தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Sunday, April 22, 2018

மலர் உதிரும் ஒலி - ராஜன் :: சுபமங்களா , நவம்பர் 1992 இதழ்

மலர் உதிரும் ஒலி - ராஜன்

சுபமங்களா , நவம்பர் 1992 இதழ்
http://www.subamangala.in/archives/199211/#p=104

கைக்குச் சிக்காத எதையோ பிடித்துவிட காற்றில் துழாவியபடி இருக்கும் விரல்களின் தவிப்பை கவிதையில் நாம் காணலாம். ஏனெனில்  கவிதையின் சாரம் எந்நிலையிலும், எவ்விதத்திலும் கூறிமுடிக்கப்பட இயலாத ஒன்றாகவே இருக்கும்.
கவிதை எழுதப்பட்ட வரிகளுள் முடிவடைய இயலாது. வாசகனை தன் சாரத்தை அடையக்கோரி திறக்கும் முதல் வாசல் மட்டுமே கவிதையின்  அந்த வரி வடிவில் இருக்கும். கூறப்படாத தளமே கவிதையை கவிதையாக்குகிறது. சொல்லி முடித்த கவிதை உள்ளங்கையில் ஒடுங்கும் ஒரு வட்டம்.  சொல்லி முடியாத கவிதை முடிவின்மை நோக்கி நீட்டப்பட்ட ஒரு கோடு.
________________
உவமைகள் என்ன, படிமங்கள் என்ன, வடிவங்கள் என்ன, பிறழ்வுகள் என்ன, தாளமென்ன, இசையென்ன - கவிஞனின் தவிப்பு கண்டு பிடித்த  முறைமைகள் ஆயிரமாயிரம். அவற்றிற்கு முடிவும் இல்லை . சகல வடிவங்கள் வழியாகவும் தன்னால் | சொல்ல முடியவில்லை என்பதையே  சொல்கிறான்
கவிஞன். இசை வழியாக மவுனத்திற்கு இட்டுச்செல்கிறான். சொற்கள் வழியாக சொல்லற்ற . நிலைக்கு கொண்டு செல்கிறான். இருத்தலின் பாரமும், இல்லாமையின் எடையின்மையும் அவனை வதைக்கின்றன. இன்பத்தின் உச்சிகளும், துன்பத்தின் உச்சிகளும் ஒன்றேயாகிவிடும்
கணங்களில் வார்த்தையற்ற அனுபூதிகளில் அவன் திளைக்கிறான். உள்ளுணர்வுகள் வரைந்த பிம்பங்களை அள்ளிப் பரப்பி தன்னை |
வெளிப்படுத்த முயல்கிறான். படிமங்களும் வார்த்தைகளும் அவனேயறியாத பித்து நிலையில் முயங்கும்போது ஒரு வாசல் திறக்கிறது. நீண்ட பாதை முடிவின்மை நோக்கி அழைக்கிறது. அனுபூதியின் வெளி நம் கண்முன் விரிகிறது.
________________
உன் பெயர்

சீர்குலைந்த சொல்லொன்று
தன் தலையை
தானே
விழுங்கத் தேடி
எனக்குள் நுழைந்தது

துடித்துத் திமிறி
என் மீதிறங்கும் இப்
பெயரின் முத்தங்களை
உதறி உதறி
அழுதது இதயம்
பெயர் பின் வாங்கியது
அப்பாடா என
அண்ணாந்தேன்,

