தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Wednesday, March 07, 2018

தி.ஜானகிராமனின் எழுத்து குறித்து பிரமிள்

 Retweeted
Impatient.


“It is spring again.
The earth is like
a child that knows
poems by heart."


~ Rainer Maria Rilke


Kaala Subramaniam‎ to தி.ஜானகிராமன் இலக்கிய வட்டம்
6 hrs ·
தி.ஜானகிராமனின் எழுத்து குறித்து பிரமிள்
---------------------------------------------------------
ஜானகிராமன் கையில் சம்பாஷணை, உக்ரமாக உத்தேசக் கருவை நோக்கிச் செல்கிற மாதிரி, செல்லப்பாவின் நாடகத்திறன் அந்த இடத்தில் செயல்படுகிறது. ஆனால் ஜானகிராமனிடம் ஹெமிங்வே யின் நிதர்சனத் தன்மையும் சம்பாஷணைச் சுருதியில் செதுக்கி விடாத நனவோடை போன்ற நிர்வாணமான பேச்சுவேகமும் இருக்கிற மாதிரி செல்லப்பாவிடம் இல்லை.

‘சி.சு.செல்லப்பாவின் இயக்க உலகு’. எழுத்து-26, (பிப்ரவரி 1961).
---------------------------------------------------------------------------------
பிச்சமூர்த்தியும் ஜானகிராமனும் க.நா.சுப்ரமண்யமும் லா.ச. ராமாமிருதமும் சி.சு.செல்லப்பாவும் காலம் சென்ற புதுமைப்பித்தன், சிதம்பர சுப்ரமண்யன் ஆகியோரும் கலைமகளில் எழுதி இருக்கிறார்கள். இந்த எழுத்தாளர்கள் திறனாளிகள்; தங்கள் திறனின் சிறப்புகளை மலினப்படுத்தவே இயலாத தீவிரவாதிகள்.
கோபுரத்தின் உச்சியில் இருந்து காக்கை ‘கரைதல்’ பற்றி (கத்துதல், உருகுதல் என்ற இரண்டு பொருள்களில்) தி.ஜா. எழுதியதை, வெ.சா. தமது கடிதத்தில் மேற்கோள் காட்டி ரஸித்திருந்தார். இந்தச் சிலேடை ஒருதளத்தில் ஸ்தம்பித்துவிட்டதை மௌனி விளக்கினார். மௌனியின் தீட்சண்யம், காக்கையில் இருளைக் கண்டு, அந்த இருள் கரைதலாக தி.ஜா.வினால் உணரப்படாததைச் சுட்டிக்காட்டிற்று.
(விமர்சனாஸ்ரமம்)
----------------------------------------------------------------------------------
முதல் நாவல் என்று கருதப்படும் பிரதாப முதலியார் சரித்திரம், அன்றைய சமூகநிலையினைச் சிறுசிறு நிகழ்ச்சிகள் மூலம் சித்தரிக்கிறது. கமலாம்பாள் சரித்திரத்தில், வாழ்வின் துயில்நிலையிலிருந்து இரண்டு பாத்திரங்கள் ஆத்மிகமாக விழிப்படையும் பயணம் சித்தரிக்கப்படுகிறது. பத்மாவதி சரித்திரமும் பிரச்சினைகளைக் கட்டுக்கோப்பாகக் கொண்டதுதான். இவற்றில் உள்ள சம்பாஷணைத் திறனும் பாத்திரங்களும், இன்றுகூட வீர்யம் குன்றாதவை.

இந்த ஆரம்பங்களை, வை.மு.கோதைநாயகி அம்மாள் போன்றவர்களின் மலிவான உணர்ச்சிக் கதைகளும் வடுவூர் துரைசாமி ஐயங்கார் போன்றோரின் ருசிகரக் கதைகளும், இரண்டுபுறமும் இழுத்தன. நமது வாழ்வினையும் மனிதர்களையும் கவனிக்காமல், வெளிநாட்டு நாவல் களது தழுவல்களை நமது வாழ்வின் சித்தரிப்பாக காட்டும் அவசரத் தொடர்கதைகள் தொடர்ந்தன. பத்திரிக்கை வியாபாரத்துக்காக இதைக் கூசாமல் செய்த கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி, நமது பகை புலத்தை உபயோகிக்கிறபோதுகூட, நிகழ்ச்சிகளின் ஒழுங்கும் தர்க்கமும் வெளிநாட்டு சுவாரஸ்ய கதைகளினது தழுவல்களாகவே இருந்தன. டி.கே.சிதம்பரநாத முதலியார் இதை வெளிப்படையாகவே குறிப்பிட்டிருக்கிறார். கல்கி ஆரம்பித்த இந்த சுவாரஸ்யத் தழுவல், தமிழ் வாணனிலிருந்து சுஜாதா ஈறாகத் தொடர்ந்திருக்கிறது. பெருவாரிப் பத்திரிகையினில், இந்தத் தோரணையைக் கையாளாததுடன், இலக்கிய பூர்வமாகக் கணிக்கத்தக்க எழுத்தையும்கூட படைத்தவர்கள் தி.ஜானகிராமனும் த.ஜெயகாந்தனும்தான். இத்தகைய திறனாளிகளைப் படிப்பது, இவர்களைவிட நுட்பமாக எழுதுவோரை ரசிப்பதற்கான ஒரு ஆரம்பப் பயிற்சியாகவேனும் இருக்கும்.

