கல்குதிரை தற்காலச் சிறுகதைகள்
0 ஈரான் -
சாம்சி கனோம் பையனின் நினைவு ஸ்தூபி - இஸ்மாயில் பாஷா
தமிழில் : ஷங்கன்னா
டெஹ்ரானில் பிறந்து, வளர்ந்த இஸ்மாயில் பாஷா, அரபு உலகின் குறிப்பிடத்தக்க நாவலாசிரியர் களில் ஒருவர். .'ராவொய்ன்'' 'பிளைண்ட்ஹார்ட்' 'தி ஜாவித் ஸ்டோரி'' 'சொராயா இன் கோமா'' ''தி வின்டர் ஆப் 62'' போன்ற நாவல்களை எழுதி யவர். சிறுகதைத் தொகுதிகள் 5 வெளியிட்டுள்ளார் . இவரது எழுத்து 79க்குப் பிந்திய ஈரானிய இளைஞர் கள் பலருடைய அவலத்தை வெளிக்காட்டுகிறது. இந்தக் கதை “தி இமேஜஸ் ஆப் த டிஸ்டர்ப்டு பீல்டு'' என்ற சிறுகதை தொகுதியிலிருந்து எடுக்கப்பட்டது.
நீங்கள் கேள்வி எதுவும் கேட்காதீர்கள் குறுக்கிடாதீர்கள். அமைதியாக உட்கார்ந்து சொல்வதைக் கேளுங்கள். உங்களுக்கு என் கதையைக் கேட்க ஆர்வமிருக்கிறதல்லவா, சரி நான் சொல்வது கதையல்ல சம்பவமுமல்ல அவரவர் வசதிப்படி ஜனங்கள் இதை எதாக வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும். எனக்கு ப்ரெய்ன்டியூமர் வியாதி, கண்பறிபோய் விட்டது. இப்படி எது வேண்டுமானாலும் அவர்கள் எழுதிக் கொள்ளட்டும். அவர்கள் என்னை இங்கு விட்டுப்போயிருக்கலாம். நான் இமாம்ரெஸாவின் மேல் ஆணையிட்டுள்ளேன்; அதுவும் அவர் சமாதியைத் தொட்டு. என் கண்களால் இந்தக் காட்சிகள் யாவற்றையும் பார்த்தேன். என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். நான் யாரைப் பார்த்தேன், எங்கே பார்த்தேன்; எப்போது பார்த்தேன் என.
என் மகனின் நாற்பதாம் நாள் விழிப்புச் சடங்கிற்கு இரண்டு வாரங்களுக்குப் பின்பு ஒரு வியாழக்கிழமை இரவு, நான் குளித்துவிட்டு திரும்பிச் கொண்டிருந்தேன். வழியில் அவனுடைய ஆவியைக் காண நேர்ந்தது. நாஸரின் அலங்கார மாடத்தின் முன்பு அது தெரிந்தது எனலாம். நாஸர். அதுதான் ரபப்கனோமின் மகன். இல்லை இல்லை நான் பொய் சொல்கிறேன் உண்மையில் அந்த தீவு நாஸரின் மாடத்தின் பின்பு தெரிந்தது எனலாம். நாஸரும்கூட படுகொலை செய்யப்பட்டவன் தான் உங்களுக்குத் - தெரியுமே. வெளிக் கதவுகளுக்குப் பின்பு இன்னமும் வெளிச்சம் இருந்து கொண்டிருக்காது மணி ஐந்து அல்லது ஐந்தேகால் இருக்கலாம். அந்த மாடத்திலிருந்து சில அடிகள் கடந்திருப்பேன். உங்களுக்குத் தெரியுமே அலங்கார மாடங்களில் எரியும் விளக்குகள், ஒளிரும் கண்ணாடி வில்லைகள், விளக்கு வெளிச்சம்..... நிஜம்... நிஜம்... நான் உறுதியாகச் சொல்ல முடியும்; யாரை எங்கே பார்த்தேன் என்று இதை புனித குரானன்மீது ஆணையிட்டே சொல்ல முடியும்.
முதலில் நான் என் மகனைப் பற்றிச் சொல்கிறேன். அவன் யார்? அவன் எனக்கு எதை உணர்த்தினான்? இதையெல்லாம் சொன்னால்தான் உங்களுக்கு ரெஸவைப்பற்றி: அவன் எப்படி எனக்கு பிடித்தமானவனாக இருந்தான் என... ரெஸா என் கடைசிப் பையன். எனக்கு அவனைத் தவிர இரண்டு பையன்களும் உண்டு. ஒருவன் பல வருடங்களுக்கு முன்பே எங்கோ போய் விட்டான். துபாய்குக்கூட போய் இருக்கக்கூடும். எனக்கு சரியாகத் தெரியவில்லை. அவனைப் பற்றி வேறு விபரம் எனக்குத் தெரியாது. இன்னொரு பையன், சிறு வயதிலேயே இறந்து போனான். எனக்கு ரெஸாவின் மேல் எப்போதும் பிரியமுண்டு. எனக்கு அவன் தான் கடைசிக் குழந்தை. அதுவும் ஆண் குழந்தை. அவனுடைய அப்பாவோ ஒரு லாரி டிரைவர். எந்த நேரமும் பாலைவனத்தில் அலைந்து கொண்டிருப்பார். என் பையன் பிறந்த அதே இரவில்தான், அவரும் ஒரு வாரத்தில் இறந்து போனார். பெரியவனாக வளர்ந்த பின்பும்கூட, என் பையன் அந்த நினைவிலிருந்து விடுபடலில்லை. அப்பாவின் மரணத்தின் நிமிடத்தில் தான் பிறந்த யோகத்தை அவன் மறக்கவே இல்லை. அவன் பிறந்தது, ஆயிரத்து முன்னூற்றி முப்பத்தியாறாம் வருடத் தின், இஸ்பான் மாதத்தின் பதிமூன்றாம் நாள் துரதிர்ஷ்டமான 13. அந்த நாட்களைக் கூட்டினாலும்கூட 13-தான் வருகிறது. என் மகன் 13-வது மாதம் ஒன்று இருந்தால் அதில்தான் நான் பிறந்திருப்பேன் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். அவன் பிறந்தது மோசமான வேளை அல்லது அவன் பிறந்ததால் மோசமான நேரம் வந்து சேர்ந்தது. துரதிர்ஷ்டம் பிடிக்க ரெஸாவை மற்றவர்கள்; தூற்றுவதிலிருந்து காப்பாற்ற நான் முனைந்தேன்.
ரெஸாவின் தந்தை இறந்த பிறகு ஒவ்வொரு இரவும் என்னிடமே படுக்கவைத்துக் கொண்டேன். எல்லா இரவிலும் அவனுக்குக் கதை சொன்னேன். சிறு அறைகளாக இரண்டு உள்ளது என்னுடைய வாடகை வீடு. நாங்கள் பென்சனாக வரும் சிறு தொகையில் வாழ்ந்து கொண்டிருந்தோம். அந்த வீடு, ஹுவாம்டொலோபஜாரின் சந்தில் இருந்தது. நான் என் பையனிடம் அவனை பெரிய பள்ளிக்கூடம், கல்லூரி, பல்கலைக் கழகம் என அனுப்புவேன் என்றேன். அவனை இஞ்சினியராக்குவேன் என்றேன். அவனுக்காக தேவதை போன்ற அழகுடனும் செல்வத்துடனும் கூடிய பெண்ணை தேடி மனைவியாக்குவேன் என்றேன். அவனை நான் ஜெர்மனிக்குக்கூட அனுப்ப விரும்பினேன். ஜெர்மனியில் அவனுடைய அத்தை இருந்தாள் . அங்கே போய் திரும்பினால் டெஹ்ரானில் நல்ல வரவேற்பு இருக்கும். எங்காவது ஒரு பெரிய தொழிற்சாலை தொடங்கலாம். அவனும் அவன் அப்பாவைப்போல, பாலைவனத்தில் அலைந்து திரியும் ஒரு லாரி டிரைவராக, வீட்டின் நினைவுகள் இன்றி குடித்தபடி அலைந்து கடைசியில் விபத்தில் இறந்து மனைவி குடும்பத்தை துயரத்திலாழ்த்த நான் விரும்பவில்லை.
