தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Wednesday, May 18, 2016

ஒரு இலக்கியக்காரனின் 'கென்டெயினர் பயணம்' - மானுட புத்ரன்

ஒரு இலக்கியக்காரனின் 'கென்டெயினர் பயணம்'

மானுட புத்ரன்
எக்ஸில் 4 நவம்பர், டிசம்பர் 1998
எதிலிருந்து ஆரம்பிப்பது? எங்கே தொடங்குவது? யாரிடம் சொல்லமுடியுமிதை?யார் ஆற் றுவார்? பரவாயில்லை. இது ஒரு எழுத்திலாவது பதியப்படட்டும்! பின்னரொரு நாளில் யாராவது பார்த்து என்னையும் என்னைப் போன்றவர்களையும் ஆற்றுப்படுத்தட்டும். ஒரு நப்பாசை மேலிடுகிறது.
இது என் கதை. என் போன்ற எத்தனையோ பேரின் கதை. குமுறிக் குமுறிக் கொண்டிருக்கும் நெஞ்சங்கள் வெளியே எழுத முடியாத அல்லது எழுதத் தெரியாத கதை.
இங்கேதான் அனுபவமே இல்லாத அனுபவ மொன்றுக்குள் உங்களை அழைத்துச் செல்லப்போகிறேன். நீங்களெல்லாம் அகதிகளாக இருக்கலாம். அரசியல் அகதிகளா? அல்லது பொருளாதார அகதிகளா? என்றெல்லாம் நான் இப்போது கேட்கப் போவதில்லை. அது எனக்குத் தேவையுமில்லை.
ஆனால் 'கென்டெயினர் பயணம்' அல்லது ஆட்கடத்தல் கேள்விப்பட்டிருப்பீர்கள்தானே. அதென்றால் என்ன? ஒரு இலக்கியக்காரனான எனக்கே ஏற்பட்டுப்போச்சே அதுதான் அனுபவ அதிஷ்டம் என்பது. ஏனென்றால் ஒவ்வொரு தமிழனும் எப்படியெல்லாம் ஏஜென்டிடம் பணங்களை அள்ளிக்கொடுத்து, உயிரைக்கொடுத்து வருகிறான் என்பதையாவது தெரிந்துகொள்ளவேண்டாமா?
ஒல்லாந்து-பிரான்ஸ்-ஜேர்மனி போன்ற நாடுகளில் வைத்துச் சொன்னார்கள். இந்த நாடுகளில் மொழி படிக்கவேண்டும். இங்கிலாந்து போங்கள் மொழிலேசு. அகதிகளை ஏற்கிறார்கள். வேலையும் செய்யலாம்.
ஒரு ஏஜென்டைப் பிடித்து 3500 மார்க் கொடுத்துப் போக வேண்டுமாம். இலங்கையில் இருந்து காசை வரவழைத்தாயிற்று. அனுப்புகிறோம் வாருங்கள். அழைப்பு வந்தது. எப்படிக் கொண்டு போகிறார்கள்? யார் கொண்டு போகிறார்கள்? எதுவுமே தெரியாது. வரச் சொன்னார்கள் போனேன். பெல்ஜியத்தில் ஒரு வீட்டில் இருக்கச்சொன்னார்கள். இருந்தேன். என்னோடு சேர்த்து நான்கு பேர் ஏற்கனவே இருந்தார்கள். தமிழர்கள்தானே பாஷை புரிகிறதே அது போதும். சமைத்தார்கள் சாப்பிட்டோம்.
அன்றிரவு பதினொரு மணி போல ஒருவன் வந்து சொன்னான் "வெளிக்கிடுங்கோ!" காரில் ஏற்றினான். கார் போகிறது புகைப் போல.. ஒன்றரை மணித்தியாலம் மட்டில் கார்ப்பயணம். ஓரிடத்தில் நிறுத்தி இறங்கச் சொன்னான். இறங்கியாயிற்று. "இறங்கி ஒடுங்கோ". ஒடினோம். "பற்றைக்குள் படுங்கோ". படுத்தோம்
அவன் போய் கென்டயினர் வரிசையாய் நிற்கும் இடங்களை அவதானித்தான். ஏதோ ஆமிக் கேம்பை தகர்க்கும் பாணியில் - உத்திகளோடு எல்லாம் சுழண்டு படுத்து அனுகூலம் பார்த்து ஒருவாறாக ஒரு றெக்ஸின் கென்டயினரை அவிழ்த்து "ஒவ்வொருத்தராய் வந்து ஏறுங்கோஉத்தரவுப் பிரகாரம் வந்து ஏறினோம்."இங்கிலாந்து போவியள். இனி உங்கடை பாடுதான். சத்தம் போடாமல் இருக்கவேணும். இருங்கோ." பக்குவமாக வெளியில் கட்டினான். போய்விட்டான்.
