நீலபத்மநாபன் -
தலைமுறைகள்
திரு. நீல பத்மநாபனின் தமிழ் நாவல் 'தலை முறைகளின் மூன்றாவது பதிப்பு 1980 டிசம்பரில், முத்துப் பதிப்பகம், "மாதவி'', 7/332, ஆழ்வார் நகர், மதுரை-625019 நிறுவனத்தினரால் வெளியிடப்பட்டிருக்கிறது. விலை ரூ. 17.00; பக்கங்கள்: 474.
நீல பத்மநாபனின்
தலைமுறைகள்
எழுபதுகளில் தமிழ்மொழியில் வெளிவந்த மகத்தான படைப்பு என்ற பாராட்டுப் பெற்று, (என்னால்) 'தி ஜெனரேஷன்ஸ்' (The Generations) என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு 'ஹின்ட் பாக்கெட் புக்ஸ்' (Hind Pocket Books) வெளியீட்டாளர்களால் பதிப்பிக்கப்பட்ட நீல பத்மநாபனின் 'தலைமுறைகள்' தனக்கே உரிய தனித்தன்மையுடன் விளங்குவதோடு, தமிழ்மொழியின் மிகச் சிறந்த நாவல்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.
இந்தியச் சூழலிலும், தமிழ்ச் சூழலிலும் மிகச்சிறந்த நாவல்கள் என்று கருதத்தக்க மற்றபல நாவல்களும் தமிழில் வெளிவந்திருக்கின்றன. ஆனால் அவற்றில் ஒன்று கூட ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை, அவ்வாறு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருத்தலை ஒரு 'அடிப்படை அளவீடாக' இந்தக் கட்டுரைகளுக்கு நான் எடுத்துக்கொண்டிருப்பதால், இந்த வரிசையில் இந்த நாவலைக் குறித்துப் பேசுகிறேன்.
விபூதி பூஷன் பானர்ஜியின் முதல் நாவலான 'பதேர் பாஞ்சாலி' அவரது சிறந்த நாவலாக அமைந்ததைப் போல, நீல பத்மநாபன் தனது மற்ற நாவல்களினால் புகழ் பெற்றிருந்த போதிலும், ' தலைமுறைகள்' அவரது முதல் நாவலாகவும், இன்றுவரை மிகச் சிறந்த நாவலுமாகவும் விளங்குகிறது. (ஆனால், இது என் நான்காவது நாவல்; புத்தக வடிவில் பிரசுரமாகும் இரண்டாவது நாவல்.' என்று 'தலை முறைகள்' முன்னுரையில் திரு. நீல பத்மநாபன் குறிப்பிட்டுள்ளார்-தே. குரு.) உதாரணமாக, அவரது இரண்டாவது நாவலான 'பள்ளி கொண்டபுரம்' நேஷனல் புக் ட்ரஸ்ட்டினால் (NBT) தேர்வு செய்யப்பெற்று, பிற இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அவரது மூன்றாவது நாவலான 'உறவுகள்' சிறந்த படைப்பிலக்கியத்திற்கான, ராஜா சர் பரிசைப் பெற்றது. 'பள்ளி கொண்டபுரம்' ஒரு நகரத்தைப் பற்றியதான, தனித்தன்மை கொண்ட நாவல். அந்த நகரம் திருவனந்தபுரம். மலையாள விமரிசகர் டாக்டர் குப்தன் நாயர் அந்த நாவலைக் குறித்து, ''ஒரு நகரத்தைக் கதாநாயகனாகக் கொண்டு எந்த மலையாள நாவலும் படைக்கப்படவில்லை; அந்தத் தனிச் சிறப்பு நீல பத்மநாபனுக்கே உரியது” என்று குறிப்பிட்டுள்ளார்.
சோழ தேசத்திலிருந்து கேரளத்திற்குக் குடிபெயர்ந்து நிலைகொண்ட ஒரு தமிழ்க் குடும்பத்தைப் பற்றிய கதையானதால், 'தலைமுறைகளின்' மொழி நடையும் பாணியும் தமிழ், மலையாளம் ஆகிய இரு கலாசாரங்களின் முரண்பாட்டு மோதல்களினால் வளமை பெற்றிருக்கிறது. வேற்றிடத்தில் சென்று குடியேறியதைப் பற்றிய கதை, நாவல் பின்புலத்தின் ஒரு பகுதியாக அமைகிறது. பத்மநாபனுக்கே சொந்தமான ஒரு தனித்த பாணியில், அது நாவலுக்கு உத்தியையும் ஆழத்தையும் கொடுக்கிறது. வயது முதிர்ந்த படிப்பறிவில்லாத ஆச்சிக்கும், வளர்ந்து வருகிற பேரனுக்குமிடையே நிகழும் கருத்துப் பரிமாற்றங்களை, நாவலின் கதாநாயகனான திரவியின் மனத்தில், பாரம்பரியமாக நிலவிவருகிற பழக்க வழக்கங்களின் முக்கியத்துவத்தை ஆழப்பதிய வைக்கும் கருவிகளாக நீலபத்மநாபன் உபயோகப்படுத்தியுள்ளார்.
