தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Tuesday, March 27, 2018

பாரதியின் “ரெயில்வே ஸ்தானம்“


பாரதியின் “ரெயில்வே ஸ்தானம்“ ஒரு சிறிய கதை
-------------------------------------------------
பாரதியின் முன்னோடி மூன்று கதைகளையும் இணையத்தில் எளிதாகப் பெறமுடியும். துளசீபாய், ஆறில் ஒரு பங்கு, ரெயில்வேஸ்தானம் என்ற இவற்றின் இணைப்புகளை இங்கு தருவேன். பழைய பத்திரிகை/ புத்தகப் பதிவுகளை விரிவாகவும் அர்ப்பண உணர்வோடும் செய்துவரும் திரு பசுபதி அவர்கள், (பசு பதிவுகள்) தமது துளசீபாய் பதிவை எனது முந்திய பதிவின் பின்னூட்டத்தில் தந்திருக்கிறார். நன்றியுடன் அதையும் இங்கு சேர்த்துத் தருகிறேன் ரெயில்வேஸ்தானம் சிறுகதை சிறியது என்பதால் அப்படியே இங்கு பதிவிடுகிறேன்.


ரெயில்வே ஸ்தானம்
ஒரு சிறிய கதை



வஸந்த காலம். காலை நேரம். தென்காசி ஸ்டேஷன். இது பிரிட்டிஷ் இந்தியாவைச் சேர்ந்தது. இதற்கு மேற்கே யுள்ள அடுத்த ஸ்டேஷன் செங்கோட்டை. இது திருவாங்கூர் ஸமஸ்தானத்தைச் சேர்ந்தது, தெற்கே இரண்டு மைல் தூரத்தில் மிகக் கீர்த்திபெற்ற குற்றாலத்தருவி விழுகிறது. பக்கமெல்லாம் மலைய கிரிச் சாரல். கொஞ்சம் மேற்கே போனால், செங்கோட்டை ஸ்டேஷன் முதல் திருவனந்தபுரம் வரை பாதையிலே பத்து ஸ்டேஷன் மட்டும். இரண்டு பக்கங்களிலும் செங்குத்தான மலைகளும், ஆழமான பள்ளங்களும், மலையை உடைத்து ரயில் வண்டி ஊடுருவிச் செல்லும் பொருட்டாக ஏற்படுத்தப்பட்ட நீண்ட மலைப் புழைகளும் இரு பாரிசத்திலும் இயற்கையாய்ப் பச்சை உடுத்து, சால மிகப் பெருஞ் செழிப்புடனே களிகொண்டு நிற்கும் பல வகைப்பட்ட வனக்காட்சிகளும் ஒருமுறை பார்த்தால் பிறகு எக்காலத்திலும் மறக்கமுடியாதன.

இந்தத் தென்காசி ஸ்டேஷன் வெளி முற்றத்தில் காலை நேரத்திலே திருநெல்வேலிப் பக்கம் கிழக்கே போகும் ரயில் வரப்போகிற சமயத்தில் சுமார் நூறு பிரயாணிகள் வந்து கூடி யிருக்கிறார்கள்.

________________

இவர்களிலே சிலர் பிராமண வைதீகர். நீர்க்காவி அழுக்கு நிறமாக ஏறிப்போன மிகப் பழைய வெள்ளைத் துணி உடுத்து உடல் வேர்க்க உட்கார்ந்து கொண்டு, இன்ன ஊரில், இன்ன தேதி, இன்னாருக்குச் சீமந்தம் என்ற விஷயங்களைப் பற்றி சம்பாஷணை செய்து கொண்டிருக்கிறார்கள்.

பிராமண விதவைகள் பலர் ஒரு புறத்திலே யிருந்து தமக்குள் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார்கள். சுமங்கலிப் பிராமணத்திகள் ஒரு பக்கத்தில் தலைகுனிந்து நின்றுகொண்டு, போவோர் வருவோரை கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வேறு சில உத்தியோகஸ்தர் தலைப்பாகை, கோட்டு, கெடியாரச் சங்கலி சகிதமாக உலாவுகிறார்கள். சில போலீஸ்காரர்கள் சக்கிரவர்த்திகளைப் போலத் தலைநிமிர்ந்து நடக்கிறார்கள்.