நடுச்சாமம். படுக்கவேண்டும். நித்திரை வருகிறது. என்னைப் படுக்க மற்றவர்கள் விடுகிறார்க
எக்ஸில் 4 நவம்பர், டிசம்பர் 1998 19

________________
ளில்லை. நான் ஒரு குறட்டை ஆசாமி. எல்லோருமாய் என்னைத் தட்டி எழுப்பிக் கொண்டிருந்தார்கள். கென்டயினர் அரைவாசி வெறுமனேயே கிடக் கிறது. குளிருகிறது பேய்க் குளிர்.
என் மனைவியே! நான் ஐரோப்பா வரும்பொழுது ஏன் அப்படியெல்லாம் அழுதாய்?இரண்டு கிழமைகளாக என்னைக் கட்டிக்கொண்டு அழுதாயே. என்ன எனக்கெல்லாம் சகுனம் தெரிந்ததா என்ன? இப்படி யெல்லாம் அகதிகள் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்று. பலகைத் தட்டு, ஊத்தைக் கென்டயினர் படுக்கமுடியவில்லை. முதுகெலும்பு வலியெடுத்தது. போகவேண்டும். ஆம் போகத்தான் வேண்டும் இங்கிலாந்துக்காவது.
காலையில்'கென்டயினரை எடுக்கிறான் சாரதி ஒடுகிறது அது. ஒடிக்கொண்டே இருக்கிறது. ஒரு மூன்று மணித்தியால ஓட்டம். திடீரென்று நிற்கிறது. றெக்ஸின் சீற்றுக்குள்ளால் ஓட்டைபோட்டு வெளியே பார்த்தான் வந்தவனில் ஒருத்தன். *
அதற்கிடையில் திடீரென்று வந்து பின் கதவைத் திறந்தான் சாரதி. அதிர்ச்சி அடைந்தான். "இறங்கி ஒடுங்கோ" ஆங்கிலத்தில் திட்டினான். ஓடினோம். எங்கே என்று தெரியாமல் ஓடினோம். பெரிய பாதையால் ஓடினால் பொலிஸ் பிடிப்பார்கள். பிரிந்து பிரிந்து இவ்விரண்டு பேராக ஒடி ஒரு மாதிரி ஒரு சிறிய வங்கியைக் கண்டுபிடித்து காசு மாற்றினோம். கையிலிருந்தது பவுன்ட். கை நிறையத் தந்தார்கள் பெல்ஜியம் பணத்தை. சுத்திச் சுத்திச் சுப்பற்றை கொல்லேக்குள்ளதான் வந்து சேர்ந்திருக்கிறோம். ஆம் பெல்ஜியத்துக்குள்ளேதான்.
பொலிஸுக்குப் பயந்தோம். பிடித்தானென்றால் அந்த நாட்டுக்குள்ளேயே அகதியாய் அலைக்கழிப்பானே. பயம்தான். ரயில் பிடித்து மீண்டும் முதல் நாள் நின்ற அதே வீட்டுக்கு ஏஜென்டிடம் வந்து சேர்ந்தோம். இது ஒன்றும் புதினமில்லை ஏஜென்டுக்கு. எனக்கு ஏதோ பெரிய பாடாக இருந்தது.
சமைக்கச் சொன்னான், சமைத்தோம். சாப்பிடச் சொன்னான், சாப்பிட்டோம். அசதி மிகுதியால் படுத்துக் கிடந்தோம். நித்திரை வந்தது.
