தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்து காலத்தால் அழிக்கமுடியாதவை சிலவற்றை இங்கே இந்த இடத்தில் தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (TShrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Saturday, May 17, 2014

புயலிலே ஒரு தோணி - ப. சிங்காரம் ( ஒரு சிறு பகுதியும், இறுதிப் பகுதியும் )


புயலிலே ஒரு தோணி - ப. சிங்காரம் ( ஒரு சிறு பகுதியும், இறுதிப் பகுதியும் )வண்டி செர்டாங் வேயில் ஏறிற்று. நெருப்பணைந்த சிகரெட் நாறியது. வீசி எறிந்தான். வலப்புறத்தில் மலாய்ப்பெண்கள் உரையாடும் இனிய ஓசை. ஆ, அயிஷா  அயிஷா அயிஷா . நன்மணம். தங்கத் தந்தப் பளிங்குப்  பட்டுச் சிலை .....


மஞ்சள் பட்டு விரிப்பு மூடித்தொங்கிய எண் முக்கு மேசை மீது நீலமணி விளக்கொளியில் பள பளக்கும் வெள்ளிப் பேலாக்கள். செந்நிறத் தேன். சப்ர மஞ்சத்தில் மெய்யுருகி மனமுருகக் குரலுருகும் நாதம் குமு குமுக்கிறது

ஒரு நாள் தெங்கு முஜாஹிர் மனைவியுடன் பயாஸ்கோப் பார்த்துவிட்டுத்திரும்பினேன் - கணவனை தலாஹ் செய்த சமயம் அது - வாசலில் வெள்ளை வேட்டியும் சந்தன நிறக் கோட்டுமாய் நின்றனை. தலை முடி கன்னங் கறேன்று அலைந்தாடியது. முத்துப்பற்கள் மின்னின. அகன்ற விழிகள் என் மார்பை ஊடுருவின. யாரோ இன்னொரு ‘செட்டி’யுடன் கலகலவென்று பேசிக் கொண்டிருந்தாய் அப்பொழுதே என் காதலனைக் கண்டேன், கண்டு கொண்டேன் என் காதலனை, தலைவனை, நாயகனை .... ஓ கண்ணாளா! என் மார்பாளா! என் ஆணாளா! என்னை மணந்து கொள். சேலை கட்டி, நெற்றியில் திலகம் இட்டுக்கொள்கிறேன். இந்த ஊர் பிடிக்காவிடின் சொல், சிங்கப்புராவில் போய் வசிப்போம்!... சாயா பூஞா சிந்தா!  சாயா பூஞா ராஜா .....!

பெண் மயிலே! முடியாது, முடியாது, முடியாது, நான் தாலி கட்டும் வகையைச் சேர்ந்தவனல்லன். விலங்கு போட்ட தொழுவ வாழ்க்கை எனக்கு ஒத்து வராது. கண்மணியே கேள் :  தாயின் பாதுகாப்பில் இருக்க வேண்டிய காலத்தில் வேசையரின் மார்பில் மிதந்தேன். மணையாளின் அரவணைப்பில் அடங்க வேண்டிய வயதில் மனையறத்தை  வெறுத்து மனம் குழம்பித் திரிகின்றேன். பொன்னே மணியே புனை பூங்கோதாய்! என் இல்லத்தரசியாக நீ உடன்படுவது பாக்கியமே. ஆனால்  நானோ இல்லறத்தை வெறுக்கும் இளைஞன். முடியாததால் வெறுப்பவனின் வெறுப்பை விட, முடிந்திருந்தும்  வெறுப்பவனின் வெறுப்பு மிக மிகக் கொடிதன்றோ! காரளகப் பெண் சிகாமணியே! நான் மந்தையிலிருந்து விலகிப்பிரிந்த ஓடுகாலி. பிரிந்ததால் மந்தையின் வெறுப்புக்கும், பிரிய நேர்ந்ததால் தன் வெறுப்புக்கும் உள்ளாகி, இந்தப் பரந்த வையகத்தில் காலூன்ற இடமின்றி, ஒட்டிப்பற்ற ஈரப்பசை  காணாமல், தன்னந்தனியனாய் அலைந்து திரிகிறேன்; அலைந்தலைந்தே திரிவேன்; அலைந்தலைந்து திரிந்தே அழிவேன். கன்னற்சுவை மொழி மின்னுடையாய்! உன் திரண்டுருண்ட மார்பிலே என்னைச்சயனித்து, உன் சேலொத்த விழியிலே என்னைக்கண்ணுற்று, உன் பாலொத்த மொழியிலே என்னைச்செவியுற்று, உன்னை அறிவதால் என்னை மறுக்கிறேன். ஆகவே, உன் உடலணைப்பில் இருக்குங்காறும் சங்க நிதி பதும நிதி இரண்டும்  வேண்டேன்! தரணியோடு வானாளும் பேற்றை வேண்டேன்! கங்கை வார்சடை கரந்தான் அருளும் வேண்டேன்! எனினும், பெண் மயிலே, நான் தன்னந்தனியன். என் காதலீ! மார்பிற் படுத்தி மயலூட்டி மகிழ்வித்தி மறப்பூட்டும் நாயகீ! அன்னையற்ற எனக்குத்தாயாகி மடியிற் கிடத்தி தாலாட்ட வல்லையோ? தமக்கையறியா என்னை இடுப்பில் வைத்துக் கிள்ளி அழுகூட்டிப் பின் முத்தாடி ஆற்ற ஒவ்வாயோ? தங்கையற்ற என்னைத் தொடர்ந்தோடிப் பற்றிச் சிணுங்கி நச்சரியாயோ? .....

மல்லிகை விளக்கு வரிசைகள் மின்னிய மேக கேசம் தோளில் மார்பில் அலை அலையாய்க் கற்றை கற்றையாய்ப் புரள்கிறது. இனிய மலாய்க்குரல் தேனாய்ப் பாலாய்க் கனிரசமாய் ஒலிக்கின்றது.

என் ஆருயிர் அன்பா! என் மார்பிற்குரிய நாயகா! ஊரறிய என்னை உன் இல்லாளாக ஏற்றுக்கொள்.... நான் உன்னைப் பன்னீரால் குளிப்பாட்டி என் கூந்தலால் துவட்டி விடுவேன். உன் தலை முடியை என் விரல்களால் கோதி வாரி விடுவேன். உனக்குப் பிடித்தமானதைச் சமைத்து என் கையாலேயே ஊட்டிவிடுவேன். உன் வாயில் கண்ணில் நெற்றியில் முத்தி முத்தி முத்தாடுவேன். உன்னை அள்ளி அணைத்து மார்பில் சார்த்திக் கொண்டு பூங்கொடி போல் என் உடலை அசைத்துத் தாலாட்டுவேன். உன் இமைகளை வருடி உறங்க வைப்பேன் ......

