சாரு நிவேதிதா 15 ஆண்டுகளுக்கு் முன்பு எழுதிய கவிதை
பயம்
-----
பனங்கையின்
செல்லரித்துச் சிதைந்த
இடுக்கின் வழி சென்று
விரிசலுற்றிருந்த சுவரில்
குஞ்சு பொரித்து -
கவிதை எழுதிக் கொண்டிருந்த
அவனைப் பார்த்து
இருப்பின் பயங்கொண்டு
வெளிக்கும் உள்ளுக்குமாக
தத்தளித்து அலைந்து கொண்டிருந்த சிட்டுக்குருவி
நான் இன்னமும் இருக்கிறேன்
நீ இருக்கிறாயா
எனக் கேட்டு எழுதாமலேயே
காணாமல் போய்விட்ட
சிநேகிதன்
காரணம் சொல்லாமல்
வீட்டுக்கு வருவதைத் தவிர்த்த
சிநேகிதி
சத்தில்லாக் கவிதையெழுதும்
உன்னைச் சீந்த மாட்டேனெனச்
சொல்லிப் புறக்கணிக்கும்
மொழி
எழுத நினைத்து
எழுதாமல் விட்ட
கவிதையின் பொருளை
அவளிடம் விளக்க
தன்னிரக்கம் தன்னிரக்கம்
எனச் சொல்லித்
தலையிலடித்துக் கொண்டே
ஓடினாள்
சிநேகிதி
நன்றி http://nvmonline.blogspot.in/2009/12/15.html
முள் - சாரு நிவேதிதா
http://azhiyasudargal.blogspot.in/2010/10/blog-post_04.html
இன்றோடு பதினஞ்சு நாளைக்கு மேல் இருக்கும் தொண்டையில் இந்த முள் சிக்கி. மீன் சாப்பிட்ட போதுதான் சிக்கியிருக்க வேண்டும். இதுக்குத்தான் நான் ருசியா இருக்கிற மீனாயிருந்தாலும் முள் மீனாக இருந்தால் தொடுவதேயில்லை. சில மீன்களில் நடுமுள் மட்டும் இருக்கும். கோழிச் சிறகு மாதிரி. சில மீன்களில் சதைக்கு உள்ளேயெல்லாம் ஒரே முள்ளாயிருக்கும். கார்த்திகை வாளை, முள்ளு வாளை எல்லாம் இந்த வகையறாதான். ஆனால் இந்த இரண்டு ரகத்திலும் சேராத ஒரு மீன்... கோலா மீன். இதுக்கும் நடுமுள் உண்டு. அதோடு பாதி பாகம் சதையோடு முள் கலந்தும், பாதி வெறும் சதையாகவும் இருக்கும். இந்தக் கோலா வருஷம் பூரா கிடைத்துக் கொண்டிருக்காது. வைகாசி, ஆனி மாசங்களில் மட்டும்தான் கோலா.. ஆடி வந்தாலே கோலா குறைய ஆரம்பித்து விடும். இதுக்குக்கூட ஒரு சொல் வழக்கு... ‘ஆடி மாசம் வந்தா கோலா ஆத்தா வூட்டுக்குப் போய்டும்.’
கோலா மீன் பிடிப்பதே ஒரு அலாதி... அதைப் பார்க்க வேண்டுமென்று கட்டு மரத்தில் ஒரு முறை போயிருக்கிறேன்... கோலா பிடிக்க லாஞ்சில் போவது கிடையாது... காரணம், கோலா பிடிக்க குறைந்தபட்சம் இருபது மைலிலிருந்து அறுபது மைல் வரையிலும் கூட போவது உண்டு... லாஞ்ச் என்றால் இத்தனை மைல்கள் போக டீஸல் செலவு...?
