தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Wednesday, June 18, 2014

மனதின் பைத்திய நிழல் – நகுலனின் சுசீலா - அய்யனார் வி & சன்னாசியின் நகுலன் நாவல்கள்

மனதின் பைத்திய நிழல் – நகுலனின் சுசீலா



http://ayyanaarv.blogspot.in//2007/07/blog-post_9536.html


அய்யனார் வி

நகுலனின்  மொத்த நாவல்களும் கைக்கு கிடைத்தபோது சிறிது பதட்டமாகத்தானிருந்தது அங்கொன்றும் இங்கொன்றுமாய் படித்திருந்த சில  கவிதைகளே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த மொத்த எழுத்தையும் படிக்கும்போது ஒரு வெளியில் தன்னைத்தானே தொலைக்க நேரிடுமோ என்கிற பயம் நிகழ்ந்தேவிட்டது. 1965 லிருந்து 2002 வரை அவரால் எழுதப்பட்ட நிழல்கள், நினைவுப்பாதை, நாய்கள்,நவீனன் டைரி,சில அத்தியாயங்கள், இவர்கள், வாக்குமூலம், அந்த மஞ்சள் நிற பூனைக்குட்டி என்கிற வெவ்வேறு பெயரில் எழுதப்பட்ட ஒரே தளத்தில் இயங்குகிற நாவல்களின் தொகுப்பு அல்லது ஒரே ஒரு நாவலின் வெவ்வேறு அத்தியாயங்கள் என்பதுதான் பொருத்தமாக இருக்க கூடும்.

மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட சுயத்தின் வெளிப்பாடாய் இருக்கிறதவர் எழுத்துக்கள்.வேறெந்த பாத்திரத்தையும் முன் வைக்காது நவீனன் அல்லது நகுலன் என்கிற பெயரில் உலவும் ஒருத்தருக்கு நேரும் மிகவும் தனிமைப்பட்ட அனுபவங்களே இவரின் படைப்புகள். எழுத்து என்பதின் போதையை இவர் நன்கு அனுபவித்திருக்கிறார். எழுத்தின் தாத்பர்யம் இவரை வேறெதிலும் இயங்கவிடாது இறுக்கப்பிடித்து கொண்டுள்ளது.பரவலாய் வாசிப்பதும் மிகவும் உள் சார்ந்த தனிமையில் ஆழ்ந்துபோவதும் வளர்ச்சிக்காய் புகழுக்காய் தன் சுயங்களை தொலைக்கும் மனிதர்களை விட்டு விலகியும் அவர்களின் மீதான எள்ளலும் எல்லாவிடங்களிலும் வெளிப்படுகிறது.

பெரும்பாலான வாசகர்கள் நகுலனை அவர் படைத்த சுசீலாவின் மூலம்தான்
அடையாளப்படுத்துகிறார்கள். நகுலன் இறந்த அன்று எல்லாரும் சுசீலா வை நினைத்துக்கொண்டோம். இனி சுசீலாவின் கதியென்ன என்பதுதான் என் நண்பர்களின் வருத்தமாக இருந்தது. தான் படைத்த ஒன்று தன்னை முன்னிருத்துவது எத்தனை ஆனந்தமாக இருந்திருக்கக்கூடும். நினைவுப்பாதையில் சிவன் யார் சுசீலா எனும் கேள்விக்கு என் மனதின் பைத்திய நிழல்தான் சுசீலா என்கிறார். மேலும் அவள் திருமணமாகிப் போய்விட்டாள் என்கிற தகவலையும் சொல்லுகிறார். இல்லாத ஒன்றினை உருவாக்கி கொண்டு உருகும் அந்த மனத்தை பிரம்மிப்பாய் பார்க்க வேண்டியிருக்கிறது.

தன்னை ஒரு தோல்விக்கலைஞன் என சொல்லிக்கொண்ட நகுலன் தோற்பதின் சுவையறிந்திருக்க வேண்டும்.உள்விழிப்புபெற்ற மனிதனால் மட்டுமே தோல்வியை கொண்டாட முடியும்.ஒஷோ வாழ்வைப் பற்றிக் குறிப்பிடும்போது தோற்பவர்கள் மட்டுமே இந்த விளையாட்டில் ஜெயிக்க முடியும் என்கிறார் நகுலனுக்கும் அதே போன்றதொரு மனோநிலை வாய்த்திருக்க வேண்டும்.இந்த அளவுகோல்களைப் புரிந்துகொள்ளமுடியாத ஞானக்கூத்தன் போன்றோர் அவருக்கான இரங்கல் கட்டுரையிலும் கூட இவர் பெரிதாய் ஒன்றும் சாதித்துவிடவில்லை என்பது போன்ற கூற்றையே ஆனந்தமாக முன் வைக்கிறார்கள்.

சமூகத்திலிருந்து விலகியிருப்பது தப்பித்தலுக்கான ஒரு முயற்சியின் நீட்டிப்பே.தன்னை தன் எழுத்துக்களை அடையாளப்படுத்திக்கொள்ள/பெரிதாய்  நிரூபிக்க படைப்பாளிகள் துணியும்போது அவர்களின் தனித்தன்மை அடிப்பட்டுப்போய்விடலாம். சமூகம் என்பதே சமரசங்களின் கூடாரம் அல்லது பெரும்பான்மைகளின் ஆக்கிரமிப்புதானே.ஆனாலும் கைத்தட்டல்கள் மீதான வசீகரங்கள் எல்லாக் கலைஞனுக்கும் பொதுதான். தன் எழுத்துக்களை தன் நண்பர்களிடம் கொடுத்துவிட்டு கூடவே அஞ்சலட்டையும் இணைத்து கொடுக்கும் வழக்கமும் கடிதத்திற்க்கான எதிர்பார்ப்புகளும் தாமதமானால் எழும் கோபங்களும் எந்த பாசாங்குமில்லாமல் பதியப்பட்டிருக்கிறது.

