தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Wednesday, December 06, 2017

கம்பாநதி 5 - வண்ணநிலவன்

https://wannanilavan.wordpress.com/2011/12/12/கம்பாநதி-5/
...................

பஸ் ஸ்டாப்பில் மூன்றாம் நம்பர் பஸ் நின்று கொண்டிருந்தது. சிவகாமி முதலில் ஏறிக்கொண் டாள். அவளுக்குப் பின்னால் பாப்பையா ஏறினான். அவர்கள் இரண்டு பேரையும் பஸ்ஸுக்குள் இருந்த அத்தனை பேரும் சம்பந்தப்படுத்திப் பார்த்தார்கள். இது பாப்பையாவுக்கும் அவளுக்குமே பழக்கப் பட்டுப் போன விஷயங்கள்தான். இதுதான் ஒவ் வொரு தடவையும் நடக்கிறது. எதுவும் புது சில்லை. காலியாக இருந்த பெண்கள் சீட்டில் ஜன்னலோரமாக சிவகாமி உட்கார்ந்துகொண்டு பின்னால் வந்துகொண்டிருந்த பாப்பையாவைப் பார்த்துத் தன் பக்கத்து சீட்டில் கையை வைத்துக் காட்டி உட்காரச் சொன்னாள்.

அந்த பஸ்ஸில் இருந்த எல்லோரையும் அவன் வெறுத்தான். வெளியே தோணி செட்டியார் காபி கடையில், வழக்கம்போலச் சில பேர் நின்று காபி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அதற்கு அடுத்த எண்ணெய்க் கடையில் யாரோ ஒரு பையன் எண்ணெய் வாங்கிக்கொண்டிருந்தான். அவர்கள் வீட்டுக்குப் போகிற தெருமுனையில் நாலைந்து பால்காரர்கள் கூடிநின்று பேசிக் கொண்டிருந் தார்கள். அவ்வளவு பேர் மீதும் அவனுக்கு வெறுப்பாக இருந்தது.

________________

பஸ் புறப்படப் போகிற சமயத்தில் ஒரு இளைஞன் இவன் வயகள்ளவன் பஸ்ஸில் உட்கார இடமில்லாமல் நின்று கொண்டிருந்தான். இன்னும் யாரும் நிற்க ஆரம்பிக்கவில்லை. தான் ஒருத்தனாக மட்டும் நிற்கிறது அவனுக்குக் கூச்சமாக இருந்தது. வெள்ளை டெரிகாட்டன் சட்டையும், வெள்ளை பேண்ட்டும் அணிந்திருந்தான். பஸ்ஸுக்குள் பார்க்கக் கூச்சப் பட்டு, வெளியே ரோட்டையே கவனத்துடன் பார்க்கிறவனைப் போல் பார்த்துக்கொண்டிருந்தான். ஆனால், அவன் நிஜமான கவனத்துடன் ரோட்டைப் பார்க்கவில்லை என்பது அவனுடைய முகத்தில் தெரிந்தது. அவன் மனத்துக்குள் பெரிதும் சலனப் பட்டுக் கொண்டிருந்தான். தான் மட்டும் தன்னந்தனியாக உட்கார இடமில்லாமல் பஸ்ஸில் நின்றுகொண்டிருக்கிற கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டிருந்தான். எதிர்த்த தோணி செட்டியார் கடையில் நின்றுகொண்டிருந்த அந்த பஸ்ஸின் டிரைவரையும் கண்டக்டரையும் அடிக்கடி, திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருந்தான். அவர்கள் இரண்டு பேரும் காபி சாப்பிட்ட

படியே பேசிக்கொண்டிருந்தார்கள்.

பஸ்ஸின் முன்பகுதியில் ஓர் இளைஞன் நின்றுகொண்டிருந்தான். இளைஞனின் முகம் அபூர்வமான திருப்தியில் மலர்ந்தது. இப்போது அவன் தைரியமாக பஸ்ஸுக்குள் ஒவ்வொரு சீட்டிலும் உட்கார்ந்தவர்களைப் பார்க்க ஆரம்பித்தான்.

