மனித சஞ்சாரமே இல்லாத அந்தப் பாலை நிலத்தில் - அவன் மட்டுமே நின்றிருந்தான். கண்ணுக்கெட்டிய தூரம் வரை கரம்பாயிருந்த அவ்விடத்தில், பாழுங்கோயிலில் வாய் மூடி அசையாது நின்றிடும் மூளிச் சிலைகளைப் போலச் சிறிதும் பெரிதுமாய் ஆங்காங்கே சிதறிக் கிடந்த கருங்கல் பாறைகளும் சரளைக் கற்களுமே அவனுக்குத் துணையாக இருந்தன. அவனுடைய உள்ளத்து ஆசாபாசங்கள் இலை கரிந்து முள்ளே முன்னிற்கும் கள்ளிச் செடிகளாய் உருவமெடுத்துக் குட்டையாகவும் நெட்டையாகவும் பாறை இடுக்குகளில் நின்றுகொண்டிருந்தன. கதிரவன் வாரி வீசிக் கொண்டிருந்த அனலின் வெப்பில் நடுங்கியவாறு தங்கள் நிழல்களைத் தரையில் கிடத்தி அவை நின்றுகொண்டி ருந்தன. அவனுக்கு மூச்சுத் திணறியது. பேர் ஊர் பாஷை தெரியாத ஜனக் கூட்டத்தின் நடுவில் சிக்கிக் கொண்டு நகரவும் முடியாமல் கைகள் அசைக்கக்கூடவும் முடியாமல் நசுக்குண்டு தவிப்பவன் போல அவன் திணறினான். ஆவி பறந்து கொண்டிருந்த காற்றில் ஆயிரக்கணக்கான அருவங்கள் அசலனமாக இமையால் அவனைத் தங்கள் கண்களால் கொத்திக்கொண்டிருப்பதாக அவனுக்குத் தோன்றவும் அவன் உடல் லேசாக நடுங்கியது. அவ்விடத்தை விட்டு எங்கேனும் பச்சைப் புல் படர்ந்திருக்கும் ஓரிடத்துக்கு, குமிழியிட்டுச் சலசலவென்று நடன
179
மாடிப் படரும் தெள்ளிய குளிர்ந்த நீரோடைக்கு உடனே ஓடித் தப்பாவிட்டால் தன்னுடைய உயிருக்கே ஆபத்தாய் முடியும் என்ற பயம் வெடித்தெழ அவனுக்கு மூச்சு முட்டியது. அப்போதுதான் தன் எதிரே வழியை மறித்து நின்றிருந்த நாயைப் பார்த்தான்.
உனக்கும் ஒரு குடும்பம் ஒரு வீடு இருக்கிறது, எனக்கும் ஒரு வீடு இருக்கிறது. இவ்விரு வீடுகளையும் இடித்துக் குடும்பங்களைச் சிதைத்துப் பாழாக்கி அதைத் தளமாக்கி நான் இன்பமாளிகை கட்டிக்கொள்ள விருப்பப்படவில்லை. அதே சமயம் என்னால் மனத்தை இத்தனை நாள் ஒடுக்கப் பார்த்தும் முடியவில்லை. இனி என்ன ஆனாலும் சரி, நீ என்ன நினைத்தாலும் சரி, என் மனத்தைத் உனக்கு வெளிப்படுத்தியே ஆக வேண்டும் என்ற நிலை வந்துவிட்டது. நான் சொல்வது உனக்குப் புரிகிறதோ இல்லையோ, நீ எனக்கு உயிராய் என் உள்ளத்துக்குள்ளே வளர்ந்துவிட்டாய். அவன் குரல் கரகரத்திருந்தது. தட்டுத்தடுமாறி இருட்டில் விளக்கைத் தேடுபவன் போல அவன் வார்த்தைகளைத் தேடியெடுத்துத் திக்கிக்கொண்டிருந்தான். அவள் தன் கண்களை அகல விழித்து அவனை ஒருமுறை பார்த்து விட்டுத் தலையைத் தாழ்த்திக்கொண்டாள்.
அணையும் மெழுகுவர்த்தியிலிருந்து வெளிக்கிட்டுக் குப்பென்று பரவும் புகைபோலே ஒரு கணம் பரவிய தூசிப் படலம் அடங்கினபோது அவனுக்குப் பத்தடி தூரத்திலே அந்த நாய் உட்கார்ந்துகொண்டிருந்ததைப் பார்த்தான். மஞ்சள் பழுப்பு நிறமாகவிருந்த அதன் முகத்தில் கரும் பழுப்பு விழிகள் சூரியனைப் பிரதிபலித்துப் பளபளத்துக் கொண்டிருந்தன. திறந்த வாயிலிருந்து வெண் சிவப்பாய் நீண்டிருந்த நாக்கை இடது பக்கப் பற்களின் மேலே கிடத்தித் தொங்கவிட்டுக்கொண்டு தலையைச் சாய்த்துக் காதுகளை நிமிர்த்தி அவனைப் பார்த்தபடி அது உட்கார்ந்து
180
180
கொண்டிருந்தது. கழுத்திலும் முதுகிலும் அடர்த்தியாகச் சாம்பல் நிறச் சடையோடிருந்த அந்த நாயின் விலாவின் இரைப்பும் அதன் கூரிய கண்களில் இருந்த எகத்தாளமும் தன்னைக் கேலி செய்வது போலிருந்ததாக அவன் நினைத்தான். அவன் தன்னைப் பார்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்ததும் அந்த நாய் மயிர் அடர்ந்த தன் வாலைத் தரையில் புரட்டியது. வழி தவறிப் போகும் மந்தை ஆடுகளையும் தன்னுடைய திறமையினால் வசமாக அடக்கிக் கிடைக்கு அழைத்துச் செல்லும் ஜாதி நாய் போலிருந்த அது, அவனுடைய உயிர் பிழைக்க அவன் செல்ல வேண்டிய தெளிந்த நீரோடைக்குப் போகும் வழியின் குறுக்கே நின்றுகொண்டிருந்ததாக அவனுக்குப் பட்டது. அவனுடைய விடுதலை வழியின் தடத்தை அதனுடைய வாலினால் அந்த நாய் அழித்துக்கொண்டிருந்ததை அவன் கண்டதும் கோபப்பட்டான். தான் தப்பி ஓடிவிடாமலிருக்க அனுப்பிவைக்கப்பட்ட காவல்கார நாய் அது என்ற எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது. அசைந்து கொண்டிருந்த அதன் பருத்த வாலின் நிழல் மலைப்பாம்புபோல நெளிந்து கொண்டிருந்தது. அந்த நாயை விரட்டாவிட்டால் தான் தப்ப முடியாது என்பதை அவன் உணர்ந்துகொண்டான்.
உண்மையான அன்பை அறியாமலும் அன்பை அளிக்காமலும் யந்திர வாழ்க்கை நடத்தி ஆயுளில் பாதியைக் கழித்துவிட்ட எனக்கு இப்படி நேருமென்று நான் கொஞ்சமும் நினைக்கவில்லை. இப்போது உன்னை நினைக்கும் போதெல்லாம் முதல் காதல் மயக்கத்தின் வாய்ப்பட்ட பதினெட்டு வயதுப் பையன் போல மனது படபடத்துக் கொள்கிறது. என்னைக் கோபித்துக்கொள்ளாதே. இன்னொருவன் மனைவியான என்னிடம் இந்த மாதிரியெல்லாம் பேசாதே என்று சொல்வதானால் சொல்லிவிடு. நான் உன் மேல் அன்பு மாத்திரமல்ல மரியாதையும் கொண்ட வன். உன் மனத்தைப் புண்படுத்தும் காரியம் எதையும்
181
இம்மியளவும் செய்யமாட்டேன். என்னுடைய மனச் சந்துஷ்டிக்காக, திருப்திக்காக, இதத்துக்காக, சந்தோஷத்துக்காக உன்னை மீறி வற்புறுத்த மாட்டேன். என் நிலைமையை உன்னிடம் சொல்லித்தான் தீர வேண்டும் என்ற மன நெருக்கடி ஏற்பட்டுவிட்டதால் தான் நான் என் உள்ளத்தையும் திறந்து காட்டிவிட்டேன். நான் பேசக்கூடாது என்று தோன்றினால் சொல்லிவிடு . தயங்காதே. நான் கஷ்டப்படுவேன் என்று நினைக்காதே. அவன் மெல்ல அவள் கைகளை வருடினான். அவள் உடல் நடுங்கியது. அவள் தன் கைகளைப் பின்னுக்கிழுத்துக்கொள்ளவில்லை. அவன் வயிற்றில் பகீரென்று நெருப்புப் பற்றிக்கொண்டது.
