தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Monday, August 06, 2018

பித்தப்பூ - க.நா.சுப்ரமண்யம் :: முதல் 7 அத்தியாயங்கள் & 33,34 அத்தியாயங்கள்

முன்னுரை

விஷயங்களை எட்ட நின்று பார்க்க வேண்டியதாக இருக்கிறது. நெருங்கி, நெருக்கப்படுவதால் மட்டும் அனுபவங்கள் கிடைத்து விடுவதில்லை. இதனால்தானோ என்னவோ நாவல்களில் வருகிற மனிதர்கள், கதைகளில் வருகிற அனுபவங்கள், அதிகமாகக் காண்பது போலவும், நேரில் கண்டு, பட்டகஷ்டங்கள் அவ்வளவு காரமாகக் காண்பதில்லை போலவும் தோன்றுகின்றன.

பயனெண்ணாது கதைப்பதென்பதும் தாமரையிலைத் தண்ணீர் மாதிரி பட்டும் படாமலும் இருப்பதென்பதும், எல்லாவற்றையும் பற்றில்லாமல் சாட்சிபூர்வமாகப் பார்த்து இருந்து விடுவது என்பதும் லட்சியங்களாக - இந்தியாவில் மட்டுமில்லை , உலகம் பூராவிலும் மனித ஜாதி பூராவிலேயே ஒரு லட்சியமாகக் கருதப்பட்டு வந்திருக்கிறது.

இப்படி ஓர் அனுபவம் - பட்டுக்கொள்ளவும் முடியாது, படாமலும் ஆக்க முடியாது என்று ஒரு அனுபவம் ஏற்படுகிறபோது அந்த அனுபவத்தை அசைபோட்டுப் பார்ப்பது என்பது அது நடந்து மறந்துபோன பிறகுகூட வெகுகாலம் சாத்தியமாக இருக்கிறது. நேராகக் கண்டு பாதிக்கப்பட்ட அனுபவங்களைவிட அதிகநாள் மனத்தில் நீடிக்கிறது.

இப்படி ஏற்பட்ட ஒரு விஷயத்தை, மனித மனத்தில் பைத்தியம் என்று ஒரு வியாதி ஏன் ஏற்படுகிறது, அது ஏற்படுகிற விதத்தை நாவலாகச் செய்ய முடியுமா என்று யோசித்துக் கொண்டிருந்ததன் மத்தியிலே அது பூர்த்தியாகிவிட்டது என்பதனாலேயே முழுதும் தெரிந்து கொண்டு விட்ட மாதிரி பித்தப்பூவை ஆரம்பித்துக் கொண்டேன். பைத்தியக்காரர்கள் கடவுளின் அன்புக்கோ, கோபத்திற்கோ பாத்திரமானவர்கள் என்று நினைப்பது எத்தனை அசட்டுத்தனம். பைத்தியத்தின் காரணங்கள் - அது தேகங்காரணமாக ஏற்படுகிறதா, மனம் காரணமாக ஏற்படுகிறதா, இரண்டிற்கும் ஏற்படுகின்ற அதிர்ச்சியினால் உண்டாகிறதா என்றெல்லாம் கண்டுகொண்டு கூறும் அளவில் இந்தக் காலத்தைய மனோதத்துவ அறிவு வளர்ந்து விட்டதாய் நினைக்கிற மேல்நாட்டு மனோதத்துவ சாஸ்திரமும் ஓரளவிற்கு அசட்டுத்தனந்தான் என்று எனக்குத் தோன்றியதைச் சொல்ல “பித்தப்பூ” என்ற தலைப்பைக் கொண்ட நாவல் ஒன்று எழுத வேண்டுமென்று 1959 இல் எண்ணினேன். மூன்றுதரம் வெவ்வேறு கோணங்களிலிருந்து வெவ்வேறு வழிகளில் எழுதிப் பார்த்தேன். திருப்தியளிப்பதாக இல்லை . இப்போது செய்திருப்பது நாலாவது முயற்சி. இதில் நான் காட்டுகின்ற முதல் லட்சியம் - மனித மனம் உடைவதைக் காட்டும் முயற்சி முற்றும் கூட இல்லையென்று எனக்கே தெரிகிறது. சாட்சிபூதமாகக் காட்ட உபயோகப்பட்டிருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது. 

எல்லா சம்பவங்களும் கற்பனை - பாத்திரங்களும் பொய் என்று சொல்வது நாவல் மரபு. மாறாக, இதில் வருகிற எல்லாக் கதாபாத்திரங்களும், சம்பவங்களும் எனக்குத் தெரிந்தவரையில் முழு உண்மை. இதில் சம்பந்தப்பட்ட யாரையும் குற்றம் சாட்டுவதற்கோ, குறை சொல்வதற்கோ எழுதப்பட்டதல்ல. தங்களைத் தான் சொல்லியிருக்கிறேன் என்று நினைப்பவர்கள்கூட என்னைத் தப்பாக நினைக்கக் கூடாது என்பதற்காக இதைக் கூறுகிறேன்.

தியாகு என்பவன் இருந்ததும், இறந்ததும் பழங்கதையாகப் போய்விட்டது. அது நினைவிலிருப்பவர்கள் - அந்த அல்பாயுசில் போய்விட்ட முழு மனிதனின் நினைவில், அதில் தங்கள் குறைபாடு என்ன என்று கருதிப்பார்க்க வேண்டிய அவசியமே கிடையாது. ஒரு மனிதனைப் பற்றிய முழு உண்மையும் நெருங்கியிருப்பவர்களுக்குக்கூட பூரணமாகத் தெரிவதில்லை இதில் தவறு ஒன்றுமில்லை. சம்பந்தப்பட்டவர்களின் மன்னிப்பை - நானும் தியாகுவிடம் ஏராளமான மதிப்பு வைத்திருந்தவன், அவனுக்கு என்னாலான அளவில் நண்பனாக இருக்க முயன்றவன் என்கிற அளவில் முன்கூட்டியே மன்னிப்புக் கேட்டுக்கொண்டு விடுகிறேன். தவறு ஏதாவது இதில் இருந்தால் தவறு என்னுடையதுதான். தவறு என் அறிவிற்கெட்டாத, எனக்குத் தெரியாத விஷயங்களில்தான் இருக்க வேண்டும். மன்னிக்கவும்.