அவனும் தன்னைப்போல ஏதாவது இண்டர்வியூவுக்குப் போகி றானா? அவனை மட்டும் பாப்பையாவுக்கு மிகவும் பிடித்திருந் தது. அவனுக்கு வயசு என்ன இருக்கும்? தன்னைவிட ஒரு வயசு குறைவாக இருக்கும் என்று நினைத்துக் கொள்வதே அவனுக்குத் திருப்தியாக இருந்தது. அவனைக் கூட்டிப் பக்கத்தில் வைத்துக் கொண்டு பேச வேண்டும் போல ஆசையாக இருந்தது.

பஸ் புறப்பட்டு மெதுவாக நகர ஆரம்பித்தது. பஸ் புறப்பட்ட தும் பாப்பையாவின் மனசிலிருந்த வெறுப்பு மறைந்து போயிற்று, பால்காரர்கள், சைக்கிள்களை ஸ்டாண்ட் போட்டு அதே இடத்தில்தான் நின்றுபேசிக் கொண்டிருந்தார்கள்.

பஸ் மார்க்கெட் மெயின் கேட்டைத் தாண்டிப் போகும்போது மேகநாதன் கடையைப் பார்த்தான். மேகநாதனிடம் தான் இண்டர்வியூவுக்குப் போகிறதைப் பற்றிச் சொல்லவே இல்லை என்று வருத்தப்பட்டான்.

________________

பாப்பையா பஸ்ஸுக்குள்ளிருந்து மேகநாதனைப் பார்த்துக் கையை ஆட்டினான். அவனும் பார்த்துவிட்டான். எல்லாம் நொடிக்குள் நடந்தன.

மேகநாதனுக்குத் திருமணம் ஆகிவிட்டது. ஒரு குழந்தைகூட இருக்கிறது. பள்ளி நாட்களில் இவர்கள் வீடு மேகநாதனின் வீட்டுக்குப் பக்கத்தில்தான் இருந்தது. தினந்தோறும் மேக நாதனும் இவனும் வாய்க்காலுக்குக் குளிக்கச் செல்வார்கள். வாய்க்காலில் எவ்வளவு நேரம் குளித்தாலும் திருப்தியே இருக்காது. கண்கள் எல்லாம் சிவந்து போயிருக்கும். மேகநாதன் வாய்க்காலில் குளிக்கும்போது அடிக்கடி தண்ணீருக்குள் நின்ற படியே தன்னுடைய கண்களை அடுத்தவனிடம் காட்டி, சிவந்து போயிருக்கிறதா?" என்று கேட்பான். மேகநாதன் மிகவும் வீட்டுக்குப் பயந்த பையன். ஒரு நாளும் சாயந்தர வேளைகளில் வெளியே வரவே மாட்டான். அபூர்வமாக வந்தாலும், வீட்டை நினைத்துப் பயந்துகொண்டிருப்பான். வீட்டுக்கு நண்பர்களை அழைப்பதில் ரொம்பவும் விருப்பமுள்ளவன். ஆனால் உட்காரச் சொல்லிவிட்டு உள்ளே போனால் வரவே மாட்டான். வந்த நண்பர்கள் பேசிக்கொண்டிருக்க ஆரம்பித்தால், ரொம்பவும் பணிவுடன் மெதுவாகப் பேசச் சொல்லுவான்.

மேகநாதன் கல்யாணத்துக்கு, கூடப் படித்த நண்பர்களில் இவன் ஒருவன் மட்டுமே போனான். கோவில்பட்டியில் கல்யாணம் நடந்தது. மணப்பெண்ணைப் பார்த்தபோது "மேகநாதனுக்கு இவளா?" என்று நினைத்தான். ரொம்பவும் சின்னஞ் சிறு பெண். அளவற்ற அடக்கம், எப்போதுமே அதிகம் பேசவே மாட்டாத வளைப் போல் தோன்றினாள். இவன் மட்டுமே கல்யாணத்துக்கு வந்ததில் மேகநாதனுக்கு எவ்வளவு மகிழ்ச்சியென்று சொல்ல முடியாது. பள்ளிக்கூடத்தை விட்டபின் பாப்பையா போன முதல் நண்பனின் கல்யான வீடு அது.