தன்னை வழிமறித்துக்கொண்டிருக்கும் அந்த நாயை விரட்டியடிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலிட அவன் பரபரப்படைந்தான். கீழே குனிந்து கல்லை எடுப்பவன் போலப் பாசாங்கு செய்து வெறுங்கையை வீசினான். உட்கார்ந்திருந்த நாய் எழுந்து நின்று, முன்கால்களை நீட்டி, தலையைப் பின்னுக்கிழுத்து, முதுகைக் கீழே வளைத்து, பின்னம்புறத்தை மேல் தூக்கி, வாலை ஆட்டின படியே சோம்பல் முறித்துவிட்டு வாயை ஆவென்று திறந்து கொட்டாவி விட்டது. இரு வரிசைப் பற்களும் இடையில் சுருண்டு வளைந்து நீண்ட சிவந்த நாவும் அவனை எச்சரிப்பதுபோல அவனுக்குப் பட்டது. கொட்டாவி விட்டு முடிந்தபின், சாவதானமாக, கழுத்தை வளைத்து அடிவயிற்றை நக்கிவிட்டுக்கொண்டு, அவனைத் தன் பழுப்புக் கண்களால் பார்த்தது. அவனுடைய பொய்க் கல் வீச்சை அது லக்ஷியம் செய்யவில்லை என்பது மாத்திரமல்ல, அதை சுலபத்தில் ஏமாற்ற முடியாது என்பதையும் அவன் உணர்ந்து கொண்டான். அடிமனத்தில் ஆத்திரம் பொங்க நிஜமான கற்கள் கிடைக்குமா என்று சுற்றிலும் பார்த்தான். அருகில் ஒரு கல்லையும் காணவில்லை. தன்னால் அவ்விடத்தைவிட்டு நகர முடியாமல் போய்
182
விடுமோ என்ற பயம் ஏமாற்ற அயர்ச்சியினால் தோன்றிய மறு கணமே தன் இடது கையில் ஏதோ இருப்பதாக உணர்ந்தான். அந்தக் கையில் ஒரு பந்து, ரப்பர் பந்து இருந்தது. அது எப்படித் தன் கைக்கு வந்ததென்று அவனுக்குப் புரியாமற்போனாலும், மாயமாய் அது தன்னை வந்தடைந்ததுபற்றி அவன் ஆச்சரியப்படவில்லை. பந்தை நாயின் பக்கமாக விசையாக வீசினான். தன் முழுப் பலத்தையும் உபயோகித்து அவன் வீசிய பந்து, கண்களை விழுங்கிக்கொண்டிருந்த நீல வானத்தின் பகைப்புலத்தில் குறுக்காக வளைந்து பறந்து நெடுந்தொலைவில் விழுந்தது. நாயும் துள்ளிக் கிளம்பிப் பந்தைத் தொடர்ந்து ஓடியது. அவன் பெருமூச்சுவிட்டான். இனிமேல் தொந்தரவேதும் இல்லாமல் ஓடையை நோக்கி நடந்து விடாய் தீர்த்து உயிர் பிழைத்துவிடலாம் என்ற நம்பிக்கையினால் களுக் கென்று சிரித்துக்கொண்டான்.
பெண்ணே, உன்னை நினைக்கும்போதெல்லாம் என் மயிர்சிலிர்த்துப் பகீர் என்கிறது ! காலை கண் விழித்தவுடன் உன் நினைவே எனக்கு முதலில் எழுகிறது. உன்னை அறிந்துகொள்ளாமல் என் வாழ்நாளில் இத்தனை வருஷங்களை வீணடித்துவிட்டேனே என்று எவ்வளவு வருத்தமாகிறது தெரியுமா? இதுநாள்வரையிலான என் மண வாழக்கையின் பொய்மையையும் என் மண வாழ்வின் வெறுமையையும் உன்னிடம் சொல்லி உன்னுடைய பச்சாதாபத்தை பெற நான் விரும்பவில்லை . உன்னுடன் இடம் '' தனித்துப் பார்த்துப் பேச ஓரிரு நிமிஷங்கள் கிடைத்த எனக்குப் பெரிய பேறு. என்னுடைய சென்ற காலத்தை பற்றி நினைக்க விரும்பவில்லை. இனி வருங்காலத்தை பற்றியும் நினைத்துப் பார்க்கவில்லை. உன்னோடிருக்கும் இந்த ஒரு நிமிஷத்துக்காகவே இருக்கிறேன். என் மேல் உனக்குக் கோபமில்லையே ? அவன் இறைஞ்சிக் கேட்டான்
183
இல்லையென்று அவள் தலையசைத்தாள். மகிழ்ச்சி வெள்ளத்தில் அவன் மூச்சுமுட்டிப்போனான்.
இரண்டடிகள் தான் எடுத்து வைத்திருப்பான். அதற்குள் நாய் எப்படியோ பந்தை அடைந்து வாயில் கெள்விக் 'கொணர்ந்து அவன் காலடியில் வைத்துவிட்டுப் பத்தடி தூரம் முன்னால் ஓடித் திரும்பி அவனைப் பார்த்து வாலை ஆட்டிக்கொண்டு நின்றது. அவனுக்குக் கோபம் தாங்க முடியவில்லை. குனிந்து பந்தை எடுத்து மறுபடியும் முன்னிலும் விசையாக எறிந்தான். பந்து வெகு தூரம் போய் விழுந்த போதிலும் நாய் நான்கே எட்டில் பந்தை அடைந்து வாயில் கௌவிக்கொண்டு அவனிடம் சேர்ப்பித்து அடுத்த வீசலுக்காக வாலை ஆட்டின்படி ஆவலுடன் காத்திருந்தது. வெண் மஞ்சளாய், துடைப்பம்போலிருந்த வாலை வீசிக்கொண்டு குஷியாக அந்த நாய் அவனுடைய ஆத்ம அவசரத்தைப் பரிபூரணமாக அலக்ஷியம் செய்தபடி வழியை மறித்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தது. மறுபடியும் அவன் பந்தை வீச, அதுவும் இமைக்கும் நேரத்துக்குள் பந்தைக் கொண்டுவந்து சேர்க்க, இம்மாதிரி பல தடவைகள் ஆனபின், அந்த நாயும் பந்தும் தன்னைத் தடுத்து நிறுத்திக் கேலி செய்து வதைத்தெடுக்க அனுப்பிவைக்கப்பட்ட கருவிகளோ என்று அவன் சந்தேகப்பட ஆரம்பித்தான். ஓடையின் நினைவு வர அடிவானத்தை நோக்கினான். தொலை தூரத்தில் நிழல்போலச் சில மரங்கள் தெரிந்தன. மனத்தில் தெம்பு பிறக்க மீண்டும் பந்தை வீசினான். இம்முறை நாய் திரும்புவதற்குள் இரண்டு அடிகள் நடக்க முடிந்தது. இப்படியே பந்தை வீசி ஓரடி ஈரடியாக நடந்து எப்படியும் ஒடையை அடைந்துவிடலாம் என அவன் நம்பினான். அந்த நம்பிக்கை தந்த புதுப் பலத்தினால் பந்தை முன்னிலும் அசையாக வீசிவிட்டு மறுபடியும் அடிவானத்தைப் பார்த்தான். நெடுந் தொலைவில் இருந்தாலும் அம்மரங்கள்
184
அவன் கண்ணுக்குத் துல்லியமாய்த் தெரிந்தன. அவனை வரவேற்பனபோல அசைந்து கொண்டிருந்தன. கீழே பசும்புல் தரை. அதன் நடுவே நீல் ஆகாயத்தை உரித்துக் கீழே கிடத்தி வைத்திருந்த மாதிரி இருந்த நீரோடை. ஓடையின் மென்குரல் அவன் காதுக்குள் ரகசியமாக ஒலித்ததை அவன் கேட்டான். உற்சாகத்தோடு அடி எடுத்து வைக்க ஆரம்பிப்பதற்குள் அவனுடைய இலக்கை மறைத்துக் கொண்டு நாய் நின்றுகொண்டிருந்ததைக் கண்டான். அவன் காலடியில் பந்து உருண்டது. நாயின் வாய் எச்சில் பரவி ஈரமாயிருந்த பந்து வெயிலில் மின்னிக்கொண்டிருந்தது.
எவ்வளவு நாள் இந்த மாதிரி ஒளிந்து ஒளிந்து சந்திப்பது ? பேசிக்கொள்வது? எவனோ எங்கேயோ இச்சென்று தும்மினால் கூடப் பதறி ஒதுங்கி நின்று ஏதோ முக்கியமான காரியம் செய்வது போலப் பாசாங்கு செய்யவேண்டியிருக் கிறதே. இது என்ன பிழைப்பு? தனிமையில் உன் நினைவாகவே இருந்து உன் மேல் உயிரையே வைத்திருக்கும் நான், நான்கு பேர் நடுவிலிருக்கும்போது மட்டும் உன்னை அதிகம் தெரியாதது மாதிரி நடிக்க வேண்டியிருக்கிறதே. இந்த மாதிரியாக வாழ்வது என்னை எப்படிப் பிழிகிறது தெரியுமா? இப்போது தான் நான் வாழ்க்கையின் இரக்கமற்ற அரக்க நகங்களை உணர்கிறேன். நாமிருவரும் ஒளிவு மறைவின்றிச் சேர்ந்து வாழ வழியே இல்லையா ? அவள் மெல்லத் தலையாட்டினாள். அவள் முகம் வெளுத்துக்கிடந்தது.
