தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்து காலத்தால் அழிக்கமுடியாதவை சிலவற்றை இங்கே இந்த இடத்தில் தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (TShrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Wednesday, August 03, 2011

இழப்பு - ந. முத்துசாமி, கல்யாணி - ந. முத்துசாமி


azhiyasudargal.blogspot.com
 வலையேற்றியது: "அழியாச் சுடர்கள்" ராம்
ந.முத்துசாமி : நாடகத்திற்குப் போன எழுத்துக்காரர்.
 மிகக் குறைந்த அளவே எழுதியிருக்கும் போதிலும் தமிழ் நவீன இலக்கியத்தில், குறிப்பாக சிறுகதையில் ந. முத்துசாமியின் இடம், மௌனியைப் போல், தவிர்க்க இயலாதது. ஒரு வகையில் ந. முத்துசாமியை மௌனியின் பள்ளியைச் சேர்ந்தவர் என்றும் சொல்லலாம். முத்துசாமியின் முதல் சிறுகதை சி.சு. செல்லப்பாவின் `எழுத்து' வில் வெளிவந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளை கொண்ட `நீர்மை' சிறுகதைத் தொகுப்பை 1984ஆம் ஆண்டு க்ரியா பதிப்பகம் கொண்டு வந்தது. ஆனால் அப்பொழுதே முத்துசாமியின் கவனம் நாடகங்கள் பக்கம் திரும்பியிருந்தது. நாடகத்தின் பக்கம் திரும்பியதும் முத்துசாமி சிறுகதை எழுதுவது குறைந்து கொண்டே வந்து பின்பு நின்றுவிட்டது. ஆனால் சிறுகதையைப் போலவே நாடகத்திலும் முத்துசாமியின் இ டம் ஸ்திரமானது. `நாற்காலிக்காரர்,' `அப்பாவும் பிள்ளையும்,' `சுவரொட்டிகள்' ஆகியவை முத்துசாமியின் முக்கியமான நாடகங்கள். ஆரம்பத்தில் `சிம்ஸன்' டிராக்டர் கம்பெனியில் சிறிதுகாலம் பணியாற்றிய பின், அமெரிக்காவின் `போர்ட் பவுன்டேசன்' உதவியுடன் `கூத்துப்பட்டறை' என்ற நவீன நாடகத்திற்கான அமைப்பை முத்துசாமி உருவாக்கினார். கூத்துப்பட்டறை இதுவரை தமிழ் நாடகங்களுடன் முக்கியமான மொழிபெயர்ப்பு நாடகங்களையும் அரங்கேற்றியிருக்கிறது. தமிழின் தொன்மைக் கலையான கூத்தை நாடகத்துடன் இணைத்தது மற்றும் பரவலாக அறியச் செய்ததில் முத்துசாமிக்கு பெரும் பங்குண்டு. முத்துசாமியின் பாவைக்கூத்தைப் பற்றிய கட்டுரைத் தொகுப்பு ஒன்று அன்னம் வெளியீடாக வெளி வந்திருக்கிறது.

ந. முத்துசாமி தஞ்சாவூருக்கு பக்கத்தில் புஞ்சை என்னும் கிராமத்தில் பிறந்தவர். தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இங்கு தரப்பட்டிருக்கும் `இழப்பு' சிறுகதை பலமுறை பலராலும் சிறந்த சிறுகதையாக மீண்டும் மீண்டும் முன்னிறுத்தப்பட்டச் சிறுகதை.
 இழப்பு - ந. முத்துசாமி

தன் நண்பர்களைக் கொல்ல வேண்டுமென்று அவனுக்குத் தோன்றிவிட்டது. ஏன் அப்படித் தோன்றிற்று என்பது அவனுக்குத் தெரியவில்லை. ஒருநாள் மாலை பைகிராஃப்ட்ஸ் ரோட்டில் தன் நண்பர்களோடு போய்க்கொண்டிருந்தபோது திடீரென்று இப்படித் தோன்றிற்று. 13-ஆம் நம்பர் பஸ் தன்னைக் கடந்து போனபோது நண்பர்களை ஒவ்வொருவராக சக்கரத்தில் தள்ளிக் கொன்றுவிட வேண்டுமென்று தோன்றிற்று. புருவத்தை உயர்த்தி ஏன் என கேட்டுக்கொண்டான். நினைப்பை மனதில் அழுத்தி அழித்துவிட வேண்டுமென்று கண்ணை இறுக மூடிக்கொண்டான். சின்னப்பையனாகக் கிராமத்தில் கும்பியில் கால் வைத்து அழுத்தும் தோற்றமும், காற்று வெளிப்படும் சப்தமும், காற்றுக் கொப்புளங்ளும் தோன்றின. முழங்கால் வரையில் சகதி. அழுந்திய காலை எடுக்க, அடுத்த காலை வைத்து இழுக்க, வைத்த கால் அழுந்துகிறது. அழுந்திய கால் மேல் வருகிறது. உதவ வந்த கால் இன்னும் கீழே போகிறது. ஒன்றுக்கு ஒன்று உதவியாக மேலும் கீழுமாக மாறிமாறிப் போய்வருகின்றன. கொல்லை வைக்கோல் போருக்குப் பின்னால் பறைச்சி சாணி மிதிக்கும் தோற்றம் தெரிகிறது. அவள் காலை மாற்றி மாற்றிக் குதித்து வரட்டிக்குச் சாணி மிதிக்கிறாள். பாட்டி சொன்ன கதையில் பேய் மிதித்ததைப்போல் மிதிக்கிறாள். இவன் சகதியில் புதைந்த காலை இழுக்க விரைவாக முயல்கிறான். கால்கள் விசை பெறுகின்றன. நின்ற இடத்தில் கேலிக் கூத்தாக ஒரு மிஷினின் இரண்டு பிஸ்டன்களாகக் கால்கள் இயங்குவதாகத் தோன்றுகிறது. குத்திட இயங்கியவைக் கிடையில் இயங்கி ரயில் எஞ்சினின் சக்கரத்தை இயக்கும் பிஸ்டனாக தோற்றம் கிடைக்கிறது. சக்கரங்கள் `சிக்சிக்'கென்று நின்ற இடத்தில் வேகமாக இயங்கிவிட்டு உருளத் தொடங்குகின்றன. ஓடும் சக்கரத்தில் ஒரு நண்பன் விழுந்து இறக்கிறான். தலையும் முண்டமுமாக தண்டவாளத்திற்கு அந்தண்டையும் இந்தண்டையும் இரு துண்டுகளாக அவன் உடல் விழுந்து துடிக்கிறது. இவன் கடைவாய்ப் பற்களை அழுந்தக் கடித்துக்கொண்டான். பல் கடிபடுவதை கன்னத்தைத் தடவிப் பார்த்துக்கொண்டான். தோல் போர்த்தின எலும்புத் தாடையாக பார்ப்பவருக்குத் தோன்றுமென்று வெட்கப்பட்டான். ஒரு விநாடி கண் மூடலிலும் பல் கடித்தலிலும் நினைவு மறைந்ததை உணர்ந்தான். முன்பு சாணி மிதித்தலில் நினைவு மறைந்ததை உணர்ந்தான். ஆடும் அரிவாள்மனையில் ஒரு தென்னை மரத்திற்கு அடியில் அமர்ந்து வைக்கோல் கூளத்தைப் பிடிப்பிடியாக நறுக்கிச் சாணியில் போட்டு மிதிக்க அவை மறைவதுபோல் மறைந்தன என நினைத்துக்கொண்டான். சாணி மிதித்தல் எனவும்; கும்பி, பேய், குதித்தல், குத்திட்ட பிஸ்டன்கள், கிடைநிலை பிஸ்டன்கள், ரயில் சக்கரம், நண்பன் இறத்தல் எனவும் தொடர்ந்தன.


மறைந்ததென்று எண்ணவும் மீண்டும் அந்த நினைப்பு பிடித்துக்கொண்டுவிடுவதைக் கண்டு கொண்டான். இப்படி ஒவ்வொரு விஷயமாக நினைப்பை விரட்டி வீடு போய்ச் சேருகிறவரையில் அதிகபட்சம் அந்த நினைப்பைக் குறைக்க விரும்பினான். உடனே பேய்க்கதை அதற்கு வசதியாக இருக்கும் என்று தோன்றிற்று. ஒரு கதையில், பேய் நடுஜாமத்தில் கிருஷ்ணசாமி அய்யரை மிளகாய்க் கொல்லைக்கு தண்ணீர் இறைக்கக் கூப்பிட்டது. ஏற்றம் பிடித்து இறைத்துக் கொண்டிருந்தவர் அண்ணாந்து மேலே பார்க்க நிலவில் ஏற்ற மரத்தில் ஓடிக்கொண்டிருந்தவனுக்குக் கால்கள் இல்லாததைக் கண்டு தன்னைப் பேய் ஏமாற்றிவிட்டதென உணர்ந்து அதைத் தான் ஏமாற்றிவிட எண்ணினார் கிருஷ்ணசாமி அய்யர். ``டேய் ரங்கசாமி, அடுத்த பாத்திக்கி மடையைக் கோலிட்டு வரேண்டா, கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கோ,'' என்றார். ``சரிடா கிச்சாமி'' என்றது பேய். கிருஷ்ணசாமி அய்யர் அதுதான் சமயமென்று மண்வெட்டியை எடுத்துக்கொண்டு கடைசிப் பாத்திக்குப் போனார். மடையைக் கோலினார். மண்வெட்டியைக் குத்திட நிறுத்தினார். தலை முண்டாசைக் கழற்றி மண்வெட்டிக் காம்பில் தலையைப் போல் நிறுத்தினார். குனிந்து மிளகாய்ப் புதர் மறைவில் ஒண்டிக் கொண்டே போய், தணிவாக இருந்த இடத்தில் வேலியைத் தாண்டி வரப்போடு ஓடி வீட்டுக்குப் போய் வாயிற்கதவைத் தடதடவென்று தட்டினார். மனைவி யாரென்று கேட்டுத் தெரிந்து கொண்டு திறக்க நேரமாயிற்று. இவருக்குக் கோபம் வந்துவிட்டது. ``நான்தான்'' என்று கோபத்தோடு கதவு உடைந்துவிடும் போலத் தட்டினார். அவள் கதவைத் திறந்தாள். இவனுக்கு அவர் மனைவி கதவைத் திறந்தாள் என்றவுடன் தான் அவர் முண்டக்கட்டையாக வரப்புகளைக் கடந்து ஓடினார் என்பது நினைவுக்கு வந்தது. கதையில் அவர் முண்டாசை மண்வெட்டிக் காம்பில் மாட்டிய உடனேயே இடுப்பு வேட்டியையும் அவிழ்த்துப் போட்டுவிட்டார். கோமணம் கட்டும் பழக்கம் அவருக்கு இல்லை போலிருக்கிறது எனச் சிரித்துக்கொண்டான். அவர் பெண்டாட்டி விழுந்து விழுந்து சிரித்தாளாம். மறுநாள் ஊரே சிரித்ததாம். இத்தனைக்கும் அவர் வேட்டி கட்டிக்கொண்டிருந்த கதையைத்தான் சொல்லியிருக்கிறார். அவர் மனைவிதான் முண்டக்கட்டைக் கதையைத்தான் சொல்லியிருக்கிறார். அவர் மனைவிதான் முண்டக்கட்டைக் கதையை ஊரில் பரப்பியது. அடுத்தாத்துக்காரி, பக்கத்தாத்துக்காரி என்று ஒவ்வொருவருக்காகக் கதையைச் சொல்லிவிட்டாள். அவர்கள் சிரித்துவிட்டு தங்கள் ஆத்துக்காரர்களுக்கும் சொல்லிச் சிரித்திருக்கிறார்கள். அவர்களோ உடனே கிருஷ்ணசாமி அய்யரின் வேட்டியை அவிழ்த்துப் பார்த்துக் கதையை ரசித்துச் சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள். இவன் சிரித்தான். ``என்ன நீயா சிரிச்சுக்கறே'' என்றான் பக்கத்தில் வந்து கொண்டிருந்த நண்பன். ``ஒன்றுமில்லே'' என்று சொல்லிவிட்டான் இவன். கதையில் கிருஷ்ணசாமி அய்யர் கறுப்பு. நிலவில் ஓட அவர் கறுப்பாக ஓடுவது பேய்க்குத் தெரிந்திருக்கும் என்று அவர் ஓடினபோது நிலவை மேகம் மறைத்திருக்க வேண்டுமென்று திருத்திக் கொண்டான். பேய்களுக்குக் கால்கள் இல்லை. இன்னொரு கதையிலும் கால்கள் இல்லாததைக் கொண்டுதான் அதை பேய் எனத் தெரிந்து கொண்டாள் அலமேலு. இவளை நடுஜாமத்தில் சாணி தட்டக் கூப்பிட்டது பெண் பேய். விடியற்காலையென்று சாணி தட்டப் போனாள் அவள். பேய் சாணி மிதித்தது. இவள் தட்டத் தட்ட அது மிதித்துக்கொண்டேயிருந்தது. அது மிதிக்கும் வேகத்தில் இவளால் தட்டி முடிக்க முடியவில்லை. அலமேலுவுக்குச் சந்தேகம் வந்து நிமிர்ந்து பார்த்தாள். பேய். கால்கள் இல்லை. கால்கள் இல்லாமலே அந்தப் பேய் சாணி மிதித்திருக்கிறது. அலமேலுவுக்கு குலையை நடுக்கும் பயம். எப்படி தப்பித்துக் கொள்வது? அவள் எப்படி தப்பித்துக்கொண்டாள் என்ற கதையும் இவனுக்கு மறந்துவிட்டது. ``இதோ தண்ணி கொண்டு வந்துடறேன்'' என்று குடத்தைத் தூக்கிக் கொண்டு உள்ளே போய்க் கதவைத் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டிருப்பாள் என நினைத்துக்கொண்டான். `பேய் பேய்' என கத்த ஆரம்பித்திருப்பாள். அல்லது பயத்தில் கத்த முடியாமல் ஊமையாகியிருப்பாள். உடனே அவளுக்கு ஜுரம். இரண்டு நாள் கடுமையான ஜுரத்தில் கிடந்தாள். மூன்றாம் நாள் இறந்துவிட்டாள். இறப்பு இவன் நினைவுக்கு வந்துவிட்டது. ஒரு நண்பனை பேயின் கையில் பிடித்துக் கொடுக்கவேண்டுமென நினைத்துக் கொண்டான். தன்னையும் சேர்த்துக்கொண்டால் என எண்ணிச் சிரித்தான். ``என்ன நீயா சிரிச்சுக்கறே'' என்றான் பக்கத்தில் வந்துகொண்டிருந்த நண்பன். ``ஒன்றுமில்லே'' என்று சொல்லிவிட்டான் இவன். பிறகு, ``பேய்களைக்கொண்டே ஒரு நாட்டை முன்னேற்றிவிட முடியும்'' என்று சொன்னான். ``ஆமாம், பேய்கள்தான் நம் நாட்டை முன்னேற்றிக் கொண்டிருக்கின்றன.'' ஒரு நண்பன் சொல்ல எல்லோரும் சிரித்தார்கள். இவனுக்கு வெட்கமாகப் போயிற்று. திடீரென்று பேய்கள் சிரித்தார்கள். இவனுக்கு வெட்கமாகப் போயிற்று. திடீரென்று பேய்கள் உண்மையெனத் தோன்ற ஆரம்பித்தது. தன் பாட்டி பேய்களை நேரே பார்த்ததாகச் சொல்லி இருக்கிறாள். கதைகளானாலும் கிருஷ்ணசாமி அய்யரும் அலமேலுவும் புஞ்சையில் வாழ்ந்தவர்கள். இவனே ஒருமுறை பேயைப் பார்த்திருக்கிறான். சின்னப் பையனாக இருந்தபோது ஒரு பேய் புளியமரத்தடியில் வெளிக்குப் போய்க்கொண்டிருந்தபோது பார்த்திருக்கிறான். நண்பர்களோடு பார்த்தான். கல்லைவிட்டு எறிந்தார்கள். கல் உருவத்தை ஊடுருவிக்கொண்டு போயிற்று. அது பேய்தான் என்று பிறகு தீர்மானித்துக்கொண்டார்கள். கால்கள் இல்லாமல் அது எப்படி குந்திக்கொண்டு வெளிக்குப் போயிற்று என்பதை இப்பொழுது நினைத்துப் பார்க்க முடியவில்லை. பேய்க்கதைகளைத் தொடர்ந்துக் கொண்டு போவது இவனுக்குப் பிடிக்கவில்லை. அதைப்பற்றி இனிமேல் தன்னால் பேசாமல் இருக்கமுடியாது எனத் தோன்றிற்று. உண்மை, என்றும் சிரிப்புக் கிடமானதுதான் என நினைத்தான். பிறகு, கடைப் பெயர்ப்பலகைகளில் எரியும் நியான் எழுத்துகளைத் திரும்பிப் பார்த்தான். சிவப்புநிற எழுத்துகள் ரயிலில் அடிபட்டு இறந்தவனின் ரத்தத்தை நினைவுக்குக் கொண்டுவந்தன. தலையை உதறிக்கொண்டான். மீண்டும் பழைய நினைப்பு. இப்படி மறக்க, நினைக்க, மறக்க, நினைக்கவென்று நினைவு ஓடிக்கொண்டிருந்தது. மறக்க, நினைக்க, மறக்க, நினைக்க என்பதை தொட்டுவிட்டு என்று காட்சியாகக் கண்டான். உடனே தன் மனைவியின் ஊரான மாயூரத்தில் மாயூரநாதசாமி கோயிலில் சாமி புறப்பாட்டின்போது ``ஜிஞ்சா ஜிஞ்சா''வென்று தொட்டுவிட்டுத் தொட்டுவிட்டு, - வாயில் துணியைப் பிடித்துக்கொண்டு கன்னத்தை உப்பிக்கொண்டு ஊதும் ஒத்துக்காரனுக்குப் பின்னால் - பையன் ஜாலரா போடுகிற தோற்றம் வந்தது. ஒத்துக்காரனின் சோகமான தோற்றம் இவனுக்கு மரணத்தை நினைவூட்டியது. கல்யாணங்களில் ஒத்துக்காரனையே பார்த்துக்கொண்டிருக்கும் தன் பழக்கத்தையும் நினைத்துக்கொண்டான். அந்த மணமக்களுக்காகவே இந்த ஒத்துக்காரன் சோகமாக இருக்கிறான் என்று நினைத்துக்கொள்வான். தம்பதிகள் ஒருநாள் இறக்கப்போகிறார்கள் என்று, ஒருவர் முந்தி இறக்க, இன்னொருவருக்கு சோகம் வரப்போகிறதென்று, அவன் முந்திக்கொண்டு இறக்கப்போவதால் அவள் விதவையாகப் போகிறாள் என்று இவன் இப்பொழுதே நினைத்து சோகமாக இருக்கிறான் என்று நினைப்பான். கடைசியில் இறப்பைப்பற்றியே சிந்தித்துக்கொண்டு வீடு போய்ச் சேர்ந்தான். நண்பர்களை எங்கு என்ன சொல்லிப் பிரிந்து வந்தோம் என்பதே அவனுக்கு மறந்துவிட்டது.


