அசோகமித்திரன் குறித்து சாரு உரை – 24.10.2015

24.10.2015 அன்று பனுவல் அரங்கில் அசோகமித்திரன் குறித்து நான் பேசிய இந்த உரையைத் தட்டச்சு செய்து உதவிய நண்பர் அருள் வில்லியம்ஸுக்கு நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன்.  மேலும், இதையெல்லாம் ஒருங்கிணைத்துச் செயல்படுத்தும் டாக்டர் ஸ்ரீராம் இல்லாவிட்டால் இது எதுவுமே நடக்க சாத்தியமில்லை.  வாசகர் வட்ட நண்பர்கள் மாதம் ஒருமுறை சந்தித்துப் பேசாவிட்டாலும் இது போன்ற ஆக்கபூர்வமான பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. 
*** 

பொதுவாக கூட்டங்களுக்கு முதல் ஆளாகப் போய்விடுவேன். அழகிய பெரியவன் கதைகள் குறித்த விமர்சனக் கூட்டத்தில் பேச அழைத்தபொழுது, ஐந்தரை மணி கூட்டத்துக்கு ஐந்து மணிக்கே போய் உட்கார்ந்து விட்டேன். இந்த முறை, சரியாக கூட்டம் ஆரம்பிக்கும்போது போகலாம் என்று திட்டமிட்டேன்; ஆனால், போக்குவரத்து நெரிசலில் மாட்டிகொண்டேன். திருவான்மியூர் சிக்னலிலேயே நான் வந்த ஆட்டோ கால்மணி நேரம் நின்று விட்டது. பிறகு, ஆட்டோவிலிருந்து இறங்கி நடந்து வந்துகொண்டிருந்தேன். பிறகு பார்த்தால், நான் வந்த ஆட்டோ என்னை முந்திக் கொண்டு சென்றது. ஆனால், ஆட்டோக்காரர் ரொம்ப நல்லவர். நிறுத்தி, என்னை அழைத்து, இங்கே இறக்கி விட்டுவிட்டுச் சென்றார், அதுவும் காசு வாங்காமல். தாமதத்திற்கு மன்னிக்கவும். இன்றுதான் நான் தாமதமாகச் சென்ற முதல் கூட்டம்.
ஒரு செவ்வாய்க்கிழமை அன்று, அசோகமித்திரன் பற்றிய ஆவணப்படம் – அம்ஷன் குமார் எடுத்தது – திரையிடல் என்று அழகியசிங்கர் சொன்னார். நான் பொதுவாக, இதுபோன்ற இலக்கியக் கூட்டங்கள், ஆவணப்படங்களின் திரையிடல் போன்றவற்றிற்குப் போவது கிடையாது. எந்த எழுத்தாளரையும் சென்று சந்திப்பதும் கிடையாது. அது என்னிடம் உள்ள ஒரு குறைபாடுதான். காரணம் என்னவென்று தெரியவில்லை. நான் ஒரு recluse என்பது காரணமாக இருக்கலாம்.  ஒரு கூட்டுக்குள் இருப்பது மாதிரி. ஆனால், அன்றையதினம், அந்த ஆவணப்படத்தைக் காணச் செல்கிறேன்  என்று நான் சொன்னதும், அவந்திகா என்னை ஆச்சரியமாகப் பார்த்தாள். ஏனென்றால் அன்று செவ்வாயக்கிழமை.  ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை மாலை நான்கு மணி முதல் நான் வீட்டுச் சிறையில் இருப்பேன்.  எங்கேயும் போக முடியாது. வாராவாரம் செவ்வாய் அன்று எங்கள் வீட்டு மாடியில் ஓர் ஆன்மீக வகுப்பு நடக்கும்.  இருபது முப்பது பேர் வருவார்கள்.  அவந்திகாதான் ஒருங்கிணைப்பாளர்.  ஆன்மீக வகுப்பு என்றால் என் பையன் தப்பி ஓடிவிடுவான். நானும் அப்படி ஓடி விடுகின்ற ஆள்தான்.  ஆனால் பப்பு, ஸோரோ என்ற இரண்டு நாய்கள் இருக்கின்றன. ஒரு நாய் அஞ்சு அடி நீளம். நிமிர்ந்து நின்றால் எட்டு, ஒன்பது அடி உயரம். இன்னொரு நாய் சிங்கம் மாதிரி இருக்கும்.  ஆக, இந்த இரண்டு நாய்களையும் ஒரு அறையில் போட்டு பதுக்கி நான் காபந்து பண்ணியாக வேண்டும்.   இல்லையானால் வீட்டுக்கு வருபவர்கள் பயந்துவிடுவார்கள். அவர்கள் அந்த நாய்களைப் பார்க்காமல் இருப்பதே உசிதம்.  பார்த்தால் அடுத்த வகுப்புக்கு வரத் தயங்குவார்கள்.  அந்த மாதிரி நிலைமை  இருக்கும் போது நான் சொன்னேன், கண்டிப்பாகப் போகவேண்டும் என்று.  ”ஏசியைப்  போட்டு அறையில் அடைத்துவிட்டால், நாய்கள் பாட்டுக்கு நான்கு மணி நேரம் இருக்கும், கவலைப்படாதே” என்றேன்.

“என்னப்பா செவ்வாய்க்கிழமை போறியே, ரொம்ப ஆச்சிரியமா இருக்கு! பொதுவா செவ்வாய்க்கிழமை எங்கயுமே போக மாட்டியே,” என்றாள் அவந்திகா. ரொம்ப ஆச்சர்யம் அவளுக்கு.  ஒரே வார்த்தைதான் சொன்னேன், “அசோகமித்திரன் என்னுடைய மாதா, பிதா, குரு, தெய்வம். அதனால் நான் போயே ஆக வேண்டும்.”
அன்றைய தினம் எனக்குக் கடைசி வரிசையில்தான் இடம் கிடைத்தது.  படம் பார்த்தேன்.  நன்றாக இருந்தது.  அம்ஷன் குமார் இயக்கிய அந்த ஆவணப் படம் நாம் எல்லோரும் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு படம்.  அம்ஷன் எனக்கு முப்பது நாற்பது ஆண்டுக் கால நண்பராக இருந்தாலும் அசோகமித்திரன் பற்றிய அவரது ஆவணப்படம் மீது ஒரு நம்பிக்கை இல்லாமலேதான் போனேன்.  ஏனென்றால், தமிழில் எந்த எழுத்தாளரைப் பற்றியும் ஒரு நல்ல ஆவணப் படத்தை அதுவரை நான் பார்த்தது இல்லை.  ஆனால் என் அவநம்பிக்கையை எல்லாம் மீறி ரொம்ப பிரமாதமாக இருந்தது அம்ஷனின் ஆவணப்படம்.   அசோகமித்திரனப் பற்றி ஒரு அற்புதமான document அது. நாம் அவசியம் பார்க்க வேண்டிய படம் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் அந்தப் படத்தை எடுத்துச் செல்ல வேண்டும்.  ஆனால் அம்ஷன் குமாரின் படத்துக்கு அடுத்தபடியாக ஞானகூத்தனைப் பற்றிய ஒரு ஆக மட்டமான ஆவணப்படம் ஒன்றைப் பார்த்தேன்.  ஞானக்கூத்தனுக்கு இழைக்கப்பட்ட அநீதி அது.   அதைப் பார்ப்பதே பெரும் சித்ரவதையாக இருந்தது.  கையில் ஒரு கேமரா கிடைத்து விட்டால் கவிஞனை இழுத்துக் கொண்டு வந்து அதற்கு முன்னே நிறுத்தி விடக் கூடாது.  எனவே இப்படிப்பட்ட சூழலில் எதுவும் பேச முடியாமல் படம் முடிந்ததுமே நழுவி ஓடி வந்து விட்டேன்.
எப்போதுமே அசோகமித்திரனைப் பற்றிப் பேசுவதும் படிப்பதும்  சந்தோஷமான விஷயம்.  நமது கால கட்டத்தின் மாபெரும் துயரத்தையே அவர் தொடர்ந்து எழுதிக் கொண்டு இருந்தாலும் Pleasure of the Text என்று சொல்வதைப் போலே – ஷேக்ஸ்பியரின் துயர காவியங்களைப் படித்து நாம் கண்ணீர் சிந்தினாலும் எப்படி அது இலக்கிய இன்பத்தை அளிக்கிறதோ அதைப்போலவேதான் அசோகமித்திரனின் துயரம் தோய்ந்த எழுத்துக்களும்  வாசகருக்கு மிகப் பெரிய இலக்கிய இன்பத்தைத் தந்து கொண்டே இருக்கிறது.  அவரைப் பற்றிப் பேசுவது, அவரைப் பற்றி எழுதுவது எல்லாமே இன்பமானதுதான்.  அவரைப் பாராட்டக் கூடிய பல எழுத்தாளர்களை நான் பார்த்திருக்கிறேன்.  இப்போது நான் தினமணி இணைய இதழில் நம் முன்னோடி எழுத்தாளர்களைப் பற்றி பழுப்பு நிறப் பக்கங்கள் என்ற தொடரை எழுதிக் கொண்டிருக்கிறேன்.  அதில் அசோகமித்திரனைப் பற்றி “அவரைப் போன்ற ஒரு எழுத்தாளர் உலக அளவிலேயே மிகவும் கம்மி.  ஒன்று இரண்டு பேர் தான் இருப்பார்கள்” என்று எழுதினேன்.  போகிற போக்கில் தட்டி விட்ட வார்த்தை இல்லை அது.  மிகவும் யோசித்தே அப்படி எழுதினேன்.  பிறகுதான் தெரிந்தது, வண்ணநிலவனும் அதையேதான் எழுதியிருந்தார்.  இதோ அதைப் படித்துக் காண்பிக்கிறேன்.  “பொதுவாக, அசோகமித்திரனின் பதினெட்டாவது அட்சக்கோடு தான் அவரது சிறந்த நாவல் என்பார்கள். ஆனால் என்னைப் பொருத்தவரை அவரது கரைந்த நிழல்களும் தண்ணீரும்தான்  அவரது ஒப்பற்ற – ஏன், நவீன தமிழ் இலக்கியத்திலேயே ஒப்பற்ற – அமர சிருஷ்டி என்பேன்.  எனக்குத் தெரிந்த வரை உலக இலக்கியத்தில் – குறிப்பாக ஐரோப்பிய, லத்தின் அமெரிக்க இலக்கியத்தில்தான் – இது போன்ற படைப்புகள் தென்படுகின்றன.  ரஷ்ய இலக்கியத்தில் இது போல் கதை சொல்பவர்கள் குப்ரினும் செகாவ்வும் என்று சொல்லலாம்.   அசோகமித்திரனைப் போல் இவ்வளவு இறுக்கமாக உணர்ச்சிகளையும் சம்பவங்களையும் பின்னிப் பின்னி கதை எழுதும் படைப்பாளி வேறு எந்த இந்திய மொழியிலும் இருக்கிறாரா என்றே தெரியவில்லை;  இருக்க சாத்தியம் இல்லை என்றே என் உள்ளுணர்வு கூறுகிறது.  இந்த பாஷையும் இந்த தேசமும் பெருமை கொள்ளத்தக்க இலக்கியகர்த்தா அசோகமித்திரன்” என்று வண்ணநிலவன் எழுதியிருக்கிறார்.  இதையெல்லாம் படிக்கும் போது ’அசோகமித்திரன் பற்றி நாம் ஒன்றும் உயர்வுநவிற்சியாகச் சொல்லி விடவில்லை; நம்மைப் போல் நினைப்பவர்களும் இருக்கிறார்கள்’ என்று தைரியம் அடைந்தேன்.   அசோகமித்திரனைப் பற்றி தினமணியில் நான் எழுதிய இரண்டு வாரம் கழித்து, தமிழ் இந்து நாளிதழில் ஜெயமோகன், “அசோகமித்திரன் அளவுக்கு நவீனத்துவத்தின் அதிகபட்ச உச்சபட்ச வெளிப்பாடு உலக இலக்கியத்திலேயே கம்மி. எனக்கு தெரிந்து இல்லை”, என்று எழுதிருந்தார்.  ஆகவே,  இப்படிப் பல எழுத்தாளர்களால்  ஒன்றே போல் சிலாகிக்கப் படுகின்றார் அசோகமித்திரன்.  ஆனால் நான் இங்கே பேச நினைத்த ஒரே  விஷயம், இவ்வளவெல்லாம் சிலாகித்தாலும் ஒரு விஷயம் எனக்கு ரொம்ப வருத்தத்தையே உண்டு பண்ணிக்கொண்டிருக்கிறது.  என்னவென்றால், அசோகமித்திரன் உப்பு,புளி மிளகாய் விஷயம், பணம் இல்லை, துணி இல்லை, இடம் இல்லை, தண்ணீர் இல்லை என்பது மாதிரியான இல்லாமைகளை, லெளகீக விஷயங்களை மட்டுமே எழுதுகிறார் என்று பலரும் எழுதுகிறார்கள்.  அசோகமித்திரன் அளவுக்கு எழுதக் கூடிய ஆள் உலகத்திலேயே இல்லை என்று சொல்பவர்கள் கூட  அவர் ’உப்பு புளி மிளகாய்’ பற்றியே எழுதினார் என்கிறார்கள்.  வண்ணநிலவன் மட்டுமே விதிவிலக்கு.  உதாரணமாக ஒரு பேட்டி… அசோகமித்திரனிடம் கேட்கப்பட்ட கேள்வி இது: “உங்கள் கதைகள் அசலான அனுபவங்களின் அடிப்படையில் நீங்கள் சந்தித்த, உங்களுடனே வாழ்ந்த அந்த அசலான மனிதர்களைப் பாத்திரங்களாகக் கொண்டு உருவாக்கப் பட்டிருக்கின்றன.  அந்த அனுபவம் இலக்கியமாகும் போது ஒரு மாற்றம் நிகழ வேண்டும் என்று சொல்லப்படுகிறது. (யார் சொல்வது என்றால், பேட்டி காண்பவர் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.) அது போன்ற மாற்றங்கள் உங்கள் படைப்புகளில் நிகழ்ந்திருக்கின்றனவா?” அதாவது, அப்படி நிகழவில்லை என்பதுதான் கேள்வி கேட்பவரின் உட்கிடக்கை.  இங்கே ஒரு சம்பவத்தைச் சொல்லி விட்டு மேலே போகிறேன்.  நான் யாரையெல்லாம் மிக உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றுகிறேனோ அம்மாதிரி ஆளுமைகளை நேரில் போய் சந்திக்க மாட்டேன்.  அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை.  அப்படித்தான் லா.ச.ரா.வைப் பார்க்காமலே போனேன்.  அப்படித்தான் தி.ஜா.வையும் சந்திக்காமலே போனேன்.    அதிலும் தி.ஜா. விஷயம் ரொம்பக் கொடுமை.  நான் தில்லியில்  1978 முதல் 1990 வரை வேலை பார்த்தேன்.  அந்தப் பனிரண்டு ஆண்டுகளில் இரண்டு மூன்று ஆண்டுகள் தி.ஜா. வேலை ஓய்வு பெறும் வரை கர்ஸன் ரோட்டில் இருந்தார்.  அந்தக் கர்ஸன் ரோட்டின் இப்போதைய பெயர் கஸ்தூர்பா காந்தி மார்க்.   அந்த ரோட்டில் தான் நான் வேலை பார்த்த சிவில் சப்ளைஸ் அலுவலகம் இருந்தது.  அதற்குப் பக்கத்தில் ஒரு பிரும்மாண்டமான அடுக்குமாடிக் குடியிருப்பு.  அரசாங்க உயர் அதிகாரிகளுக்கானது.  அங்கேதான் தி.ஜா.வின் வீடு இருந்தது.
