மரியா, பாவ்லோ கொய்லோவின் பதினொரு நிமிடங்கள் [Eleven Minutes] நாவலில் இடம்பெற்ற கதாபாத்திரம், அம்மணி அம்மாள் தி.ஜாவின் மரப்பசு நாவலில் இடம்பெற்ற கதாபாத்திரம்..இருவரும் வாழ்வில் சந்தித்துக்கொள்ளும் புள்ளி எது?
நா.ஜோஸலின் மரிய ப்ரின்சி.


நம் எல்லாருக்குமே ஒரு இருட்டறை தெரியும், இருட்டாக்கப்பட்ட அறை! அந்த அறையினுள் நுழைய, உள்ளிருக்கும் ஒவ்வொன்றையும் இனம் கண்டு ரசிக்க, அனுபவிக்க, தேடிக் களிக்க நமக்கு அளவிட முடியாத ஆசை உண்டு. அந்த ஆசையும் வேட்கையும் தான் உலகை நிர்வகிக்கிறது என்றும் சொல்லலாம். ஏனென்றால், இருட்டுக்குள் அமிழ்த்தப்பட்ட அந்த அறை அத்தகையது. ஆனால், எனக்கு இரண்டு பேரைத் தெரியும். அவர்களுக்கு இந்த அறையின் மற்றொரு வாசல் தெரிந்திருந்தது. வாழ்வின் பாதைகளை அவர்கள் வளைக்க, திருப்ப முற்படவில்லை, வாழ்வின் ஓட்டத்துடன் அவர்கள் பயணித்தார்கள், அந்த பயணத்தின் ஒவ்வொரு புத்தம் புதிய நொடிகளையும் ரசித்தார்கள், அதிகம் சிரித்தார்கள். அதனாலே, அந்த அறைக்கான மற்றொரு வாசலை அவர்கள் கண்டடைந்தார்கள். அதன் வழி உள் நுழையும் போது தான் இது ஒரு அறை அல்ல என்பது தெரிய வந்தது. அது ஒரு மாபெரும் கடலாய் விரிந்திருந்தது, பெருங்காட்டின் ரகசியங்களைக் கொண்டிருந்தது, உயர்ந்து நிற்கும் மலையின் அமைதியைப் பெற்றிருந்தது. கடலின் அலைகளில் அவர்கள் தவழ்ந்த போதும், காட்டின் மடியில் உறங்கிய போதும், மலையின் மடிப்புகளில் சற்று இளைப்பாறிய போதும் அவர்கள் தங்களையே பார்த்துக்கொண்டார்கள். தனக்கான தேடலிலே, சரியான திசையில் சென்றுகொண்டிருப்பதாய் திருப்தி அடைந்தார்கள். தேடலில் கண்டெடுத்த ஒவ்வொன்றையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டார்கள், அந்த பயணத்திற்கு உடன் வருபவர்களையும் அழைத்துச் சென்றார்கள். யார் இவர்கள்? வெளிப்படுத்தப்படாததெல்லாம் இவர்களுக்குப் புலப்படுகின்றன, மறைக்கப்பட்டவை இவர்களுக்குப் புரிகின்றன, அற்ப விஷயங்கள் இவர்களுக்குப் பேரின்பம் கொடுக்கின்றன! யார் இவர்கள்? இவர்களும் சாதாரண பெண்கள் தான். ஒரு சராசரி குடும்பத்தில் பிறந்து, வளர்ந்தவர்கள். உலக அறிவைப் பெற்றுக் கொள்ளச் சொல்லி வற்புறுத்தும், விடாப்பிடியாய் கற்றுக்கொடுக்கும் இதே சமூகத்தில் உழன்றவர்கள் தான். ஆனால், வாழ்வின் ஒரு புள்ளியில் அந்த உலக அறிவு எடுக்க சொன்ன முடிவை வேண்டாமென்று ஒதுக்கியவர்கள். அந்த புள்ளியில் ஆரம்பித்த பயணம் அது, அந்த வாசலில் கொண்டு வந்து விட்டது. அன்றிலிருந்து குடும்பப் பெண் என்ற பெயருக்குள் அடைபட இயலாது போனார்கள், விபசாரிகள் என்று அழைக்கப்படத் தகுந்தவர்கள் ஆனார்கள். அவர்கள் அம்மணி அம்மாளும், மரியாவும்.