அவனுக்கு மூச்சு வாங்கியது. பந்தை எடுக்கக் குனிந்தான். இடுப்பும் முதுகும் விண்விண்ணென்று வலித்தன. ஈரமாய்க் கிடந்த பந்தை எடுத்தபடி நாயைப் பார்த்தான். அது வாயைப் பாதித் திறந்தபடி நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டு இரைக்க நின்றுகொண்டிருந்தது. அவ்வப்போது ரத்தக்கறை படிந்திருந்த பாதங்களை நக்கிவிட்டுக்கொண்
185
டிருந்தது. முன்பிருந்த உற்சாகம் இப்போது அதனிடமில்லையென்றே அவன் நினைத்தான். அவனுடைய தோள் பட்டையிலிருந்து நுனிவிரல்வரை வலி ஊடுருவிப் பரந்தது. நெற்றியிலிருந்து வழிந்த வேர்வை அவன் இமைகளில் பரவி கண்ணைக் கரித்தது. கழுத்தின் பின்புறமாக வழிந்த வேர்வை அவன் முதுகை உறுத்தியது. இருந்தாலும் நாயின் தளர்வு கண்ட அவன், அதை ஓட முடியாமல் ஓயச்செய்து விட்டால் தான் தப்பி ஓடிவிட முடியுமென்று நினைத்தான். நீரோடையை நினைவுறுத்திக்கொண்டான். வறண்டு கிடக்கும் தன் நாவையும் தொண்டையையும் தன்னுடைய குளிர்ந்த விரல்களால் தடவி உயிர்ப்பிக்கப்போகும் தெளிநீரை நினைத்துக்கொண்டான். சுட்டுப் பொசுக்கிக் கொண்டிருக்கும் வெயிலிலிருந்து தன்னைக் காக்கக் காத்திருக்கும் செறி மரங்களை நினைத்துக்கொண்டான். அம்மரங்களின் இலைகளினூடே சிரித்துக்கொண்டு தன் மேல் பட்டிதழ்களை உதிர்க்கப்போகும் மணம் நிறைமென் மலர்களை நினைத்துக்கொண்டான். மரங்களினடியில் மிருதுவாகப் பாய்விரித்துத் தனக்காகத் தவங்கிடக்கும் பசும் புல்லை நினைத்துக்கொண்டான். மூச்சை இழுத்துப் பிடித்து பலங்கொண்ட மட்டும் பந்தை வீசினான். பந்து முன்போல வேகமாகப் பறக்கவில்லை. மெல்லத்தான் சென்றது. முன்போல அது வெகு தொலைவில் போய் . விழவில்லை . அதில் பாதி தூரம் கூட அது எட்டவில்லை நாயும் முன் போலத் துள்ளி ஓடவில்லை. தலையைத் திருப்பி அவனைக் குற்றம் சாட்டுவதுபோல் பார்த்துவிட்டு விந்திக்கொண்டே பந்தை நோக்கி நடந்தது. அது திரும்பி வரும்வரை அவனைக் கண்காணிப்பதற்காக ஆயாசத்தினால் சிவப்பேறிய தன்னுடைய கண்களைப் பூமியில் அங்கங்கே பதித்துவைத்ததுபோல் அதன் தடத்தில் ரத்தக்கறைகள் தெரிந்தன. தளர்ந்துவிட்ட நாய் திரும்புவதற்குள் தான்
டிருந்தது. முன்பிருந்த உற்சாகம் இப்போது அதனிடமில்லையென்றே அவன் நினைத்தான். அவனுடைய தோள் பட்டையிலிருந்து நுனிவிரல்வரை வலி ஊடுருவிப் பரந்தது. நெற்றியிலிருந்து வழிந்த வேர்வை அவன் இமைகளில் பரவி கண்ணைக் கரித்தது. கழுத்தின் பின்புறமாக வழிந்த வேர்வை அவன் முதுகை உறுத்தியது. இருந்தாலும் நாயின் தளர்வு கண்ட அவன், அதை ஓட முடியாமல் ஓயச்செய்து விட்டால் தான் தப்பி ஓடிவிட முடியுமென்று நினைத்தான். நீரோடையை நினைவுறுத்திக்கொண்டான். வறண்டு கிடக்கும் தன் நாவையும் தொண்டையையும் தன்னுடைய குளிர்ந்த விரல்களால் தடவி உயிர்ப்பிக்கப்போகும் தெளிநீரை நினைத்துக்கொண்டான். சுட்டுப் பொசுக்கிக் கொண்டிருக்கும் வெயிலிலிருந்து தன்னைக் காக்கக் காத்திருக்கும் செறி மரங்களை நினைத்துக்கொண்டான். அம்மரங்களின் இலைகளினூடே சிரித்துக்கொண்டு தன் மேல் பட்டிதழ்களை உதிர்க்கப்போகும் மணம் நிறைமென் மலர்களை நினைத்துக்கொண்டான். மரங்களினடியில் மிருதுவாகப் பாய்விரித்துத் தனக்காகத் தவங்கிடக்கும் பசும் புல்லை நினைத்துக்கொண்டான். மூச்சை இழுத்துப் பிடித்து பலங்கொண்ட மட்டும் பந்தை வீசினான். பந்து முன்போல வேகமாகப் பறக்கவில்லை. மெல்லத்தான் சென்றது. முன்போல அது வெகு தொலைவில் போய் . விழவில்லை . அதில் பாதி தூரம் கூட அது எட்டவில்லை நாயும் முன் போலத் துள்ளி ஓடவில்லை. தலையைத் திருப்பி அவனைக் குற்றம் சாட்டுவதுபோல் பார்த்துவிட்டு விந்திக்கொண்டே பந்தை நோக்கி நடந்தது. அது திரும்பி வரும்வரை அவனைக் கண்காணிப்பதற்காக ஆயாசத்தினால் சிவப்பேறிய தன்னுடைய கண்களைப் பூமியில் அங்கங்கே பதித்துவைத்ததுபோல் அதன் தடத்தில் ரத்தக்கறைகள் தெரிந்தன. தளர்ந்துவிட்ட நாய் திரும்புவதற்குள் தான்
186
துவிடலாம் என்ற ஆசையினால் பாட்டான். கால்கள் பெரும்,
முன்னைப்போல் ஒன்றிரண்டடிகள் என்று நட்டம் எட்டுப் பத்தடிகளாக நடந்துவிடலாம் என்ற , அவன் கால்களை எட்டிப்போட்டான். கால்கள் பாறைகளாகக் கனத்தன. தொடைச் சதைகள் - நொந்தன. பாதம் மரத்துச் சுரணையற்றிரும். அங்கங்கள் கிடுகிடுவென்று நடுங்கின. மிகவும் சிரமம்: அவன் இரண்டடிகள் நடக்கவும் நாய் மெதுவாகத் திரும்பி வந்து பந்தைச் சமர்ப்பிக்கவும் சரியாக இருந்தது. அவள் அழ ஆரம்பித்தான்.
" நீ பரவாயில்லை. அழுது கண்ணீர்விட்டு உன் மனப் பாரத்தைக் கரைத்துக்கொள்ளலாம். என்னால் அழக். கூட முடியவில்லையே. நான் இவளைக் காதலிக்கிறேன் என்று உரக்கக் கூவி உலகத்துக்கெல்லாம் பறைசாற்று, வேண்டுமென்று என் மனம் துடிக்கிறது. வாயைத். திறக்க முடியவில்லையே! இந்தச் சித்திரவதையை என்னால் இனியும் தாள முடியாது. நீ என்னை ஒதுக்கிவிடு. உன்னை நேசிக்கும் உன் கணவனுடனும் உன் மேல் உயிராயிருக்கும் உன் குழந்தைகளுடனும் இன்பமாக, என்னை மறந்துவிட்டு, வாழ்க்கையை நடத்திக்கொள். என்னால் உன்னை ஒதுக்கி மறக்க முடியாதென்றாலும், நீயாவது சந்தோஷமாக இரு. என்னைப்பற்றி நினைத்து வருந்தாதே. இத்தனை நாள்போல இனியும் எப்படியோ இருந்து கொள்கிறேன். என் மனச் சுமையை இறக்கிக் கொள்ள உன் மேல் மலையைச் சுயநலத்தால் ஏற்றிவிட்டிருக்கிறேன் என்பதை நான் இப்போது உணர்கிறேன். என்னை மறந்துவிடு. என்னைப்பற்றித் தாழ்வாக நினைக்காதே. இரக்கத்தோடும் கனிவோடும் நினைத்துக்கொள். என்னை நினைக்காதே. நாம் சந்தித்ததையும், பேசிக் களித்து இன்பமாய் அந்தரங்க ஆசைகளையும் அன்பையும் பரிமாறிக்கொண்டதையும் ஒரு கெட்ட கனவென்று உதறித் தள்ளி மறந்துவிடு. அன்று உன் வீட்டின் சூழ்நிலையில்
187
உன்னைப் பார்த்தபோதுதான் நான் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டேன் என்பது எனக்குப் புரிந்தது. எவ்வளவுதான் என் அக வாழ்வில் நிராசையும் சுகபங்கமும் இருந்தாலும் உன்னையும் அதில் சம்பந்தப்படுத்தியிருக்கக் கூடாது. உன்னிடம் வாய் திறந்து என்னை , என் மனத்தில் ஓராண்டுக்கும் மேலாக ஊறி வளர்ந்து வெடித்தெழுந்து கொண்டிருந்த அன்பை. ஆசையை, நேசத்தை வெளிக் காட்டாமல் இருந்திருந்தால் நீயாவது இந்தச் சித்திரவதை இல்லாமல் இருந்திருக்கலாமே ! நான் என்ன செய்வேன் ? என் மனப் பளுவைத் தாங்கி வாளாவிருக்க முடியவில்லையே! நீ என்னை மானம் மரியாதை உள்ளவனாகக் கருத வேண்டுமென்றால் என் உள்ளக் கிடக்கையை உன்னிடம் சொல்லித்தான் தீர வேண்டும் என்கிற மீற முடியாத மன நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது. வேறு விளைவுகளைப் பற்றி என்னால் யோசிக்கக்கூட முடியவில்லை. நேர்மையாக நடக்கிறேன் என்று நினைத்துக்கொண்டு உன்னிடம் என்னை வெளிப்படுத்திக்கொண்டுவிட்டேன். இப்போது நான் உலகத்துக்கெல்லாம் பொய்யாக, போலியாக நடக்க வேண்டியதாகிவிட்டிருக்கிறது. என்ன அவலம் ! நீ என்னை மறந்துவிடு. அதுதான் உனக்கு நல்லது. என்னைப் பற்றி யோசிக்காதே. அவன் அவள் கையைத் தொடப் போனான். அவள் திகிலுடன் கையைப் பின்னிழுத்துக் கொண்டாள். விரல்களால் முகத்தைப் பொத்திக்கொண்டாள். பச்சை நரம்புகள் கிளைவிட்டுப் படர்ந்திருந்த அவளுடைய புறங்கையைத்தான் அவன் கண்டான். அவள் முகத்தைக் காண முடியவில்லை. அவனுடைய இதயம் சுக்கு நூறாய் உடைந்து சிதறியது.
