தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Tuesday, November 12, 2019

நினைவுப்பாதை - நகுலன் --- 13.4.'69 - 20.2.'70 - 2

நினைவுப்பாதை
நால்வரில் ஒருவனானேன்
அங்குதான் என்ன?
அங்கும் அவள் இல்லை .
அன்று போல் இன்றும்
என்றாலும்
பாயல் இரண்டு. 
இந்தக் கவிதையை எதற்கு, எப்படி, ஏன் எழுதினேன் என்று எனக்கே தெரியவில்லை. கல்யாணமான புதிது; நான்கு நாட்கள் கழித்துப் பார்க்கக்கூடாது, பார்க்கக் கூடாது என்று மனம் மனனம் செய்துகொண்டிருந்தும் மறுபடியும் அவளைப் பார்க்க நேர்ந்தது. நேர்த்தியாகப் புடவை உடுத்திருந்தாள். அவளுடைய தீர்க்கமான விரல்கள், அடிவயிற்றின் அடியில் வருடிய வண்ணம் இருந்ததைக் கண்டேன். அவள் முகத்தில் ஒரு வசீகரமான புன்னகை. அவள் என்ன செய்துகொண்டிருந்தாள் என்று அவளுக்கே தெரியுமா என்பது என் மனதில் உதித்தது.

ஒரு வேளை சிவன் சொன்னது சரிதானா?
ராமநாதன் சிரித்ததும் சரிதானா?
இந்த நிலையே பைத்தியம் பிடித்த நிலைதானா?
மறுபடியும் நினைவு தடம் புரண்டது.

மூன்று நாட்களாக அவளைப் பார்க்கலாமா கூடாதா என்று குழம்பியிருந்த நான் கடைசியாக அவள் எதிரில் சென்று நின்றேன். அவள் புன்னகை செய்து கொண்டே 'உட்காருங்கள்' என்றாள். நான் உட்காரவில்லை. அதற்கு எனக்குத் தைரியம் கிடையாது. உட்காராமலேயே “என் கதை ஒன்று பிரசுரமாயிருக்கிறது. அதை நீங்கள் படிப்பீர்களா?" என்று கேட்டேன். “கொண்டு வாருங்கள்” என்றாள். வெளியில் சென்று பையில் வைத்திருந்த பத்திரிகையை எடுத்துக் கொண்டு வந்த அவளிடம் கொடுத்து விட்டு “நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். திரும்பித் தரவேண்டாம்” என்றேன். இரண்டு நாட்கள் கழித்து மறுபடியும் அவளைப் பார்க்க நேர்ந்தது. அவள் தானாகவே நான் இருக்குமிடம் வந்து “நீங்கள் தானா சகதேவன்?” என்று கேட்டான். “எந்த சகதேவன்?" என்று கேட்க ஆரம்பித்தவன் சுதாரித்துக் கொண்டு, “ஆமாம் அது என் புனைப்பெயர்” என்றேன். அவள் போய்விட்டாள். அவள் போனவிதம் எனக்கு ராமநாதனை ஞாபகப்படுத்தியது. அவர் எழுத்து விஷயத்தில் எனக்கு ஒரு வழிகாட்டி மாதிரி. 

ஏதாவது எழுதினால் அவரிடம் காட்டுவேன். அவர் நான் எழுதியதைப் படித்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் திருப்பிக் கொடுத்து விடுவார். நானும் வாய்திறந்து “உங்கள் அபிப் பிராயம் என்ன” என்று கேட்கமாட்டேன்.

வருஷங்கள் கழிந்த பிறகு என் வழியை தெரிந்தோ , தெரியாமலோ, பலிக்குமா பலிக்காதா என்ற ஒரு போதமில்லாமல், சுசீலாவைப் பின்பற்றிய மாதிரி, என் வழியை நானே வகுத்துக் கொண்ட பிறகும் அவர் என் எழுத்தைப் படித்தாரா படிக்கவில்லையா என்று நான் கேட்பதையே விட்ட பிறகு, அவர் என் எழுத்தை என்றாவது படித்ததைப் பற்றி என்றாவது நாலு வார்த்தைகளில் “நீ எழுதிய அந்தக் கதை எனக்குப் பிடித்தது'' என்று சொல்லிவிட்டு வேறு பேச்சிற்கு நகர்ந்துவிடுவார். ஆனால் நடுநடுவில் எனக்கு அவர் எழுதியதில் அது பிடித்தது. இது பிடிக்கவில்லை என்று விமர்சனம் எழுதி வந்தேன். அவர் இவைகளைப் படித்தாரா என்பது கூடத் தெரியாது. ஒருமுறை "உனக்குத்தான் நான் எழுதுவது பிடிக்க வில்லையே" என்று சொல்லிவிட்டு நகர்ந்து விடுவார். வேறொரு சமயம் “அன்று எது பொருத்தமற்றதாகத் தோன்றியதோ, இன்று அது உனக்குப் பொருத்தமாகத் தோன்றுகிறது” என்று சொல்லிவிட்டு நகர்ந்து விடுவார். “இன்று என் அனுபவ முதிர்ச்சி” என்றால் அதையும் அவர் கேட்காத மாதிரியே வேறு இலக்கியத்தைப் பற்றியும் தத்துவத்தைப் பற்றியும் பேசுவார். இன்று நான் ராமநாதன் மூலம் சுசீலாவை அறிந்து கொண்டிருக்கிறேன். யார் இந்த சுசீலா? ஏன் இந்த அவஸ்தை ?

ஆசை என்பதே ஆசை என்று வரையறுக்கத் தெரியாத ஒரு நிலையில்தான் நான் தமிழைச் சிறப்புப் பாடமாக எடுத்துப் படித்தது. அதுவும் இப்பொழுது நல்லதுதான் என்று தோன்றுகிறது. பிறகுதான் ஆசையை ஆசையென்று இனங்கண்டு பிடித்த பின்னர் ஆங்கிலத்தைச் சிறப்புப் பாடமாக எடுத்துப் படித்தது. நமது அனுபவங்கள் எல்லாமே ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சந்திக்கின்றன. அப்பொழுதுதான் எழுத்துப் பிறக்கிறது என்று நினைக்கிறேன்.

“அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங் குழை
மாதர் கொல் மாலுமென் னெஞ்சு” 

நினைவின் ஓயாத ஓட்டம். தில்லையம்பதி அண்ட கோளங்களின் நடன மையத்தில் கூத்தன் நடனம் புரிகிறான் என்று யாரோ சொன்ன ஞாபகம். அவன் காலடியில் காத்தன் பாடல் மீண்டும் மீண்டும் ஞாபகம் வருகிறது. சொ.வி., நான் உன்னை மனமார வாழ்த்துகிறேன். “மனிதப் பிறவியும் வேண்டுமே” என்றதற்கு, ஒரு சூழ்நிலையைச் சிருஷ்டித்து, அதில் ஒரு ஆதர்சத்தைப் பிரதிஷ்டை செய்து எத்தகைய அர்த்தத்தைக் கொடுத்துவிட்டாய். அந்த ஊரில் தன்னை வந்து கண்டு தன்னுடன் ஓரிரு நாட்கள் தங்க வேண்டும். தமிழிலேயே சிந்தை செல்லா சேணெடு தூரம் செல்லும் அனுபவ எல்லைக் கோட்டிற்குத் தன் கதைகள் மூலம் அழைத்துச் சென்ற கதை எழுதியவரின் (சாதாரண வாசகர்களுக்கு இப்படி ஒரு எழுத்தாளர் இருக்கிறார் என்பதுகூடத் தெரியாது. அவர்களைப் பற்றியவரை அவர் எழுத்து ‘செத்தே பிறந்த குழந்தை' மாதிரி) வீட்டில்தான் ஓரிரு நாட்கள் தங்க நேர்ந்தது. என்னுடன்கூட, கொஞ்சநாட்கள், சோடாவைக் கள்ளாக்கிக் குடித்தும், பஞ்சை - பனாதிகளுடன் தோள் சேர்ந்து நடந்த ஒரு சாமியாருடன் காலங்கழித்து நடந்தவரும் “வாழ்வின் குரூரத்தைப் பற்றி உனக்கு என்ன தெரியும் நவீனா?" என்று கேட்டவருமான ஒரு உத்தம எழுத்தாளரும் வந்திருந்தார். நடுராத்திரியில்தான் நல்லசிவன் பிள்ளை - முதலில் குறிப்பிட்ட ஆசிரியர் - வீட்டிற்குச் சென்றிருந்தோம். அந்தப் பாதி ராத்திரியிலும் அவர் பஸ் ஸ்டாண்டிற்கு வந்திருந்தார். அவர் பேச ஆரம்பித்ததும் நானும் ஜெயராமனும் - இரண்டாவதாகக் குறிப்பிட்ட எழுத்தாளர் - எங்கள் தலை திரிந்து சுழன்று கொண்டிருப்பதாக ஒரு உணர்ச்சி வயப்பட்டோம். ஆனால் அவர் நிறுத்தின பாடில்லை. அவர் கதைகளைப் பற்றித்தான் பேச்சு, எல்லாவற்றிற்கும் அடிப்படை - கேட்பது, காண்பது, ருசிப்பது, உணர்வது, சிந்திப்பது, செயல்புரிவது - எல்லாவற்றையும் உள்நோக்கி ஊடுருவிச் சென்றால் சூன்யமாக விரிவதையும் இந்த மசான அனுபவத்தையும் தாண்டிச் செல்லும் நிலையில் இங்கு அவர் நிறுத்திவிட்டார். அவர் எங்கள் இருவரையும் ஒரு நிர்ஜனமான தெருவில் சிதலமாகிக் கொண்டிருந்த ஒரு பழைய வீட்டில் தங்கச் செய்துவிட்டுப் போகும்பொழுது மணி 3, அடுத்த நாள் ஜயராமன் என்னிடம் “நான் போய்வருகிறேன்” என்றார். நான் அவரிடம் “அவர் ஏன் இப்படிப் பேசுகிறார்?” என்றேன். அதற்கு அவர் “நவீனா, மறுபடியும் நான் சொல்கிறேன். உனக்கு வாழ்வின் குரூரத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது!" என்று சொல்லிவிட்டுப் போனார்.