முதல் நாள் செவ்வாய்க்கிழமை. அன்றைக்கு புதன். நித்திரையில் வந்து எழுப்பினார்கள். அவசரமாய் கழிசானைப் போடுங்கோ. என்ன இழவு இது. கழிசானுக்கு மேலால் கழிசான். ஷே டுக்கு மேலால் இன்னும் 3 ஷேட்டுகள் போடவேண்டாமா? அதுதான் 'பை' ஒன்றும் கொண்டு போக விடமாட் டார்களே. வேறென்ன செய்வது. அங்கை போய் என்னத்தைப் போடுறது. நான் இவற்றை எல்லாம் போட முதல் இன்னும் நாலு பேரைக் கூட்டிக்கொண்டு போய்விட்டார்கள். அவர்கள் இங்கிலாந்து போய்ச் சேர்ந்து 'கிறைடோன் அகதி விடுதியில் அல்லல்ப டும் கதை தனி. -
அதிருக்கட்டும். எனது பயணனுபவங்கள்தானே தொடருகிறது. தொடரட்டும் விடுங்கள்.
எங்களைக் கூட்டிக்கொண்டு போனார்கள். என்னோடு இன்னும் மூன்று தமிழர்கள். தமிழர்களைத் தமிழர்கள் ஏற்றும் தமிழர் கதை இது. அவசரமாய் வரச் சொன்னார்கள். போனோம். கொண்டு போனார்கள் காரில் இரண்டு மணித்தியாலங்கள் வரை. காரின் பின் ஆசனத்தில்பேரை அடைத்து ஏற்றி இருந்தார்கள். ஒருவன் எங்கள் நான்கு பேரையும் கற்கள்,முட்கள், செடிகள் ஊடாக சுமார் ஒரு மைல் துரமளவிற்கு நடத்திக் கூட்டிக்கொண்டு போனான்.
ஒரு துறைமுகம் வந்தது. கென்டயினர்கள்' நிறைய நின்றன. ஆசுவாசமாய்ப் போய் ஒரு கென்டயினர் நாடாவை அவிழ்த்துவிட்டு உள்ளே ஏறும் படி சொன்னான். ஏறினோம். அப்பாடா இதுவாவது இலண்டன் போகுமா? அல்லது இங்கிலாந்தின் ஏதாவது ஒரு கரையையாவது தொட்டுப் பார்க்குமா? மனவலி, முதுகுவலி அப்பாடா. ஏறினால் உள்ளே எல்லாம் எழுதும் காகிதங்கள் அல்லது அச்சடிக்கும் வெள்ளைக் காகிதங்களின் பெரிய பெரிய கட்டுகள். எங்களில் வந்த ஒரு புத்திசாலி(?) சொன்னானாக்கும். இது இலண்டன்தான் போகிறது சந்தேகமேயில்லை. எழுதும் காகிதம் அல்லது அச்சடிக்கும் காகிதம் என்றால் இலண்டனுக்குத்தானே போக வேண்டும். அட பாவி உனக்கு எங்கேயிருந்து இந்த மூளை வந்ததடா? எனக்கு ஒன்றுமே சொல்லத் தோன்றவில்லை. படுத்தேன். சுகமாக இருந்தது. இலக்கியக்காரனுக்கு காகிதம் என்றால் அதன் மேல் படுத்தாலும் சுகம் வருமாக்கும். எனக்கு நித்திரை வரப்பார்க்கிறது. விடுகிறான்களில்லை மற்றவன்கள். எழும்பு, உன்ரை குறட்டை எங்களையும் சேர்த்துக் காட்டிக் கொடுத்துவிடுமே பயப்பட்டார்கள். குந்திக்கொண்டு கோழித் தூக்கம் போடக்கூட விடுகிறார்களில்லை.
"அடேய் நான் ஒரு எழுத்தாளனடா! என்ரை கவிதைகளை கதைகளை போட்டு அல்லது படித்து மற்றவர்கள் என்னை மதிக்கிறார்களடா! நான் ஒரு அறிவிப்பாளரும் கூட. எடா, என்னை எப்படி யெல்லாம் எல்லா இடங்களிலும் கவனித்தார்களடா."
"எழுத்தாளரும் மயிரும். இப்ப, நீ குறட்டை விடக் கூடாது. சத்தம் போட்டுப் பேசக்கூடாது. என்னண்டாலும் இப்ப நீ எங்கடை "கென்டயினர் கூட்டாளி. இதுக்கு சிலவைகளை நாங்கள் சொல்லுறமாதிரித் தான் கேக்கவேணும். கென்டயினரிலை போறதுக் கொண்டு சில வழிமுறைகள் இருக்கு. சத்தம் போடக்கூடாது. மூத்திரம் பெய்யக்கூடாது. கக்கூசுக்கு போகக்கூடாது. குறட்டைவிடக்கூடாது. இப் படி... இப்படி.." .
