தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Thursday, May 08, 2014

சித்ரூபிணி கவிதைகள் - பிரம்மராஜன்

சித்ரூபிணி -1 - பிரம்மராஜன்

நினைவின்  மூன்றாம் ஜாமத்திலும்
உடுக்காத உன் உடற்கூறுகளின் ஊடாக
ஒளிமைப்படுத்தி ராட்சதச் சுவர்கள்
தசையின் இன்மையிலும் பிம்பமாக்கும் விருப்பக் கடன்
உன் குரல் கொஞ்சம் வர்ணத்தினை வசீகரித்து
சப்தநாடிகளும் ஒரே மனத்திற்குள்
அறிதல் அனைத்தும் ஆள்காட்டும் விரலாகி
கிரேக்க மூக்கின் மேல் முத்திட்டு நிற்கும்
பனித்துளியைத் துடைக்கும்
எண்முகத்தை எட்டு திசைகளிலும் திருகி
காண்பேன் உன்னை
சிற்றிடை நாயகி
வாடா முலையே
நித்திய சரணம் சாத்தியம்தான்
கடைசிக் கூளத்தையும் கொட்டிக்கொடுத்து
முத்தங் கண்டு சொல்பித்த வார்த்தைகள் அல்லவே
இவை என்பினும்
நானுமோ ஒரு கல்லுளி மங்கன் துயிலின் காதலன்
உன்னைச் சிறைபிடித்து சிற்பித்து
பிரதிஷ்டை செய்யப் புறப்பட்டவன்
பேதையிலும் பேதை
உன் உதரக் கள்  விரும்பாத விரதன்
என் உதடுகளும் சர்வாங்க தகனமாகட்டும்
இச்சை கொன்ற காமித அக்னியிதில்
அப்பொழுதாவது  அதன் சிவப்பு விதையும் ஆரஞ்சு சதையும்
தெரியம்படி பிளக்கப்படும் ஜாதிப்பழமென
என்னை மலர்த்து
நீ பகிரும் பொருட்டாவது.

சித்ரூபிணி -2

நீதானா வலி முற்றிய துயர் மிகுந்த விலங்குகளைக்
கொல்ல கட்டளை கொடுத்தது
நீதானே கடைசிக் கனி விட்டதும் கறையான்கள் அரித்து
இடுப்பு இற்றுவிழ குடை சரியவிட்டதும்
அன்றியுன் அரூபப் பிரதிகளில் ஒன்றின் மலர் மிசையில்
என்னை மயக்கத்தின் சுழலில் வீழ்த்தியது
அல்லது நீயோதான் பகாபதத்தினை மகிமைப் படுத்த
திசைப்படுத்தியது
விண்மீன்களையும் நோக்கவிடாது உன் வளர்முலையை
வணங்கச் சொன்னது நீயோ யாரோ
நானோ எதைப்பிடித்தாலும் அதுவாகும் வடிவ வஸ்துவாகி
உன் பாதத்தினைப் பற்றும் முதலைப் பிறவியானவன்
நீயேதான் உன் குளிர்மழையை எனது தூப ஸ்தம்பத்தின்
கடுந்தழல் மீது அவியவைத்து
நீயேதான் நீ என்று முதன் முதலில் நுகரும் பருவகாலம்
வந்தபோது நீ நீயோ ஆனாய்
அங்கில் நான் ஏதற்ற குழந்தையாய் உன் மடிநோக்க
தாம்பூல அதரங்கள் சிவக்க கச்சைகளை இறுக்கி நடனமிடத்
தேர்ந்தாய்
நீயோ என் கனவுகளின் ஒளிக்கிரணங்களை மலடாக்கி உன்
சிற்பமுகத்தினை நோக்கி நிமிர்த்தியது
நீயோதானா உறங்காது போலிருந்த போலி உறக்கங்களை
நித்திரையாய்  மாற்றி நிர்மூலம் தந்தது
அன்றி என் சமுத்திர இருட்தரையில் ஒரு வருடமும் சூரியன்
பார்க்காத கிருமி நுண்ணிகளுடன் வீழ்படிவமாய்ச் சமைந்தது
உன் நிழல் யோனியா நிஜத்தின் கல்லறை யாளியா
நீதானே தைத்த முள்ளினை சதையுடன் நிணமாக வளர்த்து
வலி தடவி நினைவு புகட்டியது
என் குரல் நடுங்கக் கூப்பிட்டது உன் குரலேயல்லவா
நீயாகும் நீதான் ஒரு ஹிந்தோள ராகத்தின் இரு
பிரஸ்தாரங்களில் ஆணில் பெண்ணாய் லயம் மோகித்து
யாதுமே விளங்காது விழிபிதுங்க வழிவேண்டி நிற்கும் உன்
நீயோ நான்
என்றுமே உன் நீயோதான்