அடுத்த நாள் இரவு எனக்கு அந்த வீட்டில் இருப்பதற்கே பயமாயிருந்தது. சுவரில் ஒரு எட்டுக்கால் பூச்சி, எட்டுக்கால் பூச்சி  என்றால் எனக்குப் பயம். அதை அடித்துத் துரத்தினேன். எங்கேயோ ஒரு எலி நெல்லைக் கொறித்துக் கொண்டிருந்தது. தெருவிலிருந்து மூத்திர வாடை. ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தேன். மணி 1 இருக்கும் அவர் மறுபடியும் வந்தார். மறுபடியும் பேச ஆரம்பித்தார். அவர் அடுத்தபடியாகக் கேட்ட கேள்வி எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.

“நவீனா, நீ எப்பொழுதாவது பரத்தை வீட்டிற்குப் போயிருக்கிறாயா?" என்று கேட்டார். நான் ஒன்றும் சொல்லவில்லை. ராமநாதன் ஒருமுறை அப்படித் தனியாக ஒரு வர்க்கம் இப்பொழுது இல்லை என்று கூறியது ஞாபகம் வந்தது. ஆனால் அவர் என் பதிலுக்குக் காத்திருக்கவில்லை. "நவீனா நான் போயிருக்கிறேன். சிநேகிதர்களுடன். அவர்கள் உள்ளே செல்வார்கள். நான் கூடத்தில் உட்கார்ந்து கொண்டிருப்பேன். எனக்கே ஏன் என்று தெரியாது. ஆனால் என் தேகம் மாத்திரம் சுத்தமாக இருந்தது. என் காயம் என்று சொல்லவேண்டும் மனம் கூடத்தான்" என்றார். "நீ என்னவோ எழுதுகிறேன் என்கிறாய். உனக்கு ஒன்றுமே தெரியாது போலிருக்கிறதே.” என்றார். நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே யாரோ “ஐயா" என்று கூப்பிட்டது கேட்டது. அவர் போய் பார்த்துவிட்டு வந்தவர், "நான் இப்பொழுது பேசிக் கொண்டிருந்தேனே அந்தத் தாசிதான் இவள். இங்கு என்றுமில்லாதபடி விளக்கெரிகிறதே என்ன விஷயம் என்று கேட்டுவிட்டுப் போனாள்" என்றார். நான் வாசலில் சென்று பார்த்தேன். படுகிழம். ஸ்தூலமான சரீரம், வற்றிய மார்பகங்கள், எனக்கு மணிமேகலையில் ஒரு பகுதி ஞாபகம் வந்தது. 'மணிமேகலை' கவிதை இல்லை என்கிறார்கள். 'சிலப்பதிகாரத்' தில் ஒரு கவிதை இருக்கிறது என்றால் 'மணிமேகலையிலும்' ஒரு கவிதை இருக்கிறது என்றுதான் தோன்றியது. ஆனால் நல்லசிவன் பிள்ளை பேச்சை நிறுத்த வில்லை . அவர் மறுபடியும், “நவீனா நீ கஞ்சா குடித்திருக்கிறாயா? அபின் தின்றிருக்கிறாயா?" என்றார்.

நான் ஒன்றும் சொல்லாமல் தலையை அசைத்தேன். அவர் "அப்பொழுது கல்யாணமான புதிசு, இருந்தாலும் என்ன? பட்டணத்திலிருந்து யாராவது வந்துகொண்டேயிருப்பார்கள். ராத்திரி முழுவதும் அவர்களுடன் - நாள் கணக்காகச் சுற்றிக் கொண்டிருப்பேன். அப்பொழுதுதான் அபினிப்பழக்கம். அதுவும் - பூவன் பழத்துடன் சாப்பிட்டால், நீ பேசுவதை யாரோ வேறு ஆள் கிணற்றின் அடியிலிருந்து பேசுவதுபோல், நீ பேசுவதை வேறு யாரோ பேசுவதை நீ செவிசாய்த்துக் கேட்பது போல், தூரத்திலிருப்பது வெகு சமீபமாகவும், சமீபத்திலிருப்பது வெகு தூரத்திலிருப்பதாகவும் எல்லாம் தாறு மாறாக... ஆனால் இந்த பழக்கமும் நீடிக்கவில்லை. “அவர் போய்விட்டார். எனக்குப் பயமாகவே இருந்தது. அந்தக் கிழத்தாசி மறுபடியும் கதவைத் தட்டினால்? திடீரென்று சுசீலா ஞாபகம் வந்தது,

சுசீலா?
 நீ ஏன் என்னை
இப்படி வதைக்கின்றாய்?

மணி 1.45 வாய் தானாகவே திருமந்திரப் பாடல்களை முணுமுணுத்தன. ஒரு வேளை அபின்?

1. திகைக்கின்ற சிந்தையுள் சிங்கங்கள் மூன்று
நனைகின்ற நஞ்சுள் நரிக்குட்டி நான்கு
வதைக்கின்ற நெஞ்சினுள் ஆனைக் கன்றைந்து
பகைக்கின்ற நெஞ்சுக்குப் பாலிரண்டாமே.
2. வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது
புழுதியைத் தூண்டினேன் பூசணி பூத்தது
தொழுது கொண்டோடினார் தோட்டக் குடிகள்
முழுதும் பழுத்தது வாழைக் கனியே.
3. ஏற்றம் இரண்டுள ஏழு துகவுள
மூத்தான் இறைக்க இளையான் படுத்த நீர்
பாத்தியிற் பாயாது பாழ்ப்பாய்ந்து போயிடிற்
கூத்தி வளர்த்ததோர் கோழிப் புள்ளாகுமே. 
4. பிண்டாலம் வித்தில் எழுந்த பெருமுளைக்
குண்டாலங் காயத்துக் குதிரை பழுத்தது
உண்டனர் உண்டார் உணர்விலா மூடர்கள்
பிண்டத்துட்பட்டு பிணங்குகின்றார்களே 
5. மனமாயை மாயை இம் மாயை மயக்க
மனமாயை தான் மாய மற்றொன்றுமில்லை
பினை மாய்வதில்லை பிதற்றவும் வேண்டா
தணை யாய்ந் திருப்பது தத்துவந்தானே 

