தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Thursday, July 17, 2014

உறவு - சுரேஷ் குமார இந்திரஜித்

உறவு - சுரேஷ் குமார இந்திரஜித்

சந்திரப்பிரபு, அவளுடைய வீட்டைக் கண்டுபிடித்து விட்டான். தெருவிலுள்ள வீடுகள் அனைத்தும் அடுத்தத் தெருவைப் புழக்கடை வாசல்களாகக் கொண்டு நீண்டு கிடந்தன. தெருவாசிகளின் பூர்வீக வீடுகளாக அவை தோற்றம் தந்தன. அவன் வீட்டையடைந்தான். சற்று தயக்கமாக இருந்தது. இப்போதுதான் முதல் முறையாக வருகிறான். வீட்டில் அவளைக் காண்பது , அவளின் இன்னொரு பக்கத்தைக் காண்பதாக இருக்கும் என்று தோன்றியது. காலிங்பெல்லைத் தேடினான். காணவில்லை. ஸார் ... ஸார் என்று அழைத்தான். பல நிலை வாசல்களைக் கொண்டு  வீடு நீண்டு கிடந்தது. முதல் நிலை வாசலைத் தாண்டி வேட்டி கட்டிய பையன் ஒருவன் தோன்றி சந்திரப்பிரபுவைப் பார்த்து விழித்தான். சௌதாமினியைப் பார்க்க வந்திருப்பதாக, சந்திரப்பிரபு கூறினான். வராந்தாவில் இருந்த ஒரு ஸ்டீல் சேரில்  உட்காரும்படி கூறிவிட்டு பல நிலைவாசல்களைக் கடந்து தூரத்திலிருந்த புழக்கடைக்கு அப்பையன் சென்றான். இப்போது புழக்கடையிலிருந்த துளசிமாடம் பார்வைக்குத் தெரிந்தது. தன்னை இங்கு திடீரென்று எதிர்பாராமல் பார்க்க நேரிடுவதில் அவளின் சலனத்தை யோசித்துக் குழம்பினான்.

துளசி மாடத்திலிருந்து முளைத்தாற்போல் பாதி அவளாகவும், பாதி துளசிமாடமாகவும் அவள் தூரத்தே தோன்றினாள். சட்டென்று தோன்றிய இந்தத்தோற்றம் சட்டென்றே கலைந்து துளசிமாடத்தை மறைத்துத் தோன்றினாள். அவள் நின்றிருந்த இடம் வெளிச்சமாகவும், அவளுக்கும், அவனுக்கும் இடையேயான இடம் அரையிருட்டாகவும் இருந்தது. அவள் வந்து கொண்டிருந்தாள். அரையிருட்டு விலக நிலைவாசல்களூடே வந்து கொண்டிருந்தாள். அவன் பார்வை அவ்வாறே நிற்க, பனிச்சூழலில் புல் தரையில், அலட்சியக் கூந்தலில் மலர்கள் தொங்க  அவள் வந்து கொண்டிருந்தாள். தூரத்தைக் கடந்து அவள் முன் தோன்றினாள்.

எதிர்பாராமல் அவனைக் கண்ட தடுமாற்றத்தினூடே முகத்தில் ஆச்சரியம் பளீரிட முன் அறைக்கு அழைத்துச் சென்றாள். அறையைச் சற்று ஒழுங்கு செய்தாள். வீடற்ற நிலைகளில் அவளிடம் அவன் கண்ட குதூகலத்தை வீடு கட்டுப்படுத்திக்கொண்டிருக்கிறது. கட்டுப்பாட்டை மீறிக் குதூகலம் கொள்ள முயன்று அவள் சிரித்தாள்.

