ஃப்ராங் காஃப்கா
பட்டினி கலைஞன்
சமீப பத்தாண்டுக் காலங்களில் பட்டினி - கலைஞர்களிடம் காட்டப்பட்டுள்ள அக்கறை வீழ்ந்துவிட்டது தெளிவு. முன் காலத்தில் ஒருவன் தன் சொந்தச் செலவில் அந்தமாதிரி கண்காட்சிகள் நடத்தி அதன் வெற்றியை நிச்சயமாக நம்பி இருக்கலாம், ஆனால் இன்று அது சாத்தியமே இல்லை. அந்த காலம் வேறு. அந்த காலத்தில் நகரம் முழுவதும் பட்டினி - கலைஞர்கள் நிறைந்து இருந்தது. பட்டினி நாளுக்குப் பட்டினி நாள் அவன் மீது உள்ள அக்கறை அதிகரித்தது. ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது பட்டினி - கலைஞனை பார்க்க வேண்டும் என்று விரும்பினார்கள். பின்னர் போகப் போக அந்த சின்ன கிராதிக் கூட்டின் முன்னால் பகல் முடிகிறவரை அதன் முன் உட்காரும் வழக்கமான சந்தாதாரர்களும் ஏற்பட்டிருந்தார்கள். வெய்யில் அடிக்கிற நாட்களில் கூடு வெட்டவெளியில் கொண்டு வைக்கப்பட்டது. இந்த சமயங்களில் முக்யமாக குழந்தைகளுக்குத்தான் இந்த பட்டினி . கலைஞன் வேடிக்கை காட்டப்பட்டான் , வயதானவர்களுக்கு அவன் நகைப்புக்கு உரியவனாக இருந்தான் என்பதுக்கு மேல் எதுவும் இல்லை. அவர்கள் கலந்து கொண்டதும்கூட எதோ அதுதான் நாகரீகமானது என்பதுக்காகத்தான். குழந்தைகளோ, அவன் அங்கே வைக்கோல் மீது உட்கார்ந்து, ஒரு நாற்காலியையும் அலட்சியமாக நினைத்து, மரண வெறுப்புடன் கருப்பு டிராயர் அணிந்து விலா எலும்புகள் தூக்கி துருத்தித் தெரிய, சில சமயம் விநயமாக தலை அசைத்தும் வலிந்த புன்னகையுடன் கேள்விகளுக்கு பதில் சொல்லியும் அவர்கள் தன் உடல் மெலிவை உணரும்படி செய்ய கைகளை கிராதிகளுக்கு வெளியே நீட்டிக் கொண்டும் கூட்டின் ஒரே அலங்காரமாக இருந்த அந்த கடியாரத்தின் அடிப்பையும் கவனியாமல், யாரையும் பார்க்காமல் கிட்டத்தட்ட கண்ணை மூடிக் கொண்டு தன் முன் நேரெதிரே பார்த்துக் கொண்டு மீண்டும் தன் நிலையில் ஆழ்ந்தும் உதடுகளை நனைத்துக்கொள்ள ஒரு சிறு பிங்கானிலிருந்து எப்போதாவது தண்ணீரை உறிஞ்சிக் கொண்டும் அவன் உட்கார்ந்து கொண்டிருந்த போது குழந்தைகள் திறந்த வாயுடன் அவனை பார்த்துக்கொண்டிருப்பார்கள்.
வந்து போய்க் கொண்டிருந்த வேடிக்கை பார்ப்போரைத் தவிர அங்கே பொது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த காவல்காரர்கள் இருந்தார்கள். என்ன விசேஷ காரணமோ கசாப்புக்காரர்கள் அவர்கள், அதுவும் எப்பவும் மூன்று மூன்று பேர்களாக திருட்டுத்தனமாக அந்த பட்டினி - கலைஞன் எங்கேயாவது உணவருந்த விடாமல் இருக்கப் பார்த்துக் கொள்ளத்தான் இராப்பகல் வேலை அவர்களுக்கு இடப்பட்டிருந்தது. ஆனால் இது ஒரு ஒப்புக்குத்தான். பொது ஜனங்களை திருப்திப் படுத்தத்தான் இது ஏற்படுத்தப்பட்டது. ஏனென்றால், பட்டினி கலைஞன் என்ன நேர்ந்தாலும் வலுக்கட்டாயப் படுத்தினாலும் கூட, பட்டினி நோம்பு நாட்களில் எந்த ஆகாரமும் எடுத்துக் கொள்ளமாட்டான் என்பது விவரம் அறிந்தவர்களுக்கு நன்றாக தெரியும். கலைஞன் என்ற அவனுக்கு உள்ள ஒரு அந்தஸ்து, அத்தகைய காரியத்தை அவன் செய்யவிடாது. எல்லா காவலாளிகளுக்கும் இது அவ்வளவாக தெரியாது. சில சமயம் தங்கள் காவல் வேலையில் கண்டிப்பில்லாத காவல்கோஷ்டி உண்டு. அந்த பட்டினி - கலைஞன் ஏதாவது ரகசியமாக வகை செய்து கொள்வான் என்று அவர்கள் நம்பிக்கொண்டு அவன் அதை சாப்பிட்டு பசியாற்றிக் கொள்ள வாய்ப்புத் தரும் உத்தேசத்துடன் வேண்டுமென்றே தள்ளி ஒரு ஓரமாக சேர்ந்து உட்கார்ந்து சீட்டாட்டத்தில் மூழ்கி இருப்பார்கள். அந்தமாதிரி காவலாளிகளைவிட வேதனை தருவது பட்டினி - கலைஞனுக்கு வேறு எதுவும் இல்லை. பேச முடியாத துக்கம் பெருகச் செய்தார்கள் அவர்கள். அவன் உண்ணா நோன்பு இருப்பதை ரொம்ப கஷ்டமானதாக ஆக்கினார்கள் அவர்கள். சில சமயம் தன் பலவீனத்தையும் பாராட்டாமல் இதுமாதிரி காவல் சமயங்களில் அவன் பாடுவான், ஜனங்களது சந்தேகங்கள் நியாயமானதல்ல என்று அவர்களுக்கு காட்டதன் பலம் இடம் கொடுக்கும் வரை வெகு