தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Monday, May 12, 2014

ஏழுவால் நட்சத்திரம் - யூமா.வாசுகி

ஏழுவால் நட்சத்திரம் - யூமா.வாசுகி
யூமா.வாசுகி

1.
ஒவ்வொரு துடிப்பிற்கும் உன் கனம்
இரவில் இதயத்தின்
பல நூறு துடிப்புகள் ஓட ஓடத் துரத்தியடிக்கின்றன
காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை விட்டுவிடு
மலிவான கலவைதான் என் உடல்
புறக்கணிக்கப்பட்டு தங்கிப் போனதுதான்
ஆன்மாவென  எனக்குத் தரப்பட்டது
குன்றுகளின் தவளைப் பாய்ச்சலுக்குக் களமல்ல இது.
ஒற்றை வரத்தையும் தவறுதலாகப் பிரயோகித்து
வீடென்றடைந்து மணற்கடிகாரமெனப்
பொழியும்  மரணத்தில் மூழ்கும்போது புரிகிறது.
போர்முனை வாளாக மாபெரும் இரவுகளைச் சுழற்றி

நீ துண்டித்து விளையாடாமல் இருந்தால் - நான்
இன்னும் கொஞ்சநாள் இருந்துவிட்டுப் போவேன்
இரவு சிரிஞ்சிலிருந்து உன் விரல்களாலே செலுத்தப்படுவது
வெளிக்கசிந்துவிடாமல் காக்கிறது என்னைப் பொதிந்த பகல்
இரவு
இளக இளக அதனின்று கழன்ற
இணைப்புத் திருகாணிகளாய் நீ வீழ்ந்து உண்டான துளைகளில்
பரிதற் கையேட்டின் சில பக்கங்களும் ஒழுகி ஒழிந்தன
இரவு
தன் கூந்தலாக என் குடலைப் பின்னலிடுகிறது
பறித்து வைத்திருக்கிற பசியைக் கொடு பூவாகச் சூடட்டும்
இரவு
உன்னை அறிவித்து எத்திருப்பங்களிலும்
எழுதி வைத்திருக்கும் சுவர்கள் எழுகின்றன
நான் தஞ்சமடையத் தட்டிய கனவு வீடுகளின் கதவுகளில்
எண்களாக நீ எதிர்கொள்கிறாய்.
இரவு
கெட்ட புத்தி புகட்டப்பட்டதால்
சீராகப் பரவும் யோக்யதையைக்கூட இழந்தது.
என் திமிறல்களைப் பொருட்படுத்தாது கனிவுபுகா காட்டுநிறத்தை
தடவித் திருப்தியடைந்தபின் தூரிகை கழுவிய நீரை
பட்டும்படாமலும் தெளிக்கிறது சுற்றிலும்.
உனக்கான ஊஞ்சல்களாக
நீ என்னுள் தோற்றுவித்துக் கொண்டிருக்கும் பெருமூச்சுகள்
நிலவின் சீழ் - வீணையின் ரத்த வாந்தி
எல்லா துளைகளிலும் மலப்பெருக்கு
நட்சத்திரங்களிலிருந்து நீ தொங்கவிட்டிருக்கிற
தூக்குக் கயிறுகள்
காதலின் விதைப்பையை யானைக்கால் மிதிக்க
பீறிட்ட திரவம்
விட்டுவிடு நான் பலகீனன்
தனதல்லாத ஒரு துளியென என்னைக்கருதத் தொடங்கிய கடல்
திரும்பத் திரும்ப அலைகளை ஏவி
அவமானகரமாய் கரையொதுக்குகிறது
என்னைக் கரையவிடு
ரணத்தில் கிடந்து நார்பிடித்த சொற்கள் இவை
புரியவில்லை என்று போகாதே- நன்கு
சவரம் தெய்த வார்த்தைகள் சாத்தியமே இல்லை
விளிம்புகளற்ற பிரபஞ்சக் காகிதத்தில்
விவரிக்கிற கருணைமனுவாக
“காப்பாற்று” என்பதை மட்டும் நீ
விளங்கிக்கொண்டால் போதும்
இன்னும் கொஞ்ச நாள் இருப்பேன்.

2.
நகரத்தின் திசைகள் என் மரணப் பணிவிடையாக
கீழ்வானில் எடுத்தாள்கிறது
உன் குதிகால்களுக்குரிய சிவப்பை.
நீ இல்லாத இடத்திலும் சுவையுதவும் பாதஸ்வரத்தை
விழுங்கிய வேற்றொலிப் பகைவளத்தின்
இறுமாப்பை ஒற்ற்றிந்தேன்.
யாரோ தவறவிட்ட சூன்ய சம்பாதனையை
என்னுடையதாக்கத் திட்டமிடுகிறது.