மூன்று தலைமுறைகளைப் பற்றிய நாவலாகவும், சமுதாய மாற்றங்களும் சூழ்நிலை மாற்றங்களும் அந்தத்தலை முறைகளைப் பாதிக்கிற விதத்தைச் சுட்டிக்காட்டுகிற நாவலாகவும், இந்த வரிசையில் ஏற்கனவே எடுத்துக் கொள்ளப்பட்ட கே. எஸ். காரந்த்தின் நாவலோடு பத்மநாபனின் நாவலும் கருதப்படக்கூடியது. இவ்விரு நாவல்களும், தற்போதைய சூழ்நிலையில் முழுமையான கட்டமைப்புடன் உருவாக்கப்பட்ட பிரக்ஞைபூர்வமான நாவல்கள் என்பதைவிடவும், பிரக்ஞைபூர்வமான கற்பனைப் படைப்பை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகள் நிறைந்தவை என்று கருதப்படக்கூடியவை. ஆனால் இவற்றில் அவை சார்ந்த மண்ணின் உறை விடங்கள், பெயர்கள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், எண்ணங்கள் இவற்றை உண்மையான தன்மையோடு கையாண்டிருப்பதானது, இந்த நாவல்களைத் தனித்தன்மையுடன் கூடிய சிறந்த நாவல்களாக ஆக்குகிறது. விமரிசகர்கள் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் ஒரு கற்பனைப் படைப்போ, கவிதையோ விமரிசகர்களின் அளவுகோல்களுக்கு உட்பட்டோ , இலக்கணவாதிகளின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டோ நிச்சயமாக எழுதப்படுவதில்லை. ஹென்றி ஃபீல்டிங் அல்லது லாரன்ஸ் ஸ்டெர்னை நாம் உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டால், நாவல் எழுதுவதில் ஏற்கனவே நிலவிவந்த கட்டுப்பாடுகளுக்கு அந் நாவலாசிரியர்கள் இணங்கிப் போகாமலிருப்பதுதான் நாம் அவர்களைப் பிரத்தியேகமாகப் பாராட்டுவதற்குக் காரணமாக அமைகிறது. இந்தியாவில் அப்படி எந்தக் கட்டுப்பாடுகளும் நிலவுவதாகச் சொல்லமுடியாத ரீதியில் தான் சூழ்நிலைகள் இருக்கின்றன. இந்தியச் சூழ்நிலையில், விமரிசன நோக்கில், சிறந்த நாவல்கள் என்று நாம் கருதுகிற அப்படிப்பட்ட நாவல் படைப்புக் கலையைப் புரிந்து வருகிறவர்களிடமிருந்துதான், கட்டுத் திட்டங்களை நாம் வகுக்க வேண்டும்.
நேரடியான கதை
"தலைமுறைகள்' மத நம்பிக்கைகளைக் கட்டிக் காப்பதற்கும், தலைமுறை தலைமுறையாக அந்தக் குடும்பத்துக்குள்ளே வழிவழியாக வந்த பாரம்பரியத் தன்மைகளைக் காப்பாற்றுவதற்கும் போராடுகிற ஒரு குடும்பத்தின் நேரடியான கதை. அதோடு, பொருளாதார ரீதியான இந்த உலகத்தில், படிப்படியாக மோசமாகிக் கொண்டு வருகிற சூழ்நிலைகளை எதிர்கொண்டு தைரியமாக எதிர்த்து நிற்க முயல்கிற ஒரு குடும்பத்தைப் பற்றிய கதையுமாகும். சூழ்நிலைகளை நன்கு அறிந்தவராயிருந்தும், அந்தக் குடும்பத்தின் தந்தை அவற்றை எதிர்த்துச் சமாளிக்க முடியாதவராயிருக்கிறார். அவருடைய மகன் நடைமுறை மரபுகளை அலட்சியம் செய்துவிட்டு, பிரச்சினைகள் குறித்துத் தீவிரமாக ஒருபடி முன்னோக்கிச் செயல்படுவதற்குமுன் மிகுந்த தயக்கம் கொள்ளவேண்டியவனாயிருக்கிறான். அவன் மேற்கொண்ட ஒரு தைரியமான நடவடிக்கை, கணவனால் குழந்தைபெறத் தகுதியற்றவள் என்று ஒதுக்கிவைக்கப்பட்ட பெண்ணுக்கு மறு மணம் செய்து வைக்க முயன்றதாகும். இதில் உண்மை யென்னவென்றால், அந்தக் கணவன் தான் ஆண்மையற்றவன்.
இந்த உண்மையை ஒரு பெண் டாக்டர் மூலம் உறுதிப் படுத்திக்கொண்ட திரவி- ஒரு பெண்ணை ஒரு பெண் டாக்டரிடம் பரிசோதனைக்கு அனுப்ப அந்தக் குடும்பத்தில் ஒத்துக்கொண்டதே நடைமுறை மரபு மீறிய ஒரு நடவடிக்கைதான் - அந்த உண்மையைக் கொண்டு அவளின் கணவனைச் சந்தித்து, அவளை மீண்டும் மனைவியாக ஏற்றுக்கொள்ளும்படி செய்ய முயல்கிறான். கணவன் அவளை ஏற்றுக்கொள்ள மறுத்தபோது, அவளை மறுமணம் செய்துகொள்ள விரும்புகிற ஒருவனுக்கு அவளைக் கொடுக்க அவன் தயாராகிறான். மிக வும் தைரியமான புரட்சிகரமான ஒரு நடவடிக்கை இது.
மறுமணம் செய வவன் தயாராகிறதை இது.
ஆனால் திரவி அதில் வெற்றிபெறவில்லை. அவளை மறுமணம் செய்துகொள்ள விரும்புகிற அந்த இளைஞன் இறந்துபோகிறான். அதன்பிறகு அந்தக் குடும்பம் வேற்றிடத்திற்குக் குடிபெயரத் தீர்மானிக்கிறது. இந்தத் தீர்மானமே ஒரு புரட்சிகரமான முடிவுதான்.