மாற்றுக் கருத்துக்கள் மாற்று சிந்தனைகள் வழக்கொழித்தல் போன்றைவைகளின் மீதான வெறுப்பும் பயமும் பெரும்பான்மைகளுக்கு சற்று அதிகம்தான்.உன் படைப்பு விலைபோகவில்லை! உன் எழுத்து எவனுக்கும் புரிவதில்லை நீ! என்ன கிறுக்கா? என்பது போன்ற கேள்விகளின் மூலமாய் தங்களின் இருப்பை உறுதிசெய்துகொண்ட எழுத்து வணிகர்களை அவர்களின் சொந்த பெயர்களிலேயே தன் படைப்புகளில் கிண்டலடித்திருக்கிரார்.

சுசீலா நிஜமா? என்பது போன்ற பத்தாம்பசலித்தனமான கேள்விகள் எழும்பினாலும் அந்த சுசீலா வின் மீதான இவரின் காதல் பைத்தியம் கொள்ளச் செய்கிறது. மனதின் அக அடுக்குகள் ஏற்படுத்திக்கொள்ளும் பிம்பங்கள்தான் எத்தனை துயரமானவை. காதல், காமம், ஆராதனை, போகம்,வெறுப்பு,கோபம் என எல்லா உணர்வுகளும் சுசீலாவை முன்நிறுத்துகிறது. கிட்டதட்ட 37 வருடங்களாக சுசீலா பிம்பம் அவரை விட்டகலவில்லை. வாழ்வின் அபத்தங்களை,துயரங்களை எள்ளலோடும் வெறுமையோடும் பதிவித்தவர்களில் நகுலன் முக்கியமானவர்.
நவீனன் டைரி யிலிருந்து சில துளிகள்.

3.12.73
வரிகள்
பல கட்டங்களில் நான் அவளை சந்தித்திருக்கிறேன் பல அனுபவ உச்ச கட்டங்களில்-நான் அவள் பேசுவாள் என்று எதிர்பார்த்த சமயங்களில் அவ்ள் பேசவில்லை-ஏன் அவள் என்னிடம் பேசினதே இல்லை.எதிர்பார்த்த நேரங்களில் அவள் வந்ததுமில்லை.இனி வரவும் மாட்டாள் என்று எனக்குத் தெரியும்.
ஆனால் நான் தனியாகப் போகும்பொழுது,இருக்கும்பொழுது, இந்தத் தெருவிலிருந்து அந்தத் தெருவுக்குத் தாண்டும்போது யாரோ எனக்கு முன் சென்று மறைவது போன்ற ஒரு தோற்றம்.

நான் வாழ்க்கையில் எவ்வளவோ ஆட்களைப் பார்த்திருக்கிறேன்.பல்லாக்கித் தூக்கிகளை,வாடகைக்குப் பிணம் சுமப்பவர்களை புதுப்பணம் படைத்தவர்களை சாதாரன மனிதனைக் கண்டால் புருவம் உயர்த்திப் பேசுபவர்களை இலக்கிய ரெளடிகளை இயற்கையாகவே கோபத்தினால் வசைபாடும் விற்பன்னர்களை பணக்கார வீட்டுப் பெண்களை எனக்கு நான்

சிலுவையாக இருக்கும் என்னை
எங்கிருந்தோ
வந்தவள்
யாரையோ மணந்தவள்
இன்று இருக்கிறாளோ
இல்லையோ
என்று கூடத் தெரியாத

ஒருத்தி ஒரு கணத்தில் கண்டது முதல் இந்த கட்டை கீழே விழும் வரை என்னில் இருக்கும் சுசீலா என்ற என் சாபத்தை இவர்களையெல்லாம் இவர்களையெல்லாம் இவைகளையெல்லாம்விட

நீதான் எனக்கு
வேண்டியிருக்கிறது
நீ வரவும் மாட்டாய்
போகவும் மாட்டாய்
நீ இருக்கிறாயோ
இல்லையோ
என்பதுகூட
எனக்கு நிச்சயமாகத் தெரியாது

இருந்தாலும் எங்கு சென்றாலும் எதைச் செய்தாலும் என்ன நேர்ந்தாலும் எப்படிப்போனாலும் யார் வந்தாலும் யார் போனாலும் உன்னைத் தூண்டில் இட்டுப் பிடிக்க முடியுமானால் கடிவாள்ம் கட்டி செலுத்த முடியுமானால்

பல்லக்குத் தூக்கிகளால் பிரயோஜன
மில்லை
கிருஷ்ணன் என்று

புதிய வாசகர்களுக்கு நகுலனின் நடை சற்று சலிப்பைத் தரலாம்.ஒன்றும் புரியாமல் என்ன எழுத்து இது? என்பது போன்ற சலிப்புகளும் கூடவே எழலாம்.  தன்னை தன் அனுபவங்களை எந்த சமரசங்களுக்கும் வியாபார நோக்கங்களுக்கும் உட்படுத்திக்கொள்ளாமல் பதிவித்த கலைஞனின் எழுத்துக்களை சற்று மெதுவாகத்தான் அணுகவேண்டியிருக்கிறது.அந்த தடத்தினைப் பிடித்து விட்டால் அது உங்களைக் கொண்டு செல்லுமிடம் உங்கள் மனதின் பைத்திய நிழலாய்க்கூட இருக்கக்கூடும்.