சாப்பிட்டுவிட்டு சாய்வு நாற்காலியில் வந்து சாய்கிறவரையில் நினைப்பு வேறுவிதமாக வேலை செய்தது. பரிமாறிய மனைவியையும் பக்கத்தில் உட்கார்ந்து சோற்றைப் பிசைந்து கொண்டிருந்த ஒரே குழந்தையையும் நண்பர்களின் பக்கம் பிடித்துத் தள்ளுவதாக நினைப்பு வந்தது. முழு உருவத்தில் அவர்கள் அருகில் இருந்தும் பிடித்துத் தள்ளும்போது வெறும் சாயலாக அவர்கள் தோன்றினார்கள். அந்த நிழலுக்கு மூக்கும் வழியும் கொடுத்து நிஜமாகக் கற்பிக்க வேண்டுமென்று முயன்றான். அது அவனால் முடியவில்லை. அதற்காகப் பலமுறை மீண்டும் மீண்டும் பழைய இடத்திலிருந்து அவர்களைத் தள்ளவேண்டியிருந்தது. குழந்தை அறியாத்தனமாகவும், மனைவி மிரண்டு கெஞ்சும் பாவனையிலும் அவனைப் பார்த்தார்கள். மீண்டும் மீண்டும் பிடித்துத் தள்ள, குழந்தை அதை விளையாட்டாக எடுத்துக்கொண்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டது. பலமுறை இப்படித் தன்னைத் தள்ள அது விரும்பியதாகத் தோன்றிற்று. எனக்கு வேண்டாம் இந்தப் பூசணிக்காய் விளையாட்டாக அது ஆகிவிட்டது. தான் தள்ளப்பட வேண்டுமென்று ஒவ்வொரு முறையும் அது தோளைச் சாய்த்துக்கொண்டு இவன் பக்கம் வந்தது. அதையே இவன் தள்ளிக்கொண்டிருந்தான். சாப்பிட்டு முடிக்கிறவரையில் குழந்தையை மட்டுமே அழுகப் பூசணிக்காயாகத் தள்ளிக்கொண்டிருந்துவிட்டு எழுந்து வந்தான். எதிர்பாராத் தள்ளலிலும் விழாமல் தன்னைச் சமாளித்துக்கொண்ட சாய்ந்த தோற்றத்தோடே இவன் மனைவி நின்றுகொண்டிருந்தாள். மிரட்சியும் கெஞ்சும் பாவமும் நிலைத்துவிட்டிருந்தன.
ஏன் இப்படித் திடீரென்று தோன்ற ஆரம்பித்தது என்று நினைத்துக்கொண்டே வந்து, சாய்வு நாற்காலியில் படுத்துக்கொண்டான்.
``அப்பா'' என்று குழந்தை இவனை நோக்கி ஓடிவந்தது. நாற்காலியில் இருந்து நிமிர்ந்து எட்டி குழந்தை தன்னிடம் வருவதைக் கையை நீட்டி முன் கையால் தடுத்தான். குழந்தையின் கால்கள் தரையில் பாவுகின்றனவா என்று பார்த்தான். தரையில் கால்கள் பதியப்பதிய நின்றது குழந்தை.
``குட்டிப் பேய்க்குக் கால்கள் தரையில் பாயும்'' என்று உரக்கவே சொன்னான்.
``பாவம் கொழந்தையைப் போய் ஏன் இப்படிப் பேய் இங்கறேள்'' என்றாள் மனைவி அடுப்பங்கரையில் இருந்த படியே ``நீ பெண் பேய்'' என்றான் இவன்.
``அப்போ, நீங்க ஆண்பேய்'' என்று சிரித்தாள் அவள். ``என் நண்பன் இன்று பேயாகிவிட்டான். ரயிலில் அறைபட்டுப் பேயாகத் திரிகிறான்'' என்று சொன்னான்.
``யார்? யார்? ரயில்லே அறைபட்டுச் செத்தது'' என்றாள் அவள்.
இவன் பதில் சொல்லவில்லை. எழுந்துபோய் ஜன்னல் கதவுகளைச் சாத்திவிட்டு வந்து உட்கார்ந்தான். ஜன்னலைத் தாண்டி பேய் உள்ளே வராது என்பது அவனுக்குத் தெரியும்.
ஜன்னலைத் தாண்டி அதன் தோற்றம் பார்வைக்கு வராது என்பது என்ன நிச்சயம்? பாட்டி அப்படிச் சொன்னதில்லை. ``குழந்தை எழுந்து நடக்க எத்தனை நாள் ஆகிறது. முதலில் கால்கள் தரையில் பாவாமல்தான் குழந்தை தள்ளாடுகிறது. பிறகுதான் தரையில் கால்கள் பாவும்படி நடக்கக் கற்றுக்கொள்கிறது. பேய்களுக்கு இது நேர்மாறுதல். குழந்தைப் பேய்கள் தரையில் கால்கள் பாவப்பாவ நடந்து தள்ளாடுகின்றன. பிறகுதான் கால்கள் பாவாமல் நடக்கப் பழகிக்கொள்கின்றன'' என்று சொன்னான். ``போதும் போதும் கொழந்தை பயந்துக்கப் போறது. விளையாட்டு ரொம்ப நன்னாருக்கு. கொழந்தையை யாரானும் பேய்ன்னு சொல்வாளோ?'' என்று குழந்தையைத் தூக்கிக் கொண்டு போக அவள் வந்தாள். ``ஜன்னலை ஏன் இப்படிச் சாத்தி வைச்சிருக்கேள்'' என்றாள். ``பேய்க்காக' என்றான். ``பேய்க்காகவா? என்ன பேசறேள்'' என்று குழந்தையைத் தூக்கிக் கொண்டு நின்றாள். ``பேயாலே உள்ளே வர முடியாவிட்டாலும் அதனால் ஜன்னலுக்குப் பின்னால் வந்து நிக்க முடியும்'' என்றான். ``என்ன குடிச்சுகிடிச்சுட்டு வந்தேளா?'' என்றாள். ``போடி, உன்னை அப்பவே பிடிச்சுத் தள்ளாமே விட்டது என் தப்பு'' என்றான். ``என்ன என்ன பேசறேள். மூளை கீளை பிரண்டு போச்சா என்னா?'' என்று அவள் மிரண்டு நின்றாள். அவன் கடகடவென்று சிரிக்க ஆரம்பித்துவிட்டான். ``நல்ல வேடிக்கை வேண்டிக்கெடக்கு, சாப்பிட்டாச்சு. பாயேப் போட்டுண்டு படுத்துத் தூங்குங்கோ'' என்று சொல்லிவிட்டு அவள் போய்விட்டாள். இவன் பாயை விரித்துப் படுத்தான். காலையில் எழுந்ததும் கொஞ்சம் தெளிவாக இருந்தது. இவனைத் தேடிக்கொண்டு நண்பர்களில் ஒருவன் வந்தான். வந்தவுடனேயே, ``எனக்குப் பாவம் புண்ணியத்தில் நம்பிக்கை போய்விட்டது'' என்றான் இவன். ``எனக்கும்தான்'' என்றான் நண்பன்.
``மனிதாபிமானத்தின் மேல்கூட'' என்றான் இவன்.
நண்பன் பதில் சொல்லவில்லை. ``பாவ சிந்தனைகள் மனதில் புகாமல் தடுத்துக் கொண்டிருந்த கடவுள் என்ற வாயில்காப்போனை அண்டை வீடுகளுக்கு அனுப்பிவைத்து விட்டேன்.'' நண்பன் சிரித்துவிட்டு ``எதற்காக?'' என்று மீண்டும் சிரித்தான். ``எனக்கும் கடவுள் நம்பிக்கை இல்லை'' என்று சொன்னான்.
``உன்னைப் போன்றவர்கள் எப்படியெல்லாம் சட்டத்தை மீறுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக.'' நண்பன் வாய்விட்டுச் சிரித்தான்.
``கருணையில்லாமல் உன்னை என்னால் கொன்றுவிட முடியும்'' என்று சொன்னான் இவன்.
``அதற்காகப் பிறகு நீ வருந்துவாய்.''
``என்னால் துணிச்சலாகத் தற்கொலையும் செய்துகொள்ள முடியும்.''
``அதான் மனிதாபிமானமே இல்லாதவன் என்றாயே.''
``உன்னுடையதில் இருந்து என் மனிதாபிமானம் வேறுபட்டது.''
`சகமனிதனிடம் அன்பு காட்டுவது என் மனிதாபிமானம்.''
``உதவாக்கரை மனிதர்களை எனக்குப் பிடிப்பதில்லை.''
``இதேவிதமாக உன்னைப்பற்றியும் என்னால் நினைக்க முடியும்.''
``இப்பொழுது எனக்குப் பேயிடம் மட்டும்தான் நம்பிக்கை இருக்கிறது.''
நண்பன் சிரித்தான்.
``நரசிம்மன் பேயாகச் சுற்றிக்கொண்டிருக்கிறான்.''
``அவன் இயல்பே அதுதானே. `லோலோ'வென்று நாயாகச் சுற்றிக்கொண்டிருப்பான்.''
நண்பன் எழுந்து வீட்டுக்குக் கிளம்பினான். வழக்கமாக வாயில்வரையில் கொண்டுவிடப் போகிறவன், இன்று போகவில்லை. திறந்திருந்த ஜன்னல் கதவுகளைச் சாத்தினான். திடுதிடுவென்று ஓடி வீட்டுக்குப் போய்க் கொண்டிருக்கும் நண்பனை பஸ் சக்கரத்தில் தள்ளிக் கொன்றுவிட வேண்டும் போலிருந்தது. சட்டையை மாட்டிக்கொண்டு வெளியில் புறப்பட்டான்.
``ஆபீஸுக்கு கிளம்பப் போறதில்லையா?'' என்றாள் மனைவி. ``இதோ வந்துடறேன்'' என்று கிளம்பிப் போனான். சற்று நேரத்திற்கெல்லாம் திரும்பிவிட்டான். ``பாலகிருஷ்ணன் பஸ் சக்கரத்தில் அறைபட்டுச் செத்துவிட்டான்'' என்று சொல்லிக்கொண்டே போய் சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டான்.
``எப்படி, எப்படி? ஐயோ கடவுளே! நேத்திக்கி ஒன்னு இன்னிக்கு ஒன்னா? எப்படி எப்படி'' என்று இவன் அருகில் வந்து நின்றாள் அவள். அவன் பதில் சொல்லவில்லை. கண்ணை மூடிக்கொண்டு சாய்வு நாற்காலியில் படுத்துவிட்டான். அவளும் பதிலை எதிர்பார்க்காமல் திரும்பிவிட்டாள். நண்பர்களை இழந்த துயரத்தில் பதில் சொல்லும் நிலையில் அவன் இருக்கமாட்டான் என்று நினைத்துக் கொண்டு கேள்விகளால் அவனுக்குத் தொல்லை கொடுக்க விரும்பாமல் திரும்பிவிட்டாள். ஆபீஸுக்குக் கிளம்ப வேண்டிய நேரம் கடந்தும் அவன் நாற்காலியில் படுத்துக்கொண்டிருந்தான். இந்நிலையில் அவனால் ஆபீஸுக்கும் போக முடியாது என்றே அவள் நினைத்தாள். சற்று நேரத்திற்கெல்லாம் அவனை ``சாப்பிட வறேளா?'' என்று கூப்பிட்டுக்கொண்டு வந்தாள்.
``போடி பேயே'' என்றான் கண்ணை மூடிக்கொண்டே. அவள் உள்ளே போய்விட்டாள். பிறகு குழந்தை ``அப்பா'' என்று கூப்பிட்டுக்கொண்டு வந்தது. ``குட்டிப் பேயே போ'' என்றான். அவள் உள்ளிருந்தபடியே ``அப்பாவுக்கு மனசு சரியில்லேடி கண்ணு வந்துடு இப்படி'' என்றாள். சற்றுக் கழித்து அவனே சாப்பிடுவதற்குப் போனான். பேசாமல் சாப்பிட்டு விட்டு வந்து மீண்டும் நாற்காலியில் படுத்துக்கொண்டான். இதுவரையில் பஸ்ஸிலோ ரயிலிலோ அறைபட்டுச் செத்தவர்களை அவன் பார்த்ததில்லை. புஞ்சை கசாப்புக் கடையில் ஒரு சட்டிக்குமேல் கழுத்தை வைத்து ஆடு அறுப்பதைப் பார்த்திருக்கிறான். திருச்சம் பள்ளியில் இருந்து வந்து ஒரு சாயபு கசாப்புக்கடை வைத்திருந்தான். கறி விற்று முதல் ஆனதும் கடையைக் கட்டிக்கொண்டே திருச்சம்பள்ளி போய்விடுவான் அவன். வாரத்திற்கு மூன்று நாட்கள் கடை. உள்ளூர் கீழப்பாளையம் இடப்பிள்ளையின் ஆட்டுக்கிடையில் இருந்து அவனுக்கு ஆடுகள் போகும். நாளுக்கு ஒருவர் என்று முறை போட்டுத் தலையை வாங்கிக் கொண்டு போவார்கள். தலையை காதைப் பிடித்துத் தூக்கிக்கொண்டு போவார்கள். இமைக்காத விழிகளோடு ஆட்டுத்தலை பார்த்துக்கொண்டு போகும். ரயிலில் அடிபட்டுச் செத்தவனின் தலையையும் இப்படித்தான் தூக்கிக்கொண்டு போகவேண்டியிருக்கும். மனிதத் தலையை கேவலமாகக் காதைப் பிடித்துத் தூக்கிக்கொண்டு போக முடியாது. மயிரைப் பிடித்துத்தான் தூக்கிக்கொண்டு போகவேண்டியிருக்கும். அல்லது பனங்காயைப் போல, உள்ளங்கையிலும் ஏந்திக் கொண்டு போகலாம். சாணத்தை ஏந்திக்கொண்டு போவதைப்போல, மனிதத்தலையை ஏந்திக்கொண்டு போவதா என்று நினைக்கும் மனிதாபிமானி காளியைப்போல தலைமயிரைப் பிடித்துத்தான் தூக்கிக்கொண்டு போவான். சற்று நேரத்தில்தான் கடவுளாகிவிட்டதாகவும் அவன் நினைத்துக்கொண்டு போகலாம்.
