2. மணிக்கொடி முதல்வர்கள் - மௌனி
சி. சு. செல்லப்பா :: மணிக்கொடி முதல்வர்கள்' - பீகாக் பதிப்பகம்
மௌனி இலக்கியத் தடம் :: (தொ) ப.கிருஷ்ணசாமி
மௌனி இலக்கியத் தடம் :: (தொ) ப.கிருஷ்ணசாமி
'சிறுகதை மணிக்கொடி'யிலேயே பிறந்த முதல் படைப் பாளியான சிதம்பர சுப்ரமண்யனைப் போலவே அதன் மூலம் வெளிப்பட்டவர் 'மௌனி' என்ற புனைப்பெயரில் எழுதிய மணி என்பவர். அவரது முதல் கதையான 'ஏன்' என்பது முதல் காதல் சாலை, கொஞ்ச தூரம், பிரபஞ்சகானம், குடும்பத் தேர், மிஸ்டேக், மாறுதல், அழியாச்சுடர் ஆகிய எட்டு கதைகள் 16-2-36 முதல் 25-4-37 வரையான காலத்தில் 'மணிக்கொடி'யில் வந்தவை. 1936 ஆரம்பத்தில் நான் சென்னையில் மணிக்கொடி காரியாலயத்தில் தங்கி இருந்தேன். ஜனவரியில் ஒருநாள் மாலை நாங்கள் இலக்கிய வம்படித்துக் கொண்டிருந்தபோது ராமையாவுக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் வந்து அவரிடம் சில கதைகளைக் கொடுத்தார். அவை சிதம் பரத்தில் உள்ள தன் நண்பர் ஒருவர் எழுதியவை என்றும் தான் கொண்டு வந்திருப்பதாகவும் சொல்லி கொடுத்துவிட்டுப் போனார். மறு நாள் ராமையா அந்த கதைகளைப் படித்துக் கொண்டிருந்தார். எதிர் நாற்காலியில் உட்கார்ந்திருந்த நானும் சிலதை படித்தேன். எட்டு கதைகளோடு ஒரு குறு நாவலும் இருந்தது. அதையும் படித்தேன். கி. ரா. வும் படித் தார். கதைகள் புது விதமான தாக பட்டது எனக்கு. ராமையா வும் இவர் நன்றாக எழுதி இருக்கிறார் ஸார்' என்று கி. ரா. விடம் சொன்னார். பிறகு 'ஏன்' கதையை அச்சுக்கு சில நாட்கள் கழித்து அனுப்பினார். வேடிக்கை என்னவென்றால் ஒரு கதைக்கும் தலைப்பு இல்லை. அந்த குறு நாவலுக்கும்கூட, கதாசிரியர் தலைப்புக்கூட்ட போடாதது வியப்பாக இருந்தது. ராமையாதான் கதை தலைப்பையும் போட்டு ஆசிரியரின் புனைப்பெயரையும் கூட போட்டார். 'மணி' என்ற ஆசிரியர் பெயர் 'மௌனி' ஆயிற்று. அவ்வளவுதான். பெயர் விஷய மாக, விசேஷமாக அதைப்பற்றி எதுவும் சொல்வதற்கில்லை.
அந்த பெயரை வைத்து 'அனாவசியமான யூகங்கள், கற்பனை கள எதுக்குமே இடம் இல்லை. இரண்டு மூன்று கதைகள் வந்தபின் அந்த நண்பரும் கதாசிரியர் 'மௌனி'யும் ஒருநாள் வந்திருந்தபோது நான் இருந்தேன். கதைகளைப்பற்றி பேச்சு நடந்தது. வெகுவாக கதைகளை ராமையா பாராட்டினார். நல்ல கதைகள் என்று படுவதை எல்லாம் அங்கே நாங்கள் பாராட்டி பேசிக் கொள்வதுண்டு. நிறைகுறைகளையும் குறிப் பிடுவதுண்டு.
ஏற்கெனவே ஓராண்டு காலத்துக்குள் மணிக்கொடியில் மிகச்சிறந்த கதைகளும் பல நல்ல கதைகளும் வந்திருந்தன. ஸரஸாவின் பொம்மை, வேதாளம் சொன்ன கதை, பூச்சூட்டல், சிறுகதை, அரைப்பைத்தியம், என்ன கதை, காதலே காதல், ஞானக்குகை, சிற்பியின் நரகம், தலையெழுத்து, வாழ்க்கை , வானம்பாடி முதலிய நல்ல கதைகளைப் படித்து ரசித்த பிறகு வெறும் உற்சாகம் மட்டும் இருந்திருக்க முடியாது. ஆரம் பத்தில் இருந்திருக்கலாம். புதிதாக வரும் கதைகளை ஜாக்கிரதை யாகத்தான் பார்க்கத் தோன்றுவது இயல்பு. எனவே புதிதாக வந்த கதைகள் எங்களை பரபரப்பு அடையச் செய்யவில்லை. கதைகள் வெளிவந்த பின் அவற்றை ஆராய்ந்து பேசிக் கொள்வோம். மௌனியின் முதல் கதை 'ஏன்' வந்தது. இங்கே ஒரு விஷயம் சொல்ல வேண்டும். இதுக்கு முன் மணிக்கொடியில் வெளிவந்து இருந்த எங்களது கதைகள் அவ்வப்போது எழுதப் பட்ட உடனேயே அனுப்பப்பட்டு சூடாக வெளிவந்தவை. அதனால் வரிசைக்கிரமம் தெரிய வாய்ப்பு இருந்தது. அதை வைத்து படைப்பாளியின் நடை பழகலை, வளர்ச்சியை கணிக்க முடிகிறது. ஆனால் மௌனி கதைகள் பற்றி அதுசெய்ய சாத்திய மில்லை. அவரது எட்டு கதைகளும், ஒரே சமயத்தில் மணிக் கொடிக்கு வந்தவை. ராமையா அவற்றை தனக்குத் தோன்றிய விதமாக அடுத்தடுத்து வெளியிட்டிருக்கிறார். கதை எழுதப் பட்ட வரிசைக்கிரமம் தெரியாது. எனவே மௌனி தன் கதை களில் நடை பழகியதை அறிய வாசகனுக்கு வாய்ப்பு இல்லை.
