தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Sunday, April 02, 2017

விடிவதற்குள் - அசோகமித்திரன் , Muthu Kumar அசோகமித்திரன்: வாழ்விலே ஒருமுறை!

Kaala Subramaniam facebook
பங்கஜத்துக்கு முத்துவை எழுப்புவதற்கு வேதனையாகத் தான் இருந்தது. ஒன்றுக்குள் ஒன்றாக நான்கு பிளாஸ்டிக்வாளிகளை எடுத்து வந்து வாசல் படியில் வைத்தாள். இனியும் தாமதிக்க முடியாது என்று தீர்மானித்து, "முத்து, முத்து' என்று அழைத்தாள்.

முத்து படுக்கையில் அசைந்து கொடுத்தான். "முத்து, எழுந் திரு. என் கண்ணோல்லியோ" என்றாள். அவ்வளவு இருட்டிலும் அவன் ஒருமுறை கண் விழித்துப் பார்த்தது அவளுக்குத் தெரிந்தது.

"இதுக்குள்ளே தண்ணி வந்திருக்காதும்மா” என்று முத்து சொன்னான்.

"வந்துடும்டா, கண்ணு. தெருக்காரா எல்லாரும் போயிட்டா. இப்போவே போனத்தான் இரண்டு மணிக்காவது தண்ணி பிடிச்சுண்டு வந்து கொஞ்சம் கண்ணசரலாம்."

"நீ போய் பக்கெட்டை வைச்சுட்டு வாம்மா. நான் இதோ வந்துடறேன்."

பங்கஜம் வாசல் கதவைத் தாளிடாமல் வெறுமனே சாத்தி விட்டுத் தெருவுக்கு வந்தாள். ஒரு தெரு விளக்கும் எரியாது போனாலும் வீட்டை விட வெட்ட வெளியில் கண் நன்றாகத் தெரிந்தது. விறுவிறுப்பாகப் பல உருவங்கள் வந்து போய்க் கொண்டிருந்தன.

பங்கஜம் சாலையைக் கடந்து எதிர் சாரியில் மூடிக்கிடந்த பல கடைகள் நடுவே மறைந்து கிடந்த ஒரு குறுகலான சந்துக்குச் சென்றாள். சந்து இடைவெளியில் காலி வாளியே இருமுறை பக்கத்துச் சுவரில் இடித்தது. சந்து ஒரு வீட்டின் முற்றத்தில் முடிந்தது. அந்த இருட்டிலும் அங்கு டஜன் கணக்கில் தவலைகளும், வாளிகளும் பரத்தி வைத்தது தெரிந்தது. சுவரோரமாகப் பதித்து118 ம பறவை வேட்டை / விடிவதற்குள்

வைத்திருந்த தண்ணிர் பம்பு அருகே நான்கைந்து ஆண்கள் இருந்தார்கள். அதில் ஒருவர் பங்கஜத்தைப் பார்த்து, "இனிமே இங்கே வராதீங்கன்னு போன தடவையே சொன்னேனே?" என்றார்.

"இன்னிக்கு மட்டும் தயவு பண்ணுங்க. நாளைக்கு வேறே இடத்துக்குப் போறேன்” என்று பங்கஜம் சொன்னாள்.

"இங்கே வீட்டிலே இருக்கிறவங்களுக்கே தண்ணி பத்தலே. சும்மா சும்மா வந்து கூட்டம் கூடினா!"

பங்கஜம் பதில் சொல்லாமல் நின்றாள். "பக்கெட்டை வைச்சுட்டு வெளியே நில்லுங்க தண்ணி வந்தா உள்ளே வந்துக்கலாம்."

பங்கஜம் வாளிகளை ஒரு மூலையில் வைத்துவிட்டு மீண்டும் சாலைக்கு வந்தாள். நட்ட நடுநிசியில் அப்படிச் சாலை யோரமாக நிற்பது அவளுக்கு அசாதாரணமாகத் தோன்றாமல் போய் மாதக் கணக்கில் ஆயிற்று. கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் கிடப்பது சாதாரணமாக இருந்தது. குழாய்த் தண்ணீர் ஒருநாள் விட்டு ஒருநாள் வருவதாகப் பேச்சு. ஆனால் வீட்டுக் குழாயில் வராது. எங்கே வருகிறதென்று தேடிப் பிடித்து அது வரும் இரு மணி நேரத்தில் பரபரக்க ஏராளமானவரோடு தேவையற்ற துவேஷம் வளர்த்து இரு பாத்திரங்களில் வண்டலும் வடிசலுமாகத் தண்ணிர் பிடித்து எடுத்து வந்தால் இரு நாட்களுக்கு அதைச் சமையலுக்கும் வைத்துக் கொண்டு குடி தண்ணீராகவும் கொட்டிக்கொள்ள வேண்டும். இன்றிரவு இங்கு ஒரு வழியாகச் சமாளித்தால் நாளை மறுநாள் இப்படி நடுத் தெருவில் அலைய மனதைத் திடப் படுத்திக் கொண்டால் போதும்.