சில முகம்மதிய ஸ்திரீகள் முட்டாக்குப் போட்டு தலையையும் முகத்தையும் மூடிக்கொ ..சுடு திசைக் கொருத்தியாகப் பார்த்து உட்கார்ந்து கொண்டிருக் கிறார்கள்,

வெற்றிலை, பாக்கு, புகையிலை, சுருட்டு, பீடி, பொடிப்பட்டை, முறுக்கு, தேங்குழல், சுகியன், காப்பி முதலியன வியாபாரம் செய்யும் ஓரிரண்டு பிராம்மணரும் சூத்திரரும் பகற் கொள்ளை நடத்திக் கொண்டிருக் கிறார்கள். அதாவது காசு பெறாத சாமான்களுக்கு மும்மடங்கு நான்கு மடங்கு விலை வைத்து விற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

ரயில் வண்டி அன்றைக்கு ஒரு மணி நேரம் தாமஸமாக வந்தது. எனக்குப் பொழுது போகவில்லை.

________________

தண்டவாளத்தின் ஓரமாகச் சிறிது தூரம் உலாவி வரலாமென்று கருதித் தென்புறமாகக் கூப்பிடு தூரம் போனேன்.

அங்கு ஒரு மரத்தடியிலே மிகவும் அழகுள்ள ஒரு மகம்மதிய கனவான் உட்கார்ந்திருக்கக் கண்டேன். சரிகைத் தொப்பி, சரிகைக் கரைகள் தைத்த மஸ்லின் சட்டை, சரிகைக் கரை போட்ட நிஜார், சரிகை போட்ட செருப்பு, பூர்ணச் சந்திரன் போன்ற முகம், செழித்து வளர்ந்த மீசை. அவனைப் பார்த்த மாத்திரத்திலே அவன் பிரபுக் குலத்தில் பிறந்தவனென்று எனக்கு நிச்சயமாகி விட்டது. அவன் கண்களினின்றும் தாரை தாரையாகக் கண்ணீர் ஊற்றுகிறது,

இதைப் பார்த்து எனக்கு மிகவும் பரிதாப முண்டாயிற்று. நான் போய் அவனை 'ஏன் அழுகிறாய்?" என்று கேட்டால், அதினின்றும் அவனுக்கு ஒருவேளை கோபம் உண்டாகுமோ என்பதைக்கூட யோசனை செய்யாமல் சரேலென்று அவன் முன்னே போய் நின்றுகொண்டு, "தம்பி, ஏன் அழுகிறாய்?'' என்று

கேட்டேன்,

அவன் என்னை ஏற இறங்க ஒருமுறை பார்த்தான். அவனுக்கு 25 வயதுக்குமேல் இராது. அவன் தலையைக் குனிந்து அழுது கொண்டிருந்தபோதே மிகவும் சுந்தர புருஷனாகக் காணப்பட்டான். பிறகு அவன் என்னைப் பார்த்தவுடன் கண்ணைத் துடைத்துக்கொண்டு என் இரண்டு கண்களுடனே அவனிரண்டு கண்களும் பொருந்த நோக்கிய காலத்தில் அவன் ரூபம் எனக்கு சாட்சாத் மன்மத

ரூபமாகவே தென்பட்டது.

என்னை உற்று நோக்கியதினின்றும் அவனுக்கு எப்படியோ என்னிடத்தில் நல்லெண்ணம் உண்டாய் விட்டது. சற்றேனும் என்னிடம் கோபம் கொள்ளாமல் “ரயில் எப்போது வரப்போகிறது?” என்று கேட்டான்.

________________

“இன்றைக்கு ஒரு மணி நேரம் ரயில் தாமதித்து வரப்போவதாக ஸ்டேஷன் மாஸ்டர் சொன்னார்” என்றேன்.

எனக்கு ஹிந்துஸ்தானி அல்லது உருது பாஷை நன்றாகத் தெரியும். ஆதலால், நான் அவனிடம் உருது பாஷையிலே ஆரம்ப முதல் பேசினேன்.

“உங்களுக்கு உருது எப்படித் தெரியும்? உங்களைப் பார்த்தால் ஹிந்துக்கள்போலத் தோன்றுகிறதே?” என்று கேட்டான்.

அதற்கு நான், “சிறு பிராயத்திலேயே நான் காசிப்பட்டணத்தில் கல்வி பயின்று கொண்டிருந்தேன். அங்கு எனக்கு ஹிந்துஸ்தானி பாஷை பழக்கமாயிற்று" என்றேன்.