இன்னொரு விஷயம். இந்த கதைகள் எழுதப்பட்ட காலம். 'மௌனி கதைகள்' புத்தகத்துக்கு முன்னுரை எழுதியுள்ள தர்மு சிவராமு, 1934-க்கும் 35-க்கும் இடையில் மௌனி தன் குறிப்பு புத்தகத்தில் அவ்வப்போது சிறுகதைகளுக்கான குறிப்புகளை எழுத ஆரம்பித்ததாகவும் 1934 இறுதியில் ஆறேழு சிறுகதை களையும் ஒரு குறு நாவலையும் 'ஏதோ வேகத்தில்' எழுதினதாக குறிப்பிட்டிருக்கிறார். இன்னொரு தகவலும் கூட. சென்னையில் உள்ள தன் வக்கீல் நண்பரிடம் கதைகளை அனுப்பி 'சென்னையில் எந்த பத்திரிகாசிரியரிடமாவது காட்டி போடத் தகுதி உள்ளதாயின் போடும்படி' எழுதினதாகவும் கூறி இருக் கிறார். எனவே 1936 பிப்ரவரியில் மணிக்கொடியில் பிரசுரிக்கும் வரை ஒரு ஆண்டுக்கு மேலாக மௌனியிடம் இருந்திருக்கிறது. இன்னொரு தகவலும் கூட. 1933-ல் பிப்ரவரியில் மகாமகத்தின் போது நடந்த கதர் கண்காட்சியில் பி. எஸ். ராமையாவை மௌனி கும்பகோணத்தில் சந்தித்ததாகவும் அவர் ‘நீங்கள் சிறு கதை எழுத முடியும் என்று நினைக்கிறேன். 'மணிக்கொடி' பத்திரிகைக்கு எழுதுங்கள்' என்று சொன்னதாகவும் சிவராமு கூறி இருக்கிறார். 33 பிப்ரவரியில் அந்த வார்த்தைகளின் உந்துதலால் ஒண்ணே முக்கால் ஆண்டுகள் கழித்து 34 இறுதி யில் மௌனி கதைகள் எழுதி இருக்கிறார் போலும். அதன்பின் ஒண்ணே கால் ஆண்டு கழித்து 1935 பிப்ரவரியில் அவர் கதைகள் பிரசுரம் ஆரம்பமாகிறது. எனவே, ராமையாவின் தூண்டல் என்று சொல்லப்படுவதுக்கும் ராமையா அந்த கதைகளை வெளியிட்டதுக்கும் இடையே மூன்று ஆண்டுக் காலம் ஆகி இருக்கிறது. இந்த தூண்டல் தகவல் ஆதாரபூர்வ மானது அல்ல என்பதை மட்டும் இங்கே தெரிவித்துக் கொள் கிறேன். இந்த விஷயத்தில் கால கணித வழு இருக்கிறது.
இப்போது மௌனி கதைகள் மணிக்கொடி சிறுகதை வளத்துக்கு செலுத்திய பங்கைப் பார்ப்போம்.
மௌனியின் கதைகள் எழுதப்பட்ட வரிசைக்கிரமம் தெரியாத நிலையில், அவர் சிறுகதை நடை பழகியதை நிதானிக்க இயலாத நிலையில், பிரசுரமானதை வைத்துத்தான் பார்க்க முடியும். கதைகளின் தரத்தையும் வளர்ச்சியையும் கணிக்கலாம். அதுவும் சரியாகாது போகலாம். சிறந்த நல்ல கதைகள் எழுதிய பிறகு சுமாரான கதைகளை பிரபல படைப் பாளிகள் எழுதி இருப்பது சகஜம். எனவே யூகத்தில்தான் நிதானிக்க இயலும். மௌனியின் முதலில் வெளியான கதை 'ஏன்', இங்கே ஒரு விஷயம். 'எழுத்து' இரண்டாவது ஆண்டு இறுதியில் 'மௌனியின் மனக்கோலம்' என்ற ஒரு சிறு புத்தக அளவு ரசனைக் கட்டுரைத் தொடர் எழுதினேன். மௌனியின் 'அழியாச்சுடர்' கதை தொகுப்பு வந்த சமயம். மௌனி கதைகள் புரியவில்லை என்று புத்தக மதிப்புரைகளும், வாசக அபிப்ராயங்களும் வெளிவந்ததுதான் என்னை எழுதத் தூண்டியது. அதில் மணிக்கொடி எட்டு கதைகளைப்பற்றி ஆராய்ந்திருக்கிறேன். அவற்றை இங்கே தரப்போவதில்லை. அது வேறு நோக்குடன் எழுதப்பட்டது. நிறையைத்தான் எழுதினேன். இங்கே அந்த எட்டுக் கதைகள் மூலம் சேர்ந்த, இதுவரை ஆராயப்பட்ட ஏழு சிறுகதையாளர்கள் சேர்த்த பரிமாணங்களுடன் இன்னொரு புதுவித பரிமாணத்தையும் அறிந்துகொள்வதுதான் நோக்கம். முந்தின எழுவர் கதை எழுத்துப் போக்கில் புதுமைப்பித்தனிடம் தான் சில கதைகளில் திருகலான, எதிர்மறையான, நேரல்லாத (Oblique) பார்வையைக் கண்டோம். 'ஓபிளிக்' பார்வை மௌனியினுடையது. இயல்பு மீறியது, அசாதாரணமானது.
'ஏன்' கதை புதுவிதமாக பட்டது. கதையின் உள்ளடக்கம் இதுதான்.
உயர் நிலைப் பள்ளியில் பத்தாவது படிக்கும் மாணவன் அவன். எதிர் வீட்டில் உள்ள எட்டாவது படிக்கும் மாணவி. இருவரும் இதுவரையில் பேசியதே இல்லை. ஒருநாள் பள்ளி யிலிருந்து இருவரும் திரும்பும்போது அந்த சிறுவன் சிறுமியிடம் திடீரென, ' நானும் வீட்டிற்குத்தான் போகிறேன். இருவரும் சேர்ந்து போகலாமே' என்கிறான். அவள் திடுக்கிட்டு அவனைப் பார்த்தபோது ஏன், எதற்கு என்று வியப்போடு கேட்டதுபோல் தோன்றியது அவனுக்கு. உடனே அவன் 'சரி, நான் உன்னை மறக்கமாட்டேன் நீயும் என்னை மறக்காமல் இருக்கியா' என்று கேட்டு மறுபேச்சு இல்லாமல் வீடு திரும்பி விடுகிறான். அந்த சம்பவத்தை மறந்தவன் போலாகிறான். பிறகு அந்தப் பெண்ணுக்கு மணமாகிவிடுகிறது. அவன் கல்லூரிப் படிப்புக்கு வெளியூர் போகிறான். அவள் ஒரு குழந்தைக்கு தாயாகி தாய் வீட்டுக்கு வருகிறாள். நான்கு ஆண்டுகள் கழித்து, எதிர்வீட்டிலிருந்து அவளைப் பார்க்கிறான் அவன். அவள் கவனிக்கவில்லை. வீட்டுக்குள் போய் விடுகிறாள். அதுமுதல் அவன் தேகம் ஒடுங்கி மூளையை பாதித்து காய்ச்சல் வந்து இறந்துவிடுகிறான். அவன் பிரேதம் சுடுகாட்டுக்கு போகும்போது அதைப் பார்த்துக் கொண்டிருந் தவள் உள்ளே போய்விட்டாள். பின்னர் கணவன் வீட்டுக்கு போய்விட்டாள். இதுதான் கதை.