சம்பிரதாயமாக பேசிக் கொண்ட பின் அந்த அறையிலிருந்த ஒரு கதவைத் திறந்தாள். இன்னொரு அறை தெரிந்தது. அவள் வரச் சொல்லிச் சென்றாள். பின் தொடர்ந்த அவன், தொட்டிலைப் பார்த்தான். இரட்டைக் கட்டில் அறையின் இடத்தை அடைத்திருந்தது. சுவரில் கணவனுடன் அவள் இருக்கும் புகைப்படம் மாட்டப்பட்டிருந்தது. அவன் அங்கிருந்த ஒரு கூடைச்சேரில் உட்கார்ந்தான். சௌதாமினி, குழந்தையை கையில் எடுத்து அவனிடம் கொடுத்தாள். தன் கைகள் அவள் கைகளின் மீது படும்படியாக அவன் குழந்தையை வாங்கினான்

குழந்தை அவனைப் பார்த்துச் சிரித்தது. அருகில் நின்று கொண்டிருந்த அவளைப் பார்த்தான். அறை மாறி இந்த வீடற்ற ஒரு வீட்டில் அவள் நின்று கொண்டிருந்தாள். குழந்தையுடன் அவளும், அவனும். குழந்தை தொட்டிலில் இருக்க அவள் மடியில் தலை வைத்து அவன் படுத்திருந்தான். அவள் மீண்டும் குழந்தையை வாங்கி தொட்டிலில் கிடத்தினாள். சற்று நேரத்தில் வந்து விடுவதாகக் கூறி உள்ளே சென்றாள்.

அறையில் தொட்டில் குழந்தையுடன் அவன் தனித்திருந்தான். சேரிலிருந்து எழுந்து தொட்டிலில் கிடந்த குழந்தையைப் பார்த்தான். அவனைப் பார்த்து சிரித்த குழந்தை - இரண்டு மாதக் குழந்தை - “யார் நீ?” என்றது. அவன் மௌனமாக இருந்தான். சேரில் சென்று உட்கார்ந்தான். மீண்டும் “யார் நீ?” என்ற குரல் குழந்தையிடமிருந்து ஒலித்தது.

“நான் யாரென்று உன் தாயார் அறிவாள். நான் அறிவேன். அவள் வாழ்க்கையின் சிக்கல்கள் பற்றி உனக்குத் தெரியாது. அவளின் தவிப்புகள் பற்றி  உனக்குத் தெரியாது. அவளின் அலைக் கழிப்புகள்  பற்றி உனக்குத் தெரியாது. அவள் மனதின் விசேஷங்கள் பற்றியும்  உனக்குத் தெரியாது. அந்த விசேஷங்கள் வெளிப்படும் சூழல் பற்றியும்  உனக்குத் தெரியாது. உன் கேள்விக்கு நான் என்ன பதில் என்ன கூறுவது? உண்மையில் உனக்கும் எனக்கும் உள்ள இடைவெளி எனக்குக் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. என்னை மன்னித்துக் கொள். இந்த இடைவெளி ஏற்படுத்தும் வேதனையை எனக்குக் கூறத் தெரியவில்லை. உன் தாயாரின் திடசித்தம் எனக்குக் கிடையாது. அவளைப் புரிந்து கொள். ஆதரவு கொடு. நான் இறந்தபின் உன்கையில் கொள்ளி இருக்காது. உன் தாயார் கூப்பாடு போட்டு அழ முடியாது.

அறையில் தோன்றிய சௌதாமினியின் ஒரு கையில் இருந்த தட்டில் மைசூர்பாகும் மிக்சரும், இன்னொரு கையில் தண்ணீர் டம்ளரும் இருந்தன. அவன் முன்னால் இருந்த ஸ்டூலில் அவற்றை வைத்தாள். கட்டிலில் உட்கார்ந்தாள். இப்போது இயற்கையான சகஜ சூழல் உருவானதாக அவனுக்குத் தோன்றியது. அத்துடன் அவள் மேல் கொண்ட ஆகர்ஷணத்தின் சக்தியும் அவனுள் சுழன்றது.

குழந்தையிடம் இவ்வளவு நேரமும் பேசிக் கொண்டிருந்ததாகக் கூறினான். அவள் என்ன பேசிக்கொண்டிருந்தீர்கள் என்று கேட்டதற்கு அவன், இடைவெளி பற்றிப் பேசியதாகக் கூறினான். ஆரம்பத்திலிருந்தே இதுதானே உங்களுக்குச் சிக்கல் என்று சொல்லி யோசனை வயப்பட்டாள். பிறகு இனிப்பைச் சாப்பிடுமாறு வயப்பட்டாள். இனிப்பை விண்டு வாயில் போட்டாள்.