இருந்தும் ஒரு நாள்கூட போய்ப் பார்த்தது இல்லை. ஒரே ஒரு நாள் வெங்கட் சாமிநாதனோடு போனேன். அவ்வளவுதான்.  தில்லியில் இருந்த க.நா.சு.வையும் பார்த்ததில்லை.  தில்லியில் இருந்த இந்திரா பார்த்தசாரதியையும் பார்த்ததில்லை.   தில்லியில் இருந்த – எனக்கு ரொம்பப் பிடித்த ஆதவனையும் பார்த்ததில்லை.  எல்லோரையும் ஓரிரு முறை இலக்கியக் கூட்டங்களில் பார்த்ததோடு சரி.  என்னவோ தெரியவில்லை.  அப்படி ஒரு ஒதுங்கும் குணம்.  இப்போது சமீபத்தில்தான் இதைக் கொஞ்சம் மாற்றிக் கொள்ளலாம், எழுத்தாளர்களை சந்திக்கலாம், முன்பு போல் இருக்கக் கூடாது என்று நினைக்க ஆரம்பித்திருக்கிறேன்.  எனவே இதுவரை எதையெல்லாம் செய்யவில்லையோ அதையெல்லாம் செய்து கொண்டு, இதுவரை எதையெல்லாம் செய்து வந்தேனோ அதையெல்லாம் விட்டு விட்டு இருந்து கொண்டிருந்த போது ஒருநாள் அசோகமித்திரனைப் போய்ப் பார்த்தேன்.  ”என்ன எழுதிட்டு இருக்கீங்க?” என்று கேட்டு கொண்டே அசோகமித்திரன் எழுந்து வந்த போது அவர் கொஞ்சம் தடுமாறியதால் அவர் கையைப் பிடிக்கப் போன போது,  ”இருங்க இருங்க… உங்களுக்கே ஒரு எழுபது வயசிருக்கும்… நீங்க எப்படி?” என்று கேட்டார்.  ’அடடா… என்ன இது… இப்படிப் போட்டுத் தாக்கி விட்டாரே’ என்று நினைத்துக் கொண்டேன்.  ஏனென்றால், அவர் என்னைப் பார்த்து அத்தனைக் காலம் ஆகியிருந்தது.  ஒரு  இருபது இருபத்தைந்து வருடங்கள் இருக்கும்.   பிறகு தொடர்ந்து, “உங்களுக்கும் வயசாகுதுல்ல?” என்றார்.   இல்லை சார், அறுபத்து இரண்டு தான் ஆகுது” என்றேன்.  ”அப்புறம்… என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?” என்றார் மறுபடியும்.   நான் ”இந்த மாதிரி பழுப்பு நிறப் பக்கங்கள்னு சொல்லி பழைய எழுத்தாளர்களையெல்லாம் பத்தி எழுதிட்டு இருக்கேன். உங்களைப் பத்தியும் எழுதினேன்…” என்றேன்.  ”என்ன எழுதுனிங்க?” என்றார்.  ”இந்த மாதிரி மாத பிதா குரு தெய்வம்னு எழுதுனேன். வேற என்ன?” என்று சொன்னதும் அதிர்ச்சி ஆகி விட்டார்.   அவருக்குப் பாராட்டு என்றால் பிடிக்காது.  ஒரு பேட்டியில் ஒரு எழுத்தாளர் ”உங்களுடைய பெண்கள் எல்லாம் சக்தியின் வடிவமாக இருக்கிறார்கள்” என்று சொன்னதும் அசோகமித்திரன், ”ஏதாவது உளறாதீங்க. பேட்டி போறும்” என்று சொல்லிப் பேட்டியை முடித்து விட்டார்.   இதை ஒரு உதாரணத்துக்குச் சொன்னேன்.  அவருக்குப் பாராட்டு என்றால் பிடிக்காது.  அப்படிப்பட்டவரிடம் மாதா பிதா குரு தெய்வம் என்று சொன்னதும் முகத்தைச் சுளித்துக் கொண்டு, ”அப்படியெல்லாம் சொல்லப்படாதே” என்றார்.  ”ஏன் சார்?” என்றேன்.  ”ஏன்னா நீங்க பொய் சொல்றீங்கன்னு சொல்வாங்க” என்றார்.
”அது மட்டும் இல்லை. உலக அளவிலேயே உங்களை மாதிரி ஒரு எழுத்தாளர் கிடையாதுன்னு சொல்லி ஒரு ரெண்டு மூணு வாரம் தொடர்ந்து எழுதுனேன்” என்றேன்.   மறுபடியும் என்னை முறைத்தார்.  உடனே நான், “சார், நான் மட்டும் இல்லை. ஜெயமோகனும் இதையேதான் நான் எழுதியதற்கு மறு வாரம் ஹிண்டுல எழுதினார்” என்றேன்.  உடனே அவர்,  ”நீங்க ரெண்டு பேரும் தாயாதிங்களாச்சே?” என்றார்.  எனவே அவருக்குப் பாராட்டு என்றால் பிடிக்காது.  உதாரணமாக நீங்கள் போய் அசோகமித்திரனிடம் ”நீங்கள் எழுதியதெல்லாம் ஒண்ணுமே இல்லை, வீண்”  என்று சொன்னால் ”அப்படியா? நானும் அதேதான் நினைக்கிறேன்” என்று சொல்வார்.
நான் எழுதி அப்போது வெளிவந்திருந்த ஒன்பது புத்தகங்களை எடுத்துக் கொண்டு போயிருந்தேன்.  அதில் எல்லாவற்றிலும் அவர் கையெழுத்துப் போட்டு கொடுத்துக் கொண்டிருக்கும் போது கரைந்த நிழல்கள் என்று வந்ததா, ”இது மோசமான புஸ்தகமாச்சே?” என்றார்.  அவர் அப்படிச் சொல்வதையெல்லாம் நாம் கணக்கிலேயே எடுக்கக் கூடாது.  அதெல்லாம் ஒரு அதீதமான ஒரு தன்னடக்கம்.  Self effacing.
நான் அசோகமித்திரனிடம் கேட்டேன், ”தண்ணீர் உட்பட உங்களுடைய எல்லா நாவல்களும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.  நல்ல தரமான மொழிபெயர்ப்பு வேறு.  ஆனால் நாம் இப்போது கார்ஸியா மார்க்கேஸ், மரியோ பர்கஸ் யோசா, ஓரான் பாமுக், இதாலோ கால்வினோ, மிலன் குந்தேரா, யுவான் ரூல்ஃபோ – யுவான் ரூல்ஃபோ எல்லாம் மார்க்கேஸுக்கும் முன்னால் எழுதியவர் –  இப்படி உலகில் உள்ள எல்லா எழுத்தாளர்களின் படைப்புகளையும் மொழிபெயர்ப்பில் படித்துக் கதறிக் கொண்டிருக்கிறோம்.  உலகில் எந்த எழுத்தாளரின் பெயரை வேண்டுமானாலும் சொல்லுங்கள், அவருடைய மொழிபெயர்ப்பு தமிழில் கிடைக்கிறது.   இப்படி நாம் உலக எழுத்தாளர்களையெல்லாம் படித்துக் கொண்டும் விவாதித்துக் கொண்டிரும் இருக்கும் போது உங்களுடைய படைப்புகளைப் பற்றி ஏன் வெளிநாட்டுக்காரர்கள் பேசவில்லை?  ஐரோப்பாவிலோ, அமெரிக்காவிலோ லத்தீன் அமெரிக்க நாடுகளிலோ ஏன் உங்கள் எழுத்து பற்றி விவாதிக்கப்படவில்லை?  உங்களுக்கு ஏதாவது காரணம் தெரிகிறதா?”
அதற்கு அசோகமித்திரன் சொன்னார்:  ”மேற்கத்திய இலக்கிய canon-க்குள் அப்படி penetrate பண்றது ரொம்ப கஷ்டம். படிக்க மாட்டா…”
அவர் சொன்னதன் சுருக்கம் இதுதான்.  அதையே விரித்து விலாவாரியாகச் சொன்னார்.  உலக இலக்கியம் ஒரு சமுத்திரத்தைப் போல.  ஆயிரக் கணக்கான எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்.   அந்த சமுத்திரத்தில் நாம் ஏதோ ஒரு மூலையில் இருக்கிறோம்.
