தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Saturday, August 13, 2016

துரோகம் - அசோகமித்திரன்

துரோகம் - அசோகமித்திரன்

google-ocr

https://ia600306.us.archive.org/33/items/orr-12664_Drogam/orr-12664_Drogam.pdf


அலமாரி போன்றிருந்த அந்தக் கடிகாரத்தின் மணியோசை பலஹீனமாக ஒலித்தது; "எட்டரை ஆயிடுத்தேப்பா" என்று மங்களம் அப்பாவின் அங்கவஸ்திரத்தைப் பிடித்திழுத்தாள். "சித்தே இரு. சித்தே இரு. இதோ வந்துடுவா” என்று அப்பா சொன்னார். பழங் காலப்பங்களாவின் பழங்கால ஹால். ஆனால் அங்கிருந்த பழங்கால மேஜை சோபா நாற்காலிகளெல்லாம் பளபளவென்று மின்னின. ஒருவர் படுத்துப் புரண்டபடியே ஏறிவிடலாம் என்று தோன்றக் கூடிய அகலமான மாடிப்படி, கறுப்பு-வெளுப்பு சலவைக்கல் தரைமீது வெவ்வேறிடத்தில் விரிக்கப்பட்டிருந்த ரத்தினக் கம்பளங் கள் தேய்மானம் தெரிய நிறம் வெளுத்திருந்தாலும் இன்னும் அழகாகவும் செல்வச் செழிப்பு காட்டுவதாகவும்தான் இருந்தன. 

மங்களம் தாவணியை இழுத்துப் பாவாடைக் கிழிசலை மறைத்துக் கொண்டாள். அது பள்ளிக்கூடச் சீருடை. கையில் புத்தகங்களையும் எடுத்து வந்திருந்தால் நேராகப் பள்ளிக்கூடத்திற்கே போய்விடலாம். ஆனால் இப்போது வீட்டுக்குப் போய்த்தான் ஆகவேண்டும். இங்கிருந்து இப்போது கிளம்பினால் கூட ஒரே ஒட்டமாக வீடு சென்று புத்தகப் பையை எடுத்துக் கொண்டு பள்ளிக்கூடம் போகத்தான் நேரம் இருக்கும். அப்படியும் பிரார்த்தனை தொடங்கிவிடும். o 

மங்களத்துக்குப் பசிக்கவும் செய்தது. யாரைப் பார்க்க அப்பா ஏன் என்னை இங்கு இழுத்து வந்திருக்கிறார்? இதனால் காலைப் படிப்பு போயிற்று. அம்மாவுக்கு காலை நேர நெருக்கடியில் சிறிதா வது உதவியாயிருக்கலாம், அதுவும் போயிற்று. அவர்கள் வந்து காத்திருந்த வீட்டைப் பற்றிக் குறிப்பாக அவளேதும் நினைக்க முடியவில்லை. பெரிய வீடு, யாரோ பணக்காரர்கள் வசிக்கும் இடம். 

அந்த ஹாலில் நிறைய வாயிற்படிகள். ஒரு வாயிற்படியி லிருந்து நுழைந்து இன்னொன்று வழியாக வேலைக்காரர்கள்

________________
138 பறவை வேட்டை | துரோகம்
அவ்வப்போது வந்து போய்க் கொண்டிருந்தார்கள். ஒரு சாஸ்திரி கள் கூட ஒருமுறை தோன்றினார். அவர் அந்த வீட்டில் தினசரி பூஜை செய்வதற்கு நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். அவர் அப்பாவைப் பார்த்து ஒரு கணம் கண்கொட்டாமல் பார்த்தார். ஒருவரையொருவர் தெரியாது என்றாலும் வேறு எவ்வளவோ விஷயங்கள் அந்த ஒரு கணத்தில் இருவருக்கும் புலப்பட்டி ருக்கும். - 

