அழிந்த பிறகு -சிவராம காரந்த முன்னுரை
முன்னுரை
நாவலே என்னவோ எழுதிக்கொண்டு வருகிறேன். ஆனால் எழுதி முடித்த நாவலுக்கு முன்னுரை எழுதுவதென்றால் சலிப்பு. ஒரு நாவல் தெரிவிக்காததை முன்னுரை தெரிவிக்குமா? நாவலே தன்னுடைய நோக்கத்தைத் தெளிவாக எடுத்துரைக்காது விட்டால், எழுதிப் பயன் என்ன? முன்னுரை எழுதாதிருப்பதற்கு இவைபோன்ற பல காரணங்களிருக்கின்றன. என்றாலும் சிற்சில நேரங்களில் இரண்டொரு சொற்கள் எழுதலாமென்று தோன்றுகிறது. 'அழிந்த பிறகு என்னும் இந்த நாவலில், மனித வாழ்க்கையில் எஞ்சுவது என்ன என்பதைத் தேடிப்பார்க்கும் நோக்கம் இருக்கிறது. வெற்று நினைவுகள் மட்டுமே எஞ்சி நிற்பனவாம். வழி நடந்து செல்பவன். தன் காலடிச் சுவடுகளை விட்டுச் செல்வதைப்போல் கடந்துவிட்ட வாழ்க்கை, மற்றவர்களிடையே தோற்றுவித்த எண்ணங்களாலேயே அளக்கக்கூடியது எனலாம். தம் வாழ்க்கை அதைவிட அழுத்தமான சுவடுகளைப் பதித்துவிடும் என்று நடந்து செல்பவர் எல்லோருமே எண்ணவேண்டுயதில்லை. அந்தச் சிறப்பு எல்லோ ருக்குமே கிடைப்பதில்லை. இந்த நாவலில் வரும் யசவந்தரைப் போன்றவர்கள் பிறக்கிறார்கள், வாழ்கிறார்கள், பின்பு இறக்கிறார்கள். வாழ்ந்தவர்கள் தம்மோடு தொடர்புகொண்ட சிலருக்கு இனியவர்கள் பலருக்குத் தெரியாதவர்கள். வாழ்க்கையின் தொடர்பில் ஏற்பட்ட நன்மை, தீமைகளின் அழுத்தத்தை (ஆழத்தை) ஒருங்கிணைத்து. பசவந்தர் வாழ்க்கை எப்படியிரு தது என்று தேட இதில் முயற்சி செய்திருக்கிறேன். இது அவர் விட்டுச்சென்ற சுவடுகளைப் பின்தொடர்ந்து போவதைப் போன்றதேயாகும். வழி நடந்தவர் அவர் சிறு தொடர்பிலேயே இன்பம் கண்டு அந்தச் சுவட்டைத் தேடிப்போனவன் தான். இதில் என் அளவு கோலினால் அளப்பதற்கு முயல்கிறேன். என் முயற்சி பார்வையாளனுடையதைப்போன்றது. மலை வாழ்க்கை என்ற நாவலில் மேற்கொண்ட அந்த முயற்சியை இங்கே மீண்டும் மேற் கொள்கிறேன். அது ஒரு வகை. இது ஒரு வகை. அது வாழ்ந்திருந்தபோதே கண்டது; இது இறந்த பிறகு தேடியது. நாளை நம் காலம் முடிந்த பிறகு மற்றவர்களும் நம் வாழ்க்கையை இதே வகையில் ஆராயலாம். இப்படியே கருதலாம். கருதட்டும், விடட்டும்-நம் வாழ்க்கையில் விட்டுச் சென்ற சுவடுகள் சுற்றிலுமுள்ள வாழ்க்கையின்மீது ஒரு செல்வாக்கை உண்டாக்கியே தீரும். ஆயிரக்கணக்கான வேறு செல்வாக்குக்களோடு நம்முடையதும் கலக்கிறது. இறப்பில் முடிந்த எந்த வாழ்க்கையும் பயனற்றதல்ல. அது இயன்றவரை பயனுள்ளதாகவே கழிந்தால் போதுமென்று