தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Wednesday, May 02, 2018

ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி :: முதல் அத்தியாயம்

________________

முச்சந்தியில் நின்றுகொண்டிருந்தது புளியமரம். முன்னால் சிமிண்டு ரஸ்தா. இந்த ரஸ்தா தென்திசையில் பன்னிரண்டு மைல் சென்றதும், குமரித்துறையில் நீராட இறங்கிவிடுகிறது. வட திசையில் திருவனந்தபுரம் என்ன, பம்பாய் என்ன, இமயம்வரைகூட விரிகிறது. அதற்கு அப்பாலும் விரிகிறது என்றும் சொல்லலாம். மனிதனின் காலடிச்சுவடு பட்ட இடமெல்லாம் பாதைதானே!
மேற்குத் திசையிலிருந்து புளியமரத்தின் பின் பக்கமாக வந்து, மரத்தைச் சுற்றி இரு கிளைகளாகப் பிரிந்து சிமிண்டு ரோட்டில் கலக்கும் பாதை எங்கிருந்து புறப்படுகிறதோ, யாருக்குத் தெரியும்? சொல்லப் போனால் எல்லாப் பாதைகளும் கடலோரம் கிளைத்து மற்றொரு கடற்கரையில் கரைகின்றன. நடுவில் ஆரம்பம் எது, முடிவு எது?
புளியமரத்தடிக்கு வந்து சேராத பாதைகள் இல்லை.
மிகவும் வயதான மரம். கிழடுதட்டிப் போய்விட்டது. எட்டி நின்று சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தால் தலை பஞ்சுப் பொதியாகி, கண்களும் பஞ்சடைந்து, கூனிக் குறுகிப்போன கிழவி ஒருத்தி நிஷ்காம் நிலையில் ஆழ்ந்து, தன்னுள்ளே புதையுண்டிருக்கும்
ஆனந்தத்தைத் தேடி, எடுத்து அனுபவித்துக்கொண்டிருப்பது | போல்தான் இருக்கும். எத்தனையோ வருடங்களுக்கு முன்னால் முளை விட்டு நேற்றுவரை சுயமரியாதையுடன் வாழ்ந்து வந்த மரம். இன்னும் சிலகாலம் விட்டுவைத்திருந்தால் ஜீவன் தனியே பிரிந்துதான் போயிருக்கும், மனிதனுடைய அவசரம், மார்தட்டி மல்லாந்து விழும் வீறாப்பு விட்டுவைக்கவில்லை. மரத்தை அழித்துவிட்டார்கள். நின்ற மேனிக்குப் பட்டுப்போய் விட்டது புளியமரம்.
புளியமரம் வாழ்ந்த கதையும் அழிந்த கதையும் இன்றளவும் எங்கள் மனதில் நிற்கிறது. என்றும் நீங்காது நிற்கவும் செய்யும். மறக்க முடியாத விஷயங்களும் சில உண்டுதானே? அதில் ஒன்றுதான் புளியமரத்தின் கதையும், சொல்லப்போனால் புளியமரம் என்ன செய்தது? சும்மா நின்று கொண்டுதானே இருந்தது? மனிதனின் அலகிலா விளையாடல்களுக்கு மௌன சாட்சியாக நின்றதே அல்லாமல் எதிலாவது பங்கெடுத்துக்கொண்டதா? பட்டுக்கொண்டதா? மனிதனின் சிரிப்பையும், கண்ணீரையும், கண்ணீரே சிரிப்பாக வெளிப்படுவதையும், சுயநலத்தையும் தியாகத்தையும், தியாகத்தில் கலந்துபோயிருந்த சுயநலத்தையும், பொறாமையையும், அன்பில் பிறந்த துவேஷத்தையும் பார்த்தபடி நின்றதே அன்றி வேறு என்ன செய்தது? மனித ஜாதிக்கு அது இழைத்த கொடுமைதான் என்ன? யாரைப் பார்த்துக் கை நீட்டிற்று? யாரை நோக்கிப் பல்லிளித்தது? யாருடனாவது சேர்ந்து கொண்டு யாருக்கேனும் குழிபறித்ததா?
அது தானாகப் பிறந்தது. தன்னையே நம்பி வளர்ந்தது. இலைவிட்டது. பூ பூத்தது. பூத்துக் காய் காயாகக் காய்த்ததில் இலைகள் மறைந்தன. பழுத்த இலைகள் உதிர்ந்து , மண்ணை மறைத்தன. மண்ணை மறைத்து, மண்ணில் கரைந்து, பெற்ற தாய்க்கு வளங்கூட்டி மீண்டும் மரத்தில் கலந்தன, வானத்தை நோக்கித் துழாவின கைகள், வேர்கள் மண்ணுக்குள் புகுந்து அலைந்தன. ஆமாம், சுயமரியாதையுடன் நிறைவாழ்வு வாழ்ந்த மரம் அது.