சன்னாசியின் நகுலன் நாவல்கள் இடுகை இப்புத்தகத்தை அணுக உதவியாக இருக்கும்

நகுலனைப் பற்றி ஏதாவது எழுதிவைக்கவேண்டுமென்று வெகுநாட்களாக நினைத்துக்கொண்டிருந்ததுண்டு. சில மாதங்களுக்கு முன்பு காவ்யா வெளியிட்ட நகுலன் நாவல்கள் தொகுதியைப் படித்து முடித்திருந்தேன். புத்தகத்தை மறுபடி உருவிப் பார்த்தால், quotation fetishல் ஊறி மூழ்கி புத்தகம் முழுவதும் கோடு போட்டு வைத்து முதல் பக்கத்தில் பக்க எண்களைக் குறித்து வைத்திருந்ததும் அகப்பட்டது. நிழல்கள் (1965), நினைவுப் பாதை (1972), நாய்கள் (1974), நவீனன் டயரி (1976), சில அத்தியாயங்கள் (1983), இவர்கள் (1992), வாக்குமூலம் (1992), அந்த மஞ்சள் நிற பூனைக்குட்டி (2002) என்று எட்டு நாவல்கள் (அல்லது அப்படி நகுலனால் குறிக்கப்பட்டவை). ரங்கநாதன் தெருவில் அப்போது இருந்த முன்றிலில் “வாக்குமூலம்” வாங்கிப் படித்ததுண்டு, அதன்பிறகே நாய்களையும் நவீனன் டைரியையும் படித்திருக்கிறேன். எழுதிய காலவரிசையில் படிப்பது ஒரு இம்சையளிக்கும் விஷயமென்பது என் தனிப்பட்ட அபிப்ராயம்; எழுதிய வரிசையைவிட வாசிக்கும் வரிசையே முக்கியமென்று எத்தனையோ பேர் சொல்லிக் கேட்டதுண்டு, படித்ததுண்டு. இந்த எட்டு நாவல்களும் ஒருவகையில் தனித்தனியாக இருப்பினும், ஒருவகையில் அனைத்தும் ஒன்றே போலவும், வேறு வேறு பெயர்களில் வரும் பாத்திரங்கள் அனைத்தும் ஒருவகையில் கலைடாஸ்கோப்புக்குள் திருப்பலுக்கேற்றவாறு நிறங்காட்டும் கண்ணாடித் துகள்கள்போலவும்தான் தோன்றுகிறது. நாவல்களில் வரும் பாத்திரங்களைக் குறித்துச் சுட்டிப் பேசுவதும் அவசியமற்ற ஒன்றாய்த்தான் தோன்றுகிறது.