ஆறு அல்லது ஏழு பேர் ஒரு கட்டுமரத்தில் காலை மூன்று மணிக்குக் கிளம்பினார்கள் என்றால் வருவதற்கு இரண்டு நாள் கூட ஆகும்! ஒரு தடவைக்கு மூணாயிரத்திலிருந்து இருபதாயிரம் மீன்கள் வரை அகப்படும். கட்டுமரத்திலேயே தாழை, புல் தழை இவற்றையும் எடுத்து வந்து விடுவார்கள்... இதை ஒரு மரச்சதுரத்தில் பிணைத்துக்கட்டி ஒரு சின்ன பசுந்தழைத் தீவு மாதிரி தண்ணீரில் மிதக்க விட்டு விடுவார்கள்... கோலா இந்தப் பச்சையைப் பார்த்ததும் கூட்டம் கூட்டமாகத் துள்ளி வரும், பசுந்தழையில் முட்டையைப் பீச்ச.... சில சமயம் இந்தத் ‘தீவுகளை’ கரைக்கு எடுத்து வந்த பிறகும் கூட அவற்றில் தங்கியுள்ள இந்த முட்டைகளைப் பார்க்க முடியும். இன்னொன்று... கோலாவை வலை ’வீசிப்’ பிடிப்பது இல்லை. இதுதான் கண்ணால் பார்த்துப் பிடிக்கிற மீன்... கோலாவுக்குத் தனி வலை... அந்த ஏந்து வலையை வைத்துக்கொண்டு அப்படியே ஏந்தி ஏந்திப் போட்டுக்கொள்ள வேண்டியதுதான்.. இந்த வலையைத்தான் கச்சா வலையென்று சொல்வது...
சில சமயங்களில் ஒரு கோலா கூடக் கிடைக்காமல் போவதும் உண்டு. இதுக்குக் காரணம் ‘பர்லா’... இந்தப் பர்லா மீன் வந்தாலே அந்த இடத்துக்கு ஒரு கோலா கூட வராது... மற்றபடி அமாவாசை நாளில் கோலா அதிகம் கிடைக்கும் என்று ஒரு நம்பிக்கை. பொதுவாக கோலா சீஸன்தான் இவர்களின் ’அறுவடைக் காலம்’...
கோலாவுக்காக ஒரு தடவை கடலுக்குச் சென்றால் ஒரு ஆளுக்கு முன்னூறு ரூபாய்கூடக் கிடைக்கும். ஆனால் இதைவிட அபாயமான வேலை உலகத்தில் ரொம்பக் குறைச்சல்... முன்னேயெல்லாம் கோலா பிடிக்கப் போகிறவர்களுக்கு ‘வாய்க்கரிசி’ போட்டு அனுப்புவார்களாம். இப்போதெல்லாம் அந்தப் பழக்கம் கிடையாது.
இந்த வைகாசி வந்தாலே போதும்... எல்லார் பேச்சிலும் ரொம்ப அடிபடுவது கோலாதான்... கொஞ்சம் வேகமா காற்று அடித்தால் கூடப் போச்சு... ‘சே... சே.. என்னா காத்து... முகம் வாயெல்லாம் ஒரே மண்ணு.. சனியன் புடிச்ச கோலா காத்து’ என்று அலுத்துக் கொள்வார்கள்.
அத்தையும், மாமாவும் வந்து இன்னையோட பதினஞ்சு நாளா ஆவுது...? பதினஞ்சு நிமிஷமா ஓடிப்போச்சு.. எனக்கு இந்த முள் தொண்டையிலெ சிக்கியதே இவர்கள் வந்த அன்றைக்குத்தான்.. மாமா வந்ததுமே நைனா மார்க்கெட் கிளம்பிட்டாங்க... மீன் இல்லாவிட்டால் சாப்பாட்டையே தொடமாட்டார் மாமா... அதுவும் கோலா மீன் என்றால் அவருக்கு உயிர்...
அவரோடு அன்று சாப்பிட்டபோது சிக்கியதுதான்... அதுக்குப் பிறகு மீனையே தொடவில்லை நான்... இந்த முள்ளை நினைத்தால் மீன் ஆசையே விட்டுப்போய்விடுகிறது... என் அத்தை மீனெல்லாம் சாப்பிடுவதில்லை... எப்பவாவது எங்கள் கட்டாயத்துக்காக சாப்பிடும்போதெல்லாம் சாப்பிட்ட பிறகு ‘வாந்தி’ எடுக்கவும் தவறுவதில்லை... மாமாவுக்கு எதிர் என் அத்தை... படிப்பது என்றால் அத்தைக்குக் கொள்ளை ஆசை... சமையல் முடிந்து விட்டால் கையில் புத்தகம் தான்.... மாமாவோ ஏதாவது படிக்கிறார் என்றால் அது வாரா வாரம் ராசிபலன் மட்டுமாகத்தான் இருக்கும்!
