தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்து காலத்தால் அழிக்கமுடியாதவை சிலவற்றை இங்கே இந்த இடத்தில் தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (TShrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Saturday, August 30, 2014

கோட் ஸ்டாண்ட் கவிதைகள் - நகுலன்

கோட் ஸ்டாண்ட் கவிதைகள் - நகுலன்
http://naveenakavithai.blogspot.in/2012/09/blog-post_8914.html

1.
 அலுப்பு
            அவனுக்கு
            வாழ்க்கை அலுத்துவிட்டது
            அவன் 59 வயதில்
            அப்படியா என்று
            கேட்காதீர்கள்.
மறுபடியும் அறைக்குள் செல்கிறான்
            இப்பொழுது இங்கு
                           யாருமில்லை
            அவன் கூட
            அவள்
யார் என்று கேட்காதீர்கள்
உங்கள் துருவிப் பார்க்கும்
கண்களுக்குச் சற்று ஓய்வு
கொடுங்கள்
உங்களுக்கு இதைப் பற்றி
எல்லாம் ஒன்றும் தெரியாது
அக்கறையுமில்லை.
கை எழுதி அலுத்து விட்டது.
கண் பார்த்து
மூளை சிந்தித்து
மனம் அதையும்  இதையும்
            நினைத்து நினைத்து
தேகத்தையே உரித்து
கோட்  ஸ்டான்டில்
தொங்கவிடுகிறான்
அவனை
அது பரிதாபமாகப் பார்க்கிறது.
“நீ என்னை இப்படித்
தூக்கி எறியலாமா?
என்று.
அவன் சொல்கிறான்:
“இல்லை நீ அங்கேயே
தொங்கிக் கொண்டிரு;
உன்னைப் பிடித்துக் கொண்டு
நான் தொங்குவதை விட
நீ தனியாகத் தொங்கிக்
கொண்டிருப்பதுதான்
ரண்டு பேருக்கும் நல்லது
என்று,
சொல்லி விட்டு
அறைக்கதவைச் சாத்திவிட்டு
வெளியே செல்கிறான்.2.


அவனும் அவன்
சிநேகிதனும்
சண்டைப் போட்டுக் கொண்டு
சமாதானமும்
அடைந்துவிட்டார்கள்.
அவன் இவன் வார்த்தைகளைப்
பொறுக்கமுடியாமல்
கையிலிருந்த புஸ்தகத்தை
நேர் பகுதியாக நாலைந்து
தடவை
கிழித்து எறிந்தான்.
கோட்  ஸ்டான்டில்
தொங்கிக் கொண்டிருந்த
உடலைப் போல்
அந்தப் புஸ்தகம் அவனைக்
கேட்டது.
“நீங்கள் இருவரும் படித்தவர்
கள் இல்லையா?
உங்களுக்குள் சண்டை
ஏற்பட்டால்
ஏன்,
நண்பா, என்னைக் கிழித்து
எறிய வேண்டும்?” 
சொன்னான்
“படித்தவன்
என்றதால்
என்னைக் கிழித்து எறிவதற்குப்
பதில்
உன்னைக் கிழித்தெறிந்தான்
மேஜையில் கிடந்த
புத்தகம்
அவர்களை என்னவோ
மாதிரிப்
பார்த்துக் கொண்டிருந்தது.

3.

அன்றிரவு அவன்
ஒரு கனாக் கண்டான்
வெகு நேரம்
கோட்  ஸ்டான்டில் தொங்கிக்
கொண்டிருக்கும் உடலையே
பார்த்துக் கொண்டு நின்றான்
அதைக் கழற்றிக்
கோட்  ஸ்டான்டில்
தொங்கவிட்டு விட்டான்
என்பது என்னவோ சரி.
ஆனால்
அவன் இப்பொழுதெல்லாம்
காணாமல் போன
தன் நிழலையே
தேடிக்கொண்டிருக்கின்றான்
நிழல்கள் மாத்திரம்
எங்குமே இருப்பதில்லை;
இங்கு கூட என்று இல்லை;
அங்கும்4.


