தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Wednesday, October 26, 2016

Toward An Impure Poetry by Pablo Neruda_ஒரு அசுத்தக் கவிதையை நோக்கி-பாப்லோ நெரூடா


Toward An Impure Poetry by Pablo Neruda_ஒரு அசுத்தக் கவிதையை நோக்கி-பாப்லோ நெரூடா
https://brammarajan.wordpress.com/2014/04/23/toward-an-impure-poetry-by-pablo-neruda_ஒரு-அசுத்தக்-கவிதைய/
Toward An Impure Poetry by Pablo Neruda_ஒரு அசுத்தக் கவிதையை நோக்கி-பாப்லோ நெரூடா

பகல் மற்றும் இரவின் சில மணிநேரங்களில் ஓய்விலிருக்கும் புறப் பொருட்களின் உலகினைக் கூர்ந்து பார்ப்பது நல்லது. தமது தாவர மற்றும் கனிமச் சுமைகளுடன் தூசிபடர்ந்த நெடுந்தூரங்களைக் கடந்து வந்த சக்கரங்கள், நிலக்கரித் தொட்டிகளிலிருந்து வந்த சாக்கு மூட்டைகள், தச்சு ஆசாரியின் கருவிப் பெட்டிக்கான கைப்பிடிகள் மற்றும் பிடிகள். அவற்றிலிருந்து வழிகின்றன மனிதனின் பூமியுடனான தொடுகைகள், தொந்தரவுக்குள்ளான ஒரு பாட்டுக்காரனின் பிரதியைப் போல. பொருள்களின் பயன்படுத்தப்பட்ட மேற்புறங்கள், பொருட்களுக்கு கைகள் தரும் தேய்மானப் பதிவு, காற்று, சில சமயங்களில் துன்பகரமாகவும், பல சமயம் பரிதாபமாயும், அது போன்ற விஷயங்கள்-எல்லாமுமே உலகின் யதார்த்தத்திற்கு ஒரு விநோத ஈர்ப்பினை நல்குகின்றன-அதை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது.

அவற்றில் மானுட இருப்பின் குழம்பிய அசுத்தத்தை ஒருவர் பார்க்கவியலும், பொருட்களின் அம்பாரங்களில், வஸ்துக்களின் பயன்பாடு மற்றும் பயன்நிறுத்தம், கைரேகைகள் மற்றும் காலடிச்சுவடுகள், உள் மற்றும் வெளிப்புறங்களில் வேலைப்பாடமைந்த கலைப்பொருட்களை மூழ்கடித்தவாறிருக்கும் மானிட இருப்பு.

அது நாம் தேடிக்கொண்டிருக்கும் கவிதையாக இருக்கட்டும்: கைகளின் கடமையுணர்ச்சியால் தேய்ந்து போய், அமிலங்களால் அரிக்கப்பட்டது போல, புகை மற்றும் வியர்வையில் தோய்ந்துபோய், லில்லி மலர்கள் மற்றும் சிறுநீரின் வாசனையடித்தபடி, விதம்விதமாய் நம் வாழ்வுக்கான தொழில்களால் அழுக்குத் தெறிக்கப்பட்டு, சட்டத்திற்கு உள்ளாகவோ அல்லது அதற்கு அப்பாலோ.

நாம் அணியும் உடைகள் போல் அசுத்தமான ஒரு கவிதை, அல்லது நம் உடல்களைப் போல, சூப்கறைபடிந்து, நம் அவமானமிக்க நடத்தையால் அசுத்தப்படுத்தப்பட்டு, நம் சுருக்கங்கள், இரவு விழிப்புகள் மற்றும் கனவுகள், அவதானிப்புகள் மற்றும் முன்கூறல்கள், வெறுப்பு மற்றும் காதல்களின் அறிக்கைகள், எளிய நாட்டுப்புற வாழ்க்கை மற்றும் காட்டுவிலங்குகள், எதிர்பாராச் சந்திப்புகளின் அதிர்ச்சிகள், அரசியல் விசுவாசங்கள், மறுப்புகள் மற்றும் சந்தேகங்கள், ஒப்புதல்கள் மற்றும் வரிகள்.