அவள் கட்டிலில் சம்மணமிட்டு சகஜமாக உட்கார்ந்திருந்தாள். அவனுள் ஆகர்ஷணம் சுழன்றது. அவள் தோற்றத்தின் பொலிவு ஈர்த்தது. இந்தச் சூழலில் ஆகர்ஷணத்தின் வசப்படாத பிடிவாதத்துடன் அவள் உட்கார்ந்திருப்பதாக அவனுக்குத் தோன்றியது. அவன் அவளை நோக்கி கையை நீட்டினான்.  அவள் கையைப் பற்றிக் குலுக்கினான். அவன் பிடி இறுகுவதற்கு முன் கையை விடுவித்துக் கொண்டாள்.

பேசுவதற்கு நிறைய இருப்பது போலவும், பேசுவதற்கு எதுவுமே இல்லாதது போலவும் தோன்றியது. கட்டுப்பாடு இறுகிக் கொண்டிருப்பது போல் தோன்றியது. இந்த செங்கற்கள், சிமிண்ட், தரை, சுவர், சுவரில் அடிக்கப்பட்ட ஆணிகள், தொங்க விடப்பட்ட புகைப்படங்கள், பின் கட்டிலுள்ள மனிதர்கள், கட்டில், கூடைச்சேர், ஸ்டூல், டம்ளர், டம்ளரில் இருக்கும் தண்ணீல் ஆகிய எல்லாமே கட்டுப்பாட்டை இறுக்கிக் கொண்டிருப்பது போல தோன்றியது. வீடற்ற வெளியில் அவளைக் காண மனம் அவசரம் கொண்டது. பனிச்சூழலில் புல் தரையில், அலட்சியக் கூந்தலில் மலர்கள் தொங்க அவள் வந்து கொண்டிருந்த காட்சி தோன்றியது.

சூன்யத்தில் உட்கார்ந்திருப்பது போல் தோன்றியது. இனிமேலும் இப்படி உட்கார்ந்திருந்தால் தங்கள் உறவுக்குள்ளும் சூன்யம் புகுந்து விடும் என்று தோன்றியது. சூன்யத்தை முடிவுக்குக் கொண்டு வரத் தற்போது பிரிந்து விடுவதுதான் வழி என்று அவளுக்குத் தோன்றியதென அவசரப்பட்டு ஏதோ பேசினாள். பிறிதொரு இடத்தில் சந்திக்கலாம் என்றாள். இடைவெளி வேறு அவனைத் தொந்தரவுக்கு உள்ளாக்கியிருந்தது..

அவன் விடை பெற்றுக் கொண்டான். அவள் குழந்தையை எடுக்கத்தொட்டிலில் பார்க்க அது தூங்கிக் கொண்டிருந்ததால், அவள் மட்டும் வாசல் வரை வழியனுப்பினான். அவன் செல்லும் வழியில் அவன் மனதில் இடைவெளி, சூன்யம், ஆகர்ஷணம் ஆகியவை அலைந்தவாறு இருந்தன.

- காலச்சுவடு 9
- 1992
தட்டச்சு : ரா ரா கு


Friday December 3, 1999

அந்த முகம்

சுரேஷ் குமார இந்திரஜித் 

http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=199120313&edition_id=19991203&format=html