Mindscape Maiden-II

Rajaram Brammarajan

Were you the one who passed orders for the slaughter of the pain filled sorrow stricken animals?
Aren’t you the one after the yield of the last fruit the white ants having nibbled the rest
who allowed the break of mid rib bringing the canopy down?
Or else are you the one in the flowery seat of one your incorporeal reproductions
entrapping me in the eddy of intoxication
Or else are you the one who directed me to glorify the indivisible?
Were you or some one else who was that who forbade viewing the pulsating stars beckoned me to worship your growing breast?
As for me I am the one who becomes what I come into contact now turn into an incarnation of crocodile gra bbing your feet?
It is you yourself who brought the cool rainsto extinguish the raging fire of the incense-mast of front temples
When the time came you first smelt that it could be you who isand became what you are now
There I became a destitute infant looking for your lap but you with your betel tinged red lipstightened your bodice decidedly so that you could dance
But you blanched the rays of my dreams barren and turned them to your sculpted profile
Were you the who changed the deceptive slumber that failed to sleep to ones of real sleep and gave the immaculate
Or else were you the one who became solidified in the undersea floor of my ocean with those bacteria that never see the light for years
Or else was it the shadow of your yoni or a sculpted Yaali of the tomb?
You of course were the one who made the stuck up thorn-stub growalong with the cells made me aware of my pain?
Yours was the voice which made mine shudder at once when you beckoned me
You the one who becomes you alone could be the raga hindolam in the two temposas female in the male
Not comprehending anything I stand with bewildered eyespopping outYou are now me ever your you could be

Translated from Tamil by Latha Ramakrishnan



சித்ரூபிணி -3

அந்த நாள் வந்துவிட்டதாக
இந்தக் குருவிகள் கூறுவது எவ்விதம்
பூர்வகாலத்தில் இருந்ததுபோல
படிகப் பச்சை வர்ணம்
தலைக்கு மேலான மண்டலத்தில் அக்னிமயம்
கழுத்துக்குக் கீழே நீல ரத்தினம்போலும் சாயல்
வாழ்வின் நீர்ச்சுனை உலர்ந்து
முகங்கவிழ்ந்து விழுந்தேன் கண்டேன்
வெளிப்பிரகாரத்தின் தூணோரங்களில்
கின்னரர்களின் கருவிகளிலிருந்து கிளம்பும்
தாய் ராகத்திலேயே தொடுவான் கீற்றுப் போல் தீபகம்
தெரிந்திருக்கிறது
என் காதுகளுக்கு
சந்நிதியின் பீடம்
இதற்கு மேலெப்படி கண்ணாடிக் கூரையில் விழுவதுபோல்
கெட்டித்த மழை விழுவதாயிற்று?
அர்த்தத்தை விடுவிக்காத அந்த முகத்தின் கதவுகளைக்
கிரீச்சிட்டுத் திறக்க
ஏனோ ஒரு பயம்  பிணித்த கலக்கம்
பின்னும் காற்றோடையின் சலசலப்பும்
கூடவே அந்தப் பட்சிகளின் பிராணனை வாட்டும்
சலம்பலும்
பசியின் துயரமா அன்றி உயிருடன் உயிர் ஒன்ற வேண்டிய
அத்தியாவசியக் கூக்குரலா
எனப் பிரித்துரைக்கவிடாது
மீண்டும் உப்பில் உவர்க்கும் மழையால் யாதொருவருக்கு
என்ன விளையும்
தீயில் வாட்டியதாகும் உடல்களைக் குளிர்விக்க ஒரு
மிடறாகுமோ
அன்றி மரணத்திற்குச் சற்றே முன்னான தான்யத்தின்
வாழ்வுக்குள் விழும்
உயிர்த் தண்ணீ ருமாகுமோ
அதுவாகவே நீ
இன்று பெய்து நின்று நாளையும் பெய்து பிரளயம் வருமுன்
நின்றுவிடும்
என்று நீ அறுதியிட்டுத் தாரை வார்த்த உண்ணாத
முலையின் தீர்த்தமாகிறாய்.