நடைபாதை ஒரக்கல்லிலும் இன்னும் பலர் காத்துக் கிடந்தார்கள். அங்கு சாதாரணமாகக் கிடைக்கும் அசுத்தத்தில் பகல் வெளிச்சத்தில் நிற்கக் கூட அருவருப்பாயிருக்கும்.

தொளதொளவென்று ஒரு சட்டையை ஒழுங்காகப் பொத்தான் கூடப் போடாமல் முத்து வந்து சேர்ந்தான். பங்கஜம் முத்துவைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். "குழந்தை தூங்கிண்டு இருக்காளா?” என்று கேட்டாள்.

"நான் பார்க்கலேம்மா. ஆனா அவ அழலே" என்று முத்து சொன்னான்.

"கதவைச் சாத்திண்டுதானே வந்திருக்கே?"

"ஆமாம்."

அசோகமித்திரன் 1 19

"நீ இங்கேயே நில்லு, நான் தவலையை எடுத்துண்டு ஐஸ் டெப்போலே ஒரு தடவை தண்ணிபிடிச்சுண்டு வந்துடறேன்."

"இங்கே தண்ணி வந்துடுத்தா?” "இன்னும் வரலே. வீட்டுக்காரா இப்போதான் பம்பை மாட்டிண்டு இருக்கா"

பங்கஜம் சாலையைக் கடக்கவிருந்தவள் சட்டென்று நின் றாள். அசாத்திய வேகத்தில் ஒரு லாரி அவளைக் கடந்து சென்று மறைந்தது. அதை அடுத்து இன்னும் ஒரு காரும் மோட்டார் சைக்கிளும் பறந்து சென்றன.

பங்கஜம் முத்துவைக் கவலையோடு திரும்பிப் பார்த்தாள். பிறகு அவள் வீட்டுக்கு ஒட்டமும் நடையுமாகப் போனாள். தெருவில் அப்போதுதான் யாரோ கைவண்டியில் எங்கிருந்தோ தண்ணீர் பிடித்துக் கொண்டு போயிருக்கிறார்கள். சிந்திய தண்ணீர் தெரு நடுவில் பட்டையாகக் கோடிட்டிருந்தது.

போட்ட படுக்கைக்குச் சம்பந்தமே இல்லாமல் சம்பா தரையில் தூங்கிக் கொண்டிருந்தாள். பங்கஜம் அவளைத் தூக்கவில்லை. படுக்கையில் கிடக்கும் போது குழந்தை விழித்துக் கொண்டால் என்ன செய்வது? பெரியவர்களைப் போலக் குழந்தையும் ஒருநாள் விட்டு ஒருநாள் தூங்கக் கற்றுக் கொள்ள வில்லை.

பங்கஜம் தண்ணீர்த் தவலையுடன் ஒரு வெண்கலப் பானையையும் தூக்கிக் கொண்டு மீண்டும் தெருவுக்கு வந்தாள். எதை நம்பி இருட்டில் குழந்தையைத் தனியே விட்டுவிட்டு வீட்டையும் தாளிடாமல் போகிறோம்? கணவன் ஊரிலிருந் தாலும் இல்லாது போனாலும் இதுவரை தண்ணிருக்காக அவன் இன்னொருவர் வீட்டுக் கொல்லையில் நிற்கப் போகவில்லை. ஆனால் வீட்டுக்கும் குழந்தைக்குமாவது காவலாக இருக்கலாம்.

ஐஸ் டெப்போ காவல்காரன், "ஏய், எங்கே போறே?" என் றான். பங்கஜம் இடுப்பிலிருந்து கால் ரூபாய் சில்லரை எடுத்தாள். அவன் அதைக் கவனியாது போல, "போம்மா. போ போ போ. இன்னிக்கு ஒருத்தரையும் உள்ளே விட முடியாது. போ போ போ!' என்றான். அங்கு கூடியிருந்த கூட்டம் அவனிடம் கடுமையை உண்டு பண்ணியிருக்க வேண்டும். அதைப் பொருட் படுத்தாமல் எல்லா வயதுக்காரர்களும் அவனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார்கள். பங்கஜமும் அவள் பங்குக்கு, "இன்னைக்கி ஒருநாள் மட்டுங்க” என்றாள். ஒருநாள் மட்டும், ஒரு நாள் மட்டும்என்றே எவ்வளவு நாட்களாகி விட்டன? இன்னும் எவ்வளவு நாட்கள் இப்படி?

முத்து அவளைத் தேடி வந்து விட்டான். "இன்னும் மூணு பேர் பிடிச்சப்புறம் நம்பதாம்மா" என்றான்.

"நாலு பக்கெட்டும் சரியா இருக்கா?”

"இருக்கு"

"நீ இங்கே நில்லு. நான் போய் தண்ணி அடிச்சு வைச்சுட்டு உன்னைக் கூப்பிடறேன்."

"இந்த வெங்கலப் பானையை ஏம்மா எடுத்துண்டு வந்தே? இதிலே தண்ணியும் ரொம்பக் கொள்ளலே, தூக்கறதும் கஷ்டமாயிருக்கே?"

"என்ன பண்றதுடா? பெரிய அடுக்கிலே நேத்திக்குத் துணி அலசின தண்ணியைச் சேத்து வைச்சிருக்கேன்.”

