தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Friday, October 18, 2019

திருவாரூர் ஜட்காவும் இவர்களும் - கோணங்கி ::: பட்டுப்பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம்

டிடோ வாத்துகள் யாருக்காகவுமின்றி இசை யமைத்துப் பாடுகின்றன. தீராப் பாடலின் முதல் வரிகளாக.... "வைக்கோலிலிருந்து மஞ்சள் வெளிறிய பூக்கள்  வரும் நாளில் நானோ நீங்களோ - இருக்க மாட்டோம்... உங்களுக்கும் எனக்கும் மட்டுமே தெரியுமது.'' 

திருவாரூர் ஜட்காவும் இவர்களும் - கோணங்கி  
ஆறு சுழல் கம்பிகளில் பார் விளையாடிக் கொண்டே இருக்கிறாள் அமிர்தா. சின்னஞ்சிறிய கைகள் அனாயாசமாகச் சுழன்று ஒன்றிலிருந்து ஒன்றுக்குத் தாவியபடி கவராயத்தின் துல்லியமான வட்டமடித்து கம்பிகளைத் தாண்டுகிறாள். சாவின் கேலிச் சித்திரத்தை வரைந்தபடி ஒவ்வொரு நாளின் சுழற்சியாக எனக்குள் வட்டமாகக் கிளம்பி வெளியேறி என்னைச் சுற்றி நடந்து கொண்டிருக்கும் எல்லா உருமாற்றத்தின் மீதும் பரவிய அவள் உலகம் வட்டம் பிசகாமல் கவராயத்தால் குனிந்து காகிதங்களில் பென்சில்' கோடு வரைந்து கொண்டே இருக்கிறாள். அந்த வட்டப் பாதையின் குறுக்கே பாய்ந்து வட்டத்தின் எதிர் விளிம்புக்கு நேர் கோட்டுப் பாதை அமைத்துக் கொண்டிருந்தேன். குறுக்கும் நெடுக்குமான விட்டங்கள் சென்று ஒரு மையத்தைச் சந்திக்கின்ற ன. A,B,C; B,C,A; C,B,A; எப்படி வேண்டுமானாலும் மையத்தைக் குறித்துக் கொள்ளலாம். கவராயத்தின் ஊசிமுனை எல்லாக் காகிதத்திலும் பதிந்து எல்லாமே அவளுக்குச் சொத்தமான காகிதங்களாகின்றன. எதுவும் எழுதப்படாத வெள்ளைக் காகிதத்தின் மையப் புள்ளியிலிருந்து என் வாழ்வு சுழன்று கொண்டிருந்தது. கவராயத்தின் துருப்பிடித்த அச்சில் சுழலும் வருஷங்கள் அதிகரிக்க அதிகரிக்க முதுமையடைந்த சுழற்சியின் துருப்பிடித்த ஓசை என்னைப் பயமுறுத்தியது. என் அமிர்தா தன் கவராயத்தை என் மீது பதித்து என்னைச் சுற்றுகிறாள். அவளின் விளையாட்டு - பொம்மையாக அவளுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். 

"என்னைச் சுழற்றுவதை அவள் நிறுததவே இல்லை. அவள் கவராயம் இல்லாமல் என் மையம் வேறு இடத்திற்கு மாறப்போவதில்லை. ஒன்றைச் சுற்றிய ஆழமான உணர்வு எல்லா வாழ்வின் விந்தையாகிறது. விந்தையின் இருப்பே வாழ்வின் மையமாகிறது. அது அமிர்தா என் வாழ்வின் குறியீடாக மாறிப் போனாள். 

வெயில் பரவிக்கிடந்த சாலையில் மடிப்பு மடிப்பாக வரும் காற்று உணர்வில் தொற்றிக் கொண்டு நீள்கிறது. தாகம் மிகுதியான உப்பு வெயிலில் அதிக நாவறட்சியால் தவித்துக்கொண்டிருந்தேன். எங்கெங்கோ திருப்பி விடப்பட்ட சாலைகள் திசைதடுமாறுகின்றன. தாறுமாறாய் திரும்பிப் போகிறேன். பஸ் கண்ணாடியில் பட்டுப் பிரதிபலிக்கும் வெயில்.' கண்ணாடிகள் இளகி என் தலை நெளிகிறது. சாலையில் கொதிக்கும் தார்க்குமிழில் மூச்சுவிடும் சூரியன் கூடவே தொற்றிக்கொண்டு எல்லா உணர்வுப்பரப்பிலும் நகர்ந்து சென்றது. உள்ளே மடிக்கப்பட்ட அதிக உஷ்ணமான நாட்கள் அமிர்தாவின் அடையாளத்துடன் வெளியே விரிவடைந்து சாலை களாக மாறும். ஒவ்வொரு நாளின் மடிப்பிலும் அமிர்தா இறங்கி வருகிறாள் அவள் பயணத்துடன் தொடங்கிவிட்ட என் நாட்கள் ஒவ்வொன்றாய் சுருண்டு அவளிடம் மறையும். என் உணர்வுகள் உருகி இழையும் கம்பிச் சுருளில் அமிர்தா சுழல் வட்டமாகத் திரும்பித் திரும்பி பிளாஸ்டிக் குரங்காய் கம்பியில் அதிர்ந்தபடி கீழிறங்குவாள். அதிரும் பஸ் கம்பியைப் பிடித்துப் பார்க்கிறேன் பிளாஸ்டிக் குரங்கு ஓடிக்கொண்டிருந்தது. வானமும் பூமியும் இணைந்த தொடுவானின் நீலப்பு கை மூட்டமாக சாவு என்னை நோக்கிக் காத்திருக்கிறது. நான் அதற்கு அப்பால் செல்ல விரும்பவில்லை. அங்கு நீலத்தில் மூழ்கிய மலைத்தொடரில் தெரியும் சாவு, அமானுஷ்யமான ஈர்ப்புடன், என்னைக் கவருகிறது. தொட்டு விடும் தூரத்தில் கம்பிகளிடையே தெரியும் நீலம். உடனே திரும்பும் சாலையில் மரங்கள் அசைந்து உருண்டு பின்வாங்கும். இலையுதிர் கால மரங்களில் பற்றியிருந்த வெகுசில இலைகளும் ஆடுகின்றன. அவற்றின் காம்புகள் அடியில் துளிர்த்த இளம்பச்சையான இலையில் அமிர்தா ஒளிர்கிறாள், வாழ்வின் நம்பிக்கை போல. மாறி மாறித் திரும்பும் மரக்கிளைகள் சாலையோரங்களில் விதவிதமாக அண்ணாந்து ஏங்கும். - மரங்களில் எழுதப்பட்ட எண்கள் மாறி மாறிச் சுற்றிக் கிறுகிறுக்கிறது தலை. இப்போது மறுபடியும் எண்கள் கண்ணில்பட்டு தன்னிச்சையாய் எண்ணத் தொடங்கிவிட்டிருந்தேன். மரங்களே இல்லாத வேறு பக்கம் வெட்டவெளிக்குள் புகுந்து சென்றது சாலை. தொடுவானை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறேன். சாவு என்னை நோக்கித் திரும்பியிருக்கிறது. அதன் வசீகரமான புன்னகையை நெருங்க நெருங்க வாழ்வின் ஈரமான அலைகள் அமிர்தாவை நோக்கி இழுத்துக்கொண்டு போகின்றன என்னை . 