வேறொரு நண்பனைப் பார்க்கச்
      சென்றான்
இப்பொழுதெல்லாம் இது ஒரு
      பழக்கமாகிவிட்டது
போன இடத்தில் அவன்
வெளியே போய்விட்டான்
என்றார்கள்
“என்னைப் போலவா?” என்று
கேட்கச் சென்றவன்
அதை அடக்கிக் கொண்டு
திரும்பிப் பார்த்ததும்
உடல் அவனைக் கேட்டது
“கஷ்டமாக இருக்கிறது
இல்லையா?
      என்று.5.


வெளி வாசல் திண்ணையில்
அவன்
ஒரு சூரல் நாற்காலி
அருகில்
ஒரு சூரல் வட்ட மேஜை
அதன் மீது
புஸ்தகம் நோட் புஸ்தகம்
பேனா, பாட், அகராதி
வெற்றிலை, பாக்கு புகையிலை
சுண்ணாம்பு வகையறாக்கள்
எதிரில் சிமிண்ட் திட்டையில்
ஒரு செம்புத் தண்ணீர்
கண் எதிரில்
வெளி முற்றம்
மரம் செடி கொடி
மெல்ல வந்து பறந்து
செல்லும் பறவைகள்
எல்லாமே மங்கலாகத்
தான் தெரிந்தன
வாய் வெற்றிலை பாக்குக்குப்
பரபரத்தது
கண் தெளிவான பார்வைக்கு
மனம் மெல்லத் துடித்துக்
கொண்டிருந்தது
துடிப்பின் கதி அதிகரிக்க....
அப்பொழுது தான்
ஏதாவது செய்ய முடியும்
ஆனால் ஒன்றும் செய்யமுடியவில்லை
பின்னால் அடுத்த அறையி
      லிருந்து
ஒரு குரல் ஒலித்தது
என்னைத் தூக்கி எறிந்து விட்டாய்
இப்பொழுது
தெரிகிறதா?
என்று.

6.

வெளி வாசல் திண்ணையில்
சூரல் நாற்காலியில்
உட்கார்ந்திருந்தான்
இருட்டிக் கொண்டு வருகிறது
மங்கல் வெளிச்சத்தில்
எதிரில் இருக்கும்
அரளிச் செடியில்
இந்த அரை இருட்டிலும்
மஞ்சள் மஞ்சளாகப் பூக்கள்
தெரிகின்றன
தெருவில்
போகும் உருவங்கள் தெரியாவிட்டாலும்
குரல்கள் ஒலிக்கின்றன
இதிலும் ஒரு நிம்மதி
முழு இருட்டில் இருக்கப் பயம்
மீண்டும் அடுத்த அறைக்குள்
செல்ல ஒரு பரபரப்பு
எலெக்ட்ரிக் லைட்
மேஜை  நாற்காலி
புஸ்தகங்கள்
அம்மா அப்பா சகோதரி
குப்பிகள்
வெற்றிலைப் பாக்கு வகையறாக்கள்
ரேடியோ
இப்படியாக
கோட்-ஸ்டான்ட் கேட்கிறது?
“இப்பொழுது தெரிகிறதா?7.


நள்ளிரவில்
தனியாக
சூரல் நாற்காலியில்
உட்கார்ந்து கொண்டு
எழுதிக் கொண்டிருக்கின்
                  றான்
அருகில்
தரையில்
ஒரு பாம்பு
சுருண்டு கிடக்கிறது
காலம் கண்ணாடியாகக் கரைகிறது
ஒரு நதியாக ஒரு ஜலப்ரள
      யமாகச்
சுழித்துச் செல்லுகிறது
விறைத்த கண்களுடன்
அதன் மீது செத்த மீன்கள்
      மிதந்து செல்கின்றன
எழுந்து கோட்-ஸ்டான்டில்
தொங்கிக் கொண்டிருந்த
சவுக்கத்தை எடுத்து
ஒரே தெப்பமாக
நனைந்த
தலையைத் துடைத்துக்
            கொள்கிறான்8.