காதல்பாடல்களின் புனித விதிகள், தொடுதலின் சட்டதிட்டங்கள், நுகர்வு, சுவை, பார்வை, கேட்டல், நியாயத்திற்கான பேருணர்ச்சி, பாலுறவுக்கான விழைவு, கத்திக் கொண்டிருக்கும் கடல்–வேண்டுமென்றே நிராகரித்து, மேலும் எதையுமே ஏற்றுக்கொள்ளாதிருத்தல்: காதலின் போக்குவரவில் நிகழும் பொருட்களின் ஆழ்ந்த ஊடுருவல், புறாவின் கால்களினால் அசுத்தமான மிகப்பக்குவமான கவிதை, பனிக்கட்டியால் குறியிடப்பட்டதும் பற்குறிபட்டதும், ஒருவேளை நமது வியர்வைத்துளிகளால் நுண்மையாய்க் கடிபட்டும் பயன்பட்டும். அவ்வளவு ஓய்வற்று வாசிக்கப்பட்ட வாத்தியம் அதன் மேற்புறங்களின் வசதியை நமக்கு விட்டுத் தருவது போல், மற்றும் காடுகள் காட்டுகின்ற கருவியின் தற்பெருமையால் வடிவமைந்த முடிச்சுகள் நிறைந்த மென்மைகள். மலர் மற்றும் நீர், கோதுமையின் மணி எல்லாம் ஒரே விலைமதிப்பற்ற திட்பத்தைப் பங்குகொள்கின்றன: தொடுஉணர்வின் மட்டற்ற ஈர்ப்பு.

அவற்றை எவரும் மறந்துவிட வேண்டாம். துயரம், அசுத்தமான பழைய உணர்ச்சி அருவருப்பு, கேடுறாமல், ஒரு வெறியின் கட்டற்றதன்மையில் தூக்கிவீசப்பட்ட மறதிக்காட்பட்ட வழக்கொழிந்து போன தனிஇனங்களின் பழங்கள்–நிலவொளி, அடர்ந்து வரும் இருளில் அன்னப்பறவை, பழகிப்புளித்துப் போன விருப்பங்கள் யாவும்: நிச்சயமாய் அதுதான் ஒரு கவிஞனின் அத்தியாவசியமானதும் முழுமுற்றானதுமான அக்கறை.

வஸ்துக்களின் மோசமான சுவையை எவர் ஒருவர் தவிர்த்து ஒதுக்கினாலும் அவர்கள் பனித்தரையில் வீழ்வார்கள்.Translated by Rajaram Brammarajan

Poems of Michael Ondaatje in Tamil Translationமைக்கேல் ஓன்யாட்டே(1943-


மைக்கேல் ஓன்யாட்டே கனடா நாட்டுக் கவிஞர்-நாவலாசிரியர்.1943ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி ஸ்ரீலங்காவில் பிறந்தவர்.

ஸ்ரீலங்காவின் காலனிய சமூகத்தில் மிகவும் பிரதானப் பிரதிநிதிகளாய் அவருடைய பெற்றோர் இருந்தனர்.
அவரது கல்வி கொழும்புவில் உள்ள புனித தாமஸ் கல்லூரியில் தொடங்கிற்று.
அவரது தாயாருடன் இங்கிலாந்து சென்ற ஓன்யாட்டே தன் கல்வியை இங்கிலாந்தில் தொடர்ந்தார்.
1965இல் கனடா பல்பலைக் கழகத்தில் பட்டமேற்படிப்பை முடித்தார்.
பிறகு கனடாவுக்குக் குடிபெயர்ந்து கனடாவில் சிறிது காலம் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றினார்.
கற்பனையானதையும் நிஜமானதையும் கலந்து அவரது குடும்ப சரித்திரத்தை
Running in the Family என்ற நூலில் பதிவு செய்துள்ளார்.