இவர்கள் இரண்டு பேருக்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஒருத்தி அக்ரஹாரத்தில் பிறந்து, சென்னையில் குடியேறியவள். இன்னொருத்தி பிரேசிலின் ஒரு சிறு டவுனில் பிறந்து, வேறொரு புது நாட்டில் தன் பயணத்தைத் தொடங்கியவள். இருவரும் ஒரு வேளை சந்தித்திருந்தால் கூட தங்களுக்குள் ஏதேனும் ஒற்றுமைகளைக் கண்டுபிடித்திருப்பார்களா என்பது சந்தேகம் தான். ஆனால், அம்மணி அம்மாளுக்குள் ஒரு மரியாவும், மரியாவுக்குள் ஒரு அம்மணி அம்மாளும் இருப்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியும். அம்மணி அம்மாளின் சிரிப்பில் மரியாவைப் பார்க்கலாம். மரியாவின் நாட்குறிப்பில் அம்மணி அம்மாளைப் பார்க்கலாம். அம்மணி அம்மாளின் சிரிப்பைப் பற்றி, அவள் சந்தோஷங்களைப் பற்றி சொல்ல வேண்டுமானால் அவளின் வார்த்தைகளையே சொல்லலாம் ‘எனக்கு எதைப் பார்த்தாலும் சிரிப்பு வருகின்றது.’ மரியாவின் நாட்குறிப்போ அவள் இதயம், அவள் ஆன்மா. அவள் பணியிடத்திற்குச் செல்லும் போது அவளின் இதயத்தை அவள் எழுதும் நாட்குறிப்புக்குள் தான் வைத்துவிட்டுச் செல்வதாகக் கூறுவாள். வாழ்வு அவளுக்குக் கற்பிக்கும் பாடங்களை, அவள் குழப்பங்களை நாட்குறிப்பில் எழுதுவாள். இவர்கள் இருவருக்கும் வாழ்க்கையை எப்படி வாழ்வது என்ற அடிப்படை அறிவு கூட தெரியாமல் இருக்கலாம், பைத்தியக்காரிகள் என்று அழைக்கப்பட எல்லா வகையிலும் உகந்தவர்களாக இருக்கலாம். ஆனால், இவர்களுக்கு ஒன்று தெரியும், எதைக் கொடுத்தாலும் வாங்க இயலாத, கற்றுக்கொள்ள இயலாத ஒன்று! நிபந்தனைகள் இன்றி அன்பு செய்யத் தெரியும்! அதனாலேயே, தங்களது ஆழ்துயரங்களையும் கொண்டாடத் தெரியும்,

மனிதர்களை உயிர்ப்புடன் அணுகத் தெரியும், தன்னிடம் வருபவர்களை உயிர்ப்பித்துக் கொடுக்கத் தெரியும். இவர்களென்ன, தேவதைகளா? இல்லவே இல்லை, இவர்கள் மனுஷிகள்! தங்களிடமிருக்கும் ‘அன்பு செய்ய முடியும்’ என்ற அளவிட முடியா சக்தியைப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள், பயன்படுத்தாமல் வாழ முடியாதவர்கள். இப்படியான வாழ்க்கை ஓட்டத்தில் அவர்கள் எதனைக் கண்டறிந்தார்கள்? தன்னையேவா, இல்லை தனக்கான காதலையா? ஏன் இவர்கள் இவர்களுக்கென்று ஒரு அன்பான இதயத்தைக் கண்டறிந்து அதனுடன் வாழ்க்கையைப் பிணைத்துக் கொள்ளவில்லை? யாருமே உடன் இல்லாமல், அன்பு செய்ய மட்டுமே படிக்கும் இவர்களால் எப்படி மகிழ்வுடன் இருக்க முடிகிறது? அம்மணி அம்மாளால் எப்படிச் சிரித்துக் கொண்டே இருக்க முடிகிறது? மரியாவால் எப்படி வாழ்க்கையை ரசிக்க முடிகிறது? எல்லா கேள்விகளுக்குமான விடை அவர்கள் கற்றுக்கொண்ட அன்பில் தான் இருக்கிறது. மிக எளிமையான அந்த விஷயத்தில் இருக்கிறது, இத்தனை கடினமான, கடுமையான கேள்விகளுக்கான விடைகள். அவர்களின் வாழ்க்கை உண்மையிலேயே ஒரு அதிசயம் தான். அந்த அதிசயத்தை நம்மால் வாழ முடியுமா என்றால் முடியாது தான். அவர்களின் வாழ்க்கையை நம்மால் வாழ முடியாது, ஆனால், நமது வாழ்க்கையின் அதிசயத்தை நாம் நினைத்தால் மாத்திரமே வெளிக்கொண்டு வர முடியும். நமது அதிசயம் கேட்பாரற்று ஓரத்தில் கிடக்கிறது. இவர்கள் புனைவில் வெளிப்பட்ட இரு கதாபாத்திரங்கள் தான். இவர்களைப் போல உண்மையில் வாழ முடியுமா என்ற கேள்விக்கு விடை நம்மிடத்தில் தான் இருக்கிறது. அந்த கேள்விக்கு இயல்பாகவே ‘முடியாது’ என்ற பதிலை நாம் தந்துவிடுவதால் இவர்கள் அற்புதமானவர்களாக, தேவதைகளாக நமக்குத் தெரிகிறார்கள். ஆனால், இவர்களும் நம்மிலிருந்து, நாம் வளர்ந்த, வாழ்கின்ற, நமக்குப் பழக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர்கள். இவர்களுக்கும் பயங்கள், அழுகைகள், துயரங்கள் உண்டு.