நகுலனும் அவர் பாத்திரங்களும் குறிப்பிடும் எழுத்தாளர்கள்/தத்துவவாதிகளனைவரும் – விர்ஜினியா வுல்ஃப், ஜேம்ஸ் ஜாய்ஸ், விட்கென்ஸ்டைன் (Wittgenstein), ஹஸ்ஸர்ல் (Edmund Husserl), ஹைடெக்கர் (Martin Heidegger) அனைவருமே ஒருவகையில் இருப்பைக்குறித்துக் கேள்வியெழுப்பியவர்கள்தான். ஓரளவு பொதுவாக எனக்குத் தெரிந்தவரையில் விட்கென்ஸ்டைனைத் திரும்பத் திரும்ப நகுலன் குறிப்பிடுவது, தான் எழுதப்படுவது யாராலும் புரிந்துகொள்ளப்படாமல் போய்விடுமோ என்ற ஆதங்கத்தாலும், விட்கென்ஸ்டைன், பெர்ட்ரண்ட் ரஸ்ஸல், சற்று முன்பாக ஜான் லாக் போன்றவர்கள் அலசிய ‘மொழியின் தனித்துவம்’ குறித்த, குறிப்பாக விட்கென்ஸ்டைனின் ‘தனி மொழி’ (Private Language) குறித்த கருத்தாக்கங்களிலிருந்து தன் படைப்புக்களுக்கான ஆதாரங்களைத் தேடவோ, அல்லது ஒரு சாத்தியங்குறைவான சாத்தியத்தில் அக்கருத்தாக்கங்களுக்கான எதிர்-நிர்ணயமாகத் தன் படைப்புக்களை நிறுவவோ முயலுமொரு முயற்சியாகவோதான் தோன்றுகிறது. புனைவைப் படிக்கும் அதே வரிசையற்ற மனோநிலையுடன் இதில் சில சிந்தனைகளைக்குறித்துப் படித்திருந்தாலும், மூலப் புத்தகங்களில் இன்னும் பரிச்சயமுள்ளவர்கள் இதுகுறித்து இன்னும் விளக்கமாக எழுதினால் நன்றாயிருக்கும். நகுலனைப் படித்துப் பார்க்க விரும்புகிறவர்கள் ஆர்வமிருப்பின் இந்தத் ‘தனி மொழி’ என்னும் கருத்தாக்கம் சென்ற, செல்லும் திசைகள் குறித்துப் படித்துப்பார்க்க முயல்வதும் நலம். புனைவு என்ற நிலையில் இயங்கும் மனம், தத்துவங்களை/அதுரீதியிலான ஒரு சாரத்தை எப்படிக் கையாள்கிறதென்று பார்க்கையில் ஜெயமோகன், சுந்தர ராமசாமி போன்றவர்களை ஒரு துருவத்தில் வைத்தால் நகுலன் போன்றவர்களின் எழுத்துக்கள் தானாக மறு துருவத்தில் பதிந்துகொண்டுவிடுகின்றன. வாழ்விலிருந்தும், புலனுணர்விலிருந்தும் தங்களுக்கெனப் பிரத்யேகமான சங்கிலித் தொடர்களை உருவாக்கிக்கொண்டு, dialectic என்பதற்கும் narrative என்பதற்குமிடையிலுள்ள இடைவெளி கரைந்து கிடைக்கும் படைப்புக்கள் தமிழில் தத்துவவியல் வழியாகக் கிடைப்பதை/பரிச்சயமாவதைவிட, இதுமாதிரிப் புனைவுகள் வழியாகப் பரிச்சயமாகும்/கிடைக்கும் வாய்ப்புக்கள்தான் அதிகமாயுள்ளது என்பது ஒரு சாதாரண வாசகனாக உணரமுடியும் உண்மை. கிடைக்கும் செருப்புக்கேற்றமாதிரியெல்லாம் காலை வெட்டிக்கொள்வது போல இருக்கிறது இது என்றுதான் படிப்பவர்களுக்குத் தோன்றும்; ஆனால் இதைவிடத் தெளிவாக விளக்க என்னால் முடியவில்லை – இந்த விளக்கமுடியாத் தன்மைக்குக் காரணமும்கூட கிட்டத்தட்ட ‘தனி மொழி’ என்னும் அலசல்வழிக் கூறப்படும் “ஒரு மொழியின் பிரத்யேகத்தன்மைக்கு” எதிராகக் கூறப்படும் வாதங்களில் காணப்படும் ஓரளவான உண்மையாகவும் இருக்கலாம். தனிப்பட்ட ஒரு நபரின் மொழி அந்த நபருக்கு மட்டுமே பிரத்யேகமானதாயிருப்பின், அந்தப் பிரத்யேகமும் வெகு துல்லியமான பிரத்யேகமாயிருப்பின், மொழி என்றவொரு வகைப்பாட்டுக்குள் வரும் தகுதியையே அந்தப் “பிரத்யேக மொழி” இழந்துவிடுகிறது என்று கூறப்படுகிறது. அத் தகுதியை இழக்கக் கூறப்படும் காரணங்களிலொன்று அம்மொழியின் “பரிமாற்ற இன்மை”. பரிமாறிக்கொள்ளப்படுவதே மொழி என்ற நிர்ணயங்களிருக்கையில், தனிப்பட்ட ஒரு நபருக்குமட்டும் பிரத்யேகமாயிருக்கும் மொழி எவரைநோக்கிப் பேசப்படும், தன்னைநோக்கியே பேசப்படவேண்டுமெனில் பிறகு “தான்”னின் உபயோகம் என்ன, பின்பு அந்த மொழியின் உபயோகம் என்ன என்ற ரீதியில் விரிந்துகொண்டுபோகும் வாதங்களின் பின் புதைந்திருக்கும் காரணம், எழுத்து மொழியைவிட பேச்சு மொழிக்கு (குறைந்தபட்சம் மேற்கத்திய உலகத்திலாவது) கொடுக்கப்பட்ட அதி முக்கியத்துவத்தின் அடிப்படையாகவே அமைகிறது. குரல் என்பதைப் பிரத்யேகப்படுத்தத் தேவையான குறைந்தபட்ச பொதுப்படைத்தன்மையின் அதே