'தலைமுறைகள்' நாவலின் கதை, திரவியின் கதை; அவன் சகோதரி நாகுவின் கதை; யானைக்கால் வியாதியால் ஒரு கால் பாதிக்கப்பட்ட ஆச்சியின் கதை; கடந்த காலப் பெருமைகளின் நினைவுகளால் நிறைந்த அவள் மனத்தைப் பற்றிய கதை. ஆனால் நாவல் பெரும்பாலும் ஆச்சியின் பார்வை வழியாகவும், இளைஞன் திரவியின் விழிப்புடன் கூடிய மனம், பார்வை வழியாகவும், நமக்குக் காணக்கிடைக்கும் வாழ்க்கையின் தத்ரூபமான பாத்திரங்களால் நிரம்பியது. அண்டை வீட்டுக்காரர்களும், உறவினர்களும் நாவலின் ஒவ்வொரு காட்சியிலும் குவிந்து, ஒவ்வொருவரும் வாழ்க்கையின் கவர்ச்சிகரமான ஒரு அம்சத்தின் தோற்றத்தைத் தருகின்றனர்.
நாவலின் தொடக்கம் கதாநாயகியை நமக்கு அறிமுகப் படுத்துகிறது:
சிங்க விநாயக தேவஸ்தானத்துப் பிள்ளையார் கோயில் நிர்மால்யப் பூஜையின் தீபாராதனையில் எழும்பிய மணியோசைச் சிதறல்கள் மார்கழி மாத வைகறைக் குளிரின் ஊடே கன்னங்கரு இருளில் பிரவகித்துக் கிழக்கு நோக்கி நின்ற கோவிலைச் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி, கிழக்கு மேற்கில் கிடந்த நெடுந்தெரு முனையில் சென்று சேருகையில், ஆன்மீகத்தின் அடக்கத்தொனி மட்டுமே மிஞ்சியிருந்தது.
தெருவில் எதிரும் புதிருமாய் நின்ற வீடுகளில் அதிகமும், பழைய காலத்துச் சின்ன வீடுகள் தான். இடை இடையே ஒருசில வீடுகளில் நாகரிகம் அழமாட்டாக் குறையாகத்தான் கைவண்ணத்தைக் காட்டி விட்டுச் சென்றிருந்தபோதிலும், மின்சாரம் போன்ற வசதிகள் அந்தத் தெருவினுள் நுழையவில்லை.
தெருமுனையில் வடக்குப் பார்த்து ஒரு சின்னப் பழங்கால வீடு. காலப் பழக்கத்தினால் கறுத்துச் செல்லரித்துவிட்ட ஒற்றை வெளிக்கதவு, உள்ளே கதவைத் தாண்டி வெளிமுற்றத்திற்குப் போகும் வழிபோக இரு பக்கங்களிலும் படிப்புரை, அதாவது ஒட்டுத் திண்ணை - இடப்புறம் ஒரு ஒட்டுத் திண்ணை , வலப்புறம் சாணி மெழுகி விஸ்தாரமாகக் கிடந்த ஒரு வெளித் திண்ணை ... அதில் ஒருக்களித்துப் படுத்திருந்த உண்ணாமலை ஆச்சி, கோவில் மணியோசையின் அடக்க அரவத்தில் வழக்கம் போல் விழித்துக்கொண்டு,
"ஆண்டவனே... எம்பெருமானே ... சிங்கவி நாயகா...', என்றெல்லாம் தன் சோம்பல் முறிப்பு, அடுக்கடுக்கான கொட்டாவி இவைகளின் கூடச் சொல்லிவிட்டு எழுந்து இரண்டு கால்களையும் தரையில் நீட்டிக்கொண்டு உட்கார்ந்து கொண்டாள்.
வீட்டின் பின்பக்கக் களத்தில் காலூன்றி இன்னும் வெளிச்சம் வராத திறந்த முற்றத்தின் மேலே தெரிந்த கருமையான ஆகாசப் பின்னணியில் பூதாகரமான, தலையை மட்டும் எட்டிக் காட்டும் தென்னை மர ஓலைப் பீலிகளை மறக்காமல் இரு கண்களையும் நன்றாகத் திறந்துவைத்துப் பார்த்துக்கொண்டாள். காலையில் ஏதாவது தரித்திரத்தின் முகத்தில் விழித்து, அனர்த்தங்களை வரவழைக்க அவளுக்குச் சம்மதமில்லை .
"தெங்கு கற்பக விருட்சமல்லவா? காலம்பரக் கண் விழிக்க அதைவிட ஐசுவரியமானது வேறே என்னத்தெ இருக்கமுடியும்?'' என்பதுதான் உண்ணாமலை ஆச்சியின் திடமான நம்பிக்கை. குளிரால் விறைத்துப் போய்க் கிடந்தது கால். இடது காலில், "சின்னப் புள்ளையில் வள்ளியாற்றில் குளிச்சதில் கிடைச்ச சம்பாத்தியம்'' என்று ஆச்சி பெருமைப்பட்டுக் கொள்ளும் 'மந்து'-அதாவது யானைக்கால் வியாதி. மாசமொரு முறை வரும் 'வாதப் பனி'யால் அது விருத்தியாகி, நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாகப் பெருகி விட்டிருந்தது. ஆச்சியின் சிகப்பு நிறத்தாலும் இடை விடாத எண்ணெய் அபிஷேகத்தாலும் அது மினுமினு -வென்றிருந்தது.