அசோகமித்திரனின் இந்த பதிலில் எனக்குத் திருப்தி இல்லை.  ஏனென்றால், அப்படிப்பட்ட சமுத்திரத்தில்தானே நான் மேலே குறிப்பிட்ட எழுத்தாளர்களும் இருக்கிறார்கள்.  ஸெர்பியாவிலேயே அத்தனை பிரபலமில்லாத மிலோராத் பாவிச்சை நாம் படிக்கிறோமே?  நாம் மட்டுமில்லை.  மலையாளிகள் படிக்கிறார்கள்.  வங்காளிகள், கன்னடியர்கள், மராத்தியர் எல்லோரும் படிக்கிறார்கள்.  ஆனால் அசோகமித்திரன் ஏன் வெளியில் பேசப்படவில்லை?  ஏன் இதே கேள்வியை நான் மீண்டும் மீண்டும் கேட்கிறேன் என்றால், தண்ணீர் நாவலைப் படிக்கிற போது
எனக்குள் ஒரு பரவசம் வந்து தொற்றுகிறது… ஒரு ஆஹாகாரம்… அப்படியே ஜிவ்வென்று வானத்தில் பறக்கிறாற் போலே இருக்கு…  இப்படி ஒரு எழுத்தாளரா!   இப்படி ஒரு எழுத்தாளரோடா நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்!  திரும்பத் திரும்ப இந்தக் கேள்விகளை நான் கேட்டுக் கொள்கிறேன்.   ஆகவே, நண்பர்களே, அவரிடம் வந்து நீங்கள் ஒரு கேள்வி கேட்டால் அதைக் கேட்கும் போது நீங்கள் எந்த மனநிலையில் இருக்கிறீர்களோ அதற்குத் தகுந்த மாதிரிதான் அவர் பதில் சொல்வார்.  அவரிடம் போய் ”அசலான மனிதர்கள் பற்றி… உங்களோடு வாழ்ந்தவர்கள் பற்றியெல்லாம் எழுதினீர்கள்.  அது இலக்கியமாக மாறியதா?” என்று கேட்டால் ”அதையெல்லாம் நான் யோசிக்கவில்லை.  என் கதைகள் எல்லாமே எனக்குத் தெரிந்த மனிதர்களுக்கு நான் செலுத்தும் அஞ்சலி. அவ்வளவுதான்” என்றுதான் சொல்வார்.  வேறு எப்படிச் சொல்வார் என்று எதிர்பார்க்கிறீர்கள்?  என் எழுத்து சர்வதேசத் தரம் வாய்ந்தது என்று என்னைப் போலவோ ஜெயமோகனைப் போலவோ பேசக் கூடியவரா அசோகமித்திரன்?  நெவர்.   ஆனால் அதே பதிலில் “என்ன பெரிய மகா இலக்கியம்?” என்றும் கோபமாகக் கேட்கத்தான் செய்கிறார்.  அந்தக் கோபம் கேள்வி கேட்ட சிகாமணிகள் மீதான கோபம் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  தொடர்ந்து எனக்குத் தெரிந்த மனிதர்கள் என்று சொல்லி ஆர்.கே.  நாராயணின் சகோதரரைப் பற்றி எழுதியிருக்கேன், இவரைப் பற்றி எழுதியிருக்கேன், அவரைப் பற்றி எழுதியிருக்கேன் என்று சொல்லி விட்டு ”மகா இலக்கியம் படிப்பதற்கு நிறைய ஆட்கள்  இருக்கிறார்கள்; இப்படி எழுதுவதற்குத்தான் ஆள் இல்லை. எனக்கு இது போதும்” என்று முடிக்கிறார்.  அடுத்த கேள்வி, ”நீங்கள் எழுதத் தொடங்கிய காலம் மிகவும் நெருக்கடியான காலகட்டம்.   அடிப்படைத் தேவைகளுக்காகப் போராடிக்கொண்டிருந்த சமூகம்.  இதைதான் நீங்கள் உங்கள் படைப்புகளில் வெளிப்படுத்துகிறீர்கள் எனக் கருத முடிகிறது.”   இதற்கும் முந்தின கேள்விக்குப் பதில் அளித்த விதமாகவே பதில் சொல்கிறார்.
நீங்கள் தண்ணீர் நாவலைப் படித்துப் பார்த்தீர்கள் என்றால் அதில் சொல்லப்பட்டிருப்பது அத்தனையும் இப்போதும் அப்படியேதான்  இருக்கிறது; எந்த மாற்றமும் இல்லை, முன்னேற்றமும் இல்லை என்பதைக் கண்டு கொள்வீர்கள்.  அந்த நேர்காணலைச் செய்தவர்கள் சாதாரண நிருபர்கள் அல்ல; தமிழின் முக்கியமான கவிஞரான சுகுமாரனும்,   முன்னணி  எழுத்தாளரான தேவி பாரதியும்.  இவர்கள்தான் அசோகமித்திரனிடம் அப்படிப்பட்ட கேவலமான கேள்வியைக் கேட்டவர்கள்.  கிட்டத்தட்ட நாற்பது ஆண்டு காலமாக அசோகமித்திரனை ஒரு மூன்றாந்தர எழுத்தாளராகவும், வணிக எழுத்தாளராகவும், உப்பு புளி மிளகாய் எழுத்தாளராகவும் நிறுவ முயன்ற சுந்தர ராமசாமி கோஷ்டியைச் சேர்ந்தவர்களே இந்த இரண்டு பேரும்.  இந்தப் பின்னணியிலிருந்தே இவர்களின் நோக்கத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.  உலகின் தலை சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராகப் போற்றப்பட வேண்டிய ஒருவரை இப்படிக் கீழ்மைப்படுத்தும் சூழலில்தான் நான் ஒரு பைத்தியக்காரனைப் போல் புலம்பிக் கொண்டே இருக்கிறேன், எழுத்தாளனைக் கொண்டாடுங்கள் என்று.  அதற்காக நான் வாங்கிக் கட்டிக் கொள்ளும் வசைகளும் கிண்டல் பேச்சுக்களும் ஏராளம்.  ’எழுத்தாளனைக் கொண்டாடுவதா?  எப்படி?  யானையில் உட்கார வைத்து ஊர்வலம் விட வேண்டுமா?’ என்று கேட்கிறார்கள் மூடர்கள். அப்படி இல்லை நண்பர்களே!  எழுத்தாளனை இப்படியெல்லாம் அவமானப்படுத்தாமல் இருந்தாலே போதும்.
அவர்கள் அசோகமித்திரனிடம் கேட்ட அடுத்த கேள்வி இன்னும் கேவலமானது.
”இருபது வருடங்களுக்கு மேலாக கணையாழியின் ஆசிரியராக இருந்தீர்கள். ஒழுங்காகப் பார்சல் கட்டுவதைத் தவிர நீங்கள் செய்த வேறு பங்களிப்பு என்ன?”
ஆனால் அசோகமித்திரனிடம் உள்ள விசேஷம் என்னவென்றால், இதை அவர் அவமானப்படுத்துவதாக எடுத்துக் கொள்ளவில்லை.   ஏனென்றால், அந்தக் கேள்விக்கு அவருடைய பதில்  ரொம்பவும் சீரியஸாக இருக்கிறது.  அதாவது, ”கணையாழிக்கு எல்லோரும் கதை அனுப்புவாங்க.  அதையெல்லாம் நான் proof  பார்ப்பேன்; எடிட் பண்ணுவேன்” என்கிறார்.  இன்னும் விரிவாக பதில் சொல்கிறார்.  ஒரு இலக்கியப் பத்திரிகைக்கு இருபது ஆண்டுகள் ஆசிரியராக இருந்த ஒருவரைப் பார்த்து பார்சல் பண்ணியதைத் தவிர வேறு என்ன செய்தீர்கள் என்று கேட்கிறார்கள்; கணையாழியில் இருபது ஆண்டு காலம் அசோகமித்திரன் அதற்கு அனுப்பப்பட்ட கதைகள், கவிதைகளுக்கெல்லாம் பதில் எழுதினார்.  அந்த இரண்டு பேர்வழிகளும் காலச்சுவடுவுக்கு ஆசிரியராக இருந்த சுந்தர ராமசாமியிடம் போய் நீங்கள் பார்சல் கட்டியதைத் தவிர வேறு என்ன செய்தீர்கள் என்று கேட்டிருக்க முடியுமா? அல்லது, இப்போது காலச்சுவடுவில் ஆசிரியர் குழுவில் பணியாற்றும் சுகுமாரன் பார்சல் கட்டும் வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறாரா?  தான் செய்வதைத்தான் மற்றவர்களும் செய்வார்கள் என்று நினைத்து விட்டாரா?
வண்ணநிலவன் சொல்வது போல் அசோகமித்திரன் நம் தேசத்துக்கும் நம் பாஷைக்குமான பெருமை.   அவரை நாம் கொண்டாடியிருக்க வேண்டும்.  கம்யூனிஸ்டுகளைப் பற்றி ஒரு குற்றச்சாட்டு இருக்கிறதில்லையா, அவர்கள் பசி பட்டினி பற்றி எழுதுபவர்கள் என்று.  அதைப் போலவே தான் அசோகமித்திரனையும் பற்றி சிலர் நினைக்கிறார்கள்.   மற்றவர்கள் அப்படிச் சொன்னால் கவலைப்பட மாட்டேன்.  அசோகமித்திரன் மாதிரி எழுதுவதற்கு உலகத்திலேயே ஆளில்லை என்று சொன்ன ஜெயமோகன் அப்படி எழுதியிருக்கிறார்.  ”அசோகமித்திரன் மனிதனின் லெளகீக துக்கத்தைச் சொல்ல வந்த கலைஞன்; அவரது உலகில் ஆன்மிகமான தத்தளிப்புகளும் தேடல்களும் இல்லை. சரித்திரத்தின் பாரம் இல்லை. அவர் தத்துவம் நோக்கிச் செல்வதே இல்லை.  அப்படிப் பார்த்தால் அவர் என்னுடைய உலகத்துக்குள்ளேயே வரவில்லை.  அவரிடமிருந்து நான் எதையுமே கற்றுக் கொள்வதில்லை.  நான் அவருடைய உலகை இங்கிருந்து பார்க்கிறேன். சோறு துணி வீடு கெளரவம் மறுபடியும் repeat பண்ணுகிறார்.  சோறு துணி வீடு கெளரவம் என்றே வாழ விதிக்கப்பட்ட அவரது மக்களை அவரது சொற்களின் வழியாக நேசத்துடன் புரிதலுடன் பார்க்கிறேன்.”  இது ஜெயமோகன்.
உங்களுக்கு இன்னொரு  விஷயத்தையும் சொல்லி விடுகிறேன். அசோகமித்திரனுக்கு என் எழுத்துக்கள் பிடிக்காது.   ஒரு தடவை நான் என்னுடைய ’நேநோ’ என்ற சிறுகதைத் தொகுப்பைக் கொடுத்து முன்னுரை கேட்டேன்.   அவர்தானே என்னுடைய ஆசான்?  நான் தில்லியில் இருந்த போது கணையாழிக்கு அனுப்பும் கதைகளுக்காக என்னை உற்சாகப்படுத்தி கடிதம் எழுதுவார்.  ஒரு போஸ்ட் கார்டில் எழுதுவார்.   அந்த எண்ணத்தில் தொகுப்பைக் கொடுத்தேன்.  அவர் அதற்கு ஒரு முன்னுரை கொடுத்தார்.  எப்படித் தெரியுமா?  ரோட்டில் கொடுப்பார்களே பிட் நோட்டீஸ்.  அந்த பிட் நோட்டீஸில் அரைப் பக்கத்துக்கு எழுதிக் கொடுத்தார்.  அவர் பல சமயங்களில் கதையெல்லாம் கூட நோட்டீஸில் எழுதுவார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.  முன்னுரையின் சுருக்கம்: ”இந்தக் கதையெல்லாம் எனக்குப் புரியவில்லை.”  அந்த முன்னுரையையும் நான் தொகுப்பில் சேர்த்திருக்கிறேன்.  ஆக, அவருக்கு என் கதைகள் பிடிக்காது என்பது முக்கியமே அல்ல.  அவருடைய கதைகளை நாம் எப்படி உள்வாங்குகிறோம்  என்பதுதான் முக்கியம்.
நான் கல்லூரி மாணவனாக இருந்த போது அசோகமித்திரனைப் படித்திருக்கிறேன்.  அதன் பிறகு இப்போது நான் எழுதிக் கொண்டிருக்கும்
பழுப்பு நிறப் பக்கங்களுக்காகத் திரும்ப வாசிக்கும் போது அசோகமித்திரனின் கதைகளில் மிக ஆழமான தத்துவப் பார்வைகள் தெரிகின்றன.  யாரையும் மறுத்துப் பேசுவதற்காகச் சொல்லவில்லை.   Angst and  Absurdity என்கிற இரண்டு மிக அடிப்படையான தத்துவ நிலைப்பாடுகளை தண்ணீர் நாவலிலும் கரைந்த நிழல்களிலும் ஒவ்வொரு வாக்கியத்திலும் நாம் பார்க்கலாம்.  What is angst?  It’s hopelessness… dread… fear… darkness… anxiety…  அந்த வார்த்தைக்கு ஈடாக இப்படிப் பல வார்த்தைகளைச் சொல்லலாம்.
ஒரு கதையில் ஒரு ஆள் அளவு மீறிக் குடித்து விட்டு இன்னும் குடிப்பதற்காகத் தன் பெண்டாட்டியிடம் பணத்தைத் திருடிக் கொண்டு வந்து விடுவான்.  பெண்டாட்டி அவன் சட்டையையும் முடியையும் பிடித்து விடுவாள்.  இவன் பதிலுக்கு அவளைப் புரட்டிப் புரட்டி அடிப்பான்.  கதையில் இரண்டு பக்கங்களுக்கு அவன் அவளை அடித்துக் கொண்டே இருப்பான்.  அதை ஒரு இளைஞன் சிகரெட் குடித்துக் கொண்டே வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்பான்.