அடுத்த நாள் கிழக்கு வெளுத்ததும் நான் இரயிலேறி ஊர் திரும்பினேன். ஸ்டேஷனுக்கு என்னை வழியனுப்ப நல்லசிவன் பிள்ளை வந்திருந்தார்
மறுபடியும் என் பழைய அறைக்குள் புகுந்து விட்டேன். சுசீலாவைப் பற்றி எப்படி எழுதி எப்படி உங்களுக்குப் புரியவைப்பது என்றுதான் தெரியவில்லை. தெரியவில்லை என்பதால் தெரியாமலேயே இருந்துவிடும் என்பதோ, அடியவில்லை என்பதால் முடியாதே போய்விடும் என்பதோ எழுத்தைப் பற்றி சரியில்லை. அம்மா சொல்லிக் கேட்டிருக்கிறேன் - ஒவ்வொரு பிரசவ வேதனையும் மரண வேதனையாகத் தான் இருக்கிறது என்று வாசகர் நீ என்னை மன்னித்துவிடு. அதுகூட அவசியமில்லை. ஏனென்றால் நமக்குத் தெரிந்த பாஷையில், இது பிரசுரமாவதே குதிரைக்கொம்பு; அப்படியே பிரசுரமானாலும் நீ இதைப் படிப்பது என்பது அதனினும் அதனிலும் அரிது! அப்படியானால் நினைவின் வரிசைக்கு, கடிகார கால - ஒழுங்கிற்கும் என்ன பொதுத்தன்மை. வார்த்தைகள் செல்கிற வேகத்தில் அவைகளின் பின்னால் ஓடுகிறேன். ஒவ்வொரு எழுத்தாளனும் போல் நானும் எழுதி, எழுதி எழுதித்தான் எழுத கற்றுக் கொள்கிறேன். இந்தச் சுசீலா என்ற தத்துவத்திலிருந்து என்னால் விடுபடவே முடியாது போலத்தான் இருக்கிறது. அவளுக்கு மணமான பிறகு அவளை ஒரு வாரமாகப் பார்க்க முடியவில்லை கோவிலுக்கு வழக்கமாகப் போகிறவர்களுக்கு எப்படி ஒரு நாள் போகாது இருந்தால் ஒரு மாதிரி இருக்குமோ எனக்கும் அப்படித்தான். எனக்கு என்னவோ மாதிரி இருந்தது; அவளைப் பார்க்காத நாளையெல்லாம் நான் பிறவாத நாளாகவே கருதினேன். அவளுக்குக் குருவாயூரில் கல்யாணமானது. அவள் முகம் சோர்வுற்றிருந்தது. வாடின புஷ்பம் மாதிரி இருந்தது, அன்று என்ன செய்கிறோம் என்று அறியாமலேயே அடிவயிற்றில் தடவியது, அவள் முகத்தில் ஒரு அபூர்வமான மகிழ்ச்சி பிரதிபலித்தது, என்னைத் தானாகவே வந்து பார்க்கிறேன் என்று வந்து பார்க்காமல் இருந்தது - எல்லாமாகச் சேர்ந்து என்னைப் பைத்தியமாக்கிவிட்டது என்று சொல்லவேண்டும். அந்த வாரம் முழுவதும் என் மனதின் மைதுன வேகத்துக்கு ஒரு வடிகாலாக ராத்திரி 2 மணி, 3 மணி என்று எழுதிக்கொண்டே இருந்தேன். நான் எழுதியதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புவதால் அவற்றின் நகலைக் கீழே தருகிறேன்.
“நான் எழுத்தைப் பயன்படுத்தவில்லை.
எழுத்து என்னைப் பயன்படுத்துகிறது.
எனக்குப் பின்னால்?"

இன்றளவும்
ஈசுவிரி! 
இரஜஸ்வலையிலும்
சுடரும் நின் பொற்பு!
இனி
நின்ஜகனம் வழி
ஒரு ஜகமே உருவாகும்!
அல்லவா
என் அன்பே !

லா.ச.ரா.வின் "புத்ர" என்ற புத்தகத்தில் இப்படி ஒரு வாக்கியம்:

“சிவன் தனது மூன்றாவது கண்ணைத் திறந்து என்னைப்
பார்த்தான்;
என் மெய் சிலிர்த்தது." 
ம் (ஆனால்)

கொல்லிப்பாவை (6) 
உன்னைப் பற்றிப் படரும் தருணத்தில்தான் வார்த்தை பிறக்கிறது; உணர்ச்சி உருவங்கொள்கிறது; சொல்கிறது;"

"உன்னைக் காணும் பொழுதெல்லாம் நான் என் வசமாகின்றேன்.”அப்படியென்றால், நான் உன் முன் நிற்கும் அம் முள் பிசகா நிமிஷத்தில் என் உருவத்தைத்தான் நீ காண்கிறாய்; என் உருக்கொண்டிருக்கும் உணர்ச்சியின் துடிப்பை நீ காண்பதில்லை; அல்லது இல்லையா? கண்ணொடு கண்மிடைகையில், ஒரு க்ஷணம் என் கண் நிழல் குறைந்து அமிழும் பீதியின் சாயை கண்டும், நின் கண் ‘சுரு'க்கென்று திசை மாறுவதின் தாத்பரியம்; இதுதான் இப்படித்தான் என்றில்லை. அடிதோறும் அடிமுடி காணமுடியாத அனுபவத்தின் அறைகூவல்; என் யாதனா சுரூபத்தை அழித்து முன்னேற, அடிச்சுவடால் நாள்தோறும் தேய்க்கும் இடவரம்பைப் பின் விட்டு, சுவாசிக்கும் பொழுதனைத்தும் உள்ளுக்குள் உருமறைந்து, வலம் வரும் சலித்துத் தங்கிய, நூலிரண்டு எழுத்தாளரைச் சென்று காண சென்ற விடத்து ‘கண்முன் நிற்பவர் முகந் தெரியாத இவர்கள்' முன் உள் முகங்கொண்டு சுளீரென்ற போதையில், தெருத் தெருவாய் இருந்த இடம் பெயராமல் காணும், குட்டித் தெய்வங்கள் காட்சி அளிக்க, 'சை' என்று கால் தூஸியைத் தட்டி விட்டு, மீண்டும் “எந்தத் திராவகத்தின் வீர்யத்தையும் குறைக்கும்” காலம் நின் விஷயத்தில் கைவிதிர்த்து உதற, உள்ளம் அரற்ற, கயிற்றரவு கடித்த கனவில் - நினைவாக, நின்னுரு நினைந்து, வெளியில் வெறித்த கண்களுடன் நான் அகத்தமர; 

கையெழுத்து மறையும் வேளையில், கண் மயங்கும் நேரத்தில் என் அறையில் சாயைபோல் தாயின் உருவம் ஊர் பேர் தெரியாத கனவு கலைந்த நினைவில் நிழலைப்போல் ஊர, சன்னல் சாடி மடிமீது தன் மென் சருமத்தைத் தேய்க்கும் இப்பூனையின் குரூரம நிழலிக்கும் வட்ட நீலக்கண்களைக் கண்டு துணுக்குற்றுத் தாயின் இதழ்கள் உதிர்க்கும் பிரார்த்தனையை உட்செவி கேட்கும் கட்செவி கொட்டும் போதம். “வீட்டுக்கு ஒரு பெண் வேண்டும்; இது ஏன் உனக்குத் தெரியவில்லை? வருவதை யெல்லாம் தட்டிக் கழித்தால்; எங்களுக்கும் வயதாகிவிட்டது; என்னதான் செய்வதாக உத்தேசம்? ஆனால் கனவுபோல் காணும் இந்நினைவு. வேரூன்றி பச்சை பிடிக்க, தாம்பத்ய உறவு, வீடு, குழந்தைகள், இத்யாதி, “தாம்பத்ய உறவை விட்டுவிடு; நல்லது கைநகத்தை வெட்டியெறி. ... “காற்றைப் பிடித்து, நகத்தைக் கிழித்து, விளக்கேற்றி" பைத்தியமில்லை. பச்சை யுண்மை, குரூரம் நிழலிக்கும் வட்ட நீலக்கண்கள், முலைக் குன்றின் பால் சுரக்கும் முள்ளைச் சுவைக்கும் ஒரு பிஞ்சு முகம்; ஆனால் பாலுக்கும் புலாலுக்கும் உறுமித்திரியும் இப்பூனைக்கும் எனக்கும் என்ன உறவை நீகற்பிக்க விரும்புகிறாய்? என்றால் “என்ன பிதற்றுகிறாய்?” என்றுதான் எதிரொலிக்கும் வார்த்தைகள் என்பதை அறியாதவனில்லை; “யார் சுசீலாவா? நல்லகதை; என் மனம் பேதலித்துவிட்டது” அவளையும்தான் தெரியாதா? பூனைக் கண் புலிக்கண்ணாக மாறிய பேய்க் கனவு. “இந்த உலகத்தில்தான், வெளிப்பூச்சு ஏகாதிபத்தியம் புரியும். இந்த தவிர்க்க முடியாத நாக்கில் ஜலம் சொட்டச் செய்யும் இம்மனிதக் கும்பலின் முன் வரிசையில் தான், நான் அமர வேண்டும், தெரிந்ததா?” எழுத்துக்கு விலையில்லை; மனம் ஒரு பிரமை; கற்பனை ஒரு கயிற்றரவு; ஆழத் தோண்டினால் அடிப்படையென்கிறாய்; அடியில் வெறுஞ்சூன்யம்; ஆனால் ஜடம்தான் சைதன்யம்; தெரிந்ததா?