ஆனால் நாட்டையும் பணத்தையும் பெண்டுகளையும் அதிகாரத்தையும் புகழையும் காயாக வைத்து விளையாடிய மனிதன் புளியமரத்தை மட்டும் விட்டுவைக்கிறேன் என்கிறானா? அதையும் காயாக வைத்து விளையாடித் தீர்த்துவிட்டான்.
புளியமரம் அழிக்கப்பட்டது. புளியமரம் வாழ்ந்து அழிந்த கதைதான் இது.
புளியமரம் வெறும் மரமாகத்தான் நின்றுகொண்டிருந்தது என்றாலும், அந்த மரம் அங்கில்லாதவரை வேறு என்னதான் அங்கிருந்தாலும், மனித சாகசத்தால் பின்னால் என்னதான் கிளைத்துவிட்டாலும் அந்த இடமே வெறிச்சோடிப் போய்விடும் என்றுதான் என் வரையிலும் நான் நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால் பிறரும் அப்படித்தான் எண்ண வேண்டும் என்பது இல்லையே, பிறரும் அப்படித்தான் எண்ணுவார்கள் என நான் நினைத்துக்கொண்டிருந்தால் அதற்கு யார் பொறுப்பு?
புளியமரம் நின்ற இடம் வெறிச்சோடிப் போய்விட்டது. இப்பொழுது முச்சந்தியில் புளியமரம் நிற்காவிட்டாலுங்கூட, மனிதர்களும் சரி வாகனங்களும் சரி, முன்போலவே அது நின்ற இடத்தை - சூன்யத்தை - சுற்றிச் சுற்றித்தானே செல்ல வேண்டியிருக்கிறது? அவர்களுடைய சொந்தப் பாதுகாப்புக்குப் பரஸ்பரம் முட்டி மோதி அழிந்து போகாமல் நிலைப்பதற்கு அந்த நியதி தேவையாக இருக்கிறது. புளியமரம் கற்றுக் கொடுத்த பாடம் அது. ஆனால் இந்த நியதியைப் பின்பற்றுகிறவர்களே அதைச் சொல்லிக்கொள்ள வெட்கப்பட்டுக்கொள்ளலாம்.
எப்படியும் மனிதர்கள் சௌக்கியமாக வாழ்ந்தால் சரிதான்.
'மனிதன்தான் பிரம்மா, மனிதன்தான் விஷ்ணு, மனிதன்தான் சிவன்' என்று தாமோதர ஆசான் அடிக்கடிக் கூறுவார். அவரும் ஒரு தத்துவவாதி, அவர் வாழ்ந்த காலத்தில் நாங்களோ அவரோ அதைப் பெயரிட்டு அழைக்கவில்லை. 'மனிதனுக்கு அப்பாற்பட்ட எந்தச் சக்தியிலும் எனக்கு நம்பிக்கை இல்லை' என்பார் அவர். லோகாயதம் அவருடைய மனசுக்கு உகந்த கொள்கை.
அந்தக் காலத்தில் நாங்கள் எந்தத் தத்துவத்தைப் பற்றியும் கவலைப்படவில்லை, தகப்பனார், ஆசிரியர், போலீஸ்காரன் மூன்று பேரையும் தவிர வேறு யாருக்கும் நாங்கள் பயப்படவும் இல்லை. .
தாமோதர ஆசானின் தத்துவங்களுக்கு நாங்கள் காது கொடுக்கவில்லை. அதைப்பற்றியெல்லாம் யோசித்துப் பார்த்ததுமில்லை. இருந்தாலும் அந்தக் காலத்தில் நாங்கள் நிழல்போல் ஆசானைப் பின்தொடர்ந்தோம். அவரைச் சுற்றிச் சுற்றி வந்தோம். நாள் பூராவும் அவருடனேயே கழிக்க ஆசைப்பட்டோம். எந்தத் தந்தையும் தாமோதர ஆசானை விரும்ப முடியாது. எந்த இளைஞனும் அவரை வெறுக்கவும் முடியாது. ஆசானைச் சுற்றிக்கொண்டு அலைந்ததற்கு வீட்டில் வசை 'கிடைத்தது. ஆசிரியர்கள் முகம் சிவந்தது. சில நாட்களில், அவருடன் அரட்டை அடித்துவிட்டு நடுநிசியில் வீடு திரும்புகிறபோது, தட்டத்தட்ட கதவு திறக்கப்படாததால் வெளித் திண்ணையிலேயே படுத்துக்கொண்டோம். மறுநாள் யாருக்கும் தெரியாமல் ஆசானுடன் கூடிப்பேச மீண்டும் திட்டங்கள் போடுவோம்.
ஆசான்மீது நாங்கள் கொண்ட பிரேமைக்குக் காரணம் உண்டு. வசிய மருந்து ஒன்றும் ஆசானிடம் கிடையாது. ஆனால் அவர் கதைக் களஞ்சியம். கதைப் பொக்கிஷம் அவர். இத்தனை கதைகளை ஒரு மனிதனால் சுமக்க முடியுமா? அடேயப்பா, எத்தனை கதைகள் எத்தனை கதைகள்! எவ்வளவு விசித்திரமான பாத்திரங்கள்! எவ்வளவு கோணலும் நெளிசலும் கொண்ட மன இயல்புகள்! இரண்டு மூன்று மணி நேரம் அவருடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு, வீட்டுக்கு வந்து தலையைச் சாய்த்ததும் எத்தனையோ கதைகளிலிருந்து எண்ணற்ற கதாபாத்திரங்கள் எங்கள் மனதில் உயிர்கொண்டு கூத்தாடும், அவர் குரலின் கார்வை காதில் ஒலிக்கும்.
அவரோடு நாங்கள் பழகிய நாட்களில் அவருக்கு எண்பது வயசுக்கு எல்லாம் குறைவில்லை. கேட்டால் 'அறுபத்தி மூன்று' என்றுதான் சொல்வார். 'எண்பது வயதாகியும் கல் மாதிரி இருக்கிறாரே' என்று பிறர் நினைப்பது அவருக்குப் பிடிக்காது. ஆனால் அறுபத்தி மூன்று என்று சொன்னாலும் நம்பும்படிதான் இருக்கும். அப்பழுக்கு இல்லை. ஊசியில் நூல் கோப்பார், ஒரே மூச்சில் நூறு தேங்காய்களை நார் உரித்துப்போடுவது அவருக்குச் சிரமமான வேலை அல்ல. காற்று மாதிரி ஐந்து மைல்கள் சுற்றிவிட்டு வருவது அவரது அன்றாடப் பழக்கம், தோள்கள், இரண்டு நுங்கைத் தூக்கி வைத்தாற்போல் இருக்கும். விசாலமான முதுகின் இரு கரையிலும், மார்பிலும், மணிக்கட்டை நோக்கிச் சுருங்கும் கைச் சதைகளிலும் சுருள் சுருளாகக் கருமயிர்.
"இந்தா மடக்குங்க பாப்பம், யாராவது, மீசை மொளச்சவன்'
என்று தனது வலது புஜத்தை முன்னால் நீட்டுவார் ஆசான். நாங்கள் ஒருவர் பின் ஒருவராக அதில் தொங்குவோம். 'இன்னா அய்யரு வந்துட்டாரு, மடக்கிப் போட்டுத்தான் மறுவேலை பாப்பாரு , , , மடக்கியே புடுவாரு . . . பூ புர்ர்ர் . . . கீரைத் தண்டில்ல வேய் இது . . , கூ ஊ ஊ ஊ . , .' நான் முடிந்த மட்டும் முயன்றுவிட்டுச் சோர்ந்துபோய் உட்கார்ந்துவிடுவேன்,
கல்லூரி விட்டு வீட்டுக்கு வந்து புத்தகத்தை விட்டெறிந்து விட்டு மாலை ஐந்து மணிக்கெல்லாம் ஆசாரிப்பள்ளம் ரோட்டில் நடந்து சென்றுகொண்டிருப்போம். அந்தக் காலத்தில் பாதி வழியில் சோசப்பின் லாண்டரி இருந்தது. கடை முன்னால் போட்டிருக்கும் பெஞ்சில் அமர்ந்திருப்பார் ஆசான். நுனியில் பூண் கட்டி, ஆறு அடி உயரமும் ரூல்தடி பருமனும் கொண்ட தடியைக் கால்கள் இடையே ஊன்றி, தலைக்கு மேல் இரண்டு அடி எழும்பி நிற்கும் கம்பின் உச்சி மண்டையில் இரு கைகளைக் கோத்துப் பிணைத்திருப்பார். கம்பு புழுதி மண்ணில் மூன்று அங்குலம் இறங்கி இருக்கும்.