பஸ்ஸில் இருந்தவர்களின் மௌனம் அதிக வெற்றிடத்தை ஏற்படுத்தக்கூடியது. ஈயத்தைக் காய்ச்சும் வெயிலில் உருகி ஓடும் குண்டுகள் எங்கும் பரந்துகிடக்கின்றன. உடலும் வெளியும் உருகிய நிலையில் வெளியுடன் சேர்ந்துவிட்ட என் உருவத்தைத் தனியே அறுத்தெடுக்க முடியாமல் வெற்றிடத்தின் கண்ணாடித் தகடாய் நானும் நெளிந்து வளைந்து சாலைக்குள் மடிந்து மடிந்து ஊடுருவிப் போய்க்கொண்டிருந்தேன். என்பக்கத்தில் மஞ்சள் ஆரஞ்சைப் போன்ற சூரியன் என் தலையில் தட்டித் தட்டி உருண்டு குதித்துக்கொண்டிருக்கிறது. எரிவதில் ஏற்பட்ட அளவுமீறிய அழிவை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். திரும்பத் திரும்ப என் அருகாமையில் சுழலும் மாயப்பந்து முட்டி எழுந்து துள்ளுகிறது. அதில் ஏற்பட்ட எரிந்த வடுக்களில் என் முகம் கட்டங்கட்டமாய் வரிக்குதிரையின் முகமூடியானது. என் முகத்தை மூடிக்கொண்டு விரல் இடுக்கில் மஞ்சள் ஆரஞ்சைப் பார்த்தேன். அது அமிர்தா. அவள் எனக்காக தன் அருகில் வந்து தோளில் அமர்ந்து ஆழப் பதிகிறாள். அழிந்துகொண்டிருப்பதிலிருந்து விடுபட முடியவில்லை. அவளும் விடுவதாக இல்லை. வெற்றிடத்தில் தகிக்கும் உஷ்ணத்தில் அமிர்தா புகுந்து போய்க்கொண்டிருந்தாள். அழிவதும் இப்படியாகத்தான் இருக்குமா. அதிலிருந்து தப்ப முடியவில்லை. என் முகத்தில் முகமாகப் பொருந்திவிட்ட அமிர்தா சூரியனின் கோடு: களை என் முகத்தில் பதித்து சரியாகப் பொருந்திவிட்ட நிலை. தகடாக மாறிய இருமுகங்கள். அவளை விட்டு விலக முடியவில்லை . இவ்வுணர்வின் முழுப்பரப்பையும் தகிப்புடன் அணைத்துக்கொண்டிருக்கிறாள். அவளுக்கு என்ன வந்ததென்று தெரியவில்லை. முன்கோபத்தில் விலகி விலகி ஓடுகிறாள். மீண்டும் திரும்புகிறாள். எதிர்ப்பக்கம் செங்குத்தான தரைக்குக் கீழாக மலைகளுக்கு அப்பால் புகுந்து கொண்டு மாயாஜாலம் புரிகிறாள். எல்லாப் பக்கமும் பரவிய மஞ்சள் வெயிலில் அவள் உடல் கரைந்து என்னை மூழ்கடிக்கிறது. சாலை முழுவதையும் செவ்வொளியில் ஆழ்த்தும் அடிவானில் தகதக. வென்று கங்கு எரிந்து பழுத்து ஒளி வெள்ளமாய்ப் பாய்கிறது. அவளை ஊடுருவிச் செல்லும் பயணம். உலகின் எல்லாப் பொருட்களும் அவள் நிறமடைந்து மனிதர்களும் மரங்களும் வீடுகளும், தெருக்களும் அவள் நிறமாக மாறுகின்றார்கள். என் உள்ளிருந்து 'பாய்ந்து வெளிப்பட்ட அமிர்தா ஒளிவெள்ளமாக என் பாதை எங்கும் நிரம்புகிறாள். 