இது மௌனியின் முதல் கதையாக இருக்கலாம். ஆரம்ப கதைகளில் ஒன்றாக இருக்கலாம். ஏனென்றால் அவர் சிறுகதை நடை பழகியது இதில் தெரிகிறது. ஒரு ஆரம்ப எழுத்தாளனிடம் இருக்கக்கூடிய குறைகள் காண்கின்றன. அது ஒருபுறம் இருக்கட்டும். பெரிசுபடுத்த வேண்டியதில்லை. கதையின் உள்ளடக்கத்தின் நூதனம் தான் முக்கியம். இதுக்குமுன் நாம்
பார்த்த கதைகளில், வந்த கதாபாத்திரங்களில் அநேகமாக ' நார்மல்' என்கிற சாமான்ய, இயல்பான, பழக்கமாக, பொதுவாக இருக்கும், ஆரோக்கியமாக உள்ள, விதிக்கிரமமான மகா நிலைப்பாங்கு கொண்டவர்களாக இருப்பதை உணரலாம். புதுமைப்பித்தனின் சில கதாபாத்திரங்கள் கொஞ்சம் விதி விலக்காக, கொஞ்சம் இயல்பு மீறியதாக இருக்கும். ஆனால் அது அவரது 'மெயின்' என்கிற பிரதான தொனி அல்ல. அந்த அம்சமும் இருந்தது. ஆனால் இந்த கதையில் வரும் கதா பாத்திரம் மனநோய்ப் போக்கானது. விபரீதமானது, நியம விரோதமானது. திடனழிந்தது, நிலை குலைந்தது, மனப் பிராந்தி வாய்ந்தது, பிரமையானது அந்தவித நிலைகளுக்கு இவைகள் போக வெளிப்புற பாதிப்பு எதுவும் தேவை இல்லை அவர்களுக்குள்ளேயே அது பத்தத்தில் ஊறிய சுபாவமாக இருக்கிறது. மனநோயை தாங்கள் ஒருவராகவே வளர்த்துக் கொண்டு தங்களை அழித்துக் கொள்பவர்கள். ஒரு பிரமை நிலையில் தங்களைத் தாங்களே மனத்துன்புறுத்திக் கொண்டு அதிலே ஒரு குரூரமான திருப்தியும் இன்பமும் அடைபவர்கள் . அவர்களுக்குள் ஏற்படும் சந்தேகங்கள், அவநம்பிக்கைகள், சங்கடங்களை நிவர்த்திக்கொள்ள இயலாதவர்களாக இருப் பவர்கள் , பிரமைகள், பூதாவேசம் இவற்றை எதிர்த்து முறியடிக்க முடியாமலும் அவஸ்தைப்பட்டும் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்பவர்கள். இத்தகைய ஒரு கதா பாத்திரம் 'ஏன்' கதாநாயகன். எதிர் வீட்டுப் பெண் இவனை ஒரு கணம்கூட கவனித்திராத நிலை. அவன் பிணம் போகும் போதும்கூட வெறுமையுடன் பார்த்திருந்த நிலை. அந்த வாலிபன் அவள் முகத்தோற்றத்தில் அவளுடைய கண்களில், பார்வையில் ஏதோ அர்த்தம் இருப்பதாக மனக்கற்பிதம் கொண்ட, காதல் பிணி கொண்டவனாய் மனம் முறிந்து அழிகிறான்.
இந்தவிதமான மனப்போக்கு, உளவியல் ரீதி, கதைக்கரு இவற்றை கொண்ட இன்னொரு புதிய படைப்பு உலக நடப்பை மணிக்கொடி கதைக்களத்தின் மூலம் வெளிப்படுத்தி ஒரு புதுப் பரிமாணம் சேர்த்தது மௌனியின் முதல் கதை 'ஏன்'. மணிக்கொடியில் அவரது எட்டுக் கதைகளில் ஆறு கதைகள் இதே 'ரீதி'யானதுதான். மௌனியின் 'மெயின்' முதன்மை தொனி அதுதான். சுதைக்கருக்களில் தான் விதங்களே தவிர தொனி ஒன்றேதான். ஒரே டைப்புக்குள் அடங்கியவை.
முந்திய எழுவரைப் போல் அல்ல அவரது வட்டம். அகல, நீளத்தில் வீச்சில் மிக குறுகியது. ஆனால் மனவோட்டத்தில் ஆழ்ந்தது, அதுவும் மனதின் இருண்ட மூலை முடுக்குகளில் புதைந்து கிடப்பதை தோண்டி எடுத்து பூதக் கண்ணாடியில் பெரிதுபடுத்திப் பார்ப்பது. இந்தவிதமான ஒரு பார்வையை தமிழ் சிறுகதைக்கு ஆரம்பித்து வைத்தவர் மௌனி. இந்தவித பார்வைக்கு அதற்கென சில வரையறுப்புகள் எல்லை வரம்பு, கட்டுப்பாடு வீச்சுக் குறைவு, பரப்புக்குறுக்கம், அனுபவ ஒதுக்கம் முதலியவை உண்டு. மனிதத்துவத்துக்கு இயல்பாக உரிய, பொதுவான சுபாவம் இதில் காணப்படாது. பிறவி குணத்தாலோ ஏதாவது ஒரு கடும் வியாதியாலோ வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களினால் பாதிக்கப்பட்டு விளைந்த விரக்தி, வெறுப்பு இவற்றாலோ அல்லது ஏதாவது விபரீத சம்பவத்தாலோ மனதில் ஏற்பட்ட அதிர்ச்சியின் விளைவாலோ கெட்ட பழக்க வழக்கங்களினாலோ மனம் பேதலித்துப்போய் விடுகிறது. தான் செய்வது தனக்கே தெரியாமலும் காரண காரிய தொடர்பின்மையாலும், நடந்து கொள்ளும், சிந்திக்கும், வக்ர, விபரீத மன நிலை தூக்கலாகி இருப்பது இந்தவித பார்வையின் அம்சங்கள். புதுமைப்பித்தன் இதை சமுதாய சமூக நடப்புப்பாங்கு அடிப்படையில் பார்த்தவர். மௌனி யினது தனி மனித அகமன நடப்புப்பாங்கு அடிப்படை வித்தியாசம் இது.