என்றாலும் உன் உருவம் என்னை வசீகரிக்கிறது; உன் புன்னகை ஒரு புதிர்; உன்னைப் பற்றிப் படரும் தருணம்தான் வார்த்தை பிறக்கிறது; நீ என்ன சொன்னாலும் வார்த்தைதான் இவ்வையத்தைக் காத்து நிற்கும். உன் தொடர்பு கைப்பைத்தான் சுரக்கிறது; ஆனால் அதன் அடிப்படையில் மாதுர்யம்; உன் விஷயத்தில் வெறுப்பின் சகவாசம்கூட லகிரி பிடிப்பதில்லை; உனது உருப்புரியாத தத்துவத்தை நினையுந்தோறும் “மனைவி வீட்டில் இல்லாத சமயம் தன் முன் வீட்டின் முன் நின்று கதவைத் தட்டி என்ன பயன்?” எழுவரைப் பெற்றெடுத்து அவரில் அறுவரை ஒருவர் பின் ஒருவராக பிரவகிக்கும் நதியில் விட்டெறிந்த உன்னை வீட்டுப் பூனையாக வளர்க்க முடியுமா என்ன?" என்று இதழ்கள் அரற்றுகின்றன.“

என்றாலும் உன் ஆதிக்கத்தைத் தடுக்க முடியாது. சேற்றில் வைடூர்யம் மிளிர்கிறது; உன்னைப் புரிந்து கொண்டுதான், உன்னுருவம் என்னுள் உருத்தெரியாமல் உருவாகும் பொழுது தான் வார்த்தை பிறக்கிறது; நீ வந்துவிட்டாய்; குப்பென்று தாழம்பூ வாசனை அடிக்கின்றது. நல்லது எங்கேயோ வளைய வருகிறது; ஆனால் இது சத்தியத்திற்குக் கட்டுப்பட்டது; மகுடி முன் தலை பணியும்; பரீக்ஷித் மகாராஜாவின் கையில் எலுமிச்சை; அடி மனதின் பிரத்யக்ஷப் பிரதிபலிப்புக் கண்ணிமைக்கும் நேரம்; நாம் எது ஆவோம் என்றிருக்கிறதோ அது நம்மைப் பின் தொடருகிறது; அதன் பின் நாம் செல்கிறோம்; இதுபோல் நான் உன் பின்.

எத்தனை நேரம் ஒரே அறையில் நாமிருவரும் உட்கார்ந்திருந்தோம். வெளியில் அந்தகாரம் விம்மிப் புடைக்கிறது; என்றாலும் கண்மூடும் நேரத்திலாவது கிழக்கு வெளுக்கும்.

கொல்லிப்பாவை (5) 

 நீ
என் வாழ்வைக்
கனவாக்கி விட்டாய்;

“கனவு
நினைவின் நிழல்"

மனதை வசீகரிக்கும் இதன் “விருட்”டென்ற நடை
கண்டு என் மனம் மிரள்கிறது;

தேதி 20
அதற்குள்பை
ஒட்டை ;
நினைவு
பிய்த்துப் பிடுங்குகிறது;

பகல்
குற்றுயிராகிக்
கிடக்கும்
அந்திப்பொழுது
ஜுர வேகத்தில்
பிரக்ஞை தடுமாறுகிறது.
பிராந்திக் கௌவிப் பிடிக்கும் நேரம் 
வரும்
மண்டைக்கனம்;
மனம் 
அட்டையாகச்
சுற்றிச் சுருண்டு
அசைவற்றுக்
கிடக்கும் முடக்கு வாதம்
நொண்டிப் பேச்சு;
புலன்கள் மரத்துக்
கட்டையாகப் போகின்றன.
துயில் சுருட்டும் கண்கள்;
உள்ளிருக்கும்
இருட்டில்
நிழல் போன்ற
நினைவின் நச்சரிப்பு;

தெருவில் காலிப் பையன்கள்
யாரையோ பார்த்துச் சிரிக்கிறார்கள். 
ஏன்? 
யாரைப் பார்த்து?
ஒருடையரிக் குறிப்பு
எங்கும்
“வெளிப்பூச்சின்
ஏகாதிபத்தியம்;
பூச்சுக் கலைந்துவிட்டால்
சூன்யம் பல்லிளிக்கிறது;"

திரும்பிப் பார்க்காத
உன்னைப் பின்பற்றி 
வாழ்க்கையைக்
கனவாக்கி விட்டேன்.
நினைவின் ஸ்பர்சம்
சுளீரென்று தைக்கிறது 
நீ
என்னதான்
என் / எனக்கு
 உள்ள (த்)தைக் 
கவர்ந்தாலும்
“உன் தத்ரூபப் பிரதிபலிப்பு 
ஆக
அப்பா- அம்மா 
சொன்னதைக் கேட்கும்
நல்ல பிள்ளையா என்ன நான்?
என்ற வினாவின் கொக்கி உருவைக்
கண்டதும்
இந்த நிகழும் நிமிஷங்கூடத்
தெருவின் காலிப்பையன்கள்
போல்
சீட்டியடித்துச் சிரிக்கிறது; 
எல்லாம் உடைந்த
கண்ணாடிச் சில்லின் 
ஒளிவீச்சு,

கொல்லிப்பாவை (7) 
(சுவாமிநாத ஆத்ரேயனின் ‘மாணிக்க வீணை' என்ற கதையில் வரும் “அவள் என்னதான் செய்யமாட்டாள்" என்ற அடியின் நினைவில் எழுதியது) 
உன் உருவம்தான் 
என்னைக்
கண்ணில் கண் மணியாகக்
கவர்கிறது; 
எதைச் செய்தாலும்
அதில் உன் தன்மை மிளிர்கிறது.

 “இப்படிச் செய்த பிறகு
இப்படிச் செய்திருக்கலாமே"
என்ற பேச்சு
உன்னைப் பற்றிய வரை 
இங்கு கிடையாது;
இப்படியல்லாமல்
என்று இப்படித்தான்
செய்ய முடியும்
என்ற கேள்விதான் 
ஒலி, 
அமைதியில்
சென்று லயிப்பது போல்
தன்னில்தானே அமிழ்கிறது;
அப்படிக்கு நீ
என்னதான் செய்தாய்?
என்று கேட்டால்
உருக்கொண்டு 
உருக்கொண்டு
உருவெளித் தோற்றமாய்
ஒன்றுமே சொல்லாமல்
ஒதுங்கி நின்றாய்;
உன்னைக் கண்டவர்
தன்னை அறியும்
தன்மை பெற்றார்;
ஆனால்
உன்போல் தன்னைக் கண்டு
தன்மை மறந்தவர்
இங்கு நின்னைத் தவிர
வேறு யார்?

செல்லரித்த விண்ணில்
செல்லாத காசுபோல்
நிற்கும்
சந்திரனும்
நின்னைக் கண்டு
காசத்தால் தன்னாகம்
இன்னும் மெலிகின்றான்.

வாயில்
தாம்பூலம் கமழ
உள்ளில்
கற்பனை வளங்கொழிக்க
காமனும்
கண் விழித்து நிற்க
நடை பயின்றுவரும்
காளிதாஸனும்
“துயிலுரியும் சர்க்கம்
இங்கில்லை” என்று
முகஞ்செத்து நின்றான்.

பாரதியும்
உடுக்கடித்து 
ஆதி சக்தியை
அகத்தில் உருவேற்றும்
அருங்கலையை
ஒதுக்கி வழி மாறி நிற்கின்றான்

“பித்தனும்" தன்னில் தானாகி 
“இங்கு தவிப்பில்லை”
என்னும் உன் முன்
கொக்கி வளையமாய் வரும்
வினாக்களைக்
கசக்கி எறிகின்றான்.

கண்ட
அடி மனதின்
நடு மையத்தில்
கேட்டேன்

"அதைத்தான்
செய்யமாட்டேன்”
என்றாய்.

பிரளய ருத்திரன் போல்
காளி மகமாயி போல்
எட்டு திக்கும் சிதறும்
ஒரு கண் மிட்டும் கணத்தில்

கிழட்டு முலை
ரெண்டு கண்டேன்;
கோடி கோடி
சாயைகள்
நின்று துதிபாட
நின்னைச் சுற்றிப் பரவும்
கண் மருட்டும் காட்சி உ
ள்ளஞ்சிலிர்க்கக் கண்டேன்;

என்றால்
மறுகணம்
காலங் கண்டு நகைக்கும்
நிகழும் நிமிஷம் போல்
உயிர்வௌவி
உயிர் காக்கும் 
யாதுமறியாப் பேதை போல்
யான் போற்றும்
கொல்லிப் பாவையாய்
தன்மை பொலியத் தன்னுருவாய்
நீ நிற்பாய்;
அது கண்ட நெஞ்சம்
பறை கொட்ட
நின்முன் மீண்டும் மீண்டும்
வந்தேன்; வகை செய்யமாட்டேன். 