பஸ் முழுவதும் இவ்வொளி பாய நான் அவள் மாயசக்திக்குள் மறைந்துகொண்டிருக்கிறேன். அவள் என்மீது எரிந்த ஒவ்வொரு பொம்மையும் ஊர் ஆலமரத்தடியில் புதைந்து வைத்திருந்தவை, எழுந்துவருகின்றன. அவற்றுக்கு என்னைத் தெரியும். வெட்டுத் துணியில் நான் செய்து கொடுத்த பொம்மைகள் எட்டிப்பார்க்கின்றன. அடிவானில் இருந்து சிரிக்கின்றன. கால் கைகளை ஆட்டி கூவி அழைக்கின்றன. தலைகள் அசையும் அடிவானின் விந்தைப் பரப்பிலிருந்து அமிர்தா பொம்மைகளுடன் விளையாடிக்கொண்டிருக்கிறாள். அவள் என்னைப் பற்றி பொம்மைகளின் காதில் ரகஸியங்களை முணு முணுக்கிறாள். பொம்மைகள் தலையாட்டித் தலையாட்டிக் குதிக்கின்றன. சாலையில் இருந்த எல்லா மரங்களுக் கும் அந்த ரகஸியம் தெரிந்திருக்க வேண்டும். மரங்கள் கூட்டமாய் சேர்ந்து முணுமுணுக்கின்றன. இம்மரங்களுக்குள் எரியும் தீயில் - ஒருசில வெப்பப் பறவைகள் கிளைக்கு கிளை தாவித் தாவி என் தாபத்தை கொண்டு தீப்பற்ற வைத்து மரத்துக்கு மரம் தாவி ஓடுகின்றன. இலைகளில் எரியும் ஜூவாலையில் அணுவணுவாக இருள் பரவத் தொடங்கிய மாலை. மெல்ல மெல்ல அடிவானம் கருந்து மங்கலாகும். எல்லாவற்றையும் பற்றிக்கொண்ட அமிர்தா மயக்க மூட்டப்பட்ட தடங்களில் அடிவானத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தாள். அவள் தோளில் கைபோட்டு ஒருவரை ஒருவர் அணைவாகத் தாங்கி சூரிய அஸ்த்தமனத்தின் நித்தியத்துவத்தின் மீது நடந்து போய்க்கொண்டிருந்தோம். மறையும் சூரிய வட்டத்திலிருந்து வெளிப்பட்ட பறவைக் கூட்டம் சுழிக்காற்றாய் சுழன்று சப்தத்தின் சுழற்சியாக மறையும். எல்லாம் மங்கலாகிப்போய் விட்டிருந்தது. மயக்கத்தில் அவள் அருகில் தோளில் முகம் பகைத்து சாய்ந்திருக்கிறேன். என் கைத்தாங்களில் சரிந்த அவள் தோள்கள் வசீகர உணர்வால் பிணைக்கப்பட்டிருந்தது. என் மறதியின் எல்லாப் பக்கமும் ஒளி வெள்ளமாய் ஓடி மறைகிறாள். அடி வானைத் துளைத்துக் கொண்டு இருட்டுப் பூனை என்னைத் தொடுவதற்கு ஊர்ந்து வந்துகொண்டிருந்தது. மயக்கமடைந்த சூழலைத் திரும்பிப் பார்க்கிறேன். அருகில் இருந்த அமிர்தா காணாமல் - போய்விட்டாள். என் உதடுகள் தவிப்புடன் அமிர்தா...அமிர்தா... என்று அசைந்துகொண்டிருக்கின்றன சத்தமில்லாமல். 

அங்கு வந்து திரும்பியதுவரை அவளிடம் எதையும் வெளிப்படுத்த முடியவில்லை. நேரில் சந்தித்துக்கொண்ட விநாடியில் உயிர்ப் படைந்த ஒன்று கூடவே வந்துகொண்டிருந்தது. உருகிக் கரையும் உயிரை திருவாரூர் தெப்பத்தில் விட்டு விட்டு அப்படியே திரும்பி விட்டேன். எதற்கும் அவள் மௌனமான பார்வைதான் அடிப்படையாகிறது. அமிர்தா எப்போதும் மௌனத்தைப் பரப்பியபடி இருந்தாள். அவள்கூட தோளில் சாய்ந்து திருவாரூர் ஆற்று மணலில் போய்க்கொண்டிருந்தது. தூரங்களில் ஆற்றின் மறுகரையில் அரளிப்பான மரங்கள் அசைந்து கொண்டிருந்தன. ஆற்றுப் பாலத்தில் வாகனங்கள் அங்குமிங்குமாக போய்வந்து கொண்டிருந்தது. பாலத்தில் சிலர் அமர்ந்திருக்கிறார்கள். சலங்கை கட்டிய காளைகள் வண்டியில் பாரம் ஏற்றிச் செல்லும். கூண்டு வண்டிகள் மணலில் இறங்கி நகரும் மணலின் சரசரத்த ஓசை. வண்டிக்கடியில் எரியும் ஹரிக்கேன் லாந்தரில் மாட்டில் நிழல் பெரிதாகி சக்கரங்களின் நிழல்களும் எதிர்ப்பக்கம் விழுந்துகிடந்தன. வண்டியோடு செல்லும் தலப்பாகை கட்டிய கிராமவாசிகளின் பேச்சு தூரத்தில் தெளிவில்லாமல் கேட்டுக்கொண்டிருந்தது. அவர்கள் கிராமத்தை நோக்கித் திரும்பிப் போகிறார்கள். மணல் கூட்டி கோபுரம் அமைத்து அதைச் சுற்றி மணல் கோட்டைகட்டி பாதைகள் அமைத்துக்கொண்டிருந்தாள் அமிர்தா. நானும் அவளும் நில ஒளியின் லோசான கசிவில் எங்கள் மணல் கோபுரத்துக்குள்ளிருந்து ஒவ்வொரு மணலாக எடுத்து அடுக்கிக்கொண்டிருந்தோம். விரல்கள் மட்டுமே பேசிக்கொள்ளும். மணலைத் தொட்டதும் எல்லா மணலும் விந்தைப்பொருளாக மாறிவிட்டிருந்தது. அவள் விரல்களால் வரைந்த யானை, சிங்கம், மான், பூனை, நாயின் சித்திரங்களை நான் பார்த்துச் சிரிக்கிறேன். எல்லாவற்றையும் அப்படி அப்படியே விட்டுவிட்டு தண்ணீர் ஓடும் சிறு ஓடையில் கையலம்பி நீருடன் நடந்து போகிறோம். சரிந்து சரிந்து ஒருவர்மீது ஒருவர் சாய்ந்து நடந்துவருகிறோம். பாலத்தில் இருந்த உருவங்கள் போய்விட்டிருந்தன. அகல வாய் திறந்த பாலத்தின் அடியில் யாரோ போகிறார்கள். குறுத்து மணலில் நடப்பதற்கு சுகமாக இருந்தது. அதில் பதிந்த எங்கள் தடத்தை நாங்கள் திரும்பிப் பார்க்கவில்லை. 