சாயபு மிருகாபிமானம் இல்லாதவன். பெரிய மண் அகலுக்கு மேல் உள்ள கழுத்தை சாவகாசமாக அறுப்பான் அவன். ஆட்டை விடியற்காலையில் கடைக்காலில் கட்டிவைத்து தின்னத் தழை போட்டு வைத்திருப்பான். கத்தியை, உதவிஆள் வருகிறவரையில் தீட்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பான். ஆட்டின் கால்களை ஒருவன் பிடித்துக்கொள்ள வேண்டும். முழங்கால்களை முதுகுப்புறமாக ஆட்டு உடலில் மண்டியிட்டுக் காலைச் சேர்த்துப் பிடித்துக்கொள்ள வேண்டும். ஒருவன் வாயைக் கெட்டியாக அமுக்கிப் பிடித்துக்கொள்ள வேண்டும். இவன் கூர் பார்த்துவிட்டு கழுத்தில் கத்தியை வைப்பான் ரத்தத்திற்கு விலையுண்டு தரையில். சிந்தாமல் அதைச் சட்டியில் எந்த வேண்டும். சாவதானமாக அறுத்தால்தான் முடியும். ஆடு முணகும். கத்தி தொண்டைக்கு வந்ததும் முணகல் தொண்டையில் வழிந்துவிடும் போலிருக்கிறது. அதன் முணகல் அப்போது ரத்தத்தில் கலந்திருக்கும் என்று தோன்றிற்று. கசாப்புக்கடை பள்ளிக்கூடம் போகும் குறுக்குவழி; அங்கும் பேய் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டார்கள். பகலிலேயே அவன் அவ்வழியாகப் போய் இருந்ததால் பேயை அவனால் பார்க்க முடியவில்லை. எப்போதும் மனிதர்கள் அங்கு குந்தி பீடி குடித்துக் கொண்டிருந்ததை மட்டுமே அவனால் பார்க்க முடிந்தது. அவர்களுக்குக் கால்கள் இருந்தனவா என்ற சந்தேகம் இப்பொழுது திடீரென்று தோன்றிற்று. ஆட்டுக் கழுத்தில் உணவு போகும் வழியைப் பார்த்ததில்லை. நரசிம்மன் கழுத்தும் அப்படித்தான் இருந்திருக்கும். இனி தேவையில்லை என்பதால் அது அடைபட்டுப் போகிறது போலிருக்கிறது. தேவையில்லாதவைகளை ஒழித்துக்கட்ட வேண்டியதுதான். எழும்பூர் ரயில் நிலையத்தில் ஒருநாள் ஒருவன் பின்புறமாக ரயிலில் ஏறி, கிளம்பிய சக்கரத்தில் மாட்டிக்கொண்டான். ரயில் நின்றுவிட்டது. ஒருகால் கணுக்காலில் அரைபட்டது. அவனைத் தூக்கிக்கொண்டு வந்து பிளாட்பாரத்தில் போட்டார்கள்.
இதுவரையில் கிட்டிப்புள்ளுக்குக் கிளைவெட்டுவதைப் போலத்தான் கால்கள் ரயிலில் துண்டிக்கப்படுகின்றன என்று நினைத்துக் கொண்டிருந்தான். அப்படியில்லை, இவன் கால் நசுங்கித்தான் இருந்தது. பாதம் முழுதாக இருந்தது. அப்படியொன்றும் அவன் துடித்துவிடவில்லை. அப்பா அப்பா என்றோ, அம்மா அம்மா என்றோ சொன்னான். நிமிர்ந்து காலைப் பார்த்துக்கொண்டான். காலைப் பார்க்கத்தான் அப்பாவையும் அம்மாவையும் கூப்பிட்டான் போலிருந்தது. கால் போச்சே கால் போச்சே என்றுதான் அழுதான். கால் போனதற்காக அழுதானே தவிர வலிக்காக அழுததாகத் தெரியவில்லை. ஒரு புழுவை ஈர்க்குச்சியால் தொட்டால் எவ்வளவு உயரம் துள்ளிக் குதிக்கிறது. அதைப்போல எவ்வளவு பெரியவன் மனிதன். இவன் எவ்வளவு துள்ளிக் குதித்திருக்கவேண்டும். சாதாரணமாகத்தான் படுத்திருந்தான். வலி தாங்கிக்கொள்ளக் கூடியதுதான் என்று தோன்றிற்று. வயிற்றுவலிக்காகப் புஞ்சையில் தூக்குப் போட்டுக்கொண்டவர்கள் எல்லோரும் வேறு காரணங்களுக்காகத்தான் தூக்கிட்டுக் கொண்டிருக்க வேண்டும். குறுக்குக் காவிரிச்சாலை மரங்கள் அத்தனையிலும் யாராவது ஒருவன் தொங்கி இருக்கிறான். தற்கொலை மிகச் சுலபமானது என்று தோன்றிற்று. மவுண்ட்ரோட்டில் ஒரு இரவு ஒருவன் டாக்ஸியில் மோதிக் கீழே விழுந்தான். தலையில் இருந்து சிறிதுதான் ரத்தம் கசிந்திருந்தது: உயிர் இருந்தது. நினைவு இல்லை. வலிக்காக முணகவில்லை. அவன் கழுத்தில் அந்த டாக்ஸி ஏறி அவன் செத்திருந்தால் அவனுக்குத் தெரிந்திருக்காவா போகிறது. அவ்வளவு எளிதானது தற்கொலை. யோசித்துப் பார்க்காது தாவத் தெரிந்திருக்க வேண்டும். அவ்வளவுதான். வெகு நாட்களுக்கு முன்பு பஸ்ஸில் தலை அறைபட்டு எல்லாப் பற்களும் தெரிய இளித்துக்கொண்டு சாலை ஓரத்தில் கிடந்த நாய் ஒன்று இப்பொழுது சிரித்தது. அதன் குடல் ஆசனவாய் வழியாய்ப் பிதுங்கிக் கயிறுபோல் அதைச் சுற்றிலும் கிடந்தது. வயிற்றில் இருக்க வேண்டிய குடல் வெளியில் இருந்ததற்காக அது சிரித்துக் கொண்டிருந்தது போலத் தோன்றிற்று. அன்று முழுவதும் அவன் மனைவியோடோ குழந்தையோடோ பேசவில்லை; தேவையானபோது சாப்பிட்டான். கொண்டுவந்த காப்பியைக் குடித்தான். மற்ற நேரத்தில் சாய்வு நாற்காலியிலேயே கண்ணை மூடிக்கொண்டு கிடந்தான். மறுநாள் காலையில் மனைவி தழையத் தழையப் புடவையைக் கட்டிக்கொண்டு பேயைப் போல காப்பியை எடுத்துக்கொண்டு வந்தபோது அவளைப் புடவையைத் தூக்கச் சொன்னான். ``சீச்சி அசிங்கம்'' என்று அவள் உள்ளே போய்விட்டாள். ``நீ பேய்'' என்று கத்தினான். குளிக்காமலேயே சாப்பிட்டுவிட்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு ஆபீஸுக்குப் போனான். அவனுக்கு முன்னால் காரில் போனவர்களின் தலை பின் கண்ணாடி வழியாய்த் தெரிந்தது. தன்னைக் கடந்துபோன பஸ்ஸில் உட்கார்ந்து கொண்டிருந்தவர்களை மார்பு அளவுதான் பார்க்க முடிந்தது. டிரைவரின் தலையும், தோளும், கைகளும் மட்டுமே தெரிந்தன. குறுக்குக் கம்பியில் தொங்கியவர்களில் கையைப் பிடித்துக்கொண்டு தொங்கினார்கள் சிலர். அவர்கள் எல்லோருமே கால்கள் இல்லாத பேய்கள் என்று தோன்றிற்று. நடந்து போனவர்கள் அத்தனை பேரையும் பார்த்துக்கொண்டே போனான். எல்லோரும் செருப்புப் போட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பாதம் மண்ணில் படவில்லை; ஆகவே அவர்களும் பேய்களே என்று நினைத்துக்கொண்டே போனான். `ஷு' போட்டுக்கொண்டவர்கள் கணுக்கால் அளவு இல்லாத பேய்கள். சைக்கிளில் போனவர்கள் அந்தரத்தில் உட்காரும் நடுத்தரப் பேய்கள். செருப்பு இல்லாமல் ரிக்ஷா இழுத்துக்கொண்டுபோன ஒருவன் மட்டும் மனிதன் என்று ஒரு விநாடி தோன்றினான். பிறகு, அவன் மாட்டைப்போல வண்டி இழுத்ததால், மனிதனாக இருக்க முடியாது, இரண்டு கால்களில் நடக்கத் தெரிந்த மிருகமாக இருக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டே ஆபீஸ் போய்ச் சேர்ந்தான். ஆபீஸுக்குப் போகும்போது நேரமாகிவிட்டது. ``ஏன்?'' என்று கேட்டார்கள். ``வரும் வழியில் என் நண்பன் ராமநாதன் பஸ்ஸில் மாட்டி அரைபட்டுச் செத்துவிட்டான். அதைப் பார்த்துவிட்டு வருகிறேன். நாயின் குடல் வெளியில் கிடந்ததுபோல அவன் குடல் பிதுங்கிக் கிடந்தது. நாய் சிரித்ததுபோல அவன் இளித்துக்கொண்டு கிடந்தான். எழும்பூர் ரயிலில் மாட்டிக்கொண்டவனின் காலைப்போல் அவன் கழுத்து நசுங்கி இருந்தது'' என்று சொன்னான். ``ஐயோ பாவம். லேட்டானா பரவாயில்லை. சீட்டுக்குப் போ'' என்றார்கள் அனைவரும். ``நீங்கள் எல்லோரும் பேய்கள்'' என்று சைக்கிளில் ஏறிக்கொண்டு திரும்பி விட்டான். ``ஆபீஸுக்கு வரப்போறதில்லை என்று சொல்லத்தான் வந்திருக்கான் போலிருக்கிறது. நண்பன் இறந்ததில் கலங்கிப்போய் இருக்கிறான்'' என்று அவர்கள் பேசிக்கொண்டார்கள். இவன் வீட்டுக்குப் போனதும் ஆபீஸில் இருந்து திரும்பிவிட்டதைக் கண்டு மனைவி ``ஏன் ஆபீஸுக்குப் போகலியா?'' என்றாள். ``சென்னையில் அத்தனை பேரும் பேய்கள்'' என்று சொல்லிக் கொண்டே போய் சாய்வு நாற்காலியில் படுத்துக்கொண்டான். ``ஏன்? உங்களுக்கு உடம்பென்ன செய்யறது? உயிருக்கு உயிரா பழகினேள்தான். அதுக்காக செத்துட்டா நாமுமா கூட செத்துட முடியும்? மனசெ தேத்திக்கோங்கோ'' என்று கனிவோடு அவன் அருகில் வந்தாள். ``போடி பேயே'' என்றான். அவள் விலகிக்கொண்டாள். பயம் வந்துவிட்டது. ``ஒங்களுக்குப் பைத்தியம் புடுச்சிடுத்தா என்ன?'' என்றாள். ``புடவையைத் தூக்கு'' என்றான் இவன். ``சீச்சி... அசிங்கம் என்ன பேசறேள்'' என்று சிரித்து கொண்டே அவள் உள்ளே போய்விட்டாள் ``நான் தான் பூமியில் பாவும் மனிதன் என்றான் இவன் அவள் உள்ளே இருந்தபடியே ``படுத்துண்டு தூங்குங்கோ. மனசு தெளியும். நாளைக்கு ஆபீஸுக்குப் போயி ஒரு மாசம் லீவு போட்டுட்டு வாங்கோ. ஒரு மாசம் ஊருக்குப் போய் இருக்கலாம். எல்லாம் மறந்துடும்'' என்றாள். இவன் நாற்காலியிலேயே படுத்துக் கொண்டிருந்தான். குழந்தை படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தது. காலைப் புடவையால் போர்த்தியிருந்தாள் அவள். போய்ப் புடவையைத் தூக்கிப் பார்த்தான். கால்கள் இருந்தன. தூங்கும்போது கால்கள் இருந்தால் போதாது. நடக்கும்போதுதானே பாதம் பூமியில் பாவுகிறதா இல்லையா என்று பார்க்க வேண்டும் என்று மீண்டும் போய் நாற்காலியில் படுத்துக்கொண்டான். பிறகு ஒவ்வொரு நிமிஷமும் ஒரு யுகமாய்ப் போயிற்று. பயமாக இருந்தது. உலகத்தில் தான் மட்டும் தனியாக இருப்பது போலத் தோன்றிற்று. எங்கும் பேய்க் கூட்டம் உலவிக் கொண்டிருப்பதாகத் தோன்றிற்று: பேய்களுக்கு இடையில் தான் மட்டும் மனிதனாக இருப்பதாகத் தோன்றிற்று. பேய்கள் மனித உருக்கொண்டு தரையில் பாதம் படாமல் தோன்றினால் மனிதன் பேயாகப் பதுங்குவதே மேல் என நினைத்தான். சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு வெளியில் புறப்பட்டான். பைகிராஃப்ட்ஸ் ரோட்டில் பஸ்கள் வந்து போய்க்கொண்டிருந்தன. தூரத்தில் 13-ஆம் நம்பர் பஸ் வெகு வேகமாக ஒரு பேயால் ஓட்டிக்கொண்டு வரப்பட்டது. அருகில் வந்ததும் அதன்முன் பாய்ந்தான். அவன் மேல் ஏறி இறங்கி சற்றுத் தூரத்தில் போய் நின்றது பஸ்.