என் மனம் கூறுகிறது. எழுதிய நாவல் அச்சானதும் என் நண்பர் சிலருக்கு அனுப்பி வைக்கும் வழக்கத்தை வைத்துக்கொண்டிருக்கிறேன். அவர்கள் இவற்றையெல்லாம் படிக்கிறார்கள் படிக்கவேண்டும் என்னும் ஆசையை நான் வைத்திருக்கவில்லை. ஒருசிலர் படித்துவிட்டுத்தம் கருத்தை எழுதுவதுண்டு; சிலர், சந்திக்கும்போது நான் எழுதியதைப்பற்றிய ஐயங்களை எழுப்புவதுண்டு. என் நண்பராயிருந்த திரு. பி. எஸ். துங்க அவர்கள் இந்த இயல்பினர். இந்த நாவலை எழுதிக்கொண்டிருந்தபோதே நான் அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன்: என் மனம் இன்று கொடிய வேதனை, வருத்தம், அலைக் கழிப்புக்கீடாகியிருக்கிறது. இந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக ஓரிரண்டு இன்பச் செய்திகளும் வந்துள்ளன. ஆனால் அவற்றை மூழ்கடிக்கும் அளவுக்கு வருத்தம் தரும் சங்கதிகள் என்னைச் சூழ்ந்திருக்கின்றன. அவற்றைத் துடைத்தெறிவதற்காகவே ஒரு புதிய நாவலை எழுதத் தொடங்கியிருக்கிறேன். அந்த அளவு மகிழ்ச்சியாவது ஏதோவொரு புண்ணியத்தால் எனக்குக் கிட்டியிருக்கிறது-என்று அதில் குறிப்பிட்டிருந்தேன்.
எழுதிய நூல் அச்சுக்குச் சென்றது; நாளை அச்சேறி அதே நண்பரின் கைக்கு எட்டும். கொடிய வேதனையிலிருந்து பிறந்த இந்த நாவல் எப்படிப்பட்டதென்பதையறியும் ஆவல் அவருக்குண்டாகலாம். அவர் தமது ஐயங்களே எனக்கெழுதுவார் என்று நினைத்திருந்தேன். ஆனல் அந்த நாள் மாத்திரம் வர வில்லை. நாவல் அச்சகத்திலிருந்து வெளி வருவதில் தாமதம் ஏற்பட்டது. அதற்குள்ளாகவே நண்பர் துங்க அவர்கள் விபத்துக்காளாகி மறைந்துவிட்டார். இதை அவருடைய நட்பின் நினைவுக்குப் படைக்கும் நிலேயே ஏற்பட்டது. அவர் ஏறக்குறைய இருபதாண்டுகளாவது என்னேவிட இளையவராக இருக்கலாம். இந்த நாவல் அவருடைய நினைவுக்கு நான் செலுத்தும் கண்ணிர்க் காணிக்கையாகும் என்று நான் என்றுமே நினைத்ததில்லை.
துங்களின் பிறந்த ஊரான பாள குதுரு நான் பிறந்த ஊருக்கு அண்மையில் இருக்கிறது: ஐந்தே ஐந்து மைல் தொலைவிலிருக்கிறது. அப்படியிருந்தும் எனக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட தொடர்பு நட்பு, உறவு இந்த ஏழெட்டாண்டுகளுக் குள்தான். 1951இல் பொதுத் தேர்தலின்போது அவர் பி.டி.ஐ. நிருபராக எங்கள் மாவட்டத்துக்கு வந்தபோதுதான் அவருடன் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. -
அந்தச் சிறு அறிமுகம் உடன்பிறப்பைவிட ஆழமான நட்பைத் தோற்றுவித்தது.