அது அசோகமித்திரனாகக் கூட இருக்கலாம்.  அவருடைய இளம் வயதில் எழுதிய கதை.  இது வெறும் வன்முறை பற்றிய கதை அல்ல.  ஒருவித angst, ஒரு அபத்தம்…  அந்த இளைஞன் தன் வீட்டுக்கு வந்து நம்மால் எதுவுமே செய்ய முடியவில்லையே என்று நினைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பான்.  குடிகாரன் அந்தப் பெண்ணை அடிப்பதை நாம் போய் விலக்கிக் கூட விடவில்லையே என்ற கையறுநிலை…  இந்தக் குழப்பம், இந்த அபத்தம், அதன் காரணமாக ஏற்படும் angst… அநேகமாக எல்லாக் கதைகளிலும் வந்து கொண்டே இருக்கிறது.  தண்ணீர் நாவலில் வெறுமனே தண்ணீர் இல்லை என்ற சமாச்சாரம் இல்லை… ஒருவர் வாழ்நாள் பூராவும் அபத்தத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்.  ஒருநாள் வெளியூர் போகிறார். திரும்பும் போது ரயிலில் போவதாகத்தான் ஏற்பாடு.  ஆனால் அவருடைய நண்பர் வா, இரண்டு பேரும் காரில் போகலாம் என்று சொல்லி அழைத்துக் கொண்டு போகிறார்.  கார் விபத்துக்குள்ளாகிறது.  நண்பரும் இறக்கிறார்.  இவரும் இறக்கிறார்.  வாழ்நாள் பூராவும் அபத்தம் பற்றியே பேசிக் கொண்டிருந்த ஆல்பர் கம்யூவின் மரணம் 1960-இல் அவ்வளவு அபத்தமாகவே நடந்தது. கம்யூவின் உடலில் அவர் அன்று செல்ல வேண்டிய ரயிலின் பயணச் சீட்டு இருந்தது.  அவரைக் காரில் அழைத்துக் கொண்டு சென்றவர் உலகப் புகழ் பெற்ற பதிப்பகமான Gallimard-இன் உரிமையாளர்.  அப்போது கம்யூவின் வயது 47.
அதேபோல் அசோகமித்திரனின் தண்ணீர் நாவலில் தண்ணீர் என்பது தண்ணீர் இல்லாத ஒரு புற உலகைப் பற்றியதாகத் தோன்றவில்லை.  அந்த நாவலில் விவரிக்கப்படுவது ஒரு அபத்த நிலை மற்றும் angst.  ஒரு கலைப் படைப்பை எடுத்துக் கொண்டால் – அது கவிதையாக இருந்தாலும் சரி, சினிமாவாக இருந்தாலும் சரி, அதில் ஒரு தரிசனம் இருக்க வேண்டும்.  அசோகமித்திரனின் ஒவ்வொரு வாக்கியத்திலும் அதை நாம் காணலாம்.
தண்ணீரில் வரும் ஜமுனா – அவளுடைய வாழ்வின் அபத்தம் – இது போன்ற அபத்த உணர்வை இதுவரைக்கும் நான் எந்த ஒரு நாவலிலும் படித்ததில்லை.   தண்ணீரே இல்லை ரொம்பக் கொடூரமான தண்ணீப் பஞ்சம் சென்னையில்.  சாலைகளில் பாதாள சாக்கடை மராமத்துக்காகவோ வேறு எதற்காகவோ சாலைகளைத் தோண்டிக் கொண்டிருக்கிறார்கள்.  அப்படி இந்தத் தொளிலாளிகளெல்லாம் தோண்டும் போது –  அது பிராமணர்கள் அதிகமாக வசிக்கும் ஒரு தெரு – அப்படித் தோண்டும்போது கக்கூஸ் குழாய் உடைந்து எல்லா கசமும் தெருவில் ஓடும் –  தெருவே பாதாள சாக்கடையாகி விடும்.  அந்த சாக்கடைத் தண்ணீரும் குடிநீரோடு சேர்ந்து குழாயில் வரும்.

ஜமுனா ஒரு துணை நடிகை.  அவளுக்கு சினிமா சான்ஸ் வாங்கித் தருவதாகச் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கிறான் பாஸ்கர் ராவ் என்பவன்.  அவளுக்கு மதுவைக் கொடுத்து கண்டவர்களோடும் படுக்க வைக்கிறான்.  ஜமுனாவுக்கு சாயா என்ற ஒரு தங்கை.  வேறு யாரும் கிடையாது.  ஒண்டுக் குடித்தனம்.  ஒருநாள் பாஸ்கர் ராவ் ஜமுனாவை அழைத்துச் செல்ல அவள் வீட்டுக்கு வருகிறான்.  வீடு என்ன வீடு?  ஒரே ஒரு அறைதான் வீடு.  கண்ட நாயையெல்லாம் ஏன் வீட்டுக்குள் அழைத்து வருகிறாய் என்று ஜமுனாவைக் கேட்கிறாள் சாயா.  பாஸ்கருக்கும் சாயாவுக்கும் அடிதடி வந்து போல் இருக்கிறது.  ”அவனோடு போகாதே அக்கா, உன்னைத் தெருநாயாக்கித் தெருவிலேயே விட்டுடுவாங்க இவங்கல்லாம்” என்று ஜமுனாவிடம் சொல்கிறாள்.
அதற்குப் பிறகு அன்றைய தினம் என்ன நடந்தது என்பதை சில நாட்கள் சென்று ஜமுனா நினைவு கூர்கிறாள்:
”நல்ல விளக்கு வெளிச்சத்திலேயே அவள் எப்படி எல்லாம் நடந்து கொண்டிருக்கிறாள்?  நினைவே பிசகிப் போகிற மாதிரி.  குடிக்க வைத்தாலும் பரவாயில்லை.  அவளுக்கு என்னவோ நினைவு பிசகிப் போகாமல் புத்திதான் பால் குடித்த ஒரு மாதப் பசுங்கன்றுக் குட்டி போல் யாரும் நிர்ணயிக்க முடியாமல் அந்தக் காலாலும் இந்தக் காலாலுமாகக் குதித்து ஓடித் திரிந்து வந்தது… இந்தத் தடவை கூட, அந்த இரு தடியர்கள், கண்கள் கலங்கியிருக்க, வாயோரத்தில் எச்சில் ஒழுக, அந்த இரு நெல்லூர் தடியர்கள், அந்த ஹோட்டல் அறையில் ஜமுனாவை, துணியை அவிழ்த்து ஓட வைத்து வேடிக்கை பார்த்தார்கள்.  பாஸ்கர் ராவ் படம் எடுப்பதற்கு அவர்கள்தான் பணம் போடப் போகிறார்கள்.  வெளியூரிலிருந்து சினிமா எடுப்பதற்கு இங்கு வருபவர்கள் இரண்டிரண்டு பேராகத்தான் வருவார்களோ?  அவர்களுக்கு வேடிக்கை இருந்தால் அவளும் அல்லவா அதில் ஏதோ பெரிய விளையாட்டு இருக்கிற மாதிரி சிரித்துக் கொண்டு இளித்துக் கொண்டு நெளிந்து கொண்டு தாவிக் கொண்டு குதித்துக் கொண்டிருந்தாள்?  அந்த ஆபாசத்தைத் திருப்பிக் கூட நினைக்க முடியவில்லையே?”
பக்கம் பக்கமாக இப்படிப்பட்ட தருணங்களையே சொல்லிக் கொண்டு போகிறது தண்ணீர்.  வீட்டுக்கார அம்மாள் மாடி ஏறி ஜமுனாவின் அறைக்கு வருகிறாள்.  அங்கே பார்த்தால் உத்தரத்தில் சுருக்குக் கயிறைப் போட்டுக் கொண்டிருக்கிறாள் ஜமுனா.  திருமணம் ஆகாத பெண் தூக்கு மாட்டி செத்த வீடு என்ற பெயர் வந்து விடுமே என்று வீட்டுக்கார அம்மாளுக்குக் கவலை பீடித்துக் கொள்கிறது.
இப்படி மாற்றி மாற்றி அபத்தங்கள் தொடர்ந்து கொண்டே போகின்றன.  அசோகமித்திரனிடம் தத்துவம் இல்லை என்று சொல்லும் சுகுமாரன், தேவி பாரதி எல்லாம் தத்துவம் என்று எதைச் சொல்கிறார்கள்?  பொதுவாகத் தமிழ் இலக்கியச் சூழலில் ஒன்றுமே இல்லாத மொண்ணையான விஷயத்தை சிடுக்கான மொழியில் எழுதி சீரியஸ் இலக்கியம் என்று பேர் பண்ணி விடுகிறார்கள் பலர்.  ஆனால் அசோகமித்திரனிடம் அந்தக் குறக்குளி வேலை இருக்காது.  எளிமையான மொழி.  ஆனால் அதற்குள் ஏகப்பட்ட விஷயங்கள் சுருள் சுருளாக பொதிந்து கிடக்கும்.
அசோகமித்திரனின் காலத்தில் வாழ்வதற்கு நாம் அதிர்ஷ்டம் செய்திருக்கிறோம்.  அவர் எழுதியவற்றையெல்லாம் ஒருவர் படித்து முடிப்பதற்கே இரண்டு ஆண்டுகள் ஆகும்.  அத்தனை சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள், கட்டுரைகள், பேட்டிகள்…
குறுநாவல் என்று சொல்லும் போது எனக்கு இருவர் என்ற கதை ஞாபகம் வருகிறது.  அதில் வாலா என்ற ஒருத்தி வருகிறாள்.  பெண்களைப் பற்றி அசோகமித்திரன் அளவுக்கு உலகத்தில் ஒரு எழுத்தாளர் கூட எழுதியதில்லை.  வாலாவுக்கு இருபது வயது இருக்கும்.  அவள் கணவன் வெங்கடேசன்.   வெங்கடேசன் ஒரு மைனர்; ஒரு மிராசுதார்.  அவருக்கு ஒரு வைப்பாட்டி.  அந்தக் காலத்தில் அது சகஜம்.  கிட்டத்தட்ட ரெண்டாவது மனைவி மாதிரிதான்.  அவள் பெயர் தனம்.  தனத்தின் வீட்டுக்கு வெங்கடாசலம் போகும் போது மாட்டு வண்டியில் ஆற்றைத் தாண்டிப் போக  வேண்டும்.  ஒருநாள் அப்படிப் போகும் போது சேற்றில் சிக்கி இறந்து போவார்.  தனம் தாசி குலத்தில் பிறந்தவள் என்றாலும் வெங்கடாசலம் இறந்ததும் தானும் எரியூட்டிக் கொண்டு சாகப் போகிறாள்.  அப்படிப்பட்ட பெண்.   சாகப் போகும் தனத்தை அவள் அம்மா காப்பாற்றி விடுவாள்.  தனத்தைப் பற்றி அசோகமித்திரன் எழுதியிருப்பதைப் படித்து எனக்கு சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் ஞாபகம் வந்தது.  அந்த அளவுக்கு உக்கிரமாக எழுதியிருக்கிறார் அசோகமித்திரன்.  தனத்தை வாலாவுக்கு ரொம்பப் பிடிக்கும்.  தனத்துக்கும் வாலா மீதி தனிப் பிரியம்.  வாலாவுக்கு பத்து வயதில் விசு என்று ஒரு மகன்.  விசுவின் மீது தனத்துக்கு உயிர்.  இந்த நிலைமையில் வெங்கடாசலம் இறந்து போனதும் வாலா தன் அண்ணன் வீட்டுக்கு வந்து விடுகிறாள்.  அது அந்த நாளைய வழக்கம்.  வாலாவுக்கு வெங்கடாசலத்தின் வீட்டில் அவன் பெற்றோருடன் தான் இருக்க விருப்பம்.  ஆனால் அது வழக்கம் இல்லை.   சகோதரன் வீட்டில் வாலாவுக்கு நரகத்தைக் காண்பிக்கிறாள் மன்னி.  அடுக்களையை விட்டு வாலா வெளியிலேயே வரக் கூடாது.