அம்மணி ஒருமுறை வெளிநாட்டில் புரூஸ் என்ற இளைஞனைச் சந்தித்தாள். கடந்த காலத்தின் குற்றவுணர்வு ஒரு எச்சிலின் வடிவில் துரத்திக்கொண்டே இருக்க, குத்தும் அந்த முள்ளினை எடுக்க முடியாமல் தவிக்கும் ஒரு இளைஞன் புரூஸ். வழக்கமான அம்மணியின் சிரிப்போ, எதைப் பேசினாலும் ஊன்றி கேட்கும் அவள் கவனமோ, ஏதோ ஒன்று அவன் முள்ளினை சரி செய்திருக்க வேண்டும். நீண்ட நாட்கள் கழித்து போர்முனையின் சத்தம் கேட்காமல், எச்சில் துரத்தாமல் அம்மணியின் அருகில் அவன் நிம்மதியாகப் படுத்து உறங்கினான். நன்றியும் பரவசமுமாகக் குழந்தை போல உறங்கும் அவனில் தன்னைப் பார்த்துக்கொண்டிருந்தாள் அம்மணி. இப்படித் தான் அம்மணி. யார் பேசினாலும் அமர்ந்து கதை கேட்டுக்கொண்டிருப்பாள், ஜன்னல் வழியே வீதியைப் பார்த்துக்கொண்டிருப்பாள், பால்கனியில் மர இலைகள் வரைந்த வெயில் வட்டங்களை எண்ணிக்கொண்டிருப்பாள், அந்த எண்ணிக்கையை அதே அறையில் இரவில் அரவம் அடங்கிய பின்பும் தூங்காமல் இருந்த ஆண்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டுப் பார்ப்பாள், மாடியில் மொட்டை வெயிலில் படுத்துக் கொள்வாள், பாட்டுக் கேட்பாள், பரதம் ஆடுவாள், ஊர் ஊராகச் சுற்றுவாள், முகத்திற்கு நேராக உண்மையைப் பட்டென்று சொல்வாள், அவளிடம் உண்மையை மறைத்தால் வார்த்தைகளாலேயே வாயிலிருந்து வரவைப்பாள், ஆசைகளை மறைக்க மாட்டாள். காயங்களை ஆற்றுப்படுத்தும் சக்தி அவள் சிரிப்பிலா, குரலிலா, பார்வையிலா, உடலிலா? எதில் இருந்தது என்று தெரியவில்லை. அவள் தேர்ந்துகொண்ட வாழ்க்கையிலிருந்து அவளை இழுத்துச் செல்ல அவள் அம்மா வந்து எவ்வளவோ கெஞ்சி, அழுது பார்த்தும், அவள் அப்பா வந்து அடித்து உதைத்து பார்த்தும், அவர்களின் இழுப்பிற்கு அசைந்து கூட கொடுக்காதவள். தனக்குப் பிடித்தது போல் வாழ யார் அனுமதியையும், இசைவையும் எதிர்பார்க்காதவள். பல ஆண்களோடு உறவு வைத்து கொள்ளும் இவளைக் குறித்து ஆச்சரியப்பட என்ன இருக்கிறது என்று நினைக்கலாம். இந்த எண்ணம் தோன்றுவதும் மிக இயல்பானது தான். இயல்பாய் நமக்குள் இந்த எண்ணம் உதிக்கக் காரணமாக இருந்தவை எதையும் சிறுவயதிலிருந்தே அருகில் நெருங்க அவள் அனுமதித்ததில்லை. எவரிடமும் கை பிடிக்காமல் பேச அவளால் முடிந்ததுமில்லை. கைபிடிக்காமல் பேசினால், பேசியது போலவே இல்லை என்று குறைபட்டுக் கொள்வாள், பொசுக்கென்று அணைத்துக்கொள்வாள். ‘இப்படியே போய்க்கொண்டிருந்தால், வயதான பிறகு என்ன ஆகும்?’ புரூஸ் ஒருமுறை அவளைப் பார்த்துக் கேட்ட கேள்வி இது. சற்று யோசித்தாள் தான், ஆனால் யோசனைக்குப் பிறகு அவள் மனதில் எழுந்த பதில் ‘இருநூறு முந்நூறு பேரில் நான் உடம்பைக் கொடுத்ததெல்லாம், உலகத்தில் பிறந்த அத்தனை பேருக்குமாக என்று நம்புகிற இரண்டு, மூன்று பேர் இருப்பார்கள். அத்தனை பேருக்கும் கொடுக்கிற எண்ணம் இருந்திருக்கிறது. ஆனால், நடைமுறையில் முடியாமல் முந்நூற்றோடு நின்றுவிட்டது. இது, முந்நூறு கோடி மூவாயிரம் கோடிக்குச் சமம் என்று நினைக்கிற ஓரிரண்டு பேர் இருப்பார்கள்’ இவள் வாழ்க்கையைப் பார்க்கும் போது அம்மணி ஒரு கடலைப்போல தோன்றலாம். சக்தி வாய்ந்த, எதனாலும் அடக்கவியலாத, ஆழமான ஒரு கடலாய்த் தோன்றலாம். ஆனால், இவள் சாதாரண மனுஷி! மனதில் இயல்பாய் வழியும் அன்பின் வழி காரியங்களைச் செய்வது அன்றி நமக்கும் இவளுக்கும் வேறு வித்தியாசங்கள் கிடையாது. மரியாவுக்கு எப்போதுமே ஒரு ஆச்சரியம் உண்டு, அவளிடம் வரும் ஆண்கள் பாலியல் ரீதியாகத் தூண்டப்படாவிடில், தங்கள் மீதே ஏன் குற்றம் சுமத்திக்கொண்டு காயப்படுகிறார்கள் என்ற கேள்வி தரும் ஆச்சரியம். ‘உண்மையில், அவமானம் கொள்ள வேண்டியது நான் தானே, என்னைப் பார்த்து அவர்களுக்கு தூண்டுதல் ஏற்படவில்லையானால், நான் தானே வெட்கப்படவேண்டும்!’ என்று எண்ணுவாள். மரியா தனக்குள்ளேயே மூன்று மரியாக்களை உருவகித்து வைத்திருந்தாள். தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றார்போல், கூறும் பெருமைக் கதைகளைக் கேட்டு கவரப்படும் ஒரு சிறு பெண்ணாகவோ அல்லது தன் மேல் சுமத்தப்பட்ட பொறுப்புகளும் பாரங்களும் அழுத்த, இறக்கி வைக்க முடியாமல் அலைபவர்களிடமிருந்து பொறுப்புகளைக் கழற்றி இளைப்பாற வைக்கும் பெண்ணாகவோ, எல்லா கதைகளையும் கேட்டு, அறிவுரை வழங்கி அமைதிப்படுத்தும் பெண்ணாகவோ உருமாறிக்கொள்வாள். தன் வாடிக்கையாளர்களின் மனநிலையை நன்கு புரிந்து கொள்பவளாக அவள் இருந்தாள். (மரியா பணிபுரிந்தது நமது நாட்டில் அல்ல, சுவிட்சர்லாந்தில் இருந்த ஒரு கிளப்பில் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்) கிட்டத்தட்ட அந்த கிளப்பில் பணிபுரிந்த ஒரு வருடம் முழுவதும் அவள் ஆராய்ந்து கொண்டிருந்தது, அவள் மனதில் பதில் கிடைக்காது திருப்பித் திருப்பி எழுந்த இந்த கேள்வியைத்தான், ‘இந்த பதினொரு நிமிடங்களுக்காகவா இவ்வளவும்?’ பணியில் சேர்ந்த புதிதில் அவள் கற்றுகொண்டது, ‘ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் பணம் கொடுத்து வாங்க விரும்புவது என்னது? நிச்சயம் சந்தோஷம் தான். ஆனால், அது அந்த பதினொரு நிமிடங்களில் கிடைப்பது இல்லையே!’ எங்கேயோ நிச்சயம் தப்பு இருக்கிறது என்று அவளுக்குப் புரிந்தது.