'டா சொன்னியா இல்லியா..இன்னுமா கொண்டாரான் ? ' என்று அதட்டலாகக் கரியமால் கேட்டுக் கொண்டிருந்த போது ஒரு பையன் டாயுடன் அறை வாசலில் தோன்றினான். சலாமடித்து அவர் முன் டாயை வைத்து, சலாமடித்துச் சென்றான். டாயை எடுத்து உறிஞ்சினார், கரியமால்.
'கூட்டி வந்துட்டேன் ' என்று உள்ளே நுழைந்த 747 சொன்னான். கரியமால் கூர்ந்து பார்த்தார். மலங்க விழித்துக் கொண்டு நின்றிருந்தாள். மூக்குத்தி இரண்டு மூக்கிலும் இருந்தது. தலை முடியை முடிந்திருந்தாள். வயது முப்பதை நெருங்கிக் கொண்டிருக்கும். கறுப்பு நிறம். பிசுக்கேறிய கயிறு கழுத்தில் கிடந்தது. கரியமாலின் கண்கள் அவளின் மேலாடையைத் துளைத்தன. 747-யைப் பார்த்து 'கொண்டு வா அவனை ' என்றார்.
கைகள் முதுகுப் புறமாக விலங்கிடப் பட்டிருந்த ஒருவனை இழுத்து வந்தனர். அவன் ஜட்டியுடன் இருந்தான். அவனைப் பார்த்தவுடன் வந்திருந்தவள் கதறி அழுதாள். கரியமால் அவளைத் தோளைப் பிடித்துத் தள்ளி சுவரோரத்தில் போய் உட்காருமாறு அதட்டினார். 'கையைக் கட்டி வாயைப் பொத்து ' என்றார். அவள் பேசாமலிருந்தாள். 'என்ன .. சொன்னா செய்ய மாட்டியா ? ' என்றதும் பயந்து போய் மாணவியைப் போல் கையைக் கட்டி வாய் பொத்தி சுவரோரமாய் உட்கார்ந்தாள்.
கரியமால் 'அடிங்க ' என்றார். இருவர் விலங்கிடப்பட்டவனை கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டே அடித்தனர். கரியமால் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். அவள் முகத்தில் தெரிந்த பீதி அவருக்குக் கிளர்ச்சியைத் தந்தது. அவள் கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது.
'இவன் பொண்டாட்டி கையாலே அடி வாங்கினாத்தான் திருந்துவான். ' என்றார். மீண்டும் அவளைப் பார்த்து இங்கே வா என்றார். அவள் குழம்பிய படியே பயந்து கொண்டு வந்தாள். நாற்காலியில் சாய்த்து வைத்திருந்த லத்தியை எடுத்து நீட்டினார். 'அவனுக்கு அடி கொடு ' என்றார். அவள் தயங்கி புரியாதவளாக நின்று கொண்டிருந்தாள்.
'ஓம் புருஷனைக் கூட்டிகிட்டுப் போகணும்னு நெனைக்கிறியா இல்லையா ? ' என்றார். அவள் 'ஆமாம் ' என்று தலையசைத்தாள். 'அப்ப அடி கொடு ' என்று அதட்டினார். 'நான் எப்படி சாமி.. ' என்று ஆரம்பித்தவள் அவர் முகத்தைக் கண்டு பயந்து லத்தியை வாங்கிக் கொண்டாள்.
'இப்படியா அடிக்கிறது. ஓங்கி அடி..இன்னும் ஓங்கி.... ' என்றார், கரியமால். அவன் கைகளினால் தன்னிச்சையாகத் தடுக்க முயன்று கொண்டிருக்க அவள் அடித்துக் கொண்டிருந்தாள். கரியமாலின் கண்கள் இக்காட்சியைக் கண்டு மின்னியது.
கரியமால் ஆட்டோவில் ஏறி ஜெயந்தி நகருக்குப் போகச் சொன்னார். அங்கு அம்பாசடர் கார் நிறுத்தப் பட்டிருந்த ஒரு வீட்டின் அருகே ஆட்டோவை நிறுத்தச் சொல்லி வீட்டினுள் நுழைந்தார். வேலையாள் அவரை மரியாதையுடன் உட்காரச் சொல்லி விட்டு உள்ளே சென்றான். சற்று நேரத்தில் ஆஜானுபாகுவான ஒருவர் தோன்றி கரியமாலை வரவேற்றார்.