“காசியில் ஹிந்தி பாஷை அன்றோ பேசுகிறார்கள்?" என்று அந்த முஸல்மான் கேட்டான்.

அதற்கு நான், “ஹிந்தி, உருது, ஹிந்துஸ்தானி எல்லாம் ஒரே பாஷைதான். முகலாய ராஜாக்கள் பாரசீக பாஷையிலேதான் பெரும்பாலும் ஆரம்பத்திலே விவகாரம் நடத்திவந்தார்கள். பின்னிட்டு அவர்கள் தமக்கும் தம்முடைய பரிவாரங்களுக்கும் இந்த தேசத்துப் பாஷையாகிய ஹிந்தியையே பொது பாஷையாகக் கைக்கொண்டார்கள். ஹிந்தி பாஷை ஸம்ஸ்கிருதத்தி லிருந்து பிறந்தது. அது ஸம்ஸ்கிருத பாஷையின் சிதைவு. அதை ஹிந்துக்கள் தேவநாகரியில் எழுதி ஸ்வயம்புவாகப் பேசுகிறார்கள். அதையே பார்ஸி லிபியில் எழுதிக் கொண்டு பல பார்ஸி அரபி மொழிகளைக் கலந்து முஸல்மான்கள் பேசியபோது அதற்கு ஹிந்துஸ்தானி அல்லது உருது என்று பெயர் வழங்கினார்கள். உருது என்றால் கூடார பாஷை யென்று அர்த்தம். அதாவது, மொகலாய ராஜ்யத்தின் சேனைகள் கூடாரம்

________________

அடித்துக்கொண்டு பல தேசத்துப் போர் வீரர்கள் கலந்திருக்கையில் அங்கு தோன்றிய கலப்புப் பாஷை என்று பொருள். எனக்கு ஹிந்திதான் மிகவும் நன்றாகத் தெரியும். எனிலும் ஹிந்துஸ்தானி அல்லது உருது மேற்படி ஹிந்தி பாஷையில் பார்ஸி அரபிச் சொற்கள் சேர்ந்ததே யாகு மாதலால்தான் இதிலும் நல்ல பழக்கமுடையவனானேன்.” இது நிற்க.

“நீ வருத்தப்பட்டுக் கொண்டிருந்த காரணம் யாது?" என்று மறுபடியும் என்னை அறியாமலே கேட்டேன்.

இது கேட்டு அந்த முகம்மதியப் பிரபு சொல்லுகிறான்: "சுவாமி, உங்களைப் பார்த்த மாத்திரத்திலேயே எனக்கு உங்களிடம் விசுவாசம் உண்டாகிறது. உங்களிடம் சொன்னால் என் துக்கத்திற்கு நிவர்த்தி உண்டாகு மென்று என் மனதில் ஒருவித நிச்சயம் தோன்றுகிறது. என் துயரம் சாதாரணமாக மற்றவர்களிடம் சொல்லக்கூடியதன்று. எனினும், உங்களிடம் சொல்லலாமென்று நினைத்துச் சொல்லுகிறேன். என் துயரத்தைத் தீர்த்துவிட்டால் உங்களுக்கு மிகுந்த புண்ணிய முண்டு. இந்த உபகாரத்தை நான் இறந்துபோகும்வரை மறக்க மாட்டேன்" என்றான்.

“முதலாவது உம்முடைய கஷ்டத்தைச் சொல்லும். தீர்க்க வழி கிடைத்தால் தீர்த்து விடுகிறேன்” என்றேன்.

அப்போது அம் முகம்மதியப் பிரபு பின்வருமாறு சொல்லத் தொடங்கினார்:

எங்கள் ஜாதியில் சிறிய தகப்பனார், பெரிய தகப்பனார் மக்களை விவாகம் செய்து கொள்ளலா மென்பது உங்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும். நான் பிறந்தது வடக்கே ஹைதராபாத் நகரம், சிந்து மாகாணத்து ராஜதானியாகிய ஹைதராபாத் அன்று. நிஜாம் அரசரின் ராஜதானியாகிய ஹைதராபாத் நகரம்.

