தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Sunday, July 06, 2014

பெர்டோல்ட் ப்ரெஷ்ட் கவிதைகள் - Marie A . இன் நினைவாக -நமக்கிடையில் அலையும் மொழி : பிரசாந்தி சேகர்

நன்றி : http://www.eanil.com/?p=49

bro(1)
Bertolt Brecht (10.02.1898 – 14.08.1956)
நமக்கிடையில் அலையும் மொழி : பிரசாந்தி சேகர்

20 ஆம் நூற்றாண்டு ஜேர்மன் இலக்கியத்தின் மிக முக்கியக் கவிஞர், நாடக ஆசிரியர், நெறியாளர், தீவிர மார்க்சியவாதி பெர்டோல்ட் ப்ரெஷ்ட். Bertolt Brecht (10.02.1898 – 14.08.1956) ‘The Threepenny Opera’, ‘Mother Courage and Her Children’, ‘The Good Person of Szechwan’, ‘The Caucasian Chalk Circle’ மற்றும் ‘ Drums in the Night’ என்பன நாடகத்துறையிலும், படைப்பிலக்கியத்திலும் உச்சம் தொட்ட பிரதிகள். காலம் பல கடந்தும் காயாத எழுத்து ப்ரெஷ்ட்டினுடையது. போர்க்கால இருண்ட வாழ்வியல், அதன் விரக்தி, வெறுப்பு, இயலாமை, இழப்பு எல்லாம் ப்ரெஷ்டின் அரங்கில் (Epic Theatre) புதிய உத்திகள் மூலம் புது வடிவம் பெற்றன. ஜேர்மன் நாடகத்தின் பொற்காலம் அது. ப்ரெஷ்டின் கவிதைகள் – அது தனி ஓர் உலகு. ஓர் அனிச்சப் பிறவியின் உரையாடல். நமக்கிடையில் அலையும் மொழி.

1. Marie A . இன் நினைவாக


அன்றொரு நாள் புரட்டாசியின் நீல நிலவில்
மோனத்தில் இளம் கொடித்திராட்சை மரத்தின் கீழ்
ஏந்தினேன், அலையாடாத மங்கலான அந்த காதல்
கைகளில் சுமந்தேன் ஒரு கனவாய்.
எமக்கு மேல் அழகான கோடை வானமதில்
ஒரு மேகம், பார்த்துக்கொண்டே இருந்தேன்
அத்தனை வெண்மை, அத்தனை உச்சத்தில்
நிமிர்ந்து பார்த்தேன், என்றைக்குமாய் அது தொலைந்து போயிற்று.
அந்த நாள் தொட்டு எத்தனை, எத்தனை நிலவுகள்
நீந்தின மோனத்தில் கிழிறங்கியும். கடந்தும்
இளம் கொடித்திராட்சை மரங்கள் எங்கு போயின..
நீ என்னைக் கேட்கிறாயா அந்தக் காதல் எங்கு என்று?
அவ்வண்ணமே உனக்குச் சொல்கிறேன்; எனக்கு நினைவில்லை.
இருந்தும், நீ எண்ணுவது புரிகிறது
அவளின் முகம், அது என்றைக்குமாய் கண்ணில் படாது போயிற்று
ஒன்று மட்டும் தெரியும்: அதனை ஒரு முறை முத்தமிட்டேன்.
அந்த முத்தமும், அதனை என்றோ மறந்திருப்பேன்
அந்த மேகம் மட்டும் இல்லாதிருந்திருந்தால்
அது நினைவிருக்கும். என்றும்
அது வெண்மையாய் இருந்தது. மேலிருந்து இறங்கியது.
அந்த இளம் கொடித்திராட்சை மரங்கள் ஒரு வேளை இன்னும் காய்த்துக்
கொண்டிருக்கின்றனவோ?
அந்தப் பெண், அவளுக்கு ஏழாவது குழந்தையும் பிறந்திருக்கக்கூடும்
அந்த மேகம், சில வினாடிகள் மட்டுமே பூத்தது
நிமிர்ந்து பார்த்தேன், அது எங்கோ கரைந்து போனது காற்றில்.

2. கேள்விகள்


எழுது, நீ என்ன அணிந்திருக்கிறாய் என்று! அது கதகதப்பா?
எழுது, நீ எவ்வாறு சாய்ந்திருக்கிறாய் என்று! அது மென்மையா?
எழுது, உனது தோற்றம் என்னவென்று! அது இன்றும் அன்று போலவா?
எழுது, நீ எதனைத் தேடுகிறாய் என்று! அது எனது கைகளா?
எழுது, நீ நலமா என்று! நீ பராமரிக்கப்படுகிறாயா?
எழுது, அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று! உன் நெஞ்சுரம் இன்னும் போதுமா?
எழுது, நீ என்ன செய்கிறாய் என்று! அது நன்றாக உள்ளதா?
எழுது, நீ என்ன நினைக்கிறாய் என்று! அது நானா?
உண்மைதான், என் கேள்விகளை மட்டும் உன்னிடம் தருகிறேன்.
உனது பதில்கள் எனக்குக் கேட்கின்றன. அவை விழுவது.
நீ சோர்வுற்றால், எதனையும் என்னால் சுமக்க முடியாது.
நீ பசியுற்றால், எதுவும் இல்லை என்னிடம் நீ உண்பதற்கு.
அப்படியே விலகுகிறேன் இந்த உலகை விட்டு
அங்கு இல்லாமலே, உன்னை மறந்தது போல.

மூலமொழி: ஜேர்மன்
தமிழில் பிரசாந்தி சேகர்

பிரசாந்தி சேகர் : யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். ஏழாவது வயதில் ஜெர்மனிக்குப் புலம்பெயர்ந்த இவர் ஜெர்மன், பிரெஞ், ஸ்பானிஷ் மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். மொழியியல், சமூகம், இலக்கியம் தொடர்பாக  தொடர்ச்சியாக எழுதிவருகிறார். மானுடவியலிலும் சமூகவியலிலும் முதுகலைமானிக் கற்கையைப் பூர்த்திசெய்துள்ளார்.