தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Sunday, November 13, 2016

சக்கர நாற்காலி -அம்பை

சக்கர நாற்காலி -அம்பை
https://archive.org/download/orr-11891_Sakkara-Naarkaali/orr-11891_Sakkara-Naarkaali.pdf


Automated Google-OCR


அந்த நேரத்தில் அங்கிருந்து போய்விடவேண்டும் என்றே அவளுக்குப்பட்டது. ரத்தத்தைக் கண்டு பயப்பட்டதால் அல்ல. அப்போது சிந்திய ரத்தம் நியாயத்தின் வரம்புக்கு உட்படாததாகத் தோன்றியது. நிராதரவான, எதிர்பார்க்கப்படாததால் ஒரு கணம் அயர வைத்த முதல் துளியாக வெளிப்பட்டு பின் அவன் நெற்றி, கண்கள், மூக்கு, வாய் எல்லாம் அது கருஞ்சிவப்பாய் ஒழுகிப் பரவிய போது அவளுக்குத் தெரிந்து விட்டது அன்றுதான் அவள் முடிவெடுக்க வேண்டிய நாள் என்று. அந்தக் குருதியின் பின்னணியில் இதுவரை இருந்த முரண்கள், தாக்குதல்கள், நியாயப்படுத்திக்கொண்ட மனக் கீறல்கள், பேதலிப்புக்கள், மயக்கங்கள் எல்லாம் சிவப்பு வண்ணம் தாங்கி அசுர ரூபத்தில் எழும்பி நின்றன.

அவள் விலகி நடக்கலானாள்.

ஒரு முனையில் இருந்த சிறு கூரைக் கடையின் பையன் இவளைப் பார்த்து, "சாய் தீதீ?" என்றான்.

தலையசைத்துவிட்டு உட்கார்ந்தாள். அங்கே இருந்த நம்பியாரும் மீனாவும் இவளைப் பார்த்து விட்டு, "இவ்வளவு சீக்கிரம் போராட்டம் முடிந்துவிட்டதா என்ன” என்றவாறே இவளருகில் வந்தமர்ந்தனர்.

"இல்லை. எனக்கு உடம்பு சரியில்லை. வந்துவிட்டேன்." 

"தலைவலியா?"

"இந்தத் தலைவலி, மாதாந்திர வயிற்று வலிகட நடுத்தர வர்க்கத்தின் வலுக்கட்டாயமாக அடக்கப்பட்ட உணர்ச்சிகளின் பிரதிபலிப்பு என்றுதான் தோன்றுகிறது. பார், மீனாவுக்கு இப்படி அடிக்கடி வருவதில்லை. ஏன்? பொருளாதாரச் சிக்கல்களின் பாதிப்பு அவளிடம் இல்லாததால்தான். என்ன மீனா, சரிதானே?"

காரணங்கள். காரணங்கள். காரணங்கள்.

தலைவலிக்கு, மலச்சிக்கலுக்கு, முகப்பருவுக்கு, ஏப்பத்துக்கு.

எல்லாம் தர்க்க ரீதியாய் ஆராயப்பட்டு, ஆழமாய், அறிவு பூர்வமாய் அணுகப் பட்டு, சிறுசிறு கண்ணாடி ஜாடிகளில் போட்டு அடைக்கப்பட்டு, காரணங்கள் லேபில் எழுதி ஒட்டப்பட்டு . . . மிக அதிகம் உபயோகப்படுத்தப்பட்ட, காகிதங்களின் முனைகள் விரல்கள் பட்டதால் நைந்து சுருண்ட தஸ்தாவேஜு போல் தன்னை உணர்ந்தாள். மேலட்டையில் "ஹிதா நடுத்தரவர்க்கப் பிரதிநிதி; வர்க்க குணங்கள்: பாதுகாப்பின்மையால் போராட்டங்கள், உணர்ச்சி வசப்படுதல், மனச் சோர்வு, உணர்ச்சிச் சார்பு" என்று எழுதிய தஸ்தாவேஜ".

"ஹிதா, என்ன, நான் சொன்னது சரிதானே ?"

ஆக்ஸ்ஃபோர்டில் படித்திருந்தான் நம்பியார். போகும்போது பத்து "ஸெட்டுகள் தைத்துக்கொண்டு போனானாம். திரும்ப வரும் போது பைஜாமா குர்தாவுடன் வந்தான். பல்கலைக்கழகத்தின் மிகத் தீவிர இடதுசாரி அவன். அவன் பீடிதான் குடித்தான். சில சமயம் கிழிந்த குர்தாக்களையே அணிந்துகொண்டான். அவனுடைய ஆக்ஸ்ஃபோர்டு பாணிகளையும், அம்பாஸிடர் காரையும்தான். அவனால் விட முடியவில்லை. வாயில் பீடியுடன் ஆங்கில 'ர'கரங்களை அழுத்திக் குழைத்துத்தான் அவன் பேசினான். அவனால் மலையாளத்தையும், ஹிந்தியையும் பயில முடியவில்லை. தன் பீடி, குர்தா பைஜாமா மூலமே கேரளத்துப் பாட்டாளி வர்க்கத்தைத் தன் சிந்தனா முறைக்குத் திருப்ப முடியும் என்று அவன் மனமார நம்பிக்கொண்டிருந்தான். தான் இடதாக மாறியது பற்றி அவன் உணர்ச்சி வேகத்தோடு கூறுவான்.

"நான் ஒரு கடும் பனிக்கால மாலையில் பாரீஸில் நடந்துகொண்டிருந்தேன். விடுமுறையைக் கழிக்க நான் அங்கே போனேன். ஒரு சிறுமி, ஷ"ஸ் இல்லாமல், பனி தாக்கியதால் சிவந்து, விண்டு போயிருந்த பாதங்களோடு, வெகுக் குறைந்த கம்பளி ஆடையுடன் பனியில் கரி பொறுக்கிக்கொண்டிருந்தாள். என்னால் இந்த பாரபட்சத்தைத் தாங்க முடியவில்லை. நான் அன்றே இடதாக' மாறினேன்."

ஹிதா ஒரு முறை அவனிடம் கேட்டாள்: "வீதிகளிலும் சேரிகளிலும் உள்ள வறுமையிலும், பிணியிலும் இந்தியா பாரீஸை விடக் குறைந்ததா என்ன? ஒரு வேளை பனி இல்லாதது ஒரு குறையோ ?”

நம்பியாருக்குக் கோபம் வந்தது. அவளை ஓர் எதிர் - அறிவுஜீவி என்றான். இன்னொரு முறை, எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு, தன் பாதுகாப்பைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அலையும் பூர்ஷ"வா என்று அவன் அவளைத் திட்டியிருக்கிறான். அப்போது அவன் தான் முதன் முறையாகப் பார்த்த இந்திய கிராமம் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தான்.

"நான் வெளியே தோட்டத்தில் உட்கார்ந்தேன். பக்கத்தில் குழாய் இருந்தது. ஒருத்தி வந்தாள். வேலைக்காரி போலும், குழாயைத் திறவுங்கள் என்றாள்.'ஏன் நீயே திறந்துகொள்' என்றேன். நான் ஹரிஜனப் பெண். இவர்கள் பிராமணர்கள்' என்றாள். பார் ஹிதா, இந்த ஜாதிக் கட்டுப்பாட்டை என்னால் தாங்க முடியவில்லை."

"இது ரொம்ப வருஷமாக இருக்கிறது நம்பி. நீ ஆக்ஸ்ஃபோர்டு போவதற்கு முன்பே பல வருஷங்களாக இருக்கிறது.இன்னும் இருக்கிறது"

"ஆங்! எல்லாவற்றையும் அடியோடு நெம்பி எடுத்து, வேரோடு கெல்லி எறிந்து மாற்ற வேண்டும்."

"நீ உன் நாற்காலியில் கெட்டியாக அமர்ந்துகொள். மற்றவர்கள் நெம்புவார்கள் - உன்னையும் சேர்த்து."