கொல்லிப் பாவை (4) 
என்னகத்து நின்னுரு
கண் முன் மிளிரும் கயிற்றரவு;
உள்ளுக்குள்
ஊர் மறைவில்
மூடிப் புதைத்த
பிரேதங்கள்
கைகொட்டிக் குசலங் கேட்கும் 
பிள்ளை தின்னும்
முதலையொன்று
மெல்லப் புகுந்து
முகமன் கூறும்
எழுதுமெழுத்தும்
உயிர் பெற்று
முகஞ்சுளிக்கும்; 
நின்னுரு
வெருவிப்பாயும் யாளி, 
காற்றடித்தால்
குலை அசையும்;
நின்னுருக் கண்டு
என்னெழுத்து
உயிர்பெற்று
முகஞ்சுளிக்கும் 
அது கண்டு
வெளி உலவும்
பல உருவும்
உள் வாடி
வழி விலகும்; 
என்னுள்
நின்னுருக் கண்டு
கைக்கும் மெய்யும்
நிழலென
நின்றெரியும். 

மறுபடியும்.

சுசீலா எங்கெல்லாம்தான் என்னை அழைத்துச் செல்கிறாள். For Paris is a movable feast. 
ஒருடயரிக் குறிப்பு:சங்கரலிங்கத்தின் நண்பர்; சப்பை மூக்கு; வட்ட முகம்; எப்பொழுதும் ஒரு சந்துஷ்டி, பெயர்? பலராமன்.

சினிமாப் பிரியன் : ஒரு சினிமாவைப் பற்றி (“இரு பறவைகள்”) விமர்சிக்கிறார்; ஒருவன் காதலிக்கிறான்; ஒருவன் திருமணம் செய்கிறான்; இதுதானா மீண்டும், மீண்டும் சை!

என் டயரியில் காதல் என்பதற்கே அர்த்தம் ஆபாசம்; அது புனிதமானது அன்று.

பின்னால்தான் தெரிந்தது; அவர் மறைவாகத் தொடர்பு வைத்திருந்தார் என்று; அழுக்கு என்றால் அழுக்கு என்றுதான் . இவர்கள் வியாக்கியானிக்கிறார்கள்.

ஆனால்

மண்ணை நம்பித்தான் மரம் வாழ்கிறது.

கடல் நீலம் 
பச்சையாய்ப் படரும் நீலமாய்
நுரை மலராய் விரியும் வெண்ணிறமாய்ப்
பட்டென ஒளிரும்படிகமாய்க்
கண்டவர் முன் மிளிரும் புனலாய்
மேல் விரியும் நீல வானைக்
கண்டு சிரிக்கும் கண்டு சிரிக்கும்
ஆவி பருகும் அன்னை பராசக்தியாய்
ஆடவர் உள்ளஞ் சிலிர்க்க
ஆடிச் சிலிர்க்கும் பேராற்றலாய்
ஓவென அலறும் பேராழியாய்
உருண்டோடி இல்லையென்று 
கண்டவர் மனம்
மருள விரியுமிக் கடல் நீலம். -

நின்னைக் கண்டு என்னைக் கண்டு
நடுவில் அலை ஏற்றி நுரை கக்கி
தன் வயந்தன்னில் தன்னை மறந்து தான் தனியாகி
ஓடிச் சென்றாலும் உடைந்து தகர்ந்தாலும்
உள்ளது இல்லையென்று வருவதில்லை, வருவதில்லை.
“இல்லை” யென்பது “இல்லை, இல்லை” யென்று கூறி
“உண்டு, உண்டு” என்று நின்று நிறம் மாறி
நிலையான கற்பனைக் கடலின் சிலையான் கொடிப்பவளமாய் நின்றிமைக்கும் முத்தாய், நிழல் வீசும் கனவாய்
மாறி மாறி மறிகடலாய் நின்று சலிக்கும் இக்கடல்நீலம் 

கிட்டவரும் கிட்டவரும்
எட்டச் செல்லும் எட்டச் செல்லும்
கரையில் காலூன்றி நின்று கண்டவன்
கண்பற்றி நடந்தாலும் எண்பற்றிக் காண ஒவ்வாது

கடல் நீலமும் வான் நீலமும் கட்டித் தழுவும்
பேரதிசயந்தன்னைப் பேசாமல் கண்டுநின்றான்.

ஓயாமல் நின்று சலிக்கும் என் நெஞ்சின் பேரங்களை
என்னை , கிட்டவரும், கிட்டவரும் என்னைக் கண்டு நீ

மாறி விலகும்; மாறி விலகும் - நின்னை
வானமும் வையமும் ஒரு சேர வளைக்கும்
இக்கடல் நீலம் கண்டு சிரிக்கும் கண்டு சிரிக்கும்

அழுக்குத் தண்ணீராய்
பழுப்பு நிறமாய்
பச்சை நீலமாய்
பொங்கி வழியும் பால் நுரையாய்
உப்புக் கரிக்கும் புன்னீராய்
உயிர் காக்கும் வெண் நீராய்
நிறம் மாறி நின்று சலிக்கும்
இக் கடல் நீலம்.

கடல்தாண்டி நாடு நகரம் காண்பதுண்டு;
ஆழிவயிறு கிழித்து முத்துப் பவளமும் இருகை
கொண்டு வாரி வருபவருமுண்டு;
கரைக்கு அப்பால்கடல் உண்டு என்பது காலங்
கண்டதுமுண்டு;
கடல் தாண்டிக்கொண்ட நங்கையைச்
சிறை மீட்கச் சென்றவன் கதை கூறி
இன்றும் சிரித்துச் சலிக்கும், மாயமாய்
மறிகடலாய் உருண்டோடும் இரகசியமாய்
நின்று மீளும் மீண்டும் வரும் இக்கடல் நீலம்

வருவாய் நீ;
வரமாட்டாய் நீ;

இசைவாய் நீ;
இசைவதுமில்லை என்றும் சொல்வாய் நீ;

உள்ளக்கடலில்
காலப்போக்கில்
நிறம் மாறி நிறம் மாறி
ஒன்று பெருகி
அவ்வொன்றும் நீயாகி 
வெடித்தெழுந்த வயிரமாய்
வான் பெற்ற வேதனையாய்
மண் பெற்ற சாதனையாய்
பேராழியின் மறுகரையில்
நான் நானே ஆகி |
உன்னில் நீயாகி உய்யுமாற்றல்
வேண்டி நின்றேன்.

நீ; நின் சரிதம்;
“கடல் தாண்டிக் கொண்ட நங்கையைச் சிறைமீட்கச்
சென்றவன் கதை கூறி
இன்றும் சிரித்துச் சலிக்கும்
மாயமாய் மறிகடலாய் உருண்டு ஓடும் இரகசியமாய்
நின்று மீளும் மீண்டும் வரும் இக்கடல் நீலம்.''

என்ன எழுதி என்ன பயன்? இதில்கூட ஏதோ பிசகு இருப்பதாகத் தெரிகிறது. நான் சொல்வது நான் சொல்லாமலேயே உங்களுக்குத் தெரிகிறது என்று நினைக்கிறேன். ஏனென்றால் வார்த்தைகள் எந்த அனுபவத்தையும் மலினப்படுத்தி விடுகின்றன. அதுவும் இந்தச் சுசீலா என்ற விஷயத்தில். எனவே

கொல்லிப்பாவை 

வட்டமிடும் பருந்து போல்
வாடியிருக்கும் நாரை போல்
செத்துக்கிடக்கும் தன் இனமொன்றைச்
சுற்றிச் சுற்றிவரும் காகம் போல்
ஓங்கி வளரும் கோபுரம் போல்
ஒடுங்கிப் பிலிற்றும் ஊற்றுப் போல்
கடுஞ்சாரலில் அகத்திருந்து
தீக் காய்ந்தேன்
“என்னருகே
நீயிருந்தாய்"

என்ற ஆசையின் அவலம்
பருந்து போல் வட்டமிடும்; இரை தேடும்
நாரைபோல் கூம்பிக் குவியும்;
இனம் போற்றும் காகம் போல்
சுற்றிச்சுற்றி வரும்
கோபுரம் போல் வீறி யெழும்;
ஊற்றுப் போல் ஒடுங்கிப்பிலிற்றும்

ஆனாலும்
அன்பே 
தனியிருந்தே 
கடுஞ் சாரலில்
அகத்திருந்தே தீக்காய்ந்தேன்
நீ செல்லுங் காற்றென நில்லாமல் சென்றாய்.