மௌனியின் இந்த 'ஏன்' கதையை அவருடைய பார்வைக்கு உதாரணமாக வைத்துக் கொள்ளலாம். அவருடைய கதை களில் பெரும்பாலானவை இதே விதமானதாக இருப்பதைக் காணலாம். அவரது அடுத்த கதை 'காதல் சாலை', காதல் மணம் செய்து கொண்ட ஒருவனது மனைவி வேறு ஒருவனுடன் ஓடிப்போய்விட, மனமுறிந்து ஒடுங்கியவனாக அவளைத் தேடி அலைகையில் ஒரு விபசாரியுடன் ஒரு இரவைக் கழிக்கும்போது, தூக்கத்தில் அவன் தன் காதல் மனைவியின் பெயரைச் சொல்லி உளறுகிறான். அந்த விபசாரிதான் அவனது முந்தின காதல் மனைவி. தன் கணவன் என அப்போது அறிந்து கொண்ட அவள் தற்கொலை செய்து கொள்ள, விடியவும் அவளை அடையாளம் கண்டு கொண்ட அவன் வெறிபிடித்தவன் போல் ஓடிப் போகிறான். மறு நாள் இரவு வந்தது. ஆனால் மறு படியும் அவனுக்கு பொழுது விடியவில்லை. அவனும் இறந்து விட்டதாக (எப்படியோ) கொள்ளலாம். மௌனி கதைகளில் காதல் அம்சம் தூக்கல், ஆனால் ஆரோக்கியமான காதலாக, பெரும்பாலும் இல்லை. பாலுணர்ச்சி தூண்டுதல் எடுப்பாக இருக்கிறது. அது நிறைவேறாத நிலையில் அல்லது அது வேறு விதமாக முறிவு ஏற்படும் நிலையில், தன்னை அறிந்தோ அறியாமலோ அழித்துக் கொள்வதுதான் சரியான விடுதலையாக படுகிறது அவர்களுக்கு.
- அடுத்த கதை 'கொஞ்சதூரம்' 'ஏன்' கதையின் சாயல் இதில் அடித்திருக்கிறது. காதல் கதை. அங்கே-- அடெலசென்ஸ்' வளர்பருவக்காதல். இங்கே வயது வந்தவன் காதல். அவன் காதலித்த அவள் வேறொருவனை மணந்து கொண்டுவிட, மனமுறிந்த அவன் பெரும் குடிகாரனாகி விடுகிறான். கிராமத்தில் இருந்த அவனை, தன் பழைய நண்பனை பார்க்க தன் கணவனுடன் அவள் வந்தபோது குடிவெறியில் மயங்கிக் கிடந்த அவன் ஒரு தடவை விழித்துப் பார்த்து அவளை இனம் கண்டு விட்டு மீண்டும் மயக்கமடைந்து விழிப்பில்லாத தூக்கத் தில் ஆழ்ந்து விடுகிறான். முதல் கதை சின்ன 'ஏன்' - இது பெரிய 'ஏன்'. அதுதான் வித்தியாசம். 'ஏன்'னிலும் 'கொஞ்ச தூரம்' மிலும் ஒரு முக்கிய விஷயத்தைக் கவனிக்கலாம். மௌனியின் கதாபாத்திர உலகம் விசேஷமாக ஆண்கள் உலகம். அதிலும் இயல்பு மீறிய சுபாவ கத: பாத்திரங்கள் நடமாடும் களம். இந்த அசாதாரண சுபாவம் அவர் சளை ஒருதலைப் பட்சமாகவே சிந்திக்க வைக்கிறது. காதல் என்பது ஒருவழிப் பாதையாக இருக்க முடியாது. இரண்டு கை தட்டினால்தான் ஓசை பிறக்கும். இந்த இரு கதைகளிலும் உள்ள இரு ஆண் கதாபாத்திரங்களின் காதலோ, பாலுணர்ச்சியோ எது தூண்டுதலானாலும் சரி, பெண் கதாபாத்திரத்தின் பிரதிகுரல் (responce) பற்றி அக்கறைப்பட்டதாகவே தெரியவில்லை . ஒருவன் தனக்கு பாதிக் கல்யாணம் ஆகிவிட்டதாக சொன்னானாம். அதாவது தனக்கு 'சம்மதம்' என்பது. அதே போல் இவர்கள் பாதிக்காதல் வாதிகள். இவர்களுக்கு பதிலே தேவையில்லை போலும்! ஆரோக்கிய காதலன் பதில் எதிர் பார்த்து துடிப்பான். இந்த நோய் காதலர்கள் ஒருவேளை சாதக பிரதிபதில் கிடைத்துவிட்டால் உடனே ஓடிப்போய் விடுவார்களோ என்னமோ. அதனால்தான் பதிலை எதிர் பாராமலும் பதில் கிடைக்கச் செய்ய வழிவகைகளை கையாளாமல் மேலும் தம் தம் மனதிலேயே கேள்வியும் பதிலும் மன எழுச்சியும் போராட்டமும் வலிய விளைவித்துக்கொண்டு துன்பத்தில் தான் திருப்தி அடையக் கூடும் என்பவர் களாக 'மாஷோகிஸம்' என்ற தன் ஆசை, விருப்பம் மறு தரப்பால் புறக்கணிக்கப்பட்டதில், பாழாக்கப்பட்டதில், இரண்டகம் செய்யப்பட்டதில், ஆதிக்கம் செய்யப்பட்டதில் ஒரு குரூர இன்பம், திருப்தி அடையும் சுபாவக்காரர்களாக இருந்து விடுகிறார் கள். இந்த விதமான சித்தரிப்பு ஒரு விசித்திரமான நோக்கு தான். இது சாத்தியமா என்ற கேள்வி எழக்கூடும். காதல் சம்பந்தமாக 'பிளெடானிக்' காதல் என்கிற உடலுறவு தேவையற்ற மானசீக, பரமார்த்தீக, நிஷ்காமய , காரிய பரிணமிப்பு அற்ற காதல் சாத்தியமாகும் என்றால், இதுவும் சாத்தியம் தானே, ஆனால் இரண்டுக்கும் இடையே அடிப்படை வித்தியாசம் உண்டு. அது லட்சியாம்சம் கொண்டது. மேம்படுத் தப்பட்டது. இது நோய்த்தன்மையானது. நாசமடையச் செய்வது. படைப்பு உலகத்தில் இரண்டுக்கும் இடம் உண்டு. படைப்பாளியின் உரிமை அது, ஆனாலும் படைப்பின் பயன் என்று வரும்போது மதிப்பு (Valuc) உரைகல்லில் அது தேற வேண்டும் என்பதையும் சொல்லியாக வேண்டும். கு ப.ரா.வின் பிளெடானிக் காதல், நோக்கு அதாவது சொல், நினைப்பு என்பதோடு நின்றுவிடும், உடல் உறவு அற்ற மன ஒன்றிப்பு காதல் இன்பப் பார்வைக்கு இடம் உண்டு என்றால் இந்த 'மாவோகிஸ' கற்பிதமோக, சுப துன்புறுத்திக் கொள்ளல் பார்வைக்கும் இடம் உண்டு .