சுவிட்சர்லாந்தில் அவள் தங்கியிருந்த ஒவ்வொரு பொழுதிலும் எத்தனையோ போராட்டங்களை நடத்த வேண்டி இருந்தது. அவற்றுள் அயல்நாட்டில் இருக்க வேண்டி நேர்ந்த தனிமையை அவள் பழகிக்கொள்ள அதிகம் போராடினாள். ஆனால், அந்த தனிமையும், அவள் பணியும், சந்தித்த ஆண்களும் அவளுக்கு நிறைய கற்றுக்கொடுத்தார்கள். கடந்த காலத்தின் மரியாவும், அந்த மரியாவின் வலி கொடுத்த காதல்களும் இப்பொழுது அவளுக்கு வேறொரு வடிவில் புரியத் தொடங்கின. தன்னிடம் வரும் ஆண்களின் மூடிய பக்கங்களைத் திறந்து, அவர்களை அமைதிப்படுவது அவளுக்கு இயல்பாக நிகழ்ந்தது. சிலநேரங்களில் மகிழ்வு கொடுக்க அந்த பதினொரு நிமிடங்கள் தேவைப்படவில்லை என்பதையும் அவள் கண்டாள். பதினொரு நிமிடங்கள் முக்கியமில்லை என்பது அவளுக்குப் புரிந்தது. அவள் பணியின் மூலமாக அவள் காதலைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினாள். அவள் அதுகாறும் நினைத்துவைத்திருந்தது போல காதல் வாழ்வின் பரப்பை சுருக்குவதல்ல, விரியச் செய்வது, முழு சுதந்திரத்தை உணரச் செய்வது என்பதைப் புரிந்துகொண்டாள். அவளின் காதலை அவள் சந்தித்த பின்பு, பதினொரு நிமிடங்களின் பொருளும் அவளுக்குப் புரிந்தது. உடலுறவை ஒரு கலையாக அணுகத் தொடங்கினாள். அவளின் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமென்றால், ‘காதலிக்கும் இரண்டு பேர் எப்போதுமே இணைந்து தான் இருக்கிறார்கள், உடல் ரீதியாகப் பிரிந்திருந்தாலும்! இது போல் இணைந்திருக்கும்போது உண்டாகும் மகிழ்வுக்கு முடிவென்பது கிடையாது, அவர்களுக்கு பதினொரு நிமிடங்கள் என்பது இல்லவே இல்லை. கோப்பையில் ஊற்றப்படும் ஒயின், கோப்பை நிறைந்த பின்பு இயற்கையாக வெளியே வழிவது போல, தவிர்க்க முடியாமல், அந்த ஒரு தருணத்தில் மட்டும், வாழ்க்கையின் அழைப்புக்கு செவிசாய்த்து, உடலின் கட்டுப்பாட்டை இழந்து இரு உடல்களும் இணைந்து கொள்ளும் (Genital Embrace என்று இதனை அழைத்தாள்) ஆனால், இது உடலுறவின் தேவையை எண்ணி, அதன் மூலம் தான் மகிழ்வு கிட்டும் என்று கருதி நிகழ்வது அல்ல.’ இது அவளின் தொழில் அவளுக்குக் கற்றுக்கொடுத்தது. இந்த தேவைகள், தேவை என்றில்லாமல் அவளே சொல்லும் அந்த வாழ்க்கையின் அழைப்புக்கு செவிசாய்ப்பது என்று எதன் மீதும் அவளுக்கு முன்முடிவுகள், புகார்கள் கிடையாது. இயல்புகளை எந்த குற்றச்சாட்டும் இன்றி ஏற்றுக்கொள்ள அவளுக்குத் தெரிந்திருந்தது. அவளின் காதல் அவளுக்கு இன்னும் அதிகமதிகமாய்க் கற்றுக்கொடுத்தது. தனக்குப் பிடித்தவனிடமிருந்து எதுவும் கேட்காமல் காதலிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள். எதுவும் கேட்காத காதல் கொடுக்கும் மகிழ்வை அவளின் டைரியில் கொண்டாடித் தீர்த்திருப்பாள்.