சித்ரூபிணி -4

எங்கோ ஒரு பிறந்த தினத்தில் நடப்பட்ட ஒரு விருட்ச வித்து
உன் கருவறையில் பெருகி
நிகில லோகத்தினையே தன் சிரசால் மூடிவிடும் போலிருந்த
இருட்பொழுதில்
தந்தத்தின் நிறமே மங்க வந்தாய்
நீர்ச்சுழி போலவோ அக்னியின் அட்சரம் எனும்படியோ
உனது உந்தியும்
குரும்பை முலையும்
வெண்ணிறப் பட்டில்
கொடியோடும் நாளங்களின் பின்னல் வலைகளை
புறங்களில் கண்ணுறலாம் என்றவாறும்
உன்னைத் தளைப்படுத்தியாள்வதற்கான கற்பனையில் நான்
யத்தனிக்க
நீ காற்றுடன் இரண்டறக் கலந்த சிற்பமாகிவிட
பனிப்பாளமாகக் கிடக்கிறதென் குறை மனம்
மீட்டிக் குருதியிசைக்க நான் கேளாதிருந்தும்
நீ ஈன்ற குழந்தைகளை என்ன செய்வது?
கானகத்தில்
அறாத நாணையும் முறியாத வில்லையும் தீராத அம்பராத்
தூணியையும்
கொண்டவர்கள் பயில்வதை வாளோரத்துக் குரூர
தரிசனமாய்க் காண்பதும் நான்
அம்மகவுகளைப் பிறப்பித்தும்
பிணைக்கும் என் விருப்புகளை அறுத்தும்
கன்னியும் சநாதநியும் ஒன்றாகி நீயாகி
மேலும் வயிறு உட்குழியவும்
மார்பகங்கள் வாடலை மறக்கவும்
தளர்வுறாச் சருமத்துடனும்
என் சயனத்தில் உடன் இருப்பதான சாட்சாத் உறுதியுடன்
விழிகள் பிரிய
உன் உடலார்ந்த பரிமளம் இழந்த வெற்றம்பலம்
பற்றி அறிந்து விட்டதாக
ஏதோ ஒரு கற்பகாலத்தில்
ஒருவன் இங்கிருப்பதாக
.

சித்ரூபிணி - 5

மூலாதாரப் பயிர்கள் கோரைகளுக்கிடையிலிருந்து
திடீரெனத் தலை நிமிர்த்திய
நீல ஆம்பல் நீ
கானங்களின் தலைவியும் என்றறியாதே நான்
செவி கொண்டேன்
விடியல் பண்ணின் மனையாட்டி என்பதையும்
உன் சாயல்களை
சொப்பனங்களில் மாறுதலுறும் நிலையற்ற முகம்போல்
மாற்றுகிறாய்
அதற்கிணையான மனநிலை மாற்றங்களைக்
காண்பிக்கிறது என் கந்தக பூமி
எரிதல் குறைக்கவோ
வெறுப்பினால் நிறைந்து கசந்தவனாய் மனிதரைத்
துறக்கவோ
வலையைக் கைவிட்ட மீனவன்
ஏர்சாலில் கிடந்த கலப்பையைக் கரையான் தின்ன விட்ட
பயிர்த்தொழிலாளி
இவர்களில் எவன் நான் எனக் குழம்பித் தீர
உன்னுடன் பிறந்தவளின் லட்சணங்களை மோகித்திருந்த
மாதங்களில்
நீதான் பதுமினி என்பதை உற்றுணரும் கதியற்றிருந்தேன்
ஆகிலும் எனக்குள் ஒருவன்
உன்னை வனைந்து வடிவமைத்துக் கொண்டிருந்திருக்கிறான்
நீரின் நுகத்தின் நிழலிலும்
மந்திரங்களினால் பல்கிய தான்யக் கதிர்களிலும்
உன் ரூபம் தெளிகிறது
அண்டங் காக்கை கொத்திச் சென்ற வெண்ணிற
எருப்புழுவிலும்கூட
தாந்தேவின் காதலியும் நீதானாக
உன்னைச் சுகிக்கத் தந்த
என் உடலின் விமோசனியும்
தாமதித்து அந்திமத்தில்
முற்றிய காபிச்செடிமீது மொய்க்கும் மின்மினியும்
ஆக.