற்றவர்கள் எல்லாம் சிரமப்பட வேண்டியிருந்தது.

மௌனியின் விஷயத்தில் அந்த போராட்டம் இன்னம் சிரமம் வாய்ந்ததாக இருந்தது. ஏனெனில் அவர் எழுத நினைத்தது அவருக்கே உரிய கருப்பொருளாக இருந்தது. புதுமைப் பித்தனே இது பற்றி எழுதியிருக்கிறார்.

"கற்பனையின் எல்லைக்கோட்டில் நின்று கொண்டு வார்த்தைகளில் அடைபட மறுக்கும்

கருத்துக்களையும் மடக்கிக்கொண்டு வரக்கூடியவர் அவர்(மௌனி) ஒருவரே"

கற்பனை வளமும் மொழித்திறனும் மிக எளிதாகக் கைவரப்பெற்ற ஒரு மாமேதை, தன்னுடைய சிந்தனைகளையும் கற்பனையையும் வெளியிடுவதற்கு மொழியுடன் நிரந்தரப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தன் உடன் நிகழ்கால முன்னோடிக்கு அளிக்கும் இந்த பாராட்டு மிகப் பெரிய பாராட்டுத்தான்.

அக்காலத்திய மற்ற எழுத்தாளர்களைப் போல மௌனியின் போராட்டம் மொழியை ஒரு ஆற்றல் பெற்ற சாதனமாகக் கையாளுவதில் மட்டுமில்லை. மற்றவர்களிடமிருந்து வேறுபட்டதும், தனக்கே உரியதுமான தன் உள்ளுலகை வெளியிடுவதற்கு ஏற்ற வெளியீட்டு மொழியைக் காண்பதற்கும் அவர் சிரமப்படவேண்டியிருந்தது.

அவரது ரம்பத் தயக்கத்தையும் பின்னர் அவருக்கு இருந்த அசிரத்தையையும் மீறி, பின்னர் அவர் ஒரு கதை எழுத உட்கார்ந்து விட்டாரானால், அவர் தான் சொல்லவிரும்பியதைச் சொல்லும் வகையில் மொழியை க்கிக்கொள்வதில் அவர் திறன் காட்டத்தான் செய்தார். அவருடைய முதல் சிறு கதையான

ஏன்? அவருடைய இலக்கியக் கலையை ராய முதல் அடியை எடுத்துக்கொடுக்கிறது. மாதவன் என்னும் பதிநான்கு வயது மாணவன் பள்ளி விட்டு வீட்டுக்குப் போகும் போது தன் வகுப்புத் தோழி சுசீலாவிடம், "சுசீலா, நானும் வீட்டிற்குத் தானே போகிறேன், இருவரும் சேர்ந்து போகலாமே?" என்று சொல்கிறான். ஆனால் சுசீலா திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்து, புருவங்கள் உயர்த்தி வியப்புடன் கண்கள் பெரிதாகிப் பார்த்தது "ஏன்?" என்று கேட்பது போல் இருந்தது. இந்த "ஏன்?" அந்த பையனைப் பிசாசாகப் பற்றிக் கொள்கிறது. அதன் பின் அவர்கள் இருவர் மனதையும் ட்டிப் படைக்கிறது. அவர்கள் தனித் தனி அன்றாட வாழ்வில் அந்த ஏன் அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் முன் நின்று ஏன்? என்று கேட்கத் தவறுவதில்லை. அவர்கள் பிரமை பிடித்தது போல் கிறார்கள். இந்த ஏன்? அவர்களுக்குள்ளிருந்து மாத்தி ரம் எழும் கேள்வியாக இல்லை. அவ்விதமாயின் அது உணர்வு நிலையாக இருக்கும். மன நோயாக கியிருக்கும். ஆனால் இந்த ஏன்? அவர்களை வெளிஉலக்த்திலிருந்தும் எதிர்ப்பட்டு முறைத்து நிற்கும் ஒன்றாக கியிருக்கிறது. அப்போது அது ஒரு தத்துவார்த்த பிரச்சினையாக விரிகிறது. ஏன் இப்படி? எதற்காக? ஏன் எதுவும் அப்படி? என்ற கேள்விகளே எழுந்தவண்ணம் இருக்கின்றன, பதில் வருவதில்லை. மௌனி கதையை அத்தோடு முடிக்கிறார். இரு நிலைகளின் இடையே வாசகனை நிற்க வைத்துவிட்டுப் போய்விடுகிறார் மௌனி.