அவனுக்குத் தொண்டையும் நாவும் வறண்டு உப்புக் காகிதம் போல் உரசின. உதடுகள் உலர்ந்து வீங்கிக் கறுத்து வெடிக்க ஆரம்பித்துவிட்டிருந்தன. பந்தை எறிந்து எறிந்து
188
அவன் கைகள் கொப்புளித்துக் கிடந்தன. வேர்வையும் தூசியம் திட்டுத் திட்டாய்ப் படிந்து வீங்கி வலித்துக்கொண்டிருந்த தன் பாதங்களைப் பார்த்துக்கொண்டான். வலி குறை கெண்டைச் சதையைப் பிடித்துவிட்டுக்கொண்டான் . துருத்திபோல விலாவைப் பூரித்துக்கொண்டு, தொங்கிக் கிடந்த நாவிலிருந்து அருவியைப் பெருக்கிக்கொண்டு, மூச்சிரைக்க முன்னங்காலின் மேல் தலையைச் சாய்த்துப் படுத்தபடி சிவந்து பழுத்துக் கிடந்த கண்களால் தன்னைப் பார்த்தபடி இருந்த நாயையும் பார்த்தான். அவன் தன்னைக் கவனிப்பதைக் கண்டதும் அது நெற்றியை மடித்துச் சுருக்கி உதடுகளை அகற்றிப் பற்கள் சிறிதே தெரிய உறுமியது. உறுமுவதுபோல் கெஞ்சியதோ என்றும் நினைத்தான். அதன் பாதங்களில் சதை பாளமாகப் பெயர்ந்து ஈக்கள் மொய்த்துக்கொண்டிருந்தன. நகங்கள் சில பிளந்து முறிந்துவிட்டிருந்தன. அதன் வால் மாத்திரம் சில விநாடிகளுக்கொருமுறை மெல்ல அசைந்து தரையைத் தட்டிக் கொடுத்துக்கொண்டிருந்தது. என்ன இருந்தாலும் மனிதன் கேவலம் ஒரு நாய்க்குத் தோற்றுவிடுவதா என்று சொல்லிக் கொண்டான். இடுப்பை வளைக்காமல் மெதுவாக அப்படியே உட்கார்ந்தான். வெகு தொலைவில் தெரிந்த மரங்கள் தலையை ஆட்டி அவனை வாவாவென்றழைத்தன. வெயில் காந்தியது. . அவனருகே ஒரு பெருங்கல் இருந்ததைப் பார்த்தான். இரு கைகளாலும் முயற்சித்தால் அதைப் பூமியிலிருந்து பெயர்த்துவிடலாம். இன்னும் கொஞ்சம் சிரமப்பட்டால் அதைத் தலைக்கு மேலும் தூக்கி விடலாம் என்று அவனுக்குத் தோன்றியது. வெயில் தாகதில் தன்னைத் தடுத்து நிறுத்திவைத்துப் பாடுபடுத்திக் கொண்டிருக்கும் அந்த நாயைத் துரத்த முடியாத அவஸ்தையோடு உயிரை விடுவதைவிட, கல்லைத் தூக்கும் முயற்சியில் உயிர் போனாலும் பரவாயில்லை நினைத்தான். முழந்தாளைத் தரையில் ஊன்றி, இரு
189
கைகளாலும் அந்தச் சிறு பாறையைப் பற்றி, கொஞ்சங் கொஞ்சமாக அசைத்துக்கொடுத்தான். கைக் கொப்புளங்கள் வெடித்து அப்பாறையை நனைத்துக் கறைப்படுத்தியதை அவன் கவனிக்கவில்லை. வைர ஊசித் துணுக்குகள் போலிருந்த பொடி மணல் முழங்காலை ஊடுருவுவதையும் அவன் கவனிக்கவில்லை. அவனுடைய உடல் மனம் உயிர் அனைத்தும் அந்தக் கணம் அவன் செய்து கொண்டிருந்த காரியத்திலேயே ஒன்றிவிட்டிருந்தன. கொஞ்சம் இந்தப் பக்கம், இன்னும் கொஞ்சம் அந்தப் பக்கம், கொஞ்சம் முன்னால், கொஞ்சம் பின்னால், இன்னும் ஒரு சிறிய அசைப்பு என்பதிலேயே அவனுடைய கவனம் முழுதும் லயித்திருந்தது. குருதி கசியும் பாதங்களையும் அடி வயிற்றையும் நக்கிக்கொடுப்பதை நிறுத்தி விட்டு நாய் ஆச்சரியத்துடன் அவனை வேடிக்கை பார்த்திருந்ததையும் அவன் கவனிக்கவில்லை.
எனக்கு புத்தி பேதலித்துவிட்டதென்று நினைக்கிறேன். என்னை மறந்துவிடு என்று நானே உனக்குச் சொன்னேன். நான் சொன்னபடியே நீ செய்துவிட்டால் என்ன செய்வது என்று அன்றிலிருந்து இன்றுவரை நான் மனத்தில் உளைச்சலுற்று அவதிப்பட்ட பரம் வேதனை என்னுடைய ஜன்ம விரோதிக்கும் ஏற்படக்கூடாது ஆண்டவனே ! நான் சொன்னதையெல்லாம் பைத்தியத்தின் உளறல் என்று தள்ளிவிடு. உன் அன்பு என்றும் வற்றாத ஊற்றாய் என் உயிரை வளர்க்கட்டும். அதுவும் இல்லையானால் நான் என்ன செய்வேன்? பல வார்த்தைகளின் உண்மையான அர்த்தம் இப்போதுதான் எனக்கு விளங்குகிறது. அது சொற்களின் முழுப் பொருளை இப்போதுதான் நான் உணர் கிறேன். நடைப்பிணம் என்ற சொல்லின் முழுமையான உணர்ச்சி உருவத்தை நான் இப்போதுதான் தெரிந்து கொண்டேன். என்னுடைய வாக்கை ஏற்று நீ என்னை ஒதுக்கி
190
மறந்துவிடுவாயோ என்று நினைத்தவுடனே நான் அனுபவ பூர்வமாக நடைப்பிணமானேன். அன்பை அறியாத. வாழ்க்கைதான், அன்பை அளிக்கவும் பெறவும் பெறாத வாழ்வுதான் நடைப்பிணம் என்ற சொல்லின் விளக்கம் என்பதை நான் இப்போதுதான் அறிகிறேன். நமக்கு என்ன நேர்ந்தாலும் நேரட்டும். இந்த விநாடி உன்னோடு இருந்து ஓரிரு வார்த்தையாவது ஒளிவு மறைவின்றிப் பேசி மனங்கலக்க முடிகிறதே இதுவே எனக்குப் போதும். நீ என்னை நேசிக்கிறாய் என்ற நினைப்பே போதும். அதுவும் இல்லாவிட்டால் நான் என்ன ஆவது? அவன் பேசிக் கொண்டே போனான். கனிவால் மிதக்கும் கண்களுடன் அவள் அவனையே பார்துக்கொண்டிருந்தாள். அவள் விரல்கள் அவனுடைய கையை மெல்ல வருடிக் கொண்டிருந்தன.