இன்றுவரை இடைவெளியில்லாது தொடர்ந்து கொண்டிருக்கும் அசுர உழைப்பின் தீட்சண்யத்தில், தள்ளாமை காரணமாக வாதத்தின் தொல்லையும் தன் பங்குக் கடனைச் செய்துகொண்டிருந்ததால் சுள்சுள் என்று உளைந்து கொண்டிருந்த கால்களை ஒன்று மாற்றி ஒன்றாக, இருந்த இருப்பிலேயே, பெருவிரல் நுனிமுதல், ஒரு காலத்தில் இரட்டை நாடியாக வாட்ட சாட்டமாக இருந்து ஆட்சிபுரிந்து, இப்போது குச்சி போலாகிவிட்டபோதிலும், கொஞ்சம் நஞ்சம் சதையின் அம்சம் மீதியிருந்த தொடைவரை தடவிவிடத் தொடங்கினாள். ஆச்சி உறங்கினாள் என்றால், உறங்கின ஆச்சி விழித்தாள் என்றால், வழக்கமான இந்த ஆசன அப்பியாசமும் தவறாமல் நடைபெற்றிருக்கும் என்று அர்த்த ம்....!
ஆச்சியின் பக்கத்தில் போர்வைக்குள் முடங்கிக் கிடந்தவாறு குளிரோடு மல்லிட்டுக் கதகதப்புச் சுகத்தை அனுபவித்துக் கொண்டிருந்த ஆச்சியின் அருமாந்தப் பேரன் திரவியம், “ஆச்சி.... அதுக்கிடேலே மணி அஞ்சாயிட்டா?'' என்று போர்வையில் வாய்வரை மட்டும் இடைவெளி கொடுத்துக் குளிரில் உறைந்த சத்தத்தை வெளியேற்றினான்.
நிதானமான நடை
பெரும்பாலான வெற்றிகரமான இந்திய நாவல்களில் அமைந்திருப்பதைப் போல, நாவலின் தொடக்கம் சாவதானமானதாகவும், மெதுவாகவும் அமைந்து நாவல் முழுமைக்கும், நாவலின் நடையை ஒழுங்கமைத்துக் கொடுக்கிறது. கற்பனை நாவலாசிரியன் மனத்தில் கொள்ளவேண்டிய முக்கியமான விஷயம், நாவலின் நடை, இந்தியாவில் வாழ்க்கை மிகவும் நிதானமானதாகும். இங்கு பெரும்பாலானவர்களுக்கு என்ன செய்வது என்று புரியாமலிருக்கிற அளவிற்கு அதிக நேரம் இருக்கிறது. மேலும், யதார்த்த வாழ்க்கையையும், யதார்த்தமான குணச்சித்திரங்களையும் உண்மையாகச் சித்தரிப்பதற்கு விவரங்களைச் சாவதானமாக அமைப்பது இந்திய நாவலாசிரியனின் வலுவான அம்சங்களில் ஒன்றாகும். ஒரு நாவலை நகரம் சார்ந்ததாகவோ அல்லது வேறு நாகரீகமான அமைப்பைச் சார்ந்ததாகவோ படைக்கும்போது இந்தச் சாவதானமான போக்கு மறைந்துவிட வேண்டும். ஆனால் நமது பாரம் பரிய நாவல்கள் பலவற்றில் காணப்படுவதைப் போல அல்ல.
நாவல் முடிவுறும் தறுவாயில், கடைசிச் சம்பவத்தில் ஒரு மிகை நாடகச் சம்பவத்தைச் சித்தரிப்பதற்காக இந்தச் சாவதானமான நடையை ஆசிரியர் கைவிடுகிறார். இந்த முழு நாவலிலும் உள்ள மிகவும் பலவீனமான கட்டங்களில் (எழுத்தில் அது இருக்கிறது) அதுவும் ஒன்றாகும். இருந்தபோதிலும், உண்மையான கூர்ந்த நோக்கு, நுட்பமாக விளக்குவதில் பொறுப்புடன் கூடிய தன்மை, நம்மில் பெரும்பாலோருக்குப் பரிச்சய மான பெரும்பான்மையான மனித தருணங்களைக் கூர்ந்து நோக்கிய உள் நோக்கு, விதியின்மீதோ அல்லது எந்தக் கடவுள்களின் மீதோ (அந்தக் கடவுள்கள் யாராக இருந்தாலும்) பாரத்தைப்போட்டுவிட்டு, 'எல்லாம் விதிப் படி நடக்கும்; எல்லாம் அவன் செயல்' என்ற ரீதியில் எதிலும் ஒட்டாமல் இருக்கும் பரந்துபட்ட தன்மை ஆகிய, நாவலின் சிறப்பியல்புகளை அது கெடுத்துவிட வில்லை. ஆனால் நாவலாசிரியர் அறிந்தோ அறியாமலோ தனது கடைசிப் பத்தியின் மூலம் மிகை நாடகத் தன்மைக்காக இவ்வாறு இடங்கொடுத்து விடுகிறார். அது நாவலின் முதல் பத்திகளுக்குத் தனித்த சிறப்பு ஏற்படுத்தித் தரும் விதத்தில், குறைசொல்லி முணு முணுக்கும்படி செய்து விடுகிறது. உண்ணாமலை ஆச்சி மட்டும்தான் இந்தச் சம்பவத்தின் போது இல்லை. குடும்பச் சூழ்நிலையில் புரட்சிகரமான மாறுதல்கள் - நிகழுவதற்கு முன்பே அவள் இவ்வுலகை விட்டுப் போய் விட்டாள்:
"கனவில் நடப்பதைப்போல் அப்பா, அம்மா, நாகு அக்கா, - திரவி ஆகியோர்கள் தெருவைவிட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள் ........
" நடைப் பிணங்களாகப் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்ததும், அனந்தகோடி எண்ணப் பிரவாகங்கள் நெஞ்சில் குமிழியிட்டுக் கொந்தளித்து எழும்ப , கண்ணீர்த் திரையால் மங்கலாய்த் தெரிந்த கீழத் தெருவை அவர்கள் கடைசி - முறையாகப் பார்த்துக்கொண்டார்கள் .....