சந்திர கோளத்தில் மோதி அது
எதிரொலிக்கிறது
இன்று இடையறாத உன்பெயர்
நிலவிலிருந்து இறங்கி
என்மீது சொரியும்
ஒரு ரத்தப் பெருக்கு.
________________
மொட்டை மாடி. தனிமையை பூதாகர் வடிவுபெறச் செய்கிற விரிந்த வானம். பனியில் சிவந்த நிலவு. கரிய ஜொலிப்புடன் சத்தமின்றி வளைந்து  வழிந்தோடி வருகிறது உன் பெயர். காரணம் அதன் தலை எனக்குள் இருக்கிறது. விழுங்கும் தவிப்பு அதற்கு. தன் வடிவ முழுமையை அடையும்  உத்வேகம் அதற்கு. படமெடுத்து நிற்கிறது. சிவந்த கண்களை உருட்டிப் பார்க்கிறது. பின்பு என் மீது கவிகிறது. எனக்குள் நுழைகிறது. துடித்து, வால்சுழற்றி, திமிறி எனக்குள் இறங்குகிறது - அதன் விஷமுத்தங்கள். உதறி உதறி என் இதயம் விம்மியழுகிறது. வலியில் துடிதுடிக்கிறது. நுழைய  முடியாது சோர்ந்து தளர்கிறது உன் பெயர். படம் சுருக்கி தணிகிறது. இருளுக்குள் மவுனமாக பின் வாங்குகிறது. பேரமைதி. வலியற்ற நிமிடங்களின்  சுதந்திர எழுச்சி. சுதிமீட்டி விழுங்கும் கண நேர நிம்மதி. ஆனால் உன் பெயர் பூமியிலிருந்து வானோக்கி பொங்கி எழுகிறது. கடல் கொதித்து | மேலெழும் நீராவிபோல. சந்திர கோளத்தின் செம்மையில் அது மோதுகிறது. திசைகள் முழுக்க எதிரொலிக்கிறது. நிலவிலிருந்து இறங்கி பூமிமீது பொழிகிறது. ரத்த மழை போல அனைத்தையும் மூடிக் கொள்கிறது. இடையறாத உன்பெயர் | எங்கும்...
________________
உத்வேகமிக்க கணம் ஒன்று கவிதையாக மாறும் | அற்புதம். அந்த மாற்றியமைக்கும் தருணத்தை எட்ட நாம் மனதால் தாவுகிறோம். படிமங்களும் வார்த்தைகளும் அனுபூதியாகி நம்மை இட்டுச் | செல்கின்றன. பின்பு நின்று விடுகின்றன. பூரணத்தின் மிக அருகே, மிக மிக அருகே,  வார்த்தையேற்ற மவுனத்தில், நின்று கொண்டிருக்கிறோம். படைப்பின் | மகத்தான அந்தக் கணம் தொடும் தூரத்தில், தொட முடியாதபடி, நின்று
ஜ்வலிக்கிறது. கவிதையின் அனுபவம் இதுவே. இது மட்டுமே. ஒரு சொல் அதிகமில்லை இங்கு. ஒரு படிமம் கூட அதிர்ந்து - மேலெழவில்லை.

வார்த்தை வார்த்தையல்லாமலாகிறது. ஒரு இடத்தில் அதன் அர்த்தம் கழன்று விழுகிறது. ஒலி மட்டும் எஞ்சுகிறது. பின்பு ஒலியும் மறைந்து அனுபூதி மட்டும் மீதியாகிறது. 'இடையறாத உன்பெயர்' | உச்சரிப்பில் விரியும் புத்தம்புது வார்த்தைப் | பிரயோகம், சகல அர்த்தங்களையும் மீறியது. 'ஆடி பாயும் புத்தம்புது வார்த்தைப் வரும் தேன்' போல. 'கனல் மணக்கும் பூ' போல. இந்தக் கவிதையில் பாம்பு எனும் படிமம் மிக நளினமாக உள்ளுறைந்துள்ளது. பாம்பு எனும் ஒற்றை வார்த்தை, அல்லது மொட்டை மாடி பற்றிய தகவல், அல்லது பனியும் நிலவும் உருவாக்கும் செம்மை பற்றிய ஒரு குறிப்பு இக்கவிதையை எந்த அளவு கீழிறங்கும் என்பது யோசித்துப் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். இதில் எதுவுமே கூறப்படவில்லை. எல்லாம் ஒன்றான ஒரு வடிவம் மிக இயல்பாக இல்லாமையில் இருந்து இருத்தலுக்கு வருகிறது. ஆம்; விளக்குதல் அல்ல, அறைகூவல் அல்ல, உரைத்தலோ சித்தரித்தலோ அல்ல கவிதை. அது ஒரு கீற்று. வானத்தில் மின்னல் இழுக்கும் கோடு போல ஒரு கணநேரப்பிரம்மாண்டம். புல்நுனியின் பனித் துளியில் அதன் பிரதிபலிப்பு போல அவ்வளவு சிறிதுதான் வார்த்தைகளில் கவிதையின் அம்சம்.
________________
'கொன்ஊர் துஞ்சினும் யாம் துஞ்சலமே
எம் இல் அயலது ஏழில் உம்பர்
மயில் அடி இலைய மாக்குரல் நொச்சி '
அணிமிகு மென்கொம்பு ஊழ்த்த
மணிமருள் பூவின் பாடு நனி கேட்டே ...'