அவள் வீடு இருந்த புஸ்பவனத் தெருவில் எல்லா விளக்குகளும் மங்கி எரிகின்றன. திருணைகளில் சமைந்த பெரியவர்கள் எங்கோ ஆழத்தில் பேசிக்கொண்டிருந்தார்கள். முன் வராண்டாவில் இருந்து அவளைக் கூப்பிட்டேன். 'அமிர்தா' அவள் புகைக்காரை படிந்த வீட்டுக்குள்ளிருந்து கரைந்து பாழ்விழுந்த முகத்துடன் திரும்பிப் பார்த்தாள். கன்ன எலும்புகள் துருத்த கைகால்கள் மெலிந்து தீணமான குரலில் ' நீயா' ஏன் வந்தாய் என்ற பார்வையை வீசி வெளியே விரட்டினாள். உள்கூடத்தில் வானெளியில் பூஜை அறையில் யாருமே இல்லை. ஆனால் எல்லோரும் இருப்பதுபோல அவ்வீட்டின் அக இருளில் அவர்கள் முணுமுணுத்துக் கொண்டிருந் தார்கள். அமிர்தாவைப் பார்த்து எத்தனையோ காலமாகிவிட்டது. அதே தெருவில் அதிக வெளிச்சமில்லாத விளக்குகள் திரும்பி என் முகத்தைப் பார்த்துவிட்டு வழக்கமான உறக்கத்தில் ஆழ்ந்து விட்டிருந்தன. 