அவரது 3 பிரதான கவிதை நூல்கள் பின்வருமாறு:
1.The Cinnamon Peeler
2.Secular Love.
3.There’s a Trick with a knife I am Learning to Do (Poems 1963-1978)

அவரது சமீபத்திய 4வது கவிதைத் தொகுதி
Handwriting 1998இல் வெளியிடப்பட்டது.
எனினும் 1992இல் வெளிவந்த அவரது இங்லீஷ் பேஷண்ட்
என்ற நாவலின் மூலமே அவருக்குப் பரவலான அங்கீகாரம் கிடைத்தது என்பதை மறுப்பதற்கில்லை.சகோதரத் திருடன் –
மைக்கேல் ஓன்யாட்டே


வகேரகலாவில் வெண்கல புத்தரைக் களவாடி
நால்வர் நம் குடும்பத்தாரிடமிருந்து
மறைந்து போகின்றனர்

கானக வழிப்பாதைகளில்
தூக்கிச் செல்லப்படுகிறது சிலை
அதன் வலது கரம்
வெட்டி இழுபடும் வானுக்கு
‘அபயம்’ ‘மறுஉறுதி’
போன்ற முத்திரையில்.

மேகங்கள் பறவைக் கூவல்
நோக்கி
அவருக்கடியில் நகரும்
இந்த நான்கு மனிதர்க்குள்ளான
இந்த திடீர் பயங்கரத்தை
நோக்கி
அவர்களுடன் புத்தர்

இரவு முழுவதும் சிறிய முள் தீ,
அவரது அங்கியை
தோளருகே தொட்டவாறிருக்க
‘விதர்க்க முத்திரை’ -‘ஒரு உரையாடலுக்கு
அழைப்பு விடுக்கும் உடலசைவு’
மூவர் உறக்கத்தில்.
அதில் மிக இளையவன் வெண்கலத்தினருகில்
நெருப்புக்கு விறகிடுகிறான்
தேனருந்துகிறான்
இரவு ஆக ஆக
சப்தங்கள் ஒடுங்கி அடர்கின்றன.

அதிக வேறுபட்ட சிறுவிலங்குகளுக்கான
இரவு நேரங்களின் சுழற்சி
நம்மைப் போன்ற உயிர்கள்

அவன் எண்ணுகிறான்
இந்த வெப்பத்தின் கருவிழிக்கு அப்பால்
எல்லாப் புவியியலும் சாம்பலாகிவிட்டது.
எந்த மலைகளுமில்லை, அல்லது நட்சத்திரம்
அல்லது நதியோசை
ஏதுமில்லை
அவனுக்கு திசைகாட்ட
அவனுலகம் ஒரு தேன் கலயம்
அதனருகில் ஒரு சிலை
நெருப்பு வெளிச்சத்திலிருந்து நிலைகொள்ள வெறிப்பு
வெண்கலத்தின் பின்புறமாய்
அவன் ஏறி அதைச் சுற்றி தன் கையைப் போடுகிறான்
ஒரு கத்தி கொண்டு
கண்களை அகற்றுகிறான்
நுணுங்கிய வைரங்கள்
அவன் கைகளில் விழுகின்றன.
பிறகு திடுக்கிடுகிறான்

கள்ளமறியாமல் தன் பீதிக் கனவிலிருந்து.
தன் கண்களையே கசக்குகிறான்.
எழுந்து நின்று இரவை சுவாசிக்கிறான் அவனுக்குள்ளாய் ஆழமாய் காற்று
முட்புகையிலிருந்து அவனால் இயன்ற வரை எல்லாவற்றையும் விழுங்குகிறான்
ஒன்பது சிறு ஓசைகள்
ஒரு தூரக் குளிர்ச்சி
இருண்ட அமைதி
நீரின் ஓரு குகையென.என்ன நாம் இழந்தது