நான்காவது கதை 'பிரபஞ்சகானம்'. இது மேலே குறிப்பிட்ட இரண்டைப் போலத்தான், இந்த கதையில் காதல்' அம்சம் சம்மதம் என்ற வரையில். ஆனால் இந்த கதையில் காதல் அம்சம் அமுக்கப்பட்டு ஒரு கலையம்ச தத்துவம் தொனிகள் ஏற்றப்பட்டு இருப்பதால் இதுவரை கருதப்பட்ட கதைகளினின்று மாறுபட்டு மேன்மையான தாக ஆகி இருக்கிறது. இதிலும் எதிர் வீட்டுக்காரர்கள் தான். எதிர் வீட்டில் சங்கீத திறமை வாய்ந்த பெண், அவன் அடிக்கடி அவளை பார்ப்பதுண்டு. அவளும் தன்னை அடிக்கடி பார்த்ததாக நம்மிடம் சொல்கிறான். எதிர் வீட்டில் உள்ளவர்கள் அடிக்கடி பார்த்துக் கொள்வது இயல்பானது தான். அதில் விசேஷ அர்த்தம் இல்லாமல் இருக்கலாம். இவன் அதில் ஏதோ தனக்கு சாதகமான அர்த்தம் கொள்கிறான். அவளுக்கு கல்யாணமான போது நலங்கின் போது பாடவேண்டிய நிர்ப்பந்தம், கட்டாயம் ஏற்பட, இவனை இருதடவை பார்த்ததாகவும் சொல்கிறான். இதுக்கு மேல் எவ்வித காதல் தகவலும் இல்லை. 'ஏன்' பெண் பார்வை மாதிரிதான் இவள் பார்வையும் இருக்கலாம். இன்னும் இரண்டொரு தகவல் தரப் படுகிறது. அவையும் காதல் உறவுக்கு வேண்டிய ஆதாரவலு தரவில்லை . இவனாக, அவள் கதவை திறந்து மூடுவதுக்கு ஒரு அர்த்தம் செய்துகொண்டு நமக்கு தெரிவிக்கிறான். 'ஏன்'னிலாவது இரண்டு வாக்கிய சம்பாஷணை. இதில் அதுவும் கிடையாது. இருந்தாலும் கதை சொல்லி காதலனின் வார்த்தைகளை அவனுக்காக ஏற்றுக் கொள்வோம். இங்கும் பிரதி குரல் அந்தப் பெண்ணிடமிருந்து எழவில்லை. அந்த உறவு மாதிரிதான் இந்த மனபிரமை காதல்காரனதும் ஆனாலும் அவர்களைப் போல அவன் அழியவில்லை. மாறாக அவன் காதலித்ததாக நமக்குச் சொல்லும் அந்தப் பெண்ணின் அழிவைத்தான் நாம் பார்க்கிறோம். நன்றாக பாடும் அந்தப் பெண் பாடக் கூடாது, இருதய நோய் காரணமாக, அவள் மணத்தின் போது நலுங்கு நடக்கையில் பாடும்படி கட்டாயப்படுத்தப்படுகிறாள். முதலில் மறுத்த அவள் வற்புறுத்தியவர் களின் உபத்திரவம் தாங்காமல் பாடி, வெறியில் தன்னை மறந்து அற்புதமாக நீண்டநேரம் பாடிய அயர்ச்சியில், அதிர்ச்சியில், பாடி முடியவும் சாய்ந்து மரணம் அடைந்து விடுகிறாள். அவள் மரணத்தால் வேதனைப்பட்டாலும் திடனழியாத அவன், அவளது இசை வாழ்வுக்கும் முடிவுக்கும் ஒரு உயர் மதிப்பு ஏற்றுகிறான். இயற்கை அன்னையின் குறை நிவர்த்தியாக, அவளுக்குள் உறைந்து கிடந்த சங்கீதம் விடுதலை பெற்று வான வெளியில் நிறைந்தது போலவும் அடைபட்ட சங்கீதம் வெளியேறுகையில் தன்னை வெளிப்படுத்திய குரலையே பலி வாங்கி உலக வெளியில் வெளி விளக்கம் கொள்வதன் மூலம் தான் தன் நிரந்தர நிறைவைப் பெற முடியும் என்பது போலவும் உரிப்பொருளை உணர்த்துதல் கொண்டது போலவும் அவன் பார்வை சொண்டு சாந்தி அடைகிறான். அந்த சங்கீதம்போல தன் காதலிலும் ஒரு திருப்தி கொள்கிறான். அவன் காதல் திருப்தி ஒரு பக்கம் இருக்கட்டும், பிச்சமூர்த்தியின் வானப்பாடி கதையில் விடுதலை பெற்ற வானம்பாடி தன் இசையால் வானவெளியை நிரப்பிச் சென்றது நினைவுக்கு வருகிறது. சௌந்தர்ய ரசனைக்காக தான் படைத்த நடராஜ சிற்பச்சிலை லௌகீக உத்தேசத்துடனும் பக்திக்கு சாதனமாகவும் பயன்படுத்தப் படுமோ என்று பதறி சிலை மீது உளியை எறிந்து உடைக்க முற்பட்ட சம்பவ 'சிற்பியின் நரகம்' கதை நினைவுக்கு வருகிறது. இந்த இரண்டு கதைகளோடு சேர்கிறது பிரபஞ்ச கானம் வரிசையில்,
இதை அடுத்து குடும்பத்தேர். ஐந்தாவது கதை முதல் மூன்று பிரமை பிடித்த கதாபாத்திரங்களை சித்தரித்து அசாதாரணமான மனோபாவங்களை கொண்டவர்கள் விபரீதமாக நடந்து கொண்டதை கதையாக்கிய மௌனி, நாலாவதில் அவற்றிலிருந்து மாறுபட்ட ஒரு லட்சிய காதலும் ஒரு கலைத்தனமான குறியீட்டு முடிப்பும் கொண்ட கதையை எழுதிவிட்டு, இன்னும் படி இறங்கி ஒரு நடப்பியல் பாங்கான குடும்பக்கதை விஷயத்தை கதைக் கருவாகக் கொண்ட ஒரு கதையை எங்களைப் போல எழுதிவிட்டார் என்றால் ஆச்சரியம்தானே. புதுமைப் பித்தனின் 'நினைவுப்பாதை' சிதம்பர சுப்ரமண்யனின் 'புவனேஸ்வரி' கு. ப. ரா.