என் பையனின் குழந்தைப் பருவம் இனிமையானது. அவனும் அழகாக வளர்ந்தான். சில சமயம் அவனை, ரபேப்கனோமின் வீட்டிற்கு கூட்டிப் போவேன். அங்கிருந்த இரண்டு சிறுவர்களான நாஸர், ஜஹ்ரா இருவரோடும் விளையாடுவான். நாஸரும், ரெஸாவும் ஒரே வயது. ஜஹ்ராவோ அவர்களைவிட சிறியவள். அவன் பள்ளிக்குப் போகும் காலம் வந்தது. நான் தான் அவனை பள்ளியில் விட்டு விட்டு திரும்பி அழைத்து வருவேன். அவனுடைய பள்ளியின் பெயர் அஹ்டி அல்லது அஹ்கரியா என்று நினைக் கிறேன். இப்போது எனக்கு மறந்து விட்டது. பள்ளியில் அவனுக்கு வேறு பெயர் மாற்றி விட்டார்கள் . அந்தப் பள்ளி கோம்டோலா பஜாரின் பக்கத்தில் இருந்தது. பள்ளிக் கூடத்திலேயே அவன் தான் முக்கியமான பையன். நான் தினமும் சிலமணிநேரம், பள்ளிக்கூடத்தின் வெளியே உட்கார்ந்திருப்பேன். சாப்பாட்டு நேர மணி அடித்ததும் அவனை வீட்டிற்குக் கூட்டி வருவேன்.
பெர்சியப் புது வருடத்தின் முதல் நாளின்போது மோசமான சம்பவம் ஒன்று நடந்தேறியது. பிடா ஷஹர்பானு பார்க்கின் எதிரே அவனுக்கொரு விபத்து நடந்தது. கடவுளே! கடவுளே! நான் அங்கு ஓடினேன். பள்ளி மாணவர்கள். மரத்தில் ஏறி விளையாடிக் கொண்டிருந்தார்கள். ரெஸா மரத்திலேறி விழுந்து காலை முறித்துக் கொண்டான். ப்ரவுஸாபாடி ஆஸ்பத்திரிக்கு அவனை எடுத்துக் கொண்டு விரைந்தோம். அன்று இரவெல்லாம் ஆஸ்பத்திரியிலேயே இருக்க நேர்ந்தது. ஆஸ்பத்திரி அறையின் வெளியே நான் உட்கார்ந்து அழுதபடியே இருந்தேன். அவனும் உள்ளே அழுது கொண்டிருக்கக் கூடும். அவனுக்கு ஏற்பட்ட காயமும் சாதாரணமானதல்ல. மறுநாள் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் அவனை சோதித்து, ஆபத்து ஒன்றுமில்லை ''உயிர்த் தனத்தில் சிறுகாயம், வேறொன்றுமில்லை. அவன் பெரியவனான பின்பு, அவனுக்கு நிச்சயம் குழந்தை பிறக்கும். இதனால் எங்க ஆபத்தும் இல்லை.'' என்றார்; ஆனாலும். பெர்சிய வருடத்தின் முதல் நாளிலா இப்படி!
ஹைஸ்கூலில் படிக்கும்போது, சில வருடங்கள் அவனுக்குச் சந்தோஷமாகக் கழிந்தது. அது புரட்சிக்கு முந்திய காலம்; அப்போதெல்லாம் பள்ளியில் மாணவர்கள் தங்கள் பாடவேளைகளில் கவனமாக இருப்பார்கள் . ரெஸாவும் இதே வேலையில் கவனமாக இருப்பான். அவன் வெளியே சென்று நண்பர் களுடன் வாலிபால் கூட விளையாடுவதில்லை. எப்போதும் புத்தகம் படிப்பதிலேயே செலவழித்தான். சில சமயம் ரபேப்கனோமின் மகனான நாஸருடன், மற்றும் சில பள்ளி நண்பர்களுடன் மலையேறுவான். கோடை காலத்தில் ஏதாவது சிறு வேலைகள் செய்து பணம் சம்பாதிக்கக் கூடும்.
அவன் ஜெர்மன் வகுப்புகளுக்கு ஆர்வத்தோடு சென்று வந்தான். பிக்பாங் மற்றும் சில விளையாட்டுகளில் கூட ஆர்வமிருந்தது. ஆனால் பெரும் பான்மையான சமயம் புத்தகத்தில் முகம் புதைத்தபடி இருப்பான். பல்கலைக் கழக நுழைவுத் தேர்வு, எழுத எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய பள்ளிப் படிப்பின் கடைசி வருடம் புரட்சி பரவி பள்ளியை சரிவர நடத்த முடியவில்லை. ரேஸா பஜாரில் அலைந்து கொண்டிருந்தான். அப்போதுதான் அவன் டிப்ளமோ பெறக்கூடிய சமயம். பள்ளிகளோ தொடர்ந்து கால வரையற்ற போராட்டத்தில் இருந்தன. துரதிர்ஷ்டம் அவனை வளைத்துக் கொண்டது. அந்தச் சமயம் ரகசிய போலீசார் அவனுடைய நண்பனான நாஸரை கைதுசெய்து ஜெயிலில் அடைத்தனர். அதன் பின்பு அவன் மிகுந்த கோபத்தோடு என்னிடம் பலமுறைகள் சொன்னான் “அவர்கள் செய்வது சரியம்மா; இங்கே சுதந்திரமேயில்லை. அடிமைகளாக இருக்கிறோம்.'' ஆனாலும் அவன் எந்தப் போராட்டத்திலும் கலந்துகொள்ளவில்லை. அது என் விருப்பத்திற்கிணங்கத்தான். அவளுக்கு இந்தப்போராட்டத்தில் ஆர்வம் இருந்தது. ஆனாலும் அவன், நான் கவலைப்படுவதை விரும்பவில்லை . அதன் பின்பு ஒருநாள் இமாம்வந்தார். நகரின் தென்பகுதியில் இருந்த குழந்தைகள் ஆர்வத்தோடு ஓடினார்கள். அதன் பின்பு ஒவ்வொரு நபர்களாக மாறினார்கள்.
கடவுளே, அந்த இரவை எப்படிச் சொல்வேன். ரெஸா தன் கையில் ஒரு G3 அல்லது BM3 மெஷின் - கன்னை கொண்டு வந்திருந்தான். அதுதான் புரட்சி தொடங்கிய முதல் இரவு, அப்போதும் அவன் கண்ணீர் ததும்பவே இருந்தான். “நாங்கள் காவல் படைகளாக மாறிவிட்டோம். எங்கள் பள்ளியே காவல் படையாகிவிட்டது.'' கடவுளே நான் அவனுக்கு எப்படிச் சொல்வேன். அவன் இந்ததுப்பாக்கியைத் திரும்பிக்கொடுக்கா விட்டால் மன்னிக்கவே முடியாது என்றேன். அவன் கடைசியாக தன்வழியிலேயே திரும்பி விட்டான்
பள்ளியில் இருந்த இஸ்லாமியக்கமிட்டி அலுவலகத்திலேயே தங்கிக்கொண்டான். போர் தொடங்கிய பிறகு அவன் மற்றவர்களைப்போலவே வேறு இடத்திற்கு மாற்றப்பட்டான். ஒவ்வொரு இடமாக அவன் போய்க்கொண்டே இருந்தான். ஒவ்வொருவரும் கட்டாயமாக ராணுவசேவை செய்யவேண்டிய காலம் வந்தது. அப்போது ரெஸாவும் மிலிட்டரி சர்வீஸில் சேர்ந்து பணிபுரிந்தான். ராணுவப்பயிற்சிகள், ஏன் சுடுவதற்குக்கூடப் பழகிக்கொண்டான். கடைசியாக அவன் போர் முனையில் தன்னுடைய கோடை விடுமுறையை ஒரு ஊழியனாக கழிக்க நேர்ந்தது. அந்தக் காலத்தில் எங்கள் குவாம் துலாபஜாரில் சிறிய சந்தில் ஏழெட்டு பையன்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். ஒவ்வொரு முறையும் பள்ளியில் புதிதாக ஏதாவது ஒன்று நடக்கும்போது, மாணவர்கள் செத்துப்போனார்கள்.