மைசூர்.                                                                                               க.நா.சுப்ரமண்யம்

'த்வன்யா லோகா"

23.02.1984

பித்தப்பூ

1

“எனக்குப் பைத்தியமா சார் பிடித்திருக்கு?”

“ம்... ம்... ம்”

"எனக்குப் பைத்தியம் பிடித்திருக்கு என்று எல்லோரும் கூறுகிறார்களே. நான் உண்மையிலேயே பைத்தியமா?*

“இந்தக் கேள்வியைக் கேட்கக் கூடிய நீ உண்மையிலேயே எப்படிப் பைத்தியமாக இருக்க முடியும்?” என்று கேட்டேன்

2

இன்று இந்தக் கேள்வியைக் கேட்டவன் தியாகராஜன். எனக்கு அவனை அவன் பிறந்த நாள் முதற்கொண்டு தெரியும். நடுநடுவே பல ஆண்டுகள் நான் அவனைப் பார்க்காமல் இருந்திருக்கலாம். இப்படியும், அப்படியுமாக அவனைப்பற்றி எனக்கு அனேகமாக எல்லா விஷயங்களும் தெரியும். அவன் பிறந்த அன்றைக்குத்தான் என் பதினாறு வயது மனைவியும் என் வீட்டிற்கு வந்தாள்.

சாத்தனூரில் சர்வமானியர் தெருவில் எங்கள் வீட்டிற்குப் பத்து வீடு தள்ளி எதிர் வரிசையில் இருந்தது தியாகுவின் வீடு. அவன் அப்பா ஊரின் மதிப்பிற்கும், மரியாதைக்கும், பாத்திரமானவர். ஒரு லட்சியவாதி என்று சொல்ல வேண்டும். ஊரில் சிலர் அவரைப் பைத்தியம் அல்லது அரைப் பைத்தியம் என்றுதான் சொன்னார்கள். அதற்குக் காரணம் அவர் மற்றவர்களைப் போல இருக்க மறுத்ததுதான். மற்றபடி அவருக்குப் பைத்தியம் என்று சொல்ல முடியாது.

சற்று வயதானவர்தான். கிட்டத்தட்ட அறுபது வயதிற்கு ஒன்றிரண்டு குறைவாக இருக்கும்போது தியாகு வந்தான். இளைய மனைவி வீட்டில் அந்த அம்மாள் இருக்கும் இடம் தெரியாது. ஆனால் அவர் கைவண்ணம் எங்கும் தெரியும்.

ஊரோடு ஒத்து வாழத் தெரியாத ஒரு மனிதன் வாழ்ந்து குப்பை கொட்டுவது மிக மிகச் சிரமம். அந்தச் சிரமமான காரியத்தை அந்த அம்மா மிகவும் சிறப்பாகச் செய்து, “அவங்களா? அவங்களுக்கென்ன லஷ்மியேதான் அவங்க!” என்று அவளை அறிந்தவர்கள் எல்லோரும் சொல்ல வாழ்ந்தவள்.

நாற்பது ஐம்பது நாளைய குழந்தையை அவள் எடுத்துக் கொண்டு வருவாள் - கஷ்கு, முஷ்கு என்று குழந்தை சிவப்பாக அழகாகச் சிரித்த பொக்கை வாயும் அதுவுமாக - எனக்குக் குழந்தையைப் பற்றி பயம். தனியாகப் பிறந்து தனியாகவும் வளர்ந்தவன். குழந்தைகளை எடுத்துக் கொள்ளவும் தெரியாது; சீராட்டவும் தெரியாது. ராஜி நாலைந்து தம்பி, தங்கைகளுடன் பிறந்தவள். அவள் அஜாக்ரதையாக யாராத்துக் குழந்தையையோ தூக்குகிறமாதிரி எனக்கு இருக்கும். “கீழே போட்டுடாதே! அவாத்திலே ஏதாவது சொல்லப்போறா” என்பேன். “தியாகு! தியாகு!” என்று அவன் முகவாய்க் கட்டையிலே விரல் வைத்து அமுக்குவாள். ஏதோ ஒரு பெரிய வேலையைச் செய்கிற மாதிரி. தியாகு பொக்கை வாயைத் திறந்து முழுச் சிரிப்பாக சிரிப்பான். ஒரு அவுட் வாணம் வானத்தில் வெடித்துச் சிதறுவது போல இருக்கும். ராஜிக்குத்தான் குழந்தைகளிடம் எத்தனை ஆசை என்று எண்ணத் தோன்றும்!

3

தியாகுவின் ஆண்டு நிறைவிற்கு தெருவிற்கெல்லாம் அவர்கள் வீட்டில்தான் சாப்பாடு. பத்மநாபய்யருக்கு வஞ்சனையில்லாத மனசு. ஊரார் எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்று நினைப்பவர். தாராளமானவர். ஊரார் அவர் நன்றாக இருப்பது கண்டு பொறாமைப்படுபவர்கள். பெரிய பணக்காரராக இருந்து கண் எதிரிலேயே படிப்படியாக இறங்கிக் கொண்டிருப்பவர். அவர் இறங்கிக் கொண்டிருப்பதில் சாத்தனூர்க்காரர்களுக்குப் பரம திருப்தி.