"நீ என்னை அவமதிக்கிறாய் ஹிதா நீ எங்கள் கட்சியில் இருப்பதால் பொறுக்கிறேன். மற்றபடி பாதுகாப்பைத் தேடி அலையும் பூர்ஷ"வாதான் நீ"

"

நம்பியாருக்கும் மனப் போராட்டங்கள் இல்லாமல் இல்லை. பல்கலைக் கழகத்தின் ஒரு புறத்திலிருந்து இன்னொரு புறம் போகும் போது இடையிலுள்ள சிறு வீடுகளில் உள்ள கிளார்க்கின் பெண்ணை மிகக் கஷ்டப்பட்டு, வர்க்க எல்லைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு அவன் காதலித்தான். சிதைந்த ஹிந்தியில் அவன் முதலாளித்துவ நாடான அமெரிக்கா வியட்நாமில் செய்யும் கொடுமையைப் பற்றிச் சாங்கோபாங்கமாக விளக்கிக்கொண்டிருந்தபோது இடுப்பில் இருந்த தம்பிப் பாப்பாவின் மூக்கை வழித்து அவள் புடவையில் துடைத்துக்கொண்டபோதுதான் அவனுக்குக் குமட்டிக்கொண்டு வந்தது. தனக்கு ஏற்பட்ட அருவருப்புக்கு அவன் மிகவும் குற்ற உணர்வோடு தவித்தான். ஆனால் லட்சாதிபதித் தந்தையின் பெண்ணான மீனாவைக் காதலிப்பது சுலபமாக இருந்தது என்பதை அவனால் மறுக்க முடியவில்லை. சுதந்திரம் பற்றி சிந்திக்கவும் உணர்வு பூர்வமாய் அதை அறிய முயலவும் அவளுக்கு நேரம், கெட்டிக்காரத்தனம், வாய்ப்பு, மூன்றும் இருந்தன. மார்க்ஸின் கொள்கைகளோடு தன்னை ஒருமைப் படுத்திக்கொள்ள அவளால் சுலபமாக முடிந்தது. வியட்நாம் கொடுமை, நீக்ரோ பிரச்சினை, ஹரிஜனப் போராட்டம், வர்க்கக் குமுறல்கள், தன் வர்க்கத்தின் மீது அறிவு ரீதியான வெறுப்பு எல்லாம் பிரயாசை இன்றி அவளுக்கு வந்தது. அவள் வாங்கும் 'பீட்டர்பான்' 'ப்ரா'வின் விலை முப்பத்தைந்து என்பதும், அவள் அணியும் ஜட்டியின் விலை பதினைந்து ரூபாய் என்பதும் அவள் கொள்கைகளுக்கு முரணானது என்பது அவள் உணராதில்லை. தான் அப்படித் தன் குறைகளை உணர்வதேதன் அறிவின் வெற்றி என்று வாதிடும் அவளைக் காதலிக்க நிரம்பக் கஷ்டப்பட வேண்டியிருக்கவில்லை.

சாய் வந்தது. "ஏ ஹிதா ! என்ன யோசனை அப்படி?" என்றாள் மீனா. "ஒன்றுமில்லை." சாய் தொண்டையில் சூடாக இறங்கியது. "கெளதமுடன் சண்டையா?" என்றாள் மீனா சிரித்துக்கொண்டே " அதெல்லாம் ஒன்றுமில்லை."

"என்ன நடந்தது?"

கேட்டுக்கொண்டு இருக்கும்போதே கெளதமன் மடமடவென்று உள்ளே வந்தான். சாய் கோப்பையின் மேல் பதிந்திருந்த அவள் விரல்கள் மேல் ஆதுரத்துடன் தன் கரத்தை வைத்து "என்ன ஹிதா திடீர்னு திரும்பியுட்டே? உடம்பு சரியில்லையா? தலைவலியா? ம்?" என்றான் தமிழில்,

"தலைவலி" என்றாள் மெல்லிய குரலில்,

அவள் கோப்பையிலிருந்து ஒரு வாய் பருகிவிட்டு, "சரி, நான் போறேன். நீ நேரா வீட்டுக்குப் போ. சமைக்காதே. நான் வந்தப்புறம் பார்த்துக்கலாம்" என்று விட்டு நம்பியார் மீனா இருவரிடமும் "நீங்கள் இங்கேயே இருங்கள்," என்று கூறிவிட்டு வெளியே போக லானான்.

தமிழில் அவன் அவளிடம் பேசியதை கிரகித்துக்கொண்ட நம்பியார், "இந்தச் சிறு போராட்டத்திற்குக் கூட உன் பக்கபலம் தேவையாக இருக்கிறது கெளதமனுக்கு," என்றான்.

அது இப்படி இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது ஹிதாவுக்கு. அவனுக்கு உற்ற துணையாய் இந்த இரு ஆண்டுகளும் மாணவர்களிடையே செய்துவந்த அத்தனை செயல்களும், இந்தச் செயல்களை அன்றி வேறு என்னதான் செய்ய முடியும் என்ற தன் ஆத்மார்த்தமான நம்பிக்கையும் இன்று அடிவேரில் கோடாலி வீச்சுக்கு ஆளாவதை அவளால் உணர முடிந்தது. அந்த வீச்சின் வலி நரம்பெல்லாம் வீசிவீசி அடிப்பதை அனுபவிக்க முடிந்தது. வலி நோண்டிவிட்டதுளைகளிலிருந்து, தலைதூக்கும்போதெல்லாம் அமுக்கிவைக்கப்பட்டபேதங்கள் உடம்பைக் கூசவைக்கும் நண்டுகளாய் வெளிப்பட்டு உடம்பெங்கும் அவற்றின் கால்களின் தடம் பதிய ஊர்வதை அறிய முடிந்தது.

"ஒகே ஹிதா. நீ வீட்டுக்குப் போ. உன்னைப் பார்த்தால் நோயாளி போல் இருக்கிறது" என்றாள் மீனா.

ஹிதா எழுந்தாள். பையனிடம் பணம் கொடுத்தாள்.

"ஒகே" என்று விட்டு நடக்கலானாள்.

வீட்டிற்கு நடந்தால் அரைமணி ஆகும். பரவாயில்லை. இந்த ஒன்று அவளிடம் கெளதமனுக்கு மிகப் பிடித்த ஒன்று. அவள் திட காத்திரம். இடிதாங்கிபோல் உடல் வலிகளை உறிஞ்சிக்கொள்ளும் ஆரோக்கியம், அரைமணி நடை அவளுக்கு சாதாரணமாய்த் தோன்றுவதில் அவனுக்கு ஒரு மலைப்பு. அவள் தொடை, கால் ஆடுசதை, கைகள் எல்லாமே அப்பளக் குழவி போல் உறுதியாக இருப்பதற்கு அவன் வியந்து போவான். இந்தத் திடம் அவள் வர்க்கத்தின் சொத்து என்பான். அவனுக்கு ஆஸ்த்மா வரும்போதெல்லாம் அவன் கிழிந்து போய்விடுவான். பூஞ்சை உடம்பு, உயர்தர மருந்து தேவைப்படும் நோய்கள்தான் அவனுக்கு வரும், "என் பொருளாதார வர்க்கத்துக்கேற்ற நோய்" என்பான் சிரித்துக்கொண்டே அவள் விரல்களைப் பற்றியவாறே "இவை உறுதியான விரல்கள்" என்பான்.

"ம்ஹ"ம். இவை வேலைக்காகப் பயன்படுத்தப்பட்ட விரல்கள்" என்பாள் அவள், அவற்றிலுள்ள மாவரைத்த குறிகளையும், பாத்திரம் தேய்த்துத் தேய்ந்த விரல் முனைகளையும் காட்டியவாறே.

திட்டங்கள் இல்லாமல், கொள்கைகள் இல்லாமல்தான் எதிர்ப் படும் இன்னல்களையும், தடைகளையும் அவள் எதிர்த்தாள். அவளுக்குப் பசி, அவமானங்கள். எள்ளல்கள், பரிகாசங்கள் பற்றி நிறையத் தெரிந்ததால் அநியாயங்களை ஓர் உணர்ச்சி பூர்வமான, கண்மூடித் தனமான, ஆக்ரோஷமான வெறியுடன் மட்டுமே அவள் எதிர்த்தாள்.

"தனியாக எதையும் சாதிக்க முடியாது. என் உதவி உனக்குத் தேவைன்னு தோணலியா?" என்று கேட்டான் கெளதமன் ஒரு முறை.