திருவாரூரில் வேறு வேறு தெருக்களில் குடியிருந்தோம். ஆனால் அமிர்தாவின் வீடு எவ்வளவோ காலப் பழக்கத்திற்குப்பின்னும் பூந்தோட்டத்திற்குப் போகும் பாதையில் இருந்தது. அவள் வீட்டுச் சுவர்கள் க்ஷணதசையடைந்துவிட்டன. காரை பெயர்ந்துவிட்டது. ஏனோ பழகிய இடத்தில் திரிந்த ஆன்மா அதைவிட்டு வெளி' யேறாது போலும். ஆற்றுக்குப் போகும் பாதை அவள் வீட்டருகில் இருந்தது. அவள் தெருவே மணல் நிரம்பியது. ஒவ்வொரு காலமும் விளையாட்டுகள் தோன்றி மறையும் அங்கு. எங்கள் முன் கிடந்த ஒவ்வொரு சிறு துகளையும் வைத்து விளையாடிக்கொண்டிருந்தோம். அதே ஊரில் மடவர் வளாகத் தெருவில் குடியிருந்தபோது வெகுதூரம் நடந்துவந்து அமிர்தாவுடன் விளையாடிக் கொண்டிருந்தேன். அந்தத் தெருவின் விநோதங்களே எங்கள் ஒவ்வொருவரையும் தொற்றிக்கொண்டிருந்தது. நடமாடித் திரியும் மனிதர்களும், குழந்தைகளும் பூனைகள், நாய்கள், காகங்கள் இவற்றின் சந்தடிகள் கேட்டுக்கொண்டிருக்கும். வீடுகளுக்குமேல் விரிந்த வானத்திலிருந்து நட்சத்திரத் தூசு கொட்டிக்கொண்டிருக்கும். அவள் தன் சாம்பல் நிற கவுனைப் பிழியும் போதெல்லாம் நட்சந்திரத் தூசுகள் உதிர்ந்தன. ஒரு விட்டிலாக முடிவதிலிருந்து திருவாரூரின் எந்த உருவாகவும் அவளால் மாறிவிட முடிந்தது. பாயும் விட்டிலின் பின்னால் ஓடினோம். அவளோடுகூட விளையாட. வந்த சிறுவர்களும் சிறுமிகளும் வேறு வேறு தெருக்களில் தோன்றி வந்தார்கள். அவர்கள் தெருக்களில் இருந்து கொண்டுவந்த அதிசயங்களையே பகிர்ந்து கொண்டோம். இருட்டுவேக வேகமாக வந்து விளையாட்டிடையே புகுந்துகொண்டு கூச்சலிட்டது. அந்தத் தெருக்காரர்கள் பிள்ளைகளைத் தேடிக்கொண்டு வந்துவிட்டார்கள். பிள்ளைகளைக் கண்டமாத்திரத்தில் குதூகலமடைந்தார்கள். எல்லோரும் விளையாட்டை மறந்து வீடு திரும்பிப் போன பின் நாங்கள் இருவர் மட்டுமே அந்த இருட்டு பேசிக்கொண்டிருந்த அதிசயமான விளையாட்டைத் தொடர்ந்தோம். இருட்டின் பின்னே மறைந்து மறைந்து ஓடினோம். உச்சி வானில் கை நீட்டித் தொடும் தூரத்தில் முளைத்த எங்களுக்கான சிறிய சிறிய வெளிச்சப் புள்ளிகளை விரல்களால் தொட்டபடி அதிசயமானோம். ஒருவரை ஒருவர் கரம்பற்றி குறுமணலில் சரிந்துசரிந்து நடந்துபோகிறோம். இரவு கடந்து கொண்டிருக்கிறது. அவள் வீட்டு வாசலில் அசையும் உருவத்தைக் கண்டு பயந்து ஓடுகிறாள். என்வீடு இருக்கும் தொலைவை நோக்கித் திரும்பிப் போகிறேன். பல மாலைகளுக்குப் பின்வந்த ஒரு மாலையில் ஊரைவிட்டு மாற்றிப் போய்க்கொண்டிருக்கிறோம். நாங்கள் குடியிருந்த வேறு வேறு ஊர்களின் தெருக்களில் இன்றும் இருப்பதாகவே தோன்றிய பெட்டிக்கடைகளில் நான் வாங்கிய கலர்படங்கள், பொம்மைகள், பூதக்கண்ணாடிகள் எல்லாவற்றிலும் அமிர்தா என்னைப் பிரிந்த சங்கடம் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். ஊர் ஊராக மாறிப் போன இடத்தில் அந்த வீடுகள் சொன்ன சேதியிலிருந்து அவளுக்காக நான் எழுதிய கடிதம் முதல் வரியோடு நின்றுவிட்டது. முதல் எழுத்தில் இறங்கிய இருட்டுத் தண்ணீருக்குள் போய்க்கொண்டே இருக்கிறேன். அதற்குள் இருப்பது அவள் தான் என்று படுகிறது. தண்ணீரான அவள் உருவம் இறங்க இறங்க இழுத்துக்கொண்டிருக்கிறது. மூழ்கிக்கொண்டிருக்கிறபோது அவள் எதையும் தரவில்லை. நானும் கேட்கவில்லை. அடி மட்டத்தில் தீக்குமிழாக மாறி சுழன்றுகொண்டிருக்கிறாள். ஒவ்வொரு தாள் மடிப்பிலும் ஒவ்வொரு முதல்வரி தனித்தனி இடங்களிலிருந்து எதிரும்புதிருமாகத் துவங்கி அறுபடுகின்றன. ஒன்றை யொன்று சந்தித்துக்கொள்வதில்லை. விலகி விலகி விழும் முதல் வரிகள் அடங்கிய கடிதங்கள் தாறுமாறாய் சிதறிக் கிடக்கும். என் வீடு. எந்தக் கடிதத்தையும் அப்புறப்படுத்த முடியவில்லை . ஒவ்வொரு கடிதத்தின் முதல் வார்த்தையில் இறங்கும் இருட்டுத், தண்ணீர் சலனமடையும். எந்த எழுத்தைத் தொட்டாலும் தண்ணீ ராக மாறிவிடக் கூடிய உருமாற்றம். நான் எழுதிய எழுதாத வார்த்தைகள் குவிந்த அச்சுப் பிரதிகளும் கைப்பிரதிகளும் தொட்டதும் தண்ணீராக உருமாறுகின்றன. அவற்றைத் திரும்பவும் வார்த்தைகளாக மாற்ற; தண்ணீரால் வார்த்தைகளுக்குள் அடங்க முடியவில்லை. சதாவும் சலனமடைந்தபடியே சேர்ந்து சேர்ந்து ஒன்றாகும் வார்த்தைகளை என் விரல்கள் வேக வேகமாகத் தொட்'டுக்கொண்டே நகர்கின்றன. உணர்வில் மட்டுமே கரையும் அவளும் அவள் பெயரும் திருவாரூரும் வார்த்தையென்றால் நான் அவளுக்குத் தெரியாமல் அவள் நினைவின் உடலைத் தொட்டுவிட்டிருந்தேன். அவளும் அவள் ஊரும் தெருவும் கோவிலும் தெப்பத்தின் ஆழத்தில் இருட்டுத் தண்ணீராய் அசைந்து கொண்டிருக்கின்றன. தெப்பத்தில் மறைவது அவள் தான் என்று படுகிறது. அவள் நீர் உருவம் இறங்க இறங்க இழுத்துக்கொண்டிருக்கிறது. அவளுக்குத் தெரியாமல் தொடரும் இந்த உருமாற்றதில் அடுத்த எட்டை வெறுமையில்தான் எடுத்து வைக்கிறேன். தெப்பத்தில் நான் மூழ்க மூழ்க அவள் இழுத்துக்கொண்டே போகிறாள். ஆழமான தெப்பத்தின் அடிக்குள் தரையே இல்லை. ஆழத்துக்குள் ஆழமாகப் புதைந்து கொண்டே இருக்கிறேன். தெப்பத்தின் அடியில் வரும் மறுபக்கத்தில் தெப்பமொன்று இருந்தது, நான் தலைகீழாகவே நடந்து போகிறேன் அங்கு. தெப்பத்தைச் சுற்றிய தெருக்களில் எங்களோடு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களும் சிறுமிகளும் திருவாரூர் ஜட்காவுக்குப் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறோம். தலைகீழாக ஓடும் ஜட்காவில் குதிரையும் தலைகீழான சாலையில் தலைகீழான கால்களை மாற்றி மாற்றி ஓடுகிறது. எட்டிப் பார்க்க இருந்த ஆழமான வானத்தில் அப்போதுதான் தோன்றிய ஒற்றை நட்சத்திரத்தின் ஓரங்களில் அலைகள் கிளம்பின. எட்டிப் பார்க்கவும் வானம் அலையலையாக மேகங்கள்கூட மடிந்து மடிந்து சிதைத்தன. ஒவ்வொரு நட்சத்திரமாக அசைந்து நீர்த்திவலையானது. உடனே நாங்கள் நட்சத்திரத் திவலைகளை கையில் ஏந்தி விளையாடினோம். அதற்குள் முகம் பார்த்துச் சிரிக்கிறாள் அமிர்தா. கொட்டிய நீர்த்துளிகள் அந்தரத்தில் தொங்குகின்றன. அலை தனித்தனியே அங்கங்கே தங்கி நிற்கின்றன. வாவென்றால் வரமறுக்கும் நட்சத்திரத் துளிகள் சின்னச் சின்ன விரல் விளிம்பில் பட்டு ஒளிர்கிறது.