கீழத்தெரு சிங்கவி நாயக தேவஸ்தானத்துப் பிள் ளையார் கோயில் மணியோசைச் சிதறல்கள் காற்றில் நீந்தி அங்கே வந்து சேர்ந்தபோது, ஆலயமிருந்த திசையைப் பார்த்து, மனமொன்றிக் கரங்கூப்பித் தொழ அப்பா மறக்கவில்லை .......''
நாவலின் - தொடக்கப் பத்திகளுக்கும் இறுதிப் பத்தி களுக்குமிடையில் நல்ல வசதியாகவுமில்லாமல், ஏழ்மைத் துயரிலும் வாடாமல் வாழ்ந்த ஒரு குடும்பத்தைப் பற்றிய கதை விரிகிறது. ஆனால் சந்தோஷமும் துன்பமும் இரண்டும் கலந்துமோ கலக்காமலோ-அந்தக் குடும்பத்தில் எப்போதும் நிறைந்திருந்தன. அது ஒரு பெரிய குடும்பம். பெரும்பாலான இந்தியக் குடும்பங்களைப்போல அந்தக் குடும்பமும் பலதிறப்பட்ட உறவினர்களையும், உயர்ந்த அனுபவங்களையும் கொண்டிருந்த பேறுபெற்ற குடும்பமாகத் திகழ்ந்தது. மலையாளம் பேசும் பகுதியில் வாழ்கிற தமிழர்களால் இந்த நாவலில் அந்த அனுபவங்கள் வளமையடைந்திருக்கின்றன. அந்த வளமையை வாழ்க்கையின் உள்ளடக்கத்திலும், மொழியின் உள்ளடக்கத்திலும் நம்மால் காணமுடிகிறது. மலையாளம் கலந்த தமிழ்மொழியை நாவலில் நீல பத்மநாபன் தொடர்ந்து நிறைய உபயோகப்படுத்தியிருக்கிறார். இந்த நாவலில் மட்டுமல்ல; தொடர்ந்து வெளி வந்த அவரது பிற நாவல்களிலும் கையாளப்பட்டிருக்கிற இந்த மலையாளம் கலந்த தமிழ், மதுரைப் பல் கலைக் கழகத்தில் டாக்டர் பட்டத்துக்கான ஆராய்ச்சிக்கு ஒரு பொருளாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
ஆற்றல்வாய்ந்த உத்தி
குடும்பத்தின் பழைய பெருமைகளைக் குறித்து, தனது சொந்தக் கண்ணோட்டத்தில் ஒரு பாட்டி கதை சொல்வது, இயற்கையானவொரு உத்தியாக இருக்க வேண்டும். அநேக நாவலாசிரியர்கள் அதை மிகவும் வலுவாகப் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் எப்படியோ அது உண்மையின்பாற்பட்ட விஷயம் என்பதாக உணரப்படவில்லை. பாட்டியிடமிருந்து கடந்தகாலக் கதைகளைக் கேட்டுப் பேரன் மனத்தில் ஈர்த்துக் கொள்கிற உத்தியைக் கொண்ட வேறு ஒரு நாவலை நான் இதுவரை பார்த்ததில்லை. கடந்தகால விஷயங்கள் இந்த நாவலில் வெற்றிகரமாகக் கையாளப்பட்டிருப்பதைப்போல வேறு எதிலும் கையாளப்படவில்லை. . அந்தக் குடும்பத்தின் தந்தை மிகவும் கண்டிப்பானவர். அவர் அதிகம் படித்தவரில்லையெனினும், தன் பையன் பள்ளிப் பாடங்களை ஒழுங்காகப் படிக்கவேண்டும் என்று வற்புறுத்துகிறார். ஆனால் பையனோ ஆச்சியின் கதைகளில் மிகுந்த சுவாரஸ்யம் காண்கிறான். மற்றவர்கள் அந்தக் கதைகளைக் கேட்டு அலுத்துப் போயிருக்கக் கூடும். ஆனால் அவன் அலுத்துப் போகவில்லை. நாவலின் முதல் காற்பகுதியின் கதையாக்கத்தை ஆச்சி தான் முழுதாக ஆக்கிரமித்துக் கொள்கிறாள் - உண்மையில் அவள் இறக்கும் வரையிலும். அவளது மரணத்திற்குப் பிறகுகூட, நாவலில் அவளது பிரசன்னம் வெகுவாக நிறைந்திருக்கிறது. பையன் வளர்ந்து வருகிறான்; பள்ளிக்குப் போகிறான்; இந்த உலகத்தைப் பற்றிய அறிவு அவனுக்குச் சிறிது சிறிதாகப் புலர்கிறது. இதற்கு முக்கியக் காரணமாக அமைவது, பாட்டியுடன் அவன் பேசும் பேச்சுக்கள். நீண்ட நாளைக்கு முன்பு நடந்த, கதையில் வருகிற ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிடுகிறேன். உண்மையில் அவர்கள் இப்போது வசிக்கிற இடத்துக்கும் அது நடந்த இடத்துக்குமிடையில் உள்ள தூரம் மிகவும் நெடியது.
பாட்டி சொல்ல ஆரம்பித்தாள் :--
“ரொம்ப ரொம்ப பளைய காலத்திலே இங்கேயிருந்து ரொம்ப வடக்கே காவேரிப்பூம்பட்டணமுண்ணு ஒரு பட்டணம்! அங்கே ஒரே ஒரு ராசா ராச்சியம் ஆண்டு வந்தாரு..........