உலகைப் பற்றிய இந்தப் பார்வையைத் தான் மற்ற கதைகளிலும் நாம் சந்திக்கிறோம். கொஞ்ச தூரம் என்ற கதையில், "மேலே கிளையில் உட்கார்ந்திருந்த ஒரு காகம் இவனைச் சந்தேகமாய்த் தலை சாய்த்துப் பார்த்தது. ... வாய்க்காலில் துணி துவைக்கும் பாறாங்கல்லில் ஒரு சிறு குருவி உட்கார்ந்திருந்தது,. அதுவும் திடீரென்று பறந்து அச்செடியில் "ஏன்? எங்கே? என்று கத்திக்கொண்டு மறைந்து விட்டது. "

இங்கும் கதைமுழுதும் பரந்து கவிந்திருப்பது ஒரு வெறுமை உணர்வு. வாழ்வின் அர்த்தமற்ற குணம். அது முதலில் நிறைவேறாத காதலில் தொடங்கி பின் அத்தோடு நிற்பதில்லை.

மௌனியின் கதைகளிலும், கதை சொல்பவனும், கதையின் முக்கிய பாத்திரமும் கா•ப்கா கதைகளின் K போல ஒரு பெயரற்ற 'அவன்' தான். அவன் எங்கிருந்தோ தன் இருப்பிடம் திரும்பி வருவான். தன் கடந்த காலத்திய நினைவில் தோய்ந்து விடுவான். இன்னொரு படி நிலையில் மௌனியின் பாத்திரங்கள் தனி மனிதர்கள் மாத்திரமல்ல. உணர்வு நிலைகளின் பிரதிபலிப்புகள். பிரக்ஞை வெளிகள். தோற்ற உலகின் பின்னிருக்கும் உலகின் பளிச்சிட்டு மறையும் மின்னல் காட்சிகள்.

அவருடைய கதைகளில் சம்பவங்கள் என்று எதுவும் நிகழ்வதில்லை. அவர் ஒரு நிலையின் மின்னல் வெட்டிப் பளிச்சிடும் கணத்தை எடுத்துக்கொண்டு அதன் சாரமான உணர்வு நிலையை வெளிக்கொணர்கிறார் பின் அதை தத்துவார்த்த நிலைக்கு எடுத்துச் செல்கிறார். ரம்ப ஏன்? என்ற கேள்வியின் நீரில் விரல் விட்டுப் பார்க்கும் சோதனையாய் தொடங்கிய மௌனியின் பயணம் பின் கதைகளில் மிகச் சிக்கலான ஒன்றாக வளர்ந்து விடுகிறது. அழியாச் சுடர் கதையில் ஒரு இளைஞன் கோவிலில் சன்னதியின் முன் கூடியிருந்தவர்களில் ஒரு பெண்ணைப் பார்த்த பரவசத்தில் 'நான் உனக்காக எது செய்யவும் காத்திருக்கிறேன், எதுவும் செய்ய முடியும் " என்று ரகசியமாகச் சொல்லிக்கொண்டது "உள்ளிருந்த விக்கிரஹம், எதிர்த் தூணில் ஒன்றி யிருந்த யாளி எல்லாம் கேட்டு நின்றது" போலத் தோன்றியது மட்டுமல்லாமல் "சந்தனப் பொட்டுடன் விபூதி பூசி இருந்த விக்கிரஹமும் புருவஞ்சுளித்து சினம் கொண்டதாகத்" தோன்றுகிறது. அது மட்டுமில்லை. "தூணில் ஒன்றி நின்ற யாளியும் மிக மருண்டு கோபித்து முகம் சுளித்தது" கோவிலினுள் அந்நிகவையும் அச்சூழலையும் விவரிக்கும் மௌனி ஒரு மயிர்க் கூச்செரியும் அச்சம் தோன்றும் மாய உலக உணர்வை எழுப்புகிறார். கற்பக்கிரஹத்தினுள் இட்டுச் செல்லும் நுழைவாயிலுக்கும் கற்பக்கிரஹத்திற்கும் இடையே உள்ள இருள் வெளியில் எண்ணெய் விளக்குகளின் விட்டு விட்டு பிரகாசிக்கும் மஞ்சள் ஒளி பரவியிருக்க நிகழ்கிறது இந்த நாடகம். இந்த வெளி தான் பிரக்ஞை நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாறும் வெளி போலும். இடத்திலும் காலத்திலும் நிகழும் மாற்றம்.