அப்படியா? கட்டுண்டேன். வழிப்படத்தானே வேண்டும். வழிப்பட்டேன்.
காலையில் கென்டெயினரைப் பூட்டிக்கொண்டு துறைமுகத்தை விட்டு வெளியில் எடுக்கிறான் சாரதி. இதாவது போகட்டுமே இங்கிலாந்துக்கு. ஒருவன் நெஞ்சை இடப்புறம் வலப்புறமாகத் தொட்டு சிலுவை யேசுவைப் பிரார்த்தித்துக் கொண்டான். மற்றைய இருவரும் கைகளைத் தலைக்கு மேல்
20 எக்ஸில் 0 நவம்பர், டிசம்பர் 1998
________________
தூக்கி கும்பிட்டுக் கொண்டார்கள். எனக்கென் னவோ லண்டன் போகும் வரை யோசனைதான். உயிருக்கும்கூட. என்னாகுமோ? எத்தனை நாளாகுமோ?
'கென்டயினர்' துறைமுக செக்கிங் எல்லாம் முடிந்து வெளியே ஒடுகிறது புலப்படுகிறது. எண்ணி 12 மணித்தியாலத்திற்குள் கென்டயினரை நிற்பாட் டிவிட்டு சாரதி வந்து பின் கதவைத் திறக்கிறான். திறப்பது தெரிந்தது. ஏறி எட்டிப் பார்த்தான். நாங்கள் நால்வரும் படுத்துக்கொண்டு இருந்தோம். சாரதி எங்களைக் கண்டுவிட்டான். ஒருவன் எழும்பி சாரதியைக் கும்பிட்டான். அவனுக்கெங்கே 'கும்புடு" விளங்கப் போகிறது. எழும்பி மெதுவாக நடந்து வந்தோம். கென்டயினர் அவ்வளவு நீளம்.
சாரதி சிரித்தான். அவனை இப்பூவுலகில் நல்லவனாகப் படைத்தவன் எவனோ அவனுக்கு நயம் மிகு நன்றிகள். "எங்கே போகிறீர்கள்? கேட்டான் சாரதி. "லண்டனுக்கு..." " மை. கோட்" -
எல்லோரும் அப்படியே இருங்கள் என்றுவிட்டு பின் காகிதக் கட்டில் வைக்கப்பட்டிருந்த அவனுக்கான கடிதத்தை எடுத்து, தான் போகவேண்டிய விலாசத்தைப் பார்த்தான். "நான் பிரான்ஸ் போகிறேன். தேவையென்றால் அங்கு கொண்டு போய் விடட்டுமா?" ஆங்கிலத்தில் கேட்டான் அவன்.
"எங்களை இந்த இடத்தில் இறக்கிவிடு ராசா" நான் சொன்னேன்.
"இந்த இடம் ஆபத்து. உங்களைப் பொலிஸ் பிடிக்கும். அப்படியே இருங்கள். பாதுகாப்பான இடத்தில் விடுகிறேன். யார் கண்ணிலும் படாமல் போய்த் தப்புங்கள்." - என்ன ராசி இது? இவனும் மகா நல்லவன். உலகத்திலே உள்ள நல்ல கென்டயினர் சாரதிகளில் இவனும் ஒருவனே! நல்ல சாரதிகளே நீவிர் வாழ்க! ஒரு நிலக்கரிச் சுரங்கம் அல்லது நிலக்கரி உலை. அதனண்மையில் எங்களை இறக்கிவிட்டு கைலாகு கொடுத்து போகச் சொன்னான். தேடிப் போய் நடையாய் நடந்து ஒரு கடை கண்டு பிடித்து கடைக்காரனிடம் அடிமாட்டுவிலைக்கு பவுண் மாத்தி பசிக்கும் தாகத்திற்குமாய் 'கோலா குடித் துவிட்டு ரயில் நிலையம் தேடி பணம்மாற்றி பயணச்சீட்டு எடுத்துக்கொண்டு அந்த ஏஜென்டின் வீட்டுக்கு வந்தடைந்தோம். இரண்டாவது பயணமும் பாழ்.
"எனைத் துணையர் ஆயினும் என்னம் தினைத் துணையும் தேரான் பிறன் இல் புகல்?" வள்ளுவனே! நீ என்னத்தை நினைத்துக் கொண்டு சொன்னாயோ? இந்த நேரத்தில் ஞாப கத்துக்கு வந்து தொலைக்கிறதே இது! மீண்டும் பெல்ஜியத்துக்குள்ளேதான்.