அளவை எழுத்தில் பொருத்திப் பார்ப்பது சிரமம் என்றே இருக்கையில், வெளிப்பாட்டு முறை என்பதே உணர்த்தமுடிவது/உணர்த்தமுடியாதது என்று குறுகிவிட்ட தருணத்தில், எழுத்து, ஓவியம், சிற்பம், இசை அனைத்தும் இந்த இரண்டு பிரிவுகளிலும் பொருந்துவதை உணரமுடியும் மனம் அடையும் குழப்ப நிலைதான் திரும்பத் திரும்ப நகுலனின் ஒவ்வொரு நாவலிலும், மனிதர்களிலும் அவர்களது இயக்கங்களிலும், இடைவெளியின்றி நெருக்கமாகத் திணித்து அடைக்கப்பட்ட ஊறுகாய் ஜாடி போல, கவிழ்த்தாலும் கொட்டாத ஊறுகாய்கள் போல ஒருவகையில் உறைந்தும், ஒருவகையில் கையில் சிக்காத நெகிழ்ச்சியுடனும் நம்மை எதிர்கொள்கிறது. பரிமாற்றத்துக்கு மொழி எடுத்துக்கொண்ட உபகரணமான “சம்பவங்களை” உபகரணமாகவே உபயோகிக்க விருப்பமற்று, அதைப் பொடித்துக் கலைத்து, எங்கே சென்றாலும் உணரமுடியும் காற்று போலப் பொதுவில் பரவவிட்டுவிடுகிறது. பொதுவாகப் பரவவிட்டிருப்பதனாலேயே, ஒரு கட்டமைப்புக்குள் சிக்காததனாலேயே அது முக்கியத்துவமற்றதாக இருக்கக்கூடும் என்று கூச்சல்கள் எழுவது காலத்தின் கட்டாயம். அந்தக் கூச்சலையும் எதிர்பார்த்துப் பதட்டமடைவதை, ஜேஜே சில குறிப்புக்கள் வருவதற்கு முந்தைய (என்று நினைக்கிறேன்) காலகட்டத்திலேயே வந்த நிழல்கள், நினைவுப் பாதை, நாய்கள் மூன்றிலும் உணரமுடிகிறது. திரும்பத் திரும்ப சுசீலா சுசீலா என்று அரற்றுகிறார் நகுலன்/நவீனன்/இன்னும் பலர். தெகார்த்தே பற்றிப் பேசும் சுலோசனா நகுலனை/நவீனனை வசீகரிப்பதைவிட,  தெகார்த்தே பற்றிப் பேசும் சுலோசனாவின் பைத்திய நிலைதான் இன்னும் நகுலனை வசீகரிக்கிறது, தன்னையே அந்தப் பைத்தியத்தினிடத்தில் வைத்துப் பொருத்திப் பார்த்துக்கொள்கிறார். தொடர்ந்து மனிதர்கள் வந்துகொண்டேயிருக்கிறார்கள். மனிதர்கள் மூச்சுத்திணற வைக்காத நேரத்தில் ஊறுகாய் ஜாடிக்குள் அவர்களின் மனவோட்டங்கள் நிரம்பி மேலும் மூச்சுத்திணற வைக்கின்றன.
“நவீனன் ஒரு எழுத்தாளன் – நகுலன் ஒரு மனிதனின் புனைப்பெயர்”(பக்.280)
என்று நாய்கள் நாவலில் வரும் வாக்கியத்தின் சாரமே கிட்டத்தட்ட அனைத்துப் புத்தகங்களிலும் விரிகிறது. “இப்பொழுது மனம் “சுசீலா, சுசீலா” என்று மனனம் செய்வதைப் போல் அப்போது ஒரு சக மாணவனைச் சுற்றி அலைந்தது” (பக்.80), “எப்படி எப்படி எழுதினால் என்னைத் தெரிந்துகொள்ளலாம் என்றுதான் விதம் விதமாக எழுதிப் பார்க்கிறேன்” (பக்.68, நினைவுப்பாதை) என்று தன்னையும், தான் விரும்புபவற்றையும் “சுசீலா நான் உருட்டும் ஜபமாலை, நான் கண்ட தெய்வம்” (பக்.417, நவீனன் டைரி) என்று ஜபம் செய்து தன் விருப்பத்திற்கேற்றபடி அலங்கரித்து அலங்காரம்நீக்கி அலங்கரித்து அலங்காரம்நீக்குவதிலுள்ள அவஸ்தையை எழுத்தில் பதிவு செய்வதென்பதும் சாதாரணமல்ல, அதைப் படிப்பவன் உணரவேண்டுமே என்பதற்காக சமாதானங்கள், நகாசுகள் செய்யமுடியாமல் போவதிலுள்ள அவஸ்தையைச் சொல்லாமல் சொல்லமுடிவதும் சாதாரண விஷயமல்ல. ஜெயகாந்தன், சு.ரா போன்ற அவரது காலத்தைய எழுத்தாளர்களை இடித்து எழுதுவதும், நானூறு பக்கம்கூட எழுதாவிட்டால் என்ன நாவல் அது என்று கிண்டலடித்துக் கொள்வதுமென்று பல்வேறு தருணங்கள் புத்தகத்தினுள் இருப்பினும், அதை அரசியலாக, வம்புப்பேச்சாகப் பார்க்கமுடியாதது புத்தகத்தின் பிற பக்கங்களில் வழியும் துல்லியமான மன அவசத்தினால்தானென்று தோன்றுகிறது. நேரடியாக எதுவும் நகுலன் குறித்து எனக்குத் தெரிந்திராவிட்டாலும், “ஒரு கதையைத் திரும்பத் திரும்பப் பத்துத் தரம் திருத்தி எழுது” என்ற ரீதியில் இந்த நாவலின் பெரும்பாலான பக்கங்கள் எழுதப்பட்டிருக்குமென்று தோன்றவில்லை – எழுதப்பட்ட பக்கங்களை எந்த வரிசையிலும் மாற்றி அடுக்கிப் படித்துக்கொள்ளமுடிவது இலக்கியத்தை ஸ்பார்க்நோட்ஸ் மூலம் படிப்பதுபோலில்லையா என்று