எங்களைக் கண்டதும் பின்புறம் கௌபீன நுனி யாவருக்கும் தெரியும்படி வேஷ்டியைத் தூக்கிக் கட்டிக்கொண்டு கிளம்பி விடுவார். நடந்து செல்கிறபோது அவர் வாய் திறப்பது கிடையாது. அவர் பின்னால் செல்லும் நாங்கள்தான் சில்லறைப் பேச்சுகளில் ஈடுபட்டிருப்போம். இரண்டு மைல் சென்றதும் பாழ்மண்டபம் ஒன்று தென்படும், கொலையாளிகளை அந்தக் காலத்தில் தூக்கிலிடும் இடம் அது. பார்க்கப் பார்க்க ஒரு அந்தக் காலத்து இடமாகத் தெரியும். இரண்டு மைல் தொலைவில் அரை நூற்றாண்டைத் தாண்டி விடுவோம்.
நாங்கள் போகிற காலத் தில் ஒரு பைத்தியக்காரி 'பேத்திங் பூலி'ல் குதிக்கப்போவது மாதிரி அங்கு நின்று கொண்டிருப்பாள். அவளுடைய வாசஸ்தலம் அது.
மண்டபத்தின் முன் அமர்வார் ஆசான். அவர் முகம் தெரியும்படி நாங்களும் உட்கார்ந்துகொள்வோம். வருகிற வழியிலேயே வாங்கி,
மடியில் தயாராகக் கட்டிக்கொண்டிருக்கும் பொட்டலத்தை எடுத்து ஆசான்முன் படைப்பான் ஒருவன். இரண்டு கட்டு ஈத்தாமொழி வெற்றிலை, பச்சைப் பாக்குப் பத்துப் பதினைந்து, யாழ்ப்பாணம் புகையிலை 'நம்பர் ஒன்' தடை இரண்டு,
வெற்றிலை போட்டுத் துப்பிவிட்டுச் சுற்றுமுற்றும் பார்ப்பார் ஆசான், 'ஹும் , , . ஹும் . . ' என்று அவசியமில்லாத ஆர்ப்பாட்டங்களுடன் புகையிலைச் சாற்றைத் தொண்டைக் குழியிலிருந்து வெளியேற்றிக் கொள்வார். கதை ஆரம்பமாகிறது என்று அர்த்த ம்.
| 'ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார்' என்று அத்தைப் பாட்டிகள் பாணியில் கதை ஆரம்பம் ஆகாது. கதை உத்திகள் எல்லாம் அவரிடம் படிந்துபோன சமாச்சாரம்.
சற்றுத் தள்ளி முளைத்திருக்கும் ஒரு செடியை இரண்டு வினாடிகள் கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்து விட்டு, 'அதென்ன செடி தெரியுமா அது, யாருக்காவது?' என்கிறார்,
நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டுவிட்டுத் தலையை அசைக்கிறோம்.
| 'தெரியாது இல்லையா? ஆம். பேந்தப் பேந்த முழிக்குதெப் பாத்தாலே தெரியுதே. சரி, ரெண்டு இலையெக் கிள்ளி உள்ளங் கையிலே வெச்சு நல்ல நவுட்டிப் போட்டு மோந்து பாருங்க பாப்பம்.''