கடைசியில் கல் புரண்டது. விலா வெடிக்கும்படியாக மூச்சைப்பிடித்து, தோள் முதுகு புஜத் தசைகளை முறுக்கிப் பிழிந்து அவன் கடைசிப் பிரயத்தனமாக முயற்சி செய்தபோது கல் புரண்டது. மந்திர ஜாலம்போல அதனடியில் ஈரப்பசையைக் கண்டான். அங்கே ஓராயிரம் உயிர்கள். வெள்ளையும் கருப்பும் சிவப்புமாய் எறும்புகள். வேறு பல வண்ணங்களில் வேறு பல பூச்சிகள் எல்லாம் இருந்தன. இரண்டு புழுக்கள்கூட நெளிந்து கொண்டிருந்தன. அந்தப் பாலைக்காட்டில் தன்னையும் நாயையும் தவிர வேறு உயிர் வர்க்கமே அங்கில்லை என நம்பிக் கவலையுற்றிருந்த அவனுக்குத் தன்னருகில் இத்தனை உயிர்கள் இருக்கின்றன என்ற விஷயம் மாபெரும் ஆச்சரியத்தை அளித்தது. அந்த ஜீவராசிகள் அலங்கோலமாக இங்குமங்கும் ஓடி ஒளிய முயல்வதைக் குந்தியபடியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். ரயில் என்ஜின்போல மூச்சு இரைத்துக்கொண்டிருந்த அவன், கல்லைப் புரட்டின சிரமம் தீரக் களைப்
191
பாற்றிக்கொள்ளும் வகையில் உட்கார்ந்தவாறே வேடிக்கை. பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு நாயைப் பார்த்தான். அந்த நாயின் மேல் அவனுக்கு இரக்கமாயிற்று. தீவிரக். கண்களோடும் அடர்ந்த பிடரிச் சடையோடும் இறுகிய தசைகளோடும் பருத்துக் குறுகிய கழுத்தோடும் ஆழ்ந்த மார்போடும் சாமரத்தைப் போன்ற வாலோடும் அச்ச மூட்டும் வகையில் துள்ளிக் குதிக்கும் சுறுசுறுப்போடும், இருந்த நாய் இப்போது எப்படியாகிவிட்டது என்பதைக் கண்டவிடத்து அவனுக்கு வியப்பும் துக்கமும் இரக்கமும் திருப்தியுமாக இருந்தது. இப்போது அது கேட்பாரற்றுக் கிழடான தெரு நாய் போலிருந்தது. அதன் உடம்பில் பல இடங்களில் உள்ளங்கை அகலத்துக்குத் திட்டுத் திட்டாய் மயிர் உதிர்ந்துவிட்டிருந்தது. காப்பிக்கொட்டை போன்ற உண்ணிகள் ஒட்டிக்கொண்டிருந்தன. அதன் கண்கள் குரங்கு குடித்துப்போட்ட குரும்பை போலிருந்தன . வயிறு ஒட்டி மார்பில் விலாவெலும்புகள் துருத்திக் கொண்டிருந்தன. வால்கூடப் பழந் துடைப்பம் போலாகி விட்டிருந்தது. தலையின் பாரத்தைத் தாங்க முடியாதது. போலக் கழுத்து சரிய முகத்தை முன்கால்களின்மேல் வைத்துப் படுத்துக்கொண்டிருந்தது. உமிழ்நீர் பெருகிக் கொண்டிருந்த நாக்கு, மண்ணில் புரளத் தொங்கிக்கொண்டி ருந்தது. நாய் எப்படி அதற்குள் இத்தனை கிழமாகியது. என்று ஆச்சரியப்பட்டான். மிஞ்சிப்போனால் ஒரு மணி நேரம்தானே ஆகியிருக்கும். அதற்குள்ளே இத்தனை மாற்றங்கள் எப்படி ஏற்பட முடியும் என்று அவனுக்குப் புரிய வில்லை. ஒருவேளை தனக்குத்தான் நேரம் போனதே, தெரியவில்லையோ என்று அவன் சந்தேகப்பட்டான். சூரியன் முன்பிருந்தபடிதானே இருக்கிறது. அதற்குள். எப்படி வருஷக்கணக்காகிவிட்டிருக்க முடியும் என்று அதிசயித்தான். அப்போது திடீரென்று அவனுக்கு ஒரு நினைப்பு
192
ஏற்பட்டது. இவ்வளவு நேரமாகத் தான் பாடுபட்டுக்கொண்டிருந்தபோதிலும் சூரியன் முன்பிருந்த இடத்தைவிட்டு நகராமல் அங்கேயே இருக்கிறது. நிழல்கள் நீளவுமில்லை குறுகவுமில்லை என்பதுதான் அந்நினைப்பு. உடனேயே, பந்தை வீசியபோதும், நாய் ஓடித் திரும்பி வந்தபோதும், அதன் பாதையில் கற்கள் உருண்டபோதும் அவன் பாறையைப் புரட்டியபோதும் ஆரம்பத்திலிருந்து தற்சமயம்வரை ஒருபோதும் ஒரு துளி சப்தமும் அவன் காதில் விழவில்லையே என்ற நினைப்பும் கூடவே உதித்தது. நாய் உறுமியபோது கூட அந்த உறுமல் சப்தத்தை அவன் கேட்டறிந்துகொள்ளவில்லை, ஊகித்துணர்ந்தான் என்பதையும் அவன் அப்போது நினைவுபடுத்திக்கொண்டான். மயிர்சிலிர்த்து உடல் நடுங்கினான். எலும்பினுள் ஊடுருவிப் பாய்ந்து உறைய வைக்கும் குளிர்போல பீதி அவன் உடலெங்கும் பரவி அவனை உலுக்கியது. இந்த அவல அனுபவம் ஒரு துர்சொப்பனம். இந்தப் பாறையைத் தூக்கி நாய்மீது நான் எறிந்தவுடன் இச் சொப்பனம் கலைந்துவிடும், என் நிஜ வாழ்க்கைக்கு நான் விழித்துக்கொள்வேன் என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். இந்தச் சொப்பனம் கலையாவிட்டால் தனக்குக் கதி மோட்சமே அற்றுப்போய் விடும் என்பதைப் புரிந்து கொண்டான். கல்லைத் தூக்கி எறிவதற்கு ஆயத்தமாகக் கைகளைத் தேய்த்துவிட்டுக் கொண்டான். அவனுடைய புறங் கைகள் எலும்பெடுத்துக் காரிகம் வந்தவன் கைகள் போலக் கறுத்துக் கிடந்ததைக் கண்டு திடுக்கிட்டான். புஜத்திலும் முன்கையிலும் தோல் சுருக்கமேறித் தசைகள் தொளதொளவென்று தொங்கிக்கொண்டிருந்தன. குனிந்து மார்பைப் பார்த் தான். அங்கும் முடிகள் நரைத்துச் சருமம் உலர்ந்து சுருக்கங்கள் பரவிக் கிடந்ததைக் கண்டான். எத்தனை காலம் கடத்திவிட்டோம். எத்தனை ஆண்டுகள் இந்தக் குறுகிய காலத்தினுள் அடைபட்டுச் செத்துவிட்டிருக்கின்றன. தனக்
193;
கும் நாய்க்கும் முதுமை ஏற்படும் வரையிலுமா இந்த வீசுபறி நடந்துகொண்டிருந்திருக்கிறது, இதற்குள் அந்த ஓடை வற்றிவிட்டிருக்குமோ என்றெல்லாம் நினைத்துக் கொண்டான். உடனேயே, இது ஒரு தீக்கனா, இனியும் காலத்தை ஓட்டக்கூடாது, காரியத்தை முடித்துவிட வேண்டும், இக்கனவிலிருந்து விழிக்க முடியும் என்ற பரபரப்பு ஏற்பட்டு அவனுக்குப் புத்துயிர் ஊட்டியது. கல்லைப் பார்த்தான். கருஞ் சாம்பல் நிறமாய்ச் சிறிதும் பளபளப்பில்லாமல் சொறசொறவென்றிருந்த பெருங் கருங்கல், சுமார் இருபது கிலோ எடை இருக்குமோ என்று தோன்றியது. கொஞ்சம் இளைப்பாற்றிக்கொண்டு பிறகு கல்லைத் தூக்கி நாயின் தலைமேல் போட்டு நாயையும் கனவையும் தொலைத்துவிடுகிறேன் என்று சொல்லிக்கொண்டான். நாயைப் பார்த்தான். அது அடிவயிற்றை நக்கிக்கொண்டிருந்தது .
முன்பொரு நாள் நீ வரக் கால தாமதமாகிவிட்ட போதும், வந்த பின்னும் உடனுக்குடனே போகவேண்டும் வீட்டில் கணவன் காத்திருப்பான் என்று சொல்லிப் போய் விட்டபோதும், எனக்கு எப்படிப்பட்ட துக்கம் பெருகியது தெரியுமா ? அதற்காக உன்னை நான் கோபிக்கவில்லை அப்படிக் கோபிக்கும் உரிமை எனக்கில்லையே என்று நான் வருந்தினேன். எந்நேரமும் எந்நாளும் உன்னோடேயே இருக்க வேண்டுமென்கிற பேராசை என்னைப் பிய்த்துத் தின்கிறதே. மாலையில் வேலை முடித்து நான் வீடு திரும்பும்போது அங்கே எனக்காக நீ காத்திருக்க வேண்டு மென்று ஆசைப்படுகிறேன். அவ்வாறில்லையே என்று அவதிப்படுகிறேன். காலையில் கண் விழிக்கும்போது உன் முகத்தைக் காண வேண்டுமென்று கொள்ளை விருப்பம் கொள்கிறேன். அவ்வாறில்லையே என்று கருத்தழிந்து போகிறேன். என்னை இந்நிலைக்கு ஆளாக்கிவிட்டாயே
194
என்று உன் மேல் கோபம் வருகிறது. நான் ஒரு முட்டாள். இந்த வயதில் இப்படியாகிவிட்டேன். உனக்கும் புத்தி வில்லையே ! என்னைப்போலவே பொறியிலகப்பட்டுக் கொண்டு விழிக்கிறாயே ! நீயாவது புத்திசாலியாக நடந்து என்னை ஆரம்பத்திலேயே பட்டந்தட்டி வைத்திருந்தால் சங்கடம் துக்கம் எல்லாம் என்னோடு நின்றிருக்கும். உன்னைப் பற்றியிருக்காது. என்னுடைய நல்ல காலம் , நீயும் என்னைப் போன்ற முட்டாளாய் இருக்கிறாய். கிடைத்த சில நிமிடங்களை இன்பமாகக் கழிக்காமல், உன்னைக் கண்டு பேசும்போதெல்லாம் கடலலைபோலச் சில நிமிஷங்களே நிலைக்கும் நமது சந்திப்புகளை எக்காலமும் மறக்க முடியாத அமர நினைவுகளாக ஆக்கி கொள்ளாமல் அழுது அழுது கழிக்கிறேனே ! என் அவலங்கள் என்னோடு என்றிராமல் உன்னையும் அதில் இழுத்துவிட்டு, சிரித்துப் பேசி உலவிக்கொண்டிருந்த உன்னை மெளனக் கண்ணீர் பெருக்கவைத்துவிட்டேனே என்பதை நினைத்துப்பார்க் கும்போது என்னால் தாள முடியவில்லை. நம் நிலையை நினைத்தால் நெஞ்சு வெடித்துவிடும் போலிருக்கிறது. இப்போதுதான் நெஞ்சு வெடிக்கிறது என்ற சொல் எந்த அனுபவத்தை உணர்த்துகிறது என்பதை அறிகிறேன். நெஞ்சில் ஈயக் குண்டை வைத்துத் தைத்ததுபோலக் கனமாகிறது. அங்கிருந்து உஷ்ணம் கிளம்பி உடலெங்கும் பரவுகிறது. பிறகு ஈயக் குண்டு பருத்துக்கொண்டே போய் மார்க்கூடு முழுவதையும் அடைத்துக்கொண்டுவிடுகிறது. மூச்சு முட்டுகிறது. இருதயம் படபடவென்று அடித்துக் கொள்கிறது. நெஞ்சு வலிக்கிறது. விரிந்து வெடித்து விடும் போலாகிறது. என்னை விட்டுப் பிரிந்துவிடு என்று சொல்லவும் நினைக்கவும்கூட எனக்கு மனம் வரவில்லை. நீயும் நானும் ஒன்றாகவும் வழியில்லையே. வழி இருக்கிறது. ஆனால் அதற்கு வேண்டிய ஈவிரக்கமற்ற தன்னலப் பிடிவாதம் இல்லை. ஒரு தவறும் செய்யாத குழந்தை
195
களைப் பலியாக்கி என் பசியைத் தீர்த்துக்கொள்ள விரும்ப வில்லை, அதே சமயம் நான்கு பேர் முன்னிலையில் நீ என் காதலுக்கு உரியவள் என்று சொல்ல வேண்டும், நடுத் தெருவில் நின்று கத்த வேண்டும் என்றும் ஆசை பொங்குகிறது. என்றைக்கும் நாம் சேர்ந்து வாழ முடியாதா ? அப்படியானால் உன்னிடம் ஒரு வரம் கேட்கிறேன், எனக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால் எனக்காக எல்லார் எதிரிலும் -அழுவாயா ? குழந்தை மிட்டாய் கேட்பது போல அவன் கெஞ்சிக் கேட்டான். அவள் தன் கையால் அவன் வாயைப் பொத்தினாள்.