எழுதுவதிலும் அப்படித்தான்... அத்தை எனக்கு எழுதின எல்லா கடிதங்களையும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். கவித்துவ மிக்க அந்தக் கடிதங்களை எத்தனை முறை படித்திருக்கிறேன் தெரியுமா...! மாமாவோ தன் பேனாவைத் திறப்பது கையெழுத்துப் போட அல்லது தன் அம்மாவுக்குக் கடிதம் எழுத இந்த இரண்டுக்கும் மட்டும்தான். (தேவரீர் அம்மாவுக்கு உங்கள் மகன் எழுதிக்கொள்வது. க்ஷேமம், க்ஷேமத்திற்கு பதில். நான் வரும் பத்தாந்தேதி அங்கு வருகிறேன். வேறு ஒன்றும் விசேஷம் இல்லை. இப்படிக்கு...) ஆரம்பத்தில் தன் அம்மாவுக்குக்கூட அத்தையின் மூலம்தான் எழுதிக்கொண்டிருந்தாராம். ஆனால் அவர் அம்மாவிடமிருந்து “எனக்கு நேரடியாக ஒரு லெட்டர் எழுதக்கூட உனக்கு நேரம் இல்லையா? இனிமேல் உன் பெண்டாட்டியை விட்டு எழுதாதே... இஷ்டமிருந்தால் நீயே உன் கைப்பட எழுது” என்று ‘பாட்டு’ வாங்கிய பிறகுதான் அந்தக் கடிதம் கூட அவர் எழுதுகிறார். இதுக்குப் பிறகு மாமா எழுதச் சொன்னாலும் அத்தை எழுதுவதில்லை. இப்படி ஒவ்வொன்றாகச் சொல்லிக்கொண்டே போகலாம்.
“டேய் ராஜா... நான் வெளியே போறேன்.. வர்றீயா...?”
மாமாவின் பிசிறான குரல் கேட்டு என் சிந்தனை அறுந்தது. அப்போது அங்கு வந்த என் அத்தை என்னை முந்திக் கொண்டு சொன்னார்கள்.
“ராஜாவுக்கு உடம்பு சரியில்லை... அது வராது”
“சரி சரி... நீயே அவனைப் பூட்டி வச்சுக்க...”
-மாமா கோபத்துடன் சொல்லிவிட்டு வெளியே போய்விட்டார்.
மாமாவுக்கு சாயங்காலம் ஆறு மணியிலிருந்து ஒன்பது மணி வரை வெளியே போய் ஊர் சுற்றாவிட்டால் தலையே வெடித்துவிடும்... பாவம்... அத்தை... வீட்டில் தனியாவே இருந்திருந்து எப்படித்தான் பைத்தியம் பிடிக்காமல் இருக்கிறதோ...?
அத்தையின் பேச்சில் இப்போதெல்லாம் ஒன்றைக் கவனித்தேன். கொஞ்ச நாளாக அத்தை என்னிடம் ‘டா’ போட்டுப் பேசுவதில்லை. பத்து வருஷ வித்யாஸம் பெரிசு இல்லையா? ஆனால் இப்படிப் பேசுவதுதான் எனக்குப் பிடிக்குது..
நெற்றியில் ஒரு மென்மையான ஸ்பரிஸத்தை உணர்ந்து நிமிர்ந்து பார்க்கிறேன்....
அத்தை...
”ராஜா... நெத்தியெல்லாம் ரொம்ப சுடுதே..” என்று சொல்லிக்கொண்டே படுத்திருந்த என் பக்கத்தில் அமர்ந்து என் கையை எடுத்துத் தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டார்கள். நெற்றி சுடுவதென்ன...? இந்தத் திண்ணை இருட்டில் இப்படிக் கிடைத்த அத்தையின் இந்த அண்மைக்காக அப்படியே நான் எரிந்து போவதற்கும் தயார்....
வெகுநேரம் இருவரும் பேசவே இல்லை.
திடீரென்று அத்தை கேட்டார்கள்.
”தொண்டையிலே முள் சிக்கிட்டுன்னியே.. போய்டுச்சா..?”
“ம்ஹூம்.. இல்லெ...”