இடிச்சமூகமணிவித்த தடித்த பூட்சுகள்
என் தேடலின்மீது ஓடுகின்றன - நல்ல
தையல்காரனாக வந்து அளவெடுத்தது எதுவோ
அது மறைவில்
தச்சுப் பணியாளாகி எனக்கு சவப்பெட்டி செய்கிறது
கன்னத்துப் பருவாக ஆஷ்டிரேவிற்குள் கிடக்கிறேன்
சாம்பலைத் துப்பி வாய் சிவக்க
வந்துவந்து போகிறது சிகரெட் - உன்
முலையடிவார வியர்வைச் சதுப்பின்
கதகதப்பைச் சொல்கிறது சாம்பலும்.

தேர்வெழுதச் சென்று வினாத்தாளின்
தவறுகளை மட்டும்
திருத்திக் கொடுத்துவிட்டு வந்தபோதுமில்லை
உடைமையின்  பெயர்தெரியாத யோனியில்
லிங்கத்திரியிட்டு சுடர்ந்தபோதுமில்லை
வயிறு எனும் தசைப்பந்தாய் முழு உடலும் குறுகி
முட்களால் உதைபட்டு
சாலைகளில் உருண்டபோதுமில்லை
உன் கொலுசொலியை மேய்ந்தபோது, கடவுளே!
இடையிடையேயிருந்த
காதலின் இலைகளையும் மென்றுவிட்டேன்
சுவாசம் மட்டுமே நிகர எடையாகி அப்போதுதான்
அணுக்கூர்மைக்கும் விகாசத்திற்குமிடையில் - ஒரு
அம்புக்குறியின் தலைப்பாகமாக சுழலத்தொடங்கினேன்
நீ விடைபெற்றபோது உடைந்த
ஒளி வட்டங்களுக்கு மாற்றாக
பற்சக்கரங்களைக்கொண்டு பயணிக்கமுடியாது
குறுக்கெழுத்துப் போட்டியின் கட்டங்களில் சில
மிச்சமிருப்பதுபோல்தான் தோன்றுகிறது.

3.
உன் முத்திரையிடப்பட்டிருக்கும் நாணயங்களை நாட்களாக
ஒளித்துச் செலவளிக்கிறேன் - நான் மென்று துப்பிய சக்கைகளாக
கடைவாய்ப் பற்களின் கொண்டாட்டத் தடங்களுடன்
செல்லும் சாலைகளிலெல்லாம் சிதறினாய்.
மிதிப்பவர்களின் மறதி உன் வழிப்பறிக்கஞ்சி
தானாகத் தவறவிடும் தகவல், அவர்களுக்கு
காதலைக் கோர்க்கும்.
ஊர் ஒதுங்கிய விளைநிலங்களின் இடையில் நின்று
சலவை செய்து தொடர்ந்து நீ அனுப்பும்
நம் முதல் அந்தியை உடுத்துகிறேன் இன்றும்.
உடுத்தும் முன்பு
புரிபடாமல் மின்னிற்று சித்திரப் பொற்புதையல்.
இரவில் கூடும் அதன் பொருள் ,
நீ என்னைச் சிந்திக்க சோர்வுடன்
அமர்ந்திருப்பதாய் அமையுமானால் - அந்த நாற்காலி
எத்தனை சென்டிமீட்டர் உன் பின்புறத்தை
உள் அழுத்திக்கொண்டிருக்கும்.
கால்மேல் காலிட்டிருப்பதால்
எப்படியெல்லாம் நெருங்கிக் குழைவுபடும் யோனி.
முலை மதர்ப்பில் திணறுகிறது மேசை முகம்
கவிழாமல் நிமிர்ந்தமர்.
தேக சஞ்சாரத்திற்கிடையில் என் நாவு
அடிக்கடி தங்கிப் போகும் தொப்புள் குழியை
மடக்கவிடுவது எனக்குச் செய்யும் மரியாதையாகாது.
உன் முதுகுத்தண்டு
என் குறியின் அம்சமாய் உன்னை நிறுத்துகையில்
அதை வளைத்து வருத்தாதே.
இடுப்புத் தசைப்பிதுக்கச் சிறுவேகத் தடை பிறகும்
புகமுடியாத என் விரல்கள் திரும்பி வந்து
புகார் செய்கின்றன என்னிடம் - புடவை
இறுக்கத்தைக் கொஞ்சம் தளர்த்திவிடு.
உன் செறிவு மிகாமலிருப்பதற்காக
இடப்பட்ட இருபது முற்றுப்புள்ளிகளில்
ஐந்தைச் சூடிய விரல்கள்
மூப்படைந்த நாட்டத்திற்குக் கடிதமெழுத
மேசை இழுப்பறைக்குள் காகிதம் தேடுகின்றன.
வெப்ப மையெழுதிய கோடையின் கண்கள்
இமையடைத்தபோது ஈன்ற தளிராய்
வழங்கட்டும் உன் வரிகளை விரைவில் என்னிடம்.