எவ்வளவு அனுபவங்கள்; ‘மௌனி' சொன்னது போன்ற ஒரே அனுபவத்திற்கு எவ்வளவு விவிதாம்சங்கள். அப்பொழுது அவளுக்குக் கல்யாணமாகவில்லை. ஆனால் அப்பொழுதும் இப்பொழுதும் ஒரே மாதிரியாக இருந்தாள். (குருவாயூரில் கல்யாணம்; சோர்வுற்ற முகம்; பறித்த புஷ்பம் மாதிரி) அப்பொழுது தான் முதல் முதலில் அவளைப் பார்த்ததும் அப்பொழுதே அவளில் ஈடுபட்டதும். அந்தச் சமயம் ஜெர்ட்றொட்ஸ்டீன் படித்துக் கொண்டிருந்த சமயம்.எனவே,

அன்று பிற்பகல் 4 மணிக்கு நான் உன்னைப் பார்க்காமல் பார்த்தபொழுது பார்வை மூலம் என் மௌனமான ரூபமுறாத மோனத்தில் லயித்திருந்த என் துயின்று கொண்டிருந்த உணர்ச்சியைத் தேய்ந்து மறையும் மின்னல் கீற்றைப் போன்ற உன் முறுவல் பூத்த பார்வை எழும்பி மறைய நான் அக்கணத்தில் பார்வை மாற்றிக் கொண்ட அத்தருணத்தில் என் பார்வை உன் பார்வையுடன் உட்கலந்து ஒன்றாகியதா? அல்லது பார்ப்பவர் அனைவருக்கும் பார்வையாக நின்று தொழிலாற்றும் நீ ஒரு கணத்தில் மீதூரும் உன் உள் அயர்வினால் என் மீது வீசிய அப்பார்வைக்கு என்று ஏங்கும் என் துயிலுணர்ந்து தடுமாறும் என் உள்ளப் பார்வையில் பரிணாம விசேஷமா? மறைந்து சென்ற உன் பார்வை மாறாமல் மின்னலிட்டுக் கொண்டிருப்பது பார்த்து மகிழ நான் கிடந்து அவஸ்தையுறும் என் உள்ளத்தின் சுளீரென்றடிக்கும் வேதனையின் தனிப்பார்வைதானா? நான் உன்னைப் பார்க்க, நீ என்னைப் பார்க்க அப்பரவச நிலையிலிருந்து ஒருவரிடமிருந்து ஒருவர் சுழன்று செல்லும் அப்பார்வையின் கடைசிப் பார்வையும் பார்வை அளவில் பரிதவிக்கும் வேதனையின் கடைக்கண் பார்வையா? இன்றும் அன்றும் பிறந்து பிரிந்த பார்வை எவ்வாறு சென்று லயித்தது? நீ பார்க்கையில் எல்லாம் அப்பார்வையாக உன் நினைவெனும் நீள் விழியின் கடை வீச்சென்று நான் பரபரக்கும் இவ்வுணர்வு என் உன் நினைவின் என் ஏக்கத்தின் அவலப் பார்வையா? பார்வை என்றால் பார்க்கிறவன் பார்க்கப்பட்டவன் என்ற இருநிலையினும் மீறிச் செல்லும் தூரத்துப் பச்சையின் இக்கரைப் பார்வையா? நீ என்னைப் பார்த்தாயா அல்லது நான் உன்னைப் பார்த்தேனோ? பார்வைக்குப் பார்க்கப்படும் பொருளும் தேவையா? பார்க்கப்பார்க்கப் பரந்து விரிந்து சுருங்கி மடியும் இப்பார்வையின் பரிணாம வளர்ச்சியும் படுதோல்வியும் நினைவில் பொருத்திச் சேர்க்கப்படுகையில் உருவாகி வரும் இப்பார்வையும் சூன்யத்தின் முழு உருவா? நீ என்னைப் பார்த்தாயா அல்லது நான் உன்னைப் பார்த்தேனா? பிற்பகல் 4 மணிக்குப் பலராலும் பார்க்கப்பட்டுத் தொழிலாற்றும் நீ என்னைப் பார்த்தாயா? நான் பார்க்கப்படும் பொருள் ஆனேனா? அல்லது நீதான் என் பார்வைப் பொருளாக மீண்டும் ஆனாயா? யார் யாரைப் பார்த்தார்கள்? பார்க்கப் பார்க்கப் பார்வை பரிமாறிக் கொண்டோமா? அல்லது என்னையே நான் பார்த்தேனா? நீ என்னைப் பார்த்தாயா? அல்லது நான் உன்னைப் பார்த்தேனா? பிற்பகல் 4 மணிக்கு யார் யாரைப் பார்த்தார்கள்? பார்த்தவர் யார்? பார்க்கப்பட்டவர் யார்? யார் யாரைப் பார்த்தோம்? யார் யாரைப் பார்த்தார்கள்? பிற்பகல் 4 மணிக்கு நீ என்னைப் பார்த்தாயா? அல்லது நான் உன்னைப் பார்த்தேனா? அல்லது இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தோமா? யார் யாரைப் பார்த்தார்கள்? நீ என்னைப் பார்த்தாயா? நான் உன்னைப் பார்த்தேனா? பிற்பகல் 4 மணிக்கு யார் யாரைப் பார்த்தார்?

* * *

கடைசியாக அந்த வாரம் தீர்ந்தபிறகு என் கால்கள் அவள் இருந்த இடத்திற்குத் தானாகச் சென்றன. வழக்கத்தைவிட அவளை அதிக நேரம் பார்க்கவும் முடியவில்லை. ஆண்டு இறுதிப்பரீட்சை; வீட்டில் அம்மாவிற்கு உடல்நிலை மோசம்; இப்படியே 4, 5, மாதங்கள் அவள் என் உள்போதத்தில் அமிழ்ந்து விட்டாள்.

பிறகு ஒரு நாள். இப்பொழுது நினைத்தாலும் ஒரு விவரிக்க முடியாத உணர்ச்சிக்கு ஆளாகிறேன். ஆங்கில கவி பிளேக் சொன்னான் கண்கொண்டு அன்று, கண்மூலம் பார்க்கிறோம் என்று; வேறொரு இடத்தில் பேக்கன் சற்று கலாபூர்வமாகவே தன் 'துர் அதிர்ஷ்டம்' என்ற கட்டுரையில் கண்ணால்தான் பார்க்கிறோம் என்று. ஒரு படி மேற்கொண்டு சொன்னால் இரண்டாவது இல்லாவிட்டால் அதிமுக்கியமான முதல் - கண் மூலம் பார்ப்பது சிறப்படையாது. ஏன் சுற்றி வளைக்கவேண்டும். உங்களிடம் சொன்னேனோ என்பது தெரியாது - சுசீலா மிகவும் கோடு கிழித்தால் போன்ற ஆகிருதி படைத்தவள். இப்பொழுது அவள் தேகமெல்லாம் வயிறாக, அந்த வயிற்றைத் தள்ளிக் கொண்டு வந்தது எனக்கு ஒரு துர்பல உணர்ச்சியை உண்டுபண்ணியது. ஆனால் இந்த நிலைமையிலும் அவள் நேர்த்தியாக உடையணிந்து கொண்டிருந்ததும் வழக்கம் போல் சிரித்துப் பேசிக்கொண்டிருந்ததும் ஞாபகம் வந்தது. ஒரு குறள் மனதில் பளிச்சிட்டது. 
பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னுந்
திண்மை யுண்டாகப் பெறின். 
வேறொரு முறை இந்த கோலத்தில் அவள் தாம்பூலந்தரித்துக் கொண்டும் நெற்றியில் சந்தனம் தீத்திக் கொண்டும் நடந்து வருவதைக் கண்டேன். அப்பொழுது அவள் வயிறு இன்னும் முன்னையவிடப் பூதாகாரமாக இருந்தது. என் அன்பும் பன்மடங்கு விருத்தியாயிற்று. யாரோ என்னைக் கண்டு பரிகசிப்பதுபோன்ற ஒரு உணர்வும், ஆனால் மனிதன் என்ற நிலையில் நானும் அசட்டு உணர்ச்சி வசப்பட்டவன் என்பதை ஏற்றுக்கொள்ளாமல் நிவிர்த்தியில்லை. பிறகு அவளை ஒரு இரு மாதங்களாகக் காண முடியவில்லை .

பிறகு மறுபடியும் நாங்கள் “சந்தித்தோம்”. பிள்ளைப் பேற்றின் சின்னமே அவளிடம் இல்லை. அவள் அழகு ஒரு மாற்று அதிகரித்திருந்தது. என்னுடன் எப்பொழுதும் விடச் சற்றுச் சுதந்திரமாகவே பேசினாள் என்று சொல்ல வேண்டும். ஒரு நாள் என் சர்வ தைரியத்தையும் வரவழைத்துக் கொண்டு “உங்களுக்கு என்ன குழந்தை பிறந்தது?” என்று கேட்டேன்.