“அப்படின்னா நான் சொல்ற மாதிரி செய்... சாப்பிடும்போது சூடான வெறும் சாதத்தை ஒரு பெரிய உருண்டையா உருட்டி வாயில் போட்டு விழுங்கு. போய்டும்...”
இதுக்கு நான் பதில் சொல்லவில்லை... என் கையைப் பிடித்துக் கொண்டிருக்கிற அத்தையின் கைகளை அப்படியே எடுத்து ஒரு முத்தம் கொடுத்தால் என்ன என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்... ஆனால்?
இதைச் செய்ய என்னைத் தடுப்பது எது?
‘Love has no taboos' என்று படித்திருக்கிறேன். ஆனால் அத்தையின் மேல் நான் கொண்டுள்ளது காதலா...? காதல்.. சே.. தொடர்கதைகள்ளேயும், சினிமாவிலேயும் இந்த வார்த்தையைப் போட்டு ரொம்ப அசிங்கப்படுத்தி விட்டார்கள்.
Is it sex-love...?
நோ... அப்படி என்னால் நினைக்க முடியவில்லை. இது ஒரு tender devotion.... ஆனா இதன் எல்லை எதுவாக இருக்கும்....?
அனாவசியமாக மனசைப் போட்டுக் குழப்பிக்கொண்டிருக்கிறேன்... அத்தையின் மேல் எனக்குள்ள ப்ரேமை இன்று நேற்று ஏற்பட்டதா என்ன?
அப்போது ஆறு வயசிருக்கும்... அத்தை அடிக்கடி என்னிடம் “ராஜா.. நீ யாரைக் கல்யாணம் பண்ணிக்கப் போற...?” என்று கேட்பார்கள். நான் ஒவ்வொரு முறையும் ‘உங்களைத்தான்... உங்களைத்தான்’ என்று சொல்வேன்.
கொஞ்சங்கூட மறக்கவில்லை.
“அத்தை... உங்களைத்தான் நான் கட்டிக்குவேன். ஆனா நான் உங்களைக் கட்டிக்கிறப்போ உங்க கை தோலெல்லாம் அவ்வாவுக்கு இருக்கிற மாதிரி கொழ கொழன்னு சுருங்கி இருக்கக்கூடாது... இப்ப இருக்கிற மாதிரியே இருக்கணும்” என்று சொல்லி அத்தையின் கைச்சதையைத் தொட்டுக் காண்பிப்பேன்...
உடனே அத்தை சிரித்துக்கொண்டே என் அம்மாவிடம் “பார்த்தீங்களா வதினை... ராஜா சொல்றதெ” என்று ஆரம்பித்து நான் சொன்னதையெல்லாம் சொல்லிச் சொல்லி சிரிப்பார்கள்.
இப்போது மீண்டும் அதை நினைத்துப் பார்க்கிறேன்.. ஆனால் இப்போதெல்லாம் அத்தை ஏன் அந்தக் கேள்வியைக் கேட்பதே இல்லை...?
’ராஜா நீ யாரைக் கல்யாணம் பண்ணிக்கப் போற...?’
அப்படியே அத்தை கேட்டாலும் முன்பு சொன்னது போல் என்னால் பதில் சொல்ல முடியுமா?
’அத்தை... உங்களைத்தான் நான் கட்டிக்குவேன்... ஏன்னா உங்கள் கை பதினஞ்சு வருஷத்துக்கு முந்தி இருந்த மாதிரி இல்லன்னாலும் உங்க மனசு அப்படியேதான் இருக்கு...’
திடீரென்று தெரு நாய்களின் காதைக் கிழிக்கிற சத்தம் கேட்டு தூக்கம் கலைந்தது. அட எப்படி இங்கே வந்து படுத்திருக்கிறேன்...? கடைசியில் அத்தையோடு பேசிக் கொண்டிருந்தது நினைவிருக்கு... அப்புறம் தூக்கக் கலக்கத்தில் இங்கே வந்து படுத்தது நினைவு இல்லை. இனிமேல் எப்படித் தூக்கம் வரும்? விடிகிற நேரம்... கொஞ்ச நேரம் ஸ்ரீஸ்ரீளம் புரண்டு கொண்டிருந்து விட்டு எழுந்தேன்...