அப்பா ஒரு நிரந்தரமான புன்னகைத் தோற்றத்தை முகத்தில் வரவழைத்துக் கொண்டிருந்தார். எந்த நிமிடத்தில் எந்தத் திசையில் அவர் எதிர்பார்ப்பவர் வந்தாலும் அந்தப் புன்னகை ஒரு சாதகமான சந்திப்பை ஏற்படுத்தித் தரக்கூடும். ஏனோ இந்தப் புன்னகை யும் சிரிப்பும் வீட்டில் காணுவதில்லை.
மங்களத்துக்குப் பசி தாங்க முடியாது போலிருந்தது. நேற்று இரவுச் சாப்பாடு பெயருக்குத்தான். தரித்திரனுக்குப் பசிக்கக் கேட்பானேன் என்று அப்பா சொல்லுவார். காலையில் வைத்த குழம்பு ரசம் ஏதாவது இரவு வேளையில் மீதமிருந்தால்தான் வாய்க்கு வித்தியாசமாகக் கிடைக்கும். இல்லாது போனால் மோர் சாதந்தான். சாப்பிடும் போது வயிறு நிரம்பி வழிவது போல மோர்சாதம் தோன்ற வைக்கும். அரை மணிக்கெல்லாம் பசிக்கத் தொடங்கி விடும். காலங்கார்த்தாலேயே அப்பாவோடு கிளம்பி இந்த வீட்டுக்கு வந்தாயிற்று. எப்போது திரும்பப் போகிறோம் என்று தெரியவில்லை. காலைச் சாப்பாடு இல்லை என்று மட்டும் தெரிந்துவிட்டது. 

அப்பாவின் முகம்கூடச் சிறிது வாட்டம் காணத் தொடங்கி விட்டது. மங்களம் கடிகாரத்தைப் பார்த்தாள். கிட்டத்தட்ட ஆளுயரம் இருந்தது. முகம் மாதிரி ஒரு வட்டம், அதற்குள் மணி காட்டும் கைகள். மிகுதிப்பாகம் முழுதும் நீண்ட பெண்டுலம். அது ஆடுவது ஒரு கழைக் கூத்தாடி கயிற்றைப் பிடித்துத் தலை கீழாகத் தொங்கி ஆட்டம் காண்பிப்பது போலிருந்தது. பொதுவாக இந்த மாதிரி ஆட்டங்களுக்குக் கழைக் கூத்தாடிகள் அவர்களே ஆடுவதில்லை. ஒரு முழ உயரம்கூட வளராத ஒரு பெண் குழந்தை யைத்தான் இப்படி ஆட வைப்பார்கள். பரட்டைத் தலையும் அழுக்கு கவுனும் ஊசலாடக் குழந்தை கயிற்றைப் பிடித்துக் கொண்டு தொங்கும். 

எட்டே முக்காலும் ஆகிவிட்டது. இப்போது இங்கிருந்து நேராகப் பள்ளிக்கூடம் செல்வதற்குத்தான் நேரம் இருந்தது. ஒருநாள் புத்தகங்கள் கொண்டு போகாததனால் பாதகமில்லை.
________________
அசோகமித்திரன் 139
ஒரு மாதிரி சமாளித்து விடலாம். ஆனால் நோட்டுப் புத்தகம் இல்லாமல் அது சாத்தியமில்லை. 

"அப்பா, ரொம்ப நாழியாறதுப்பா.” "சித்தே இரு, மங்களம். இதோ வந்துடுவார்."
"யாருப்பா?” 

"இந்த வீட்டுக்காரர்தான். இதோ வந்துடுவார்." 

"அவருக்குத் தெரியுமோ தெரியாதோ நீ காத்துண்டிருக் கிறது? 

"எல்லாம் தெரியும். ஒருநாள் ஸ்கூலுக்கு லேட்டானா என்ன ?” 

அப்பாவிடம் பள்ளிக்கூடத்திற்குத் தாமதமானால் என்ன வாகும் என்பதைப் புரியும்படி சொல்ல முடியாது என்ற உணர்வே மங்களத்துக்கு அழுகை பீறிக்கொண்டு வரச் செய்தது. உதட்டைக் கடித்துக்கொண்டு அடக்கிக்கொண்டாள். 