“பெண்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். மறுபடியும் இதன் பிறகு நான் வியாகுலத்தில் ஆழ்ந்தேன். எனக்கே ஏனென்று தெரியவில்லை. ஓரொரு நாள் இரவு 4 மணி வரை விழித்துக் கொண்டிருந்தேன் அம்மா “என்னடா, இன்னும் தூங்கவில்லையா?" என்றும் அப்பா என் அறைக்குள் வந்து “மணி 4 ஆகிறது” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டும் போனார், ஆனால் அவர்களுக்கு என்ன தெரியும்? நான் எழுதிக் கொண்டிருந்தேன்.

ஒரு செடி.

இலைவிட்டு மலர் காட்டிக் காயாகிக் கனியாகி விதை தூவி இனம் பெருக்கும் ஆற்றலை எண்ணும் சமயம் மனம் சிந்தனையில் அமிழ்கின்றது.

ஒரு பெண், 

பூப்பெய்தி, பருவ எழில் பெற்றுக் கருத்தரித்து கூடிப் பிரிந்து தன் மூலம் தான் வேறாகி உயிர் படைக்கும் ஆற்றலை எண்ணும் சமயம் மனம் சிந்தனையின் ஆழத்தை அளந்து நோக்குகின்றது.

மண்ணும் விதையும் சேர்கையில் செடி உயிர்க்கின்றது. சுக்கிலமும் சுரோணிதமும் சேர்கையில் மனிதன் ஜனிக்கின்றான். இவ்வாறு அறிவு கூறுகிறது.

ஆனால் “ஏன்” என்று கேட்கையில் இரண்டிற்கும் ஒரு ஒழுங்கு வகுக்கும். ஆனால் சிந்தனையின் பிடியில் சிக்காத அந்த அடிப்படையை, |

மனம் நினைவுகூரும் அந்த முள் பிசகாத நிமிஷத்தில்

கவிதை பிறக்கிறது.

இது சிருஷ்டி ரகசியம்.
* * *

சுசீலாவுடன் நான் ஒரு நாலு நிமிஷமாவது தொடர்ந்தாற் போலப் பேசினது கிடையாது. ஆனால் அவளை அவள் கருவுற்ற கோலத்தில் கண்டதும், அவளுக்கு ஒரு குழந்தை பிறந்திருக்கிறது என்பதும் - ஏன் எவ்வளவு குதூகலம்? இந்த மாதிரிப்பட்ட அனுபவங்களுக்கு அர்த்தமுண்டா ? சிவன் “அவள் பெண், நீ ஆண்” என்று சொல்லி ஒதுக்கி விடுவான். ராமநாதன் சிரிப்பார். பிறர் ஏளனம் செய்வதாலும், புறக்கணிப்பதாலும் இருக்கிற அனுபவங்கள் இல்லாமல் ஆகிவிடுமா? எழுத்து என்பதே அனுபவத்தின் நிறபேதங்களைக் காட்டுவதுதானே. மீண்டும் எழுதுகிறேன்.

பூரணமாம் தொட்டிலுக்குள் 

நண்பன் வீட்டிற்குப் போயிருந்தேன், புதிதாகப் பிறந்த குழந்தை கத்திக் கொண்டேயிருந்தது. இந்த உயிரின் நாதத்தில் ஒரு கிளர்ச்சி இருக்கிறது.
கடிகாரத்தில் முள் நகர்ந்து கொண்டேயிருக்கிறது. அதன் முள்தான் நம்மைக் குத்தித் தள்ளுகிறது. சாவி கொடுக்காமல் இருந்தால் நின்றுவிடும். ஆனால் அப்படி அதை நாம் நிற்க விடுவதில்லை .

தெருவில் கால் தோய நடப்பதில் ஒரு இன்பம் இருக்கிறது. அப்பொழுது நாம் எல்லோருமே ஒரு அத்துவித நிச்சயத்துடன் கால் நனைய நடக்கிறோம். 

வீட்டிலும் என் மனைவி ரத்தம் சிந்த ஒரு மகவைப் பெற்றாள். உடலின் உந்துதல், உயிரின் உந்துதல். நான் என்னவோ எழுதிக் கொண்டிருக்கிறேன்; அருகில் ஆவலே உருவாக என்னைப் பார்த்த வண்ணம், தன் நைவேத்தியத்திற்கு எங்கள் வீட்டு நாய் காத்துக் கொண்டிருக்கிறது. கட்டின மனைவி கூட அதைப்போல உடல் அன்பால் குழைய நான் கண்டதில்லை. பல சமயங்களில் நான் கடிகாரத்தையும் நாயையும் பார்த்துக் கொண்டு உட்கார்ந்து விடுகிறேன்.

வெற்றிலை போடக் கற்றுக் கொண்டிருக்கிறேன். முதலில் வெள்ளை வெற்றிலையாகப் பார்த்து எடுத்து, முதுகு நரம்பைக் கிழித்து எறிந்துவிட்டு, சுண்ணாம்பைத் தடவிவிட்டு, பிறகு பக்குவமான அளவில் பாக்கையும் சேர்த்து விட்டு வாயில் மென்று பிறகு சரியான அளவில் புகையிலையைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். வாயில் கலவை சேர்ந்த பிறகு ஒரு நிதானமும் அமைதியும் பிறக்கிறது. சிந்திக்கவேண்டிய சந்தர்ப்பம் வரும்பொழுதெல்லாம் வெற்றிலை போட வேண்டும். அது ஒன்றுதான் இப்பொழுது அர்த்தம் மிகுந்த சடங்காக எஞ்சி நிற்பதாகத் தோன்றுகிறது; அன்பை நாடிப் பைரவரிடம் செல்வது போல்.

ஆனால் எல்லாவற்றிற்கும் பின்னால் நிர்விகாரமான நிர்க்குணமான, அகண்டாகரமான பிரம்மம் உண்டு என்ற பாவனை இருப்பதால் சுபாவம் ரீதி பிறழாமல் நிற்கிறது. அதனால்தான் சாவுகூட சட்டை மாற்றும் விஷயமாகத் தீர்ந்துவிடுகிறது.

“ஏகதேசம் பூர்ணத்திற்குண்டோதான்" என்பது தாயுமானவர் வாக்கு.

* * *

எழுதி முடிந்தபின்? மீண்டும் மீண்டும் அவளைச் சுற்றி மனம் வளைகிறது. சில பெண்களுக்குப் பிள்ளைப்பேற்றின் பிறகு வயிறு தள்ளிவிடுகிறது. ஆனால் அவள் விஷயத்தில் அப்படியில்லை . என்றும் போல் தான் இருந்தாள். சொல்லப்போனால் முன்னைவிட அழகாகவே இருந்தாள். என்ன எழுதினாலும் இதைச் சுசீலா பார்க்க வேண்டும் என்று ஆவல். ஆனால் சில சமயங்கள் அவளை நினைத்துக் கொண்டே ஒருவித மௌனத்தில் ஆழ்ந்துவிடுவது என்பது அனுபவமாகிவிட்டது ஒரு வேளை . . இதுதான் எழுத்தின் இரகசியம். அப்படியும் இருக்க லாமோ? ஏன் இருக்கக்கூடாது? ஆனால் அதை அப்பட்டமாக எழுதுவதைவிட அதைக் குரல் வளையைத் திருகி அழித்து விடுவதே மேல், அடிமுடி காணமுடியாத அனுபவங்கள்.

இன்று மீண்டும் அவளைப் பார்த்துவிட்டு வருகிறேன். எவ்வளவு அழகாக இருக்கிறாள். முதன் முதலில் அவளைப் பற்றி எழுதிய கவிதை நினைவில் வருகிறது.

கொல்லிப்பாவை (1) 
திரௌபதி அவள்
வந்து போகும் அர்ச்சுனன் நான்
வில்லெடுத்துக் கணைபூட்டி
நாண்வளைத்துக் குறிவீழ்த்தி
சௌரியம் காட்டிச் சமர் செய்து
காதல் பெற்றான் ஒருவன்.
ஆனால் வந்து போகும் அர்ச்சுனன் நான்.

நாக்கடித்து
வாய்ப்பறைகொட்டி
வேதாந்தக் கயிறு திரித்துக்
குறிதான் ஏதுமின்றி
ஆண்மை தோற்று
பேயெனப்பால் திரிந்து,
அவள் உருக் கண்டு
உள்ளங் குலைந்து
உரம் வேண்டி
வந்துபோகும் அர்ச்சுனன் நான்.