அம்மணி அம்மாளின் கதை அவளுக்கும் மற்றவர்களுக்கும் இடையில் இருந்த உறவை முன்வைத்தே கூறப்பட்டிருந்தது. மரியாவின் கதை அவளுக்குள் நிகழும் போராட்டங்களை முன்வைத்தே நகர்த்தப்பட்டிருந்தது. அம்மணி அம்மாள் விடைபெறும் முன் புரூஸுக்குக் கொடுத்த அறிவுரை ‘கல்யாணம் செய்துகொள். ஆனால், என்று உன் மனைவிக்கு உன்னைப் பிடிக்கவில்லையோ அன்று உன் பாயைத் தூக்கி வாசலில் வீசி எறியச் சொல். சண்டை போடாமல், அந்தப் பாயை எடுத்துக்கொண்டு வேறு ஜாகை பார்த்துக்கொள். இஷ்டமிருந்தால் அந்தப் பாயை எடுத்துக்கொண்டு இன்னொருத்தி வீட்டுக்குப் போ. இல்லாவிட்டால் அதையும் தூக்கி எறிந்துவிட்டு தரையில் படுத்துக்கொள்’. மரியாவின் ஆசையோ காதலிக்க வேண்டும், ஆனால், ஒருவரையொருவர் உடைமையாக்கிக்கொள்ளக் கூடாது என்பது தான் (Love one another, but let’s not try to possess one another) ஆனால், இதைப் புரிந்துகொள்வதற்கு நிறைய தாங்க வேண்டும் என்பதையும் கூறுகிறாள். தனக்குப் பிடித்தவனை சந்தித்துவிட்டு வீட்டுக்கு வரும் அவள் அன்று இரவு டைரியில் ஒரு சிறு கதையை எழுதுகிறாள், அழகான ஒரு சிறு பறவையை காதலிக்கும் பெண்ணைப் பற்றிய கதை. இருவரும் காதலிக்கிறார்கள், வானம் தாண்டி பறக்கும் அந்த பறவையைத் தன்னுடனேயே இருக்க செய்கிறாள் அந்த பெண். ஆனால், சிறிது நாட்களிலேயே ஒரு விசித்திரமான மாற்றம், அவளுக்கு அந்த பறவையின் மீது காதல் குறைந்தது போன்ற ஒரு எண்ணம். பறக்க முடியாமல் போன இயலாமையினாலேயே அந்த பறவை இறந்து போகின்றது. அவள் வேதனையில் கரைகிறாள், அவள் ஞாபகங்களில் வானத்தில் வட்டமடிக்கும் பறவையின் தோற்றம் திரும்பத் திரும்ப வந்து போகிறது, கூண்டிலடைபட்டுக் கிடந்த பறவையின் தோற்றம் நினைவிலேயே தங்கவில்லை! அதன் பின்பு தான், அந்த பெண்ணுக்குப் புரிகின்றது, தான் காதலித்தது, வெறும் பறவையை அல்ல, வானம் தாண்டி பறக்கும் சிறகுகள் உடைய பறவையை! தன்னைக் கவர்ந்தது அதன் சிறகுகளும், வானத்தைத் தாண்டி பறக்கும் அதன் சுதந்திரமும்தான், தன் காதலன் பறவையாய் இருந்தது அதன் சிறகுகளால்தான் என்பதைப் புரிந்துகொள்கிறாள். காதலனுடன் சிறு பொழுதைக் கழித்த பின்பு மரியா வந்து டைரியில் எழுதியது இந்த சிறு கதையைத் தான்.

இவர்கள் இருவரையும் அறிந்துகொண்டால் காதலுக்கான உங்களின் விளக்கங்கள் மாறலாம், எல்லாமே மாறிப்போய் வாழ்க்கை காயப்படுத்துவதாய் சில நேரங்களில் தெரியலாம், நீங்கள் மட்டும் வித்தியாசப்படுத்தப்பட்டு சில நேரங்களில் தனிமை உங்களைக் குதறலாம். ஆனாலும், இவர்கள் இருவரையும் இறுக்கி அணைத்துக் கொள்ளுங்கள். கடினமான தருணங்களைக் கூட அற்புதமாய்க் கடக்கக் கற்பீர்கள், வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் தீவிரமாய் வாழ்வீர்கள், தீவிரமாய் நேசிப்பீர்கள். வாழ்க்கை மிக அழகாய் தெரியும், சந்தோஷங்கள் புரியும்.