தலையெல்லாம் மொட்டை அடித்தாயிற்று.  வாலா யாரோடும் பேசுவது கிடையாது.  ஒரு நாளிலேயே ஒரு வார்த்தையோ ரெண்டு வார்த்தையோ பேசியிருப்பாள்.  மகனிடம் கூடக் கொஞ்சுவது கிடையாது.   அந்தக் காலத்து இளம் பிராமண விதவை.  தனம் இருப்பது வைத்தீஸ்வரன் கோவில்.  வெங்கடேசன் இறந்த பிறகு தாயாரோடு சென்னைக்குப் போய் விடலாம் என்று திட்டம்.  அதற்கு முன் தனத்துக்கு ஒரே ஒரு முறை வாலாவையும் விசுவையும் பார்க்க வேண்டும்.  வாலாவின் வீட்டுக்கு வண்டி கட்டிக் கொண்டு போகிறாள்.  வீட்டின் உள்ளே கூடப் போகாமல் தெருவிலேயே நின்று கொண்டிருப்பாள் தனம்.  வாலா ஓடி வந்து தனத்தைக் கட்டிக் கொண்டு அழுகிறாள்.  வெங்கடேசன் இறந்த பிறகு அப்போதுதான் முதல் முதல் பார்க்கிறார்கள் இருவரும்.  அதேபோல் விசுவும்.   விசுவிடம் தனம் ஒரே ஒரு விஷயத்தைக் கேட்கிறாள்.  ”இந்த அம்மா சீக்கிரம் செத்து விடுவேன்.  நீ வந்து எனக்குக் கொள்ளி வைப்பாயா?”  திரும்பத் திரும்பக் கேட்பாள்.  அவன் அழுது கொண்டே தலை அசைக்கிறான்.  அதன் பிறகும் வீட்டுக்குள் போகாமல் திரும்பி விடுகிறாள் தனம்.  அதற்குப் பிறகு வாலாவின் சகோதரன் வருகிறான்.
”நேராக அவளிடம் சென்று அவள் கன்னத்தில் அறைந்தான்.  அவள் குறுகிக் கொண்டது அடிக்காக அல்ல என்று தோன்றியது.  அவன் அதையும் கவனியாமல் அவளைத் தோளிலும் முகத்திலும் மாறி மாறி அடித்தான்.  “அண்ணா! அண்ணா!” என்று வாலா முனகினாள்.  “கழுதை! வீட்டிலே மூலையிலே கிடக்காம தெருவுக்கா போறே நாயே! அறுத்துப் போட்டவ அடங்கிக் கிடக்காம ஊர் சுத்தவா போறே?  உன்னை என்ன பண்ணறேன் பார்! உன்னைக் கொன்று குழியிலே தோண்டிப் புதைச்சுடறேன். துக்கிரி நாயெ!  கட்டினவனை முழுங்கிட்டு இங்கே வந்து என்னடி ஆட்டம் போடறே!”
அப்போது அவன் அம்மா வந்து ”அவள் தூரண்டா” என்கிறாள்.  உடனே அவளைத் திட்டி விட்டு அப்படியே போய் கிணற்றில் அமர்கிறான்.  அவன் மனைவி அவன் மீது தண்ணீர் இறைத்து விடுகிறாள்.  அதே சமயம் அவள் அவனிடம் ஒரு ரகசிய பாவனையுடன் சொல்கிறாள்: “வந்தவ இவளுக்காக வரலை.  அந்தப் பிள்ளைக்காக வந்திருக்கா.”
“எது?  அந்த பிரம்மஹத்திக்கா?”
“ஆமாம்.  வெக்கம் மானம் இல்லாம இவ்வளவு பெரிய பிள்ளையை அத்தனை பேர் முன்னாலேயும் அவளும் கட்டிக்கிறா, இதுவும் தழுவிக் குலாவறது.  கொஞ்ச நாழியான்னா அப்படியே படுத்துண்டு புரண்டுப்பா போலவே இருந்தது.”
அதன் பிறகு ஜன்னி வந்து இறந்து போகிறாள் வாலா. வாலாவின் மரணத்துக்கு வரும் வெங்கடாசலத்தின் தாயாருக்கும் வாலாவின் தாயாருக்கும் மரண வீட்டில் ஒரு சண்டை வருகிறது.  அப்போது வெங்கடாசலத்தின் தாயார் பேசும் பேச்சு ஒரு நரகத்தின் சித்தரிப்பு:
வாலாவின் தாயாரைப் பார்த்துச் சொல்கிறாள். “படுபாவி! என்ன மாதிரி சண்டாளிடீ நீ… தூரமா இருந்த பொண்ணை அடி அடின்னு அடிச்சுக் கொலை பண்ணியிருக்கியே சண்டாளி! உன் குடும்பமே சண்டாளிக் குடும்பம்டீ!  உன் வீட்டிலே குழந்தை பொறக்குமா?  ஏழேழு ஜென்மத்துக்கு உன் வம்சம் வளருமா?  படுபாவி! படுபாவி!  அந்தப் பொண்ணு உனக்குப் பொறந்தா என்னடீ? அது எனக்கு மாட்டுப் பொண்ணுடி.  உன் வீட்டிலே தப்பாப் பொறந்துட்டுதுடீ.  அதை என் வீட்டிலே இருக்க முடியாம இழுத்துண்டு வந்துட்டேளேடீ!  அம்மா அம்மான்னு என்னையே சுத்திண்டிருந்ததேடீ!  என் பிள்ளைதான் அல்பாயுசிலே போய்ட்டான்.  அவன் தான் என்னை மோசம் பண்ணிட்டுப் போய்ட்டான்; இவ மூஞ்சியைப் பாத்தாவது மனது ஆறலாம்னு இருந்தேனே? என் தலையிலே மண்ணைப் போட்டுட்டியேடீ!  ஐயய்யோ, நான் எந்தக் கோயில்லே போய் முட்டிப்பேன்!  எந்தத் தெய்வத்துக்கிட்டே முறையிடுவேன்!  தெய்வமே!  தெய்வமே! என் வயிறு எரியறது உன் கண்ணிலே படலியா?  இந்தப் பாவி என் தலையிலே மண்ணை அள்ளிப் போட்டுட்டாளே!  நாலு நாளைக்கு அந்த வாயில்லாப் பூச்சியை என் வீட்டிலே வச்சுக்க முடியாதபடி அதை ஒரேயடியாகத் தொலைச்சுட்டு நிக்கறேளே?  என் பிள்ளைதான் மண்ணோடு மண்ணாப் போய்ட்டான், இவளாவது இருப்பான்னு இருந்தேனே?  எல்லாத்திலியும் மண்ணை அள்ளிப் போட்டாச்சே?  எல்லாமே குடி முழுகிப் போயிடுத்தே!  எல்லாமே வாரிண்டு போயிடுத்தே!  தெய்வமே!  நான் எங்கே போய் அழுவேன்?  தீராக் குறையாப் போயிடுத்தே!  நான் எங்கே போய் அழுவேன்?”
அசோகமித்திரனின் கதைகளில் தெரியும் இந்த வன்மமும் குரூரமும் கைவிடப்பட்ட தன்மையும் தத்துவம் சார்ந்தது இல்லையா?

தண்ணீரில் ஒரு இடம்.  ஜமுனா தெருக் குழாயில் தண்ணீர் அடிக்கும் போது அவளை ஒரு டீச்சரம்மா தன் வீட்டுக்கு அழைக்கிறாள்.  முதல் முறையாக வந்தவளுக்கு ஒரு காப்பி போட்டுக் கொடுக்கிறாள்.  எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த டீச்சரம்மாவின் மாமியார் எனக்கு எங்கேடி காப்பி என்று கேட்கிறாள்.
”ஓ முழிச்சுண்டுதான் இருக்கேளா? பல்லு தேச்சாச்சா?” இது டீச்சரம்மா.
“நான் பல்லு தேச்சா என்ன, தேக்காத போனா உனக்கென்னடி?  காப்பி கலந்து எனக்கும் கொடுக்க வேண்டியதுதானே உன் ஜோலி?”
டீச்சர் அவளுக்கும் காப்பி கலந்து கொடுக்கிறாள்.  அவளுக்குப் போட்டுக் கொள்ள டிகாஷன் இல்லை.  அந்தக் காப்பியில் டிகாஷன் போதவில்லை என்று காபித் தம்ளரை மருமகள் மீது வீசி அடிக்கிறாள் கிழவி.  அது டீச்சரின் இடுப்பைத் தாக்கிக் கீழே விழுகிறது.  நல்ல அடி.  அதுவும் போதாமல் முண்டே என்று திட்டுகிறாள்.  நீதான் முண்டை என்கிறாள் டீச்சர்.  அவ்வளவுதான், நரகத்தின் கதவு திறக்கிறது.
கிழவியிடம் ஒரு பயங்கர வெறி வந்து விட்டது.  “இவ்வளவுக்கு ஆயிடுத்தாடி – முண்டை – முண்டை – முண்டை – சிறுக்கி முண்டை.  தேவடியா முண்டை.  நாப்பது வயசாறது.  புருஷன் சீக்காய் படுத்திருக்கான்.  இன்னும் தெருத் தெருவா சுத்திண்டு குலுக்கி மினுக்கிண்டு வர முண்டை.  கட்டையிலே போறவளே.  எருக்கு முளைச்சுப் போகப் போறவளே, என்னை முண்டைன்னு வாயைத் திறந்து சொல்லறே!  துடைகாலி முண்டை.  துக்கிரி முண்டை.  மலட்டு முண்டை! உன்னை வாரிண்டு போக…”
ஏராளமாகச் சொல்லிக் கொண்டே போகலாம்.
என் இளம் வயதில் ’காலமும் ஐந்து குழந்தைகளும்’ என்று ஒரு தொகுப்பு படித்திருக்கிறேன்.  சின்ன புத்தகம்.  ஆறு கதைதான் அதில் இருக்கும்.   அதில் ஒரு கதை ’புலிக் கலைஞன்’.   உலகின் மிகச் சிறந்த கதைகளில் ஒன்று அது.  மாப்பஸான், செகோவ் என்று நீங்கள் எந்தச் சிறுகதை மன்னர்களைச் சொன்னாலும் அந்த மன்னர்களையெல்லாம் மீறின ஒரு கலைஞன் அசோகமித்திரன் என்பதற்கு அந்தப் ’புலிக் கலைஞன்’ என்ற ஒரு கதை போதும்.
அசோகமித்திரனின் எல்லாக் கதைகளையும் போல் புலிக் கலைஞனும் சினிமா கம்பெனியில் அவர் வேலை பார்த்த போது கிடைத்த அனுபவம் தான். சினிமாவில் க்ரௌட் சீன் வரும் அல்லவா, அதில் நடிப்பவர்களுக்கு நடிப்புத் திறமையெல்லாம் தேவையில்லை.  கூட்டத்தோடு ஒரு ஆளாக வந்து நின்றால் போதும்.  ஒரு படக் கம்பெனியில் சர்மா என்பவரிடம் ஒரு ஆள் வந்து வாய்ப்பு கேட்கிறான்.  அவர் ”இப்போது க்ரௌட் சீன் எடுக்கவில்லை; எடுத்தால் உனக்குத் தகவல் சொல்லுகிறேன், வா” என்கிறார்.  கதை சொல்லிதான் – வேறு யார், அசோகமித்திரன் தான் கதையில் வரும் கதை சொல்லி – இம்மாதிரி ஆட்களுக்கெல்லாம் போஸ்ட் கார்டு போடுபவர்.  ஆனால் பெரும்பாலான ஆட்கள் வருவதில்லை; கார்டு தான் திரும்பி வரும், விலாசதாரர் வீடு மாறிப் போய் விட்டார் என்று.
வந்த ஆள் சர்மாவை விடுவதாக இல்லை.  ஏதாவது ஒரு சான்ஸ் கேட்கிறான்.  தனக்கு டகர் பாயிட் நன்றாக வரும் என்கிறான்.  டகர் பாயிட் என்றால் என்ன?  சர்மாவுக்குப் புரியவில்லை.  கதைசொல்லிக்கும் புரியவில்லை.  தன் பெயரே டகர் பாயிட் காதர்தான் என்கிறான் வந்தவன்.  அந்த ஆளின் தோற்றம் பற்றி விவரிக்கிறார் அசோகமித்திரன்.  Black humour-இல் அசோகமித்திரனை மிஞ்ச உலக இலக்கியத்திலேயே ஆள் இல்லை என்பதற்கு இந்த இடம் ஒரு உதாரணம்.