________________

நான் என் பிதாவுக்கு ஒரே பிள்ளை. நான் பிறக்கும்போது என் பிதா மிகவும் ஏழையாக இருந்தார். நான் பிறந்து சில வருஷங்களுக்குப் பின் எங்கள் ராஜ்யத்தில் ஒரு பெரிய 'லாட்டரி' ஏலச் சீட்டுப் போட்டார்கள். அந்தச் சீட்டுக்கு என் பிதா யாரிடமிருந்தோ 10 ரூபாய் கடன் வாங்கி அனுப்பினார். அதிர்ஷ்டம் அவருக்கிருந்தது. அவருடைய தரித்திரத்தை நாசம் பண்ணிவிட வேண்டுமென்று அல்லா திருவுளம் பற்றினார். ஒரு கோடி ரூபாய் சீட்டு அவருக்கு விழுந்தது.

பிறகு அவர் அதைக்கொண்டு சில வியாபாரங்கள் நடத்தினார். அந்த வியாபாரங்களிலும் அவருக்கு மிதமிஞ்சிய லாபம் கிடைக்கத் தொடங்கி, சில வருஷங்களுக்குள்ளே ஏழெட்டுக் கோடிக்கு அதிபதியாய் விட்டார். அப்பால் சற்றே நஷ்டம் வரத் தொடங்கிற்று. என் பிதா நல்ல புத்திமான், நஷ்டம் வரத் தொடங்கிய பாத்திரத்திலே திடீரென்று வியாபாரங்களை யெல்லாம் நிறுத்திக்கொண்டு, பணங்களைத் திரட்டி ஏராளமான பூஸ்திதிகள் வாங்கி அவற்றினிடையே மாளிகை கட்டிக்கொண்டு தம்மால் இயன்ற வரை பரோபகாரத்தில் ஈடுபட்டவராய் வாழ்ந்து வந்தார்.

நான் பதினைந்து வயதாக இருந்தபொழுது அவர் இறந்து போய்விட்டார். நான் ஒரே பிள்ளை யாதலால் அவர் சொத்தெல்லாம் எனக்கு வந்து சேர்ந்தது. என் வீட்டு மேற்பார்வை செய்ய எனது சிறிய தகப்பனார் நியமிக்கப்பட்டிருந்தார். என் தந்தை இறக்குந் தறுவாயில் சிறிய தகப்பனாருக்குச் சில லக்ஷங்கள் பெறக்கூடிய பூமி இனாம் கொடுத்ததும் அன்றி, என்னைப் பராமரித்து வரும் கடமையையும் அவருக்கே சார்த்திவிட்டுப் போனார்.

எனது சிறிய தகப்பனார், முதலாவது வேலையாக, தம்முடைய குமாரத்திகளை எனக்கே மணம் புரிவித்தார்.

________________

என் பிதா இறந்து இரண்டு வருஷங்கள் ஆகுமுன்னரே, மேற்படி விவாகம் நடைபெற்றது. என் சிறிய தகப்பனாருக்கு ஆண் குழந்தை கிடையாது. மூன்று பெண் பிரஜைதான் அவருக்குண்டு. ஆகவே என்னுடைய சொத்து வெளிக் குடும்பங்களுக்குப் போய்விடக்கூடாதென்று உத்தேசித்து அவர் இங்ஙனம் செய்தார்.

இந்த விவாகம் என் தாயாருக்குச் சம்மதம் இல்லை. அவள் தன்னுடைய வகையில் ஒரு அழகான பெண்ணை எனக்கு மணம் புரிவிக்க விரும்பினாள். அதை விட்டு நான் சிறிய தகப்பனாரின் பெண்களை விவாகம் செய்துகொண்டாலும் அவர்களில் யாரேனும் ஒரு பெண்ணை மாத்திரம் மணம் செய்து கொள்வதே சரி யென்றும், ஒரேயடியாக மூவரையும் மணம் புரிவது கூடாதென்றும் என் தாய் வற்புறுத்தினாள். இதினின்றும் என் தாயாருக்கும் சிறிய தகப்பனாருக்கும் மனஸ்தாபம் மிகுதியாக ஏற்பட்டது.

சிறிய தகப்பனார் என்னைத் தனியாக வேறே ஊருக்கு அழைத்துக் கொண்டுபோய் அங்கு என் தாயாருடைய அனுமதி இல்லாமலே விவாகத்தை முடித்து வைத்து விட்டார். சிறிது காலத்துக் கெல்லாம் என் தாயார் என் செய்கையாலே ஏற்பட்ட துக்கத்தைப் பொறுக்க மாட்டாமலே உயிர் துறந்து விட்டாள்.