முத்துவிடம் தவலையையும் வெண்கலப் பானையையும் ஒப்படைத்து விட்டு பங்கஜம் வாளிகளை வைத்திருந்த வீட்டுக்கு விரைந்தாள். அங்கு இப்போது அசாத்தியக் கும்பல் சேர்ந் திருந்தது. "இப்போ வந்துட்டு எங்கே உள்ளே போறே? நாங்கள் ளாம் உனக்கு மனுஷாள்களாத் தெரியலியா?" என்று ஒரு கிழவி பங்கஜத்தைத் தடுத்தாள்.

"பன்னெண்டு மணிக்கே நான் வந்து பாத்திரம் வைச் சிருக்கேன்."

கிழவி சந்தேகத்துடன் பங்கஜத்தைப் பார்த்தாள். பங்கஜம் அந்தக் கும்பலில் அந்தக் குறுகலான சந்துக்குள் முன்னேறிச் சென்றாள்.

அந்தச் சாலையில் தண்ணிர் வந்த ஐந்தாறு வீடுகளில் அந்த ஒரு வீட்டு பம்பில்தான் சிறிது அதிகமாக வரும். ஆதலால் தண்ணிர் பிடிக்க வருபர்களும் அங்குதான் அதிகம். பம்பு அருகே நின்றவர்களுடன் பங்கஜமும் முண்டியடித்துக் கொண்டு தன் முறைக்குக் காத்திருந்தாள். தண்ணீர் இன்னும் சிறிது நேரமே வரும் என்ற உணர்வில் ஒருவர் தவறாமல் பம்புப் பிடியை அரக்கத்தனமாக இயக்கிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு அடியும் சம்மட்டியடி போல ஒலியெழுப்பிக் கொண்டிருந்தது. பங்கஜத்துக்கு முந்தைய இடத்தில் பாத்திரம் வைத்திருந்த அம்மாள் தலைப்பை இழுத்துச் சொருகிக் கொண்டு தயாராக இருந்தாள். அவள் முறை வந்ததும் பங்கஜமே அந்த அம்மாளுடைய தவலையைப் பம்படியில் நகர்த்தி வைத்தாள். அதைத் தவலை என்பதைவிட வேறு பெயர்
அசோகமித்திரன் ப 121

ஏதாவதுதான் சொல்ல வேண்டும். அது நிரம்பினால் எப்படி நகர்த்துவது என்று ஒரு கணம் பங்கஜத்துக்குப் பயம் எழுந்தது. பாவம், அந்த அம்மாள் வீட்டில் எவ்வளவு நபர்களோ? ஆனால் ஒருவர்கூட அவளுக்குத் துணை வரவில்லை.

தவலை பாதி நிரம்பியபோது அந்த அம்மாள் திரும்பித் திரும்பிப் பார்த்த வண்ணம் இருந்தாள். தவலைக்குப் பிறகு இன்னும் நான்கு பெரிய அடுக்குகள். அதன் பிறகு பங்கஜத்தின் முறை.

இரண்டாம் அடுக்கு நிரம்புவதற்குள் அந்த அம்மாளுக்குப் பெரிதாக மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கத் தொடங்கியது. பம்பு அடிப்பதிலும் கை தடுமாறியது, "நான் அடிக்கறேன். நீங்க பாத்தி ரத்தை நகர்த்துங்க" என்று சொல்லிப் பங்கஜம் பம்ப் பிடியை வாங்கிக் கொண்டாள். பம்பைச் சுவரில் பதித்து வைத்திருந்ததால் ஒரே பக்கமாக ஒரே கையில்தான் அடிக்க முடியும். நிதானமாக அடித்தாலே ஒரு பாத்திரத்திற்குள் கை சளைத்துவிடும்.

பங்கஜம் அந்த அம்மாளின் பாத்திரங்கள் அனைத்திற்கும் தண்ணீர் அடித்துத் தந்துவிட்டுத் தன் வாளியை நகர்த்தி வைத்தாள். அங்கு நின்றிருந்த ஒருவர், "ஒருத்தரே அண்டா அண்டாவாத் தண்ணீர் எடுத்துப்போனா மத்தவங்க என்ன பண்ணுவாங்க?" என்று சொன்னார். மூச்சிறைக்கப் பங்கஜம், "இதுதான் என்னுது முதல் பாத்திரம்” என்றாள்.

அந்த நபர், "யோவ், சந்தானம்! இங்கே என்ன கேள்வி கேப்பாரு யாருமில்லே? இந்தப் பொம்பளைங்க இப்படி ஒரே யடியா பம்பைப் பிடிச்சு வளைச்சிட்டிருக்காங்களே! விடும்மா, நாங்களும் தண்ணி பிடிக்கத்தான் மணிக்கணக்கா நின்னுட்டிருக் கோம்” என்றார்.

தண்ணீர் நிரம்பிய அடுக்குகளை எடுத்துப் போய்க் கொண்டிருந்த அம்மாளிடம் பங்கஜம், "நீங்கதான் அவர்கிட்டே சொல்லுங்கம்மா" என்றாள்.

அந்த அம்மாள் அந்த நபரிடம், "அவுங்க இன்னும் பிடிக்க வேல்லப்பா" என்றாள்.

