தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Monday, October 10, 2016

சுல்தான் - ழாக் ப்ரெவர்

சுல்தான் - ழாக் ப்ரெவர்
மொ.பெ. வெ.ஸ்ரீராம்)
-க்ரியா அலியான்ஸ் ஃபிரான்சேஸ், சென்னை வெளியீடு

காஷ்மீர் மலைப் பிரதேசத்தில்
சுல்தான் ஒருவன் இருந்தான்
சலமான்ட்கூர் அவன் பெயர்
பகல்பொழுதில் நிறைய பேர்களை
அவன் கொல்ல ஆணையிட்டான்
இரவு விழுந்ததும் தூங்கப்போனான்
ஆனால் அவனுடைய கொடூரக் கனவுகளில்
இறந்தவர்கள் ஒளிந்திருந்து
அவனை விழுங்கினர்
ஒரு இரவில் அவன் விழித்துக்கொள்கிறான்
உரக்கக் கூச்சலிட்டபடி
தூக்கத்திலிருந்து மீட்கப்பட்ட
தூக்கிலிடும் தொழிலாளி
கட்டிலருகே வருகிறான் புன்னகையுடன்
உயிருள்ளவர்கள் என்று யாருமேயில்லை யென்றால்
இறப்பவர்களும் இருக்க முடியாதல்லவா
என்கிறான் சுல்தான்
ஆமாம் என்கிறான் தூக்கிலிடுபவன்
அப்படியென்றால் மற்ற எல்லாருமே
போகட்டும் தூக்குமேடைக்கு
முற்றிலுமாக முடிந்துவிடட்டும்
ஆமாம் என்கிறான் தூக்கிலிடுபவன்
அவனுக்குச் சொல்லத் தெரிந்ததே
அவ்வளவுதான்
ஆக எல்லோரும் போகிறார்கள் சுல்தான் சொன்னபடி
பெண்கள் குழந்தைகள் அவனுடையவை
மற்றவர்களுடையவை
கன்று ஓநாய் குளவி மென்மையான ஆட்டுக்குட்டி
நாணயமான நல்ல முதியவர் நிதானமான ஒட்டகம்
நாடக நடிகைகள் விலங்ககுளின் அரசன்
வாழைத்தோப்புப் பண்ணையார்கள் நகைச்சுவைத்
துணுக்கு ஆசிரியர்கள்
சேவல்கள் அவற்றின் பெட்டைகள் முட்டைகள் அவற்றின்
ஓட்டுடன்
ஆக எவருமே மிஞ்சவில்லை
யாரையாவது புதைக்க வேண்டுமென்றால்கூட
இப்படியே இருந்தால் நல்லது
என்கிறான் சலமான்ட்கூர்  சுல்தான்
ஆனால் தூக்கிலிடுபவனே இங்கேயே இரு
எனக்கு மிக அருகில்
மீண்டும் எப்போதாவது நான் உறங்கிவிட்டால்
கொன்றுவிடு என்னை.