அவர்கள் அங்கு வந்த நேரத்திலிருந்து ஏதாவது பேச்சுக் குரல் கேட்டபடி இருந்தது. ஆனால் முதல் முறையாகப் பேச்சுத் தொனியில் சிறிது வித்தியாசம் தெரிந்தது. இப்போது கேட்ட ஒரு குரல் உரத்து இல்லாது போதிலும் அதில் இருந்த ஓர் உரத் தன்மை அதுவரை யார் பேச்சிலும் இருந்ததில்லை. மங்களத்தின் அப்பா எழுந்து நின்றார். வெள்ளை வெளேரென்று உடை தரித்த ஒரு பெரிய மனிதர் மாடிப் படியிலிருந்து இறங்கி வந்தார். அவர் நெற்றியில் இருந்த விபூதி வரிகளும் அவர் உடையின் வெண்மைக்குச் சமானமாக இருந்தன. அவர் கீழே ஹாலையடையவும் ஒரு வாசற்கதவுக்கு ஒருவராக வீட்டு வேலைக்காரர்கள் வந்து நிற்கவும் சரியாக இருந்தது. ஆனால் அவர் எல்லாரிடமும் பேசவில்லை. உறவினராகவும் இருக்கக் கூடுமோ என்ற தோற்றம் உடையவரிடம் மட்டும், "பெரியம்மா ஊருக்குப் போகணும்னு சொன்னா. அவ என்னிக்குப் போகணும் என்று தெரிஞ்சுண்டு தாமோதரன் கிட்டே சொல்லிடுங்கோ. அவன் டிக்கெட்டுக்கு ஏற்பாடு பண்ணிடுவான். டெலிபோன்காரங்க வந்தாங்கன்னா மாடி எக்ஸ்டென்ஷன் அடிக்கடி சிக்கிக்கறதுன்னு சொல்லி அந்த இன்ஸ்ட்ருமெண் டையே மாத்திடுவாளான்னு கேளுங்கோ. வேறே விசேஷம் ஒண்ணுமில்லையே?’ என்றார். 

மங்களத்தின் அப்பா நின்ற இடத்திலிருந்தே கைகூப்பினார்.
________________
140 பறவை வேட்டை / துரோகம்
"நீங்கதான் காத்திண்டிருந்தேளா? என்ன விஷயம்?” "உங்களைத்தான் பார்க்கணும்னு." 

"என்ன விஷயம் சொல்லுங்கோ. எனக்கு இப்போ சாவகாச
மாப் பேசிண்டிருக்க நேரமில்லே.” 

"பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன். உறவிலே ஒரு வரன் வந்திருக்கு." 

மங்களம் ஆச்சரியத்துடன் அப்பாவின் முகத்தைப் பார்த்தாள். 

"உங்க மாதிரி தர்மப் பிரபு மனசு வைச்சா மிச்சத்தைக் கடனோ உடனோ வாங்கிப் பெண்ணை ஒப்பேத்திடுவேன்' அப்பா முடித்தார். 

"இதுக்குத்தான் ஆச்சார்ய சுவாமிகள் சொல்லி வைதீக சபாவிலே எல்லாத்துக்கும் ஏற்பாடு பண்ணறாளே. நானே என்னாலே முடிஞ்சது அந்தக் கைங்கரியத்துக்குக் கொடுத்தி ருக்கேன். நீங்க பழைய மாம்பலம் போய் விசாரிங்கோ." 

"அதைப் பயன்படுத்திக்கிற நிலை இல்லை. பொண்ணு கல்யாணத்தைச் சாத்தனூர்லே எங்க குலதெய்வம் சந்நிதியிலே செய்யறதா வேண்டுதல். ஏதோ சுருக்கமா முடிச்சுடுவோம்.” 

அவர் மங்களத்தின் அப்பாவை ஒரு கணம் உற்றுப் பார்த்தார். ஒரு கண்ணிமைக்கும் போதுக்கு மங்களத்தையும் பார்த்தார். 