படி இறங்கிக் கொண்டிருப்பதற்காக எதையாவது குறைக்க முடிகிறதோ! பத்து ஐயர் பகட்டாக தன் கடைக் குட்டியின் ஆண்டு நிறைவைக் கொண்டாடினார். அவரை வேண்டாதவர்கள் எல்லாம் வந்து சாப்பிட்டுப் பெரிய ஏப்பம் விட்டுக் கொண்டு, “சாப்பாடு போட்டவன் நீடூழி வாழ்க” என்று மூன்று மொழிகளால் - சமஸ்கிருதம், தமிழ், ஆங்கிலம் இம் மூன்றிலும் வாழ்த்திவிட்டு மன ஆசுவாசத்துடன் திரும்பினார்கள். “இந்தக் கிழவனுக்கு ஏகப்பட்ட கடன், சொத்து சுதந்திரம் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் ஆடம்பரத்தில் குறைச்சலில்லை. இந்தக் காலத்தில் ஆயிரம் ரூபாயாவது செலவழிந்திருக்கும்? எங்கு கடன் வாங்கினானோ! வேணும் அவனுக்கு” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு போனார்கள் சாத்தனூர் சர்வமானியத் தெருவில் வசிப்பவர்கள். |

இதற்கு ஒன்றிரண்டு விலக்குகளும் உண்டுதான். போஸ்ட் மாஸ்டர் நாணு ஐயர், பணக்காரராக இருந்து நொடித்துப் போயும் மனம் குன்றாத சாம்பமூர்த்தி ஐயர், இம்மாதிரி சிலர் உண்டு. ஆனால் பத்து எல்லோரையும் ஒரே மாதிரிதான் நடத்துவார்; பறையமார் சிநேகிதம், விரோதம் என்று அவருக்குப் பாராட்டவே தெரியாது. எல்லோரையும் சமமாக, மனிதர்களாகப் பார்ப்பவர் அவர். மகா வினைக்காரரான ஸ்கூல் மாஸ்டர் மகாலிங்கமும் அவருக்கு ஒன்றுதான். எதிர்வீட்டு ராமச்சந்திரனும் ஒன்றுதான். இதுவே ஊரில் பலரும் பைத்தியம் என்று அவரைக் கருதுவதற்குக் காரணமாக இருந்தது.

சமையல் மற்றும் எல்லா வீட்டுக் காரியங்களும் பத்துவின் மனைவி - பெண் குலமா? அவர் குணம் போக்கு போலவே லஷ்மி தான் என்று நினைக்கிறேன் - ஒண்டியாகச் செய்து கொள்வாள். மூத்தாள் பெண் இரண்டு பேர் கல்யாணமாகாதவர்கள். நன்றாக வளர்ந்து - குதிரை மாதிரி என்று சொல்வார்கள். நடை போட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஒரு காரியமும் செய்யத் துப்புக் கிடையாது. ஆனால் அவர்களை லஷ்மி கடுமையாக ஒரு சொல்கூடச் சொல்லமாட்டாள். சொன்னால் இளைய தாயார் என்று பட்டம் வந்து விடுமே.

கூடமாட உதவி செய்தது மூத்தாளின் கல்யாணமான முதல்மகளும், அவளுடைய கல்யாணமாகாத பி.ஏ. படித்துக்கொண்டிருந்த பதினெட்டு வயதுப் பெண்ணும்தான். அம்மா பெயர் பாகீரதி. பெண்ணின் பெயர் கமலம். ஒரு நூறு, இரு நூறு பேருக்குச் சமையல் செய்து விருந்தளித்து விட்டார்கள் அவர்கள். மூவரும் ராஜியும், என் ஒன்றுவிட்ட சித்தப்பா வின் மனைவி பட்டுவும் அவர்களுக்கு உதவி செய்ததாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இருக்கலாம்.


4
“எங்கப்பாவைச் சிலபேர் என் காதில் விழும்படியாகப் பைத்தியம் என்று சொல்கிறார்களே! அது நிஜமா சார்?”

“யார் அவரைப் பைத்தியம் என்று சொன்னது?*

*உங்கள் காதில் விழுந்ததில்லையா? அவர் பைத்தியம். அதனால்தான் சொத்தை வைத்து ஆளத் தெரியாமல் நிறைய சொத்துடன் ஆரம்பித்தும் ஏழையாகிவிட்டார் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.”

“அவரை "Eccentric” என்று சொல்லலாம். பல விஷயங்களில் அவர் மற்ற சாத்தனூர் சர்வமானியத் தெருவினரைப் போல இல்லை . பிறர் நடந்து கொள்கிற மாதிரி தன் விஷயத்தைத் தவிர பிறர் விஷயத்தைப் பற்றிக் கவலைப்படாதிருப்பது என்பதெல்லாம் அவரால் முடியாது. யாருக்கும் வேலைகளுக்கு கூலி குறைத்துக் கொடுக்க அவருக்கு மனசு வராது. ஒரு ரூபாய் கேட்பானானால், ஒண்ணேகால் தருகிறேன் - நன்றாகச் செய்” என்பார். இதனாலெல்லாம் அவரைப் பைத்தியம் என்றோ சொல்ல முடியாது.

“அவரை லட்சியவாதி என்று சொல்லலாமா?”