கேட்டுக்கொள்ளத் தோன்றினாலும், பாரதியைப்பற்றி “அவன் என்ன எழுதினாலும் அதற்குள் மரபு வந்து விழுகிறது” என்று நகுலன் கூறுவதைத்தான் என்னளவிலும் நகுலனைக்குறித்துச் சொல்லத் தோன்றுகிறது. இந்த நாவல்களின் பாத்திரங்களின் மனோபாவம் அசல் “தமிழ் மனத்துக்குச்” சாத்தியமா என்று கேட்டுப் பார்த்தால், சாத்தியம் என்றுதான் தோன்றுகிறது. நோய்வசப்படுத்திவிடும் அசட்டை, அதனால் விளையும் வெறுமை, இப்படி விளையும் வெறுமை கொணரும் மகிழ்ச்சி, இப்படி விளையும் மகிழ்ச்சி தரும் நிமிஷநேர ஆசுவாசம், இப்படி விளையும் ஆசுவாசம் திரும்ப உருவியெடுத்துக்கொள்ளப்படும்போது ஊறும் அசல் வெறுமை, இது எதையும் உணராத/உணர்வதை உணர்த்தமுடியாத சூழல் இவற்றோடு சாய்ந்து ஓய்வெடுக்கும் கயிற்றுக் கட்டில்கள் என விரியும் வாழ்வின் ஒரு வலிய வட்டத்தின் அசல் ரூபத்தை நகுலனின் நாவல்களில், சிறுகதைகளில், சில கவிதைகளில் அடையமுடிந்ததுபோல படிக்கக் கிடைத்த வேறு பல தமிழ் எழுத்துக்களில் காணமுடிந்ததில்லை என்பது என்னளவிலான ஒரு அனுபவம்.
“உருவத்தை மாத்திரம் வைத்துக்கொண்டு தன்மையைத் தெரிவிக்க முடியுமா? எழுதுகின்ற நிர்ப்பந்தம் என்பது பார்க்கப்போனால் பேசுவதின் நிர்ப்பந்தத்தின் வேற்றுருவம் தானோ? ஆனால் எவ்வளவு பேர் எதைப்பற்றிப் பேசுகிறார்கள்? – பேசினாலும் பேசிக்கொண்டே இருக்கின்றார்கள்? – பேசவேண்டும் என்பதன் நிர்ப்பந்தம்தான் என்ன? சிந்தனையின் தனிமையிலிருந்து விடுபட ஒரு முயற்சி? நடக்கலாம், பேசலாம், தின்னலாம், படுத்துக்கொள்ளலாம், பேசாமல் உட்கார்ந்து கொண்டிருக்கலாம் – இதெல்லாம் எதற்காக? இதைவிடப் பேசாமல் உட்கார்ந்து டயரி எழுதுவது நல்லதில்லையா, இகரமுதல்வி? வார்த்தைகளின் சப்தங்கள் எழுதும் எழுத்துக்களால் எவ்வாறு உருவாகின்றன? அகர முதல எழுத்தெல்லாம் – ஆரூட ஞானம் – நடைபாதை – தக்ளியில் நூல் நூற்பது மாதிரி – ஜபமாலை உருட்டுவது மாதிரி – “ (பக். 418, நவீனன் டைரி)
என்று தொடர்ந்து, “தனக்குத்தானே தான் இருக்கிறோமா என்று எப்பொழுதும் சந்தேகப்படும் டி.கே.துரைசாமி” (பக்.419, நவீனன் டைரி) என்னும் வாக்கியங்களில் “இருப்பைக் கேள்விக்குட்படுத்துதல்” என்ற தேய்பதத்தைத் தாண்டியும் தெரியும் புதிரை, புதிரின் விடைதெரியாத்தன்மை அளிக்கும் ஆசுவாசத்தை உணர்வது எளிதான ஒன்றாய்த்தானிருக்கிறது.
என்ன சொல்ல வர்றாரு டைரக்டர் என்ற கேள்விக்கும், பொறுமையாகப் படித்துப் பார்த்தால் ஒரு பதில் இருக்கிறது:
“அது சரி. நான் உன் நாவலைப் படித்துக்கொண்டிருக்கிறேன். படிக்கச் சுவையாக இருக்கிறது என்பதைத் தவிர ‘எல்லாம் எதற்கு’ என்றுதான் எனக்கும் கேட்கத் தோன்றுகிறது. ஒரு எழுத்தாளன், ஒரு கவிஞன், இன்னொரு எழுத்தாளன், யாரோ ஒரு சச்சிதானந்தம் பிள்ளை, இவர்கள் மாறிமாறி வருவதும் பேசுவதையும் தவிர வேறொன்றும் நடப்பதாகத் தெரியவில்லையே. ஒரு பாத்திரத்தைப் பார்த்தால் அந்தப் பாத்திரம் கூட நான் தானோ என்று தோன்றுகிறது”. 
“என்ன செய்வது. பார்க்கிறோம், பேசுகிறோம்; சிந்திக்கிறோம் கனவு காண்கிறோம், நாகரிகம் வளர வளர, நாற்காலியும் அதைச் செய்த தச்சனும் ஆதியில் ஒருவனும் ஒன்றும் பிணைந்திருப்பதைப்போல இப்பொழுது முடியாது. ஸைமன் வீல்”
இதே ரீதியில் தொடர்ந்து சொல்லிக்கொண்டு போகிறார்:
“நண்பா, எழுத்து என்பது சுக்கிலத் துளியோ சுரோணிதமோ இல்லை; படைப்பாளி அப்படிச் சொன்னாலும் அவை உயிரின் பீஜங்களுமல்ல;  அவைகளிலிருந்து உதிப்பவை, விமர்சகர்கள் அப்படிச் சொன்னாலும், உயிருள்ள மனிதர்கள் இல்லை; பேப்பர் வெண்மை; மைக் கறுப்பு; இவை மூலம் கட்டவிழ்த்துவிடப்படும் நிழல்கள்; இவ்வளவுதான் நண்பா” (பக்.287, நாய்கள்)
என்று மௌனியின் பிரபலமான “எவரின் நடமாடும் நிழல்கள் நாம்” மை புனைவின் பாத்திரங்களுக்கும் பொருத்துகிறார்.