”ஆள் குள்ளமாகத்தான் இருந்தான். ஒரு காலத்தல் கட்டுமஸ்தான உடம்பு இருந்திருக்க வேண்டும். இப்போது தோள்பட்டை எலும்பு தெரிய இருந்தான். நன்றாகத் தூக்கியிருந்த அவனுடைய தாடை மூட்டுக்கள் அவனுடைய கரிய கன்னங்களை அளவுக்கு மீறி ஒட்டிப் போனதாக காண்பித்தன. வெள்ளை கொண்டு வரும் ஆட்கள் எல்லாரும் அநேகமாக அப்படித்தான் இருப்பார்கள். ராமராஜ்யம் பற்றி படம் எடுத்தால் கூடப் படத்தில் வரும் பிரஜைகள் தாது வருஷத்து மக்களாகத்தான் இருப்பார்கள்.”
பிறகு டகர் பாயிட் காதர் அவர்களுக்குத் தன் திறமையைக் காண்பிக்கிறான்.  கதையின் அந்த இடம் தமிழ் என்ற மொழி உள்ளளவும் வாழும் ஒரு பகுதி:
அவன் எங்கிருந்தோ ஒரு புலித் தலையை எடுத்தான். அப்போதுதான் அவன் ஒரு துணிப்பையை எடுத்து வந்திருந்தது தெரிந்தது. புலித்தலை என்பது தலையின் வெளித்தோல் மட்டும். அதை அவன் ஒரு நொடியில் தன் தலையில் அணிந்து கொண்டு முகவாய்க்கட்டை அருகே அந்தப் புலித் தலை முகமூடியை இழுத்துவிட்டுக் கொண்டான். அவன் சொந்தக் கண்களோடு ஒரு சிறுத்தையின் முகம் உடையவனாக மாறினான். அறையை ஒரு விநாடி அங்குமிங்கும் பார்த்துக் கொண்டான்.
அவன் பூனைபோல் முதுகை மட்டும் உயர்த்தி உடலை வளைத்துச் சிலிர்த்துக் கொண்டான். பிறகு வாயைத் திறந்தான். நாங்கள் திடுக்கிட்டோம். அவ்வளவு நெருக்கத்தில் அவ்வளவு பயங்கரமாகப் புலி கர்ஜனையை நாங்கள் கேட்டது கிடையாது.
அவன் மீண்டும் ஒரு முறை புலியாகக் கர்ஜித்துத் தன் பின்பக்கத்தை மட்டும் ஆட்டினான். அப்படியே நான்கு கால்களில் அறையில் காலியாயிருந்த நாற்காலி மீது பாய்ந்து ஒடுங்கினான். நாற்காலி தடதடவென்று ஆடியது. நான் ”ஐயோ” என்றேன்.
அவன் நான்கு கால் பாய்ச்சலில் என் மேஜை மீது தாவினான். கண் இமைக்கும் நேரத்தில் சர்மா மேஜை மீதும் பாய்ந்தான். சர்மா மேஜை மீதும் தாறுமாறாகப் பல காகிதங்கள், புத்தகங்கள், வெற்றிலைப் பொட்டலம் முதலியன சிதறி இருந்தன. ஒன்றின் மீது கூட அவன் கால்கள் படவில்லை. அவன் சர்மா மேஜை மீது பதுங்கி சர்மாவைப் பார்த்து மீண்டுமொரு முறை குலை நடுங்க வைக்கும் முறையில் கர்ஜித்தான். அங்கிருந்து அப்படியே உயர மேலே பாய்ந்தான். நாங்கள் எல்லோரும், ”ஓ” என்று கத்திவிட்டோம்.
அது பழங்காலத்துக் கட்டிடம், சுவரில் நெடுக சுமார் பத்தடி உயரத்தில் இரண்டங்குலத்திற்கு விளிம்பு மாதிரி இருந்தது. ஒரு பக்கச் சுவரில் அந்த விளிம்புக்குச் சிறிது உயரத்தில் ஒரு ஒற்றைக் கம்பி போட்ட ஜன்னல் வெண்டிலேட்டராக இருந்தது. அதில் ஏகமாகப் புழுதி, அழுக்கு ஒட்டடை படிந்து இருந்தது.
அவன் நான்கு கால்களையும் வைத்து ஆளுயரத்திற்கும் மேல் எகிறி எங்கள் தலைக்கு மேல் அந்த ஈரங்குலச் சுவர் விளிம்பில் ஒரு கணம் தன்னைப் பொருத்திக் கொண்டான். பிறகு கைகளால் வெண்டிலேட்டர் கம்பியைப் பிடித்துக் கொண்டு மீண்டும் புலிபோலக் கர்ஜித்தான்.
(பிறகு) அவ்வளவு உயரத்திலிருந்து அப்படியே நாற்காலி மீது தாவினான். அப்படியே எம்பித் தரையில் குதித்தான்.
நாங்கள் திகிலடங்காத அதிர்ச்சியில் இருந்தோம். சிறுத்தை முகத்திலிருந்த அவன் கண்கள் புலிக்கண்களாக மின்னின. இன்னொரு முறை சிறுத்தை பயங்கரமாக வாயைப் பிளந்து கர்ஜித்தது. அடுத்த கணம் அவன் உடல் தளர்ந்து தொங்கியது. அவன் எழுந்து நின்றுகொண்டான்.”
திருவல்லிக்கேணி மீர்சாஹிப் பேட்டையில் வாழும் ஒரு பரம ஏழை
டகர் பாயிட் காதர்.  நான்கு குழந்தைகள்.  காதர் சாப்பிட்டுப் பல தினங்கள் ஆகியிருக்கும் போலிருக்கிறது.  கதையின் முடிவு என்ன ஆகிறது என்பதை நீங்களே கதையைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.  இங்கே இரண்டு விஷயங்களை நான் குறிப்பிட விரும்புகிறேன்.
லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள் பலரது நெற்றிப் பொட்டில் துப்பாக்கி வைக்கப்பட்டிருக்கிறது.  அதைப் பற்றிக் கூட கவலையில்லாமல் எழுதியவர்கள் அவர்கள். பல பேர் சிறையில் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.  ஹுலியோ கொர்த்தஸாரைப் போன்ற பலர் நாட்டை விட்டு ஓடி வெளிநாடுகளில் அகதிகளாக வாழ்ந்திருக்கிறார்கள்.   ஆனால் அசோகமித்திரனை வெறும் ஒரு பூண்டுத் துண்டின் மூலம் வெருட்டி விடலாம். ஒற்றன் என்ற நாவல் அவரது அமெரிக்கப் பயண அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.  அதில் வரும் அத்தனை கதாபாத்திரங்களும் நிஜம்.  இன்று அவர்கள் பிரபலமான எழுத்தாளர்கள், ஓவியர்கள்.  பூண்டு வாசம் அவரை அமெரிக்காவில் பாடாய்ப் படுத்தியிருக்கிறது.  அவரது ஆறு மாத அமெரிக்க வாழ்க்கையையே பூண்டு நாசமாக்கியிருக்கிறது என்று தெரிகிறது.  இப்படி பூண்டு வாசனையையே தாங்கிக் கொள்ள முடியாத No Onion No Garlic Tambram – ஒரு சராசரி நடுத்தர வர்க்க பிராமணரான அசோகமித்திரன் எழுத்து என்று வரும்போது எரிமலையாய் வெடிக்கிறார்.  நரகத்தை நம் கண் முன்னே அச்சு அசலாய்க் கொண்டு வருகிறார்.  தீயையே விழுங்கி விழுங்கி எழுத்தாக மாற்றுகிறார்.
எப்படி இது சாத்தியம்?  Catharsis.  டகர் பாயிட் காதரும் அசோகமித்திரனும் ஒரே ஆள்தான்.  காதருக்கு திருவல்லிக்கேணி மீர்சாஹிப் பேட்டை.  அசோகமித்திரனுக்கு தி.நகர் தாமோதர ரெட்டி தெரு.  காதரும் பல நாட்கள் சாப்பிடவில்லை.  அசோகமித்திரன் கிடந்த பட்டினி பற்றி விலாவாரியாக கரைந்த நிழல்கள் நாவலிலும் பல பேட்டிகளிலும் விவரித்திருக்கிறார்.  காதரின் கலையையும் கொள்வாரில்லை.  அசோகமித்திரனையும் வாசிப்பார் இல்லை.  உருவத்திலும் இரண்டு பேரும் ஒரே மாதிரி தான்.  ஆனால் கலை என்று வரும் போது காதர் புலியாக மாறுகிறான்.  அசோகமித்திரன் நெருப்பாக மாறுகிறார்.  தெய்வமாகவும் சைத்தானாகவும் மாறுகிறார்.  இதுவே Catharsis.  கோவில் விழாக்களில் சாமியாடியை நீங்கள் பார்த்திருக்கலாம்.  இருபது பேர் பலத்துடன் ஆட்டின் கழுத்தைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சும் சாமியாடி மறுநாள் நடக்கக் கூடத் தெம்பில்லாமல் ஒரே ஒரு பீடிக்காகக் கூழைக் கும்பிடு போட்டுக் கொண்டிருப்பான்.
மேலும், அசோகமித்திரனின் பேட்டிகளில் அவர் ஒரு இந்து பிராமணராகவே தன்னை வெளிக்காட்டிக் கொண்டவர்.  தமிழ் பிராமணர்கள் யூதர்களைப் போல் ஒடுக்கப்படுகிறார்கள் என்றெல்லாம் சொன்னவர்தான்.  ஆனால் அசோகமித்திரனின் கலையில் ஜாதி, மத வித்தியாசங்களுக்கு இடமே இல்லை.  எங்குமே பார்க்க முடியாது.  புலிக் கலைஞனின் காதரைப் பாருங்கள்.  அதுதான் அசோகமித்திரன்.  ஒட்டு மொத்த மானுடத்துக்காக எழுதியவர் அசோகமித்திரன்.
மீண்டும் புலிக் கலைஞனுக்கு வருவோம்.  அது ஒடுக்கப்பட்டவர்களைப் பற்றிய கதை மட்டும்தானா?  பசி பட்டினி கதை மட்டும்தானா?  Catharsis என்ற மிகப் பெரிய விஷயம் அதன் உள்ளே பொதிந்து கிடக்கிறதுதானே?  அதுதான் அசோகமித்திரனின் தத்துவம்.  அன்பே இல்லாத உலகம்.  கடவுளே இல்லாத உலகம்.  கடவுளால் கைவிடப்பட்ட மனிதர்கள்.
”இவ்வளவுக்கு ஆயிடுத்தாடி – முண்டை – முண்டை – முண்டை – சிறுக்கி முண்டை.  தேவடியா முண்டை.  நாப்பது வயசாறது.  புருஷன் சீக்காய் படுத்திருக்கான்.  இன்னும் தெருத் தெருவா சுத்திண்டு குலுக்கி மினுக்கிண்டு வர முண்டை.  கட்டையிலே போறவளே.  எருக்கு முளைச்சுப் போகப் போறவளே, என்னை முண்டைன்னு வாயைத் திறந்து சொல்லறே!  துடைகாலி முண்டை.  துக்கிரி முண்டை.  மலட்டு முண்டை! உன்னை வாரிண்டு போக…”
தண்ணீர் நாவலில் கத்துகிறாளே டீச்சரம்மாவின் மாமியார்…
அன்பே இல்லாத இந்த உலகம் எதைச் சொல்கிறது?  எதற்காக ஏங்குகிறது?  அன்பு அன்பு அன்பு அன்புக்கான ஏக்கம் தானே இது?   அன்புக்கான அலறல்தானே இது?
அசோகமித்திரனைப் படிக்கும் போதெல்லாம் எனக்கு John of the Cross என்ற ஞானியின் ஞாபகம் வந்து கொண்டே இருக்கும்.    பதினைந்தாம் நூற்றாண்டில் ஸ்பெயினில் இருந்த ஒரு பாதிரியார் அவர்.  ஏழைகளுக்காகப் பாடுபட்டதால் திருச்சபையில் அவருக்குக் கடும் எதிர்ப்பு இருந்தது.   சிறையில் கூட அடைத்து விடுவார்கள்.  தனிமைச் சிறை.  ஜான் ஆஃப் தெ க்ராஸ் என்ற திரைப்படம் கூட வந்திருக்கிறது.  சிறையிலிருந்து தப்பி விடுவார்.  வாழ்நாள் பூராவும் ஏழைகளுக்கு சேவை செய்வதற்காகப் பல ஆயிரம் மைல்கள் நடந்திருக்கிறார்.  அவர் சிறையில் இருக்கும் போது எழுதிய கவிதை ஒன்று… Dark Knight of the Soul… அந்தk கவிதைக்கும் அசோகமித்திரனின் எழுத்துக்கும்  நிறைய ஒற்றுமைகள் உண்டு.   அந்தப் படம் முடியும் போது ஜான் நடந்து போவதை கேமரா க்ளோஸப்பில் காண்பிக்கும்.  அவர் கால்களில் செருப்பு இருக்காது.  வெறும் காலில்தான் அவர் பல்லாயிரக் கணக்கான மைல்களை நடந்திருக்கிறார்.   சினிமாவில்தான் அப்படிக் காண்பித்திருக்கிறார்களா என்று அவருடைய சரிதத்தைப் படித்தேன்.  ஆம்.  அவர் வெறும் காலில்தான் பல்லாயிரக் கணக்கான மைல்களை நடந்திருக்கிறார்.  ஏன் அப்படி என்பதைத்தான் அசோகமித்திரனின் எல்லா எழுத்தும் சொல்கிறது.   Suffering…  Suffering-ஐ ஒரு தத்துவமாக அவர்கள் கொடுக்கிறார்கள்.  நாம் புனித யாத்திரை எல்லாம் போகிறோம் அல்லவா?   இமயமலைக்குப் போகிறோம்.  புனித யாத்திரை செல்பவர்கள் தங்களை வருத்திக் கொள்கிறார்கள்.  இந்த தேகத்தையும் மனதையும் வருத்திக் கொள்கிறார்களே, அது ஏன்?