நன்றி: தீராநதி

கல்யாணி - ந. முத்துசாமி

http://www.sirukathaigal.com/குடும்பம்/கல்யாணி/#more-3666
என் பேத்தி ஊருக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள்.
காலை நேரம்.
புஞ்சையிலிருந்து தொலைபேசியில் செய்தி வந்தது. ‘கல்யாணி இறந்துவிட்டார். நேற்று இரவு இறந்துபோனார். இன்று பிற்பகல் எடுக்கிறார்கள்’ என்றார், தொலைபேசியில் பேசியவர்.
‘நீங்கள் யார் பேசுவது?’ என்று நான் கேட்டேன்.
‘நான் நரசிம்மனின் மகன்’ என்றார் அவர்.
எந்த நரசிம்மன்?
எனக்கு நிறைய நரசிம்மன்கள் பழகியிருந்தார்கள், கூத்தில் உள்ள நரசிம்மனையும் சேர்த்து.
கல்யாணிக்குக் கல்யாணம் பண்ணிவைப்பதில் என் பங்கு மிகப் பெரிதாக இருந்தது. அவருடைய தங்கையைக் கல்யாணம் பண்ணிக் கொண்டிருந்த நரசிம்மன் என்ற தையற்காரனின் பங்கும் பெரிதாக இருந்தது. நாங்கள் இருவரும் நண்பர்கள். ஒருவருக்கொருவர் நண்பராக இருந்ததாலேயே கெட்ட பெயர் எடுத்தவர்கள். கல்யாணியும் என் நண்பர். கல்யாணிதான் என் நண்பர். அதற்குப் பிறகு கல்யாணியின் தங்கையைக் கல்யாணம் பண்ணிக் கொண்டவிதத்தில் நரசிம்மன் எனக்குக் கூடுதலான நண்பரானார். செம்பனார்கோயிலில் தையற்கடை வைத்திருந்த சர்க்கரையின் மூலம் அதே செம்பனார்கோயிலில் தையற்கடை வைத்திருந்த நரசிம்மன் நண்பரானார். எனக்குக் கல்யாணி நண்பர் என்பதால் அவருடைய தங்கையைக் கல்யாணம் பண்ணிக்கொள்வதில் என் உதவியைப் பெற்று அதன் மூலம் கூடுதலான உறவு உண்டாயிற்று எனக்கும் நரசிம்மனுக்கும் இடையில்.
எனக்கும் கல்யாணிக்கும் இடையில் 12 வயது வித்தியாசம் இருந்தது. இறக்கிறபோது வயது 82 என்று பிறகு அவருடைய கருமாதி அன்றைக்குப் புஞ்சைக்கு ஃபோன் செய்து பேசியபோது தெரிந்துகொண்டேன். கடைசி பன்னிரண்டு ஆண்டுகளில் அவர் சக்கர நாற்காலியிலேயே பொழுதைக் கழித்தார். அவருக்கு நீரிழிவு நோய் இருந்தது. அதில் அவர் ஒரு காலை இழந்து பிறகு சக்கர நாற்காலியில் ஏறிக்கொண்டு புஞ்சையின் இன்னொரு விநோதமான பாத்திரமாகமாறியிருந்தார். சக்கர நாற்காலியில், மாடியில் இருந்த அவர் மகன் வீட்டில் சென்னையில் அவரால் பொழுதைக் கழிக்க முடியவில்லை. எனவே, அவர் புஞ்சைக்குத் திரும்பிவிட்டார். இந்தப் பன்னிரண்டு வருஷங்கள் அவருக்குப் புஞ்சையில் மிகவும் சந்தோஷமாகவே போயிருந்திருக்கின்றன. சக்கர நாற்காலியில் எங்கும் அவர் போய்வந்து கொண்டிருந்ததால் அவருக்கு நல்ல உடற் பயிற்சியும் கிடைத்திருக்கிறது அவருக்குப் பிடித்தமான அரசியலைப் பேச முடிந்திருக்கிறது. அதற்குப் போதுமான டீக்கடைகள் புஞ்சையில் இருந்தன. அவர் திராவிடக் கழகத்துக்காரர். கடைசிவரையில் அவர் திராவிடக் கழகத்துக்காரராகவே இருந்தார்.

என்னுடைய பேத்தி சென்ற ஆண்டுக்கு முந்தின ஆண்டு சிங்கப்பூரிலிருந்து வந்திருந்தபோது புஞ்சைக்கு நாங்கள் போயிருந்தோம். அப்போது அவள் கல்யாணியைப்பார்த்தாள். மேற்குப் பார்த்தும் கிழக்குப் பார்த்தும் இருந்த வீடுகளைக்கொண்ட மேலவீதியின் மேல் சாரியில் தெற்குப் பார்த்து இருந்த வீட்டின் முன்தாழ்வாரத்தில் அவர் சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்தார். ‘என்ன கொழந்தெ, ரவியோட மகளா?’ என்று என் பேத்தியை அருகில் அழைத்து அணைத்துக்கொண்டார். அது ஒரு நாற்பது நாற்பத்தைந்து வருஷங்களுக்கு முந்தியதாக இருக்குமானால் சாராய வாடையில் என் பேத்தி அவர் மேலேயே வாந்தி எடுத்திருப்பாள். இப்போது வேர்வை நாற்றம் மட்டுமே இருந்தது. என் பேத்தி அந்தத் தழுவலில் சற்றுநேரம் அப் படியே இருந்தாள். எனக்கு மட்டும் ஆச்சரியமாகவே இருந்தது. எப்படி இந்த மொடாக்குடியன் குடியை விட்டுவிட்டு ‘அ’ குடியரானார்! அது அவருடைய கல்யாணத்தின் போதே ஆகிவிட்டது. ஆனால் பெரிய வைராக்கியமுள்ள ஒரு பரம்பரையில் வந்த அவர் குடியை விட்டது ஒன்றும் ஆச்சரியம் இல்லைதான்.

அந்தப் பரம்பரையில் ஏற்கனவே நான் சின்னதாடியைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். சின்னதாடி கல்யாணியின் சின்ன நாயனா. இப்போது கல்யாணியின் நாயனா பெரியதாடியைப் பற்றிச் சொல்ல வேண்டும். அவர் மிகவும் மௌனமாகப் புஞ்சையின் தெருக்களில் உலவிக்கொண்டிருந்தார். பேசும் போது தலையை ஆட்டி ஒரு ஆஸ்பதம் போட்டுவிட்டே பேசுவார். இவர்கள் எல்லோருமே கூட்டுக்குடும்பத்தில் வளர்ந்தவர்கள். கஸ்தூரி நாயுடுவின் வீட்டுக்கு எதிரில் இருந்த அவர்கள் வீடு எனக்குத் தெரிந்தே வசவசவென்று இருந்தது. இத்தனை ஜனங்களைக்கொண்ட அந்த வீட்டில் எல்லோரும் பேசினார்கள் என்றால் எல்லோருக்குமே காது செவிடாகி இருந்திருக்க வேண்டும். அவர்களுக்குக் காது நன்றாகவே கேட்டது. ஆனால் பேச்சு குறைந்துவிட்டது போலும். அப்படித்தான் இருக்க வேண்டும். தலையை ஆட்டுவது. மௌனமாகக் கேட்டுக் கொண்டிருப்பது. பேச்சு உள்ளிருந்து புறப்பட்டு யோசனை அனுமதித்த பின்னர்தான் வரவேண்டும் போலிருக்கிறது. தலையை ஆட்டுவது அதற்கான ஆமோதிப்பு போலும். இந்தப் பேச்சு ஒன்றும் விரோதத்தைச் சம்பாதித்துக் கொண்டுவராது. எனவே, பேசலாம்.