"அப்படியிரிக்கையிலே ஒரு நாளைக்கு இந்த ராசாவுக்கு ஒரு அசலூரு ராசாகிட்டேயிருந்து வெலை மதிக்க முடி யாத கொஞ்சம் பவிளங்க (பவளம்) கிடைச்சுது...''
இரண்டு வீடு தள்ளி தெரு நடையைப் பெருக்கிக் கொண்டிருந்த தலையாட்டிக் கிழவி, உண்ணாமலை ஆச்சியிடம் ஏதோ கேட்டதால் பாட்டியின் கதையில் தடை ஏற்பட்டது. ஆனால் குழந்தைகள் பாட்டியை வற்புறுத்தவே அவள் மீண்டும் சொல்ல ஆரம்பிக் கிறாள். “உம்...எதுவரை சொன்னேன்?” "ராசாவுக்கு பவிளம் கிடைச்சுது.” .
"ஆமா...மக்கா.... பவளம் கெடச்சு. பொடீ பவளம்! அதுக்க வெளிச்சத்திலே கண்ணெல்லாம் கூசீட்டு! அதைக் கொருத்து மகாராணி களுத்திலே போடணூம்ண்ணு ராசாவுக்கு இன்னமட்டூண்ணு இல்லே கொதி! ஆனா... அதுலே ஓட்டையே இல்லை...!
“பாவம்...ராசாவுக்கு ஓட்டையில்லாத சப்பட்டை பவளத்தைக் கொடுத்து பத்திச்சுட்டானா?'' என்று சாலம் அனுதாபப்பட்டாள்.
"சலம்பாமெ கெடட்டீ? எடைலே கெடந்து பெரிய ஆளுபோல பொரியாதெ! உம்... கடைசீலே....?" என்று சாலத்தை அடக்கிவிட்டு ஆச்சியைத் தூண்டினான், திரவி. “கடைசீலே என்னா ...? கொட்டாரத்து பெரிய பெரிய தட்டான்மாரெல்லாம் வந்து பாத்தான், பாத்தான் படிச்ச வித்தை பதினெட்டும் பாத்தான்...ம்ஹூம்... இம் புடுபோல கடுகு மாதிரி இருந்த பவளத்திலே தோரம் போட ஊசி கீசி எதையாவது மொரட்டுத்தனமா உபயோகிச்சா விலைமதிப்பில்லாத அந்த பவளமே ஒடைஞ்சு போனால்....? ஆராலையும் முடியல்லே. இவ்வளவு வெலை மதிப்பில்லா பவளம் கையிலே கெடைச்சும் ராசாத்தி களுத்திலே கொருத்துப் போட்டு அளகு பாக்க முடியாமெ ஆயிட்டேண்ணு ராசாவுக்கு ஆத்தாமை சொல்லி முடியாது...?
"மக்கா... அகத்தெப் போய் அந்தக் கோலப்பொடி டப்பாவை சித்தே எடுத்தூ ட்டு வா.... என் கண்ணுல்லே...!” என்று பாட்டி கதையை முறித்து ஒரு குறுக்கீட்டை ஏற்படுத்தினாள்..
இந்தச் சமயத்தில் எங்கோ போய்விட்டு அவசரம் அவசரமாய்த் திரும்பிக் கொண்டிருந்த ஏக்கிமாடன் பிள்ளையின் மனைவி குழந்தை பெற்றுவிட்டாளா என்பதைப் பாட்டி விசாரிக்க, அவர் பதில் சொல்ல... பொறுமையிழந்து அண்ணனும் தங்கையும் கதையின் முடிவுக்காகக் காத்திருந்தனர். “எப்படியாச்சி அந்த பவளத்துலே தோரம் போட்டாரு...?" என்று நிகழ்காலத்திலிருந்து நூற்றாண்டு களுக்கு முந்திய சென்றகாலத்துக்கு வலுக்கட்டாய மாக ஆச்சியை இழுத்தான் திரவி. பாட்டி தொடர்ந் தாள்: |
“கடைசியிலே ஒருத்தராலையும் முடியாதூண்ணு ஆனப்பம் கொட்டாரத்திலே இருந்த பேருகேட்ட செட்டியாரைக் கூப்பிட்டு, “ஓய் செட்டியாரு! நீரு என்னத்தைச் செய்வீரோ! எதைச் செய்வீரோ, எனக்குத் தெரியாது. நாளைக்கு விடியுமுன்னே இந்த பவளங்க அம்பாடையும் கொருத்து இங்கணெ கொண்டுவந்துவிட வேண்டியது. இல்லாட்டெ ஒன் தலை போயிடும்” அப்படிண்ணு ராசா உத்தரவு போட் டாரு."
"அட முடிவானே! பாவம். செட்டியாரு என்னே வாரு? மகா சீத்துவம் கெட்ட ராசாதான், இல்லையா ஆச்சி?'' என்று ராஜாவின் அநீதியில் ஆர்ப்பரித்த சாலத்தை,
“ஒனக்கு எனுத்தெட்டீ தெரியும்? ராசா வச்சதுதான் சட்டம், அவரு சொன்னா சொன்னதுதான், இல்லையா ஆச்சி?'' என்று சாலத்தை மடக்கிய திரவி ஆச்சியைத் துரிதப்படுத்தினான்.