எல்லாக் கனவுகளுக்கும் மண். எங்கள் பூமியில் இருந்தே உயிரை விட்டிருக்கலாம். ஏனிந்த இங் கிலாந்து? அரசியல் அகதிகளுக்கு அங்கே என்ன சொர்க்கமா தரப்போகிறார்கள்? முதுகு வலிக்கிறது. ஒவ்வொரு எலும்பு முட்டுகளுக்குள்ளாலும் வேதனை பீறிடுகிறது. பசியாலும் தாகத்தாலும் வலுவிழந்து போனேன். கென்டயினர் பயணம்' என் றால் என்ன இலேசானதா?21பேர் ஒரு முறை மாதக் கணக்காக பயணம் செய்யும் கப்பல் கென்டயினர் ஒன்றில் இருந்து ஒன்றாகவே செத்துப்போனார் களாமே. இது எல்லாம் கதைகளல்ல. தினம் நடை பெறும் உண்மையான கண்ணிர் அவலங்கள்தானே. கவிஞர்களே! சர்வதேசப் பிரபலங்களே! ஒரு முறையாவது அனுபவித்துப் பாருங்கள். "பிச்சை வேண்டாம். நாயைப் பிடி" என்பீர்கள். ஒவ்வொரு தமிழனும் இப்படித்தான் அனுபவிக்கிறானா? என்னரிய தாய் நாடே. ஏனெம்மை விரட்டி வதைத்து வேத னைப்படுத்துகிறாய்? சமாதானத்தின் காவலர்களே சொல்லுங்கள்! இன்னும் சில காலங்களுக்குள் இலங்கையை குட்டிச் சோமாலியாவாக்க பிரயத்த னப்படும் யுத்தப் பிசாசுகளே! உங்களுக்கெங்கே தெரியும் இந்த வேதனைகள்? புதுச் சட்டமாம் இலங்கைப் பாராளுமன்றத்தில்...
ஐரோப்பிய மற்றும் நாடுகள் திருப்பியனுப்பிய அகதிகளை கட்டுநாயக்க விமானநிலைய விசாரணைக் குழுவிடம் ஒப்படைத்து 2 லட்சம் ருபா அபராதம் அல்லது ஐந்துவருட சிறைத் தண்டனை. அட பாவிகளா!
பெல்ஜியம் ஏஜென்ட் வீட்டில் வைத்து வழமையான சாப்பாடு. பின் அசதி மிகுந்த துக்கம். 24 மணித்தியாலத்திற்கொரு தடவையாவது சோறு தின்னக் கிடைத்த பாக்கியமாவது கிடைத்தது பாருங்கள்.
வியாழன், மூன்றாவது நாளிது. வழமைபோல் இரவு 11மணிபோல் வந்து எழுப்பினார்கள். நாங்கள் நான்கு பேரும் வாரிச் சுருட்டிக்கொண்டு எழும்பி ஓடி னோம். வழமையாக அல்லாமல் கார் ஒடிக் கொண்டே இருக்கிறது. எங்கே போகிறதோ? அட எனக்குப் பரிச்சயமான இடம் வருகிறதே. ‘அம்ஸ்ரடம் பின்னர் 'றொட்டடம். . இது. ஒல்லாந்து. இடையில் வேறொரு காரில் மாற்றப்படுகிறோம்.
ஒடி. ஒடி... உலகப் பிரசித்தி பெற்ற துறைமுகத்துக்கு அருகில் கொண்டு வந்துவிட்டார்கள்.
ஏதோ பெரிய அதிரடிப்பாணியில் எங்களுக்குப் பயிற்சி தரப்பட்டது. தமிழ் ஏஜன்ட் ஒரு துருக்கிக் காரனுக்கு பொறுப்புக் கொடுத்திருந்தான். கீழே மாகடல். கப்பல்கள் நிற்கின்றன. மேலே கம்பி வேலி, அப்பாலே கென்டயினர்கள் அடுக்கி நிற்கின்றன. சரிவாய் கட்டிய சீமெந்துப் பாதையில் குனிந்து கொண்டு அரைமைல் தூரம் நடக்கவேண்டும். பின்னர் மேலேயும் ஒரு கம்பி கீழேயும் ஒரு கம்பி. சுமார் 20மீட்டர் வரை கம்பியில் நடக்கவேண்டும். தவறிவிழுந்தால் கீழே ஆழ்கடல். அவ்வளவுதான் யாரும் காப்பாற்றமாட்டார்கள். கடலில் மூழ்கி செத்துப் போகவேண்டும். ஒரு மாதிரி ஆபத்துகள் தாண்டி வந்தால், ஒருபுறம் எங்களுக்கு நல்ல காலம். மறுபுறம் ஏஜென்டுக்கு இலங்கைப் பணப் பெறுமதிப்படி
எக்ஸில் 0 நவம்பர், டிசம்பர் 1998 21
________________
தலைக்கு ஒரு லட்சத்து பதினேழாயிரத்து ஐநூ ரூபாய் தேறுகிறது. .