பாத்ரூமுக்குப் போய் பேஸ்ட்டும், ப்ரஷ்ஷும் எடுத்துக்கொண்டு கொல்லைப் பக்கம் போனேன். ப்ரஷ் பண்ணிக்கொண்டிருக்கும் போதே முள் நெருடுவது தெரிகிறது... பல்லைத் துலக்கிவிட்டு கட்டை விரலால் நாக்கை வழித்தேன். இதுக்கு நான் tongue cleaner பயன்படுத்துவது இல்லை. Tongue cleaner என்றால் நாக்கில் ஒரு குறிப்பிட்ட ‘ஏரியா’வைத்தான் சுத்தப்படுத்த முடியும். அடி நாக்குக்கெல்லாம் அது போகாது... அதனால் உசிதம், கட்டை விரல். ஆனால் விரல் நகத்தில் ஏதேனும் பிசிறு இருந்தால் நாக்கைக் கீறி விடும்... எச்சிலோடு ரத்தமும் வரும்... அப்புறம் அது க்ஷயரோக ரத்தமா அல்லது நாக்குக் கீறலின் ரத்தமா என்று சந்தேகப்பட்டு பயப்பட வேண்டியிருக்கும்! அதுக்காக கட்டை விரல் நகத்தை மட்டும் பிசிறு இல்லாமல் வைத்திருக்க வேண்டும். சரி... இன்று எப்படியும் இந்த முள்ளை எடுத்துவிட வேண்டும்... கட்டை விரலையும், சுட்டு விரலையும் மாற்றி மாற்றித் தொண்டைக்குள் விட்டுக் குடைந்தேன்... ஏகமாய் வாந்தி வந்ததுதான் மிச்சம்.
முள் அப்படியேத்தான் இருந்தது....
இதுக்கு முன்னால் கூட மீன் சாப்பிட்டபோது முள் சிக்கியிருக்கிறது... ஆனால் இந்த மாதிரி பதினஞ்சு நாள் இருபது நாளென்று உயிரை வாங்கியதில்லை.
சின்ன வயசில் ஒரு வேடிக்கை நினைவு வருது. அப்போது நான் அவ்வா வீட்டில் இருந்தேன். ஒரு நாள் சாப்பாட்டுக்கு கருணைக்கிழங்கு வறுவல் செய்திருந்தார்கள். அந்த வயதில் அது கருணைக்கிழங்கு என்றெல்லாம் எனக்குத் தெரியாது... ஏதோ ருசியாய் இருக்கவும் நிறைய சாப்பிட்டேன். சாப்பிட்டு முடித்தது தாமதம்... ‘அய்யோ... அம்மா...’ என்று அலற ஆரம்பித்து விட்டேன். தொண்டையில் பயங்கர அரிப்பு... அதை அரிப்பு என்று சொல்லத் தெரியாமல் ‘தொண்டையிலே முள் குத்திடுச்சி’ என்று ரகளை பண்ணிக்கொண்டிருந்தேன். அப்பறம் மெதுவாக வேலைக்காரி வந்து ‘இது கருணைக்கிழங்கு சமாச்சாரந்தான்’ என்று சொல்லி எல்லார் பயத்தையும் போக்கி என்னைத் தேற்றினாள்.
டிஃபனை முடித்துவிட்டு அத்தையுடன் பேசிக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். தம்பி வந்து சொன்னான், யாரோ கூப்பிடுவதாக. வெளியே வந்து பார்த்தால்.... பேபி.
“என்னடா இது அதிசயமா இருக்கு.. பதினொரு மணி வரைக்கும் மார்க்கெட்லெயில்ல சுத்திக்கிட்டு இருப்ப...”
”இன்னைக்கு நான் மார்க்கெட்டுக்குப் போகலெ.. சரி வா... கொஞ்சம் ஈச்சந்தோட்டம் வரைக்கும் போயிட்டு வரலாம்.”
“இதோ வர்றேன்... சித்த இரு” என்று அவனிடம் சொல்லிவிட்டு உள்ளே வந்தேன். அத்தையிடம் போய் “கொஞ்சம் வெளியே போய்ட்டு வந்திர்றேன் அத்தை...” என்றேன்.
“சீக்கிரமா வந்திடு ராஜா...”
-நான் இப்போது வெளியில் போவதை அத்தை விரும்பவே இல்லை. இருந்தாலும் பேபியின் முகத்தில் தெரிந்த அந்த சீரியஸ்னஸ்..
கிளம்பிவிட்டேன்.