அப்போது நான் யோசித்தேன், அவனுக்குக் கல்யாணம் செய்து வைத்து விட்டால், மனைவி வந்து விடுவாள். அதன் பிறகு அவன் இதுபோல போர் முனைகளுக்குச் செல்லமாட்டான். இப்படி சுற்றிக்கொண்டிருக்கவும் இயலாது. அவனுக்கு ரபேப்கனோமின் மகள் ஜஹராவின்மீது பிரியமுண்டு. அவர்கள் ஒன்றாகத்தான் வளர்ந்தார்கள். இந்த யோசனையை ரபேப்கனோமிடம் சொன்னபோது அவளும் ஒத்துக்கொண்டாள். நாங்கள் அவர்கள் இருவருக்கும் நிச்சயம் செய்ய முடிவு செய்தோம். ரபேப்கனோமும் என் கஷ்டத்தைப் புரிந்து கொண்டவள்.
இப்போது அவளுடைய பையன் நாஸரும், ராணுவ வேலையில் அலைந்து கொண்டிருந்தான். அத்தோடு ஜஹராவிற்கும் இந்தக் கல்யாணத்தில் விருப்பம் இருந்தது. அப்போது ஜஹரா பள்ளியில் படித்துக் கொண்டிருந் தாள். அவளுக்கு வயது 13. நான் ரெஸாவிடம் இதைப்பற்றிப் பேசியபோது அவன் இதைக் கேட்டுக் - கொள்ளும் பொறுமையில் இல்லை. அவன் சொன்னான், "அம்மா நான் இன்னும் பள்ளிப் படிப்பையே முடிக்க வில்லையே'' அந்தச் சமயத்தில் போர் மிகத் தீவிரமாகியது. இமாம், எதிரிகள் கைப்பற்றிய அபடான் பகுதியை உடைத்து நெறுக்கவேண்டும் என ஆணையிட்டார். ரெஸாவின் படை கைப்பற்றப்பட்ட பகுதியை தாக்க தெற்கு நோக்கிப் புறப்பட்டது. நான் அவனுடன் இரவெல்லாம் உட்கார்ந்து விவாதித்தேன். என்னுடைய தங்கையும், ரபோப்கனோமும்கூட அவனுடன் பேசினோம். கடைசியில் அவன் ஒத்துக் கொண்டான். அவனுக்கு இருபதாம் தேதியன்று நாங்கள் திருமணம் நிச்சயம் செய்ய தீர்மானித்தோம். போர் முனைக்குச் சென்று திரும்பிய பின்பு திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். அவன் போர் முனைக்குப் புறப்பட்டான். இது போன்ற திருமண ஏற்பாடு ஒன்று இருந்தால்தான் பாலைவனங்களில் அவன் திரியும்போதுகூட வீடு திரும்பவேண்டும் என்ற எண்ணம் அவன் மனதில் இருக்கும் என எண்ணினேன். எவ்வளவு அழகான நிச்சயதார்த்தம், அது தெரியுமா. சிறப்பாக நாங்கள் ஏற்பாடு செய்திருந்தோம். கடவுளே கடவுளே!! இறைவன் கருணைபெற்ற ஜஹரா; அஸ்ரத்மகமதுவின் அருமை மகளுக்கு நடந்த நிச்சயம் அது. இந்த இளம் ஜோடியை இறைவன் அருள் பாலிப்பாராக! திருமணம் நிச்சயமான மறு நாள், ரெஸா தெற்கு நோக்கிப் புறப்பட்டான்.
அவாஸ் பகுதியில் படை இருந்தபோது அவன் தினமும் 2 முறை வீட்டிற்கு போன் பண்ணுவான். அதுவும் எங்கள் பக்கத்திலிருந்து அப்பாஸ் அஹுவின் கடைக்கு நான் அங்கே போய் போனில் பேசிவிட்டு வருவேன். ஒருநாள் அவன் ஜஹராவோடுகூட போனில் பேசினான். கடவுளே! எவ்வளவு மோசமான நாட்கள் அவை. நாங்கள் கவலைப்பட்டுக் கொண்டேயிருந்தோம். ஆனால் அவனோ மிகுந்த நம்பிக்கையோடு இருந்தான். மகனைப் பெற்றெடுத்து போர்முனைக்கு அனுப்பிய தாய்மார்களுக்குப் புரியும்! நான் சொல்வது. ஒவ்வொரு சிறு செயலும்கூட எவ்வளவு தூரம் மன சஞ்சலத்தை ஏற்படுத்தி விடுகிறது என்று.
நான் கேட்டிருக்கிறேன், ரெசாவின் பிசிரடித்த குரலை போனில், அவனுக்காகக் காத்துக்கொண்டிருக்கும், அழகான திருமணம் நிச்சயிக்கப்பட்ட அந்த பெண்ணைப்பற்றிக்கூட பேசியிருக்கிறேன். அவனுக்கென தனியாக தயாரிக்கப்பட்ட அலங்காரப் படுக்கையை கண்டு அவன் அதிசயப்பட நான் விரும்பினேன். அதைப் பார்த்ததும் அவன் நிச்சயம் ஆசை கொள்வான். அவர்களுடைய திருமணத்தின் பின்பு முதலிரவிற்காக அறையின் நிறம் நீலநிறமாகும்படி பெயின்ட் அடிக்க விரும்பினேன். இளஞ்சிவப்பு நிறமுள்ள அழகான திரைத்துணிகள் படுக்கை விரிப்புகள், புதிய தலையணை உறைகள். இளஞ் சிவப்பு நிறமுள்ள தலையணை உறைகளில் பின்னல் வேலைப்பாடு கொண்டவை பதிந்துள்ளன. ஒரு கண்ணாடி, டூலிப் டிஸைன் மெழுக வர்க்தி ஸ்டேண்ட், மலர் குவளைகள், அவனுக்குப் பிடித்தமான அரசி, ஃபராக் அஹாவின் ஓவியத்தை சுவரில் தொங்கவிட விரும்பினேன். திருமணம் நிச்சயிக்கப்பட்டபோது, வாங்கிய வெண்கல குவளையை அறையின் ஒரு பறத்தில் வைக்க நினைத்தேன். அவனுடைய திருமணச் சான்றிதழை எடுத்துக் கொண்டு சொமையாத் தெருவிலிருந்த வரதட்சனைவாங்கும் அலுவலகத்தில் காட்டி ஒரு தறி மிஷின் அதுவும் இளம் சிவப்பும் நீலமும் கலந்து அமைக்கப் பட்டதாக வாங்க எண்ணினேன். ரெபேப்கனோவும் இதற்கெல்லாம் ஏற்பாடு செய்திருந்தான். கடைசி முறையாக ரெஸா போன் பண்ணியிருந்தபோது
நான் அவனிடம் சொன்னேன் ''உன் முதலிரவுக்கான அலங்காரப் படுக்கைகள் தயாராகி விட்டன'' அவன் பேசினான் ''அம்மா எனக்கு அதிர்ஷ்டம் இருந்தால் நான் திரும்பி வருவேன். இந்த நினைவுகள் என் நெஞ்சில் இருந்து கொண்டே இருக்கும்'' அந்த நாட்கள் போரால் பாதிப்புற்ற மோசமான நாட்கள் - எங்கும் பாம் போடுவதும் துப்பாக்கிச் சண்டைகளும் தொடர்ந்தன. நான் போனில் திரும்பச் சொன்னேன், ''அப்படி எதுவும் நடந்து விடாது. நீ நிச்சயம் திரும்பி வருவாய். உனக்கான திருமணப் படுக்கை தயாராகி விட்டது. உனக்கு கடவுளின் கருணை உண்டு.''