சிறிய தகப்பனார் இட்டதே என் வீட்டில் சட்டமாய் விட்டது. சொத்து விஷயங்களை நான் கவனிப்பதே கிடையாது. எல்லாம் அவர் வசத்தில் விட்டு விட்டேன், அவரும் என் சொத்தில் தம்மால் இயன்ற வரை இரண்டு மூன்று வருஷங்களுக்குள்ளே அறுபத்தேழு லக்ஷம் - கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் வரை - தாஸிகளின் விஷயத்திலும் குடியிலும் நாசம் பண்ணிவிட்டு, கடைசியில் குடி மிகுதியால் குடல் வெடித்துச் செத்துப்போனார்.

________________

பிறகு என் சொத்தை யெல்லாம் நிர்வகிக்க வேண்டிய கடமை என்னைப் பொறுத்ததாயிற்று. சரி, இந்த விஷயத்தை விஸ்தாரமாகச் சொல்லுவது என்னுடைய நோக்கமன்று. சொத்துக் கொஞ்சம் நஷ்டமானதில் எனக்கு அதிகக் கஷ்டமில்லை. இதனிடையே என்னுடைய மூன்று மனைவிகளால் நான் படும் பாடு சொல்லுந் தரமன்று .

அதோ - பார்த்தீர்களா? ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் முகம்மதிய ஸ்திரீகள் உட்கார்ந்திருக்கும் கூட்டம் தெரிகிற தன்றோ ? நடுவே யிருக்கும் மூன்று பேரும் என் பத்தினிமார், சுற்றி உட்கார்ந்திருப்போர் வேலைக்காரிகள். அந்த மூன்று பேரும் மூலைக் கொருத்தியாக முகத்தைத் திருப்பிக்கொண்டு உட்கார்ந்திருப்பதைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர்களுக்குள்ளே மன வொற்றுமை யில்லை யென்பது பிரத்யக்ஷமாக விளங்கவில்லையா? இவர்களில் மூத்தவள் பெயர் ரோஷன். அவளுக்கு வயது இருபத்திரண்டு. அடுத்தவள் பெயர் குலாப் பீவி. அவளுக்கு வயது பத்தொன்பது. அதற்கடுத்தவள் பெயர் ஆயிஷா பீவி. அவளுக்கு வயது பதினாறு.

ரோஷனிடத்தில் நான் பேசினால் குலாப் என்னை வெட்டலாமென்று கருதுகிறாள். குலாபிடம் வார்த்தை பேசுவது ஆயிஷாவுக்குச் சம்மதமில்லை . அவளுக்கு ஒரு நகை வாங்கிக் கொடுத்தால் இவள் ஒரு நகையை உடைத்தெறிகிறாள். இவளுக்கொரு பட்டுச்சட்டை வாங்கிக் கொடுத்தால் அவளொரு சட்டையைக் கிழித்தெறிகிறாள். இங்ஙனம் ஒவ்வொரு விஷயத்திலும் அம் மூவரும் முரண்பட்டு என் பிராணனை வதைக்கிறார்கள். ஒரு நாளா, இரண்டு நாளா, ஒரு வருஷமா, இரண்டு வருஷமா. என் வாழ்நாள் முழுவதும் இவர்களால் நரகமாக்கப் படுகிறது. நான் என்ன செய்வேன்?

________________




இதனிடையே நேற்றிரவு ஒரு கனாக் கண்டேன். அதில் முகம்மது நபி வந்து என்னை நோக்கி 'அடே இஸ்மேல்கான், நீ உன் பத்தினிமார் மூவராலே மிகவும் கஷ்டப்படுகிறாய். யாரேனும் இருவரைத் தள்ளி வேறு விவாகம் செய்துகொள்ள விட்டுவிடு. ஒருத்தியை மாத்திரம் வைத்துக்கொள். உன் துக்கம் தீரும்' என்றார்.

நான் அந்தக் கனவைத் தெய்வ சாசனமாகவே நம்புகிறேன். நம்முடைய மனத்தில் தோன்றுவதுதான் கனவாக வருகிற தென்பதை நான் அறிவேன்.

ஆனாலும் நம்முடைய ஆத்மாவிலும் அல்லாவே இருக்கிறாராதலால் இந்தக் கனவை அல்லாவின் கட்டளை யென்று நான் கருதுகிறேன்.