ஆகாயம் சாம்பல் நிறம்

அதனெதிர்
ஒரு ஊசிமரம்;
மைதான வெளியில்
ஆட்டம் கலைந்தபின்
உருவுமொரு
அம்பர சூன்யம்

என்று மரணங்குறித்த சிந்தனைகளடுத்து நவீனனிடமிருந்து உதிருமொரு கவிதை (பக்.379, நவீனன் டைரி) கூட, மரணம் என்பதையும் தாண்டி, நினைவுகளிலிருந்து விடுபடமுடியாத சாபத்தைக்குறித்த ஒரு அடக்கப்பட்ட வசையாகத்தான் தோன்றுகிறது. எது எழுத்தை வசீகரமாக்குகிறது, ஏன், எது எதையுமே வசீகரமாக்குகிறதென்ற ஒரு விஷயத்தைப் புனைவில் எழுதமுயல்கையில் நாம் கற்பனைசெய்யக்கூடிய வார்த்தைப் பிரவாகங்களனைத்தையும் ஒரு சில சொற்கள் மூலமாக, நேரடியாகச் சொல்லாமல் தத்துவ மழை பொழியாமல் ஒரு சொடுக்கில் உணர்த்திவிட முடிவது, ‘அவன்’ மற்றும் ‘அவன்’னுக்கிடையான விளையாட்டுப்பொன்ற உரையாடலில் சாத்தியமாயிருக்கும்.

அவன்: அவ ஒரு நாள் சொன்னா “மணிப் பெரிப்பா நமோஸ்துதே”

அவன்: அவ்வளவுக்கு உயர்ந்துட்டயாக்கும்.
அவன்: அப்படி இல்லேடா – வார்த்தைகள் என்னை வசீகரிக்கின்றன” (பக்.471, நவீனன் டைரி)
தான் எழுதுவதைவிட்டு எழுத்தாளன் எவ்வளவு தூரம் விலகியிருக்கமுடியும், அப்படி விலகியிருந்தும் எவ்வளவு நெகிழ்ச்சியை எழுத்துக்குள் செலுத்தமுடியுமென்று என்னாலாவது குறைந்தபட்சம் உணரமுடிந்த அபாரமானதொரு தருணம் இது. இங்கே அவற்றைச் சுட்டுவதில் வாசிப்பவர்களுக்கு என்ன அனுபவம் கிடைக்குமென்று தெரியவில்லை, ஆனால் புத்தகத்தை வாசிக்கையில் ஏதேனுமொரு பொறியேனும் கிளம்பக்கூடும். ஒரு சின்னக் குறிப்பு, பிணம் கூடத் திசைதவறமுடியுமென்று உணர்த்துகிறது:
17.9.73 – நேற்றுச் சிவனுடன் பேசிக்கொண்டிருக்கையில் சிவன் “கரமணையில் – இல்லையில்லை பூஜைப் புரையில் சில பிராமணர்கள் பாலத்தையும் தாண்டிப் பிணத்தை எடுத்துக்கொண்டுபோவதைப் பார்த்தேன் – எனக்கு ஆச்சரியமாயிருந்தது (பிணத்தைக் கொண்டு போவதில்கூட ஒரு மரியாதை வேண்டாமா?) ஏனென்றால் அவர்கள் மயானத்தையும் தாண்டிப் போய்க்கொண்டிருந்தார்கள். பிறகு யாரோ அவர்கள் பின்னே ஓடிப்போய்க்கொண்டிருப்பதைப் பார்த்தேன்.” (பக்.530, நவீனன் டைரி).
பிணத்தின் திசையைக்கூடச் சுமந்துசெல்பவர்கள் சிதைத்துவிடக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன என்பதை உணர்கையில் அதையே புத்தகங்களுக்கும் பொருத்திப்பார்க்கத் தோன்றுவது மிகவும் அசௌகரியமாகத்தானிருக்கிறது, இருந்தாலும் அவையும் நிகழ்ந்துதானே தீரவேண்டும்? ;-)
நகுலன் நாவல்கள்
தொகுப்பாசிரியர்: காவ்யா சண்முகசுந்தரம்
காவ்யா, டிசம்பர் 2004.
விலை: ரூ. 450.00