******


மூச்சுத்திணறியது. நெஞ்சுத்தொண்டை உருண்டுருண்டு பாதாள வெற்றுவெளி பாழ்வெளி காயம் குருதி தொண்டை உயிர் தொண்டை உயிர் பாதாள வெற்று வெளி பாழ்வெளி பினாங் ரஜுலா நாகப்பட்டினம் மதுரை சின்ன மங்கலம் சந்தை வேப்பெண்ணெய் மருக்கொழுந்து கட கட வண்டி ஆளுயரப் பொரி உருண்டைக் கூடை புழுதி வட்டக்குடுமி பழுக்காக் கம்பி வேட்டி சாக்கு புகையிலை ஓடியா ராசா ஓடியா போனா வராது பொழுது விழுந்தாச்சிக்காது அம்மன் கோவில் பொட்டல் பால் நிலவு சடுகுடு நான்டா ஙொப்பன்டா நல்ல தம்பி பேரன்டா வெள்ளிப்பிரம்பெடுத்து விளையாட வாரான்டா மதுரை இம்பீரியல் சினிமா தெற்கு வெளி வீதி வியாபாரி வீடு மஞ்சனக்காரத்தெரு குயவர் பாளையம்  ஒண்ணாம் நம்பர் சந்து ஞே இவட நோக்கே மெடான் மொஸ்கி ஸ்ட்ராட் பிலிதோன் ஸ்ட்ராட் அயிஷா தங்கத் தந்தப் பளிங்குப் பட்டுடல்  சாயா பூஞா சிந்தா சாயா பூஞா ராஜா யுத்தம் கொள்ளை ஐந்து தலைகள் அர்னேமியா ஆறு ரோல்ஸ் ராய்ஸ் லாயர் டில்டன் தொங்கான் புயல் பினாங் மாணிக்கம் நான்யாங் ஹோட்டல் நீசூன் கோத்தா பாலிங்  ஜாராங் பலவேசமுத்து ரக்பீர்லால் சிறை கலிக்குஸுமான் விலாசினி யாமசாக்கி நேதாஜி விதித்த கடமையை வழுவின்றி நிறைவேற்றினாய் பினாங் நடராஜன் சூலியா தெரு  சுந்தரம் அண்ணே காப்பாத்துங்கண்ணே பேங்காக் ரேசன் தீர்க்கதரிசி மெடான் அயிஷா தங்கையா காடு சண்டை கங்சார் ஊர் ஊர் ஊர் பதக்கம் கெர்க்  ஸ்ட்ராட் குண்டு டில்டன் ஆ என்ன விபரீதமான சந்திப்பு நெஞ்சு தொண்டை மூச்சு நெஞ்சு தொண்டை மூச்சு நான் நான் நான்  புல் மரம் புள் விலங்கு  நிலம் நீர் நெருப்பு வளி வான் அண்ட பிண்ட சராசரங்கள் நான் நான் நான் நானேஎஎ.....

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ப. சிங்காரம் - பகுதி 2

....... .  ஓரு சிறு பகுதி
http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/
. 2016/09/04/ப.-சிங்காரம்---பகுதி-2/article3610795.ece

‘புயலிலே ஒரு தோணி’யின் பிரதான பாத்திரமான பாண்டியனையும், அவனது எக்ஸிஸ்டென்ஷியல் தருணங்களையுமே இந்த நாவலின் மையமாகப் பார்த்து அதை ஒரு நவீனத்துவப் படைப்பாகக் கருதி விட்டது தமிழ் இலக்கிய உலகம். நவீனத்துவத்துக்கும் பின்நவீனத்துவத்துக்குமான ஒரு முக்கியமான வித்தியாசம், நவீனத்துவம் வாழ்வின் அவலங்களைக் கோபத்தோடும் துயரத்தோடும் நையாண்டி செய்கிறது என்றால் பின்நவீனத்துவம் அந்த அவலங்களைப் பகடி செய்கிறது. ஆங்கிலத்தில் முன்னதை satire என்றும், பின்னதை burlesque என்றும் சொல்லலாம். சார்லி சாப்ளினின் ‘க்ரேட் டிக்டேட்டர்’ படத்தை நையாண்டிக்கு உதாரணமாகச் சொல்லலாம். நையாண்டியின் நோக்கம், ஒரு விஷயத்தைக் கேலி செய்வதல்ல; விமரிசனம் செய்வது. ஆனால் burlesque, விமரிசனம் செய்வதில்லை; மாறாக, ஒரு மகத்தான படைப்பை எடுத்துக்கொண்டு கிண்டல் செய்கிறது. மகத்தானதென்றும் புனிதமானதென்றும் அது எதையும் விட்டு வைப்பதில்லை. Burlesque என்பதன் அர்த்தங்களில் ஒன்று, ஸ்ட்ரிப் டீஸ் நடனம். அதையும் இங்கே மனதில் கொள்ள வேண்டும். கிராமங்களில் ஒருத்தனை மற்றொருத்தன் கிண்டல் செய்து விட்டால் ‘டவுசரை அவுத்துட்டான்’ என்று பேச்சு வழக்கில் சொல்வார்கள். அதுதான் burlesque. சிங்காரம் ஏன் இதைச் செய்கிறார்? தனக்கு முன்னே தென்படும் எந்த ஒரு விஷயத்தையும் புனிதப்படுத்தி அதை வழிபடுவதுதான் பன்னெடுங் காலமாக தமிழ் மரபாக இருந்து வருகிறது. அதனால்தான் அந்தப் புனிதங்கள் அனைத்தின் ‘டவுசரையும்’ அவிழ்க்கிறார் சிங்காரம். நாவல் முழுவதுமே அதற்கு உதாரணம் என்றாலும், ஒரு கட்டத்தில் பாண்டியன் கடுமையான போதையில் இளங்கோ அடிகளை வம்புக்கு இழுக்கும் பகுதியிலிருந்து ஒன்றிரண்டு பத்திகளைத் தருகிறேன்:

‘ஆ, அதோ!... அடிகாள்! பூம்புகார்த் துறவிகாள்! உங்களைத்தான், உங்களையேதான் அழைக்கிறேன். இப்பொழுதுதான் தங்களை நினைத்தேன். தாங்களோ சட்டியும் கையுமாய்ச் சாலையோரம் நிற்கிறீர்கள். சட்டியில் ஒன்றையும் காணோமே, ஏன்?ஹெஹ் ஹெஹ் ‘இருக்குமிடந்தேடி’ வந்து ‘உருக்கமுடன்’ அன்னமிடுவார் யாரும் சிக்கவில்லையாக்கும்? ஏஞ்சாமி-சாமி, சின்னப்பயல் சொல்கிறானே என்று கோபித்துக் கொள்ளக் கூடாது - கலி காலத்தில் இந்த விரதமெல்லாம் கடைத்தேறுமா? தெருக்காட்டுக்குள் போய் ஆடிப் பாடி இரந்தால்தான் சோற்றைப் பார்க்கலாம். சோறு வேண்டுமாயின் தயவுசெய்து நான் சொல்கிறபடி செய்யுங்கள். முதலில் கெசாவனுக்குப் போய்ப் பூப்போட்ட சட்டை ஒன்று வாங்கிப் போட்டுக் கொள்ள வேண்டும். தாடி இருந்து விட்டுப் போகிறது. லேசாய் வெட்டி விட்டால் போதும். அரிதாரம் இல்லையோ? வேண்டாம். விபூதியை முகத்தில் அப்பிக் கோவணத்தால் தேய்த்து விடுங்கள். பவ்டர் பூசியது போலவே இருக்கும். சரி, என்னென்ன சினிமாப் பாட்டு தெரியும் உங்களுக்கு? என்ன, ‘பெண்ணே வா வா வா! இன்பம் தா தா தா!’ கூடத் தெரியாதா...? கதை-வசனம் பேசத் தெரியுமா? தெரியாது. பேடிக் கூத்து ஆடத் தெரியுமா? அதுதான் சாமி, குண்டியை ஆட்டிக் குதிப்பது... அதுவும் தெரியாது!... நிற்க. தங்களிடம் ஒரு சேதி கேட்க வேண்டுமென்று நினைத்தேன். அதாவது, பூம்புகாரில் மாவன்னாக் கோவன்னா மார்க்கா கோவலன் செட்டியார் பற்றித் தங்களுக்குத் தெரிந்திருக்குமே! அவர் வீட்டு வகையில் யாரேனும் இப்போது அங்கே தொழில் நடத்துகிறார்களா? இல்லையா? ஆ, எப்பேர்ப்பட்ட மார்க்கா! இருந்த இடம் தெரியாமலா போய் விட்டது! கோவன்னா அவர்கள், பெண்டாட்டி தாலியை விற்க மதுரைத் தெற்காவணி மூலவீதிக்குப் போயிருந்த இடத்தில் - இல்லையில்லை, தாலியில்லை, தண்டை, அதுதான் சிலம்பு, நகை வியாபாரிகளின் சூழ்ச்சியால் அநியாயமாய்க் கொலையுண்டாராமே, பிள்ளை வைக்கக் கூட கொள்ளி இல்லாமல் - மன்னிக்கவும், நாக்குழறுகிறது. பிள்... ம்ம்... கொள்ளி வைக்கக் கூடப் பிள்ளை இல்லாமல் கண்ணகியாத்தாளும் மலைக்காட்டில் போய் மாண்டு போனார்களாக்கும். ஐயோ, பாவம்! கணவனிடம் தண்டையைக் கழற்றிக் கொடுப்பானேன், விடாப்பிடியாய் அவனைப் பின்பற்றிப் போய் அறியாத் தேயத்தில் அநாதையாய்ச் சாவானேன்? ம்ஹ்ங்... கோவன்னா அவர்கள் எடுத்து வைத்திருந்த திருக்கடையூர் தாசி மாதவிக்கு ஒரு மகள் பிறந்திருந்ததாகவும் - அந்தத் தங்கச்சி பெயர் மணிமேகலை என்றார்கள் - அதுவும் பருவ வயதில் துறவறம் பூண்டு சாக்கிய மடத்தில் போய் ஒடுங்கி விட்டதாகவும் சொல்கிறார்களே, உண்மைதானா? ம்ஹ்ங்... கோவன்னா அவர்களின் மாமனார் எட்டி மாநாய்க்கன் வீடும் கொடியற்றுப் போனதாக்கும்... ஏஞ்சாமி, இதெல்லாம் ஏனிப்படி...? ஆ! அப்படியா? அது சரி, இன்னொரு சங்கதி. வீடு கசந்த பின் தாங்களும் திருக்கடையூருக்குத்தான் போனீர்களோ... என்ன பெயர்? திருவுடைநாயகி! நல்ல பெயர், மணியான பெயர்... ம்ம்? மூன்று மாதத்தில் புளித்து விட்டதாக்கும். பிறகு மாமல்லை, நாகை, கொற்கை... தொழிலைக் கவனிக்க நேரமில்லை. மேலாளும் அடுத்தாட்களும் சேர்ந்து பட்டை நாமம் போட்டார்கள். கடை நொடித்து விட்டது. உடுத்திய வேட்டியோடு, ‘ஊரும் சதமல்ல உற்றார் சதமல்ல உற்றுப் பெற்ற பேரும் சதமல்ல’ என்று பரதேசம் கிளம்பி விட்டீர்கள். இவ்வளவுக்கு ஆகியும் கூடப் பெண்ணாசை அடியோடு ஒழியவில்லையே. ஆமாம், சமயங்களில் நினைவு வரத்தான் செய்யும். அதற்குத்தான் ஒரு இக்கு வைத்துப் பாடியிருக்கிறீர்களே,

நினைவெழுந்தால் வீதிக்குள் நல்ல

விலை மாதருண்டிந்த மேதினியில்

என்று. அடிகாள், என்ன முன்யோசனை, என்ன நுட்ப புத்தி! ஏஞ்சாமி, விலைமாதர்தான் தங்களுக்குப் பிடிக்குமாக்கும்... கொல்லைப்புற மாங்கனிகளில் விருப்பம் இல்லையோ?’

ப.சிங்காரம் நேர்காணல்: ந.முருகேசபாண்டியன்

ப. சிங்காரம்

 azhiyasudargal.blogspot.com/2009/


தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம், திருபத்தூர் வட்டம், சிங்கம்புணரி என்னும் கிராமத்தில் நாடார் பேட்டையில் 1920_ஆம் ஆண்டு ஆகஸ்டு 12_ஆம் தேதி ப. சிங்காரம் பிறந்தார். தந்தை மூக்க நாடார் என்ற கு. பழநிவேல் நாடார் ; தாயார் பெயர் உண்ணாமலை அம்மாள். இவர்களுக்கு சிங்காரம் மூன்றாவது மகன். அப்போது, சிங்காரத்தின் தந்தை, அண்ணன்கள் ப. சுப்பிரமணியம், ப. பாஸ்கரன் மற்றும் அவரது தாத்தா ப. குமாரசாமி நாடார் ஆகியோர் சேர்ந்து சிங்கம்புணரியில் ஜவுளி வியாபாரம் செய்து வந்தனர்.

சிங்காரம், சிங்கம்புணரி தொடக்கப்பள்ளியில் ஆரம்பக் கல்வியும், பின்னர் மதுரை செயிண்ட் மேரிஸ் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பும் பயின்றார். 1938_ஆம் ஆண்டு செ.கா. சின்னமுத்துப்பிள்ளை என்கிற சிங்கம்புணரிக்காரர் இந்தோனேஷியாவில் மைடான் என்ற இடத்தில் நடத்தி வந்த வட்டிக் கடையில் வேலை செய்வதற்காக கப்பலில் சென்றார். 1940_ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார். பின்னர் மீண்டும் இந்தோனேஷியா சென்று அங்கு மராமத்துத் துறை அலுவலகத்தில் பணியில் சேர்ந்தார். இச்சமயத்தில் தென்கிழக்காசிய யுத்தம் மூண்டது. யுத்தம் முடிந்ததும் இந்தோனேஷிய இராணுவ அரசின் அனுமதி பெற்று, பினாங்குக்குக் கப்பலில் சரக்குகள் அனுப்பும் வர்த்தகத்தைச் சில தமிழர்களுடன் சேர்ந்து செய்தார்.

யுத்த காலத்தில் இந்தோனேஷியாவை ஜப்பான் துருப்புகள் கைப்பற்றியபோது அங்கிருந்த நூலகம் சூறையாடப்பட்டு, புத்தகங்கள் தெருவில் வாரிக் கொட்டப்பட்டிருக்கின்றன. இச்சந்தர்பத்தில் நூலகத்தில் பணியாற்றிய நண்பர் ஒருவர் மூலம் சிங்காரத்துக்கு பல ஆங்கில நூல்கள் கிடைத்தன. அப்போது, குறிப்பாக ஆங்கில நாவல் வாசிப்பு சிங்காரத்துக்கு ஏற்பட்டது. அவரை வெகுவாகக் கவர்ந்த எழுத்தாளர் ஹெமிங்வே.