'நானே வரணும்னு இருந்தேன். ஊர்லேயிருந்து இன்னைக்கி காலேதான் வந்தேன். ' என்றார்.
'அதனாலென்ன, ஒங்கள்ட்டேதான் எப்பவும் வாங்கிக்கலாமே ' என்றார் கரியமால்.
வேலையாள் குளிர்பானம் கொண்டு வந்து கொடுத்தான். குளிர் பானத்தை உறிஞ்சிக்கொண்டே 'பார்ட்டி வச்சு நாளாச்சு ' என்றார் கரியமால். 'ஒண்ணும் தாக்கல் இல்லையேன்னு பர்த்தேன் ' என்றார் விட்டிலிருந்தவர். 'நாளக்கி ஃபிக்ஸ் பண்ணினா நல்லது ' என்றார் கரியமால். 'நாளைக்கா ? யார் இருக்கான்னு தெரியலை, ஸார் கோபிச்சுக்கக் கூடாது. சிகரெட்லே சுடறதா சொல்லுதுகள்... . . ' என்று தயங்கினார். 'அது எதோ போதையிலே , சும்மா ஜாலிக்கி ஏதாவது நடந்திருக்கும், அது பார்த்துக்கலாம் ' என்றார் கரியமால். 'நாளக்கி சிரமப் படும் போல இருக்கே ' என்றார் வீட்டிலிருந்தவர். 'ஒங்களாலே முடியாதா... நீங்க எவ்வளவு பெரிய ஆள் ', என்றார் கரியமால். 'சரி .. நாளக்கி சாயந்திரம் ஹோட்டலுக்கு வந்திருங்க, ரிசப்ஷனிலே சொல்லிடறேன் பார்த்து நடந்துக்கங்க ' என்றார் வீட்டிலிருந்தவர். கரியமால் எழுந்தார். ' கொஞ்சம் இருங்க. கவர் வாங்கிக்கறீங்களா ? ' என்றார் வீட்டிலிருந்தவர். 'நாளக்கி ரிசப்ஷனிலே வாங்கிக்கிறேனே ' என்று கரியமால் விடை பெற்றுக் கொண்டார்.
00000000000000000
வீட்டுக்கதவை வேலைக்காரச் சிறுமிதான் திறந்தாள். அவர் உள்ளே நுழைந்ததும் படுக்கையிலிருந்து எழுந்து அவர் மனைவி வந்தாள். அவள் ஆடைகள், தலைமுடி கலைந்த தோற்றத்துடன் இருந்தாள். அவள் நடந்து வந்த விதத்திலேயே தளுக்கு இருப்பதாகத் தோன்றி அவருக்கு எரிச்சல் ஏற்பட்டது. 'சாப்பிடுறீங்களா ' என்றாள், அவள். அவர் 'ம் .. ..ம்.. .. ' என்ற படி அறைக்குள் ஆடை மாற்றிக் கொள்ளச் சென்றாள்.
கரியமாலின் முதல் மனைவி திருமணமாகி சில காலத்திலேயே அவள் வீட்டிற்குச் சென்று விட்டாள். அதற்குப் பிறகு சுபத்திராவைத் திருமணம் செய்து கொண்டார். அவளிடம் அவளுக்குத் தெரிந்த தளுக்கு தான் அவரைப் பாடாய்ப் படுத்தியது. இப்போது சமயங்களில் அவருக்கு எரிச்சல் ஏற்படுகிறது. சுபத்திராவிடம் அவர், ஆசைக் கிழத்தியுடன் கொண்டிருக்கும் மனோநிலையைக் கொண்டிருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை.
அவளை அவர் குடிக்கப் பழக்கியிருந்தார். போதையில் அவளுடைய வேட்கை வெளிப் படும் ஆவேசம் அவருக்குப் பிடித்திருந்தது. சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் டேபிளருகே நின்று கொண்டிருந்த அவளைப் பார்த்தார். அவளின் தேகம் அவருக்குக் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. அவளுடைய வேட்கைக்கு உட்பட வேண்டும் என்று நினைத்தார். அவள் உபயோகித்திருந்த வாசனைத் திரவியம் அவர் நாசியைத் தாக்கிக் கொண்டிருந்தது. சாப்பிட்டு முடிந்து எழுந்து கை கழுவினார்.