இரண்டொருவர் அதைப் பின்பற்றுகின்றனர். 'வாசனை என்னமாடேய் தெரியுது?' மணந்து பார்த்தவர்களுக்குச் சொல்லத் தெரியவில்லை.
'கோடித் துணியெ நாருப் பொட்டிலே ரொம்ப நாளு வச்சுப் | போட்டு எடுத்தாலே அடிக்குமே அந்த மணம்தானே?'
தங்களுடைய உணர்வை ஆசான் துல்லியமாக வர்ணித்துவிட்ட ஆச்சரியம் முகத்தில் வழிகிறது.
| 'இதெக் கொடுத்துத்தாலா தாலி கெட்டின புருஷனெக்கொன்னே போட்டா சண்டாளி. மனசு வருமா ஒரு பொம்புளைக்கு? அடுத்தவன் களுத்தெக் கட்டிக்கிடணும்னு ஒரே நெனப்பா நெனச்சுத் துணிஞ்சுட்டாளே பாவி. அப்படித்தான் செய்தாளே, புருஷன்காரன் என்ன நொண்டியா, சப்பாணியா, கூன் குருடா, இல்லே மேலே_ ஒண்ணு இருக்கட்டும்னு இன்னொருத்தியெ வச்சுக்கிட்டு இருந்தானா? எப்படிப் போனாலும் அறுப்புக்கு நூறு கோட்டை நெல் வந்துவிளும். நாள் ஒண்ணுக்குக் கொல்லேலே விளுற இலை அம்பதுக்குக் கொறயாது. அவுத்துவிட்டாத் தொளுவம் காலியாகுதுக்கு அரை மணி நேரமாகும். சவாரிக்கு மாடுபுடிக்குதுக்கு வந்தான் வடசேரி சந்தைக்கு. அரபிக் குதிரெ
கணக்கா ரெண்டு மாட்டெப் புடிச்சுக்கிட்டு, அந்த மாபாவி தலையிலே ஆசையா வெச்சு முத்துதுக்கு மடி நெறயப் பூவும் வாங்கிக்கிட்டுத்தானே போனான் அண்ணைக்கும். பாலைத்தான் தாறான்னு வாங்கிக் குடிச்சான். ரெண்டு தவா ரெத்தம் ரெத்தமாட்டு வாந்தி எடுத்தான். குளோஸ்.'
இதுதான் ஆசானுடைய எடுப்பு. 'கடைசியில் மண்ணைத் தூக்கி விண்ணில் நிறுத்திக் காட்டுகிறேன்' என்று சொல்லிவிட்டுத் துண்டை விரித்து மருந்துப் பெட்டிகளை அடுக்கும் செப்பிடு வித்தைக்காரன் போல் மீண்டும் வெற்றிலை போட்டுக்கொள்ள ஆரம்பித்துவிடுவார் ஆசான்.
பின்னால், விஷம் கொடுத்தவளின் குழந்தைப் பருவத்தில் கதை ஆரம்பமாகும். அந்த ஊர், அந்த ஜனங்களின் ஆசாபாசங்கள், உறவுமுறைகள், தோப்புத் துரவு, தாம்பத்தியம் எல்லாம் படிப்படியாக விரியும், கதை நெருக்கடியான கட்டத்தை எட்டுகிற போது மீண்டும் எங்களைப் புழுதியில் தள்ளிவிட்டு வெற்றிலை போட்டுக்கொள்ள ஆரம்பித்துவிடுவார். பொழுது தேயும் உணர்வே தெரியாது.
திடீரென்று பெரிய பாதிரியார் அரண்மனையில் மணி பத்து அடிக்கும் ஓசை கேட்கும். மணியின் நாக்கு நீளமாக வளர்ந்து ஒவ்வொரு அடியையும் எங்கள் தலைக்குமேல் போடுவது போல் இருக்கும். பிரக்ஞை திரும்பும்.
வீடு, அப்பா, அம்மா, கிளாஸ் டெஸ்ட்... நாங்கள் வீட்டைப் பார்த்து நடையைக் கட்டுவோம்.

ஆசான் மாதிரிக் கதை சொல்லுவதற்கு இனிமேல் ஒருவர் அவதாரம் எடுத்துத்தான் வரவேண்டும். அவரும் இப்போது இல்லை. புளியமரத்தை முந்திக்கொண்டுவிட்டார்.
புளியமரத்தைப் பற்றிய பழைய கதைகளை எல்லாம் ஆசான் சொல்லித்தான் நாங்கள் தெரிந்துகொண்டோம்.
எங்கள் ஊர் மிகவும் குறுகிய காலத்தில் மிகவும் முன்னேற்றம் அடைந்துவிட்டதாகத் தாமோதர ஆசான் சொல்லக் கேட்டிருக்கிறேன். எடுத்துக்காட்டாக, ஐம்பது வருஷங்களுக்கு முன்னால் புளியமரத்தின் சுற்று வட்டாரம் இருந்த நிலைமையையும் பின்னால் இந்த இடம் ஜகஜோதியாகத் திகழ்ந்ததையும் அவர் படம்பிடித்துக் காட்டுவார்.
நாங்கள் பார்த்திராத அந்தக்காலத்து இடங்களை எல்லாம் பார்த்திருந்து, இப்போது எங்களுடன் நாங்கள் பார்க்கும் இடங்களைத் தானும் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதில் அசாத்தியப் பெருமை அவருக்கு, அவர் பார்த்திருக்கும் இடங்களையெல்லாம் கஜகர்ணம் போட்டாலும் இனிமேல் எங்களால் பார்க்க முடியாது.