அவரைப் பற்றி ஒரே ஒரு சம்பவத்தைச் சொன்னாலே போதுமானது என்று நினைக்கிறேன். குழந்தைகளான எங்களுக்கு அக்ரகாரத்தைவிட்டு மேற்கே வந்து தெற்கே திரும்பினால் இருந்த டீக்கடைகளின் வாசல் பெரிய பொழுதுபோக்கு ஸ்தலம். அப்போது நாங்கள் அந்த டீக்கடைகளில் ஏ. கே. சி. நடராஜனின் கிளாரினெட் கேட்டுக்கொண்டிருந்த காலம். எஸ். ஜி. கிட்டப்பா, தியாகராஜ பாகவதர், டி.ஆர். மகாலிங்கம், டி. கே. பட்டம்மாள் இவர்களையெல்லாம் கொஞ்சம் பின்தள்ளிவிட்டு ஏ. கே. சி. போன்றவர்கள் முன்னுக்குவந்துவிட்ட காலம் அது. அலுத்துப்போகிற அளவுக்கு ஏ. கே. சியைப் போட்டிபோட்டுக்கொண்டு மாற்றி மாற்றிப் போட்டுக் கொண்டிருந்தார்கள் டீக்கடைக்காரர்கள். நாங்கள் ஏ. கே. சியைச் சங்கீதமாகக் கேட்பதை விட்டுவிட்டு வெறும் சப்தமாகக் கேட்கிற அளவுக்கு  வந்துவிட்டோம். அந்த சப்தத்தைக் கேட்டுக்கொண்டு நின்றிருந்தபோது, என்ன ஆச்சரியம் இது!

அங்கு ஒரு ஆச்சரியம் நடக்கப் போகிறது என்று எங்கள் உள்ளுணர்வில் புலப்பட்டுவிட்டதுபோலும். நாங்கள் எல்லோரும் அங்கு தோளில் மேல் துண்டைப்போட்டு மத்து சிலுப்புவது போலச் செய்துகொண்டிருந்த பெரியதாடியின் பக்கம் திரும்பினோம். தெற்கே இருந்து ஒரு நாய் வெகுவேகமாக வடக்கை நோக்கிச் சாலையில் பெரியதாடி நின்றுகொண்டிருந்த பக்கம் ஓடிவந்து கொண்டிருந்தது. அது அவரைக் கடக்கிறபோது நாயக்கர் ஒரு தாவலில் குனிந்து நாயின் பின்னங்கால்களைப் பற்றித் தலையைச் சுற்றிக் கார்த்திகைக்கு மாவலிப்பைச் சுற்றுவதுபோலச் சுற்றித் தரையில் அடித்துக் கொன்றுவிட்டார். எல்லோரும் ஆச்சரியத்தில் பேச்சிழந்து இருந்தார்கள்.

அது ஒரு வெறிநாய். புஞ்சையில் அது இரண்டொரு நாள்களுக்கு முன்பு இரண்டு பேரைக் கடித்திருந்தது.

அடுத்த முறை புஞ்சைக்குப் போகிறபோது என் பேத்திக்கு அந்த இடத்தைக் காட்ட வேண்டியிருக்கும். இந்த முறை அவளால் புஞ்சைக்குப் போக முடியவில்லை. செப்டம்பர் வாக்கில் அவள் ஃபோன் செய்தபோது ‘இந்த முறை புஞ்சைக்குப் போய்விட்டுவர வேண்டும் தாத்தா’ என்றாள். ஏனெனில் போன முறையும் அவளால் போக முடியவில்லை. போன முறை சுனாமி வந்துவிட்டது. இந்தமுறை அடை மழை. இந்த முறையும் ஊருக்குப் போய்விட்டு வரமுடியாமல் போய்விட்டதே என்றும் கல்யாணி இறந்துவிட்டாரே என்றும் என் பேத்தி வருந்தினாள். தொலைபேசியில் செய்தியைக் கேட்டதும் அப்படியே உட்கார்ந்துவிட்டாள். இடிந்து உட்காருதல் என்பதற்கு அப்போதுதான் எனக்கு உண்மையான அர்த்தம் புரிந்தது.

கல்யாணிக்கு அந்தப் பெயரை வைத்தவர் எங்கள் பெரியப்பாதான். பெரியப்பா அவருடைய வாத்தியார். அவர் வைத்த பெயரில் அவருக்குப் பெரிய சந்தோஷம் இருந்தது. ‘பெரிய ஸார் வைத்த பெயர். பெரிய ஸார் வைத்த பெயர்’ என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார். எங்கள் அப்பா சின்ன ஸார்

அவருக்கு விஜயன் என்ற ஒரு பெயர் இருந்தது நினைவுக்குவருகிறது. கல்யாணத்தின்போது கல்யாணி என்கிற விஜயனுக்கு என்று போட்டார்கள்.
பத்திரங்களில் விஜயன் என்ற பெயர் பயன்பட்டிருக்கும். கல்யாணி என் நண்பராக இருந்ததால், எங்கள் பெரியப்பா அவருக்கு வைத்த பெயரே நிலைத்துவிட்டது என்பதைச் சொல்லிக்கொள்வதில் அவருக்குப் பெருமையாக இருந்தது.

நான் குழந்தையாக எங்கள் பெரியப்பா போதித்த வகுப்புக்குப் போயிருக்கிறேன். அப்போது கல்யாணியைச் சந்தித்தது இப்போது நன்றாக நினைவுக்குவருகிறது. ஒரு சந்தோஷ உணர்வாக உடம்பில் பரவுகிறது. செம்பனார்கோயிலிலிருந்து வரும் சாலை மேலவீதியாக வடக்கே திரும்பும் முனையில் இருந்த பள்ளிக்கூடத்தைத் தவிர இப்போது கல்யாணி வீடு கட்டிக்கொண்டிருந்த இடத்துக்கு எதிரே பெரிய கோயிலுக்குப் போகிற சந்துக்கு இடப்பக்கத்தில் இருந்த கட்டடத்தில் எங்கள் பெரியப்பாவின் வகுப்பு இருந்தது. அப்போது புஞ்சைப் பள்ளிக்கூடத்தில் எட்டாம் வகுப்புவரை இருந்தது. எங்கள் அப்பா அந்தப் பள்ளிக் கூடத்தில் இருந்தார். இடமின்மையால் இங்கு சில வகுப்புகள் நடந்தன. அங்கு என்னைக் கல்யாணி கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு போனது இன்னமும் நினைவிருக்கிறது. அந்த உறவு இன்றுவரையில் தொடர்ந்தது.

கல்யாணிக்குக் கல்யாணம் பண்ணி வைப்பதில் என் பங்கு மிகப் பெரிதாக இருந்தது என்று சொன்னேன். சர்க்கரையைப் பற்றியும் சொன்னேன்  சர்க்கரைக்கு அவப் பெயர் இருந்தது. அதனால் அவனோடான எங்கள் நட்பு கேவலமாக மதிக்கப்பட்டது. அவன் அக்ரகாரத்தில் இருந்த பெண்களுக்கு ஜாக்கெட் தைத்துக்கொண்டு வந்து கொடுத்தான். அதை வைத்து அவனைக் கேவலமாகப் பேசினார்கள் வடுவத் தெருவில். அதனால் அவனைநாடான் என்றார்கள். அவனுடைய அண்ணன் கௌரவமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அவருடைய ஜாதி மறைந்து இருந்தபோது சர்க்கரையுடைய ஜாதி பெரிதாகத் தெரிந்தது.சர்க்கரையும் தெரியாத்தனமாக ஜாதியைப் பாராட்டினான்.
செம்பனார் கோயில் தையற்கடைக்கு வந்துபோன, ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்று வந்த ஒரு தலித் நண்பன் இருந்தான். அவன் இல்லாத போது அவனைச் செடி என்பான் சர்க்கரை. செம்பனார்கோயிலில் செடி என்பது தலித்துகளுக்கு அவர்களுக்குத் தெரியாமலே சூட்டப்பட்டிருந்த பெயர். அவன் எங்களுக்கு இணையாகப் பழகினான். அவனைச் செடி என்று சொல்வதற்கு என்ன நியாயம் இருக்கிறது சர்க்கரைக்கு.

நரசிம்மனுக்குப் பற்கள் பெரிதாக இருந்தன. அவை நரசிம்மாவதாரத்தின் பற்களைப் போலவே இருந்தனவாம். எப்போதும் சிரித்துக் கொண்டே பீடியைத் தொடர்ந்து புகைத்துக்கொண்டிருந்தான் நரசிம்மன். பிரஹலாதர்களாகிய எங்களிடம் நரசிம்மன் சந்தோஷமாக இருந்தது போலும். ஆனால், நாங்கள் இரணியனை அல்லவா இணையற்ற வீரனாகப் பாராட்டிக்கொண்டிருந்தோம். நரசிம்மனின் பற்களுக்கு இடையில் இடைவெளி பெரிதாகத் தெரிந்தது. சிரித்தால் மட்டுமே வெளியில் தெரியும்படி பற்கள் உள்ளடங்கியே இருந்தன. பீடிப்புகை படிந்து சுட்டுக் கருத்த உதடுகளுக்கு உள்ளே புகையால் பழுத்த பற்கள் சிரிப்பில் பெரிதாகத் தெரியும். அதைக் காட்டிக்கொள்வதில் அவனுக்குத் தயக்கமில்லை. சிரித்துக்கொண்டே இருப்பான். சிரிப்புக்கு இடையிலும் புகை இழுப்புக்கு இடையிலும் மிகவும் சந்தோஷமாகப் பேசுவான். புகை இழுப்புக்கூட மிகச் சந்தோஷமாக நுரையீரல்கள் நிறைய நிறைய இழுப்பதாக இருக்கும். புகை பிடிப்பதில்லை அது. புகை குடிப்பது. அதுகூடச் சரியான பிரயோகமாகத் தெரியவில்லை. குடிப்பது எல்லாம் இரைப்பைக்கு அல்லவா போகிறது. கபடமில்லாமலும் பயமில்லாமலும் மிகச் சந்தோஷமாகப் புகைபிடித்து மிகச் சந்தோஷமாகவே சிறுவயதில் அவன் செத்தும் போய்விட்டான்.

பெரியதாடியின் வேகமான நடைக்குப் பின்னால் நாங்கள் நாய்க் குட்டிகளைப் போல ஓடி கல்யாணியின் கல்யாணப் பேச்சைப் பேசிக் கொண்டிருந்தோம். நரசிம்மனுக்கு ஆணிக்கால். தெத்தித்தெத்தி நடப்பான். அதோடு ஓட்டம். சட் டெனப் பெரியதாடி நின்று திரும் புகிறபோது அவர்மேல் மோதிக் கொண்டுவிடுவதைப் போல் முட்டுக் கட்டைபோட்டு நாங்கள் நிற்போம். எங்களை ஒரு பார்வை பார்த்து விட்டு மீண்டும் திரும்பி நடப்பார் பெரியதாடி. ‘ஒதவாக்கரைகள் ஒதவாக்கரைகள்’ என்பதுபோல இருக்கும் அந்தப் பார்வை.

கல்யாணி திராவிடக் கழகத்துக்காரர் என்பதல்லாமல் அவர் வேலையில்லாமல் திரிகிறார் என்பதும் அவருடைய நாயனாவுக்கு அவருக்குக் கல்யாணம் பண்ணிவைப்பதில் பெரிய தடையாக இருந்தது. பணம் தேவைப்பட்டால் ஒரு வாழைத்தாரை வெட்டிக்கொண்டு போய் விற்றுவிட்டு வந்துவிடுகிறார்.

கல்யாணிக்குக் கல்யாண ஆசை வந்த கதை எனக்கு ஞாபகம் இருக்கிறது. ஒருமுறை கல்யாணி என்னைக் குரங்குப்புத்தூருக்கு அழைத்துக் கொண்டு போனார். போகும் வழியில் சர்க்கரையையும் அழைத்துக் கொண்டு போனோம். குரங்குப்புத்தூரில் சர்க்கரையின் சொந்தக்காரர் ஒருவர் சாராயம் காய்ச்சினார். கள்ளச்சாராயம். உள்ளபடியே அதுதான் நிஜச்சாராயம். நான் இலங்கையிலிருந்து வந்த சாராயத்தைக் குடித்திருக்கிறேன். மணிப்பூரில் ‘ரைஸ் ஒயின்’ என்று அழைக்கப்படுகிற சாராயத்தைக் குடித்திருக்கிறேன். அது எங்கள் வீட்டின் இரண்டாம் கட்டில் அடுக்கிவைத்திருக்கும் தவிட்டு மூட்டைகள் சிக்குப்பிடித்து நாறுவதுபோல் நாறிற்று. நாள்பட்ட உமியின் நாற்றம். பகோடாவில் சாராயம் குடித்திருக்கிறேன். இந்தச் சாராயங்களைக் குடிக்கிறபோதெல்லாம் அந்தக் குரங்குப்புத்தூர்ச் சாராயத்தின் நினைவுதான் வந்தது.

