----------------------------------------Kaala Subramaniam
இன்று நான் ஒரு
மைனஸ்.
பன்னூறு கோடிக்
காலங்களூடே
மின்னல்கள் இந்த
சகதி நீரின்
மூலக விறைப்புக்குள்
மேக முழக்கத்தை
ஆழப் புதைத்து
உழுதன.
ஒளிமின் சாரத்தில்
சேறு திகைத்தது.
எண்ணற்ற காலங்கள்
பெருவெளியில் எங்கும்
விண்மீன் சூரியர்கள்.
முதிர்ந்து கோள்குறுகி
வெண்நீலமாகி
அணுமூலங்கள்
பின்னிப் பின்னி
ஊடுருவித் தொகுத்த
நவமுக மூலகம்.1
மூடிச்சரிந்து விண்
மீன்கள் சிதற
பூமிக்கு இறங்கிற்று,
ஓயாது நிலவிய
ஒளியற்ற மூட்டத்துள்
ஓயாது பிறக்கும்
மின்சாரப் புயல்.
ஒன்பது முகம்கொண்ட
மூலகக் கற்கள்
உயிருள்ள தாதுக்கு
உள் அத்திவாரங்கள்.
நீரில் தோன்றி
நீந்திப் பின் ஊர்ந்து
தரைக்கு வந்து
காற்றில் பறந்து
தாவி மரத்தில்
பாய்ந்து நிமிர்ந்து
மூளைக் கிளை பரப்பி
எழுந்தேன் நான்.
இறப்புப் பிறப்பென்று
சுழன்றது என்னுள்
மறைந்து நின்ற
பேரண்டத்தின் திகிரி.
இவ்வாறு தோன்றி
செத்துப் பிறக்கும்
ஓயாத வட்டத்தில்
மீண்டும் நானின்று
சுத்தமாய் ஒரு
மைனஸ்.
சூரிய உலைகளில்
அணுக்கள் பிணைந்து
இரும்பின் நுண்
துணுக்குகள் பெருகின்
உதிரம்-உதிரத்தை
உதைத்து நடித்து
உடலெங்கும் அனுப்பும்
தசைக்கருவி-
அண்டத்தைப் பிண்டத்தின்
அகத்தில் நடத்தும்
இதயம் - இதற்குமேல்
கபாலச் சிறைக்குள்
புவனத்தை அளாவி
எழும்பும் சிந்தனைக்
கருவி மூளை - இது
எதுவும் உனக்கு
வியப்பில்லை - இவை
சேற்றிலே இயற்கை
விதைத்த விபத்துக்கள்.
உன் பிரக்ஞை?
அதுவா – அது
ஜடத்தின் இலக்கணப்
பகுதியில் ஒருவெறும்
விகுதி - ஆனால்
உயிர்த்தாதுக் கோவையின்2
பூர்வீகமான
நவமுக மூலகம்
ஒன்றைக்கூட - அட
ஒன்றைக் கூட
உருவாக்கும் விபத்துக்கு,
இன்று நாம் காண்கின்ற
அண்டம் முழுதும்
இன்று நாம் அறிந்துள்ள
புவனத்தின் ஆயுட்காலம்
முழுதும் பிறழ்ந்து
மோதித் திரிந்தாலும்
போதாது!
எனவேதான்
பிறப்பிறப்பற்ற
பிரபஞ்சம் ஒன்றுள்
விஞ்ஞானிகளுக்கு
எட்டாத மகா
காலத்தின் சந்நிதியில்
சம்பவித்த மூலகம்
ஒருநவ முகம்.
இது கோடி கோடி
குவிந்து பிளந்து
உடலெடுத்தவையே
அமீபா, ஆப்பிள்
ஜீவித வர்க்கம்,
நீ, நான் யாவரும்
அற்புதம் என்று நாம்
நினைப்பவை யாவும்
அற்பமாய் நிற்கிற
பீடம் இச்சம்பவம்
இதனை
கொலைக்கருவி ஒன்றன்
விசைவில்லில், விரல்
விறைத்த ஒரு
கணத்தில், நிர்மூலம்
ஆக்கிநிற் கின்றாய்
விடுதலை வேட்கை,
சிலுவை, கோபுரம்,
மசூதி, விஹாரை,
மற்றும் சிலைகள்,
உருவ அருவக்
கடவுட் கொள்கைகள்,
உருவற்ற தத்துவங்கள்,
கருத்து மயமான
சித்தாந்த ரூபங்கள்,
உலகத்தை உய்விக்கும்
வேலைவாய்ப்புத்
திட்டங்கள்
எவற்றையும் நீயுன்
சுயமுக வழிபாட்டின்
தீயில் நிற்கும்
பயம் என்ற பாத்திரத்தில்
உலைவைத்து விடுகின்றாய்;
கொலைக்கருவி ஆக்குகிறாய்.
கருவியின் வில்லும்
உன்விரலும் சேர்ந்து
பிளஸ் வடிவம் பெறுகிறது.
சரித்திர நூல்களின்
காகிதத் தெருக்கள்
முழுவதும் ஓடி
வருகின்றன உன்
பிளஸ் குளம்படிகள்.
மூலம் முடிவு என்ற
இருமைக்கு நடுவே
காலம் கருதல் இவை
இல்லாத கணம்
இல்லை உன் பிளஸ்களின்
குளம்படிக் கணக்கில்.
ஆனால் -
வில்லில் உன் விரலின்
விறைப்பை நிகழ்த்திய
கணம் நிற்கிறது
காலம் கடந்து.
மூலம் முடிவற்ற
ஒன்று எரிகிறது
என்னுள் உன்னுள்
எண்ணற்ற விண்மீன்
கோளங்கள் தோறும்.
------------------------------
1. Configuration Nine என்ற மூலகம் ( (Molecule)
2. D.N.A. தாதுக்கோவை.
------------------------------------------------------------------
நவீன விருட்சம், அக். 1992 - மார்ச் 1993.