தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்து காலத்தால் அழிக்கமுடியாதவை சிலவற்றை இங்கே இந்த இடத்தில் தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (TShrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Friday, November 18, 2016

கறுப்பு ஆடு / இடாலோ கால்வினோ / தமிழில் : பாலகுமார் விஜயராமன்


கறுப்பு ஆடு / இடாலோ கால்வினோ
 / தமிழில் : பாலகுமார் விஜயராமன்)
Nov. 17 2016, இதழ் 
http://malaigal.com/?p=9478

ஒரு நாட்டில் அனைவரும் திருடர்களாக இருந்தனர்.

இரவில், ஒவ்வொருவரும் பல பூட்டுகளைத் திறக்கும் போலி சாவிகளுடனும், ஒளி குறைத்த லாந்தர் விளக்குகளுடனும் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி, பக்கத்து வீட்டில் களவாடுவர். களவாடிய பொருட்களை சுமந்தபடி விடியலில் அவர்கள் தங்கள் வீட்டிற்குத் திரும்பும் போது, தங்கள் வீட்டிலும் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை உணர்வார்கள்.

ஒருவர் அடுத்தவரிடம், அடுத்தவர் அதற்கு அடுத்தவரிடம், அவர் இன்னொருவரிடம், அப்படியே சென்று கடைசி ஆள் முதல் ஆளிடம் என்று மாற்றி மாற்றி திருடிக் கொண்டிருந்ததால், யாருக்கும் எந்த இழப்புமில்லை. எனவே, அனைவரும் மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும் வாழ்ந்தனர். நாட்டில் நடக்கும் வியாபாரங்களில் வாங்குபவர், விற்பவர் என்று இரண்டு தரப்புமே பரஸ்பரம் ஏமாற்றிக் கொள்வது தவிர்க்க முடியாததாக இருந்தது. அரசாங்கம் தன் குடிமக்களிடமிருந்து திருடும் ஒரு குற்றவியல் நிறுவனமாகவும், பதிலுக்கு குடிமக்கள் தங்கள் பங்குக்கு, அரசாங்கத்தை ஏமாற்ற விருப்பம் கொண்டவர்களாகவுமே இருந்தனர். இவ்வாறு வாழ்க்கை மிக சுமூகமாக சென்று கொண்டிருந்தது. அந்நாட்டில் யாரும் பணக்காரரும் இல்லை, ஏழையும் இல்லை.

ஒருநாள், எவ்வாறு என்று தெரியவில்லை, ஒரு நேர்மையான மனிதன் அந்த இடத்தில் வந்து வசிக்க நேர்ந்தது. இரவில், தனது சாக்குப்பையையும், லாந்தர் விளக்கையும் தூக்கிக் கொண்டு திருடச் செல்லாமல், அவன் தனது வீட்டிலேயே தங்கி புகைத்துக் கொண்டும், புதினம் வாசித்துக் கொண்டுமிருந்தான்.

திருடர்கள் வந்தார்கள், அவன் வீட்டில் விளக்கு எரிவதைக் கண்டு, உள்ளே வராமல் சென்றுவிட்டார்கள்.

இப்படியே சில நாட்கள் சென்றன. எனவே இது பற்றி அவனிடம் விளக்கமளிக்க அவர்களுக்கு நிர்பந்தம் ஏற்பட்டது. அவன் எதுவும் செய்யாமல் வாழலாம் என்று விரும்பினாலும், அவன் மற்றவர்களை தாங்கள் செய்யும் வேலையைத் தடுப்பதற்கு எந்த உரிமையுமில்லை என்று கூறினர். அவன் தன் வீட்டில் தங்கியிருக்கும் ஒவ்வொரு இரவும், ஏதோவொரு குடும்பத்திற்கு அடுத்த நாளுக்கான உணவு இருக்காது என்று விளக்கினர்.

நேர்மையானவனால் அவர்களின் இந்த விளக்கத்தை ஆட்சேபிக்க முடியவில்லை. எனவே அவனும் மாலை தன் வீட்டை விட்டு வெளியேறி மறுகாலை காலை வீடு திரும்பினான். ஆனால் அவன் யாரிடமும் திருடவில்லை. அவன் தூரத்தில் இருந்த ஆற்றுப்பாலம் வரை சென்று, அங்கே நீர் விழுந்து செல்வதை பார்த்துக் கொண்டிருந்தான். விடிகாலை வீட்டை அடைந்த போது, அவன் வீடும் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை உணர்ந்தான்.