அவன் கண்ணெதிரிலேயே நாய் கிழமாகிவிட்டிருந்தது. உடம்பில் முக்காலும் மயிரே இல்லை. எலும்பெடுத்து லேசாகச் சிவந்து வழுக்கையாயிருந்த அந்த நாயின் உருவம் அவனுக்குத் தாங்க முடியாத அருவருப்பை அளித்தது. தலை யைத் தடவிக்கொண்டான், தன்னுடைய தலையும் வழ வழவென்றிருந்தது தெரியத் திடுக்கிட்டான். மார்பில் கபம் நிறைந்து இருமல் தொடர்ந்து ஏற்பட, மிகவும் பிரயாசைப்பட்டுக் காறித் துப்பினான். அப்போது தான் தன் வாயில் பற்களே இல்லையென்பதை உணர்ந்தான். ஓ வென்று உரக்கக் கூவினான். அவன் வாயைத் திறந்து கூவியபோதும் கூச்சலின் ஓசை அவன் காதில் விழவே இல்லை. அவனைக் கிலி பிடித்து உலுக்கியது. நிசப்தப் பாலையில் நிராதரவாக யுகம் யுகமாகத் தவித்துக்கொண்டிருப்பதுபற்றி மனதுள் பொருமிப் பொருமி அழுதான். இது நிச்சயம் தீக்கனவு தான், நிஜமில்லை . நிஜமாக இருக்க முடியாது. அந்தக் கல்லை எப்படியாவது எடுத்து நாயின் தலையில் போட்டு அதை நசுக்கிவிட்டால் இக்கனவு கலைந்துவிடுவது உறுதி என்று தன்னைத் தேற்றிக்கொண்டான். பல்லில்லா ஈறு களை உரசிக் கொண்டான், பஞ்சடைந்த கண்களால் தனக்கு மன்ம வைரியாக வந்து வாய்த்திருந்த நாயுருவக் குரூபத்தை வெறுப்புடன் நோக்கினான். அதன் பின்கால்கள்
-
தொய்ந்து வலியிழந்து கிடப்பனபோலக் கால எலிவால்போல அம்மணமாயிருந்த அதன் வாலும் விழுந்து, கிடந்தது. நாயின் விலா இரைத்துக்கொண்டிருந்தபோதும், வயிறோ உடலின் பின்பகுதியோ ஆடவில்லை. நாம் உண்மை நிலையைப் பரிசோதிக்க, தன் அருகில் கீழே கிடந்த இருந்த பந்தை நாயின் பக்கமாக எறிந்தான். பந்து மெல்ல உருண்டு நாய்க்கு நாலடி இந்தப் பக்கமே நின்றது. நாயின் எச்சிலால் இன்னும் பளபளத்துக்கொண்டிருந்த பந்து மட்டும் ஒரு மாற்றமுமில்லாமல் முன்பிருந்தது போலவே இருந்ததை கண்டான். தன்னைச் சுற்றி நெருக்கி நசுக்கிக்கொண்டிருந்த. அருவங்களின் ஏளனச் சிரிப்பில் தெரியும் கோரைப் பல் அது என்று அவனுக்குத் தோன்றியது. அவன் உடல் சிலிர்த்து நடுங்கியது. முன் கால்களை ஊன்றி எழுந்திருக்க நாய் பிரயத்தனம் செய்தது. உடலின் முன்பகுதி மாத்திரம் சிறிது மேலெழும்பியதே தவிரப் பின்பகுதி தளர்ந்து கிடந்ததைக் கண்டான். முன்காலை ஊன்றி உடம்பைப் பின்னால் இழுத்துக்கொண்டு மிகவும் பிரயாசையுடன் இரண்டடி . நகர்ந்தபின் அம்முயற்சியைக் கைவிட்டு நாய் மீண்டும் படுத்துக்கொண்டது. தலையை முன்பாதங்களில் சாத்தி' வைத்தபடி பந்தின்மேல் வைத்த கண்ணை எடுக்காமலே அது படுத்திருந்தது. அந்த நாயால் இனிமேல் தன்னைத். தடுத்து நிறுத்த முடியாது என்பதைக் கண்டுகொண்ட அவன் மகிழ்ச்சிப் பெருக்கால் கண்ணீர்விட்டான். அதே சமயம் அதன் மேல் பாறையைப் போட்டு நசுக்குவதற்குள் அது இறந்துவிட்டால் என்ன செய்வது, ஒருவேளை சொப்பனம் கலையாது நிலைத்துவிடுமோ என அச்சமும் கொண்டான். வெளிச்சம் குறைந்து இருட்டிக்கொண்டுவந்தது. இருட்டிவிட்டால் நாயின் இருப்பிடம் தெரியாமல் போய் விடுமே, அதற்குள் கல்லைத் தூக்கி எறிந்துவிடவேண்டும்" மென்று பரபரப்புக் கொண்டான். அப்படிச் செய்தால் கனவை அழித்துவிடலாம். இது கனவில்லாமல் நிஜ அனுப
197
வமாக இருந்தால் தனக்கு உயிரையும் வாழ்வையும் அளிக்கப் போகும் ஓடையின் வழியை மறித்து நின்றிருக்கும் நாயை அழித்துவிடலாம் என்று ஆனந்தித்தான். மூச்சைப் பிடித்து இரு கைகளாலும் அப்பாறையை அணைத்தபடி பிடித்து முழங்கால்களைத் தரையில் ஊன்றி அப்பாறையோடு எழுந்திருக்க முயன்றான். முழங்கால்கள் தரையில் ஊன்ற வில்லை. அவன் திகிலுடன் கால்களை நோக்கினான். அவை சூம்பியிருந்தது அவனுடைய மங்கலான பார்வைக்கும் தெரிந்தது. பீதி மேலுறக் கால் விரல்களை மேலும் கீழும் மடக்கினான். கடைக்குட்டி விரல்கூட அசைய வில்லை. பாறையைக் கட்டிப்பிடித்தபடியே உரக்க அழ முடியவில்லையே என்று மெளனமாக அழுதான். அவன் கண்ணீர் அப்பாறையில் சிந்திச் சிதறிப் பரவியது.
நான் மிகவும் ஈனமானவன் என்று மாத்திரம் நீ நினைத்துவிடாதே. நான் பெண்களோடு விளையாடுபவனோ அவர்களை உபயோகித்துக்கொள்பவனோ அல்லன். அப்படிப்பட்டவனாக இருந்திருந்தால் எனக்கு இம்மாதிரித் துக்கம் ஏற்பட்டிராது. எத்தனையோ பேர் இருக்க உன்னை ஏன் தேர்ந்தெடுத்தேன் என்று கேட்கிறாயே. என்ன விசித்திரம் ! நான் என்ன சுயம்வரம் நடத்தியா அவள் வேண்டாம் இவள் வேண்டாம் என்று தேர்ந்தெடுத்தேன். எல்லாம் உன் காரியம் தான். நீதான் மெல்ல மெல்ல என் இதயத்தில் குடி புகுந்தாய். கொஞ்சம் கொஞ்சமாக உன் இடத்தை விஸ்தரித்துக்கொண்டு உன் வசமாக்கிக்கொண்டாய். கடைசியில் இதயம் பூராவையும் ஆக்கிரமித்துக்கொண்டாய். என்னுடைய மன நிலையை நான் உன்னிடம் உடனே சொல்லிவிடவுமில்லை. தகாது என்று மிகவும் பயந்தேன். பல மாதங்கள் இதயத்தையும் மனத்தையும் அடக்கி மூடிப் பூட்டிவைத்திருந்தேன். ஆனால் ஒரு நிலைக்குமேல் என்
198
னால் அப்படி இருக்க முடியவில்லை . நீ என் உண்மை நிலை அறியாமல் இருக்கும்போது நீ எதிர்பாரா வண்ணம் நீ எதிர்பாராத போது என் மனக் காவல் மீறி உன்னிடம் முறைகேடாக நடந்துகொண்டுவேனோ என்று மிகவும் பயப்பட வேண்டியதாகிவிட்டது அப்படியாகியிருந்தால் நீ என்னைப்பற்றி என்ன நினைப்பாய் என்பதைக் கற்பனை செய்து பார்த்தபோது என்னால் தாளவில்லை. அப்போதுதான் என்னை உரித்துக் காட்டி விட்டேன். நான் சாமானிய மனிதன். நான் என்னவோ மகா உத்தமன் சீரியன் போலிருந்தாலும் யோகியல்ல. புலன்களை அவித்துவிட்ட ஞானியுமல்ல. வெறும் மனிதன் தான். என் பெயரை உன் முன்னிலையில் காப்பாற்றிக் கொள்ளும் சுயநலத்தைக் கருதி உன்னைப் பலியாக்கிவிட்டுப் பரிதவிக்கும் வெளிப்பூச்சுக்காரன். என்னை மன்னித்துவிடு. என்னைப்பற்றி நீ நினைக்கும்போது இனிமையான எண்ணங்களைக் காதலுடன், அது முடியாவிட்டால், கனிவுடன் இரக்கத்துடன் நினை. உன் இன்பம் தான் என் இன்பம். பலவீனங்கள் பல நிறைந்த வெறும் மனிதன் நான் என் பாதை மறந்துவிடாதே. உன்மேல் அடக்க முடியாத ஆசை வைத்து, அடக்க முடியாது அழிக்கவும் முடியாது திண் 2? திக்குமுக்காடித் தவித்துக்கொண்டிருக்கும் பாவி நீ என்றான். நானுந்தான் என்று அவள் மெல்லிய குரலில் சொன்னாள். அவள் கண்களிலிருந்து நீர் வழிந்துகொண்டிருந்தது. அவன் அவளை வாரி அணைத்துக்கொண்டான். புன்முறுவலுக்கிடையே கண்ணீரை உகுத்து . அவள் அவன்மேல் ஒட்டிக்கொண்டாள்.