சாராயம் கலப்படம் இல்லாமல் இருக்கிறதா என்பதைக் காண்பிக்ககாலிபாட்டிலின் வாயில் தீக்குச்சியைக் கிழித்துக்காட்டி அது ‘பக்’கென்று எரிந்து வெடித்துத் தழல் இளஞ்சிவப்பிலும் இளம்பச்சையிலும் வெளியேறி பாட்டில் காய்ந்திருப்பதைக் காட்டினார் கல்யாணி. நாங்கள் முட்டமுட்டச் சாராயம் குடித்தோம். அவர்கள் வறுத்த கருவாடு தொட்டுக்கொண்டார்கள். நான் அப்போது அதெல்லாம் பழகிக்கொள்ளவில்லை. எனக்கு எலுமிச்சங்காய் ஊறுகாய் கொடுத்தார்கள். உலகமே சந்தோஷத்தில் மிதக்க நாங்கள் காவிரிப்பூம்பட்டினம் மண்சாலையை அலைந்துகொண்டு வந்தோம். மண்ணை உழுது புழுதி கிளப்பிக்கொண்டு வந்தோம். அந்தச் சாலையைக் கீழணையிலிருந்து காவிரிப்பூம்பட்டினம்வரை போட்டு இரண்டு புறமும் ஆலமரங்கள் வைத்த கரிகாலனைப் புகழ்ந்து கொண்டே வந்தோம்.
அந்தச் சாலையைச் சோழன் போட்டான் என்பது செவிவழிச் செய்தியாகவே எங்களை எட்டியிருந்தது. காவிரிப் பூம்பட்டினத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சோழர்கள் இப்படி ஒரு சாலையைப் போட்டிருப்பார்கள் என்பதை எந்த ஆராய்ச்சிக்கும் அப்பாற்பட்டு நாங்கள் நம்பினோம். ‘மண்ணை நன்றாக உழு’ என்றார் கல்யாணி. அது நம் பண்டைத் தமிழர்கள் மிதித்த மண் என்றார். கொரங்குப்புத்தூர் நாடாருக்குச் சாராயம் காய்ச்சும் மரபு அப்படியே சங்ககாலத்திலிருந்து தொடர்ந்துவருகிறது என்றார். திராவிடக் கழகத்துக்காரராதலால் அவர் படிப்பதிலும் அதிகக் கவனம் செலுத்தினார். வெ. சாமிநாதசர்மா எழுதிய புத்தகங்களை நான் அவர் வீட்டில்தான் பார்த்தேன். கோபால கிருஷ்ண பாரதியின் நந்தன் சரித்திரக் கீர்த்தனைகளும் எனக்கு அப்போதுதான் அறிமுகமானது. உ. வே. சாமிநாதய்யர் எழுதிய கனம் கிருஷ்ணய்யர், கோபாலகிருஷ்ண பாரதியார் முதலிய புத்தகங்களை அவர்தான் கொடுத்தார். படித்தேன். ஓர் அபூர்வமான உணர்வு என்னிடம் இருந்தது. ஒரு பெரிய தொடர்ச்சியில் நான் இன்றையஒரு கட்டம். இது என்னைப் பற்றிக்கொண்டிருந்தது.

அப்புறம் நாங்கள் காவிரிக்குப் பக்கத்தில் காவிரிக்கரையில் ஏறினோம். ஏனெனில் அதற்குப் பிறகு கிடாரங்கொண்டான் வந்துவிடுகிறது. தெரிந்தவர்கள் வந்துவிடுவார்கள். அது எனக்காக. அவர் ஊரறிந்த குடிகாரன். காவிரிக்கரையில் ஏறியதும் ஆதிமந்தியும் ஆட்டனத்தியும் எங்கள் பேச்சில் இடம் பிடித்துக் கொண்டார்கள். அவர்களைப் பற்றிப் பாரதிதாசன் எழுதியிருக்கும் புத்தகத்தை நான் படித்திருந்தேன். சுய மரியாதை மரபில் அது கல்யாணிக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும் என்பதால் அதையும் நான் அவரிட மிருந்துதான் படித்திருந்தேன். இந்தக் காவிரியில் எப்படி ஆட்டனத்தி அடித்துக்கொண்டு போகப்பட்டான் என்ற கேள்வி எங்களுக்குள் எழுந்தது. அப்போது காவிரி ஆழமாக இருந்ததா? இன்னும் இன்னும் ஆழம் என்று இறந்த காலத்தில் அதன் ஆழம் பாதாளம் வரையில் போய்ச்சங்க  காலத்தில் அடி நாகலோகத்தைத் தொட்டுக்கொண்டு இருந்ததால் ஆட்டனத்தியால் நீந்த முடியாமல் தண்ணீரில் அடித்துக் கொண்டு போகப்பட்டுவிட்டான் என்றார் கல்யாணி. கல்யாணி சுத்த சுயமரியாதைக்காரராக இருந்த காரணத்தால் அவருக்குப் பழைய பெருமை பேசிக்கொண்டிருப்பதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இன்று இன்று இன்று என்ன என்று கேட்டுக்கொண்டே இருப்பார்.

இன்றைப் பற்றி எனக்கு நினைவு வந்தபோது இன்று எங்கள் மாமா வீட்டுக்கு வருகிறார் என்பது நினைவுக்கு வந்துவிட்டது. அப்போது நாங்கள் பள்ளக் கொல்லையைக் கடந்துகொண்டிருந்தோம். கல்யாணி ஒரு உபாயம் சொன்னார். போதை தெளிவதற்குக் காவிரியில் கிடந்து புரளலாம் என்று. காவிரியில் தண்ணீர் அரித்து ஓடிக்கொண்டிருந்தது. படுத்துக் குளித்தாலும் உடல் முழுதும் நனையாது. என்றாலும் படுத்துப் புரள்வதற்கு மிகப் பிரமாதமாக இருக்கும். மணலில் குதிரை புரள்வது போல் புரளலாம். வளைவில் களிமண் பாங்கான பகுதியில் தண்ணீர் பள்ளம் பண்ணியிருக்கும். அதில் தலைமுழுகக் குளிக் கலாம். தண்ணீர் ஓடிக்கொண்டே இருப்பதால் சுத்தமாக இருக்கும். அப்போது காவிரி சாக்கடையாக மாறவில்லை. காவிரியைத் தெய்வமாக நினைப்பவர்கள் காவிரி நெடுகிலும் இருந்தார்கள். கல்யாணி, காவிரியை ஒரு பெண்ணைப் போலவே மதித்தார்.

நாங்கள் தண்ணீரில் மணலில் புரண்டு புரண்டு குளித்தோம். உள்ளே ஏற்கனவே பெரிய பழைய நதி ஓடியிருப்பதால் இரண்டு தண்ணீரும் ஒன்றுக்கொன்று உறவு கொண்டு எங்களைப் பெருத்த சந்தோஷத்துக்கு ஆளாக்கியிருந்தது. இந்த நதிக்குக் கொஞ்சம் சலுகை காட்டினார் கல்யாணி. வேத காலத்து நதி. சோமநதி. வேட்டி சட்டைகளை அவிழ்த்துவைத்து விட்டு ஜட்டியுடன் குளித்தோம். உடம்பெல்லாம் மணல். தலையெல்லாம் மணல். அரித்தோடும் தண்ணீரில் எதிர் நீச்சல்போட்டு தண்ணீரோடு அடித்தோடும் மீன்களைப்போல விழுந்து விழுந்து குளித்தோம். ரொம்பகுஷியாக இருந்தது. அப்படியே கரைந்து தண்ணீரோடுபோய்க் காவிரிப்பூம்பட்டினக் கடலில் கலந்துவிடமாட்டோமா என்பதுபோல் இருந்தது. ஒருகால் இப்படிக் கரைந்துதான் ஆட்டனத்தி காவிரியோடு போயிருக்க வேண்டும். இதே  ன்ற எண்ணங்கள் கல்யாணியின் மனத்திலும் ஓடியிருக்க வேண்டும்.‘பக்தர்களைக் குறைசொல்வது தப்பு’ என்றார் கல்யாணி. நான் ஏன் என்று கேட்கவில்லை. சர்க்கரை மௌனமாகவே இருந்தான். தன் சொந்தக்காரன் இவ்வளவு அற்புதமான மதுவைக் காய்ச்சி, கல்யாணியிடம் பெயர் வாங்கிவிட்டான் என்ற சந்தோஷத்திலேயே பின்தங்கி விட்டான்.

கரையோடு போனவர்கள் கல்யாணியைக் குசலம் விசாரித்துக்கொண்டு போனார்கள். நாங்களெல்லாம் என்ன குழந்தைகளாகிவிட்டோமா என்று கேட்டுக்கொண்டு போனார்கள். ஒங்களுக்கென்ன இன்றுதான் பதினெட்டாம் பெருக்கா? சப்பரத்தட்டிகள் எங்கே? மரக்கிளைகளில் ஏறிக்குதிக்கச் சொன்னார்கள். கொழந்தெயாரு நடேசய்யரு புள்ளையா என்று என் யோக்யதையைச் சிலாகித்துக் கொண்டு போனவர்களும் உண்டு. அப்போதெல்லாம் கல்யாணி பதில் சொல்லவில்லை. அவர்களெல்லாம் நாங்கள் அதீத உணர்வுகளோடு இருக்கிறோம் என்பதைப் புரிந்து கொண்டவர்கள். அப்படியென்றால் நாங்கள் இன்னும் மண்ணில் புகுந்து புறப்பட வேண்டும்.

‘அண்ணே, இந்தக் கரையோடுதானே அண்ணே ஆதிமந்தி ஓடினா?’ என்று அவர் ஒருவரைப் பார்த்துக்கேட்டார்.

‘யாரய்யா அது ஆதிமந்தி?’

அந்த மனிதருக்கு மந்தி என்றால் பெண் குரங்கு என்பதுக்குமேல் ஒன்றும் தெரியாதாகையால் பெரிய குழப்பத்தோடு போய்விட்டார். ஆனால்  அடுத்துவந்த ஆள் ‘ஒரு கல்யாணமா கார்த்தியா… ஊதாரித்தனமா சுத்திக்கிட்டிருந்தா பொறுப்பு எங்கே வரப்போகுது. பெரியதாடி என்ன பாவம் செஞ்சாரோ… குடிகாரப்பய குடிகாரப்பய’ என்று சொல்லிக்கொண்டே போனது கல்யாணியின் காதில் விழுந்துவிட்டது. அவர் கோபப்படவில்லை. ‘கண்ணா… ஒரு யோசனை தோணுது. கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன? என்றார். அப்புறம் கொஞ்சம் மௌனமாகிவிட்டார். அவருக்குக் கல்யாண யோசனை வந்தது அந்தச் சந்தர்ப்பத்தில்தான்.

நாங்கள் நீண்ட நேரம் குளித்தோம். கண்கள் சிவந்துவிட்டன. வழியில் கிடாரங்கொண்டான் டீக்கடையில் ஒரு டீ குடித்துவிட்டு, ஒரு ரிண்டான் மாத்திரையை வாங்கிப்போட்டுக்கொண்டு வீட்டுக்குப் போய்விட்டோம். என்னோடு கல்யாணி வீட்டுக்கு வந்தார். போதை தெளிந்துவிட்டது. நாங்கள் குளித்தது ஒரு தூக்கத்துக்கு ஒப்பாக இருந்தது. ஏதாவது நாற்றம் வருகிறதென்றால் அது தன்னிடமிருந்து வருகிறது என்று நினைத்துக் கொள்ளட்டும் என்றுதான் அவர் என்னோடு வந்தது. எங்கள் மாமா வந்திருந்தார். கூடத்து ஊஞ்சலில் உட்கார்ந்துகொண்டு ஆடிக்கொண்டி ருந்தார். நான் தலையில் இருந்தமண் எல்லாம் போக வேண்டு மென்று குளிப்பதற்குக் கிணற்றுக்குப் போனேன். ஏற்கனவே, மடுவில் குளித்துத் தலையில் மண் எல்லாம் போய்விட்டிருந்தது. வீட்டில் குளிப்பதால் சோப்பின் மணம் கொஞ்சநஞ்ச வாசனையைக் கழுவிவிட்டுவிடும் என்று எண்ணினேன். நான் குடித்திருந்தேன் என்பதை யாரும் கண்டுகொள்ளவில்லை. கல்யாணி என் நண்பர் என்பது எங்கள் மாமாவுக்குத் தெரியும். யாருக்கும் அடங்காத தறுதலை என்ற பெயரும் எனக்கு இருந்தது. என்னைத் தறுதலை என்று எங்கள் மாமா எண்ணாவிட்டாலும் யாருக்கும் அடங்காதவன் என்று நினைக்கிறவர்தான்.