எட்டிப் பார்த்தான் எங்களை அழைத்து வந்தவன். செக்கியூரிட்டி எங்கே போனான்? அவனின் அறைமட்டும் திறந்திருக்கிறது. ஆளில்லை. ஒண் டுக்கு ரெண்டுக்கு போயிருப்பானாக்கும். வெள்ளைக்காரனே! உன் கண்ணில்கூட விரலைவிட்டு ஆட்ட எப்படிப் பழகிக்கொண்டான் என்னவன்?
வேலி ஏறிக் குதித்து ஒரு கென்டயினர் அருகில் உயிரைக் கொடுக்காமல் கொடுத்து வந்தாயிற்று. எல்லோரையும் அதன் கீழே படுக்கச் சொன்னான்; ஏறினோம். அப்படி ஏறுவது, மற்றும் ஏற்றுவது கிரி மினல் குற்றமாமே. எங்கள் நால்வரோடு சேர்த்து ஒரு அல்பானியன். இன்னுமொரு பாகிஸ்தானியன். மொத்தமாக ஆறுபேர். உள்ளே ஏறினால் கென்டெ யினரில் கொக்கோக்கோலா ரின்களை பெட்டி பெட்டியாக நிரப்பி அடுக்கி இருந்தார்கள். ஒரு மணித்தியாலமளவில் லண்டன் போவீர்கள். சொல்லிவிட்டு கென்டயினரை முதல் இருந்ததுமாதிரிக் கட்டிவிட்டு அவன் போய்விட்டான். இருக்க இட மில்லை. கிடைத்த சிறிய இடைவெளிகளைப் பகிர்ந்துகொண்டு இடுப்பெலும்பு நோக நோக இருந் தோம். பசித்தது; உணவில்லை. தாகித்தது. "கொக்கோக்கோலாவை ஏற்றியனுப்பிய முதலாளியே! அல்லது நிறுவனமே! எங்களை மன்னித்து விடுங்கள். குடித்துக் குடித்தே தாகம் தீர்த்தோம். இரவும் பின்னரொரு பகலும்.
அடுத்தநாள் பகல் 12மணியளவில் கென்டயினரை எடுத்துக் கப்பலில் ஏற்றுவது தெரிந்தது. அதென்ன அப்படிச் சத்தம்? இடி இடியென. கப்பல் எப்படி இருக்கும்? எங்களுக்கெல்லாம் இருட்டு மட்டும்தானே துணை. என்னது ஒரு மணித்தியாலமா? கப்பலே எங்கு போகிறாய்? எண்ணிக்கை தவறாமல் 13 மணித்தியாலங்கள் போகிறது கப்பல்.
இதென்ன இங்கிலாந்தைச் சுற்றிக்கடல் ஊர்வலமாஅதில் ஒருவன் சொன்னான்: கொக்காக்கோ லாவை ஏற்றிக்கொண்டு கப்பல் என்ன சவூதிக்கா போகிறது? ஆருக்குத் தெரியும். மாலுமிகளே! உங்களுக்குத் தெரியுமா இங்கு ஆறு உயிர்கள் ஆலாய்ப் பறப்பதை?
ஒருவாறாக கப்பல் ஒரு துறைமுகத்தை அருகணைப்பது விளங்குகிறது.நங்கூரம் இறக்கப்படுகிறதோ என்னவோ. சத்தம் கர்ணகடுரமாக... எங்கே நிற்கிறோம்? தெரியவேயில்லை. கென்டயினரை ஒருவாறாகக்கொண்டு வந்து துறைமுகக்கரையில் நிற்பாட்டினார்கள். நேரம் அதிகாலை 3.15. காத்தி ருந்தோம் வெளியில் எடுக்கும்வரை பகலாச்சு. மற்றக் கென்டயினர்களை வாகனம் வந்து கொண்டு போகிறது தெரிகிறது. நாங்கள் இருக்கிறோம். இருக்கிறோம் இருந்துகொண்டேயிருக்கிறோம்.எடுக்கிறார்களில்லை. மனமும் சலித்துவிட்டது.