இந்தானேஷியாவில் இருக்கும்போதே திருமணம் செய்து கொண்டார். தலைப்பிரசவத்தின் போது அவரது மனைவியும் பிறந்த ஆண் குழந்தையும் இறந்துவிட்டனர்.

1946_ஆம் ஆண்டு மீண்டும் இந்தியா திரும்பிய சிங்காரம் பின்னர் மீண்டும் இந்தோனேஷியா செல்ல திட்டமிட்டார். ஆனால் கடைசிவரை அங்கு செல்லாமல் மதுரையிலேயே தங்கிவிட்டார். 1947_ஆம் ஆண்டு ‘தினத்தந்தி’ பத்திரிகையின் மதுரைச் செய்திப் பிரிவில் சேர்ந்தார். சொந்த ஊருக்கும், நெருங்கிய உறவினர்கள் வீட்டுக்கும், விசேஷ நிகழ்ச்சிகளுக்கும் செல்வதை தவிர்த்து மதுரை ஒய்.எம்.சி.ஏ.வில் தனியாக தொடர்ந்து ஐம்பது ஆண்டுகள் தங்கியிருந்தார். 1987_ஆம் ஆண்டு ‘தினத்தந்தி’யிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். 1997_ஆம் ஆண்டு ஒய்.எம்.சி.ஏ. நிர்வாகம் அவரை நிர்பந்தப்படுத்தி வெளியேற்றியது. பிறகு மதுரை, விளக்குத்தூண் அருகிலுள்ள நாடார் மேன்சனில் வாடகை அறையெடுத்து தங்கியிருந்தார். கடைசி காலத்தில் அவரது வாழ்நாள் சேமிப்பான ரூபாய் ஏழு லட்சத்தை, மதுரை நாடார் மகாஜன சங்கம் ஆண்டுதோறும் ஏழை மாணவர்களுக்கு வழங்கும் உதவித்தொகைத் திட்டத்திற்காக வழங்கினார். அப்போது தனது பெயரில் அறக்கட்டளை, புகைப்படம் திறப்பு போன்றன வேண்டாம் என்று கண்டிப்புடன் கேட்டுக் கொண்டாராம்.

நாடார் மேன்சனில் வாழ்ந்த கடைசி மூன்று மாதங்களிலும்கூட, எல்லோருடனும் சுமுகமாகப் பழகியபோதும், யாருக்கும் தொல்லை தரக்கூடாது என்று ஒதுங்கியே இருந்தார். சொந்த வாழ்க்கை பற்றியோ அந்தரங்க விஷயங்களையோ எப்போதும் அவர் யாரிடமும் பகிர்ந்து கொண்டதில்லை. இப்படி அவராக விரும்பி, தனியாக ஒதுங்கி வாழ்ந்ததற்கு, 25_வது வயதில் அவரது இளம் மனைவியும் குழந்தையும் இறந்துவிட்டது, வாழ்க்கைப் பற்றிய அவநம்பிக்கை-யையும் இறுக்கத்தையும் அவரிடம் ஏற்படுத்திவிட்டது-தான் காரணம் என்று கூறப்படுகிறது.

எழுத்துலகத்திலிருந்தும் குறிப்பாக நூல்களை பதிப்பிப்பதில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் காரணமாகத் தொடர்ந்து எழுதாமல் ஒதுங்கிக் கொண்டார். 1950_ஆம் ஆண்டு ‘கடலுக்கு அப்பால்’ நாவலை எழுதினார். புலம் பெயர்ந்து அந்நியச் சூழலில் வாழும் தமிழர்கள் வாழ்வை களனாகக் கொண்டு எழுதப்பட்ட முதல் நாவல் இது. இதைப் பிரசுரம் செய்ய மதுரைக்கும் சென்னைக்குமாக பல தடவைகள் அலைந்தார். பின்னர் ஆனந்தவிகடன் நாவல் போட்டிக்கு அனுப்பினார், திரும்பி வந்தது. ஒன்பது வருடங்களுக்கு பிறகு 1959_ஆம் ஆண்டு கலைமகள் நாவல் போட்டியில் ‘கடலுக்கு அப்பால்’ முதல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது. 1962_ஆம் ஆண்டு ‘புயலிலே ஒரு தோணி’ நாவலை எழுதினார். அது பத்து ஆண்டுகளாக பல பிரசுரகர்த்தர்களின் கைமாறி, கடைசியில் மலர் மன்னன் (‘1/4’ இதழை நடத்தியவர்) எடுத்துக்கொண்ட முயற்சியின் விளைவாக 1972_ஆம் ஆண்டு கலைஞன் பதிப்பகத்தால் பெரியதாகயிருக்கிறது என்கிற காரணம் சொல்லி எடிட் செய்யப்பட்டு, வெளியானது. ‘‘அதிகாரம், செல்வாக்கு, நட்பு, அரசியல் போன்ற பல குறிக்கீடுகளால் படைப்பு தீர்மானிக்கப்-படும் தமிழ்ச் சூழலில், எழுத்தாளனுடைய வேலை எழுதுவது மட்டுமே என்று ஒதுங்கியிருந்த சிங்காரம் பல காலமாகச் சற்றும் பொருட்படுத்தப்படாமல் அசட்டையாக ஒதுக்கப்பட்டிருந்தது ஆச்சர்யமில்லை’’ என்கிறார் விமர்சகரான சி. மோகன். ‘புதுயுகம் பிறக்கிறது’ பத்திரிகையில் வெளியான நாவல் பற்றிய கட்டுரையில் தொடங்கி தமிழ்ச் சூழலில் ப. சிங்காரத்தின் முக்கியத்துவத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் சி. மோகன் மட்டும்தான். சிங்காரத்தின் மறைவுக்குப் பின்னர் 1999_ஆம் ஆண்டு தமிழினி பதிப்பகம் ‘புயலிலே ஒரு தோணி’, ‘கடலுக்கு அப்பால்’ இரண்டு நாவல்களையும், எடிட் செய்யப்படாத மூலப் பிரதியை தேடியெடுத்துப் பதிப்பித்தது.