அப்போது வேலையும் செய்துகொண்டு படித்துக்கொண்டும் இருந்தாள் அவள். கிஷோரிலால் அங்கு ஒர் ஆபீஸ் பையன். காரியாலய விதிப்படி ஹெல்த் ஸர்ட்டிஃபிகேட் அவனுக்குக் கிடைக்கவில்லை. வயதுக்கேற்ற எடை இல்லையாம். கிஷோரிலாலின் வீட்டை அவள் பார்த்திருக்கிறாள். பஞ்ச்குய்யா தெருவில் உள்ள தோட்டிகளின் சேரியில் அவன் இருந்தான். அங்கு நிலவிய பீ மணத்தில் பன்றிகளைத் தவிர வேறு யாருக்கும் எடை கூடுமென்று அவளுக்குத் தோன்றவில்லை. வயதுக்கேற்ற எடையில் ஒரு பையன் இருக்க வழி செய்யாத ஒரு ஸ்தாபனம், அவனை அக்காரணம் கொண்டு வேலையை விட்டு நீக்குவது சகிக்க முடியாத ஒரு அட்டூழியமாக அவளுக்குப் பட்டது. அவள் அவனுக்காகப் போராடினாள்.

அப்போதுதான் கெளதமன் கேட்டான் அப்படி.

"இல்லை. ஒரு கட்சியோட குறுகல்லே நான் நசுங்கிப் போயிடுவேன். என்னைத் தனியாவே போராடறதுக்கு விட்டுடு."

தோல்வியடைந்து, தானும் வேலையை இழக்க நேர்ந்தது. ஒரு கிஷோரிலால் விவகாரம் இல்லை இது என்று தோன்றியது. செருப்பால் அடிக்கும் ஒரு அண்ணாவோ, விரல்கள் எரிய எரிய பாத்திரங்கள் தேய்க்க உத்தரவிடும் ஒரு மன்னியோ மட்டும் அல்ல அவள் எதிர்ப்புக்கு உரியது. அபிலாஷைகளை, ஆசைகளை, ஏமாற்றங்களை, நிஷ்டூரங்களை எல்லாம் ஒரு சக்கர நாற்காலியிலேயே முடக்கிப் போட்டு அதனுள்ளேயே ஒரு நாள் கதையை முடித்துக்கொண்ட ஒர் அப்பாவின் நிலைமைதான் அநியாயங்களின் தோற்றுவாயின் ஒர் எடுத்துக்காட்டு என்று திடமாக நம்ப முடியவில்லை. இரவு எட்டு மணிக்கு நறநற வென்ற ஒசையுடன் நாதாங்கியைத் திறந்து, சக்கர நாற்காலியிலிருந்த அப்பா தன் விழிகளின் நீலச் சாம்பலூடே பாரிசவாயுப் பார்வையுடன் பார்த்தவாறே இருக்க, "கெட் அவுட்” என்று வெளியே தள்ளிய அண்ணா தன் மனத்தில் ஏற்படுத்திய வெறுப்புக்கும் கசப்புக்கும், அந்த இரவின் தத்தளிப்பில் அடி வயிற்றில் எரிந்த ஜ்வாலைக்கும் மட்டுமே தான் இதுகாறும் செய்த போராட்டம் என்று பட்டது.

கெளதமனிடம் அதை ஒப்புக்கொண்டாள்.

வேலையில்லா நிலைமை: கெளதமனின் திருமணமான நண்பரின் தயவில் இருக்க அறையும், உண்ண உணவும். பரீட்சை பாடங்களைப் படித்த அதே லயிப்போடு அவள் கெளதமனின் அரசியல் கொள்கைகளோடு ஒன்றிப் போனாள். மனத்தின் அடிமட்டத்தில் ஒரு மணல் அரிப்பு இல்லாமலில்லை.

"சமுதாய மாற்றமும் மாணவர் பொறுப்பும்" போன்ற கருத்தரங்கங்களில் சமுதாயப் பிரக்ஞை, கல்வியில் சமத்துவம், பிரக்ஞை மட்டத்தை உயர்த்தல் போன்றவற்றைக் கேட்டுவிட்டு, கெளதமனின் அறையில் நம்பியார், பிரசாத், அகர்வால் மூவருடனும் பியர் குடித்துக் கொண்டே மீண்டும் விவாதித்துப் பின்னர் நட்சத்திரங்களின் கீழே, வீட்டின் மேல் கூரையில் படுக்கும்போது ஒரு கேள்வி மினுக்கிடும் மனத்தில், நான் செய்ய விரும்புவது இதுதானா? கெளதமனும் அவளும் சேர்ந்திருக்கத் தீர்மானித்த பின் இந்தக் கேள்வி பலமுறை படமெடுக்கத் துவங்கியது.

"விவசாயிகளும் விவசாயமுறைகளும் பத்திப் பேச அகர்வாலுக்கு ஒரு "ரைட்டும் இல்லை."

"a gott Lip" "அவன் ஒரு விவசாயியைப் பார்த்ததுகடக் கிடையாது. விவசாயி நிறைய பேர் இன்னும் மரக்கலப்பைலேதான் உழறா எங்கறதே அவனுக்குத் தெரியாது. நான் சொன்னா அப்படியான்னு வாயைப் பொளக்கறான் முட்டாள்."

"அதனாலே என்ன? அது அவ்வளவு பெரிய தப்பா என்ன ? இது தான் உன் கிட்டே கஷ்டம். எல்லாம் பூரணமா, துளிக் கூட பிசிறு இல்லாம இருக்கணம்னு நீ நெனக்கறே. அகர்வாலா நாத்து நடப்போறான்? அவன் தியரி நிபுணன் ஆவான். திட்டங்களை உருவாக்குவான்."

"இந்தியாவை டெல்லியிலே இருந்தே பாத்துண்டா ?" "என்ன, எடக்கா ?" "இல்லே கெளது. சில சமயம் ஒரு பயங்கர கலாச்சாரத் தீவோட கற்பனை என் மனசுல வரது. எல்லாரும் உக்காந்துண்டு, அமெரிக்க ஏகாதிபத்தியம் பத்தியும், ரஷ்யாவோட புரட்சி பத்தியும், நம்ப ஃபாக்டரிகள், தொழிலாளிகள், விவசாயிகள் பத்தியும் பேசிண்டே இருக்கா, அவாளுக்குள்ளவே, அவாளுக்காகவே, அவாளே ஒருத்தரை ஒருத்தர் முதுகைத் தட்டிக் குடுத்துக்கறா, தெருவில் ரத்த ஆறு ஒடணம். புரட்சி வரணம்னு ஒருத்தர் சொன்னா பத்து பேர் சேர்ந்துண்டு அவர் சொன்னதைப் புகழ்ந்து, அவருக்கு விஸ்கி தரா. முதல்லே பேச இருக்குன்னு பேசறா. அப்பறமா அவா குரல் அவாளுக்கே பிடிக்கறதுனாலே பேசறா. கடைசிலே அவர் சொல்றதுலே சத்தியம் இருக்கத்தான் இருக்குன்னு அவாளே தங்களை நம்ப வெச்சுண்டு பேசறா. நாயோட ஊளை மாதிரி அந்தப் பேச்சுச் சத்தம், முரசு அடிக்கற வேகத்துலே எங்கேயும் கேக்கறது."

"இதை விடப் பேத்தலா ஒன்றும் தோணலியா ஹிதா?" "கெளதம் நான் வெளையாடலை, சில சமயம் எனக்குள்ள ஒரு போராட்டமே நடக்கறது."

"பைத்தியம்." இன்று நடந்ததைக் கூறி வாதிட்டாலும் கெளதமன் அதை அப்படித்தான் ஒதுக்கி விடுவான். அவனுக்கு அது ஒரு தற்காப்பு யுக்தி மட்டுமே. எதிரே வருபவர்கள் முப்பது பேர்கள், தாங்கள் பத்து நபர்கள்தான் என்று உணர்ந்ததும் அவர்கள் கவனத்தைத் திருப்ப அவர்களுடன் இருந்த ஒரு சக்கர நாற்காலிக்காரனைத் தாக்கி, அவனைக் காக்க அவர்கள் முற்பட்டதும் சைக்கிள் செயினால் அடித்து ஒடுவது ஒரு யுக்திதான் அவனுக்கு. எப்படி சம்பாஷணை நடக்கும் என்று அவளுக்குத் தெரியும்.