பசியை நீக்க எந்தக் 'கோலாவால் முடியும்? பொறுமை இழந்து அந்தப் புத்தி அல்பானியனுக்குவந்தது. றெக்ஸின் திரையை வெட்டி இறங்குவோம். சரியென்றோம்.அல்பானியனும் பாகிஸ்தானியனும் முதலில் இறங்கிப் போய்விட்டார்கள். தமிழர்கள் நாம் நால்வரும் இறங்குகிறோம். முதலில் போன இரண்டு நண் பர்களும் பொலிஸில் மாட்டுப்பட்டுவிட்டார்கள். துறைமுக கமெரா எங்களைக் காட்டிக்கொடுத் துவிட்டது. அல்பானியன் பிடிபட்டது பின்னர் தெரிய வந்தது. பாகிஸ்தானியன் எங்கேயோ வெளியில் ஓடித் தப்பிவிட்டான். பிடிபடவேயில்லை. சரி, கமெராக் கண்ணில் மண்ணைத் தூவிவிட்ட பாகிஸ் தானியனே நீயாவது எங்காவது போ! போய் நல்லாயிரு!
அட இங்கிலாந்தின் ஒரு மூலைக்கு வந்துவிட்டோமையா!
வெள்ளைக்காரனுக்கு வணக்கம்! இன்முகத்துடன் வரவேற்க உனக்குத் தெரிகி றது! அதென்ன துறைமுகத்தைச் சுற்றி ஜீப்பில் எங்களை வைத்து ஊர்வலமா போகின்றாய?
"வாருங்கள்!" ஆஹா என்ன வரவேற்பு? "என்ன வேண்டும் உங்களுக்கு? "அகதி அந்தஸ்து தா!" "அதனைத் தீர்மானிக்கவேண்டியது அதிகாரிகள்!"
"உங்களுக்குப் பசிக்கிறதா?" "ஆமாம். கடும் பசி. கொண்டு வா வெள்ளைக் காரத் தோழனே! மணக்க மணக்கக் கோழித் தொடை, உருளைக்கிழங்குத் துண்டுகள் சிப்ஸ்,
அட சனியனே மீண்டும் 'கோலாவா? சரி தா!
மிளகுப் பொடி, உப்புப் பொடி - யார் பெத்த மகனோ? -
யார் வீட்டுப் பணமோ?நன்றியடா நன்றி. எங்கள் தாய்பூமியை வைத்து 150 வருடங்களாக வளங்களைச் சுரண்டி எடுத்து நாசமாக்கினாயே. அதற்கான நன்றிக்கடனா! அல்லது வேறென்ன? அட எங்கள் அயல்தேசத்து விலைமதிக்க முடியா கோடிக்கணக்கான பெறுமதியுடைய கோஹினூர் வைரத்தை வைத்திருக்கின்றாயே அதற்காகவா? புகைப்படம், கைவிரலடையாளம், கேள்விகள் முடிந்தாயிற்று. போங்கள்! எங்காவது இங்கிலாந்தில் வாழுங்கள். பின்னரழைப்போம் அகதிகளே!
அனுபவ வேதனைகளைப் பகிர்ந்தாயிற்று. போக்கிடம் தேடி இப்படித்தானே எம்மக்கள் அலைகின்றனர். வாழ்வின் அந்திமங்களிலாவது தாயகமே அமைதிபெறமாட்டாயா?
எங்கே அந்த ஆயுத வியாபாரிகள்? தீர்வுப்பொதிக்காரர்கள்! யுத்தப்பிரியர்கள் இவர்களைத் தாண்டிக்கொண்டு எந்த ஆண்டில் எம் தாயகம் நோக்கிய பயணப்பாடு அமையப்போகிறது?
(குறிப்பு: அரசியல் அகதிகளை மனிதவுரிமைகள் என்ற போர்வை போர்த்திக் கொண்டு நசுக்கும் ஐரோப்பிய சமூகத்தின் போக்கை இன்னொருகால் எழுதுகிறேன்.)ம்

22 எக்ஸில் 0 நவம்பர், டிசம்பர் 1998