வின் 'குடும்பசுகம்' பிச்சமூர்த்தியின் ‘குடும்ப வாழ்க்கை ' போன்ற கதை அது. ஒரு அழகான மனோ சித்திரம். ஐம்பத்தி மூன்று வயதானவரின் எண்பது வயது தாய் இறந்துவிட்ட பின், தினம் வீட்டுக்கணக்கு எழுதும்போது ஏதாவது கணக்கு சரியாக வராவிட்டால் அம்மா கணக்கு என்று செலவு எழுதி வந்த பழக்கத்தில் மறதியில் அதேமாதிரி எழுதிவிட்டு பிறகு விழித்துக்கொண்டு தன் அசட்டுத்தனத்தைக் கண்டு பரிகசித்துக்கொண்ட சமயம், மனது பின்னோக்கிப் போய் (ஃபிளாஷ்பேக்) அம்மா, குடும்பத்தின் மீதுள்ள அக்கறையை காட்டிய சிறு சம்பவங்களையும் தன்னை அவ்வப்போது அன்போடு கண்டித்து திருத்த முற் பட்டதை எல்லாம் நினைவுக்கு கொண்டு வந்து தன் அம்மா இல்லாததால் தான் தடுமாறுவதை உணர்ந்து தாயின் இடத்தை நிரப்ப யாரும் வீட்டில் இனி இல்லாத ஏக்கத்தில், தன் பொறுப்பின் பலம் பலவீனம் இவறறை பொருத்திப் பார்த்தவரின் மனவோட்ட சித்தரிப்பு. முன்னைய கதைகளில் கண்ட திருகலான சுபாவத்துக்கும் இந்த இயல்பான சுபாவத்துக்கும் சம்பந்தமே இல்லாத ஒரு வெளியீடு. ஸைகலாஜிகல் கதை.
அடுத்த கதை மிஸ்டேக். கல்கி கிருஷ்ணமூர்த்தி முழுக்க முழுக்க நகைச்சுவை எழுத்தாளராகவே இருக்கும் உத்தேசம் கொண்டவர். மணிக்கொடிக்காரர்கள் அதேபோல சீரியஸான, மனமாழ்ந்த ஆழ்கருத்து எழுத்தாளர்களாகவே இருக்கும் உத்தேசம் கொண்டவர்கள். இப்படி இலக்கியப் பார்வை கட்சி கட்டி இருந்தாலும் அவர்களால் நூற்றுக்கு நூறு அதை கடைப்பிடிக்க இயலவில்லை. 'சிரஞ்சீவிக் கதை' என்று கிண்டல் கதை எழுதிய கல்கி 'கேதாரியின் தாயார்' என்ற சோகக் கதை எழுதினார். 'மலரும் மணமும்' என்ற சோக ரச கதை எழுதிய ராமையா ‘மனோவசிய தந்திரம்' என்ற தமாஷ் கதையையும் 'முள்ளும் ரோஜாவும்' எழுதிய பிச்சமூர்த்தி ' பரீட்சைதாண்டி'யையும் ' மகாமசானம்' எழுதிய புதுமைப்பித்தன் திருக்குறள் குமரேசப்பிள்ளை 'யையும் எழுதி இருக்கிறார்கள். அதேபோலத்தான் இந்த கதையும். எழுதப் பழகிய காலத்தில் இந்த மாதிரி 'லைட்' நொய்மையான லேசான கதைகளை எழுத தோன்றலாம். நான் மேலே குறிப்பிட்டவர்கள் அப்படித்தான் எழுதினார்கள். முதிர்ந்த பின் அந்த மாதிரி எழுதவில்லை. ஆனால் மௌனியின் இந்த கதை சில நல்ல கதை எழுதிய பிறகு வெளிவந்தது. நான் ஏற்கெனவே அவர் கதைகள் எழுதிய வரிசைக்கிரமம் தெரியவில்லை, ராமையா அவற்றை தன் உசிதப்படி அடுத்தடுத்து வெளியிட்டார் என்றும் குறிப்பிட்டிருக்கிறேன். இந்த கதை 'ஏன்' கதைக்கு முன்னாடியே கூட எழுதி இருக்கலாம் என்பது என் யூகம். சாதாரணமான கதை. சர்க்கிள் இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு ஓசி குதிரை வண்டியில் போய் இறங்கிய ஹெட்கான்ஸ்டேபிள், அதை அவர் பார்த்துவிட்ட குற்ற உணர்ச்சியில் அவஸ்தைப்பட, அந்த சூப்பரிண்டண்ட் அந்த வண்டிக்காரனை தேடிப் பிடித்து மூன்றணா கொடுக்கும் படி உத்தரவிட்டதை வைத்து கான்ஸ்டேபிள் பட்ட அவஸ்தையை பரிகசிக்கும் வேடிக்கை கதை சூப்பரிண்டண்ட் இதை நினைத்து சிரித்ததுபோல நாமும் சிரித்துவிட்டு நகர்கிறோம். அதிகார வர்க்கப் போக்கை கிண்டல் செய்யும் தமாஷ் கதை.
அடுத்த கதை மாறுதல். இதில் மௌனி முந்தின 'மிஸ்டேக்' கதை தோரணையிலிருந்து மாறி ' குடும்பத்தேர்' பாணியும் ' பிரபஞ்சகானம்' பாணியும் இழைய, அதே சமயம் முதல் மூன்று கதைகளின் பிரமை சாயலும் நிழலாக கலக்க ஒரு அற்புதமான கதை இது. மௌனி கதைகளில் இது குறைந்த பட்ச கதையம்சம்-ஏன், கதை அம்சமே இல்லாதது என்று கூட சொல்லலாம். 'குடும்பத்தேர்'ல் காலமான தாய் பற்றி பிறகு பின் நோக்கி செலுத்தின நினைவுப் பாதை. இதில் அப்போதுதான் காலமாகி தன் முன் பிணமாகக் கிடந்த மனைவி பற்றிய உடனிகழ் நினைவுப்பாதை. வெறும் தூய நினைப்புகள் அல்ல. அவற்றின் அடிப்படையிலிருந்து எழுந்த சூக்கும நினைவுகள். இந்தக் கதை 'பிரபஞ்சகான' த்தைவிட தூக்கலான, மதிப்பு கூடுதலான வாழ்க்கை குறியீட்டுத் தன்மையை அடக்கி இருப்பது. அதுக்கு பிண மனைவி ஒரு வியாஜ்யம் என்ற அளவுக்கு பயனாகிறாள்.