ப. சிங்காரம், வாழ்வின் கடைசி 2 ஆண்டுகளாக இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் 1997_ஆம் ஆண்டு டிசம்பர் 30_ஆம் நாள் விடாத வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மதுரை, கென்னட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றே மருத்துவமனையிலிருந்து ஸ்கேன் எடுப்பதற்காக வெளியே சென்ற வழியில் ஆம்புலன்ஸிலேயே அவர் உயிர் பிரிந்தது. மதுரைக்கு அருகில் தத்தநேரி சுடுகாட்டில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவர், கடைசியாக தனது இறப்புச் செய்தியை யாருக்கும் தெரிவிக்கவேண்டாம்ப. சிங்காரத்தின் கடலுக்கு அப்பால் : காலம் கடந்து கண்டெடுக்கப்பட்ட வைரம்.

http://vallinam.com.my/version2/?p=1063தமிழ் நாவல்களை தீவிரமாக தேடிப் படிக்கும் வசகர்கள் முதல் விமர்சகர்கள் வரை சிறந்த தமிழ் நாவல்கள் என்று குறிப்பிடும் பட்டியலில் கட்டாயம் இடம் பிடிப்பது பா. சிங்காரத்தின் கடலுக்கு அப்பாலும் புயலிலே ஒரு தோணியும் ஆகும். பா. சிங்காரம் இவ்விரண்டு படைப்புகளை மட்டுமே தமிழ் இலக்கிய உலகுக்கு விட்டுச் சென்றிருக்கிறார். இவ்விரண்டு நாவல்களின் தோற்றமும் அவை வெளிவருவதில் ஏற்பட்ட சுணக்கமும் இலக்கிய பரப்பில் முக்கியமாக கவனிக்கத்தக்கது. பா. சிங்காரத்தின் படைப்புகளை முன்னிலை படுத்தி பரவலாக அறிமுகம் செய்து வைத்த சி. மோகன் ஆரம்ப காலத்தில் இந்நாவல்கள் தமிழ் இலக்கிய உலகில் கவனிப்பாரற்று போனது நமது ‘சாபக்கேடு’ என்று அழுத்தமாக குறிப்பிடுகிறார்.

ப.சிங்காரம் படைத்த இரண்டு நாவல்களில் கடலுக்கு அப்பால் மூத்தது. ஆனால் அந்த நாவலிலேயே பத்தாண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த இரண்டாம்  ( புயலிலே ஒரு தோணி) நாவலின் அடிப்படை வேலைகள் தொடங்கி இருப்பதாக நூலின் முன்னுரையில் சி.மோகன் குறிப்பிடுகிறார். இரண்டு நாவல்களும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உள்ளவை. ஆனால் தனித் தனி பாதைகளை அமைத்துக் கொண்டவை. ப. சிங்காரம் இதே தொடர்புகளுடன் தன் மூன்றாவது நாவலை எழுதி இருப்பாரென்றால் தமிழில் சிறந்த திரிலோஜி கிடைத்திருக்கும்.

மேலோட்டமாக பார்த்தால் ‘கடலுக்கு அப்பால்’ ஒரு உணர்ச்சிமயமான காதல்  கதை. அன்பால் இணைந்த இரு உள்ளங்கள் சந்தர்ப்ப சூழலால் பிரிந்து செல்லும் சோக முடிவை கொண்ட ஜனரஞ்சக கதை. ஆனால் அதன் அடுத்த தளத்தில் அது, ஒரு வீரியம் கொண்ட லட்சியவாதத்தையும் பின்னர் லட்சியவாதம் பொருளற்றதாகி அந்தரத்தில் விடப்படும் நிலையாமையையும் பேசுகிறது. உண்மையில், செல்லையா-மரகதம் காதலையும் , ஐ.என் ஏ போராட்ட லட்சியத்தையும் மிக நுணுக்கமாக இரு வேறு தளங்களில் ஒருங்கே நகர்த்தி செல்லக்கூடியதாகவே இந்நாவலின் கட்டமைப்பு அமைந்துள்ளது.

இந்நாவல் நகரத்தார் எனப்படும் செட்டியார் சமூகத்தாரின் வாழ்க்கையை மையமாக கொண்டது. ப.சிங்காரம் இந்நாவலில் கதை அமைப்பு, உத்தி மற்றும் பாகம் பிரிப்பது தலைப்பிடுவது போன்ற நடைமுறைகளில் அக்கால கட்ட நவீன இலக்கிய படைப்புகளையே அதிகம் சார்ந்து நிற்கிறார். ஆனால் அவர் தேர்வு செய்த களமும் அது கொண்டுள்ள வரலாற்று முக்கியத்துவமும் இந்நாவலை முக்கியமான தமிழ் நாவலாக மாற்றியுள்ளது. அதோடு அவர் கொண்டுள்ள மொழி நடை தமிழில் புது எல்லைகளைத் விரித்துச் செல்கிறது.
உலக தமிழ் வாசகர்கள் மெச்சும் கோணத்தையும் தாண்டி மலேசிய வாசகர்கள் கொண்டாட இந்நாவலில் பல காரணங்கள் உள்ளன . பொதுவாக ஆரம்பகால மலேசிய தமிழ் நாவல்கள் முற்றும் தமிழ்நாட்டு சாயலில் இருப்பது வழக்கம். பின்னர் வந்த நாவல்களில்தான் மலேசிய தனித்துவம் கொஞ்சம் சொஞ்சமாக தலைகாட்ட துங்கின. அதே போல் தமிழ் நாட்டு படைப்பாளர்கள் மலாயாவை களமாக கொண்டு படைப்புகள் எதையும் எழுதாத காலம் அது. வெகுகாலத்திற்கு பிறகுதான் அகிலன் மலேசியாவில் சில நாட்கள் தங்கியதன் விளைவாக ‘பால் மரக்காட்டினிலே’ தோன்றியது. ஆனால் அதுவும் மிக தட்டையான மலேசிய சூழலையே காட்டக் கூடிய வணிக எழுத்தாக தேங்கிவிட்டது.

ஆனால்  1960-ல் எழுதப்பட்ட பா.சிங்காரத்தின் ‘கடலுக்கு அப்பால்’ ஏறக்குறைய ஒரு மலேசிய நாவல் என்னும் தகுதியை பெற்றுள்ளது. முன்பு ப. சிங்காரத்தை மலேசியர் என்று தவறாக எண்ணியிருந்தோரும் இருந்தனர். அந்த அளவு ப. சிங்காரம் அன்றைய மலாயா மக்களையும் அவர்களின் வாழ்க்கை முறையையும் கூர்ந்து எழுதியிருக்கிறார். இனங்களுக்கு ஏற்ப மொழி பயன்பாட்டை சமரசம் இன்றி பயன்படுத்தியிருக்கிறார். மேலும் தென்கிழக்காசியாவின் பழம்பெருமை வாய்ந்த பினாங்கு நகரின் முக்கியத்துவத்தையும் பூகோல அமைப்பையும் தன் நாவலுக்குள் திறம்பட கொண்டுவந்துள்ளார்.

அதோடு இந்நாவல் இந்நாட்டில் இந்தியர்களின் குடியேற்றம் குறித்து பொது வரலாறு சொல்லாத ஒரு பகுதியை முன்னிலை படுத்துகின்றது. மலேசிய வரலாற்றின் முக்கிய காலகட்டமான ஜப்பானிய படையெடுப்பு, ஜப்பானிய ராணுவ மீட்பு இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் இடைப்பட்ட மிக நெருக்கடியான காலகட்டம், சுபாஸ் சந்திரபோஸின் ஐ.என். எ படையும் அதன் போராட்ட இறுதி நிலை, இன்று வரைக்கும் மலேசிய அரசாங்கம் தனது முதலாவது எதிரியாக கருதும் மலாய கம்யூனீஸ்டு படையும் அதன் தலைவர் சின் பேங்கும் போன்ற இந்நாட்டு வரலாற்று தடங்களை தனது பண்டை தமிழ் இலக்கிய அறிவோடு கலந்து மிக அற்புதமாக எழுதியிருக்கிறார்.

