தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Saturday, March 17, 2018

அரசனும் அரசியும் - ரமேஷ் பிரேதன்

அரசனும் அரசியும் - ரமேஷ் பிரேதன்

வரலாற்றில் மாபெரும் பிழையைச் செய்துவிட்டீர்
எல்லோராலும் பாடப்பட்ட எளிய கவிதையைத் தடை செய்தீர்


பேரரசனும் பேரரசியுமான நீங்கள்
ஓர் எளிய கவிஞனைக் கழுவிலேற்றினீர்

கரைபுரண்டோடும் இரண்டு ஆறுகளுக்கு
இடைப்பட்ட வள நாடு கொண்டீர்
இரண்டு ஆறுகளையும் உங்கள் இருவரின் பெயர்களால்


அழைக்கப்பட வேண்டும் எனக் கட்டளையிட்டீர்
உங்களது பெயர்களைத் தாங்கிய ஆறுகள்
படிப்படியாக நீர்ப்போக்கு அற்று
வெற்று மணல் பரப்பாகத் தகித்துக் கிடக்கின்றன

நீள் மதில் சூழ் நெடுங்கோபுரச் சிவத்தலம்
எழுந்தருளிய அன்னைக்கும் அய்யனுக்குமான
பெயர்களை மாற்றி
உங்களது பெயர்களைச் சூட்டினீர்கள்
கோயில் கொண்ட தெய்வங்கள்
சினம் கொண்டு காடு பாய்ந்தன

அரண்மனைக்கு வெளியே நெடிதுயர்ந்த சிலைகள் இரண்டு

உங்களை நீங்களே வடித்துக்கொண்டீர்
குடிமக்களைக் கடவுளர்களாக வழிபட நிர்ப்பந்தித்தீர்
வரலாற்றில் மாபெரும் பிழையைச் செய்துவிட்டீர் எல்லோராலும் பாடப்பட்ட எளிய கவிதையைத் தடை செய்தீர்


பேரரசனும் பேரரசியுமான நீங்கள்
ஓர் எளிய கவிஞனைக் கழுவிலேற்றினீர்
ஆம், கழுவிலேற்றினீர்
O