"லட்சியவாதிதான் அவர். உலகில் லட்சியவாதிகளைப் பைத்தியக்காரர்களாக எண்ணத் தொடங்கி விட்டார்கள் அந்தக் காலத்திலேயே என்று வேண்டுமானால் சொல்லலாம். சற்று பிடிவாதக்காரர். சற்று முன்கோபி. ஆனால் அவர் பிடிவாதத்தினாலும் முன்கோபத்தினாலும் கஷ்டப்பட்டவர் என்று அவர் மனைவியைப் பற்றி வேண்டுமானால் சொல்ல லாம். மற்ற யாருக்கும் அவரால் ஒரு தொந்தரவும் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை. பத்துவைப்போல எல்லோரும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று என் வாழ்க்கையில் பல தடவைகள் நினைத்ததுண்டு. ஆனால் மற்றவர்கள் பலரும் குறுகிய மனத்தவர்களாக, பிறருக்குத் தீங்கு செய்பவர்களாக, தன் காரியத்தையே கவனிப்பவர்களாக இருக்கிறார்களே - என்ன செய்ய? லட்சியம் என்றால் அது என்ன என்று கேட்பவர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும் இந்த நாளில் லட்சியவாதியாக இருப்பது பைத்தியக் காரத்தனம்தான்!”

“அம்மாவைப் பற்றி?

“உன் அம்மாவைப்பற்றி எனக்கு நேரடியாக ஒன்றும் தெரிய வாய்ப்பில்லை. என் மனைவி உங்கம்மாவைப் பார்த்துப் பழகிய அளவில் ஒரு சடங்காக ஊரோடு ஒத்துப் போகாத கணவனோடு ஈடு கொடுத்துக்கொண்டு, மூத்தாள் குழந்தைகள் - மூன்றும் பெண்கள் - மூன்றிடமும் நல்ல பெயர் வாங்கிக்கொண்டு படி இறங்கும் தருணத்தில் குடும்பத்தைக் கட்டிக்காப்பாற்றிய பெருமை உங்கம்மாவுடையதுதான்!

இதற்குள் உள்ளே வந்த ராஜி, "லஷ்மி என்றால் அந்தப் பெயர் உங்கம்மாவுக்குத்தான் பொருந்தும்" என்றாள்.


5

*பத்து” என்கிற பத்மநாபய்யரின் முதல் மனைவி மூலமாகப் பிறந்த குழந்தைகள் மூன்றும் பெண்கள், அவற்றில் இரண்டு கல்யாணத்திற்கிருந்தன. மூத்த மகளுக்கு கலியாணமாகி ஒரு பெண்ணும் பிள்ளையும் இருந்தன. அவள் புருஷன் உள்ளுரிலே ஒரு பள்ளிக்கூட வாத்தியார்.

பத்துவிற்கு இளையாளிடம் பிறந்த முதல் ஆறு குழந்தைகளும் பையன்கள். மூத்தவன் பெயர் ராஜா. அவன்தான் மற்ற குழந்தைகளையெல்லாம் தூக்கி வைத்துக்கொண்டு வளர்த்துப் பெரியவனாக்கியவன் என்று சொல்லவேண்டும். பத்து அதிகமாகக் குழந்தைகளைச் சீராட்டிப் பாராட்டிக் கொஞ்சமாட்டார்; அவருக்கு நேரம் கிடைக்காது என்பது மட்டுமல்ல; குழந்தைகளிடமும் அதிகமாக ஈடுபாடும் கிடையாது ஒதுங்கி விடுவார். அம்மாவுக்கோ வீட்டு வேலைகள் ஏராளம். இரண்டு கட்டுவீடு, வாசலில் ஒரு கிணறு, கொல் லையில் ஒரு கிணறு, தினமும் வீட்டுப் பேர்வழிகள் பத்துப் பனிரெண்டு பேருடன் - சாப்பிடுவதற்கு தெருவோடு போகிறவர்கள், தெரிந்தவர்கள், தேடி வந்தவர்கள் என்று யாரையா வது நாலு பேரைக் கூட்டிக்கொண்டு வந்து விடுவார்.

நானும், அம்மாவும், பாட்டியும் சாத்தனூரில் பழைய வீட்டைப் புதுப்பித்துக் கொண்டு தங்குவதற்கு முந்தியேகூட நான் சாத்தனூரில் பத்மநாப அய்யர் வீட்டிற்குப் பலதடவை போயி ருக்கிறேன். எங்கள் சொல்ப நிலங்களை அவரிடம்தான் குத்தகைக்கு விட்டிருந்தோம். குத்தகைப் பணத்தை வாங்க சிலசமயம் நான் போவதுண்டு. பத்துவிற்கு என் பெயர் ஞாபகம் இராது. “நாணா வந்திருக்கிறார் - சாப்பாடு போடு” என்று நல்ல சாப்பாடும் போட்டு, குத்தகைப் பணமும் கொடுத்தனுப்புவார் அவர்.

குழந்தைகளைப் பெறத்தான் அந்த அம்மாளுக்குப் பொழுது இருந்ததே தவிர அவர்களைக் கவனிக்கப் பொழுது இல்லை. முதலில் ராஜாவைக் கட்டாயப்படுத்தி முதல் இரண்டு குழந்தைகளைத் தூக்கி வைத்துக்கொண்டு விளையாட்டுக் காட்டி சமாதானமாக வைத்துக்கொள்ள வேண்டியிருந்து, பிறகு அவனுக்கு அதுவே வழக்கமாகிவிட்டது. பொழுது போக்காகவும் முழுக்காரியமாகவும் குழந்தைகள் காரியத்தைக் கவனிக்கவும், நன்றாகப் பார்த்துக் கொள்ளவும் ராஜா பழகி விட்டான் என்றே சொல்லலாம்.