நான் இதையெல்லாம் சொல்வதன் மூலமே எங்கள் இருவருக்கும் இருந்த உறவை நீங்கள் தெரிந்துகொள்ள முடியும். ஆனால் அவர்கள் என்னிடம் வந்து சொன்னார்கள். கடவுளே! அதை நான் எப்படிச்சொல்வேன். ஆகாயம் இடிந்து என் தலையில் விழுந்ததை எப்படி நான் விவரிக்க முடியும், துக்கம் தோய்ந்த பெண்ணின் இதயத்தை, கிழிக்கப்பட்ட அவளது மார்பின் விம்மலை எப்படி வார்த்தைகளின் மூலம் விவரிக்க முடியும். அப்படியே அந்த செய்தி என்னிடம் வந்தது. அவர்கள் சொன்னார்கள், ரெஸாவை ஆஸ்பத்திரியில் அனுமதித் திருப்பதாக வந்து பெற்றுக் கொள்ளவும்'' என அடுத்த செய்தி வந்தது. நாங்கள் என்ன நடந்தது என அறியும் முன்பே, அவர்கள் உள்ளே வந்து உடலை அடையாளம் காட்டும்படி சொன்னார்கள் .கடவுளே... உங்கள் எவருக்கும் இது போன்ற துன்பம் வராமல் அல்லா காப்பற்றட்டும்! அஹாகாலம்; ரெபேப்கனோமின் சகோதரன் என்னை வெளியே கூட்டிப் போனான். கரபேம் ஆஸ்பத்திரிக்கு வேனில் சென்றாள். அவர்கள் எங்களை ஒவ்வொரு ஆபீஸாக அலைக்கழித்தார்கள். மூலை மூலையாக அலைய நேர்ந்தது. புத்தி பேதலித்து விட்டதைப் போல என் இதயம் அதிரத் தொடங்கியது. குறிப்புகள், அறிக்கைகள், எண்ணிக்கையற்ற உடல்கள் கடைசியில் அவர்கள் அந்த உடலை எங்களுக்கு காட்டினார்கள். அதை உடல் என்றுகூட சொல்ல முடியாது. உருத் தெரியாமல் சிதைந்து போன உடல். உயரமான ஒரு இளைஞனின் ரத்தக்கறை படிந்த சிதைந்த உடல். அதற்குப் பிறகு எனக்க என்ன நேர்ந்தது என தெரியவில்லை. நான் வெளியேறினேன்.
அவர்கள் என்னை ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்கள். அங்கே இரண்டு மாதத்திற்கும் மேலாக நான் இருக்க வேண்டியிருந்தது. பெரும்பான்மையான நேரம் நான் 'கோமா'வில் கிடந்தேன். தன் உணர்ச்சியற்ற தொடர் நிலை. எனக்கு மயக்கமருந்து கொடுத்து உறக்கத்தில் ஆழ்த்தினார்கள். இறந்தது போலவேயிருந்தது. அவர்கள் ரெஸாவின் இறுதிச் சடங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள் . நான் அங்கே போகவில்லை. படுகொலை செய்யப்பட்டவனுக்கும் இறுதிச் சடங்குகள் எல்லாமும் நடந்து முடிந்தன. நான் ஆஸ்பத்திரியிலிருந்து வெளியே வந்தபோது ரெஸாவின் இறுதிச் சடங்குகள் முடிந்து நாற்பதாம் நாள் விழிப்புச் சடங்கும் கூட முடிந்து விட்டது. எல்லாமும் போய விட்டது. அவனின் ஏழாம் இரவு விழிப்புச் சடங்கு செம்மையாக நடந்தது என எல்லோரும் சொன்னார்கள். ரெஸாவின் நண்பன் நாஸர் இப்போது இஸ்லாம் புரட்சிக் காவலர்கள் படையிலிருந்தான். அவர்கள் நாங்கள் இருந்த தெருவிற்கு ரெஸாவின் பெயரை வைத்தார்கள். அத்தோடு மசூதியின் முன்பு அவனுடைய உருவப்படம் கூட பொருத்தப்பட்டது.
கொஞ்ச நாளில் மற்றவர்கள் அவனை மறந்து போனார்கள். அவன் வயதுள்ள மற்றவர்கள் கூட போர் முனைக்குப் போய் விட்டார்கள் . பலரும் தியாகியானார்கள்.
என்னுடைய வாடகை வீடு அப்படியேயிருக்கிறது. ரெஸாவின் நண்பர்கள் அந்த வீட்டிற்கு வாடகை கொடுத்து வருகிறார்கள். அவர்கள் தியாகிகளுக்கு கிடைக்க கூடிய பென்ஷன், ரேஷன்கார்டு இவற்றையெல்லாம் கூட எனக்கு வாங்கித் தந்தார்கள். எனக்குச் சேரவேண்டிய அரிசி, பொருட்கள் அறையில் தயாராக காத்திருக்கின்றன. இன்னமும் அந்த துயரச்சம்பவ நினைவிலிருந்து ரெபேப்கனோமும் ஜஹராவும் மீளவில்லை. இருந்தாலும் ஜஹரா பள்ளிக்கு செல்லத் துவங்கினாள். ஒருநாள் மாலை ஜஹராவும், ரெபேப் கனோமும் என்னை பெசட் ஜெஹரா சமாதிக்கு அழைத்துப் போனார்கள். அங்கே என் மகனின் கல்லறையிருந்தது. அந்த நிலப் பரப்பின் நடுப்பகுதியில் எங்கோ நிலத்தில் என் மகன் புதையுண்டு போயிருக்கிறான். பலருடைய புகைப் படங்களும், உருவப் படங்களும் சமாதியின் மேல் நிற்கின்றன. இறந்தவரை ஞாபக மூட்டும் அந்தப் படங்கள் என் மகனின் சமாதியில் ஒரே ஒரு மரப்பலகை மட்டுமேயிருந்தது. அதில் அவனுடைய பெயர், அவன் தந்தையின் பெயர், பிறந்த நாள் விபரங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. அவனுடைய சிறிய புகைப் படம் ஒன்று கூட இருந்தது. அந்தப் படத்தை அவன் பதினோறாம் வகுப்பு படிக்கும்போது அடையாள அட்டையில் ஒட்டுவதற்காக எடுத்திருந்தான். அந்த போட்டோ அவனுடைய போட்டோகளிலே மிகவும் மோசமான ஒன்று. அது அவனுக்குப் பிடிக்காத போட்டோ . அதைப் பார்த்ததும் என் துயர் அதிகமானது. அந்தப் போட்டோவின் ஒரு ஓரமாக பள்ளிக் கூடத்தின் பெயர் உள்ள சீல் வைக்கப் பட்டிருந்தது தெரிந்தது. வழக்கமாக ரெஸா பள்ளி விட்டதும் லைப்ரரிக்குப் போய்விட்டு நேரம் கழித்தே வருவான்.
பேப்கனோமின் மகன் நாஸரும் படுகொலை செய்யப்பட்டால் என்ற செய்தி வந்தது. பெரிய குடும்பம் அவர்களுடையது என்பதால் இறுதிச் சடங்கும் பெரிய அளவிலே நடந்தது. ஒவ்வொரு நாளின் சடங்கிற்கும் நான் போய் வந்தேன். எரிப்பு மூன்றாம் நாள் சடங்கு, ஏழாம் நாள் மயானச்சடங்கு இங்கெல்லாம் நான் வெடித்து அழுதேன்.