"ஆமாம், இதுல கூட்டு"

பங்கஜத்தின் தோளே கழண்டுவிடும் போல இருந்தது. இன்னும் மூன்று வாளிகள் அடித்தாக வேண்டும். கொண்டு வந்த வற்றில் முழுக்கத் தண்ணீர் எடுத்துக்கொண்டு போனால்கூட இரண்டாம் நாள் மாலையில் எல்லாம் காலியாகிக் கிடக்கும்.அரிசியைச் சரியாகக் களைய முடியாது. சட்டென்று யாராவது ஊரிலிருந்து வந்து விட்டால் முகம் கழுவிக் கொள்ள ஒரு செம்புத் தண்ணீர் தரமுடியாது. மறுநாள் சுத்தமான வேஷ்டி புடவை வேண்டும் என்றால் துணி நனைத்து உலர்த்த முடியாது.

பங்கஜம் அவளுக்கு ஞாபகமிருந்த தோத்திரங்களை மனதுக் குள் சொல்லிக் கொண்டு பம்பை அடித்தவண்ணம் இருந்தாள். ஒருமுறை கூட ஒரு தோத்திரத்தைக் கூட முழுக்கச் சொல்ல முடியவில்லை. அங்கு விரலிடுக்கு இடமில்லாமல் நிறைந்திருந்த மக்களும் பாத்திரங்களும் அவளுடைய கண்ணில் மிக இலேசான நிழலாகத் தென்பட்டதுபோலத் தோத்திரங்களும் ஒரே குழப்பமான குவியலாக வந்து போய்க் கொண்டிருந்தன. லலிதா சகஸ்ரநாமத்தில் செளந்தர்யலகரி நடுவே கிருஷ்ணாஷ்டகம், பித்துக்குளி முருகதாஸ் பஜன் பாட்டு. அம்மா! அம்மா! அம்மா!

பங்கஜத்துக்கு அம்மாவென்று கத்தியழைக்கக்கூட முடியாது போலத் தோன்றிற்று. அவளுடைய கை ஏதோ தனிப்பட்டுப் போனது போல ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. மார்பு எவ்வளவு கனத்ததோ அந்த அளவு மனம் காலியாக இருந்தது. அவள் அவளே இல்லை. அவள் வேறு யாரோ. வேறு யாரோ என்று சொல்வது கூடத் தவறு. வேறு ஏதோ

மூன்றாவது வாளி அடிக்கும் போது முத்து வந்துவிட்டான். ஐஸ் டெப்போவில் என்ன ஆயிற்று என்று கேட்கக்கூட முடியாமல் பம்புப் பிடியை பங்கஜம் முத்துவிடம் கொடுத்தாள். அவன் கையால் அடிக்க முடியாமல் இரு கைகளாலும் பிடியைப் பிடித்துக் கொண்டு ஒவ்வொரு முறையும் தன் முழு உடலையும் உயர்த்தி அடித்தான்.

பங்கஜம் ஒவ்வொரு வாளியாகத் தூக்கிச் சாலை நடைபாதையில் கொண்டு போய் வைத்தாள். அங்கே இன்னும் எவ்வளவோ பேர் தண்ணீர் பிடித்ததும் பிடிக்காததுமாகப் பாத்திரங்களையும் வாளிகளையும் வைத்திருந்தார்கள். ஆண்கள் சைக்கிள்களில் எப்படி யெல்லாமோ குடங்களையும், தவலை களையும் கட்டித் தொங்க விட்டுக் கொண்டு அலைந்து கொண் டிருந்தார்கள். ஊரே வெறி பிடித்தது போலக் குழாய்த் தண்ணிருக்கு அலை பாய்ந்து கொண்டிருந்தது.

பங்கஜத்துக்கு அடிவயிற்றில் சுளிரென்று ஒருமுறை வலித்தது. போன தடவையும் இப்படித்தான் வலி வந்து தெரு விலேயே சுருண்டு விழுந்திருந்தாள். சம்பா பிறந்தவுடனே அவளது கணவன் ஆஸ்பத்திரியில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தான். ஆபரேஷன் ஆனபோது பெரிய தொந்தரவு இருக்கவில்லை.

ஆனால் இப்போது இரண்டு வருடங்கள் கழித்து வலி வரத் தொடங்கியிருக்கிறது. பெரிதாகிப் போய் படுத்த படுக்கையாகத் தள்ளி விடக்கூடாது.

கிடைசி வாளி அடித்துவிட்டுத் தூக்கமாட்டாமல் அதைச் சிறிது சிறிதாக நகர்த்திக் கொண்டு முத்துவும் நடைபாதைக்கு வந்து சேர்ந்தான். அவனுக்கும் வயிற்றை வலிக்கும். ஹெர்னியா என்று சொல்லிப் போன வருஷமே ஆபரேஷன் செய்ய வேண்டு மென்று டாக்டர் சொன்னார். சொன்னவர் பயமுறுத்திச் சொல்லியிருந்தால் ஒரு வேளை உடனே ஏதாவது செய்திருக்க லாம். பங்கஜம் முத்துவை அணைத்துக் கொண்டாள். நீ போடா வீட்டுக்கு. நான் ஒவ்வொண்ணாய்க் கொண்டு வந்துடறேன்" எனறாள.