நேரம் பாடுவான். ஆனால் அவை கூட அவனுக்கு பயன்படவில்லை. அந்த மாதிரி நிலைகளில் பாடும் போது கூட அவன் சாப்பிட முடிகிற சாதுர்யத்தைப்பற்றி அவர்கள் வியப்பார்கள். தன் கூண்டுக்கு அருகே உட்கார்ந்து ஹாலில் மங்கலான வெளிச்சமும் போதாது என்று, காட்சி மானேஜர் அவர்களுக்கு கொடுத்திருந்து பாக்கெட் டார்ச்சுகளை அவன் மீது திருப்பி விட்டுப் பார்க்கும் காவலாளிகளைத்தான் அவன் மனதுக்குப் பிடித்திருந்தது. பிரகாசமான அந்த வெளிச்சம் அவனுக்கு தொந்திரவாகவே இல்லை. எப்படி இருந்தாலும் அவனால் நன்றாக தூங்க முடியாது, ஏதோ கொஞ்சம் பூனைத் தூக்கம் போடலாம், எந்த வேலையில் எந்த வெளிச் ச த் தி லு ம் ஹாலில் கூட்டம் நிரம்பி வழிந்து ஓரே சத்தமாக இருக்கிறபோதும் சரி. அந்த மாதிரி காவலாளிகளுடன் இரவு முழுக்க தூங்காமல் விழித்திருக்கத்தான் அவனுக்கு இஷ்டம். அவர்களுடன் தமாஷ் பேசவும் தான் ஊர்சுற்றின் கதைகளை எல்லாம் அவர்களுக்கு சொல்லவும் அல்லது அவர்களது கதைகளை கவனிக்கவும் ஈடுபட்டிருந்தான். எப்போதும் விழித்தே இருக்க ஏதாவது செய்ய, தன் கூண்டில் சாப்பிட எதுவும் இல்லை என்றும் அவர்களில் யாரும் செய்ய முடியாத விதமான ஒரு பட்டினி நோம்புதான் மேற்கொண்டிருப்பதாக அவர்களுக்கு காட்ட ஏதுவாக இருக்கும் எதையும் செய்ய அவன் விரும்பினான். ஆனால் அவனுக்கு ரொம்ப மகிழ்ச்சி ஏற்படுகிற அந்த விநாடி, காலை வந்ததும் அவனை ஒட்டி அவர்களுக்கு நல்ல சாப்பாடு கொண்டு வரப்பட்டதும், இரவு முழுக்க விழித்து அலுத்து நல்ல பசியுடன் இருக்கும் ஆரோக்யக்காரர்களுக்கு உள்ள பசியுடன் அவர்கள் அதை கவ்விச் சாப்பிடு வதை பார்க்கிற போது தான். இந்த உணவு காவலாளிகளை வசப்படுத்துவதற்காக அசிங்கமான முயற்சி என்று பாவனை செய்கிறவர்களும் இருந்தார்கள். ஆனால் அப்படி ரொம்ப சொல்லி விடக்கூடாது. இந்த உணவு இல்லாமல் இரவு முழுக்க இந்த காவலை அவர்கள் அந்கறையாக செய்ய இஷ்டப்படுவார்களா என்று அவர்களை கேட்டால், மனசுக்குள்ளே ஒரு சந்தேகத்துக்கு இடம் கொடுத்து வந்தாலும்கூட, தேள்வி பிடிக்காத பாவனையாக முகத்தை சுளித்துக் கொள்வார்கள்.
பார்க்கப்போனால் உண்ணாவிரதத்துடன் தவிர்க்க முடியாதபடி சம்பந்தப்பட்ட சந்தேகங்களில் இது ஒன்று. ஒரு பட்டினி - கலைஞன் பக்கத்தில் தினம் இராப்பகலாக ஒரு காவல்காரனாக பொழுதை கழிக்க யாருக்கும் இயலாது என்பது தெரிந்தது. அவன் உன்ணாவிரதம் உண்மையில் தடைப்படாமல் பூரணமானது என்று யாரும் தன் கவனிப்பிலிருந்து நிச்சயமாக சொல்லிவிட முடியாது. பட்டினி - கலைஞன் ஒருவனுக்குத்தான் அது தெரியும். எனவே பட்டினி விரதக்காரனேதான் தன் பட்டினி விரதத்தை முழுத்திருப்தியுடன் பார்க்கும் ஒருவனாக இருக்க முடியும்; ஆனால் அவனுக்கு திருப்தி ஏற்படாததுக்கு இன்னொரு காரணமும் உண்டு. அவனை பார்க்க சகிக்கவில்லை என்று வருத்தத்துடன் பலர் வராமல் தங்கிவிட்டதுக்கு காரணமான அவன் உடல் மெலிவு பட்டினி காரணமாக ஏற்பட்டது என்று இல்லாமலும் இருக்கலாம். ஒருவேளை அவனுக்கு தன்மீதே ஏற்பட்ட அதிருப்தியினால் இந்த மெலிவு ஏற்பட்டிருக்கக் கூடும்; உண்மை என்னவென்றால் அவனுக்கு மட்டும்தான் தெரியும், வேறு யாருக்கும் - அறிவாளிகளுக்கும் கூட தெரியாது - பட்டினி எவ்வளவு லேசான காரியம் என்று உலகத்துலேயே எளிதான விஷயம் அதுதான். அவன் அதை ரகசியமாக வைத்துக்கொள்ளவில்லை : ஆனாலும் யாரும் அவனை நம்பவில்லை; உயர்த்திச் சொன்னால் அவன் அடக்கமானவன் என்றார்கள். ஆனால் சகஜமாக. அவன் விளம்பர வேட்டைக்காரன், சுத்த புரட்டுக்காரன், பட்டினி இருப்பது எளிது அவனுக்கு, ஏனென்றால் எப்படி எளிதாக ஆக்கலாம் என்று அவனுக்குத் தெரியும், அது சாத்தியம் என்கிறதையும் வாய்விட்டு ஒப்புக்கொள்ளக்கூடிய துடுக்கு இருக்கிறது என்றுதான் ஏசப்பட்டான். இதையெல்லாம் அவன் ஏற்றுக்க வேண்டி இருந்தது. வருஷம் ஆக ஆக இதெல்லாம் பழக்கமாகிவிட்டது அவனுக்கு . ஆனால் அவனுக்குள்ளே ஓயாத அரிப்பு இருந்து வந்தது.