முதல் ஆறு பிள்ளைகளுக்குப் பிறகு வரிசையாக இரண்டு பிள்ளைகள் பிறந்தன லஷ்மியம்மாளுக்கு. அதற்குப் பிறகு ஒரு பிள்ளை . அவன்தான் தியாகராஜன். அது 1933 ஆம் | வருஷம் என்று நினைக்கிறேன். 1933தான். அந்த வருடம் தான் ராஜி எங்கள் வீட்டிற்கு வந்தாள். தியாகராஜன் என்கிற தியாகுவிற்குப் பிறகு அந்த அம்மாளுக்குக் குழந்தைகள் பிறக்கவில்லை. வீடு இதற்குமேல் தாங்காது என்ற நினைப்பும் இருக்கலாம். அல்லது அந்த அம்மாள் உடம்பு ஒன்பது பிள்ளைகளுக்கு மேல் தாங்காது என்று டாக்டர் சொல்லியி ருக்கலாம். பத்து விருத்தியை நிறுத்திக் கொண்டார்.

அந்த வருஷம் ராஜா கும்பகோணம் காலேஜில் இண்டர்மீடியட் இரண்டாவது ஆண்டு படித்துக் கொண்டிருந்தான் என்று ஞாபகம். கடைசிக் குழந்தைகள் மூன்றையும் கவனித் துக் காலையில் தூக்கி வைத்துக் கொண்டிருந்துவிட்டு பரக்கப்பரக்க அரை வயிறு சாப்பிட்டு விட்டு, ஐந்து மைல்கள் நடப்பதற்கு ஒரு மணி நேரம் வைத்துக் கொண்டு ஒன்பது மணிக்குக் கிளம்பி காலேஜுக்குப் போவான். நடைதான். சைக்கிள் வாங்கித் தந்திருக்கலாம், சைக்கிளில் போனால் பையன் விபத்துக்குள்ளாகி விடுவான் என்று பத்துவிற்கு பயம். மூன்றாவது பையன் தலைப்பட்டு காலேஜுக்குப் போக ஆரம்பித்தவுடன்தான் அவர் சைக்கிள் வாங்க சம்மதித்தார் என்று எனக்கு நினைவிற்கு வருகிறது.

6
“எங்கண்ணாவும் சிலசமயம் பைத்தியக்காரர் மாதிரி நடந்துகொள்வான் என்று அந்த நாட்களில் அவரைத் தெரிந்தவர்கள் சொல்கிறார்களே?”

“அவனும் கொஞ்ச விஷயங்களில் *Excentric” என்றுதான் சொல்ல வேண்டும். அவனுக்கு எப்போதும் அந்த நாட்களில் நான் அறிந்தவரையில் ஒரு தார்மீகமான கோபம். தன் அப்பா தன் காரியங்களைக் கவனித்துக்கொண்டு மற்றவர்களைப் போல இல்லையே என்று வருத்தம். இரண்டு வருடங்களுக்கொரு குழந்தையாகப் பெற்று தன் தலையில் கட்டி விடுகிறாரே என்று கோபம் அம்மாவைப் போட்டு உதவியில்லாமல் இரவு பகல் வேலை வாங்கிக் கொண்டிருக்கின்றாரே என்று ஆத்திரம் படிப்பில் ஈடுபாடிருந்தும் படிக்க முடி யவில்லையே என்று ஆதங்கம். எல்லாமானதும் அவர் பெரியப்பா ஒருவர் அடிக்கடி வந்து உதவி செய்வதற்குப் பதிலாக கிடைத்ததையெல்லாம் வாரிக்கொண்டு போகிறாரே என்று வருத்தம்.

“இத்தனைக்கும் மத்தியிலும் நன்றாகப் படித்தானில்லையா அவன்?* "நன்றாகத்தான் படித்தான்”.

* இப்பொழுது அவனை "Ecentric' ஆகக்கூடச் சொல்ல முடியாது. சாதாரண , பணம் சேர்த்துக் கொள்வது, தன் குடும்பத்தைப் பார்த்துக்கொள்வது என்கிற மாதிரி மாறியிருப்பான்."

* இது நல்லதுதான் என்றும் சொல்லலாம். நன்றாக இல்லை என்றும் சொல்லலாம்."

7

பார்ப்பதற்கு யாருடைய மனதையும் கவரக்கூடிய குழந்தை; கண்களையும்தான். தெருவில் "பத்து ஐயரைப் பிடிக்காதவர்கள் வீட்டில்கூட தியாகுவைக் கொண்டு வந்து வைத்துப் பாராட்டுவார்கள். அதுவும், கல்யாணத்திற்கு இருக்கும் பெண்களும், புதிதாகக் கல்யாணமாகிப் புக்ககத்திற்கு வந்திருக்கும் பெண்களும், புக்ககத்திற்குப் போய்விட்டு முதல் தடவையாக அம்மா வீட்டிற்கு வந்திருக்கும் பெண்களும் தியாகுவை வெகுவாகத்தான் கொண்டாடினார்கள்.

ஒரு வீட்டுக்குத் தூக்கிப் போனார்களானால் அங்கிருந்து அடுத்த வீடு, அதற்கடுத்த வீடு, எதிர்வீடு என்று பல வீடுகள் தாண்டிவிடுவான். “எங்க தியாகு உங்காத்திலே இருக்கி றானா?” என்று கேட்டுக்கொண்டு ஒவ்வொரு நாளும் பத்துவின் பத்து பையன்களில் ஒருவனாவது ஒவ்வொரு வீட்டிற்கும் போய் வருவான். இதில் பத்துவோ, லஷ்மியோ தேடிக் கொண்டு வரமாட்டார்கள்.

ஆனால் பத்து ஐயர் மற்ற கிராமத்து பிராமணர்கள் போல ஒவ்வொரு வீட்டுத் திண்ணையிலும் போய் துண்டைப் போட்டுப் பேசிக்கொண்டிருக்க மாட்டார்.