னால் அப்படி இருக்க முடியவில்லை . நீ என் உண்மை நிலை அறியாமல் இருக்கும்போது நீ எதிர்பாரா வண்ணம் நீ எதிர்பாராத போது என் மனக் காவல் மீறி உன்னிடம் முறைகேடாக நடந்துகொண்டுவேனோ என்று மிகவும் பயப்பட வேண்டியதாகிவிட்டது அப்படியாகியிருந்தால் நீ என்னைப்பற்றி என்ன நினைப்பாய் என்பதைக் கற்பனை செய்து பார்த்தபோது என்னால் தாளவில்லை. அப்போதுதான் என்னை உரித்துக் காட்டி விட்டேன். நான் சாமானிய மனிதன். நான் என்னவோ மகா உத்தமன் சீரியன் போலிருந்தாலும் யோகியல்ல. புலன்களை அவித்துவிட்ட ஞானியுமல்ல. வெறும் மனிதன் தான். என் பெயரை உன் முன்னிலையில் காப்பாற்றிக் கொள்ளும் சுயநலத்தைக் கருதி உன்னைப் பலியாக்கிவிட்டுப் பரிதவிக்கும் வெளிப்பூச்சுக்காரன். என்னை மன்னித்துவிடு. என்னைப்பற்றி நீ நினைக்கும்போது இனிமையான எண்ணங்களைக் காதலுடன், அது முடியாவிட்டால், கனிவுடன் இரக்கத்துடன் நினை. உன் இன்பம் தான் என் இன்பம். பலவீனங்கள் பல நிறைந்த வெறும் மனிதன் நான் என் பாதை மறந்துவிடாதே. உன்மேல் அடக்க முடியாத ஆசை வைத்து, அடக்க முடியாது அழிக்கவும் முடியாது திண் 2? திக்குமுக்காடித் தவித்துக்கொண்டிருக்கும் பாவி நீ என்றான். நானுந்தான் என்று அவள் மெல்லிய குரலில் சொன்னாள். அவள் கண்களிலிருந்து நீர் வழிந்துகொண்டிருந்தது. அவன் அவளை வாரி அணைத்துக்கொண்டான். புன்முறுவலுக்கிடையே கண்ணீரை உகுத்து . அவள் அவன்மேல் ஒட்டிக்கொண்டாள்.
சதங்கை , ஜனவரி - 1975
https://tamil.thehindu.com/opinion/columns/article25786751.ece
ஹரி சீனிவாசன்: பெருநோய்த் தடமழித்த பெருந்தகை
தமிழ்நாடு பெருமை கொள்ள வேண்டிய மருத்துவ ஆளுமைகளில் ஒருவர் அவர். ஆனால், மருத்துவர் ஹரி சீனிவாசன் என்ற பெயர் தமிழ்நாட்டில் பரிச்சயமான பெயர் அல்ல. அவருடைய மற்றொரு பரிமாணமான ‘எழுத்தாளர் சார்வாகன்’ அறியப்பட்டிருந்த அளவுக்குக்கூட ஹரி சீனிவாசனின் மருத்துவ சேவை வெளிச்சத்துக்கு வந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால், அவருடைய சொந்த ஊரான, ஆரணியின் மக்களுக்குக்கூட அவருடைய அருமை பெருமைகள் தெரியாது. சார்வாகனின் எழுத்துகளைப் படித்த வாசகர்களிலும் பெரும்பாலானோருக்கு அவர் ஒரு மருத்துவர் என்ற விவரம் தெரியாது.
யார் இந்த ஹரி சீனிவாசன்?
சரி, யார் இந்த ஹரி சீனிவாசன்? மருத்துவர் ஹரி சீனிவாசன் அப்படி என்ன செய்துவிட்டார்? இந்த விநோத மனிதர் கிட்டத்தட்ட 65 ஆண்டுகளைத் தொழுநோய் சிகிச்சைக்காக அர்ப்பணித்திருந்தவர். உலகின் தலைசிறந்த கை, கால் விரல்கள் சீரமைப்பு அறுவைச் சிகிச்சை வல்லுநராகத் திகழ்ந்தவர். தொழுநோயிலிருந்து குணமடைந்த பின்னரும் மடங்கிய விரல்கள் நேராகாமல், உணர்ச்சி திரும்பாமல், செயலற்ற நிலையில் இருக்கும் விரல்களுக்கு அவர் கண்டுபிடித்த அறுவைச் சிகிச்சை முறை பலருக்குப் புத்துயிர் கொடுத்து இயங்க வைத்தது.
இப்புதிய கர சீரமைப்பு அறுவைச் சிகிச்சை முறைக்கு ஐநா சபையின் அங்கமான உலக சுகாதார அமைப்பு ‘சீனிவாசன் முறை’ (SRINIVASAN TECHNIQUE) என்று அவரது பெயரையே சூட்டியது. உலக சுகாதார மையத்தின் சார்பாக உலகெங்கும் தொழுநோய் அறுவைச் சிகிச்சை முகாம்கள் நடத்தி ஆயிரக்கணக்கானவர்களின் தொழுநோய்க் கறைகளைத் துடைத்தழித்தவர் ஹரி சீனிவாசன்.
இளமைக் காலம்
ஹரி சீனிவாசன் (1929-2015) அன்றைய வடாற்காடு மாவட்டத்தில் ஆரணி நகரில் பள்ளியிறுதி வரை முடித்துவிட்டு, சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றார். பிறகு, இங்கிலாந்தில் இரண்டு எஃப்ஆர்சிஎஸ் (FRCS) பட்டங்களை முடித்தார். இரட்டை எஃப்ஆர்சிஎஸ் பட்டங்களுடன் ஓர் அறுவைச் சிகிச்சை மருத்துவர் வெளிநாட்டு மருத்துவமனைகளில் பணியாற்றச் சென்றிருந்தால் கோடிக்கணக்கில் பணம் ஈட்டியிருக்க முடியும். ஆனால், சென்னையில் மருத்துவம் பயின்றுகொண்டிருந்தபோதே அவருக்குச் சில தீர்மானங்கள் ஏற்பட்டிருந்தன.
அவருடைய திட்டங்கள் தெளிவாக இருந்தன. முதலாவது, இந்தியாவில் மட்டுமே பணிபுரிவது. இரண்டாவது, மிக முக்கியமானது. மருத்துவம் என்பது சேவை. சிகிச்சைக்காக நோயாளியிடம் பணம் வாங்கக் கூடாது. அரசுப் பணியில் கிடைக்கும் ஊதியத்தை மட்டுமே சார்ந்திருக்க வேண்டும். இந்த இரண்டு தீர்மானங்களையும் அவரால் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க முடிந்தது வியப்பானதல்ல. அதற்குரிய பின்னணியும் அவருக்கு இருந்தது.
காந்திய – கம்யூனிஸக் கலவை
ஹரி சீனிவாசனின் தந்தை மருத்துவர் ஹரிஹரன், ஆரணியின் முதல் ஆங்கில மருத்துவர். சீரிய காந்தியவாதி. ஹரி சீனிவாசனும் காந்தியால் ஈர்க்கப்பட்டவர், மார்க்ஸால் செழுமையடைந்தவர். இங்கிலாந்தில் படிக்கும்போது அவர் வாசித்த கம்யூனிஸ நூல்களால் ஈர்க்கப்பட்டு, பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியில் (CPGB) உறுப்பினராகவும் சேர்ந்திருக்கிறார் ஹரி சீனிவாசன். தன்னுடைய தாய்வழிப் பாட்டனாரிடம் கற்றறிந்துகொண்ட இந்தியத் தத்துவ மரபுகளோடு காந்தியமும் கம்யூனிஸமும் ஒன்றுகலந்து அவருடைய ஆளுமையை வடிவமைத்திருக்கின்றன.
இந்தியா திரும்பிய ஹரி சீனிவாசன் முதலில் முட நீக்கியல் வல்லுநராகவே தனது பணியைத் தொடங்கியிருக்கிறார். 1960-ல் மங்களூர் கஸ்தூரிபாய் மருத்துவமனையில் பணியாற்றும்போது தொழுநோயிலிருந்து மீண்ட அப்துல்லா என்பவரின் கரங்களில் ஒரு பிரத்யேக முறையில் முயன்ற சீரமைப்பு அறுவைச் சிகிச்சை வியக்கத்தக்க வெற்றியைக் கண்டது. அதுதான் ‘சீனிவாசன் முறை’ என்று பின்னர் புகழ்பெற்றது. இக்கண்டுபிடிப்புக்குப் பிறகு, செங்கல்பட்டு தொழுநோய் மருத்துவமனையில் பணிக்குச் சேர்ந்து, அதன் இயக்குநராக உயர்ந்து 1984-ல் அவர் பணி ஓய்வுபெற்றார்.