முந்தின நாள் காலமான மனைவியின் பிணத்தோடு இரவு முழுவதும் தனியே அவள் அருகிலேயே படுத்து இருந்தவன், பெற்றோர் வருகையை எதிர்பார்த்துக் கொண்டு விடியற் காலையில் வீட்டு வாசல்படியில் நின்று தெருவை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறான். எதிர் வீட்டு கீற்றுச் சார்பிலிருந்து காகம் கரைதல், தெருவில் விறகு ஏற்றிப் போகும் பார வண்டி, அதை இழுத்துச் செல்லும் மாடுகள், ஓட்டுபவன் , பதனிக் குடங்கள், ஆனால் வெற்றுக்குட தோற்றம், இரண்டு குடங்களும் கம்பு முனைகளில் கட்டித் தொங்கவிட்டு கம்பை தோளில் வைத்து சுமக்கும் குடக்காரன். தெருவில் போகும் ஆடு, நாகரீகமாக நடந்து செல்லும் படாடோப் உடை அணிந்த சிங்கப்பூரான், கண் முன் கண்ணாடி அணுப் பூச்சிகள் பறத்தல், எதிர் வரிசை வீட்டு தென்னை மரத்தின் தலை, அதன் மேல் தங்கிய மேகங்கள் இவற்றிடையே, அவன் பிண மனைவி உருவம் வந்து வந்து மறையும் தோற்றம். இவை எல்லாம் கலந்து கட்டி ஒரு தரமான பொருளை உணர்த்துவதுபோல ஏற்படுத்தும் மன உளைச்சலில் சிக்குண்டு வீதியையும் அவளையும் மாறி மாறி பார்த்துக் குழம்பிக் கொண்டிருந்த நிலை. பெற்றோர் வருகிறார்கள். அவர்கள் துக்கப்பட்டு அவனுக்கு ஆறுதல் சொல்கிறார்கள். அதெல்லாம் அவன் காதில் விழவில்லை. தன் மனைவி சாகவில்லை, ஏதோ மாறுதல் என்ற அளவுக்குத்தான் அவன் பிரமை மனம் ஓடிக் கொண்டிருந்தது. மரணம் நிஜம் என்று அவனால் ஏற்க முடியவில்லை. ஆனாலும் அவர்களோடு அவனும் அழுதான் அடுத்த ஆண்டு அவன் தாய் நடத்திய சுமங்கலிப் பிரார்த்தனை யின்போது அவள் நினைவு வருகிறது. அவன் தன் முன் உள்ள நோட்டில் 'தலை எழுத்தையா மாற்றப்போகிறேன். தலை எழுத்துதான் எழுதுகிறேன்' என்று பெருமூச்செறிந்து எழுது கிறான், சிறுகதை.
ஆனால் கதையை சாக்காக வைத்து இங்கே வாழ்க்கைப் போக்கு குறிப்புணர்த்தி சொல்லப்படுகிறது, இதில் வர்ணிக்கப்படும் தெருவும் - தெருக்காட்சிகளும் வாழ்க்கைக்கும் வாழ்க்கை தோற்றத்துக்கும் குறியீடாக பாடாந்திரம் (இன்டர்பிரடேஷன்) ஏற்றுபவை. மனைவியின் மரணம் அல்லது 'மாறுதல்' அவனை சிந்திக்க வைக்கிறது தத்துவ ரீதியாக. பார வண்டி- வாழ்க்கை பளு; வண்டியை இழுக்கும் மாடுகள்-மனிதன்; வண்டியோட்டி--மனிதனை இயக்கும் சக்தி; ஆடு - மனிதனின் ஆட்டுக் குணம்; பதனிக் குடம் இன்பம் ஆனால் வெற்றுக்கூடம் - இன்பம் காலியானது; குடத்தை சுமப்பவன்--போதை ஏற்றும் கருவி; அலங்கார சிங்கப்பூரான்-படாடோப வாழ்வு; காகம் கரைதல்--மனித வாழ்வின் ஓலம். இப்படி பொருத்திப் பார்த்தால் மரணம், மறைதல் என்பதுக்கு அவன் வழியில் காணும் பொருளை உணர முடியும். மௌனி மணிக்கொடி கதைகளில் அதிக பட்ச அடிப்படை தத்துவ அம்சம் வெளிப்படுவது இதில்தான். அடுத்ததுதான் பிரபஞ்சகானம்; அடுத்தது அழியாச்சுடர்,
மௌனியின் எட்டாவது, கடைசி மணிக்கொடிக் கதை அழியாச்சுடர். இது வேதாளம் முருங்க மரம் ஏறிக்கொண்ட, கதையாக முதல் மூன்று கதைகள் பாணியில் அவைகளைத் தாண்டிப் போய்விட்டது. அவரது முதல் கதை 'ஏன்'னின் திருத்திய மறுபதிப்பாக தோன்றுவதுடன், அமானுஷ்ய அம்சமும் சேர்க்கப்பட்டு 'ஏன்' கதை பாத்திரம் அழிவது போல் இல்லாமல் ' இருட்டிலே குருடன் தேடுவதுபோல' எங்கோ அலைபவனாக ஒரு முடிப்பு தரப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு கதைகளில் எது முதலில் எழுதப்பட்டது, தெரிய வில்லை. மௌனியிடம் இதுபற்றி யாராவது பேசி இருப்பவர்கள், ஆதாரவலுவுடன் குறிப்பிட்டால் உபயோகமாக இருக்கும். அது தெரியாத நிலையில் தோன்றுவது இது தான். 'ஏன்' தான் முந்தியதாக இருக்கவேண்டும். அதில் காணும் குறைகள் அவர் நடைபழகியதைக் காட்டிக் கொடுக்கிறது. ' அழியாச்சுடரில் கைத்திறன் வெளிப்படுகிறது, நடை, வாக்கிய அமைதி, வர்ணனைப் பாங்கு, படிம நயம், வெளியீட்டு நயம், தொனிப்பொருள் எல்லாம் இதை ஊர்ஜிதப்படுத்துகின்றன. இந்த கதை வெளி வரவும் 'ஏன்' அடிபட்டுப் போகிறது. மௌனி அந்த கதையை கழித்திருக்கலாம். அது தேவை யில்லை. ஆனால் அதை சொல்ல நாம் யார்? புதுமைப்பித்தனிடம்கூட இதுமாதிரி சொல்ல சில ஒரேவிதமான கதைகள் இருக்கின்றன. ராமையாவிடமும் காண்கின்றன. என்னிடமும் கூட இருக்கக்கூடும். இப்படி பலரிடம் இருக்கலாம். எனவே இரண்டையும் பார்ப்போமே. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் போல என்று நாம் சொல்ல உரிமை உண்டு .