கோவில்பட்டியிலிருந்து நிறைய பஸ்கள் இருக்கின்றன. அன்று வேண்டுமென்றே ரயிலில் ஏறி வந்தான். ரயிலில் வரும்போதெல் லாம் மனம் தாங்க முடியாத கஷ்டத்தை அனுபவிக்கிறது. கோவில்பட்டி ஸ்டேஷனுக்குள் சீக்கிரமாகவே டிக்கெட் எடுத்துக்கொண்டு வந்து உட்கார்ந்து விட்டான். வேப்ப மரங்கள் நிறைந்த ஸ்டேஷன் அது. சரளைக் கற்கள் பாவின பிளாட்பாரம், சிமெட்டி பெஞ்சுகள் எல்லாம் பார்க்க ஒருவிதமான துயரத்தை அளித்தன. எவ்வளவு நெருக்கடிக்குள் இருந்தாலும் ஸ்டேஷன்

________________

மட்டும் தனியாகவே இருக்கிறது. இதுக்கு என்ன காரணம்? கருங்கல் பாவின தளம்தான் எல்லா ஊர் ஸ்டேஷன்களிலும் அநேகமாக இருக்கிறது. அப்புறம், அந்தப் பட்டை பட்டையான இரும்புக் கம்பிகள் வேறு நின்று வேலி செய்கின்றன. வேப்ப மரம், சரளைக் கற்கள். சிமெட்டிப் பெஞ்சுகளும். இந்தப் பெஞ்சு களை ஊரில் பார்க்கில் இருக்கிற சிமெட்டிப் பெஞ்சுகளை விரும்புவதுபோல் அவற்றை விரும்ப முடியவில்லை. டிக்கெட் கவுண்டரை யார் முதலில் கட்டினார்கள்? யாருக்கு ஸ்டேஷன் இப்படியெல்லாம் இருக்க வேண்டுமென்று யோசனை தோன்றியிருக்கும்? வேப்ப மரங்களை சொன்ன யோசனைக்கார னும், டிக்கெட் கவுண்டருக்கு வலை ஜன்னலும், உயரமான மரத்தாலான உயரமான வரிசையை ஒழுங்குபடுத்தும் கிராதிச் சட்டங்குகளும் வைக்க யாருக்குத்தான் முதன்முதலாய் தோன்றி யதோ? கருங்கல் தளம் எந்த ஸ்டேஷனில்தான் நன்றாக இல்லை. தென்காசி ஸ்டேஷனில் குற்றாலம் போக மழையில் இறங்கியபோது பார்த்தது கருங்கல் தளம்தான்.

தென்காசி ஸ்டேஷன் கருங்கல் தளத்துக்கும், கோயில்பட்டி ஸ்டேஷன் கருங்கல் தளத்துக்கும்தான் எத்தனை வித்தியாசம்? தென்காசி ஸ்டேஷன் தளத்தைப் பார்க்கிற சமயமெல்லாம் அது யாருக்காகவோ வெகு நாட்களாகக் காத்திருக்கிறது போலவே இருக்கிறது. கடம்பூர் ஸ்டேஷன் பள்ளமான ஸ்டேஷன், சிறு வயதில் பார்த்த கொல்லம் ஸ்டேஷனைப்போல் கடம்பூர் ஸ்டேஷன் இருக்கிறது. எல்லாவற்றையும் கட்டியது, தளம் போட்டது, வேலி போட்டது, பெஞ்சை இந்த இந்த இடத்தில் போடு என்று சொன்னதெல்லாம் ஒரு ஆள்தான் செய்திருக்க வேண்டும். அந்த ஆளுக்கும் ஒரு வேலை கிடைத்து அவர் இந்த வேலையைச் செய்திருக்கிறார். அன்று கோயில்பட்டி ஸ்டேஷ னில் ரயிலுக்காகக் காத்திருந்தவர்கள் எல்லாருக்குமே ஏதாவது ஒரு வேலை இருந்திருக்கும். ஸ்டேஷனுக்கு வருகிற வழியில் பார்த்த வர்கள் எல்லாருக்கும் ஏதாவது வேலை உண்டு. மேகநாதனுக்கும் வேலை இருக்கிறது. அவனுக்குக் கடை இருக்கிறது. எல்லோரும் வேலை பார்க்கிறார்கள். வேலை இருந்தால்தான் கல்யாணம் ஆகும்.