தாமோதர ஆசான் மிகுந்த பாக்கியசாலிதான். எங்கள் ஊர், அதிலும் முக்கியமாகப் புளியமரத்தின் சுற்றுப்புறம்   இருந்த நிலைமையை எல்லாம் ஆசான் மூலமாகத்தான் நாங்கள் தெரிந்துகொண்டோம். இன்னும் சில ஆண்டுகள் கழித்து நாங்கள் பிறந்திருந்தோம் என்றால், இந்த அற்புதமான செய்திகள் எல்லாம் எங்கள் செவி வரைக்கும் எட்டாமல்கூடப் போயிருக்கும். சரித்திர ஆசிரியர்கள் புளியமரத்தின் கதையை எல்லாம் எழுதமாட்டார்கள்.
நாங்களும் பாக்கியசாலிகள்தான்.
அந்தக் காலத்தில் புளியமரத்தைச் சுற்றிலும் குளம், அதல் பாதாளத்தில் தேங்கிக் கிடக்கும் தண்ணார். புளிக்குளம் என்றுதான் சொல்வார்கள், குளத்தின் மத்திய பாகத்தில் தீவுபோல் எழும்பியிருந்த திட்டில் நின்றது புளியமரம். அந்த மேட்டுப் பிரதேசத்தின் விஸ்தீரணம் அதிகம் இல்லை. இரண்டு கோஷ்டிகள் நெருக்கமாக நின்று கிளித்தட்டு விளையாடலாம், அவ்வளவுதான்.
புளிக்குளத்தில் வருடம் பூராவும் தண்ணீர் இருக்குமாதலால் காலைக்கடன்களைத் தீர்த்துக்கொள்ள மிக்க வசதி. தண்ண"ரின் மேல்பரப்பில் தாமரை இலைகள்போல் பாசி படர்ந்து இருக்கும். இதனால் துர்நாற்றம் அதிகம் வீசாது.
புளிக்குளத்தின் தெற்கே, சற்றுத் தொலைவில், மனத்துள் வரிசைப்படுத்த முடியாதபடி காற்றாடி மரங்கள் யதேஷ்டமாக நின்று காற்றில் பேயாட்டம் ஆடிக்கொண்டிருக்கும். வேலைவெட்டி இல்லாதவர்கள் நித்திரா சுகத்தை அனுபவிக்க அந்த இடத்தைத்தான் தேர்ந்தெடுப்பார்கள்.

காலை வேளை தவிர, மற்ற சமயங்களில் குளத்தின் கரையில் மனித நடமாட்டத்தைக் காண முடியாது. பகல் பாராது போட்டபடி பன்றிகள் ஆக முடியாது. பகல் பூராவும் வாலில் சுழிகள்
பிகள் ஆனந்தமாக மேய்ந்துகொண்டிருக்கும். அந்தக் காலத்தில் மெயின் ரஸ்தா புளியமரத்தடியிலிருந்து இரண்டரை மைல் கிழக்கே விலகிச் சுற்றி வளைந்து சென்றுகொண்டிருந்தது.
மழை பெய்து பச்சை படர ஆரம்பித்துவிட்டால் மேய்ச்சலுக்குக் கால்நடைகள் வரும், மாடுகளைக் குளத்தில் தள்ளி உடம்பு நோகாதபடி மேலும் கீழும் பொத்திப் பொத்தித் தேய்த்துக் கரைநோக்கி விரட்டிவிட்டு அப்படியே புளியமரத்துக்குச் சென்றுவிடுவார்கள் இடைச் சிறுவர்கள், மரத்தடியில் விளையாட்டும் சண்டையும் சச்சரவும் அல்லோலகல்லோலப்படும். அந்தி மயங்கும் வேளையில் அவர்கள் மீண்டும் ஊருக்குள் நுழைந்துவிடுவார்கள்.
நாட்டு வைத்தியர்கள் மூலிகை தேடி அந்த வட்டாரத்தில் சுற்றுவது உண்டு. தாமோதர ஆசானும் அதற்காகப் பலதடவை சென்றிருப்பதால் அவருக்கு மிகவும் பரிச்சயமான இடம்தான் அது.
ஒருநாள் பேசிக்கொண்டிருக்கும்போது 'தப்பித்தவறிக்கூட வயசுப் பொம்பிளைக அந்தப் பக்கம் தலை நீட்டாது. சாணம் பொறுக்கக் கிழவிகள் வரும்; குழந்தைகள் வரும். வயசுப் பொண்ணுக அந்தத் திசையிலே தலைவெச்சுப் படுக்க மாட்டாங்க, அந்தக் காலத்திலே' என்றார் தாமோதர ஆசான்.________________