அவருடைய தனித்துவமான பெரும்பாலான கதைகளில் இந்த நிலை மாற்றம், ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கான பயணம் அந்தி நேரத்தில் தான் நிகழ்கிறது. சுற்றியிருக்கும் இருள் வெளியை ஒரு மாய உணர்வூட்டும் மஞ்சள் ஒளி, அப்போது மனிதர்கள் நிழல் உருவங்களாக, நகரும் நிழல்களாகத் தோற்றம் தருவார்கள். விக்டர் டர்னர் தன் The Ritual Process: Structure and Anti-Structure (1969) புத்தகத்தில் liminality என்றும் communitas என்றும் சொல்லும் நிலையை மௌனி கதைகளின் இச்சூழல் நினைவூட்டுகின்றன.

மரபான நாட்டுப்புற கலைகளையும் அவற்றின் சடங்குகளுக்குள்ள சக்தியையும், உள்ளர்த்த அங்களையும் பற்றியெல்லாம் மௌனி தெரிந்திருப்பார் என்றோ ழமாக ராய்தறிந்திருப்பார் என்றோ சொல்லமுடியாது. தன்னையறியாமலே, கூட்டு அடிமனப் பிரக்ஞையிலிருந்து பெற்றதைக் கொண்டு அவர் இலக்கிய சிந்தனை இவற்றை வெளிப்படுத்துகிறதோ என்று தோன்றுகிறது. பிரக்ஞை வெளியில் என்ற கதையில் அவர் சொல்கிறார்:

"ஓளி படராத பிரக்ஞை வெளியில் சேகரன் தடுமாறிக்கொண்டிருந்தான். தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் உள்ள எல்லைக்கோடு, பிளவு கொண்டு ஒரு சிறு வெளி விரிவு தெரிவது போலும் அந்நடு வெளியில் நின்று உலக விவகாரங்களைக் கவனித்தான். உலகம் உண்மையெனத் தோன்றுவதற்கு -வஸ்துக்கள் வாஸ்தவம் எனப் படுவதற்கு - மாயைப் பூசு கொள்ளுமிடம் அதுதான் போலும். தூக்கத்தில் மறையவும் விழிப்பில் மறக்கவும்......"

இம்மாதிரியான பல பகுதிகளை மௌனியின் கதைகளில் சந்திக்க நேரும். அவை வேறு வேறு சந்தர்ப்பங்களில் வேறு வடிவங்களில், தனி மனிதனையும் பிரபஞ்சத்தையும், ஒரு தத்துவார்த்த பிரகடனமாக அல்ல, குணரூப வாக்கியமாக அல்ல, உணர்ந்த வாழ்ந்த அனுபவங்களாக சொல்லப்படுகின்றன. அவற்றில் ஒரு வாசகன் தத்துவார்த்த உள்ளீடுகளை, பிரபஞ்சம் முழுதும் ஒன்றிணைந்துள்ள முழுமையை, அத்வைத ஒருமையை வாசிக்கக் கூடும். ஆனால் இக்கதைகள் ஏதும் தத்துவார்த்த சிந்தனை விளக்கமாக எழுதப்படவில்லை. உண்மையான மனித வாழ்க்கை நிலைகளை, மனதின் உருக்கமான மன நிலைகளைச் சொல்லும் முகமாகத்தான் இவை எழுதப்பட்டுள்ளன. இது தான் அவருடைய எழுத்தின் உள்ளார்ந்த மையம். அவருடைய சிறந்த கதைகள் சொல்ல முயற்சிப்பது.