"ப்ரெஞ்சு புரட்சிக்குப் பிறகு அத்தனை ராஜவம்சத்தாரையும் கிலோடினில் போட்டபோது பன்னீரா சிந்தியது? இது சிந்தப்பட வேண்டிய ரத்தம்," என்பான் சரளமான ஆங்கிலத்தில்.

"கெளதா, அவன் ஒரு நொண்டி இது ஸ்ட்ராடஜி இல்லை. கோணல் வழி."

"உன் ஸர்ட்டிஃபிகட்டுக்காக நான் வேலை செய்யலை ஹிதா." "உன்னாலே இதை ஏன் புரிஞ்சுக்க முடியலை?"

"ஏன்னா நான் அனாதைக் குழந்தைகளைக் கட்டி முத்தம் குடுத் துண்டு, அன்பினாலே உலகம் மாறட்டும்னு சொல்ற மனிதாபிமானவாதி இல்லே. நான் புரட்சிவாதி. அந்த பாஷை மட்டும்தான் எனக்குப் புரியும்."

"நான் சொல்றது ஒன்றும் மனிதாபிமானம் இல்லை. நீ செய்யப் போற புரட்சியைக் காட்டி ஒரு நியாயமில்லாத நடத்தையை நீ நியாயமாக்கக் கூடாது."

"இதெல்லாம் அதில் சேர்த்திதான். இதுக்கு மேல நான் பேச மாட்டேன்."

கெளதமனின் நியாய உணர்வு தன்னிச்சையாக இல்லாமல், வேறு யாராலோ வரையறுக்கப்பட்ட ஒன்றாய் அவள் உணர்வதுண்டு. மஹேஷ் விஷயத்தில் அவன் நடந்துகொண்டதும் இந்த வகையைச் சேர்ந்ததுதான்.

மஹேஷின் அப்பா லக்னோவில் பெரிய வக்கீல். அஹிம்ஸாவாதி. மஹேஷ் லக்னோவில் அஹிம்லாவாதி; டில்லியில் புரட்சிவாதி. ஆனந்தியோடு மூன்று வருடங்கள் அவன் பழகினான். அஹிம்ஸா வாதி அப்பா அவள் ஜாதியைக் குறிப்பிட்டு மறுத்ததும் புரட்சிவாதி ஏற்றுக்கொண்டான் மறுப்பை. மறுப்புக்குப் பின் பல லட்சங்கள் இருந்தன. ஒரு புரட்சிவாதியின் மகவொன்று பிறந்து விடாமலிருக்க ஹிதாதான் அலைந்தாள் ஆனந்தியுடன்.

"இது பொண்ணை உபயோகிக்கும் கீழ்த்தரமான செயல்" என்ற போது "அவன் நம்மைச் சேர்ந்தவன். விட்டுக்கொடுக்கக் கூடாது" என்றான் கெளதமன். "அவன் புரட்சிக்கு அளிக்கும் ஆதரவு அவன் எல்லா பொறுக்கி செயலையும் நியாயமாக்கி விடுமோ? பொண்ணை மிதிக்கறதுலே புரட்சிவாதிக்கும் மத்தவனுக்கும் ஒரு வித்தியாசமு மில்லை."

"நீ பெண் சுதந்திரத்தையும் இதையும் போட்டுக் குழப்பாதே." 

"எங்கே குழப்பம்? சுத்தமா, கலங்கல் இல்லாம தெரியறது. தாய்மை, பாசம், பெண்மை, கற்புன்னு முன்பு ஏய்த்தல். இப்போ புதுமை, விடுதலை, புரட்சிங்கற பேரிலும் ஏய்ப்புத்தான்."

"போறும் ஹிதா. இவள் மூளை எங்கே போச்சு? மஹேஷை நான் காட்டிக் குடுக்க மாட்டேன். இது நம்ம விவகாரம் இல்லை, விடு."

அது அப்படி முடிந்தது.

வீடு வந்துவிட்டது. பூட்டைத் திறந்துகொண்டு உள்ளே போய் படுக்கையில் விழுந்தாள். ஒரு பெருத்த சோர்வு மேல் வந்து கவிந்து கொண்டது. அறையிலிருந்த நாற்காலி, மேஜை, கட்டில்போலத் தானும் ஒரு ஜடப்பொருளாக மாறி, அறையின் நாற்புறமும் சிறுத்து கொண்டே வந்து சவப் பெட்டியாய் அவளைத் தாங்கி அவள் இறுகிப் போவதுபோல ஒர் உணர்ச்சியற்ற தன்மை ஒரு சில நிமிடங்களுக்கு ஏற்பட்டது.

கருத்தடை மாத்திரைகள் இல்லாத காலத்தில் நேர்ந்த ஒரு தவறாகத்தான் அவள் பிறந்தாள். சுற்றியும் மறுப்பையே அவள் உணர்ந்தாள். முதலில் அம்மா. பின் அண்ணாவும், மன்னியும்.

அவளுக்கு ஒரு ராக்ஷஸப் பசியுடன் அன்பு தேவைப்பட்டது. இந்தத் தாகம் கெளதமனுக்குப் புரிந்தது கிடையாது. அவன் வீட்டில் அன்புக்குப் பதில் பணமாய்க் கொட்டியதாலோ என்னவோ அவன் அவள் அன்பையும், அவனிடம் அவளுக்காக உள்ள நட்பையும் ஒரு தேவையான பலகீனம் என்ற பாணியிலேயே ஏற்றுக்கொண்டிருந் தான்.

அவர்கள் இருவரும் ஒரு உச்சகட்ட பிணைப்பில் இருந்தபோது அவள் ஒரு முறை கேட்டாள்.

"டூ யூ லவ் மீ?" அவன் தன்னைத் தளர்த்திக்கொண்டு விலகினான். அவளை எழுப்பி உட்கார வைத்து "இந்தக் கேள்வி இப்போ ஏன் வந்தது?" என்றான்.

"சும்மா கேட்கணம்னு தோணித்து" 

"உனக்கும் ரெண்டு ரூபாய் நாவல்ல வரும் ஹீரோயினுக்கும் என்ன வித்தியாசம் ? புரட்சி பத்தி உன்னாலே நினைக்க முடியறது. இப்படிப்பட்ட உறவுலே சர்வ சாதாரணமா இருக்க முடியறது. பின்னே எப்படி இப்படி கேட்கலாம்?"

"புரட்சியை உண்டுபண்ண மாத்திரமா நாம சேர்ந்து இருக்கோம்? அப்போ நீ வேற யாரோட வேணும்னா இருக்கலாமே?”

"காதல், அன்பு, பாசம் எல்லாம் பூர்ஷவா வியாதிகள்." 

"புரட்சிக்கப்பறம் இதெல்லாம் ஒன்றும் இருக்காதா?” 

"புரட்சிக்கப்பறம் நியாயம் இருக்கும். நேர்மை இருக்கும், உழைப்பு இருக்கும். சமத்துவம் இருக்கும்."

"இல்லே கெளதா. இதுவும் இருக்கும். அன்பு, காதல் எல்லாம் வெறும் வார்த்தையா ஒருத்தரை ஒருத்தர் ஏய்க்கறதுக்கும், உபயோகிக்கப்படுத்திக்கறதுக்கும் இல்லாம மாத்தறதுதான் நாம்ப நினைக்கற புரட்சியோட ஒரு அம்சம். உணர்ச்சிகளை எல்லாம் கொல்றதுக்காக இல்லை. புரட்சி மனுஷாளை மனுஷாளா மாத்தறதுக்குத் தான். கொட்டை அடிச்ச காளை மாடா மாத்தறதுக்கு இல்லே." "ப்ச" என்று சலித்தவாறு எழுந்து அவன் ஒரு சார்மினாரைப் பற்ற வைத்தான்.