'ஐஸ் டெப்போலே சாவித்திரிக்கிட்டே சொல்லிட்டு வந்திருக்கேன். அதையும் அடிச்சுட்டுப் போறேம்மா" என்று முத்து சொன்னான்.

"வேண்டாம்டா, கண்ணா. இது போறும். எப்படியாவது பார்க்கலாம்."

"அப்போ அங்கே போய்க் காலி பாத்திரத்தை எடுத்துண்டு போகட்டுமா?"

"இல்லை, நீ வீட்டுக்குப் போ. நான் எடுத்துண்டு வரேன்." பங்கஜம் ஒவ்வொரு வாளியாகச் சாலையைக் கடந்து மறு புறமிருந்த நடைபாதையில் கொண்டு போய் வைத்தாள். அங்கே ஒரு கன்றுக்குட்டி அவளருகே வந்தது. "போ, போ' என்று விரட்டினாள். அது நகராமல் அங்கேயே நின்றது. அடுத்த வாளி எடுத்து வர அவள் நகர்ந்தவுடன் அது நிச்சயம் தண்ணீரில் வாயை வைத்து விடும்.

பங்கஜம் மறுபடியும் அந்தக் கன்றுக்குட்டியை விரட்ட முயன்றாள். எந்தத் துவேஷமும் பாராட்டாமல் அது சொறிந்து கொடுக்க வாகாகத் தலையை உயர்த்தியது.

"சரி, குடி” என்று பங்கஜம் சொன்னாள். சாலை மறுபுறத்தில் வைத்திருந்த இதர பக்கெட்டுகளை எடுத்து வர விரைந்தாள். நாளை மறு நாள் இந்த அளவு தண்ணீராவது கிடைக்குமா என்று தெரியாது. ஆனால் இன்றையப் போது இதோடு முடிந்துவிட்டது. விடிய இன்னும் வெகு நேரம் இருந்துங்கூட