இருந்தாலும், தன் உபவாச காலமுடிவில் ஒரு தடவை கூட அவன் தன் கூட்டை விட்டு மனமொப்பி தானாக வெளியேறினான் என்று கிடையாது - இதை எல்லாரும் ஒப்புக் கொள்ள வேண்டித்தான் இருந்தது. காட்சி நிர்வாகி அதிகபக்ஷ பட்டினிக் காலம் நாற்பது நாள்தான் என்று நிர்ணயித்திருந்தார். அதற்கு மேல் போகவிடமாட்டார், பெரிய உலக நகரங்களில் கூட. தக்க காரணம் இல்லாமல் இல்லை. படிப்படியாக அதிக விளம்பரம் மூலம் ஒரு நகரத்து மக்களின் அக்கறையை ஒரு நாற்பது நாட்களுக்கு ஏற்றிவைக்க முடியும். ஆனால் அந்த கால் முடிவில் பொதுஜன உற்சாகம் இறங்கிப் போய் ஆதரவு வெளித்தெரிய வீழ்ந்து விடுகிறது என்பது அனுபவத்தில் தெரிய வந்திருக்கிறது. இது சம்பந்தமாக தேசத்துக்கு தேசம் நகரத்துக்கு நகரம் சொற்ப வித்தியாசங்கள் இருந்தாலும் உயர்ந்த பக்ஷ கால் வரை நான்பது நாட்கள்தான் என்று வரையறை இருந்தது. ஆகவே நாற்பதாம் நாளன்று புஷ்ப அலங்காரக் கூண்டின் கதவு திறக்கப்படும். உற்சாகமுள்ள கூட்டம் அரங்கு நிறைந்து இருக்கும். ராணுவ பாண்டு வாசிக்கும். பட்டினி - கலைஞனின் உடல் அளவை எடுக்க இரண்டு டாக்டர்கள் கூண்டுக்குள் நுழைவார்கள் ஒரு மெகா போன் மூலம் ஹால் கூட்டத்துக்கு முடிவு அறிவிக்கப்படும். பிறகு முடிவாக இரண்டு யுவதிகள் வருவார்கள். இந்த வேலைக்கு வேறு யாரையும் இல்லாமல் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதில் மகிழ்ச்சி அவர்களுக்கு. அந்த பட்டினி - கலைஞனை கூண்டிலிருந்து வெளியே படி இறங்கி அழைத்துச் செல்ல வேண்டியது அவர்கள் வேலை. படி அடியில் ஜாக்கிரதையாக தயாரித்துத் தேர்ந்தெடுத்த ஒரு நோயாளியின் பத்திய உணவு வைக் கப்பட்ட ஒரு சிறு மேஜை இருக்கும். இந்த சமயத்தில் வழக்கமாக பட்டினி - கலைஞன் முரண்டுவான். அந்த யுவதிகள் குனிந்து உதவிக் கை நீட்டும் போது தன் எலும்புக் கைகளை அவர்கள் கைமீது வைப்பதற்கு அவனுக்கு சம்மதம் தான். ஆனால் அவன் அதை நிறுத்தத்தான் விரும்பவில்லை. நாற்பதாம் நாள் முடிவில் எதுக்காக இப்போது நிறுத்தவேண்டும், இன்னும் நீண்ட காலம் - கணக்கிட முடியாத நீண்ட காலம் - அவன் அதை தாங்கி இருக்க முடியும். இப்போது ஏன் நிறுத்தவேண்டும், அவன் பட்டினி நோன்பு நல்ல கட்டத்தில் இருக்கும் போது? இல்லை, இன்னும் நல்ல கட்டத்தை அடைந்து விட்டதாகக் கூட சொல்ல முடியாது. உண்ணாவிரதம் இருந்துகொண்டே இருக்கும் கவுரவம் ஏன் அவர்கள் தனக்கு கிடைக்காமல் இருக்கச் செய்ய வேண்டும். தன்னையே தான் மேலே மேலே மிஞ்சிக்கொண்டு - ஏனென்றால் தன் பட்டினி சக்திக்கு எல்லையே கிடையாது என்று அவனுக்குத் தெரியும் - எக்காலத்துக்குமான தலைசிறந்த பட்டினி - கலைஞனாக - ஒரு வேளை ஏற்கனவே ஆகிவிட்டானோ - தான் ஆக விடாமல் ஏன் செய்ய வேண்டும் அவர்கள்? தன் வித்தையைக் கண்டு வியப்பதாக பாவிக்கும் இந்த கூட்டம் தன்னிடம் அவ்வளவு பொறுமை ஏன் காட்டாமல் இருக்கவேண்டும்? பட்டினி நோம்பு இருந்துகொண்டே இருப்பதை தான் பொறுத்துக் கொள்ள முடியுமானால் அவர்கள் ஏன் தன்னை சகித்துக்கொள்ள முடியாது. தவிரவும் அவனுக்கும் அலுப்பாக இருந்தது. வைக்கோல் நடுவில் அவன் ஆசனம் வசதியாக இருந்தது. இப்போது அவர்கள் அவனை கிளப்பி எழுந்திருக்கச் சொன்னார்கள். சாப்பிடப் போகச் சொன்னார்கள். அந்த சாப்பாட்டு நினைப்பே அவனுக்கு குமட்டல் உண்டாக்கியது. அந்த பெண்களிடம் உள்ள