ஆனால், அக்கா துரதிருஷ்டசாலிதானே வேலைக்கும் அக்காவுக் கும் சம்பந்தமே இல்லை. அக்காவுக்கு யாரையாவது மனசுக்குள் பிடிக்காமலா இருக்கும்? இன்று கோமதி இண்டர்வியூவுக்கு

________________

வருவாளா? கோமதியைப் பார்க்கத்தான் எவ்வளவு ஆசையாக இருக்கிறது? அக்காவுக்கும் இதுபோல யாரையாவது தினந் தோறும் பார்க்க முடியாமல் போனால் மனசுக்குக் கஷ்டமாக இருக்கும்தானா? அக்கா அந்த மனிதனோடு பேசியிருப்பாளா? கோமதியுடன் பேசுகிறதுக்குத்தான் எவ்வளவு நாள்கள் ஆயிற்று? அக்காவுக்குப் பிடித்திருந்தாலும் அக்காவால் இப்படிச் செய்ய முடியாது. எப்போதோ ஒரு தடவை, கோமதி மழை ரொம்பப் பிடிக்கும் என்று சொன்னாள். அக்காவுக்கும்தான். அக்கா மழை யில் நனைந்துகொண்டே தண்ணீர் எடுப்பாள். யார் சொன்னாலும் கேட்க மாட்டாள் அப்போது, மேகநாதனுக்குக் கல்யாணம் ஆகி மூன்று வருஷங்கள் ஆகிவிட்டன. வாய்க்காலுக்கு வரப் பயந்து கொண்டிருந்த மேகநாதனுக்கு இப்போது குழந்தை இருக்கிறது. மேகநாதன், இப்போதும் நல்ல பையனாக இருக்கிறான். அவனைத்தாண்டிப் போனால் அவனிடம் பேசாமல் வர முடியாது. எப்படித்தான் இன்னும் தர்மரைப் போல இருக்கிறானோ?

கொக்கிர குளத்தில் பஸ் நின்றது. பாப்பையாவை அக்கா, தொடையில் தட்டிக் கூப்பிட்டு, "பாப்பையா போயிட்டு வரும்போது ஆபீசுக்கு வா. நான் எங்க எஸ்.ஒ.வை விட்டு அந்த ஆபீசுக்குப் போன் பண்ணச் சொல்றேன். வரட்டுமா?. ஞாபகமா ரத்னா டாக்கீஸ் ஸ்டாப்லே எறங்கிரு.

என்ன பதில் சொன்னானென்று அவனுக்கே தெரியவில்லை. பஸ் புறப்பட்டுவிட்டது. அக்கா கோர்ட்டுக்குப் போகிற வழியில் இறங்கிப் போய்க் கொண்டிருந்தாள். அக்காவோடு அந்தப் பஸ்ஸிலிருந்து யாருமே இறங்கவில்லை. யாராவது இறங்கி அக்காவுக்கு முன்னாலோ, பின்னாலோ போய்க் கொண்டிருந் தால் சந்தோஷமாக இருக்கும்போலப் பட்டது. சிவகாமி மட்டும் தனியே போய்க்கொண்டிருந்தாள். சிவகாமி துயரம் நிரம்பிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறாள். இத்தனை வயதிலும் நிம்மதி அவளுக்குக் கிடைக்கவில்லை. அப்பா, அக்காவின் நிம்மதியைப் பறித்து வைத்துக் கொண்டிருக்கிறார். சிவகாமியின் சம்பளப் பண நோட்டுகள் வீட்டுக்குத் தேவைப்படுகின்றன. மேகநாதனைவிட சிவகாமி மூத்தவள். மேகநாதனுக்குக்கூட சிவகாமியைக் கொடுத்திருக்கலாம்.