1984
https://www.facebook.com/permalink.php?story_fbid=1861497027464025&id=100008112377700
அசோகமித்திரன்: வாழ்விலே ஒருமுறை!
---------------------------------------------------------------
(விருட்சம் அழகியசிங்கர் நடத்திய 1.4.17 அஞ்சலிக்கூட்டத்தில் பேசியது)
வாழ்வின் (பல்வேறு தருணங்களில்) நித்திய அபத்தங்களிலும் அபத்த நித்தியங்களிலும் உழலுபவர்கள் பற்றிய கரிசனையைக் கடந்து சென்று சாந்தி நிறைவுறும் ஆன்மீகமோ, கொதிநிலை, கொந்தளிப்பு அரசியலோ, தத்துவமோ அசோகமித்திரனின் படைப்பு வரைபடத்திற்கு அப்பாற்பட்ட இன்மையே.
சமயமற்ற ஆன்மீகம் என்பது அவரது கொள்கையாக இருக்கலாம், ஆனால் அப்பாலைத் தேட்டம் இல்லை, (no trancendance) அற உணர்வு உள்ளார்ந்து அமைதி நிலையில் காந்தியமாக, ஜே.கிருஷ்ணமூத்தியியமாக, பகவத் கீதையியமாகச் சுவடு காட்டுகிறது... என்றாவது ஒருநாள், ஆழமாக உணரும் வாசகர்கள் அவரது நீண்ட நெடும் கதை வரிகளின் இடைவெளிகளில் புதைந்து கிடக்கும் அப்பாலைத் தேட்டச் சாத்தியத்தை கண்டுணரும் சாத்தியமேற்பட்டால் அது அதிசயம்தான்.
வெப் உலகம் இணையதளத்திற்காக 2001-ம் ஆண்டு நான் அவரை நேர்காணல் செய்ய வேண்டியிருந்தது. அப்போது திநகரில் அவர் குடியிருந்தார். நேர்காணல் செய்ய தொலைபேசிய போது நடுக்கம், வாய் குளறல், ஏனெனில் எனக்கு பத்திரிகை உலகம் அப்போது வெகுபுதிது. இது நான் எடுக்கும் முதல் நேர்காணல். மருத்துவப் பிரதிநிதி வேலையிலிருந்து நேரடியாக ஜென்ராமின் அரிய நட்புச் சந்திப்புக்குப் பிறகு வெப் உலக வாசம். ஆனால் அசோகமித்திரன் நிதானமாக ‘எப்ப வருவீங்க?’ என்றார். நான் நேரத்தைச் சொன்னதும், தலைவலி பயங்கரமாக இருக்கிறது மறுநாள் வாங்களேன் என்று கூறினார். அவர் ஆஸ்துமாவுக்காக இன்ஹேலர் உறிஞ்சிக் கொண்டிருந்த காலக்கட்டம், இன்ஹேலர் மருந்து கடும் தலைவலியை ஏற்படுத்தக் கூடியவை என்பது எனது சொந்த அனுபவமும் கூட.
நேர்காணலில் நான் கேட்ட கேள்விகள் அபத்தமானவையா அல்லது அவரை முகம் சுளிக்கவைப்பவையா என்பது கூட தெரியாத காலக்கட்டம், ஆனால் அவர் எந்தக் கேள்வியையும் அப்படி உணரவில்லை என்பது தெரிந்தது. காரணம் அவர் பதில்களில் அவ்வளவு தெளிவு.
பேட்டியை முடித்த பிறகு என்னைப் பற்றி கேட்டார். என் சம்பளத்தைப் பற்றி கேட்டார். நான் என் சம்பளம் 3,000 என்றேன், உங்க எடிட்டர் எவ்வளவு சம்பளம் என்று தெரிந்து கொண்டீர்களென்றால் mind boggling-ஆக இருக்கும் என்றார். 1999 வாக்கில் நான் சென்னை ஐக்கஃப் மன்றத்தில் நடந்த பின் நவீனத்துவம் பற்றிய கருத்தரங்கில் கோணங்கியை விமர்சனம் செய்திருந்தேன், அதையும் அவர் என் பெயரைச் சொன்னவுடன் புரிந்து கொண்டு நீங்க பின்நவீனத்துவ வாதியா என்றார். நான் அப்படிக் கூறிக்கொள்ளும அளவுக்கு எனக்கு வாசிப்பு இல்லை என்றேன். அப்போதைக்கு எனக்கு இந்த சம்பாஷணை ஒரு சந்தோஷ அதிர்ச்சி அளித்தது. எனக்கு நியூ டைரக்‌ஷன்ஸ் என்ற ஒரு பின்நவீனத்துவ படைப்புகள் அடங்கிய நூலையும் சீன நாவல் ஒன்றையும், ஜான் அப்டைக்கின் The Coup என்ற மேஜிக்கல் ரியலிச satire நாவல் ஒன்றையும் எனக்குப் அன்பளிப்பாக அளித்தார். அது பின் காலனிய ஆப்பிரிக்கா பற்றிய ஒரு நையாண்டி நாவல். நிச்சயம் அசோகமித்திரனின் கப் ஆஃப் டீ அதுவல்ல என்று பின்னால் புரிந்தது. ’ஆமா... இந்த Metaphor பத்தி பின்நவீனக்காரா என்ன சொல்றா?’ என்று திடீரென ஒரு கேள்வியைத் தூக்கிப் போட்டார். எங்கும் எப்போதும்-ஏற்கெனவே அனைத்தும் உருவகம்தான் என்று கூறுவார்கள் என்று நான் கூறியதாக நினைவு. பிறகு அவரது தண்ணீர் என்ற ரியலிஸ்ட் நாவலில் கூட தண்ணீர் என்பதை உருவகமாக (தத்துவார்த்த) பேராசிரியர் ஆல்பர்ட் விளக்க முயன்றதைக் குறிப்பிட்டேன். அவர் ஓரளவுக்கு மேல் இதில் ஆர்வம் காட்டவில்லை.