சமீபத்தில் காந்தியைப் பற்றி ஒரு கட்டுரை படித்தேன்.  மேட்டுக்குடியைச் சேர்ந்த ஒரு பிராமண இளைஞன் மேற்கத்திய நாடு ஒன்றில் மேற்படிப்பு படித்து விட்டு இந்தியா வந்து சேர்கிறான்.  இந்த நாட்டுக்கு ஏதாவது உருப்படியாகச் செய்ய வேண்டும் என்று நினைத்து காந்தி வசித்த சபர்மதி ஆசிரமத்துக்கு வந்து ”கொஞ்ச காலம் உங்களோடு தங்கியிருக்க விரும்புகிறேன்.  நீங்கள் என்ன சொன்னாலும் செய்கிறேன்” என்கிறான்.
”அப்படியானால் ஒரு மாத காலம் இந்த ஆசிரமத்தின் கக்கூஸைக் கழுவு” என்று சொல்கிறார் காந்தி.  அவனும் செய்கிறான்.  ஒரு மாதம் ஆயிற்று.  அவனுக்குத் தோன்றுகிறது, நாம் படித்த படிப்புக்கு இன்னும் பெரிய வேலையாகச் செய்தால் நாட்டுக்கு நல்லதாயிற்றே.  காந்தியிடம் போய் “நீங்கள் சொன்ன வேலையை ஒரு மாத காலம் செய்து விட்டேன்” என்று சொல்கிறான்.  ”இன்னும் ஒரு மாதம் செய்” என்று சொல்லி அனுப்பி விடுகிறார்.  செய்கிறான்.  ஆனால் அவனுக்குத் தன் திறமை இந்த நாட்டுக்கு உபயோகப்படாமல் போகிறதே, இந்தக் கழிப்பறை வேலையை வேறு யார் வேண்டுமானாலும் செய்யலாமே என்று தோன்றுகிறது.  காந்தியிடம் போய் தனக்குத் தோன்றியதைச் சொல்கிறான்.  அப்போது காந்தி, ”யார் ஒருவனுக்கு மனித வாதை பற்றித் தெரிகிறதோ அவனே மனித குலத்துக்கு சேவை செய்யத் தகுதி படைத்தவன் ஆகிறான்.  இது போன்ற கீழான வேலைகளை நீ செய்து பழகா விட்டால் உன் சக மனிதனின் துயரத்தை உன்னால் உணர முடியாது” என்று சொன்னார்.
அதேபோல்  suffering மூலமாகவே – வேதனையின் மூலமாகவே –  redemption-ஐ நோக்கி – மீட்சியை நோக்கிச் செல்லும் பயணம் அசோகமித்திரனுடையது.   அதுதான் அசோகமித்திரனின் தத்துவம்.  இதை நான் அசோகமித்திரனிடம் சொன்னால் சாரு உளறுகிறார் என்று அவர் சொல்லுவார்.  ஜான் ஜெனேயை சார்த்தர் Saint Genet என்று சொல்லி புத்தகம் எழுதிய போது அந்த நூலைக் குப்பை என்று சொன்னார் ஜெனே.
நடிகை மனோரமா இறந்து போனார்.  மனோரமா தமிழர்களின் உணர்வுகளோடு கலந்தவர்.  அவரது மரணத்துக்குத் தமிழ்நாடு எப்படி எதிர்வினை செய்தது?  ஒட்டு மொத்தத் தமிழ்நாடே அவருக்கு விடை கொடுத்தது.  அதே போன்றதொரு பிரிவுத் துக்கத்தையே யு.ஆர். அனந்தமூர்த்தி இறந்த போது கர்னாடகா கொண்டாடியது.  கல்யாணச் சாவு என்று சொல்கிறோமே அதைப் போல.  ஒரு எழுத்தாளர் இறக்கும் போது நமது சினிமாக் கலைஞர்கள் இறக்கும் போது எப்படிக் கொண்டாடுகிறோமோ அதேபோல் கொண்டாட வேண்டும்.
இன்னும் எத்தனையோ விஷயங்களைப் பேச வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  அந்த flow போய் விட்டது.  கடைசியாக ஒரு விஷயம் சொல்ல வேண்டும்.
அசோகமித்திரனைப் பற்றிக் குறிப்பிடும் போது பலரும் அவரது நல்ல குணங்களையே பட்டியலிடுகிறார்கள்.  அவர் ஒரு குடிகாரராகவும், ஸ்த்ரீலோலனாகவும் இருந்திருந்தால் அவரது எழுத்தை எப்படி எதிர்கொண்டிருப்பீர்கள்?  திரும்பத் திரும்ப நாம் ஒரு கலைஞனின் லௌகீக வாழ்க்கையின் குணநலன்களைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கக் கூடாது.  நாம் நமது மகத்தான படைப்பாளிகளை ஒவ்வொருவராக இழந்து கொண்டிருக்கிறோம். சி.சு. செல்லப்பா, க.நா.சு., எம்.வி. வெங்கட்ராம், லா.ச.ரா…  ஆ. மாதவன் இன்னமும் எழுதிக் கொண்டிருக்கிறார்.  திருவனந்தபுரத்தில் இருக்கும் அவரைத் திருவனந்தபுரத்துக்காரர்களுக்கே தெரியவில்லை.  எழுத்தாளர்கள் உயிரோடு இருக்கும் போதே அவர்களைக் கொண்டாடுங்கள்.  ஆனால் irony என்னவென்றால், அசோகமித்திரனின் பேத்தி அசோகமித்திரனிடம் ஆங்கிலத்தில்தான் பேசுகிறார்.  இதுதான் எதார்த்தம்.
இங்கே எனக்குப் பேச வாய்ப்புக் கொடுத்த கிருபானந்தனுக்கு என் நன்றி.
வணக்கம்.
அசோகமித்திரன் குறித்து பனுவல் அரங்கில் 24.10.2015 அன்று சாரு நிவேதிதா பேசிய பேச்சு.  


அசோகமித்திரன் பற்றிய நினைவுப் பகிர்தல் நிகழ்வில் அவரது பதினெட்டாவது அட்சரகோடு நாவலை முன்வைத்து 'கபில் ஸ்ரனிஸ்லஸ்' பேசிய உரையின் எழுத்து வடிவம்.
"தமிழ் சமூகத்தில் ஒரு எழுத்தாளன் வாழும்போது கொண்டாடப்படுவதில்லை" என சார்வாகனின் இரங்கல் கூட்டத்தில் சாரு நிவேதிதா சொன்னதையும்,இதே கருத்தையொட்டி எஸ்போஸின் படைப்புகள் பற்றிய கூட்டத்தில் கிரிஷாந் சொன்னதையும் மீண்டும் இங்கே ஞாபகப் படுத்திக் கொண்டு நான் பேச ஆரம்பிக்கிறேன்.
நான் முதன் முதலாக வாசித்த அசோகமித்திரனின் படைப்பு பதினெட்டாவது அட்சக்கோடு.அதை வாசிக்கும் போது இந்திய சுதந்திரம் பற்றி மேம்போக்கான அறிவே என்னிடம் இருந்தது.ஆனால் பதினெட்டாவது அட்சக்கோடு இந்திய சுதந்திரத்தின் ஒரு கிளைக் கதையைச் சொல்கிறது.இந்தியா சுதந்திரம் அடைந்ததன் பின்னும் தெலுங்கு தேசத்தை நிஜாம் எனப்படும் முஸ்லிம்கள் ஆட்சி செய்கிறார்கள்.அவர்கள் தமது இராஜ்ஜியத்தை இந்தியக் குடியரசோடு இணைக்காமல் தனியாட்சி புரிய எண்ணுகிறார்கள்.இப்படியான ஒரு சூழ்நிலையில் அங்கு வாழும் ஒரு தமிழ் குடும்பத்து பையனான சந்திரசேகரனின் அனுபவங்கள் தான் பதினெட்டாவது அட்சக்கோடு.
ஒரு பக்கம் நிஜாம்கள்.இன்னொரு பக்கம் இந்தியக் குடியரசு.எனவே நாம் நாவலின் கதையை ஆங்கிலப் படங்களின் பிரம்மாண்டங்களுக்கு நிகராக கற்பனை செய்யவே ஆரம்பிப்போம்.ஆனால் அசோகமித்திரன் தனக்கேயுரிய பாணியில் அலட்டிக் கொள்ளாமல் மிக எளிமையாக கதையைச் சொல்கிறார்.சந்திரசேகரனின் ஒவ்வொரு நாளும் எப்படிக் கடந்து போகிறது எனச் சொல்வதின் மூலம் சுற்றிவர நடைபெறும் அரசியலை மெல்லிய இழையாக ஊடுருவ வைக்கிறார்.நிஜாமுடைய படைகள் இந்திய அரசுக்கு எதிரான போருக்கு தயாராகும் வண்ணம் வீதியில் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும் போது சந்திரசேகரன் சாதாரணமாக கிரிக்கெட் விளையாடச் செல்வான்.அவனது கவனம் முழுக்க பந்தை நேராகப் போடுவதிலும் தனது கப்டனை திருப்திப் படுத்துவதிலுமே குவிந்திருக்கும்.
யதார்த்தம் என்பது இதுதான்.எம்மைச் சுற்றி பெரிய அரசியலே நிகழ்ந்து கொண்டிருக்கும்.ஆனால் நாம்,எமக்கான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்போம்.அந்த அரசியலோடு மோதிக் கொள்ளும் வரையில் சுற்றி நடக்கும் பிரச்சினையின் வீரியம் எமக்கு புரிவதில்லை.ஒரு நாள் சந்திரசேகரன் கிரிக்கெட் விளையாடிவிட்டு வருகிறான்.பொழுது இருட்டிக் கொண்டிருக்கிறது.ஊரே வெறிச்சோடியது போல் காணப்படுகிறது.சந்திரசேகரனுக்கு இதுவெல்லாம் ஒரு பொருட்டாகவே படவில்லை.அவனது சப்பாத்துக்கள் தண்ணீரில் நனைந்து நடக்கும் போது துன்புறுத்துகின்றன.சைக்கிள் பழுதாகியிருக்கிறது.சைக்கிளை எங்காவது வைத்துவிட்டு மறுநாள் வந்து எடுக்கலாம் என நினைத்து ஒரு பெண்ணிடம் போய் உதவி கேட்கிறான்.அவளோ "நீ இங்கே இருக்காதே உடனடியாகப் போய்விடு" எனச் சொல்கிறாள்.சந்திரசேகரன் அங்கிருந்து நீங்கும் போது ஒரு கும்பலால் தாக்கப்படுகிறான்.அப்போதுதான் அவனுக்கு பிரக்ஞை ஏற்படுகிறது.
அசோகமித்திரனை,சிறப்பாக பதினெட்டாவது அட்சக்கோடு நாவலை நமது ஈழத்து படைப்புச் சூழலில் பொருத்திப் பார்க்க விரும்புகிறேன்.ஈழத்து படைப்பாளிகள் எப்போதும் ஏன் போரையே பாடுகிறார்கள் என்ற குற்றச் சாட்டு பரவலாக முன்வைக்கப் படுகிறது.உண்மையில் இந்தக் குற்றச் சாட்டை என்னால் ஓரளவு தான் ஏற்றுக் கொள்ள முடியும்.ஏனெனில் எமது வாழ்வியலின் ஒவ்வொரு இடுக்குகளிலும் போர் இருக்கிறது.ஒரு சம்பவத்திலிருந்து இன்னொரு சம்பவத்துக்கு போகும் போது போரைக் கடக்க வேண்டியது தேவையாகிவிடுகிறது.சங்க காலத்தில் அகத்தைப் பாடியது போல சங்கமருவிய காலத்தில் புறத்தைப் பாடியது போல இப்போது நாம் போரைப் பாடுகிறோம்.ஆனால் நாம்,போரை சரியாகப் பாடுகிறோமா? அல்லது பாடிவிட்டோமா? என்ற கேள்வியையும் உங்கள் முன்னால் வைக்கிறேன்.