இருட்டில் சிகரெட்டின் முனை பளிச்சிட்டது. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து சார்மினார்கள். பார்த்துக்கொண்டேயிருந்த அவள் கண்கள் உறக்கத்தில் செருகிக்கொண்டபோது அவளை அசைத்து, 
"ஹிதா எந்த அர்த்தத்துலே நான் ஐ லவ் யூனு சொல்ல முடியும்? சாதாரணமா உபயோகிக்கற அந்த வார்த்தைக்கு மதிப்பே இல்லை. வேறு ஒரு பெரிய அர்த்தத்தோட சொல்லணம்னா நான் அதைப் புரிஞ்சுக்காம எப்படிச் சொல்றது? நான் நியாயமா இருக்கணும் இல்லையா ? இப்பொ நான் அதைச் சொன்னேன்னா இந்த ஒரு ராத்திரியோட சுகம் உன் கிட்டே கிடைக்கறதுக்காக, வெறும் வார்த் தையா, உன்னை உபயோகிச்சுக்கறதுக்கு நான் அதைச் சொல்லலேன்னு என்ன நிச்சயம் ? ம் ?"

அவன் சொல்வது சரியாகவே பட்டது. அவளுக்குக் குழம்பிப் போயிற்று.

பங்கஜ் மல்லிக்கின் பெங்காலித் தொனியுடன் கூடிய இந்திப் பாடல்கள் அவளுக்குப் பிடிக்கும். அந்தக் குரலில் உயிர்த்துடிப்பும், அதே சமயம் உயிரைத் துறக்க வேண்டிய நேரத்தில் குரலில் உள்ள உயிர் மடிந்த தன்மையும் கலந்து ஒலிப்பதாய்த் தோன்றும்.

பாடல்களின் உள்ள பசப்பலான அன்பு அவளுக்குப் புரியாமலில்லை. ஆனால் சில சமயம் அதில் ஒரு பிடிப்புப் பிறந்தது.

இதில் அவள் ஒன்றிப்போன ஒரு நாள் கெளதமன், மீனா, நம்பியார், அகர்வால் இன்னும் இரண்டு பேரும் வந்தனர்.

"புட் தெட் ஆஃப் ஹிதா” என்று சாதாரணமாகக் கூறிவிட்டு கண்ணாடி கிளாஸ்களை எடுத்து வைத்தான் கெளதமன். நம்பியார் பாட்டில்களைப் பையிலிருந்து வெளியே எடுத்தான். "பட்டென்று அறைந்தது போலிருந்தது ஹிதாவுக்கு. தன்னை அவன் ஒரு மனுஷியாக மதிக்காதது போல் பட்டது. ரெகார்ட் ப்ளேயரை அணைக்கா மலேயே இருந்தாள்.

"ஹிதா, மூடியுடேன்."

"எனக்குக் கேட்கணும்."

அவள் குரலில் இருந்த அழுத்தம் அவனை ஆச்சர்யத்துடன் நிமிர்ந்து பார்க்க வைத்தது. மீனாவும், நம்பியாரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

"இந்த சென்டிமென்டல் நான் ஸென்ஸ் எல்லாம் கேட்காம இரேன்."

"நீ உன் ஷிவாஸ் ரீகலுக்காகப் பறக்காமல் இரேன். புரட்சி பத்தி பேசிண்டே குடிக்கற உன் மேல் வர்க்கத்தனத்தைக் காட்டாமல் இரேன்."

மீனா பையைத் தோளில் மாட்டிக்கொண்டாள். "என்ன கெளதம், நாங்கள் போக வேண்டியதுதானே?"

கெளதமனின் முகம் இறுகியது.

"டோன்ட் மீனா" என்று விட்டு, மடமடவென்று நடந்து சென்று ரெகார்ட் ப்ளேயரின் "ப்ளக்கை கழற்றி வீசினான்.

அவன் ஆக்ரோஷத்தால் ஒரு கணம் அதிர்ந்துபோன ஹிதா பின் அவன் - ஏன், அவளே - எதிர்பார்க்காத விதத்தில் இரண்டு எட்டு நடந்து பாட்டில்களைக் காலால் எற்றினாள், உடைந்த கண்ணாடித் துண்டு ஒன்று காலில் குத்திக்கொண்டு ஒழுகிய ரத்தத்தில் பாட்டிலில் இருந்த திராவகம் சுரீரென்று விழுந்து எரிந்து பற்றியது.

மற்றவர்கள் எழுந்து போய்விட்டனர்.

சிந்திய திராவகத்தின் மேல் உட்கார்ந்துகொண்டு, கண்ணாடித் துகள்கள் சுற்றிலும் பரவியிருக்க, ரத்தம் ஒழுகும் காலின் முட்டியில் தலை வைத்து ஹிதா அழுதாள். நின்றவாறே அவளைப் பார்த்துவிட்டு கெளதமனும் வெளியேறினான். வெகுநேரம் அவள் அழுதாள்.

இரவு கெளதமன் வந்தபோது அறை துப்புரவாக்கப்பட்டிருந்தது. அவள் காலில் சற்றுப் பெரிய கட்டு ஒன்று இருந்தது. விந்தியவாறே வந்து அவள் கதவைத் திறந்தபோது, அவள் காலைப் பார்த்துவிட்டு பேசாமல் உள்ளே வந்தான் கெளதமன்.

நாற்காலியில் உட்கார்ந்துகொண்டான்.

சாப்பாட்டுத் தட்டுகளை வைக்க அவள் தரையில் பழைய செய்தித் தாள்களைப் பரப்ப ஆரம்பித்தாள்.

"நான் சாப்பிடலை ஹிதா."

சீற்றத்துடன் அவள் தலை நிமிர்ந்தாள். "ஒரு ஆவரேஜ் ஹஸ்பெண்டுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம்? அவன் பெண்டாட்டியை அடிச்சிட்டு சீட்டாடிட்டு ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு வருவான். பணக்காரனா இருந்தா க்ளப்லே குடிச்சுட்டு வருவான். வீட்டுக்கு வந்து அவனோட ஆண்மை குறையக் கூடாதேன்னு முறைப்பா இருப்பான். நீயும் அதையேதான் பண்றே. நீ என்ன புரட்சியைக் கொண்டு வந்து கிழிக்கப்போறே?"

அவன் பேசாமல் போய் படுத்துக்கொண்டான்.

துக்கம் குமுறிக்கொண்டுவந்தது. அவனை சராசரிக் கணவன் என்று வைத அவளும் சராசரி மனைவியைப் போல் அவன் அவளுக்குப் பிடித்த எதையாவது - மல்லிகைப் பூ, ஜிலேபி, ஜின் - வாங்கிக் கொண்டுவந்து சமாதானப்படுத்துவான் என்றுதான் எதிர்பார்த்தாள். சற்று அதிகப்படியாகவே அவன் முன் நொண்டி நடந்திருந்தாள். "நான் மிருகமாக நடந்துகொண்டுவிட்டேன் ஹிதா" என்றும் "பரவாயில்லை. அடித்த கைகள்தான் அணைக்கும்" என்றும் கொச்சையான வசனங்களை அவள் கற்பனை செய்யாவிட்டாலும், அவள் எதிர் பார்ப்பு அந்த மட்டத்தைச் சேர்ந்ததுதான் என்று அவளுக்கே புரிந்தது. அவளிடம் உள்ள அந்த முரணும், அவர்கள் இருவரிடமும் உள்ள அந்த சாதாரணத்தனமும் மனத்தைக் குத்த அவள் அன்றிரவு தூங்கினாள்.

அந்த உறவில் இன்னும் ஒரு பயங்கலந்த அதிசயிப்பே அவளிடம் இருந்தது.

கெளதமன் யார்?

புரட்சிவாதி?

எதிர்ப்புவாதி ?

ஆராய்ச்சியாளன் ?

மாணவர் தலைவன் ?

கொள்கை அளவில் எதிர்த்தாலும் அப்பாவைப் பகைத்துக்கொள்ளாத சமர்த்துப் பிள்ளை ?

அவள் காதலன் ?

ஹிதா யார்?

ஆராய்ச்சி மாணவி?

புரட்சிக் கருத்துக்களோடு உடன்படுபவள் ?

பாதுகாப்பைத் தேடி அலையும் பூர்ஷ்வா ?

ஏதோ ஒரு சுதந்திரத்தை எதிர்நோக்கும் பெண் ?

அன்புக்கு ஏங்கும் ஆத்மா ?

கெளதமனின் அந்தரங்கத் தோழி?

அவளுள் எல்லாமே முழுமை பெறா துண்டங்களாக இருந்தன.