தெருவிலிருந்த இருபது இருபத்தியைந்து வீடுகளிலும் அநேகமாக ஒவ்வொரு நாளும் ஏறியிறங்கித் துண்டைப் போட்டு, திண்ணையில் சாய்ந்து கொண்டிருந்துவிட்டு வருபவர் அதிகமாக ரிடையர்டு போஸ்ட் மாஸ்டர் நாணா ஐயர்தான். பல தடவைகள் துண்டை எங்கே விட்டோம் என்று தெரியாது - சாயங்காலம் மறுபடி ஒருதரம் வீடு வீடாகப் போய் தேடிக் கண்டுபிடித்து எடுத்துக்கொண்டு வந்துவிடுவார்.

நாணாவிற்குப் பொடி போடுகிற பழக்கம். யார் கும்பகோணத்திற்குப் போகிறேன் என்று கிளம்பினாலும் “கால் ரூபாய்க்கு எனக்கு ஒரு மட்டை பட்டணம் பொடி வாங்கிண்டு வந்து தாயேன்” என்று சொல்லிக் கால் ரூபாயைக் கொடுத்து விடுவார். அவருக்குப் பணத்தட்டுப்பாடு கிடையாது. பென்ஷன் வந்து கொண்டிருந்தது. குடும்பபாரம் அதிகம் கிடையாது. ஒரு பெண் - கலியாணம் பண்ணிக் கொடுத்துவிட்டார். அவள் கணவனுடன் டில்லியில் இருக்கிறாள். அவளுக்கு இரண்டு குழந்தைகள் - ஒரு பையனும் பெண்ணும் இருக்கிறார் கள். அது தவிர ஒரே ஒரு பிள்ளைதான். பிள்ளை பெயர் சாமா. பி.ஏ. படித்துவிட்டு வேலைக்குப் போகமாட்டேன் என்று சொல்லிக்கொண்டு, சுதந்திர வாழ்வே சுகமான வாழ்வு என்று சொல்லிக்கொண்டு, கதைகள் எழுதிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறான்

தன் பிள்ளையைப்பற்றி அப்பாவிற்கு எல்லையில்லாத பெருமை. அவன் கதைகள் எங்காவது அபூர்வமாகப் பேப்பரில் வந்துவிட்டால் அதைத் தூக்கிக்கொண்டு வீடு வீடாகக் காட்டிக்கொண்டு ஒரு சுற்று சுற்றிவருவார். மற்றவர்களுக்கு கதையெழுதுவது பற்றியோ, கதை படிப்பவர்கள் பற்றியோ அதிகமான ஈடுபாடு கர்வம் கிடையாது. அதை அவர்கள் ஒரு பெருமையாகவும் கருதுவதில்லை. பையன் அப்பாவிடம் சொல்லிப் பார்த்தான். “இப்படிச் செய்யாதே! எனக்கு அவமானமாக இருக்கிறது" என்று அவர் கேட்பதாக இல்லை .

பத்து ஐயருக்கும், நாணாவிற்கும் ஐம்பது வருஷத்து சினேகிதம். நாணா அதே தெருவில் பிறந்து, வளர்ந்து பெரியவனானவர். பத்து எட்டாவது வயதில் கும்பகோணம் டம்பீர்" தெருவிலிருந்து சாத்தனூரில் ஸ்வீகாரமாய் வந்தவர். அவர் பிறந்த இடத்திலும் ஏழை என்று சொல்ல இயலாது, சொந்த மாமாவுக்குத் தான் ஸ்வீகாரம். முப்பது, நாற்பது ஏக்க ருக்கு புஞ்சைக்கு சர்வமானியத் தெருவிலுள்ள ஒரு வீட்டுக்கு ஸ்வீகாரம். சொத்தை சொந்த முயற்சியால் சரசரவென்று செலவு செய்துகொண்டே வந்தார். அது ஒன்றும் சிரமமாக இருக்கவில்லை. ஏனென்றால் அவர் பெரிய சம்சாரி தாராள மனப்பாங்கு உடையவர். தியாகு பிறந்தபோது நாற்பது ஏக்கரா நிலம் ஆறேழுக்கு வந்துவிட்டது. அப்படியொன் றும் கெட்ட பழக்கங்கள் இருந்தன என்றும் சொல்லமுடியாது. தாராளமாய் இருந்தது ஒன்றுதான் குறை அவரிடத்தில்.

அவருக்கு மூத்தவர் ஒருவர் கும்பகோணத்தில் வக்கீலாக இருக்கிறார். அப்படியொன்றும் சொத்தை வக்கீலும் இல்லை. நிறைய வருமானம் வருவதாகத்தான் சொன்னார்கள். இருந்தும் மாதத்தில் ஒரு தடவையோ, இரண்டு தடவையோ சாத்தனூர் வருவார். தன் தம்பி வீட்டில் சுரண்டிக்கொண்டு போகக் கூடியதையெல்லாம் சுரண்டிக்கொண்டு போவார். வாழைக்காய், வாழையிலை, நார்த்தங்காய், மாங்காய் மற்றும் எலுமிச்சம் பழம் என்று தம்பியும் எதையும் தனக்கென்று வைத்துக் கொள்ளாமல் கொடுத்து விடுபவர். 'அண்ணா ' 'அண்ணா ' என்று அந்த அண்ணாவிடம் பயபக்தி அவருக்கு.

இந்த அண்ணாவைத் தவிர அவருக்கு இன்னொரு தங்கையும் உண்டு. அவளும் முக்கியமாய் பலாப்பழ சீசனில்தான் வருவாள். சுரண்டிக்கொண்டு போகத்தான். பணப்பரிசாக யாருக்கும் எதுவும் கொடுக்க பத்துவால் முடியாது. சாமானாக அவர் வழங்கி விடுவார்.

அவர்கள் வந்து போகும்போது ஒவ்வொரு தடவையும் ராஜா எதிர் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு அவர்களை ஊரறிய சபித்துக்கொண்டு இருப்பான். அவன் சொன்னால் அவரா கேட்பார்? நிச்சயமாகக் கேட்க மாட்டார். தன் ஆற்றாமையை வெளிப்படுத்திக் கொள்ளும் விதத்தில் தியாகுவை தொடையில் போட்டுத் தட்டிக்கொண்டே பெரியப்பாவையும், அத்தையையும் சபித்துக் கொண்டிருப்பான் ராஜா.