'ஏன், மன்மத பாணங்கள் ஏந்திய காளைகள் நிற்பார்களோ?" என்று ஒருவன் தமிழில் கேட்டான்.
'சீச்சீ, முந்தியெல்லாம் சாதாரணமா வருவாங்க, போவாங்க. காளியப்பன் மகள் செல்லத்தாய்க்கு நேர்ந்த கதி தெரிஞ்சிருந்தும் ஒரு பொம்பளை வருவாளாக்கும்! எங்கிருந்தோ வந்தவன் ... ஊர் தெரியாது, பெயர் தெரியாது, முகத்தைப் பார்த்தவன் கிடையாது. கையைப் பிடிச்சு அப்படியே மரத்தடியிலே போட்டு .....'
கதை சொல்ல ஆரம்பித்துவிட்டார் ஆசான். இதே கதையை இதற்கு முன்னும் பலதடவைகள் சொல்லித்தான் இருக்கிறார். நாங்களும் கேட்டிருக்கிறோம். அலுத்தால்தானே? அவர் மீண்டும் சொல்லத் தயார். கேட்கக் காத்திருந்தோம் நாங்கள்.
நடுகை முடிந்து பாதி வழியில் என்ன காரணத்தாலோ தோழிகளுடன் பிணக்கு மூளவே அவர்களை விட்டுப் பிரிந்து குறுக்குப் பாதையில் குளத்தோரமாக நடந்து வந்துகொண்டிருந்தாள் செல்லத் தாயி. அன்று பெளர்ணமி. எங்கும் செளந்தரியம் இறைந்து கிடந்தது. முன்தினம் பெய்த அடைமழையில் குளங்கள் பெருகி, நீரில் அலைகள் ஓடோடி வந்து கரையேறிய வண்ணம் இருந்தன.
செல்லத்தாயிக்கு உற்சாகம் கரை புரண்டுவிட்டது. முட்டு அளவு நீரில் இறங்கித் தண்ணீரைக் கைகளால் அளைந்தாள். கையைக் கூட்டி நீரை ஏந்தி முகத்தில் வார்த்துக்கொண்டாள். வாய் கொள்ளும் மட்டும் உறிஞ்சி, தூதூவென்று எட்டித் துப்பினாள். குளிப்போமே என்று திடீரென்று தோன்றிவிட்டது. மடமடவென்று இறங்கிவிட்டாள்.
அக்கம்பக்கம் கண் வட்டத்திற்கு ஈ காக்காய் கிடையாது. கண்ணெதிரே புளியமரத்தின் சல்லிக் கிளை ஒன்று சந்திரனை அப்படியே இரண்டு துண்டாக வெட்டிக் காட்டியது. அதைப் பார்த்து ரசித்தபடி,, தாராளமாக சௌகரியங்களை ஏற்படுத்திக் கொண்டு குளித்தாள். 'இப்படிக் குளித்ததே இல்லையே' என்று சொல்லிக்கொண்டாள்.
. உடம்பு வாழைத் தண்டாகச் சில்லிட்டு வெடவெடக்க ஆரம்பித்ததும்தான் பொழுது போனதை உணர முடிந்தது. "இன்னும் ஒரே ஒரு முக்குளி' என்று முணுமுணுத்தவாறே முங்கி எழுந்தாள், தலையைத் தூக்கிப் பார்த்தபோது எதிரே புளியமரம் நின்றுகொண்டிருந்தது. அது அங்குதான் நின்று கொண்டிருந்தது என்றாலும், அவளும் அதை உணர்ந்தாள் என்றாலும் மிகப்பெரிய யானைகள் இரண்டு படுத்துக் கிடப்பது போன்ற அந்த இடத்தில் ஒற்றைக்கு ஒற்றையாய் ஒரு புளியமரம் நின்றுகொண்டிருப்பது அலாதியாகப்பட்டது அவளுக்கு. அது வரையிலும் போய்விட்டு வந்துவிடுவோமே என்ற சபலமும் கூடவே இழைந்தது. அப்படியே தண்ணீரில் சரிந்து நீச்சலடிக்க ஆரம்பித்துவிட்டாள்.
புளியமரத்தடியில் நின்று நாலா பக்கமும் பார்த்தபோது ஏதோ தூர தேசத்தில் நிற்பதுபோல் இருந்தது. காற்றாடி மரங்கள் பேயாட்டம்
ஆடின, தொலை தூரத்தில் அன்று காலையிலிருந்து மாலைவரை அவள் வேலை செய்த வயல், அவசரமாய் நடந்து போனவன் தோளிலிருந்து நழுவி விழுந்த பச்சைத் துப்பட்டி மாதிரி தெரிந்தது. அவள் கண்கள் அங்கும் இங்கும் மாறி மாறிப் பாய்ந்தன, சந்தோஷத்தில் சிரித்தாள். அடிக்கொரு தரம் கைகளைத் தலைமேல் இழுத்து ஈரத்தை வடித்துவிட்டுக் கொண்டாள்.
அப்போது சற்றும் எதிர்பாராமல் பின்பக்கம் கால் அரவம் கேட்டது. பயந்து தலையைத் திருப்பினாள். அங்கு ஆஜானுபாகுவாக ஒருவன் நின்றுகொண்டிருந்தான், பின்பக்கம் கட்டுக் குடுமி. காதில் கடுக்கன். பட்டுச் சொக்காய். கைகள் கால்முட்டைத் தொட்டன.
அவள் கைகள் பெருக்கல் சின்னமாகக் கூடி மார்பை மறைத்தன. வாய் கட்டிவிட்டது. அப்படியே சில்லிட்டு நின்றாள். ஒரு கணம் அவள் கண்களைப் பார்த்தபடி நின்றான் அவன். பிறகு சாவதானமாக அடியெடுத்து வைத்துப் பச்சைக் குழந்தையைத் தூக்குவதுபோல் அவளைத் தூக்கி மரத்தடியில் போட்டு அவள் மேல் சாய்ந்தான்.
சில நிமிஷங்களுக்குப் பிறகுதான் அவளால் சத்தம் போடவே முடிந்தது. காற்றாடி மரத்தோப்பில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் அலறல் கேட்டுக் குளத்தோரம் வந்த பின்புதான் அவன் மெதுவாக எழுந்திருந்து தண்ணீரில் மூழ்கிக் கிழக்கோரம் கரை ஏறினான். 'பிடி, பிடி' என்று கத்திக்கொண்டே எல்லோரும் பின்னால் ஓடினார்கள். அவர்கள் அத்தனை பேரும் தன்னை நெருங்க நெருங்க நடையின் வேகத்தை மட்டும் முடுக்கிக்கொண்டே வந்தான் அவன். கடைசிவரை அவனுடைய நடைக்குத் துரத்தியவர்களின் ஓட்டம் பின்தங்கி போனதுதான் மிகவும் ஆச்சரியமான விஷயம். காற்றாடி மரத்தடியில் யாருடனோ கதை பேசிக்கொண்டிருந்த தாமோதர ஆசானும் தூரத்திச் சென்றவர்களில் ஒருவர்.________________