துங்க அவர்கள் சாதாரணமான மெலிந்த, வெளுத்த உடலமைப்பை உடையவர். முகத்தில் குறும்புப் புன்னகை யொன்று மின்னலிடும். அந்தப் புன்னகையும் ஒளிவிடும் கண்களும் அவருடைய கூர்ந்த அறிவின் சின்னங்கள். அவருடைய அறிவு எந்த அளவுக்குக் கூர்மையதோ, அதே அளவுக்கு அவருடைய நாவும் கூரியது. துண்ணிய அறிவைப்போலவே அவருடைய வெளிப்படையான பேச்சும் அவருடைய இயல்பை எடுத்துக்காட்டியது. நடுத்தர வயதும், துணிவுள்ள மனமும் கொண்ட அவர், பத்திரிகைகளிலும் பி.டி.ஐ. செய்தி நிறுவனத் திலும் புகழ்பெற்றார். அவருடைய நண்பர்களும், அவருடைய வேலை காரணமாக அவருடன் தொடர்புடையவர்களும் எங்கும் நிறைந்திருந்தனர். பாகிஸ்தானில், அவர் இரண்டு மூன்றாண்டுகள் பி.டி.ஐ. நிருபராக இருந்திருக்கிருர். இந்திய அரசாங்கம் அவருடைய திறமையை நன்கு மதித்தது என்று தெரிகிறது. அயூப் சர்வாதிகாரம் தொடங்கியபோது முதன்முதலில் அந்தத் தகவலை வெளியிட்டவரே அவர்தான். பாண்டிச்சேரிப் புரட்சி நடவடிக்கைகளில் ஆசிரமத்துக்கு எந்த அளவுக்குப் பங்கிருந்தது என்று தெரிவித்தவர் அவர் இறப்பதற்கு ஒரிரண்டு மாதங்களுக்கு முன்பு நேபாவுக்குப் போகவேண்டுமென்று தவித்தார்; அப்போது அஸ்ஸாமில் ஒரு பஸ் விபத்தில் சிக்கி அவர் இறக்க வேண்டி வந்தது. அப்படிப்பட்டவாைப்பற்றி இந்திய அரசாங் கத்தின் தகவல்-ஒலிபரப்பு அமைச்சர் கேஸ்கர் அவர்கள் வெளியிட்ட அனுதாபச் செய்தி ஒரு சிறிதும் மிகையற்ற சிறப்புரை யாய் இருக்கிறது.
அவர் மிகுந்த ஏழ்மையில் பிறந்தார். தந்தையை இளவயதி லேயே இழந்துவிட்டார். தாயின் அன்பையும் அரவணைப்பையும் கூட விரைவில் இழந்து அநாதையாக வாழ்க்கை தொடங்கினர். படித்தது எஸ். எஸ்.எல்.சி. வரை தான்: துணிவு ஒன்றே அவருடைய வாழ்க்கையை நடத்திவந்த பேராற்றல், பணமோ, புகழோ அவருடைய மதிப்பைப் பெற்றதில்லை. மனித சமுதாயத் தின் எல்லே காணு ஆழத்தைக் கூர்ந்து நோக்குவதே அவருடைய வாழ்க்கையின் குறிக்கோளாயிருந்தது.
அழிந்த பிறகு என்னும் நாவலின் யசவந்தர் எப்படி வாழும் மனிதரோ, அவ்வாரே என் நண்பரான திரு. துங்க அவர்களும் தமது நண்பர் பலரின் நினைவில் ஆழ்ந்ததும் உயிரோட்டமுள்ளது மான ஒர் உருவை நிறுத்தியவர்.
நாம் அவருடன் பேசமுடியாவிட்டாலும், காணமுடியாத அவர் ஆன்மா தம்முடன் பேசிக்கொண்டே இருக்கிறது.
29–1–1960
புத்துர் சிவராம காரந்த
தென் கர்நாடகம்