மரியாதையால்தான் அவன் அதை அடக்கிக்கொண்டான். ரொம்ப சினேக பாவனையாகத் தோன்றின, ஆனால் உண்மையில் கொடுமையாக இருந்த அந்த பெண்களை உற்று நோக்கினான். ஒல்லியான கழுத்துக்கு மீறி பளுவாக இருந்த தன் தலையை மறுத்தாட்டினான். ஆனால் இந்த சமயத்தில் எப்பவும் நடப்பது நடந்தது. காட்சி நிர்வாகி வருவார், மவுனமாக, ஏனென்றால் - வாத்ய இசை பேச விடாமல் செய்துவிடும் - அந்த பட்டினி - கலைஞனுக்கு மேலாக கையை உயர்த்தி, வைக்கோல் மீது இருந்த அந்த பரிதாபகர பிராணத்தியாகியை பார்க்கும்படி தேவலோகத்தையே அழைப்பது போல ஏதோபாவனை செய்வார். அந்த பட்டினி - கலைஞன் உயிர்த் தியாகிதான், நிச்சயமாய் , ஆனால் வேறு ஒரு அர்த்தத்தில் . பிறகு அவர் பட்டினி - கலைஞ்னின் ஒல்லியான இடுப்பை , எவ்வளவு எளிதில் முறியத்தக்க பொருளைதான் கையாள வேண்டி இருக்கிறது என்பதை அதீதமான எச்சரிக்கை எடுத்துக்கொள்வதன் மூலம் வெளித் தெரியச் செய்ய முயற்சிப்பவராக, பிடிப்பார். பிறகு அவனை - மறைவாக கொஞ்சம் ஆட்டிக்கொடுத்து அவன் கால்கள் லேசாக தள்ளாட, அவன் உடல் வசமில்லாமல் தடுமாறச் செய்து அவனை அந்த பெண்களிடம் ஒப்பிப்பார். இதுக்குள் அவர்கள் முகம் வெளிறிப்போய் இருப்பார்கள். அப்புறம் அந்த பட்டினி - கலைஞன் மேற் கொண்டு எதிர்ப்பு காட்டமாட்டான். அவன் தலை நெஞ்சில் படிந்திருக்கும், ஏதோ அங்கே உருண்டு போய் பிரிக்க முடியாதபடி ஒட்டிக் கொண்டிருப்பது போல். அவன் வயிறு குகை மாதிரி இருக்கும். அவன் கால்கள், தம்மை காத்துக்கொள்ள முற்படும் ஒரு உறுத்தலால் உந்தப்பட்டு முழங்கால் இடுக்கில் நெருங்கி இருக்கும். இருந்தாலும் அவன் பாதங்கள், தரையை அது உண்மை இல்லை என்பது போலவும், உண்மையான ஒன்றை தேடிக் கொண்டிருப்பது போலவும் சுரண்டிக்கொண்டிருக்கும். அவன் உடலின் பளு முழுவதும் அவன் லேசாக இருந்தாலும், பெண்களில் ஒருத்தி மீதே விழுந்தது. அவள் மூச்சுத் தடுமாறி, உதவியை எதிர்பார்த்து மன்றாடுபவளாக சுற்றுமுற்றும் பார்த்து (தனக்கு கிடைத்த இந்த கவுரவ பதவியை அவள் இப்படி சித்திரித்துப் பார்க்கவில்லை) முதலில் அந்த பட்டினி - கலைஞனுடன் ஒட்டாமல் இருக்க தன் கழுத்தை முடிந்த மட்டுக்கு தள்ளி வைத்துக்கொண்டாள். பிறகு இதனாலும் எதுவும் பயன் இல்லாது போகவே, அவளது அதிர்ஷ்டக்கார கூட்டாளி அவளுக்கு எந்த வித உதவியும் தராது போகவே, தன் நடுங்கும் கையில் வெறும் எலும்புக் கட்டாக இருந்த அந்த பட்டினி - கலைஞன் கையை சுமந்து கொண்டு போவதோடு திருப்திப் பட்டுக் கொண்டாள். சபையோரது மகிழ்ச்சி ஆரவாரம் தொடர , அவள் கண்ணீர் விட்டாள். வெகு நேரமாக தயாராக இருந்த ஒரு பணியாள் வந்து, அவளிடமிருந்து வேலையை மாற்றிக்கொண்டாள். பிறகு சாப்பாடு வரும். அதில் கொஞ் சம், பாதிப் பிரக்ஞை தப்பிய அந்த பட்டினி - கலைஞன் விழுங்கச் செய்வார் அந்த காட்சி நிர்வாகி. இடையே அவனது நிலைமையிலிருந்து பிறர் கவனத்தை திருப்ப சுமுகமாக வம்பு அடிப்பார் . பிறகு பொது ஜனங்கள் முன் ஒரு டோஸ்ட் நடக்கும். பட்டினி - கலைஞன் இதை ரகசியமாக தன் காதில் ஓதினமாதிரி அவர் பாவனை செய்வார். வாத்யகோஷ்டி முரசு தட்டி ஆர்பாட்டம்மாக உச்சகட்டத்தில் இசைக்கும். கூட்டம் கலைந்து போகும். தான் தான் பார்த்ததைப் பற்றி அதிருப்தி கொள்ள யாருக்கும் இடம் இருக்காது அந்த பட்டினி - கலைஞனைத் தவிர யாருக்கும். எப்பவும் அவன் ஒருவனுக்குத்தான்.