ஆனால், இந்த மூன்று ஸ்திரீகளிடமும் ஸமானமான பிரியம் இருக்கிறது, அவர்களும் என்னிடம் ஸமமான காதல் கொண்டிருக்கிறார்களென்றும் நினைக்கிறேன். யாரைத் தள்ளுவது, யாரை வைத்திருப்பது என்று என் புத்திக்குத் தென்படவில்லை. அதற்காகத் துக்கப் படுகிறேன் - என்று முகம்மதியப் பிரபுவாகிய இஸ்மேல்கான் சொன்னான்.

இதற்குள் ரயில் ஸ்டேஷனுக்குள் வருகிற சத்தம் கேட்டது. அவன் திடுக்கென்றெழுந்து “ஸ்ஸலாம்! ஸலாம்!” என்று சொல்லிவிட்டு ஸ்டேஷனை நோக்கி ஓடினான்.

நானும் "நல்ல வேளை இந்தக் கடினமான விவகாரத்துக்குத் தீர்ப்புச் சொல்லுமுன் ரயில் வந்ததே” என்ற மகிழ்ச்சி கொண்டு ரயிலிலேறப் போய்விட்டேன்.

முகம்மது நபி கனவில் செய்த கட்டளைப்படியே அவன் நடந்து கொள்வானென்று நம்புகிறேன்.
________________
படிப்பவர்களுக்குச் சில செய்திகள் 

இக் கதை முதன்முதலாகச் சுதேச மித்திரன் 22-5-1920ஆம் தேதிய இதழில் வெளியானபின், பாரதி பிரசுராலயம் வெளியீடு செய்த கட்டுரைகள் தொகுதியில் பதிப்பிக்கப் பெற்றது.
இது வெறும் கற்பனைக் கதைதான் என்றாலும், ஒருவன் பல மாதரை மணம் புரிந்து கொண்டால், அதினின்றும் அவனுக்குக் கஷ்டந்தான் விளையு மென்பதும், விவாகத்தில் ஒருவன் இன்பங் காண வேண்டினால் அவன் ஒருத்தியை மணம் செய்து கொண்டு அவளிடம் உண்மையாக நடந்து கொள்வதே உபாயமாகும் என்பதும் கதையில் சொல்லப்பட்ட தர்ம போதனையாகும்.
இக் கதையைப் பாரதி தர்ம போதனையாக எழுதிய நிலையில், கதையின் நாயகனை ஒரு முஸ்லீம் பிரபுவாகச் சித்திரித்து விட்டு, அப் பிரபு மூன்று சகோதரிகளை மணம் செய்து கொண்டதாகப் புனைந்திருந்தார்.
கதையைப் படித்த பாரதியின் முஸ்லீம் நண்பர் ஒருவர் பாரதியைச் சந்தித்து, “சகோதரமான மூன்று பெண்களை மணம்புரிந்து கொள்ளுதல் மஹமதிய சாஸ்திரப்படி 'பாதகமாகக் கருதப்படுகிறது. தன் மனைவி உயிருடன் இருக்கையில், அவளுடன் பிறந்த மற்றொரு பெண்ணை ஒரு முஸ்லீம் மணம்புரிந்து கொள்ளக் கூடாது என்பது எங்கள் சாஸ்திரங்களின் கொள்கை” என்று விவரித்தார்.
நண்பரின் விளக்கத்தைக் கேட்ட அளவில் பாரதி தமக்கு அந்த விஷயம் தெரியாது என்று சொல்லி, முஸ்லீம் நண்பர் சுட்டிக்காட்டிய பிழையின் தன்மையை உணர்ந்து திருத்தம் ஒன்றை வெளியிட்டார்.
________________
பாரதி வெளியிட்ட திருத்தம் வருமாறு:
'ரெயில்வே ஸ்தானம்' என்ற கதையில் நான் மேலே கூறிய ஸாதாரணத் தவறு புகவிட்டது பற்றிப் பத்திராதிபரும் பத்திரிகை படிப்போரும் என்னைப் பொறுத்துக் கொள்ளும்படி வேண்டுகிறேன்.
உலக மெல்லாம் மாதர்களுக்கு நியாயம் செய்ய வேண்டுமென்ற கிளர்ச்சி நடப்பதை அனுசரித்து முஸ்லீம்களும் ஏக பத்நீ விரதம், பெண் விடுதலை. ஆண் - பெண் ஸமத்வம் என்ற கொள்கைகளைப்பற்றி மேன்மை யடைய வேண்டுமென்பதே என் கருத்து. இந்தக் கருத்து நிறைவேறும்படி பரமாத்மாவான அல்லா ஹுத்த ஆலா அருள் புரிவாராக.