இந்நாவலின் கதை சுறுக்கம் : பினாங்கு தீவில் மார்க்கா வைத்து சொந்தமாக வட்டிக் கடை வியாபாரம் செய்பவர் வயிரமுத்து. இவர் இத்தொழிலை மிக இளம் வயதில் பர்மா கிட்டங்கியில் இருந்து கற்றுக் கொண்டு படிப்படியாக முன்னேறி (பெட்டியடிப்பையன் – அடுத்த ஆள்- மேலாள்) வந்தவர். வட்டித்தொழிலின் நெளிவு சுழிவுகள் அறிந்தவர். அதற்கேற்ற வாரே குரலை உயர்த்திப் பேசிப்பழகாதவர். இவரின் மனைவி காமாட்சி, மகள் மரகதம், மகன் வடிவேலு. வடிவேலுவுக்கு ஆங்கிலோ சைனீஸ் பள்ளியில் கல்வி ஊட்ட வேண்டும் என்று கூறி தன்னுடன் பினாங்கிலேயே இருத்திக் கொண்டார். மனைவியும் மகளும் ஊரிலேயே இருக்கின்றனர்.

இவர் தன் நண்பனின் மகன் செல்லையாவின் அறிவு கூர்மையை கண்டு தன்னுடன் பினாங்குக்கு அனுப்பும் படி கேட்டு கூட்டி வந்து தன்னுடன் தங்கவைத்து தொழில் கற்றுத்தருகிறார். செல்லையாவும் மிகச்சிறந்த முறையில் வேலை செய்து நல்ல பெயர் வாங்குகிறான். மிக இளம் வயதில் அடுத்தாள் நிலைக்கு உயருகிறான். மரகதத்தை செல்லையாவுக்கு திருமணம் செய்து கொடுப்பது என்பது வானாயீனாவின் எண்ணம்..

காலம் மாறுகிறது. விதியும் மாறுகிறது. இரண்டாம் உலகப்போர் தொடங்குகிறது. ஜப்பானிய தாக்குதலும் பிரிட்டீசாரின் பின்வாங்கலும் மிகப்பெரிய அரசியல், சமூக மாற்றங்களைக் கொண்டுவருகின்றன. இந்நாவலின் கதை இக்குறிப்பிட்ட காலகட்டத்தில் (1941-1947) தான் நிகழ்கிறது.  இந்த காலகட்டத்தில் ஊரில் இருந்து காமாட்சியும் மரகதமும் பினாங்குக்கு வந்து (போரின் காரணமாக) மீண்டும் ஊருக்கு செல்ல முடியாத சூழல் உருவாகிறது. அதே நேரத்தில் வானாயீனாவின் ஒரே மகன் வடிவேலு ஜப்பானிய போர்விமான தாக்குதலுக்கு பலியாகிறான். இடிந்து போன வானாயீனாவிற்கும் அவர் மனைவி காமாட்சிக்கும் செல்லையா ‘பிடிமானமாக’ தெரிகிறான். மரகதத்தையும் தன் தொழிலையும் அவனிடமே ஒப்படைத்துவிடுவது என்று அவர்கள் நினைக்கின்றனர்.

ஆனால் செல்லையாவின் மனது வேறு பக்கம் போகிறது. அவன் சுபாஸ் சந்திரபோஸ் தலைமை ஏற்று இருந்த ஐ.என்.எ யில் தன்னை பிணைத்துக் கொள்கிறான். தன் உழைப்பாலும் வீரத்தாலும் வெகு விரைவில் ‘லெப்டினன் செல்லையாவாக’ உயர்கிறான்.  அக்காலகட்டத்தில் செல்லையாவின் வயதை ஒத்த பல இளைஞர்கள் ஐ.என்.எ யில் துணிந்து ஈடுபட்டனர். பயிற்சி முகாமில் மாணிக்கம், பழனியப்பன், பாண்டியன் போன்ற பல நண்பர்களைப் பெருகின்றான். வானாயீனாவிற்கு செல்லையாவின் போக்கு அறவே பிடிக்காமல் போகிறது. ராணுவம், போர், அரசியல் போன்றவை அவரது தொழில் தர்மத்திற்கு எதிரானவை. ஆகவே அவர் செல்லையாவை வெறுக்க தொடங்குகிறார்.

காலத்தின் காற்று வேறு பக்கம் வீசத்தொடங்குகிறது. ஹிரோசிமா, நாகாசாக்கி குண்டு வீச்சுகளுக்குப் பிறகு ஜப்பான் ராணுவம் ஆங்கிலேயரிடம் சரணடைகிறது. சுபாஸ் சந்திரபோசும் மர்மமான முறையில் மாண்டு போகிறார். ஆகவே மலாயாவில் இயங்கி வந்த ஐ.என்.எ முகாம்கள் அதிகாரமற்ற முறையில் கலைக்கப்பட்டு செல்லையா மீண்டும் வட்டிக்கடைக்கு வருகிறான். ஆனால் வானாயீனாவின் வரவேற்பு இல்லை. மரகததையும் வேறு இடத்தில் மணமுடிக்க முடிவெடுக்கிறார்.

தன் முடிவை மிகவும் முதிர்ச்சியாக செல்லையாவிடம் கூறுகிறார். அது ஒரு அரசியல் சமரச திட்டம் போலும், உடன்படிக்கை போலும் மிக முக்கியமான உரையாடலாகும். செல்லையாவால் மறுத்து பேசமுடியாத வகையில் வானாயீனா தன் சார்பு கருத்துகளை கூறுகிறார். இந்நாவலில் இந்த உரையாடல் காட்சி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததும் உயிரோட்டமானதுமாகும்.

செல்லையா மரகதம் காதல் தோல்வியில் முடிகிறது. ஆனால் அந்த தோல்வியை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் விதம் ஆர்ப்பாட்டம் இல்லாதது.
  • செல்லையா முதலில் மனம் கலங்கினாலும் பின்னர் தெளிவு அடைகிறான். நான் மரகதத்தை இழந்தேன் ஆனால் என்னை அறிந்தேன். …….. எல்லாம் அகந்தை, அகந்தை, அகந்தை.. என்பது செல்லையாவின் தெளிவு
  •  மரகதமோ “நான் ஒண்ணு சொல்றேன். கேப்பிகளா ?   சொல்லு “ நீங்க கல்யாணம் செஞ்சு பொட்டச்சி பிறந்தா , மரகதம்னு பேரு வைங்க. என்று கூறி நிறுத்திக் கொள்கிறாள்.
  • மரகததின் அம்மா காமாட்சி “ …சண்டாளி, நானும் பொம்பளையின்னி பிறந்தனே, குடுத்துவைக்காத பாவி,……மகராசனாயிரு. மனச அலட்டிக்கிடாதே… என்று சமாதானம் சொல்லி தானும் சமாதானம் ஆகிறார்.
  • செல்லையாவின் நண்பன் மாணிக்கம் “ மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை. மனதை இழக்காத வரையில் நாம் எதையும் இழப்பதில்லை” என்று முடிக்கிறான்.
காதலின் புனிதம், மாட்சி என்று நோக்குகிற போது செல்லையா-மரகதம் காதல் ஒரு நாடகம் போல் தோன்றுகிறது. அதோடு அக்காதலை சந்தர்பவாத காதல் என்றே கூறத்தோன்றுகிறது. ஆனால் நிஜ வாழ்வில் 90% காதல்கள் சந்தர்பவாத காதலாகவும் பல்வேறு உலக சூழல்களுக்கு வளைந்து கொடுக்கும் காதல்களாகவுமே இருப்பதை உணரும் போது செல்லலையா-மரகதம் காதலும் பூமி பரப்பை மிதித்துக் கொண்டிருக்கும் நிஜ உலக காதல்களில் ஒன்று என்பதும் தெளிவாகிறது.

