தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Thursday, August 25, 2016

ஆக்காண்டி - சண்முகம் சிவலிங்கம்

HALF AN HOUR GOOGLE-OCR WASTE
--- Alreay available  in http://sivalingam.blogdrive.com/

ஆக்காண்டி ,
ஆக்காண்டி ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய் -
கல்லைக் குடைந்து

கடலோரம் முட்டை வைத்தேன்
வைத்ததுவோ ஐஞ்சு முட்டை

பொரித்ததுவோ நாலுகுஞ்சு
நாலுகுஞ்சுக் கிரைதேடி
நாலுமலை சுற்றி வந்தேன்
மூன்று குஞ்சுக் கிரைதேடி
மூவுலகம் சுற்றி வந்தேன்

ஆக்காண்டி ஆக்காண்டி
எங்கெங்கோ முட்டை வைத்தாய்
கல்லைக் குலைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்

குஞ்சு பசியோடு
கூட்டில் கிடந்ததென்று
இன்னும் இரைதேடி
ஏழுலகும் சுற்றி வந்தேன்

கடலை இறைத்துக்
கடல் மடியை முத்தமிட்டேன்
வயலை உழுது
வயல் மடியை முத்தமிட்டேன்

கடலிலே கண்டதெல்லாம்
கைக்கு வரவில்லை
வயலிலே கண்டதெல்லாம்
மடிக்கு வரவில்லை

கண்ணிர் உகுத்தேன்
கடல் உப்பாய் மாறியதே
விம்மி அழுதேன்
மலைகள் வெடித்தனவே

ஆக்காண்டி ஆக்காண்டி
எங்கெங்கோ முட்டை வைத்தாய்
கல்லைக் குடைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்

வண்டில்கள் ஒட்டி
மனிதர்க் குழைத்து வந்தேன்.

கையால் பிடித்துக்
கரைவலையை நானிழுத்தேன்

கொல்லன் உலையைக்
கொளுத்தி இரும்படித்தேன்

நெய்யும் தறியில்
நின்று சமர்செய்தேன்

சீலே கழுவி
சிகையும் அலங்கரித்தேன்

வீதி சமைத்தேன்

விண்வெளியில் செல்லுதற்குப்
பாதை சமைக்கும்
பணியும் பல புரிந்தேன்

ஆனாலும் குஞ்சுக்கு
அரை வயிறு போதவில்லை
காதல் உருகக்
கதறி அழுது நின்றேன்
கதறி அழுகையிலே
கடல் இரத்தம் ஆயினதே

விம்மி அழுகையிலே
வீடெல்லாம் பற்றியதே

கடல் இரத்தம் ஆகுமென்று
கதறி அழவில்லை
வீடுகள் பற்றுமென்றும்
விம்மியழவில்லை

ஆக்காண்டி ஆக்காண்டி
எங்கெங்கோ முட்டை வைத்தாய்
கல்லைக் குலைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்

குஞ்சு வளர்ந்தும்
குடல் சுருங்கி நின்றார்கள்

பசியைத் தணிக்கப்
பலகதைகள் சொல்லி வந்தேன்

கடலை இறைத்துக்
களைத்த கதை சொல்லி வந்தேன்

வயலை உழுது
மடிந்த கதை சொல்லி வந்தேன்

கொல்லன் உலையிலும்
கொடுந் தொழிற் சாலையிலும்
எல்லா இடமும்
இளைத்த கதை சொல்லி வந்தேன்

சொல்லி முடிவதற்குள்
துடித்தே எழுந்து விட்டார்
பொல்லாத கோபங்கள்
பொங்கிவரப் பேசுகின்றார்


"கடலும் நமதே அன்னை
கழனியும் நமதே அன்னை
கொல்லன் உலையும்
கொடுந்தொழிற் சாலையதும்
எல்லாம் நமதே" என்றார்
எழுந்து தடி எடுத்தார்
கத்தி எடுத்தார்
கடப்பாரையும் எடுத்தார்
யுத்தம் எனச் சென்றார்
யுகம் மாறும் என்றுரைத்தார்
எங்கும் புயலும்
எரிமலையும் பொங்கிவரச்
சென்றவரைக் காணேன்
செத்து மடிந்தாரோ?

வைத்ததுவோ ஐஞ்சு முட்டை
பொரித்ததுவோ நாலு குஞ்சு
நாலு குஞ்சும் போர் புரிய
நடந்து விட்டார் என்ன செய்வேன்
ஆனவரைக்கும்
அந்த மலைக் கப்பாலே
போனவரைக் கா ணேன்
போனவரைக் காண்கிலேன்

ஆக்காண்டி ஆக்காண்டி
எங்கெங்கோ முட்டை வைத்தாய்
கல்லைக் குலைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்

1968

********************

 http://sivalingam.blogdrive.com/
அழைப்பு

தூரத்தில் நான் கேட்டேன்
குரல் ஒன்று
தூரத்தில் நான் கேட்டேன்
பாதி இரவினிலும் பட்டப்பகலின் அனலினிலும்
மோதித் தெறித்து
மெல்ல முனகி அழுவதுபோல்
தூரத்தில் நான் கேட்டேன்
குரல் ஒன்று
தூரத்தில் நான் கேட்டேன்

பக்கத்தில் ஒரு கோயில்
அதன்பக்கத்தில் ஒரு அரவு-
சொர்க்கத்தின் வழிபோல
இலை சோவெனக் கலகலக்கும்.
சற்று அப்பால் ஆலைகளில்
சருகுதிரும்.
இடைவெளியில் திக்கற்ற கன்றொன்று
தாயைத் தேடிவரும் - அப்போதும்,
தூரத்தில் நான் கேட்டேன்.

உலகருகே நிற்பேன்,
ஊரைக்காவலிடும் தென்னைகளில்
படரும் இருள் தூரத்தில்
அஞ்சிப்பறக்கும் சிலபறவை
தொடரவரும் பிறப்பெல்லாம்
எங்கோ தூரத்தில் கேட்டதுபோல்
குரலும் அதுகேட்கும்
என் குழந்தை நினைவெல்லாம்
தூரத்தில் நான் கேட்டேன்
குரல் ஒன்று
தூரத்தில் நான் கேட்டேன்

- சண்முகம் சிவலிங்கம்.
(நன்றி: 'நீர் வளையங்கள்' கவிதைத்தொகுப்பு)

நண்டும் முள்முருக்கும்

சிவப்புப் பூக்கள்
முள் முருக்கம்.
மைனாக்கள் வரும், போகும்.

இலைகள் உதி - ர் - ந் - து
வெறும் கிளைகள்
முட்களுடன்.

நுனிகளில்
வளைந்த பூந்தண்டுகள்.

அடியில் உள்ள பெரியபூக்களை
மைனா கோதும்.
அவை பின்னரும் கோத,
நுனியில்
வரவர, சிறிய
நலிந்து நீண்ட
மொட்டுகள்,
நண்டின் பூப்போல,
ஆமாம்
நண்டின் பூப்போல.
அம்மா சொன்னாள்!
நண்டு சினைக்க
பூக்கும் முள்முருக்கு.
முள்முருக்குப் பூக்க
சினைக்கும் நண்டுகள்.


நாளைக் காலை
சந்தைக்குப் போகலாம்.


- சண்முகம் சிவலிங்கம்.

(நன்றி: 'நீர்வளையங்கள்' கவிதைத்தொகுப்பு)

ச.சி. @ 12/10/2003   Make a comment                                                        முகப்பு