அதன் பிறகு, பல்வேறு நாடுகளின் மருத்துவக் கழகங்களிலும், உலக சுகாதார அமைப்பின் சார்பாக வருகைதரு பேராசிரியராகவும், எண்ணற்ற மருத்துவ முகாம்களை நெறிப்படுத்துபவராகவும் பணியாற்றிவிட்டு, தனது எண்பதாவது வயதில் முழுமையாக ஓய்வெடுத்துக்கொண்டு பெங்களூருவிலும் சென்னையிலும் தன் இரு புதல்வியரோடு வசித்து வந்தவர், சென்னையில் 2015 டிசம்பர் 21-ல் அர்த்தம் மிகுந்த தன் வாழ்வை நிறைவு செய்துகொண்டார்.
எழுத்தாளரும் மருத்துவரும்
சார்வாகன் என்ற புனைபெயரில் கணிசமான சிறுகதைகளை எழுதி, நவீனத் தமிழிலக்கியத்துக்கு வளம் சேர்த்த இவர் சுயசரிதையை எழுதவில்லை என்பது நமக்கு ஒரு பேரிழப்பு. ஒரு ஆச்சரியம் என்னவென்றால், சார்வாகனின் எந்தவொரு கதையிலும் தொழுநோயாளர்களோ, அவர்களுடனான அனுபவங்களோ வந்ததில்லை. இதைப் பற்றி ஒரு நேர்காணலில் கேட்கப்பட்டபோது அவர் சொன்ன பதில்: “அவர்கள் என்னை நம்பிச் சொன்ன அந்தரங்கங்களை நான் எப்படிப் பகிரங்கப்படுத்துவேன்? எனக்கு எழுத வெளியே நிறைய கதைகள் இருக்கின்றன.”
பெரும் செல்வம் ஈட்டக்கூடிய வாய்ப்புகளை உதறித் தள்ளிவிட்டு, தொழுநோய் சிகிச்சைக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டதைப் பற்றி அவரிடம் வாழ்நாள் முழுக்கப் பல தரப்பிலிருந்தும் கேள்விகள் எழுப்பப்பட்டு வந்திருக்கின்றன. அவற்றிற்குப் பதில் அளிக்கும் விதமாக மருத்துவர்களுக்கான தனிச்சுற்று ஆங்கில இதழ் ஒன்றில் தனது வாழ்நாளின் இறுதியில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். தன்னுடைய ஆரம்ப கால ஆர்வங்கள், லட்சியங்கள், மருத்துவக் கல்லூரி அனுபவங்கள், பணியாற்றிய பல்வேறு மருத்துவமனை அனுபவங்கள், பொருளீட்டல் குறித்த அவரது பார்வை என விரிந்த அக்கட்டுரையில் அவர் சொல்கிறார்.
எழுத்தாளர் சொற்களில் மருத்துவர் வாழ்க்கை
“மருத்துவ மேற்படிப்பு மாணவன் ஒருவன் என்னிடம் ‘மற்ற எல்லாத் துறைகளையும் விடுத்து இந்தத் தொழுநோய் மீது ஏன் இவ்வளவு பிரியம்?” என்று கேட்டான். “பிரியமா? உலகத்திலேயே நான் அதிகம் வெறுப்பது தொழுநோயைத்தான். அதனால்தான் அதை ஒழிக்க வேண்டும் என்று இத்துறையைத் தேர்ந்தெடுத்தேன்.”
“மங்களூரில் பணியாற்றும்போதுதான் யதேச்சையாக தொழுநோய் சிகிச்சையின்பால் என் கவனம் திரும்பியது. தொழுநோயிலிருந்து குணமான ஒருவரை சக மருத்துவர் அழைத்து வந்து மடங்கிப்போன அவர் விரல்களைச் சரியாக்க இயலுமா என்று கேட்டார். இவ்வகை சீரமைப்பு அறுவைச் சிகிச்சைகளைச் செய்துவந்த ஆங்கிலேய மருத்துவர் ஒருவர், இங்கிலாந்தில் என் கல்லூரியில் பணிபுரிந்துவந்தார்.
அவரைத் தொடர்புகொண்டு அந்தச் சிகிச்சை முறை பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை வாங்கிப் படித்தேன். அந்த அறுவைச் சிகிச்சை முறையினால் விரல்களை நேராக்க முடியுமே தவிர, செயலாற்றலைத் திரும்ப வரவழைப்பதாக இல்லை. எனவே, நரம்பு மண்டலம், எலும்புகளை ஒருங்கிணைத்து ஒரு புதிய அறுவைச் சிகிச்சை முறையை முயன்று பார்த்தேன்.
மிகவும் சிக்கலான செயல்முறைகளைக்கொண்ட சிகிச்சை அது. அதிர்ஷ்டவசமாக அது வெற்றிகரமாக அமைந்துவிட்டது. மருத்துவராக என் வாழ்க்கையை மட்டுமல்ல, உலகெங்கும் லட்சக்கணக்கான தொழுநோயாளிகளின் வாழ்க்கையையும் இந்தக் கண்டுபிடிப்பு மாற்றப்போகிறது என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை. இந்த அறுவைச் சிகிச்சை முறைக்கு என்னுடைய பெயரையே டபிள்யுஹெச்ஓ (WHO) சூட்டுமென்றும் எதிர்பார்க்கவில்லை.”
“என் வாழ்க்கையின் உன்னதமான தருணம் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரமோ, சர்வதேச மகாத்மா காந்தி விருதோ, பத்மஸ்ரீ விருதோ அல்ல. பல வருடங்களாகத் தன்னுடைய குடும்பத்தினராலேயே ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த தொழுநோயாளிப் பெண்மணி ஒருவர், என்னுடைய அறுவைச் சிகிச்சை மூலம் குணமான பிறகு, தன் கையால் பின்னிய ஒரு பூத்தையல் மேசை விரிப்பைப் பரிசளித்தார். நான் போற்றிப் பாதுகாக்கும் மிகவும் மகத்தான பரிசு அதுதான்!”
“1980-களில் பிரேஸில் நாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் இருந்த மனாவ்ஸ் என்ற சிற்றூருக்கு டபிள்யுஹெச்ஓ குழுவோடு சென்றிருந்தேன். அங்கே தொழுநோய் மருத்துவமனை ஒன்று இருந்தது. அங்கிருந்த நோயாளிகளைப் பரிசோதித்துக்கொண்டிருந்தபோது, மருத்துவர் ஒருவர் தொலைவில் நின்றிருந்த ஒரு பெண்மணியைச் சுட்டிக்காட்டி, ‘அவர் உங்களைப் பார்க்க வேண்டும் என்று துடித்துக்கொண்டிருக்கிறார்’ என்றார்.
‘இங்கிருப்பவர்களுக்கு உங்களுடைய அறுவைச் சிகிச்சை மூலமாகத்தான் சிகிச்சையளிக்கிறோம். பத்து வருடங்களாகச் செயலிழந்திருந்த இந்தப் பெண்ணின் கை,கால்கள் சிகிச்சைக்குப் பிறகு சரியாகியிருக்கின்றன. அதற்குக் காரணமான உங்களுக்கு அவர் நன்றி சொல்ல வேண்டுமாம்’ என்றார்.
அந்தப் பெண்ணிடம் சென்றேன். நான் அருகில் வந்ததும் அந்தப் பெண்ணுக்குச் சன்னதம் பிடித்ததைப் போல ஆகிவிட்டது. எனக்குச் சற்றும் புரியாத போர்ச்சுகீசிய மொழியில் என்னென்னவோ பேசினார், கை,கால்களை ஆட்டிக்காட்டினார், என்னைக் கட்டிப்பிடித்தார், என் உடம்பு முழுக்கத் தடவிக்கொடுத்தபடி பாதி அழுகையும் பாதி சிரிப்புமாக ஏதேதோ பிதற்றினார். தென்னிந்தியாவில் ஏதோவொரு மூலையில், ஆரணி என்ற சிற்றூரில் வளர்ந்த ஒருவனிடம், ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள கண்டத்தில் வசிக்கும் பெண்மணி ஒருவர் தனது வாழ்க்கையை மீட்டெடுத்துத் தந்துவிட்டதாகச் சொல்லி ஆனந்தக் கூத்தாடி நெகிழ்ந்துகொண்டிருக்கிறார். இதைவிடப் பெரிய விருது எனக்கென்ன வேண்டும்? நான் சரியான வாழ்க்கையைத்தான் வாழ்ந்திருக்கிறேன் என்று அப்போதுதான் உணர்ந்தேன்.”
சுயநலமற்ற சேவைக்கான உதாரணம்
காந்தி தொழுநோயாளிகளைப் பற்றி சொன்ன வார்த்தைகளோடு ஹரி சீனிவாசனின் வார்த்தைகளைப் பொருத்திப்பார்த்தால், அவருடைய பணி எவ்வளவு பெரிய சேவை என்பது விளங்கும். “தொழுநோயாளர்களுக்குச் சேவை புரிவதென்பது வெறும் மருத்துவ உதவி மட்டுமல்ல. அது வாழ்க்கையின் மீதிருந்த விரக்தியை அர்ப்பணிப்போடும் மகிழ்ச்சியோடும் புரிகின்ற சேவையாக மாற்றுவது; தனிப்பட்ட குறிக்கோள்களைச் சுயநலமில்லாத சேவையாக மாற்றுவது.”
காந்தி ஒருவேளை இன்னும் கொஞ்ச காலம் கூடுதலாக வாழ்ந்திருந்தால், தனது சொற்களின் மனித வடிவை நேரில் கண்டிருப்பார். நிச்சயம் அதன் பெயர் ஹரி சீனிவாசன் என்றே இருந்திருக்கும்!
- ஜி.குப்புசாமி, மொழிபெயர்ப்பாளர்,
தொடர்புக்கு: gkuppuswamy62@yahoo.com
டிசம்பர் - 21 ஹரி சீனிவாசன் நினைவுநாள்