பேசிக்கொண்டே ஈச்சந்தோட்டம் வந்தோம். பெயர்தான் ஈச்சந்தோட்டம். ஆனால் ஒரு ஈச்ச மரம் கூடக் கிடையாது.. எப்பவோ ஈச்சந்தோட்டமாக இருந்திருக்கலாம்.. இப்போது எஞ்சி நிற்பதென்னவோ பெயர் மட்டுந்தான்... பேசாமல் புளியந்தோப்பு என்று பெயரை மாற்றி விடலாம்... அவ்வளவு புளிய மரங்கள்...
ஒரு புளிய மரத்தடியில் அமர்ந்தோம்... ஒரு பெரிய வேரில் முதுகைச் சாய்த்து திண்டில் அமர்ந்திருக்கும் செட்டியார் மாதிரி உட்கார்ந்து கொண்டான் பேபி....
மெதுவாக விஷயத்தை ஆரம்பித்து பிறகு சரமாரியாகப் பொழிய ஆரம்பித்தான்...
விஷயம் வேறொன்றுமில்லை.. இவன் அப்பாவுக்கு ஏகமான சொத்து இருக்கு... இருந்தாலும் மகன் தன்னை மாதிரி நிலத்தில் இறங்காமல் ஒரு டாக்டராகி விட வேண்டும் என்று தீவிரமான ஆசை. இவனோ பி.யூ.சி.யைத் தாண்டவில்லை. பயாலஜி, ஜூவாலஜி புத்தகத்தை எடுத்தாலே தூக்கம் வருதுங்கிறான். விவசாயத்தில்தான் ஈடுபாடு. இவன் M.B.B.S. போகாததால் ஜன்ம எதிரியாகப் பார்க்கிறார் தந்தை.. அப்புறம் சச்சரவுக்கு கேட்கணுமா... இன்னும் கடிக்கிட்டுப் புரளலை... அவ்வளவுதான்.
உணர்ச்சிவேகத்தில் என்னென்னவோ முடிவுகள் எடுத்துக்கிட்டு இருக்கான்...
“சரி வா, ரொம்ப தாகமா இருக்கு... அந்த வீட்லே போயி கொஞ்சம் தண்ணி குடிப்போம்.”
-பேச்சை மாற்றி அவனைக் கிளப்பினேன்.
தண்ணீரைக் குடித்துவிட்டு அங்கேயே தீப்பெட்டி வாங்கி சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டான்... எனக்குத் தண்ணீரைக் குடித்ததும் முள் அதிகமாக நெருட ஆரம்பித்தது...
குமட்டியது.
இவனுக்கும் தெரியும். கோலா மீனைச் சாப்பிட்டு எனக்கு முள் சிக்கிக்கொண்டது. அதுதான் எந்நேரமும் புலம்பிக் கொண்டே இருக்கிறேனே...
“ராஜா.. இந்த முள் இவ்வளவு நாள் போகாம இருக்கிறதப் பாத்தா இது முள்ளு தானான்னே எனக்குச் சந்தேகமா இருக்கு. ஒரு வேளை முடி கிடி சாப்பாட்டில் கிடந்து சிக்கிக்கொண்டிருந்தால்....?”
எனக்கு முடி என்றதும் பயமாகி விட்டது... அதோடு விடாமல், “ஒரு வேளை ஒன்னோட ப்ரமையாவும் இருக்கலாம்” என்றான்.
எனக்கு எரிச்சல் வந்துவிட்டது.
“அப்படின்னா... உன் அப்பாவோட நான் நேத்து ராத்திரி சினிமா பார்த்தேனே.. அவர் எப்படி அந்த நேரத்துலெ உன்னோட சண்டை போட்டிருக்க முடியும்... ஏதாவது கனவு கினவு கண்டிருப்பெ...”
”எனக்குக் கோபம் வரல்லெ...”
என் எரிச்சல் இன்னும் அதிகமாகியது.
“என்ன ராஜா.. இவ்வளவு நேரம்? இனிமே நீ வெளியே போகக் கூடாது நாளைக்கு நாங்க ஊருக்குப் போற வரைக்கும் வீட்லயேதான் இருக்கணும்...”
வீட்டில் நுழைவதற்குள் அத்தையின் ஆர்டர்...