அவர் வில்லியம் பாக்னர், ஹெமிங்வே, ஹென்றி ஜேம்ஸ், ஜாய்ஸ் இன்னும் பல மேதைகளை ஊன்றி வாசித்தவர், ஆனால் அதைப்பற்றியெல்லாம் இப்போது சிலர் பீற்றிக்கொள்பவர்கள் போல் அவர் ஒருநாளும் பீற்றிக் கொண்டதில்லை. அவரை, பேட்டிக்குப் பிறகு வெவ்வேறு நபர்களுடன் ஒரு 4-5 முறையாவது சந்தித்திருப்பேன்.
பேட்டி முடிந்து வெளியே வந்து என் சைக்கிளை எடுக்க வேண்டும், அந்தக் குடியிருப்பில் விளக்கு வெளிச்சம் போதாமையினால் சைக்கிள் பூட்டை திறப்பது கடினமாக இருந்தது. நான் கஷ்டப்படுவதை பார்த்த அவர். உடனே, ‘அந்தப் பக்கவாட்டில் சாவி போட்டு திறப்பது போல் இருந்தால் என்ன கெட்டுவிடப்போகிறது, சைக்கிள் திருடர்கள் பூட்டை உடைத்து எடுத்துச் செல்வது என்ன இமாலய வேலையா? பக்கவாட்டில் இருந்தால் சவுகரியமாக இருக்கும், சைக்கிள் கேரியருக்குள் சாவியை விட்டு திறக்கற மாதிரியான பூட்டு என்னத்துக்கு? இதெல்லம் ‘ரொம்ப கஷ்டம்’! இருங்க நான் டார்ச் லைட் எடுத்துட்டு வரேன்’என்று டார்ச் லைட் எடுத்து வந்தார். நான் பூட்டைத் திறந்தவுடன், இந்தக் காலத்திலும் சைக்கிளில் வரும் பத்திரிகைக்காரராக இருக்கிறீர்கள் என்று ஒரு நமுட்டுச் சிரிப்புடன் என்னை சுயபச்சாதாபம் பீடித்துக் கொள்ளும் விதமாக கூறிவிட்டு உள்ளே சென்றார்.
எனக்கும் உள்ளுக்குள் ஒரு நப்பாசை நிச்சயம் இந்த சைக்கிள் பூட்டு சம்பவம், என் குறைந்த சம்பளம், எனது மிடில் கிளாஸ் உருவம், என்று நான் விரைவில் அவரது கதைமாந்தராக அவரது கதையில் உள்ளே நுழைந்து விடுவேன் என்று கருதினேன். அப்படி ஒரு ஆசை இருந்தது உண்மைதான்!
அவரது மணல் குறுநாவல் என் தாயின் இறப்பு என் குடும்பத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை எனக்கு முன் கூட்டியே சூசகமாக அறிவுறுத்திய அற்புதப் படைப்பு என்றே இப்போதும் என்னால் கருத முடிகிறது. குடும்பத்தினரிடையே இருந்த ஒரு பிடிப்பு தளர்ந்து அனைவருமே ஒட்டுதல் இல்லாமல் ஒரே கூரையின் கீழ் கிட்டத்தட்ட நடைபிணமாகவே வாழ்வார்கள். எம்.பி.பி.எஸ். படிக்க ஆசைக் கொண்ட சரோஜினி மீது தாய் இறந்த பிறகு அனைத்துப் பொறுப்புகளும் விழும், தன் வயதுக்கான இயல்பான காதல் உணர்வுகள் இல்லாமல் இருக்கும் சரோஜினி, கடைசியில் அந்த போட்டோ கடைக்காரர் அழைப்பிற்கு இணங்க சுந்தரம் பார்க் நோக்கி சென்றாள் என்று முடித்திருப்பார். என்னுள் மிகவும் தாக்கம் ஏற்படுத்திய குறுநாவல் இது. என் தாயின் இறப்புக்குப் பிறகு என் குடும்பத்திற்கு நேர்ந்ததை அவர் உளவியல் ரீதியாக படம்பிடித்துக் காட்டியது மட்டுமல்ல, அதன் பிறகு இந்த நாவல் பற்றி நான் பகிர்ந்து கொண்டவர்களிடத்திலும் அவர்கள் குடும்பத்தில் இப்படி நடந்துள்ளதை என்னுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். மிக அரிதாகவே இம்மாதிரியான நெருக்கம் ஒரு படைப்பு கொடுக்கும். அதில் மணல் குறுநாவலை மறக்க முடியாது.
மனித வாழ்க்கையில் நாம் பெரிதும் பொருட்படுத்தாத, எளிதில் கடந்து சென்று விடுகிற சிறுசிறு சிரமங்கள் அதன் இயல்பைத் தாண்டி மனிதனை கூனிக்குறுக செய்பவை என்பதுதான் அவரது பார்வை. நாம் அன்னியமாகிப் போன நிலையில் அனுபவிக்கும் அன்றாட சவால்கள் அவரது பார்வையில் பூதாகரமாக இருக்கும், ஆனால் அவர் வெளிப்பாட்டு வடிவத்தில் அது பூதாகரமாக இருக்காது, அவர் அந்த சிரமங்களை எதிர்கொண்ட விதம் அவருக்கு அதனை பூதாகாரமாகக் காட்டும் போல் தெரிகிறது.
ஆனால் சிறுசிறு சிரமங்களை அனுபவிக்கும் மத்திய தர வர்க்கத்தினரின் பாடுகளை வேதனையுடனும், அபத்த, அவல நகைச்சுவை உணர்வுடனும் அணுகும் இவர் சாதிப்படிமுறை, அடக்குமுறை கொண்ட சமூகத்தில் ஒரு பிரிவினர் இதை விடவும் மிக மோசமான இழிவுகளைச் சந்தித்தது அவருக்கு உறுத்தாதது நமக்கு உறுத்தலாகவே உள்ளது.