இது என் மகன் இறந்த துயரை நினைவூட்டிக் கொண்டேயிருந்தது. அவர்கள் நாஸரின் நினைவாக தெரு முனையில், என் பையனுக்கு எழுப்பப் பட்டது போல ஒரு நினைவுத் தூண் எழுப்பினார்கள். அந்த நினைவுத் தூணில் விளக்குகள் பொருத்தப்பட்டன. நினைவுத் தூணின் முன்பு நாஸரின் பெரிய உருவப்படம் ஒன்று பொருத்தப்பட்டது. ஏன் இதையெல்லாம் உங்களிடம் சொல்கிறேன் என்றால், இந்த இடத்தில்தான் நான் சொல்லும் அந்த சம்பவம் நடந்தது. நாற்பதாம் நாளின் விழிப்புக்குப் பின்பு என்பதற்காகத் தான்.
முன் சொன்னபடியே, அன்று நான் குளித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன் . மங்கிய ஒளி நிரம்பிய பாதை. ஹாஜி அப்பாஸ் அஹா கடையின் முன்பு பெரிய க்யூ. அங்கே ரேஷன் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். மரித்தவர்களுக்காகப் பாடிக் கொண்டிருந்தார்கள். மசூதியில் அப்போது நான் ரெலாவைப் பார்த்தேன். உண்மை, ரெஸா இறந்து போன இரண்டு மாதத்திற்குப் பிறகு என் எதிரில் நின்று கொண்டிருப்பதை காண முடிந்தது. அவன் பள்ளிக்குப் போகும்போது உடுத்திக் கொள்ளும் ஆடையிலிருந்தான். இல்லை, ஒரு நிமிடம் பொறுங்கள். அவன் புதிய ஸ்போர்ட்ஸ் பனியன் அணிந்துப் கிரேக்கலர் பேண்ட் போட்டிருக்கிறான். அவன் நாஸரின் நினைவுக் தூணிற்குப் பின்பு நின்று கொண்டிருந்தான். ஒளிந்து கொண்டு என்னைப் பார்த்துக் கொண்டிருப்பது போலவே தெரிந்தது.
அவனுடைய கண்களில் இன்னமும் பயமும், கோபமுமிருந்தன. அவன் என்னைச் சுடுவதைப்போலப் பார்த்துக் கொண்டிருந்தான். என் கைகளிலிருந்த பொட்டலம் நழுவமுயன்றது. நான் தலையை திருப்பிக்கொண்டேன் ரெஸா மறைந்து விட்டான் .
எனக்குப் பயமானதும் நான் ஓடத்துவங்கினேன். வழியெங்கும் ஓடினேன். ரபேப்கனோமின் வீட்டைத் தட்டி அவளிடம் சொன்னேன், அவள் சொன்னாள்.
"அவனை திரும்பவும் ஞாபகப்படுத்தாதே... தயவு செய்து போய்விடு'' என்றாள்.
நான் அவளிடம் கேட்டேன் அவன் இங்கும் வந்தானா.'' ரபேப்கனோம் என்னிடம் திரும்ப கேட்டாள் ''என்ன உ.ளறுகிறாய்... யார் இங்கே வந்தது."
"இமாம் ரெஸாவின் மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன். நான் என் கண்களால் பார்த்தேன். ரெஸா நாஸரின் நினைவுத் தூணின் பின்பு நிற்பதை.... எப்படிப்பார்த்தான் தெரியுமா."
ரபேப்கனோம் சொன்னாள். “அதுவேறுயாராவது ஒரு ஆளாக இருக்க கூடும். அவன் என்ன நிற உடையணிந்திருந்தான்.''
அவன் ஸ்போர்ட்ஸ் டிரெஸ் அணிந்திருப்பதை அவளிடம் சொன்னேன். பள்ளி மாணவர்கள் அணியும் ஆடை. விளையாட்டு வீரர்கள் அணியும் அடிடாஸ் கேன்வாஸ் ஷு.
“ஒரு போதுமிருக்காது... ஏன் இப்படி பிதற்றுகிறாய்... உனக்கு பைத்தியம் முற்றிவிட்டதா என்ன.''
“அவனுடைய கண்கள் கோபமாக இருந்தன.'' எனக் கத்தினேன்.
ரபேப் கனோம் கேட்டாள். “கோபமாக வா'' பின் அவளே சொன்னாள் “பார் இதுபோல கண்ட இடத்தில் உளறிக்கொண்டு வம்பில் மாட்டிக்கொள்ளாதே... உன்னை திரும்பவும் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கே அனுப்பிவிடப்போகிறார்கள் . ரெஸா இறந்துபோய் விட்டான்... என் மகன் நாஸரும் இறந்துபோய் விட்டான்.... அவர்கள் சமாதியை நீ பார்க்க வில்லையா... அவன் இறந்து நாற்பது நாட்களுக்கு மேலாகிவிட்டன. நாற்பதாம் நாள் இறுதி விழிப்புச் சடங்குகூட நடந்து முடிந்து விட்டது தெரியாதா... கடவுள் ஆணையாகச் சொல்கிறேன். ரெஸா இறந்து போய் விட்டான். உனக்கே தெரியும். அவன் இறந்து போய்விட்டானா, என்னை நீ தொந்தரவு செய்யாதே நான் என் பையனை இழந்த துயரத்திலிருக்கிறேன்...
நான் அவளிடம் சொன்னேன் “இறந்து போகும்போது அவன் முகம் எரிந்து, சிதைந்திருந்ததே... இப்போது எப்படி புதிதாகவந்தது.''
ரபேப் கோபப்ட்டாள் "என்ன கூத்து இது, இதையெல்லாம் யார் நம்புவார்கள். இதை ஜனங்களிடம் போய் சொல்லிவிடாதே....
நான் கடவுள் மீதும், குரான் மீது ஆணையிட்டுச் சொன்னேன். என் கண்களால் நான் பார்த்த உண்மை அது. அவன் ஸ்போர்ட்ஸ் டிரெஸ் அணிந்து, தொப்பி கூட வைத்திருந்தானே.
'நீ பார்த்தது. அதுமட்டும்தானா...'' ரபேப் கேட்டாள். அவன் தொப்பி அணிந்திருப்பதை எங்குபார்த்தாய், உட்கார்ந்து சொல்லு, நான் உனக்காக ஒரு டீ போட்டுத் தருகிறேன். அத்தோடு ஒரு ஆஸ்பிரின் மாதத்தில் பயம் தருகிறேன். அதைச் சாப்பிட்டுவிட்டு பேசாமல் தூங்கிவிடு... இதுபோல் அழுதுகொண்டிருக்காதே. நீ ரெஸா பற்றிச் சொல்லும் ஒவ்வொரு முறையும் எனக்கு என் மகன் நாஸரின் நினைவு வருகிறது.
நான் அவன் சொன்ன எதையும் கேட்டுக்கொள்ளவில்லை. ஜஹராவின் பள்ளியை நோக்கி ஓடினேன். அவன் மாலைநேரங்களில் அங்கிருக் கும் சேவைமையத்தில் வேலை செய்துகொண்டிருப்பான் என எனக்குத்தெரியும். பள்ளிக்குப்போகும் வழியில் அப்பாஸ் அஹாவின் கடை அருகில் போன போது சப்தமிட்டேன்.
“அப்பாஸ்... என் மகன் ரெஸாவை பார்த்தாயா... ஸ்போர்ட்ஸ் டிரெஸ் போட்டுக் கொண்டு வந்திருக்கிறான்.
அப்பாஸ் என் பக்கம் திரும்பிச்சொன்னார். இல்லை அவர் தன் வியாபாரத்திலே கவனமாக இருந்தார். இடையில் அவர் என்னைப்பார்த்துச் சொன்னார். “அல்லாவின் கருணை உனக்கு என்றும் உண்டு.''
நான் ஜஹராவின் ஸ்கூலுக்கு அருகில் வந்து நின்றேன். என் கண்ணில் எவரும் தென்படவில்லை. வாட்ச்மேன் போல ஒரு ஆள் தெரிந்தான். ஜஹரா லைப்ரேரியிலிருந்தாள். அவளுடைய முகம்பெருத்துப்போய் உதடுகள் வெடித்திருந்தன. நான் அவளிடம் எல்லாவற்றையும் விளக்கினேன்.