“பவளத்தை வாங்கீட்டு வீட்டுக்கு வந்தாரு செட்டியாரு. அவருக்கு கையும் ஓடல்லே, காலும் ஓடல்லே ...! அவருக்கு தங்கம்மெ, தாயம்மேண்ணு ரண்டு பொம்பளைப் புள்ளைங்க; ரண்டு பேரும் கொமரிக! பாக்க அசல் ரம்பைபோல இருக்கும். ரொம்ப புத்தியுள்ள பொண்ணுக. ஐயா வெசனமா இருப்பதைப் பாத்தூட்டு, ஏன்ண்ணு கேட்டா ரண்டு பேரும்! இவரு சொன்னப் பம் பவளத்தை இப்படி தாருமுண்ணு கேட்டுதாம்... இவரும் எடுத்து கொடுத்தாரு...! 'ஐயா போய் சொக மாட்டு ஒறங்கட்டும்... நாங்க கொருத்து வச்சிருக்கோம்' முண்ணு சொல்லீட்டு வந்து குட்டியிரண்டும் ஆலோ சிச்சு பாத்தது. நல்லபுத்தி உள்ளதுக இல்லையா? எறும்பு புற்றுக்க கிட்டே எல்லா பவளத்தையும் வரிசையாட்டு வச்சிட்டு, எல்லா பவளத்தின் ரண்டு பக்கத்தில் ஓட்டை போடவேண்டிய இடத்தில் மட்டும் ஒரு ஊசிலெ கருப் பட்டித் தண்ணியெத் தொட்டு வச்சுது. இதுக்ககூடெ
ஒரு பட்டு நூலுக்கத் தும்பிலை யும் கருப்பட்டித் தண்ணியைத் தொட்டு வச்சுது. காலம்பரைப் போய்ப் பாத்தா , வரிசையாப் போயிட்டிருந்த சிற்றெறும்புக இந்த நூலையும் எடுத்துக்கிட்டு, இனிப்பு இருந்ததினாலெ ஒவ்வொரு பவளமா அரிச்சு அரிச்சு ஊர்ந்து, கடைசீலே இருந்த பவளம் வரையிலும் குடைஞ்சு ஓட்டை போட்டூட்டே வெளியில் வந்துட்டதினாலே, நூலும் எல்லா பவளத்திலேயும் கணக்காட்டு கொருக்கப்பட்டிருந்தது!''
ஒரு சரியான பாட்டி கதை. ஆமாம்; ஆனால் அதன் தொடர்பான பின்விளைவுகள், செட்டியாரின் புத்தி சாலித்தனமும் அழகும் நிறைந்த இரண்டு பெண்களுக்கும் செட்டியார் சமூகத்துக்கும் பாதகமாக அமைந்தன. செட்டியார் தன் பெண்களின் கெட்டிக்காரத் தனத்தை ராஜாவிடம் சொன்னதும், .
'இப்படிப்பட்ட புத்தியுள்ள பொம்பளைக இருக்க வேண்டிய இடம் ஒரு செட்டிக்க வீடல்ல, ராசா கொட்டாரம் தான்.... ரண்டு பேரையும் உடனேயே எனக்குக் கெட்டித் தா'ண்ணு ராசா ஆசைப்பட்டு உத்தரவு போட்டு விட்டான். ஆனால் செட்டியாருக்கும் அவரது சமூகத்திற்கும் அதில் உடன்பாடில்லை. அவர்கள் தங்கள் ஜாதிப் பெண்களை, தங்கள் ஜாதிக்கு வெளியே வேறுயாருக்கும் திருமணம் செய்துவைக்க இசைய மாட்டார்கள். தங்கள் ஜாதியைவிட்டு வேற்று ஜாதியில் திருமணம் செய்விப்பதைவிடச் சாவே மேல் என்று கருதிய செட்டியார், தன் இரு பெண்களையும் அழைத்து வீட்டிலிருந்த நிலவறைக்குள் போகச்சொல்லி மேலே மண்ணை வாரி நிறைக்கச் செய்து நிலவறையை மூடிவிட்டார். புத்திசாலிகளான அந்தப் பெண்கள் தப்பித்துக் கொண்டிருக்கக்கூடும்; ஆனால் பாரம்பரியத்தைக் காப்பாற்ற வேண்டிய இன்றியமையாமையினால், அவர்கள் கடமையுணர்வுடன் தம் தந்தையின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தனர். ஏமாற்றமுற்ற அரசன் தங்களைப் பழிவாங்குவான் என்று அஞ்சிய செட்டியாரும் அந்த நிலவறையில் புகுந்து மண்மூடி இறந்துபோனார். அவரது இனத்தார் அனைவரும் இரவோடிரவாகக் காவேரிப்பூம்பட்டணத்தை விட்டு நீங்கிப் பல்வேறு கஷ்டங்கள், தொல்லைகள், துன்பங் களை அனுபவித்து, பிறகு கேரளத்தில் உள்ள ஒரு கிராமத்தை அடைந்தார்கள். அவர்கள் தான் திரவியின் முன்னோர்.
புதிய விஷயங்கள்
ஆச்சியின் கதைகள் கடந்த காலத்தைப் பற்றிச் சொல்வதோடு, நிகழ்காலத்தில், உலக நடப்புகளையும் சொல்லிச் சிறுவன் திரவிக்கு அறிவுறுத்துவனவாக அமைந்தன. பற்பல உறவுமுறைகள் பற்றி அவள் அவனுக்குத் தெளிவு படுத்தினாள். அவற்றின் தொடர்பான, எல்லோருக்கும் நன்கு தெரிந்த பாரம்பரியப் பின்விளைவுகளைப் பற்றியும் அவள் விளக்கினாள். வளர்ந்து வருகிற அந்தச் சிறுவனின் உணர்வை முள்ளாகத் தைத்த விஷயம், அந்தத் தெருவிலுள்ள ஆண்கள் தம் மனைவியருக்கு உண்மை யானவர்களாக இல்லாமலிருந்ததாகும்.