மைக்கேல் ஓன்யாட்டே

என்ன நாம் இழந்தது
அகவயக் கவிதை
சுயத்தின் ஆழ் நிலைகள்
தினசரி வாழ்வின் நிலக்காட்சிகள்
குறிப்பிட்ட கொள்கைகள் கைவிடப்படல்
தொடங்கிய தேதிகள்
நயப்பண்பின் விதிகள்-ஒரு கோயிலில் அல்லது
கானகத்தில் நுழைவது எவ்வாறு,
ஒரு பாடம் தொடங்குமுன் அல்லது கலை நிகழ்த்தப்படுமுன்
குருவின் பாதம் பணிவது எவ்வாறு.
மத்தள வாசிப்பின் கலை. கண்ணுக்கு வர்ணம் தீட்டும் கலை
ஒரு அம்பை வெட்டி எடுப்பது எவ்வாறு.
காதலர்க்கிடையே அங்க அசைவுகள்.
அவன் சருமத்தின் மீது அவளது பற்குறி அமைவுகள்
ஒரு துறவியால்
ஞாபகத்திலிருந்து வரையப்பட்டது.
காட்டிக் கொடுத்தலின் எல்லைகள். பழைய காதலனை
தற்போதையவன் பழிப்பதற்கான ஐந்து வழிகள்.
பிரதான உணர்ச்சிகளை சமிக்ஞை தர
ஒன்பது விரல்கள் மற்றும் கண் அசைவுகள்.
தனிமையின் சிறு படகுகள்
காதலில் உயிர் பெற்று
மீண்டும் காற்றில் ஏறும் பாடல்கள்
வஞ்சகம் மற்றும் புகழ்ச்சியால்
அப்பட்டமாய்த் தெரியும்
நம் பாடுகள் மற்றும் நாட்கள்
எவ்வாறு பருவ மழைகள்
(தென் மேற்கு, வடகிழக்கு)
நடத்தையை நிர்வகிக்கும் என்றறிந்திருந்தோம்.
மேகங்களில் மறைந்து,
நதிகளில்,
உடைபடாப் பாறையில்
இறந்தோரின் அறிவை அறிதல்
எப்போதென்றும்.
எல்லாவற்றையும் எரித்தோம்
அல்லது விற்றோம்
அதிகாரம்
செல்வத்தின் பொருட்டு
பழிவாங்கலின் எண்திசைப் புள்ளிகளிலிருந்து
இருதளப் பொறாமையிலிருந்து.புதைபட்டு

மைக்கேல் ஓன்யாட்டே


யுத்த காலங்களில் புதைபட
தகிக்கும் சீதோஷ்ணத்தில்
கத்திகள் மற்றும் எரிப்பு தண்டங்களால் ஆன பருவ மழையில்
போர் ஒய்வின் ஓரிரவில்
கல் மற்றும் வெண்கலக் கடவுளர்கள் தூக்கிச் செல்லப்படுதல்
உறங்கும் போர்க் கூடாரங்களுக்கிடையில்
கீழ்க் கடலோரத்திற்கு கட்டுமரங்களில் மிதந்தபடி
கலத்துறைக்கு அப்பால்
பாதுகாப்பிற்காக
புதைபட
பெரும் கல் கம்பங்கள் மற்றும்
விண் வெடிகுண்டு கிளரொளியால் சூழப்பட்டு
இரவில் வெள்ளப் பெருக்கின் போது
தனது சொந்த அர்ச்சகர்களால்
பிரகாரங்களிலிருந்து பிடித்து இழுக்கப்பட்டு
பல்லக்குகளில் ஏற்றப்பட்டு
சேற்றினால், வைக்கோலால் மூடப்பட்டு
தமக்குள்ளாய் புனிதமானதைக்
கைவிட்டு
அரசியல் நெருக்கடிகளின் போது
ஒரு கோயிலின் நம்பிக்கையை அப்பால்
தம் கரங்களுக்குள் தாங்கி
புத்தரின்
முத்திரைகளை மறைத்தபடி.
பூமிக்கு மேற்புறம் படுகொலை மற்றும் போட்டிப் பந்தயம்
நிசப்தமாக்கப்பட்ட ஓர் இதயம்
வெட்டப்பட்ட நாக்கு
எரியும் டயரில் உருகி ஒன்றிய மனித உடல்
முறைத்துக் கூசும் மண்
ஒரு வெறிப்பென.


கூப்பிடுதலின் தூரம்

மைக்கேல் ஓன்யாட்டே


நாங்கள் வாழ்ந்தோம் மத்தியகால கடலோரத்தில்
சமர்புரியும் ராச்சியங்களின் தென்புறம்
காற்றுகளின் புராதன காலங்களில்
அவை தம் முன்னே எல்லா விஷயங்களையும் துரத்தி வீசியடித்தபடி.
வடக்கிலிருந்து துறவிகள் வந்தனர்
ஓடைகளின் வழியாய் மிதந்தவாறு-
அந்த ஆண்டுதான் எவர் ஒருவரும் நதிமீன் உண்ணவில்லை.
கானகங்கள் பற்றி எந்நூலும் இல்லை
சமுத்திரம் பற்றி புத்தகம் ஏதுமில்லை.
ஆனால் இந்த இடங்களில்தான் மக்கள் மரணமடைந்தது.