இப்படி பல வருஷங்கள் நடந்தது. உடம்பைத் தேற்றிக்கொள்ள கொஞ்சம் கொஞ்சம் இடை நாட்கள் மட்டும் இருக்கும். உலகத்தால் கவுரவிக்கப்பட்டு அவன் கீர்த்தியுடன் வாழ்ந்தான். ஆனால் அவனோ பெரும்பாலும் மனக் கிலேசம் நிறைந்து இருந்துவந்தான். யாரும் அதை அறிந்து கொள்ளாதது அந்த விசனத்தை இன்னும் அதிகப்படுத்தியது. உண்மையாக, ஒருவன் அவனுக்கு என்ன வேறு வசதி செய்து தர முடியும்? அவன் விரும்பக் கூடியது வேறு என்னதான் இருக்கிறது. சில சமயம் ஒரு நல்லெண்ணக்காரர் அவனிடம் பரிதாபம் கொண்டு, அவனுக்கு ஆகாரம் இல்லாதது தான் இந்த விசனத்துக்கு காரணம் என்று விளக்க முயன்றால் அது இருக்கலாம். பட்டினி நாட்கள் ரொம்ப அதிகம் ஆகிவிடுகிற போது - அந்த பட்டினி - கலைஞன் ஒரே கோபத்துடன், சுற்றி இருப்பவர்கள் பயப்படும் படியாக ஒரு காட்டு மிருகம் மாதிரி கூண்டுக் கிராதிகளை ஆட்டி பதில் சொல்வான். ஆனால் அந்த மாதிரி ஏற்படும்போது நிர்வாகி தனக்குப் பிடித்த, வழக்கமாக கையாளும் தண்டனையை கையாளுவார். பட்டினி - கலைஞன் சார்பாக, கூடியிருந்தவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு, பட்டினியால் ஏற்படும் ஆத்திரத்தை அறிந்து கொண்டால்தான் அவனுடைய நடத்தையை மன்னிக்க முடியும், நன்றாக சாப்பிட்டவர்களிடம் இந்த ஆத்திரம் இருப்பதை அவ் வளவு எளிதில் அறிந்து கொள்ள முடியாது என்று சொல்வார். பிறகு அந்த பட்டினி - கலைஞன் இன்னும் நீண்ட காலம் உண்ணாவிரதம் இருக்க முடியும் என்று அதேபோல் புரியத்தக்க தாவாவையும் தர்க்கரீதியாகக் கூறி அதனால் ருஜுவாகும் உயர்ந்த முயற்சி, போற்றக்கூடிய உறுதி, மகத்தான தன் மறுப்பு இவையெல்லாம் புகழ்வார். பிறகு அவர் இந்த உரிமையை மறுப்பது போல் சில போட்டோக்களை விநியோகிப்பார். அவை விலைக்கும் தரப் படும். அவைகளால் அந்த பட்டினி - கலைஞன் நாற்பதாம் நாள் உபவாசத்தில் படுக்கையில் பலவீனமாக படுத்து சாகிற சமயத்தில் இருப்பதை ஒருவன் பார்க்கலாம். இப்படி உண்மை திரிக்கப்படுவது பட்டினி - கலைஞனுக்கு ரொம்ப நன்றாகத் தெரியும். இருந்தாலும் இப்படி நடக்கும்போது அவனால் தாங்க முடியாதபடி ரொம்ப வாதைப்படுத்தும். உபவாசத்தை இப் படி அகாலத்திலேயே முடித்து விட்டதால் ஏற்பட்ட ஒரு விளைவை இங்கே அதற்கு ஒரு காரணமாக எடுத்துக் காட்டுகிறார்கள்! இந்த அறியாமைக்கு, உலகத்தின் அறியாமைக்கு எதிரே போராடுவது முடியாத காரியம். ஒவ் வொரு தடவையும் கூண்டுக் கம்பிகளை ஒட்டி நின்று கொண்டு காட்சி நிர்வாகி சொல்வதை ஆர்வத்துடன் கேட்பான். ஆனால் எப்பவும் ஃபோட்டோக்கள் கொண்டு வரப்பட்டதும் கம்பிகளைப் பிடித்த பிடியை தளர்த்தி திரும்புடவைக் கோலில் உட்காந்து விடுவான். நிச்சயப்படுத் திக்கொண்ட கூட்டம் மறுபடியும் கிட்டவந்து தொந்திரவு இல்லாமல் அவனை பார்க்கமுடியும்.
- இந்தமாதிரி காட்சிகளை பார்த்தவர்கள் சில வருஷங்கள் கழித்து அவை பற்றி நினைத்துப் பார்த்தபோது அவர்கள் தங்களை அறிந்து கொள்ள சிரமப்பட்டார்கள். ஏனென்றால் இதற்கிடையே மேலே குறிப்பிட்ட மாறுதல் ஏற்பட்டு விட்டது. ஒருவேளை அதுக்கு ஆழ்ந்த உட்காரணங்கள் இருக்கலாம். ஆனால் அவைகளை எல்லாம் துருவிப்பார்க்க யாருக்கு அக்கறை? எதானாலும், போஷிக்கப்பட்ட அந்த பட்டினி - கலைஞன் ஒரு நாள் வேடிக்கை பார்க்கும் கூட்டம் தன்னை கைவிட்டுவிட்டதை உணர்ந்தான். இதைவிட மற்ற வேடிக்கைகளை பார்க்க அது கூடினது. மறுபடியும் அந்த நிர்வாகி அங்கே இங்கே அந்த பழைய அக்கறை வெளித்தோன்றதா என்று பார்க்க அவனோடு பாதி ஐரோப்பா சுற்றினார். பயனில்லை - ஏதோ ஒரு ரகசிய ஏற்பாடு போல எங்குமே பட்டினிக் காட்சிகளிடம் ஒரு வெறுப்பு வளர்ந்திருந்தது. திடீரென இப்படி ஏற்பட்டிருக்க முடியாது உண்மையாக வெற்றி போதை நாட்களில் போதுமானபடி கவனித்திராத அல்லது தக்கபடி தடுத்திராத சில எச்சரிக்கைக் குறிகள் இப்போது யாருக்காவது மந்தமாக ஞாபகத்தில் இருக்கும். ஆனால் அது விஷயமாக எதாவது செய்ய காலம் மீறிப்போய்விட்டது. பட்டினி நோன்புக்கான காலம் மீண்டும் திரும்பும் ஒரு நாள் என்பது நிச்சயம் தான், ஆனால் இப்போது இருப்பவர்களுக்கு அது ஆறுதல் இல்லையே. அந்த பட்டினி - கலைஞன் இப்போது என்ன செய்வது? ஆயிரக் கணக்கானவர்கள் பாராட்டுக்கு உள்ளான அவன் சின்ன திருவிழாக் காட்சி சாலைகளிலும் கூட தன்னை வேடிக்கை காட்டிக் கொள்ள முடியவில்லை. வேறு வேலைக்குப் போகலாம் என்றால் அவனுக்கு வயது அதிகமாகி விட்டது; அது மட்டுமில்லை, உபவாசத்தில் தான் அவனுக்கு ரொம்பவும் ஈடுபாடு வெறியாக ஏற்பட்டு விட்டது. ஆகவே நிர்வாகியை. நல்ல வாழ்க்கைப்போக்கில் உடன் இருந்த தோழனை விலக்கிவிட்டு ஒரு பெரிய சர்க்கஸில் சம்பளத்தில் சேர்ந்தான். தன் உணர்ச்சி பாதிக்கப்படாமல் இருக்க அவன் ஒப்பந்த நிபந்தனைக் கூட ஆராயவில்லை.