எங்கள் மாமா போன பிறகு மாலையில் என்னைப் பார்க்கக் கல்யாணி வந்தார். வழக்கம்போல ஆளுயர மூங்கில் கம்பும் பெரிய வாழைக்கொல்லை அரிவாளுடனும் இருந்தார். அரிவாள் வாழைக்கொல்லைக்காக. மூங்கில் கம்பு அவர் சிலம்பம் பழகுவதற்காக. அவர் அறிந்த சிலம்பத்தைத் தினமும் பழகாமல் அவர் இருப்பதில்லை. காவிரிக்கரையில் அவர்களுக்குச் சொந்தமாக இருந்த வாழைத் தோட்டத்தின் இடையில் ஒரு நல்ல தென்னந்தோப்பு இருந்தது. அதில் சில மரங்களுக்கு இடையில் கம்பு சுற்றுவதற்குப் போதுமான இடமிருந்தது. அதில் ஒரு மணிநேரம் நன்றாகப்
பழகிவிட்டு வருவார். ஏதாவதொரு காரணத்தினால் ஒரு நாளைக்கு விட்டுப்போய்விட்டதென்றால் அடுத்த இரண்டு நாள்களில் அரைமணி அரைமணி நேரமாக ஈடுசெய்து சுற்றிவிடுவார். இந்தத் தோற்றம்கூட அவருக்கு அவப் பெயரைக் கொடுப்பதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கக்கூடும்.
”வா கல்யாணி, சேவகம் பண்ணக் கிளம்பியாச்சா?” என்றாள் எங்கள் பாட்டி அவள் சேவகம் என்றது தலையாரியைப் போல இவரும் ஒரு தலை உயரக் கம்பு வைத்துக்கொண் டிருப்பதால். மேலும் சம்பளம் இல் லாத ஊழியம் செய்பவர் என்பதையும் குறிக்கத்தான். ஒரு கட்டு வாழை இலையைக் கொண்டு வந்து தாழ் வாரத்தில் வைத்துவிட்டுச் சிரித்தார் கல்யாணி. ”இல்லை பாட்டி” என்றார். அது நான் பாட்டியைக் கூப்பிடுவதைப் போன்றதொரு தொனி.
”என்னமோ . . . போப்பா இப்படியே காலத்தெ ஓட்டிவிடப் பாக்கறெ” என்றாள் பாட்டி.
”பாட்டி நான் கல்யாணம் பண்ணிக்கப்போறேன் பாட்டி”
”என்ன இது கூத்து” என்றாள் எங்கள் அம்மா.
”கூத்துமில்லே ஆட்டமுமில்லே. நெஜமா கல்யாணம் பண்ணிக்கப் போறேன்”
”அதெச் செய் முதல்லே” என்றாள் எங்கள் அம்மா.
”என்னமோப்பா நாயக்கர் பேரெக்காப்பாத்தினேன்னா அதுலே மொதல்லே சந்தோஷப்படறவ நான்தான்” என்றாள் பாட்டி.
”பெண் யாரு?” என்று கேட்டாள் எங்கள் அம்மா.
”இனிமேதான் பாக்கணும்”
அந்தச் சில மணிநேரத்தில் ஒருவன் ஏசலாகப் போட்டுவிட்டுப் போனது இப்படி வளரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவர் பெண் பார்த்த படலமும் எனக்குத் தெரிந்துதான் நடந்தது.

நாங்கள் காரைக்காலுக்குக் குடிக்கப்போனபோது அது நடந்தது. நாங்கள் எல்லோரும் சைக்கிளில் போனோம். போகிறபோது ஒரு காரியமாகப் போய்விட்டு, வருகிறபோது குடித்துவிட்டுவந்தோம். ராமகிருஷ்ணனுக்குச் சொந்தக்காரனும் எங்களுக்கு நண்பனும் எங்களோடு படித்தவனும் ராமகிருஷ்ணன் வீட்டில் இருந்தவனும் அரப்புலிசுர சதகத்தைக் கரைத்துக்குடித்தவனுமான தாணுவின் மாமாவின் வீடு தென்னங்குடியில் இருந்தது. அவர் நகர் சார்ந்த நாகரிகத்தை அனுசரிப்பவர். மேலும் ஃபிரெஞ்சுக் கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்கள் மிகவும் நாகரிகமானவர்களாகத் தோற்றம் தருவார்கள். நீர்காவி ஏறிய வேட்டியை அவர்கள் கட்டுவதில்லை. சலவை செய்த சட்டையையே அணிவார்கள். நாங்கள் புஞ்சையில் நீர்காவி ஏறிய வேட்டியையே கட்டிக் கொண்டிருந்தோம். எங்கள் ஊரில் சலவைத் தொழிலாளர்கள் இருந்தார்கள். என்றாலும் சலவை செய்த வேட்டியை எடுத்து அன்றாடத் தேவைகளுக்குக் கட்டுவதற்கு எங்களுக்குத் தயக்கமாக இருந்தது. மேலே சட்டையே அணிவதில்லை. அது ஊர்ப் பயணத்துக்கு மட்டுமே. ஆனால் அவர்களோ வீட்டில்கூடச் சலவை செய்த சட்டையை அணிந்துகொண்டிருந்தார்கள். வீடு ஒட்டடை அடிக்கப்பட்டு எப்போதும் புதிது போலவே இருக்கும். அவர் வீட்டுக்கு மெத்தைகள் தைக்கவே நாங்கள் போனோம். அப்போது இலவம் பஞ்சு மெத்தைகள்தான் இருந்தன. பஞ்சை அடித்து மெத்தை தைக்க வேண்டும். நரசிம்மன் தையல்காரனானதால் அவனையே கூப்பிட்டிருந்தான் தாணு. தனக்கு வேண்டியவனுக்குப் பணம் போகட்டுமே என்று அவனுடைய மாமா இதற்கு ஒத்துக்கொண்டிருந்தார். நாங்களும் கூடப் போனோம்.

அவரை நானும் அறிவேன். அவர் ராமகிருஷ்ணனின் வீட்டுக்கு அடிக்கடி வருகிறவர். ராமகிருஷ்ணனின் அம்மாவின் தங்கையை அவர் மணந்துகொண்டிருந்தார். நாங்கள் நரசிம்மனின் வேலையில் உதவ முடியும். நரசிம்மன் மெத்தைக்கு வேண்டிய துணியைச் செம்பனார் கோயிலிலேயே தைத்துக்கொண்டு வந்துவிட்டான். கையில்கொண்டுபோக வேண்டியது ஊசியும் நூலும்தான். பஞ்சு தென்னங்குடியில் இருந்தது. ஒரு சைக்கிளில் இருவர் இருவராகப் போனோம். சர்க்கரையை நாங்கள் அழைத்துக்கொண்டு போகவில்லை. தாணு ஏற்கனவே தென்னங்குடி போய்விட்டான். நானும் கல்யாணியும் ஒரு சைக்கிள். ராமகிருஷ்ணனும் நரசிம்மனும் ஒரு சைக்கிள். கல்யாணியை வெளியில் வைத்துவிட்டு ஒரு அறையில் பஞ்சைப் போட்டுக்கொண்டு கழியால் நாங்கள் அடித்தோம். அதற்கான வில்லை நாங்கள் தேடவில்லை. அதற்கான தொழிற்திறமை முஸ்லிம்களிடமே இருந்தது. நாங்கள் வில்லால் பஞ்சு அடிக்கிற கற்பனையோடேயே கழியால் பஞ்சு அடித்தோம். கழி பஞ்சைக் கொந்திக்கொந்திக்கொண்டு வந்தது. சுவர் எல்லாம் பஞ்சு. கூரை எல்லாம் பஞ்சு. எங்கள் மேலெல்லாம் பஞ்சு. எங்கள் நுரையீரலில் பஞ்சு. பனி மூட்டம்போலப் பஞ்சு அறையை மூடிக்கொண்டிருந்தது. இவற்றிலிருந்தெல்லாம் பஞ்சின் தரம் கெட்டுப்போய்விடாமல் துரும்புகள் பஞ்சில் கலந்துவிடாமல் மெதுவாகப் பஞ்சை எடுக்க வேண்டியிருந்தது. ஒரே நாளில் அடித்து மெத்தைக்குப்பஞ்சடைத்துவிட்டோம். பிறகு கூரையை ஒட்டடை அடித்துச் சுவர்களைப் பெருக்கித் தரையை எல்லாம் பெருக்கித் துடைத்து மெத்தையை ஈரத்துணியால் துடைத்துப் பஞ்சு களைப் போக்கி வெயிலில் காயவைத்து எங்கள் மூக்கு நுரையீரல் தலைமேலெல்லாம் ஒட்டிக் கொண்டிருந்த பஞ்சைத்துடைத்தும் தும்மியும் காறித்துப்பியும், வெளியேற்றி அங்கு ஒன்றுமே நடவாதது போல ஆக்கிக்கொடுத்துவிட்டுவர இரண்டு நாள்கள் பிடித்தன. அப்படியரு துல்லியமான வேலையை அவர் இதற்கு முன்கண்டிருக்க முடியாது. மூன்றாம் நாள் காலையில் நாங்கள் புறப்பட்டோம்.

கல்யாணியை வெளியில் வைத்திருந்தது அவருக்கு நல்லதாகப் போய்விட்டது. அவர் கற்பனையில் கல்யாண ஆசையைக் காவிரிக்கரையில் போனவன் போட்டுவிட்டுப் போனதற்குப் பிறகு அவர் புலம்பல் என்ற அர்த்தம் தொனித்துவிடாமல் சற்று முன்னதாகவே முடித்துக்கொண்டு தன் கல்யாண ஆசையை எல்லோரிடமும் வெளிப்படுத்திக்கொண்டிருந்தார். அப்படி அவர் தாணுவின் மாமாவிடமும் பேசியிருப்பார் போலிருக்கிறது. அவர் அதற்குச் சாத்தியமான ஒரு யோசனையைச் சொல்லிப் பக்கத்து வீட்டில் இருந்த ஒரு பெண்ணையும் காட்டி அவர்களோடு தொடர்புப்படுத்திவிட்டார் கல்யாணியை. கல்யாணி ஆள்களைக் கவரும் நட்பு பாராட்டத் தெரிந்தவர். அதனால் அங்கு உறவை உண்டாக்கிக்கொண்டுவிட்டதோடுஅந்தப் பெண்ணோடு காதலையும் ஸ்தாபித்துக்கொண்டுவிட்டார். இந்த இரண்டு நாள்களில் உள்ளே மெத்தை உருவாயிற்று. வெளியில் காதல் உருவாயிற்று.

எங்கள் புறப்பாடு திட்டமிட்ட படியே நடந்தது. நாங்கள் நேரே காரைக்காலுக்குப் போய் பாரில் உட்கார்ந்துகொண்டு குடிக்கத் தொடங்கிவிட்டோம். எந்த பிராண்ட் எந்தக் கலவையில் எப்படிக் குடிக்க வேண்டும் என்பதற்கெல்லாம் வாத்தியார் கல்யாணிதான். அந்தக் குடியை நாங்கள் கல்யாணியின் காதலுக்குச் சமர்ப்பித்தோம். அந்த க்ஷணம் நானும் நரசிம்மனும் கல்யாணிக்குக் கல்யாணம் பண்ணிவைக்கும் பொறுப்புக்குப் பிரமாணம் எடுத்துக்கொண்டோம்.
குடித்துவிட்டு நாங்கள் ஊர் திரும்பியபோது காரைக்காலின் தெருக்களில்சைக்கிளை உருட்டிக் கொண்டு வந்தோம். தெருவை அலைந்துகொண்டு வந்தோம். குடித்துவிட்டு அப்படி வருவது பெரிய பெருமையாக இருந்தது எங்களுக்கு. அடங்காப்பிடாரியாக இருப்பதில் லயிப்பு இருந்த காலகட்டம் அது. சமூக நியதிகளை உடைத்தெறிந்து அதில் மூத்திரம் பெய்து காறித்துப்பி நாசப்படுத்த வேண்டும் என்றும் அதுவும் போதாமல் மனம் வெறுப்புக்கொள்ளும் காலகட்டமாக அது இருந்தது. அது திராவிட இயக்கத்தால் உண்டாகியிருந்த மனநிலைதான். மிக மெதுவாக மாறும் சமூகத்தில் நாங்கள் பொறுமையில்லாதவர்களாக இருந்தோம். எங்களுக்கெல்லாம் தலைவர் கல்யாணி. அவருடைய கல்யாணம் என்னும்போது எங்கள் உற்சாகம் கரைபுரண்டுஓடியது.

திரும்பும்போது கல்யாணியால் சைக்கிள் மிதிக்க முடியவில்லை. ஒருக்கால் எங்களைவிட அவர் அதிகம் குடித்திருந்தாரோ என்னவோ? நாங்கள் எதையுமே இயல்பாக எடுத்துக்கொள்ளாமல் தொடர்ந்த போராட்டத்தில் இருந்துகொண்டிருந்த காரணத்தால் போதைகூட எங்கள்மேல் ஏறத் தயங்கிவிட்டதுபோலும். இந்தச் சமூகத்தை எதிர்த்த யுத்தத்தில் நாங்கள் போர்வீரர்கள். அப்படித் தான் அப்போது எங்கள் மனநிலை இருந்தது. நாங்கள் ஒன்றுமே ஆகாதவர்களைப்போல இருந்தோம். ஆகாயத்தில் இருந்தோம். பெரிய பெருமை. படுபலம். கல்யாணியை சைக்கிளில் வைத்துக்கொண்டு நான்தான் ஓட்டிக்கொண்டு வந்தேன்.

அவரைக் காதலிப்பதற்கும் ஒரு பெண் இருக்கிறாளா என்றுதான் நாயக்கருக்குத் தோன்றியது. நாயனா மறுக்க மறுக்க அவருடைய காதல் வலுவாக வளர்ந்தது. எங்களை அன்னியில் அவர் இரண்டொருமுறை தென்னங்குடிக்குப்போய் விட்டு வந்தார். நாங்கள் அறியாமல் அங்கே போய்விட்டு வந்தாரோ என்றும் எங்களுக்குச் சந்தேகம் இருந்தது. இப்படி அவர் தென்னங்குடி போய்விட்டு வருவது அநியாயமாக ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் பாழாக்கிவிடும் என்று நாயக்கர் பெரிய கவலைக்கு ஆளாகிவிட்டிருந்தார்.