ஆற்றுப் பாலத்தில் பஸ் வேகமாகப் போய்க்கொண்டிருந்தது. டிரைவர்களுக்கு ஆற்றுப் பாலத்தில் வேகமாகப் போகவே

________________

எப்போதும் ஆசை. ஆற்றுப் பாலத்தில் பஸ் வேகமாகப் போகும் போது சத்தம் வேறு மாதிரியாகக் கேட்கிறது. இந்தச் சத்தம் எல்லோருக்கும் உவப்பான சத்தம். உள்ளூர வேகமாகப் போவதை வெறுப்பதுபோல நடந்துகொண்டாலும், நிஜமாக யாரும் அப்படி வெறுக்கவில்லை,

எதிரே ஒரு லாரி, இந்த பஸ் பாலத்தைக் கடப்பதற்குள் வந்தால், வேலை கிடைத்துவிடும் என்று நினைத்தான். பாலம் முடியப் போகிறவரைக்கும் லாரியே வரவில்லை. இப்படி நினைத்தது தப்போ என்று வருத்தப்பட்டான். ஒரு அம்பாஸிடர் கார் மட்டும் போயிற்று. அம்பாஸிடர் கார் வர வேண்டுமென்று நினைத்திருக் கலாம். எத்தனை லாரிகள் எவ்வளவு தடவை, இதேபோல பாலத்தில் பஸ் போகிறபோது வந்திருக்கின்றன. இந்தத் தடவை வராமல் போனது வேலை கிடைக்காததற்குத்தானா? ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டுக்குள் பஸ் நுழைகிறவரை அவன், துரதிருஷ்டம் எதிரே லாரியே வரவில்லை.

இது மூன்றாவது இண்டர்வியூ போன தடவை சிவகாமியின் ஆபீஸிலேயே ஒரு வேலை காலியிருந்து போனான். முன்னூறு பேர் வந்திருந்தார்கள். ரொம்பப் பேர் வெளியூர்க்காரர்களைப் போலிருந்தார்கள். இவ்வளவு பேருக்கும் இந்த வேலையின் மீது அபிமானம் இருக்கிறது. யாரோ ஒருத்தருக்குக் கிடைக்கப் போகிற வேலைதானென்று தெரிந்திருந்தாலும், அந்த வேலை யின் பேரில் அவ்வளவு பேராலும் ஆசை வைக்காமல் இருக்க முடியவில்லை. ஒவ்வொருவரும் தங்களுக்கு அந்த வேலை கிடைக்கச் சிறுசிறு காரணங்களை, நம்பிக்கைகளை வைத்துக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரும் அந்த ஆபீஸில் வேலை பார்க்கிற ஒருத்தரையாவது தெரிந்துவைத்திருக்கி றார்கள்.

அந்த இண்டர்வியூ நடந்த ஆபீஸுக்குப் பக்கத்தில் நிற்க நிழல்கூட இல்லை. இருந்த மரங்கள் தொலைவில் ஆபீசுக்குச் சம்பந்தமில்லாமல், இண்டர்வியூவுக்குப் பேர் சொல்லிக் கூப் பிட்டால் கேளாத தூரத்தில் இருந்தன. கோர்ட்டும் தொலைவில் இருந்தது. மரங்கள் கோர்ட்டைச் சுற்றி இருந்த மரங்களே. இதுவரை இவன் போன எல்லா இண்டர்வியூக்களிலும் இது போல தங்கியிருக்கிறதுக்கு மரநிழல்கள் உதவியிருக்கின்றன. மர நிழல்கள் இல்லாமல் வாழ்க்கை என்னபடி ஆகும்?

________________

இந்த இண்டர்வியூ நடக்கிற கவர்மெண்ட் டிரெயினிங் ஸ்கூலில் ஏராளமான மரங்கள் இருக்கின்றன. ஆனாலும், அந்த லாரி விஷயத்தை மறக்க முடியவில்லை. அவனுக்கு எத்தனையோ தடவை இதுபோல நேர்ந்தும், தனக்குத் தானே தலைக்குனிவுகளை அடைந்தும் இப்படி எண்ணாமலிருக்க முடியவில்லை. இனி இதுபோல நினைப்பதே இல்லை என்று தீர்மானம் செய்துகொண்டான். இதைப்போல் பல தடவை தீர்மானித்தது நினைவுக்கு வந்ததும், தன்னை மிகவும் அற்பமான கோழையைப் போல் உணர்ந்தான்.

......................