மாறுபட்ட வித்தைக்காரர்களையும் மிருகங் களையும் நிறைந்த கருவிகளையும் சாதனங்களை யும் நிறைய கொண்ட ஒரு பெரிய சர்க்கஸில் இன்னொரு , வேடிக்கைக்கும் இடம் இருக்கும், ஒரு பட்டினி - கலைஞனுக்கும் கூட. அதாவது, அவன் ஏதோ ஒரு அளவுக்கு தன் சாதனையை காட்டிக் கொள்ள முடியுமானால். ஆனால் இந்த விஷயத்தில் அமர்த்தப்பட்டது பட்டினி கலைஞன் மட்டும் இல்லை, அவனது வெகு நாளைய பிரபலமான பெயரும் கூடச் சேர்ந்தது. வயது அதிகரிப்பினால் வித்தைத் தரம் குறையாத இந்த கலையின் தனித்தன்மையால், ஏதோ தன் சக்தி எல்லாம் இழந்த ஒரு தளர்ந்த கலைஞன் ஒரு சர்க்கஸில் நிம்மதியாக ஒரு மூலையில் போய் தஞ்சம் புகுந்து கொண்டான் என்று சொல்லிவிட முடியாது. அதுக்கு மாறாக எப்பவும் போலவே தான் உபவாசம் இருக்கமுடியும் என்று அந்த பட்டினி - கலைஞன் உத்திரவாதம் அளித்தான். முழுக்க உண்மையான ஒரு உத்தரவாதம் தான். உண்மையில் அவன் தன் இஷ்டப்படி விட்டால் (அந்த சலுகை அவனுக்கு உடனே தரப்பட்டது முதல் தடவையாக உலகத்தையே நியாயமான வியப்பில் ஆழ்த்தி விட முடியும் என்று வலியுறுத்திச் சொன்னான். காலத்தின் சுபாவத்துக்கு ஏற்ப தன் உற்சாகத்தில் அந்த பட்டினி - கலைஞனே மறந்து இருந்த ஒரு உரிமை விஷயம் தெரிந்தவர்களிடமிருந்து கிளம்பும் ஒரு புன்னகையில் தான் இது வெளித்தெரியும்.
பட்டினி - கலைஞன், இருந்தாலும் உண்மை நிலையை கவனிக்கத் தவறல்லை. தன் கூண்டு ஒரு விசேஷ கவனத்துக்கு உரியதாக சர்க்கஸ் மத்தியில் வைக்கப்படாமல், லாயங்களுக்குப் பக்கத்தில் - அங்கேயும் யாரும் வர வழி ஒருவிதமாக இருந்தது - வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அவன் ஆச்சர்யப்படவில்லை. பெரிய வர்ண அலங்கார ஜோடனைகள் கூண்டைச் சுற்றி செய்யப்பட்டு அங்கே பார்க்கவேண்டியதை வெளித் தெரிவித்தன. காட்சிகளின் இடைவேளையின் போது மிருகங்களை பார்க்க கூட்டம் லாயங் களில் மொய்த்தபோது அந்த பட்டினி - கலைஞனை கடக்காமல், கொஞ்சம் நின்று பார்க்காமல் போகமுடியாது. ஒருவேளை அவர்கள் இன்னும் கொஞ்சம் நின்றிருப்பார்கள். ஆனால், அந்த ஒடுக்கமான நடைபாதையில் தாங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் லாயங்களுக்கு போக என் தாமதப்படுகிறது என்று அறியாமல் பொறுமை இழந்தது. பின்னாலிருந்து முண்டித்தள்ளும் கூட்டம் சாவகாசமாக நின்று அவர்கள் பார்க்க முடியாமல் செய்தது. தான் உயிர் வாழ்வதுக்கே காரணமாக இருப்பது இவர்கள் தன்னை வந்து பார்ப்பதுதான் என்று. அவர்கள் வருகையை ஆவலுடன் அந்த பட்டினி - கலைஞன் எதிர் பார்த்தாலும் அதே சமயம் ஒருவித ஐயம் ஏற்படுவதை தவிர்க்க அவனால் இயலவில்லை. ஆரம்பத்தில் இடைவேளைக்கு காத்திருக்கவே அவனுக்கு முடியவில்லை. மகிழ்ச்சி எதிர்பார்ப்புடன் கூட்டம் வருவதை கவனிப்பான். ஆனால் அதி சீக்கிரமே, அவர்கள் திரும்பத் திரும்ப தவறாமல் லாயங்களைத் தேடித்தான் போகிறார்கள் என்ற உண்மையை உணர்ந்து கொண்டான். இதுயத்தில் அவன் அனுபவம், விடாப்பிடியான தெரிந்து தன்னை ஏமாற்றிக் கொள்ளுதலையும் மீறி அவனுக்கு ஏற்பட்டு விட்டது. கூட்டம் இப்படி தள்ளி இருந்து கருத்துக் கொள்வது கூட அவனுக்கு ரொம்ப பிடித்திருந்தது. ஏனென்றால் அவர்கள் கூண்டை நெருங்கினால் ஓரே கூச்சலுக்குள், சதா மாறிக்கொண்டிருக்கும் சுபாவ கோஷ்டிகளின் பேச்சுகளேபரத்துக்குள் அவன் அமுங்கிப்போய் விடுவான். ஒரு கோஷ்டி அவனை சாவகாசமாக பார்க்க விரும்புவர்கள் அடங்கியது - அவனை புரிந்து கொண்டவர்கள் என்பதால் இல்லை. ஏதோ மன உவப்பு அல்லது வெறும் பிடிவாதத்தால் உந்தப்பட்டவர்கள். (இதெல்லாம் பட்டினி - கலைஞனுக்கு பிடிக்கவே இல்லை) மற்றது, உடனே லாயங்களுக்குப் போக துடிக்கும் கோஷ்டி பெரும் கூட்டம் போய்விட்ட பிறகு ஒருவர் ஒருவராக சிலர் வருவார்கள். இவர்களுக்கோ, விருப்பம் இருந்தால் குறுக்கிட