இடதுசாரி எழுத்தாளர்கள், தங்களது அரசியல் தீர்வைத்தான் கலைஞர்கள் யாவருமே வெளியிட வேண்டும் என்று கூப்பாடு போட ஆரம்பித்தபோது, எழுத்துலகில் மிகுந்த குழப்பம் பிறந்தது. இடதுசாரி பக்கம் தலையைத் திருப்பி, சல்யூட் அடித்தபடி நடை போடும் படைப்புகள் பிறந்தன. தொன்மையான மரபில் ஊறிய கிராம வாழ்வும் சமூக வாழ்வும், ஒரு பூர்வகுடித்தனமான சரீர வாழ்வாகமட்டும் இவர்களால் சித்திரிக்கப்பட்டுள்ளது. இதற்காக, காமம் சம்மந்தமான சில சுவாரஸ்ய அம்சங்களையும் இவர்களுள் ஓரிருவர் உபயோகித் துள்ளனர். எதையுமே பிரச்னையாக்கி ஒழுக்கத்துடன் தொடர்பு படுத்தும் மனித இயற்கைக்கூட, இவர்களுக்கு அத்துபடியாகவில்லை.

நாவலை ஒரு கலைப்படைப்பாக சிறப்பிக்கக்கூடிய மனம், சிந்தனை சார்ந்த மனமாக இருக்கவேண்டும். பாத்திரங்களது செயல்களுக்கும் முடிவுகளுக்கும் சிந்தனையே ஆதாரமாக வேண்டும். அப்போதுதான் நாவலின் பரந்த களம் அலுப்புத்தராது. வெறும் சரீரப்பிரச்சினைகளைச் சார்ந்த மதிப்பீடுகள், ஒருசில பக்கங்களுள் பிசுபிசுத்துவிடும். மனித மனம் மதிப்பீடுகளை உருவாக்கி அவற்றை அநுபவத்துடன் பொருத்தி விசாரிக்கும் குணத்தைக் கொண்டது. இந்த அடிப்படையுடன், நாவலின் கட்டுக்கோப்புக்குள் முரண்படாதவாறு பாத்திரம், இயற்கையாக வளரவும் வேண்டும். இதற்காக, இயற்கையில் உள்ளதை அப்படியே போட்டோ பிடித்த மாதிரி எழுதவேண்டும் என்று கருதுவது தவறு. பார்க்கப்போனால், ஒவ்வொரு நாவலும் உலகை ஆதாரமாக கொண்டு வளர்ந்த வேறு ஒரு உலகம்தான். எனவே, ‘யதார்த்தம்’ என்பதன் பொருளை, நாவலின் கட்டுக்கோப்புக்குள் ஏற்படும் தர்க்கங்களுக் குள்தான் பார்க்க வேண்டும். இது, இன்று தங்களை விமர்சகர்கள் என்று நம்பிக்கொண்டிருக்கும் சிலருக்குப் புரியாதது, தெரியாதது.

இன்றைய தலைமுறை வாசகர்களுள் எத்தனை பேர், பொய்த் தேவு என்ற நாவலைப் படித்திருப்பார்கள் என்பது சந்தேகம். இதை எழுதியவர் க.நா.சுப்ரமண்யம். தமிழின் மிகச் சிறந்த நாவல் என்று இதைத்தான் சொல்ல வேண்டும்.....
புயலிலே ஒரு தோணி, ஒரு கலவர நிலையை அதன் பின்னணியில் மட்டுமே சித்தரிக்கும் நாவல். ‘சுஜாதா’ பாணியில் எழுதப்பட்ட நாவல் என்றுதான் அதைச் சொல்லவேண்டும். விஷேசமாக, ஜே.ஜே.யை மிகச் சிறப் பிப்பதற்காக வேண்டுமென்றே செய்யப்பட்ட தேர்வு இது. மிகச் சிறந்த தமிழ் நாவலை எழுதிய க.நா.சு. இந்த நாவலை நாவலே அல்ல என்று கூறியதுக்காக, க.நா.சு.வின் நாவலைக் கீழிறக்கிக் கூட இந்தக் குழு கணித்திருக்கிறது. க.நா.சு.வுடன் எனக்கும்தான் தீவிரமான அபிப்ராய வேறுபாடுகள் உள்ளன. அதற்காக, ஒரு சிறந்த நாவலைச் சிறப்பில்லாத நாவல் என்று கூறிவிட முடியுமா?