மானசரோவர் நாவல் அதன் வடிவம் அப்போது புதிதானதாகும். ஆனால் கோபால்ராவ் குடும்பத்தில் முஸ்லிம் நடிகர் ஏற்படுத்திய இடையூறு, கோபால்ராவ் மனைவியை மனநிலைப் பிறழ்வுக்கு இட்டுச் சென்றதும் இதனால் தன் குழந்தையையே பலிகொடுத்த பயங்கரமும் அதன் பயங்கரத்துடனேயே அமைதியான முறையில் கூற முடிகிறது அவரால், ஆனால் கடைசியில் மெஹர்பாபா என்ற சாமியார் சத்யன் குமார் என்ற அந்த பாகிஸ்தான் ஆரிஜின் முஸ்லிம் நடிகரை மானசரோவர் புனித நீர் மூலம் பாவ நிவர்த்தி செய்து கொள்ளுமாறு வைத்திருப்பது அவரிடம் உள்ள ஒரு இந்து சநாதனியை வெளிப்படுத்துகிறது. அதாவது குரங்குகள் கதையில் கடைசியில் பண்டிதர் ஒருவர் கூறும் தீர்வுக்கும் இதற்கும் வேறுபாடுகள் இருப்பினும் அடிப்படையில் ஒரு சநாதன மனோபாவமே. அவரது மிக முக்கியமான பரிசோதனை நாவலான “இன்று” நாவலில் ஒரு ஆர்.எஸ்.எஸ். குரல் இருக்கிறதே என்று நான் என் பேட்டியில் கேட்ட போது, அவர் ஆம், என்று ஒப்புக் கொண்டார், ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தினரிடையே உள்ள கட்டுக்கோப்பு, ஒழுக்கம் தனக்கு பிடித்தமானது என்றே கூறினார்.
ஒற்றன் நாவலிலும் அயல்நாட்டு எழுத்தாளர் தன் குளிர்பதனப் பெட்டியில் வைத்திருக்கும் அசைவ உணவுகள் பற்றிய சித்தரிப்பும் இத்தகைய மனோநிலையை வெளிப்படுத்துகிறது. தன்னிடம் காதல் உறவுகள், சிக்கல்கள் பற்றி கூறும் இன்னொரு இளம் பெண் எழுத்தாளரின் பிரச்சினை என்னவென்றே அவருக்குப் புரியாததுதான் ஒற்றனில் தெரியவரும். முதன்முதலாக அமெரிக்காவில் இறங்கும் ஒரு நபர் என்ன வயதாக இருந்தாலும் அந்த ஆச்சரியம், குதூகலம் அவரிடம் இல்லை, சென்னயிலிருந்தே அவர் தன் அன்றாடங்களை சுமந்து அமெரிக்கா செல்கிறார், இவ்வாறு குழந்தைமையை இழந்த ஒரு எழுத்தாளராகவே அவர் இருந்திருக்கிறார். ஜான் அப்டைக், ஹென்றி மில்லர் போன்றோரை அவர் வாசித்திருந்தாலும் செக்‌ஷுவாலிட்டி மனித வாழ்க்கையில் ஏற்படுத்தும் மிகப்பெரிய உளவியல் தாக்கங்களும் அவர் கதைகளில் இருப்பதில்லை, அப்படியே இருந்தாலும் அதுவும் சூழலின் நிர்பந்தம் காரணமாக என்று ஒரு சிச்சுவேஷனிஸ்ட் பார்வை மூலமே வலம் வரும்.
செக்‌ஷுவாலிட்டியும் மனிதனின் அடிப்படைப் பிரச்சினைகளுள் மிக முக்கியமானவை, அந்தரங்கமானவை, ”தனி ஒருவனுக்கு ” சிறுகதையில் சூசகமாகவே அது தெரிவிக்கப்படும். செக்‌ஷுவாலிட்டி என்பது வெறும் தேவை என்ற அளவில் பயன்படுவது என்ற பார்வையைத் தாண்டிய சிக்கல்கள் அவரது கருத்திற்கு எட்டவில்லையா, அல்லது எட்டியும் அது எழுதுவதற்கு உகந்ததில்லை என்று நினைத்தாரா என்பது தெரியவில்லை.
இன்னல்களே அன்றாட வாழ்க்கை சவால்களே அவரது லிட்டில் டிவினிட்டீஸ், யேட்ஸ் கூறும் கேஷுவல் காமெடி, சிறுசிறு புனிதங்கள். different sort of little things நபகோவ் கூறும் divine details, லக்கான் கூறும் particular absolutue இந்தச் சட்டகத்தில்தான் அன்றாட நிகழ்வுகள் அவருக்கு அர்த்தமுள்ளதாகின்றன. ஆனால் இந்த அன்றாட இன்னல்கள் தன்னளவிலேயே ஏற்பட்டு தன்னளவிலேயே வாழ்ந்து விடப்படுவதாகவே காட்டப்படுகிறது, அன்றாடச் சமனிலைக் குலைவுக்கு, தடம்புரளலுக்கு உளவியல் ரீதியான ஒரு அடிப்படைத் துன்பம் (traumatic) எதுவும் அவர் கதைகளில் காட்டப்படுவதில்லை. அதனால் பல வேளைகளில் அவரது கதைக்களங்கள் ஆயாசமூட்டுபவையாகவே இருக்கின்றன.
தன் கேரக்டர்களுடன் ஒரு Pathological attachment உள்ளவர் அசோகமித்திரன். இந்தக் கதாபாத்திரங்கள், இந்தக் கதைவெளிதான் அவரது fantacy space ஆனால் இந்த ஃபான்டசி ஸ்பேஸில் கதாபாத்திரங்களுக்கென பிரத்யேகமான ஃபாண்டசி ஸ்பேஸ் இல்லை. இவர்கள் உழல்பவர்களே. இந்த அன்றாடக்கடமை, நித்திய நிரந்தரங்கள் நம்மைக் கட்டிப்போடும் ஒரு அபத்த பந்தம், அசட்டுத்தனமானவை என்ற ஏதோ ஒரு வேதாந்தம் அவரிடம் உள்ளது. காந்தியம், கிருஷ்ணமூர்த்தியியம் ஆகியவற்றுடன் ஒரு சங்கர வேதாந்தியும் அவரிடத்தில் உள்ளார். எனவே அவருக்குள் அவரை விடாது பிடித்திருக்கும் ஒரு சனாதனியை அவரது எழுத்துக்கள் மூலம் எளிதில் கடந்து விட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.
----------------------
பின் இணைப்பு -
எனக்குப் பிடித்த
அசோகமித்திரன் கதை ‘‘விடிவதற்கு முன்”
இங்கே எடுத்துத்தரப்பட்டுள்ளது
- கால சுப்ரமணியம்