அவளுக்கிருந்த சினேகிதிகள் எல்லாம் காணாமல் போன தெருவில் திரும்பித் திரும்பி நடந்துபோகிறேன். தெருவைக் கடந்துவிட்டால் மரங்கள் வெட்டப்பட்ட பார்க் வரும். துருப்பிடித்த அதன் கம்பிக் கதவுகள் அகலத் திறத்து வெறிச்சோடியிருந்தது. மரங்கள் இருந்த கூட்டத்தில் அவள் மறைந்து போயிருந்தாள். திரும்பவும் பார்க்கில் தேடிய அவள் சுவடு ஒவ்வொரு செடிகளின் அழிந்த உயிரோட்டத்தில் சுருண்ட இலைகளில் தென்பட்டது. பூச்செடிகள் அரிக்கப்பட்டு விட்டிருந்தன. காய்ந்த கோரைகளின் அடித்தண்டில் உயிரின் கரு முளைகள் அதிர்ந்தடி இருக்கும். தண்ணீரின்றிக் காய்ந்துபோன 
வட்டத்தொட்டிகள் நடுவில் பேசாதிருந்தன. குடம் ஏந்திய பெண் சிலைகள். குடத்திலிருந்து சாய்ந்த நீர் கொட்டிக்கொண்டிருந்தது. நீரின் குளிர்ச்சி அதிக வெப்பமடைந்து குமிழ்விட்டு வெகு ஆழத்தில் சலனமடையும். இப்போது சாய்ந்த குடங்கள் வெறுமையைக் கொட்டிக்கொண்டிருந்தன. என்னால் இவ்வுணர்விலிருந்து தப்ப முடியவில்லை. பார்க்கின் வெறிச்சோட்டம் என்னைப் பற்றிக் கொண்டு உடல் முழுவதும் பரவி வெயிலோடு உருகி அழிகிறேன். ஒரு குமிழாக இருட்டு நீரில் மூழ்கிக் கொண்டிருந்தபோது ஏற்கெனவே அவளும் அதில் எத்தனையோ காலத்திற்குமுன் அங்கு : காத்துக்கொண்டிருக்கிறாள். நானும் அவளும் திருவாரூருக்குள் திரிந்த அந்த நாளை ஒவ்வொரு மாலைநேரத்தில் நடந்த ஏதேச்சை யான சம்பவங்களை வெற்று வெளிக்கு எடுத்துச் செல்கிறேன். இப்போது திருவாரூர் வீதிகள் என்னுடன் இல்லை. அவள் அந்த கோவில் கல்தூண்கள் ஓரம் நடந்து போகிறாள். நாங்கள் சந்தித்துக்கொண்ட முதல் காதலின் தடம் அங்கிருப்பதை நான் மறந்து விட்டேன். ஆயிரங்கால் மண்டபம் பூர்த்தியாகாமல் மூளித் தூண்கள் பளுப்படைந்து அண்ணாந்து நிற்கின்றன. தூணில் ஒளிந்து ஒளிந்து பின்பக்கமாக வந்து திடீரென்று கூவும் அந்தச் சுட்டியின் வேகம் கால்களில் தடம் தடமாக கோவில் வெளிப்பிரகாரக் கற்களுக்கிடையில் பதிந்து கிடந்தது. தாறுமாறாய் களைந்து கிடந்த பழங்காலக் கற்களில் அந்த நாட்கள் இருந்து கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு சிலைகளுக்கும் அவளைத் தெரியும். சிரித்து மகிழ்ந்த கிளிகள் இன்னும் அழைத்தபடி இருக்கின்றன. பெரிய பெரிய மதில்சுவர்கள் சப்தங்களை உள்வாங்கி மௌனமாக இருக்கிறது. தூண்களைக் கடந்து நடந்து போகிறேன். நான் அவளைத்தேடி வந்தபோது அவள் வீட்டிலுள்ள ஒவ்வொருவரும் என்னை தெரிந்து என் அடையாளம் கண்களில் படர சிரித்தபடி அழைத்து அருகில் அமரச் செய்தார்கள். வயோதிகத் தாயாரும் தகப்பனாரும் நரம்பு துருத்திய கைகளில் என்னைத் தடவிப் பார்த்து விக்கினார்கள். அவள் உள் கூடத்தில் இருந்து வெளிப் பட்டாள். அவளைப் பார்த்ததும் எங்கில்லாத மெலிவு தோன்றி திரும்பிப் பார்த்தேன். என்னைக் கூட்டிக் கொண்டு மரங்கள் வெட்டப்பட்ட பார்க்கில் இருந்த தூங்கும் கட்டையில் அமர வைத்துவிட்டு பார்க்கில் இருந்த தீபம் ஏந்திய வெண்சிலைகளைக்காட்டினாள். ஒரு அமெச்சூர் சிற்பியின் கைவண்ணத்தில் உருவான ஆங்கிலேயர் காலசிலைகள் அவை. தூண்களில் இருந்த கண்ணாடியும் மிக மெல்லிய வெளிச்சத்தில் கசிந்தது. தூண்களிலிருந்த சிங்கங்களுக்கு ஈயபெயிண்ட் அடித்திருந்தது. 
 பார்க்கை விளையாட்டு மைதானமாக்கியிருந்த சிறுவர்கள் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். துருப் பிடித்த இரும்பு கேட்டுக்கு அந்தப்பக்கம் திருவாரூர் ஜட்கா, மோட்டார்கள், சைக்கிள் ஒளிகள் அங்கிங்கும் ஓடிக் கொண்டிருந்தன. நேரத்தை அறிவித்து வந்த பார்க் சங்கு பழைய பில்லரில் வெகு காலத்திற்கு முன்பிருந்து செயல்படவில்லை. அதன் தொண்டைக்குள் சிக்கிய விழுங்க முடியாத காலம் அப்படியே நின்று விட்டிருந்தது. வெறிச்சோடிய பார்க்கின் நடுமையத்தில் வட்டமான திறந்த வெளிக் கூடாரம். அதில் உள்ளடங்கிய பலகை களில் பலவும் சிதைந்து விட்டன. வட்டக் குடையைத் தாங்கிய கம்பிகள் இற்று அசைந்துக் கொண்டிருந்தன. அதில் சிலர் பல காலமாகத் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சில காகங்கள் எப்போதும் தூங்குகிறவர்கள் மீது எச்சமிட்டுப் பறந்து குடையில் அமர்ந்து தனித்த கார்வையுடன் கத்தியது. காகம் தலையைச் சாய்த்து எங்களைப் பார்த்து சிறகைத் தட்டிக் கொண்டது. செயற்கையாக உருவாக்கப்பட்ட சிமெண்ட் பொமமைகளில்குத்துக் குத்தாய் கம்பிகள் எட்டிப்பார்த்தன. அவற்றிற்கும் ஈயபெயிண்ட் அடித்திருந்தது. மரங்கள் வெட்டப்பட்ட நாளிலிருந்து பார்க் ரேடியோவில் ஒலிபெருக்கி குழாய் துக்கத்தில் கரகரத்துப் பாடிக் கொண்டிருந்தது. 