| 'நானும் பின்னாலே ஓடினேன். அந்தப்பய மட்டும் என் கையிலே ஆம்புட்டிருந்தாம்னு சொன்னா அந்த எடத்திலேயே மண்ணோடு மண்ணா அரைச்சுத் தேச்சிருக்க மாட்டேன்? ஆனா நடக்கறவனை ஓட்டமா, ஓடியும் புடிக்க முடியலியே, சொன்னா யாராவது நம்புவாங்களா? என்ன நடை, என்ன நடை . . . !' என்று வியந்தார் ஆசான்.
கடைசியில் தாழம்பூக் காட்டை அடைந்ததும் இடுப்பு அளவு எழும்பியிருந்த ஒரு புற்றை ஏதோ அம்மிக் குழவியைத் தாண்டுவது மாதிரி அனாயாசமாகத் தாண்டி மறைந்தே போனானாம் அவன்.
'அவனை மாதிரி லாவகமாகவும் துரிதமாகவும் நடக்கிற பயலெ இந்த ஜென்மத்திலே நான் கண்டது இல்லே. ஆள் எப்படி? தங்க விக்கிரகம்! கை அப்படியே கீழே பாத்துப் போய்க்கிட்டே இருக்குது. தரையெத் தொடறாப்லே . ...'
பின்னால் செல்லத்தாயிக்கு ஏற்பட்ட மனநிலைதான் விசித்திரமானது. அன்றிலிருந்து அந்தப் பெண் அவனையே நினைத்து ஏங்க ஆரம்பித்துவிட்டாள். சதா அவன் ஸ்மரணை. ராத்திரி எல்லாம் புலப்பம்,
ஒவ்வொரு நாளும் அவள் அந்தி வேளையில் புளிக்குளத்தில் வந்து குளித்தாள். நீச்சலடித்துச் சென்று சொட்டச் சொட்டப் புளிய மரத்தடியில் உட்கார்ந்துகொண்டாள். பின்னால் அகால வேளையில் பாம்புப் புற்றுவரை சென்று தேடிப் பார்க்கவும் முற்பட்டாள். ஊர் கூடித் தடுத்துத்தான் பார்த்தது. காதில் வாங்கிக் கொண்டால் தானே! ஊரார் சொன்ன புத்திமதிகள் எல்லாம் தன் சம்பந்தமான விஷயம் என்றே அவளுக்குப்படவில்லை, அவ்வளவு அலட்சியம்.
| பண்ணை ஆட்கள் அவளை வயலில் இறங்கவிடவில்லை. பயிர் பிடிக்காதாம்! அவளும் அதைப்பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. வீட்டோடு உட்கார்ந்துவிட்டாள்.
எப்படி இருந்த பெண்! வாட்டசாட்டமான உடம்பு. அழகு என்னும் அழகு; ஆரோக்கியம் என்னும் அழகு; பருவம் என்னும் அழகு; நிஷ்களங்கம், பேதைமை, எல்லா அழகுகளும் கூடி சௌந்தரிய தேவதையாகத் திகழ்ந்துகொண்டிருந்த பெண், இறகு உரித்த கோழி மாதிரி ஆகிவிட்டாள். சோறும் கறியும் வேண்டியிருக்கவில்லை அவளுக்கு. வாயோரம் கை சென்றதுமே குமட்டல் எடுத்துவிடும். அப்படியே பிடியை உதறிவிட்டு இடது கையை ஊன்றி எழுந்துவிடுவாள்.
ஊர்ப்பெண்கள் கூடிப் பூசை போட்டார்கள். மந்திரம் ஜபித்துத் தாயத்துக் கட்டினார்கள். திருஷ்டி கழிப்பும் நடந்தது. உடம்பு என்னவோ கரைந்துகொண்டுதான் இருந்தது.
ஒருநாள் அந்தச் செய்தி ஊரெங்கும் பரவியது. அவன், முந்திய நாள் இரவு நடுநிசியில் அவள் வீட்டுக்கு வந்தானாம். தோழிகளிடத்தில் அவளே இதைத் தெரிவித்தாள்.
அன்றிலிருந்து ஒவ்வொரு பௌர்ணமியும் அவன் வந்து விட்டுப் போவதாக எல்லோரும் பேசிக்கொண்டனர். யாரும் அவனைப் பார்க்கவில்லை. அவள் சொன்னதுதான். இருந்தாலும் எல்லோரும் அதை அப்படியே நம்பினார்கள். அவள் தலைசீவிக் கொண்டை போட்டுக் கட்டுப்பூவும் வாங்கி வைத்துக்கொண்டால் அன்று பெளர்ணமி என்று எல்லோருக்கும் தீர்மானம்தான். உடல் பூராவும் சந்தனக் குழம்பைத் தேய்த்து மணக்க மணக்க இருப்பாள். மறுநாள் காலை, வேலைக்குச் செல்வதற்குமுன், அவள் வீட்டில் தோழிகள் கூட்டம் கூடிவிடும். அவன் வந்துபோன வரிசையையும், அவனுடைய சல்லாப விசேஷத்தையும் அவன் குறும்பையும் விஷமத்தையும் சொல்லிச் சொல்லிச் செல்லத்தாயி பூரித்துப் போவாள். அவளுடைய பரவச நிலையைப் பார்த்தபடி மனசு குறுகுறுக்க, கண்களில் ஆவல் பொங்க, அவளைச் சுற்றி வளையமாக அமர்ந்து கேட்டுக் கொண்டிருப்பார்கள் தோழிகள்.

தாமோதர ஆசானும் வைத்தியர் என்ற போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு அவளைப் பார்க்கப் போயிருந்தார். அவரிடமே இந்தக் கதையை எல்லாம் அவள் சொன்னாள் என்று எங்களிடம் பிரஸ்தாபித்தார் ஆசான். கொஞ்சம் பச்சையாகவே சொன்னாளாம். சொல்லக்கூடாததைச் சொல்கிறோம் என்ற பிரக்ஞையே அவளுக்கு இருக்கவில்லை என்றும், 'அவள் சொல்லிக் கேட்டபோது என் மனசில் இருந்த, கல்மிஷமும் ஓடிப் போய்விட்டது' என்றும் ஆசான் காவிப்பல்லைக் காட்டிச் சிரித்தது இன்றும் நினைவிருக்கிறது.
'கடைசியில் என்னாச்சு? அதைச் சொல்லும் சட்டென்று' என்று கதையை முடுக்கினோம்.
இப்படியாக ஐந்தாறு மாதங்கள் சென்றதும் அந்தப் பெண் தான் முழுகவில்லை என்ற செய்தியைத் தன் தோழிகளுக்குத் தெரிவித்தாள். தோழிகளும் அதை நம்பினார்கள். யாரும் அதுபற்றிச் சிறிதும் சந்தேகம் கொள்ளவில்லை.
'அந்தச் சமயம் அந்தக் குட்டி இருந்த சீரைப் பார்க்கணும், அடேயப்பா! அடேயப்பா!' என்றார் ஆசான்.
'அழகா?'
'சும்மா அழகுன்னு சொல்லிட்டாப் போதுமா? அதைத்தான் எங்கெல்லாமோ பார்த்திருக்கோமே. அது என்னமோ ஒண்ணு, எதிலே சேத்தனு சொல்ல விளங்கலே எனக்கு. படேபடே அழகிக எல்லாம் அவமானம் தாங்க மாட்டாம் கழுத்திலே கயித்தைப் போட்டுக்கிடும். அப்படி ஏதோ ஒண்ணு அது.'________________