இந்நாவலின் மிக இனிமையான தன்மை அதன் துள்ளியமான காட்சி விவரிப்புகளிலும் மறந்து போன வரலாற்று மீட்பிலும் உள்ளது என்பது மிகையாகாது. தமிழக வணிக பரம்பரையினர் ஒரு காலத்தில் உலகின் பல பகுதிகளுக்கும் வியாபார நிமித்தமாக சென்று வந்திருப்பதை நமது பண்டை இலக்கியங்கள் விளக்குகின்றன. சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற இலக்கியங்கள் காட்டும் துறைமுக காட்சிகள் தமிழர் வியாபார மேன்மையை நன்கு படம்பிடிக்கினறன.

மலாய வரலாற்றிலும் ‘செட்டிகள் ’  என்னும் சொல் மிகவும் முக்கியமானதாகும். தமிழ் வியாபாரிகள் இந்நாட்டின் ஆரம்பகால வணிக வரலாற்றிலும் அரசியல் வரலாற்றிலும் மிக முக்கிய பங்காற்றி இருப்பதற்கான அடையாளத்தின் எச்சம் மலாக்காவில் இன்றும் வாழும் ‘மலாக்கா செட்டிகள்’ சமூகத்தார். கடல் கடந்து வந்த தமிழக வியாபாரிகளின் 19-ஆம் நூற்றாண்டின் வியாபார விரிவாக்கம் பர்மா, மேடான், பினாங்கு போன்ற அன்றைய பெருநகரங்களில் மையமிட்டது. இன்றைக்கும் மலாய் மொழியில் ‘Ceti’, ‘Ceti haram’  போன்ற சொற்கள்  வட்டி வியாபாரத்தை குறிக்க பயன்படுத்தப்படுகிறன.

மொழி தெரியாத, வேறுபட்ட சமய பண்பாட்டு சூழலில் அவர்களின் லேவாதேவி விபாபாரம் மிகுந்த சுறுசுறுப்பாக இயங்க காரணம் அவர்கள் தொழிலிலும் வாடிக்கையாளர்களிடமும் காட்டிய நெளிவு சுழிவு தன்மைகள் தான். கடலுக்கு அப்பால் நாவலின் வானாயீனா இப்படிப்பட்ட நெளிவு சுழிவுகள் அறிந்தவர். பொதுவாக அக்காலத்தில் வியாபாரம் பிழைக்க கடல்தாண்டி வந்தவர்களின் நோக்கம் பொருளீட்டல் என்பது ஒன்றிலேயே குறியாய் இருந்தது. உள்நாட்டு அரசியல் அலம்பல்களில் அவர்கள் தலையிடுவதில்லை. அதேபோல் குடியேற்ற நாடுகளில் வாழ்ந்த பிற தமிழர்களுடனும் கூலித் தொழிலாளிகளுடனும் அவர்கள் கலந்து பழகாதவர்கள்.  தங்களுகென்று ஒரு, பாரம்பரியம் மீராத வாழ்க்கைச் சூழலை உருவாக்கிக் கொண்டு தங்கள் வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பவர்கள் அவர்கள். சைவசமய பற்றாளர்களான அவர்கள் தங்களோடு முருகக் கடவுளையும் தமிழையும் உடன் கொண்டு செல்ல தவருவதில்லை. இன்று சில நகரங்களில் அமைந்திருக்கும் ‘லிட்டல் இந்தியா ‘ க்களின் ஆரம்பம் அன்றைய செட்டித் தெருக்கள் தான் என்பது உண்மை. பினாங்கு தீவில் 19-ஆம் நூற்றாண்டில் வட்டிக்கடை வைத்து வியாபாராம் செய்ய வந்த  செட்டிமார்கள் அன்றைய சூழலில் (வங்கிகள் இல்லாத நிலையில்) பினாங்கு நகரில் பல்லின வியாபாரிகள் வியாபாரம் செய்ய பண முதலீட்டாளர்களாக செயல்பட்டிருப்பது வியப்பு. சீன வியாபாரிகள் கூட செட்டிகளிடம் வட்டிக்கு கடன் வாங்கி தங்கள் வியாபாரத்தை நடத்தியுள்ளனர்.

ஆனால் இரண்டாம் உலகப்போர் இந்த நிலையை மாற்றி அமைத்தது. சுபாஸின் ஐ.என்.ஏ மலாயாவில் குடியிருந்த அனைத்து இந்தியர்களின் அரசியல் சார்பு அற்ற தன்மையையும் மாற்றி அமைத்தது. தாயக இந்தியாவின் சுதந்திரத்திற்கு இங்குள்ள இந்தியர்கள் போராட துவங்கியதே மலேசிய இந்தியர்களின் அரசியல் வாழ்கையின் முதல் படியாக அமைந்தது. செல்லையா, மாணிக்கம், பாண்டியன் போன்ற இளைய தலைமுறையினர் மூத்த தலைமுறையினரான வானாயீனா போன்றோரின் சிந்தனையில் இருந்து மாறுபட்டு அரசியல் மாற்றங்களில் துடிப்பாக பங்காற்றுகின்றனர். அவர்களின் நடை உடை பாவணையும் முற்றாக மாறிப்போகிறது. முழுக்கால் சிலுவார், சட்டை, தொப்பி, விரலில் புகையும் சிகரேட் என்று ‘ அச்சமூட்டும் ’ தோற்றம் கொள்கின்றனர். இளைஞர்கள் பிரிட்டீசாரை வெறுக்கின்றனர். இதன் பொருட்டே சுபாஸ்சின் இயக்கத்தில் பணியாற்றுகின்றனர்.
அதுவே வானாயீனா, சாத்தப்ப செட்டியார் போன்றவர்களின் வெறுப்புக்கும் காரணம் ஆகின்றது. அவர்களின் மறைமுக ஆதரவு என்றைக்கும் பிரிட்டீஷ் ஆட்சியாளர்களுக்குத்தான். “சண்டை வந்து பயகளைக் கழுதைப் புரட்டாகிப்பிடுச்சி. ஒவ்வொண்ணும் மட்டுமரியாதை இல்லாமல் குழாயையும் தொப்பியையும் மாட்டிகிட்டு திரிஞ்ச திரிஞ்சல்….. பத்தாததுக்குப் பட்டாளம். ஊரை பிடிக்கயப் போறாங்யளாம் ஊரை…” என்பது அவர்கள் கருத்து.