4.

மறுபடியும் வந்திருக்கிறேன்
உன் வீடுள்ள தெருவை இம்முறையும் கண்டுபிடித்தேன்
தெருமுனைக் கடையில் டீ அருந்திக் கூடுதலாக
ஒரு சிகரெட் அருந்தும் நேரமே தாமதித்தேன்
நீ பணிமுடிந்து திரும்பும்போது எதிர்ப்பட்டு விடக்கூடாது
என்பதற்காக
ஓய்வுநாளாகப்பார்த்து வந்திருக்கிறேன்
கனவில் நீ மரமாக நேற்று தோன்றினாய்
எதிர்ப்பதுபோல தழுவும் இலையடர்த்தியை விலக்கி
உடல் கீறும் கிளைகளைப் பற்றியேறினேன்
தாக்குவதுபோல் பூங்கொத்துகளை வீசி
தொட்டுக்கொள்கிறாய் என் ரத்தத்தை
உன் அடங்காத ஆசையினால் மேலும்
அவ்வளவு கிளைகள் தோன்றின - அவ்வளவையும் அணைத்து
ஆவேசமாக நான் மேலேறினேன்
பலம் தீர்ந்தும், பரவசம் மேலும் கிளைகள் கேட்கிறது.
என் களைப்பில் கவனம் வைத்து நீ கிளைப்பதை நிறுத்தினாய்
உச்சிக்கிளையில் நான் அமர விந்து பொங்கியது
உன் உடலின் ஒரு இடமும் விடாமல் அது பரவுகிறது
நீதான் தடவிக்கொள்கிறாய்
விந்து பட்ட இடமெல்லாம் நிறம் வெளிற ஒரு
ஸ்படிக மரமானாய்
உச்சிக்கிளையை மெல்ல வளைத்து
தரையில் சிந்திய ஒரு துளியையும் நீ உறிஞ்சியபோது
நாற்காலியிலிருந்து எழுந்து நிற்பதுபோல்
தரைக்கு வந்தேன்
உன் ஸ்படிக உடல் ஊடுருவி
வெளியைப்பார்த்த்துபோலவே – இந்தக்கட்டிடங்களை ஊடுருவி
உன் சமீபம் உணர்கிறேன்
எப்போதாவது நீ கனவில் வருகிறாய் – நான்
வெகுதொலைவு கடந்துவந்து இங்கு நின்றுவிட்டுப் போகிறேன்
சென்றமுறை திரும்பிப் போக முடியாமல்
அகாலத்தில் குடித்த மதுவெல்லாம் கண்ணீராய் வழிய
இந்த ஊரின் தெருக்களை விடியும்வரை
வலம் வந்த்து போலன்றி
பேருந்து நிலையத்தில் அமர்ந்து இதை எழுதக்கூடிய அளவிற்கு
துக்கம் குறைந்திருக்கிறது

5.
மனிதம் சேகரித்த மகத்துவங்களைக் காப்பவன்
மறந்திருந்தானோ - நீ விடுபட்டு
வீதிவழி வந்தாய்
கடவுள் விரல்கள் காட்டும் அபிநயங்களின்
அர்த்தங்களறியாதவர்களுக்குதவ உன் கொலுசு
தூண்டற்குறிப்புகளை வாரிச் சொரிந்தது.
அதிலொன்றை
கணிதக் கிருமிகளால் தொல்லை எதுவுமின்றி
வெளிவிழுங்கிக் கிடந்த நான் எடுக்கக் குனிந்தேன்
பெட்டிக்குள்ளிட்டு குலுக்கப்படுகிற வண்டாக
ஓங்கார சுழற்சி வீழ்த்தியது
காதற்கிரகத்துள்
குனிந்தபோது தாழ்ந்த
என் கொம்புகள்மீதும் தழும்புகள்.
ஒவ்வொன்றிற்கும் ஒதுக்கப்பட்ட
வலி அளவை ஒப்பாமல்
ஒட்டுமொத்தமாய்ப் பறித்துக்கொள்ள
தழும்புகளுக்கிடையே போராட்டம்
இதற்கொரு பரிகாரம்தேடி உன்னிடம் வந்தேன்
உன் வள்ளல் கண்கள் பரிவு காட்டின
அமைதியெனும் உன் பணியாளனோ
ஒவ்வொரு தடவையும்  மிகுதுயரளித்தான்
செப்பனிட விழையும் என் சிந்தனைக்குள்ளும்
கொலுசுமணி இசைத்தான்யங்களை
சாமர்த்தியமாய் செலுத்திப் போனாய் நீ
உண்டதுபோக மிச்சமிருந்ததை
ஊன்றி வைத்தேன் நிலத்தில்
பிரிவால் எரியும் என் சிதைக்கு
கொலுசு ஓசைப்பயிர் கருகி
நிஷ்களங்க நெய்யூற்றுகிறது - மிக
உச்சத்தில் எழுந்து அடங்கிக்கொண்டிருக்கும்
புகையின் முனையில் என் உதடுகள்
உன் இருப்பிடத்தின் கதவுகளை
முத்தமிட்டுத் திரும்பியிருக்கிறது.