வெட்டிக் கிடந்த மரக்கடையில் அமர்ந்து பார்க் வெறுமை யானதைப் பார்த்துக் கொண்டிருந்தோம். வழக்கமான முதியவர்கள் வட்டக் குடைக்குள் இருந்த சிமெண்ட் சாய்மானங்களில் அமர்ந்து முதுமையடைந்த பார்க்குடன் சேர்ந்து போயினர். சிறுவர்களின் கூச்சல் பந்து வீச்சுடன் அதிர்ந்து கொண்டிருந் தது. அவளுக்கும் எனக்குமான பேச்சு வெகுதூரத்தில் இருந்ததால் தனிமை அதிகரித்தது. சிறுவர்களின் கூச்சல் எங்களுக் கிடையான வெற்றிடத்தை நிரப்பியது. நாவறட்சியாக இருந் தது. வார்த்தைகள் உலர்ந்து விட்டிருந்தன. 

''எப்போ திருப்பி வருவீர்கள் உங்கள் பேச்சை நம்ப முடிய வில்லை '' 

"இல்லை அமிர் எப்படியும் திரும்பி வருவேன். போய் வரத்தான் வேண்டும். சுற்றிக் கொண்டிருப்பது ஒரு பக்கம் குற்ற உணர்வாக இருக்கிறது." 

"பிறகேன் வந்தீர்கள்" 
 "?"
'... 
நேரமாயிருச்சி நான் வீட்டுக்குப் போனும் வேலை கிடக்கு'. 

இரு போகலாம்'' 

பார்க்கை மூடிவிடுவார்கள். இதற்குமேல் இருக்க வேண்டாம்"

 *அவசரப்படாதே அமிர்'' 

"எனக்கு கஷ்டமாக இருக்கு" 

''என்ன செய்ய முடியும் சொல்லு அமிர்" - 

“ஒண்ணும் செய்ய வேண்டாம். பேசாமல் ஊருக்குப் போங்கள். நீங்கள் திரும்பி வரவேண்டாம்.'' 