செல்லதுரை-மரகதம் காதலைப் போலவே, தொடக்கத்தில் துடிப்புடனும் துருதுருப்புடனும் தொடங்கும் ஐ. என் ஏ படையினரின் போராட்டம் ஒரு கட்டத்தில் சட்டென நிலை குழைந்து சரிவை நோக்கிச் செல்கிறது. முடிவில் செல்லதுரை-மரகதம் காதல் தோல்வியில் முடிவது போலவே ஐ. என் ஏ லட்சியமும் மாயையில் முடிகிறது.
கடலுக்கு அப்பால் நாவலில் காட்டப்படும் பினாங்கு நகர வரைபடம் வரலாற்று ஆர்வளர்களுக்கு நல்ல விருந்து. மூன்று சக்கர ரிக்‌ஷாக்கள் நிரம்பிய பினாங்கு கப்பல் துறைமுகம் மிக முக்கிய கேந்திரமாக செயல்பட்ட அந்நாளில் நாகப்பட்டிணத்தில் இருந்து மாதம் இருமுறை கப்பல் பயணம் நடைபெற்றது. தமிழ் நாட்டின் பல ஊர்களிலிருந்தும் மலாயாவிற்கு பயணப்பட்டவர்கள் ரஜுலா, ரோணா, சிதம்பரம் போன்ற கப்பல்களில் குறைந்தது ஆறு நாட்கள் பயணப்பட்டு பினாங்கு துறைமுகம் வந்து சேர்ந்தனர். பெரிய டிரங்கு பெட்டிகளிலும் மூங்கில் கூடைகளிலும் பொருட்களை கொண்டுவருவது அப்போதைய வழக்கம். துறைமுகத்தில் இருந்து நடைபயண தூரத்தில் அமைந்திருக்கிறது செட்டித்தெரு. இன்றைய மார்க்கிட் ஸ்ட்ரீட் முதல் சூலியா ஸ்டிரீட் வரையிலான பகுதிகளே அன்று செட்டித்தெரு என்று அழைக்கப்பட்டது. அதன் அருகில் இருந்த மற்ற தெருக்கலான சூலியா ஸ்டிரீட் மலபார் ஸ்ட்ரீட் போன்றவை இந்திய தமிழ் முஸ்லீம்களாலும் மலையாள முஸ்லீம்களாலும் நிரம்பி இருந்தது.

செட்டித்தெருவில்  குடியிருந்த செட்டியார்கள் மிக தொலைவில் இருந்த தண்ணீர்மலை முருகன் கோயிலை தங்கள் குடும்ப கோயிலாக கொண்டாடி உள்ளனர். அதன் அடையாளமே இன்றும் பினாங்கில் தொடரும் ‘செட்டிப்பூசம்’ என்னும் தைப்பூசத்திற்கு முந்தைய நிகழ்வு. மேலும் இந்நாவலில் வரும் நான்யாங் சீன உணவகம், டத்தோ கிரமாட் சாலையில் உள்ள வனாயீனா வாடகை வீடு, காலை சந்தை போன்ற பல காட்சிகள் வாசகர்களை பழைய பினாங்கு நகருக்குள் கைபிடித்து அழைத்துச் செல்லும் படி அமைந்துள்ளது. இந்நாவலை படித்து முடித்தவுடன் நான், பினாங்கு நகருக்குள் புதிதாக பயணம் செய்வது போன்ற உணர்வுடன்  பயணம் செய்து கதை காட்டும் இடங்களை அடையாளம் காண முயன்றேன். சில இடங்களை அனுமானமாக அறிய முடிந்தாலும் பல இடங்களை அடையாளம் காண பினாங்கு நகர வரலாறு தெரிந்த நண்பர்களின் உதவி தேவைப்படுகிறது.

இந்நாவலின் மேலும் ஒரு சிறப்பாம்சம் சுபாஸ் சந்திரபோஸ் தலைமையில் இயங்கிய ஐ.என்.எ படை குறித்த குறிப்புகள். ஜப்பானிய படையின் தோல்விக்கு பிறகு – ஐ.என்.எ வின் இறுதி காலகட்டம் – செயல்பட்ட விதமும் அதன் படை வீரர்களின் நிலையும் இந்நாவலில் நன்கு விளக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தின் 6ஆம் ஆத்தியாயம் முதல் 12-ஆம் ஆத்தியாயம் வரை விரியும் ராணுவ காட்சிகள் வேறு எந்த நாவலிலும் காணமுடியாதது. கோலாமூடா முகாமில் இருந்து கலைந்த தமிழ் வீரர்களில் ஒரு பகுதியினர் வடக்கு நோக்கி நடக்கும் காட்சிகள் அற்புத வரலாற்று திரைப்படம் போல் கண்களில் விரிகிறது.  சிம்பாங் தீகா பாலத்தில் ஜப்பானிய படைகளுடன் மோதும் காட்சியும் 12-ஆம் அத்தியாயத்தில் கம்யூனீஸ்டு வீரர்களை சந்திக்கும் காட்சியும் மிக பரபரப்பானவை. உண்மையில் இக்காட்சிகளைக் கொண்டே நல்ல வரலாற்று திரைப்படம் ஒன்றை இயக்கி விட முடியும் என்றே தோன்றுகிறது.

மாணிக்கம் என்கிற பாத்திரப்படைப்பு இக்கதையில் சற்றே சிறப்பு வாய்ந்தது. ப.சிங்காரம் தனது பண்டை இலக்கிய அறிவையும் இலக்கிய விசாரனையையும் இக்கதாபாத்திரத்தின் வழியே மிகுந்த கிண்டலுடன் வெளிப்படுத்துகிறார். இதில் மாணிக்கம் செய்யும் ‘சிலப்பதிகார குதர்க்க ஆராய்ச்சி’ மிகவும் புகழ்வாய்த பகுதி. கண்ணகி மாதவி இரு பெண்கள் மேலும் மாணிக்கம் வைக்கும் விமர்சனங்கள் மாற்றுச் சிந்தனையை வளர்ப்பவை. “ கற்பரசி! எந்தக் கழுதையும் கற்பரசியாக இருக்க முடியும். காலைக் கட்டிக்கொண்டு சும்மாயிருந்தால் போதும். தட்டுவாணியாவதற்குத்தான் கவர்ச்சியும் முயற்சியும் தேவை…” என்பது போன்ற வேறுபட்ட பார்வைகளை மாணிக்கம் தைரியமாக முன்வைக்கிறான்.

முடிவாக. ப. சிங்காரத்தின் இரண்டு நாவல்களுமே தமிழ் இலக்கிய வாசிப்புக்கு மிக தாமதமாக வந்ததாக சி.மோகன் குறிப்பிடுகிறார். அவர் எழுதிய காலத்தில் இந்நாவல்கள் பெரிய கவனத்தை ஈர்க்கவில்லை என்பது மிகப்பெரிய சோகமாகும். ஆனால் அதே நாவல் அவர் எழுதுவதையே நிறுத்தி பல வருடங்கள் சென்று, தமிழின் மிக முக்கிய நாவல்களில் ஒன்றாக கொண்டாடப்படுவது ஆச்சரியம். ஆனால் காலம் கடந்தாலும் ஒரு வைரத்தை தேடி கண்டுகொண்டதில் நாம் பெருமையும் மகிழ்சியும் கொள்ளலாம். வைரம் என்றும் வைரம்தான். அதன் மதிப்பு குறைவதே இல்லை.