''சாம்சிகனோம்... நீங்கள் தலையில் அடித்துக்கொள்ளாதீர்கள்.'' என ஜஹரா கண்ணீர்விட்டாள்.... அவள் என்னோடு உடன் வருவதாகச் சொன்னாள். நாங்களிருவரும் அவனைத்தேடி பஜாரெங்கும் அலைந்தோம், பாவம்... துரதிஷ்டம் பிடித்த என் மகன் சாந்தியடையாத அவனுடைய ஆவி, மரணத்தின் பின்னும் அலைந்துகொண்டிருக்கிறதே, சாகாயூர் சதுக்கம் பக்கம் நாங்கள் அவளைத்தேடிக்கொண்டிருந்தோம். சிட்டிபார்க் ஏரியாவில் கூட ரெஸா இல்லை. ஜஹரா என்னை அமைதிப்படுத்தினாள். அவள் நான் சொன்னதை நம்பினாள் என்று உறுதியாகத் தெரியவில்லை. ஜஹராவிற்கு நன்றாகத்தெரியும் ரெஸா படுகொலை செய்யப்பட்டது. அவள் என்னிடம் சொன்னாள்.
நீங்கள் ஆஸ்பத்திரியிலிருந்த சமயம் ரெஸா செத்தான். அவனை நாங்கள் எரித்துவிட்டோம், இறுதிச்சடங்கிற்கு கூட நீங்கள் வரவில்லை. ஏழாம் நாள் இறுதிச்சடங்கிற்கு நீங்களில்லை, அதனால்தான் உங்களால் ரெஸா இறந்துபோனான் என்பதையே ஒத்துக்கொள்ள முடியவில்லை. நிஜம்! ரெஸா இறந்து போய் விட்டான். நாங்கள் அவனை எரித்துவிட்டோம்.... அவனுக்கு கூட ஒரு நினைவுத் தூண் கட்டியிருக்கிறோம். நாஸரின் நினைவுத் தூணுக்குப் பக்கம் அதுவுமிருக்கிறது''
பாவம் விவரமறியாத சிறுமி, கரைந்து அழத்தொடங்கினாள். அவள் நான் சொல்லியதை நம்பிளாள் என்பது தெரிகிறது. நிஜமாக அவள் அதை நம்பினாள்.
எப்படியோ, அந்த மாலை முழுவதும், ரெஸா இறந்துபோனானா இல்லையா என்ற பேச்சு இருந்து கொண்டேயிருந்தது. வேறு யாரும் அவனைப் பார்த்ததாகத் தெரியவில்லை. உண்மையில் ரெஸா உயிருடன் இருக்கிறானா, அதுவும் பஜாரில் அலைந்து கொண்டிருக்கிறானா... இல்லை... அது உண்மை யாக இருக்காது... அவர்கள் இதைப் புரிந்து கொள்ளப்போவதில்லை... அந்த இரவு கழிந்தது. எனக்கு என் மகன் ரெஸாவைத் தெரியும்... அது அவன் ஆவியாக இருந்தாலும் பரவாயில்லை. அவன் என்னிடம் எதுவோ சொல்ல விரும்பினான். நான் அந்த இரவு முழுவதும் விழித்து அழுதபடியே இருந்தேன்.
அவன் கண்களை என்னால் மறக்க முடியவேயில்லை. அவன் கோபமாக என்னைப் பார்த்தான் என்றே எனக்கு தோணியது. நான் அவன் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளவில்லை என்ற கோபமாக இருக்கக்கூடும். நான் ஆஸ்பத்திரியில் நோய்வாய்ப்பட்டு கிடந்ததெல்லாம் ஒரு நடிப்பு என அவன் எண்ணியிருப்பானோ... அல்லது நான் அவனை பார்க்க விரும்பவில்லை என்று கூட நினைத்திருக்கக்கூடும். நிச்சயமாக அவன் நாஸரின் நினைவுத்தூண் பின்புறமிருந்து அவன் என்னைப் பார்த்தான். .
இரண்டு நாள் போயிருக்கும் எதுவும் நடக்கவில்லை. மூன்றாம் நாளின் மதிய நேரத்தில் நான் தியாகிகள் மையத்தில் ரேஷன் வாங்கும் பொருட்டு போய்விட்டு ஹஸ்னாபாதிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கும்போது மிஹன் சினிமா தியேட்டர் முன்பு அவன் கடந்து போவதை நான் காணமுடிந்தது. இப்போது அவன் சாம்பல்நிற உடையிலும், தொப்பி, அடிடாஸ்கேன்வாஸ்ஷு அணிந்து போய்க் கொண்டிருந்தான். சினிமா போஸ்டர்கள் எதையும் அவன் கவனித்ததுபோலத் தெரியவில்லை. அவன் சதுக்கத்தை நோக்கி போய்க் கொண்டிருந்தான். அவன் நின்ற இடத்தின் பின்புறத்தில் மிகப் பெரிய சினிமா போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அம்மா... நீ என்னை ஏமாற்றி விட்டாய என அந்த போஸ்டரில் பெரிய வாசகமிருந்தது. நான் எப்போது. பொது சொன்னேன். எப்படியோ என் பையன் அந்தப் பக்கம் நின்றபடியேயிருந்தால் நான் பஸ் ஜன்னலைத்தட்டி கூப்பிட்டேன் ரெஸா...ரெஸா. பஸ்ஸை நிறுத்தும் படி கூக்குரலிட்டேன். பஸ்ஸை நிறுத்தவில்லை. சதுக்கத்தில் வந்துதான் பஸ் நின்றது. சினிமா தியேட்டரை நோக்கி ஓடினேன். நான் போவதற்குள் அவன் மறைத்துவிட்டான்.
இந்த முறை ரெஸாவை பார்த்ததை ஜஹராவிடம் மட்டுமே சொன்னேன். அவளும் அதை நம்பினாள். அது நிஜம்தான் என்றும் சொன்னாள். ''ஆமாம். நாங்கள் இருவரும் அந்த சினிமா தியேட்டருக்குத்தான் அடிக்கடி போவோம், நாஸர்கூட அங்கேதான் வருவான்.''
நான் அவளிடத்தில் அந்த சினிமா போஸ்டரைப்பற்றி சொல்லவில்லை. அவமானமாக இருந்தது. அத்தோடு நான் அவளை தொந்தரவு செய்யவும் விரும்பவில்லை .
ஒரு நாள் மாலை, அவனை நான் டி. வியில் பார்த்தேன். கூட்டத்தின் நடுவே நின்றபடியே அவன் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தான். சினிமா, டி. வி. என அவன் மறைந்து மறைந்து என்னைப் பார்த்தபடியே இருக்கிறான் . அவன் பார்வை கேமராவை நோக்கியல்ல, என்னை நோக்கியே திரும்பியது. என் இதயத்தின் ஆழத்தை ஊடுருவும் பார்வை. கோபமான கண்கள்.
டி. வியை அணைக்காமலே எழுந்து ஓடினேன். ரபேப்கனோமின் வீட்டிற்குப் போய் ஜஹராவிடம் சொன்னேன். அவர்கள் டி. வியில் வேறு சேனல் பார்த்துக் . கொண்டிருந்தார்கள். நான் சொன்னதும் சேனலை மாற்றினார்கள். அதற்குள் நிகழ்ச்சி முடிந்து வேறு நிகழ்ச்சி தொடங்கப் பட்டிருந்தது. ஜஹராவைத் தவிர வேறு எவரும் இதை நம்பவில்லை.
அதன் பிந்திய நாட்களில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் ஜஹராவுடன் பேசியே கழித்தேன். எங்கு சென்றாலும் அவளும் உடன் வருவாள். சில சமயம் எனக்கே குழப்பமாக இருக்கும். ரெஸாவைப்போல தோற்றமுள்ள வேறு யாரும் அப்படி தோன்றக் கூடுமோ என.