திரௌபதி அவள்
நெற்றித் திலகமும்
நெறி மிக்க வாழ்வும்
கைத்திறனும் கலைப் பொலிவும்
மிக விளங்க, 
நேர்நோக்கும் நிமிர் நடையும்
பொலிவூட்டக்
கல்வி கற்றுத் தொழில் புரிந்து
காரியத்திறனும் கருத்துறுதியும்
பூண்ட
இந்நங்கை நல்லாள், அர்ச்சுனன் தன்
அவநம்பிக்கை உருவறிவாளோ?

அன்று
சுற்றத்தார் முகம் நோக்கி 
களம்தனில் கை சோர்ந்தான்;
அதன் முன்னர்
விதிமுன் தலை வணங்கி
உருமாறிப் பேடியானான் அவன்; 
என்றாலும்
கண்ணன் கைகொடுக்க
உள் நின்ற சௌகரியம் எடுத்துதவ,
முன்னோக்கித் தருக்குடன் திரிந்தான் அவள்

திரௌபதி அவள் 
தூய்மையின் ஊற்று;
பலர் கண்டும் உருவ அமைதி பெற்று,
பேடியெனச்செயலிழந்து
தன்னைக் கண்டு மயங்கித் திரிவோனை
“வாழ்க்கைப் பாடி வீடு சென்று
வாகை சூடிவா
காத்திருப்பேன்” என
மௌனத்தின் ஞானம் பேசி
முறுவல் பூத்துக் கற்பின் வைரப்படை
தாங்கி நிற்கும் கொல்லிப் பாவை அவள்.

திரௌபதி அவள் 
வந்து போகும் அர்ச்சுனன் நான்.

ஏறக்குறைய இதே சமயம்தான் 
"காவியத்தின் சுவை போல, சுவை போல
நீள் நகரின் எழில் போல, எழில் போல
உன் நினைவுதான், நினைவுதான்' 

என எழுதினேன். மற்றொரு சமயத்தில்,

கொல்லிப்பாவை (2) 
அகலிகை நகைக்க
அருந்ததியும் நின்றிகழ
வருமீரசை ஒரு சொல்
நின் நாமம் செப்ப;
வில்லெடுத்து நாண் வளைத்துக்
குறிவீழ்த்தும் முன் கருத்துந்த
கண்ணோடு கண் வளைத்து
உள்ளம் புணர்ந்து உடல் தழுவத் துடித்து
அன்று நின்ற அச் சீதையும்
நின் செயல் கண்டு நெடிது நிற்பாள்.
நின் நாமம் கேட்டு
மாரனும் கை சோர்வான்
அவன் உயிரனைய ரதியவளும்
நின்றதிசயிப்பாள். 
வில்லெனவுடலும் வளைய
‘விண்'ணென்று நாணையொத்து உள்ளமும்
தெறித்து நிற்க |
கண்ணெடுத்து உள்ளம் வளைத்துக்
குறிவீழ்த்த முயலாது நிற்கும் நின் செயல் கண்டு
விண்ணவரும் எட்டி நின்று
எள்ளி நகைப்பர். 
மெய்யினிருளகல
உயிரின் கனவலர
விண்ணவர்கோனும்
சேவலெனக் கூவியழைக்கக்
காவல் நீத்துக் கடிது சென்று
ஒரு கணம் அமுதம் பருகி
மறுகணம் கல்லென உருவெடுத்த
அகலிகையும் தீதிலன் என்று
கூறியவனும் அறம் வகுத்த அண்ண லே காண்.
ஆனால்
ஆசையகற்றி
வெறுங் கல்லென வறிது நிற்கும்
நின்செயல் புரிவதுமில்லை . 
நீதான்
கல்லிலடித்தச் சிலையாக
கனவில் வடித்த ஓவியமாக
சதையும் குருதியும் சமைத்துயிர்த்த
உயிர் குடிக்க இதழ் துடிக்கும் பாவையாக
வாரி அணைக்க வந்த மரணமாய்
நெடிது நின்றாய். 
ஆனாலும்,

அலையாது குலையாது
அலைதள்ளும் நின்குலவும்
வடிவழகு கண்டு
அல்குதலே அதன் வாழ்வெனக் கண்டு அதனைப்
புல்குதலே வாழ்வென வேண்டி
‘சில்'லென்று நின்றேன் நின் முன். 
ஆனாலும் சுசீலாவைப் பற்றிய - முழு உண்மையையும் கூறிவிட்டதாகவோ கூறமுடியுமென்றோ தோன்றவில்லை, யூங் கூறிய மாதிரி “அவள் கட்டுக்கடங்காத ஜீவப் பிரளயம்; மோகினிப் பிசாசு; வாழ்விக்க வந்தபிராட்டி; தவிர மனிதனைக் காதல் - சாதல் என்ற இரு உச்சங்களுடனே இழுத்துச் செல்லும் வேகம்; கிரியா சக்தி; பிரளயத்தின் ரூப சத்தியம்” என்றாலும் என்னவோ நெருடுகிற மாதிரி; மீண்டும் எழுதினேன்.

வெற்றியையும்,
குவிமுகையும்,
விரிகின்றசெம்மலரும்
என்னைச்
சொல்லாமல் சொல்லிக்
கொல்லாமற் கொல்லும்
என்றாலும் ஒரு நெருடல், எனவே மீண்டும், 

பேதா பேதம் 
மண்புழு
மண்ணைப்
பொன்னாக்கும்
இலைப் புழு
பட்டு நெய்யும்; 
மனிதரில்
சிலந்தியும்
பெண்டிரும்
சிதலும் உண்டு
என்றாலும் தீர்ந்தபாடில்லை; 
அலங்காரம் 
மயிற்கண்;
முலைப்பால்;
நெடுவேனில்,
கார்காலம் ,
சென்று தேய்ந்திறுதல்
கொல்லிப்பாவை
மன்னுமிவ்வுலகு. 
என்ன எழுதினாலும் சுசீலாவிடமிருந்து தப்ப முடிய வில்லை . . இதைப் பாவம் - புண்ணியம் என்ற சிமிழில் போட்டு அடைத்துவிட முடியாது என்றுதான் தோன்றுகிறது. அனுபவம் தான் அனுமானம். அதன் பின் தான் கலைஞன் செல்கிறான். அதற்குப் பின் அனுபவம் அவன் வழி வர, வார்த்தை முன் வியாக்கியானம் பின் என்ற முறை. ஒரு வாரமாக ஒரு வெறுமை உணர்ச்சி யார் இந்தச் சுசீலா? ஏன் இந்த அவஸ்தை ? அவள் தீர்க்கமான விரல்கள். நெற்றிக்குங்குமம் இட்டுக் கொள்ளாமல் என்றுமே வந்ததில்லை. மணி இரவு 2. அம்மா அயர்ந்து தூங்குகிறாள், அப்பாவும்தான். படுக்கையிலிருந்து மேஜைக்குப் போகிறேன். நோட்புக்கை விரிக்கிறேன் எழுதுகிறேன்

தியாகம் 
சுசீலா
செத்துக் கிடந்தாள்;
கழுகொன்று
அவள் மார்பைக் கொத்திற்று
அவள்..... நோக்கி எறும்புக் கூட்டம்;
பிண வாடை
வயிற்றைக் குமட்டக்
கவிஞன் கறுப்புத் தின்றான். 
நாலடிக்கப்பால்
அவர்
மாபெருங் கவிஞர்
தாடி வருடித்
தியானத்திலாழ்ந்தார் 
இன்றளவும் இந்தக் கவிதையின் தாத்பரியம் எனக்குப் புரியவில்லை. அடுத்த நாள் மாலை அவளை மீண்டும் சந்திக்க நேர்ந்தது. எப்பொழுதையும் விட மிக அழகாக இருந்தாள். என்னருகில் வந்தாள், “நான் நாளை இந்த ஊர் வீட்டுப் போகிறேன்; என் கணவருக்கு மாற்றலாகி விட்டது'' என்று திரும்பிப் பார்க்காமலேயே போய்விட்டாள். அதுதான் அவள் போக்கு, எவ்வளவோ அவளிடம் கேட்க வேண்டும் என்று ஒரு பரபரப்பு. ஆனால் கேட்கவில்லை . 'ஞானரதத்தில் கந்தர்வ லோகத்தின் (?) முடிவுதான் ஞாபகம் வந்தது. அதன் பிறகு அவளை நான் பார்க்கவில்லை. மற்ற எல்லாவற்றையும் போல இந்தச் சுசீலா என்ற அத்தியாயமும் முடிந்துவிட்டதா? அதை அப்படிச் சொல்ல முடியவில்லையே என்றுதான் என்னுள் ஏதோ ஒன்று கூறுகிறது.