ராஜா கும்பகோணம் காலேஜுக்குப் போய்விட்டு வரும்போது, ஒருவாய்த் தண்ணீர் வேண்டுமானால்கூட அந்தப் பெரியப்பா வீட்டிற்குப் போகமாட்டான். இன்னொரு சித்தப்பா இருந்தார். அவர் மகா கஞ்சன்தான் என்றாலும் அண்ணா வீட்டிற்கு எதையும் சுரண்டிக்கொண்டு போக வரமாட்டார். அவர் வீட்டுக்குத்தான் போவான். சில சமயம் காபி, டிபன் கிடைக்கும், சில சமயம் வெறும் தண்ணீர்தான் கிடைக்கும்.


************

33
தன்னுடைய நாற்பத்தைந்தாவது பிறந்த நாள், அவசியம் வரவேண்டும் என்று என்னைக் கூப்பிட வந்த தியாகராஜன் பாப்பாவையும், பாப்பாவினுடைய புருஷன் மணியையும் கூப் பிட்டான் போனோம்.

முக்கியமாக, நாங்கள் அவனை மதிக்கவில்லை; மதிக்காமல் வராமல் இருந்துவிட்டோம் என்று அவன் நினைத்துவிடக் கூடாதே என்பதற்காகப் போனோம் என்றுதான் சொல்ல வேண்டும்.

மனதிற்கு மிகவும் கஷ்டத்தைக் கொடுத்த பிறந்தநாள் பார்ட்டி அது என்றுதான் சொல்ல வேண்டும். நெருங்கியவர்கள் என்று சொல்லும்படியாக ஒருவரும் அவன் பிறந்தநாள் பார்ட்டிக்கு வரவில்லை. எங்கள் மூன்று பேரையும் தவிர இரண்டுபேர்தான் தெரிந்தவர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் வந்திருந்தார்கள். அவர்களும் தியாகுவுக்கு ஷ்வீsலீ பண்ணிவிட்டு , Happy Birthday சொல்லிவிட்டுப் போய்விடத் தயாராய் இருந்தார்கள்.

யாரோ ஒருவன் - உத்திர சுவாமி மலைக்கோயிலில் அபஸ்வரமாகப் பாடிக் கொண்டிருப்பவன் - காசு கொடுத்து அவனைப்பாடச் சொல்லியிருந்தான். அவன் முருகனைப் பற்றிய பாடல்களைத் தத்துப் பித்தென்று அபஸ்வரமாகவும் வார்த்தைகள் சீராக வராமலும் பாடலே சரியாக இல்லாமலும் பாடிக்கொண்டிருந்தான். டாக்டர் குடிக்கவேண்டாம் என்று கண்டித்துச் சொல்லியிருந்தும்கூட, தியாகு அன்றைக்கு சற்று அதிகமாகவே குடித்துக் கொண்டிருந்தான் என்று தோன்றியது. மனைவியும், குழந்தையும் இல்லையே, வீட்டில். அவன் வைத்தது தானே சட்டம்!

பிறந்தநாள் கேக்கில் நாற்பத்திஐந்து மெழுகுவர்த்திகளைக் கொளுத்திவைத்து வாயில் “உப்பென்று மெழுகுவர்த்திகளை ஊதி அணைத்துக்கொண்டிருந்த தியாகுவை, “இது என்ன பழக்கம்? நம்ம வீட்டிலெல்லாம் விளக்கை ஊதி அணைக்கக் கூடாது, அது தவறு என்று சொல்வார்கள். நாற்பத்தி ஐந்து மெழுகுவர்த்திகளைக் கொளுத்தி வைப்பதிலாவது அர்த்தம் இருக்கிறது. ஊதி அணைப்பது அச்சான்யமாகக்கூட இருக்கிறது!” என்று பாப்பா சொல்லவே, “அது நியாயம்தான் எங்க அம்மா, வீட்டிலே விளக்கை வாயால் ஊதி அணைத்தால் கூட, "வாயால் ஊதாதே! கையால் அமர்த்து," என்று சொல்லுவாள். நீங்க சொல்றது சரிதான்” ஊதுவதை நிறுத்திவிட்டான் தியாகு.

கேக், சாப்பிட ஏதோ டிபன் - எல்லாம் சரியாகத்தான் இருந்தது. ஆனால் மொத்தத்தில் சந்தோஷமான பார்ட்டியாக அமையவில்லையே அது என்ன குறை என்று சொல்லத் தோன்றவில்லை.

வந்தவர்களில் ஒருவன் ஏதோ ஷேக்ஸ்பியர் நாடகத்தில் ஏதோ பாடத்தில், தியாகு சொன்ன மாதிரி இல்லை. வேறு விதமாக இருப்பதாக, சொல்லப் போக அன்று அபார கோபம் வந்துவிட்டது தியாகுவிற்கு. உறங்கிக் கொண்டிருந்த எதையோ எழுப்பிவிட்டதுபோல இருந்தது. புஸ்தகத்தைத் திறந்து பார்த்து இரண்டு நிமிஷத்தில் முடித்துக்கொண்டிருக்கிற விஷயத்தைப் பற்றி இரண்டு மணிநேரம் விவாதம். இவன் கத்த, அவன் கத்த கடைசியில் தியாகு சொன்னதுதான் சரி என்று ஏற்பட்டும் விஷயம் விடாமல் புகைந்துகொண்டேயிருந்தது வேறு, பார்ட்டிக்குப் பின்னணியாக ஒரு மனத்தளர்ச்சியை ஏற்படுத்தியது. எனக்கு மட்டும்தான் அப்படியிருந்ததா, மற்றவர்களுக்கும் அப்படித்தானா என்று பிறகு கேட்டுத் தெரிந்து கொண்டேன். பாப்பாவுக்கும் அப்படித்தான் இருந்தது என்று சொன்னாள். 