அவளுக்கு முழுமை - பூர்ணத்வம்? - தேவை. அப்படி என்று ஒன்று உள்ளதா ?

மூச்சை அடைத்த புகைமூட்டத்தை விலக்கக் கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

கெளதமன் ஏன் அவளுடன் இருந்தான்? அவனும் மீனாவும் ஆரம்பத்தில் நெருங்கியே பழகினர் என்பது அவளுக்குத் தெரியும். அவன் நினைத்தாலும் பெற முடியாத அனுபவங்களில் அவள் முங்கி நனைந்திருந்ததாலா? ஒரு நடுத்தரக் குடும்பப் பெண்ணோடு பழகுவது அவன் வர்க்கத்தின் மற்ற பலவீனங்களைப் பின் தள்ளிஇதைப் பெரிதாகக் காட்டும் என்பதாலா ?

அவள் ? அவளுக்கு இந்த உறவு எந்த வகையில் திருப்தி தந்தது? கெளதமனின் ஆர்வமும், துடிப்பும் லட்சிய வேகமுமா அவளை ஈர்த்தது?

கெளதமனின் தந்தை ஐக்கிய நாட்டுச் சபையில் ஒரு பெரிய புள்ளி, அமெரிக்காவிலும், மற்ற நாடுகளிலுமாக வாசம். அவர் டில்லி வரும் போதெல்லாம், சற்று மாறுதலான உடை அணிந்து அவளையும் அழைத்துக்கொண்டு அவரைக் காணப் போவான் கெளதமன். சந்திப்புக்கள் ஒபராய் இன்டர்கான்டினன்டலிலோ, ஹோட்டல் அக்பரிலோ, ஹோட்டல் அசோகாவிலோதான் நடைபெறும். ஹிதாதான் அவன் கொள்கை பூர்வமான எதிர்ப்பின் நிரூபணம், முதல் தடவை கிளம்பும் போது அவன் சற்றே சங்கடப்பட்டதாக அவளுக்குத் தோன்றியது. "ஏன் கெளதா.நம்மைப்பத்தி அப்பா என்ன சொல்வாரோனுட்டா" தலை அசைத்து மறுத்தான் கெளதமன். மிக்க தயக்கத்துடன். "நான் ஒன்று சொன்னா கோச்சிக்க மாட்டியே?" என்றான். "ம்ஹ"ம்." "நாம போற இடம் கொஞ்சம் டாம்பீகமா இருக்கும். எங்க சித்தப்பாவோட வீடு. நீ சாப்பிடறச்சே வேகமா, பரபரன்னு சாப்பிடாம, மொள்ள. . ."

அவன் அவளைத் தாக்கிவிட்டான்.

சாதம் போடாமலே ஹிதாவைக் கொன்றிருந்தாள் மன்னி. வேலை கிடைத்த முதல் ஆறு மாதம் இரண்டு பேர் சாப்பிட வேண்டியதைத் தான் ஒருத்தியே நிதம் சமைத்துச் சாப்பிட்டுச்சாப்பிட்டே அவள் வாழ்ந்தாள். சமைக்கும்போதே நாவில் ஊறலெடுக்கும். சில சமயம் குளிக்காமல், உடை மாற்றாமல் - பல் தேய்க்காமல் கூட - அவள் சமைத்து முடித்ததும் சாப்பிட்டுவிடுவாள். மூச்சு வாங்க, முகத்தில் வியர்வை கோர்த்துக்கொள்ள முதல் ஐந்தாறு கவளங்களை விழுங்கிய பின்தான் நிதானம் வரும். இன்னமும் அந்தப் பசி வேகம் அவளுள் எங்கோ ஒரு கட்டப்பட்ட நாயாகவே இருந்தது. அவள் சாப்பாட்டு ஆசை அவர்கள் குழுவில் அங்கீகரிக்கப்பட்ட விவகாரம். மீனா சாப்பிடுவதை விட மூன்று மடங்கு அவள் சாப்பிடுவதும், வேறு எதிலும் மனத்தைச் சிதறவிடாமல் லயித்து அவள் சாப்பிடுவதும் அவர்களுக்குச் சற்றே ஏளனத்திற்குரியதானாலும் பெரிய மனத்தோடு அதை அவர்கள் ஏற்றுக்கொண்டிருந்தனர்.

ஒர் ஆராய்ச்சிக் கட்டுரையை கெளதமன் படித்துக் காட்ட எடுத்து வந்த நாள் அவள் சமையலறையில் அவியல் பண்ணிக்கொண்டிருந்தாள்.

"சமைப்பதில் அப்படி என்ன சுவாரஸ்யம் ? இதுவே சர்வசாதாரண கல்யாண வாழ்க்கைதான் உனக்கு வேணும்னு காட்டறது. மத்த பெண்களுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம்?" என்று பொரிந்து தள்ளினான் கெளதமன்.

"இதெல்லாம் செய்தா நான் வித்தியாசமானவ; செய்யாட்டா சாதாரணமாவை அப்படி எல்லாம் யோசித்து நான் செய்யலே. சமைக்கறதுனாலே நான் மத்தவா மாதிரி சாதாரணமா போயிடவும் மாட்டேன். இதை நிறுத்தறவா வித்தியாசமான வாளா ஆயிடவும் மாட்டா. இதெல்லாம் வெறும் வெளித் தோற்றம்தான். நம்பியார் பீடி குடிச்சிண்டு, கிழிஞ்ச குர்தா போட்டுக்கற மாதிரி. மீனா கொஞ்ச நாள் 'ப்ரா' இல்லாம திரிஞ்ச மாதிரி. அவ சிகரெட் குடிக்கறதும் அவ வித்தியாசத்தைக் காட்டத்தான். நிஜமா சிகரெட் குடிக்கணம்கற ஆசையிலே இல்லே. என்னோட வித்தியாசம் இதுவே இல்லே. உள்ளே இருக்கு எனக்குப் பிடிச்சா நான் ஜின் குடிக்கறேன். சிகரெட் பிடிக்கறேன். எதையும் நிலைநாட்டிக்கறதுக்கு இல்லே" என்று அவளும் பதிலுக்குக் கத்தினாள்.

அவன் கட்டுரையைப் படுக்கை மேல் விசிறி எறிந்துவிட்டுப் போய்விட்டான்.

இரவு அவர்கள் இருவரும் கட்டுரையைப் படித்து முடித்த பின் அவன் "சாயங்காலம் நான் நல்ல மூடி'ல் இல்லை," என்றான்.

சிறிது மெளனத்திற்குப் பின் அவள் தன் பசிபற்றிச் சொன்னாள். மன்னி தனக்கு வெறும் ஊசிய ரஸம் சாதமும், நார்த்தங்காய் ஊறு காயும் தந்தது பற்றிச்சொன்னாள். "நீ கட்லெட்டையும், ஆப்பிளையும் தொடாமல் ஒதுக்கிண்டு இருந்தபோது நான் அடிவயிறு பசியில் வலிக்க என் பாயை விரிச்சுண்டு படுத்துண்டிருந்தேன். ஆறு மாசம் நன்னா சமைச்சுச் சாப்பிட்டபோதும் என் வயிறு வலித்தது - நல்ல சாப்பாடு பழக்கம் இல்லாம போனதுனால."

பதிலுக்கு ஒன்றும் கூறாமல் அவன் அவள் முகத்தைத் தன் மார்பில் சாய்த்துக் கொண்டபோது மீண்டும் இப்பிரச்சினை எழாது என்றுதான் அவள் நினைத்தாள்.

அன்று அவன் தந்தையைப் பார்க்கப் போகும் முன் அவன் அதைக் கேட்டதும் அவள் அவனை வெறுமே நோக்கினாள்.

"ஆர் யூ அஷேம்ட் ஆஃப் மீ?" "சே, சே, அதெல்லாம் இல்லை." என்ற விட்டு அவன் அவளை அழைத்துக் கொண்டு போனான்

ஆனால் அவள் நெஞ்சு அந்தப் பெரிய வீட்டில் ஓர் அடங்காத தவளையாய்த்துள்ளித்துள்ளி அவளை அதிர வைத்தது. கம்பளத்தில் கால்கள் பின்னிக் கொண்டன. கெளதமனின் அப்பா அவளை சர்வ சாதாரணமாகவே வரவேற்றார்.