அழியாச்சுடர் நல்ல கதை. இந்தக் கதையை படிக்கும் போது எனக்கு பிச்சமூர்த்தியின் 'மோஹினி' கதை ஞாபகம் வந்தது . அதுவும் அமானுஷ்ய அம்சம் கலப்பு கதை. மணிக்கொடிக்காரர்களின் முதல் பிரமைக் கதை அதுதான். ஆனால் பிச்சமூர்த்தி மணிக்கொடிக்காரர் ஆகுமுன் 'கலைமகள்' பத்திரிகை யில் வெளிவந்த கதை. இதைப் பற்றி பிச்சமூர்த்தி பற்றி எழுதிய கட்டுரையில் எழுதி இருக்கிறேன் . அதில் நண்பன் மூலம் கதை சொல்லல், கடிதம் மூலமும் தகவல்கள்-பிறகு நேரடி சந்திப்பு. மோஹினி பிரமை பிடித்தவனை பற்றியது. அவனும் இதேபோல ஒரு பெண்ணின் உருவத்தால் கவரப் படுகிறான். அழியாச்சுடர் கதாபாத்திரம் அவளைச் சந்தித்தது (கோவிலில். 'மோஹினி' கதாபாத்திரம் அவனைச் சந்தித்தது சுடுகாட்டில். முன்னதில் பார்வையில் தான் உறவு, கவரப் படுதல். பின்னதில் சம்பாவனையில் உறவு. மோஹினி பிடித்த அவன் அதே பிரமையில் சித்தஸ்வாதீனம் ஏற்பட்டு இறுதியில் அவளைத் தேடி சுடுகாட்டுக்குப்போய் இறந்து விடுகிறான். அதிலே அவனுக்கும் இரண்டாம் சந்திப்பில் ஏற்பட்ட பிரமையில் அவனுக்கே போகுமிட நிர்ணயம் இல்லாமல் எங்கேயோ போய்விடுகிறான். என்ன ஆனானோ தெரியாது. 'மோஹினி' கதையில் அமானுஷ்ய உருவம், மாய அழகு, மோகம் தொனிப் பொருள். 'அழியாச்சுடர்' கதையில் காதல், எட்டமுடியாத அமானுஷ்ய சக்தி உருவம் எதானாலும் ஆளுமைச் சிதைவு, அழிவு பிரமை காரணமாக. பிச்சமூர்த்தி அந்த ஒரு கதைதான் அந்த ரகத்தில் எழுதினார். மௌனி அதையே தன் முதன்மைப் படைப்புப் பொருளாகக் கொண்டு ஒரே 'டைப் பான பல கதைகள் எழுதிவிட்டார். புதுமைப்பித்தனும் இதேபோல ஒரே கதைகள் எழுதி இருக்கிறார். ஏன் ராமையா, லா. ச. ராமாம்ருதத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். இப்படி எழுதுவது பற்றி குறை கூறவில்லை. அவர்களுடைய 'அபிமான' கதைக்கரு என்பதை சுட்டிக் காட்டத்தான். மானிட இயல்பு மனவோட்ட அடிப்படைக் கதைகளில் இப்படி டைப் கதைகள் பல வந்திருக்கின்றன என்றாலும் அவை கனம், சம்பவம், உத்தேசம் காரணமாக பல விதங்கள் ஏற்ற முடியும் இந்த மாதிரி, பிரமை, அமானுஷ்ய அம்சம், நோய்மனக் கதைகளில் விதங்கள் ஏற்ற முடியாது. ஒரு கதாசிரிய படைப்புப் பார்வையை குறுக்கிவிட்டதாகும். மாறு பாடின்மையால் சலித்துப்போகும் மன நிலை ஏற்படக்கூடும்.
முடிவாக- மௌனியின் இந்த எட்டு கதைகள் மணிக் கொடி சிறுகதை இயக்கத்திலே முந்திய ஏழு முதல்வர் களிட மிருந்தும் மாறுபட்ட ஒரு நூதன பரிமாணத்தை சேர்த்தது என்று சொல்லலாம். அந்த நூதனம் அவரது கதையின் தொனித்தன்மை, அவரது சிறுகதைகளில் கதை அம்சம் 'ஸாலிட்'டாக, அதாவது தின்மையானதும் கெட்டியானதும் பன் பொருளாகவும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், மற்ற மணிக்கொடியாளரது சிறுகதைகளில்போல 'கான்கிரீட்'டாக அதாவது ஸ்தூலமாக கதாசம்பவ நிகழ் உருவத் தோற்றம் கொண்டிராது. 'அப்ஸ்டிராக்ட்' ஆக அதாவது நிகூடமான, குணவாசகமாக, மன நிழல் பாங்காக இருக்கும். மற்றவர்கள் சிறுகதைகளிலும் இந்த மன நிழல் பாங்கு அங்கங்கே இருக்கும். ஆனால் மௌனி சிறுகதைகள் முழுக்க முழுக்க பாவப் பிரதானமாகவே இருக்கும். சம்பவம், நிகழ்வு என்று பிரித்துப் பார்க்க முடியாதபடி குணபாவகமாக கலவையாகி இருக்கும் . படைப்பு அநுபவ வெளியீட்டில் அவரது உத்தி தமிழுக்கு அன்று நூதனமானது. இந்தவித எழுத்துப்போக்கு கொஞ்சம் வாசகர்களை முதலில் குழப்பச் செய்யக்கூடும். ஆனால் மௌனி சிறுகதைகள் 'அப்ஸ்க்யூர்' தெளிவற்ற, புதிரான, சிக்கலான, புரியாதவை அல்ல. பாசக பக்குவம் அதாவது
• டிஸிபிளின்' இல்லாத குறைகாரணமே தவிர படைப்பின் தெளிவின்மை அல்ல.
'மணிக்கொடி முதல்வர்கள்'
பீகாக் பதிப்பகம்