பாரம்பரியக் குணங்களை ஆச்சி அவன் மனத்தினுள் நிறையப் புகட்டியிருந்தபோதிலும், தனது சகோதரியின் நிலைமையை எதிர்கொண்டபோது அவன் புதிய விஷயங்களுக்குத் திரும்பினான். அவளுடைய திருமணத்தில் அவன் பங்கு கொள்ளும்போது அவன் சிறு பையனாக இருந்தான். அவள் குழந்தை பெறும் தகுதியற்றவள் என்று கணவனால் ஒதுக்கி வைக்கப்பட்ட சம்பவத்தைக் 'காணும்போது அவன் பள்ளி மாணவனாக இருந்தான். என்னதான் முயற்சி செய்தும், அவன் சகோதரிக்கு இழைக்கப்பட்ட கொடுமையைக் கிராமப் பஞ்சாயத்தினரால் சரிசெய்ய முடியவில்லை ,
“நாகு அக்காளை மாப்பிள்ளை வீட்டிலிருந்து விரட்டி விட்ட சம்பவத்தின் திடீர் அதிர்ச்சி ஒடுங்கி, தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு அன்றாட யதார்த்த நிலைமை ஆகிவிட்டது.
"காலம் எல்லாவற்றையும் ஆற்றிவிடும். பழையபடி வீட்டு விஷயங்கள் நடந்து கொண்டிருந்தன ... நாகு அக்கா எல்லோருடைய மனசிலும் உறுத்திக் கொண் டிருந்தாள். ஆனால் அவள் இப்போது எழுந்திரிச்சு வீட்டு வேலைகளையெல்லாம் வலிய வந்து செய்யத் தொடங்கினாள்....... என்ன நினைத்துக் கொள்வாளோ, திடீரிண்ணு வாரியலை எடுத்துக்கிட்டுப் போய் களம் முழுதையும் பெருக்கத் தொடங்கி விடுவாள் ...பிறகு கிணற்றிலிருந்து தண்ணீரை இறைச்சு இறைச்சுத் தொட்டி நிறைஞ்சு வடிவதுகூடத் தெரியாமல் விட்டுக் கொண்டே இருப்பாள். ஒண்ணும் கிடைக்காவிட்டால் கொஞ்சம் நெல்லைக் காயப்போட்டுக் குத்தத் தொடங்கி விடுவாள்.
“இப்படி எப்போ பாத்தாலும் ஏதாவது வேலை செய்து கிட்டே இருக்கணுமென்ற ஒரு போக்கில் போய்க் கொண்டிருந்தாள். உம்... அப்படியாவது தன் கவலையை * மறந்துவிடப் பாடுபடுகிறாளோ என்று திரவிக்குக் தோன்றும்.”
அவனுடைய தந்தையைப் பொறுத்தவரையில் எதிலும் மாற்றமில்லை. படிப்பை முடித்து ஒரு வேலையில் அமர்வதற்கு முன்னால், தான் பெரியவனாகவும் விஷயம் தெரிந்தவனாகவும் ஆகிவிட்டதாகவோ, தன்னுடனேயே சேர்ந்து வளர்ந்துவந்த பிரச்சினைகளைச் சமாளிக்கத் தகுதியுடையவனாக உருவாக்கிவிட்டதாக உணர்வதற்கோ திரவியால் முடியாது; செயல்படவும் முடியாது. திரவியைப் பற்றிய இந்தக் கோணம் ஆசிரியரால் மிக இயல்பாகவும், கலாபூர்வமாகவும், முழு நிறைவாகவும், -திற்மையாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. தன்
சகோதரி நாகுவைக் குறித்து, அவன் தன் அத்தானை நிதானமாக எதிர்கொண்டு பேசுகிறான். அவளை அவர் ஏற்றுக்கொள்ள மறுத்தபோது, ஒரு பெண் டாக்டரிடம் அவளைக் கூட்டிக்கொண்டு போய்ப் பரிசோதனை செய்யும் அடுத்த தீவிரமான ஒரு முயற்சியில் இறங்குகிறான்; ஆனால் அவன் அதைச் செயல் படுத்தும்வரை வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை. மருத்துவப் பரிசோதனை முடிந்தபிறகு வீட்டில் அதைப் பற்றி அவன் சொல்கிறான்; அந்தப் பரிசோதனையில் அவள் குழந்தை பெறும் தகுதியுடையவள் என்று நிரூபிக்கப்பட்டதைக்கொண்டு அவளுடைய கணவனை -- அவன் மறுபடியும் சந்தித்து அவளை ஏற்றுக்கொள்ளும் படி வாதாடுகிறான். அதன் பிறகும் அவர் அவளை ஏற்றுக்கொள்ள விரும்பாமல் போகவே, அவளை வேறொருவனுக்குத் திருமணம் செய்விக்கும் மிகத் தீவிரமான முயற்சியில் இறங்குகிறான்; ஆனால் அந்த முயற்சி துக்ககரமானதாக முடிந்துவிடுகிறது.
இந்தியச் சூழ்நிலையில் விமரிசனப் பரீட்சைகளை எதிர் கொண்டு நிற்கக்கூடிய ஓரிரு டஜன் நாவல்களில் 'தலை முறைகளும் ஒன்று. சிறப்பு வாய்ந்த திறமையான ஒரு கற்பனை முயற்சி. உத்திபூர்வமாகவும் சிறந்த படைப்பு. நாவலின் பல பகுதிகளில் ஆசிரியர் கையாண்டிருக்கும் உத்திகள் பெரும்பாலும் உணர்வுபூர்வமற்றிருந்த போதிலும், மானுட யதார்த்தத்துக்கும் அனுபவத்துக்கும் அவை நெருங்கிய தொடர்பு கொண்டவை.