விசித்திரமாக ருசித்த ஒரு பானத்தை லைம் ஜூஸ் என்று தந்தான் சித்தப்பாவின் பட்லர்.

அவள் முகம் போன போக்கைப் பார்த்து "இது எலுமிச்சம்பழம் பிழிந்து பண்ணினதில்லை. யார் மார்க்கெட்டுக்கு ஒட முடியும்? ஆறு மாசத்துக்கொரு தடவை விஸிலியிலிருந்து லைம் ஜூஸ் பாட்டில் ஒன்று வரவழைப்போம்," என்றார்.

"நீ எது பத்தி ரிஸர்ச் பண்ணறே?"

“லாடின் அமெரிக்கா" "ஓ. ஸ்பானிஷ் படிச்சிருக்கியா? நான் அந்தப் பக்கம் இருந்திருக்கேன்."

"ம். ஸ்பானிஷ் படிச்சிண்டிருக்கேன்." "ஆப்லாஸ் எஸ்பான்யோல்?" என்றார் திடீரென்று ஸ்பானிஷில், "ஊன் போகோ” என்றாள் அவள் சரேலென்று வியர்த்தவாறே. அவன் தந்தை அவள் ஸ்பானிஷ் மொழிப்புலமை பற்றி அந்த இரு சொற்களோடு திருப்தி அடைந்துவிட்டார். அவருக்குத் தெரிந்ததும் அவர் பேசிய இரு சொற்கள் மட்டும்தான் என்ற சந்தேகம் அவளுக்கு ஏற்பட்டது.

பேச்சினூடே அவள் பிராமணப் பெண்ணா என்று அவர் ஜாடையாக விசாரித்துக்கொண்டார். சந்திப்பு ஒருவாறாக முடிந்தது.

அவளுக்கு எதையும் ஒரு அதீத நாடக பாணியிலேயே கற்பனை செய்து பழக்கமாதலால் அது ஒரு உப்புச்சப்பற்ற சந்திப்பாய்த் தோன்றியது. அவர்கள் உறவு பற்றி அவர் அதிர்ச்சியடைந்து விவாதிப்பார் என்று அவள் எதிர்பார்த்திருந்தாள். வீட்டிலும் அப்படித்தான். அவள் ஏன் கல்யாணம் பண்ணிக்கொள்ள விரும்பவில்லை என்பதற்குத் தர்க்கரீதியாகப் பல விவாதங்களை மனத்தில் பலமுறை சொல்லிப் பார்த்துக் கொண்டு, ஒரு பூகம்பமே வெடிக்கும் என்று எதிர்பார்த்துக்கொண்டு அப்பாவிடம் போனாள். முடங்கிப் படுத்திருந்த அவரிடம் "அப்பா எனக்குக் கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்லை." என்றாள். “உம்?" என்று தீனமாக முனகிவிட்டு அவர் வசதிக்காக இன்னொரு புறம் திரும்பிப் படுத்துக் கொண்டார். அவர் தன்னை ஏய்த்துவிட்டது போல் அவளுக்குப் பட்டது. அதே உணர்வு இப்போதும் ஏற்பட்டது.

"அப்பா எப்படி?” என்றான் கெளதமன். "அவரை நினைச்சா பயமா இருக்கு" என்றாள். "சீ என்னைப் பாத்தா பயமா இருக்கா என்ன ?" "சில சமயம்" என்றாள் அவள் மெல்ல. "அசடு" என்று அவள் இடையை அணைத்துக்கொண்டான் கெளதமன்.

இதுதான் என்று பாகுபடுத்திச் சொல்ல முடியாத அந்த பயம் அவ்வப்போது முளை விட்டுக் கிளைக்கவே செய்தது.

அது உணர்ச்சிரூபமான பயம். அவனை மிக நெருங்கியும் அவனிடமுள்ள சிறு முரண்கள், குத்தூசி செருகப்பட்டு நீலம் பாரித்து,

அழுத்தினால் குருதி கசியும் அவள் மனத்தின் சில பகுதிகளைத் தாக்குவதால் ஏற்பட்ட பயம், பயம் வேறு ரூபமும் கொண்டது.

பொதுவுடைமை போன்ற கொள்கைகளைப் பற்றிய அவள் அறிவுபூர்வமான அறியாமையே அவற்றை அவள் படிக்க ஆரம்பித்த போது அதைக் கலப்படமில்லாமல், தீவிரமாக, நேர்மையாக, வேறு நிறங்களோடு கலக்காமல் மனதாரப் படிக்க உதவியது. இது அவளிடமிருந்து எதிர்பார்க்கப்படவில்லை. அவளிடமிருந்து கேட்கப்பட்டது. ஆமோதிப்பு, ஏற்பு, கீழ்ப்படிவு இவை மூன்றுமே என்று தோன்றியது.

அம்முக்குட்டி மேனோன் "நாம் பல வருடத்து புரட்சிக் கொள்கை களுக்கு ஏற்ப . "என்று பேசத் தொடங்கும்போது ஒர் ஊமை அலறல் அடிவயிற்றைக் கொத்தி எடுத்தது. ஒவ்வொரு மீட்டிங்கிலும் ஒரு கனல் பந்து அவள் குரல் நாளங்களை முட்டி "பேசு, கூச்சலிடு, முழக்கமிடு” என்று தூண்டியது. ஒரு மீட்டிங்கில் அவள் அதைச் செய்தாள்.

"மீண்டும் மீண்டும் பல ரூபங்களில் வந்தவாறிருக்க வேண்டும் புரட்சி, தேக்கம் பலமாகிவிடாது. சுய விமர்சனம், சுத்திகரிப்பு, மீண்டும் மீண்டும் ஆராய்தல், உள்ளே கிளைத்தவாறிருக்கும் களைகளைப் பறித்தல் இல்லாதவரை வளர்ச்சி இல்லை. வளர்ச்சி இல்லா குழுவிடமிருந்து உத்தரவு பெறுவது செத்தவனுக்குச் செய்யும் சேவகம்தான்" என்று உரக்கக் கத்தினாள் ஹிதா.

கெளதமன் அவள் தோளை அணைத்துப் பலவந்தமாய் வெளியே அழைத்துச் சென்றான்.

காப்பி ஹவுஸில் கழுத்து நரம்புகள் புடைக்க அவள் குமுறினாள் ஆங்கிலத்தில்,

"கெளதா, என் குழப்பங்கள் உனக்குப் புரியவில்லை. இந்த மீட்டிங்கிற்கு வரும்போதெல்லாம் எனக்குள் ஒரு கனல் பற்றிக்கொள்கிறது. அங்குள்ள ஒவ்வொருவர் விலாசமும் டில்லியின் பணம் கொழுத்த பகுதியுடையது. அவர்கள் என்னைத் தாழ்த்தப்பட்டவளாய் உணர வைக்கிறார்கள். கட்சியில் புதியதாய்ச் சேரும் ஒருவன் வர்க்கத்தைப் பொறுத்து அவன் மதிப்பிடப்படுகிறான். நம்பியாருக்கு யாரும் மொழிபெயர்ப்பு வேலையும், தொழிற்சங்க வேலையும், வேர் மட்ட வேலையும் தரவில்லை. அவன் கட்சியின் மேல் மட்டத்தை எட்டிவிட்டான் எதுவும் செய்யாமல், நீயும் அப்படித்தான். நான் உன்னுடன் இருப்பதால் எனக்கு மதிப்பு. எங்கே உங்கள் வர்க்க விடுபடுதல் ?”

"நடைமுறைக்கும் உன் புத்தக அறிவுக்கும் வித்தியாஸம் உண்டு. உளறாதே ஹிதா."

இந்நிகழ்ச்சி வேறு பல வடிவங்களில் மீண்டும்மீண்டும் நிகழ்ந்தது. மிஸஸ். மேனோன் கெளதமனைக் கூப்பிட்டு அவளைக் கண்டிக்கச் சொன்னாள். கட்டுப்பாடு, ஒழுங்குமுறை முக்கியம் என்றாள்.

கெளதமன் சொன்னபோது "எருமைத்தோல் முக்கியம்" என்றாள் ஹிதா.