ஒரு வெள்ளிக்கிழமையன்று, நாங்கள் ரெஸாவின் சமாதியை பார்க்கப் போனோம். அசைவற்ற இடம். நினைவுத் தூண்கள் நிறைந்த இடம். நாஸரின் கல்லறைகூட இருந்தது. பெயர் பொறிக்கப்பட்ட மரப் பலகைகள் நடப் பட்டிருந்தன.
இந்த சமாதிகள் நிறைந்த பிரதேசம் எனக்கு மிரட்சியைத் தந்தது. ரெஸா இங்கேதான் இருக்கிறானா, அவன் மண்ணுக்கடியில் என்ன செய்து கொண்டிருப்பான். ரெஸாவின் சமாதி இதுதான் என்றாள் ஜஹரா. எனக்கு துக்கம் பெருகியது. சமாதிகளின் ஊடே நடப்பது துயரமானது. நான் சமாதியின்மேல் விழுந்து அழுது புரண்டேன். ஜஹரா பெசத்ஹரா கமிட்டி ஆட்களை கூட்டி வந்து என்னை ஆஸ்பத்திரிக்கு அழைத்துப்போகச் செய்தாள்.
மழைக்காலமானது. காரியக்கமிட்டிப் பையன்கள் பஜாரில் டொயோடா காரில் செல்கிறார்கள். எங்கள் சந்திலிருந்து பார்த்தால் தெரிகிறது. நாங்கள் காலார கொஞ்ச தூரம் நடந்து திரும்பினோம். தெருவில் ஒரு நபரில்லை. மரணித்துப்போன நீண்ட தெருக்கள் ஹாந்தி மசூதியின் பக்கம் யாரோ ஒருவன் தெரிந்தான்.
நான் கத்தினேன் ரெஸா "அவன் நின்று என்னைத் திரும்பிப்பார்த்தான். பின்பு அவன் ஓடத்துவங்கினான். அவன் எனக்காக காத்திருந்து ஓடுவது போலத் தெரிந்தது. அது ரெஸாவா? அல்லது அவனது ஆவியா; ஜஹரா உதிர்ந்த இலையைப்போல வெளிறிப்போயிருந்தாள். என்னைத் தனியே விட்டு விட்டு அவள் போக விரும்பவில்லை.
யாரோ... எங்கேயோ... ரெஸாவைப்போலவே ரெஸாதானா... இல்லை வேறு நபரா... என்ன சொல்வதற்காக என் முன் வந்துபோகிறான்.
அதன் பின்பு நான் அவனை அடிக்கடி பார்க்கத் தொடங்கினேன். பல முறை டி.வியில் தோன்றினான். அவன் என்னை சுடுவதைப்போல கூர்மையாக பார்க்கத் துவங்கினான். சிலநேரம் ஏதாவது ஒரு சுவரின் அருகில் நிற்கிறான். சுவரில் “அம்மா... எனக்காக அழவேண்டாம்'' என்ற வாசகங்கள் தெரிகின்றன. இதில் 'வேண்டாம்'' என்ற எழுத்தை மறைத்துக் கொண்டு நிற்கிறான் எனக்குத்தெரிகிறது. 'அம்மா...எனக்காக அழு?'' சில நாட்களுக்குப் பின்பு மசூதியின் காவலாட்கள் பார்த்தார்கள், யாரோ அந்த வாசகத்தின் கீழே சிவப்புக் கேள்விக் குறிபிட்டிருப்பதை; மறுநாள் அவர்கள் அந்த கேள்வி குறியை அழிக்க முற்பட்டபோது நான் தடுத்துக் கத்தினேன். இதுபோன்ற செயல் நடக்க விடமாட்டேன் என்றேன்.
அதன் பிறகு, அவன் மசூதியில் மட்டுமல்ல, தெருவில் உள்ள பலவீடுகளின் சுவர்களிலும் வாசகங்கள் எழுதத் துவங்கினான் ரெஸா. தியாகிகள் உயிரோடிருக்கிறார்கள்'' என்றுள்ள வாசகத்தினை அவன் 'தியாகிகள் உயிரோடிருக்கிறார்கள் கோபமாக' என மாற்றி எழுதி உள்ளான். அவன் மனதில் என்னதானிருக்கிறது. ஏன் இப்படி அவர் அலைந்தபடியே இருக்கிறான். நான் வீட்டில் இல்லாத சமயத்தில் அவன் நுழைந்து தன பழைய பாடப்புத்தகங்களைத் தாக்கிக் கொண்டு போய்விடுகிறான். சில சமயம் நுழைவுத் தேர்விற்கான பாடநூல்களை எடுத்துப் போகிறான்.
ஒவ்வொரு நாள் கனவிலும் அவன் வருகிறான். கண்ணை மூடியதும் அவன் தோன்றிவிடுகிறான். ஜஹரா இல்லாத நேரத்தில் அவன் சினிமாத் தியேட்டர் முன் நிற்பதுபோல கனவு வருகிறது. அவன் என்னைக் கடந்து போய்க் கொண்டேயிருக்கிறான். இமாம் இறந்த அன்று சினிமா தியேட்டர்கள் கிடையாது. அவன் அலைந்து கொண்டிருக்கிறான். அவன் என்னை எதுவோ கேட்க முனைவதுபோல மூச்சு விடுகிறான். அவன் என்ன கேட்க விரும்பு கிறான். ''இந்த நினைவுத் தூண் எனக்காகவா'' இதைத்தான் அவன் கேட்க விரும்பினான். அவன் பேசுவதில்லை. கட்ந்து போய்விடுகிறான். ஜஹரா என்னைப் பார்த்து பயப்படுகிறாள். பாவம் அவள். என் மகனின் மனைவியாக வேண்டியவள். இன்று கல்யாணமாகாத விதவையாக இருக்கிறாள். ரெஸாவின் படங்கள் மசூதிச் சுவர்களில் தெரியத் தொடங்கின. அவர்கள் என்னைப் பைத்தியக்காரவிடுதியில் வலுக்கட்டாயமாகச் சேர்த்துவிட்டார்கள். ஜஹரா தான் பின் என்னை விடுவித்து அவள் பொறுப்பில் வைத்துக் கொள் வதாகச் சொன்னாள். அவர்கள் எனக்கு ஒரு ஆபரேஷன் செய்தால் குணமாகி விடலாம் என்றார்கள்.
ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேறிய பின்பு ஜஹராவுடனே நாட்களை கழித்தேன். அவனை அதன் பிறகு நான் நகரத்தில் சந்திக்கவேயில்லை. சில சமயம் நான் அவன் சமாதியிருந்த இடத்தில் போய் உட்கார்ந்து கொள்வேன். நாள் முழுவதும் அங்கேயே இருப்பேன். அவனுக்கு நான் அங்கேயிருப்பது தெரியும். அவன் என்னைத் தேடிக்கொண்டிருப்பான். அவன் சமாதிக்கு அடுத்த இடத்தில் நான் மறைந்து படுத்துக் கொள்வேன்.
சில சமயம் துணி துவைக்கும் இடங்களின் மறைவில் ஒளிந்து கொள்வேன். அங்கே கூட்டம் அதிகமாக வரும். ரெஸாவிற்கு கூட்டமென்றால் விருப்பம். அவன் தன் விருப்பம் போல சுற்றிக் கொண்டு அலைந்தான். நான் இடுகாட்டிற்குப் போய் வருகிறேன் என்ற விபரம் ஜஹராவிற்குத் தெரியாது. அவள் எப்போதாவது கேட்பாள்.