000000000000000000000
கரியமாலின் உடல் சக்தியிழந்து கிடந்தது. வலது கையைத் தூக்க முயன்றார். முடியவில்லை. உடல் அவர் இச்சைக்கு உட்படாது கிடக்க, அதன் மேல் பெண்கள் சிறு உருவத்துடன் சஞ்சரித்துக் கொண்டிருந்தனர். பெரும்பாலான பெண்கள் மூக்குத்தி ஒளிரும் கிராமப் பெண்களாக இருந்தனர். வலது கையில் ஒரு பெண் விறகுக் கட்டை இறக்கி வைத்து விட்டு வெற்றிலை போட்டுக் கொண்டிருந்தாள். இழுத்துச் செருகிய சேலைக்கட்டுடன் ஒரு பெண் அவர் தோள் பட்டையில் துணி துவைத்துக் கொண்டிருந்தாள். அவர் காலில் ஒரு பெண் படுத்து உறங்கிக் கொண்டிருந்தாள்.
பார்க்க வருபவர்களிடம் சுபத்திரா பேசும் பாவனைகளையும் , அவள் அணியும் ஆடைகளையும் அவர் பார்வை ஊடுருவிக் கொண்டிருக்க அவள் தொலைதூரம் சென்றுகொண்டிருந்தாள். கரியமாலாக அவர் உருவாகிய வரையிலான ரூபங்கள் வரிசைகளை மறந்து தோன்றி மறைந்துகொண்டிருக்க மருத்துவர் ஒருவர் இடையிடையே வந்து கொண்டிருந்தார்.
சுபத்திரா மேலாடைகளற்று தோன்றினாள். அவள் மார்புகளில் சிகரெட் நெருப்பினால் சுட்ட வடுக்கள் இருந்தன. சிகரெட் புகைத்துக் கொண்டிருக்கும் வேசிகள் தோன்றி அவர் முகத்தில் புகையை ஊதினர். சிகரெட்களினால் அவர் நெஞ்சைச் சுட வந்தனர்.சில பெண்கள் தோன்றுவதைக் கண்டதும் அவர் ஓட்டமெடுத்தார். அவர்கள் துரத்திக் கொண்டிருந்தனர். அவர் சாலையில் வேகமாக ஓடிக் கொண்டிருந்தார். கேட்டைத் தாண்டி ஒரு வீட்டிற்குள் புகுந்து தாழிட்டுக் கொண்டார். இதயத் துடிப்பு அதிகரித்துக் கொண்டிருந்தது. வீட்டிற்குள் யாருமே தென்படவில்லை. 'வீட்ல யாரு ? ' என்று குரல் கொடுத்தவாறு ஹாலில் நின்றார். ஒரு அறைக் கதவைத் திறந்து நுழைந்தபோது அவருக்குப் பின் தோற்றம் தெரிய ஜன்னல் வழியாகப் பார்த்த வாறு ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். அவள் திரும்பினால் அதிர்ச்சியூட்டும் படியாக ஏதாவது நடக்கும் என்று பயந்து அறையை விட்டு வெளியேற முயன்றார். அறைக்கதவு தானாகவே மூடிக் கொண்டது. அவள் திரும்பும் போது தனக்கு அழிவு ஏற்பட்டு விடும் என்று அவருக்குத் தோன்றியது.

மூச்சு முட்டுவது போல் இருந்தது. தொண்டையில் ஏதோ அடைப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. பெண்ணீன் பின் தோற்றம் தெரிந்தது. அவர் எதிர் பார்த்த அந்த முகம் கோரைப் பற்களுடன் பயங்கரமாக மாறியிருக்கும் என்று தோன்றியது. அவள் திரும்பும் போது தனக்கு மரணம் சம்பவிப்பதை யாராலும் தடுக்க முடியாது என்று தோண்றியது. அவர் 'திரும்பாதே ' என்று கத்த முயன்றார். கத்துவதாக நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் குரல் வரவில்லை. குரல் வராமலேயே அவர் கத்த முயன்று கொண்டிருந்தார்.
(காலச் சுவடு - ஏப்ரல் சூன் 1995)


Thinnai 1999 December 19