இப்படி ஒரு புள்ளையா வந்து பொறக்கணும். என்ன பாவம் செஞ்சோமோ என்றே அவர் குன்றிப்போய்க் கொண்டிருந்தார் என்பது எங்களுக்கு அவர் எதிர்வீட்டுக்காரர் கஸ்தூரி நாயுடுவிடம் பேசிக்கொண்டிருப்பதிலிருந்து தெரிந்தது. இதில் கஸ்தூரி நாயுடு தலையிடமாட்டாரா என்ற ஆதங்கமும் அவருக்கு இருந்திருக்கக் கூடும். ஆனால் இந்த நேரத்தில் அவருக்கு நம்பிக்கை வரும் இரண்டொரு காரியங்கள் நடந்தன. அந்த நேரத்தில்தான் அவர் நான் மேலே குறிப்பிட்ட வீட்டைக் கட்டியது. அதை மட்டும் அவர் கட்டாமல் இருந்திருந்தாரானால் அவருடைய கல்யாணத்துக்கு ஒத்துக்கொண்டிருக்கமாட்டார் நாயக்கர். வீட்டைக் கட்டிப்பார்! கல்யாணம் பண்ணிப்பார் என்று ஒரு பழமொழி இருக்கிறதல்லவா? அவர் வீட்டைக்கட்டிப் பார்த்துவிட்டதனால் இனிமேல் அவருக்குக் கல்யாணம் பண்ணிப்பார்க்கலாம் என்று நாயக்கர் தன் ஸ்தானத்திலிருந்து கீழிறங்கி வந்துவிட்டார் போலிருக்கிறது.

அந்த இடத்தில் இடிந்த ஒரு பழைய வீடு இருந்தது. வரிசையாகக் கிழக்குப் பார்த்த வீடுகளின் இடையில் பாழடைந்துபோயிருந்தது அந்த வீடு. ஆள்களைவிட்டு அந்த வீட்டின் செங்கற்களைப் பெயர்த்து அடுக்கி ஒப்பேறிய ஓடுகளைப் பிரித்து அடுக்கித் தெற்குப் பார்த்து வாசலை வைத்து வீட்டைக் கட்டுவதற்கு அஸ்திவாரம் போட்டுவிட்டார் கல்யாணி. அது தெருவின் சாரியில் அமையவில்லை என்பதும் ஆரம்பத்தில் அவருக்கு நாயனாவிடம் அவப் பெயரைக் கொடுத்தது. ஊரோடு ஒத்துப்போகாத காலிப்பயல். காலிப்பயல்கள் அதுதான் சரியானது.அந்த மனைக்கட்டின் கோடியில் இருந்த ஒரு மூங்கில் கொத்தின் மூங்கில்கள் எல்லாவற்றையும் வெட்டி மேற்கே காவிரிக்கரையில் இருந்த குட்டையில் ஊறப்போட்டு விட்டு – அந்தக் குட்டையில் மட்டும் தான் அதிகம் மனிதர்கள் குளிக்காமல் இருந்தார்கள் – போதாக் குறைக்குப் புதிய ஓடுகளை மட்டும் வாங்கிக்கொண்டு அழகிய ஒரு சிறிய வீடு உருவாகிக்கொண்டு வந்ததைப் பார்த்த பிறகுதான் ஊரோடு முரணிக்கொண்டு அவர் வீட்டைக்கட்டவில்லை என்பதும் தெற்குப் பார்த்து வாசலை வைத்துக்கட்டுகிறார் என்பதும் நாயனாவுக்குப் புலப்பட்டது.

கிளுவை வேலியால் வாயிலை அடைத்து, அந்தக் கொல்லைக் கோடியில் போகிறவரையில் கிளுவை வேலியால் எல்லாவற்றையும் நன்றாக அடைத்துக் கொத்தி வாழை வைத்து அது நன்றாகக் குருத்துவிட்டு ஓரிரு இலைகள் வெளியில் வந்து இடமே களைகட்டியபோது நாயனாவுக்கு நன்றாக நம்பிக்கை வந்துவிட்டது. புஞ்சையில் கிளுவை என்றால் அது சின்னதாடியைத்தான் நினைவுபடுத்தும். கிளுவை வேலிபோடுவதும் கிளுவைப் பேத்துகளை வெட்டி வியாபாரம் பண்ணுவதும் ஒரு பெரிய கலை. அதை மிக நன்றாகச் செய்தவர் சின்னதாடி. அப்படியே கல்யாணி பரம்பரைப் பழக்கத்தில் வருவது கண்டு பெரியதாடிக்கு உள்ளூரச் சந்தோஷமாகவே இருந்தது. நானும் நரசிம்மனும் செய்ய முடியாத காரியத்தை வீடும் வாழைத் தோட்டமும் கிளுவை வேலிகளும் செய்துவிட்டன.

கல்யாணி மிக எளிமையாகக் கொண்டாடிய கிரகப்பிரவேசம், என்னவோ வீட்டை நாயக்கர்தான் கட்டி கிரகப்பிரவேசம் பண்ணுவது போல இருந்தது. நாங்கள் எல்லோரும் இருந்தோம். அது ஒரு நல்ல சடங்காகத்தான் நடந்தது. அவருக்கும் மனசுக்கு ஒத்துப்போயிற்று. அவருடைய நாயனாவுக்கும் சம்பிர தாயமாக இருந்தது. அதற்குப் பிறகு நாய்களைப் போல நாங்கள் நாயனாவுக்குப் பின்னால் ஓடவில்லை. வீடு கட்டியதைத் தொடர்ந்து அவர் தன் டீக்கடையைத் திறந்தார். அது உட்கார்ந்து இருப்பதற்கு சந்தோஷமான இடமாக அமைந்துவிட்டது. தெற்கு வடக்காக நீண்ட ஓர் அமைப்பு. அதன் நடுவிலிருந்து கிழக்கே போகும் ஒரு பகுதி அடுப்படிக்கு. மனையின் வடமேற்குத் தென்மேற்கு மூலைகளில் இரண்டு தென்னை மரங்கள் இருந்தன. அந்தத் தென்னைகளைச் சுற்றி வட்டமாகக் கூரை அமைத்து, அதன் அடியில் அமர்ந்து சாப்பிடுவதற்கு அமைப்புகளை உருவாக்கியிருந்தார். அந்தவசதிகள் தெற்கு வடக்காக இருந்த தென்னைகளின் வரிசையில் உண்டாக்கப்படவில்லை அது இடைஞ்சலாக இருக்கும் என்று விட்டுவிட்டார் போலிருக்கிறது. தென்னைகளுக்கு வெளிப்புறத்தில் அழகான கிளுவை வேலியை அடர்த்தியான படலை வைத்து அமைத்துவிட்டார். இடம் மிகச் சுத்தமாக இருந்தது. நான் ஏற்கனவே சொல்லியிருந்த அக்ரகாரத்தின் முனையில் இருந்த டீக்கடைகளும் இருந்தன. இது வடக்குவீதி வடக்கே திரும்பி சாலையாக மாறும் இடத்தின் கீழ் கையில் இருந்தது. இது வடக்கு வீதி மேலும் தொடர்ந்து கிழக்கேபோய்த் தெற்கே திரும்பிக் கீழ வீதியாக மாறிவிடுகிறது. தெற்கு வீதியான வடுவத்தெருவிலிருந்து வரும் சந்து, குருக்கள் வீட்டை ஒட்டி மேலும் தொடர்ந்து வடக்கு வீதியில் வந்து சேர்கிறது. எனவே இந்தக் கடை இந்தப் பகுதியில் உள்ளவர்கள் தொடர்ந்து வடக்கே போய்ப் பழைய டீக்கடைகளை நாடவேண்டிய அவசியமற்றுப் போயிற்று. இது அக்கடைகளுக்குப் போட்டி அல்லவென்றும் தன் கடை புதிய வாடிக்கையாளர்களை உண்டாக்குவதிலேயே கருத்தாக இருக்கும் என்றும் அந்தக் கடைக்காரர்களுக்குச் சொல்லி அவர்களுடைய கவலைகளைப் போக்கியதுதான் கல்யாணியின் முதல் வேலையாக இருந்தது.

முதன்முதலில் புஞ்சையில் பறையர்கள் எல்லோரும் சமமாக உட்கார்ந்து டீ குடிக்க அனுமதித்தார் கல்யாணி. எல்லோருக்கும் கொடுத்ததைப் போல அதே டபரா டம்ளர்களில் அவர்களுக்கும் டீ கொடுத்தார். அதற்கு முன்பெல்லாம் அவர்களுக்கு டீக்கடையின் பக்கத்தில் சார்ப்பு இறக்கி இருப்பார்கள். அதிலிருந்துதான் அவர்கள் டீ குடிக்க வேண்டும். அவர்களுக்கு டபரா டம்ளர் கிடையாது. கண்ணாடி டம்ளர்கள் தனியாக ஒதுக்கப்பட்டிருக்கும். டீ வேண்டுவோர் அந்தக் கண்ணாடி டம்ளரை எடுத்துவைக்க வேண்டும். அதில் டீக்கடைக்காரர் வெந்நீரை ஊற்றுவார். அதைக் கழுவிவைத்தால் டபரா டம்ளரில் டீயை ஆற்றி அதில் ஊற்றுவார். எடுத்துக் குடித்துவிட்டு அதை அவர்களே அதற்கான இடத்தில் கழுவிவைத்துவிட வேண்டும். இதுதான் தொடர்ந்துகொண்டிருந்தது. இப்போது இதைத் தன் கடையில் மாற்றிவிட்டார் கல்யாணி. இதற்கெல்லாம் ஒத்துக்கொண்டவர்கள் கல்யாணியின் கடைக்கு வந்தார்கள்.

இன்னொரு அற்புதமான வேலையைச் செய்தார் கல்யாணி. அவர் கோயில் காளையைப்போல ஊர் சுற்றிக்கொண்டிருந்ததால் அவருக்கு யார் யார் வீட்டில் என்னென்ன விசேஷமான பலகாரங்கள் பழக்கத் தில் இருக்கின்றன என்பது தெரிந்திருந்தது அவற்றைத் தயாரித்துக் கொண்டுவந்து தன் கடையில் ஒவ்வொரு நாள் சிறப்பான அம்சங்களாக விற்பனைக்கு வைத்துவிட்டார். அது மாலை நேரங்களில் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட அளவு மட்டும் விற்கப்படும். அது அவர் கடையின் தனிச்சிறப்பாக எங்கும் பரவ ஆரம்பித்துவிட்டது. தனக்கு லாபம் குறைவாகப் போதும் என்றும் வருபவர்களுக்கு நல்ல பொருள்கள் கிடைக்க வேண்டும் என்பதும் அவருடைய லட்சியமாக இருந்தது. எனவே மிக உயரிய காபி, டீ அவருடைய கடையில் கிடைத்தது. இளம் காலைப் பொழுதும் மாலை நேரங்களும் மிக இனியவையாகப் பலருக்கு மாறிவிட்டன.

குறிப்பாக மன அழுத்தத்தைக் கொடுக்கும் மாலைப் பொழுது மிகவும் சுவாரஸ்யமான மாலைப் பொழுதாக மாறிவிட்டது. இப்போது டீக்கடைக்குப் பால் கொண்டுவரும் நபராகப் பெரியதாடி மாறிப் போய்விட்டார். இனிமேல் கல்யாணத்தை முடித்துவிடலாம் என்ற கட்டம் வந்துவிட்டது.

கல்யாணம் நடந்தது. கல்யாணம் கஸ்தூரி நாயுடுவின் வீட்டில் நடந்தது. பெரிய சந்தோஷம். கஸ்தூரி நாயுடுவுக்குப் பெரிய சந்தோஷம். ‘மாமா’ என்று கூப்பிடு குரலுக்கு ஓடிவந்து திண்ணையில் உட்கார்ந்து கொண்டு பேசுகிறவர் அல்லவா? யோசனைகள் பண்ணுகிறவர்கள். மதிக்காத இளைய தலைமுறை மார்பைத் தூக்கிக் கொண்டு தெருவோடு போகிறபோது மதிப்பாகத் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு யோசனை பண்ணுகிறதென்றால் அதற்குப் பெரிய மதிப்பு இருந்தது.

நாங்கள் பெரிய சந்தோஷத்தில் இருந்தோம். சர்க்கரை ராமகிருஷ்ணனின் வீட்டுக்கு நல்ல காய்ச்சிய சுத்த சாராயத்தைப் பாட்டில் பாட்டிலாகக் கொண்டுவந்துவிட்டான். இப்போது நாங்கள் மட்டுமே சாராயம் குடித்தோம். நாங்கள் குடித்துக்கொண்டிருந்தபோது பெண்ணும் பிள்ளையும் பெரிய கோயிலுக்குப் போகிறார்களென்றும் எங்களைக் கூப்பிடுகிறார்கள் என்றும் ஒருவன் ஓடிவந்து சொன்னான். நாங்கள் கச்சேரியை முடித்துக் கொண்டு எழுந்து ஓடினோம். பெண்ணும் பிள்ளையும் மேளதாளத்துடன் நற்றுணையப்பன் சந்நிதிக்குப் போனார்கள். இதுவரையில் நாங்கள் கிண்டல் பண்ணிக்கொண்டிருந்த குருக்கள் சம்பிரதாயங்களை எல்லாம் முடித்துத் தீபாராதனைத் தட்டைக் கண்ணில் ஒத்திக்கொள்ள பெண்ணுக்கும் பிள்ளைக்கும் முன் கொண்டுவந்து காண்பித்தார். கல்யாணி தீபாராதனையைத்தொட்டுக் கண்ணில் ஒத்திக்கொண்டார். அவரைத் தொடர்ந்து நாங்களும் ஒத்திக்கொண்டோம்.
இனிமேல் என் பேத்திக்குத் தெரியும், என் உறவு கல்யாணியோடு எப்படிப்பட்டது என்பது.