  1.  Thangamani says:
    நகுலனின் கவிதைகள் சில தவிர நான் நாவல்கள் எதையும் வாசித்ததில்லை; அறிமுகத்துக்கு நன்றி!
  2.  Suresh Kannan says:
    Dear Sannasi,
    Thanks for this post.
    - Suresh Kannan
  3. //வார்த்தைகள் என்னை வசீகரிக்கின்றன //
    இதுதான் நகுலன் எழுத்து குறித்த மிகச் சரியான விளக்கம் என நினைக்கிறேன்… அதிலும், மனிதர்களுடன் உரையாடல் தடைப்படுகிறபோது மொழிமீதான வசீகரம் கூடுகிறது. யார்யாரோ ‘பேச’க் கேட்கிற வார்த்தை வசீகரிப்பு, அதை யாரோ பேசீனம் என்பதாலுமோ என்னவோ!
    உரையாடிக்கொண்டே(ஏஏஏ) இருக்கிற தமிழ் புனைவுகளுள் நகுலனோடது உள்ளொடுங்கிய குரல். தினமும் டைரி எழுதிறமாதிரி – ஆனால் அதன் பகிரங்கப்படுத்தலிற்கு அவசியம் இருக்கிறது – அதுவே வெளியோடான ஒருவரது உரையாடல் என்றானபோது..
    தமிழில் இத்தகைய பாத்திரங்களை உத்தியோகமும் குடும்பமும் எடுத்துக்கொண்டுவிடும். வேளியோடு மட்டுமல்ல தன்னோடும் அந்நியமடைதலை தமிழில் வெளிப்படுத்தியவர் நகுலன்தான் என்று தோன்றுகிறது (மௌனியோட எழுத்து எண்ணிக்கையில் குறைவு).
    நகுலனை இறுதியாய்ச் சந்தித்தது பற்றி எஸ்.ரா. காலச்சுவடில் எழுதிய ஒரு குறிப்பில் நகுலன் தன்னிடம் “நகுலன் யார்?” என கேட்டதாகவோ என்னவோ எழுதியிருப்பார்.. எனக்கு நகுலனது எழுத்துப் பிரதிகளூடாக அத்தகையதொரு கேள்வி இயல்பான ஒன்றாக வந்துகொண்டே இருப்பதாகத் தோன்றும்.
    வேற, நகுலன் பற்றி இப்பிடி உள்ளே சென்று யாரும் எழுதேல்ல என நினைக்கிறேன். புதிதாய் வருகிற/சூழலில் பெரிதும் பேசப்படுவதாய் இருக்கிற நூல்களையே தேடிச் செல்கிற இலக்கிய ஆர்வலர்களிற்காக, தாங்கள் வாசித்த தங்களை ஆகர்சித்தவர்களைப் பற்றிய சிறு குறிப்புகளை (யாவது) எழுதுவது மிகவும் வேண்டி இருக்கிறது. !
  4. ஆர்வலர்களிற்காக’வும்’
    என இருக்க வேண்டும் ;-)
  5.  DJ says:
    சன்னாசி அருமையான பதிவு.
    தங்கமணி குறிப்பிட்டமாதிரி நகுலனின் (கவிதைகளைத்தவிர) புதினங்கள் எதையும் நானும் வாசித்ததில்லை. உங்களின் இந்தப்பதிவு நாவல்களைத் தேடிப் படிக்கவெண்டும் என்ற ஆவலைத் தூண்டுகின்றது. பொடிச்சி குறிப்பிட்ட மாதிரி, படித்த/பாதித்த புத்தங்கங்கள் குறித்த குறிப்புக்களை நீங்கள் எழுதினால் என்னைப் போன்றவர்களுக்கு சந்தோசமாகவிருக்கும் :-) .
  6.  செல்லப்பா says:
    வாழ்வு குறித்த ஒரு வெறுமையை வெட்டவெளிச்சமாக்குகிறார் நகுலன் என்றே தோன்றுகிறது. எதற்கு இந்தப் பாடு? இவையெல்லாம் நம்மை எங்கே கொண்டு சேர்க்கும்? எங்கிருந்து வந்தோம்? எங்கே போவோம்? ஏகப்பட்ட கேள்விகள் உழலும் மனதோடு நெருக்கமாகும் நகுலனின் எழுத்துக்கள். நகுலன் குறித்து எழுதியமை மனதை உற்சாகப்படுத்தியது.நன்றி.
  7. வாழ்வின் ennui-ஐ பற்றி நகுலன் அளவு பதிவு செய்தது வேறு யாருமேயில்லை என சொல்லலாம்
  8.  சன்னாசி says:
    செல்லப்பா, மணிகண்டன் – நன்றி. உண்மை, வாழ்வின் அபத்தம் குறித்து எழுதப்பட்டவற்றில் நகுலனின் எழுத்துக்கள் நேரடியாக மனதில் தைப்பவை.
  9. இந்தப் பதிவிற்கு இத்தனை காலத்தின் பின்னர் என் பின்னூட்டம்.
    சென்ற வாரம் டிசே சொல்லி, உங்களின் எழுதாமை குறித்த பதிவை வாசித்திருந்தேன். அதன் பின்னர் அது பற்றி மெலிஞ்சி முத்தனும், தர்ஷனும், டிசேயும் அடர்த்தியான உரையாடல் ஒன்றினுள் புகுந்து கொண்டிருந்தார்கள்.
    அதன் பின்னர் சில நாட்களின் பின்னர் நகுலனின் இவர்கள் நாவலை வாசிக்கத் தொடங்கியிருந்தேன். அதில் பேசாமை பற்றி நவீனனுடன் நடக்கும் உரையாடலாக 3ம் அத்தியாயம் வரும். இன்று, எழுதாமை பற்றிய உங்கள் பதிவையும், பேசாமை பற்றிய நகுலனின் குறிப்புகளையும் அடுத்தடுத்து இரண்டு தடவைகள் வாசித்துவிட்டு, நகுலனின் இவர்கள் பற்றி இணையத்தில் தேட தொடங்கியபோது, நகுலனின் நாவல்கள் பற்றிய இந்தப் பதிவு கிடைத்தது.
    நன்றி சன்னாசி