எதுவும் இல்லாததால் லாயங்களுக்கு நாழிகை யாகி விடப்போகிறதே என்று அவசர நடை போட்டுச் செல்வார்கள். அடிக்கடி வராத அதிர்ஷ்ட மாக, அபூர்வமாக ஒரு குடும்பத் தந்தை தன் குழந்தைகளுடன் வந்து பட்டினி - கலைஞனை காட்டி விஷயத்தை விளக்குவார். இதே மாதிரி ஆனால் ஒப்பிட முடியாதபடி இன்னும் சிறப்பான கண்காட்சிகளை தான் பார்த்த நாட்களைப் பற்றி அவர் சொல்வார். ஆனால் இயல்பாக குழந்தைகளுக்கு பள்ளிக் கூடத்திலும் வாழ்க்கையிலும் போதிய விஷய அறிவு ஏற்றப்படாததால் எப்போதும் எதுவும் புரிந்து கொள்ளாமல் இருக்கும். உபவாசம் என்றால் அவர்களுக்கு என்ன தெரியும்? இருந்தா லும் ஊடுருவிப் பார்க்கும் அவர்களது கண் மினுக்கலில் புதிய, அதிக தயை காட்டும் நாட்கள் வர இருப்பதன் சூசனை தெரிந்தது. அந்த மாதிரி சமயங்களில் தன் இடம் லாயங்களுக்கு இவ்வளவு கிட்ட இல்லாமல் இருந்தால் எல்லாம் சரியாக இருந்திருக்கும் என்று பட்டினி கலைஞன் தனக்குள் ஒரு வேளை சொல்லிக்கொள்ளலாம். ஜனங்கள் இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்க இது எளிதாக்கி விட்டது. கொட்டங்களிலிருந்து துர்நாற்றம், இரவில் மிருகங்களின் பதைப்பு, காட்டு மிருகங்களுக்கு கொண்டு போகப்படும் பச்சை இறைச்சிகளை பார்த்தல், உணவு நேரத்தில் மிருகங்களின் கத்தல் இவை எல்லாம் அவனுக்கு எரிச்சல் தந்து சதா மனம் புழுங்கின நிலையில் வைத்து விட்டன. ஆனால் மானேஜ்மெண்டாரிடம் இதுபற்றி புகார் கொடுக்க அவன் முற்படவில்லை. அந்த மிருகங்களை சாக்கிட்டு பார்க்க வரும் பலரில் அவ்வப் போது தனக்காக ஏற்பட்டவர்கள் ஒருவர் இருக்கக்கூடும். அதுக்கு தான் அந்த மிருகங்களுக்கு கடமைப்பட்டவன்தானே. தவிரவும்தான் இருப்பதை அவர்களுக்கு நினைவூட்டினால் திரும்ப கவனித்து லாயங்களுக்குப் போகும் வழியில் தான் ஒரு தடையாக இருப்பதாக நினைத்து விட்டால் வேறு எந்த இடத்துக்கு தான் கடத்தப்படுவான் என்பது யாருக்குத் தெரியும்?
ஒரு சிறு தடைதான், அதுவும் போகப் போக குறுகிக்கொண்டிருந்தது. தற்காலத்தில் ஒரு பட்டினி - கலைஞன் தான் காட்ட விரும்பும் புதுமையை ஜனங்கள் ஒத்துக்கொண்டு வந்தார்கள். இப்படி அவர்கள் கருதி விட்டதே அவன் அழிவைக் கொண்டு வந்துவிட்டது. அவனுக்கு சாத்யமான திறமையுடன் அவன் பட்டினி வி தம் இருந்தாலும் - அவன் அப்படி இருந்தான் - அவனை எதுவும் காப்பாற்ற முடியாது. ஜனங்கள் அவனை கடந்து போய்க்கொண்டிருந்தார்கள். யாருக்காவது உண்ண விரதக் கலை பற்றி விளக்க முயற்சிப்பார்கள்! எவனுக்கு அதில் ஈடுபாடு இல்லையோ அவன் அதை புரிந்துகொள்ளவும் முடியாது. அழகான குறிப்புகள் ஜோடனைகள் எல்லாம் அசிங்கமாகி புரியாதவையாகி விட்டன. அவை கிழிந்தும் போயிருந்தன. அவைகளுக்கு பதில் வேறானவைகளை வைக்க யாருக்கும் தோன்றவில்லை. பட்டினி நாள் கணக்கு குறித்த சின்ன போர்டு. ஆரம்பத்தில் ஞாபகமாக குறிக்கப்பட்டு வந்தது. சில வாரங்களாக கணக்கு மாற்றப்படாமலே இருந்தது. ஏனென்றால் இந்த சின்ன வேலை கூட பணியாட்களுக்கு அலுத்து விட்டது. ஆகவே பட்டினி - கலைஞன் ஒரு காலத்தில் செய்ய ஆசைப்பட்டபடி எவ்வித குறிக்கீடும் இல்லாமல் பட்டினி இருந்துவந்தான். அவன் ஒரு சமயம் முன்னறிவித்திருந்த படி, சிரமம் இல்லாமல் செய்ய முடிந்தது அவனுக்கு. ஆனால் யாரும் நாட்களை கணக்கிடவே இல்லை. யாருக்கும், அந்த பட்டினி - கலைஞனுக்கும்கூட அந்த சாதனை எவ்வளவு மகத்தானது என்பதே தெரியவில்லை. அவன் நெஞ்சு குமைந்தது. ஏதாவதொரு சமயம் ஒரு சோம்பேறி நின்று போர்டில் உள்ள கணக்கைப் பார்த்து பரிகசித்து பித்தலாட்டம் என்று பேசினால் அது அசிரத்தையும் பிறவி அசூயையும் விளைவிக்கும் ஒரு அசட்டுப் புளுகு என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் ஏமாற்றுவது பட்டினி - கலைஞன் இல்லை; அவன் தன் கடமையை கவுரவமாகத்தான் செய்து கொண்டிருந்தான். ஆனால் உலகம்தான் அவனுக்கு உரிய பரிசை தராமல் ஏமாற்றிக் கொண்டிருந்தது