எந்த வித சள்ளைகளும் இல்லாத வாழ்வில் வெறுமை புகும்போது உற்சாக மூட்டும் அபினியாக இந்தக் கொள்கை அவர்களிடையே இருந்தது போல் பட்டது. ஒய்வு நேரப் புரட்சிவாதிகள், பிழைப்புப் புரட்சிவாதிகள்.

இவர்கள் போலியா? அப்படியானால் நான் நிஜமா என்று கேட்டுக்கொண்டாள் ஹிதா.

எங்கே எந்தக் கோணத்திலிருந்து என்று உணர முடியாமல் குழப்பங்கள் நெட்டித்தள்ளின. அழுகியும், உருவற்றும், சிதைந்தும், நிணம் கருகியும் போன பிண்டங்களாய் கண்முன் உலவின. "இது இப்படித் தான்" என்று அவள் ஒன்றைக் கண்டறியும் முன் அது வேறு உருவெடுத்து வலம் வந்தது.

நெற்றியின் இரு புறமும் சம்மட்டி அடிவாங்கும் வலி தெறித்தது.

கதவு திறந்துகொண்டது.

கெளதமன் உள்ளே வந்தான்.

"ஹெள ஆர் யூ ஹிதா ?" என்றவாறே அவளருகில் வந்து அமர்ந்தான்.

அவள் எழுந்து அமர்ந்து, "தலைவலிதான்" என்றாள். "சாய் போடட்டுமா?" "வேண்டாம். இன்னிக்கு நல்ல குளுகுளுன்னு இருக்கு மலை மேல போய் உட்காரலாமா? கொஞ்சம் இதமா இருக்கும்."

"சரி வா" என்று விட்டு அவன் முகம் அலம்பப் போனான். அறையைப் பூட்டிக்கொண்டு வீட்டின் எதிரே இருந்த சிறு குன்றின் படிகளில் நடக்கலானார்கள்.

"இன்னிக்கு நாம்ப மயிரிழையிலே தப்பினோம். இல்லாவிட்டால் பத்து பேருக்கும் நல்ல அடிதான்" என்றான் கெளதமன்.

ஹிதா பேசவில்லை. "என்ன ஹிதா, பதிலே இல்லை?" அவன் நீட்டிய கையைப் பற்றியவாறே, "கெளதம், இன்னி வரை நான் உன் எல்லா வேலையிலேயும் எதிர்ப்பு இருந்தாலும் மறுப்பு இருந்தாலும் ஒரு நல்லது செய்ய இது செய்ய வேண்டியதுதான்னு உடன்பட்டுண்டிருந்தேன். இன்னிக்கு முதல் தடவையா நாம்ப செய்யறதுக்கும் நம்ப அடிப்படை நோக்கத்துக்கும் மைல் கணக்கிலே தூரம் இருக்கற மாதிரி எனக்குப் படறது."

அவள் மேலே தொடருமுன் "ப்ளிஸ் ஹிதா, உனக்கு அடிக்கடி இந்த சந்தேக "அட்டாக்' வந்துடறது. இதைதான் நாம்ப பண்ணணும். பண்ண முடியும்."

"நிச்சயமாவா? ஒரு நொண்டியை அவனோட சக்கர நாற்காலிலே அடிச்சுப் போடறது கூடவா ?”

"அது ஸ்ட்ராடஜி ஹிதா, அந்த சமயத்திலே வேற என்ன பண்ணியிருக்க முடியும்?"

"உனக்கும் கூட இருந்த பையன்களுக்கும் தாடி இருந்ததா ஞாபகம். நின்னு அடியை வாங்கிண்டிருக்கலாம். நானும் அடிபடத் தயார் தான்."

"நான்ஸென்ஸ்"

சிறிது மெளனத்திற்குப் பிறகு ஹிதா மெல்லச் சொன்னாள்.

"எனக்கு இதுலே பிடிப்புப் போயிடுத்து. நான் நிஜமாவே எதையாவது பண்ண ஆசைப்படறேன். பண்ணற பிரமையிலேயே இருக்க முடியலே. எனக்குள்ளேயே பூந்துண்டு, கேள்வி கேட்டு உசுப்பிண்டு, எங்கேயோ சேறு சகதியிலே சிக்கிண்டிருக்கற என்னை உலுக்கி வெளியே எடுத்து, தண்ணியைப் பீச்சி சுத்திகரிச்சுக்கணம்னு தோணறது. நாம செய்யற வேலையோட வேஷங்கள் என்னைப் பயமுறுத்தறது."

"சக்கர நாற்காலியைப் பார்த்து அப்பா ஞாபகம் வந்துடுத்தா ? ஒரு காரியத்தை சாதிக்கச் சிந்தின ரத்தத்தைப் பாத்தா பயந்துட்டே? அஹிம்ஸா வாதமா?”

"என் பயம் அது இல்லே. கெளதம். சிந்த வேண்டிய ரத்தம் சிந்தற நாள் வரும்போது, நியாயமா நீட்டற ஒரு துப்பாக்கியோட எதிர் முனையிலே இருக்கறது நீயும் உன் நண்பர்களுமா இருக்குமோங்கறதுதான் என் பயம். அதை நீட்டறது நானா இருக்குமோன்னுதான் பயம்."

அவன் தாக்கப்பட்டான்.

"என்னைப் போலிங்கறையா?”

அவள் தலையசைத்தாள். பிறகு மெல்ல ஆங்கிலத்தில், "நீயும் நீங்களும் போலி என்றால் உண்மையானவர்கள் யார்? அப்படி உண்மையான புரட்சிவாதிகள் எங்கே என்கிறதுதான் என் பிரச்சினை. ஆனால் அவர்கள் இருக்கத்தான் வேண்டும். அமைப்பு இல்லாமல், கோபத்தையும், நியாய வெறியும் மட்டுமே துணையாய்க் கொண்டு, சத்தியமான லட்சியங்களோடு அவர்கள் அலைந்துகொண்டுதான் இருப்பார்கள்" என்றாள்.

"இது என்ன லெக்சரா ?”

ஹிதா புன்னகைத்துப் பார்த்துச் சொன்னாள்.

"நான் போகணம்னு தீர்மானிச்சுட்டேன்."

அதை மறுக்கவும் எதிர்வாதமும் புரிய வாயெடுத்த கெளதமன் பின் மெளனமானான்.

மேல்படியை எட்டியதும் இருவரும் அமர்ந்துகொண்டனர்.

அவள் எடுத்த முடிவு சரிதானா என்ற குழப்பம், எதைச் செய்வது என்ற பயம், "இதுதான் நீ செய்ய வேண்டியது" என்று சுலபமாக வரையறுத்து கெளதமன் கூறுவதை ஓர் ஆதரவாகப் பற்றிக்கொண்டு எதிர்க் கேள்விகளை அமுக்கி விடலாமா என்ற தாக்கம், இவற்றை மனத்தில் தேக்கிக்கொண்டு எதிரே வெறித்தாள் ஹிதா,

வரப்போகும் ஒவ்வொரு இரவும் தூக்கத்தின் இடையே கெளதமனின் ஆதரவான விரல்கள் மெல்ல அவள் ஸ்தனங்களின் மேல் பட்டு அதன் காம்புகளை வருடி அவள் துயிலுக்கு இனிமை கூட்ட முடியாமல் போவதை எண்ணி ஏங்குவாளோ? கெளதமன் ஆஸ்த்மா வந்து "ஹிதா, ஹிதா" என்று முனகும் போது யார் அருகில் ?

எல்லாக் கேள்விகளின் மேலும் கால் வைத்து ஏறிவந்தாள்.

கண்ணை மூடி, எதிர்க் கேள்வி இல்லாமல் ஏற்றுக்கொள்ளும் சுகானுபவத்தை இழந்து, அவளே கற்களை அகற்றி, முட்களை விலக்கி நடக்க வேண்டும் என்பது மலைக்க வைத்தது. அதே சமயம் முதுகு எலும்பைச் சுண்டி எடுத்தது. மெல்ல நீர்த்துளிகள் விழிகளில் கோர்த்துக்கொண்டு கீழே வழிந்தன. அப்போதைக்கு அந்தக் கண்ணிர் வழியட்டும் என்று வாளாவிருந்தாள்.

'கணையாழி" ஆகஸ்டு 1976

சக்கர நாற்காலி -