மோகமுள், தன்னளவில் ஒரு பூரணமான நாவல். தலைப்பைத் தொட்டுநிற்கும் பிரச்சினையுடன் தொடர்புள்ள வேறு பிரச்சினை களின் கிளைகளும் அதற்கு உண்டு. ஜே.ஜே. சில குறிப்புகளில் எதுவிதப் பிரச்சினையுமே இல்லை. இடதுசாரிகளின் பார்வையை, சரியாக காட்டாமலே, அதை ஓரிரு பாத்திரங்களின் மூலம் ஆசிரியர் கிண்டல் பண்ணுகிறார். இந்தப் பாத்திரங்கள் குறுக்கு வழியில் இடதுசாரி அரசியலை உபயோகித்தமையால் இந்தக் கிண்டல். ஆனால் மதிப்பீடு களின் யாத்திரையோ அதைப் பிரதிப்பலிக்கும் பாத்திரமோ நாவலின் இல்லாததால், இந்தக் கிண்டல் ஆழமற்ற விகடக் கச்சேரியாகவே நிற்கிறது.

உலகை ஆதாரமாகக் கொண்டு வளர்ந்த இன்னொரு உலகின் ‘யதார்த்தம்’கூட ஜே. ஜே.யில் இல்லை... ஏனெனில், தன்னளவில் தர்க்க பூர்வமாக ஒருமை பெறாத உலகம் அது. ஜே.ஜே. என்பவன் சந்திக்கும் முதல் மனிதனாலேயே, உணர்வுநாசம் பெறுகிறான் என்கிறார் ஆசிரியர். நாவலில், அவனைச் சந்திக்கும் முக்கியப் பாத்திரம்தான் உணர்வுநாசம் பெறுகிறது. ஜே.ஜே. என்ற பாத்திரமே பிறருக்கு உணர்வுநாசம் தரும் பாத்திரம்தான். இப்படித் தன்முரணான ஒரு உலகம் தன்னளவில் யதார்த்தமானதல்ல. மேலும், ‘அவனுடைய உயிர் திராவிட உயிர் என்றாலும் தமிழ் உயிர் அல்ல,’ என்ற மறைமுகமான இனவாதமும் நாவலில் உண்டு. இதை நான் விரிவாக வேறு இடங்களில் விமர்சித்துக் காட்டி உள்ளேன்.

புயலிலே ஒரு தோணி, ஒரு கலவர நிலையையும் அதனூடே தப்பி ஓடிவருவதையும் ‘டாக்குமெண்டரி’யாக, அதுவும் சுவாரஸ்யத்தை முன்நிறுத்தி எழுதப்பட்ட நாவல். பிரச்சினை என்று மதிப்பீட்டு ரீதியாக எதையும் எழுப்பாத நாவல்.
பின் இரு நாவல்களையும் விடச் சிறந்தவை என்று, கீழேவரும் நாவல்களை குறிப்பிட முடியும் (கீழுள்ள வரிசைக் கிரமத்துக்கு விஷேச அர்த்தம் இல்லை.):

1. கமலாம்பாள் சரித்திரம் - பி. ஆர். ராஜமையர்
2. பொய்த்தேவு - க. நா. சுப்ரமண்யம்
3. நாகம்மாள் - ஆர். ஷண்முகசுந்தரம்
4. ஒரு நாள் - க. நா. சுப்ரமண்யம்
5. வாழ்ந்தவர் கெட்டால் - க. நா. சுப்ரமண்யம்
6. அசுரகணம் - க. நா. சுப்ரமண்யம்
7. ஜீவனாம்சம் - சி. சு. செல்லப்பா
8. வாடிவாசல் - சி. சு செல்லப்பா
9. மோகமுள் - தி. ஜானகிராமன்
10. புத்தம்வீடு - ஹெப்ஸிபா ஜேசுதாசன்
11. நிழல்கள் - நகுலன்
12. ஒருமனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - த. ஜெயகாந்தன்

பொய்த்தேவு: சிறந்த தமிழ் நாவல். அரும்பு, மார்ச்-ஏப்ரல் 1987.