இரவு எட்டரை மணிக்கு ஏதோ ஒரு ஏக்கத்துடன் வீடு திரும்புகிறவர்கள் போல வீடு திரும்பினோம். அன்றிரவு ஒருவரும் அதிகமாகத் தியாகுவைப் பற்றிப் பேசவில்லை .

பார்ட்டிக்கு வராமல் வீட்டிலேயே குழந்தைகளைப் பார்த்துக்கொண்டு தங்கிவிட்ட ராஜி, பார்ட்டி நன்றாக இருந்ததா என்று கேட்டதற்கு பாப்பா தான், "ஏதோ நடந்தது” என்று சொன்னாள். நான் எதுவும் சொல்லவில்லை.


34
நான் அன்று காலையில் அமெரிக்கன் லைப்ரரிக்கோ, பிரிட்டிஷ் கவுன்சில் லைப்ரரிக்கோ போய்விட்டு வந்து வழக்கமாக சாப்பிடுகிற நேரத்திற்கு இரண்டு மணி நேரம்

தாமதமாக ஒரு மணிக்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். சாம்பார் சாதம் சாப்பிட்டு விட்டேன். ராஜி மோருக்கு சாதம் போட்டுவிட்டு மோர் கொண்டு வர உள்ளே போனாள். நான் ஊறுகாய் பாட்டிலைத் திறந்து ஊறுகாய் போட்டுக் கொண்டிருந்த போது போன் மணி அடித்தது. மோர் கொண்டு வந்த ராஜி போனை ஒரு கையில் வைத்துக் கொண்டு, “ஹல்லோ யார் வேணும்?” என்று போனை எடுத்துக் கேட் டுவிட்டு உங்களுக்குத்தான் போன்” என்றாள்.

நான் எழுந்து ரிசீவரைக் காதில் வைத்துக்கொண்டு “யார்” என்றேன்.

"க.நா.சுப்ரமணியமா பேசுவது?*

“ஆமாம்.”

“உங்களுக்கு தியாகராஜனைத் தெரியுமில்லையா?”

“I.A.S. தியாகராஜனைத்தானே? தெரியுமே!”

“நேற்று மாலை அவர் இறந்துவிட்டார்.”

*ஏன்? என்ன பண்ணிற்று? பத்து நாட்களுக்கு முன்கூடப் பார்த்தேனே!”

“ஒரு வாரமாக உடம்பு சரியாக இல்லை . டாக்டர்கள் எலக்ட்ரிக் ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்திருக்கிறார்கள்!Treatment failed!”

“அடப்பாவமே! இந்த எலக்ட்ரிக் ஷாக் ட்ரீட்மெண்ட் என்றால் பயமாக இருக்கிறது என்று என்கிட்டே கூடச் சொல்லியிருந்தான்!*

“யாராவது தகவல் தெரிவித்து அவர் மனைவி...”

*அவர் அண்ணா வந்திருக்கிறார். இரண்டாவது அண்ணா நாலைந்து மாதம் முன்கூட வந்திருந்தார். பாங்கில் இருக்கிறாரே - அவர்."

*மாலியா?*

"ஆமாம். அவர் மனைவியும் மாலை வருகிறார்."

“நைஜீரியாவிலிருந்தா?”

“ஆமாம். நீங்கள் அவர் நண்பர் என்று தெரியும் சொல்லவேண்டுமென்று தோன்றிற்று சொன்னேன்.”

*Thanks!”

போன் துண்டிக்கப்படாததால், "நான் வரக்கூட முடியாது. எனக்குக் கண் சரியாகத் தெரிவதில்லை. வேறு யாரையாவது துணைக்கு அழைத்துக்கொண்டுதான் வரவேண்டும்" என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது எதிர்ப் பக்கத்தில் போனை வைத்துவிட்ட சப்தம் கேட்டது.

ராஜி, “என்னது? என்ன?” என்று கேட்டாள்.

“தியாகு போய்விட்டானாம் பாவம்” என்று சொல்லிவிட்டு கை கழுவிவிட்டு வந்து உட்கார்ந்தேன். மிகவும் சோகமாக சோர்வாக இருந்தது

*பாவம்! லீலாகூட உடன் இருக்கவில்லை போல இருக்கிறதே!”

**வர்றாளாம்!*

* போகப் போகிறேளா?”

“எங்கே எல்லாம் நடக்கிறது என்றுகூடக் கேட்டுக்கொள்ளவில்லை. ஆனால் நான் போய் என்ன செய்ய? என்னைப் பார்த்துக்கொள்ள ஒரு ஆள் வேண்டும்.”

ஒரு பத்து நாட்களுக்கு சமய சந்தர்ப்பமில்லாமல் தியாகராஜனைப்பற்றி எங்களுக்குத் தெரிந்ததை மாற்றி மாற்றி சொல்லிக் கொண்டிருந்தோம். முடிந்த வாழ்க்கை முடிந்துவிட் டது. பத்து நாளில் எதையும் மறந்துவிடத்தானே வேண்டியிருக்கிறது? ஒரு வருஷத்தில் எப்படியாவது பேசுவது, நினைவுக்குக் கொண்டு வருவது என்று ஆகிறது. இரண்டாவது வருஷத்தில் அதுவும் குறைந்து தேய்ந்துவிடுகிறது.

அப்புறம் எப்பவாவது நினைவிற்கு வருகிறது அவ்வளவு தானே!
No comments:

Post a Comment