'அழகா?'
'சும்மா அழகுன்னு சொல்லிட்டாப் போதுமா? அதைத்தான் எங்கெல்லாமோ பார்த்திருக்கோமே. அது என்னமோ ஒண்ணு, எதிலே சேத்தனு சொல்ல விளங்கலே எனது மனமொ ஒண்ணு, எதிலே
ககு. படேபடே அழகிக எல்லாம் அவமானம் தாங்க மாட்டாம கழுத்திலே கயித்தைப் போட்டுக்கிடும். அப்படி ஏதோ ஒண்ணு அது.'
அந்தக் குட்டிக்குப் பூரிப்புத் தாங்க முடியவில்லை. பழைய உடம்பையும் மிஞ்சிவிட்டது. 'இவள் நடக்க முடியுமா, பேச முடியுமா?' என்று நித்தம் நித்தம் கூடிப் பழகிய தோழிகளுக்கும் தோன்ற ஆரம்பித்துவிட்டது. அவள் முகத்து எதிரே வார்த்தையாட முடியவில்லை. ஒருவருக்கும். பார்த்துப் பார்த்து ஆச்சரியப்பட்டுப்போனார்கள். எதை எதையோ நினைத்து அவமானப்பட்டார்கள். சும்மா நிற்கத்தான் முடிந்தது. அதற்கு மேல் ஒன்றும் செய்வதற்கு இல்லை என்ற ஸ்தம்பிதம் ஏற்பட்டது.
அவள் அழகான தொட்டில் ஒன்று செய்து வைத்துக்கொண்டாள். பட்டுச் சொக்காய் தைத்தாள்.________________

திருவிழாவுக்குச் சென்றவளிடம் பழுக்காய்ச் செப்பும் மரப்பாச்சியும் வாங்கிவரக் கூசாமல் பணம் கொடுத்தனுப்பினாள். மனதில் அலை அலையாய்ப் புறப்பட்ட சந்தோஷத்தைக் காட்டத் தெரியாமல் தத்தளித்தாள்.
ஒருநாள் விடிவெள்ளி நேரத்தில் அவளுடைய அலறல் ஊரைப் பிளந்தது. ஊர் முழுக்கக் கூடி நின்ற கூட்டத்தின் நடுவில், அவள் மண்ணில் புரண்டு துடித்தாள். கைகள் ஓங்கி ஓங்கித் தலையில் விழுவதைப் பார்த்தால் மண்டை ஓடு சுக்கு நூறாய்ச் சிதறிவிடும் என்று தோன்றும்; ஒரே பிரலாபம்,
அவள் கணவனைத் தாழம்பூக் காட்டில் நாகஸர்ப்பம் தீண்டி விட்டதாம்!
அவளே இதை நேரில் கண்டதாகச் சொன்னாள். தேர் வடத்தை வளைய வளையச் சுற்றியதுபோல் தலைமாட்டிலிருந்து பாதங்கள் வரைச் சுற்றிக்கொண்டிருந்ததாம், வாய், வலது பாதத்தைக் கவ்வியிருக்க, வாலை இடது காதுள் விட்டுக் குடைந்துகொண்டிருந்ததாம்.)
தடியையும் வேல் கம்பையும் எடுத்துக்கொண்டு பத்துப் பன்னிரண்டு பேர் தாழம்பூக் காடு பூராவும் சல்லடை போட்டுச் சலித்துப் பார்த்தார்கள், அவர்கள் கண்களுக்கு ஒன்றும் தட்டுப்படவில்லை.
மறுநாள் புளியமரத்தின் உச்சாணிக் கிளை ஒன்றில் அவளுடைய பிரேதம் நிர்வாணமாகத் தொங்கிற்று. உடுத்தியிருந்த சேலையை அவிழ்த்து, சுருக்குப் போட்டுக்கொண்டுவிட்டாள்.
கதை முடிந்தது.

ஆசான் கைத்தடியை ஊன்றியவாறு எழுந்திருந்தார். விடைபெறும் முகமாய் வெளிவரும் சம்பிரதாய வார்த்தை ஒன்றுகூட அவர் வாயிலிருந்து வெளிவரவில்லை .
அவரைப் பொறுத்தவரையில் அன்றையப் பாடு முடிந்துவிட்டது. இனிமேல் நிம்மதியாகத் தலை சாய்த்து உறங்கலாம் அவருக்கு.
| பழையபடி , வீடும் கல்லூரியும் எங்கள் நினைவுகளில் துளிர்த்தன, அதட்டல்களும், கர்ஜனைகளும், நெரியும் புருவங்களும், சிவந்த விழிகளும், கசப்பான எண்ண அலைகளை எழுப்பி எங்கள் வாய்களைக் கட்டிவிடவே, பேசாது நாங்களும் எங்கள் வழிகளில் பிரிந்தோம்.
அன்றிரவு நான் வீட்டுக்கு வந்துகொண்டிருக்கையில் பாதி வழியில் தெருவிளக்கு அணைந்துவிட்டது.