“இப்ப என்ன ஊருக்கு அவசரம்? இன்னும் அஞ்சாறு நாள் கழிச்சுக் கிளம்பறது...”
“நான் என்ன பண்றது ராஜா... உன் மாமாதானே...”
“ஆமா, நீங்களும்தான் ஊருக்குப் போகணும் போகணும்னு பறக்கறீங்க...”
-இதுக்கு அத்தை பதில் சொல்லவில்லை.
நான் போய் கொல்லைக் கிணற்றில் குளித்துவிட்டு, திண்ணைக்கு வந்தேன்... அத்தை இல்லை. அறையில் படுத்திருக்கலாம் என்று அறைக்கு வந்தேன். அங்கே....
டேபிளின்மீது தலையைக் கவிழ்த்துக்கொண்டு சின்னக் குழந்தை மாதிரி குலுங்கிக் குலுங்கி...
“அத்தை... என்ன இது?”
தலையின் மீது கைவைத்து நிமிர்த்தினேன்.
“இப்ப உனக்குத் திருப்திதானே ராஜா... இவ்வளவுதான் நீ என்னத் தெரிஞ்சுக்கிட்டது...”
-எனக்கு என் மேலேயே வெறுப்பு ஏற்பட்டது. எவ்வளவு மென்மையான மனசைப் புண்படுத்தி இருக்கிறேன்.
தலையின் மீது வைத்த கையை நான் எடுக்கவே இல்லை.
இன்னும் சில நிமிஷங்கள்தான்... அப்புறம் வீடே வெறிச்சோடிக் கிடக்கும்...
இதோ புறப்பட்டு விட்டார்கள்... அத்தையும் மாமாவும்.. நானும் கிளம்பினேன், ஸ்டேஷன் வரைக்கும்....
ட்ரெய்ன் எட்டு மணிக்குத்தான் கிளம்பும்... ஒரு மணி நேரம் முன்னாலேயே வந்தாச்சு.. தம்பியும், மாமாவும் ஜன்னலோரத்தில் இடம் பிடித்துவிட்டார்கள்.
அத்தை என்னுடனேயே நின்று கொண்டிருக்கிறார்கள். “அடிக்கடி லெட்டர் எழுதுவியா...” என்று கேட்டுக்கொண்டே என் கைகளைப் பற்றிக் கொள்கிறார்கள்...
கண்ணீர்....
எனக்கு அப்படியே அத்தையைக் கட்டிக்கொண்டு கதற வேண்டும் போல் இருக்கு... ஆனால் கண்களில் ததும்பிய கண்ணீரைக்கூட கீழுதட்டைப் பற்களால் கடித்துக்கொண்டு அடக்கிக் கொள்கிறேன்...
எவ்வளவு நேரம் இப்படிப் போனதோ தெரியவில்லை. திடீரென்று அத்தை கண்களைத் துடைத்துக்கொண்டு உள்ளே போய் தம்பி உட்கார்ந்திருந்த இடத்தில் அமர்ந்தார்கள். தம்பி கீழே இறங்கினான்....
நான் ஜன்னலருகில் போய் அத்தையின் கையைப் பிடித்துக்கொண்டேன்.
‘இந்தக் கைக்கு இப்படியே ஒரு முத்தம் கொடுத்தால் என்ன...?’
ட்ரெய்ன் லேசாக நகர்ந்தது. நான் கைகளை எடுத்துக்கொண்டேன்.... ட்ரெய்ன் கொஞ்சங் கொஞ்சமாக வேகம் பெறுகிறது.
வெளிச்சம் தெரிகிற வரை ஒரு கை மட்டும் அசைந்து கொண்டிருந்தது தெரிந்தது.
வீட்டிற்கு வந்து அறைக்குள் போய் லைட்டை ஆஃப் பண்ணிவிட்டு நாற்காலியில் அமர்ந்தேன். ஒரு பெண்ணின் குரல். ‘கோலா.... கோலா... ரூபாய்க்கு ஏழு கோலா... கோலா....’ என்று ஒரு ராகத்துடன் ஒலித்தது...
கொல்லைப்பக்கம் போய் சுட்டுவிரலைத் தொண்டைக்குள் விட்டுக் குடைந்தேன்...
குமட்டல்தான் வந்தது...
முள்....?
- கணையாழி, டிசம்பர் 1979
தட்டச்சு : சென்ஷி