பேசும்போது பார்க் பெஞ்சுகளையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தாள். ஆள் மாற்றி ஆள் பெஞ்சை காத்துக்கொண்டிருந்தார்கள். இருள ஆரம்பித்த பின்னும் சிறுவர்கள் பந்தைக் குறி பார்த்து பேட் செய்து கொண்டிருக்கிறார்கள். வெகுநேரம் பேசாமல் அமர்ந்திருந்தோம். வார்த்தைகளுக்கு எந்த அர்த்தமும் இருப்பதில்லை. பேசப்பேச மோதல்தான் வளர்ந்தது. இடைவெளியில் மௌனம் அதிக தீவிரமடைந்து விட்டிருந்தது. சிறுவர்களின் கூப்பாடு உயிர்ப்படைந்து மெல்ல மெல்ல வெற்றிடங்களை நிரப்பிக் கொண்டிருந்தது. வார்த்தைகள் அற்றுப்போன மௌனத்துடன் என்னை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள் அமிர்தா. அதற்கு என்ன அர்த்தமென்று விலங்கவில்லை. ஒரே குழப்பமாக இருக்கிறது. நாங்கள் இருவரும் அமர்ந்திருந்த மரக்கட்டைக்குள்ளிருந்த மர வண்டு தன் கூட்டை விட்டு வெளியேறி எங்களை எதிரியாக நினைத்து மோதத் தொடங்கியது. தன் புராதன வீட்டை அழிக்க வந்தவர்கள் என்று இரைச்சலுடன் சுற்றிச் சுற்றி அவள் மௌனத்தை வெட்டிக் கொண்டிருந்தது. நாங்கள் எழுந்து அந்தப் பக்கம் இருந்த பழைய நடைபாதையில் சாய்ந்து சாய்ந்து நடந்து கொண்டிருந்தோம். பார்க் விளக்குகள் கசிந்த ஒளியில் நிரந்தரமான பார்க் மனிதர்கள் நிழலுருவங்களாக அங்கிங்கும் நிம்மதி யின்றி அலைந்து கொண்டிருக்கிறார்கள். விளக்கேற்றப்பட்ட திருவாரூர் ஜட்கா சத்தத்துடன் ஓடிக் கொண்டிருக்கிறது. தெரு விளக்குகளில் பூச்சிகள் சுற்றி விளையாடத் தொடங்கியிருந்தன. பாதசாரிகள் அதிக அழுப்புடன் வீடு திரும்பிக் கொண்டிருந் தார்கள். தெப்பத்து பிள்ளையார் கோயிலில் விளக்கேற்றும் நேரம். அவள் மட்டும் தனியாக அங்கு போய்க் கொண்டிருந்தாள். 
-
இருட்டுத் தண்ணீருக்குள் அசைந்து கொண்டே இருக்கும் சிலையை வெகுநேரம் கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்த போது அவளை திருவாரூர் தெப்பத்திலிருந்து மீட்க முடிய வில்லை. அங்கிருந்து மடங்கிச் செல்லும் தெருக்களில் திருவாரூர் ஜட்காவுக்குப் பின்னால் அடுத்த காலத்திற்கான குழந்தைகள் கூச்சலிட்டபடி ஓடிக் கொண்டிருந்தார்கள். எனக்கு தாகமாக இருந்தது. கடையில் வாங்கிக் குடித்த தண்ணீரில் தாகம் அடங்க வில்லை. தொண்டைக் கடியில் வறட்சியாக இருந்தது. பஸ்ஸில் ஏறவும் லேசான காற்றும் இருளும் சில காட்சிகளும் கனவு கலந்த மயக்கத்தில் தென்பட்டன. பக்கத்தில் அமர்ந்திருப்பவர் மீது புரண்டு விழுந்தேன். அவர் என்னைக் கண்டு எரிச்சலடைந்தபடி விலகி அமர்ந்தார். அவளுக்கு எழுதிய காகிதங்கள் தாறுமாறாய் சிதறிக் கிடக்கும் என் அறை. என்னோடு கொண்டு செல்லும் எத்தனையோ காகிதக் கற்றைகளை புரட்டிப் புரட்டி அதில் படிந்த பழுப்பு நிறத்தையும் எழுத்தின் மீது ஒட்டிய சாம்பலையும் துடைத்துக்கொண்டிருந்தேன். என் அறை மூலையில் மரஸ்டேண்டில் வைக்கப்பட்ட மெழுகு திரியில் தனியே மிதக்கும் சுடரில் புகுந்து அசைவது அவள் தானா. என் காகிதங்களை தலைகீழாகப் பிடித்து எனது எல்லா வரிகளையும் எரித்துக் கொண்டிருக்கிறேன். விரல் மடிப்பில் வந்த எழுத்துகள் வித விதமான நிறக்கோடுகளாக எரிந்து சுடரில் ஒடுங்கி மறைகிறாள். என் கைப்பிரதியில் படியவிட்ட மெழுகு திரியின் சுடர் படபடத்துப் பற்றிக் கொண்டு காகிதம் முழுவதும் பரவிய தீயில் எழுத்துக்கள் உருகி தண்ணீராக உருமாற்றமடைத்தன. எரியும் தீயிடமிருந்து தண்ணீரை எடுக்க முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக தீயின் வெம்மையால் காகிதம் கருகாமல் உலர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வார்த்தையும் காகிதத்தை விட்டு மறைகின்றன. வெறும் வெள்ளைக் காகிதங்கள் என்று விட்டு விட முடிகிறதா . அவற்றில் அனுபவத்தின் சாயல்கள் படிந்து வார்த்தைகளே மறைந்துவிட்ட வெண்மை. வெறுமையான ஒரு மௌனம். என் அடுத்த எட்டை வெறுமையில் தான் எடுத்து வைக்கிறேன்.