* மங்களத்தின் அப்பா அந்த மாறாத புன்னகையைத் தரித்துக் கொண்டிருந்தார்.
"இந்தக் குழந்தைக்கு கல்யாணத்துக்கு என்ன அவசரம்? பன்னெண்டு வயசு கூட முடிஞ்சிருக்காது போலிருக்கே?"
"பதினாலு ஆறது. பெரியவதான். ஏழைப் பட்டவாள்ளாம் இதைப் பார்க்க முடியுமா? நல்ல இடமாப் பையன் தானே பண்ணிக்கிறேன்னு வரப்போ முடிச்சாத்தானே உண்டு.” 

"வர வாரம் வந்து பாருங்கோ. இந்த மாதிரித் தனித் தனியாப் பணம் தர்றதை நிறுத்தியாச்சு. இல்லேன்னா சபாவிலே சொல்லி செகரட்டரி யாரையாவது என்னை வந்து பாக்க சொல் லுங்கோ.” 

வெளியே போய்க் கொண்டிருந்தவரை மங்களத்தின் அப்பா தொடர்ந்து கொண்டே போனார். "அவாள்ளாம் என் பேச்சைக்
________________
அசோகமித்திரன் - 141
கேட்டு எதுவும் செய்ய மாட்டா. சபாவெல்லாம் அவா வேண்டிய வாளுக்குத்தான். என் போலேயிருக்கிறவா இன்னும் ஒவ்வொருத் தரையா அண்டிக் கையை நீட்டித்தான் ஜீவிக்க வேண்டியிருக்கு. என் மாச சம்பாத்தியம் அம்பது ரூபா. அதுலே நான் இரண்டு குழந்தைகளையும் என் வயசான தாயாரையும் வைச்சுண்டு எப்படி மானத்தோட காலம் தள்ளறது? சபான்னு போனா வெரட்டி அடிக்கறா. என் வீட்டிலே சாப்பாடு ஒரு வேளைதான். இந்தக் குழந்தையெல்லாம் ஒரு வேளைக் கஞ்சி குடிச்சுத்தான் பள்ளிக் கூடம் போய் வரது. ஒருநூறு ரூபாயாவது தந்தேள்னா இந்த மாசம் ஒரு மாதிரி தள்ளிடுவேன்.” - - 

மங்களமும் அப்பாவுடனேயே நகர்ந்தாள். அந்த வீட்டுக் குரியவர் எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் பங்களா முகப்புக்குச் சென்றடைந்தார். அங்கு திiார்ர்க ஒரு கார் அவருக்குக் காத்திருந்தது. டிரைவர் அவர் உள்ளே எறியவுடன் மெதுவாக ஆனால் உறுதியாகக் கதவை மூடியபின் தன் இடத்தின் உட்கார்ந்து வண்டியைக் கிளப்ப, மங்களத்தின் அப்பா கூப்பிய கையுடன் அப்படியே நின்றார். வண்டி நகர்ந்து சென்று வெகு நேரத்திற்கு அப்படியே நின்றிருந்தார். 

மங்களம் இம்முறை அப்பாவின் அங்கவஸ்திரத்தைப் பிடித்து இழுக்கவில்லை. முதலிலிருந்தே யாசகம் பெறுவதற்குத்தான் வந்திருக்கிறோம் என்று அவள் ஊகித்திருந்தாள். ஆனால் அப்பா யாசகத்திற்குச் சொன்ன காரணம் உடலை ஒருமுறை கூச்சத்தில் சிலிர்த்துக்கொள்ள வைத்தது. அப்பா மீது ஒரே சமயத்தில் வெறுப்பும் பரிதாபமும் கொள்ள வைத்தது. இனி எக்காலத்திலும் கல்யாணம் என்பதற்கு ஒத்துக்கொள்ளவே கூடாது என்று மங்களம் தீர்மானம் செய்து கொண்டாள்.
1984