ஒரு வாரத்திற்குள்ளாகவே, நேர்மையானவனிடம் சல்லிக்காசு கூட இல்லை, அவன் உண்பதற்கு எதுவுமில்லை, அவன் வீடு காலியாகிக் கிடந்தது. அது அவனது தவறு தான் என்பதால் அது ஒரு பிரச்சனையாய் இருக்கவில்லை. ஆனால் உண்மையான பிரச்சனை என்னவென்றால் அவனது இந்த செயல் மற்ற அனைவரையும் எரிச்சலடையச் செய்தது. ஏனென்றால், அவன் தன்னிடமிருந்த அனைத்தையும் மற்றவர்களை திருடவிட்டு விட்டு தான் மட்டும் யாரிடமும் எதுவும் திருடாமல் இருந்தான். எனவே தினமும் அதிகாலை அந்த நேர்மையானவன் திருடியிருக்க வேண்டிய, யாரோ ஒருவருடைய வீடு கொள்ளையடிக்கப்படாமல் அப்படியே இருந்தது. இதே செயல் சில நாட்கள் தொடர்ந்தபின், தங்கள் வீடு திருடப்படாமல் இருந்தவர்கள் தங்களை மற்றவர்களை விட பணக்காரர்களாக உணர்ந்தனர். எனவே அவர்கள் அதன்பிறகு திருட வேண்டாம் என்று நினைத்தனர். இதை விட மோசம் என்னவென்றால், நேர்மையானவன் வீட்டில் திருட வந்தவர்கள், காலியாய் கிடக்கும் வீட்டையே எப்போதும் கண்டு ஏமாந்தனர். எனவே அவர்கள் ஏழைகளாகினர்.

அதே சமயம், பணக்காரர்களாக ஆனவர்கள் அந்த நேர்மையானவனைப் போலவே, இரவு நேரங்களில் தூரத்தில் இருக்கும் ஆற்றுப்பாலத்திற்குச் சென்று நீர் விழுவதை பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர். இதனால் இன்னும் பலர் பணக்காரர்களாகவும், பலர் ஏழைகளாகவும் ஆக, குழப்பம் மேலும் அதிகரித்தது.

இப்பொழுது பணக்காரர்கள், தினமும் இரவு ஆற்றுப்பாலத்திற்குச் சென்றால், தாங்களும் விரைவில் ஏழைகளாகி விடுவோம் என்று உணர்ந்தனர். ”நாம் ஏழைகள் சிலருக்கு பணம் கொடுத்து, நமக்காக சென்று திருடச்சொல்லலாம்” என்று முடிவெடுத்தனர். அவர்கள் ஒப்பந்தங்கள், நிலையான ஊதியம், சதவீதங்கள் என்று செய்து கொண்டனர். பணக்காரர்கள், ஏழைகள் என்று எப்படி இருந்தாலும் அவர்கள் அனைவரும் திருடர்கள் தானே, எனவே இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் ஏமாற்ற முயற்சி செய்து கொண்டே இருந்தனர். ஆனால் இயல்பில், பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் ஆகிக் கொண்டே சென்றனர்.

இனி தாங்கள் திருடத் தேவையே இல்லை அல்லது தங்களுக்காக இன்னொருவரை நியமித்து திருட வைக்கத் தேவையில்லை என்ற அளவுக்கு, சில பணக்காரர்கள் மிக அதிகமான செல்வத்தை வைத்திருக்கும் நிலை வந்தது. ஆனால் அவர்கள் திருடுவதை நிறுத்திவிட்டால், அவர்களிடமிருப்பதை ஏழைகள் திருடத்துவங்கி தாங்கள் ஏழைகளாகி விடுவோம் என்று எண்ணினர். எனவே ஏழையிலும் பரம ஏழையாய் இருக்கும் சிலருக்குப் பணம் கொடுத்து வேலைக்கு நியமித்து, மற்ற ஏழைகளிடமிருந்து தங்கள் சொத்துக்களை காத்துக் கொள்ளத் துவங்கினர். அதாவது காவல்துறையையும், சிறைச்சாலைகளையும் அமைத்தனர்.

எனவே, நேர்மையான மனிதன் வந்து சில வருடங்களுக்குள்ளாகவே, அந்நாட்டிலுள்ள மக்கள் கொள்ளை அடிப்பது பற்றியோ கொள்ள போவது பற்றியோ பேசிக்கொள்வதே இல்லை, ஆனால் பணக்காரர்களைப் பற்றியும், ஏழைகளைப் பற்றியும் பேசிக் கொண்டனர். ஆனால் மக்கள் அனைவரும் இன்னும் திருடர்களாகத் தான் இருந்தார்கள்.

துவக்கத்திலிருந்த ஒரே நேர்மையான மனிதன், வெகு விரைவிலேயே பசியால் இறந்து போனான்.

******