கையெழுத்து உருவாயிற்று அலைகளின் மேல்
இலைகளின் மேல்
புகையின் எழுத்துச் சுருக்கங்கள்
மகாவேலி நதி பாலத்தின் மீதிருந்த ஒரு இடுகுறி
இந்த புதிய மொழியின் படிப்படியான ஏற்புபுதைபட்டு-3

மைக்கேல் ஓன்யாட்டே


கானகத்தின் மையத்தினுள் நம்பிக்கை.
கல் தூபிகள். கானகத்திலிருந்து கிழித்தெடுத்து திருத்திய இந்த நிலத்தில்
புத்த தூபிகளின் எச்சங்கள்
எந்த மனிதப் படிமும் மிச்சமில்லை
நித்தியமாய் உள்ளதெல்லாம் கருங்கல், செங்கல்
சேற்றுக் கீழே தண்ணீர் மறைந்து போகும் ஓர் கரிய நிற ஏரி-
மீண்டும் உயர்கிறது.
ஒரு மலையை எதிரொலிக்கும் தூபியின் மாட வளைவு
போதி மரம். சேப்டர் நிலையம். படிம நிலையம்.
ஓர் கல் வரிசை
உறக்க சாலைகளின் சுற்றுப் பிரகாரம்
12ஆம் நூற்றாண்டு துறவிகளுக்கு
அவர்தம் நம்பிக்கையின் சட்டைப் பை
உலகிடமிருந்து விலகி அப்பால் புதைபட்டிருக்கிறது.
அந்தி. புல்லும் கல்லும் நீலம்.
கரிய ஏரி.
700 ஆண்டுகளுக்கு முன்
துறவிகளால் ஆன ஒரு குங்குமப் பூ தழும்பு
திருத்திய நிலத்தில் நகர்கிறது
இந்த நேரத்தில் வானம்
ஏறத்தாழ குங்குமப் பூ
ஒரு குங்குமப் பூ பறவை.
அரிசிக் கலயத்தில் ஒரு குங்குமப் பூ விதை.
அவர்கள் இங்கிருக்கிறார்கள் இருநூறு ஆண்டுகளாய்
போர் அவர்களை நெருங்கும் போது
கானகத்தின் அடர்வுக்குள் சுமந்து சென்று மறைகின்றனர்
சட்டைப் பை தைத்து மூடப்படுகிறது.
சேற்றுக்குக் கீழே எங்கே தண்ணீர் அமிழ்கிறதோ
அங்கே அவர்கள் குழி தோண்டி
புனிதத்தைப் புதைத்து
பின் இந்தக் கரிய ஏரிக்கு அப்பால்
பதுங்கிக் கொள்கின்றனர்
அது மீண்டும் தோன்றுகிறது மறைகிறது
பெயரற்ற ஓர் ஏரி
அதன் நிறம் தவிர.
காணாமல் போன துறவிகள்-
எதிர்பாராமல் பிடிபட்டவர்கள்
அல்லது தம் வாழ்நாளிருதி வரை மௌனமானவர்கள்
இலைகளின் எலும்புகளென மெலிந்து மறைகின்றனர்.
பதினைந்து தலைமுறைகள் கழித்து ஆயுதமேந்திய மனிதர் பதுங்குகின்றனர்
கானகத்தில் விலங்குகளைக் கண்ணி வைத்துப் பிடித்தபடி
குங்குமப்பூ இலைகளைப் பறிக்கின்றனர்
கொதிக்க வைக்க, எரிக்க, அல்லது புகையிட
போரின் பிரிவுகள்
ஒரு நூறு நம்பிக்கைள்
சயனிக்கும் புத்தர்களை மனிதர்கள் தூக்கிச் செல்கின்றனர்
அல்லது மார்ட்டர்களை தூக்கிச் சென்று எதிரிகளை எரித்து
ஹெலிகாப்டர் ஓசை கேட்டவுடன் பதுங்கு குழிகளில் மறைகின்றனர்
சித்திரவதையிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள
விஷ நெக்லஸ் அணிந்த இளம்பெண்கள்
பெண்டிர் பனை ஓலைகளில் தம் எதிர்காலங்களை எழுதி சுருட்டி
தாயத்துகளாய் அணிவது போல்
சிலையின் கனம்
ஒரு பீரங்கிக் குழாயின் கனம் அளவே
அவர்கள் ஓடுகையில் உடையற்ற தோள்களை சிராய்த்தபடி.
சுவரின் நீள் விளிம்புக்கு
தூக்கி உயர்த்தி
பிறகு வெட்டிய வேறொரு குழியில்
கயிற்றினால் இறக்கப்படுகிறது.
கல் புத்தனைப் புதைத்தல்.
குழை சேறு பூசி
பிறகு விலங்கொன்றின் சடலம் வீசி
ஒரு விதையை அங்கே நட்டபடி
அதனால் வேர்கள்
ஒரு குருட்டுத் துறவியின் விரல்களைப் போல்
இருநூறு ஆண்டுகளாய்
அவர் முகத்தில பரவிக் கொண்டிருக்கும்.புதைபட்டு-2