நாளெல்லாம் எங்கே போய் வருகிறீர்கள்'' நான் எதற்கும் பதில் பேசு வதில்லை நீண்ட நாட்களுக்குப் பிறகு, அவன்; அவன் வயதுப் பையன்களுடன் ஸ்போர்ட்ஸ் டிரஸ் அணிந்து வந்து கொண்டிருந்தான். அவர்கள் கைகளில் பாடப்புத்தகங்கள் இருந்தன. ஏதோ அணிவகுப்பில் கலந்து கொள்ள வேண்டி அவர்கள் போய்க் கொண்டிருக்க வேண்டும். அந்தக் கூட்டத்தின் நடுவில் ரெஸா இருந்தான். அவன் எனை நோக்கித் திரும்பி ஏதோ சைகை செய்து சொல்ல முயன்றான்.
அவன் எங்களிடம் என்ன சொன்னான் என்றே புரியவில்லை. அது அவனுக்குப் கோபத்தை தூண்டியிருக்க கூடும். இது என் கன்வில் வந்தததா, அல்லது நிஜமாகவே நான் அவனைச் சந்தித்தேனா என்று கூடத்தெரியவில்லை. இதெல்லாம் ஒரு அதிகாலையில் என் நினைவிற்கு வந்தது. நான் அவன் சமாதி யிருந்த இடத்திற்குச் சென்றேன். சமாதி காலியாக இருந்தது. எந்தத் தடயமுமில்லை. ஒரு கரகரத்த குரலைமட்டும் கேட்டேன். துணி துவைக்கும் இடத்திலிருந்து இந்த சப்தம் வருகிறது போல தோணியது. நான் அதன் அருகாமையில் சென்றேன். குளிர்ந்த காற்றடித்துக் கொண்டிருந்தது. மெதுவாக அதன் அருகில் சென்றேன். என் இதயம் வேகமாக துடிக்கத் துவங்கியது. யாரும் இந்த சமாகியில் இரவு முழுவதும் இருப்பது இயலாது என எனக்குத் தோன்றியது. அதன் அருகில் சென்றேன். சப்தம் துல்லியமாக கேட்டது. சமாதிகளின் பின்புறமிருந்து வரும் சப்தம் போலவேயிருந்தது. வண்ணான்களின் வீடுகள் அந்தப் பக்கமிருந்தன. அவை மூடிக் கிடந்தன. யாருமற்ற இடம் போல இருந்தது. மனித சுவடேயில்லை. எங்கிருந்தோ கல்லறை நிலைமை பற்றி பலர் பேசிக் கொண்டிருந்தார்கள் ஒரு குரல் கேட்டது.
“கடவுள் ஆணையாக விடிந்து விட்டது. நாம் சமாதிக்குள் போய் உட்கார்ந்து கொண்டு பேசலாம்''
ஒருவன் மறுத்துப் பேசினான் "நாம் சமாதிக்குள்ளே போகத் தேவை யில்வை ...'' மற்றவன் குரலும் கேட்டது 'அவன் சொல்வது சரி...'', மற்றவர்கள் அனைவரும் இதையே சரிசரி என்றார்கள்.
“அவர்கள் நமக்கு கிடைக்க வேண்டியதை தரும் வரைக்கும் நாம் கல்லறைக்குத் திரும்பக் கூடாது...அவர்கள் நம்மை ஏமாற்றி விட்டார்கள்''
என் இதயம் நொறுங்கி விடும் போலானது. அவர்களின் குரலில் ஊடே ரெஸாவின் குரலும் கேட்டது. அந்த வீட்டின் சாவித் துவாரம் வழியாக
பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் - உள்ளேயிருந்தான். பெரியஹால் ஒரு கூட்டம் உட்கார்ந்திருந்தது கைகளை உயர்த்தியபடி அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் இன்று காலை ஊர்வலத்தை முடித்துக் கொண்டு திரும்யிருக்க வேண்டும். அவர்கள் ஆடைகள் தூசி நிறைந்து போயருந்த அவர்கள் அடிடாஸ் கேன்வாஸ் ஹூ அணிந்திருந்தார்கள். வெகு அருகாமையில் அவர்களைப் பார்த்தேன். நான் கைகளை உயர்த்தி வீட்டின் கதவைத தட்டினேன்....ரெஸா ரெஸா... கூக்குரலிட்டேன். அவன் என்னைப் பார்க்க வேண்டுமென விரும்பினேன். அவனிடம் நான் எல்லாவற்றையும் சொல்லத் துடித்தேன். புனித குரான் மீது ஆணையிட்டு நான் சொல்வதை நம்ப வைக்கத் தயாராக விருந்தேன். நான் அவனை ஏமாற்றவில்லை எனச் சத்தியம் செய்ய ஆசைப்பட்டேன்.
திடீரென அவர்கள் சப்தம் மறைந்து போனது. முணங்கும் சப்தம் மட்டுமே கேட்டது. பின் ஓசை எதுவுமற்ற பேரமைதி நிலவியது.
என் பின் புறத்தில் இரண்டு காவலர்கள் நின்றிருந்தார்கள். நான் தரையில் வீழ்ந்து கிடந்தேன். படுத்தபடியே அவர்களைப் பார்க்கேன் அவர்கள் கல்லறைத் தோட்டத்தைக் காவல் காக்கும் காவலாட்கள். அவர்களில் ஒருவன் என்னைப் பார்த்துக் கேட்டான்.
“இந்த நேரத்தில் உனக்கென்ன வேலை. இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்... உனக்கென்ன வேண்டும்" மற்றவன் என் அங்கியை விலக்கி என் முகத்தைப் பார்த்தான்.
அவர்கள் உள்ளேயிருக்கிறார்கள்.'' என்றேன். தொடர்ந்து காவலர்கள் என்னை பார்த்தபடியேயிருந்தார்கள். நான் சொன்னேன் "அவர்கள் உள்ளேயிருந்தார்கள்... நிறைய பையன்கள்... என் மகனும் கூட இருந்தான்... நிறம். என்னை நம்புங்கள்... நான் என் மகனுடன் பேசவேண்டும்... அவனை நான் ஏமாற்றவில்லை .''
அவர்கள் எனை நம்பவில்லை . ''யார்?'' என ஒருவன் கேட்டான். மற்றவன் “யார் உள்ளேயிருக்கிறார்கள்.'' எனக் கேட்டான்.
ஸ்ட்ரைக் செய்யும் பையன்கள்... என் மகனும் அவர்களோடு தானி ருக்கிறான்.''
இரண்டுபேரில் மூத்தவனாக இருந்தவன் சொன்னான். இங்கே யாரும் ஸ்ட்ரைக் பண்ணவில்லை. இந்த நேரத்தில் இந்த வீட்டில் யாரும் இருக்க முடியாது.''
“இல்லை'' எனக் கத்தினேன்... "அவர்கள் உள்ளேயிருக்கிறார்கள் . என் மகனுடன் உள்ளேயிருக்கிறார்கள். துரதிருஷ்டம் தங்களை சூழ்ந்து கொண்டதாக அவர்கள் நினைக்கிறார்கள். நாம் அவர்களை ஏமாற்றி விட்டோம் என நினைக்கிறார்கள். இல்லை. நான் என் பையனை ஏமாற்றவில்லை. அவனுக்காக முதல் இரவு படுக்கை கூட செய்து வைத்திருக்கிறேன்... தயவுசெய்து... அந்தக் கதவைத் திறவுங்கள்... இமாம் ரொஸாவின் அன்பிற்காக வாவது கதவை திறவுங்கள்... கடவுள் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன்...
நிசப்தம் நிரம்பிய வீடாயிருந்தது. அவர்கள் உள்ளே இருக்கிறார்கள் என எனக்குத் தெரியும், நான் கதவைத்தட்டினேன் . ''நான் உன்னை விரும்பு கிறேன்... கடவுள் மீது ஆணையிடுகிறேன்... உனக்கு இன்னொரு நினைவு ஸ்தூபி அமைப்பேன்...''
காவலாட்கள் என்னை இழுத்துக்கொண்டு போனார்கள். என்னை டொயோட்டா காரின் உள்ளே தள்ளும்போது என் தலை எதன் மீதோ மோதுவது கேட்டது... அதன்பின்பு உள்ள எதுவும் இன்று வரை ஞாபகத்திலேயில்லை...