ஊர் உறங்கி விட்டது. இருள் எங்கும் கவிந்து விட்டது. நாங்கள் தூங்கவில்லை. நானும் என் தோழியும். குடிசைக்குள் கண்களைத் திறந்து இருட்டைப்பார்த்தபடி படுத்துக்கிடந்தோம். உனது காலடியோசைக்காக செவிகூர்ந்திருந்தோம். எங்கள் வீட்டருகே ஏழில் மலை மீது நிற்கிறது நொச்சிமரம், மயில்பாதம் போன்ற இலைகளும் கரிய பூங்குலைகளும் கொண்ட பூமரம். அதன் பூத்துக்கனத்த கிளைகள் இரவின் தென்றலில் அசைந்து பூக்களை
உதிர்த்துக் கொண்டே இருந்தன.
மலர் உதிரும் ஒலியை கேட்டபடி இரவு முழுக்க விழித்திருந்தோம். நீ வரவில்லை நேற்று. சங்ககாலக் காதலி காதலனிடம் சொல்கிறாள். எளிய வருணனையில் அவளது மன எழுச்சியின் எல்லையின்மை துடிக்கிறது. பூ உதிரும் ஒலி | கேட்டாளா? அந்த அளவு உன்னிப்பாக கேட்டிருந்தேன் என்கிறாளா? அது எண்ணங்கள் சத்தமின்றி உதிர்ந்தபடியே இருந்த ஒலிதானா? இல்லை நிமிடங்களும் வினாடிகளும் மவுனமாக உதிர்ந்தவண்ணம் இருந்த அனுபவம் தானா? பூ உதிர்ந்து வெறுமையாகும் மரம் போல நம்பிக்கைகளை உதிரவிட்டு வெறுமை கொண்ட மனசைப்பற்றிக் கூறுகிறாளா? அவன் வரும் பாதையில் மலர் தூவிக் காத்திருக்கும் நொச்சிமரம் நான் என்கிறாளா? மூன்று வரிகளில் அவள் இருப்பின் சகல அர்த்தங்களும் உறைந்திருக்கின்றன,
________________
அவள் அன்பும், நம்பிக்கையும், தவிப்பும், தனிமையும், காலமும் அதில் கலந்திருக்கின்றது. கவிதை அதன் அற்புதமான தருணத்தின் உச்சியில் முடிவின்மையை தொட்டு மீள்கிறது. குறுந்தொகைக் கவிஞன் கொல்லன் அழிசிக்கும் தருமு ஜீவராம் பிரமிளுக்கும் இடையே இரண்டாயிரம் வருடங்கள், எத்தனையோ தலைமுறைகள். எப்படியோ மாறிவிட்ட மொழி. ஆயினும் பிரமிள் கவிதையை குறுந்தொகைக்குள் சுவைப்பிசகின்றி கலந்துவிட முடியும். நவகவிதையின் சகல தருக்கங்களையும் மீறாது கொல்லன் அழிசியை நவீன கவிஞன் என்று ஏற்கவும் இயலும். காலம் மாறும். கவிதை மாறுவதில்லை .
- ஒரு புல்லசைவில் பிரபஞ்ச சலனத்தை' காட்டுவதாகவே அது என்றும் இருக்கும். அதன் அனுபூதி தளம் எப்போதும் கூறப்படாத
வார்த்தைகளிலேயே இருக்கும். அத்தனைக்கும் அப்பால் கவிதையின் மையம் தன் பூரண வெளிப்பாடு நிகழாமல் தவித்தபடியே தான் இருக்கும். எக்காலமும் அது அப்படியேதான் நின்றிருக்கும் அதுவரை கவிதைக்கு முடிவில்லை. கவிஞர்களுக்கு ஓய்வுமில்லை.
________________
உன் பெயர், பிரமிளின் கண்ணாடியுள்ளிருந்து எனும் தொகுப்பில் உள்ளது. 'எழுத்து' காலகட்டத்தைச் சார்ந்த கவிஞர்களில் பிரதானமானவர் பிரமிள். கைப்பிடியளவு கடல், மேல்நோக்கிய பயணம் ஆகியவை பிற கவிதை நூல்கள். லயம் பிரசுரம். 
(கொல்லன் அழிசியின் பாடல் குறுந்தொகையில்  38-வது பாடலாகும்.)