இப்படி இன்னும் பல நாட்கள் போய்விட்டன. ஆனால் அதுக்கும் ஒரு முடிவு வந்தது. ஒருசமயம் மானேஜர்களில் ஒருவர் அதை பார்க்க நேர்ந்தது. நாற்றம் அடிக்கும் வைக்கோலுடன் உள்ள இவ்வளவு நல்ல, உபயோகப்படும் கூண்டு ஏன் உபயோகப்படுத்தப்படாமல் இருக்கிறது என்று பணியாட்களை கேட்டார். யாருக்கும். சொல்லத் தெரியவில்லை. ஒருவர் மட்டும் கணக்.குக் குறிப்பு போர்டின் உதவியால் பட்டினி - கலைஞனை ஞாபகப்படுத்திக் கொண்டு விளக்கினார். கழிகளைக் கொண்டு வைக்கோலை கிளறினார்கள். அடியில் பட்டினி - கலைஞனை கண்டார்கள். 'நீ இன்னுமா உபவாசம் இருக்கிறாய்? என்று மானேஜர் கேட்டார். 'கடவுளே, நீ எப்.போது இதை முடிப்பாய்?!' 'என்னை மன்னிக்க வேண்டும் நீங்கள் எல்லாம்' என்று பட்டினி கலைஞன் ஓதிய குரலில் சொன்னான். நிச்சயமாய்' என்று மானேஜர் சொல்லிவிட்டு பணியாட்களுக்கு பட்டினி - கலைஞனது நிலையை உணர்த்த தன் விரலால் அவன் தலையை சுட் டிக்காட்டிக்கொண்டே 'உன்னை மன்னிக்கிறோம்' என்றார். 'என் உபவாசத்தை நீங்கள் எப்பவும் மதிக்க வேண்டும் என்று நான் விரும்பி ன்' என்றான் பட்டினி - கலைஞன் 'நாங்கள் நிச்சயமாய் மதிக்கிறோமே' என்று மானேஜர் தயைகாட்டிச் சொன்னார். 'ஆனால் நீங்கள் அதை மெச்சக் கூடாது' என்றான் பட்டினி - கலைஞன். 'சரி, நாங்கள் மெச்ச வில்லை. ஏன் மெச்சக். கூடாது' என்று கேட்டார் மானேஜர். 'ஏனென்றால் நான் பட்டினி இருந்துதான் ஆகவேண்டும். என்னால் இல்லாமல் இருக்க முடியாது' என்றான் பட்டினி - கலைஞன். இதை கவனியுங்கள்' என்றார் மானேஜர். ஏன் முடியாது? ஏனென்றால்,' என்று தன் நேர்த்தியான தலையை கொஞ்சம் உயர்த்தி முத்தமிட முயல்வது போல் உதடுகளை குவித்துக்கொண்டு ஒரு வார்த்தையும் விழாமல் போய்விட ஏற்படாமல் மானேஜரின் காதுக்கு நேராகச் சொன்னான்; 'ஏனென்றால் எனக்குப் பிடித்த உணவு எதையும் நான் காண முடியவில்லை. அதை கண்டிருந்தால் - என்னை நம்புங்கள் - நான் பரபரப்பு உண்டாக்கி இருக்க மாட்டேன். உங்களையும் மற்றவர்களைப் போலவும் சாப்பிட்டிருப்பேன்' இவைதான் அவனது கடைசி வார்த்தைகள். ஆனால் அவனது பளீரிடும் கண்களில், பெருமை என்று இனி சொல்ல முடியாது போனாலும் தான் இன்னமும் உபவாசம் இருப்பதான உறுதியான தன்னம்பிக்கை இருந்தது.
சரி, இதெல்லாம் சுத்தப்படுத்துங்கள்' என்றார் மானேஜர். அந்த பட்டினி - கலைஞனை வைக்கோலோடு சேர்த்தே அடக்கம் செய்தார்கள். கூண்டுக்குள் ஒரு இளம் சிறுத்தையை அடைத்தார்கள். இவ்வளவு நாள் பாழாகக் கிடந்த அந்த கூண்டில் இந்த காட்டுமிருகம் நடமாடிக்கொண்டிருப்பதை பார்க்கும் மந்த சுபாவம் உள்ளவருக்கும் கூட கொஞ்சம் உற்சாகமாக இருக்கும். அதுக்கு எதுவுமே குறைச்சல் இல்லை. அட்டியின்றி அது விரும்பான அதே உணவை அதுக்கு கண்காணிப்பவர்கள் கொண்டு கொடுத்தார்கள். தன் சுதந்திரத்தை இழந்து விட்டதைக் கூட அது பொருட்படுத்தினதாகத் தோன்றவில்லை. இந்த தகைமையான உடல், வெடிக்கப்போகும் அளவு ஆரோக்யமானது, தன் சுதந்திரத்தை தன்னைச் சுற்றி சுமந்து கொண்டிருப்பது போல தோன்றியது. (அதன் பற்கள் உள்ள பிரதேசத்தில் எங்கோ தங்கி இருப்பதாகத் தோன்றும் - சுதந்திரம் ) வாழ்வதில் அதுக்கு உள்ள ஆனந்தம் அதன் தொண்டைக்குள்ளிருந்து எவ்வளவு மூர்க்கத்துடன் வெளிவந்தது. அதை பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு அதைக் கேட்டு நிலைத்து நிற்கக் கூட எளிதாக இல்லை. ஆனாலும் இந்த தயக்கத்தை சமாளித்துக்கொண்டார்கள். கூண்டைச் சுற்றி குவிந்தார்கள். தங்களை அங்கிருந்து விடுவித்துக்கொண்டு போகக்கூட அவர்களால் இயலவில்லை.
தமிழாக்கம் : சி. சு. செ.