அம்மாவுக்கு
      எண்பது வயதாகிவிட்டது
கண் சரியாகத் தெரிவதில்லை
ஆனால் அவன் சென்றால்
      இன்னும் அருகில் வந்து
      உட்காரக் கூப்பிடுகிறாள்
அருகில் சென்று உட்கார்கிறான்
அவன் முகத்தைக் கையை
      கழுத்தைத் தடவித்
தடவி அவன் உருக்கண்டு
உவகையுறுகிறாள்
மறுபடியும் அந்தக் குரல்
      ஒலிக்கிறது
“நண்பா, அவள்
எந்தச் சுவரில்
எந்தச் சித்திரத்தைத்
தேடுகிறாள்?9.


அன்று அவனுக்கு
ஒன்றுமே புரியவில்லை
வெளி வாசலிலா
அல்லது உள் அறையிலா
பகலா இரவா
நேற்றா இன்றா
வீடா கல்லூரியா
அம்மா அவனைத் தொட்டுத்
      தொட்டு
உணர்ந்தது போல
அவனுக்கும் தன்னைத்
தொட்டுத் தொட்டுத்
      தன்னையே உணர
வேண்டுமென்ற
ஒரு கட்டுக் கடங்காத
      ஆவல்
ஆனால் முடியவில்லை
அறை முழுதும் ஒரு
      லேசான நெடி;
எங்கிருந்து?
தரையில்
பேகான் தின்றுவிட்டுச்
செத்துக் கிடக்கும் கரப்புகள்
தரையில்
ஏதோ ஒரு ஜந்து
விரைந்து செல்லும்
      சப்தம்
எல்லாம் ஒரே இருட்டாக
      இருந்தது
அவனுக்கு இப்பொழுதும்
கோட்-ஸ்டான்ட்
ஞாபகம் வந்தது
ஆனால் அவன் அது
      இருக்கும்
பக்கம் கூடத் திரும்பிப் பார்க்கவில்லை.


10.


அந்த அறையில் அவன்
      இல்லை
கோட்-ஸ்டான்ட் இருந்தது
அங்கு நால்வர் இருந்தனர்
அவர்கள்
புது-க்-கவிதையைப் பற்றி
அ-நாவலைப் பற்றி
அதைப் பற்றி
இதைப் பற்றி
புதிய முயற்சிகள் பற்றி
இப்படியாக இப்படியாக
என்னவெல்லாமோ
எதைப் பற்றியெல்லாமோ
எப்படியெல்லாமோ
பேசிக் கொண்டிருந்தார்கள்
கோட்-ஸ்டான்ட்
அவர்களைப் பார்த்துக்
கொண்டிருந்தது
************************************************************************************************************

கோட் ஸ்டாண்ட் கவிதைகள் - நகுலன்
1.
அலுப்பு அவனுக்கு
வாழ்க்கை அலுத்துவிட்டது
அவன் 59 வயதில்
அப்படியா என்று
கேட்காதீர்கள்
மறுபடியும் அறைக்குள் செல்கிறான்
இப்பொழுது இங்கு
யாருமில்லை
அவள் கூட
அவள்
யார் என்று கேட்காதீர்கள்
உங்கள் துருவிப் பார்க்கும்
கண்களுக்குச் சற்று ஓய்வு
கொடுங்கள்
உங்களுக்கு இதைப்பற்றி
எல்லாம் ஒன்றும் தெரியாது
அக்கறையுமில்லை.
கை எழுதி அலுத்துவிட்டது.
கண் பார்த்து
மூளை சிந்தித்து
மனம் அதையும் - இதையும்
நினைத்து நினைத்து
தேகத்தையே உரித்து
கோட்-ஸ்டாண்டில்
தொங்க விடுகிறான்
அவனை
அது பரிதாபமாகப் பார்க்கிறது