அசோகமித்திரனைப் போல எம்மில் எத்தனை படைப்பாளிகள் வாழ்வியலின் ஊடாக,கொண்டாட்டங்களின் ஊடாக ஒரு துன்பத்தைச் சொல்லியிருக்கிறார்கள்? போர் நம் எல்லோருக்கும் பொதுவானது தான்.ஆனால் அது, நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முகத்தைக் காட்டியிருக்கிறது.இடம் பெயர்கிறோம் எனத் தெரியாமலேயே இடம் பெயர்ந்த சிறுவர்களின் கதைகள் எம் மத்தியில் இருக்கிறது.யுத்தத்தின் போது காதல் கடிதம் எழுதியவர்கள் இருக்கிறார்கள்.குண்டு வீச்சு சப்தங்களின் மத்தியில் பிள்ளைக்கு தொட்டில் கட்டி தாலாட்டியவர்கள் இருக்கிறார்கள்.இந்தக் கதைகளையெல்லாம் நாம் எப்போது சொல்லப் போகிறோம்? நாம் போராளியாகவோ இராணுவ வீரானகவோ இருந்து கொண்டு கதை சொல்லத் தான் பழகியிருக்கிறோம்.சாமான்யனாக இருந்து கதை சொல்வது மிக அரிதாகவே நிகழ்கிறது.
சமீபத்தில் ஒரு ஈழத்துக் குறும்படம் பார்த்தேன்.புலமை பரிசில் கற்கும் ஒரு மாணவன் படும் அவஸ்தைகள் தான் படத்தின் கதை.அந்த மாணவன் காலையில் எழும்பியது முதல் இரவு நித்திரைக்கு போகும் வரையிலும் பெற்றோர்,மூத்த மாணவர்கள்,ஆசிரியர்கள் என எல்லோரிடமும் விதம் விதமான காரணங்களுக்காக அடி வாங்கிக் கொண்டேயிருக்கிறான்.உண்மையில் இப்படி நடக்கவே நடக்காது.நானும் புலமை பரிசில் பயின்றேன்.மாலையில்,விளையாடும் நேரத்தில்,ரியூசனுக்கு போக வேண்டும் என்ற அழுத்தம் என்னிடமிருந்தது.ஆனாலும்,நானும் நண்பர்களும் ரியூசனுக்கு போகும் வழியில் மாங்காய்களுக்கு கல்லெறிவோம்.சைக்கிளில் செல்வதால் சைக்கிள் பந்தயங்களும் நடப்பது உண்டு.நான் இப்போது சொன்ன குறும்படத்தை போலவே தான் ஏராளமான படைப்புகள் எம்மிடையே தோன்றுகின்றன.எதற்கெடுத்தாலும் அழுகை.எங்கே பார்த்தாலும் குண்டு வீச்சு.
எனக்கொரு சம்பவம் ஞாபகம் வருகிறது.அப்போது நாங்கள் இடம்பெயர்ந்து மன்னாரில் ஒரு உறவினர் வீட்டில் வசித்தோம்.நாங்கள் இலங்கையர் என்று அடையாளப் படுத்திக் கொள்வதற்கான தேசிய அடையாள அட்டை போன்ற ஆதாரங்கள் எங்களிடம் இருக்கவில்லை.வெளியே நடமாடுவது சிரமமாயிருந்தது.இருந்தும்,ஒருநாள் இரவு,நடிகர் பிரசாந் இரட்டை வேடத்தில் நடித்த 'ஜீன்ஸ்' படம் பார்க்கப் போனோம்.மிக இரகசியமாக எருக்கலம் பற்றைகள் நிறைந்த பகுதிகளின் ஊடாக தியேட்டருக்கு சென்றுவிட்டு திரும்பி வரும் போது ஐஸ்வர்யாராய் ஆடிய பரத நாட்டியத்தைப் பற்றி பேசினோம்.ஏழு அதியசம் பாடல் காட்சிகள் பற்றி சிலாகித்தோம்.எல்லோருக்கும் உள்ளூரப் பயமிருந்தது.ஆனாலும் அந்த பயத்திடம் எங்கள் கொண்டாட்டத்தை நாங்கள் விட்டுக் கொடுக்கவில்லை.
இதே போன்ற ஒரு சம்பவம் பதினெட்டாவது அட்சக்கோட்டிலும் வருகிறது.சந்திரசேகரனின் குடும்பம் சினிமா பார்த்து விட்டு வந்து கொண்டிருக்கும்.இரவு நேரம்.ஊர் அடங்கியிருக்கிறது.அவர்கள் வரும் வழி,சிறிது தூரத்தில் இடப்பக்கமாகவோ வலப்பக்கமாகவோ திரும்பிவிடும் வீதிகளால் நிறைந்திருக்கிறது.சந்திரசேகரனின் அப்பா அவனிலிருந்து பத்தடி முன்னால் நடந்து கொண்டிருப்பார்.சந்திசேகரனின் அம்மாவும் சகோதரியும் அவனிலிருந்து பின்னால் பத்தடி நடந்து வந்து கொண்டிருப்பார்கள்.அவனது அப்பா,முன்னால் நடந்து,இடப்பக்கமாகவோ வலப்பக்கமாகவோ திரும்பி விட்டால் பின்னால் வரும் குடும்பத்தவர்களின் கண்களிலிருந்து மறைந்து விடுவார்.இவர்கள் போய் அந்த வீதிக்குள் திரும்பும் வரையிலும் அப்பாவை காண முடியாது.ஒரு பதட்டமான சூழ்நிலையை இவ்வளவு எளிமையாகச் சொல்ல அசோகமித்திரனால் மட்டுமே முடியும்.அதுமட்டுமல்லாது,ஒரு இடத்தைப் பற்றி வர்ணிக்க தனியாக கவனம் எடுத்துக் கொள்ளாது கதாப்பாத்திரங்களோடு வாசகனையும் பயணிக்க வைத்து கதைக்களத்தை மனதில் பதிய வைக்கும் திறமை அழகாக கைகூடி வந்திருக்கிறது அவருக்கு.
இவ்விடத்தில்,அசோகமித்திரன் மேல் வைக்கப்படும் இரண்டு விமர்சனங்களுக்கு எதிர்க்கருத்துச் சொல்ல விரும்புகிறேன்.
ஒன்று:அவர் நடுத்தர வர்க்கம் பற்றி ஓயாமல் கதை எழுதுவதை தவிர வேறு என்ன செய்து விட்டார்?
உதாரணத்துக்கு அட்சக்கோடு நாவலையே எடுத்துக் கொள்வோம்.நிஜாம்கள் தமது ஆட்சியில் வெளிமாநில செய்திகள் இராஜ்ஜியத்துக்குள்ளே வருவதை அனுமதிக்கவில்லை.ரேடியோவைக் கூட மிகுந்த சிரமத்தின் நடுவேதான் கேட்கிறார்கள்.வெளிமாநிலங்களுக்கும் நிஜாம் சமஸ்தானத்திலிருந்து செய்திகள் போவதில்லை.இதுபற்றி அசோகமித்திரன் ஒரு கட்டுரையில் குறிப்பிடும் போது "நாங்கள் சென்னையில் வசிக்கும் உறவினர்களுக்கு பிரச்சினையைச் சொல்லி அங்கே வசிக்க இடம் கிடைக்குமா எனக் கேட்டு கடிதம் அனுப்பினோம்.ஆனால் அவர்கள் அதை நம்பவில்லை.உண்மையிலேயே இப்படி நடக்கிறதா?" எனக் கேட்டார்கள் என்கிறார்.இடையில் அவர் சென்னை போயிருந்த போது கூட ஒரு பத்திரிகையில் எங்கோவொரு மூலையில்தான் நிஜாம் சமஸ்தானம் பற்றிய செய்தியை காண முடிந்ததாக குறிப்பிடுகிறார்.நிலமை இப்படியிருக்கும் போது அசோகமித்திரனின் பதினெட்டாவது அட்சக்கோடு என்பது நிஜாம் காலத்து ஆட்சி பற்றிய மிகப்பெரிய வரலாற்று ஆவணமாய் திகழ்கிறது.ஒரு தனிமனிதனின் காலடியிலிருந்து தான் வரலாறு ஆரம்பிக்கிறது என்பதை அசோகமித்திரன் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார்.சந்திரசேகரன் என்ற நபரின் வாழ்க்கையிலிருந்து எம்மால் நிஜாம்களின் இராஜ்ஜியத்தை கற்பனை செய்ய முடிகிறது.
இரண்டு:அசோகமித்திரன் பார்ப்பனக் கருத்துக்களை தனது படைப்புகளின் ஊடாக விதைத்தவர்.
பதினெட்டாவது அட்சக்கோடு ஏறுவரிசையில் செல்லும் நாவல்.ஆரம்பத்தில் தன்னைச் சுற்றி நடக்கும் அரசியலை புரிந்த கொள்ளாத சந்திரசேகரன் படிப்படியாக தெளிவைப் பெறும் போது ஒரு இந்துவாக மாறி முஸ்லிம்களை வெறுக்கிறான்.காந்தி சுடப்பட்ட செய்தியை கேள்வியுற்றதும் சுட்டவன் முஸ்லிமாக இருப்பானோ என சந்தேகிக்கிறான்.நாவல் உச்சத்தை அடையும் தருணத்தில் நிஜாம் மன்னன் இந்தியாவோடு இணைய சம்மதம் தெரிவிக்கிறான்.இதனையடுத்து நிலமை இந்துக்களுக்கு சாதகமாக மாறுகிறது.ஓர் இரவு கலவரங்கள் வெடிக்கிறது.சந்திரசேகரன் கலவரத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக விரைந்து ஓடி ஒரு வீட்டினுள் அகப்படுகிறான்.அந்த வீடு முஸ்லிம்களுடையது.அந்த முஸ்லிம் குடும்பம் இவன் யார் என்பதை அடையாளம் கண்டுகொண்டு இவனிடம் பயப்படுகிறது.அங்கேயிருந்த பதினாறு வயது மதிக்கத்தக்க ஒரு பெண் இவன் முன்னே வந்து ஆடைகளைக் களைந்து நிர்வாணியாகி தன்னை எடுத்துக் கொள்ளச் சொல்கிறாள்.அதற்குப் பதிலாக தனது குடும்பத்தை விட்டுவிடும்படி இரஞ்சுகிறாள்.அந்த தருணத்தில் சந்திரசேகரன் தான் இந்துவாக இருப்பதையிட்டு வெட்கப்படுகிறான்.அங்கேயிருந்து ஓடுகிறான்.ஓடும்போது அவனது மனம் "இந்தக் கறையை எப்படி அழித்துக் கொள்ள முடியும்?" எனக் கேட்கிறது.
இதன் அடிப்படையில்,என்னால் தைரியமாகச் சொல்ல முடியும்.நாம் ஈடுசெய்ய இயலாதபடி ஒரு நேர்மையான எழுத்தாளனை இழந்து விட்டோம்.
நன்றி.
Kapil Stanislas

LikeShow More Reactions
2 comments
Comments
ப. தெய்வீகன் # எம்மைச் சுற்றி பெரிய அரசியலே நிகழ்ந்து கொண்டிருக்கும்.ஆனால் நாம்,எமக்கான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்போம்.அந்த அரசியலோடு மோதிக் கொள்ளும் வரையில் சுற்றி நடக்கும் பிரச்சினையின் வீரியம் எமக்கு புரிவதில்லை #

# நாம் போராளியாகவோ இராணுவ வீரானகவோ இருந்து கொண்டு கதை சொல்லத் தான் பழகியிருக்கிறோம்.சாமான்யனாக இருந்து கதை சொல்வது மிக அரிதாகவே நிகழ்கிறது # 


அசலான உண்மைகள்!
Like34 hrs
Arunmozhi Varman யுத்தத்தோடு வாழ்ந்த சாதாரண மனிதர்களின் வாழ்வை, அவை போரோடு சேர்ந்து எப்படியெல்லாம் சின்னாபின்னமாகின என்று பேசிய இன்னும் இரண்டு முக்கிய நாவல்கள் கனவுச் சிறை, கசகறணம்
Like42 hrs