முதல் முகத்தின் தங்கைக்கு
பிரமிள்
துடித்து
அன்று விழுந்த பகலை மீண்டும்
மிதித்து நடப்பவளே
கொலுசு சூழாத நிசப்தத்தில் நின்
வெண்பாதச் சதைகள் மெத்திட்ட
புல்தரையைக் கவனி
உன்முன் சென்றவள் என்னை
உதறிச் சிந்திய சுவடுகள்
அழுதழுது வரளும் என்
மன வெறுமையிலே
ஏழுவண்ணப் புதிர்கள்
அவிழ எனவா நின்
ஒருதுளிப் பார்வை?
அல்ல
தோற்றழியும் என் தவிப்பை
என் உடலின் இலைநரம்புகள்
உள்ளுரப் பரிகசித்துச்
சிரிக்க என் முகம்தேடி
பார்க்க நிமிர்ந்தனையோ?
உயர்ந்து வளர்ந்த சின்னவளே
அண்ணாந்து
என் மாடியைப் பார்ப்பதேன்?
அழியத் துணிந்தும்
அழியாது தடுமாறி
எரிந்தெழுந்து
சாம்பல் புழுதியில்
உயிர் உடலாகத் திரண்டு
மீண்டும் நிலைத்த நிழல் நான்.
உன் முன்னவளின்
ஜால மருந்து தொடுத்த
பார்வைமழை நுனிகளை
எதிர்பார்த்து மறுப்பின்
குரூர நுனிகள் தைக்க
துடித்திறக்கும் எனது நாட்களை
மீண்டும் நிகழ்விக்கவா
என் வாசலில் நின்று
முகம் திரும்பினை?
கவனி-
என் மாடி உப்பரிகையல்ல
உச்சியில் ஒருகுடில்
என்னுள் கவிதையின்
காலதீதச் சழலெனினும்
நாசியில்-
உன் நாசியிலும் தான்-
நம்மிருவர் தெருவின்
எல்லையில் குடிகொண்டு
வாழ்வின் மறுப்புக்கணை பாய
இறந்து வீழ்ந்த
இதயங்களைச் சூழ்ந்து
பிழம்பு வளர்க்கும்
சுடலையின் வீச்சம்.
எனவே,
விளையாடாதே!
என் இதயத்தை வளைக்கும்
இருள் முடிச்சு
உன் புன்னகை விரல்களில்
அவிழ்ந்து
கருநிற மெத்தைகளாய்
சிதறிச் சிரிக்க
மன நடு இரவு
பூ முகம் கொள்ளுமெனில்
சொல்,
சொல்லை இதயத்தின்
சொல்லற்ற சுனைதர
பேசு.
அது இன்றி
விளையாடினாயெனில்
ஹோம குண்டங்கள் கூட
வெற்றுப் புகைமுடிச்சாய் மண்ட
வேதனை மீண்டும்
அக்னியை உரிமைகொள்ளும்.
கொல்லிப்பாவை 2
நகுலன்
அகலிகை நகைக்க
அருந்ததியும் நின்றிகழ
வருமீரசை ஒருசொல்
நின்நாமம் செய்ய;
வில்லெடுத்து நாண் வளைத்துக்
குறிவீழ்த்தும் முன் கருத்துந்த
கண்ணூடு கண் வளைந்து
உள்ளம் புணர்ந்து உடல் தழுவத்துடித்து
அன்று நின்ற அச்சீதையும்
நின்செயல் கண்டு நெடிது நிற்பாள்.
நின்நாமம் கேட்டு
மாரனும் கை சோர்வான்.
அவன் உயிரனைய ரதிஅவளும்
நின்ற திசயிப்பாள்;
வில்லென உடலும் வளைய
விண்ணென்று நாணையொத்து உள்ளமும்
நெறித்து நிற்க
கண்ணெடுத்து உள்ளம் வளைத்துக்
குறிவீழ்த்த முடியாது நிற்கும் நின்செயல் கண்டு
விண்ணவரும் எட்டிநின்று
எள்ளி நகைப்பர்.
மெய்யின் இருளகல
உயிரின் கள்வரை
விண்ணவர் கோனும்
சேவலெனக் கூவியழைக்க
காவல்நீத்து கடிது சென்று
ஒரு கணம் அமுதம் பருகி
மறுகணம் கல்லென உருவெடுத்த
அகலிகையும் தீதிலள் என்று
கூறியவனும் அறம் வகுத்த அண்ணலே காண்.
ஆனால்
ஆசையகற்றி
வெறுங்கல்லென வறிது நிற்கும்
நின்செயல் புரிவதுமில்லை.
நீதான்
கல்லிலடித்த சிலையாக
கனவில் வடித்த ஓவியமாக
சதையும் குருதியும் சமைத்துயிர்த்த
உயிர்குடிக்க இதழ்துடிக்கும் பாவையாக
வாரி அணைக்க வந்த மரணமாய்
நெடிது நின்றாய்.
ஆனாலும்
அலையாது குலையாது
அலைதள்ளும் நின்குலவும்
வடிவழகு கண்டு
அல்குதலே அதன் வாழ்வெனக் கண்டு
அதனைப் புல்குதலே வாழ்வென வேண்டி
‘சில்’லென்று நின்றேன் நின்முன்.
நகுலன்
அகலிகை நகைக்க
அருந்ததியும் நின்றிகழ
வருமீரசை ஒருசொல்
நின்நாமம் செய்ய;
வில்லெடுத்து நாண் வளைத்துக்
குறிவீழ்த்தும் முன் கருத்துந்த
கண்ணூடு கண் வளைந்து
உள்ளம் புணர்ந்து உடல் தழுவத்துடித்து
அன்று நின்ற அச்சீதையும்
நின்செயல் கண்டு நெடிது நிற்பாள்.
நின்நாமம் கேட்டு
மாரனும் கை சோர்வான்.
அவன் உயிரனைய ரதிஅவளும்
நின்ற திசயிப்பாள்;
வில்லென உடலும் வளைய
விண்ணென்று நாணையொத்து உள்ளமும்
நெறித்து நிற்க
கண்ணெடுத்து உள்ளம் வளைத்துக்
குறிவீழ்த்த முடியாது நிற்கும் நின்செயல் கண்டு
விண்ணவரும் எட்டிநின்று
எள்ளி நகைப்பர்.
மெய்யின் இருளகல
உயிரின் கள்வரை
விண்ணவர் கோனும்
சேவலெனக் கூவியழைக்க
காவல்நீத்து கடிது சென்று
ஒரு கணம் அமுதம் பருகி
மறுகணம் கல்லென உருவெடுத்த
அகலிகையும் தீதிலள் என்று
கூறியவனும் அறம் வகுத்த அண்ணலே காண்.
ஆனால்
ஆசையகற்றி
வெறுங்கல்லென வறிது நிற்கும்
நின்செயல் புரிவதுமில்லை.
நீதான்
கல்லிலடித்த சிலையாக
கனவில் வடித்த ஓவியமாக
சதையும் குருதியும் சமைத்துயிர்த்த
உயிர்குடிக்க இதழ்துடிக்கும் பாவையாக
வாரி அணைக்க வந்த மரணமாய்
நெடிது நின்றாய்.
ஆனாலும்
அலையாது குலையாது
அலைதள்ளும் நின்குலவும்
வடிவழகு கண்டு
அல்குதலே அதன் வாழ்வெனக் கண்டு
அதனைப் புல்குதலே வாழ்வென வேண்டி
‘சில்’லென்று நின்றேன் நின்முன்.