6.
கடலோடு காந்தர்வம் - கரை
மணலோடு கலந்தென் மாமிசம்
வதம்தான் தான்யத்தோலுரித்தலும் - அதற்கு
தண்டனையுண்டு வேதத்தில்.
மொட்டை வலிந்து மலர்த்திப் பூவாக்கிப்
பெரிய விலைக்கு விற்றவள் நீ
அறியாத் தோரணை
போதும் திகட்டுகிறது - முன்னும் பின்னுமான
தலைமுறைகளுக்குப் போதுமான திட்டங்கள் உன்னிடம்
எனக்கு நிர்வாகியாக
நாசத்தை நியமித்தாய்
இருப்பு நுகர்ச்சி தள்ளுபடியாயிற்று.
ஓரினப் புணர்ச்சியிலிறங்கினோம்
நானும் மதுவும்.
மோனத்தாழிகளில் பருவமடைந்த
பிணக்கச் சக்கரங்களுக்கு
அறிவுப் பலகணிகள் பாதையாகப் படுத்திருக்க
காலத்தின் தாளக்கிரமம் கலைத்து
எங்கும் நிற்காமல் ரயிலோடுகிறது.
தாங்கும் உன் சக்திமீது சந்தேகம் எனவே
தந்தவைகளைத் திருப்பவில்லை - நீ
பொய் முதல்வைத்த பண்டமாற்று,
பதிவு செய்த முறிவுகளின்
எக்ஸ்ரே தொகுப்பிலிருந்து
வட்டி விகிதமாக உனக்கொரு சொல்
போ.

7.
படமெடுத்த உன் வெட்கத்தின் பாம்பு முகம்
பக்கவாட்டில் புடைத்துச் சூழ்கிறது சொல்லை
மயக்கிக் கிடத்த.
மௌனச் சதியிசை நடத்துவோன் கரங்கள் தொய்ந்து
இதோ, பிளந்தது படச்சுருள்
இதுவரை நீ உபயோகித்திராத
அர்த்தத்தின் கன்னி கழித்து
உன் சொல்லின் ஒலிப்பாராசூட் விரிந்துவிட்டது
சிகரமாக ஸ்தூலம் பெற்ற
அர்ப்பணத்தின் மேலிருந்து சந்தித்தேன் சொல்லை
மொழிகளின் தாதி அச்சொல்
சொல்லின் செவி ஸ்பரிசக் கரன்ஸிக் கட்டிலிருந்து
ஒரு நோட்டு மாற்றிய சில்லறை
சிப்பிப் பெட்டகங்களுக்குள் பூட்டப் பட்டிருக்கிறது
கிளைப் புஜங்களில் அச்சொல்லின் பலமிருந்து
மரங்களோடிணைகிறது
சொல்லின் தயையால் கருப்பாத்திரங்கள்
ததும்பிப் பிறந்த சரித்திரங்கள்
அவ்வொற்றைச் சொல்லெனவே சுருங்குகின்றன.
சொல் உற்று ஊற்றானேன்
அருவியாகி
அருவி அகலமாகிக்கொண்டிருக்கிறது
நடமாடும் நிலத்துண்டே ஒழுக்கேற்று நில்!
வீழ்ந்து ஓடப் போதாது உன் பரப்பு
கரைகளை அரித்து உன்னைப் பெருக்குவேன்
வேகம் ஆழம் தோண்டும்
நதியாட்சி நடக்கும் உன் அரியணையிலிருந்து.



அமுத பருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு  என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து.
.