தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்து காலத்தால் அழிக்கமுடியாதவை சிலவற்றை இங்கே இந்த இடத்தில் தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (TShrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Tuesday, June 03, 2014

பிரயாணத்திலிருந்து ஒரு கடிதம் - பிரம்மராஜன்

பிரயாணத்திலிருந்து ஒரு கடிதம் - பிரம்மராஜன்

.........................................................................................மகளுக்கு
கோடிட்ட இடத்தில் எனக்கான குணச் சொல்லை
நீ நிரப்பிக்கொள். ரயில் மாற வேண்டும்.
தங்களை அனுப்பக் காத்திருப்போருடன் நான்.
மனிதப் புழுக்கமும் புழுதியும் பிரதேசமும்
மொழியும் பிரயோகமும் புரியாதது புதிது.
காலொடிந்த பெஞ்சில் என் கால் தாங்கி எழுதுகிறேன்.
உன் பதினாலாம் பிறந்த தினம் மறந்துபோய்
சூர்யக் கதிர்கள் பிளக்கும் நெடுமரக்காடுகளை
அனுப்ப மறந்தேன்.
பால் வெலேரியை நினைத்துக்கொண்டிருந்தேன்
அவனது பதினெட்டு வருட எழுத்து மௌனத்தை.
பேதார் கணவாயில் பிரதியின் பிரதியிலிருந்து
பிரதியான புத்தரின் சிலையை வாங்கினேன் பளிங்கில்.
6 -1/2 “ உயரம். விலை ரூ. 132.
சத்னா ரயில் நிலையத்தில் தூசி தட்டி பெட்டி திறந்து
பணம் தந்தேன்.
என் ப்ரௌன் நிறச் சட்டையில்
(உன் பாஷையில் மெரூன் கலர்)
வெண்பளிங்கு மாவுத் தூசி.
கல் முற்றவில்லை. கல் பழுக்கும் காலத்தில்
நர்மதையில் நகரும் மனித வியர்வைப் படகுகள்
மறைந்துவிடும்.
அணுத்துடிப்பிலோ அதற்கடுத்தென்னவோ
அதிலோ எதிலோ
நீ செல்வாய் -
ஆற்றின் அடிவயிற்று முனகல்
உனக்குக் கேட்காமல் போகும்.
மட்கும் மண் கனவுகள் கரைந்துவிடும்,
மரத்தில் கிடைத்த புத்த முக்கத்தை
வான்கோவின் சுய போர்ட்ரெய்ட்டின்
பதற்றக் கோடுகளுடன் ஒப்பிடு
இரண்டிற்குமிடையில் நான்.
கொண்டு வருகிறேன்
இன்னும் சில நாட்கள்
கவிதையின் முட்டாள் வரிகள்
நீலப் பூச்செண்டு
நிறையும் மறதி
தெருக்களின் விதிவழிகள்
கோதுமை வயல்களில் வளைந்து வந்த
குவாலியர் சங்கீதம்
காலாவதியான ரயில் டிக்கெட்டுகள்
கண்ணில் வழியும் உறக்கமின்மை
தேய்ந்து போன காலணிகள்
காந்தி தகர்க்கச் சொன்ன
கஜுரஹோவின் கல்சிற்பங்களின் கண் பதிவுகள்
கடல்
எல்லையின்மை
            மற்றும் ....