மௌனியின் உலகம் தனித்துவமானது, தமிழ் இலக்கியத்துக்கு அவர் பங்களிப்பு போல. எஸ். மணியாக அவர் உயர் கணிதத்தின், தத்துவ விசார பயின்ற மாணவர். கர்னாடக சங்கீத ரசிகர். எப்போதாவது தனது மகிழ்ச்சிக்கு வயலின் வாசிப்பவர். இலக்கியத்தையும் விட, சங்கீதத்திலும் தத்துவங்களிலும் அவருக்கு ழ்ந்த ஈடுபாடு கொண்டவர் அவர். எ•ப். எ.ஹெச் ப்ராட்லியின் Appearance and Reality அவர் திரும்பத் திரும்ப விரும்பிப் படிக்கும் புத்தகம். இலக்கியத்தில் •ப்ரான்ஸ் கா•ப்கா, ஜோர்ஜ் லூயி போர்ஹே, ராபர்ட் ம்யூசீல் போன்றோரின் படைப்புகள் அவர் மிகவும் ரசித்தவை.

அவருடனான என் பழக்கம் அறுபதுகளின் தொடக்க வருடங்களில் ஏற்பட்டது. நாங்கள் கடிதங்கள் பரிமாறிக்கொண்டோம். Encounter என்ற மாதப்பத்திரிகையில் போர்ஹேயின் இரண்டு கதைகளை முதலில் நான் படிக்க நேர்ந்த போது (அவற்றில் ஒன்று Circular Ruins, மற்றது இப்போது என் நினைவில் இல்லை) அந்த கதைப் பக்கங்களைக் கிழித்து அவருக்கு அனுப்பி வைத்தேன். அவை அவருக்கு மிகவும் பிடித்துப் போயின. அதிலிருந்து போர்ஹேயும் அவர் விரும்பிப் படிக்கும் சிரியர்கள் பட்டியலில் சேர்ந்தார். அறுபதுகளில் அவருடனான என் ரம்ப சந்திப்புக்களில் அவருடைய அப்போதைய சமீபத்திய கண்டு பிடிப்பான ராபர்ட் ம்யுசீலின் Man without Qualities பற்றி மிகப் பரவசத்தோடு பேசினார்.

சங்கீதத்தைப் பொறுத்த வரை ஒரு சங்கீதக் கச்சேரி முழுதும் உட்கார்ந்து கேட்க அவருக்குப் பொறுமை இருப்பதில்லை என்பார். ராக சஞ்சாரத்தில் அவ்வப்போது மின்னலடிக்கும் மேதைத் தெறிப்புகள் ஒருவரது கற்பனையின் வீச்சைச் சொல்லும் அத்தெறிப்புகள் தான் அவருக்கு வேண்டும். இலக்கியத்திலும் அவர் விரும்பி ரசிப்பது இம்மாதிரித்தான். அவ்வப்போது பளிச்சிடும் மின்னல் வீச்சுக்கள், அவைதான் கற்பனையின் மின்னல் கீற்றுப் போல வீசி மறையும், அவை தான் தோற்றக் காட்சி உலகத்திலிருந்து அவற்றின் பின்னிருக்கும் உண்மைக்கு வாசகனை இட்டுச் செல்லும். ராமக்ரிஷ்ண பரமஹம்சர் முன்னறிவிப்பில்லாது அவ்வப்போது ழ்ந்து விடும் தன்னை மறந்த தியான நிலை போல. உருவகமாகச் சொல்வதென்றால் எழுத்து என்பது அவருக்கு ஒரு பயணம் கட்டமைக்கப்பட்ட நிலையிலிருந்து கட்டவிழ்க்கப்பட்டதுக்கு, டர்னர் liminality என்று சொல்கிறாரே அந்த நிலைக்கு. மௌனி சொல்வார், "புதுமைப் பித்தனிடம் தான் ஏதோ இருப்பது போல் தோன்றுகிறது"

தமிழ் இலக்கியத்தில் தனித்து நிற்கிறார். கா•ப்காவும் போர்ஹேயும் அவரவர் இலக்கிய சமூகத்தில் தனித்து இருப்பது போல. இன்று இந்த நூற்றாண்டு நிறைவு பெறும் கட்டத்தில் தமிழில் நிறைய எழுத்தாளர்கள் சிலர் தம் எழுத்துக்களில் புதுமைப்பித்தனின் பாதிப்பை, இன்னும் சிலர் ஜானகி ராமனின் பாதிப்பைக் காணமுடியும். மௌனி, நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளுடன் அவர்களது சகாவாக அவர் காட்சியளித்தாலும், அவர் தனித்து நிற்பவர். அவர் இவ்வளவு நீண்ட காலமாக எழுதியது அரைகுறை மனத்தோடும் தயக்கத்தொடும், மிகக் குறைவாக எழுதிய போதிலும்.