மைக்கேல் ஓன்யாட்டே

புத்தரின் பல்லை நாங்கள் கடத்திச் சென்றோம்
ஓர் ஆலயத்திலிருந்து மற்றொன்றுக்கு
ஐநூறு ஆண்டுகளாய்
1300-1800
ஒரு சமயம் எம் நூலகங்களை
பெரும் மருத்துவ மரங்களுக்கடியில்
புதைத்து வைத்தோம்
படையெடுத்து வந்தோர் எரித்தனர் அவற்றை
-நூல்களை இழந்தோம் நாங்கள்
அறிவியல் நூல்கள்,
வேண்டுதல்கள்
சுடும் களி சேற்று வண்டலிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்ட பல்
எம் தலை முடியில் மறைக்கப்பட்டு
மீண்டும் புதைக்கப்பட்டது
ஆற்றின் செஞ்சாய்வுகளில்.
அவர்கள் அகன்றவுடன் நீந்திச் சென்றோம்
அதனிடத்திற்கு
பிறகு எம் தலை முடியில் எடுத்துச் சென்றோம்.புதைபட்டு-5

மைக்கேல் ஓன்யாட்டே

அரசர்களாலான ஒரு வனத்தில்
ஒரு புன்னை மரம், ஆரம் அல்லி
நீல விடியல் போனட் மலர்,
கிளிகள் மொய்க்கும் மரங்கள், பிரமன் தண்டு,
தீக்குச்சி செய்ய அல்ஸ்டோனியா மரங்கள்
பல்லைச் சுத்தம் செய்ய மகிழ மர மிலாறுகள்
நம் நம்பிக்கைப் பத்திகளை
எழுதி வைக்க பனை ஓலை
அயல்தேசத் தபால் உறைகளுக்கும் கண் ரப்பைகளுக்கும் அவுரிச் செடி
தென்னை மட்டையின் நடுத்தண்டு
ஒரு வேலி பின்ன
மேலும், கல்கம், சூரணம்,
தசமூலம், தாரலசாரம் . . . .
தெற்கில் பெரும்பான்மை வன்முறை தொடங்கிற்று
மரங்களைச் சொந்தம் கொண்டாடுவதில்
எல்லைக் கோடுகள்
பழம் எங்கேயது விழுகிறது
ஒரேயொரு பலா மரம் குறித்து பல கொலைகள்.தெற்குப் பிராந்தியங்களில் டொமினிக் உடன் காரில் பயணம் செய்தல்
மைக்கேல் ஓன்யாட்டே

ஒரு கிழிந்த ஹங்கேரியக் கூடாரம்
தெருவோர பம்ப்பிலிருந்து
ஒரு மனிதன் ட்ரம்பெட் ஒன்றை
கழுவுகிறான்
மரங்களில் சிறு பிள்ளைகள்
ஒருவர் மற்றவரின்
பிடியில் விழுந்தபடி.All poems translated from Michael Ondaatje’s Handwriting

Translated by Brammarajan

Share this: